/* up Facebook

Feb 28, 2014

கூட்டு‍ வல்லுறவுகள் : என்ன செய்யப் போகிறோம் நாம்?? - முத்தழகன்


சாதிய கட்டுமானத்தை பெண்ணின் யோனிக்குள் வைத்து காப்பாற்றும் ஆணாதிக்க, காட்டுமிராண்டி ஆதிக்க சாதிய இழிபுத்தி மீண்டுமொருமுறை தன் கோர முகத்தை உலகிற்கு காட்டியிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து 180 கி.மீ தொலைவிலுள்ள பிர்பம் மாவட்டத்தில் உள்ள சபல்பூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது பழங்குடியின பெண், 13 காட்டுமிராண்டிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பொதுச் சமூகத்தின் மனசாட்சியை எந்த விதத்திலும் உலுக்கி விடாத, மெழுகுவர்த்தி ஏந்தி வீதியில் ஊர்வலம் செல்ல அவசியமில்லாத, ”அத்தன பேரையும் தூக்குல போடணுங்க, அப்போதான் இந்த மாதிரி தப்பு செய்யறவங்களுக்கெல்லாம் ஒரு பாடமா இருக்கும்” என்று மத்தியதர வர்க்க மனசாட்சி இன்னும் எந்த எதிர்வினையும் ஆற்றியிருக்காத இந்த சம்பவத்திற்கு ஆணாதிக்கம் மட்டுமல்ல, சாதிய ஒடுக்குமுறையும் காரணமாக அமைந்திருக்கிறது.

அந்த பழங்குடியின பெண் வேறொரு உயர் சாதியை சேர்ந்த ஆணை காதலித்ததோடு, அடிக்கடி அவரை சந்தித்து பேசி வந்திருக்கிறார். காதல் எனும் ”மனித சமூகத்திற்கு விரோதமான?!” மாபெரும் குற்றத்தை செய்ததற்கு “கங்காரு” பஞ்சாயத்து கூடி 50000 ருபாய் அபராதம் செலுத்துமாறு அந்த பெண்ணின் குடும்பத்திற்கு உத்தரவிடுகிறது. அதை செலுத்த தவறினால், அந்தப் பெண் கூட்டு வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படுவாள் என்றும் எச்சரிக்கிறார்கள். பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியுள்ள பழங்குடியின குடும்பத்தால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்று உறுதியாக தெரிந்த பின்பே தொகை நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் இதிலிருந்து தெரிகிறது.

எதிர்பார்த்தபடியே அந்தக் குடும்பத்தினர் அபராதத்தை செலுத்தத் தவறியதை அடுத்து 13 காட்டுமிராண்டிகள் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இந்த கொடூரத்தை வெளியில் சொல்லும்பட்சத்தில் கொல்லப்படுவீர்கள் என்றும் அவர்கள் அந்த குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர்.

சமூகத்தில் காதலென்பது தனிமனித உரிமை என்ற புரிதலுடைய நாகரீக(!) சமூகம் நடப்பிலிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சாதியமும், பெண்ணடிமைத்தனத்தனமும் நம்மை அவ்வளவு எளிதில் மனிதர்களாக்கிவிடாது என்பதையே நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.

முந்தைய சில கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவங்களை திரும்பிப் பார்ப்போம் …

தில்லி:

2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் வீடு செல்ல நண்பருடன் பேருந்தில் ஏறிய மருத்துவக்கல்லூரி மாணவி ”நிர்பயா” 6 பேரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். உள்நாட்டில் சிகிச்சை பலனளிக்காததால் வெளிநாட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இந்த செய்தி கேட்டு இந்தியாவே பதறித் துடித்த வேளையில் – அவள் அணிந்திருந்த உடை, நண்பரோடு சினிமாவுக்கு சென்றது, வல்லுறவுக் குற்றவாளிகளை அண்ணா என்று அழைத்திருக்கலாம் – என்பவற்றைப் போன்ற வாதங்களை முன்வைக்க பிற்போக்குவாதிகளும், ஆன்மீக அவலங்களும் தவறாமல் செய்தனர்.

இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு டெல்லி வீதிகளில் மெழுகுவர்த்தியுடன் கூடிய பல்வேறு தரப்பினர், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் பெண் இறந்து விட்டாள் என்று வருத்தம் தெரிவித்தார். அரசு தரப்பில் நீதிபதி வர்மா கமிஷன் அமைக்கப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கும், சிறுவன் ஒருவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கின்ற வேளையில் இரும்பு கம்பியை ஒன்றை எடுத்து அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் விட்டு சிறுகுடலை வெளியே எடுத்தார்கள் என்கிற செய்தி கேள்விப்படுகிற வேளையிலேயே உடல் பதறுகிறது. கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத மிகக் கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எவரும் கொண்டிருக்க முடியாது

தமிழ் நாடு:

1992 ஜூன் மாதம் 20-ம் தேதி தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கிற சித்தேரி வனப்பகுதியில் உள்ள வாச்சாத்தி கிராமத்தில் நுழைந்த காவல் துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சந்தன மரம் கடத்தியதாக ஊர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டி ஒட்டு மொத்த கிராமத்தையும் வாழத் தகுதியற்றதாக மாற்றி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

அந்த வன்முறையின் நடந்து கொண்டிருக்கும் போதே காவல்துறையினர் சிலர் திருமணமாகாத 18 இளம்பெண்களை மட்டும் தேர்வு செய்து அவர்களை ஒரு லாரியில் ஏற்றி, ஏரிக்கரைக்கு கொண்டுச் சென்று அங்கிருந்த புதர் மறைவுகளில் கூட்டம் கூட்டமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார்கள். மேலும் அப்பெண்களை அழைத்துச் சென்று அரூரில் ஒரு வாரம் வைத்திருந்தார்கள். அங்கும் தொடர்ந்தது பாலியல் வன்முறை. சிறைகளுக்கு கொண்டு செல்லும்போது, அவர்களில் பலர் குற்றுயிரும், குலையுயிருமாக ஆகியிருந்தார்கள்.

மொத்தம் 18 பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். 18 பெண்களில் 3 பெண்களுக்கு மட்டுமே அப்போது திருமணம் ஆகியிருந்தது. மீதமுள்ள பதினைந்து பெண்களும் 13 முதல் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் பலர் வயதுக்குக் கூட வராத சிறுமிகள்.

‘‘அன்னிக்கு சனிக்கிழமை ஸ்கூல் லீவு. ஸ்கூல் மட்டும் இருந்திருந்தா நான் ஸ்கூலுக்குப் போயிருப்பேன். எனக்கு இப்படி வலிக்கிற அளவுக்கு எதுவும் நடந்திருக்காது.’’ சம்பவத்தின் போது எட்டாம் வகுப்பு படித்து வந்த பதின்மூன்று வயதான செல்வி, நீதிமன்றத்தில் தன்னுடைய வாக்குமூலத்தை இப்படித்தான் தொடங்கினாள்.

”உங்கள் போலீசாரின் லத்திக்கு மட்டும் விந்தைப் பீச்சுகிற சக்தி இருந்தால் நாங்கள் எத்தனையோ முறை கர்ப்பம் தரித்திருந்திருப்போம்” என்று வேறோர் பெண் நீதிமன்றத்தில் சொன்னதைக் கேட்ட போது உயிரே உறைந்து போனது.

கூட்டாக வன்புணர்ச்சியில் ஈடுபட்டு மனித தன்மையற்ற செயல்களில் ஈடுபட்ட காவல் மற்றும் வனத்துறையினருக்கு தண்டனை வாங்கி கொடுக்க ஜனநாயக அமைப்புகள் 20 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

கயர்லாஞ்சி:

2006, செப்டம்பர் 29 அன்று தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆதிக்க சாதியினரின் மீது புகார் அளித்த ”மாபெரும் குற்றத்தை” செய்ததற்காய் மகாராஷ்டிரா மாநிலம், பண்டார மாவட்டம், மொகாலி தாலுகாவில் அமைந்துள்ள ‘கயர்லாஞ்சி’. என்னும் கிராமத்தை சேர்ந்த பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் பஞ்சாயத்தின் முன் நிறுத்தப்பட்டனர். தாய், மகள் மற்றும் இரண்டு மகன்கள் என அனைவரும் நிர்வாணப்படுத்தப்பட்டு மகனை தாயுடனும் அண்ணனை தங்கையுடனும் உடலுறவு கொள்ளுமாறு நிர்பந்தம் செய்தனர் ஆதிக்க சாதியினர். அவர்கள் மறுக்கவே அவர்களுடைய ஆணுறுப்பை வெட்டி எறிந்தனர். பின்னர் தாய் மகள் இருவரும் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர்.

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்த பெண்களின் பிறப்புறுப்பில் மாட்டு வண்டியின் நுகத்தடியில் மாட்ட பயன்படும் கூரிய கட்டையை நுழைத்து அடித்தே கொன்றிருக்கிறார்கள். இறந்த பின் அந்த பெண்களுடன் உடலுறவு கொண்டிருக்கிறான் அந்த கூட்டத்தின் தலைவன்.

‘‘இவ்வழக்கில் சாதிக்குப் பங்கிருப்பதாகக் கூறமுடியாது. குற்றவாளிகள் அனைவரும் சாதாரண கிராமத்து மனிதர்கள். அவர்கள் ஏற்கெனவே எந்தவொரு குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. போட்மாங்கே குடும்பத்தினரால் தாங்கள் ஏற்கெனவே ஒரு பொய்யான வழக்கில் சிக்க வைக்கப்பட்டதற்குப் பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே இக்குற்றங்களைச் செய்துள்ளனர். மேலும் இதுவொன்றும் அரிதினும் அரிதான வழக்கல்ல”.

நினைத்துப் பார்த்தாலே உடல் நடுங்கும் இந்த கொடூரத்தை அரங்கேற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை 25 வருட தண்டனையாக மாற்றிய உயர்நீதி மன்றம் உதிர்த்த முத்துக்கள் இவை.

ராஜஸ்தான்:

அதே போல் குழந்தைத் திருமணத்தை எதிர்த்து தொடர்ந்து போராடினார் இராஜஸ்தானை சேர்ந்த பன்வாரி தேவி. திட்டமிட்டு அவரை பழிவாங்க நினைத்த ஆதிக்கசாதி இந்துக்கள் பன்வாரி தேவியை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், “கீழ்ச்சாதிப் பெண்ணை உயர் சாதியினர் தொட்டிருக்கக்கூட மாட்டார்கள்” எனக் கூறியது.

தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதே போல் நடைபெற்ற ஏராளமான சம்பவங்களை நாம் பட்டியலிட முடியும். இவை எல்லாவற்றிற்கும் பின்னணியாக ஆணாதிக்கமும், சாதி ஆதிக்கமும் அமைந்திருக்கிறது.

உயர் சாதி பெண் + தலித் ஆண் என்றாலும், தலித் பெண் + உயர் சாதி ஆண் என்றாலும் பெருமளவில் உடலளவிலும், மனரீதியாகவும் வன்முறைகளை எதிர்கொள்வது என்பது பெண்களாகவே உள்ளார்கள். படிநிலையில் கட்டமைக்கப்பட்ட சாதிய சமூகத்தில் கீழ்நிலையான தலித்துகளும் பெண்களும் ஒன்றெனவே ”மனு (அ)நீதி” வரையறுத்துக்கூறுகிறது. ஆகவே இரத்தமும் சதையுமாக சக மனுசியாக நேசிக்கப்பட வேண்டியவள் ஒரு பண்ட மாற்றுப்பொருளாக பாவிக்கும் வழக்கத்தை இயல்பாக மனு உருவாக்கி வைத்த கோட்பாடுகள் உருவாக்கி விட்டது.

ஆதிக்க சிந்தனை என்பது சகல தளங்களிலும் நிறைந்திருக்கும் இந்த சமூக சூழலில் பெண்ணை மதிக்கின்ற போக்கை, சக மனுஷியாக அங்கீகரிக்கின்ற மனப்பாங்கை சிறு வயதிலிருந்தே ஊட்டி வளர்க்கின்ற கல்வி முறையும், மேம்பட்ட சமூகத்தை கட்டமைக்க தேவையான பண்பையும் வளர்த்தெடுக்காமல் இங்கே குற்றங்களை சட்டத்தைக் கொண்டு மட்டுமே தீர்க்க முடியாது.

பெண்களை ஃபிகர்களாக பார்க்கின்ற மனநிலையிலேயே ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள். ”கெடுத்தவனுக்கே கட்டி வைக்கிறதுதான முறை” என்கிற சினிமாத்தனமான வாதங்களும் – பெண்ணின் உடலை வியாபார பொருளாக்கி கல்லா கட்டும் திரைப்படங்கள், ஆண் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு கூட பெண்ணை விளம்பர மாடலாக ஆக்கியிருக்கும் விளம்பரங்கள் என நம்மைச் சுற்றியிருக்கும் ஓராயிரம் காரணங்களை – சகஜமாக கடந்துவிட்டு, வல்லுறவு சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் உச்சுக் கொட்டிவிட்டு, தண்டனைகளை அவரவர் விருப்பத் தேர்வுகளாக பரிந்துரைத்து விட்டு சென்று கொண்டிருக்கிறது சமூகம்.

பாலியல் ரீதியாகவும், படிநிலைக் கொடூரத்தாலும் இப்படி சக மனுஷியையும், மனுஷனையும் பிய்த்துத் தின்று கொண்டிருக்கும் பிணங்களை, சாதாரணமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தினசரி கடந்துசெல்லும் மனிதர்களின், வார்த்தைகளில் தெறிக்கும் வன்மத்தைக் கூட அனுமதிக்காமல், அதை அப்பொழுதே எதிர்க்கும் மனப்போக்கு ஏற்படவேண்டும்.

இனி, உயிரும் உணர்வையும் கொண்ட பெண்ணை வெற்று சதையாக மட்டுமே பாவிக்கும், சாதித்திமிரும், மடப்பற்றும் கொண்ட மனநோயாளிகளை, அவர்களின் வழியிலேயே சென்று ஒதுக்க வேண்டும். கடுமையான நிராகரிப்பும், எதிர்ப்பும் அந்த காட்டுமிராண்டிகளை மாற்றியே தீர வேண்டும். மேலும் இனி எந்த மனிதனையும் இந்த மனநோய் தாக்காமல் வளர்த்தெடுப்பது, ஒவ்வொருவரின் கடமையாகும்.

