/* up Facebook

Mar 18, 2014

எப்படி இருக்கிறாள் 21வது நூற்றாண்டு பெண்? - மேனா.உலகநாதன்

பொறியியல் படிக்கிறாள். பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகிறாள். உலகப்பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் நேரடியாகப் பாதிக்கும் அளவிற்கு இந்திய நகர்ப்புறத்துப் பெண்ணான அவளது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது.

ஆனாலும், விளம்பரங்களில் எளிதில் கரைபோக்கும் சோப்பை தேடும் பெண்ணாகவே இன்றும் அவள் தெரிகிறாள். மசாலா முதல், எண்ணெய் வரையிலான சமையலறைத் தேவைகளைத் தேர்வு செய்யும் பொறுப்புள்ள குடும்பத் தலைவி அவள் என்பதை நிலைநிறுத்த விளம்பரங்கள் தவறுவதே இல்லை. பெண் எவ்வளவு பெரியவளாக இருந்தாலும், சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற வீட்டு வேலைகள் அவளுக்கு மட்டுமே உரித்தானவை என்பதை, வெகுஜனப்புத்தியில் அவ்வப்போது பதியவைக்கவும் அவை தவறுவதில்லை.

ஒரு சில முன்னேற்றங்களும் இல்லாமல் இல்லை. லிப்டில் செல்லும்போது, பாடி ஸ்ப்ரேயின் வாசனையில் மயங்கி அருகில் இருக்கும் ஆணை பலாத்காரம் செய்பவளாக விளம்பரங்கள் அவளுக்கு பதவி உயர்வு அளித்துள்ளன. வேண்டுமானால், 21 வது நூற்றாண்டு பெண்மணி என்ற பெருமிதத்துடன் அவளை நாம் அடையாளப் படுத்திக்கொள்ளலாம். அதைத்தான் விளம்பரங்களும் விரும்புகின்றன.
பெண்ணை அதிகாரம் படைத்தவளாக மாற்றியிருக்க வேண்டிய கல்வியும் செல்வமும், அவளை அடிப்படையான அறியாமையில் இருந்து கூட மீட்கவில்லையே?

அனைத்துக்கும் பெண்கல்வியே தீர்வு என்ற முழக்கம் தற்போது அதன் அர்த்தப்பொலிவை இழந்து வருகிறது. பொருளீட்டவும், அதன் அடிப்படையில் திட்டமிட்டு தனது திருமணவாழ்வை அமைத்துக் கொள்ளவும் இன்றைய நவீனபெண் கற்றுக்கொண்டிருக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் அதன் பிறகான அவளது வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பெரும்பாலும் தோல்வியே அடைகிறாள்.

 ஒரு சாராசரியான வாழ்க்கையை, இணையுடன் சேர்ந்து வாழ்வதே அவளுக்கு சாகசமாகி விடுகிறது. தெளிவும், அன்பும் நிரப்பவேண்டிய இடைவெளியை அகங்காரமும் (Ego), உடைமைப்புத்தியும் (Possesive) வந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஆண்களிடம் இயல்பாகவே ஊற்றெடுக்கும் இந்த குணங்கள், பெண்களிடமும் தொற்றும்போது வாழ்வு புண்ணாகிறது. இதை எதிர்கொள்வதில் நவீனபெண் தோற்றுத்தான் போகிறாள்.
சொந்தமாக ஒரு பிளாட்டும், சொகுசான வாழ்வும் அவளது அதிகபட்ச லட்சியங்களாக கற்பிக்கப்படுகின்றன. இவற்றுக்கு அப்பால் வசீகரத்துடன் விரிந்து கிடக்கும் மனவுலகம் பற்றிய அக்கறையோ, அறிமுகமோ, இன்றைய நவீனபெண்களுக்கு கிடைப்பதில்லை.

20ம் நூற்றாண்டுகளின் தலைமுறையில் காதல் என்பது பிடிவாதமான லட்சியமாக இருந்தது. இப்போது லோகாயதக் கணக்கின் அடிப்படையில் செய்து கொள்ளப்படும் ஒரு தாம்பத்திய ஏற்பாடாக அது நீர்த்துப் போனதாகவே தெரிகிறது. பெண்ணின் உள்ளீடற்ற தக்கையான சுயச்சார்பு வளர்ச்சியே, ஆண் – பெண் உறவின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.

ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூக மாற்றங்களுக்கு உயிர்ப்புள்ள காரணிகளாக இருக்கும் என்று நம்பப்பட்ட, காதல் திருமணங்கள், இப்போது எதற்கும் தகுதியற்று, காலாவதியாகிப்போன அவலமும் கூட இதனால் நேர்ந்ததுதான்.
பெண்களை மேம்படுத்தாமல் எந்த ஒரு சமூக மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதற்கு, இப்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் வீழ்ச்சிகளே சாட்சி. சமூக மாற்றத்திற்கான ஆதார சக்தியான பெண்ணை, ஆதாரமே இல்லாத பொம்மையாக நாம் வைத்திருக்கும் வரை எந்த மேன்மையும் சாத்தியப்படப் போவதில்லை.

மனித உறவுகள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத இந்த வளர்ச்சியில், தனிமையும், வெறுமையும் இயல்பாகவே இன்றைய பெண்களை வந்து ஆட்கொள்கின்றன. கணவனிடம் கிடைக்காத அமைதியை கடவுளிடம் தேடிச்செல்கிறாள். தூதுவர்களாக சாமியார்கள் தேவைப்படுகிறார்கள். பிரபல சாமியார்களின் ஆசிரமங்களில் இப்போதெல்லாம் படித்த இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மேல்தட்டுக் குடும்ப பெண்களின் தற்போதைய நிலை இதுவாகத்தான் இருக்கிறது.

இவையெல்லாம் பெருநகரங்களில் வசிக்கின்ற மேல்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த  மிகக்குறைந்த எண்ணிக்கையுள்ள பெண்களின் நிலை தொடர்பான பார்வை மட்டுமே. ஆனால், பெண்கள் முன்னேறி விட்டர்கள் என்பதற்கு உதாரணமாக,  இவர்களைத்தானே ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
படிப்பும், பணவரவும் உள்ள மேல்தட்டுப் பெண்களின் நிலையே இதுவென்றால்…. பெரும்பான்மையான கீழ்த்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், கிராமப்புறங்களையும் சேர்ந்த பெண்களின் நிலை….?
தாங்கள் வேலைக்குச் செல்வதால் தங்களது குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்திருப்பதாக, நடுத்தர பிரிவைச் சேர்ந்த சில பெண்கள் கூறுகிறார்கள். ஆனால், முக்கியமான முடிவுகளை தீர்மானிப்பதில் தங்களின் பங்களிப்பு இன்னும் முழுமையாக ஏற்கப்படவில்லை என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஓரளவு கல்வி அறிவும், சிந்தனையும் பெற்ற பெண்கள் இந்த இடத்தை நோக்கி நகரும்போதுதான், குடும்பங்களில் பிரச்சனை வெடித்து பின்னர் அது விவாகரத்துவரை செல்கிறது. அண்மையில் விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதை சில புள்ளிவிவரங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

