/* up Facebook

Jan 4, 2014

வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர் - ஜோதிர்லதா கிரிஜா


பெண்கள் கண்ணியமான முறையில் உடை உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் கூக்குரல் எழுப்பி வருகிறார்கள். உடுக்கும் உடையும், பாணியும் அவரவர் தனிப்பட்ட உரிமைதான். ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி.  ஆனால், இங்கு மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெண்கள் அணியும் உடைகள் பற்றி மட்டுமே கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.  இதனை ஓரவஞ்சனை என்று பெண்ணுரிமையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதற்கான காரணங்களைப் ஒருதலைப்பட்சமற்று ஆராய்ந்தால், பெண்கள் இந்தக் கட்டுப்பாட்டை எதிர்க்க மாட்டார்கள்.

இயல்பில் ஆண் முரட்டுத் தசைவலிமையில் பெண்ணைக் காட்டிலும் உயர்ந்தவனாகவும், மனவலிமையில் பெண்ணைக் காட்டிலும் தாழ்ந்தவனாகவும் படைக்கப்பட்டிருக்கிறான். பெண்ணின் உடல் சார்ந்த வலுவின்மையை ஆண் தனக்குச் சாதகப் படுத்திக் கொண்டு பெண்களை வெற்றி கொள்ளுவதைப் பெண் எவ்வாறு நியாயமென்று ஒப்புக்கொள்ள மாட்டாளோ, அவ்வாறே மனம் சார்ந்த தனது வலுவின்மையைப் பெண் சீண்டுவது கூடாது என்று நினைக்கவும், அதனைப் பெண்ணுரிமை என்று ஒப்புக்கொள்ளாதிருப்பதற்கும் ஆணுக்கு உரிமை உண்டு. ஒருவர் எடுத்துக்கொள்ளும் உரிமை பிறருக்கும்-  ஏன்? தனக்கேயும் கூடத்தான் -  எப்போது தீமை செய்கிறதோ அப்போது அதைக் கைவிடவேண்டிய பொறுப்பும் அறிவும் ஒருவர்க்கு இருக்கவேண்டும். அண்மைக்காலமாய்ப் பெண்களில் சிலர்  -  நல்ல வேளை! சிலர்தான்!  -   அருவருக்கத்தக்க முறையில் வெளிப்பாடாய் உடுக்கத் தலைப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் அணியும் பனியன்களிலும், டி-ஷர்ட்டுகளிலும் உள்ள வாசகங்களை இங்கே எடுத்து எழுதி, இந்தக் கண்ணியமான நாளிதழின் பக்கத்தை மாசுபடுத்த விரும்பவில்லை.  வம்புக்கு இழுக்கும் இந்த வாசகங்களைப் படிக்கும் ஆண் அருவருப்பான முறையில் எதிரொலிக்கவே செய்வான்.  அவனது படைப்பு அப்படி! குச்சிக்குச் சேலை கட்டிவைத்தாலும் அதைப் பார்த்ததும் எச்சில் ஊறும் வாய் அவனுடையது. ‘அவன் என்னை இடிக்காமல் விலகிப் போகட்டுமே? அவன் இடிப்பான் அல்லது அசிங்கமாய் ஏதேனும் விமர்சிப்பான் என்பதற்காக நான் என் உடையணியும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டுமா என்ன?’ எனும் பெண்ணின் பதில் கேள்வியில் அசட்டுத்தனமமே ததும்புகிறது. ஆண்களில் பெரும்பாலோரை இந்த விஷயத்தில் திருத்த முடியாது. மகா பாரத நாளிலிருந்து தொடரும் கதை இது. பெண்களுக்கு வெட்க உணர்வுகள் போதிக்கப்பட்டு வந்துள்ளது அவர்களது நன்மையை உத்தேசித்தே என்பதைப் பெண் புரிந்துகொள்ள வேண்டும்.

