/* up Facebook

Jan 31, 2014

வேரோடு களைதல் - லறீனா அப்துல் ஹக்


பொதுவாக எதிர்மறையான தலைப்புக்களை இடுவதற்கு நான் விரும்புவதில்லை. என்றாலும், சமூகத் தீங்குகள் என்று வரும்போது அவை அடியோடு அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை அல்லவா? இந்தக் கட்டுரையில் வேரோடு களையப்பட வேண்டிய அவ்வாறான ஒரு மாபெரும் சமூகத் தீமை குறித்தே சுருக்கமாய் அலசப்போகிறோம். 

நிருபமா, தவ்ஃபீக் சுல்தானா. இந்த இரண்டு பெயர்களையும் இலகுவில் மறந்து விடுவது யாராலும் சாத்தியமில்லை என்றே நினைக்கின்றேன். யாரோ சில வெறியர்களின் பாலியல் வக்கிரங்களுக்குப் பலியான ஆயிரக் கணக்கான பெண்களுக்கான குறியீடாக அவர்கள் வரலாற்றில் இடம்பெற்று விட்டார்கள். 

பாலியல் வல்லுறவு, இளம் பெண் மீது ஆஸிட் வீச்சு, சிறுமி கடத்திக் கொலை என்றெல்லாம் பத்திரிகைச் செய்திகளில் அன்றாடம் இடம்பெறும் அவலங்களைக் கண்டு அவ்வப்போது சில அனுதாப வார்த்தைகளை, சாபங்களை அள்ளி எறிந்துவிட்டோ கண்டனங்களைத் தெரிவித்துவிட்டோ கடந்துபோய்விடுகின்றோம். ஆனால், அத்தகைய சமூக அவலங்கள் தொடர்பில் அத்தோடு மட்டும் நம்முடைய கடமை முடிந்துவிடுமா? முழு உலகுக்கும் அருளாக அமைந்த ஒரு வாழ்க்கை நெறியைச் சுமந்தவர்கள் என்று உரிமைகோரும் ஒரு சமுதாயத்திற்கு இவைபோன்ற பிரச்சினைகளின்போது இதைவிட அதிகமான பங்களிப்புச் செய்ய முடியாதா? எப்படி இவற்றை ஒழித்துக்கட்டுவது? இந்தக் கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டவர்கள் என நினைக்கின்றேன். 

இன்றைய சமூக அமைப்பில் பெண்களுக்கு மட்டுமென்ன மூன்று வயதோ அதற்குக் குறைந்த வயதோ உள்ள பெண்குழந்தைக்குக்கூட பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகிறது. வீட்டில், வெளியில், பணியிடங்களில், பள்ளிக்கூடத்தில் என எல்லா இடத்திலும் பெண்கள் துன்புறுத்தலுக்கோ கொடுமைக்கோ ஆளாகும் பயங்கரம் தொடர்கின்றது. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது, என்னென்ன காரணங்கள் இதன் பின்புலத்தில் உள்ளன, எப்படி இவற்றைத் தவிர்க்கலாம், தடுத்துநிறுத்தலாம் என்ற கேள்விகளுக்கு விடைதேடவேண்டிய கட்டாயத்திற்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆபாச சினிமா, இணைய வெளியெங்கும் பரவிக்கிடக்கும் ஆபாசத் தளங்கள், தெருவெங்கும் திறந்துவிடப்பட்டிருக்கும் மதுபானச்சாலைகள், பாலியல் வக்கிரங்கள் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. பெண்களை வெறுமனே போகப் பொருளாக அல்லது உடம்பை மையப்படுத்திய பாலியல் பண்டமாகக் கட்டமைக்கப்படும் கருத்தியல் பரவலாவதற்கும், மனிதனுக்குள் இருக்கும் மிருக உணர்வுகளை வெளிக்கொணர்ந்து தூண்டிவிடுவதிலும் மேற்படிக் காரணங்கள் அடித்தளம் அமைத்துக் கொடுக்கின்றன என்பதில் ஐயமில்லை. என்றாலும், இந்த வெளிக் காரணிகளுக்கு அப்பால் இதில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஓர் அகக்காரணியும் உண்டு என்றே நான் கருதுகின்றேன். இன்னொரு வகையில் சொல்வதானால், மேற்சொன்ன காரணங்களின் தூண்டுதலுக்குள் சிக்கி, மிருகக்குணம் எனும் நோயினால் பீடிக்கப்படாமல் தற்காக்கக்கூடிய எதிர்ப்புச் சக்தி ஒவ்வொரு வீட்டிலும் சரிவர ஊட்டிவளர்க்கப்படாமையும் ஒரு காரணம்தான்  எனலாம். அது பற்றிச் சற்று நோக்குவோம்.

வீடு என்பது வெறுமனே ஓர் இருப்பிடம் மட்டுமே அல்ல. ஒரு சமூகத்திற்குத் தேவையான தனிமனித ஆளுமைகளை உருவாக்கும் பள்ளிக்கூடமும்கூட. ஆகவே, அனாசாரங்களும் ஒழுக்கச் சீர்கேடுகளும் மலிந்துள்ள ஒரு சூழலில் வாழும் நாம், நமது வீட்டிலே அடுத்த தலைமுறை உருவாக்கத்தில் நம்முடைய பாரம்பரியமான அணுகுமுறைகளின் பொருத்தப்பாடு குறித்துச் சற்று ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்ளூ புதிய அணுகுமுறைகள், வழிமுறைகள் பற்றியும் யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். 

பன்னெடுங்காலமாகப் 'பெண்ணின் உடல்' ஆண்களுக்கு வியப்பூட்டும் ஒன்றாக, கிளர்ச்சி ஊட்டும் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. கலை, இலக்கியங்களில் மட்டுமல்ல, நம்முடைய வீடுகளிலும் அதற்கான களம் உருவாகி இருக்கிறது என்பதை நம்மில் பலர் அறியாதவர்களாகவே இருக்கிறோம். எப்படி?

குறித்த பருவத்தில் 'வயதுக்கு வரும்' பெண் குழந்தை, வீட்டில் உள்ள ஆண் சகோதரர்களுக்கு ஒரு புதிராக மாறுகிறாள் அல்லது அவ்வாறு மாற்றப்படுகிறாள். மாதவிடாய்க் காலங்களில்கூட அவள் தொழுவதாக, நோன்பு நோற்பதாக நடிக்கவேண்டிய நிலையே பெரும்பாலும் உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. அது பற்றி வீட்டில் உள்ள ஆண்களிடம் வெளிப்படையாகப் பேசுவதோ உணர்த்துவதோ வெட்கம், இழிவு என்பதான மனப்பிரமைகளை நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம். அதை நமது பண்பாடு, சம்பிரதாயம், மரபு என்ற பெயர்களால் நியாயப்படுத்த முனைகின்றோம். அவ்வாறே, இரண்டாவது பிரசவம் பற்றி மூத்த குழந்தையிடம் பேசும் போது, 'பாப்பாவை ஆஸ்பத்திரியில் வாங்கிவந்தேன்' என்று மழுப்புகின்றோம். 'அப்படித்தான் செய்துவருகிறோம்ளூ அவற்றில் எல்லாம் என்ன தவறு?' என்று நீங்கள் கேட்கலாம். முதல் கோணல் முற்றுங் கோணல் என்பதுபோல், அங்கே நாம்விடும் அசட்டையால் சில எதிர்மறை விளைவுகள் நேர்கின்றன என்பதை நாம் அறிவதில்லை.

ஆணைப்போலவே பெண்ணும் அல்லாஹ்வின் படைப்பு, பிரதிநிதி. ஒரு பெண் உடலளவில் எழுத்தில் வடிக்க இயலாத துன்பத்தை, அசௌகரியத்தை, வலியை மாதந்தோறும் எதிர்கொள்கிறாள்ளூ அந்த வலியையும் சுமந்தவளாகத்தான் தன் அன்றாடப் பணிகளை மிகுந்த சிரமத்தோடு செய்கிறாள்ளூ அவளது சிரமத்தைக் கருத்திற் கொண்டுதான் கருணைமிக்க அல்லாஹ் அக்காலத்தே அவளுக்குத் தொழுகையில் விலக்கும், நோன்பு நோற்பதில் தற்காலிக விலக்கும் அளித்துள்ளான் என்ற உண்மையை அவளது ஆண் சகோதரன் உணரும் வாய்ப்புக் கிடைக்கும் என்றால், தன்னுடைய தாய் இரத்தம் சிந்தி உயிரைப் பணயம் வைத்துத்தான் தன்னையும் மற்ற சகோதரர்களையும் பெற்றெடுத்தாள் என்பதைத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் சிறுவயதிலேயே ஒரு மகனுக்குக் கிடைக்கும் என்றால், 'பெண்' பற்றிய அந்த ஆணின் மனப்பதிவு எத்தகையதாக மாறக்கூடும்? பெண்ணின் உடல் சார்ந்த கிளர்ச்சிக்குப் பதிலாக மிகுந்த மதிப்புணர்வும் கனிவும் தோன்றுமா, இல்லையா? ஆம், அங்குதான் அல்லாஹ் தஆலா ஆண் - பெண் இருபாலாரின் மத்தியிலான சமநிலையைப் பேண வழியமைத்துத் தந்துள்ளான்ளூ ஒருவர் மற்றவருக்குத் துணையாகவும் அனுசரணையோடும் பரிவோடும் இருக்கவேண்டும் என்ற புரிதலை அதிகப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறான்.

மாதவிடாய், பிள்ளைப்பேறு என்பன பற்றியெல்லாம் வீட்டில் உள்ள ஆண் பிள்ளைகளிடம் பேசுவது சாத்தியமா, அதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா என்ற கேள்விகள் உங்கள் உள்ளங்களில் எழலாம். அதற்கான பதில் 'ஆம்' என்பதுதான். 

தொழுகை, நோன்பு முதலான வணக்க வழிபாடுகளை விதியாக்கும்போது 'தம்யீஸ்' எனப்படும் விபரமறியும் பருவம் பற்றி இஸ்லாம் கரிசனை கொள்வதை நாம் அறிவோம். இதனை 10 வயது என சில அறிஞர்கள் வரையறுக்கிறார்கள் எனப் படித்துள்ளேன். இதன்போது தொழுகை, நோன்பு என்பவற்றை முறிக்கக்கூடிய விடயங்கள் எவை, குளிப்பு கடமையாகும் சந்தர்ப்பங்கள் எவை என்பன பற்றியும் போதிக்கப்படும். அவை பற்றி அல்குர்ஆன் வசனங்களிலும், அவை தொடர்பான சட்ட விளக்கங்கள் ஹதீஸ் நூல்களிலும் ஒளிவு மறைவு இன்றிப் பதிவுசெய்யப்பட்டு இருப்பதையும் நாம் அறிவோம். 

ஆக, இஸ்லாம் இதன் மூலம் எதிர்பார்ப்பது என்ன? குறித்த பருவத்தில் ஆணோ பெண்ணோ தமது உடல் பற்றி அறிந்துகொள்வது இன்றியமையாதது. இதில், பெண்ணுடைய உடல், அதன் இயல்பு, அது எதிர்கொள்ளும் அசௌகரியம், வலி என்பன பற்றி ஓர் ஆணுக்கு அறிவூட்டப்படும்போது, பெண்ணுடல் பற்றி அவனுக்குள் உள்ள கவர்ச்சியும், கிளர்ச்சியும் மட்டுப்படும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது. 

வீட்டில் மாதம் தோறும் ஒரு குறித்த காலப்பகுதியில் தன் சகோதரி கட்டிலில் புரண்டு ஏன் அழுதுகொண்டிருக்கிறாள் என்ற கேள்வி அந்த வீட்டில் உள்ள ஆண்பிள்ளையின் மனதில் எழவேசெய்யும். பூசி மழுப்பி மறைக்காமல் கூறப்படும் ஓர் உண்மையான பதிலின் மூலம் அதற்கான விடையை அவன் தெரிந்துகொள்ளும்போது, அவனுக்குத் தன் சகோதரி மீதான பரிவும் பாசமும் அதிகரிக்கும். ஒரு பெண்ணின் உடலுக்குப் பின்னால் உள்ள அவஸ்தையைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை அவன் அடைகின்றான். அவ்வளவு காலம் வரை தன் அறியாமையால் 'ஏய், பட்டப் பகலில் நேரம் காலம் தெரியாமல் கட்டிலில் சாய்ந்துகொண்டு என்ன பண்ணுறே? போ, போய் ஒரு டீ போட்டுட்டு வா' என்று அதட்டிப் பழக்கப்பட்ட அண்ணன், கல்யாணம் கட்டிய பின்னர் மனைவியின் வழியே மாதவிடாயின் அவஸ்தை எப்படியானது என்பதைத் தெரிந்துகொண்ட பின் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்வதை நாம் நம்முடைய அனுபவத்தில் கண்டிருப்போம். இது அவன் கண்டறிந்த உண்மை, அவனது மனநிலையில் ஏற்படுத்தும் சிறு சலனத்தின் வெளிப்பாடுதான், இல்லையா?

