/* up Facebook

Mar 31, 2014

இந்திரா உள்பட பெண் தலைவர்கள் மோசமாக நடந்து கொண்டனர்!- திமுக பெண் கவிஞர் சல்மா பரபரப்பு பேட்டி


நாட்டின் பெரிய பொறுப்புக்கு வந்த பெண் தலைவர்களெல்லாம் பெரும்பாலும் மோசமாகவே நடந்து கொண்டார்கள் என்று திமுக மகளிரணி பிரச்சாரக் குழுச் செயலாளரும், பிரபல பெண் கவிஞருமான சல்மா கூறியுள்ளார்.

திமுகவில் அழகிரிக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பது தேர்தல் முடிவில் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு உறுப்பினரும், திமுக எம்.பி. கனிமொழியின் தோழியுமான கவிஞர் சல்மா ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:

இந்த தேர்தலில் நீங்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வீர்களா?

எனது சொந்தத் தொகுதியான கரூரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்குக் கேட்டுள்ளேன். எனது சொந்தப் பகுதியான வல்லநாடு, துவரங்குறிச்சி போன்ற பகுதிகளில் நான் அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் நன்கு அறிமுகமானவள். எனவே எனது தொகுதியில் பிரச்சாரம் செய்வதுதான் திருப்தி அளிக்கிறது. மேலும் கள்ளக்குறிச்சி, கோவை தொகுதிகளில் போட்டியிடும் எங்கள் நண்பர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய உள்ளேன். பட்டுக்கோட் டையில் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்துள்ளேன்.

திமுகவில் உங்களுக்கு சரியான முக்கியத்துவம் இல்லையென்று கூறப்படுகிறதே?

அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஊடகங்கள் எதையாவது எழுதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. வரும் 13-ம் தேதி கூட எங்கள் ஊருக்குத் தலைவர் (கருணாநிதி) வரவுள்ளார். அதற்கான முழு ஏற்பாட்டில் தீவிரமாக உள்ளோம்.

வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

மிகவும் நன்றாக உள்ளது. ஜெயல லிதாதான் போகுமிடங்களெல்லாம் ஒரே மாதிரியாகப் பேசுகிறார். அவரது பேச்சு மக்களுக்குப் பிடிக்கவில்லை. மின்வெட்டு பெரும் பிரச்சினையாக உள்ளது. பல நேரங்களில் நாங்கள் கிராமங்களுக்குப் பிரச்சாரத்துக்குப் போகும்போது மின்சாரம் இருப்ப தில்லை. இருண்டு கிடக்கின்றன.

ஒரு பெண் பிரதமராக வந்தால் வரவேற்பீர்களா?

நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வருவது ஆணா, பெண்ணா? என்பது முக்கியமல்ல. நல்ல நிர்வாகம் தெரிந்தவராக இருக்க வேண்டும். பொதுவாக நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெரும்பாலான பெண்கள் மோசமாகவே நடந்து கொண்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு. இலங்கையின் சந்திரிகா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, தமிழகத்தின் ஜெயலலிதா என அனைவருமே மோசமாக நடந்து கொண்டதுதான் வரலாறாக உள்ளது. பெண் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதற்காகக் கெட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அழகிரியின் நீக்கம் கட்சியைப் பாதிக்குமா?

அழகிரியை நீக்கியது கட்சியைப் பெரிதாக பாதிக்கும் என்று சொல்ல முடியாது. அவருக்கு மக்கள் மத்தியி லோ, தொண்டர்கள் மத்தியிலோ செல்வாக்கு இல்லை. இது தலைமை க்கும் தெரியும். அதனால்தான் தயக்கமின்றி அவரை நீக்கியுள்ளனர். அழகிரியின் செல்வாக்கு என்னவென்று இந்தத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும்.

முக்கியமான நெருக்கடி காலத்தில், கட்சியைத் தென் மாவட்டங்களில் வளர்த்தவரைப் புறக்கணிப்பது சரியா?

திமுகவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வகையிலும் பணியாற்றி, கட்சியை வளர்த்தவர் தளபதிதான் (ஸ்டாலின்). எனவே அவருக்குதான் செல்வாக்கு உள்ளது.

கனிமொழிக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?

கனிமொழி, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். நான் அவருக்குக் கீழ் பணியாற்றும் நிலையில் உள்ள தொண்டர் என்பதுதான் எங்களுக்குள் இருக்கும் உறவு. இதில் எந்தக் காலத்திலும் மிகுந்த நெருக்கமோ, விரிசலோ ஏற்பட்டதில்லை. இருவரும் கட்சிப் பணியாற்றும் நல்ல நண்பர்கள். இதைத் தவிர அவருக்கும், எனக்கும் சண்டையோ, விரோதமோ இல்லை. அது மீடியாக்களின் கற்பனை.

இவ்வாறு அவர் கூறினார்.

கவிஞர் சல்மாவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியப் பெண் எழுத்தாளருக்கான பெமினாவின் ’வுமன் ஆப் வொர்த் ’ என்ற விருது, சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

நன்றி - திஹிந்து
...மேலும்

பால்நிலை அடிப்படையிலான உரிமைகளில் சமத்துவம் பேணப்படுகிறதா? - SL. மன்சூர்


ஆண், பெண் சமவுரிமை பேசும் காலம்மாறி சகலவிடயங்களிலும் இன்று போட்டியிட்டு வாழ்கின்ற நடைமுறைகளைப் பொதுவாகவே காணலாம். இருப்பினும் பால்நிலையில் பாகுபாடு காட்டப்படுகின்ற தன்மையானது உலகினில் பரவலாகவே காணப்படுவதானது பெண்கள் மீதான வன்;முறைக்கும், துஷ்பிரயோகத்திற்கும் இட்டுச்செல்கின்ற நிலைமையை தோற்றுவித்துள்ளதால் ஆண்களுக்கு சமமாக பெண்களை வாழ்வியலில், நடைமுறையில் ஒத்து போகக்கூடியவாறான இருப்பினை ஏற்படுத்துவத்துவதில் சகலரும் ஒத்துழைப்பு வங்கி ‘நள்ளிரவில் தனியாக ஒரு பெண் வீதியால் செல்கின்ற நிலை தோன்றினால்’ அதுவே சுதந்திரம் பெற்ற மானிட சமுதாயம் தோற்றம் பெற்றதாகக் கூறலாம்.

பொதுவாக மனித உரிமைகள் எனப்படுவதானது சர்வதேச அளவில் பேசப்படுகின்ற ஒரு  சமாச்சாரமாகவே காணப்படுகிறது. பெண்களது, சிறார்களது உரிமைகள் தொடர்பாகவும் தற்போது உலகத்தின் கவனம் திசைதிரும்பியுள்ள நிலையில் பெண்கள் தொடர்பான சமவாயமானது மனித உரிமைகளில் கூறப்பட்டுள்ள முதலாவது உறுப்புரையின் பிரகாரம் மனிதப்பிறவியினர் சகலரும் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாக பெற்றவர்கள். எனவே அவர்கள் சகோதர உணர்வுப் பாங்கில் நடந்து கொள்ளல் வேண்டும். என்று கூறியுள்ளதன்படி பால்நிலைப்பாடு என்பது இங்கு சுட்டிக்காட்டப்படாததாகவே காணப்படுகின்றது.

உலகில் பல நாடுகளில் பலவற்றில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெற்று வந்துள்ள போதிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்தையும், பெண்களுக்கெதிரான சகலவிதமான பாரபட்சகளுக்கும் எதிரான பிரகடனத்தையும் பலநாடுகள் எற்றுக்கொண்டுள்ள நிலையிலும் பெண்கள் மீதான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள் என பல்வேறு பாரபட்சங்கள் எழுந்த வண்ணமே காணப்படுவதை தினமும் காணலாம். இலங்கையிலும் இவ்வாறான ஒரு நிலைமையும் காணப்படுகிறது. ஏனெனில் இலங்கையின் பெண்கள் உரிமைகள் அரசியல் யாப்பிலும் முன்னுரிமை வங்கப்பட்டு அவர்களுக்கு அநீதி ஏற்படுகின்றபோது உரிய நியாத்தை பெற்றுக் கொள்ளும் வசதிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பான விடயமாகும். அத்துடன் பெண்களுக்கான பல்வேறு சுதந்திரங்களும் நடைமுறையில் இருந்தாலும் சில சில காரணங்களின் நிமித்தம் பெண்களின் சுதந்திரத்தன்மையில் சில வழுக்களும்; இல்லாமலும் இல்லாமலுமில்லை.

1949ல் ஜெனீவாவின் சமவாயத்தின் படி உயிர்வாழும் உரிமையும், சித்திரவதைக் குள்ளாக்கப்பட முடியாமைக்கான உரிமையும் காணப்படுவதுடன் பெண்களுக்கு எதிரான சகலவிதமான பராபட்சங்களும்  உடனடியான நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் (CEDAW) அமைப்பு பெண்களின் தனித்துவமான பண்புகளைக் பேணிப் பாதுகாக்கின்றவர்கள் என்பதை சுட்டிக்காட்டி அதன் அடிப்படையில் பெண்கள் தொடர்பான உரிமைகள் பற்றிய எண்ணக்கரு தோற்றம் பெற்று 1993ம் ஆண்டில் ஐ.நா. பொதுச்சபையின் அறிவித்தலின்படி பெண்கள் ஒரு தனி;ப்பிரிவாக ஏற்று அவர்களுக்குமான உரிமைகளை மட்டுமே முற்றுமுழுதாக கையாளும் வகையில்  சர்வதேச பெண்கள் சமவாயம் விளங்குகிறது. இவற்றினை இலங்கையும் ஏற்றுள்ள நிலையில் இலங்கையின் போக்குகளில் பெண்களுக்கான உரிமைகளின் அடிப்படையில் சமவாயத்தின் பின்பற்றலை எவ்வாறு பதிலிருக்கின்றன என்பவற்றை பார்ப்போம்.

இலங்கையில் பெண்கள் உரிமைகள்.
இலங்கையரசு பெண்கள் விடயத்தில் மிகவும் நல்லநிலையினையே பின்பற்றுகின்றமை தெளிவான விடயமாகும். ஏனெனில் இலங்கை பெண்கள் உரிமைகள் தொடர்பான பல சர்வதேச பிரகடனங்களை ஏற்றுக்கொண்டு அரசியல் அமைப்பு ரீதியாக இவற்றினை அங்கீகரித்தும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு இன்னல்கள் காணப்படுவதும்,  இலங்கை அரசியல்  அமைப்பின் காணப்படுகின்ற ஒருவிசேடமாகும். அதில்வரும் உறுப்புரை 12இன் கீழ்சமத்துவ உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பினும் நடைமுறையிலுள்ள சட்டங்களுடன் சிலவேளைகளில் முரண்படும் தன்மைக்கு உள்ளாகுவதாலும், இலங்கை பன்மைக் கலாசாரத்தைக் கொண்டுள்ள நாடு என்பதாலும் பெண்கள் தொடர்பான மீறல்கள் எந்த சமூக மட்டத்தில் அதிகம் நடைபெறுகின்றன என்பதை இலகுவில் அறிந்து கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும் சங்கடத்தை தோற்றியுள்ளமை கவனிக்கத்;தக்கதாகும். தற்காலத்தில் இவை எதுவுமின்றி அதிகமான பெண்கள் உரிமையினை இக்கின்ற நிலைமையும் தோற்றம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
1979ஆம் ஆண்டில் ஐ.நா. பொது மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கு எதிரான அனைத்துவகை பாரபட்சங்களையும் இல்லாதொழிப்பது பற்றிய சமவாயம் 1981ஆம் ஆண்டில் அமுலுக்கு வந்ததன் பிற்பாடு பெண்களுக்கு சர்வதேசரீதியான உரிமையொன்று கிடைத்ததது. அதன்பின்னர் இலங்கையிலும் 1993ம் ஆண்டில் அரசினால் பெண்கள் சமவாயம்  அங்கீகரிக்கப்படலாயி;ற்று. மகளீர் விவகார அமைச்சினை நிறுவியும் தேசிய மகளீர் குழுவினால் பின்வரும் பிரகடனங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.

அதன்படி பெண்கள் சமவாயம் பெண்களுக்கெதிராக எல்லாவகையான வேறுபாடுகளையும் இல்லாதொழித்தலுடன், பெண்களுக்கான தீர்மானங்களை எடுக்கும் துறைகளைப்பற்றி செயற்படுத்துவதை பற்றி அரசாங்கத்தின் பொறுப்பை வெளிக்காட்டும் பெண்கள் உரிமைகள் பற்றிய அரசாங்க கொள்கை சம்பந்தப்பட்ட வெளியீடாக கொள்ளப்படுகிறது.
அதாவது பெண்கள் சமவாயத்தில் உள்ளடக்கியுள்ள, கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:-

 • அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஆண் பெண் தன்மையின் காரணமாக ஏற்படுகின்ற முரண்பாடுகள்
 • குடும்பத்திலுள்ள ஆண், பெண் தன்மையின்  காரணமாக ஏற்படுகின்ற முரண்பாடுகள்.
 • கல்வி மற்றும் பயிற்சி  பற்றிய ஆண், பெண் தன்மையின் காரணமாக ஏற்படுகின்ற முரண்பாடுகள்.
 • தொழில்களில் ஈடுபடுதல்கள் பற்றிய சிக்கல்கள்.
 • சுகாதார மற்றும் போசாக்கு பற்றிய சிக்கல்கள்
 • சமுதாய முரண்பாடுகள்

பெண்களுக்கு எதிரான வன்செயல்கள். போன்றவைகளை காணலாம்.
பெண்களின் உரிமைகளுக்கு ஏற்புடையதான சட்டங்களை சமவாயத்தில் ஒப்பமிட்ட நாடுகள் என்ற அடிப்படையில் அச்சட்டவாக்கில் உள்ளடக்கியுள்ள சமவாயங்கள் தனது நாட்டின் சட்டத்தால் வலுப்படுத்துவதற்கு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. அதன்படி இலங்கை பெண்கள் சட்டமுறையில் உள்ளடக்கியுள்ள பெண்களின் உரிமைகளுக்கு ஏற்புடையதான சட்டங்களைப் பற்றிய விபரங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.

 • அரசியல் அமைப்பில் சட்டம் மற்றும் பெண்கள் உரிமைகள்.
 • குற்றவியல் சட்டம் மற்றும் பெண்கள் உரிமைகள்.
 1. கருச்சிதைவு மற்றும் கருச்சிதைவினால் மரணடைதல்
 2. கடுங்காயம் விளைவித்தல்
 3. மானபங்கம் செய்யும் நோக்குடன் ஒரு பெண்ணுக்கு தொந்தரவு செய்தல். மற்றும் குற்றவியல் பலாத்காரம்
 4. பாலியல் தொல்லை கொடுத்தல்
 5. கற்பழிப்ப
 6. முறையில்லாப் புணர்ச்சி
 7. பாலியல் துஷ்பிரயோகம்
 8. பாலியல் துண்புறுத்தல்
 • பெண்கள் உரிமைகளுக்கு ஏற்புடையதான ஏனைய சட்டங்கள்
 1. விவாகம் மற்றும் மணநீக்கச் சட்டம்.
 2. ஆதனங்கள் மற்றும் பிற உரிமைகளைப் பெற்றுக் கொள்ளல்
 3. குடும்ப வன்முறைகளை தடுத்தல் சட்டம்.

