/* up Facebook

Jan 12, 2014

மொரட்டுவ மாணவியின் உரிமைப் போராட்டமும் நாமும் - லறீனா அப்துல் ஹக்


மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் மாணவியின் நிகாப் தொடர்பான பிரச்சினை பல தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. சில சகோதர சகோதரிகள் அதுகுறித்து என்னுடைய கருத்தையும் கேட்டனர். நிகாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என்ற அளவில், தனிப்பட்ட முறையில் நான் நிகாபுக்கு ஆதரவாளர் அல்ல. ஆனால், அதை யாரேனும் தனிப்பட்ட முறையில் தமது தெரிவாக விரும்பி அணிவார்கள் எனில், அதில் அவர்களுக்கு இருக்கும் உரிமையை நான் மிகவும்  மதிக்கின்றேன். 

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிக்கு, அவர் இந்த நாட்டுப் பிரஜை என்ற வகையில், தான் விரும்பும் ஆடையை அணியும் சுதந்திரம் உண்டு. அது அவரது தனிப்பட்ட உரிமை; சுதந்திரம்.

இந்த நிகாப் பிரச்சினையை வெறுமனே இஸ்லாம் மார்க்கம் சார்ந்த பிரச்சினை என்று காட்டி, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தைச் சீண்டி, அந்த நெருப்பில் குளிர்காய முனையும் சக்திகளின் பிடியில் நாம் சிக்கிவிடக்கூடாது. காரணம், குறித்த முஸ்லிம் மாணவியே சொல்வதுபோல், அது அவரது தனிப்பட்ட உரிமை தொடர்பான விவகாரமே. எனினும், இந்தப் பிரச்சினையில் நமது அணுகுமுறை எப்படி இருக்கலாம் என சிந்திப்பது பொருத்தமானதே. இதில், நாம் இரண்டு விதமாக நாம் செயல்பட முடியும் என நினைக்கிறேன். 

1) இப்பிரச்சினை தொடர்பில் கருத்துரைத்த பிரதி உயர்கல்வி அமைச்சர்  நந்திமித்ர ஏக்கநாயக்க அவர்கள், "தாம் விரும்பியவாறு உடை அணிவதற்கு முஸ்லிம் மாணவிகளுக்கு எந்தத் தடையும் இல்லை; மொரட்டுவ பல்கலைக்கழக நிகாப் தடை குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது" என்று தெரிவித்துள்ளார் என அறிகிறோம், (பார்க்க: http://kalmunaibrilliantnews.blogspot.com/2013/12/blog-post_10.html).

எனவே, "அப்படியா விஷயம்? எனக்கு எதுவும் தெரியாதே!" என்று 'கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய்' பிரச்சினைக்குப் பதில் அளிப்பதில் இருந்து யாரும் தப்புவதற்கு இடமளிக்காமல், இவரிடமும் இவர்போன்ற ஆளும்தரப்பு மற்றும் எதிர்தரப்பு அமைச்சர்களிடமும்  மட்டுமின்றி, சகலதரப்பையும் சேர்ந்த கல்வியாளர்கள், சட்டநிபுணர்கள்  முதலானோரிடம் இவ்விடயத்தைத் தெளிவுபடுத்தி, "இது தொடர்பில் உங்கள் உறுதியான நிலைப்பாடு என்ன?" என்று மிக நேரடியாக (Live TV programme எனில், மிகச் சிறப்பாக இருக்கும்; அல்லது யூ ட்யூபில் பதிவேற்றலாம்) கருத்தைப் பெற்று ஒலி/ஒளிபரப்பலாம். இதனை, மனித உரிமைக்காகக் குரல்கொடுக்கும் எந்தத் தனியார் வானொலி/தொலைக்காட்சி ஊடாகவோ, அனைத்துச் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிப்பட்ட ஆர்வலர் குழுவோ முன்னெடுக்க முடியும். அவ்வாறே, தேசியப் பத்திரிகைகள் மற்றும் சர்வதேசப் பத்திரிகைகளில் இது குறித்த தொடரான கருத்தாடலை முடுக்கிவிடலாம்.  அதனடியாக, இலங்கையில் தனிமனித சுதந்திரம் குறித்த பரவலான விழிப்புணர்வையும் கருத்தாடலையும் தோற்றுவிக்க முடியும். குறித்த மாணவி விரும்பினால், அவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்கீழ் மனித உரிமைமீறல் தொடர்பான ஒரு வழக்கைக்கூட பதிவுசெய்ய முடியும். 

2) மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (University students' union) ஊடாக, பல்கலைக்கழக சகமாணவியின் உரிமையை வலியுறுத்திப் போராடலாம். அப்போதுதான், இது தனித்து முஸ்லிம் மாணவியின் பிரச்சினை என்று ஓரங்கட்டப்படாமல், ஒரு பல்கலைக்கழக மாணவியின் உரிமைப்போராட்டம் என்ற நிலையை அடைய வாய்ப்பாகும். 

இங்கு, ஏலவே இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் பொதுப் பிரச்சினைகளின்போது, முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் இணைந்து அப்போராட்டங்களில் பங்கு கொண்டிருக்கும் பட்சத்திலேயே, இதுபோன்ற ஒரு போராட்டத்தில் அவர்களின் -மாணவர் ஒன்றியத்தின்- ஒத்துழைப்பைப் பெறக்கூடியதாக இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக, பல்கலைக்கழக மாணவர்களின் பொதுப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களின்போது அவற்றில் பங்குபெறாமல், முஸ்லிம் பெண்களாகிய நாம், நமது ஹிஜாபை/நிகாபை காரணம் காட்டி ஒதுங்கிச் செல்லாமல் இருந்தால் மட்டுமே, இதுபோன்ற ஒரு தருணத்தில் நாம் மாணவர் ஒன்றியத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும் என்பது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது. இனிவரும் சந்தர்ப்பங்களில் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின்  சமூகப் போராட்டப் பங்களிப்பு எத்தகையதாய் இருக்க வேண்டும் என்பது குறித்து மீள்பரிசீலனை செய்யப்படவேண்டிய தேவையையும் இந்த விடயம் நமக்குக் கவனப்படுத்தியுள்ளது என்பதும் நோக்குதற்குரியது.

மேற்கண்ட இரண்டு அணுகுமுறைகளின் மூலமும் இது தனிப்பட்ட ஒரு சமூகத்தின் பிரச்சினை என்ற நிலையில் இப்பிரச்சினை புறமொதுக்கப்படாமல், பொதுத் தளத்தில் ஒரு நல்ல தீர்வுகாண வழியமைக்கலாம் என்று நம்புகின்றேன்.

நன்றி - நிலப்பெண்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்