ஆகவே, ஆரம்பம் முதலே வீட்டில் வளரும் ஆண் - பெண் பிள்ளைகள் மத்தியில் ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றோரே, குறிப்பாகத் தாய்மாரே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஆனால், இதனை 'எடுத்தேன், கவிழ்த்தேன்!' என்ற பாணியில் அன்றி, மிகவும் நிதானமாகவும் கவனமாகவும் செய்ய வேண்டும் என்பதையும் கட்டாயம் கவனத்தில் கொள்ள மறக்கக்கூடாது. இவ்வாறு தெளிவுபடுத்தும்போது, செயற்கையாக அன்றி, வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களை அழகிய முறையில் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு என் மகனுக்கு ஏழு வயதாயிற்று. ஐந்து நேரமும் தொழவேண்டிய பருவம். அவனுக்குத் தொழுகையில் நான்தான் 'இமாமத்' செய்துவந்தேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மகனை அழைத்து, இன்று முதல் இன்னும் சில நாட்களுக்கு நீயே தனியாகத் தொழுதுகொள்' என்றேன். 'அது ஏன்? அப்போ நீங்க தொழ மாட்டீங்களா? தொழாட்டி அல்லாஹ்கிட்ட உங்களுக்குப் பாவம் வருமே?' என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் அவனிடமிருந்து எழவே நான் வாயடைத்துப் போனேன். 'எனக்குக் கொஞ்சம் சுகமில்லை மகன்' என்று சமாளிக்கப் பார்த்தேன். 'அப்படி இருந்தால் படுத்துக் கொண்டோ உட்கார்ந்து கொண்டோ தொழுங்களேன், உம்மா' என்று தீர்வோடு நிற்கிறான், மகன். சரி, ஆவது ஆகட்டும் என்று துணிந்து, அவனை அருகில் அழைத்து உட்காரச் சொன்னேன். பின்னர், அவனுக்குப் புரியும் வகையில் பெண்ணின் உடல் அமைப்பு, மாதவிடாய் பற்றியெல்லாம் மிகவும் எளிமையாக விளங்கப்படுத்தினேன். ஏற்கெனவே அவன் அறிவியல் பாடத்தில் விலங்குகளினதும், மனிதனினதும் இனப்பெருக்கம், விலங்குகளில் பாலூட்டிகள் பற்றியெல்லாம் சிறிதளவு படித்தும் இருந்தமையால் நான் சொல்வதை அவனால் பெருமளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது, அல்ஹம்துலில்லாஹ்! 

இந்தச் சம்பவம் என்னைச் சிந்தனையில் ஆழ்த்தியது. பள்ளிக்கூட இஸ்லாம் பாடப் புத்தகத்தில் குளிப்பு பற்றிய பாடம் இருப்பது என் நினைவுக்கு வந்தது. இஸ்லாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளுமாறு கூறுமானால் அதில் கட்டாயம் ஆழ்ந்த பயன் இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. தொடர்ச்சியான சிந்தனையின் அடியாய், 'பெண்' பற்றிய ஆண் பிள்ளைகளின் அதீத கற்பனையும் கிளர்ச்சி உணர்வும் மட்டுப்பட்டு பரிவும் புரிதலும் மேம்படவும் பெண்ணுடல் பற்றிய இந்த அழகிய அறிவூட்டல் உதவும் என்ற சிந்தனை வலுப்பட்டது. 'பெண் எனும் சக உயிரி தன்னளவில் மிகுந்த அவஸ்தைகளோடு வாழ்கிறாள்ளூ அவள் தன் சிரமங்களோடும் அசௌகரியங்களோடும்கூட தன் பணிகளை ஆற்றுகிறாள்ளூ உயிரையே பணயம் வைத்து, இரத்தம் சிந்தி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் உன்னதமான பணியைச் செய்கிறாள்; அவள் மிகுந்த போற்றுதலுக்கு உரியவள்' என்ற எண்ணம் ஆண் பிள்ளைகளின் உள்ளங்களில் சிறுவயது முதலே அழுத்தமாகப் பதிக்கப்பெறுமானால், பெண்ணை உடல் சார்ந்து வக்கிரமாய்ப் பார்க்கும் போக்கு பெரிதும் தவிர்க்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே நான் கருதுகின்றேன். அப்படியான புரிந்துணர்வோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் எந்தப் பெண்ணையும் போகப் பொருளாகவோ பாலியல் பண்டமாகவோ வெறித்துப் பார்க்கமாட்டார்கள். மாறாக, மிகுந்த கண்ணியத்தோடும் கனிவோடுமே பார்ப்பார்கள். 

பெண்களும் பெண் குழந்தைகளும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படும் இக்கொடிய பிரச்சினையைத் தீர்க்க எத்தனையோ வழிமுறைகள் இருக்கலாம். அவைபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைத் தெரிவுசெய்து ஆய்வுகள் நடத்தினால், நல்லதொரு குடும்பச் சூழல் அமையாதவர்கள், குடும்ப அமைப்பில் முறையாகக் கிடைக்கக்கூடிய அன்போ அரவணைப்போ சரிவரக் கிடைக்காதவர்கள், சிறுவயதில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானவர்கள் அதிகப்பேர் இருப்பார்கள். அவர்களுக்குத் தேவை உளவளச் சிகிச்சையும் உரிய பராமரிப்புமே என்பதை உளவள ஆலோசகர்கள் (உழரnஉநடடழசள) பரிந்துரைப்பார்கள். எனவே, இதுபோன்ற பிரச்சினைகளின் அடிப்படை குடும்ப அமைப்பின் முறையான நெறிப்படுத்தலில் ஏற்படும் குறைபாடுகளில் இருந்தே முளைவிடுகின்றது என்ற நிலையில், அவற்றை நீக்குவது குறித்து நாம் தீர ஆராயவேண்டியுள்ளது. அடிப்படையான மனநிலை மாற்றம் என்பது அதில் முதன்மையானது. 

ஆகவே, சகோதரிகளே! நம் வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகளின் உள்ளத் தரையினில் கள்ளிச் செடிகள் வளர்ந்துவிடாமல் வேரோடு களைவோம்ளூ பண்பையும் பரிவையும் புரிந்துணர்வையும் ஊட்டி வளர்ப்போம், இன்ஷா அல்லாஹ்!

நன்றி: விடியல் வெள்ளி (ஜனவரி 2014)
...மேலும்

Jan 30, 2014

பெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்? - மு.வி.நந்தினி


பெண்கள் இதழில் பணியாற்றிய அனுபவத்தை இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக பதிவுலகில் இயங்கும் பெண்கள். நான் எதிர்பாராதது இது. நான் யூகித்த விஷயத்தை சரி என்று சொல்வதுபோல் இருந்தது இந்த பெண்களுடைய கருத்துக்கள். அந்தப் பதிவின் தொடர்ச்சியாக பெண்களுக்கான ஒரு இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்ததில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் பணியாற்றிய பெண்கள் இதழில் என்னை சலிப்பு தட்ட வைத்த விஷயங்களே இதை எழுதத் தூண்டின.

2011ன் கணக்கெடுப்பின்படி  தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 கோடியே 38 லட்சம் படித்த பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் இதழ்கள் இதுவரை சென்றடைந்தது இரண்டரை லட்சம் பெண் வாசகர்களை மட்டும்தான். மேலே சொன்ன புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது மிகமிகக் குறைவான எண்ணிக்கை. இதன் பின்னணியில் ஏராளமான காரணங்கள் இருக்கலாம், அதில் ஒன்று பெண்கள் இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே அடைபட்டிருப்பது.

’நாங்கள் அரசியல் பேசுவோம்’
சென்ற நூற்றாண்டில் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று சொல்லி பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்ததைப் போன்றதே, இன்றைய பெண்களுக்கு அரசியல் தேவையில்லை என்று சொல்வதும். வாக்காளர்களில் சரிக்குப் பாதியாய் (2.5 கோடி பெண் வாக்காளர்கள்) இருக்கும் பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்று பெண்கள் இதழ்கள் நிராகரிப்பது பெண்களின் வளர்ச்சியை முடக்கிப்போடக்கூடியது. அரசால் இயற்றப்படும் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்குமானவை. ஆண்களால் முன்மொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும் சட்டதிட்டங்களை அறியும் உரிமைக்கூடவா பெண்களுக்குக் கிடையாது? மக்களாட்சியின் நான்காவது தூணாக சொல்லப்படும் பத்திரிகைகள், முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே இதுபடுகிறது. அரசியலின் தூய்மை காக்கப்பட வேண்டுமானால் பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகப்பட வேண்டும். அதற்கொரு தூண்டுகோளாக, அரசியல் குறித்த நேர்மறையான பார்வையை பெண்களுக்கு இந்த இதழ்கள் தரவேண்டும்.

பணிபுரியும் பெண்கள்
படித்த, படிக்காத என அனைத்து தரப்பு பெண்களும் இன்று பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பணிபுரிவதன் மூலம் கட்டுப்பெட்டியான வாழ்க்கைச் சூழலிலிருந்து பெண்கள் விடுதலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். குடும்ப அமைப்பிலும், குடும்பத்தை அடுத்துள்ள சமூகத்திலும் பணிபுரியும் பெண்களுக்கு பல சவால்கள் முன்நிற்கின்றன. குடும்ப பொறுப்புகளை நிர்வகிப்பது, அலுவலகச் சூழலில் தன் திறமையை நிரூபிப்பது என இருவகையான நெருக்குதல்களை இன்றைய பெண்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதுவரை ஆண்கள்தான் அதிகார மையமாக இருந்தார்கள், இப்போது அதிகாரம் பெண்களின் கைகளுக்கும் கிடைத்திருக்கிறது. பணிபுரியும் இடத்தில் தனக்கு மேலதிகாரியாக ஒரு பெண் வரும்போது கலாசார ரீதியாக ஆணாதிக்கம் கொண்ட ஒரு சமூகத்தில் அது சலசலப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிடுகிறது. குடும்பத்திலும் அது எதிரொலிக்கிறது. மேலதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கு மட்டுமல்ல, அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் இதேநிலைதான். இது குறித்த சொல்லாடல்களை, தீர்வுகளை, புரிதல்களை, ஆலோசனைகளை சொல்வது பெண்கள் இதழ்களிம் கடமை. பணிபுரியும் பெண்களை பெரும்பாலான வாசகர்களாகக் கொண்டிருக்கும் பெண்கள் பத்திரிகைகள் ஏன் இவர்களை கண்டுகொள்வதில்லை? ஒரு கணிப் பொறியாளரும் ஒரு பள்ளி ஆசிரியரும் சமையல் குறிப்பை மட்டுமா எதிர்பார்ப்பார்கள்? அவர்களிடம் பகிர்ந்து கொள்ள, கேள்வி கேட்க நிறைய விஷயங்கள் உண்டு.

இலக்கியம்
தமிழ் இதழ்கள், நவீன இலக்கியங்களை ஏன் புறந்தள்ளுகின்றன என்கிற கேள்வி ஆய்வுக்குரியது. ஒரு மொழியை அடுத்தக்கட்ட வளர்ச்சி நோக்கி இட்டுச் செல்பவை இலக்கியங்கள். இலக்கியத்தை புறக்கணித்தது இன்றைக்கு தாய்மொழியின் சொற்பிரயோகத்தை குறைத்து, வேற்றுமொழி கலப்பை அதிகமாக்கிவிட்டது. மொழிக்காகவும் செழுமையான இலக்கியங்கியங்களை வாசகர்களுக்கு தரவும் நவீன இலக்கியங்களுக்கு இடமளிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் சிறு பத்திரிகை அளவிலே முடங்கிப் போய்விட்ட இலக்கியப் பெண்களை பொதுவாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

சொல்வளம் மிக்க நம் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், வெறுமனே பேப்பர் கட்டுகளாக பல்கலைக்கழகங்களின் வெளிச்சம் நுழையா அறைகளில் அடைந்துகிடக்கின்றன. ரசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரிய ஆய்வுகளை வெளியிடுவது இன்றைய தலைமுறை பெண்களுக்கு  தொன்மையான நம் இலக்கியங்கள் குறித்து மதிப்பான பார்வையை ஏற்படுத்தும். அதோடு, இலக்கியங்கள் ஊடாக சொல்லப்படும் கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்தவும் செய்யலாம். அதுபோல பெண்கள் இதழ்கள் எவற்றிலும் புத்தக விமர்சனங்கள் இருப்பதில்லை, புத்தக அறிமுகங்கள்கூட வருவதில்லை. பெண்கள் புத்தகங்களையே விரும்புவதில்லையா? இது உண்மையென்றால் பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும். அப்படியானால் ஏன் பெண்கள் இதழ்கள் புத்தகவிமர்சனங்களை வெளியிடுவதில்லை? அறியாமை என மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டியிருக்கிறது.

சுற்றுச்சூழல்
நாளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பில் உள்ள பெண்களுக்கு சூழலியல் அறிவு தேவை. அதை நுட்பமான திட்டமிடலுடன் நாம் செய்ய வேண்டும். காக்கை குருவிகளுடன் நாம் இந்த புவியை பகிர்ந்துகொண்டு வாழ்கிறோம் என்கிற உண்மையை பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு படியாக தங்கள் தேவைகளுக்கு தாங்களே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்ளும் வாழ்க்கைமுறைக்கு அவர்களை தூண்ட வேண்டும்.

உணவு
உணவின்றி அமையாது உலகு. பெண்கள் சமையல் கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று சொல்வதன் பொருள், பெண்கள் இனி சமைக்கவே கூடாது என்பதல்ல. உணவு எப்படி ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானதோ, அதுபோலவே சமைப்பதும் பொதுவானதாக ஆக்கப்பட வேண்டும். இன்னும் சில பத்தாண்டுகளில் இது நம் இல்லங்களில் சாத்தியப்படும். மாற்றத்தின் துவக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சமையலை,பெண்களுக்கும் பெண்களைச் சார்ந்திருக்கும் ஆண்களுக்குமாய் சொல்லித் தருவோம்.
ஓர் ஆணித்தரமான உண்மை, இன்றைய பெண்கள் இதழ்களின் விற்பனை சமையல் குறிப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறது. சமையல் குறிப்புகளைத் தாங்கிவரும் 32 பக்க இணைப்புகள் தருவதை நிறுத்தினால் பெண்கள் இதழ்களின் விற்பனை அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும். இதழின் விற்பனையே சமையல் குறிப்புகளால்தான் நடக்கிறது எனும்போது அதையாவது இந்த இதழ்கள் துல்லியத்தன்மையோடு, புதுமையான முறையில் தரலாம். இதழ்களில் வெளியாகும் சமையல் குறிப்புகள் அனைத்தும் ஏற்கனவே வெளியான அதே இதழிலிருந்து எடுக்கப்பட்டதாகவோ, அல்லது வேறு இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. இது இதழாசியர்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்தே நடக்கிறது. அளவீடுகள் துல்லியமாக இல்லாத, சமைப்பதற்கு கால கணக்கீடு சொல்லப்படாத இந்தச் செய்முறை குறிப்புகளை வைத்துக்கொண்டு, யூகமான சமையலைத்தான் செய்ய முடியும்.

அடுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கம் உண்டு. அந்தப் பகுதியில் கிடைக்கும் விளைப்பொருட்கள், தட்பவெப்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த உணவுப் பழக்கம். அவற்றைப் பற்றிய ஆய்வோ, அறிவோ இல்லாமல் எல்லோருக்கும் ஒரு பொதுவான உணவுப் பழக்கத்தை பரிந்துரைக்கின்றன இந்த இதழ்கள். இதனால் பாரம்பாரியமான உணவுக் குறிப்புகள் அழிவதோடு, நம் மண்ணின் தானியங்களும் அழிவைச் சந்திக்கின்றன. நம்முடைய உடலும் உணவு சார்ந்த பலவகை நோய்களுக்கு ஆளாகிறது.

நிதி மேலாண்மை
பெண்கள் சிக்கனமானவர்கள், வீட்டு பட்ஜெட் போடுவதில் சிறந்தவர்கள் என்கிற பொதுக்கருத்துகள் இங்கே உண்டு. வீட்டின் தலைவனான ஆண், அன்றாட செலவுகளுக்கு தரும் பணத்தை சிக்கனமான, திட்டமிட்டு பயன்படுத்தக்கூடியவர்கள் என்பதாக இந்த பொதுக்கருத்துகள் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி இவர்களை பொருளாதார அறிவு மிக்கவர்களாக கொள்ள முடியாது. ஒரு வீட்டின் வசதிகளைப் பெருக்கும் செலவுகள், எதிர்கால பொருளாதார தேவைகள் என பெரிய அளவிலான, முக்கியமான நிதி திட்டமிடல் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. இன்றைய பெண்கள் பணமீட்டுபவர்களாக இருக்கிறார்கள். தேவைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து இன்றைய பெண்களுக்கு விசாலமான பார்வை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நிதி மேலாண்மையில் நிறைய கற்றல் தேவைப்படுகிறது.

நடைமுறைச் செய்திகளையொட்டிய கட்டுரைகள்
பத்திரிகைகள் காலத்தின் கண்ணாடி என்று சொல்வதுண்டு. ஆனால் பெண்களுக்கான இதழ்கள் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்த எந்த பதிவுகளையும் செய்வதில்லை. உதாரணத்துக்கு, இப்போது மீண்டும் பெண்சிசுக்கொலை அதிகரித்துவருகிறது. இந்த செய்தி பெண்கள் இதழ்களின் கரிசனத்துக்கும் பார்வைக்கும் படாமலேயே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதாக புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இன்றைய தலைமுறைக்காக இயங்கும் ஒரு இதழ் பெண்களின் வாழ்வியலை கேள்விக்குட்படுத்தும் விஷயங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும்.

நுகர்வு வழிகாட்டி
அளவுக்கதிகமாக நுகர்வது இன்றைக்கு மேட்டிமைக்குரிய வாழ்வியலாகிவிட்டது. பெண்களை கண்மூடித்தனமாக நுகரத் தூண்டுவதில் பெண்கள் இதழ்களின் பங்கு அதிகம். நுகர்வு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டபோது, நுகர்வின் அளவைச் சொல்வது சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஓர் ஊடகத்தின் பணி. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை, உறங்கும் உறைவிடம், அதை அலங்கரிக்கும் பொருட்கள் என எது நல்ல நுகர்வு என்பதை சொல்ல வேண்டும்.

கலை
ஓவியம், சிற்பம், சினிமா, நாடகம், நடனம், இசை, நாட்டுப்புற கலை என கலைத்தொழில் செய்யும் பெண்கள் விருதுபெறும்போது மட்டுமே இங்கே கவனிக்கப்படுகிறார்கள். இதில் சினிமா கலைஞர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் பற்றி செய்திகள் நான்கு வரிகளோடு முடிந்துவிடுகின்றன. விருதுபெற்றவர்கள்தான் திறமைசாலிகள் என்கிற கருத்து வலுக்கட்டாயமாக இந்த இதழ்களால் திணிக்கப்படுகிறது. அதோடு விருது பெறாத திறமையான பல கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போகிறது.

மருத்துவம்
பெண்கள் இதழ்களில் வரும் பெரும்பாலான மருத்துவ கட்டுரைகள் பீதியை உண்டாக்குபவையாக இருக்கின்றன. சில சமயம் மூடநம்பிக்கையை வளர்ப்பவையாகவும் உள்ளன. நவீன மருத்துவத்தை ஆதாரமே இல்லாமல் எதிர்ப்பதும் பாரம்பரிய மருத்துவத்துவ முறைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் தற்போது பெண்கள் இதழ்களின் டிரெண்டாக இருக்கிறது. எந்தவித ஆய்வுத்தன்மையும் இவ்வகையான கட்டுரைகளில் இருப்பதில்லை. மாறிவரும் வாழ்க்கைமுறையில் நம் உடலின் தன்மையும் மாறுபடுகிறது, நோய்களும் புதிது புதிதாக உருவாகின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மருத்துவமுறையால், நவீன காலத்து நோய் குணமாகிறதென்றால் அதற்கான ஆதாரம், ஆய்வுமுறை உள்ளிட்டவைகளோடு கூடிய மருத்துவ ஆவணமாகத்தான் கட்டுரை எழுதப்பட வேண்டும். நவீன மருத்துவம் குறித்த கட்டுரைகளில், மருந்துகள் நோயைக் கட்டுப்படுத்தக்கூடியவையா அல்லது நோயை முழுமையாக குணமாக்கக்கூடியவையா என்கிற விவரங்கள் இடம்பெற வேண்டும்.

அறிவியல், தொழிற்நுட்பம்
அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் வளரும் ஒரு இந்தியப் பெண்ணால் புதுமையாக சிந்திக்கவும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் முடிகிறது. இங்கே இருக்கும் பெண்களால் சிந்தனை அளவில்கூட செயல்பட முடிவதில்லை. பெரும்பாலும் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாவே இருக்கிறார்கள். இந்நிலைக்கு அறிவியல் பார்வை இல்லாத சமூக அமைப்பு முதன்மையான காரணம். நம்முடைய ஊடகங்களும் இதில் அடக்கம். அறிவியலில் புரிதல், ஆர்வம் ஏற்படாதவரை புதிய புதிய கண்டுபிடிப்புகளை நகலெடுப்பவர்களாகவே நாம் இருப்போம்.

வரலாறு
உலகெங்கிலும் இதுவரை எழுதப்பட்ட 90 சதவிகித வரலாறு ஆண்களால், ஆண்களைப் பற்றி எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட பெண் சமூகத்தின் வரலாறும் மறக்கடிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் 10 சதவிகித வரலாற்றில் பெரும்பாலும் அரசிகள் பற்றி மிகைச் சித்திரங்களாகவே உள்ளன. வரலாற்றின் மூலைமுடுக்குகளில் தேடினால் சாதாரண பெண்ணின் வரலாறும் அகப்படலாம். இதன் மூலம் புதிய வரலாறு எழுதப்படலாம். வரலாற்றுப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள இன்றைய பெண்களுக்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித்தரலாம்.

குழந்தை வளர்ப்பு
மனிதக் குழந்தைகள் தாயின் அரவணைப்பில் வளரும்போது சிறந்த செயல்திறனோடு வளர்கிறார்கள் (அதனால் ஆண்களுக்கு குழந்தை வளர்ப்பில் பங்கில்லை என்பது இதன் பொருள் அல்ல.) என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பெண்கள் இதழ்கள் சொல்லும் மேலோட்டமான குழந்தை வளர்ப்பு முறைகளால் நல்ல அம்மாக்களையோ, அவர்கள் மூலமாக நல்ல குழந்தைகளையோ உருவாக்க முடியாது. இன்றைய நடைமுறைக்கு ஏற்றபடி, நிபுணர்களைக் கொண்டு சிறந்த செயல்திட்டத்தை உருவாக்கி அதை நம் இதழின் வாயிலாக சொல்லித் தரவேண்டும். பள்ளி வகுப்புகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் பிள்ளைகளுக்கு மீண்டும் பள்ளிப் பாடங்களைத்தான் பெரும்பாலான பெற்றோர் சொல்லித்தருகிறார்கள். கதைகள், பாடல்கள் மூலமாக அறத்தை போதிக்கும் குழந்தை வளர்ப்பு முறை இன்று காணாமல் போய்விட்டது. பெற்றோரைவிட மேம்பட்டவர்களாக உள்ள இன்றைய குழந்தைகளின் திறமைகள் மதிப்பெண்களுக்குள் குறுக்கப்படுகின்றன. மேம்பட்ட குழந்தைகளை வளர்க்க மேம்பட்ட முறை தேவைப்படுகிறது.

90களில் கூட்டுக்குடும்பமாக வசிப்பது பிரச்னைக்குரியதாக இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் தனிக்குடும்பங்கள் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தன. அன்று பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்லவில்லை. அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் பெரிதாக பிரச்னைகள் எதுவும் இல்லை. இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பது சிக்கலான விஷயமாகிவிட்டது. இந்த சிக்கலை தீர்த்து வைக்கக்கூடிய ஆலோசனைகளை இதழ் முன்வைக்க வேண்டும்.

உறவு மேம்பாடு
ஒரு குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் பெண்ணைச் சுற்றிய எல்லா உறவுகளும் இங்கே சொல்லப்படுகின்றன. இன்றைய சூழல் முந்தைய நூற்றாண்டில் இருந்த மாமியார், நாத்தனார் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டது. இன்றைய பெண்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல் தன் துணையுடனானது. தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சுதந்திரத்தன்மை அல்லது இன்னமும் கலாசாரத்தால் பிணைக்கப்பட்ட அடிமைத்தன்மை இந்த இரண்டும் இன்றைய பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. இதுவரை பெண்கள் இதழ்கள் முன்வைத்த ஆண், பெண் உறவு மேம்பாடு படுக்கையறை தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெண்களின் வாழ்வியலுக்கு இது மிகவும் பொருந்திப்போகும். இன்றைய பெண்கள் அறிவில் மேம்பட்டவர்கள். தன் துணையிடம் தனக்கு என்ன தேவையிருக்கிறது என்று அவர்களுக்கு வெளிப்படையாகவே கேட்கத் தெரியும். இன்றைய பெண்களின் பிரச்னை அவர்களுடைய உளவியல் சார்ந்ததாகவே இருக்கிறது. அதை சுட்டிக்காட்டி, அதன் மூலம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உறவை மேம்படுத்த வேண்டும்.

பராமரிப்பு குறிப்புகள்
பெண்கள் இதழ்களின் மொழியில் பராமரிப்பு என்பது அலங்கரிப்பது, தூய்மையாக்குவது என்பதாக இருக்கிறது. மற்றபடி வீட்டின் மேம்பட்ட வேலைகளான கணிப்பொறி,குளிர்சாதனங்கள் உள்ளிட்ட இயந்திரங்களை பராமரிப்பது ஆண்களுடையதாகிறது. அதாவது இவற்றைப் பராமரிப்பது பெண்களின் அறிவுக்கு எட்டாத செயலாகவும் மேம்பட்ட விஷயங்களுக்காக ஆண்களையே நம்பியிருக்க வேண்டும் என்று சொல்வதுபோலவும் இருக்கிறது. இதை உடைத்து வீடு முதல் அலுவலகம் வரை பராமரிப்பு தொடர்பான அத்தனை தகவல்களையும் சொல்லித்தர வேண்டும்.

சட்டம்
பெண்கள் இதழ்களால் கையாளப்படும் சட்டப் பக்கங்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற ஊடகங்களால் பிரபலமாக்கப்பட்ட சில சட்டங்களைப் பற்றியே திரும்ப திரும்ப நிரப்பப்படுகின்றன. வீட்டைத்தாண்டிய வெளியில் தேவைப்படும் சட்டபாதுகாப்பு குறித்து இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. சமஉரிமையை நிலைநாட்டவும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கவுமான சட்டங்கள் பற்றி பெண்கள் அறிய வேண்டும்.

ஆன்மிகம்
பொதுவாக எல்லா மதங்களுமே அறத்துடன் வாழுங்கள் என்பதைத்தான் சொல்கின்றன. நேரடியாக இதைச் சொல்லாமல் பூஜைகள், நோன்புகள் வழியாக இதை வலியுறுத்தின. ஆனால் இன்றைய பெண்களுக்கு தேவைப்படுவது இன்ஸ்டன்ட் ஆன்மிகம். சுற்றிவளைத்து இது செய்தால் இது விளையும் என்று சொல்வதைவிட நேரடியான முறையிலே அறத்தைச் சொல்லிக்கொடுப்போம். அறத்தோடு செயல்படுபவர்களால் ஆன்மவொளியைப் பெற முடியும். அதைத்தான் நம் இதழின் ஆன்மிகமாகச் சொல்ல வேண்டும். மதம்சார்பற்ற ஆன்மிகமாக இது இருக்கும். இன்றைய தலைமுறை விரும்புவதும் அதுதான்.

...மேலும்

Jan 29, 2014

மேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு !


பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி இருக்கிறார்கள்.

இந்தியாவின் கலாச்சார உயரடுக்கின் பெண் வெறுப்பு
(கவிதா பானோட் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
சென்ற வாரம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்தேறி இருக்கிறது. அதிகாரமும்  செல்வாக்கும் மிக்க தனது மேலதிகாரியை எதிர்த்துக் குரல் எழுப்பிய ஒரு பெண்ணின் துணிச்சலின் விளைவாக அதிகம் படித்த நவநாகரிகமான, நகர மயமாகிய, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் கலாசாரத்தைத் தழுவிய வர்க்கம் முதன் முறையாக, தன்னைத் தானே உற்று நோக்கிக் கொள்ளும்படி, வெகுகாலமாக, தான் அடைகாத்து வரும் ஆணாதிக்கத்தையும் பெண்கள் மீதான காழ்ப்பையும் எதிர் கொள்ள நேரிட்டிருக்கிறது.