உங்கள் பரிதாபங்களை வெளிப்படுத்தும் உச்சுக்கொட்டல்களும், கணநேர கோபங்களும் இங்கு எதையும் சாத்தியப்படுத்தாது.

அந்த “அவைகள்” மட்டுமல்ல, அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, பிறகு சாப்பிட்டுவிட்டுத் தூங்கும் நாமும் கூட குற்றவாளிகள்தான்.

நன்றி - மாற்று
...மேலும்

இரவைக் கொண்டாடுவோம் - கவின் மலர்


இரவு 10 மணியானால் என் தந்தை இப்படி சொல்வார் 

“என் சாம்ராஜ்ய நேரம் தொடங்கிசிடுச்சு” 

உண்மைதான். எனக்கும் அப்படியே. ஊரெல்லாம் உறங்கத் தயாராய் இருக்கும் பொழுதில் நாம் மட்டும் ஏதோ ஒரு வேலைக்காக தயாராவது ஒரு வித கர்வத்தையளிக்கும். படிக்கிற காலத்தில் நான் படிக்க அமருகிற நேரம் இரவு 10 மணியாய் இருக்கும். விடிய விடிய என்னால் அதிகாலை 4 மணி வரை கூட படிக்க முடியும். ஆனால் 10 மணிக்குத் தூங்கி காலை 4 மணிக்கு எழ மட்டும் என்னால் முடியாது. 

”ஊரே விழிக்கும் வேளையில் தூங்குகிறாய். ” என்று அதிகாலையில் விழித்து விடும் என்னுடைய நண்பர்கள் கேட்பார்கள். இந்த தலைகீழ்த்தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. இரவு எப்போதும் என்னை தாலாட்டியதில்லை. மாறாக உற்சாகம் கொள்ள வைக்கிறது. 

இசை கேட்கும் இரவு, இலக்கியம் வாசிக்கும் இரவு, நண்பர்களுடன் பொழுதுபோக்கும் இரவு, மேடையில் கழியும் இரவு, தனிமை கனத்திருக்கும் இரவு, உற்சாகம் பொங்கும் இரவு, எழுதத் தூண்டும் இரவு என்று பல இரவுகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் பொதுவாகவே எழுத்துக்களில் இரவு என்பதை இருளாகவும், இருளை கருப்பாகவும், கருப்பை துக்கத்தின் அல்லது ஒரு நெகடிவ் தன்மைக்கான குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.  பகல் ஒளி மிகுந்தது. வெளிச்சமானது; அதில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை; எல்லோருடைய கண்களும் பார்க்கும் வண்ணம் பகலில் தவறுகள் நிகழாது என்கிற மாயத்தோற்றம் உண்டு. உண்மையில் தவறு செய்ய நினைப்பவருக்கு பகலென்ன இரவென்ன? சொல்லப்போனால் இரவுகளில் வீட்டில் காத்திருக்கும் துணையோ, உறவோ ஏதோ ஒன்றிற்காக வீட்டிற்குத் திரும்பும் நெருக்கடி நிறைய பேருக்குண்டு. ஆகவே தவறுகள் அல்லது தவறுகள் என்று கருதப்படுபவையெல்லாம்  அதிகமாக பகலில் நிகழவே வாய்ப்பு அதிகம். 

 மனிதன் தூங்கும்போதுதான் தப்பு செய்யாமலிருக்கிறான் என்று யாரோ சொன்ன பொன்மொழி உண்டு. ஆகவே ஊர் உறங்கும் இரவில் நிகழும் தவறுகளை விட பகலில் நிகழும் தவறுகள் அதிகமாக இருக்கக் கூடும். இரவு என்பதை துக்கத்தின் குறியீடாகவும், தவறுகளின் குறியீடாகவும் திரைப்படங்களிலும், கதைகளிலும், கவிதைகளிலும் காண்கிறோம். என்னைப் பொறுத்தவரை இரவு கொண்டாட்டத்திற்குரியது. இரவை நான் கொண்டாடுகிறேன். 

ஊர் அடங்கிய பின்னர் எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும் சன்னமான இசை ஆளை மயக்கும். என் சிறுவயதில் பள்ளிப் பிராயத்தில் இசையில்லாத இரவுகளே இல்லை எனலாம். ஒரு வானொலிப்பெட்டி வீட்டில் இருந்தது. நான் படித்தாலும், எழுதினாலும், அந்த வானொலியில் திரைப்படப்பாடல் ஒலித்துகொண்டேயிருக்கும். பகல் பூராவும் துள்ளல் இசைப்பாடல்களை ஒலிபரப்பினாலும், இரவுகளில் மட்டும் வானொலியில் எனக்கு மிகவும் விருப்பமான மெலடி பாடல்கள் ஒலிபரப்பாகும்போது அதை விட மனசிருக்காது. வானொலியைக் கேட்டுக்கொண்டே எல்லாவற்றையும் செய்வேன். ”ரேடியோ கேட்டுக்கிட்டே படிக்கிறியே? எப்படி மனசில் பதியும்” என்று அம்மா திட்டிக்கொண்டே இருப்பது இன்னமும் காதில் ரீங்காரமிடுகிறது. ஆனாலும் விடமாட்டேன். இரவுகளிலும் இது தொடரும்.  அதிகாலையில் எழுந்து படித்தால் நன்றாக மனதில் பதியும் என்று பிறர் சொன்னதைக் கேட்டு நான் சிலநாட்கள் அதையும் முயன்றிருக்கிறேன். ஆனால் அதிகாலை கண்விழிப்பு எனக்கு தூக்கத்தையே கொடுத்தது. என் உடல் அப்படி பழகியிருந்தது எனக்கு மிகப்பெரும் பிரச்சனையிருந்த்து. அதனால் வழக்கம் போலவே இரவுகளையே தேர்ந்தெடுத்தேன் படிப்பதற்கு. உறங்கச் செல்லும் வேளையில் இளையராஜாவின் இசை எனக்கு கைகொடுத்திருக்கின்றது. 

என் நண்பர்கள் என்னை ‘ராப்பிசாசு’ என்றும் ‘ராக்கோழி’ என்றும் செல்லமாய் அழைப்பார்கள். இரவில் படிக்கும் பழக்கமே பின்னாளில் என் பணிகளையும் இரவுகளில் செய்ய வைத்தது. பணிநிமித்தம் முக்கியமான கட்டுரை எழுதவேண்டுமென்றால் அவ்வபோது அதை இரவுக்குத் தள்ளிப்போட்டு எழுதுவேன். என்னுடைய பயணங்கள் அனைத்துமே இரவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இரவுப்பயணம் அலாதியானது. அதிலும் ரயிலில் இரவுப் பயணம் அற்புதம். 

ஒரு நொடி கூட உறங்காமல் விழித்திருந்த இரவுகள் நிறைய உண்டு. அவை பெரும்பாலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய கலை இரவுகள் தான். “சிவராத்திரிக்கு கண்விழிக்கும் நீங்கள் ஒரே ஒரு நாள் இந்த கலை இரவுக்காக கண்விழியுங்கள்” என்று பிரசாரம் நடக்கும்.  நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கூட கலை இரவுகள் களைகட்டும். நான் கலை இரவுகளில் இயக்கப் பாடல்களைப் பாடுவேன். விடிய விடிய கண்விழித்து கலை நிகழ்வுகளைக் காண வரும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க வியப்பாகவே இருக்கும். அதிலும் நாகப்பட்டினம் நகரில் நடக்கும் கலை இரவு ஊர்த்திருவிழா போல. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தெல்லாம் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் டிராக்டர்களிலும், வேன்களிலும் மாலை 6 மணியிலிருந்தே வந்து அவுரித்திடலை நிரப்பி விடுவார்கள். வங்கக்கடலே திடலில் வந்து சங்கமமானதைப் போல பார்க்க அத்தனை ஆனந்தமாயிருக்கும். அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் இந்த கலை இரவில் பாடுவது அதிலும் மக்கள் பாடல்களை அவர்களுக்காக பாடுவது என்பது மிகுந்த மனநிறைவையும் உற்சாகத்தையும் கொடுக்கும். நான் முதலில் ஒரு பார்வையாளராகத்தான் கலை இரவிற்குச் செல்லத் தொடங்கினேன்.  என்னை மாற்றிய பெருமையும் இந்த கலை இரவிற்கு உண்டு. 

எத்தனையோ கற்றுக்கொண்டேன் அந்த கலை இரவுகளில். வாழ்க்கையை, மக்கள் பிரச்சனைகளை, நம்மை மீறிய ஒரு உலகமிருப்பதை எனக்கு என் பள்ளிப்பருவத்திலேயே அடையாளம் காட்டியது கலை இரவுகள் தான். கலை இரவுகளை நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த இருபதாண்டுகளில் கலை இரவு என்னும் வடிவம் பழகிப்போய் அது பழையதாகி இருக்கலாம். மக்களிடம் பேச ஒரு புது வடிவத்தை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயமிருக்கலாம். ஆனால் என் வயதையொத்தவர்களிடம் கலை இரவுகள் ஏற்படுத்திய தாக்கத்தை நேரடியாக நான் கண்டிருக்கிறேன். கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், தேவராட்டம் என்று எல்லாவிதமான ஆட்டக்கலைகளையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது கலை இரவு. மண்ணின் கலைகளை ரசிக்கக் கற்றுக்கொடுத்தது. மக்கள் பாடல்களை கரிசல் குயில் கிருஷ்ணசாமி அண்ணனின் குரலில் இரவெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பாரதி கிருஷ்ணகுமார் போன்ற எத்தனையோ சிறந்த உரை வீச்சாளர்களின் பேச்சுக்களைக் கேட்டு என் பள்ளிப்பருவத்தில் கண்ணீர் விட்டிருக்கிறேன். இந்த இரவுகள் தான் என்னை ஆளாக்கின. சமூகத்தை நேசிக்க வைத்தன. என் சுயநலத்தைப் பொசுக்கின. என் வாசிப்பை அதிகப்படுத்தின. அரசியலில் ஆர்வம் கொள்ள வைத்தன. மக்களுக்காய் யோசிக்க, ஒரு சொட்டாவது விழிநீரை வெளியேற்ற வைத்தன, என் கலையை வளர்த்தன. நானும் ஓரிரவில் இரவு 11 மணி வாக்கில் முதன் முதலில் நாகை அருகே திருக்குவளையில் நடந்த கலைஇரவில் மேடையேறிப் பாடினேன். அன்றைக்குக் கிடைத்த மகிழ்ச்சி என் வாழ்நாளில் இனி கிட்டுமா என்று தெரியவில்லை. அன்றையிலிருந்து நிறைய மேடைகள், எத்தனையோ நகரங்களில் கிராமங்களில் என்று இயக்கப்பாடல்களைப் பாடியாகி விட்ட்து. 

இன்று ஒரு பத்திரிகையாளராய் நானிருக்கிறேன். எழுதுகையில் இரவுகளில் எழுதினாலும் அது என்றைக்கு யாரை எப்போது எப்படி சென்றடைகிறது என்பது நமக்குத் தெரியாது. இதைவிடவும் எனக்கு ஒரு கலைஞராய் கலை இரவில் மக்களிடையே பாடுவது அதிக மனநிறைவையும், மகிழ்வையும் அளித்தது. இந்த இரவு வீணாகவில்லை. உருப்படியாய் எதோ செய்கிறோம் என்கிற நிறைவை அளித்தது. 

ஒவ்வொரு கலை இரவை முடித்துவிட்டு வந்தபின்னும், பல இரவுகள் நானும் என் பெற்றோரும் அதுகுறித்து சிலாகித்துப் பேசியவண்ணம் இருப்பதெல்லாம் இப்போதும் மனக்கண்ணில் நிழலாடுகின்றன. என் தந்தை தமுஎகசவின் மாவட்டச் செயலாளராய் இருந்தார். அதனால் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார். அவரும் ஒரு ராக்கோழி என்பதால் எல்லா வேலைகளையும் இரவுகளில் தான் செய்வார். அம்மா “அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு” என்று என்னை கேலி பேசுவார். 

என் படிப்பை முடித்துவிட்டு பணிநிமித்தம் நான் செனைக்கு வந்தபோது சென்னை சட்டென்று இரவு 10 மணிக்கெல்லாம் உறங்கும் நகரமாகிவிடுவதைப் பார்க்க வியப்பாய் இருந்தது. எங்கள் ஊரில் திரைப்படத்திற்குச் செல்வதென்றால் பெரும்பாலும் இரண்டாவது காட்சிக்குத்தான் செல்வோம் இங்கே 10 மணிக்கு நகரம் உறங்கிவிடுவதைப் பார்க்க ஆச்சர்யமாய் இருந்தது. ’தூங்கா நகரம்’ என்ற பெயருக்காகவே மதுரையை மிகவும் பிடிக்கும். 

ஒரு நேரத்தில் என் வேலை போய், வீட்டிற்கு வாடகை கொடுக்க இயலாத சூழலில் வீட்டை காலி செய்து பொருட்களையெல்லாம் நாகையில் உள்ள பெற்றோர் வீட்டில் கொண்டு வைத்துவிட்டு நான் மட்டும் தோழர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் ஒரு வீடு. ஏராளமான நண்பர்களைப் பெற்றிருக்கும் நான் ஓரிடத்தில் தங்க இயலாமல் போகும்போது இன்னொரு தோழியோ தோழனோ கைகொடுத்த நிலைமை இருந்தது. தோழர்கள் ஓவியா, நீலகண்டன், அமுதா, ரேவதி, நீதிராஜன், ஜாஃபர், நா.வே.அருள், அ.குமரேசன், லட்சுமி, கலைமுகில், ராஜன்குறை, மோனிகா, மலர்விழி, மல்லிகா, கல்பனா, பாரதி புத்தகாலயம் சிராஜுதீன், அ.மங்கை போன்ற பலருடைய வீடுகளிலும், தமுஎகசவின் மாநிலக்குழு அலுவலகத்திலும் குறைந்தபட்சம் ஒரு இரவாவது தங்கியிருக்கிறேன். 