பெண்களின் உரிமைகளின் விடயத்தில் அவர்களது பாதுகாப்;புக்கு உத்தரவாதம் சட்டத்தினால் வங்கப்பட்டுள்ள பிற ஏற்பாடுகள் :-
கைது செய்யப்பட்ட ஒரு பெண்னை பரிசோதிப்பது தாதித் தாயார் ஒருவரினால் அல்லது பெண் பொலீஸ் அலுவரினால் செய்யப்படுதல் வேண்டும். ஆண் பொலீஸ் அலுவலருக்கு அவரை பரிசோதிக்க உரிமை இல்லை. ஒரு பெண் பொலீஸ் நிலையமொன்றினுள் தடுத்து வைத்திருப்பது தாதித்தாயார் அல்லது பெண் பொலீஸ் அலுவரின் பாதுகாப்பில் செய்யப்படுதல் வேண்டும். மட்டுமன்றி 1956ம் ஆண்டின் 47ஆம் இலக்கச் சட்டத்தின்படி பெண்கள் கைத்தொழிற்சாலைகளில் இரவு வேளைகளில் சேவையில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டது 1984ம் ஆண்டின் 32ம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பெண்கள் இரவு வேளைகளிலும் சேவை செய்யலாம்  எனச் சட்டமாக்கப்பட்டுள்ளது. அதில் சில நிபந்தனைகளை முன்னிறுத்தியே இராக்காலங்களில் வேலைகளில் ஈடுபடுபடலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது,


பெண்களின் பிரவசக்காலத்திலும், பிரசவத்தின் பின்னுள்ள காலங்களிலும் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளும் சட்டதின்படி வங்கப்பட்டுள்ளது. பெண்கள் விடயத்தில் அவர்களது உடல்ரீதியாக உளரீதியாக பாதிக்கப்படுவது, மற்றும் பலாத்காரம் பயன்படுத்துதல், பயமுறுத்;;துதல், குடும்பவன்முறை போன்ற பல்வேறு விடயங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பெண்கள் மீதான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வங்கும் நிலைக்கு இலங்கை அரசின் சட்டஏற்பாடுகள் அமுலில் உள்ளதையும் காணலாம்.
இன்று சகல நிலைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு சரிநிகராக அனைத்து தொழிற்துறைகளிலும் வேலைத்தளங்களிலும் தரையிலும், ஏன் ஆகாயத்திலும் பெண்கள் சேவையாற்றிக் கொண்டிருப்பது மனித உரிமைகளின் எல்லோரும் சமம் என்பதையே வலியுறுத்தி நிற்கின்ற விடயாகக் கொள்ளலாம். ஆண்களும் பெண்களும் ஒரே தொழிலில் ஈடுபடுவதுடன் அவர்களுக்கும் ஒரே சம்பளத்தையும் பெறுகின்ற நிலைமை இன்று நாட்டில் காணப்படுகின்ற பெண்கள் உரிமைக்கு வங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தினை காட்டுகிறது.

மனித உரிமைகள் சகலருக்கும் சமமானதே என்ற அடிப்படையில் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் பலமட்டங்களிலும் பலவிதமாக இடம்பெற்று வருகின்றன. அதாவது குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, பாலியல் தொல்லை என்பவற்றை உடல், உள மற்றும் பாலியல்  ரீதியான துன்புறுத்தல்களாக வகைப்படுத்தி பட்டியலிட்டுக் கொண்டேபோகலாம். இந்நிலை நவீன உலகில் மனிதனின் சிந்தனைவளர்ச்சி இன்றும் மிருக்தனமாக, அநாகரிகமாகவுமே உள்ளதென்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை பெண்களின் சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலையும் ஏற்படுத்;தி வருகின்றது.

இன்று குடும்ப வன்முறைச் செயல் தடுப்புச் சட்டம், குற்றவியல் கோவை திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்கள் மூலம் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்து பெண்கள் உரிமைகளை கொண்ட மனிதர்களாக வா வேண்டும்.  அவர்கள் சம உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என ஏட்டளவில் பெண்ணுரிமைகள் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளன. ஆயினும் இச்சட்ட நடவடிக்கைகள் சமூகத்தின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து சமூக அநீதிகளை இல்லாதொழிக்கும் வகையில், பாதிக்கபட்டவருக்கு நீதி வங்கி பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு தண்டனை வங்குவதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதும் பல சிக்கல்கள் நிறைந்த ஒரு விடயமாகவே காணப்படுகின்றது.

எமது நாட்டில்2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க குடும்ப வன்முறை செயல் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு குடும்ப வன்முறை பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனினும் பிற்போக்கான எண்ணங்கள் பெண்கள் மத்தியிலும், குடும்பங்களிடமும் காணப்படுவதால் அவை ஆண்களுக்கு சார்பாகவும் உள்ளது. உதாரணமாக அடிக்கிற கைதான் அணைக்கும் அணைக்கிற கைதான் அடிக்கும்  இதுவே வீட்டு வன்முறைக்கு பெண்களுக்கு சொல்லித்தந்த பாடம். எனவே குடும்பப்பிரிவினை ஏற்படுத்தும் என்ற பயத்தினால் இவை வெளிவருவதில்லை இவ்வாறான பழைமையான நிலைகளிலிருந்து வன்முறை ஒரு குற்றச் செயல் அதற்கெதிராக நீதிகோர பெண்களுக்கு உரிமையுண்டு என்பதை வலியுறுத்தி குடும்ப வன்முறைக்கான சட்டங்கள் உள்ள நிலையில் இதுவோர் பெண்கள் உரிமையில் சில பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக பார்க்கலாம்.

பெண் ஆதிக்கமானது சகல மட்டங்களிலும் நிறைந்து காணப்படுகின்ற ஒருவிடயமாக தற்காலத்தில் காணக்கூடியதாய் உள்ளது. உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பட்டத்தினைப் பெற்றவர் திருமதி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா, அவரைத் தொடர்ந்து ஜனாதிபதியாக திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களும் இருந்து நாட்டின் அரசினை ஓட்டி சாதனை படைத்த பெண்கள் இலங்கையில் உள்ளனர். இது எதனைக்காட்டுகின்றது என்றால் இலங்கையில் பெண்களுக்கு முக்கியத்துவமான இடம் உள்ளது என்பதுடன் பெண்களுக்குக்கான உரிமைகளின் உயர்வுத்தன்மையை இது சுட்டிநிற்கிறது என்ற முடிவுக்கு வரக்கூடியதாயும் உள்ளது.

எனவே பெண்களின் மீது பற்றுற்று, அவர்களும் மனிதர்கள்தான், சமமான அந்தஸ்துடன் வாழும் நிலைக்கு சில காமத்தனம் படைத்த காமுகர்களை இனங்கண்டு சமுதாயத்தின் முன் கொண்டுவந்து விலக்களிக்கின்றபோது காந்தி சொன்ன அந்தப் பெண் நள்ளிரவில் தனியாக செல்கின்ற நிலை தோற்றம் பெறுகின்றபோதுதான் உண்மையான பெண்ணியம் சுதந்திரமுள்ளதாகவும், உரிமையுள்ளதாகவும், பெண்கள் மதிக்கப்படுகின்றனர் என்கிற முடிவுக்கும் வரலாம். பெண்களுக்கு இவ்வளவு உரிமைகள் இருந்தும் பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்கின்றன. இதனைக் கண்டறிந்து உதவவேண்டியது அரசினதும் கடமையாகும். இதற்குரிய நாள் எப்போது வரும்?  என்ன ஆண்களே உங்களை நம்பித்தான் கூறுகிறேன்.
SL. மன்சூர்,
அட்டாளைச்சேனை.

...மேலும்

Mar 30, 2014

ஒவ்வொரு புள்ளியிலும் தொடங்கி… - லறீனா அப்துல் ஹக்


அறிமுகம்
"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை." (ஸூரத்துர் ரஃது:11).

அண்மைக் காலமாக பொதுத்தளங்களில் ‘சமூக மாற்றம்’, ‘சமூக மேம்பாடு’, ‘சமூகப் புனரமைப்பு’ முதலான சொல்லாடல்கள் அதிகம் மேலெழுந்தவண்ணம் உள்ளன. இன்னொரு வகையில் சொல்வதானால், நமது சமூகம் பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொண்டு வருவதை முன்னர் எப்பொழுதையும்விட சமகாலத்தில் அதிகளவில் உணரத் தலைப்பட்டுள்ளது; ஒருவகையான நெருக்கடி நிலைமையை, தேக்கமுற்றுப் போனதான உணர்தலை தனிப்பட்ட முறையிலும் சமூகமாகவும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது எனலாம். எனினும், அதற்கான காரணங்களை முன்வைக்கும்போது, அடுத்தவரை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டி, ஒருவித இயலாமையை, பாதிக்கப்பட்ட மனோபாவத்தை வெளிப்படுத்துவதன் மூலம் அந்த நிலைமைக்கான பொறுப்புக்கோரலை விட்டும் நம்மில் யாரும் தப்பித்துவிட முடியாது. அதாவது, சமூகத்தின் நெருக்கடி நிலைமைக்கும் அதன் தேக்கநிலைமைக்கும் புறக்காரணிகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் அணுகுமுறையில் இருந்து விலகி, அவற்றுக்கான உண்மையான, பன்முகப்பட்ட அகக் காரணங்களை ஆய்வுகள் மூலம் கண்டறியவும், துறைசார்ந்த பங்களிப்புகளின் வாயிலாக ஒவ்வொரு துறையிலும் உள்ள இடைவெளிகளை இட்டுநிரப்பவும், இருக்கின்ற நிலைமையைச் செப்பனிட்டுச் சீர்செய்யவும் வேண்டிய கடப்பாடு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஏனெனில்,   
"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளாராவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார்." (ஸஹீஹ் புஹாரி) 
என்ற நபிமொழி, அதனையே நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.

சமூகம் என்பது ஒரு பரந்த கட்டமைப்பு. அதனை மேம்படுத்தி முன்னேற்றுதல் என்பது தனியே ஒருவரால், இருவரால் மட்டும் செய்துமுடிக்கக்கூடிய பணியல்ல. சமூகத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தமது அறிவுக்கும் ஆற்றலுக்கும் துறைசார் நிபுணத்துவத்துக்கும் ஏற்பத் தமது பங்குப் பணியை செவ்வனே செய்வதற்கு முன்வருவதன் மூலமே ஆரோக்கியமான சமூக மாற்றத்தை, ஒரு புத்துயிர்ப்பைப் பெரிதும் சாத்தியப்படுத்தலாம் என்பது தெளிவு. அந்தவகையில், சட்டத்துறை எனும் மிக முக்கியமான   கற்கையைத் தெரிவுசெய்துள்ளவர்கள், தமது துறைசார்ந்த நிபுணத்துவம் மூலம் செய்யக்கூடிய சமூகப் பங்களிப்பு மகத்தானதாகும். 

சட்டத்தின் அடிப்படை நோக்கம் சமூக நீதியை, ஒழுங்கை நிலைநாட்டுவதாகும். அது, வாழ்வியலின் சகல துறைகளுக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தி, அவற்றைச் சிறப்பாகக் கட்டமைக்கக்கூடிய சக்திவாய்ந்த ஒரு கருவியாகும். அரசாக இருந்தாலும் நிறுவனமாக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும், அதனை நீதியானதாக வடிவமைப்பதிலும் அறம் சார்ந்ததாக நிலைநிறுத்துவதிலும் சட்டத்துறையின் பங்கு அளப்பரியது. இந்நிலையில், இலங்கையில் சட்டத்துறையில் கற்கையை மேற்கொண்டிருப்போர் தமது துறைசார்ந்த சிறப்புத் தேர்ச்சி மூலம் ஆற்றக்கூடிய பல பணிகளில், சமூகத்தின் சிற்றலகான (small unit) குடும்பக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் உள்ள சவால்களை இனங்கண்டு அவற்றைச் சீர்படுத்துவது தொடர்பில் கவனத்தைக் குவிமையப்படுத்துவதன் இன்றியமையாமையை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

குடும்ப வன்முறையின் பரவலாக்கம்
குடும்ப அமைப்புக்குள் இடம்பெறும் உளவியல் ரீதியானதும் பௌதீக ரீதியானதுமான சகல வன்முறைகளும் குடும்ப வன்முறை எனப்படும். இது, உலக அளவில் மிகப் பரவலாக இடம்பெற்றுவரும் ஓர் அநீதியான நடைமுறையாகும். இத்துறை சார்ந்து உலகெங்கிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையிலும் அத்தகைய ஆய்வுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 1990 ஆம் ஆண்டு 27% (பெரேரா) ஆகவும், 1991 ஆம் ஆண்டு 32% (சமரசிங்ஹே) ஆகவும், 1992 ஆம் ஆண்டு 60% (தெரணியகல) ஆகவும் இலங்கையிலே குடும்ப வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சதவீதக் கணிப்பீட்டின்படி இலங்கையில் இக்குற்றச்செயலின் வேகமான பரவலாக்கத்தைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. 

அவ்வாறே, Women’s Rights Watch (Sri Lanka) 1998 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுமொத்தக் குடும்ப வன்முறைகளில் 26% ஆனவை தனித்துப் பெண்களுக்கு எதிரானவை என்றும் அவற்றுள் 85% ஆனவை தனிப்பட்ட முறையில் இடம்பெற்றவையாகவும், 46% முதல் 54% வரையான வன்முறைத் தாக்குதல்கள் கணவன்மாரினால் மேற்கொள்ளப்பட்டவையே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுபோன்ற குடும்ப வன்முறைகள் முஸ்லிம் குடும்பங்களிலும் பரவலாக இடம்பெற்று வருவதை சில ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 2004 ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் வாழும் தென்னாசியாவைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 1999-2004 வரையான காலகட்டத்தில் அங்குள்ள முஸ்லிம் கணவன்மாரினால் பெண்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் 24% ஆகும் (Ahmad, Riaz, Barata, & Stewart, 2004). அமெரிக்காவின் இல்லினொய்ஸில் உள்ள இந்திய மற்றும் பாகிஸ்தானிய முஸ்லிம் பெண்கள் மத்தியில் 2007 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, குடும்ப வன்முறையால் பாதிப்புக்கு உள்ளான 18-35 வயதுக்குட்பட்ட படித்த, வேலைபார்க்கும் முஸ்லிம் பெண்களின் சதவீதம் 77% ஆகும் (Adam & Schewe,2007). இப்படியாக, மனிதர்களிடையே பரஸ்பர அன்புப் பிணைப்பையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் நோக்குடன் அமைந்த குடும்பம் என்ற அமைப்பு, தன் இலக்கில் இருந்து விலகி, வன்முறையான போர்க்களமாக மாறிவருவது  மிகுந்த கவலைக்குரியதாகும்.

இஸ்லாமியக் குடும்ப அமைப்பின் ஸ்திரத்தன்மை: சவால்களும் செய்யக்கூடிய சீர்திருத்தங்களும்

அல்லாஹ் த ஆலா அல்குர் ஆனிலே,
“உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான்.” (ஸூரத்துந் நஹ்ல்:80) 

என்று கூறுகின்றான். ஆகவே, வீடும் அதில் வாழும் குடும்பமும்  வெளியுலக அழுத்தங்களில் இருந்து ஒரு மனிதனை விடுவித்து மனநிம்மதியைத் தரக்கூடியதாக அமைதல் வேண்டும். இதுவே குடும்ப அமைப்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் உயரிய, உன்னதமான இலக்காகும். 

