/* up Facebook

Mar 12, 2014

பெண்ணியம்.கொம் : 5 வருட பயணமும் – அனுபவங்களும்

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி

பெண்ணியம் இணையத்தளம் தொடங்கி ஐந்து வருடமாகிறது தோழியர்களே...

பெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றை விரிவாக்கும் நோக்குடனேயே பெண்ணியம்.கொம் உருவாக்கப்பட்டது.

பெண்ணியம்.கொம் தொடங்கப்பட்டு இந்த ஐந்து வருடத்தில் நாம் எதிர்பார்த்ததை வட எமக்கு வாசகர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமும் கடிதங்களும், படைப்புகளும் எமக்கு மிகுந்த வலிமையைத் தந்தது. தொடர்ந்தும் சளைக்காமல் அடுத்த கட்டத்திற்கு புறப்பட வலுவையும் தந்தது.

ஏறத்தாழ 1300 படைப்புகளை தொகுத்திருக்கிறோம். இவற்றில் பெரும்பாலானவை ஏனைய இணையத்தளங்களில் ஏலவே வந்தவற்றை மீள தொகுக்கப்பட்டவை. பெண்ணியத்திற்கு நேரடியாக எழுதும் படைப்பாளர்களை இயலுமானவரை ஊக்குவித்தே வந்தோம். இருந்தாலும் எம்மால் இனங்காணப்பட்ட முக்கியத்துவம் மிகுந்த படைப்புகளை, அவற்றை வெளியிட்ட தளங்களில் இருந்து மறுவெளியீடு செய்து வந்தோம். அவை அனைத்துக்கும் நன்றி தெரிவித்தே அவற்றை வெளியிடும் அறத்தை பேணியே வருகிறோம். அந்த இணையத்தளங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை இந்த நாளில் தெரிவித்துக்கொள்கிறோம்.

இன்றுடன் ஏறத்தாழ நான்கு லட்சம் தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். சில நாட்களில் 900க்கும் மேற்பட்டவர்களை அது தாண்டியிருக்கிறது. சில நாட்களில் 200க்கும் கீழே இறங்கியிருக்கிறது.

தினசரி ஒரு படைப்பை தவறாமல் வெளியிடுவது என்கிற இலக்கு சென்றவருடம் சாத்தியப்படவில்லை. இனி அது சாத்தியப்படும்.

இதுவரை நாங்கள் கோராமலேயே பெண்ணியத்திற்கு தங்கள் தளங்களில் இணைப்பு கொடுத்த 100க்கும் மேற்பட்ட இணையத் தளங்களுக்கும் எமது தோழமைபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது வரை எந்தவித நிதி உதவிகளிலோ, அல்லது விளம்பரங்களிலோ தங்கியிருக்காது, சக தோழிகளின் ஒத்துழைப்புகளுடன் தொடர்ந்து வருகிறோம். எந்தவித லாப நோக்கற்றும், நிதியுதவிகளிலோ, விளம்பரங்களிலோ தங்கியிராத தளமாகவும் தொடர்வதில் பெருமையடைகிறோம்.

பெண்ணியம்.கொம் தளத்தினை வெறுமனே ஒரு பெண்கள் குறி்த்த படைப்புகளை தொகுக்கும் பணியோடு மட்டுபடுத்தாமல் எமது சேவையை மேலும் விரிவாக்கிக்கொண்ட செல்வதே எமது நோக்கம். சக தோழிகளின் ஒத்துழைப்புடன் ஏற்கெனவே சில நிதியுதவிகளை சில சேவைகளுக்காக வழங்கி வந்தோம். சென்ற வருடம் கொழும்பில் மலையக பின்னணியைக் கொண்ட தலித் மக்கள் வாழும் பகுதிகளை சேர்ந்த இளம் மாணவர்களுக்காக இலவச கணினி வழங்கும் திட்டத்தை www.namathumalayagam.com இணையத்தளத்துடன் சேர்ந்து தொடங்கினோம். இவ்வருடம் அதனை மேலும் விரிவாக்கியிருக்கிறோம். அதிகமான விளிம்புநிலை மாணவிகளுக்கு முன்னுரிமையளித்தே இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. ஏனைய தோழமை சக்திகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் எம்மால் இதனை மேலும் விரிவுபடுத்த இயலும்.

