/* up Facebook

Feb 27, 2014

பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா? - ப்ரேமா ரேவதி


தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (ஓ.எம்.ஆர்.) 200 அடிக்கு அருகில் ஒரு புதரில் பிணமாகக் கிடந்து, கடந்த ஞாயிறன்று செய்தியாகி, காவல் துறை துப்புத்துலக்கியதால் தமிழகத்தின் நிர்பயாவாக மாறிய இரவு இது.

பெரும்பாலும், ஊருக்கு வெளியே பிரமாண்டமான கட்டிடங்களில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களின் பாதுகாப்புகுறித்தும் அவற்றில் பணிபுரியும் பெண்களின் நிலைகுறித்தும் இரு தினங்களாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ஏராளமான தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பங்கெடுத்த ஒரு போராட்டமும் நிகழ்ந்துள்ளது.

அச்சமூட்டும் இச்சம்பவத்தை ஒட்டி, பெண்களின் பாதுகாப்பு, அவர்கள் இரவு நேரத்தில் பணிபுரிவது சரியா தவறா, சீக்கிரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனப் பல அறிவுரைகளும் குவிகின்றன.

இரவு ஆண்களுக்கானதா?

உமா மகேஸ்வரியின் வன்முறை மரணம் அதிர்ந்து கொண்டிருக்கும் மனதில், இன்னுமொரு எண்ணம் தலையெடுக்கிறது. இரவுகள் ஆண்களுக்கானதா? பெண் களுக்கு இரவு என்பது வெறும் படுக்கையறைதானா? சமுதாயத்தில் சரிபாதிப் பெண்கள் கேட்பது, சமநீதி என்பது பெண்கள் இயக்கத்தின் பல பத்தாண்டுக் கோரிக்கை. பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, பாகு பாடுகளுக்கு எதிராக நியாயம் கேட்கும் பெண்களுக்கு, காலத்தின் மீதும் வாழும் வெளிமீதும் எந்த அதிகாரமும் இல்லையா? விண்ணில் பாதி மண்ணில் பாதி என்ற முழக்கங்களில் இனி பகலையும் இரவையும்கூடச் சேர்க்க வேண்டுமா?

இரவைக் கைக்கொள்ளும் பயணம்

எப்படியேனும் இந்த இரவைக் கைக்கொள்ள வேண்டும் என இன்று எழுந்த தவிப்பால், இரவு 11 மணிக்கு ஓ.எம்.ஆர். துவங்கும் மத்திய கைலாஷிலிருந்து கிளம்பினேன். அந்தப் பேருந்து நிலையத்தில் ஒரு வயதான தம்பதியைத் தவிர, மற்றவர் எல்லாம் ஆண்கள். என்ன காரணத்தாலோ டைடல் பார்க் வளாகம் வரை தெரு விளக்குகள் எதுவும் எரியவில்லை. பறக்கும் ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. இந்திரா நகர் ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு ரயில்வே காவலர் அமர்ந்திருந்தார். ரயில் நிலைய விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. ரயில் நிலையங்களுக்கு இடையிலான சாலை இருண்டு கிடந்தது. அங்கு தனியாக நடந்து செல்ல வேண்டியிருந்தால் அச்சமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. திருவான்மியூர் ரயில் நிலைய வாசலிலும் ஆண்கள்தான் இருந்தனர். இன்னமும் நள்ளிரவுகூட ஆகவில்லை என்பது நினைவுக்கு வந்தது. சிக்னலில் கூட இருந்த வாகனங்களில் ஆண்கள் இருந்தனர்.

சாலை வெறிச்சோடிப் போகத் தொடங்கியிருந்தது. காவல் துறையின் ரோந்து வாகனம் ஒன்று கடந்து சென்றது. மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகமான அசெண்டாஸ் பல்லாயிரம் விளக்குகளால் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அதன் வாசலுக்கு வெளிப் பக்கம் வெறிச்சோடிக்கிடந்தது. எதிர்ப்புறம் இருந்த ஒரு ரோட்டுக் கடையில் பத்து இருபது ஆண்கள் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். பேருந்து நிறுத்தத் திலும் ஒரு சிறு கூட்டம் இருந்தது. அருகில் சென்றபோது, அதில் இரு பெண்கள் நின்றிருப்பது தெரிந்தது.

மீண்டும் ஓ.எம்.ஆரில் நுழைந்து ஆள்நடமாட்டம் குறையத் தொடங்கிய பகுதிகளில் பயணித்தபோது, ஓர் இளம் பெண் ஸ்கூட்டரில் எதிரில் சென்றார். இடையே எஸ்.ஆர்.பி. டூல்ஸ் அருகே கட்டிடத் தொழிலாளர்கள்போல் காட்சியளித்த வேற்று மாநிலத்தவர் பத்துப் பேரைக் காவலர்கள் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். அச்சுறுத்தும் பேரழகோடு இரவு கவிந்துகிடந்தது. ஆண்கள், பெரும்பாலும் இளைஞர்கள் தேநீர்க் கடைகளில், உணவகங்களில், சாலையோரங்களில் எனத் தென்பட்டுக்கொண்டே இருந்தார்கள். பெண்களைத் தேடித்தான் காண வேண்டியிருந்தது. அப்போது பின்னாலிருந்து சீரான வேகத்தில் ஒரு ஸ்கூட்டர் எங்களைத் தாண்டிச் சென்றது. கருப்புக் கோட்டு அணிந்த ஓர் இளம்பெண் அந்த வண்டியை ஓட்டிச் சென்றார். காற்றைக் கிழித்துச் சென்ற அவரின் வேகமும் அதில் தெரிந்த தன்னம்பிக்கையும் இரவுக் காற்றில் வீசி நின்றது.