மாலை அரை அலுவலகம், அதன்பின்னர் கூட்டங்கள் அல்லது தோழர்களை சந்தித்தல் என்று இரவு வரை தாக்குபிடித்தாலும் இரவு 9 மணிக்கு எங்கு போவது என்ற கேள்வி எழும். யார் அந்த நேரத்தில் ஊரில் அல்லது வீட்டில் இருக்கிறார்கள் என்று கைபேசியில் பேசிவிட்டு அங்கே போய்விடுவது வழக்கம். எனக்கென்று ஒரு டி.வி.எஸ். சாம்ப் இருக்கிறது. அதனால் எத்தனை மணியானாலும் இரவில் எங்கு வேண்டுமானாலும் போய்விடும் வசதி இருந்த்து. “டான் குயிக்ஸாட்டின் குதிரை போன்றது உங்கள் வாகனம். டான் குயிக்ஸாட் தனது குதிரை இரவு எங்கே களைத்து நிற்கிறதோ அங்கே தங்கி விடுவான். அது போல்வே இரவு இறுதியாக உங்கள் வண்டி நிற்கிறதோ அங்கே தங்கி விடுகிறீர்கள்” என்று ஒரு முறை கவிஞர் லீனா மணிமேகலை என்னிடம் கூறியதை அவ்வபோது நினைத்துக்கொள்வேன்.. 

தோழர்கள் நீலகண்டன், அமுதா, மலர்விழி – இவர்களோடுதான் அதிக இரவுகளை கழித்திருக்கிறேன் அந்த காலகட்டத்தில். அப்போது மலர்விழிக்கு சொந்தமான அச்சகம் ஒன்றில் நீண்டநாள் தங்கியிருந்தேன். மறக்க முடியாத இரவுகள் அவை. 

நான் நேசிக்கும் இரவுகள் எனக்கு பெரும் சோதனையாய் அமைந்த காலமும் வந்தது. அப்போதுதான் ஈழத்தின் பேரவலமும், நெஞ்சில் நீங்காத காயத்தை உண்டாக்கிய இறுதிப் போரின் நேரம். அந்த செய்திகளும் காட்சிகளும் கண்டு விம்மி வெடிக்கும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அந்த அச்சகத்தில் தான் நான் பல இரவுகளை மலர்விழியோடு கழித்தேன். பிரபாகரனின் உடல் என்ற ஒன்றை தொலைக்காட்சியில் கண்டபோது என் சிறுவயதிலிருந்து நேசித்த ஒரு பிம்பம் இப்போதில்லை என்கிற உண்மையை நம்ப மறுத்தது மனம். இரவுகளில் இணையத்தில் மூழ்கி பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று குழம்பித் தவித்து ஒவ்வொரு புகைப்படமும் வெளியாக வெளியாக உறைந்து போனேன். புலிகள் மேலிருந்த விமர்சனமெல்லாம் மறந்து போய் பித்து மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் அந்த சமயத்தில். 

அன்றாடம் இரவுகளில் இரண்டு மூன்று மணி வரை நானும் மலர்விழியும் அமர்ந்து இணையத்தில் ஈழம் குறித்த செய்திகளை வாசிப்பது படங்களை சேகரிப்பது என்பதை வாடிக்கையாக வைத்திருந்தோம். கோடரிகொண்டு பிளக்கப்பட்ட பிரபாகரனின் கபாலமும், எண்ணற்ற மக்கள கொத்து கொத்தாய் மடிந்த அவலமும் உறங்கவிடாமல் என் இரவுகளை இம்சித்தன. நான் இரவுகளில் வேலை செய்பவளாதலால் என்னால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் போனது. இணையத்தில் கிடைக்கப்பெறும் அத்தனை காணொளிகளையும் படங்களையும் பார்த்துப் பார்த்து குழம்பி பித்து நிலையில் இருந்தேன் எனலாம். இரவுகள் எல்லாமே இணையத்தில் வீணாகின. ஒரு கட்டத்தில் இவற்றில் எந்த புகைப்படத்தையோ காணொளியையோ இனி பார்க்கக்கூடாது என்று முடிவு செய்து தவிர்க்கத் தொடங்கினேன். இது என் இரவுகளை மீண்டும் எனதாக்கிக் கொள்ளும் ஒரு யுக்தி. மீளாத் துயரிலிருந்து என்னை நானே மீட்டெடுக்க நிர்பந்தித்துக்கொண்டேன். இன்று வரை ஈழம் என்ற பெயரில் வரும் எந்த காணொளியையும் படத்தையும் பார்ப்பதேயில்லை நான். இந்த முயற்சி ஓரளவிற்கு கைகொடுத்தது. மீண்டும் என் இரவுகள் எனக்குச் சொந்தமாயின. மீண்டும் இரவுகளில் வேலை செய்யத் தொடங்கினேன். அதன்பின் தான் அதிகமாக எழுத்த் தொடங்கினேன் என்று நினைக்கிறேன். 

ஐஸ்ஹவுஸ் மசூதி போகும் வழியில் ராயப்பேட்டையில் இருந்தது நாங்கள் இருந்த அச்சகத்தின் அலுவலகம். ஒரு கட்டிடத்தின் சின்ன சந்திற்குள் நுழைந்து உள்ளே வந்தால் அச்சகம். அந்த சின்ன சந்தில் இரவில் மட்டும் படுக்க வரும் இரண்டு வயதான் பாட்டிகள் இருந்தார்கள். நான் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தாண்டித்தான் அச்சகத்திற்குள் வருவேன். ஒவ்வொரு முறையும் இருட்டில் அவர்களை மிதித்து விடக்கூடாதே என்று ஜாக்கிரதையாக வருவேன். சிலசமயம் மிதித்துவிடுவதும் உண்டு. அந்த பாட்டிகள் எங்களுக்கு காவல் போலிருந்தார்கள். அவர்களைத் தாண்டித்தான் யாராயிருந்தாலும் உள்ளே வரவேண்டும். ஒரு நாள் விசாரித்தபோது ஒரு பாட்டி சொன்னார் “பகலில் எங்காவது போயிடுவேன். நாலு காசு வேணும்ல சாப்பிட.. நைட்டு எங்கே போறது. தூங்கணுமே. அதான் இந்த சந்துக்கு வந்து படுத்துடுவேன்.” என்றது பாட்டி. அவருடைய மகனும் மகளும் இதே ஊரில் இருப்பதாகவும் ஆனால் இவரை கைவிட்டுவிட்டதாகவும் சொன்னபோது வேதனை அதிகமானது. இன்னொரு பாட்டிக்கும் கிட்டத்தட்ட இதே கதைதான். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தார்கள். இந்த தள்ளாத வயதில் அந்தப் பாட்டிகளின் நடைபாதை வாழ்க்கை துயரமானது. 

ஒரு இரவு நான் அலுவலகத்திலிருந்து என் வண்டியில் வந்துகொண்டிருந்தேன். பீட்டர்ஸ் சாலையோர நடைபாதையில் புதிதாய் பளீர் விளக்கொளியில் ஒரு ஷாமியானா பந்தல் போடப்பட்டு கூட்டமாக இருந்தது. சரியாய் கவனிக்காமல் வந்து அச்சகத்தில் புகுந்தேன். திடீரென்று உறைத்தது. இரண்டு நாளைக்கு முன்புதான் நான் வழக்கம்போல இரவு வரும்போது பாட்டி முனகிக்கொண்டிருந்தது. ”வயிறை வலிக்குது” என்றது. மறுநாள் காலையில் பாட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இரண்டு நாளாயிற்று..அவசரமாய் வெளியே வந்தேன். விளக்கு வெளிச்சத்தை நோக்கி நடந்தேன். நடைபாதையிலேயே ஷாமியானா போடப்பட்டு, பளீர் விளக்கொளியில் பாட்டி சவப்பெட்டிக்குள் கிடந்ததைப் பார்த்தேன். இன்னொரு பாட்டி என்னைக் கணடதும் ஓடி வந்து கண்ணீர் விட்டது. நான் ஒரு வார்த்தையும் பேசாமல் அச்சகத்தில் நுழைந்தேன். நடைபாதையில் வாழ்ந்து நடைபாதையிலேயே மறுநாள்  பாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட இருக்கிறது. தாங்க இயலாமல் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினேன். மலர்விழிக்கு கைபேசியில் அழைத்து தகவல் சொல்ல முடியாமல் விம்ம, அவள் உடனே கிளம்பி வந்தாள். அதற்கு முன் நீலகண்டனும், அமுதாவும் வந்து நின்றார்கள். பாட்டியின் உடல் இருக்கும் இட்த்திற்குப் போவோம் என்றார்கள். எனக்கென்னவோ அங்கு போகவேண்டுமென்று தோன்றவில்லை. போகவும் இல்லை. பாட்டியின் சடலம் நடைபாதையில் அன்று இன்னொரு பாட்டி இன்னும் சிலரின் துணையுடனும் இரவு முழுதும் இருந்த்து. அந்த இரவு முழுதும் சவப்பெட்டிக்குள் கிடந்த பாட்டியைப் போலவே நானும் கிடந்தேன் அச்சகத்தினுள். 

நமக்காவது அச்சகம் இருக்கிறது. நண்பர்கள் இருக்கிறார்கள். நடைபாதைவாசிகளுக்கு யாரிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ளும் எனக்கு பாட்டியின் உடலோடு இரவைக் கழித்து இறுதிச்சடங்கை முன்னின்று நடத்திய இன்னொரு பாட்டியின் உருவம் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறது. 

 நட்சத்திரங்கள் பகலில் விழிகளுக்குப் புலப்படுவதில்லை. அவை மனிதர்களுக்குக் காட்சி தர தேவைப்படுவதும் ஒரு இரவுதானே?

 இரவைக் கொண்டாடுவோம்! 

(புத்தகச்சந்தையை ஒட்டி 7.1.2011 அன்று மாலை வெளியிடப்பட்ட “இரவு” நூலிற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. கவிஞர் மதுமிதா தொகுத்த இந்நூலில் 36 எழுத்தாளர்கள் தங்களுடைய இரவு குறித்த கருத்துகள், மனப்பதிவுகள், அனுபவங்கள், கதை, கவிதை ஆகியவற்றை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்கள். சந்தியா பதிப்பம் இதனை வெளியிட்டுள்ளது)

கவின் மலரின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன் மீள்பதிவிடுகிறோம்
...மேலும்

Feb 27, 2014

பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா? - ப்ரேமா ரேவதி


தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (ஓ.எம்.ஆர்.) 200 அடிக்கு அருகில் ஒரு புதரில் பிணமாகக் கிடந்து, கடந்த ஞாயிறன்று செய்தியாகி, காவல் துறை துப்புத்துலக்கியதால் தமிழகத்தின் நிர்பயாவாக மாறிய இரவு இது.

பெரும்பாலும், ஊருக்கு வெளியே பிரமாண்டமான கட்டிடங்களில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களின் பாதுகாப்புகுறித்தும் அவற்றில் பணிபுரியும் பெண்களின் நிலைகுறித்தும் இரு தினங்களாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. ஏராளமான தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பங்கெடுத்த ஒரு போராட்டமும் நிகழ்ந்துள்ளது.

அச்சமூட்டும் இச்சம்பவத்தை ஒட்டி, பெண்களின் பாதுகாப்பு, அவர்கள் இரவு நேரத்தில் பணிபுரிவது சரியா தவறா, சீக்கிரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனப் பல அறிவுரைகளும் குவிகின்றன.

இரவு ஆண்களுக்கானதா?

உமா மகேஸ்வரியின் வன்முறை மரணம் அதிர்ந்து கொண்டிருக்கும் மனதில், இன்னுமொரு எண்ணம் தலையெடுக்கிறது. இரவுகள் ஆண்களுக்கானதா? பெண் களுக்கு இரவு என்பது வெறும் படுக்கையறைதானா? சமுதாயத்தில் சரிபாதிப் பெண்கள் கேட்பது, சமநீதி என்பது பெண்கள் இயக்கத்தின் பல பத்தாண்டுக் கோரிக்கை. பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, பாகு பாடுகளுக்கு எதிராக நியாயம் கேட்கும் பெண்களுக்கு, காலத்தின் மீதும் வாழும் வெளிமீதும் எந்த அதிகாரமும் இல்லையா? விண்ணில் பாதி மண்ணில் பாதி என்ற முழக்கங்களில் இனி பகலையும் இரவையும்கூடச் சேர்க்க வேண்டுமா?

இரவைக் கைக்கொள்ளும் பயணம்

எப்படியேனும் இந்த இரவைக் கைக்கொள்ள வேண்டும் என இன்று எழுந்த தவிப்பால், இரவு 11 மணிக்கு ஓ.எம்.ஆர். துவங்கும் மத்திய கைலாஷிலிருந்து கிளம்பினேன். அந்தப் பேருந்து நிலையத்தில் ஒரு வயதான தம்பதியைத் தவிர, மற்றவர் எல்லாம் ஆண்கள். என்ன காரணத்தாலோ டைடல் பார்க் வளாகம் வரை தெரு விளக்குகள் எதுவும் எரியவில்லை. பறக்கும் ரயில் நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. இந்திரா நகர் ரயில் நிலையத்தின் வாசலில் ஒரு ரயில்வே காவலர் அமர்ந்திருந்தார். ரயில் நிலைய விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. ரயில் நிலையங்களுக்கு இடையிலான சாலை இருண்டு கிடந்தது. அங்கு தனியாக நடந்து செல்ல வேண்டியிருந்தால் அச்சமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. திருவான்மியூர் ரயில் நிலைய வாசலிலும் ஆண்கள்தான் இருந்தனர். இன்னமும் நள்ளிரவுகூட ஆகவில்லை என்பது நினைவுக்கு வந்தது. சிக்னலில் கூட இருந்த வாகனங்களில் ஆண்கள் இருந்தனர்.

சாலை வெறிச்சோடிப் போகத் தொடங்கியிருந்தது. காவல் துறையின் ரோந்து வாகனம் ஒன்று கடந்து சென்றது. மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகமான அசெண்டாஸ் பல்லாயிரம் விளக்குகளால் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அதன் வாசலுக்கு வெளிப் பக்கம் வெறிச்சோடிக்கிடந்தது. எதிர்ப்புறம் இருந்த ஒரு ரோட்டுக் கடையில் பத்து இருபது ஆண்கள் உணவருந்திக்கொண்டிருந்தார்கள். பேருந்து நிறுத்தத் திலும் ஒரு சிறு கூட்டம் இருந்தது. அருகில் சென்றபோது, அதில் இரு பெண்கள் நின்றிருப்பது தெரிந்தது.

