/* up Facebook

Nov 29, 2013

பெண்மையின் அறிவியல் - அரவிந்தன் நீலகண்டன்

நடராஜரின் நடனத்தையும் அணுவுக்குள் இருக்கும் நுண் துகள்களின் இயக்கத்தையும் இணையாக அனுபவித்து எழுதிய நூலின் மூலம் (Tao of Physics) மிகவும் பிரபலமானவர் ஃப்ரிட்ஜாப் கேப்ரா. ஏறக்குறைய அதற்காக மட்டுமே அவர் மீண்டும் மீண்டும் இந்தியச் சூழலில் மேற்கோள் காட்டப்படுகிறார். ஆனால் அந்தப் பரபரப்பில் நாம் தவற விட்டது, அவர் அதற்கு மேலாக முன்னெடுத்த பார்வையை (பின்னர் வந்த Turning Point என்னும் நூலில்). அப்பார்வை நம் அறிவியல் உலகில் இருக்கும் பெண்மையின்மையை விமர்சித்தது. ஆண்-மையப் பார்வை இருப்பதாகக் கூறியது.

இயற்கையைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்து அதன் ரகசியங்களைக் கறக்கும் தன்மையை இந்த ஆண்-மையப் பார்வை முன்வைப்பதாகவும் அதன் விளைவாகவே நம் அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கையைக் கீழ்மைப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதனை நியூட்டோனிய அறிவியலின் பார்வை என அவர் சொல்கிறார். இயற்பியலில் 19 ஆம் நூற்றாண்டில் ஆதாரமாக இருந்த இப்பார்வை, நம் அனைத்துப் பார்வையிலும் இருப்பதாக அவர் கருதுகிறார். உளவியலில் Behaviourism மற்றும் ப்ராயிடிய உளவியலை, நியூட்டோனிய உளவியல் என்கிறார் கேப்ரா. உயிரியலில் போட்டியை, பரிணாம இயக்கத்தின் ஆதார சக்தியாக முன்வைப்பது அதனால்தான் என்கிறார். நம் உடலின் இயக்கத்தையே ஓர் இயந்திரத்தின் இயக்கமாகவே பார்க்கிறோம் என்கிறார். நம் விவசாயத் தொழில்நுட்பம், நம் மருத்துவத் தொழில்நுட்பம் இவை அனைத்துமே இந்த ஆண்-மைய, ஆதிக்கத்தன்மை கொண்ட, நியூட்டோனியப் பார்வைதான் என்கிறார் கேப்ரா.

அப்போது பெண்மையின் அறிவியல் இந்த அறிவியலிலிருந்து மாறுபட்டிருக்குமா?

கடந்த ஐம்பது ஆண்டுகளில் அறிவியலில் பார்வை மாற்றங்களைக் கொண்டுவந்த பெண் அறிவியலாளர்களைப் பார்க்கும்போது கேப்ரா சொல்வதில் பொருள் இருக்கும் என்றே தோன்றுகிறது. இன்று நாம் உலகைப் புரிந்துகொள்வதற்கு அத்தகைய மூன்று பெண் அறிவியலாளர்களின் பங்களிப்பை, பறவைப் பார்வையாகப் பார்க்கலாம்.
ஜேன் குடால்
1. ஜேன் குடால்:
நம்மையும் பிற விலங்கினங்களையும் பிரிக்கும் எல்லைக் கோடு தெள்ளத் தெளிவானது. பிற விலங்குகளால் கடக்க இயலாத ஓர் அதல பாதாளம் நம்மை அவற்றிடமிருந்து பிரிக்கிறது என்பது மேற்கத்திய உயிரியலிலும் மானுடவியலிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாக இருந்தது. 1960-களில் தான்ஸானியாவில் கோம்பே எனும் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்திலிருந்து குடால் செய்த ஆய்வுகள், மானுடத்தைச் சுற்றித் தனியாகப் போடப்பட்டிருந்த அந்த எல்லைக் கோட்டைப் பொருள் அற்றதாக்கியது. அன்றைய மானுடவியலின் அடிப்படையாக, கேள்வி கேட்கப்படாமல் ஏற்கப்பட்ட விஷயம்: “மனிதனைப் பிற விலங்குகளிலிருந்து தனிப்படுத்திக் காட்டும் விஷயம் அவன் கருவிகளைப் பயன்படுத்துபவன் என்பதே.”