அதிகாரத்தைப் பெறும் அவளது போராட்டத்தில், பெண் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்படுகிறாள். இத்தகைய போராட்டத்தை மூர்க்கத்தோடு எடுத்துச் செல்லும் பெண், அதே மூர்க்கத்தோடு ஆணதிகாரத்தினால் வீழ்த்தப்பட்டு சரிகிறாள். தொடங்கிய இடத்திற்கே மீண்டும்  வந்து நிற்கிறாள்.
இப்படித் தனிமைப்படுத்தப் பட்டு, அதற்குப் பின்னரான வாழ்வைத் தனியாகவே எதிர்கொள்ளும் நகர்ப்புற ஏழை, மற்றும் கீழ் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மேல்தட்டு பெண்களைக் காட்டிலும்,  இத்தகைய சமூக அடுக்கைச் சேர்ந்த பெண்களே தங்களுக்கான போராட்டத்தை முனைப்புடன் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஓர் ஆறுதலான செய்தி.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த அடித்தட்டு பெண்களைப் பொறுத்தவரை சுயஉதவிக் குழுக்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டம் வறுமை ஒழிப்பில் மிகமுக்கியப் பங்களிப்பைச் செய்திருக்கிறது. ஆனால், இதன் மூலம் இவர்களுக்கான அங்கீகாரத் தன்மையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடவில்லை. கணவர்கள் சோம்பேறியாகி இருக்கிறார்கள் என்ற ஒரு மாற்றத்தைத் தவிர, வேறு எந்த பலனும் இல்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மதம், ஜாதி, இவை சார்ந்த அகமுறைச் சடங்குகள் என்ற புராதனமான தளைகளில் இருந்து சாமான்யப் பெண்களில் எத்தனை பேர் விடுபட்டிருக்கிறார்கள் என்பது பெண் விடுதலைக்கான முக்கியமான கேள்வி. ஆனால் இந்தத் தளைகளில் இருந்து பெண் மட்டும் தனியாக விடுபட முடியாது என்ற யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எனவேதான், பெரியார் பெண் விடுதலையை சமூக விடுதலையின் ஓர் அங்கமாகப் பார்த்தார். மூடத்தனத்தின் ஊற்றுக் கண்ணாக பெண்களைப் பாதுகாத்து வைக்கும் வரைதான், ஆணாதிக்க உலகத்துக்குப் பாதுகாப்பு. மதம், ஜாதி, கடவுள், இவை சார்ந்த நம்பிக்கைகள், அகமுறைச் சடங்குகள் போன்றவற்றின் லாகிரியில் பெண்கள் மயங்கிக் கிடக்கும் வரை, ஆணாதிக்க உலகத்துக்குக் கொண்டாட்டம்தான்.

நடை, உடை பாவனைகளிலும், வாழ்க்கை முறையிலும், நவீனத் தளத்தை எட்டிப் பிடிக்க முடிந்த பெண்களில் எத்தனை பேர், சிந்தனை அளவில் நவீனத்துவத்தை உள்வாங்கியவர்களாகப் பரிணமித்திருக்கிறார்கள்?
நவீனத் தொழில் நுட்ப வசதிகளுடன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படும் இன்றைய தொடர்களில், பெண்ணுக்கான பழைய வரையறைகளும், அடையாளங்களும் தானே தற்போதும் வலியுறுத்தப்படுகின்றன. நாட்டின் பெரும்பான்மைப் பெண்கள் எந்தக் கேள்வியுமின்றி இ்த்தகைய முடைநாற்றம் வீசும் தொலைக்காட்சித் தொடர்களுக்குள்தானே மூழ்கிக் கிடக்கிறார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்களுக்குள் கட்டமைக்கப்பட்ட உளவியல் சிக்கலின் விளைவுதானே அது?

கோவில்களிலும், மடாலயங்களிலும் பெருகிவரும் பெண்களின் கூட்டம் இந்தச் செய்தியைத் தானே நமக்குச் சொல்கிறது. அத்தகைய உளவியல் தளையிலிருந்து அவர்களை மீட்க நவீனத் தொழில் நுட்பத்தில் உச்சாணிக் கொம்பைத் தொட்டிருக்கும் நமது ஊடகங்கள் எத்தகைய முயற்சிகளை முன்னெடுத்துள்ளன?

தொழில் நுட்பம் மட்டும் மேம்பட்டால் போதுமா? கருத்தளவில் புராணகாலத்தையும் விட முந்தையப் பழமைகளை அல்லவா அது பேசுகிறது?
நவீனம் என்பது வெறும் தோற்றம் சார்ந்த மாற்றம் மட்டுமல்ல.  அறிவால், உணர்வால், சிந்தனையால், இவை கட்டமைக்கும் உளவியலால் பெண் மேம்பட்டவளாக மாற வேண்டும்.