பெண்பல ஆண்டுகளாக இதே வர்க்கம் தான், தங்களை விட இளைத்த வர்க்கங்களிடையே நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையை – காவல் துறையினர், மத அடிப்படைவாதிகள், பண்படாத அரசியல்வாதிகள், உழைக்கும் வர்க்க புலம் பெயர் தொழிலாளி, அல்லது தெருவில் பெண்களிடம் வம்பிழுக்கும் காலிகள் – இவர்களையெல்லாம் ஓயாது கண்டித்தும், ஏளனம் செய்தும், தோலுரித்துக் காட்டியும் வந்துள்ளது. ஆனால், இந்த உயர்ந்த வர்க்கத்தினரைச் சேர்ந்த ஆண்கள் ஒரு போதும் பெண்கள் மீதான தங்களது கண்ணோட்டத்தைச் சுயபரிசீலனை செய்து கொண்டதில்லை. போலவே இவ்வர்க்கத்தின் பெண்களும் இவர்களின் ஆணாதிக்கப் பார்வையைப் பல வழிகளில் அனுமதித்து வருவதோடல்லாமல், கண்டும் காணாமலும் செல்வதுமான தங்கள் குற்றத்தை உணர்ந்ததுமில்லை.

இந்தச் சம்பவமோ அதற்கு ஷோமா சௌத்ரியின் எதிர் வினையோ எனக்குச் சிறிதும் வியப்பளிக்கவில்லை. நான் பார்த்த வரை மிகவும் முற்போக்கான, பரந்த நோக்குள்ளதாகக் கருதப்படும் ஆங்கில ஊடகங்களிலும், கலை இலக்கிய உலகிலும் பெண்களைப் பற்றி மிகவும் பிரச்னைக்குரிய பார்வைகள் ஆழமாகப் பதிந்திருப்பதையும், அது குறித்து எந்த ஆணோ பெண்ணோ கேள்வி எழுப்பாமலிருப்பதையும் எப்போதோ கண்டு கொண்டேன்.

சல்மான் ருஷ்டி முதல் இந்தத் தலைமுறையைச் சார்ந்த சமித் பாசு, பலாஷ் கிருஷ்ண மெஹ்ரோத்ரா வரை ஆண் எழுத்தாளர்களின் பலரது படைப்பில் இதைக் காணலாம்.   அவர்களது பெண் பாத்திரங்கள் (நாயகிகள்) பெரும்பாலும் பக்குவப்படாத கற்பனை மிஞ்சிய உருவங்களே ஒழிய முப்பரிமாணமும் கொண்ட பெண்களாக இருப்பதில்லை. ஐம்பதுகளில் யஷ்பால் எழுத்தில் உருவான இந்திக் கதைகளின் நாயகிகளைப் போன்ற கரிசனம், புரிதல், மற்றும் செறிவுடன் தங்கள் பெண் பாத்திரங்களை உருவாக்கும் இந்திய அல்லது வெளி நாட்டு இந்திய ஆங்கில ஆண் எழுத்தாளர்கள் யாரையும் என்னால் காண முடியவில்லை.

ஆணாதிக்கம்பெண்கள் மீதான இவர்களது காழ்ப்பு அவர்களது முகநூல் சுவர்களில், உடலுறவு பற்றிய அவர்களது நிலைச் செய்திகளில், அழகிய, பெருமைக்குரியவர்களாகக் கருதப்படும் பெண்களுடனான அவர்களது புகைப்படங்களில் தெறிக்கிறது. அவர்கள் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களில், விருந்துகளில், உரையாடல்களில், அலுவலகங்களில் எல்லாம் அது வெளிப்படுகிறது. ’கெட்ட பசங்க’ என்ற தலைப்பிட்டு நடத்தப்படும் புத்தக வாசிப்பு நிகழ்வுகளில் கூட. பெருமதிப்பிற்குரிய எழுத்தாளரும் ஆசிரியருமான ஒருவர் தனது மாணவியை பாலியல் ரீதியாக கவர முயற்சித்ததும், புகழ் வாய்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உடன் வேலை பார்க்கும் பெண்ணையும் பாலியல் ரீதியாகச் சீண்டியதும் இங்கே சகஜமாக நடந்துள்ளது. ஆண்கள் இதழான மேக்ஸிம் இந்தியாவுக்காக எழுதும் ஆண் எழுத்தாளர்கள் பலர் செல்வாக்குள்ள அழகுப் பெண்களுடன்  புகைப்படங்கள் எடுத்து கொள்ளும் அளவிற்கு தமக்கு தொடர்பு இருப்பது பற்றிப் பீற்றிக் கொள்பவர்கள் தாம். இவர்கள் தாம் (எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள்) ஆபாசக் கார்ட்டூன் மீது அரசு கொண்டு வந்த தடையை எதிர்த்துப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய வீரர்கள்.

எப்படி இந்த அறிவு ஜீவி ஆண்கள் பெண்களை வெறும் கண்ணுக்கழகான, கைக்கடக்கமான காமப் பொருட்களாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு இதைப் போல் கணக்கிலடங்கா எடுத்துக்காட்டுக்களை என்னால் தரமுடியும். ஆம், அப்படிப்பட்ட பார்வைக்கும், அப்பொருட்களை எங்கு எப்போது விரும்பினாலும் நுகரலாம் என்ற மனப்பான்மைக்கும் வெகு தூரமில்லை; வேகமான சரிவு பாதைதான்.

இந்தச் சூழலில், இப்படிப்பட்ட ஆண்களுடன் வேலை செய்தும், வாழ்ந்தும் வருகிற நிலையில் பெண்கள் தங்கள் இயல்புக்காகவே நேசிக்கப்படுவோம் என்று எதிர்பார்க்க முடியாது. தாங்கள் செய்யும் வேலைக்காகவே மதிக்கப்படுவோம் என்றும் கருத முடியாது.

உண்மை என்னவென்றால் முன்னேறியாக வேண்டுமென்றால் மிதமான ஆணாதிக்கப் பார்வையைக் கண்டும் காணாது இருக்க வேண்டும். தங்கள் மூளைக்குள் ஒலிக்கும் அந்த முரணான குரலை அடக்கி விட்டு, தங்கள் அறிவுக்கும் திறமைக்குமான சலுகைகள் தாம் அளிக்கப்படுவதாக நம்பிக் கொள்ள வேண்டும். ஆனால், மீண்டும் மீண்டும், பெண்கள் உடல் சார்ந்த பண்டங்களாக மட்டுமே குறுக்கப் படுகின்றனர். இங்கே அப்படிப் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் தான் தெகல்காவினால் பணிக்கு அமர்த்தப்பட்ட அந்தப் பெண் ஊழியர். இருப்பினும், தெகல்காவுடன் நேரடியாக தொடர்பில்லாத திங்க் என்ற நிறுவனத்தால்  பெரிய இடத்து விருந்தினர்களான டி நீரோ போன்ற ஆட்களைக் கவனித்துக் கொள்ள, விழாவைத் தொகுத்தளிக்க உதவும் அழகிய முகமாக அவர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்.

இருவரும் மனமொத்து நிகழ்ந்ததாக அந்தச் சம்பவத்தைத் திருத்தி எழுத முனைந்த தேஜ்பாலின் தனிப்பட்ட இமெயிலுக்குப் பதிலிறுக்கும் விதமாக அந்தப் பெண் எழுதுகிறார் – “புயலும், இடிமேகங்களும் அல்ல, நான் எந்த அலுவலுக்காக அன்று உங்களைச் சந்தித்தேன் என்பது உங்கள் நினைவில் இருந்திருக்கக் கூடாதா என்று ஆதங்கப்படுகிறேன்…நமது உரையாடல் ‘விளையாட்டாகவோ’ சரசம் நிறைந்ததாகவோ இருக்கவில்லை; நீங்கள் ‘காமம்’ குறித்தும் ‘விருப்பம்’ குறித்தும் பேசிக் கொண்டிருந்தீர்கள். ஏனென்றால் எப்போதுமே என்னிடம் அப்படிப்பட்ட பேச்சைப் பேசவே விரும்புவீர்கள்; ஒரு போதும் என் வேலையைப் பற்றி அல்ல.”

ஒவ்வொரு பெண் ஊழியரும் இதைச் சந்திக்கிறார்.

பெண்நான் ஓராண்டு வெகு உற்சாகத்துடனும் கடமையுணர்ச்சியுடனும் ஓஷியன்ஸ் இலக்கிய நிறுவனத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு என் பணி முடிவுக்கு வந்த விதம் இவ்வாறானது. பிரபல நடிகரொருவர் பங்கேற்கவிருந்த அலுவலக விழாவொன்றில் மேடை மீது ஒரு விளம்பர அட்டையைத் தாங்கியவாறே ஒய்யார வலம் வருவதற்கு என்னையும் உள்ளிட்ட ஒன்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எங்கள் விருப்பம் குறித்துக் கேட்கப்படக் கூட இல்லை, என்னவோ அது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு பெருமை போல அதை செய்யும்படி உத்தரவிடப்பட்டது. புதிதாகச் சேர்ந்திருந்த முன்னாள் மாடல் ஒருவர் எங்களுக்கு எப்படி நடப்பது, என்ன உடுத்துவது என்றெல்லாம் கற்றுத் தருவார் என்றும் சொல்லப்பட்டது. நானும் கலை வரலாற்று நிபுணர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்த இன்னும் இரு பெண்களும் இதற்கு மறுத்தோம். ’நாங்கள் இதைச் செய்யமாட்டோம், இதற்காக இங்கே நாங்கள் பணிக்கமர்த்தப்படவில்லை’ என்று சுட்டிக் காட்டினோம். சினமுற்ற எங்கள் முதலாளி ’சொன்னபடி செய்யாவிட்டால் ராஜினாமா செய்துவிடுங்கள்’ என்று சீறினார். நான் ராஜினாமா செய்தேன் – எனக்கு இயன்ற அந்த வசதி என்னுடன் சேர்ந்து போராடிய அவ்விரு பெண்களுக்கு உட்பட பலருக்கும் இருக்காது.

கலை, ஊடகம் மற்றும் பதிப்பகத் துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தேஜ்பால் மற்றும் என் முன்னாள் முதலாளி போன்ற சக்தி வாய்ந்த ஆண்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றன. அசைக்கமுடியாத ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த கடவுளர்களின் தலைமையில் அவை சமய மரபுகள் போல் விளங்கி வருகின்றன. ஊழியர்களோ, குறிப்பாகப் பெண்கள் அவர்களைச் சுற்றி பக்தைகள் போல் வலம் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகப் பெண்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்கத் தொடங்கி இருந்தாலும் அவர்கள் ஆண்கள் சென்ற அதே பாதையைத் தான் பின்பற்றுகின்றனர்; அவர்கள் நடத்தியது போலவே, அதே சக்தியை உள்வாங்கிக் கொண்டு; தங்கள் நிறுவனத்தின் ஏனைய பெண்களை அதே போல் எந்த மரியாதையும் இன்றி நடத்துகின்றனர்.

நான் ராஜினாமா செயததைக் கேட்டு எனது உடனடி மேலதிகாரியான பெண்மணி ஒன்றுமில்லாததை நான் காரணமில்லாமல் பெரிதுபடுத்தி விட்டதாக மிகவும் கோபமடைந்தார். தனது பதினைந்து ஆண்டு பத்திரிகை மற்றும் பதிப்பகத் துறை அனுபவத்தில் இது போல் என்னவெல்லாமோ செய்து தான் முன்னிலைக்கு வரவேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும் இச்சம்பவத்தை நான் பகிர்ந்து கொண்ட வேறொரு பெண் பத்திரிகை ஆசிரியரோ அலட்சியமாகத் தோளைக் குலுக்கினார். ’அழகான இளம் பெண்களை’ நிறுவனங்கள் இவ்வாறு பயன்படுத்திக் கொள்வது எங்கேயும் நடப்பது தான். அவ்வளவு ஏன், தான் கூட தனது அழகைப் பயன்படுத்தித் தான் பணியாற்றும் இடங்களில் சலுகைகள் பெறத் தயங்கியதே இல்லை என்றும், முக்கியமான கூட்டங்களுக்குச் செல்லும் போது அழகாக உடையணிந்து கொண்டு போய் நினைத்ததைச் சாதித்ததுண்டு என்றும் கூறினார். இதே ஆசிரியர் தான் சமீப காலமாக இந்தியாவுக்கு மேற்கத்திய மாடல்கள், கவர்ச்சி நடிகைகள் எழுதிய டயட் மற்றும் உடற்பயிற்சி புத்தகங்கள், மில்ஸ் அண்ட் பூன் காதல் புத்தகங்களின் இந்தியப் பதிப்புகள், மற்றும் சிக் லிட் என்று சொல்லப்படும் இளம் பெண்களைக் குறிவைக்கும் காதல் கதைகள் போன்றவற்றை இந்தியாவுக்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இங்கிருக்கும் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வதாகச் சொன்னாலும், மேற்கத்திய முதலாளித்துவ மாதிரியைக் கொண்டு இந்தச் சந்தையை உருவாக்கியதே இவர் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் தாம்.

இந்த உயரடுக்கு உலகத்தின் பிரச்னைகளில் பெரும்பங்கு வகிப்பதே கண்மூடித்தனமாக மேற்குலக நாகரிகங்களைத் தழுவும் முயற்சியில், அதன் ஆண் முதலாளித்துவத்தையும் உடல் மற்றும் பாலியல் சுதந்திரத்தை மட்டுமே குறிக்கோளான அதன் பெண்ணியச் சிந்தனைகளையும் சேர்த்துத் தழுவி, சிதைந்து போனதொரு கலாசாரத்தைத் துப்பி இருக்கிறது; இதில் பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பெண்கள் – நகரத்தின் மேல்தட்டுப் பெண்கள் தங்களைப் பெண்ணியவாதிகளாக நம்பிக் கொண்டாலும் தாங்கள் மேலே செல்ல இயலாத முட்டுச் சந்தில் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை உணரவில்லை. மாறாக, பெண்களைக் காமப் பொருட்களாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள் மீதான தடைகளை அகற்றக் கோரி கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். தாங்கள் பெண்ணியவாதிகள் என்று பறைசாற்றியபடியே, வோக், காஸ்மாபாலிடன், எல்லி, போன்ற பளபளக்கும் மேற்கத்திய ஃபேஷன் இதழ்களில் மாடல்களாகக் கூட பணியாற்றுகிறார்கள்.