சென்ற வருடம் பெண்ணியம்.கொம், நமதுமலையகம் இணையத்தளத்துடன் இணைந்து இலங்கையில் நடத்திய பயிற்சிப்பட்டறை மிகுந்த வரவேற்பை பெற்றது. இணையத்தள தேடுபொறி அரசியலை புரிந்து கொண்டு எப்படி விளிம்பு நிலையினருக்கான ஒரு இணையத்தளத்தை சாத்தியப்படுத்தலாம் என்பதே அதன் கருப்பொருள். இந்த பயிற்சிப்பட்டறை மூலம் எம்முடன் சில தோழிகள் இணைந்துகொண்டதுடன் தொடர்ந்து பங்களித்து வருகிறார்கள்.
பெண்ணியம் தளத்தில் வெளிவரும் படைப்புகளை ஏனையோருக்கும் அறிவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட முகநூல் (Facebook) தினசரி பல ஆர்வலர்களை இணைத்தப்படி நகர்ந்துகொண்டிருக்கிறது.

பெண்கள் சார்ந்த வீடியோக்களை தொகுக்கும் நோக்கில் You Tube மற்றும் Vimeo ஆகிய இடங்களில் பெண்ணியத்திற்கான பக்கங்களை அமைத்து அதனை வாசகர்களுடன் பகிர்ந்து வருகிறோம். அதன் பிரயோசனம் குறித்து எமக்கு வாழ்த்தும், உற்சாகமும் தந்த தோழியருக்கு எமது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பெண்ணியம்.கொம் தளத்தில் பெண்களின் ஆக்கங்களுக்கே முன்னுரிமை வழங்கிவந்தாலும், பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஆண்கள் எழுதிய படை்பபுகளையும் அதன் தேவை கருதி வெளியிட்டு வருகிறோம். பெண்ணியத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மற்றும் தகவல்கள் என்பனவற்றுக்கு படைப்பாளர்களே அதன் தார்மீகப் பொறுப்பாளர்கள். எமது கருத்துக்களுக்கு முழுமையாக அவை ஒத்துப்போக வேண்டும் என்கிற எந்த எதிர்பார்ப்பையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. ஆனால் அடிப்படை அறநெறி மீறல், தனிநபர் தாக்குதல், படைப்புகளை தவிர்த்தே வருகிறோம். அப்படியிருந்தும் நாம் வெளியிட்ட ஒரு சில கட்டுரைகளில் இருந்த சில பெரிய தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றை நீக்கச் செய்த பொறுப்புமிக்க வாசகர்களுக்கு எமது நன்றிகள். எமக்கு இது விடயத்தில் எந்தபிடிவாதமும் இல்லை. வாசகர்கள் எமது தவறுகளை சுட்டிக்காட்டி எம்மை சரிசெய்வதை வரவேற்கிறோம். எமது விருப்பு வெறுப்புகளையும் மீறி சில கட்டுரைகள், செய்திகளை அனுமதிக்கும்போது சில அடிப்படை சிக்கல்களுக்கு முகம்கொடுக்கவே செய்கிறோம். உதாரணத்திற்கு

புழக்கத்திலுள்ள சில பெண்களுக்கெதிரான கலைச்சொற்கள். கற்பழிப்பு, மேலாண்மை, தாராண்மை, விதவை போன்றனவற்றை எடுத்துக்கொள்வோம். இன்று கற்பழிப்பு என்கிற சொல்லை ஏறத்தாழ ஊடகப் பாவனையிலிருந்து தொடர் போராட்டத்திற்கூடாக அனைத்து பெண்ணிய ஆர்வலர்களாலும் தூக்கி எரியப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதன் எச்ச சொச்சங்கள் தொடர்ந்தவண்ணம் தான் இருக்கின்றன. பெண்ணியத்தில் பதியப்படும் எந்தவொரு கட்டுரையும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை. அந்த அதிகாரமும் எமக்கு இல்லை. முக்கியத்துவம் கருதி ஒரு செய்தியையோ, வேறொரு படைப்பையோ வெளியிடும்போது இவ்வகையான சொற்களை நீக்குவதில் ஊடக அறம் குறுக்கே நிற்கிறது. இது குறித்து உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்.