1968 இல் இருந்து பெண்ணுரிமை சார்ந்த கதை-கட்டுரைகளை எழுதிவரும் என் மீது யாரும் பத்தாம் பசலி என்று முத்திரை குத்த முடியாது. பழையன என்பதற்காக எல்லாக் கட்டுப்பாடுகளையும் துறப்பதோ, அல்லது புதியவை என்பதற்காக அனைத்துச் சுதந்திரங்களையும் ‘பெண் விடுதலை’ என்பதன் பெயரால் ஏற்பதோ புத்திசாலித்தனம் ஆகாது. பெண்கள் தமது கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நடு நின்று சிந்தித்துப் பழையன, புதியன ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் அறிவார்ந்த நிலையை எடுக்க வேண்டும். கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளவும் தள்ள வேண்டியவற்றைத் தள்ளவும் அவள் அறியவில்லையெனில் அவள் அறிவுகெட்டவள் என்றல்லோ ஆகும்? பெண்ணை போகப்பொருளாய்க் கருதி ஊடகங்கள் வணிகம் செய்வதாய்க் குறை கூறிக் கண்டித்துவரும் பெண்ணியவாதிகள் தெருவில் சுற்றித் திரியும் ஆபாசக் களஞ்சியங்களை ஏன் கண்டிப்பதில்லை? மாறாக, எதையும், எப்படியும் உடுப்பது பெண்ணின் உரிமை என்றல்லவோ வக்காலத்து வாங்குகிறார்கள்? எனினும், பணி சார்ந்த வசதியான உடைகளைத் தான் பெண் அணிய வேண்டும் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.. எந்தப் பணியிலும் பெண் அமர்த்தப்படும் இந்நாளில் அவள் சேலைதான் கட்ட வேண்டும் என்பது சரியன்று. சேலை வசதிக்குறைவானது. விரைந்து நடக்கவும், பேருந்து பிடிக்கவும், பல்வேறு ஆபத்துகள் இன்று பெண்களைத் துரத்தும் நிலையில் சட்டென்று ஓடவும் கால்சராய் / ஜீன்ஸ்தான் ஏற்றது. சேலை காலை வாரிவிட்டுவிடும்.  எனவே என்னை “மடிசார் மாமி” என்றும் தப்புக்கணக்குப் போடவேண்டாம். நாம் சொல்ல வருவதெல்லாம் இதுதான் – அணியும் உடை எதுவாக இருந்தாலும் அதைக் கண்ணியமான முறையில் பெண்கள் அணிய வேண்டும்.  பதினெட்டு முழப் புடைவையையும் கண்ணியக் குறைவான முறையில் உடுக்கலாம். .கொஞ்ச நாள்களுக்கு முன்னால்; பெண்களுக்கான ஓர் ஆங்கில இதழில் அதன் ஆசிரியை, பெண்களின் எறிபந்து / கூடைப்பந்து விளையாட்டுகளுக்கு ஆண்களின் கூட்டம் அலைமோதுவதையும், பெண்கள் விளையாடுகையில் ஆபாசமான விமரிசனத்துடன் அவர்கள் ஊளை இடுவதையும் பற்றி அங்கலாய்த்துக் கட்டுரை எழுதியிருந்தார். உறுப்புகள் வெளித்தெரியும் வண்ணம் உடையணிந்து குதித்தால் இயல்பில் மோசமான மனநிலையுள்ள அவர்கள் அப்படித்தான் எதிரொலிப்பார்கள். அப்படி எதிரொலித்த ஆண்களை “மலம் தின்னும் பன்றிகள்” என்று அந்த ஆசிரியர் விமர்சித்திருந்தார். ‘அவர்கள் பன்றிகள் என்பது தெரிகிறதல்லவா? அப்படி இருக்கும்போது, ஏன் வெளிப்பாடான உடை அணிந்து ஆண்களைப் பன்றிகளாக்கும் “மலம்” ஆகப் பெண்கள் மாற வேண்டும்’ என்று நான் எழுதிய பதில் கடிதத்தை அவர்கள் வெளியிடவில்லை என்பது வேறு விஷயம்!

அண்மையில் பெண்ணிய இதழ் ஒன்றில் ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் பெண்களின் உடைக்கட்டுப்பாடு பெண்களின் மீதான தாக்குதல் என்று சொல்லப்பட்டிருந்தது. அதே கட்டுரையின் ஓரிடத்தில், ‘உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்கள் உடைகளைக் கால்கள் தெரிய, தூக்கிச் செருகிக்கொண்டால்தான் வேலை செய்ய முடியும். நம் நாட்டில் வயலில் உழைக்கும் பெண்களும், கட்டட வேலை செய்யும் பெண்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்தப் பெண்கள்தான் பாலியல் கொடுமைகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்’ என்றும் சொல்லப்பட்டிருந்தது. கண்கூடான நிலை என்பது இதுதான். இது ஆண்களின் பொதுவான, மாறாத மனப்பான்மையையே காட்டுகிறது.