மேட்டுக்குடியின் பெண்ணியப் போராட்டங்களெல்லாம் கீழ்த்தட்டு மக்களின் ஆண்களையே குறிவைக்கின்றன. ஆண் பெண் இருபாலரும் எழுதும் அப்படிப்பட்ட எழுத்துக்களிலும் Pink Chaddi,  Mend the Gap, Slut Walk, Blank Noise Project போன்ற இயக்கங்களிலும் நிலவும் வர்க்கக் காழ்ப்பு என்னை சங்கடத்துக்குள்ளாக்குகிறது.

எளிய வர்க்கத்தினர் பல உண்மையான பிரச்னைகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்த மேல்தட்டு எழுத்துக்களும் போராட்டங்களும் தெருவில் போகும் அந்த நாகரிகம் குறைந்த ஏழை மனிதன் மீதிருக்கும் இவர்களது ஆழ்ந்த அச்சத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.  அலுவலகத்தில் மிகவும் எளிமையான, ஆங்கிலம் பேசத்தெரியாத ஒரு குமாஸ்தாவை அவனது மத அடிப்படைவாதத்துக்காக இவர்கள் ஏளனம் செய்வதாகத் தான் அமைகிறது. அவன் மதஅடிப்படைவாதியோ இல்லையோ அது பொருட்டில்லை.

உண்மையில் மேல்தட்டுப் பெண்களுக்கு உள்ள சக்தியையும், உழைப்பாளி மற்றும் கீழ் நடுத்தர வர்க்க ஆண்களின் மேல் இவர்களுக்குள்ள ஆதிக்கத்தையும், (தெருவில் விசிலடித்துத் திரியும் தருணங்களைத் தவிர) உணர்ந்து கொள்ள யாரும் அதிகம் முயற்சி எடுப்பதில்லை.

ஆகவே ”ஸ்லட்” (பாலியல் சுதந்திரம் பெற்ற பெண்) ஆகவும் ’பப்’களுக்குச் செல்வதற்கும் தங்களுக்கு வேண்டும் உரிமைக்காகவும் போராடுவது, மேற்குலகில் ஆனது போல் பெண்களுக்கு இன்னொரு சிறையாகத் தான் முடியும். – அது இன்னும்  ஆபத்தான சிறை, ஏனெனில் அங்கு பெண்கள் தாங்கள் சுதந்திரம் அடைந்து விட்டதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.

ஆணாதிக்கம், பாலியல் சில்மிஷங்கள், இவையெல்லாம் ’அறியாமையில் திளைக்கும்’ பாமர மக்களோடே சார்புபடுத்திப் பார்க்கப் படுவதால், மேல்தட்டுப் பெண்களுக்கு தாங்கள் அவமதிக்கப்படுவதையும், வன்முறைக்கு ஆளாவதையும், பாலியல் ரீதியாகத் தாக்கப்படுவதையும், பொருள் மயமாக்கப்படுவதையும் உணர முடிவதில்லை. அல்லது, அத்தகைய சூழலில் (தங்கள் தவறுகளால்) சிக்க வைக்கப்பட்டதாக உணர்வதால் பேச இயல்வதில்லை. ஏனென்றால் இவையெல்லாம், அழகான, பண்பட்ட, பரந்த நோக்குடைய பசப்புப் பேச்சுக்களால் போர்வையிடப்பட்டிருக்கின்றன. ஆகவே, வெளிப்படையான ஆணாதிக்கத்தை விடவும், பழம்பஞ்சாங்க ஆண்களின் அடக்குமுறையை விடவும் ஆபத்தானது என்று உணர வேண்டும்.

இந்தியப் பெண்கள் தற்போது தங்கள் சுதந்திரமான ஆசைகள், அபிலாஷைகள், காதல் மற்றும் உடல்ரீதியான சுதந்திரம் குறித்தெல்லாம் சிந்திப்பதால், பொதுப் புத்தியில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற பிம்பங்களெல்லாம் மாறி வருகிற இவ்வேளையில்,  அதிகாரபலம் வாய்ந்த ஆண்கள், குறிப்பாக நவநாகரிகமான மேல்தட்டுப் பிலுக்கர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள முனைகிறார்கள்.

அவர்களது செய்கைகளுக்கு நீங்கள் பணியாவிட்டால் நீங்கள் முற்போக்கானவள் இல்லை, பழமையான கட்டுப்பெட்டித் தனமானவள் என்பது தான் உங்களைச் சிக்கவைக்கும் கணக்கு. “ஒருவருக்கு மேற்பட்டவரை நீ காதலிக்கலாம்” என்றிருக்கிறார் தேஜ்பால், அப்பெண்ணிடம், கிட்டத்தட்ட ஒரு சவாலை முன்வைப்பது போல்.

காதல் இங்கு எங்கு வந்தது? ஆண்கள் பெண்களை அவர்கள் இயல்புப்படியே பார்க்க இயலாத வரை, அவர்களைத் தங்கள் சொந்த இன்பத்துகான காமப் பொருட்களாக நோக்கும் பாங்கு மாறாத வரை இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உண்மையான காதல் என்பது சாத்தியமே இல்லை.

வெளிப்படையாகப் பேசவும், தங்கள் இனத்தின் தடைகளை உடைக்கவும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் யாவையும் அவர்களைத் தங்கள் சுயவிருப்புக்காக இணங்க வைக்கவும், பின்பு அதற்கு அவர்களே காரணம் என்று சிக்கவைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தேஜ்பால் போதையேறிய தனது இமெயிலில் இவ்வாறு எழுதுகிறார்: “..அன்று நமது உரையாடல் சரசம் நிறைந்ததாக இருந்ததை நினைவு கூர்வாயாக. நாம் விளையாட்டாகவும் சரசமாகவும் காமம், உடலுறவு குறித்தும், ஒழுக்கம் என்பதன் மாயை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். மேலும், புயல் காற்றடித்த ஒரு நாள் மாலை, நான் இடிமேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்தாயே..அதையும்.”

இப்படித் தான் பெண்கள்  திறமையாகக் கையாளப்படுகிறார்கள். நடந்ததற்கு அவர்கள் தான் பொறுப்பு என்பது போலவும், எல்லாவற்றிலும் அவர்களுடைய பங்கும் இருப்பது போலவும். யாரோ ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்தால் அக்குற்றம் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் இது போன்ற சூழல்களில் பெண்கள் தாங்களும் காரணம் தானோ என்ற நினைப்பினால் பெரும்பாலும் அமைதி காத்திவிட நேர்கிறது.

ஆண் பெண் உறவுகள் மாறி வரும் கால கட்டங்களில் இது போல் இன்னும் பல நிகழ்வுகள் அரங்கேறக் கூடும் – பெண்கள் அவற்றை உள்ளது உள்ளபடி பார்க்க வேண்டியதும், ஆண்கள் தங்களைச் சுற்றியுள்ள பெண்களோடு எவ்விதமாகத் தங்களைப் பொருத்திப் பார்க்கிறோம் என்று ஆழ்ந்த சுயபரிசீலனை செய்து கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. நடந்த இந்தச் சம்பவம் நம்மை இது போன்ற முயற்சிகளுக்கு ஊக்குவிப்பதாய் அமையவேண்டும்; ஆண் பெண் உறவுகளுக்குப் புதிய நியதிகளை வரையறுக்கும் முயற்சியாய் அது அமைய வேண்டும்.

- கவிதா பானோட்
தமிழில் – தீபா

நன்றி: www.Kafila.org

லண்டனில் பிறந்து வளர்ந்தவர் கவிதா பானோட். இந்திய-பிரிட்டிஷ் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றை இயக்குவதற்காக தில்லி வந்தவர் இந்தியாவின் முதல் இலக்கிய நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். இவரது எழுத்துக்கள் பல ஆங்கில இதழ்களிலும் தொகுப்புகளிலும்  வெளிவந்துள்ளன.

நன்றி - வினவு
...மேலும்

Jan 28, 2014

” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட்சுமி


நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள்.

என்னை செதுக்கிய ஆசிரியர்கள் – 14
ஆசிரியர்களை பற்றி நினைக்கும்போது, வினவில் வந்திருக்கும் சொர்ணவல்லி மிஸ், ரங்கா மாஸ்டர் போன்ற ஆசிரியர்களை பள்ளிப் படிப்பின்போது கடக்கவில்லையே என்ற ஏக்க பெருமூச்சுதான் வருகிறது.

நான் சேர்ந்த முதல் பள்ளி அ.க.த. துவக்கப்பள்ளி (அ.க. தங்கவேலு முதலியார் துவக்கப் பள்ளி). பிடித்த  வாத்தியார் என்றால்  முதலில் நினைவுக்கு வருவது கன்னியப்பன் “சத்துணவு வாத்தியார்” இண்டர்வெல் பெல் அடிப்பதற்கு முன்பே வந்து, சாப்பாட்டு அட்டெண்டன்ஸ் எடுத்து விடுவார். “புள்ளைங்களா, தட்டு எடுத்துட்டு வரலையினாலும், பரவாயில்லை. தட்டு நம்மகிட்ட இருக்கு, சாப்பிட வந்துடுங்க, இன்னைக்கி முள்ளங்கி சாம்பார்.” என்று சொல்லி விடுவார். அது மட்டுமல்லாமல், நாங்கள் சாப்பிடுவதற்கு முன் அவரும் சாப்பிட்டு பார்த்து, சோறு பரிமாறும் போது, சோற்று கூடையுடன் முதல் மாணவன் முதல் கடைசி மாணவன் வரை தொடர்ந்து வந்து பார்வையிடுவார். வேட்டி சட்டையுடன், எண்ணெய் வழிய வாரிய தலைமுடி, அட்டெனஸ்சும் கையுடன் இருக்கும் கன்னியப்பன் சார் தினமும் வகுப்பில் பேசியது இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.

இரண்டாம் வகுப்பில் கணக்கு டீச்சர் (பெயர் ஞாபகம் இல்லை), நானும், என் தோழி தனலட்சுமியும் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், கணக்கு நன்றாக போடுவோம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் அடிப்பாதத்தில் நிரந்தரமான புண் இருக்கும், மேசையின் கீழ் எங்களை அமர வைத்து பல்பம் கொடுத்து விடுவார். எப்படி சொரிய வேண்டும் என்று ஒருமுறை சொல்லிக் கொடுத்து விடுவார். அவரின் வகுப்பு முடியும் வரை நானும், என் தோழியும் மாறி, மாறி அவருக்கு சொரிந்து விடுவோம். போகும் போது பரிசாக… ஒரு சாக்பீஸ் கொடுத்து விட்டு போவார். கணக்கு சொல்லிக் கொடுத்தால், மற்ற பிள்ளைகள் கவனிப்பார்கள். எங்களை சொரிய வைத்து விடுவதால் கவனிக்கவில்லை. அதற்கு தனி அக்கறை எடுத்துக் கொள்ளவுமில்லை அவர்.

பட்டு நெசவுஎனக்கு கணக்கு கற்றுக் கொடுத்தது, வட்டிக்கடைத் தாத்தாதான். வீட்டின் சூழ்நிலைக் காரணமாக, பட்டுத்தறித் தொழில் செய்யும் பொருட்களை அடகு வைப்பது வழக்கம். புத்தி தெரிந்ததிலிருந்து என்னைத் தான் அனுப்புவார்கள். பள்ளியின் மதிய இடைவெளியின்போது அடுத்த தெருவில் இருக்கும் வட்டிக்கடை தாத்தாவிடம் பட்டு, ஜரிகை அடகு வைத்து பணம் பெற்று வருவேன். கடன் ரசீதீல் கையெழுத்துப் போட்டதை பெருமையாகப் பேசிய காலம் அது. அவர்தான், “எடையை சரியா பாரு, என்ன கலர் பட்டுனு பாரு, எடைக்கு ஏற்ற பைசா கணக்குப் போட்டு சொல்லு” என்று சொல்லுவார், தவறாகத்தான் சொல்லுவேன். பிறகு அவரே பலகையில் கணக்குப் போட்டு காண்பிப்பார். வட்டிக்கடைக்கு சென்று வந்தால், 10 பைசா முதல் 50 பைசா வரை வீட்டில் கமிஷன் கிடைக்கும். அதை செலவழிக்க கணக்கு தெரிய வேண்டுமே?

அதற்கு உதவியவர், பள்ளியின் அருகில் முறுக்கு சுட்டு விற்கும், பெரியம்மா, அப்பளம் 5 பைசா, முறுக்கு 10 பைசா, 50 பைசாவுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டு, செயல் முறை விளக்கங்களுடன், கூட்டல், கழித்தல் கற்றுக் கொடுத்தவர். இப்படியாக, நான்கு வகுப்புகள் கடந்தாயிற்று. ஒன்றும் புரியாது. தோழிகளுடன் சென்று வருவது மகிழ்ச்சியாக இருந்ததால், படிக்க செல்வது மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து, ஐந்தாம் வகுப்பு. எச். எம். டீச்சர்னா அ.க.த. துவக்கப் பள்ளியே பயப்படும். அவர்தான் ஐந்தாம் வகுப்பு டீச்சர் மற்றும் ஆங்கில டீச்சர். அவர் மீது இருந்த பயம் ஆங்கிலம் மீதும் தொற்றிக் கொண்டது. அதுவரையில் அ.க.த. பள்ளியாக இருந்தது. ஆகாத பள்ளியாக மாறியது.

அவரிடமிருந்து தப்பிக்க வழிகாட்டியது தெலுங்கு வகுப்பு, அப்போது எங்கள் பள்ளியில் தெலுங்கு இரண்டாம் மொழியாய் கற்பிக்கப்பட்டது. இதில், தெலுங்கு பேசுபவர்கள் சேருவார்கள். ஆனால் தெலுங்கே தெரியாத நானும் என்தோழியும் சேர்ந்தது, ஆங்கிலத்திடம் இருந்து தப்பிக்க. தெலுங்கு புரியாவிட்டாலும் தெலுங்கு வாத்தியார் பிடிக்கும் நிறைய பாடல்கள் சொல்லி தருவார். மாணவர்களுடன் சகஜமாக பழகுவார்.

