/* up Facebook

Feb 8, 2014

கருத்தடை - ஆர்த்தி வேந்தன்


நீண்ட நாட்கள் யோசித்த பிறகே இதை இங்கு பதிவு செய்கிறேன், எதை பற்றி பேசினாலும், எழுதினாலும் அதை தனிபட்ட முறையில் தொடர்புபடுத்தி கேள்விகள் எழுப்புவதால் தான் யோசிக்க வேண்டியதுள்ளது. சில நாட்களுக்கு முன்பு என் தோழி ஒருவருக்கு வயிற்று வலி அதிகமாகி ரத்தபோக்கு ஏற்பட்டது. அப்போது நான் அவருடன் இல்லை, ஆனால் அந்த வலியினால் தோழி துடித்து போனதை நண்பர் விவரித்த போது உறைந்து போனேன், மாதவிடாய் தள்ளி போவதற்காக கருத்தடை மாத்திரையை சாப்பிட்டதனின் விளைவு தான் இது.

பொதுவெளியில் நாப்கினை கூட 'அமைதியாக' தான் கேட்டு வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த சமுகத்தில் கருத்தடை மாத்திரைகளும் அதனின் பாதிப்புகளையும் பற்றி பேசுவது கடினம் தான். 

நகர்ப்புறங்களில், கருத்தடை முறைகள் பற்றி மருத்துவர்களிடம் கேட்டு பின்பற்றுவதை காட்டிலும் google 'ஆண்டவரை' கேட்டு பின்பற்றுவது அதிகமாக உள்ளது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அதனை உட்கொண்டதால் ஏற்பட்ட பின்விளைவுகளை சந்திக்கும் பெண்கள் ஏராளம். கிராம புறங்களில் இருந்து வரும் பெண்கள் இரண்டாவது பிரசவத்திற்கு பின்பு copper t யை வைத்து விட்டு செல்கின்றனர். பெரும்பான்மையோருக்கு அதை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மாற்றாததால் ஏற்படும் விளைவுகள் பற்றிய புரிதல் இல்லை. 

வேலை, குடும்பம், சொத்து எல்லாவற்றிலும் எங்களின் பங்கு இருக்கிறது என்று சொல்லும் ஆண்கள் கருத்தடை என்றால் மட்டும் அது ஏதோ பெண்களுக்கே உரிய விடயம் போல் கருதுவது நாம் எத்துனை பின்நோக்கிய சமுகத்தில் வாழ்கிறோம் என்பதை உரைத்துகொண்டே இருக்கிறது. இருப்பினும் கருத்தடைகள் பற்றிய அடிப்படையான மருத்துவ புரிதல் இருந்தால் குறைந்தபட்சம் உடல்நலத்தையாவது பாதுகாத்து கொள்ளலாம். ( கலாச்சார காவலர்கள் யாரும் இதை பற்றி கவலைப்பட வேண்டாம்)

வரலாறு எங்கும் கருத்தடைக்கான முறைகள் இருந்துகொண்டே உள்ளன. பண்டைய ரோம் யில் பெண்கள தனது இடது காலில் பூனையின் ஈரலை ஒரு பையில் போட்டு கட்டிகொள்வர். சிலர் தவளையின் வாயில் மூன்று முறை துப்பினர். இது கருவடைவதை தவிர்க்கும் என்று நம்பினார். 