மீண்டும் ஓ.எம்.ஆரில் நுழைந்து ஆள்நடமாட்டம் குறையத் தொடங்கிய பகுதிகளில் பயணித்தபோது, ஓர் இளம் பெண் ஸ்கூட்டரில் எதிரில் சென்றார். இடையே எஸ்.ஆர்.பி. டூல்ஸ் அருகே கட்டிடத் தொழிலாளர்கள்போல் காட்சியளித்த வேற்று மாநிலத்தவர் பத்துப் பேரைக் காவலர்கள் விசாரித்துக்கொண்டிருந்தார்கள். அச்சுறுத்தும் பேரழகோடு இரவு கவிந்துகிடந்தது. ஆண்கள், பெரும்பாலும் இளைஞர்கள் தேநீர்க் கடைகளில், உணவகங்களில், சாலையோரங்களில் எனத் தென்பட்டுக்கொண்டே இருந்தார்கள். பெண்களைத் தேடித்தான் காண வேண்டியிருந்தது. அப்போது பின்னாலிருந்து சீரான வேகத்தில் ஒரு ஸ்கூட்டர் எங்களைத் தாண்டிச் சென்றது. கருப்புக் கோட்டு அணிந்த ஓர் இளம்பெண் அந்த வண்டியை ஓட்டிச் சென்றார். காற்றைக் கிழித்துச் சென்ற அவரின் வேகமும் அதில் தெரிந்த தன்னம்பிக்கையும் இரவுக் காற்றில் வீசி நின்றது.

பாதுகாக்க வேண்டிய பொருளா?

இன்னும் சற்று தூரம் அந்தத் தகவல் நெடுஞ்சாலையில் சென்றபோது, பல வாடகை கார்களில் பெண்களும் ஆண்களும் வீடு திரும்பிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு சில கார்களில் சீருடை அணிந்த பாதுகாவலர்கள் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

பாதுகாப்புகள் ஆசுவாசப்படுத்துகின்றனதான். ஆனால், பாதுகாக்கப்பட வேண்டிய பொருளாகப் பெண்கள் ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும், சிறு வயதில் பாடப் புத்தகத்தில் படித்த காந்தியின் சுதந்திரம் பற்றிய கூற்று நனவாவதற்கு? இப்போதெல்லாம் யாரும் காந்தி சொன்னதுபோல்கூடச் சொல்வதில்லை. பாதுகாப்பாக இரு. வேலைக்குப் போ, ஆனால் சீக்கிரம் வந்துவிடு. என்ன உடை அணிகிறாய் என்பதில் கவனமாயிரு, யாரிடம் பேசுகிறாய் என்பதில் கவனமாயிரு என்பதே ஆண்களதும் பெண்களதும் அறிவுரைகளாக இருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவையும்கூட. ஆனால், நாட்டின் விடுதலைபற்றிக் கண்ட கனவுகளைக்கூட பெண்கள் தங்கள் தனிமனித சுதந்திரத்துக்கான கனவுகளாகக் கைக்கொள்ள முடிவதில்லை.

மிளிரும் நம்பிக்கைகள்

நீண்ட தூரம் சென்றபின் எதிரே ஒரு பெண், வண்டியில் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஆனால், இது ஸ்கூட்டர் இல்லை. அவர் ஒரு மங்கிய சேலை அணிந்து, ஒரு மூன்று சக்கர மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். எங்கள் அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் இருந்த பிளாஸ்டிக் கவர்களை எடுத்து வண்டியில் போட்டார். 55 வயதாகும் துர்கா, கண்ணகி நகரில் வசிப்பவராம். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு இரவும் 11 மணியிலிருந்து விடியற்காலை 4 மணிவரை அவர் இந்த வண்டியில் சென்று பிளாஸ்டிக் பொறுக்கிவருவதாகச் சொன்னார். இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை என்று சொன்னார். உமா மகேஸ்வரி மரணம்குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கவில்லை.

ஒரு மணி நேரப் பயணத்தை முடித்து வீடு திரும்பும் முன் அடையாறு பேருந்து நிலையம் அருகில் சாலையோரத் தேநீர் வண்டியில் தேநீர் அருந்த நின்றபோது, இன்னமும் இரண்டு பேரைச் சந்திக்க முடிந்தது. மஞ்சுளா, திலகா இருவரும் சாலைகளைத் துப்புரவு செய்துகொண்டிருந்தார்கள். நீல நிறச் சீருடைப் புடவையில் அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். மஞ்சுளாவின் வீடு கொருக்குப்பேட்டையில். திலகாவின் வீடு கண்ணகி நகரில். இரவு 8 மணிக்கு வேலைக்கு வரும் அவர்கள், அதிகாலை 4 மணிக்குப் பணி முடித்து வீடு திரும்புகின்றனர். இரண்டு ஆண்டுகளாக இந்தப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவருவதாகச் சொன்னார்கள்.

இரவை அணிந்து மிளிரும் நட்சத்திரங்களைப் போல அவர்களின் மேலாடை மேல் இருந்த பிரதிபலிக்கும் பட்டைகள் மிளிர்ந்தன. இந்த இரவின் தவிப்பில் ஒரு துளியையாவது கரைக்க முடிந்தது அவர்களின் நிமிர்ந்த நன்னடையிலும் நேர் கொண்ட பார்வையிலும் தெறித்த சிரிப்பிலும்.

- ப்ரேமா ரேவதி, எழுத்தாளர், தொடர்புக்கு: revathi.work@gmail.com

நன்றி - தி ஹிந்து
...மேலும்

Feb 26, 2014

உமா மகேஸ்வரி கொலை குறித்து : டிஜிபியிடம் அளிக்கப்பட்ட கடிதம்

உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக இன்று டிஜிபியிடம் செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் குழு அளித்த கடிதம்
-----------------------------------------------------------------

சிறுசேரி சிப்காட்டில் உள்ள டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த உமாமகேஸ்வரியின் துயர்நிறைந்த கொலை நடந்துள்ள இந்த சூழ்நிலையில் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள ஊடகவியலாளர்களும், வழக்கறிஞர்களும், மென்பொருள் பணியாளர்களும், பெண்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்களுமாகிய நாங்கள் பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்...

இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக காவல்துறை இந்த வழக்கை CB-CID விசாரணைக்கு மாற்றியிருப்பதை நாங்கள் வரவேற்கின்றோம். தமிழக அரசும், காவல்துறையும் இந்த வழக்கின் விசாரணையை வெளிப்படையாகவும், வழிமுறைகளை சரியாகவும் பின்பற்றி, பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையை உங்கள் முன் வைக்கின்றோம். விரைவான காவல்துறை, நீதிமன்ற விசாரணையை வரவேற்கும் அதே நேரத்தில் குடிமக்களின் அடிப்படை உரிமையான, நேர்மையான விசாரணை வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும். 

இந்த வழக்கில் பெண்ணை காணவில்லை என்ற புகார் பிப்ரவரி 14 ஆம் திகதியே கொடுக்கப்பட்டிருந்தாலும், புகாரின் முக்கியத்துவத்தை உணர்ந்து உள்ளூர் காவல்துறை அதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காதது போலவே தெரிகின்றது. அந்த பெண்ணின் உடலை கண்டு பிடித்த பின்னர் தான் விசாரணை சற்று வேகமாக செல்கின்றது, அதே போல அந்த பெண் பணிபுரிந்த டாட்டா கன்சல்டன்சி நிறுவனமும் சரி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமும் அந்த பெண்ணின் உடலைக்கண்டு பிடிக்கும் வரை எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை, அதே போல தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணைக் காணவில்லை என்று காவல்துறையில் அந்த பெண்ணின் அப்பா புகாரளித்த பின்னரும் அவர்கள் எந்த வினையும் ஆற்றாமல் அமைதியாக இருந்தது போலவே தெரிகின்றது. 

உமா மகேஸ்வரியின் உடல் சிப்காட் வளாகத்தில் உள்ள மையச் சாலைக்கு மிக அருகிலுள்ள புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய அச்சத்தையும், அரசினால் தொழிற்சாலை வளர்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அரசினால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஒரு வளாகத்தில் உள்ள பாதுகாப்பு பற்றிய முக்கிய கேள்விகளையும் எழுப்புகின்றது..

பிப்ரவரி 24 அன்று இந்த வழக்கை சரியாக விசாரிக்கக் கோரியும்,பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் நடந்த ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் பெண்கள் குறிப்பாக நாவலூர், சிறுசேரியில் வீடு எடுத்து தங்கியிருக்கும் பெண்கள் சிப்காட்டிலிருந்து நாவலூர், சிறுசேரி செல்லும் சாலைகளும், சிப்காட்டின் உள்ளே உள்ள சாலைகளும் வெளிச்சமற்று இருட்டாகவே இருக்கின்றன, 

இதனால் அலுவலகத்தில் இருந்து இரவு நேரங்களில் வேலை முடித்துவிட்டு செல்லும் பெண்களும், ஆண்களும் பாதுகாப்பற்றே உணர்கின்றார்கள் என கூறியது இங்கே
குறிப்பிடத்தக்கது. சிப்காட் நிர்வாகம் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு வளாகத்தினுள்ளும், மற்ற பகுதிகளுக்கு செல்லும் சாலைகளிலும் போதிய வெளிச்சம் ஏற்படுத்தித் தரவேண்டும். அதேபோல காவல் துறையும் இந்த சாலைகளில் போதிய வெளிச்சம் உள்ளதா என்றும், தேவையான இடங்களில் காவல்துறை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து உறுதியளிக்க வேண்டுகின்றோம். இந்த பணிகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலவரம்பிற்குள் நிறைவேற்றப் படவேண்டும்.

தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு மிகவும் உதவிகரமான அரசாக உள்ளது, அதே போல வரி செலுத்தும் குடிமக்களாகிய நாங்கள் தகவல் தொழில் நுட்பதுறை நிறுவனங்கள் எல்லாம் அதிக
சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று கோருகின்றோம். இந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பல்வேறு சமூகநல செயல்திட்டங்கள் நடந்து வருவதை எங்களுக்கு தெரிந்த போதிலும், பணியிடப்பாதுகாப்பு தொடர்பாக இன்னும் அதிக செயல்பாட்டை நிறுவனங்களிடமும், அது நடைமுறைப் படுத்தப்படுகின்றதா என்பதை அரசும் உறுதிப் படுத்தவேண்டும் என்று கோருகின்றோம். 
பணியிடம் என்பது வேலை பார்க்கும் அலுவலகத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை, அங்கிருந்து அவர்கள் வீட்டிற்கு செல்லும் பாதைகளும் அதில் அடங்கும் என்பதையும் இங்கே தெளிவுபடுத்த விரும்புகின்றோம்...
இந்த நேரத்தில் பின்வரும் கோரிக்கைகளை நாங்கள் வைக்கின்றோம்:
அ. அலுவலக வாகனங்கள் மைய, போதிய வெளிச்சமுள்ள சாலைகளில் மட்டுமே செல்ல வேண்டும், இதை தவிர்த்து வேறு ஆள் நடமாட்டம் இல்லாத,தனியான சாலைகளில் செல்வதில்லை என்பதை அலுவலகங்கள் உறுதிப் படுத்தவேண்டும். இந்த வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சில வழிமுறைகளையும் அலுவலகங்கள் அமல் படுத்தவேண்டும்.பணியாளர் பாதுகாப்பிற்கு ஏதேனும் நடந்தால் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என அரசு அலுவலகங்களுக்கும், வாகன ஏற்பாட்டாளர்களுக்கும் உரிய அறிவிப்பு கொடுக்கவேண்டும்.

ஆ. எல்லா தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப வளாகங்கள், வளாகங்களுக்கு உள்ளும் அரசு போக்குவரத்து கண்டிப்பாக இருக்கும்படி செய்யவேண்டும். இந்த பேருந்துகள் சரியான கால இடைவெளியில் இயக்கப்படவேண்டும், பேருந்து நிறுத்தங்களும் சரியான இடைவெளிகளில் இருக்கவேண்டும்.தொடர்ச்சியான, நம்பிக்கையான அரசு போக்குவரத்தே சாலைப்பாதுகாப்பின் அடிப்படையாகும்.மேலும் அரசு போக்குவரத்தில் பணியாற்றுபவர்கள் மக்களுக்கும், அரசிற்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் உள்ளதால், போக்குவரத்து பாதுகாப்பான ஒன்றாக இருக்கும்.
இறுதியாக போக்குவரத்து தொடர்பாக இன்னொன்றையும் அலுவலகங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும், பெரும்பாலான ஊழியர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்கள் வீட்டிற்கு செல்ல ஒரு மணியிலிருந்து, இரண்டு மணிநேரம் கூட ஆகின்றது, அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அவர்கள் எந்த நேரத்திற்கு வீட்டைச் சென்றடைகின்றார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். இதை மனதில் வைத்துக்கொண்டு உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பான பயண ஏற்பாடுகளை அலுகவலகங்கள் செய்யவேண்டும்.
சென்னை மாநகரகாவல்துறை ஆணையாளர் அவர்கள் பணியிடத்திலும், பொது இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக எல்லா மக்களும் கலந்துகொள்ளும் வகையில் ஒரு சந்திப்பு வைக்க வேண்டுமென்றும், அதில் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களிலிருந்தும், அந்த அலுவலக நிர்வாகத்திலிருந்தும், பெண்களை அதிக எண்ணிக்கையில் பணிக்கமர்த்தியுள்ள பல்வேறு சிறப்புபொருளாதார மண்டலங்களிலிருந்தும், பெண்கள் அமைப்புகள், சமூக உரிமை அமைப்புகளிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்து அவர்களது பொதுவான பிரச்சனைகள் தொடர்பாகவும், இந்த நகரத்தை எப்படி பெண்களுக்கும், ஆண்களுக்கும் பாதுகாப்பான ஒன்றாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனைகள் பெற்றால் அது சரியான வழி முறையாக இருக்கும். 