எனினும், இன்று குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள், பிரிவினைகள் அதிகளவில் நிலவுவதையும், சிலபோது குடும்ப வாழ்வில் ஏற்படக்கூடிய மனமுறிவுகள் தம்பதியரை மணமுறிவு வரை இட்டுச் செல்வதையும், அதனால் முழுக் குடும்பமும் அல்லலுற்றுத் தவிப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. பூரண வாழ்க்கைத் திட்டமான இஸ்லாத்தின் அழகிய வழிகாட்டல்களின் உண்மையான அடிப்படைகள் பற்றிய தெளிவின்மைகள், சுயநல அடிப்படையிலான துஷ்பிரயோகங்கள் என்பன குடும்பக் கட்டமைப்பைச் சிறப்பாகப் பேணிப் பாதுகாத்தல் என்ற இஸ்லாத்தின் நோக்கத்தையே சீர்குலைப்பனவாக அமைந்துள்ளன. இத்துரதிருஷ்டவசமான நிலை பரவலடைவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை நோக்கி நகர்வதற்கான முன்னெடுப்புக்களைத் தூண்டுவது காலத்தின் தேவையாகும்.  

இதுதொடர்பில் ஆழமாக நோக்குமுன், விவாகம் – விவாகரத்து தொடர்பான மூன்று உண்மைச் சம்பவங்களையும் அவற்றின் அடியாக இவை போன்ற பிரச்சினைகள் முளைவிடாமல் தடுக்க எத்தகைய முன்னெடுப்புகளைச் செய்யலாம் என்பதையும் ஆராய்வது பயனுடையதாக அமையும்.  

சம்பவம் 1:
தமது குடும்ப அந்தஸ்து, தொழில்ரீதியான பிணைப்பை உறுதிப்படுத்துதல் என்ற நோக்கத்தில் மணப்பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்திச் செய்துவைக்கப்பட்ட திருமணம் விவாகரத்தில் முடிதல்.

நம்முடைய சமூக வாழ்வொழுங்கில் இஸ்லாத்தின் வழிகாட்டல்களும் சமூகத்தின் கலாசாரப் பழக்க வழக்கங்களும் இணைந்தே பேணப்பட்டுவருகின்றன. இவை இரண்டும் ஒரு சமூகத்தின் கட்டுக்கோப்பையும் ஒழுங்கையும் நிர்ணயிக்கும் நோக்கிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு. உதாரணமாக, பாரம்பரியமான சமூக மரபில், பொதுவான சபைகளில் பெண்களின் பிரசன்னம் அல்லது பெண்ணின் பங்குபற்றுதல் பெரியளவில் ஊக்குவிக்கப்படுவதில்லை. திருமண வழக்கிலும் இதுவே மரபாக இருந்துவருகிறது. 

இலங்கையில் முஸ்லிம் திருமணத்தின்போது பொதுச் சட்டப்பிரகாரம் உள்ள விண்ணப்படிவம் உரிய முறைப்படி பூர்த்திசெய்யப்படுவதன் மூலமே அத்திருமணம் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனாலும், திருமண நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக காதியார் உள்ளிட்ட பிரமுகர்கள் ஒன்றுகூடி நடத்தும் நிகழ்வாகவே மரபார்ந்து இடம்பெற்று வருகின்றது. பின்னர் தனிப்பட்ட முறையில் மணப்பெண்ணின் கையொப்பம் உரிய விண்ணப்பப் படிவத்தில் பெறப்படுகின்றது. 

இந்த ஒழுங்கு சமூகரீதியில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே. என்றாலும், சிலபோது இந்த முறைமை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய வாய்ப்பாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதையே மேற்படி முதலாவது சம்பவம் நமக்கு உணர்த்துகின்றது. சட்டதிட்டங்கள் எவ்வளவுதான் காத்திரமானவையாக இருந்தபோதிலும், ஆங்காங்கே துஷ்பிரயோகங்கள் நடப்பதுண்டுதான். என்றாலும், அந்த வாய்ப்பையும் இயன்றளவு இல்லாமலாக்கப்பட வழிவகை செய்ய முயற்சிப்பதே சிறந்ததாகும். 

அந்தவகையில், பெண்ணுடைய சம்மதம் உரிய முறையில் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும், திருமண நிகழ்வு எழுத்துபூர்வ உடன்படிக்கையாகக் கைச்சாத்தாகும் தருணத்தில் மணப்பெண்ணினது பிரசன்னமும் பலர் முன்னிலையில் அவளது விருப்பமும் அறியப்படுதல், கையொப்பம் பெறப்படுதல் என்பவற்றுக்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவது வரவேற்கப்படத்தக்கது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதற்கும்  துஷ்பிரயோகத்தின் அளவு குறைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

சம்பவம் 2:
ஒரே ஊரில் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்த இருவருக்கு ஒருவரை ஒருவர் பிடித்துப்போய் இரு குடும்பங்களினதும் சம்மதத்துடன் மிக இளம் வயதிலேயே திருமணம் நடக்கிறது. தாம்பத்தியம் பற்றிய எந்த அறிவூட்டலும் அற்ற நிலையில் மனைவியை மென்மையாகக் கையாளத் தெரியாத இளம் கணவன். முதலிரு “பயங்கரமான” அனுபவங்களினால் கணவனின் அருகாமையைக் கண்டு அஞ்சி ஒதுங்கும் மனைவி. திருமண உறவு நீடித்தால் அந்தப் “பயங்கர அனுபவம்” தொடரவே செய்யும் என்று அஞ்சி, கணவனே வேண்டாம் என்ற முடிவுக்கு வருகிறாள் அந்த இளம்பெண். காதி நீதிமன்றத்தில் தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்ல வெட்கப்பட்டு, வாய்க்கு வந்த ஒரு காரணத்தைச் சொல்லி விவாகரத்துக் கோருகின்றாள். திருமணம் நடந்து மூன்றே மாதங்களுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது, அந்தத் திருமண பந்தம்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு முக்கியமான விடயங்கள் கவனத்தில் கொள்ளத்தக்கது:

1) குடும்பவாழ்வு குறித்த அறிவூட்டல் அற்ற நிலை 
திருமணம், தாம்பத்தியம், திருமண வாழ்வின் விழுமிய பண்புகள்/நடைமுறைகள் என்பன குறித்த முறையான அறிவூட்டல் இன்மையால்  முறிவுக்கு உள்ளாகும் திருமணங்கள் தற்போது அதிகரித்துவருகின்றன என்றால், அது மிகையல்ல. இந்த நிலையை இல்லாமலாக்கவோ இயன்றளவு குறைக்கவோ என்ன செய்யலாம் என்ற கேள்வி மிக முக்கியமானது. ஊர்தோறும் திருமணத்தால் இணையும் தம்பதிகள் குறிப்பிட்ட காலம்வரை குடும்ப வாழ்வு தொடர்பான கற்கையை மேற்கொள்வது கட்டாயமானது என்ற ஷரத்து காதி நீதிமன்றங்களில் இணைக்கப்பட்டு, மார்க்க அறிஞர்+வைத்தியர்கள் இணைந்த ஒரு குழுவினரால் அக்கல்விப் போதனை முறைப்படி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உரிய ஒழுங்குகள் செய்யப்படுவது சிறப்பான பலனைத் தரக்கூடும்.

2) காதி நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் வழக்கறிஞர்கள் போதிய அளவில் உள்ளீர்க்கப்படுவதன் அவசியம்
குடும்பப் பிரச்சினைகளின்போது, குறிப்பாக விவாகரத்து வழக்குகளில் பெண்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியாத, குறிப்பாக ஆண்களின் முன்னிலையில் சொல்லத் தயங்கும் விவகாரங்களும் இருக்கவே செய்யும் என்பதை மறுக்க முடியாது. மேலே குறிப்பிட்ட உண்மைச் சம்பவம் இதற்கு நல்லதோர் உதாரணமாகும். ஆகவே, பெண் வழக்கறிஞர்களும் காதி நீதிமன்றங்களில் பங்குபற்றும் நிலை பரவலாகக் காணப்படுமானால், இதுபோன்ற பிரச்சினைகளை முற்றிலும் இல்லாமலாக்க முடியாவிட்டாலும்கூட, கணிசமான அளவு குறைக்கக்கூடிய வாய்ப்பு அமையும் என்பது வெளிப்படை. தாம்பத்தியத்தில் காட்டப்படும் முரட்டுத்தனம், துஷ்பிரயோகம் (மனைவியை திருப்திப்படுத்தாத நிலை) என்பவற்றை ஆணான ஒரு காதியாரிடமோ வழக்கறிஞரிடமோ சொல்லத் தயங்கும்/வெட்கப்படும் ஒரு பெண், மற்றொரு பெண் வழக்கறிஞரிடம் அதேயளவு தயங்கும்/வெட்கப்படும் நிலை இருக்காது. அதுவே இயல்பும்கூட! 
தவிர, மேலது போன்ற ஒரு வழக்கில் மேம்போக்கான ஒரு காரணத்தைக் கூறி விவாகரத்துக்கோரும் மணப்பெண்ணிடம், தானும் பெண் என்ற வகையில் நெருங்கி, உண்மையான காரணத்தைத் தனிப்பட்ட முறையில் கேள்விகள் மூலம் துருவி ஆராய்ந்து வெளிக்கொணரும் வாய்ப்பு ஒரு பெண் வழக்கறிஞருக்கு இருக்கக்கூடிய சாதகமான நிலைமையாகும் என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. இதன்போது, ஆணோ, பெண்ணோ மற்றவரின் உரிமையைத் துஷ்பிரயோகம் செய்யுமிடத்து உரிய தண்டனை வழங்கவோ, அறிவீனமான நிலையில் இழைக்கப்படும் தவறு எனில், அதனைச் சீர்திருத்திக் கொள்வதற்கான உரிய ஆலோசனைகளை வழங்கவும் இயலுமாக இருக்கும். அதைவிட, விவாகரத்து என்ற இறுதி முடிவில் இருந்து குறித்த தம்பதியரை மீட்டு, இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கவும் ஏதுவாகும். இதன்மூலம், விவாகரத்து எண்ணிக்கையைக் கணிசமானளவு குறைத்து, குடும்பக் கட்டமைப்பைச் சீராகவும் சிறப்பாகவும் பேணிப்பாதுகாத்தல் என்ற இஸ்லாத்தின் அடிப்படையான நோக்கத்தை நிலைநாட்டுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யலாம். 

சம்பவம் 3:
மனைவியை அடிப்பதற்கான அனுமதி அல்குர்ஆனில் வழங்கப்பட்டு உள்ளது என்று சொல்லிக்கொண்டு சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் மனைவியை அடித்துத் துன்புறுத்தும் கணவன். தினசரி வீட்டில் நடக்கும் இந்த வன்முறைத் தாக்குதல்களைக் கண்டு கண்டு உளவியல் ரீதியாகப் பாதிப்புக்குள்ளான இரு குழந்தைகளின் பிறழ்வான நடத்தையும் பின்தங்கிப்போன பள்ளிப்படிப்பும்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் ஆராயுமுன், “மனைவியை அடிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டு” என்று சொல்லப்படும் அல்குர்ஆன் வசனத்தின் மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்:

"...எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தா விட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தா விட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களில் இருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களில் இருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்து விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்." (அந்நிஸா:34,35) 

இஸ்லாம், திருமணத்தை ஒரு புனிதமான ஒப்பந்தமாகக் கருதுகிறது. குடும்பக் கட்டமைப்பைப் பேணுவதில் அது மிகுந்த கரிசனை கொண்டுள்ளது. எல்லாக் குடும்பத்திலும் முரண்பாடுகள் எழுவது இயற்கையே. அந்த முரண்பாடுகள், முறுகல்நிலைகள், சிக்கல்களைத் தீர்க்க முனைகையில் குடும்ப உறவுகளிடையேயான அகவயப்பட்ட உணர்வுகள், பரஸ்பரப் பொறுப்புணர்வு, அன்னியோன்னியம், பரஸ்பர உரிமைகள், கண்ணியம், தன்மானம் முதலான அனைத்து விடயங்களையும் அது கருத்திற் கொள்கிறது. மேற்படி அல்குர்ஆன் வசனத்தில் பொருள் கூறப்பட்டுள்ளதன்படி, தனக்குக் கட்டுப்படாத மனைவிக்கு,

1) நல்லுபதேசம் செய்தல்
2) படுக்கையில் இருந்து விலகிவைத்தல்
3) இலேசாக அடித்தல்
4) கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களை ஏற்படுத்துதல்

என்பன தீர்வுக்கான படிமுறைகளாகக் காட்டப்படுகின்றன. எனினும், இந்தப் படிமுறைகள் தொடர்பில், குறிப்பாக மூன்றாவது படிமுறையாகக் காட்டப்பட்டுள்ள மனைவியை “இலேசாக அடித்தல்” என்ற படிமுறை தொடர்பில் அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. அவை வருமாறு:

1) கோபத்திலும் வெறுப்பிலும் இருக்கும் ஒரு கணவனுக்கு மனைவியை “இலேசாக மட்டுமே அடிப்பது” நடைமுறைச் சாத்தியமா?

2) தனக்குக் கட்டுப்படாமல் வீண் வீம்போடு இருக்கும் மனைவிக்கு உபதேசம் செய்தல், எப்படியும் தாம்பத்திய உறவை நாடித் தன்னை நெருங்கும் கணவனை வசப்படுத்தி அடக்கி விடலாம் என்ற நிலையை/வாய்ப்பை இல்லாமலாக்கி விடும் வகையில் படுக்கையில் இருந்து அவளை விலக்கி வைத்தல் என்ற இரண்டு படிமுறைகளின் பின்னும் திருந்தாத ஒரு மனைவியை அடிப்பதன் மூலம் பிணக்கு மேலும் அதிகரிக்குமா, குறையுமா? அப்படி வெறுப்பு மேலும் தூண்டப்பட்ட நிலையில் சமாதானத்துக்கான இருதரப்பு மத்தியஸ்தம் பூரண வெற்றியளிக்குமா? அந்த வகையில், குடும்பக் கட்டமைப்பை இறுக்கமாகப் பேண விழையும் இஸ்லாம், குடும்ப இணக்கத்துக்கான வெற்றிவாய்ப்பைக் குறைக்கச் செய்யும் வகையில் இப்படியான ஓர் அணுகுமுறையை உண்மையாகவே பரிந்துரை செய்திருக்குமா?