ஆயுத பூஜையின் போது நாங்கள் அனைத்து தலைவர் போட்டோக்களுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து பூ சூடி விட்டோம். அதில் பெரியாரின் படமும் அடக்கம். இதை பார்த்த தெலுங்கு வாத்தியார், உடனே ஏறி,  ஈரத்துணியால் அதையெல்லாம் துடைத்துவிட்டு, எங்களுக்கு விளக்கினார். மாணவர்களிடையே, எழுந்த பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். “சாமியே இல்லைனு ஒருத்தர் சொன்னாரா? அப்ப எப்படி பாஸாக முடியும்?” என்ற கேள்விகளுக்கு, “நீதானே படிக்கப் போறே? நீ தானே எழுதப்போறே? சரியா எழுதினா மார்க் போட்டே ஆகணும். இதற்கு சாமியெல்லாம் ஒன்னும் தேவையில்லை” என்று எளிமையாக விளங்க வைத்தார்.

கடைசிவரை ஆங்கிலத்தில் கவனம் செல்லவேயில்லை. ஐந்தாம் வகுப்பு வரை ஏபிசிடி தெரியும் அவ்வளவுதான். ஆனால், கணக்கும், தமிழும் சேர்ந்து என்னை பக்கத்தில் இருக்கும், அ.க.த. உயர்நிலைப் பள்ளிக்கு தள்ளிவிட்டது.

6-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு முடிந்து ரேங்க் கார்டு கையில், ஆங்கிலத்தில் பெயில். ஆனால், இரண்டாம் ரேங்க். தமிழை மேலும் இலக்கணப் பிழை இல்லாமல் எழுத வைத்தது தமிழாசிரியை சந்திரலேகா அம்மாதான். எல்லா மாணவர்களுக்கும் இவரை ரொம்ப பிடிக்கும். .எல்லா மாணவர்களையும் எழுந்து நின்று கதை சொல்ல சொல்லுவார். “நல்லா படிச்சா டீச்சர் ஆகலாம்” என்று அடிக்கடி சொல்லுவார்.

கணக்கு எனக்கு நல்லா வரும். ஆனா, இராமனுஜம் சார் (ஐயர் சார்) என்றுதான்  அழைப்பார்கள். யாரிடமும் சகஜமாகப் பேச மாட்டார். நல்லா படிக்கறவங்களை மட்டும்தான் கவனிப்பார். படிக்காதவங்களை பிரம்பால் அடிப்பார். காதைப் பிடித்து திருகுவார். வட்டிக்கடை தாத்தா, வரவழைத்த கணக்கை பயந்து ஓட வைத்தார்.

இப்படியாக, எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை. ஆனால், சந்திரலேகா அம்மா மட்டும் தினமும் மாணவர்களை அனுப்புவார்கள், “ஜெயலட்சுமியை அவளது பெற்றோருடன் அழைத்து வாருங்கள்” என்று. அதை சென்று கேட்கும் நிலையிலும் நாங்கள் இல்லை. குடிகார தந்தையிடமிருந்து விலகி, தனியே அம்மாவுடன் இருந்தோம். காஞ்சிபுரம் என்பதால், காலாட்டி (பட்டு தறி நெய்து) சோறு தின்ன ஆயத்தமானோம்.

சரோஜா அக்கா, எனது தொழிற்கல்வி, வாழ்க்கை கல்வி ஆசிரியர். பட்டு சேலைகளை ஆண்களே பெரும்பான்மையாக நெய்வார்கள். பெண்கள் மேல் வேலைகளை கவனித்துக் கொள்வார்கள். ஆனால் சரோஜா அக்கா ஆண்களை விடவும் நேர்த்தியாக சேலை நெய்வதில் வல்லவர். வீட்டு வேலைகளையும் திறம்பட செய்வார். இந்த கைப்பக்குவத்தை எனக்கும் வரப்படுத்தினார். “பொம்பளைங்க, எல்லா வேலைகளையும் நல்லா செய்ய கத்துக்கணும், எதுக்கும், யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது.” என்று அடிக்கடி கூறுவார்.அதன்படியே நடந்தும் காட்டுவார். வீட்டு வேலைகளையும் முறையுடன் கற்றுத் தந்தார். வீட்டு வேலைகளையும், கைத்தொழிலும் கற்றுக் கொண்டதற்கு இவர்தான் முக்கிய காரணம்.அங்கும் நிரந்தரமாக இருக்க முடியாத சூழ்நிலை.

அங்கிருந்து, அம்மாவை பெற்ற பாட்டி வீட்டிற்கு பயணம். இரண்டு வருடங்களாக விடுபட்ட கல்வியை கற்க வேண்டிய சூழ்நிலை பாட்டியால் அமைந்தது. பல்லாவரத்தில் இருந்த சாஸ்தா டுடோரியலில் சேர்ந்து, பம்மலில் இருந்த ராதை மிஸ்ஸிடம் டியூசன் சென்றேன். பாஸ் ஆவதற்கு தேவையானவற்றை ராதே மிஸ் சிரத்தையுடன் சொல்லி தந்தார். ஏனென்றால், நான் கொஞ்சம் நல்லா படிக்கிறதாலே எல்லாருக்குமே என் மீது ஒரு பாசம். அவரின் முயற்சியால், அந்த வருடம் டுடோரியலில் தேர்வுக்கு சென்றவர்களில் நான் மட்டுமே கணிசமான மதிப்பெண்களுடன் தேர்ச்சிப்பெற்றேன்.

நர்சிங் பயிற்சிஅடுத்து, எ.என்.எம் நர்ஸிங் கோர்ஸ், தக்கர் பாபா வித்யாலயா. இங்கு எனக்கு அமைந்த ஆசிரியை சகுந்தலா மேடம். அவர்களும் படிப்பை முடித்து அப்போதுதான் சேர்ந்தார்கள். அவர்கள் கற்றுள்ளதை அன்றே எங்களுக்கு கற்றுக் கொடுத்து விட வேண்டும் என்று பொங்கும் ஆர்வத்துடன் சொல்லிக் கொடுப்பார். செய்முறை பயிற்சிக்கு பப்ளிக் ஹெல்த் சென்டர் மேற்கு மாம்பலம். செய்முறை பயிற்சிகளையும் தானே முன்வந்து செய்து காட்டி சொல்லிக் கொடுப்பார். தன்னையே நோயாளியாக பாவித்து வகுப்பெடுப்பார். ஊசி போட கற்றுக் கொடுக்க அவருக்கே  டி.டி. ஊசியை எங்களிடமே போட்டுக் கொண்டவர். ஒவ்வொரு பாடத்தையும் இரண்டு முறை நடத்தி, விவாதத்திற்கு உட்படுத்துவார். மற்றவர்களுடன் பழகுவது, நோயாளிகளை அணுகுவது போன்றவற்றை கற்றுத் தந்தவர். இந்த வகுப்பில் முதல் மாணவியாக தேற இவர்தான் காரணம். எங்களை விட்டுப் பிரியும் கடைசி நாளில்  தன் வீட்டிற்கு அனைவரையும் அழைத்து சென்று வைத்த விருந்து மறக்க முடியாதது. தற்போது எக்மோர்  அரசு கண் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

படிக்க ஊக்கமூட்டி, வெளியில் சென்றுவர தைரியமூட்டி அன்புடன் அறிவூட்டிய ஆயா (அந்தக் காலத்திலேயே திருமணத்திற்கு பிறகும் திண்ணைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்தவர்.) நான் வேலைக்கு சென்ற பிறகும், “ஏம்மா ஏதோ படிக்கனுமுனு சொல்றாங்களே, நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன்” என்று என்னை மீண்டும் துரத்தி, ஆங்கிலம், தமிழ் தட்டச்சு மற்றும் கரஸ்சில் பிபிஎ முடிக்கவும் துணை நின்று எனது வளர்ச்சியை மற்றவர்களிடம் கூறி பெருமைப்பட்ட பாட்டியை நினைக்க வேண்டிய தருணம் இது.

நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள். நான் எப்படியோ கரை சேர்ந்தேன். காரணம், ஒரு கைத்தொழிலும், அருகாமை மனிதர்களின் ஆதரவும்தான். இப்படியாக, பள்ளி கல்வியிலும், வாழ்க்கைக் கல்வியிலும் என்னை செதுக்கிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் தருணம் ஏற்படுத்திய வினவுக்கு நன்றி.

-லட்சுமி
...மேலும்

Jan 27, 2014

ஜாதிப் பிரச்னையை தோலுரிக்கும் படம்!


நம் நாட்டில் பல கிராமங்கள் ஜாதீய வன் கொடுமைகளையும் பெண் கொடுமைகளையும் சந்தித்துள்ளன. இன்றும் அதன் சுவடுகள், தழும்புகளைத் தாங்கிக் கொண்டு மௌன சாட்சிகளாக நிற்கின்றன கிராமங்கள். அப்படி சாட்சியாக நிற்கும் ஒரு கிராமத்தில் நடந்த கதையின் திரைக்காட்சி வடிவம்தான்  ‘நம்ம கிராமம்’ படம்.
இதுவரை படங்களில் ஜாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவை வணிகப் பார்வை கெட்டு விடாதபடி மேம்போக் காகவே சொல்லப்பட்டு வந்துள்ளன.
ஜாதிக் கொடுமையின் அடக்குமுறையும் பெண்ணினத்தின் ஒடுக்குமுறையும் இதுவரை இல்லாத அளவுக்கு– சொல்லாத அளவுக்கு ரத்தமும் சதையுமாக சொல்லப்பட்டு இருக்கும் படம் ‘நம்ம கிராமம்.’ இப்படத்தில் நடித்த நடிகைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

‘நம்ம கிராமம்’ படத்தை இயக்கியிருப்பவர் மோகன் சர்மா. இவர் புனே திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.
தமிழில் ‘தூண்டில்மீன்’ ‘நாடகமே உலகம்’ ‘ஜெனரல் சக்கரவர்த்தி’, ‘ஏணிப்படிகள்’, ‘சலங்கை ஒலி’ போன்ற படங்களிலும் மலையாளத்தில் ‘சட்டக்காரி’, ‘நெல்லு’, ‘சலனம்’, ‘பிரயாணம்’,'ஜீவிக்கான் மறந்து போய ஸ்திரி’ ‘தீக்கனல்’ ‘கயலும் கயிறும்’ போன்ற  படங்களிலும் நடித்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தயாரிப்பிலும் நடிப்பிலும் தொடர்ச்சியாக இயங்கி வந்த இவருக்கு தான் படம் இயக்கினால் வழக்கமல்லாதபடியும் சமூகச் சிந்தனையுடனும்தான் இயக்கவேண்டும் என்ற தீர்மானம் இருந்தது. அதன்படியே தன் மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த உண்மைச் சம்பவத்தை எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்துக்கு 2012-ன் சிறந்த குணச்சித்திர நடிகையாக சுகுமாரிக்கும் சிறந்த உடைகள் அமைப்புக்காக இந்திரன் ஜெயனுக்கும் என இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது படத்தின் பெருமைகளில் ஒன்று.
தேசிய விருது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள தமிழக முதல்வரைச் சந்தித்த சுகுமாரியிடம் வாழ்த்து கூறிய முதல்வர், படம் பற்றி விசாரித்துள்ளார். சுகுமாரி படம் பற்றிக் கூறியதும் ஆர்வமாய் பார்க்க விரும்பி பார்த்ததுடன் நெகிழ்ந்து பாராட்டியும் இருக்கிறார். இது இன்னொரு பெருமை.
படம் பற்றி மோகன் சர்மா கூறுகையில் “இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவம். இது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. நம் நாட்டில் ஜாதிக் கொடுமை எந்த அளவுக்கு கொழுந்து விட்டு எரிந்தது என்பதற்கும் சமுதாயத்தில் பாதியளவு உள்ள பெண்களுக்கு எவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உண்டு. என்னைப் பாதித்த ஒரு கிராமம் பற்றியதுதான் இப்படம். ஒரு அக்கிரகாரத்தில் நடப்பவைதான் இந்தக் கதை. “என்கிறார்.

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தீவிர யதார்த்த சினிமா தாக்கம் கொண்டவர்கள். மோகன் சர்மா எப்படி?
“நான் இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தபின் நண்பர்கள் ஏன்  இந்த வேண்டாத வேலை என்று.கேட்டனர். இந்தக் கதையைத்தான் எடுப்பது என்று நான் பிடிவாதமாக இருந்தேன்.  17 படங்களைத் தயாரித்திருக்கிறேன். இயக்கினால் இதைத்தான் இயக்குவது என்பதில் உறுதியாக இருந்தேன். இந்தப்படம் எடுத்ததில் எனக்கு ஒரு லட்சியம்– நோக்கம் இருந்தது. எனக்கு ஆத்ம திருப்தி கிடைத்துள்ளது. இது விறுவிறுப்பாகவும் யதார்த்த தன்மையுடனும் இருக்கும். ஆவணத்தைப் போல அவ்வளவு உண்மைத் தன்மையுடனும் இருக்கும். இது யதார்த்த சினிமாவுக்கான இலக்கணம் சிறிதும் மாறுபடாமல் இருக்கும்.” என்கிறார் நம்பிக்கையுடன்.