அதற்கு வறட்டு முழக்கங்கள் மட்டும் எத்தகைய பயனையும் தராது. பெண் தன்னைப் புரிந்து கொள்வதற்கான, சாத்தியங்களை உருவாக்க வேண்டும்.
நிலவும் சமூக அமைப்பில் 5 விழுக்காட்டினருக்குக் கூட, பெண் விடுதலை குறித்த தன்னுணர்வோ அக்கறையோ இல்லை என்பதுதான் இயல்பான உண்மை. அது உருவாவதற்கான சமூக உளவியலைக் கட்டமைப்பதுதான் முக்கியமான பணி. பொதுப்புத்தியில் தற்போது கெட்டி தட்டிப் போய் உறைந்திருக்கும் பெண் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
இந்தப் பார்வையை நமக்குள் காலம்காலமாய் உருவாக்கி வைத்திருப்பது, ஜாதி, மத, கடவுள் நம்பிக்கைகள் சார்ந்த இறுகிய கட்டமைப்புகள்தான். பெண் கல்வி, சாதி மறுப்புத் திருமணம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முயற்சிகளாலும் கூட இந்த இறுக்கத்தை முழுமையாகத் தகர்த்து விட முடியவில்லை. காரணம், பழமையின் இறுக்கத்தைப் பாதுகாக்கும் ஜாதி, மதம், கடவுள் அவை சார்ந்த அகச் சடங்குகள் இவற்றுக்கு எதிராக கூர்மையான எதிர்வினைகள் எதனையும் இத்தகைய சீர்த்திருத்த முன்னெடுப்புகளால் சாதித்து விட முடியவில்லை.

இதற்கான போராட்டத்தை முனைப்போடும், தீவிரத்தோடும் முன்னெடுக்க வேண்டிய ஊடகங்களுக்கோ, அட்சயதிரிதியையைக் கொண்டாடுவதற்கே நேரம் போதவில்லை. அறிவுலகத்தால் நடத்தப்படுவதாக வெகுமக்களால் நம்பப் படும் நமது ஊடகங்களுக்கு, விளம்பர வேட்டை என்பதைத் தவிர வேறு எந்த இலக்கும் இல்லை என்பதுதானே கசப்பான உண்மை.

ஆனால், தீபாவளியைப் போல, சரஸ்வதி பூஜையைப் போல மகளிர் தினத்தையும் பண்டிகை தினமாக அவை கொண்டாடத் தவறுவதில்லை. உழைக்கும் வர்க்கத்துக்கான மே தினத்தையே நமது ஊடகங்கள் அப்படித்தானே கொண்டாடுகின்றன. மகளிர்தினத்தை நடிகைகளின் கொஞ்சுதமிழில் கொண்டாடுவதற்கு மட்டும் அவர்கள் வெட்கப்பட்டுவிடப் போகிறார்களா என்ன?

இந்த மகளிர் தினத்தையும் கூட அப்படியான பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடிக் களிப்பதற்கு, நமது தொலைக்காட்சிகள் தயாரிப்புகளோடு காத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக,  பெண்கள் மீது கவிந்திருக்கும் பழமையின் இறுக்கத்தைத் தகர்ப்பதற்குப் பதிலாக, அவற்றுக்கு மேலும் வண்ணம் பூசி அழகுபடுத்தும் வேலையில்தான் தற்கால ஊடக உலகம் ஈடுபட்டிருக்கிறது. சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வலிமை ஊடகங்களுக்கு இருப்பதாக நம்பப் படுவதால், நாம் இங்கே ஊடகங்களின் நிலை குறித்துப் பேசவேண்டிய கட்டாயம் எழுகிறது.

பெண்கள் குறித்த புரிதல் முழுமையடையாத சமூகத்தில், அவளது கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சுயச்சார்பு வளர்ச்சிகள், அவளைத் தனிமைப்படுத்தவே உதவுகின்றன என்ற யதார்த்தத்தை சமகால நிகழ்கவுகலில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்கள் குறித்த புரிதல் எப்போதுதான் முழுமை அடையும் என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை பெண்விடுதலை குறித்த சிந்தனை மிகப்பழமையானது. அவ்வையார், ஆண்டாள், மணிமேகலை என பன்முக நீட்சி கொண்ட ஒரு தேடலாகவே அது வளர்ந்து வந்திருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பே அது நவீனத்துவத்தின் எல்லையையும் தொட்டுவிட்டது. ஆனாலும், இயல்பு வாழ்க்கையில் பெண் அந்த இடத்தை இதுவரை தொட இயலவில்லை. 

பெண்ணை பேராற்றல் உள்ளவளாக வளர்த்தெடுக்க வேண்டிய கல்வியும், செல்வமும், அவளை நவீன அடிமையாக்கி வரும் ஆபத்தை நாம் உணரத் தவறினால், எந்த ஒரு மாற்றத்திற்காகவும் இன்னும் சில நூறாண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை நமக்கு மீண்டும் ஏற்படலாம்!


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்