3) நபி (ஸல்) அவர்கள்  தமது மனைவியரோடு பிணக்கு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் ஒரே ஒரு தடவையாவது எந்த ஒரு மனைவியையாவது அடித்துத் தண்டித்து இருக்கிறார்களா, அப்படிச் செய்யாமல் சிலகாலம் பிரிந்து இருந்தார்களா?  அல்குர்ஆனுக்கு பரிபூரண விளக்க உரையாகவே வாழ்ந்துகாட்டிய அண்ணலாரின் ஸீரா இந்த இரண்டு நடைமுறைகளில் நமக்கு எதனைப் பரிந்துரைக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் காண்பதற்கு முனையும்போது கலாநிதி அப்துல் ஹமீத் அபூ சுலைமான் அவர்களின் ஆய்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அதன்படி, குறித்த இறை வசனத்தில் வரும் இலேசாக அடித்துத் 'தண்டித்தல்' என்று கருத்துக் கொள்ளப்பட்டுள்ள அரபு மூலச் சொல் "ளரப" என்பதாகும். இச்சொல் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்கத்தக்க சுமார் 17 வேறுபட்ட பொருள்களைத் தருகின்றது. தனிமைப்படுத்தல், பிரிந்து செல்லுதல், பிரித்தமைத்தல், சேய்மைப்படுத்துதல், வெளியேற்றுதல் முதலான பல பொருள்களையும் அது தருகின்றது:

நிலத்தைப் பொறுத்து - பயணம், நீங்கிச் செல்லுதல்
காதுகளைப் பொறுத்து - கேட்பதிலிருந்து தடுத்தல்
குர் ஆனைப் பொறுத்து - புறக்கணித்தல், பொருட்படுத்தாதுவிடல், கைவிட்டு விடுதல்
உண்மையையும் பொய்ம்மையும் பொறுத்து - இரண்டில் ஒன்றை வெளிப்படுத்தி, ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுதல்
திரையைப் பொறுத்து - தலையை மூடும் திரையை மார்புக்கு மேலாக இழுத்து விடுவது
கடல்கள், ஆறுகளைப் பொறுத்து - தண்ணீரை விலக்கி அதனூடே ஒரு பாதையை அமைத்தல்
சுவரொன்று எழுப்புவதைப் பொறுத்து - பிரித்தமைத்தல், வேறுபடுத்தல்
மக்களைப் பொறுத்து - கேடுகளினால் சூழப்பட்டு இருத்தல்
பாதங்கள், கழுத்து, முகம், முதுகு என்பவற்றைப் பொறுத்து - வெட்டுதல், தாக்குதல்
ஏனைய வசனங்களைப் பொறுத்து - உந்துதல், அதிர்ச்சி தரல், அறைதல், பங்கம் விளைத்தல் 
முதலான பல பொருள்களை "ளரப" எனும் அரபு வேர்ச் சொல் தருகிறது.    
ஆகவே, இதனை அடிப்படையாக வைத்து நோக்குகையில் நாம் பின்வரும் முடிவுகளைப் பெறலாம்:
·“மனைவியை அடித்தல்” என்ற வன்முறை சார்ந்த நடைமுறை கணவன் – மனைவி இடையே மேலும் வெறுப்பையும் பகைமையையும் தூண்டி, குடும்ப வாழ்வில் இணக்கத்தை ஏற்படுத்துதல் என்ற இஸ்லாத்தின் நோக்கத்துக்குப் பெரிதும் பாதகமாகவே அமையும் 
·இச்செயல், அல்குர்ஆன் காட்டித்தரும் நான்காவது படிமுறையான இருதரப்புக் குடும்பத்தினர் முன்வந்து மத்தியஸ்தம் செய்து தம்பதியைச் சமாதானப்படுத்திச் சேர்த்துவைப்பதற்கான சாத்தியப்பாட்டைக் குறைக்கும் 
மேலும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருடன் பிணக்கு ஏற்பட்டபோது அம்மனைவியர் தமது தவறை உணர்ந்து திருந்த வாய்ப்பளிக்கும் வகையிலும், குறித்த பிரச்சினை அப்பெண்களின் குடும்பத்தவர்களது கவனத்தை ஈர்த்து இருதரப்பாருக்கு இடையில் மத்தியஸ்தம் பேசி சமாதானம் செய்துவைக்கக்கூடிய வெளியை (space) ஏற்படுத்துமுகமாகவும் அம் மனைவியரை விட்டும் சிலகாலம் பிரிந்திருந்த முன்மாதிரியே காணப்படுகின்றது. 

எனவே, மேற்படி இறைவசனத்தில் “ளரப” என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வதாயின், "வீட்டை விட்டுப் 'பிரிதல்', மனைவியிடமிருந்து 'விலகியிருத்தல்', 'பிரிந்து செல்லல்' என்றே பொருள் கொள்ளப்பட வேண்டும். இதுவே, தத்தமது குடும்பத்துப் பெரியவர்கள்/ நடுவர்கள் முன்வந்து இருவரையும் சமாதானப்படுத்திச் சேர்த்துவைத்தல் என்ற நான்காவது படிமுறையோடு தர்க்க ரீதியாகப் பொருந்திப் போகக்கூடிய அணுகுமுறையாகக் காணப்படுகின்றது. 

மேலும், இஸ்லாம் அல்குர்ஆனின் 2:187, 2:229-237, 4:19, 4:25, 9:71, 30:21 ஆகிய வசனங்களில் திருமணம் என்பதை கண்ணியம், பாதுகாப்பு, ஊக்கம், அமைதி, இரக்கம், ஆறுதல், நீதி, கருணை, காதல் என்பவற்றோடு தொடர்புபடுத்திப் பேசுகின்றது. இந்த முழுமொத்த அல்குர்ஆனிய அணுகுமுறையை ஒப்புநோக்கிப் பார்க்கும்போது, Domestic violence எனப்படும் குடும்ப வன்முறைக்கு இஸ்லாத்தில் எந்தவித அங்கீகாரமோ அனுமதியோ இல்லை என்பது மிகவும் தெளிவாகப் புலப்படுகின்றது. ஆகவே, குடும்பவாழ்வு தொடர்பான  இந்த இஸ்லாத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் மேலே சொன்னவாறு தம்பதியருக்கான குடும்பவாழ்வு தொடர்பான கல்வித் திட்டத்தில் தெளிவாக அறிவூட்டப்படுதல் வேண்டும். அத்தோடு, அதனைப் பொருட்படுத்தாமல் மனைவியைக் கொடுமைப்படுத்துவோருக்கு எதிராக 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட மூலப்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பில் உரிய முன்னெடுப்புகளை மேற்கொள்வது குறித்தும் காதி நீதிமன்றங்கள் செயற்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

முடிவுரை
இஸ்லாம் ஓர் அழகிய வாழ்வொழுங்கைக் கட்டமைப்பதை வலியுறுத்தும் ஒரு மார்க்கம் என்ற வகையில் சிறப்பானதும் ஆரோக்கியமானதுமான குடும்பக் கட்டமைப்பை உருவாக்குவதில் அழகிய பல வழிகாட்டல்களை அது வழங்கி உள்ளது. மிகச்சிறப்பானதும் அன்னியோன்னியமானதுமான குடும்பமொன்றை ஸ்தாபித்தல் எனும் இஸ்லாத்தின் உன்னத நோக்கை அடைவதற்கும் அதனை உறுதிப்படுத்துவதற்கும் சட்டத்துறையின் பங்களிப்பு நேர்த்தியாகவும் காத்திரமானதாகவும் அமைதல் இன்றியமையாததாகும். அந்த வகையில், 

·‘வலி’ உரிமை துஷ்பிரயோகம் செய்யப்படாமையை உறுதிப்படுத்தும் வெளிப்படைத்தன்மையைச் சட்டரீதியாகக் கட்டியெழுப்புதல்

·மணமக்களுக்கு மத்தியில் பரஸ்பரப் புரிந்துணர்வை மேம்படுத்தி, மணவாழ்வின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில் இஸ்லாத்தின் வழிகாட்டல்களை உள்ளடக்கிய முறையான குடும்பக்கல்வி (family education) வழங்கப்படுதல். இதன்போது பாரம்பரியமான மூட நம்பிக்கைகள், பிழையான நடைமுறைகள் தொடர்பான மனப்பாங்கை மாற்றியமைத்தலுக்கு முன்னுரிமை வழங்குதல் 

·விவாகரத்துக்காக வரும் வழக்குகளை விசாரிக்கும் காதி நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் வழக்கறிஞர்களின் பங்களிப்பையும் போதியளவு உள்ளீர்த்தல்  

·காதி நீதிமன்றங்கள் குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளைத் திறம்படக் கையாளும் வகையில், மருத்துவர்கள், உளவள ஆலோசகர்கள், காவல்துறையினர் முதலானோரின் பங்களிப்பும் உரிய வகையில் உள்ளீர்க்கப்பட்ட ஒரு குழுவாக மறுசீரமைப்பு செய்யப்படுவதில் உள்ள சாத்தியப்பாடுகள் குறித்து ஆலோசித்தல்
என, சட்டத்துறையில் பயின்று நிபுணத்துவத் தேர்ச்சி அடையும் முஸ்லிம் இளைஞர் - யுவதிகள் தமது துறைசார்ந்து சமூகத்துக்குச் செய்யக்கூடிய மறுசீரமைப்புப் பணிகள் குறித்து சமகால நிலைமைகளை அறிவுபூர்வமாகவும் சிறப்பாகவும் கவனத்திற்கொண்டு, சிந்தித்துச் செயலாற்றவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

உசாத்துணைகள்:
தாஹா ஜாபிர் அல் அல்வானீ, அப்துல் ஹமீத் அபூ சுலைமான் "இஸ்லாமியச் சட்டவியலில் பெண்கள்" (மொழிபெயர்ப்பு, 2009)  "மாற்றுப் பிரதிகள்" வெளியீடு.
Abdul Hamid Abu Sulayman, (2002) Chastising Wives: Quranic Verse Re-Interpreted : Women Sic Dignity Reconsidered, London: IIT

Abdul Hamid Abu Sulayman, (2003) Marital Discord: Recapturing the Full Islamic Spirit of Human Dignity, London: IIT
Adam, M.N. & Schewe, P.A. (2007) A Multilevel Framework Exploring Domestic Violence Against Immigrant Indian and Pakistani Women in the United States, Journal of Muslim Mental Health Volume 2, Issue 1, 2007, pp.5-20
Ahmad, F., Riaz, S., Barata, P. and Stewart, D.E. 2004, ‘Patriarchal beliefs and perceptions of abuse among South Asian immigrant women’, Violence against Women, 10, pp. 262-282.
http://www98.griffith.edu.au/dspace/bitstream/handle/10072/38916/69246_1.pdf?sequence=1
http://www.whosrilanka.org/linkfiles/who_sri_lanka_home_page_gbv_country_factsheet.pdf
http://www.omct.org/files/2002/01/2178/srilankaeng2002.pdf
http://www.rc.vt.edu/pubs/Scott_Muslim_World.pdf

நன்றி: மீஸான் (2014) - இலங்கை சட்டக்கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த இதழ்
...மேலும்

Mar 29, 2014

மாதவிலக்கு, மதச் சடங்குகள் : சில சிந்தனைகள் - எம்.கே.முருகானந்தன்


பெண்களே உங்கள் மாண்பை இழிவு படுத்த இடந்தராதீர்கள்

'எப்ப ஏதாவது நல்ல காரியம் சுப காரியம் நடந்தாலும், வெளியிலை' என்று சொல்லிக் கொண்டு இவள் 'நிற்பாள்' என்ற நக்கல் பேச்சைக் கேட்காத பெண்ணா நீங்கள்?

நிச்சயம் அதிர்ஷ்டசாலிதான்.

மாதவிடாய் என்பது வழமையாக நடைபெறும் இயற்கையான செயற்பாடு. ஆனால் பெண்கள் பலருக்கும் இடைஞ்சலாக இருப்பதை மறுக்க முடியாது. அந்த நேரத்தை சிறுநீர் கழிப்பது போல சிம்பிளாக சாதாரணமாக எடுத்துக் கொண்டு சகசமாக உலவக் கூடிய பெண்கள் ஒரு சிலர்தான்.

ஆனால் பலருக்கும் சனிட்டரி பாட்ஸ் அணிந்து கொண்டு வழமையான வீட்டு வேலைகள் செய்வதும், பணிக்குச் செல்வதும் பாரிய இடைஞ்சல், அசௌகரியம், மன உளைச்சல். அத்துடன் குருதி இழப்பினால் ஏற்படும் கழைப்பும், ஹோர்மான் மாற்றங்களால் உண்டாகும் உடல், மன உபாதைகளும் தொல்லை கொடுக்கும்.

இதை புரிந்து கொண்டு ஆதரவாக நடப்பது எங்காவது ஓரிரு ஆண்கள்;தான். ஏதோ தூங்குவதும் விழித்தெழுவதும் போன்ற சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்கிறார்கள். அவளுக்கு அது மாதா மாதம் வருகிறதே, அதோடை எவ்வளவு சிரமத்துடன் எல்லா வேலைகளையும் கவனிக்கிறாள் என எண்ணுவதே கிடையாது.

ஆனால் ஏதாவது மத, சமூக, காலாசார சடங்குகள் என வரும்போதுதான் அது ஆண்களின் கண்களைக் குத்தும்.

இதனால் ஏதாவது மங்கள காரியம் அல்லது சமயச் சடங்கு வருகிறதென்றால் முதல் தவிப்பு பெண்களுக்கே.

அடுத்த 'சுகயீனம்' எப்ப வரும் என்பதை கணக்கிட்டுப் பார்ப்பதே முதல் வேலையாக இருக்கும்.

காரியத்திற்கு சுகயீனம் இடைஞ்சலான நாள் என்றால் சுபகாரியத்தைப் பிற் போட முடியாது. மாதவிடாயை சுலபமாகப் பிற்போடலாம் என்ற 'மருத்துவ ரகசியம்' எல்லோருக்குமே இப்பொழுது அத்துப்படி.


கலியாணம், காதுகுத்து, சாமத்தியச் சடங்கு, வீடு குடிபுகுதல் முதல் எது வந்தாலும் வீட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் தள்ளிப் போட வேண்டும் என்பார்கள். இது தேவைதானா? சில வேளை பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் கூட.

கோயில் பூசை. திருவிழா, காப்புக்கட்டு, சரஸ்வதி பூசை, எந்த விரதம் என்றாலும் கேட்கவே வேண்டாம். தள்ளிப் போட வேண்டியதாக இருக்கிறது.
மகனுக்கு கல்யாணமாம் ஆனால் தங்கச்சிக்காரிக்குத்தான் தள்ளிப் போட வேண்டுமாம்.

இது என்ன நியாயம்.

மணப்பெண்ணுக்கு தள்ளிப் போட வேண்டுமெனில் அது ஒத்துக்கொள்ள வேண்டிய விடயம்தான்.

ஆசையோடு தவமிருந்த புதுமாப்பிளைக்கு கோபம் வரும் என்பதால் மறுப்புச் சொல்ல முடியாது.

ஆனால் தங்கச்சிக்கும் மாமியாருக்கும், தோழிப் பெண்ணுக்கும் தள்ளிப் போடு என்பது சரியா?

'பேய்க் கதை கதையாதை....'

'..எங்கடை கலை, கலாசாரம் எல்லாவற்றையும் சீரழிச்சுப் போட்டுத்தான் வேறை வேலை பாப்பியள் போலகிடக்கு. இதோடை எப்படி மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது?' என்பார் தாத்தா.

சரியான நியாயம் போலத் தோன்றுகிறதா? அப்படியானால் நீங்களும் அவரது சாடிக்கு மூடிதான்.

வேட்டி உடுத்து குடுமியும் வைத்திருந்த தாத்தா இன்று டவுஸர் போட்டு பெல்ட்டும் கட்டியது மட்டுமல்ல, தலைமுடிக்கு டை அடித்து இளவட்டம் போலத் திரிகிறாரே, அதற்கென்ன பெயர். இதுவும் கலாசார சீர்கேடா?

இரண்டுமே காலாசார சீர்கேடல்ல.

காலம் மாறும்போது எமது பழக்கவழக்கங்கள் மாறுகின்றன.
கருத்துக்கள் மாறுகின்றன. கொள்கைகள் மாறுகின்றன. நம்பிக்கைகள் சீர் குலைகின்றன.

அது நியதி.

காலையில் பழங்கஞ்சி குடித்த எமது சமுதாயத்திற்கு இன்று காப்பி, தேநீர் இல்லையென்றால் 'விடிய மாட்டேன்' என்கிறதே அதுபோலத்தான்.
'கலாசார சீர்கேடு விஷயத்தை விடு.'

'இது சுகாதாரம் சம்பந்தப்பட்டது. இதோடை எப்படி கண்ட இடமும் திரியிறது' என்பார் மற்றொருவர்.

இரத்தமும் சீழும் வடியிற அழுக்குப் புண்ணுக்கு
மருந்து கட்டிக்கொண்டு
கோயில் குளம், சாமியறை, சமையலறை எல்லாம்
கூச்சமின்றித் திரிவார்கள்.