சிம்பன்ஸிகள் குச்சிகளை எளிய கருவிகளாகப் பயன்படுத்துவது மட்டுமல்ல, கருவியாகப் பயன்படுத்தத்தக்க வகையில் அவற்றை மாற்றியும் அமைக்கின்றன. இந்த உண்மையைக் கண்டறிந்து உலகுக்குக் கூறியவர் ஜேன் குடால்தான். மானுடவியல் வட்டாரங்களில் இது அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது. குடாலை ஆய்வு மாணவியாக அனுப்பிய லூயிஸ் லீக்கே (Louis Leakey), ஒரு முக்கியமான மானுடவியலாளர். தொல்-மானுட மூதாதைகளின் எலும்புக்கூடுகள், வாழ்விடங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தவர். மானுடவியலின் ஆதாரக் கோட்பாடுகள் குடாலின் கண்டுபிடிப்புகளால் அசைக்கப்படுவதை அவர் உணர்ந்தார். சிம்பன்ஸிகள் கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடித்தது குறித்து குடாலுக்கு அவர் அனுப்பிய தந்தி இதைத் தெளிவாக விளக்குகிறது: “இனி நாம்  ‘கருவி’ என்பதற்கான வரையறையை மாற்றவேண்டும். இல்லையென்றால் ‘மனிதன்’ என்பதன் வரையறையை மாற்றவேண்டும். இரண்டும் முடியாதென்றால், சிம்பன்ஸிகளை மனிதர்கள் என ஏற்கவேண்டும்.’

குடாலுக்கு இதில் பிரச்னையே இல்லை. ஆனால் நிறுவன அறிவியலுக்குக் குடாலின் ஆராய்ச்சி முறையிலேயே பிரச்னை. சிம்பன்ஸிகளுக்குக் குடால் பெயர் சூட்டியிருந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை மூப்பர்களுக்கு இது ரசிக்கவில்லை:  “பெயர் வைப்பதெல்லாம் சிம்பன்ஸிகளுக்கு மனிதத்தன்மை அளித்துவிடும். எனவே அவற்றுக்கு எண்களைத்தான் நீ அளிக்கவேண்டும்” என்று அவர்கள் சொன்னார்கள். மேலும் குடாலுக்கு அடிப்படை பட்டப் படிப்பு கிடையாது என்பது வேறு அவரது ஆய்வுகளை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தடையாக இருந்தது. ஆனால் லீக்கே, குடாலின் ஆராய்ச்சிகள் தரமானவை என்பதுடன் அடிப்படைப் பார்வை மாற்றம் தரக்கூடியவை என்பதைப் புரிந்துகொண்டார். நேஷனல் ஜியாக்ரபிக் சொஸைட்டியும் குடாலுக்கு ஆதரவளித்தது. குடால் ஒவ்வொரு சிம்பன்ஸியையும் தனித்தனி ஆளுமையாகக் கண்டுகொண்டார். எனவே தனித்தனிப் பெயர் அளித்திருந்தார். குடால் சிம்பன்ஸிகளைக் கண்காணித்ததுபோலவே, சிம்பன்ஸிகளும் குடாலைக் கண்காணித்து வந்தன. டேவிட் கிரேபியர்ட் என குடால் பெயர் அளித்திருந்த சிம்பன்ஸி முதன்முறையாக குடாலின் கூடாரத்துக்கு வந்து தானே தொடர்பினை உருவாக்கிக்கொண்டான். தொடர்ந்து மெல்ல மெல்ல பரஸ்பர நம்பிக்கை வளர்ந்து வந்தது.

இன்றைக்கு சிம்பன்ஸிகள் குறித்த நமது அறிதல்கள் நம்முடைய இயற்கையை இன்னும் ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ள உதவியிருக்கிறது. சிம்பன்ஸிகளுக்குச் சைகை மொழி சொல்லிக்கொடுக்கும் முயற்சிகள் மனிதர்களுக்கு மொழி எப்படி ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்ள வழிவகுத்திருக்கிறது. நாம் விலங்கினங்களிலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டவர்கள் அல்ல; யுகக்கணக்கில் நீளும் உயிரினங்களின் வரலாற்றில் மானுடம் ஓர் இழையே தவிர மையச் சித்திரம் அல்ல என்பதை ஜேன் குடால் நம் பொதுப்புத்திக்கும் நம் அறிவியலுக்கும் உணர்த்தியிருக்கிறார். இது பிற உயிரினங்கள்மேல் நமக்கு இருக்கும் அதிகாரம் என்கிற எண்ண ஓட்டத்திலிருந்து நம் பார்வையை மாற்றி, அதன் தார்மீகத்தை ஆழமும் விரிவும் கொண்டதாக மாற்றியிருக்கிறது.