சம்பந்தப்பட்டவர்கள் இதிலுள்ள ஆலோசனைகளை சரியான முறையில் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.பெண்களின் பாதுகாப்பிற்காக நாம் எடுக்கும் எந்த நடவடிக்கையும் பெண்ணின் வேலை செய்யும் உரிமையையும், அவளது சுதந்திரத்தையும், எங்கும் செல்லும் உரிமையையும் மறுத்து விடக்கூடாது. அதேபோல பெண்கள் வெளியில் செல்ல அதிககட்டுப்பாடுகள் விதிப்பதும், அவர்களது வாழ்க்கை முறையை மாற்றுவதும் நடந்து விடக்கூடாது.இதற்கு பதிலாக பொறுப்புணர்வுடன் கூடிய பெண்களுக்கும், ஆண்களுக்குமான பாதுகாப்பையே நாங்கள் கோருகின்றோம்.

**

V.Geetha, Writer
Oviya, Women Rights Activists
A. Marx, Civil rights activist
Ira.Jawahar, Journalist
Ambai, Writer
Arul Mozhi, Advocate
Gnani Sankaran, journalist
Prof. Saraswathi, Human Rights Activist
A.Mangai, Writer/Theatre Activist
Revathy, Film Maker/Writer
Kavin Malar, Writer/Journalist
Kavitha Muralidharan, Journalist
Rajini, Advocate
Malathi Mythri, Writer
kalpana karunakaran, Activist
Kutty Revathy, Writer
Uma Sakthi, Writer/Journalist
Ramya kannan, Journalist
Manoharan, Advocate
Suganthi, Journalist
Sugitha, Journalist
Nalini Rajan, Academic
Geetha Narayanan, Development Professional
Sreedevi Arun, Journalist
Vani Doraisamy, Journalist
Priyamvadha, journalist
Chandra, Writer
Shreesha Reddy, Journalist
Jeny Dolly, Media person/Activist
Senthil, Co-ordinator-Save Tamils Movement
Parimala , Save Tamils Movement
Lakshmi Subramaniyan, Journalist
A.Kumaresan, Journalist
Geetha Ramaseshan, Advocate
Karhtiykeyan, Advocate
Parameswari, Writer
...மேலும்

Feb 25, 2014

10 வயது சிறுமிய வல்லுறவு குறித்து - நிர்மலா கொற்றவை


10 வயது சிறுமிய வல்லுறவுக்கு உட்படுத்தி அவளை நிர்வாணமாகத் தூக்கில் தொங்கவிட்டு கொன்ற மிகவும் கொடூரமான ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. இவளைப் போல் எத்தனையோக் குழந்தைகள் நிமிடத்திற்கு நிமிடம் வல்லுறவுக்குப் பலியாகிறார்கள்.

கால்களுக்கு இடையில் ரத்தம் வழியும் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது ஏற்படும் மனவேதனையை விவரிக்க சொற்கள் இல்லை. உண்மையில் என்னால் இன்னும் விளங்கிக்கொள்ள முடியாதிருப்பது இம்மனிதர்களின் மனநிலையே. இந்த ஆண்கள் அவ்வுடலில் தம் காம வேட்கைக்கான வடிகாலைத் எங்கணம் தேடுகிறார்கள் என்பது விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இதுபோன்ற பாலியல் கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 1 வயது 2 வயது… 60 வயது எதுவாகினும் சரி எமக்குத் தேவை பெண் உடல் என்று பாய்ந்து சிதைக்கும் இந்த ஆண் வர்க்கத்திற்கு அதன் கொடூரத்தை எப்படி உணரவைப்பது. காமம் சார்ந்து மட்டுமின்றி பழிவாங்க, சாதியப் புனிதம் காக்கவென்று எல்லாவற்றிற்கும் பெண் உடல் பலியாக்கப்படுகிறது. மேலும் எல்லா வல்லுறவுகளும் காம வேட்கை என்று மட்டும் சொல்லிவிட இயலாது இது அதிகாரம் சார்ந்ததாகவும் இருக்கிறது.

நாம் எவ்வளவுதான் எழுதிக் குவிப்பது அல்லது போராடுவது? இன்னும் எத்தனைப் பிஞ்சுக் குழந்தைகளை, பெண்களை பலி கொடுப்பது? எப்போது அரசு விழித்தெழும்? மௌனம் கலைக்கும்? கருணாநிதி தும்மினால் கூட அதற்கொரு மறுப்பறிக்கை விடுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை அறிக்கை ஏதேனும் விடுத்துள்ளாரா? 

அந்த ரத்தம் வழியும் தொடைகளை, தூக்கிலிருந்து இறக்கப்பட்ட அந்த பிஞ்சு உடலின் நிழற்படத்தை முதலமைச்சர் பார்த்திருக்க மாட்டாரா? தொழிற்துறையில் தமிநாடு முதல் மாநிலமாக வருமென்று சூளுரைக்கிறாரே, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழ்நாடு இப்படி கேவலப்பட்டுக் கிடக்கிறதே இதற்கு விடிவுகாலம் எப்போது? 

இந்நிலையை மாற்ற தமிழக அரசு செய்யவிருப்பது என்ன?

நான் முன்னரே பதிவு செய்தபடி - வல்லுறவுக் குற்றங்களை செய்த நபர்களிடம் உளப்பகுப்பாய்வுகள், சமூகவியல் ஆய்வுகள், உரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா? அதுவும் ஒரு குழந்தையின் உடலில் வலிந்து திணிக்கும் அந்த அரக்கத்தனம் அவர்களுக்கு எப்படி தோன்றுகிறது? என்ன மாதிரியான மனநிலை அவர்களை இந்த கொடூரத்தை செய்யத் தூண்டுகிறது? என்பதை ஆய்வு செய்ய அரசாங்கம் உடனடியாக வகை செய்ய வேண்டும். 

பெண்களுக்கான பாதுகாப்பை, வாழும் உரிமையை அரசு உறுதி செய்ய வேண்டும். பெண்கள் பயமின்றி நடமாடும் உரிமையை அரசு காக்க வேண்டும்.

இப்பதிவை எழுதும் நேரத்தில் இணையத்தில் வல்லுறவு குற்றவாளிகளிடம் செய்யப்பட்ட ஆய்வுகள் குறித்து தேடினேன். அரிதாக செய்யப்பட்டுள்ளன. (அவையும் முழுமையாக இல்லை) தமிழ்நாட்டில் அப்படி நடந்திருந்தால் பகிரவும்.

தமிழக அரசும், இந்திய அரசும் தேர்தலிலும், பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் மட்டுமே கவனம் செலுத்தாமல் பெண்கள் பிரச்சினைகளில் குறிப்பாக வல்லுறவு கொடூரத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் உடலை அநாகரீகமாகச் சித்தரிக்கும், பாலியல் போதையேற்றத்தை வணிக நோக்கோடு நிகழ்த்தும் ஊடகங்களை, திரைப்படங்களை தணிக்கை செய்யும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்த வேண்டும் வேண்டும். 

தமிழ்நாடு, இந்தியா பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் முன்னோடியாக இருக்கட்டும்.

நிர்மலா கொற்றவையின் முகநூலிலிருந்து நன்றியுடன் பகிர்கிறோம்
...மேலும்

Feb 24, 2014

மகேஸ்வரியின் கால்களையும் கைகளையும் இருவர் பிடிக்க மாறி மாறி வல்லுறவு புரிந்தோம்சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ஓய்வுப்பெற்ற ஓவிய ஆசிரியர். அவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 23). இவர், கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். 

கடந்த 13- திகதி அன்று இரவு காணாமல் போன இவர்,கடந்த 22-ந் திகதி சனிக்கிழமை சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உமாமகேஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து, அடிவயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.

இதனால் உமாமகேஸ்வரி கற்பழித்து,கழுத்தறுத்து, குத்தி கொலைச்செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தையே உலுக்கிய இக்கொலை சம்பவம் குறித்து டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யமூர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் தடவியியல் நிபுணர் குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரம் டி.எஸ்.பி. மோகன் மேற்பார்வையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில்,இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பொலிஸாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில்,சூப்பிரண்டுகள் நாகஜோதி, அன்பு, கூடுதல் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்காக சிறுசேரி வந்த அவர்கள் சம்பவ இடத்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தொழிற்நுட்ப பூங்காவை ஒட்டியுள்ள அந்த இடத்தினை சுற்றி நைலான் கயிறுகள் மூலம் கட்டி ஒவ்வொரு பகுதியாக அலசி ஆய்வுசெய்து தடயங்களை சேகரித்தனர். 

இந்த நிலையில், உமாமகேஸ்வரி பயன்படுத்திய செல்போன் எண்ணிலிருந்து முக்கிய தடயங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து,சிறுசேரி பகுதியில் கட்டிட வேலை செய்துவரும் வெளிமாநில வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிறுசேரி சுற்றுவட்டார பகுதியில் வேலைப்பார்த்து வரும் வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கொலையாளிகள் ரெயில் மூலம் வெளிமாநிலங்கள் தப்பிச்செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில்,இன்று ஏராளமான பொலிஸார் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.

பின்னர் தப்பி செல்ல முயன்ற கொலையாளிகள் மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ராம் மண்டல் (23), உத்தம்மண்டல் (23) ஆகிய இருவரும் நேற்று காலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் விசாரணை நடத்தினர். 

சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொடூர கொலையாளிகள் ராம் மண்டல், உத்தம்மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அவர்களுடைய கூட்டாளிகள் இருவரை தேடி வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளிகள் இருவரிடமும் நடத்திய விசாரணையில்,உமாமகேஸ்வரி கொடூரமாக கற்பழிக்கப்பட்டதும் தெரியவந்தது. கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளனர். வாக்குமூலம் விவரம் வருமாறு:

நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக சிறுசேரி சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தினமும் ரூ.500 கூலி கிடைக்கும். தினமும் இரவு வேலை முடிந்ததும் மது அருந்துவோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் போதையில் சிப்காட் வளாகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தோம்.

அப்போது நள்ளிரவு நேரம். உமா மகேஸ்வரி ரோட்டில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் நாங்கள் கிண்டல் செய்தோம். நாங்கள் இந்தி சினிமா பாட்டை பாடி அவரது கையைப்பிடித்து இழுத்தோம். 

இதில் கோபம் அடைந்த உமா மகேஸ்வரி,எங்களை செருப்பால் அடித்தார். இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்து கூட்டமாக கூடினார்கள். இதனால் நாங்கள் தப்பி ஓடிவிட்டோம்.

உமாமகேஸ்வரி, எங்களை தாக்கியது எங்களுக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. அவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று உறுதி எடுத்தோம். எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக13-திகதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார்.

போதை மயக்கத்தில் இருந்த நாங்கள், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளினோம். பின்னர் அவரது வாயை பொத்தி அலாக்காக குண்டுகட்டாக தூக்கினோம். அருகில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கிச்சென்றோம். அவரை பாலியல் பலாத்காரம் செய்தோம். அவர் கூச்சல்போட்டு கத்தி கலாட்டா செய்தார். இதனால் அவரது வாயை பொத்திக்கொண்டும், கை,கால்களை அமுக்கி பிடித்துக்கொண்டும் உல்லாசம் அனுபவித்தோம்.

எங்கள் காம இச்சை தணிந்தபோது, உமா மகேஸ்வரி மயக்கமானார். அடுத்து அவரை அப்படியே விட்டுவிட்டு போவதா, அல்லது கொலை செய்வதா என்று யோசித்தபடி இருந்தோம். இதற்குள் உமா மகேஸ்வரி மயக்கம் தெளிந்து கூச்சல் போட்டார். எங்களது முகத்தில் எச்சில் துப்பினார்.

அவரை உயிரோடு விட்டால் எங்களை பொலிஸாரிடம் சிக்கவைத்துவிடுவார் என்று பயந்தோம். இதனால் நாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது அடிவயிற்றில் குத்தினோம். அவரது உயிர் போகவில்லை. இதனால் கழுத்தை அறுத்தோம். பின்னர் உமா மகேஸ்வரியின் உடலை அங்கே போட்டுவிட்டு, தப்பிவிட்டோம்.

நாங்கள் இருவரும் கல்பாக்கத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தோம். பத்திரிகைகளில் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி எதுவும் வரவில்லை. எங்களது கூட்டாளிகள் மற்ற இருவரும் தனியாக சென்றுவிட்டனர். கடந்த 2 நாளுக்கு முன்பு பத்திரிகை செய்தியை தமிழ் தெரிந்தவர்கள் மூலம் படித்தபோது உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி வந்தது.

இருந்தாலும், கொலையாளிகள் யார் என்பது பற்றி பொலிஸார் கண்டுபிடிக்கவில்லை என்று செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதனால் தைரியமாக இருந்தோம். தப்பிச்செல்லும்போது உமா மகேஸ்வரியின் செல்போனையும்,வங்கி கிரெடிட் கார்டையும் எடுத்து வந்துவிட்டோம். நாங்கள் தங்கியிருக்கும் இடம் தெரிந்து பொலிஸார் எங்களை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நேற்று இரவு மேலும் ஒரு கொலையாளி கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது. அவரும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். இன்னொரு கொலையாளி ரயில் மூலம் மேற்கு வங்காள மாநிலத்துக்கு தப்பி சென்றுவிட்டான்.

அவனை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. தனிப்படை பொலிஸார் நேற்று விமானத்தில் கொல்கத்தா விரைந்தனர். அந்த கொலையாளி ரயிலை விட்டு இறங்கும்போது மடக்கிப்பிடிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கொலையாளிகள் உத்தம்மண்டல், ராம் மண்டல் இருவரும் நாளை (புதன்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அடையாள அணிவகுப்பு நடத்தவேண்டியதிருப்பதால் கொலையாளிகளின் புகைப்படத்தை வெளியிட சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் மறுத்துவிட்டனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது அவர்களை படம்பிடித்துக்கொள்ளுங்கள் என்று சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் கூறிவிட்டனர். மிகப்பெரிய சவாலாக இருந்த இந்த வழக்கில் கொலையாளிகளை பிடித்து பொலிஸார் சாதனை படைத்து விட்டனர்.