அதில் சுகாதாரக் கேடு இல்லையென்றால், பெண்களின் இந்த இரத்தத்தில் மட்டும் என்ன சுகாதாரக் கேடு இருக்கப் போகிறது.

அழுக்குப் புண்ணில் கிருமி தொற்றியிருக்கிறது அது சுகாதாரக் கேடு.

ஆனால் பெண்களில் கசிவது புது இரத்தம். கிருமித் தொற்று எதுவும் கிடையாது.

வாயால் எச்சில் வழிகிறது, மூக்கால் சளி ஒழுகுகிறது.

அதைத் துடைத்து விட்டு சகல வேலைகளையும் செய்கிறோம்தானே.

அதை விட மேலானது பெண்களின் இந்த மாதாந்த இரத்தப் போக்கும். அதோடை திரிவதும், அதைத் தள்ளிப் போடுவதும் அவர்களது இஷ்டம்.

ஆணாதிக்க நிலைப்பாடுதான் பெண்களை துடக்கென்றும், விலக்கென்றும் அந் நாட்களில் விலக்கி வைப்பதும், விலகியிருக்க நிர்ப்பந்திப்பதுமாகும்.
அதற்கு பெண்கள் தாங்களாகவே அடிபணிவதா?

ஏற்கனவே சொன்னது போல மாதப்போக்கு என்பது ஒரு சாதாரண நிகழ்வு.
சுவாசப்பையானது காற்றை உள்ளும் வெளியும் சுவாசிப்பது போல,
ஆண்களுக்கு விந்து உற்பத்தியாகி வெளியேறுவது போல,
கண்ணீர் சிந்துவது போல

இதுவும் ஒரு சாதாரண உடலியல் செயற்பாடு.

இதில் வெட்கப்படுவதற்கோ, அசிங்கப்படுவதற்கோ எதுவும் இல்லை.

ஆண்டாளும், உமாதேவியும், கன்னி மேரியும் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

அவர்களுக்கு வந்ததுதான் இன்றைய பெண்களுக்கும் வருகிறது.

"அவர்கள் புனிதமானவர்கள், தெய்வீகப் பிறவிகள். அவர்கள் இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள்" என்று யாராவது சொன்னால், அவர்களைப் பெண்கள் என்றே சொல்லமுடியாது என்பேன்.

எனவே மாதவிலக்கு நாட்களிலும் ஏனைய நாட்களில் உண்பதுபோல, உடுப்பதுபோல, தொழில் புரிவதுபோல செயற்படலாம். கோயிலுக்கும் போகலாம். திருமணத்திற்கும் போகலாம். விரதமும் பிடிக்கலாம்.


ஆசார பூச்சாண்டிகள் காட்டி பெண்களைப் பயமுறுத்தாதீர்கள்.

சுகாதார விதிகளைக் கூறித் தனிமைப்படுத்தாதீர்கள், பண்பாட்டுப் பெருமைகளைக் கூறி அவர்களை முடக்கி வைக்க முயலாதீர்கள்.

தள்ளிப் போடுவதிலும் தவறெதுவும் இல்லை.

அதிலும் முக்கியமாக கடுமையான வலி, உதிரப் பெருக்கு அல்லது அவளது வேலைக்கு இடைஞ்சலாக இருந்தால் மட்டும்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால் மிக அவசிய தேவைக்காக ஒரு சில நாட்கள் தள்ளிப் போடுவதில் பாதிப்பில்லை என்றே சொல்கிறார்கள்.

மாறாக, கோயில், விரதம், நல்லநாள்,
ஆசாரம், சுகாதாரம்
போன்றவற்றிற்கெல்லாம் தள்ளிப்போடுவது
பெண்கள் தங்களைத் தாமே,
தமது பெண்மையை,
தமது மாண்பை
இழிவு படுத்தும் செயல் என்றே நான் சொல்வேன்.

"சரி, நீ தள்ளிப் போடாவிட்டால் கிட. நாங்கள் நிகழ்ச்சிக்கான திகதியைத் தள்ளிப் போடுறம" என்றால் ஏற்றுக் கொள்ளலாமா?

உங்களுக்காக விட்டுக் கொடுப்பதுபோலக் காட்டிக் கொண்டே உங்கள் பெண்மையை அவமதிக்கும் கபட நாடகம் இது.

மசிந்து கொடுக்காதீர்கள்.

ஆனால், தள்ளிப் போடுதல் தவறில்லை.

அது உங்களுக்காக மட்டுமே,
அதுவும் உங்கள் உடற் தேவைகளுக்காக
மட்டுமே இருந்தால்!

...மேலும்

Mar 28, 2014

பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை இந்து ஆன்மிகம் ஏற்க மறுக்கிறது – அம்பேத்கர்


"பல சாதிகளில் உயர்மணம் திருமண விதிகளில் முக்கிய திருத்தத்தை ஏற்கச் செய்கிறது. உயர் மணம் நடைமுறையில் இருப்பின், மண உறவு கொள்ளத்தக்க குழுக்கள் சமூக அந்தஸ்து முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. மேல் சாதியினர் கீழ்சாதியில் பெண் எடுப்பார்கள். ஆனால், பெண் கொடுக்க மாட்டார்கள். ராஜபுத்திரர்களிடையே இவ்விதி பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. வேறு பல சாதிகளிலும் பின்பற்றப்படுகிறது. அனைத்து இந்துக்களிடையேயும் உயர்மணம் செய்யும் போக்கு காணப்படுகிறது'' என்கிறார் பிளன்ட்.

"உயர்மூலம்' "உயர்மணம்' பற்றிய விதிமுறைகளிலிருந்து அறியப்படுவது என்ன? எல்லா சாதிகளிலும் உயர்வு, தாழ்வு உணர்வு மேலோங்கி இருப்பதே  வெளிப்படுகிறது. இவ்வுணர்வு இல்லாத சாதிகளே இல்லை. இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றின் மேல் மற்றொன்று என அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலே உள்ள வகுப்பினரை அவர்கள் வெறுக்கிறார்கள்; தமக்குக் கீழே இருப்பவர்களை அவர்கள் அவமதிக்கிறார்கள்.

ஒவ்வொரு சாதியும் பிற சாதியினரை இழிவு படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கியுள்ள பழமொழிகளின் மூலம் சாதி உணர்வு வெளிப்படுகிறது. மேல் சாதியினருக்கு இழிவான மூலத்தை கற்பிக்கும் நூல்களை எழுதிய கீழ் சாதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தோன்றியுள்ளனர். "சாகியாத்திரி காண்டம்' இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும். அது, இந்து புராண புனித இலக்கிய வகையைச் சார்ந்தது. எனினும் வழக்கமான புராணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பாணியில் அது இயற்றப்பட்டுள்ளது. பல்வேறு சாதிகளின் மூலவர்களைப் பற்றி அது விளக்குகிறது. பார்ப்பனர்களுக்கு அசிங்கமான மூலத்தையும், பிற சாதியினருக்கு விழுமிய மூலத்தையும் அது கற்பிக்கிறது.

இந்து சமூக அமைப்பு சமத்துவத்தை ஏற்கிறதா? இல்லை. "பிறப்பால் அனைவரும் சமம்' என்றாலும் இக்கோட்பாடு இந்த சமூக அமைப்பிற்குப் புறம்பானதாக உள்ளது. இக்கொள்கை தவறானது என்பது அதன் ஆன்மிக அடிப்படையும் ஆகும். உலகத்தை உருவாக்கிய பிரஜாபதியின்  குழந்தைகளே அனைவரும் என்றாலும், அனைவரும் சமமானவர்கள் அல்லர். பிரஜாபதியின் வெவ்வேறு பாகங்களிலிருந்து மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளனர். பார்ப்பனர்கள் வாயிலிருந்தும், சத்திரியர் தோளிலிருந்தும், வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் பாதத்திலிருந்தும் படைக்கப்பட்டுள்ளனர். 

படைப்புக் கடவுளின் வெவ்வேறு உறுப்புகளிலிருந்து மனிதர்கள் படைக்கப்பட்டிருப்பதால், மனிதர்கள் சமமாகப் படைக்கப்படவில்லை. இக்கோட்பாட்டிற்கு உயிரியல் அடிப்படை இருக்கிறதா என்பது பற்றியும் இந்து சமூகம் கவலைப்படவில்லை. இது உண்மை இல்லையென்றால் குணத்திலும் இயற்கைத் திறன்களிலும் மனிதர்கள் வேறுபடுகின்றனர் என்பது, அவ்வளவுக்கவ்வளவு சரிதான். மாற்றாக, இது உண்மை என்றால், மனிதர் குணத்திலும் இயற்கைத்திறனிலும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்றால், அக்கொள்கைக்கு கேடு உண்டாகும். 

கோட்பாட்டின் உண்மை பற்றியும் இந்து சமூகம் அக்கறை கொள்ளவில்லை. அதனை அறக் கோட்பாடாகக் காணும் அக்கறையும் அதற்கு இல்லை. குணாம்சத்திலும் திறமைகளிலும் எவ்வளவு வேறுபட்டாலும் மனிதன் என்ற வகையில் அனைத்து மனிதர்களும் மரியாதைக்குரியவர்கள் என்பதை ஏற்க இந்து சமூக அமைப்பு மறுக்கிறது; மனிதர்களுக்குள்ள ஆற்றல் குறைவோ, மிகுதியோ அவரவர் திறமைகளை முற்றிலும் வளர்த்து பயன்படுத்தும் சூழ்நிலையை உருவாக்குவது சமூகத் திட்டமாக இருக்க வேண்டும் என்னும் கருத்தையும் அது மறுக்கிறது. நிறுவனங்களில், வாழ்க்கை முறையில், சூழ்நிலைகள் சமத்துவத்தை அனுமதிப்பதில்லை; சமத்துவ உணர்வுக்கு அது எதிரானது.

சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் இந்து சமூகம் அமைந்திருக்கவில்லை. வேறு எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அது அமைந்திருக்கிறது? இக்கேள்விக்கு ஒரே ஒரு பதிலைத்தான் கூற முடியும். அந்த அடிப்படைகளை உணர்ந்திட இயலுமாயினும், அவற்றின் தன்மை இந்து சமூகத்தில் ஏற்படுத்திய விளைவு பற்றி அய்யம் இருக்க முடியாது. இந்து சமூக அமைப்பு மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் முதலாவதும் முதன்மையானதும் வரிசைப் படுத்தப்பட்ட சமமின்மையே!

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 3, பக்கம் : 10)
...மேலும்

Mar 27, 2014

பூப்படைதல் - ஆர்த்திவேந்தன்


இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் பூப்படைதலின் சராசரி வயது 1860 -16.6, 1920 -14.6, 1950 - 13.1, 1980 - 12.5, 2010 - 10.5 வயதிற்கும் கீழ் என்று ‘The Journal of Bio Technology’யின் ஆய்வு குறிப்பிடுகிறது. சிறுமிகள் பத்து வயதிற்குள் பருவமெய்துவது இன்று சாதாரணமாகி விட்டது. உடலும், உள்ளமும் வளர்ச்சியடையும் குறிப்பிட்ட வயதிற்கு முன்பே பருவமெய்துவதை முன்பூப்படைதல்( Early Puberty) என்று குறிப்பிடுகிறது மருத்துவம்.

ஏழு வயது மகள் பருவம் அடைந்துவிட்டாள் என்பதை ஏற்றுகொள்வது கடினமாக தான் இருக்கும். ஏழு வயது குழந்தைக்கு எப்படி புரியவைப்பது, எதை சொல்லி தருவது என்ற குழப்பம் வரும். நாம் கற்று தரும் இந்த அடிப்படையான பாலியல் கல்வி தான் நம் குழந்தையின் எதிர்காலத்தை கட்டமைக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது. இந்த சூழ்நிலையை எப்படி கையாளுவது, இது எதனால் நிகழ்கிறது என்பதை தெரிந்து கொள்வது நம் கடமையாகும்.

எதனால் நிகழ்கிறது?
மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் -பிட்யூட்டரி பால் தூண்டல் அச்சுதான் இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் அடிப்படையாக இருக்கிறது. இப்பகுதியில் தொடங்கும் ஹார்மோன் உற்பத்தி சுழற்சி, இயல்பை விட முன்பாகவே செயல்பட தொடங்கி விடுவதன் விளைவாக பருவமெய்துதல் முன்பே நிகழ்கிறது. இவ்வாறு நிகழ்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

DDE (டைகுளோரோ டைஃபினைல் டைகுளோரோ எத்திலின்) PCB (பாலி குளோரினேட்டட் பைஸ் பினைல்) போன்ற பூச்சிக் கொல்லிகளில் உள்ள வேதிப் பொருள்கள் ஹார் மோன்களை தூண்டு கின்றன. தடை செய்யப்பட்ட இந்தப் பூச்சிகொல்லிகள் பயிர்களில் அதிகம் தெளிக்கப்பட்டு, உணவில் கலக்கின்றன. பிளாஸ்டிக்கில் உள்ள Phthalates என்ற வேதிப்பொருளும் முன்பூப்படை தலை துரிதப்படுத்துகிறது. மாமிசம், பால் போன்றவற்றில் உள்ள வளர்ச்சி ஹார்மோன் களும் பூப்படைதலைத் தூண்டுகின்றன. அதோடு அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளில் உள்ள வேதிப்பொருட்களும் பூப்படைதலை வேகப்படுத்துகின்றன.

உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்தால், லெப்டின் என்ற ஹார்மோனின் அளவும் அதிகரிக்கிறது. இது பூப்படைதலை விரைவு படுத்துகிறது. இதனாலேயே உடல் பருமனான குழந்தைகள் முன்பூப்படையும் விழுக்காடு அதிகமாக உள்ளது.

உடலில் சூரிய ஒளி படாமல் வளரும் குழந்தை களுக்கு விட்டமின் D சத்து குறைபாடு இருக்கும். இவர்கள் விரைவாக பருவமெய்து கின்றனர்.

ஓடியாடி விளையாடாமல் இருப்பது கூட முன்பூப்புக்கு காரணமாகலாம். போதுமான அளவு உடலுக்கு வேலை கொடுப்பதால் வளர்ச்சி ஹார்மோன்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன.

ஒரு சிலர், உடலில் உள்ள குறைபாடுகளால் இளம் வயதிலே பூப்படைந்துவிடுவர். எடுத்துக்காட்டாக மூளை, தண்டுவடப் பகுதியில் கட்டி, நோய் தொற்றுகள் ஏற்பட்டா லும், உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தவறாகத் தூண்டப்பட்டு, முன்பூப்படைதலுக்கு வழிவகுக்கும். இது அரிதாகவே நிகழக்கூடியது.

பெற்றோர் எப்படி தெரிந்து கொள்வது?
முன்பூப்படைவதற்கான முதல் அடையாளம் மார்பகங்கள் வளர்வது. ஒரு மார்பைவிட மற்றொன்று விரைவாக வளரும். இதை தொடர்ந்து பிறப்புறுப்பில் முடி வளரத் தொடங்கும். ஒரு சிலருக்கு முகப்பரு தோன்றக் கூடும். பூப்படையும் காலகட்டத்தில் சிறுமியின் இடுப்புப் பகுதி அகன்றும், இடை மெலிந்தும் தோற்றமளிக்கும்.
குழந்தைகள் அடிக்கடி எரிச்சலடைவார்கள். பிறப்புறுப்பில் இருந்து வெள்ளை அல்லது மஞ்சள் திரவம் வெளிவரும். அக்குள்களில் முடி வளரத் தொடங்கும். முடி வளர்வது இயல்பானதாக இருப்பினும் 7 வயதுக்கு முன்பே இந்த அடையாளங்கள் தோன்றினால் குழந்தையை மருத்துவரிடம் கூட்டிச் செல்வது நல்லது. உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் இயல்பானதுதானா என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதன்மூலம் உடல் குறித்தான சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் மகளுக்கு ஏற்படுத்தித் தரமுடியும்.