பாதுகாக்க வேண்டிய பொருளா?

இன்னும் சற்று தூரம் அந்தத் தகவல் நெடுஞ்சாலையில் சென்றபோது, பல வாடகை கார்களில் பெண்களும் ஆண்களும் வீடு திரும்பிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு சில கார்களில் சீருடை அணிந்த பாதுகாவலர்கள் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

பாதுகாப்புகள் ஆசுவாசப்படுத்துகின்றனதான். ஆனால், பாதுகாக்கப்பட வேண்டிய பொருளாகப் பெண்கள் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும், சிறு வயதில் பாடப் புத்தகத்தில் படித்த காந்தியின் சுதந்திரம் பற்றிய கூற்று நனவாவதற்கு? இப்போதெல்லாம் யாரும் காந்தி சொன்னதுபோல்கூடச் சொல்வதில்லை. பாதுகாப்பாக இரு. வேலைக்குப் போ, ஆனால் சீக்கிரம் வந்துவிடு. என்ன உடை அணிகிறாய் என்பதில் கவனமாயிரு, யாரிடம் பேசுகிறாய் என்பதில் கவனமாயிரு என்பதே ஆண்களதும் பெண்களதும் அறிவுரைகளாக இருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவையும்கூட. ஆனால், நாட்டின் விடுதலைபற்றிக் கண்ட கனவுகளைக்கூட பெண்கள் தங்கள் தனிமனித சுதந்திரத்துக்கான கனவுகளாகக் கைக்கொள்ள முடிவதில்லை.

மிளிரும் நம்பிக்கைகள்

நீண்ட தூரம் சென்றபின் எதிரே ஒரு பெண், வண்டியில் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஆனால், இது ஸ்கூட்டர் இல்லை. அவர் ஒரு மங்கிய சேலை அணிந்து, ஒரு மூன்று சக்கர மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். எங்கள் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்த பிளாஸ்டிக் கவர்களை எடுத்து வண்டியில் போட்டார். 55 வயதாகும் துர்கா, கண்ணகி நகரில் வசிப்பவராம். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு இரவும் 11 மணியிலிருந்து விடியற்காலை 4 மணிவரை அவர் இந்த வண்டியில் சென்று பிளாஸ்டிக் பொறுக்கிவருவதாகச் சொன்னார். இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்று சொன்னார். உமா மகேஸ்வரி மரணம்குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கவில்லை.

ஒரு மணி நேரப் பயணத்தை முடித்து வீடு திரும்பும் முன் அடையாறு பேருந்து நிலையம் அருகில் சாலையோரத் தேநீர் வண்டியில் தேநீர் அருந்த நின்றபோது, இன்னமும் இரண்டு பேரைச் சந்திக்க முடிந்தது. மஞ்சுளா, திலகா இருவரும் சாலைகளைத் துப்புரவு செய்துகொண்டிருந்தார்கள். நீல நிறச் சீருடைப் புடவையில் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். மஞ்சுளாவின் வீடு கொருக்குப்பேட்டையில். திலகாவின் வீடு கண்ணகி நகரில். இரவு 8 மணிக்கு வேலைக்கு வரும் அவர்கள், அதிகாலை 4 மணிக்குப் பணி முடித்து வீடு திரும்புகின்றனர். இரண்டு ஆண்டுகளாக இந்தப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவருவதாகச் சொன்னார்கள்.

இரவை அணிந்து மிளிரும் நட்சத்திரங்களைப் போல அவர்களின் மேலாடை மேல் இருந்த பிரதிபலிக்கும் பட்டைகள் மிளிர்ந்தன. இந்த இரவின் தவிப்பில் ஒரு துளியையாவது கரைக்க முடிந்தது அவர்களின் நிமிர்ந்த நன்னடையிலும் நேர் கொண்ட பார்வையிலும் தெறித்த சிரிப்பிலும்.

- ப்ரேமா ரேவதி, எழுத்தாளர், தொடர்புக்கு: revathi.work@gmail.com

நன்றி - தி ஹிந்து

1 comments:

Vinoth Kumar said...

//.. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும், சிறு வயதில் பாடப் புத்தகத்தில் படித்த காந்தியின் சுதந்திரம் பற்றிய கூற்று நனவாவதற்கு? ..//

அப்படியெல்லாம் ஆகாது.

எதிர்காலம் சிறப்பாக உள்ளது .. பார்க்க
http://kannimaralibrary.co.in/?p=1212
படித்து உங்கள் கருத்துகளை தாருங்கள்.Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்