எகிப்தியர் பெண்கள் முதலையின் சாணத்தை கருத்தடைக்கு பயன்படுத்தினர் என்று குறிப்பீடுகள் உள்ளது. இதை பயன்படுத்துவதற்கு அவர்கள் எந்த தயக்கமும் காட்டவில்லை. 1850 BC யில் பண்டைய எகிப்தியர்கள் முதலை சாணத்தை தேன் மற்றும் சோடியம் கரியகக்காடியின் உப்புடன் கலந்து பெண்ணுறுப்பில் தேய்த்து கொண்டனர். பஞ்சை லாக்டிக் அமிலம் நீரிலியில் முக்கி அதனை பெண்ணுறுப்பில் புகுத்தினர். இப்போது நாம் பயன்படுத்தும் நவீன கருத்தடை மாத்திரையில் முக்கியமான உள்ளடங்கிய பொருள் இந்த லாக்டிக் அமிலமாகும். etrers papyrus என்ற ஓலை சுவடியில் கருத்தடை செய்வதற்கு பேரீச்சை . கருவேலமரம் பட்டை, தேன் ஆகியவற்றை பசையாகி அதை பெண்ணுறுப்பில் வைத்தனர் என்ற தகவல் உண்டு. இப்போது இது நடைமுறையில் இல்லையென்றாலும் இந்த முறை மிகவும் பயனளிக்ககூடியதாக இருந்தது என்று அறியபடுகிறது. இதில் உள்ள சக்கரை தன்மை நுரைத்தவுடன் லாக்டிக் அமிலமாக மாறக்கூடும். இது விந்துகளை கொல்கிற மருந்து என்றும் அழைக்கப்படும். 

கருத்தடை பற்றிய ஆணாதிக்க சிந்தனைகளும், பெண்ணிய நியாயங்களும் ஒருப்பக்கம் இருக்கட்டும், உடல் நல பாதுகாப்பின் அடிப்படையில், ஒரு பெண் உடல் ரீதியாக கருத்தரிக்க வலிமையாக இருந்தால் அவள் தன்னை சில கேள்விகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போது நான் கற்பமடைவதற்கு ஏற்ற நேரமா?, ''இல்லை '' என்பது தான் பதில் என்றால் தன் உடலுக்கு ஏற்ற கருத்தடை வழியை தேர்வு செய்ய வேண்டும்.

எந்த முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கும் தன்னை சில கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும்.'' விரைவில் கற்பமடைய திட்டம் உள்ளதா? அல்லது சில நாட்கள்/ மாதங்கள் கழித்தா? அல்லது எப்போதுமே இல்லை என்பதா என்று. இக்கேள்விகளுக்கான பதிலின் அடிப்படையிலே கருத்தடை முறையை தானும் தன் பாலின்பத்தில் பங்குகொள்ளும் நபரும் முடிவு செய்ய வேண்டும்.
இன்றைக்கு கிடைக்கும் கருத்தடை முறையில் எதுவும் 100 சதவிகிதம் ஆற்றல் வாய்ந்தது அல்ல என்று ஆராய்சிகள் காட்டுகிறது. இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேலான பெண்கள் எதிர்பாராமல் கற்பமடைகின்றனர். இதில் ஒரு பாதி கருத்தடைகளை பயன்படுத்தாத காரணத்தினால் கருவுற்றனர். மறுபாதி சரியான முறையில் கருத்தடைகளை பயன்படுத்தாதால் கருவுற்றனர். 
எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் கருத்தடைக்கான எல்லா முறைகளும் ஆணின் விந்து பெண்ணின் முட்டைக்குள் இணைவதை தடுப்பதும். அல்லது முதிர்ச்சிஅடைந்த முட்டை பெண்ணின் கருவறையில் வளர்வதை தடுப்பதன் அடிப்படையிலே செயல்படுகிறது. 

கருத்தடைகள் மீளுறும் .(மாற்றுதற்குரியது) மற்றும் நிலையான என்று இரண்டு வகையில் உள்ளது.மீளுறும் முறை என்றால் நமக்கு தேவையான நேரத்தில் நிறுத்தி கொள்ளலாம். நிலையான முறையில் அது இயலாது. இது பொதுவாக சர்ஜரி மூலம் செய்யப்படும். ஆண்களுக்கு விதைநாள அறுவை (vasectomy ) பெண்களுக்கு டுபல் லிகேஷன் (tubal ligation ) என்றும் சொல்வர்.

கருத்தடை முறைகளில் இன்று பரவலாக தெரிவது தடுப்பு முறை (காண்டம்ஸ்), இயந்திர முறை (காப்பர் தி) , சுரப்புநீர் முறை (மாத்திரைகள்).