2. பர்பாரா மெக்கிளிண்டாக்: இன்றைய அறிவியலின் வரலாற்றில் குறுக்கியல் பார்வையின் (reductionism)  வெற்றி என நிச்சயமாக நாம் சொல்ல முடிந்த துறை மரபணுவியல். குறிப்பாக, மூலக்கூறு அறிவியல். ஜீன்கள் க்ரோமோஸோமில் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன? எவ்வாறு இயங்குகின்றன?

பார்பரா மெக் கிளிண்டாக்
பொதுவான நம்முடைய மனச்சித்திரம், ஜீன்கள் என்பவை ஏதோ கோக்கப்பட்ட மணிகள்போல க்ரோமோஸோமில் இருக்கும் என்பதும், அவை ஒவ்வொன்றும், தான் ‘கோட்’ செய்யும் புரதத்தை ஆர்.என்.ஏக்கள் மூலம் அமினோ அமிலங்களைத் தருவித்து உருவாக்கிக்கொள்ளும் என்பதும்தான்.
பர்பாரா மெக்கிளிண்டாக் சில ஜீன்களாவது க்ரோமோசோமில் தாவும் தன்மையுடன் இயங்குகின்றன என்று கண்டுபிடித்தார். ஆனால் அப்போது அறிவியலில் நிறுவனப்படுத்தப்பட்டிருந்த கருத்து, ஜீன்கள் க்ரோமோஸோமில் நிலையாக ஓர் இடத்தில் இருந்தபடி இயங்குகின்றன என்பதுதான். நகரும் ஜீன்களையும் அவை ஜீன்களின் தன்மைகள் வெளிப்படும் விதத்தில் தாக்கம் செலுத்துவதையும் மெக்கிளிண்டாக் கண்டுபிடித்த ஆண்டு 1948. நிறுவன அறிவியலின் ஏற்கப்பட்ட கருத்தைக் கேள்வி செய்வதா? அதுவும் ஒரு பெண்? மெக்கிளிண்டாக்கின் ஆராய்ச்சி முடிவுகள் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டன. இப்புறக்கணிப்பு குறித்த மெக்கிளிண்டாக்கின் எதிர்வினை அபாரமானது:

“அவர்களுக்கு (எனது ஆய்வுத்தாள்)  புரியவில்லை, அதைத் தீவிரமாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்பது எனக்கு அதிசயமாகத்தான் இருந்தது.  ஆனால் அது எனக்குப் பெரிய பிரச்னையாகப் படவில்லை. நான் சரி என்பது எனக்குத் தெரியும். அகங்காரம் பலன்களை எதிர்பார்க்கும். அத்தகைய அகங்காரம் பல நேரங்களில் நம் வேலைகளுக்குக்  குறுக்கீடாகிவிடுகிறது. பணி செய்வதில் இருக்கும் ஆனந்தத்துக்காகக் கடமையாற்றவேண்டும். பலன்களை எதிர்பார்க்கக்கூடாது.”

பேச்சில் ஒரு கிழக்கத்திய வாடை அடிக்கிறதே என்று நினைத்தால் சரிதான். மெக்கிளிண்டாக் திபெத்திய பௌத்த தியான முறைகளைப் பயிற்சி செய்பவர். நல்லகாலம், உள்ளூர் எந்திரன்கள் யாரும்,  ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்’ என்று மெக்கிளிண்டாக்குக்கு அறிவுரை சொல்லவில்லை.