மருத்துவர் என்ன செய்வார்?
உடலின் மாற்றத்தை மதிப்பிடுவதற்கு உடல் பரிசோதனை செய்வார்.
குடும்பத்தில் இது இயல்பான ஒன்றா என்று தெரிந்து கொள்வதற்கு குடும்ப வரலாறை (மருத்துவ ரீதியாக) தெரிந்துகொள்வார்.

குழந்தையின் ஹார்மோன் அளவை தெரிந்துகொள்ள ரத்தப் பரிசோதனை மேற்கொள்வார்.

குழந்தையுடைய எலும்பின் வயதை கண்டறிய, கை மற்றும் மணிக்கட்டு பகுதியில் எக்ஸ்ரே எடுப்பார். உடல் வளர்ச்சியின் வேகத்தை கண்டறிய இது உதவும்.

மூளையில் பிரச்னை இருந்தால் அதை கண்டறிவதற்கு எம்.ஆர்.ஐ சோதனை செய்வார்.

பெற்றோர்கள் எப்படி கையாள வேண்டும்?
எல்லாவற்றையும் தோழிகளிடம் தெரிந்து கொள்வார்கள் என்று விட்டுவிடக் கூடாது. பிறப்புறுப்பில் ரத்தம் வந்தால் பயந்து விடாமல், உடனே உங்களிடம் தெரிவிக்கச் சொல்லுங்கள். இனி ஒவ்வொரு மாதமும், மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு இப்படி ரத்தப் போக்கு வரும் என்பதையும், மாதவிடாய் சுழற்சி பற்றியும் சொல்லித் தரவேண்டும்.

உடலை சுத்தமாக வைத்திருக்கவும், சுகாதாரத்தைக் கடைபிடிக்கவும் பெற்றோர், குறிப்பாக தாய் உதவ வேண்டும். சுத்தமான, சரியான அளவில் உள்ளாடை அணிவது, நாப்கின் மாற்றுவது போன்றவற்றை அதிகம் சொல்லித் தாருங்கள்.

மாதவிடாயின் போது வயிறு வலிப்பது, வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பு தூய்மை என எல்லாவற்றிற்கும் அறிவியல் ரீதியாக விளக்கமளியுங்கள்.

மகளின் உடலில் ஏற்படும் மாற்றத்தை உண்மையாகவும், வெளிப்படையாகவும் பேசுங்கள். இது இயல்பான வளர்ச்சிதான், நோய் அல்ல என்பதை தெளிவு படுத்துங்கள். உனக்கு சீக்கிரமாக நிகழ்ந்து விட்டது. இந்த மாற்றங்கள் உன் தோழிகளுக்கும் ஏற்படும் என்பதை விளக்குங்கள்.

மகளை சிலர் கிண்டல் செய்யக் கூடும். அதனால் ஆசிரியரிடமும், தோழிகளிடமும் தொடர்பில் இருங்கள். யாரிடமாவது பேசாமல் ஒதுங்கினால் அதற்கான காரணத் தைத் தெரிந்து கொள்ளுங்கள். விளையாட்டு, இசை போன்றவற்றில் ஈடுபடச் செய்யுங்கள்.

எளிமையான செய்திகளை மட்டும் தெரியப்படுத்துங்கள். 
மகள் பூப்படைந்துவிட்டாள் என்பதற்காகவே முதிர்ந்த செயல்பாடுகளை எதிர்பார்க்கக்கூடாது. 18 வயது வரை அவள் குழந்தைதான் என்பதை புரிந்து கொண்டு கையாளுங்கள்.

பூப்படைதல் குறித்து ஏராளமான புத்தகங்கள் உள்ளன. அவற்றை மகளுடன் உட்கார்ந்து படியுங்கள். உடல் குறித்தான எல்லா சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ள, இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

மகளுக்கு கட்டாயம் சொல்லித்தர வேண்டியவை :
உடல் உனக்கானது: விருப்பம் இல்லாமல் யாரும் தொடக் கூடாது என்பதை உணர வையுங்கள். கையைப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது, கட்டி அணைப்பது போன்ற செயல்களை நண்பர்களாக இருந்தாலும் அனுமதிக்கக் கூடாது என்று சொல்லுங்கள். பிறப்புறுப்பு, மார்பகங்களை யாரும் தொட அனுமதிக்கக் கூடாது என்பதை புரிய வையுங்கள்

சரியான மொழியை பயன்படுத்துங்கள்: குழந்தையை குளிக்க வைக்கும்போது, அவர்களுக்கு தன் உடல் உறுப்புகள் குறித்து எழும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளியுங்கள். உடல் உறுப்புகளுக்கு சரியான பெயரை சொல்லுங்கள்.

நல்ல தொடுதலை விளக்குங்கள்: உடல் குறித்து எந்த இடத்தில், எந்த நேரத்தில் கேட்டாலும் பொறுமையாக பதில் அளியுங்கள். கெட்ட தொடுதலைப் பற்றிச் சொல்லித் தருவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நல்ல தொடுதல் என்றால் என்னவென்று விளக்குவதும். உடல் குறித்த பயத்தை இது போக்கும்.

மறுப்பு தெரிவிக்கப் பழக்கப்படுத்துங்கள்: தனக்கு விருப்பம் இல்லாமல் யாராவது தொட்டாலோ அதற்கான அறிகுறிகள் தெரிந்தாலோ, தைரியமாக மறுப்பு தெரிவிக்கப் பழக்கப்படுத்துங்கள். தொடுதல் பற்றிய புத்தகத்தை அறிமுகம் செய்யுங்கள். உடல் குறித்த புரிதலுக்கு உடல் பாகங்களின் செயல்பாடுகளை விளக்கும் புத்தகத்தை வாங்கி தாருங்கள். தொடுதலை பற்றி விளக்குவதற்கு புகைப்படங்கள் நிறைந்த புத்தகங் கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துங்கள்.

பொய்யான அன்பை வெளிப்படுத்த கட்டாயப் படுத்தாதீர்கள்: உங்களின் உறவினர், நண்பர், நம்பிக்கைக்கு உரியவர் என்பதாலேயே யாரிடமும் அன்பு செலுத்த சொல்லிக் கட்டாயப் படுத்தாதீர்கள். அந்த உரிமையில் யார் அத்துமீறி நடந்து கொண்டாலும் உடனே உங்களிடம் தெரிவிக்கச் சொல்லுங்கள். ஏனென்றால் பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள் நன்கு தெரிந்தவர்களாலேயே நிகழ்த்தப்படுகிறது.

தன் உணர்வு சரியே என நம்ப உதவுங்கள்: நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனக்கு ஏற்படும் உணர்வு சரியானதே என்று குழந்தை நம்ப வேண்டும். ஒருவர் தவறாக தொட்டால் அது தவறுதான் என்பதில் அவர்கள் குழப்பமடையக் கூடாது. பெற்றோராக நீங்கள் உடனே அதை அங்கீகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்திவேந்தனின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் மீள்பதிவிடுகிறோம்
...மேலும்

Mar 26, 2014

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் தரமற்ற ‘நாப்கின்’களால் ஆபத்து – எச்சரிக்கை ரிப்போர்ட்


மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்படும் சானிடரி நாப்கின்கள் பெண்களின் ஆரோக்கியத்திற்கே ஊறு விளைவிக்கின்றன என்று அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவு ஒன்றை தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். திருச்சியைச் சேர்ந்த முனைவர் முகமது ஷாபீர் என்பவர் ‘பயோ டெக்னாலஜி’ துறையில் செய்துள்ள ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது.

பெரும்பாலான பெண்கள் இன்றைக்கு சிறுநீரக தொற்று, கர்ப்பப்பை கோளாறு, என பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். இதற்குக் மாதவிடாய் காலத்தில் அவர்கள் பயன்படுத்தும் நாப்கின்தான் என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக, நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில் முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது; இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்; மூன்றாவது லேயர்,ஜெல் (பெட்ரோலியப்பொருளால் தயாரானது); கீழ் லேயர் பாலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை உள்ளது.

இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயனம் இருப்பதுடன், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டை யாக்ஸேன் ஆக மாறுபாடடைகிறது. கேன்சர் நோய்க்கான மூலக்காரணிகளில் … இந்த டையாக்ஸேனும் ஒன்று. தவிர, இத்தனை ரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்னை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் கேன்சர் என்று பல பிரச்னைகள் வரிசையாக தாக்குகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். நாப்கின் தயாரிப்புக்குப் பிறகு, அவை பேக்கிங் செய்து அனுப்பப்படுவதிலும் போதுமான சுத்தம் இருப்பதில்லை என்றும் மற்றுமொறு குண்டு போடுகின்றனர் ஆய்வாளர்கள்.

அதிக விலை கொடுத்து வாங்கும் முன்னணி நிறுவன நாப்கின்களில் கூட தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர, காலாவதி நாள் என்பது குறிப்பிடப்படுவதில்லை. சில கம்பெனி தயாரிப்புகளில், ‘தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது’ என்று மட்டுமே போட்டிருக்கிறார்கள் என்கின்றனர்.”இன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என் றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோ பாஸ் ஏற்படும் 45 வயது வரை, மாதத்தில் மூன்று, நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட 30 வருட ங்களுக்கும் மேலாக அவர்கள் மாதவிடாய் சமயங்களில் நாப்கின் உபயோகிக்க நேரிடுகிறது. ரசாயனக் கலவைகளால் உருவான நாப்கி னைத் தொடர்ந்து உபயோகிக்கும்போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது” என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் நாப்கின் என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால், அதன் தரக்கட்டுப்பாட்டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள் . இந்தியாவிலோ, விளம்பரங்களுக்குக் கொடுக்கும் முக்கியவத்துவத்தை, அதன் தர மேம் பாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்காதது, நம் இந்தியப் பெண்களின் ஆரோக்கியத்தில் அவர்களும் அரசும் கொண்டுள்ள அலட்சியத்தைத் தான் காட்டுகிறது”. விளம்பரங்களை மட்டுமே பார்த்து நாப்கின்களை வாங்குவோர், இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். ”மாதவிடாய்க் காலங்களில் தரமான நாப்கின்கள் உபயோகிக்க வேண்டும். அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பெண்களை பல பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கும்!” என்றும் ஆய்வாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

நன்றி - boldsky
...மேலும்

Mar 25, 2014

புத்தகங்களில் கிடைக்காத பாடம் - கவிதா முரளிதரன்

ஸ்டெல்லா மேரி போன்ற ஒரு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அது மிகவும் புதிய, உணர்ச்சிகரமான ஒரு காலைப் பொழுதாகவே இருந்திருக்கும்.
பெண்கள் தினத்தை முன்னிட்டுக் கடந்த வாரத்தில் ஸ்டெல்லா மேரிக் கல்லூரியுடன் இணைந்து பூவுலகின் நண்பர்கள் நடத்திய 'பெண்களும் நிலைபெறு வளர்ச்சியும்' என்கிற தலைப்பிலான கருத்தரங்கம் வழக்கமான கட்டுரைகள் உரைக்கப்படும் கருத்தரங்கமாக இல்லாமல், பங்குகொண்ட பெண்களின் வாழ்வனுபவங்களில் இருந்து மாணவிகள் உண்மைகளை தேடத் தூண்டிய ஒரு அரங்கமாக இருந்தது. 

கருத்தரங்கத்தின் முதல் பகுதியாக கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பேசினார். 88 வயதிலும் தள்ளாடாத குரலில் வள்ளலார் பாடலுடன் தனது உரையைத் தொடங்கியவர், தனது வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும் விதமாகத் தன் உரையை அமைத்துக்கொண்டார். வினோபா பாவேயுடனான பணி, கீழ்வெண்மணியில் செய்த வேலைகள், கணவர் ஜெகநாதனுடன் இணைந்து மேற்கொண்ட பணிகள் என்று பேசிக்கொண்டே போனவர், பாரதியின் பாடல்களை இடையிடையே பாடியதும் மாணவிகளை உற்சாகப்படுத்தியது.
இப்போதும் நிலமற்ற பெண்களுக்காக வீடு கட்டிக்கொடுக்கும் பணியில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள், பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஆனால், சொந்த வீட்டை அடையும் உழைக்கும் பெண்ணின் புன்னகைக்கு இணையாக இதுவரை ஒரு விருதும் பெற்றதில்லை என்று அவர் சொல்லும்போது அரங்கில் நெகிழ்வுணர்வு நிரம்பியது. 

அடுத்து எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான வ. கீதா நெறிப்படுத்திய கலந்துரையாடல் தொடங்கியது. அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் இடிந்தகரை சுந்தரியும் மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை நாமக்கலில் முன்னெடுத்த தனலட்சுமியும் போராட்டத்துடன் இயைந்த தங்களது வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள். 

எட்டாவது வரையே படித்திருக்கும் சுந்தரி, கணவனை இழந்த பெண்களை இழிவுபடுத்தும் சடங்குகளைச் சாடிப் பேசியபோது பலரும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள். “நாம் என்ன இந்த பொட்டையும் பூவையும் திருமணத்திலிருந்து மட்டும்தானா அணியத் தொடங்கினோம்? அதற்கு முன்பு அணியவில்லையா? கணவரை இழந்துவிட்டால் எதற்கு இவற்றை =யெல்லாம் நாம் இழக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பியபோது மாணவிகளிடையே பலத்த வரவேற்பு. 

2004இல் சுனாமி தாக்கியபோது எட்டு நாட்கள் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்ததாகச் சொன்னார் சுந்தரி. “சுனாமி தாக்கியவுடன் ஆளாளுக்கு ஒரு திசையில் ஓடினோம். எனக்கு அந்த நொடி எனது கணவரைவிட எனது குழந்தை முக்கியமாகப் பட்டது. அவளைத்தான் முதலில் தேடிக் கண்டடைந்தேன்” என்றார். போராட்டத்தில் தனது கணவரின் பங்களிப்பைவிடத் தனது பங்களிப்பு அதிகமாக இருப்பது குறித்து, அவரது குடும்பத்தினரே கிண்டலடித்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவந்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். 

மாவட்ட ஆட்சியரைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் மாணவிகளுடன் பகிர்ந்துகொண்டார். 

“உண்மையில் சிறை ஒரு பல்கலைக்கழகம்போல. பல தரப்பட்ட பெண்களையும் அவர்களது கதைகளையும் அங்கு நான் அறிந்துகொண்டேன். 20களில் இருந்த ஒரு பெண் குடிகாரக் கணவனின் துன்புறுத்தல் தாங்காமல் அவனைக் கொன்றுவிட்டாள். அந்தப் பெண்ணைச் சிறையில் சந்தித்தபோதுதான், சமூகத்தில் பெண்களின் துயரங்களைக் கொஞ்சமாவது உணர்ந்துகொள்ள முடிந்தது. வாழ்க்கையை அங்கே ஓரளவுக்கு முழுமையாகக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். எனக்கு ஏற்பட்ட அவமானங்களையெல்லாம் தாண்டி சிறை ஒரு சிறந்த படிப்பினையைத் தந்தது” என்றார். 

கொலை மிரட்டல்களையெல்லாம் எதிர்கொண்டு, தான் பிறந்து வளர்ந்த காவிரிக் கரையில் மணல் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து மேற்கொண்ட போராட்டம், சட்டத்தின் துணைகொண்டு அவர்களை வென்றது எனத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் தனலட்சுமி. 