இன்றைக்கு கிடைக்கும் பெரும்பாலான எல்லா கருத்தடை முறைகளிலும் அதனை உபயோகபடுத்துவதனின் பொறுப்பு பெண்களை சார்ந்தே உள்ளது. எல்லா காலகட்டத்திலும் கருத்தடைக்கான முறைகள் சோதனைக்கு உட்படுத்திகொண்டே இருக்கிறது. தம்பதியருக்கான சரியான கருத்தடை முறை காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறக்கூடும். 

ஒரு சிலருக்கு தங்களுடைய பொருளாதார நிலையே கருத்தடை முறையை முடிவு செய்கிறது. இயற்கை முறை எந்த செலவும் இல்லாதாது ஆனால் இதற்கு 100 சதவிகிதம் ஒழுங்குமுறை தேவைபடுகிறது. அடுத்தபடியாக காண்டம்ஸ் செலவு செய்ய கூடிய விலையில் விற்கபடுகிறது. ஆனால் இது ஒரே மாதிரியாகவும், சரியான முறையிலும் பயன்படுத்தினால் மட்டுமே 100 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும். மாத்திரைகள் மிகுதியான ஆற்றல் உடையவை ஆனால் நாம் தேவையின் பொருட்டு இதனின் விலை அதிகரித்து கொண்டே போகும். 

கருத்தடை முறைகள் ஒருவரின் வயது, உடல்நலம் மற்றும் தனிமனித சூழலை சார்ந்து முடிவு செய கூடியது. , உதாரணதிற்கு காப்பர் தி, டுபல் லிகேஷன் போன்றவை பதின்ம வயதை உடையோருக்கு பொருத்தமானது இல்லை. சர்ஜரி முறையான விதைநாள அறுவை எதிர்காலத்தில் குழந்தை வேண்டுவோருக்கு உகந்தது இல்லை. 

கருவுறுதிறன் குறைந்தாலும் , 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் கற்பம் அடைவதை தவிர்க்கவேண்டும் என்றால் கருத்தடையை பயன்படுத்த வேண்டும். cardio vascular பிரச்சனை உள்ளவர்கள் ஈஸ்ட்ரோஜன்( estrogen ) அதிகம் உள்ள கருத்தடையை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். இதனின் விளைவாக ரத்த போக்கு அதிகமாக ஏற்பட கூடும்.

கருத்தடை முறையை தேர்ந்தெடுபதற்கு முன்பு, அவர்களின் வாழ்கை முறைக்கு ஏற்றவை, சரியான முறையில் பயன்படுத்துதல், பாலியல் இன்பத்தின் பாதிப்பு, வேறொரு கருத்தடை முறைக்கு மாறும்போது ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றை அவர்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவரிடம் கலந்துரையாடி ஆலோசனை பெறுவது அவசியமாகும். 

கருத்தடை பயன்படுத்திய பிறகும் கரு உண்டாக காரணம் அவற்றை சரியான முறையில் பயன்படுத்துகிற புரிதல் இல்லாத காரணத்தினால் தான். 

மாத்திரைகள்:

இது 1960யில் அறிமுகம் செய்யப்பட்டது. உலகில் அதிகளவில் பயன்படுத்தும் கருத்தடை முறையில் இது முதல் இடம் பெறுகிறது. 
* இரண்டு நாட்களுக்கு இதை உட்கொள்ள மறந்தாலோ அல்லது உட்கொள்ள முடியவில்லை என்றாலும் கரு உருவாகுவதற்கான வாய்ப்பு உண்டு. முட்டை முதிர்ச்சி அடைந்த நிலையில் உடல் உறவு வைத்து கொண்டு அடுத்த தினமே மாத்திரை எடுத்து கொண்டாலும் கரு உருவாக வாய்ப்பு உள்ளது.
* கருத்தடை மாத்திரையுடன் வேறு சில மாத்திரைகள் எடுத்து கொண்டால் அதனின் ஆற்றல் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. வேறு மாத்திரைகள் எடுத்து கொண்டால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரியபடுத்துவது அவசியம்
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கென்று தனியாக கருத்தடை மாத்திரைகள் உண்டு. இது பொதுவாக இருக்கும் கருத்தடை மாத்திரைகளை விட ஆற்றல் குறைவானது இருப்பினும் இது தாய் பால் சுரபுவதற்கு எந்த இடையூறும் தராது. தாய்ப் பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் மருத்துவரிடம் தெரிவித்து அவர்களுக்கு ஏற்ற கருத்தடை மாத்திரை வாங்குவது அவசியம்.
* அதிக ரத்த கொதிப்பு , மற்றும் மார்பு புற்று நோய் பரம்பரை நோயாக உள்ளவர்கள் கருத்தடை மாத்திரைகள் எடுப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். 
* அதிக எடை உள்ளவர்களும் அவர்களுக்கு ஏற்ற மாத்திரையை மருத்துவரிடம் கேட்டு பெற்றுகொள்ளவும்
இந்த முறை மிகவும் வசதியானதாக கருதப்பட்டாலும் நாம் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