...மேலும்

Feb 23, 2014

குட்பை காம்ரேட்! - சி.மகேந்திரன்

பார்வதி கிருஷ்ணன்

அரசியல் வாழ்க்கை என்பதே அர்த்தமற்று, அவநம்பிக்கைளைத் தோற்றுவிக்கும் சூழ்நிலையில், ஒரு சிலரின் அரசியல் வாழ்க்கை எல்லையில்லா நம்பிக்கை ஊற்றுக்கண்களை மனதுக்குள் திறந்துவிடுகிறது. கோவையில் சில நாட்களுக்கு முன் தனது 94-வது வயதில் காலமான தோழர் பார்வதி கிருஷ்ணனின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்று.

பொதுவாழ்வில் எளிமை

டாக்டர் சுப்பராயன், ராதாபாய் தம்பதியின் நான்காவது மகளாக 1916 மார்ச் 15-ம் நாள் பிறந்தார் பார்வதி. சுப்பராயன் குமாரமங்கலம் ஜமீன்தார். சென்னை ராஜதானியின் பிரதம அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அன்று ராஜாஜியின் அமைச்சரவையிலும், நேருவின் அமைச்சரவையிலும் மந்திரியாக இருந்தவர். பின்னர், பம்பாய் மகாண ஆளுநராகவும் பணியாற்றினார். அதேபோல, ராதாபாயும் முதல் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். இந்திய ராணுவத்தில் தலைமைத் தளபதியாக இருந்த, ஜெனரல் பரமசிவம் குமாரமங்கலம், நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றிய கோபால் குமாரமங்கலம், இந்திரா காந்தியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம் ஆகியோர் இவரது உடன் பிறந்த சகோதரர்கள்.

இப்படிப்பட்ட செல்வாக்கான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் காலமெல்லாம் எளிமையின் வடிவமாகவே வாழ்ந்தார் பார்வதி.

சென்னை ராஜதானியின் பிரதம அமைச்சராக சுப்பராயன் இருந்தபோது, அரசுக்குச் சொந்தமான கார் சுப்பராயன் வசம் இருந்தது. ஆனால், அவருடைய செல்ல மகளான பார்வதியோ நடந்தும் ரிக்‌ஷாவிலும்தான் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். தந்தையின் இந்த எளிமையும் நேர்மையும் மகளிடமும் அப்படியே தொடர்ந்தன.

பார்வதி உயர் கல்விக்காக லண்டன் அனுப்பப்பட்டார். அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். அந்தக் காலத்தில் இவருடைய வகுப்புத் தோழியாக இருந்தவர்தான் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி. இருவரும் ஒன்றாக இணைந்து டென்னிஸ் ஆடிய நிகழ்வைப் பலமுறை குறிப்பிட்டுள்ளார் பார்வதி கிருஷ்ணன்.

உலக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியிருந்தது. லண்டனில் படித்த இந்திய மாணவர்கள் நேரடியாக அரசியலில் பங்குபெறத் தொடங்கினார்கள். தோழர் பார்வதியும் அவரது சகோதரரும் பாசிஸ எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெற்றார்கள். இந்தச் சூழ்நிலைதான், பார்வதியை ஒரு கம்யூனிஸ்ட் ஆக்கியது. லண்டன் மாணவர் அரசியலில் செயல்பட்டுவந்த, என்.கே.கிருஷ்ணனை அப்போதுதான் சந்தித்தார் பார்வதி. அன்றைய கேரளத்தின் கொச்சியில் அமைந்த நாடாவரம்பா என்னும் கிராமத்தில் பிறந்தவர் கிருஷ்ணன். எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் இன்டர்மீடியட்டில், சென்னை ராஜதானியிலேயே முதல் மதிப்பெண் பெற்று, ஐ.சி.எஸ். படிக்க லண்டனுக்கு வந்தவர். அவரைக் காதலித்து மணந்தார் பார்வதி.

ஆனால், திருமணம் படாடோபமாக அல்ல; மிக எளிமையாகவே நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர்களாக இருந்த அவர்களின் திருமணம் எப்படி நடந்தது என்பதற்கு என்.கே.கிருஷ்ணன் தனது சுயசரிதையில் குறிப்பிடும் வரிகள் உதாரணம்:

“பதிவுத் திருமணம் செய்துகொள்வது என்று முடிவுசெய்தோம். கையில் காசு இல்லை. தோழர்கள், அவரவர்கள் கையிலிருந்த சிறு தொகையைக் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் திரட்டினோம். திருமணப் பதிவுத்தொகை போக, கொஞ்சம் தொகை மிஞ்சியது. நாங்கள் ஐந்தாறு பேர் மட்டும்தான். நான் வழக்கமாகச் செல்லும் இரானியன் விடுதிக்குச் சென்றோம். அங்கு, டீ குடித்துச் சமோசா சாப்பிட்டோம். அதுதான் எங்கள் திருமண விருந்து. ஆனால் அன்று, நான் அருந்திய டீயின் சுவை, எந்த டீயிலும் எந்தக் காலத்திலும் எனக்குக் கிடைத்ததில்லை.''

சிறந்த நாடாளுமன்றவாதி

தன் வாழ்க்கையையே முழு நேர அரசிய லாக்கிக்கொண்ட பார்வதி கிருஷ்ணன், சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், தேர்ந்த தொழிற்சங்கவாதியாகவும் செயல்பட்டார். போராட்டங்களில் ஈடுபட்டுப் பலமுறை சிறை சென்றுள்ளார். 1949-ல் இவர் மீது கடுமையான குற்றம் சுமத்தப்பட்டு, கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கையில், ஒரு தாய் என்ற முறையில் இவர் அடைந்த சிரமங்கள் வார்த்தைகளால் விவரிக்கக் கூடியவை அல்ல.

முதல் நாடாளுமன்றத் தேர்தலில், அதாவது 1952-ல் நீலகிரி தொகுதியில் பார்வதி கிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. 1954-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் கோவை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தன் வாழ்க்கையை எப்போது ஒரு கம்யூனிஸ்டாக வாழ்வது என்று முடிவெடுத்தாரோ, அந்தக் கணத்திலிருந்து இறுதிமூச்சு வரை கம்யூனிஸ்ட்டாகவே வாழ்ந்தவர் பார்வதி கிருஷ்ணன். தான் ஒரு ஜமீன்தாரின் மகள் அல்லது செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவரின் வாரிசு என்ற எண்ணம் ஒருபோதும் அவரிடம் இருந்ததில்லை. அதனால்தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதாலேயே அவர் தேடப்படும் குற்றவாளியாக அலைந்தார். தலைமறைவு வாழ்க்கையைச் சுமந்தார். லண்டனில் பெற்ற கல்வி இருந்தபோதும் பசியையும் வறுமையையும் எதிர்கொண்டார்.

அரசியல் - வாரிசு அரசியலாகி, வியாபார அரசியலாக மாறிவிட்ட காலகட்டம் இது. அரசியலில் நேர்மை, கொள்கையில் உறுதி, அர்ப்பணிப்பு கொண்ட செயல்பாட்டில் போர்க்குணம் என்பவையெல்லாம் வெறும் வார்த்தைகளாகவே பார்க்கப்படும் சூழலில், கற்றுக்கொள்வதற்கு நிறையப் படிப்பினைகளைத் தந்துவிட்டே சென்றிருக்கிறார் தோழர் பார்வதி கிருஷ்ணன்.

சி.மகேந்திரன், மாநிலத் துணைச் செயலர், 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.​

நன்றி - தி ஹிந்து
...மேலும்

Feb 22, 2014

பிப்ரவரி 22: தில்லையாடி வள்ளியம்மை நினைவு தின நூற்றாண்டு இன்று - பூ.கொ.சரவணன்


தில்லையாடி வள்ளியம்மை எனும் போராட்ட குணம் கொண்ட வீரப்பெண் மறைந்த தினம் இன்று. தென் ஆப்ரிக்காவில் ஆட்சியை கைப்பற்றி குடியேறிய ஆங்கிலேயர்கள் அங்கே இருந்த எண்ணற்ற வளங்களை சுரண்டி அவற்றை தங்கள் நாட்டுக்கு பயன்படுத்தி கொண்டார்கள் . கரும்பு பண்ணைகள்,சுரங்கங்களில் வேலைப்பார்க்க கறுப்பினத்தவரை முதலில் வேலைக்கு வைத்தாலும் அவர்கள் பல சமயங்களில் முரண்டு பிடித்ததால் வேறு வாய்ப்புகளை நோக்கினார்கள் .அப்பொழுது தான் இந்தியர்கள் முதலிய காலனி நாட்டு மக்கள் கண்ணில் பட்டார்கள் அவர்களை அங்கே கொண்டு போய் கடுமையான வேலை வாங்கினார்கள் .

மிகவும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள் இந்தியர்கள் . அப்படி கூலித்தொழிலாளியாக முனுசாமி மங்கம்மாள் எனும் தில்லையாடியை சேர்ந்த தம்பதியினர் அங்கே போனார்கள் .தலைக்கு மூன்று பவுன் கட்ட வேண்டும்,மிகக்குறைந்த கூலி,பின்னியெடுக்கும் வேலை,ஓட்டுரிமை மறுப்பு,வெள்ளையர் பள்ளிகளில் இடம் மறுப்பு,தொடர்வண்டிகளில் வெள்ளையருடன் இணைந்து பயணிக்க அனுமதி மறுப்பு ;தனிப்பகுதிகளில் சுகாதார வசதியின்றி,ஒதுங்க ஒழுங்கான இடமின்றி  என எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தனர் .

அங்கே ஒரு வழக்குக்கு வாதாட சென்ற காந்தி இருபது வருடங்கள் அங்கேயே இருந்து போராடினார்.அவரின் நெடுங்கால அமைதி வழி போராட்டங்களுக்கு ஒரு வழி பிறப்பது போல 1912 இல் தலைவரி ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வந்தது ; ஓராண்டாகியும் அது அமல்படுத்தப்படாத நிலையில் சியர்லே எனும் நீதிபதி கிறிஸ்துவ முறைப்படி செய்துகொண்ட திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்,மற்ற திருமணங்கள் செல்லாது என்றார் .இதன் மூலம் தாய், தந்தை, பிள்ளைகள் என்கிற பந்தம் சட்டப்படி செல்லாமல் போனது . மேலும்,எல்லா இந்திய கூலிகளும் தங்களின் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது .இதை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

அந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு எண்ணற்ற மக்களுக்கு உதவும் பணியை பெருமையாக செய்து கொண்டிருந்தார் பதினைந்து வயது சிறுமி வள்ளியம்மை ;புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்க டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. அதுவரை பெண்களை,குழந்தைகளை போராட்டத்தில் அவ்வளவு முனைப்பாக ஈடுபடுத்தாத காந்தி முதல்முறையாக அதை செய்தார் ;வள்ளியம்மை போராட்டத்தில் கலந்து கொண்டார் .மூன்று  மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது ,அபராதம் செலுத்தினால் விடுதலை என்றார்கள் ,"அது சத்யாகிராகிக்கு இழுக்கு "என நெஞ்சுரத்தோடு மறுத்தார் அவர் .ஒரு ஆங்கிலேய அதிகாரி ,"சொந்தக்கொடி கூட இல்லாத நாட்டு கூலிகளுக்கு இவ்வளவு வெறியா ?"எனக்கேள்வி எழுப்பியதும் ,தன் முந்தானையை கிழித்து அந்த அதிகாரி முகத்தில் எறிந்து,"இதுதான் எங்கள் தேசியக்கொடி "என்றதும் வள்ளியம்மை தான் .சுகாதாரமற்ற சிறை வாழ்க்கை அவரின் உடல்நிலையை உருக்குலைத்தது ;கடுமையாக சிறுபெண் எனப்பாராமல் வேலை வாங்கினார்கள் .

பலவீனமடைந்த அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் ஆங்கிலேயர்கள் ;பத்து நாள் போராட்டத்துக்கு பிறகு இறந்து போனார் அந்த வீர மங்கை . காந்தி மனங்கலங்கினார் .இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில்  ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள் தில்லையாடி வள்ளியம்மை .அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’ என்று உணர்ச்சி மேலிட எழுதினார் .

அந்தப் போராட்டத்தின் காரணமாக இந்தியர்களின் மேல் விதிக்கப்பட்ட 3 பவுன் தலைவரி ரத்து செய்யப்பட்டது. எல்லாத் திருமணங்களும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன. வெள்ளை அதிகாரி ஒருவன் காந்தியை சுட துப்பாக்கியை நீட்டிய பொழுது,"என்னை முதலில் சுடு பார்க்கலாம்" என வள்ளியம்மை முன்னே போய் நின்றதை காந்தி எண்ணி எண்ணி மனம் விம்மினார் .ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பினார் காந்தி.தில்லையாடிக்கு பலகாலம்  கழித்து காந்தியடிகள் வந்த பொழுது அந்த மண்ணை அப்படியே கண்களில் ஒற்றிக்கொண்டு கண் கலங்கினார் ,வள்ளியம்மை எனும் மகத்தான மங்கையின் சொந்த மண்ணல்லவா அது ?இதே தினம் தில்லையாடி வள்ளியம்மை எனும் வீர மங்கை உயிர் நீத்தார் .அப்பொழுது அவருக்கு வயது 16 !! தில்லையாடி வள்ளியம்மை நினைவு தின நூற்றாண்டு இன்று!

நன்றி - விகடன்
...மேலும்

Feb 21, 2014

சிவபூசை என்ற பெயரில் மூன்று பெண்கள் மீது வல்லுறவுசிவ பூசை செய்வதாகக்கூறி மூன்று பெண்களை  பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி ஒருவரை  தம்பகல்லைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கணவனின் நோயைக் குணப்படுத்துமாறு  அவரின் மனைவி மந்திரவாதி ஒருவரின் உதவியை  நாடினார். மந்திரவாதியும் நோயாளியைக்  குணப்படுத்துவதாகக் கூறி தம்பகல்லை என்ற இடத்தில்  வீடொன்றிற்குள் பிரவேசித்தார்.

நோயாளியைக்  குணமாக்கும்  பூஜையை ஆரம்பிக்கும் முன் காணிக்கை செலுத்த வேண்டுமென்று கூறி  நோயாளியின் மனைவியை அறைக்குள் அழைத்துச் சென்று அவரை  பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளார். 