1970-களில் பாக்டீரியாக்களில், ட்ரான்ஸ்போஸான்ஸ் (transposons) எனும் இடம் மாறும் ஜீன் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1983-ல் மெக்கிளிண்டாக்குக்கு இந்தத் தாவும் ஜீன்களை (Jumping genes) கண்டுபிடித்ததற்காக (அதாவது 1948-ல் அவர் செய்த ஆராய்ச்சிக்காக) நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்றைக்கு நிறுவன அறிவியலாளர்கள் மெக்கிளிண்டாக் புறக்கணிக்கப்படவில்லை என்கிறார்கள். அவர் மதிக்கப்பட்டார் என்கிறார்கள். அவரது புறக்கணிப்பு அவரது அறிதல் முறையின் தனித்தன்மை எல்லாம் பெண்ணிய அதீதப் புனைவுகள் என்கிறார்கள். மற்றவர்கள் அதை மறுக்கிறார்கள். எப்படி நிறுவன அறிவியல் மெக்கிளிண்டாக்கின் ஆராய்ச்சி முடிவை ஏற்றுக்கொண்டது என்பதை மரபணு ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் ஷப்பாரியோ விளக்குகிறார்:
“முதலில் அவர் ஒரு பைத்தியம் (crazy) என்றார்கள்; பிறகு அவர் கண்டுபிடித்தது, அவர் ஆராய்ச்சி செய்த சோளத்தில் மட்டுமே காணப்படுவது என்றார்கள். பிறகு அது எல்லா உயிர்களிலும் காணப்படுவதுதான்; ஆனால் முக்கியமற்ற விஷயம் என்றார்கள். இறுதியாக அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். இறுதிவரை பற்றற்ற தன்மையுடன் முத்திரைகளின்றி இயற்கையுடன் ஒருமையை உணர்ந்த நிலையில் வாழ்ந்த மெக்கிளிண்டாக் தன்னை ஒரு ‘மிஸ்டிக்’ என்றோ அல்லது பெண்ணியச் சின்னம் என்றோ அடையாளப்படுத்துவதை விரும்பியதே இல்லை. ஆனால் அதுதான் நிகழ்ந்தது.”

ஆனால் மெக்கிளிண்டாக்கின் முக்கியத்துவம் குறுகியலுக்கும் முழுமைப் பார்வைக்கும் அப்பாலானது. பொதுவாக முழுமைத்துவம் (holism) பேசும் பலரும் அது அறிவு சாராத அறிதல் முறை என்றே கூறுவது வழக்கம். அது உள்ளுணர்வு மட்டுமே சார்ந்ததாகக் கூறி எல்லாவித நம்பிக்கைகளையும் இந்த முழுமைத்துவக் குப்பிக்குள் அடைத்து விற்கப் பார்ப்பார்கள். ஆனால் மெக்கிளிண்டாக் எப்படி முழுக்க முழுக்க அறிவு சார்ந்து ஒரு முழுமைப் பார்வையைப் பெற முடியும் என்பதைக் காட்டினார். மெக்கிளிண்டாக் 1992 இல் தனது 90-வது வயதில் காலமானார்

3. ரேச்சல் கார்ஸன்: இப்பெயர் உடனடியாக மனத்தில் கொண்டு வரும் இன்னொரு பெயர்  ‘மௌன வசந்தம்’ – Silent Spring. ஆனால் கார்ஸனின் முக்கியமான  நூல்கள் கடல் உயிர்களைக் குறித்தவை. அறிவியலை மக்களிடையே கொண்டுசென்றவை. அறிவியல் என்பது ஏதோ மூளை கொண்டு மட்டுமே சுவாசித்து வாழும் உணர்ச்சியே இல்லாத அமானுடர்கள் செய்யும் அழகுணர்ச்சி அற்ற துண்டு போடும் செயல் என்கிற எண்ணத்தை அறவே மாற்றியது. ஆழ்ந்த அழகுணர்ச்சியும் விரிந்து பரந்து அனைத்துயிர்களையும் அணைக்கும் இதயத்தையும் அறிவியல் அளிப்பதை ரேச்சல் கார்ஸன் தன் நூல்களில் வர்ணித்தார்.