நிலத்தோடும் நீரோடும் தங்களுக்கு இருந்த உறவை, அது துண்டிக்கப்படுவதற்கான முயற்சிகள் உருவாகும்போது அவர்கள் ஆற்ற வேண்டிய எதிர்வினையை சுந்தரியும் தனலட்சுமியும் வாழ்வனுபவங்கள் மூலம் எளிமையாகப் பதிவுசெய்தார்கள். எந்தப் புத்தகமும் தர இயலாத இந்தப் பாடத்தை மாணவிகள் மிகவும் விரும்பினார்கள் என்பதைக் கருத்தரங்கு முடிந்த பிறகு பேச்சாளர்களிடம் உரையாடியபோது, அவர்கள் காட்டிய நெகிழ்ச்சியின் மூலம் உணர முடிந்தது. 

நன்றி - த இந்து

...மேலும்

"முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்"


முஸ்லிம் பெண்களின் அரசியல் தலைமைத்துவம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டை அறிய விரும்பும் அனைவரும் வாசித்துப் பயன்பெற வேண்டிய அரிய நூல் இது:
...மேலும்

Mar 24, 2014

‘அவளின் கதைகள்’ - சாந்தி சச்சிதானந்தம்


பொதுவாகவே எந்த மொழியும் அதனை உருவாக்கிய சமூகத்தின் விழுமியங்களின் வெளிப்பாடாகவே இருக்கும். அதிலும் ஆங்கில மொழியானது விசேடம் வாய்ந்தது. அது விழுமியங்களை மட்டுமல்லாது, ஒவ்வொரு சமூகத்தினதும் வழக்கங்கள், போக்குகள் (Trends) அனைத்தையும் வெகு துல்லியமாகப் பிரதிபலிக்கும். அதன் காரணமாக தினந்தோறும் கூர்ப்படையக்கூடிய மொழியாக சிறக்கின்றது. வரலாறு என்பதற்கு History என்கின்றது அந்த மொழி. இப்பதத்தினைப் பிரித்துப் பார்த்தால் His Story எனப் பொருள்படுவதைக் காணலாம். வரலாறானது வெற்றியடைந்தவர்களால், அதிகாரத்திலுள்ளவர்களால் எழுதப்படுவதாகும். எனவே, அது அத்தகையதோர்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கும். இவர்களினால் மாற்று வரலாறுகள் ஒருபோதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. எமக்குத் தெரிந்த காலந்தொட்டு இவர்கள் ஆண்களாகவே இருப்பதனால்தான் வரலாற்றினை ‘அவன் கதை’ எனக்கூறும் பாரம்பரியம் உருவாகியது. பெண்கள் சமத்துவம் நாடும் தமது போராட்டத்தில், தமது வரலாறுகளையும் சித்தரிக்க ஆரம்பிப்பது ஓர் அவசியமான மூலோபாயமாகும். ஒதுக்கப்பட்ட சமூகக் குழுமமாக அவர்கள் தங்கள் வரலாறுகளை பதிவு செய்யும்போது கூடவே சகல ஒதுக்கப்பட்ட சாதாரண மக்களையும் தம்முடன் இணைத்து முன்கொண்டுவரும் வாய்ப்புக்கள் உருவாகின்றன.

இந்த நோக்குடன்தான் Herstories, அதாவது அவளின் கதைகள் என்னும் கருத்திட்டம் உருவானது. எமது நாட்டில் நடந்து முடிந்த யுத்தத்தின் வரலாறு பல பிரமுகர்களுடைய கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றது, எழுதப்பட்டு வருகின்றது. அரசிலுள்ள அரசியல் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் எழுதி முடித்திருக்கின்றார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் எழுதியிருக்கின்றார்கள். சமூக ஆய்வாளர்கள் எழுதியிருக்கின்றார்கள். ஆனால், இதுவரை அந்த யுத்தத்தினால் தமது வாழ்க்கை சின்னாபின்னப்படுத்தப்பட்ட மக்களின் பார்வையில் அது எழுதப்பட்டதா என்றால் இல்லையென்றுதான் கூறவேண்டும். குறிப்பாக, பெண்கள் நோக்கில் இந்த யுத்தம் என்னென்ன விளைவுகளை எற்படுத்தியதென்பதை நாமறியோம். ‘அவளின் கதைகள்’ இக்குறைபாட்டை ஒரு சிறிதளவில் நிவர்த்தி செய்கின்றது. இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 270 பெண்கள் வாய்மூலக் கதையாடல்கள் மூலம் தமது கதைகளையும், அதன் மூலமாக எமது நாட்டில் நிகழ்ந்த கோர யுத்தத்தின் தன்மைகளையும் எடுத்துக் கூற வைக்கின்றது. இன்று இத்தனை அழிவுகளுக்கும் பின், எமது சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. எமது குடும்பங்கள் ஓரளவுக்காவது சகஜ நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனவென்றால் அந்தப் பெருமை முக்காலும் இப்பெண்களையே சாரும் என்றால் மிகையாகாது. ஷெல்லடிகள், பொம்பர்கள் மத்தியில் தமது பிள்ளைகளின் உயிர்களைக் காப்பாற்றி, மீளக் குடியமர்ந்ததற்குப் பின்பு ஒரு வீடாகக் குடும்பமாக வாழ்க்கையை செம்மைப்படுத்துவதற்கு தாய்மாரைத்தவிர யாருக்கு இயலும்? அத்தகைய முக்கிய கர்த்தாக்களாகப் பெண்கள்  திகழும்போது அவர்களின் வரலாறுகள் பதியப்படுவதன் தேவையை வாசகர்கள் உணர்ந்து கொள்ளலாம். அதனால்தான் இத்திட்டத்தினை வெறுமனே இந்தவொரு நடவடிக்கையுடன் விட்டுவிடாமல், எமது தேசிய சுவடிக் காப்பகத்தில் பெண்களின் வரலாற்றுக்கும் அவர்களின் வாய்மூலக் கதையாடல்களுக்குமான பகுதி திறக்கப்படவேண்டும் என்பதிலும் இத்திட்டம் அக்கறைகொண்டு இயங்கியிருக்கின்றது. அதன்படி, இன்று அவளின் கதைகளின் மூலப் பிரதிகளை எவரும் எமது தேசிய சுவடிக் காப்பகத்தில் பார்வையிடக்கூடிய எற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேற்கூறிய 270 பெண்களின் கதைகளும், அவர்களின் கைப்பட எழுதிய கடிதங்களாக இருக்கின்றனள. ஒரு காலப்போக்குக்கேற்பதான கதைத் தொடராக சித்திரமாக வரையப்பட்டிருக்கின்றது. அத்துடன், அவர்களின் புகைப்படப்பதிவுகளும் காணொளிகளும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அவளின் கதைகள் கண்காட்சிகள் எற்பாடு செய்தவிடமெல்லாம் பார்வையாளர்கள் இப்பதிவுகளை வாசிப்பதிலும் பார்வையிடுவதிலும் அனேக நேரத்தினைச் செலவழித்ததும் அதன் பயனை எமக்கு உணர்த்தியது. தனக்கு இது மறக்க முடியாதவோர் நாள் என ஒருவர் குறிப்பேட்டில் எழதிச் சென்றிருந்தார். அதற்குக் காரணம் இல்லாமலில்லை. இப்பெண்களின் கதைகள் அவ்வளவு உருக்கமாக இருந்தன. தனது கணவர் யுத்தத்தில் இறந்த பின்பு தனது வாழ்க்கையின் ஒரே ஆதாரமாக இருந்த மகன், “அம்மா நீ கஷ்டப்படாதே உனக்கு உழைத்து நான் சாப்பாடு போடுவன்” என்று கூறி தனது படிப்பையும் இடைநிறுத்திவிட்டு மேசன் வேலைக்குச் சென்று இதுவரை வீடு திரும்பாத சோகத்துடன் கிளிநொச்சியில் வாழும் தாய்ள, தனது ஒரே மகன் யுத்தத்தில் இறந்து விட்டான். அவன் நாட்டுக்காகத் தனது உயிரைக் கொடுத்தது பெருமையென்றாலும், தமிழர்கள் தமது உரிமைகளைக் கேட்டபோது நாம் கொடுத்திருந்தோமென்றால் இன்று என் மகன் என்னுடன் வாழ்ந்து கொண்டிருப்பானே என பெருமூச்சு விடும் குருநாகலையைச் சோந்த வயோதிப சிங்களத் தாய், இதே கருத்தினை வெளியிடும் மொனராகலையைச் சோந்த இன்னுமொரு சிங்களத் தாய். அரசியல் பிரதிநிதித்துவமும் இல்லாமல் கேட்பாரற்று ஒதுக்குப் புறமாக மொனராகலையில் வாழும் தமிழ் பெண்கள் தம்மத்தியில் வெள்ளை வான்கள் நடமாடிய கோரங்களைச் சித்தரித்த கதைகள், “எனதப்பாவைக்கொண்டு கொண்டு போனவர்களைக் கண்டு பிடிப்பதற்காகத்தான் நான் நன்றாகப்படிக்கின்றேன்” என சூளுரைத்த அத்தகைய பெண்ணொருவரின் 12 வயதுச் சிறுவன். மொனராகலையில் வாழும் இந்தச் சின்ன சமூகத்தின் கதைகள் அங்கு அவளின் கதைகள் குழு செல்லும் வரை வெளிவரவேயில்லை. இன்று அதன் ஒரு பகுதியாவது பதிவாகியிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாயைச் சேர்ந்தவொரு பெண், 1987ஆம் ஆண்டு அங்கு சிங்களக் குடியேற்றங்கள் வந்த காலந்தொட்டு வருடாவருடம் தானும் தனது குடும்பத்தவர்களும் இடம்பெயர்ந்த கதையைக் கூறியிருக்கின்றார். கிட்டத்தட்ட பதினொரு தடவைகள் இடம்பெயர்ந்தவருக்கு முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வே அதியுச்சக்கட்ட இடப்பெயர்வாக மாறுகின்றது. இத்தனை ஷெல்லடிக்குள்ளும் உங்கள் இரு பிள்ளைகளையும் எப்படிக் காப்பாற்றினீர்கள் என வினவினோம். இதற்கு கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் என அவர் எங்களுக்கு விளக்கினார். அரசு யுத்தமில்லாத இடம் இது (No Fire Zone) என்று முதலில் அறிவித்தல் செய்யும். அந்த இடத்திற்குப் போய் ஆறுதலாக இரண்டு மூன்று நாட்கள் தங்கலாம்தான். ஆனால், அங்கு தொடர்ந்து தங்கக் கூடாது என்பதை நான் ஒரு சில சந்தர்ப்பங்களிலேயே கண்டு கொண்டேன். ஏனெனில், அங்கும் சனக்கூட்டம் கூடியவுடன் பொம்பரும் ஷெல்லடியும் திரும்ப ஆரம்பித்துவிடும். எனவே, சனக்கூட்டம் சேரத்தொடங்கியவுடனேயே நான் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வெளியேறிடுவேன். பிறகென்ன, ஓட்டந்தான் என்று கண்கள் பளிச்சிட எமக்கு விளக்கம் அளித்தார். இவ்வகையாக, மானுடத்தின் கதைகளை குறிப்பாக, இம்மக்களின் தைரியத்தையும் துணிச்சலினையும் ‘அவளின் கதைகள்’ பதிவு செய்திருக்கின்றது.

இதன் பயன் கண்டு வழங்கப்பட்ட பிரித்தானிய அரசின் உதவியுடன் சர்வதேச மகளிர் தினத்தினை அனுசரிக்கும் முகமாக இம்மாதம் லண்டனில் அவளின் கதைகள் மேடையேறுகின்றது. புலம்பெயர் தமிழ் சிங்கள மக்களின் பார்வைக்காக The Strand கலையகத்தில் 26ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் வைக்கப்படுகின்றது. London School of Economics பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ‘நல்லிணக்கத்திற்கான குரல்கள்’ என்கின்ற குழுவினரும் இதில் பங்காளர்களாயிருக்கின்றனர். லண்டன் வாழ் சமூகவியலாளர்களையும் கலைஞர்களையும் இது தொடும் என்பது எமது நம்பிக்கை. ‘அவளின் கதைகள்’ போன்ற இன்னும் பல திட்டங்கள் நம்மத்தியில் அரங்கேறவேண்டும். பெண்களின் கதையாடல்களும் சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட எமது வரலாற்றின் பகுதியாக வேண்டும்.

அடி என்னடி உலகம், இதில் எத்தனை கலகம்

நன்றி - மாற்றம்
...மேலும்

காட்டூன்கள் எதை காட்டுகின்றன? - கேஷாயினி எட்மண்ட்

முதல் நல்ல ஞாபகம் ரூபவாஹினியில 6 மணிக்கு ஒரு கோழிக்காட்டூன் போடுவாங்க… ஒரு கோழி தன்னுடைய நாலைந்து குஞ்சுகளை சிறகுக்குள்ள வச்சுக்கொண்டு அதுகள் நித்திரை கொள்வதற்கு கதை சொல்லும். அது காட்டூனாக ஒளிபரப்பாகும்… இந்த 6 மணி காட்டூன் பார்ப்பதற்காகவே சில முன்னாயத்தங்கள் செய்துடுவன். இல்லாட்டி சரியா நான் டீவிக்கு முன்னுக்கு போய் குந்த அம்மா கத்துவா ஹொம்வேக் செய்ய சொல்லி…. ஆதால ஸ்கூல் ஹோம்வேக்குகளை ஸ்கூல் விட்டு  வந்தவுடனேயே மடமடவென்று செய்துவிடுவதுண்டு.