ஆபத்துகள்:
மார்பக புற்று நோய்
ரத்த போக்கு
தலை வலி,
பித்தப்பை பாதிப்பு
தோற்று நோய்.
வைட்டமின் b 2, b 6, b 12 குறைந்து போகும்.

ஒரு சிலர் மாதவிடாய் கட்டுபடுத்தவதற்கும் இதை பயன் படுத்துகின்றனர். இது மிகவும் தவறான ஒன்றாகும். 

இந்த மாத்திரைகள் பெண்களின் சுரப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் இது முழுமையான பாலின்பத்தில் ஈடுபடுவதை தவிர்க்க கூடும். செக்ஸ் ஹோர்மோன் பைண்டிங் க்லோபுளேன் எனப்படும் ப்ரோடீன் உடலுறவின் பொது பால்இன்பத்தை குறைக்க கூடும் .

ஆண்களுக்கான கருத்தடை:
கருத்தடை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒன்றே. இருப்பினும் ஆண்களுக்கு சிலவை மட்டுமே உள்ளது. 
விதை நாள் அறுவை , இது ஆண்களுக்கான சர்ஜரி முறையாகும். இது நிலையான முறையாகும். இதனின் குறைபாடாக சர்ஜரிக்கு பின்பு பாலின்பம் குறைந்துவிடுகிறது என்று சொல்லபடுகிறது. மேலும் 5-35 சதவிகிதம் இதை மேற்கொண்டவர் உடலுறவில் ஈடுபடும்போது வலி ஏற்படுவதாக தெரிவிகின்றனர்.

ஆண்களால் அதிகம் பயன்படுத்தப்படும் கருத்தடை காண்டம்ஸ்.

ஆண்களுக்கான கருத்தடை ஊசி ஆஸ்திரேலியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது இன்னும் விற்பனைக்கு வரவில்லை. 

பறக்கும் ரயில், பறக்கும் கார் என்று எல்லாம் இருக்கும் இந்த நூற்றாண்டிலும் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் ஏன் இல்லை என்று சிந்திப்பது இயல்பான ஒன்றாகும். இதில் ஆண்கள் விருப்பம் காமிக்க மாட்டார்கள் என்று சொல்வது ஆண்ஆதிக்க புத்தியின் வெளிபாடே தவிர இது உண்மை அல்ல. கருத்தடை என்றாலே பெண்களுக்கு ஒன்றானது போல் பார்ப்பது நாம் எந்த அளவு பின் தங்கி உள்ளோம் என்பதை காட்டுகிறது. 'கற்பு' 'தாய்மை' 'புனிதம்' போன்ற சொற்களின் மூலம் பெண்கள் மீது தின்னிகபடும் பொறுப்புகளில் ஒன்று கருதடையாகும். குழந்தை வளர்ப்பில் எப்படி இருபாலினதிர்க்கும் பொறுப்பு உண்டோ அதே போல் கருதடையிலும் ஆண்களும் பொறுபேற்று கொள்வது அவசியம்.

பயன் கருதி - ஆர்த்தி வேந்தன் தனது முகநூலில் பதிந்ததை நன்றியுடன் உங்களுடன் பகிர்ந்துக்கிறோம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்