பொதுவாகப் பெண்ணுரிமை என்பதைத் தவறாய்ப் புரிந்துகொண்டுள்ளவர்களின் கருத்து என்னவெனில், ‘பெண் எப்படி வெளிப்பாடாக உடுத்துக்கொண்டாலும், ஆண் அதனால் பாதிப்பு அடையக் கூடாது. அவன் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்’ என்பதேயாகும். பல ஆண்கள் பெரிதும் முயன்று அப்படித்தான் கண்ணியம் காக்கிறார்கள். ஆனால், வேறு பலரால் தங்கள் இயல்பை வெல்ல முடிவதில்லை. ஏனெனில் அவர்கள் படைக்கப்பட்ட விதம் அப்படி! அவர்கள் திருந்த வேண்டும் என்றும், ஆபாசமாக உடுக்கும் பெண்களை விமர்சிக்கவோ ( pass comments) அவர்களைச் சீண்டவோ கூடாது என்றும் கூறுவது ‘நாய் தன் வாலை நிமிர்த்திக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லுவதற்கு ஒப்பானதே.ஆபாசப் படங்களால் அனைத்துப் பக்கங்களையும் நிரப்பிப் பெண்சீண்டலை ஆண்களிடம் தூண்டிவிட்டுவிட்டு, பெண்சீண்டலால் உயிர் நீக்க நேர்ந்த சரிகா ஷா பற்றி மாய்ந்து மாய்ந்து கட்டுரை எழுதும் ஏடுகளும், ஆபாச ஆட்டங்கள் நிறைந்த திரைப்படங்கள் / தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவற்றின் தயாரிப்பாளர்களும், திரைப்பட விமரிசனங்களில் கூடக் கண்ணியம் காக்கத் தவறும் ஆபாச விமரிசகர்களும், நகைச்சுவையின் பெயரால் ஆபாசமாகப் பதிலளிக்கும் கேள்வி-பதில் ஆசிரியர்களும் நாளுக்கு நாள் மலிந்துகொண்டு வரும் இந்நாளில் பெற்றோர்க்கும், கல்விக்கூட ஆசிரியர்களுக்கும் உள்ள பொறுப்பு மகத்தானது. அவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும்.

நன்றி – தினமணி – 2008

2 comments:

Anonymous said...

ஆண்களில் பெரும்பாலோரை இந்த விஷயத்தில் திருத்த முடியாது. மகா பாரத நாளிலிருந்து தொடரும் கதை இது. பெண்களுக்கு வெட்க உணர்வுகள் போதிக்கப்பட்டு வந்துள்ளது அவர்களது நன்மையை உத்தேசித்தே என்பதைப் பெண் புரிந்துகொள்ள வேண்டும்...... ithai innum evloo naalaikku sollittu ituppingga ? mahabharatha kaalathulernthu aan ippadina..... maara vendiyathu aan thaan. aan endraal apdithaan innum ethanai ethanai visayanggal pengal vittu koduthu poga vendum....... aan enbavan padaitha kaalathulernthe apdi irukkanum..... ellaa kaala kattathulaiyum pen mattume adimaiyaaga irunthu maara vendum apdithaane ..... ithuthaan unggal karutha ? unggala maathiri pengal ippadi eluthura varai pen adimai oliyave oliyaathu. muthalla nallolukathai aangalukkum kathu kudungga nu pesungga.

Adirai Ahmad said...

திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் கட்டுரை, நடுநிலை பிறழாமல் அமைந்துள்ளது. முதல் பின்னூட்டமிட்ட பெண், வரம்பு மீறிச் சில வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்!

நான் பின்பற்றும் இஸ்லாம், பெண்ணைப் போகப் பொருளாகப் பார்க்காமல், கண்ணியம் வழங்கப் போதிக்கின்றது. இது மட்டுமன்றி, இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களையும் தத்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், அதன் மூலம் தம் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கட்டளையிடுகின்றது. (குர்ஆன் - 24 : 30,31)

ஆண்டவனின் படைப்பிலேயே - இயல்பாகவே - கவர்ச்சியாய்ப் படைக்கப்பட்டுள்ள பெண்ணினம், தனது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வதற்காக, ஆடையணியும் விதத்தில் தற்காப்புச் செய்தே ஆகவேண்டும்.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்