ரேச்சல் கார்ஸன்
அவர் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிய விஷயம், மனிதன் பிற உயிர்களிலிருந்து உயர்ந்தவனோ பிரிந்திருப்பவனோ அல்ல. இவ்வாறு தன்னைத் தனிமைப்படுத்தி, பிரித்து, சர்வ சிருஷ்டிக்கும் அதிபனாக நியமிக்கப்பட்டதாகத் தன்னைத்தானே நினைக்கும் மானுட அகம்பாவமே அதன் சூழலியல் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணம்.
அவருடைய எழுத்துகள் மெல்ல ஊடகங்கள் மூலம் அமெரிக்கப் பொது மனத்தைச் சென்று சேர ஆரம்பித்தபோது அவை விவாதங்களை உருவாக்க ஆரம்பித்தன. அறிவியல் என்பது ஆராய்ச்சிசாலைகளின் கதவுகளுக்கும் கல்வியுலகச் சுவர்களுக்கும் உள்ளே மட்டுமே இருந்து, தொழில்நுட்பம் மூலம் வாழ்க்கைச் சுகத்தையும் வர்த்தக லாபத்தையும் அளித்துக் கொண்டிருக்கும்வரை சரி. ஆனால் அது வாழ்க்கைப் பார்வையையே மாற்ற முன்வந்தால் அதைப் பொறுத்துக்கொள்ள அதிகாரபீடங்களுக்கு ஆவதில்லை.
ரேச்சல் கார்ஸனின் “மௌன வசந்தம்”  வெளிவந்ததுமே கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கம் ஊடகத்துறையில் எந்த அளவு இருக்கிறதென்பது தெளிவாக ஆரம்பித்தது. அந்த நூலின் சுருங்கிய வடிவத்தை வெளியிட ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை  ரீடர்ஸ் டைஜஸ்ட் ரத்து செய்தது. டைம் பத்திரிகை அவரது எழுத்துகளை “ஹிஸ்டீரிக்கல்” என வர்ணித்தது. எக்கானமிஸ்ட் அதைப் ‘பிரசார நூல்’ என்றது. கெமிக்கல் அண்ட் எஞ்ஜினியரிங் நியூஸ், ரேச்சல் கார்ஸனுக்கு ஒரு டாக்டரேட்கூட இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, “எனவே அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற நம் அறிவியல் அறிஞர்கள் கூறுவதையே ஏற்றுக்கொண்டு இந்த நூலைப் புறக்கணிக்க வேண்டும்” என்று சொன்னது.

ரேச்சல் கார்ஸன் அப்படி என்னதான் அந்த நூலில் சொல்லிவிட்டார்? பூச்சிக்கொல்லி மருந்தான DDT  நமது சுற்றுச்சூழல்களில் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே வருகிறது. நம் உணவு வலைகளில் அது ஏறுகிறது. ஒவ்வொரு உணவடுக்கிலும் அதன் அடர்த்தி கூடிக்கொண்டே போகிறது. பறவைகளின் முட்டைகளை ஆராயும்போது முட்டைத் தோடுகள் மெலிதாகப் போவதற்குக் காரணமாக DDT இருப்பதாக கார்ஸன் சொல்கிறார். குஞ்சுப் பறவைகள் இதனால் இறந்துவிடுவதைக் காண்கிறார். விரைவில் வசந்தங்கள் பறவைகளின் பாடல்கள் இல்லாமல், பூச்சிகளின் பறப்பொலிகள் இல்லாமல் மௌனமாகிவிடலாம். மற்றொரு விஷயத்தையும் அவர் சொன்னார். எந்தப் பூச்சிகளுக்கு எதிராக DDT அடிக்கப்படுகிறதோ அந்தப் பூச்சிகள் சிறிய வாழ்க்கை சுழற்சிகளே உடையவை. எனவே வெகுவிரைவில் பூச்சிகள் DDT க்கு எதிர்ப்புத்தன்மையைக் கொண்டவையாகிவிடுகின்றன. ஆனால் மனிதர்களுக்குத்தான் அது தீயவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

அறிவியல் வட்டாரங்களில் ஆய்வுத்தாள்களின் பரிபாஷைகளில் ஒளிந்துகிடந்த விஷயங்கள் மக்களின் பொதுப்புத்தியில் ஏறலாயிற்று. ரேச்சல் கார்ஸன் சொன்ன விஷயம் ஏற்கெனவே சியாட்டில் (செவ்விந்திய) மக்கள் குழு மூப்பன் அமெரிக்க அதிபருக்கு சொன்ன விஷயம்தான்: உயிர் எனும் பாவு தறியில் மனிதன் ஓர் இழைதான். எனவே அவன் பிற உயிர்களுக்கு என்ன செய்கிறானோ அதுவே அவனுக்கும் சம்பவிக்கும்.
இன்று பூச்சிக்கொல்லிகள் குறித்தும் சுற்றுச்சூழலில் அவற்றின் பாதிப்பு குறித்தும் நாம் விவாதிக்கிறோம். மாற்றுகளைத் தேடுகிறோம். பூச்சிகளை ஒழிக்கக் கூடாது; இயற்கையில் நன்மை செய்யும் பூச்சிகள் உண்டு. பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தவே முடியும், ஒழிக்கக்கூடாது, முடியாது என்றெல்லாம் விவசாயப் பல்கலைக்கழகங்களே சொல்லிக்கொடுக்கின்றன என்றால் அந்தப் பார்வை மாற்றத்துக்கு வித்திட்டவர் ரேச்சல் கார்ஸன்தான்.