அத்துடன் மேலும் 15 வயது நிரம்பிய யுவதி மற்றும் கர்ப்பிணிப்பெண் ஆகிய இருவரையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். அதன் பின்னர் நோயாளியைக் குணமாக்கும் பூஜை  ஆரம்பிக்கப்பட்டது. 

அவ்வேளையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண் ஒருவர்  தம்பகல்லை பொலிஸ் நிலையத்தில் தமக்கேற்பட்ட நிலை குறித்து புகார் செய்துள்ளார். 

இப்புகாரையடுத்து விரைந்த பொலிஸார்  நோயாளியைக் குணமாக்கும் பூஜையில் ஈடுபட்டிருந்த  மந்திரவாதியைக் கைது செய்தனர். 

அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது  இம்மந்திரவாதியினால் மூன்று பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளது. அத்துடன் இம்மந்திரவாதி காவி உடை தரித்தவராக இருந்த போதிலும் பண்டாரவளை தெஹியத்தகண்டிய  கடுகண்ணாவை ஆகிய பொலிஸ் நிலையங்களினால் தேடப்பட்டு வந்தவரென்றும்  பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது. 

மேலும் இக்காவி உடை தரித்த மந்திரவாதியால்  கையடக்கத் தொலைபேசியை பரிசீலனை செய்த  பொலிஸார் அத்தொலைபேசியில் ஆபாசப்படங்கள் பல பதிவு செய்யப்பட்டிருப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நன்றி - வீரகேசரி
...மேலும்

Feb 20, 2014

மன்னித்துவிடுங்கள்- ராகுல் காந்தியிடம் நளினி முருகனின் மகள் அரித்ரா ஸ்ரீஹரன் கோரிக்கை


ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.

மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், குற்ற விசாரணை முறை சட்டம் 432–ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்நிலையில் மன்னித்துவிடுங்கள் என்று நளினி-முருகன் தம்பதியின் மகளான அரித்ரா ஸ்ரீஹகரன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

லண்டனியில் உள்ள அரித்ரா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ராகுல் காந்தியிடம் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது பெற்றோர்கள் மன்னிக்கப்பட போதுமான தகுதி கொண்டுள்ளனர். நீங்கள் விரும்பிய ஒருவரின் இழப்பு என்னால் புரிந்துக் கொள்ள முடியும்.

அத்தகைய தண்டனையால் நான் பாதிக்கப்பட்டேன். நான் எனது பெற்றோர்களுடன் இருக்க விரும்புகிறேன்.  எனது பெற்றோர்கள் உயிருடன் உள்ளனர்.  இருந்தும் அவர்களுடன் நான் இருந்ததில்லை.  அவர்கள் குற்றம் செய்து இருந்தாலும் அதற்கான தண்டனையை போதுமான அளவு அனுபவித்துவிட்டனர்.” என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழக முதல் - அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர்தான் இதனை சாதித்துள்ளார். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று என்னால் வெளிபடுத்த முடியவில்லை. எனது பெற்றோர்கள் கண்டிப்பாக ஒரு வெளியே வருவார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் நிரபராதிகள்” என்று அரித்ரா கூறியுள்ளார்.

...மேலும்

Feb 19, 2014

அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் - அனந்தி


வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது என அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார். 

வடமாகாண சபையின் ஆறாவது அமர்வில் அரச திணைக்களங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஸ்பிரேயோகம் போன்றவற்றை கண்டித்து பிரேரனையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் என்பன காணப்படுவதாக தெரியவந்துள்ளது. 

இவ்வாறான செயற்பாடுகளுக்கு மாகாண சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அத்துடன் கிளிநொச்சியில் இராணுவத்தினரால் பரமாரிக்கப்படும் விவாசய பண்ணைகளில் வேலை செய்யும் பெண்கள் சிலர் விரும்பபடாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். 

அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அந்த நடவடிக்கைகளுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே அவ் விவசாய பண்ணைகளை வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறேன் என தெரிவித்தார். 

அனந்தி சசிதரனின் பிரேரணையை வழிமொழிந்து அவைத் தலைவர் கருத்து தெரிவிக்கையில், 

வடக்கில் இவ்வாறன துஸ்பிரயோகங்கள் நடைபெறுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன. 

இவ்வாறான நடவடிக்கைகளை இந்த உயரிய சபை பார்த்து கொண்டு இருக்காது அதுக்கு நடவடிக்கைகள் எடுக்கும் என தெரிவித்தார். 

நன்றி - அத தெரண
...மேலும்

Feb 18, 2014

பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை! - உமா சக்தி


ஒரு பெண் வேலைக்குப் போவது அவளது பொருளாதாரச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, அவளுடைய சுயம் சார்ந்த தேவையும், அறிவுத் தேடலின் சாரமாகவும் தான். தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்ற ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். சுறுசுறுப்பும், ஆளுமையும், அறிவுத் திறனும் பெண்களை துறை சார்ந்த வல்லுனர்களாக எளிதில் முன்னேற்ற பாதைக்கு உயர்த்திச் செல்கிறது.

ஆனால் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டால் பெண்கள் என்ன என்ன பிரச்சனைகள் அனுபவிக்க வேண்டியுள்ளது? பார்வைகள், கேலிப் பேச்சுகள் இவற்றை எல்லாம் எளிதில் புறக்கணித்துவிடலாம். பொறாமைகள், வேலையில் கிடைக்கும் வெற்றியை வேறு விதமாக விமர்சிப்பார்கள். வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடு போக வேண்டுமானால் வீட்டில் பர்மிஷன் கேட்க வேண்டும். எங்கே திரும்பினாலும் தடைக்கற்கள். ஆனாலும் சளைத்தவளல்ல. நினைத்தவற்றை முடிக்கும் உறுதியும் தெளிவும் அவளிடம் மேலதிகமாகவே உள்ளது. ஒன்பது மணிக்குள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மெல்ல தளர்ந்து பெண்கள் வீடு திரும்பும் நேரம் வேலை முடியும் நேரமாக மாறிக் கொண்டிருக்கும் சமயங்களில் தான் அவளின் பாதுகாப்பு பிரச்னைகள் இப்படி கேள்விக்குரியதாகிவிடுகிறது.

பெண்ணை உடலாகவும் போகப் பொருளாக மட்டுமே நினைக்கும் வக்கிர மனம் படைத்த மனிதர்களுக்கு அவள் படித்தவளா வேலைக்குபோகிறவளா என்றெல்லாம் யோசிக்க எங்கே நேரம். பயன்படுத்தி தூக்கி எறிய நினைக்கும் கேடு கெட்ட ஜென்மங்கள் இருக்கும் பூமியில் தான் வாழ்கிறோம். எவ்வளவு பாதுகாப்பாற்ற நிலையில் ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து செல்கிறார்கள் என்று அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் அதற்கான முயற்சியோ அப்படி என்ன வேலைக்குப் போய்த் தான் ஆகணுமா…என்ற கேள்வியையும் தான் எதிர்க் கொள்ள வேண்டியுள்ளது..

நானே ஒரு பத்திரிகையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஷிப்ட் சிஸ்டம் மாற்றினார்கள். புற நகர்ப் பகுதியில் இருக்கும் என் வீட்டருகே அடிக்கடி பல குற்றங்கள் நிகழ்வதுண்டு. மதியம் இரண்டு மணிக்கு வேலைக்குச் சென்று இரவு பத்து மணிக்கு வீடு திரும்பும் பெண்ணை தெருவில் இருக்கும் நாய்கள் கூட குரைத்துத் தான் வரவேற்றன. சற்று வேலை நேரத்தை மாற்றித் தாருஙக்ள் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தும் முடியவில்லை. பெண்கள் பாதுகாப்பைப் பற்றி, அது இல்லாமல் கொடூரமாக மரணம் அடைந்தவர்களைப் பற்றி அதே பத்திரிகைகளில் கட்டுரை எழுதுகிறோம், ஆனால் வேலைக்கு வரும் பெண்களுக்கு குறைந்த பட்சம் வாகன ஏற்பாடாவது செய்து வீடு வரை விடமாட்டோம். உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்று கை கழுவி விட்டுப் போகும் மன நிலையில் நீங்கள் எழுதி என்ன, பத்திரிகை நடத்தி என்ன? மனம் வெறுத்துவிட்டது… சில கார்ப்பரேட் பத்திரிகைகள், ஐடி நிறுவனங்களின் காஸ்ட் கட்டிங் விஷயங்களைப் பார்த்து, பாதுகாப்பு போன்ற விஷயங்களை அலட்சியம் செய்கின்றன‌. உங்கள் அலுவலகத்தை மற்றொரு வீடாக நினைத்துத்தான் ஒவ்வொரு பெண்ணும் வேலைக்கு வருகிறாள். பணமோ பதவியோ அவை அடுத்த விஷயங்கள். பெண்களை எப்போது சக உயிராக மதித்து அவளுக்குத் தேவையான அனைத்தையும் முழுமையான மனப் பூர்வமாக எப்போது செய்கிறோமா அப்போது தான் நிர்ப்பயாக்களும் உமா மகேஸ்வரிகளும் வித்யாக்களும் மீண்டும் மீண்டும் சாக மாட்டார்கள்.

உமா சக்தியின் வலைதளம்
...மேலும்

Feb 17, 2014

ராஜினி, ஒரு மனித உரிமை போராளியின் மரணம்

 ராஜினி திராணகம

பிறப்பு: 23/02/1954  ----அழிப்பு: 21/09/1989

அந்தக் கோழைகள் பின்பக்கமாக நின்று கொண்டு அவரது பெயர் சொல்லி அழைத்தனர். அவர் சைக்கிளில் இருந்தபடியே திரும்பி அவர்களைப் பார்த்தார். அவரை ஒரு துப்பாக்கி கொலைவெறியோடு குறி பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் ஒரு மருத்துவராக, இயக்க ஆதரவாளராக காயம்பட்ட இயக்க உறுப்பினர்களிற்கு சிகிச்சை அளித்தவரை நோக்கி அவர்கள் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தார்கள். தனது வெற்றுக்கைகளினால் நெற்றியை மறைக்க முயன்றவரை அந்த மிருகங்கள் எதுவிதமான சலனமும் இன்றி கொன்றனர். போராட்டம் என்றால் கொலை செய்வது தான் என்பதை இயக்கத்தின் முதலாவது விதியாக வைத்திருப்பவர்களிற்கு ஒரு நிராதரவான பெண்ணை கொல்கிறோம் என்ற தயக்கம் ஏன் வரப்போகிறது.

ராஜினி தனது நண்பர் ஒருவருக்கு எழுதினார். "என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச்சமுகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு மகனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்". அவர் எழுதியபடி தான் நடந்தது. அவர் எழுதியதற்காகத் தான் கொன்றார்கள். உண்மையை எழுதியதற்காக கொன்றார்கள். அவர்களிற்கு உண்மைகள், விமர்சனங்கள் எப்பொழுதுமே பிடிப்பதில்லை என்பதனால் அவரைக் கொன்றார்கள். அவர் சூடுபட்டு கீழே விழுந்த பின்பும் பின்னந்தலையில் மறுபடி இருமுறை சுட்டார்கள். அவரும், அவரது விமர்சனங்களும் மறுபடி எழுந்து விடக்கூடாது என்பதற்காக மறுபடி அந்த பெண்ணை சுட்டார்கள்.
 ராஜினி திராணகம
இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்க புறப்பட்ட எமது சமுதாயம், அந்நிகழ்வுப்போக்கில் முழுச்சமுதாயத்தின் ஆத்ம சக்தியையும் வலுவிழக்கச் செய்யும் உள்ளார்ந்த பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டு திணறியது. துப்பாக்கிகளின் முன் மெளனிகளாக்கப்பட்ட மக்கள் கூட்டம் விடுதலை, போராட்டம், தியாகி, துரோகி என்னும் வெற்றுச்சொற்களின் மந்திரத்தில் கட்டுண்டு கிடக்கிறது. இக்காலகட்டத்தில் தான் மக்கள் மனம் திறந்து உறுதியுடனும் நேர்மையுடனும் உண்மைகளைத் தேடும் உந்துதலிற்கான இடைவெளியினை உருவாக்கும் சிறிய முயற்சியாகவே "முறிந்த பனை" என்னும் நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது என்ற ஆசிரியர்களின் முன்னுரைக்கு ஏற்ப தமிழ்மக்களின் துயரங்களையும், அவைகளிற்கு காரணமானவர்களையும் ராஜினியும், அவரது சக ஆசிரியர்களும் பதிவு செய்தனர்.

எழுபத்தேழு, எண்பத்துமூன்று தமிழ் இனப்படுகொலைகளின் சூத்திரதாரியான பயங்கரவாதி ஜெயவர்த்தனா, அவனின் அடியாட்களான சிறில் மத்தியு, அனுரா பஸ்தியான், காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி, பிரேமதாசா போன்றவர்களின் கொடுங்கோல்கள் புத்தகத்திலே விரிவாக பதியப்பட்டுள்ளன. "நாங்கள் இங்கு கோலிக்குண்டு விளையாட வரவில்லை" என்று ஒரு இந்திய ராணுவ தளபதி சொன்ன வார்த்தைகளின் மூலம் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்தவர்களின் அழிவுவேலைகளைகளையும், ராஜிவ் காந்தியின் ஆதிக்கவெறிக்கு பலியான மக்களின் மரணங்களையும் பதிவு செய்துள்ளனர்.

யாழ்,பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா புலிகளால் கொல்லப்பட்டமை, சுழிபுரத்தில் ஆறு இளைஞர்களை "புளோட்" இயக்கத்தினர் கொன்றத, பாரளுமன்ற உறுப்பினர்களான தருமலிங்கத்தையும், ஆலாலசுந்தரத்தையும் ரெலோவினர் கொன்றது, இந்திய ராணுவத்துடன் சேர்ந்து E.P.R.L.F செய்த அட்டூழியங்கள் என்று எல்லா இயக்கங்களின் வன்முறைகளையும், மக்கள் விரோத அரசியலையும் அவர்கள் விமர்சித்துள்ளனர். எல்லாவிதமான அடக்குமுறைகளையும் அவர்களது எழுத்து பதிவு செய்தது.