படத்தின் நாயகன் நிஷாந்த் நாயகி சம்ருதா இருவரும் புதுமுகங்கள். ஒய்.ஜி. மகேந்திரன், பாத்திமா பாபு, நளினி ஆகியோருடன் மோகன் சர்மாவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆவணங்களின்படி இது 100 ஆண்டுக்கு முன் நடந்த கதை என்றாலும் இப்படத்தின் கதை 1935 ல் தொடங்கி 1947 ல் முடியும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக அக்காலச் சூழல்படி கதை, நிகழ்விடம், காட்சிகள் அமைக்க மிகவும் சிரமப்பட்டு ஆய்வு செய்து விவரம் சேகரித்துள்ளனர். இடம், மனிதர்கள், உடைகள், சாதனங்கள் பற்றி தீவிர கவனம் செலுத்தி எடுத்துள்ளனர். கோவை அருகில் தத்தமங்கலம் என்கிற ஊரில்தான் படத்தின் பெரும்பகுதி  எடுக்கப்பட்டுள்ளது. காட்சிப் பின்புலத்தை உருவாக்க கலை இயக்குநர் பாவாவும் ஏற்ற ஒளியமைப்பு செய்ய ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டும் நிறையவே உழைத்துள்ளனர். இசை- பி.என். சுந்தரம். படத்தொகுப்பு- பி.லெனின். இயக்கம்- மோகன் சர்மா.தயாரிப்பு-குணசித்ரா மூவீஸ்.
ஜனவரி 3-ல் ஒவ்வொரு ஊரிலும் பேசப்பட வருகிறது ‘நம்ம கிராமம்’.

நன்றி - http://fourladiesforum.com/
...மேலும்

Jan 26, 2014

’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்?’’


சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு பெண்கள் இதழில் நிருபராக பணியாற்ற நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தேன். ஏற்கனவே அந்த இதழின் ஆசிரியர் என்னுடைய எழுத்துத் திறனையும் நிருபராக பணியாற்றுவதற்கான மற்ற திறன்களையும் சோதித்து என்னை பணிக்குத் தேர்வு செய்திருந்தார். ஆனால் அலுவல் ரீதியாக என்னை முறைப்படி நேர்முகமாகத் தேர்வு செய்யும் பொருட்டு அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். நானும் அவர் சொன்ன நேரத்தில் சென்றிருந்தேன்.

பெண் பத்திரிகையாளர்ஆசிரியர் என்னை அந்த இதழ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் அறைக்கு அழைத்துச் சென்று என்னை மேனேஜிங் டைரக்டருக்கு அறிமுகப்படுத்தினார். மேனேஜிங் டைரக்டர் என்னை சோதிக்கும் விதமாக, ‘‘நிருபர் என்ற முறையில், எங்கே இந்த இதழின் ஆசிரியரை பேட்டி எடுங்கள், பார்க்கலாம்?’’ என்றார்.

எதிர்பாராத விதமாக ஆசிரியருக்கும் எனக்கும் சிறு அதிர்வைக் கொடுத்தது, அவரின் இந்த வினவல். அடுத்த சில நொடிகளில் ஒரு நிருபராக கேள்விகளை மனதுக்குள் தயாரித்துக் கொண்டு, ஆசிரியரை பேட்டி காண தயாரானேன். முழுவதுமாக நினைவில்லை என்றாலும் அந்த பேட்டி அப்போது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. அதில் மறக்க முடியாத ஒரு கேள்வியும் பதிலும்…

‘‘பெண்கள் இதழ் என்றாலே சமையல், வீட்டுப் பராமரிப்பு என்றாகிவிட்டது. ஏன் இதைத் தாண்டி பெண்களுக்குச் சொல்ல வேறு எதுவும் இல்லையா?’’ இது என் கேள்வி…

‘‘எடுத்த உடனேயே பெண்களுக்கு புரட்சிகரமான விஷயங்கள் சொன்னால், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்பிக்கைகளை உடைக்கும்படி உண்மைகளைச் சொன்னால் ‘இது நமக்கான இதழ் இல்லை’ என்று நம்மை விட்டுப் போய் விடுவார்கள். மெதுமெதுவாகத்தான் அவர்களை சமையல் கட்டிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும்’’ இது ஆசிரியரின் பதில்…

அந்த சமயத்தில் இந்த பதில் மிகச் சரியாகவே பட்டது. ஆனால் ஆசிரியர் சொன்னபடி, அந்த இதழின் உள்ளடக்கம் 12 ஆண்டுகளாக சமையல்கட்டையும் வீட்டையுமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை விட்டு வெளியேறவில்லை. தமிழில் விற்பனையாகும் அரை டஜன் பெண்கள் இதழ்களில் அது இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது. பெண்கள் சமூக ரீதியாக எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட பிறகும் 80களில் இருந்த பெண்களின் வாழ்வியலைச் சொல்வதுபோல் இருக்கிறது இந்த இதழின் உள்ளடக்கம்.

ஏதோ ஒரு இதழை குறைவு கூறுவது போல் தோன்றலாம். உண்மையில் அட்டையை அகற்றிவிட்டால் எல்லா பெண்கள் இதழ்களின் உள்ளடக்கமும் ஒன்றுதான். இது முழுக்க, முழுக்க வியாபாரமாகக்கூட இருக்கலாம். ஆனால் மாறிவரும் காலகட்டத்துக்கு இவை பொருந்தி வரும், இந்த இதழ்கள் நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இதழ்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்த, மக்களின் வாழ்வியலில் வேகமாக மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் இங்கே ஆழமாக வேரூன்றி வருகின்றன. அவற்றின் அசுர வளர்ச்சியில் இந்த அரதப் பழசான உள்ளடக்கம் காணாமல் போய்விடும்!

பெண்கள் இதழ்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில் மிக மிக பின்தங்கியிருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு நகரத்தில் வாழ்ந்த ஒரு 40 வயது பெண்ணின் வாழ்க்கை முறையோடு, இன்று 40களில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையை ஒப்பிட முடியாது. முந்தைய தலைமுறையில் திருமணமான பெண்களுக்கு மாமியாருடனான சிக்கல்கள் அதிகம், ஆனால்  இன்றைய திருமணமான பெண்களின் சிக்கல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இன்றைய பெண்களுக்கு பண்டிகை நாட்களை கொண்டாடுவதற்கு நேரம் இல்லை, அல்லது அவ்வளவு பொறுமை இல்லை. இன்னமும் நீட்டி முழக்கி ஆன்மீகத்தை பூஜைகளுக்குள்ளும் விரதங்களுக்கும் அடைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் இதழ்களின் அறியாமையை என்ன சொல்வது?

ஒருபுறம் பெண்கள் சுதந்திரத்தை சுவாசிக்கிறார்கள், இன்னொரு புறம் வீடுகளில் ஆரம்பித்து பணியாற்றும் இடங்கள் வரை பல அத்துமீறல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் தமிழில் வெளிவரும் எந்த பெண்கள் இதழும் கண்டுகொள்வதில்லை. இவர்களைப் பொறுத்தவரை பெண்கள் எல்லாம் சுபிட்சமாகவே இருக்கிறார்கள். பெண்கள் இரவுநேர பணிகளுக்குப் போவதை ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இரவில் ஒரு பெண் தனியாக பயணம் செய்வதை விவாதத்திற்குரியதாக பார்க்கிறது. இந்த முரண்பாட்டை எடுத்துச் சொல்லும் ஊடகங்களோ, முக்கியமாக பெண்களுக்காக உள்ள இதழ்கள் எங்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதுபோல் மெளனிக்கின்றன. சமூகப் பிரச்னைகளை பொதுவெளியில் பேசி, அந்தப் பிரச்னையை தீர்வை நோக்கி செலுத்தும் வல்லமைமிக்க இந்த ஊடகங்களின் மெளனம் பெண் சமூகத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய். பெண்களை பாதிக்கும் அரசியல், சமூக பிரச்னைகளை மட்டுமல்ல பெண்களை உயர்த்தக்கூடிய நல்லவற்றைக்கூட இந்த இதழ்கள் பேசுவதில்லை.

பொதுவாக பெண்கள் இதழ்களில் பணியாற்றுபவர்களை இரண்டாம்பட்சமான இதழாளர்களாகவே மற்ற இதழாளர்கள் நினைப்பதுண்டு. சமையல், வீடு பராமரிப்பு, அழகு குறிப்பு இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவுமே எழுதத் தெரியாது என்கிற நினைப்புதான் காரணம். ஒருவகையில் இது உண்மையும்கூட.. தொடர்ந்து பெண்கள் பத்திரிகைகளில் அரைபட்டுக்கொண்டிருக்கும் இந்த விஷயங்களைத் தவிர, இவர்களுக்கு வேறு எதுவும் யோசிக்கத் தெரியாது. சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.

இதுபோன்ற ஒரு இதழில் பணியாற்ற நேர்வதே ஒரு சாபம்தான். இதில் தினக்கூலியாக வேலை பார்த்தால் எப்படியிருக்கும்? இந்த தினக்கூலி அனுபவங்களை பிறிதொரு தருணத்தில் பகிர்கிறேன்.

நன்றி - வினவு
...மேலும்

Jan 25, 2014

சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும்!


மழை போல் பொழிந்து தள்ளபட்டுக்கொண்டிருந்த குண்டுகளிடம் இருந்து தப்ப பதுங்கு குழிகளை தேடி பாய்ந்து ஓடினார்கள். காடுகளிற்குள் பாம்புகள் சீறிக் கொண்டிருந்த பற்றைகளிற்கு பக்கத்தில் பயந்து ஒளிந்திருந்தார்கள். ஆண்களிற்கும், பெண்களிற்கும் மரணம் அங்கு பொதுவாக இருந்தது. ஆனால் பெண்கள் மீது அங்கு இன்னுமொரு கொலை நடந்தது. அது மரணத்தை விட கொடுமையானது. மரணத்துடன் எல்லாம் முடிந்து விடும். ஆனால் கரும் பச்சை சீருடை அணிந்தவர்களால் சிதைக்கப்பட்ட பெண்களது உடலும், உயிரும் வாழ்நாள் முழுதும் மரணத்தில் வாழும். அவர்கள் சிறுமிகள், இளம் யுவதிகள், நடுத்தரவயது பெண்கள், உடல் தளர்ந்த முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்கவில்லை. இறந்த பெண் போராளிகளின் உடல்களை கூட வெறி கொண்டு சிதைத்தார்கள்.

பிரான்சிஸ் காரிசன் எழுதிய ஈழம், சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்ற நூலில் வன்னி போர்ப் பிரதேசத்திற்கு வெளியில் வவுனியாவில் மணிமொழி என்ற பெண்ணிற்கு வவுனியா காவல் நிலையத்தில் நடந்த கொடுமைகளை பதிவு செய்கிறார். மணிமொழி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். அது முடிந்து விட்டது என்று அவர் நினைக்கையில் இன்னொரு சி.ஜ.டி வந்தான். அவனும் அவரை வன்புணர்வு செய்தான். 'அவர்கள் மிருகங்களைப் போல. நான் அழுதேன். அந்த நேரம் நான் நாற்பது நாள் கர்ப்பிணி. இரத்தம் கசிந்தது. கருச்சிதைவு ஏற்பட்டது. இலஞ்சம் கொடுத்து வீடு வந்த பிறகு நான் இருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். எனக்கு நிம்மதி என்பதே இல்லாமல் போய் விட்டது"

இவை யுத்தத்தின் மரணப்பிடிக்குள் சிக்குண்டு உலகத்தின் பார்வைக்கு வராமல், பதிவுகள், சாட்சியங்கள் எதுவுமின்றி அப் பெண்களினதும், அவர்களினது குடும்பத்தினரினதும் மனங்களில் மட்டும் காலகாலத்திற்கும் தேங்கிப் போய் நிற்கும் கொடுமைகள் என்றால் போர் நடக்காத மற்றப்பிரதேசங்கள், இன ஒடுக்குமுறைக்கு உட்படாத சிங்கள இனப்பெண்களிற்கும் இதே மாதிரி கொடுமைகள் தான் நடக்கின்றன. ஒவ்வொரு தொண்ணூறு நிமிடத்திற்கும் ஒரு இலங்கைப் பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். ஒவ்வொரு வருடமும் பாலியல் வன்முறைகள் கூடிக்கொண்டே செல்கின்றன. 2008இல் 1582 பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 1157 பேர் பதினாறு வயது கூட தாண்டாத சிறுமிகள். 2012 இல் 1653 பெண்கள்வன்கொடுமைக் ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் 1405 பேர் சிறுமிகள்.

இப்படியான குற்றச்சாட்டுக்கள் எழும் போதெல்லாம் இலங்கை அரசின் நற் பெயரைக்கெடுக்க சதி, தேசத்தை காட்டிக் கொடுக்கும் பயங்கரவாதிகளின் பச்சைப்பொய்கள், இலங்கையை இன்னொருசொர்க்கமாக மாற்ற இருக்கும் ஜனாதிபதிக்கு அபகீர்த்தி உண்டு பண்ணும் அயோக்கியர்களின் அலம்பல்கள் என்று அதிபர் முதல் அமைச்சர் பெருமக்கள் வரை அலறித் திரிவார்கள்.

அவர்களால் மாற்றவோ, மறுக்கவோ முடியாது. ஏனெனில் இந்த புள்ளிவிபரங்களை கொடுத்தவர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா. கொடுத்த இடம் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றம். பொலிசில் முறைப்பாடு செய்த வன்முறைகளே இத்தனை ஆயிரம் என்றால் பதிவு செய்யப்படாத வன்கொடுமைகள் எத்தனை ஆயிரம் இருக்கும். அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்கத்தாலும்,ஆயுதப்படைகளாலும் கதறக், கதற கசக்கி எறியப்பட்ட பின்பு காற்றோடு கலந்த கதறல்கள் எத்தனை ஆயிரம் இருக்கும்.

சிறுவயது பெண்கள் பெரும்பாலும் அவர்களிற்கு தெரிந்தவர்களாலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். குடும்பத்தவர்கள், உறவினர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள், மதகுருக்கள் என்று பலதரப்பினராலும் அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கட்டற்ற ஊடகவளர்ச்சி காரணமாக வீட்டிற்குள்ளேயே வந்து விழும் அழிவுக் கலாச்சாரத்தின் கழிவுகள், அதிகரித்து வரும் மதுபாவனை, வறுமை காரணமாக மனைவிகள் வெளிநாட்டிற்கு வேலைக்கு போக தனித்து விடப்படும் கணவர்கள், பாலியல் கல்வியை பள்ளிகளில் கற்பித்தால் உலகமே அழிந்து விடும் என்று ஊளையிடும் கலாச்சாரக்காவலர்கள் என்பன இக்குற்றங்களிற்கு பெரும்பாலான காரணிகளாக அமைகின்றன.