ஜேன் குடால், பர்பாரா மெக்கிளிண்டாக், ரேச்சல் கார்ஸன் – மூவருமே அறிவியல் உலகிலும் சமுதாயத்திலும் பார்வை மாற்றங்களை அளித்திருக்கிறார்கள். அந்தப் பார்வை மாற்றம் முழுமை சார்ந்த பார்வை மாற்றம். நாம் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையுடனான உறவுகளை ஆழப்படுத்தவும் ஆரோக்கியமானதாக்கவுமான பார்வை மாற்றம். இத்தகைய மாற்றங்களில் ஒரு அடிப்படை மாற்றுத்தன்மை இருப்பதைக் காண்கிறோம். திட்டவட்டமாகச் சொல்லமுடியாவிட்டாலும்கூட பெண்களின் பங்களிப்பு அறிவியலில் அதிகரிக்க அதிகரிக்க, இத்தகைய மாற்றங்கள் மேலும் ஏற்படும் என ஊகிக்கலாம்.

குறிப்பாக, வளரும் நாடுகளில் பெண்களின் அறிவியல் பங்களிப்பு முக்கியமான விஷயமாகும். மேற்கத்திய நாடுகளைப் பிரதியெடுக்காத வளர்ச்சிக்கு அது வழி கோலக்கூடும். இப்படிப்பட்ட பெண்களின் பங்களிப்பு இந்தியாவில் எப்படி இருக்கிறது?

இந்தியாவும் சரி, இதர வளரும் நாடுகளும் சரி. பெண்களின் அறிவியல் பங்களிப்பில் ஒரு ஆரோக்கியமான சித்திரத்தை அளிப்பதாகவும் அந்தச் சித்திரம் வளர்ந்த நாட்டுச் சூழல்களில் பெண்களின் பங்களிப்பைக் காட்டிலும் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் ஒரு சமூக ஆராய்ச்சியாளர் கூறுகிறார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அர்ப்பிதா சுபாஷ், பல நேரங்களில் இந்தியாவின் பாரம்பரிய குடும்ப முறை, பெண் அறிவியலாளர்களின் செயலாக்கத்துக்கு நேர்மறைப் பங்களிப்பை அளிப்பதாகவும், பெண் அறிவியலாளர்களின் பணிச்சூழலின் மன அழுத்தங்களைக் குறைப்பதாக அமைவதாகவும் கூறுகிறார். எதுவானாலும் நம் பண்பாட்டின் ஆக்கபூர்வச் சூழல்களைப் பயன்படுத்தி அதிகமான எண்ணிக்கையில் பெண் அறிவியலாளர்களை உருவாக்குவது நிச்சயம் மானுடத்துக்குப் பயனளிக்கும் விஷயமாகவே அமையும் என்பதே உண்மை. மேலும் பெண்மை அளிக்கும் பார்வை மாற்றத்தை அறிவியலில் முன்னெடுக்க ஒருவர் பெண்ணாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோன்நமஹ. 

மேலதிக விவரங்களுக்கு:
  • ஃப்ரிட்ஜாப் கேப்ரா, The Turning Point, Flamingo 1983
  • Dale Peterson , Jane Goodall: The Woman Who Redefined Man, Houghton Mifflin Harcourt, 2008
  • ஜேன்குடால், In the Shadow of Man, Houghton Mifflin Harcourt, 2000
  • Sharon Bertsch McGrayne , Nobel Prize women in science: their lives, struggles, and momentous discoveries,  Joseph Henry Press, 1998
  • Evelyn Fox Keller, A Feeling for the Organism: The Life and Work of Barbara McClintock, Henry Holt, 1984 இந்நூலில் காட்டப்படும் மெக்கிளீண்டாக் குறித்த சித்திரம் நிறுவன அறிவியலாளர்களால் கடுமையாக மறுக்கப்படுகிறது.
  • Arlene Rodda Quaratiello,  Rachel Carson: a biography, Greenwood Publishing Group, 2004
  • ரேச்சல் கார்ஸன், Silent spring, Houghton Mifflin Harcourt (HMH), 1994
  • Etzkowitz and Kemelgor, ‘Gender Inequality in Science: A Universal Condition?’ Minerva, Vol.39 No.2
நன்றி - தமிழ்பேப்பர்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்