மேலும் சில பெண் படைப்பாளர்கள், பெண்ணிய எழுத்தாளர்கள் கூட மேலாண்மை, தாராண்மை போன்ற சொற்களை தமது கட்டுரைகளில் பாவித்தே வருவது ஆச்சரியத்தைத்தருகிறது. இச்சொற்களில் உள்ள “ஆண்மை” என்பதை அச்சொல்லுக்கு வலுச்சேற்பதற்காக பாவித்து வருவதாகவே படுகிறது. இப்படி பாவிப்பதன் மூலம் அச்சொல்லுக்கு மேலுணர்வூட்டுவதாக மாயை ஒன்றை உள்ளுணர்வில் கற்பிதம் செய்யப்பட்டிருகிறதா என்கிற கேள்வி எழுகிறது. மேலாதிக்கம், தாராளம் போன்ற சொற்கள் ஏற்கெனவே அச்சொற்களுக்கான மாற்றுச்சொற்கள் புழக்கத்திலிருந்தும் இவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மறுபரிசீலனை செய்வது இன்றைய தேவை. முடிந்தால் புழக்கத்திலுள்ள பெண்களுக்கெதிரான கலைச்சொற்களுக்கு மாற்று சொற்களின் பட்டியலொன்றை நாம் தயாரித்தால் என்ன.

பெண்ணியம் இணையத்தளத்திற்கு இதுவரை வருகை தந்தவர்களில் கூகிள் தேடுபொறிமூலம் வந்தவர்கள் எத்தகைய சொற்களைத் தேடி இங்கு வந்தார்கள் என்பது குறித்து பெண்ணிய வாசகர்கள் அறிந்துகொள்வது அவசியம். முலை, பாலியல், பாலுறவு போன்ற சொற்களை தேடுபொறி வழிகாட்டியதன் மூலம் வந்தவர்கள் அதிகம். அதிகமாக வாசிக்கப்பட்ட கட்டுரை "முலையில் சுடு!" - இலங்கை போர் குற்றம் என்கிற கட்டுரையாகும். இசைப்பிரியா படுகொலையுடன் சம்பந்தப்பட்ட வீடியோவில் சிங்கள இராணுவம் பெண்புலி உறுப்பினர்களை சித்திரவதை செய்யும்போது மற்ற இராணுவத்தினனுக்கு இட்ட கட்டளை அது. ஆனால் பாலியல் குறித்து தேடியலைவோருக்கு தேடுபொறி மூலம் கிடைத்த கட்டுரை இதுவாகிப்போனது. பெண்ணியம்.கொம் வாசகர்கள் குறித்தே தனியாக ஒரு மதிப்பீட்டுக் கட்டுரை எழுதலாம்.

பெண்ணியம்.கொம் உடன் இதுவரை பல நாடுகளிலிருந்தும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இலங்கை, சுவிஸ், நோர்வே, கனடா, பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளிருந்து தோழிகள் இணைந்து பணிபுரிகிறார்கள். எவராலும் முழுநேர வேலையாக செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாக பலரும் அவ்வப்போது தமது பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். இப்படியான ஒரு இணையத்தளத்தினை இப்படி விரிந்த தளத்தில் மேற்கொண்டால் மட்டுமே சாத்தியம் கைகூடும் என்று நம்புகிறோம். இதனை மேம்படுத்த நம்மிடம் திட்டங்கள் இருந்தாலும் ஆட்பலம் போதாமை காரணமாக அப்படியே தொடர்கிறது. இனிவரும் காலங்களில் அவற்றை கைகூடச்செய்வதற்கு எம்முடன் இணைந்து பணியாற்றும்படி ஆர்வமுள்ள தோழிகளை அன்புடன் அழைக்கிறோம்.

ஏனைய தோழிகளின் அனுமதியுடன் பெண்ணியம் தோழியரின் பெயர்களை விரைவில் வெளியிடுகிறோம்.

உங்கள் படைப்புகளை எமக்கு அனுப்பி வையுங்கள், உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எமக்கு எழுதி அனுப்புங்கள். ஆலோசனைகள் வழங்குங்கள். தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். ஏனையோருக்கும் பெண்ணியம்.கொம்ஐ அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்தும் உற்சாகம் தாருங்கள்.

இந்த ஐந்து வருட பயணத்தில் உங்களோடு நாங்களும் கரங்கோர்த்து மகிழ்கின்றோம்.
நன்றிகள்...

பெண்ணியம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்