தவறுகளை சுட்டிக் காட்டியதற்காக அவர் கொல்லப்பட்டார். விடுதலைப் போராளிகள், இலட்சியவாதிகள் என்று தம்மைத் தாமே சொல்லிக் கொண்ட அந்த வீராதி வீரர்கள் அவரின் கொலைக்கு உரிமை கோரவில்லை. ஆதரவற்ற பெண்பிள்ளைகளிற்காக மருதனார்மடத்தில் "பூரணி" என்ற இல்லத்தை நடத்தி வந்தார் என்பதற்காக கொன்றோம் என்று சொல்ல முடியுமா? எரிந்து கொண்டிருந்த இலங்கை என்ற நாட்டில் இருந்து பலரும் வெளிநாடுகளிற்கு உயிர்தப்ப வெளியேறிக் கொண்டிருந்த போது இங்கிலாந்தில் மருத்துவராக தொழில் செய்து கொண்டிருந்த ராஜினி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உடற்கூற்றியல் துறைக்கு பேராசிரியர் தேவை என்பதனால் வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்தார் என்பதற்காக கொன்றோம் என்று சொல்ல முடியுமா?

தமிழ் மக்களின் விடுதலையை குத்தகைக்கு எடுத்தவர்களின் பத்திரிகை இரண்டு கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. வாஜ்பாஜ் மாதிரியே குஜராத் முஸ்லீம்களை படுகொலை செய்த நரேந்திரமோடியும் ஈழத்தமிழ்மக்களிற்காக பாடுபடுவார் என்று கங்காருக்களை விட வேகமாக தாவக்கூடிய வை.கோபாலசுவாமி தமிழ்மக்களிற்கு உறுதியளித்துள்ளார். சாதிவெறியனும், ஊழல் கொள்ளைக்காரனுமாகிய நடராசன் தான் ஈழமக்கள் பிரச்சனை குறித்து எழுதியுள்ள புத்தகத்தை உலகமொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து ஈழப்பிரச்சனையை சர்வதேசத்திற்கு எடுத்து செல்வதாக உறுதியளித்துள்ளார். ராஜினிக்கு எப்படி புத்தகம் எழுத வேண்டும் என்று தெரிந்திருக்கவில்லை.

நன்றி - ndpt
...மேலும்

Feb 16, 2014

பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது


பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சேலம் அருகே சதிராயம்பாளையத்தில் பத்து வயது சிறுமியை ஐவர் பலாத்காரம் செய்து, கொன்று அதன் பின் ஒரு சேலையை வைத்து வேப்ப மரம் ஒன்றில் தூக்கில் தொங்விடச் செய்தார்கள்.

ஒரு எளிய கூலித்தொழிலாளியின் அந்த வீட்டில் குடும்பமே இரண்டு கைத்தறிகள் ஒட்டித்தான் கஞ்சி குடித்து வந்தார்கள்.

பல மகான்கள் அவதரித்த இந்திய தேசம் காமுகர்களின் தேசமாக மாறி வருகிறதா?

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உள்ளூரைச் சேர்ந்த பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வாழப்பாடி அருகேயுள்ள சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது 10 வயது சிறுமி வீட்டுக்கு அருகேயுள்ள தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) இரவு தனது தாயார் மற்றும் சகோதரியுடன் உறங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியை சனிக்கிழமை காலை  காணவில்லை.

இதையடுத்து பெற்றோர், உறவினர்கள் சிறுமியைத் தேடி வந்த நிலையில் சிறுமியின் சடலம் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள  மலையடிவரத்தில் உள்ள ஆலமரத்தின் கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அடித்து துன்புறுத்தி கொலை செய்த மர்ம நபர்கள், அவரை மரக் கிளையில் தொங்க விட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, வாழப்பாடி ஏ.டி.எஸ்.பி. சுப்பிரமணியன், டி.எஸ்.பி. மாதவன் ஆகியோரை எஸ்.பி. சக்திவேல் நியமித்தார்.

 இதையடுத்து ஆய்வாளர்கள் சிவக்குமார், கந்தவேல், சித்ரா, முத்தமிழ்செல்வராசன், ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் தீவிர விசாரணை நடத்தி உள்ளூரைச் சேர்ந்த 5 நபர்களை கைது செய்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், சேலத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

சிறுமி கொலை வழக்கில், சென்றாயம்பாளையத்தைச் சேர்ந்த சி.பூபதி (வயது-31), ப.ஆனந்தபாபு (வயது-29), ஆ.ஆனந்தன் (வயது-21), து.பிரபாகரன் (வயது-26), து.பாலு (எ) பாலகிருஷ்ணன் (வயது-28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பூபதி, மாணவியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர். பா.ம.கவைச் சேர்ந்த இவர், இந்த கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினராகவும், தனியார் பேருந்து நடத்துநராகவும் உள்ளார். ஆனந்தபாபு லாரி ஓட்டுநராக உள்ளார். மற்றவர்கள் பக்கத்தில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வருகின்றனர்.

 இவர்கள் 5 பேரும் ஒன்றாக மது அருந்திவிட்டு அப்பகுதி பெண்களிடம் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஏழ்மையான நிலையில் உள்ள பரமசிவத்தின் வீட்டுக்கு கதவின்றி இருந்ததை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இவர்கள், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த சிறுமியின் வாயைப் பொத்தி அருகில் உள்ள மலைக் குன்றுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 அங்கு வைத்து பூபதி, ஆனந்தபாபு, ஆனந்தன் ஆகியோர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமியின் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. அதை அடைப்பதற்காக முகத்துக்கு பயன்படுத்தும் பௌடரைக் கொண்டு வெளியேறிய இரத்தத்தை தடுத்துள்ளனர்.

இதற்கிடையே சிறுமி உயிரிழந்து விட்டதால் அவரை ஒரு சேலையில் கட்டி சடலத்தை மரத்தில் கட்டி தொங்க விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குற்றங்களுக்கான ஆதாரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டதும் வழக்கை 6 மாதங்களுக்குள் முடித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுப்போம். இதற்கிடையே 5 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரைப்போம். அதேநேரம், இவர்களால் பாதிக்கப்பட்ட வேறு யாரேனும் இருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும் பொதுமக்களை கேட்டுக் கொண்டிருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்தார்.

இதற்கிடையில், சேலம் நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்ப்படுத்த போலீசார் கூட்டிவருவார்கள் அப்போது அவர்களை செருப்பு மற்றும் துடப்பம் போன்றவற்றால் அடித்து அவமானப்படுத்த சில மகளிர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் திட்டமிட்டு இருந்தன. இதை அறிந்த போலீசார், பலத்த பாதுகாப்புடன், நீதிமன்றத்துக்கு செல்லாமல் நேராக நடுவரின் வீட்டுக்கு கூட்டிச்செற்று ரிமாண்ட் செய்தனர்.நன்றி - Tamilcnnlk, Nakeeran

...மேலும்

Feb 15, 2014

வாச்சாத்திப் போராளிகள் - கவின் மலர்

வாச்சாத்திப் போராளிகள் 

மூச்சுக் காற்று பொறந்த  மண்ணில் பொறந்தவுக நாங்க
மூடி போட்டு மனசப் பூட்ட மறந்தவுகதாங்க
வயித்தத் தாண்டி கொஞ்சங்கூட சேர்த்தது இல்லீங்க
வனத்தைத் தாண்டி நாங்க வணங்க சாமியேதுங்க...
அந்தியில உலைவைக்க சந்திரனே வெளக்கு
அடுப்பூத சந்தனப் பூங்காத்தடிக்கும் எமக்கு’

- கவிஞர் இரா.தனிக்கொடியின் அசரவைக்கும் பாடலுடன் தொடங்குகிறது 'வாச்சாத்தி - உண்மையின் போர்க் குரல்’ ஆவணப்படம். அற்புதமான வரிகளில் பாரதி கிருஷ்ணகுமாரின் பின்னணிக் குரல். வாச்சாத்தி கிராமத்தின் நிலவியலை 'ஒரு தாயின் மடியில் அமர்ந்து இருக்கும் குழந்தைபோல, சித்தேறி மலையின் அடி வாரத்தில் அமைந்திருக்கிறது வாச்சாத்தி’ என்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

வாச்சாத்தி கிராமத்தின் மையமாக வீற்றிருக்கும் பரந்து விரிந்த மரம் ஒன்று நடந்த அத்தனை கொடூரங்களையும் சித்ரவதைகளையும் பார்த்துக்கொண்டு மௌனமாகத்தான் அன்றைக்கும் நின்றிருக்கிறது... இன்றைக்கும் நிற்கிறது. மக்கள் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல்களையும் பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கும் சாட்சியாக இருந்த வாச்சாத்தியின் வழுக்குப் பாறையும் அந்த மரமும் வடித்த கண்ணீர்தான் வாச்சாத்தியில் ஏரியாக நிலத்தின் மேல் தேங்கி நிற்கிறது. ஏரியின் நீரையும் மிஞ்சிவிட்டது வாச்சாத்தி பெண்களின் கண்ணீர். 20 ஆண்டுகளுக்குப் பின்னரும் கேமராவின் முன் நடந்தவற்றை விவரிக்கும்போது, அவர் களின் வடுக்கள் காலச் சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று, புதிய காயங்களாக உருமாறி அவற்றில் இருந்து ரத்தம் வழியும் துயரத்தைப் பார்ப்பவர்களால் உணர முடிகிறது. ஆனால், அந்த ரத்தத்தின் சிவப்பு வண்ணத்தைத் தங்கள் கொடிகளாக் கிக்கொண்டார்கள் வாச்சாத்தி மக்கள். அவர்களுக்குத் துணை நின்ற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கட்சியும், சண்முகமும், டில்லிபாபுவும் அவர் களுக்கு உறவுகளாகிவிட்டதைச் சொல்கிறது படம்.

ஊரையே சூறையாடிக் கொள்ளைஅடித்து, தானியங்களில் மண்ணையும் கண்ணாடித் துகள்களையும் அள்ளிப்போட்டு, விவசாயக் கிணற்றில் இருந்த மோட்டார்களை உடைத்து, வீட்டில் இருந்த பாத்திரங்களை எல்லாம் அடித்து நொறுக்கி, வீட்டின் ஓடுகளையும் கூரைகளையும் உடைத்துப்போட்டு, வாச்சாத்தி மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாகச் சிதைத்துச் சென்ற வனத் துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினரின் அட்டூழியங்களுக்குச் சான்று ஆவணமாக இருக்கிறது இந்தப் படம்.

இந்திய நீதித் துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, குற்றம்சாட்டப்பட்ட 269 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்த கணத்துக்கு முந்தைய அத்தனை சிரமங் களையும் வழக்கறிஞர் வைகை பேசு கிறார். எங்குமே இல்லாத வகையில் 50 நபர்களுக்கு மத்தியில் ஒரு சந்தேகப்படும் நபரை நிறுத்தி, சேலம் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட போது, அந்த 1,500 நபர்களுக்கும் மத்தியில் இருந்து வாச்சாத்தி பெண்கள் மிகச் சரியாக குற்றவாளிகளை அடையாளம் காட்டினர். இந்தப் பெண்களைச் சிறைக்கு அழைத்துச் செல்ல வந்த வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீச முயற்சி நடந்ததால், அவர்களின் வாகனத்தை நடுவில் விட்டு... முன்னே, பின்னே, பக்கவாட்டில் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் தங்கள் ஆட்டோக்களை அரண்கள்போல ஓட்டிவந்து சிறைக்கு அழைத்து வந்திருக்கின்றனர். ஆட்டோ தொழிலாளர்களின் வீடுகளில்தான் இந்தப் பெண்களைத் தங்கவைத்து அவர்களுக்கு வேட்டி, சட்டை, துண்டு போட்டு ஆண் வேடம் தரித்து சிறைக்குள் இவர்களை அழைத்துச் சென்றனர். இதுபோன்ற ஏராளமான தகவல்களை ஆவணப்படம் நமக்குச் சொல்கிறது. அ.தி.மு.க. அரசு எப்படி எல்லாம் குற்றவாளி களைக் காப்பாற்ற விழைந்தது என்பதை ஆதாரங்களுடன் பேசுகிறது படம்.

படத்தின் வெளியீட்டு விழா நடந்த சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்துக்கு வாச்சாத்தியில் இருந்து தனிப் பேருந்துகளில் புறப்பட்டு வந்திருந்தனர் கிராம மக்கள். வாச்சாத்தியில் நடந்த அரச பயங்கரவாதத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளான செல்விக்கு அப்போது 11 வயது. எட்டாம் வகுப்பு மாணவி. ''அன்னைக்கு சனிக்கிழமைங்க. அதனால, ஸ்கூல் இல்லை. இருந்திருந்தா நான் ஸ்கூலுக்குப் போயிருந்திருப்பேன். எனக்கு இப்படி ஆகியிருக்காதுங்க'' என்று அன்றைய குழந்தைத்தனம் மாறாமல் அழுதுகொண்டே சொன்ன அதே செல்வி, இன்றைக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவர். படத்தின் முதல் பிரதியை செல்வி பெற்றுக்கொண்ட அந்தக் கணம் ஒரு வரலாற்றுத் தருணம்.  

''அரச ஒடுக்குமுறைக்கும் தாக்குதல்களுக்கும்ஆளான வர்களை 'பாதிக்கப்பட்டவர்கள்’ என்றோ ஆங்கிலத்தில் 'விக்டிம்ஸ்’ (Victims) என்றோ சொல்லாதீர்கள். தங்களுக்கு நேர்ந்ததைத் தட்டிக்கேட்க இயலாமல், வேறு வழியின்றி சகித்துக்கொண்டு இருப்பவர்களுக்குத்தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று பெயர். அடக்குமுறைகளுக்கு எதிராகத் துணிந்து, நெஞ்சு உயர்த்திப் போராடுபவர்களை அப்படி அழைக்கக் கூடாது என்று ஜெயகாந்தன் கூறுவார்!'' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ்.
ஆம்! இனி, வாச்சாத்தி மக்களைப் 'போராளிகள்’ என்று அழைப்பதே சரி!

கவின்மலர் முகநூலிலிருந்து நன்றியுடன்
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்