பிறகு கொஞ்சம் வளர தொடங்கின நேரம் தான் சீடிகள் அறிமுகமானது… அந்த நேரத்தில டிவிசன் கிளாஸ்களும் வந்துட்டுது. டிவிசன் முடிஞ்சதும் அம்மா தான் என்ன ஏத்திப்போக வருவா… இனி என்ன பைக்கில ஏறி அம்மாவ கட்டிப்பிடிச்சிட்டு தொணதொணக்க தொடங்குவன்…. கடைசில என்ட அரிப்பு தாங்காம அம்மா காட்டூன் சீடி வாங்கித்தந்ததும்…. இதை பயன்படுத்தி நல்ல மார்க்ஸ் எடுத்தா காட்டூன் சீடி வாங்கித்தருவன் என்டு ப்ளாக்மெயில் பண்ணினதும் வேற கதை…

பிறகு பெரிய வகுப்புகளுக்கு வந்ததால டீவி என்ட பெயரே வீட்டில் உச்சரிக்க முடியாம பொய்ட்டுது… இப்ப பழைய படி என் காட்டுல நல்ல மழை…. விடுதியில் சீடி வாங்கி பார்க்க எனக்கு யாரும் தடையில்லை…. காணாததற்கு யூடியுப்… வீட்ட போனா அங்க இப்ப சுட்டி டீவி இருக்கு…
ஆக என்னுடைய காட்டூன் பற்றிய அறிவு விருத்தியாக தொடங்கிட்டுது… பிங்கு, நிமோ, டொம் அன்ட் ஜெரி, லயன் கிங், பிரின்சஸ் காட்டூன்ஸ்…….. அப்பாடா சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் மோகுலி, சிம்பா போன்ற பல பாத்திரங்கள் என்னுள் பதிந்து போனதுமுண்டு. இந்த காட்டூன்கல பார்க்கும் போது இன்னொரு விடயமும் என் கருத்தினை கவர்ந்தது.. அது குறித்து தான் இந்த பதிவு…

சின்ரெலா (Cinderella) – சின்னம்மாவின் கொடுமைக்கு உள்ளாகி வருகின்ற ஒரு பெண். இளவரசனின் சுயம்வர நிகழ்விற்கு தேவதை ஒன்றின் உதவியுடன் போகின்றாள். நேரம் முடிந்து விரைவாக வரும் போது சப்பாத்து தவறவிடப்படுகிறது. பின்னர் எவ்வாறு பல சவால்களுக்கு மத்தியில் அந்த இளவரசனை கைப்பிடிக்கின்றாள் என்பதாக அமைகின்றது

ஸ்னோவைட் (snow white)  - மாற்றாந்தாயினால் காட்டுக்கனுப்படுகின்றாள். ஏழு குள்ளர்கள் உதவியுடன் காட்டில் வாழ்கின்றாள். அங்கு அவளை காணுகின்ற இளவரசன் அவளுடன் மையல் கொள்கின்றான். தொடரும் மாற்றாந்தாயின் சூழ்ச்சிகளிலிருந்து எவ்வாறு இளவரசனுடன் இணைகின்றாள் என்பது இதன் சுருக்கம்

பியூட்டி அன்ட் த பீஸ்ட் (Beauty and the beast) - தேவதையின் சாபத்தினால் அரக்கனாக உருமாறி காட்டில் வசிக்கின்றான் ஓர் இளவரசன். தவறுதலாக காட்டினுள் செல்கின்ற ஒருவர் அவனால் சிறைப்பிடிக்கப்படுகின்றார். அவருக்கான சரீர பிணையாக வந்து அரக்கனிடம் சேருகின்றாள் அவரது பெண். பின்னர் அந்த அரக்கனின் அசிங்கமான தோற்றத்தினையும் தாண்டி எவ்வாறு அவர்களுள் காதல் மலர்ந்த அவன் சாபம் நீங்குகின்றது என்பதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

தாஷன் (Tarzan)  - காட்டினுள் தொலைகின்ற ஒரு ஆண் குழந்தை கொரில்லாக்களால் வளர்க்கப்படுகிறது. பல வருடங்களின் பின் அந்த காட்டிற்கு ஆராய்ச்சிக்காக வருகின்ற குழுவிலுள்ள பெண்ணுடன் காதல் மலர்கின்றது. கொரில்லா – மானிடர் என்ற இரு கரைகளை இணைக்கும் பாலமாக தாஷன் எவ்வாறு ஹீரோவாகின்றார் என்பது இதன் கதை

லயன்கிங் (Lion King) - சிம்பா என்கின்ற குட்டி சிங்கம் செய்கின்ற தனது வெகுளித்தனத்தினால் தந்தை உயிரிழந்து விட காட்டின் அரசாட்சியும் கைமாறிவிடுகிறது. இதை எவ்வாறு சிம்பா வளாந்து மீளப்பெறுகிறது என்பது லயன்கிங் என்ற காட்டூன் தொடரின் மையக்கரு

மூலான் (Mulan) - தன்னுடைய தந்தைக்கு பதிலான போரில் பங்கேற்பதற்காக மூலான் என்கின்ற வெகுளிப்பெண் ஆண் வேடமிட்டு போர்களம் போகின்றாள். அங்கு அவள் எவ்வாறு போர்ப்பயிற்சிகள் பெறுகின்றாள்… எதிர்நாட்டுப்படையை முறியடிக்கின்றாhள். இதன் போது ஏற்பட்ட காயத்திற்கான சிகிச்சையின் போது அவள் பெண் என அறியப்படுகின்றாள். இதனால் போர்க்களத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றாள். ஆனாலும் தன்னால் தன் தந்தைக்கும் தன் கோத்திரத்தினருக்கும் அவமானம் ஏற்பட்டுவிட்டதே என்ற மனமுடைவில் வீட்டிற்கு போகாமல் மனம்போன போக்கில் போகின்றாள். இதன் போது முன்னர் முறியடிக்கப்பட்ட எதிரிப்படைகளில் சிலர் மீண்டும் தன் நாட்டிற்கு எதிராக சதி செய்வதை அறிகின்றாள். மீண்டும் அரண்மணைக்குப் போய் தன் நாட்டு வீரர்களை எச்சரிக்கின்றாள். ஆனால் யாரும் காதுகொடுத்து கேட்காத நிலையில் எதிரிகள் நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றனர். மறுபடியும் அவர்களை எவ்வாறு முறியடித்து வெற்றியுடன் வீடு திரும்புகின்றாள் என்பதாக இக்காட்டூன் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல கதைகள்… இவற்றினை மாற்றுப்பார்வையுடன் நோக்குவோமானால் இங்கு பெரும்பாலானவை பெண்ணடிமை கருத்துக்களை விதைப்பதை நாம் உணரலாம்.
சிறுவயதில் விதைக்கப்படுபவை
சிறு பிள்ளைகளுக்கான இந்த காட்டூன் கதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பெரம்பான்மையான இளவரசி கதைகளாகட்டும் ஏன் விலங்குளை வைத்து உருவகப்படுத்திய கதைகளாகட்டும் எந்த கதையாகினும் களங்கள் மாறுகின்ற போதும் கருக்கள் ஒன்றாக தானிருக்கின்றன.

கஸ்டத்தில் இருக்கும் பெண்ணிற்கு ஒரு ஆண் பாத்திரம் ஊடாக தான் விடிவு பிறப்பதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு சித்தரிக்கபடுகின்ற பெண் பாத்திரங்கள் அதீத அழகு உடையதாகவும் மென்மையானதாகவும், கண்ணீர் வடிக்கும் பாத்திரங்களாகவும் தான் உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை ஆண் பாத்திரங்கள் கம்பீரமானதானதாகவும் அதிபலம் வாய்ந்ததாகவும் மீட்பளிக்கும் ஒரு அதி உன்னத பாத்திரமாகவே காட்டப்படுகின்றன. ஓரிரு கதைகளில் மட்டுமே பெண் முக்கிய பாத்திரமேற்கின்றாள்.
சில விடயங்களையும் நாம் இதனூடு பட்டியல் படுத்தலாம்......
 • பெண் என்பவள் மென்மையும் அழகும் மட்டும் படைத்தவள் என்ற மாயை உருவாக்கப்படுகிறது
 • பெண்ணுக்கு பிரச்சினை பெண்ணாலயே ஏற்படுகிறது. (வில்லி மட்டும் தான் வில்லன் இல்லை) என்பதனூடான ஆண் என்பவன் நல்லவன் , அவன் பிழை செய்வதில்லை என்ற சித்தரிப்பு
 • ஆண் கம்பீரமானவன், உறுதியானவன் என்ற வலியுறுத்தல்
 • பெண்ணுக்கான மீட்பு ஆணால் மட்டுமே கிடைக்கும், அல்லது சாத்தியமானது என்கின்ற அச்சுறுத்தலுடனான எச்சரிக்கை
நான் நினைக்கின்றேன் அநேகமான குழந்தைகளின் மனதில் முதல் விதை இங்கு தான் விழுகின்றது என்று. இவ்வாறான கதைகளை பார்க்கின்ற பிஞ்சு உள்ளங்களில் ஆண் - பெண் என்பது மென்மை – கம்பீரம் என்ற கருத்தாகவே பதிகின்றது. இங்கு விழுகின்ற விதை ஆண் குழந்தைகளிடம் எதிர்காலத்திலும் பெண் என்பவள் தனக்கு கீழானவள் என்ற விருட்சமாக உருவெடுகின்ற அதேவேளை பெண் குழந்தைகளின் மனதில் “தான் ஒரு ஆணிற்கு கீழ்ப்பட்டவள்” என்றும் ஆழமாக பதிந்து விடுகிறது.

இங்கு விதைக்கப்படுகின்ற இந்த கருத்துக்கள் குழந்தைகள் வளர வளர அவர்களுடன் கூடவே மனப்பதிவுகளாகவும் உருவெடுகின்றன. போதாமைக்கு திரைப்படங்களும் இவ்வாறான சிந்தனைகளுக்கு உரமிடுவதாகவே தோன்றுகின்றது. ஆக நாம் களையவேண்டியதும், மனதில் விதைக்க வேண்டியதுமான காலகட்டம் மாணவர் பருவத்திலோ அல்லது அதற்கு பின்னரான பல்கலைக்கழக காலமோ அல்ல அதுமட்டுமல்ல கூடவே பல படிகள் எம்மை விட முன்னுள்ளவர்கள், பெண் விடுதலைக்கான வித்திட்டவர்கள் என்று கருதப்படுகின்ற மேலைக்தேயத்தவர்கள் படைப்புகள் கூட பெண்ணடிமை கருத்துக்களை கொண்டதாகவே படைப்புக்களை தயாரிக்கின்றன என்ற யதார்த்தங்களும் சுடுகின்றன.


...மேலும்

Mar 23, 2014

கட்டுப்பாடா… ஆணாதிக்கமா?


இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், ஆண்பிள்ளைகளுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என ஏராளமான கட்டுப்பாட்டுகள் காலம் காலமாக பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டுவருகின்றன.

பேதைப் பருவம் தொடங்கிப் பெரிளம் பெண் பருவம் கடந்து கடந்து மூதாட்டி ஆனாலும் இந்த மூடக் கருத்துகள் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. நவீன அறிவியலும் நவீனமயமான வாழ்வும் இவற்றில் பலவற்றை வழக்கொழியச் செய்துவிட்டாலும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் பார்வைகள் பெரிதாக மாறிவிடவில்லை. அந்தப் பார்வைகள் வெவ்வேறு வடிவங்களில் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளவே செய்கின்றன. அதன் வடிவங்களில் ஒன்றுதான் உடைக் கட்டுப்பாடு.

பெண்களை ஓயாமல் துரத்தும் கட்டுப்பாடுகளில் ஒன்று இது. இந்த நாட்டின் கலாச்சாரக் காவலர்களுக்கு பெண்கள் அணியும் உடை மீது எப்போதும் ஒரு கண். இந்த நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் சுமந்து திரியும் கருவியாக இவர்கள் பெண் உடலையே பார்க்கிறார்கள்.

கொடூரமான பாலியல் பலாத்காரக் கொலைகளுக்குச் சாக்கடையாக மாறிபோன ஆண் மனத்தின் வக்கிரங்களைக் காரணம் காட்டாமல், காவு கொள்ளப்பட்ட பெண்ணின் நடை, உடை, பாவனைகள் மீதே கேள்விகள் எழுப்படுகின்றன. தில்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு நீதிமன்ற வாசலை அடைவதற்கு முன்னரே, அவள் அப்போது என்ன உடை அணிந்திருந்தாள் என்பதைத் தீவிரமாக அலசினர் நம் மக்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரம் குறித்த செய்திகள் வெளிவர, பதறிப் போன பொதுச் சமூகம், என்னென்ன ‘சீர்திருந்தங்கள்’ கொண்டு வரலாம் என்று அறிவுரைகளும் அறிக்கைகளும் விடுக்க ஆரம்பித்தது.

மாணவிகள் ஜீன்ஸ், டி ஷர்ட் போன்ற ஆடைகள் அணியக் கூடாது என்பதான கட்டுப்பாடுகளைப் பல கல்வி நிறுவனங்களும் வலியுறுத்துகின்றன. சமுக ஆர்வலர்கள், ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளால் ‘சமத்துவமாக’ மாணவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் சில கல்வி நிறுவனங்களால் விதிக்கப்படுக்கின்றன.

நாங்கள் படிப்பை விட ஒழுக்கத்திற்குத்தான் முக்கியத்துவம் தருகிறோம் என்று விளக்கம் அளிக்கும் இந்த ஒழுக்கக் காவலர்களால் உண்மையில் மாணவர்களிடம் ஒழுக்கத்தையோ கட்டுப்பாட்டையோ கொண்டு சேர்க்க முடிந்ததா?

இன்று மாணவர்கள் சுலபமாக ஒரு கல்லூரி முதல்வரைக் கொல்ல முடிகிறது. காதலை ஏற்கவில்லை எனில் மாணவியை வெட்டிச் சாய்க்க முடிகிறது. அவள் முகத்தில் அமிலத்தை ஊற்ற முடிகிறது. மாணவிகள் பள்ளிக்கூடத்திலையே குழந்தை பெற்றெடுக்கும் சம்பவங்கள் பல நடக்கின்றன. கருக்கலைப்பு செய்துகொள்ளும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற வன்முறைகளும், சீர்கேடுகளும் அதிகரித்துவரும் நிலையில், எந்த ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் மாணவ மாணவிகள் மத்தியில் நாம் நிலைநிறுத்துகிறோம்? இதுபோன்ற விதிமுறைகளால் என்ன மாற்றத்தை உருவாக்குகிறோம்? ஒரு பெண் தன் உடலை முழுவதுமாக மறைந்துக் கொண்டு வீதியில் சென்றால் மட்டும், அவளுக்கு எதிரான வன்முறைகள் நிகழாமல் இருந்துவிடுமா?

பாதிப்புக்குள்ளான பெண்கள் உடை விஷயத்தால்தான் அந்த பாதிப்புக்கு உள்ளானார்களா? உடைக் கட்டுப்பாட்டினால் வன்முறையையும் குற்றங்களையும் குறைத்து ஒழுக்கத்தை நிலைநாட்ட முடியாது. ஆடைகள் நம் உடலை மறைத்துக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவையே. அவை நம்மைப் பாதுகாக்கும் கவசம் அல்ல. தவிர, உடை என்பது வெறும் கடமைக்காக அணிவதல்ல.

உடையில் ஒருவரது விருப்பம், அழகுணர்ச்சி, சுதந்திர உணர்ச்சி ஆகியவை வெளிப்படுகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் தேவை. குறிப்பாக, சுதந்திரச் சிந்தனைகள் அதிகமாக இருக்கும் இளம் பருவத்தினருக்கு இது அவசியம் தேவை. எந்த உடை ‘கண்ணியமானது’, எது ‘கவர்ச்சிகரமானது’, எது ‘ஆபாசமானது’ என்பவை எல்லாம் நபருக்கு நபர், சூழலுக்குச் சூழல் மாறுபடக்கூடிய அளவுகோல்கள்.

ஒருவருக்கு கண்ணியமானதாகத் தெரியும் உடை இன்னொருவர் கண்ணுக்கு ஆபாசமானதாகத் தெரியலாம். ஒரு சிலர் எதை அணிந்தாலும் பிறர் கண்ணுக்கு வசீகரமாகத் தெரியலாம். இவற்றையெல்லாம் பொதுமைப்படுத்தவே முடியாது. எனவே எந்த உடையை அணிய வேண்டும் என்பதை முடிவுசெய்யும் உரிமையையும் பொறூப்பையும் அவரவருக்கே விட்டுவிடுவதுதான் பக்குவமான சமுதாயத்தின் அணுகுமுறையாக இருக்க முடியும்.

அதே சமயத்தில், ஒரு சூழல், குறிப்பிட்ட ஒரு தருணம் ஆகியவை சார்ந்து தமக்குத்தாமே விதித்துக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளைப் பெரும்பாலான பெண்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

வேலைக்குச் செல்லும்போது அதிக வேலைப்பாடுகள் இல்லாத ஆடைகளும், விழாக்களுக்குச் செல்லும்போது கண்கவர் ஆடைகள் எனவும் சில விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். எனவே வெளியிலிருந்து யாரும் இதை அவர்கள் மீது திணிக்கத் தேவையில்லை. மொத்தத்தில், ஒருவர் அணியும் உடை அவரது சுதந்திரம். அடையாளம். அதைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரமோ தடுப்பதற்கான உரிமையோ யாருக்கும் இருக்க முடியாது.

நன்றி: தமிழ் இந்து October 20
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்