காவல் துறையும், நீதி மன்றங்களும் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று சீர்திருத்தவாதிகள் கோருகின்றனர். களவு, கொலை, ஊழல், லஞ்சம், அதிகார துஸ்பிரயோகம் என்று உடல் முழுக்க சேறு பூசிக்கொண்டிருக்கும் இலங்கையின் அதிகாரவர்க்கம், குற்றங்களின் பிறப்பிடம் எப்படி நடவடிக்கை எடுக்கும். பெண்கள் தமக்கு எதிரான வன்முறைகளிற்கு எதிராக போராட துணிச்சலாக முன்வரவேண்டும். வன்முறைகளிற்கு எதிரான அமைப்பாக அணி திரள வேண்டும். சமுதாயத்தின் மற்றப்பிரச்சனைகளிற்காக போரிடும் முற்போக்கு அணிகளுடன் இணைந்து போராட வேண்டும்.

ஏனெனில் பெண்களிற்கு எதிரான வன்முறைகளை வெறுமனே சட்டம், ஒழுங்கு, நீதி என்பவற்றால் நிறுத்தி விட முடியாது. ஓரளவிற்கு முதலாளித்துவ ஜனநாயகம் நிலவுகிற நாடுகளிலே கூட சட்டங்களினாலே பாலியல் குற்றங்களை குறைக்க முடியவில்லை, தடுக்க முடியவில்லை. பெண்களை போகப் பொருளாக, நுகர்வுப் பண்டமாக மட்டும் சித்தரிக்கும் வணிகக் கலாச்சாரம், முதலாளித்துவ பொருளாதாரம் இருக்கும் வரை அவள் விடுதலையாக முடியாது. அவளை அசுத்தமானவளாக, சமமற்றவளாக நடத்தும் மதங்களை உடைக்காமல் அவள் விடுதலை பெறமுடியாது. உயர்வு, தாழ்வு இல்லாத சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் இணையானவர்கள் என்னும் பண்பாடு நிலவும் வாழ்க்கை முறையில் ஏனைய விலங்குகள் உடைபடும் போது பெண்ணின் விலங்குகளும் உடைபடும்.
...மேலும்

Jan 24, 2014

ஜென்னி மார்க்ஸின் இரண்டாம் நூற்றாண்டு நினைவு இந்த வருடம் (1814-2014)

ஜென்னி மார்க்ஸ்
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. பிரஷ்யா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஜெர்மனியில் ட்ரியர் நகரம். பிரஷ்ய அரசாங்கத்தில் அதிகாரியாக இருந்தவரும் பரம்பரை பணக்காரருமான ஜான் லுத்விக் வோன் வெஸ்ட்பாலனுக்கும் கரோலின் ஹ்யூபெலுக்கும் 1814-ம் ஆண்டு பிறந்தார் ஜென்னி.

அதே நகரில் நான்கு ஆண்டுகள் கழித்து, 1818-ம் ஆண்டு ஹென்ரிச் மார்க்ஸ் — ப்ரெஸ்பர்க் தம்பதிக்குப் பிறந்தார் கார்ல் மார்க்ஸ்.

ஜென்னியின் குடும்பமும் மார்க்ஸின் குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்தன. மார்க்ஸின் அக்காவும் ஜென்னியும் பள்ளித் தோழிகள். ஜென்னியின் தம்பியும் மார்க்ஸும் ஒன்றாகப் படித்தாலும் ஜென்னியின் அப்பாதான் மார்க்ஸுக்கு நெருங்கிய நண்பராக இருந்தார்.

அரசியல், சமூகச் சிந்தனைகள், தத்துவம், இலக்கியம் போன்ற பல விஷயங்களை வெஸ்ட்பாலன் மார்க்ஸுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் நிறைய விவாதிப்பார்கள்.  ஜென்னிக்கு கவிதைகள் மீது தீராத ஆர்வம்.

அன்பும் பண்பும் திறமையும் கொண்ட ஜென்னியை எல்லோருக்குமே பிடித்துப் போகும். மார்க்ஸுக்கும் ஜென்னியைப் பிடித்ததில் ஆச்சரியம் இல்லை.
பள்ளி இறுதி ஆண்டில், ‘எதிர்கால வேலை’ என்ற தலைப்பில் மாணவர்களைக் கட்டுரை எழுதச் சொன்னார்கள். அதில் மார்க்ஸ் எழுதியவை…

‘மனிதன் என்பவன் தனக்காக மட்டுமே வாழ்பவன் அல்ல. அவன் சக மனிதனுக்காகவும் பாடுபட வேண்டும். தனக்காகப் பாடுபடுபவன் நல்ல சிந்தனையாளராக இருக்கலாம், நல்ல நிர்வாகியாக இருக்கலாம். ஆனால், நல்ல மனிதனாக இருக்க முடியாது.  மனிதகுலத்தின் பெரும்பான்மைக்குப் பயன்படக்கூடிய ஒரு வேலையைச் செய்தால், அதில் வரும் எந்தத் தடையும் நம்மை ஒன்றும் செய்துவிடாது. நம் தியாகத்தால் உலக மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றால் அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதில் இருக்கும் உண்மையான சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும். அதுபோன்ற பணியையே நான் விரும்பி ஏற்கப் போகிறேன்.’

ஜென்னிக்கு மார்க்ஸைப் பிடிக்க அவருடைய அறிவும் மக்களுக்கான சிந்தனைகளும்தான் காரணம்.

தன்னைப் போலவே மார்க்ஸும் வழக்கறிஞராக வேண்டும் என்று அவர் அப்பா நினைத்தார். பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தார். ஜென்னிக்கும் மார்க்ஸுக்கும் பிரிவு துயரத்தை அளித்தாலும் இருவரும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டனர். மார்க்ஸ் தொடர்ந்து ஜென்னிக்குக் கடிதம் எழுதி அனுப்பினார். அந்தக் கடிதம் முழுவதும் காதல் கவிதைகளால் நிரம்பி வழியும். ஜென்னியும் இலக்கிய ரசம் மிகுந்த, காதல் கடிதங்களை வீட்டுக்குத் தெரியாமல் எழுதுவார்.

ஜென்னி – மார்க்ஸ் காதல் மார்க்ஸின் அப்பாவுக்குத் தெரிய வந்தது. உண்மையில் அவர் பயந்து போனார். தன் குடும்பம் மிகவும் சாதாரணமானது. ஜென்னியின் குடும்பம் செல்வாக்கு மிக்க பணக்காரக் குடும்பம். இவர்களின் காதலால் அருமையான நண்பர் வெஸ்ட்பாலனின் நட்பு உடைந்துவிடுமோ என்று நினைத்தார். ஜென்னியிடம் மார்க்ஸைத் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்றார். மார்க்ஸிடம் காதலைத் துறந்துவிடும்படி கடிதம் எழுதினார். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

***
தத்துவத்தின் மீது மிகவும் ஈடுபாடுகொண்டார் மார்க்ஸ். புரட்சிகரச் சிந்தனையாளர்களின் இளம் ஹெகேலியர் இயக்கத்தில் இணைந்தார். 23 வயதில் டாக்டர் பட்டம் பெற்று ட்ரியர் திரும்பினார் மார்க்ஸ்.

அப்போது மார்க்ஸின் அப்பாவும் ஜென்னியின் அப்பாவும் மறைந்திருந்தார்கள். ஜென்னியின் அம்மாவுக்கு இவர்களின் திருமணத்தில் விருப்பமில்லை. திருமணம் தள்ளிப்போனது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 29 வயதில் ஜென்னி தன் அன்புக்குரிய மார்க்ஸை மணந்துகொண்டார்.

‘ரைனிஷ் ஷெய்டுங்’ பத்திரிகையில் அரசியல் விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதினார் மார்க்ஸ், விரைவில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியரானார். கோபமுற்ற அரசாங்கம் அந்தப் பத்திரிகையைத் தடை செய்தது. மார்க்ஸை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது.

மார்க்ஸும் ஜென்னியும் பிரான்ஸ் சென்றார்கள். சிறிய வீட்டில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தார்கள். அவர்கள் திருமணத்தின் போது கிடைத்த பணத்தை ஒரு பெட்டியில் வைத்திருந்தார் ஜென்னி. அந்தப் பெட்டி எப்போதும் திறந்தே இருக்கும். பணம் தேவைப்படும் நண்பர்கள் அந்தப் பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். தங்களால் பிறருக்கு உதவ முடிவதை நினைத்து ஜென்னியும் மார்க்ஸும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.

1844-ம் ஆண்டு ஜென்னி பெண் குழந்தைக்குத் தாயானார். தன் அன்பு மனைவியின் பெயரையே குழந்தைக்கு வைத்தார் மார்க்ஸ்.

ஜெர்மன் – பிரெஞ்சு புத்தகங்கள் தயாரிப்பில் ரூகேயுடன் சேர்ந்து வேலை செய்தார் மார்க்ஸ். அப்போது பிரெடரிக் ஏங்கெல்ஸ் அறிமுகம் கிடைத்தது.

***
இரண்டு ஆண்டுகளில் கையில் இருந்த பணம் காலி. ஜென்னிக்குப் பொருளாதாரக் கஷ்டம் வர ஆரம்பித்தது. அப்போது பிரஷ்யாவில் நெசவாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பெரிய மோதல் நடைபெற்றது. நெசவாளர்களுக்கு ஆதரவாகக் கட்டுரைகள் எழுதினார் மார்க்ஸ். கோபம் அடைந்த பிரஷ்ய அரசாங்கம், பிரான்ஸில் இருந்து மார்க்ஸை வெளியேற்றும்படி கட்டாயப்படுத்தியது. மார்க்ஸ் பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரஸ்ஸல்ஸ் நகருக்குச் சென்றார். வீட்டில் இருந்த பொருள்களை விற்று, கிடைத்த பணத்தில் குழந்தைகளுடன் பிரஸ்ஸல்ஸ் போய்ச் சேர்ந்தார் ஜென்னி.

ஜென்னியின் அம்மா மகளுக்கு உதவி செய்வதற்காக ஹெலன் டெமூத் என்பவரை அனுப்பி வைத்தார். மூன்றாவது குழந்தையாக மகன் பிறந்தான். ஜென்னியும் மார்க்ஸும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்கள்.

அங்கும் அரசாங்கத்தை எதிர்த்து எழுத தடை வந்தது. மார்க்ஸுக்கு வருமானம் குறைந்தது. பிரான்ஸில் மன்னராட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் வழிகாட்டலில் அமைந்த கம்யூனிஸ்ட் லீக் போராட்டங்களை ஒன்றிணைத்தது. லூயி மன்னன் நாட்டை விட்டு ஓடினார். இடைக்கால அரசாங்கம் மார்க்ஸை அழைத்தது.

கிளம்புவதற்குள் ஒருநாள் நள்ளிரவு திடீரென்று மார்க்ஸைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். பதறிப்போன ஜென்னி, அவரைப் பின் தொடர்ந்து சென்றார். ஜென்னியையும் கைது செய்து, சிறையில் தள்ளினார்கள். அந்தச் சிறையில் குற்றவாளிகள் நிரம்பியிருந்தனர். ஜென்னிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ஒருபுறம் கணவர் கைது, இன்னொரு புறம் குழந்தைகள் தனியாக இருந்தனர். தாங்க முடியாத குளிர். சகிக்க முடியாத இரவாக அமைந்தது. மறுநாள் ஜென்னி மறுநாள் விடுதலை செய்யப்பட்டார். அம்மாவும் அப்பாவும் கைது செய்யப்பட்ட விஷயத்தால் பயந்துபோயிருந்த குழந்தைகள் ஜென்னியைக் கண்டதும் ஓடிவந்து கட்டிக்கொண்டனர். மார்க்ஸும் விடுதலையானார். வீட்டில் இருந்த பொருள்களை விற்று, பிரான்ஸுக்குச் சென்றார்கள்.

***
மீண்டும் அரசியல் சூழ்நிலை மாறியது. மார்க்ஸை வெளியேறும்படிச் சொன்னது. மார்க்ஸ் குடும்பம் லண்டனுக்குக் குடிபெயர்ந்தது. அங்கு ஹென்ரிச் என்ற குழந்தை பிறந்தது. மார்க்ஸ் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியில் இறங்கினார்.

மார்க்ஸின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். அவர் எழுதும் கட்டுரைகள், புத்தகங்களை ஜென்னி பிரதியெடுப்பார். தன்னுடைய கருத்துகளை மார்க்ஸுடன் விவாதிப்பார். மார்க்ஸும் ஜென்னியின் கருத்துகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிப்பார்.

1850-ம் வருடம் மிகவும் மோசமான காலகட்டம். பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டனர். உதவி செய்யவும் ஆள்கள் இல்லை. ஜென்னி உதவி கேட்டு நண்பருக்குக் கடிதம் எழுதினார்.

‘சரியான ஆகாரம் இல்லை. முதுகிலும் மார்பிலும் கடுமையான வலி. என் மார்பில் பால் சுரக்கவில்லை. குழந்தை பசியில் பலமாக உறிஞ்சியதில் தோல் வெடித்து, ரத்தம் அவன் வாயில் கொட்டியது… எங்களின் தேவை மிகவும் குறைவானதே. ஆனால், அதைப் பெறுவதுக்குக்கூட நாங்கள் மிகவும் போராட வேண்டியிருக்கிறது…’

ஒருநாள்…
‘ஜென்னி, நான் உனக்குத் தாங்க முடியாத கஷ்டத்தை அளித்து வருகிறேன். எனக்கு வருத்தமாக இருக்கிறது…’

’நாம் என்ன நமக்காகவா போராடுகிறோம்? பாட்டாளி மக்களுக்காகத்தானே போராடுகிறோம். அந்தப் போராட்டம் எந்தவிதத்திலும் என்னை நிலைகுலையச் செய்துவிடாது கார்ல். என்னை நினைத்து வருந்தத் தேவையில்லை. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவள். எனக்கு ஆதரவாக அன்பான கணவனாக நீ இருக்கும்போது எந்தக் கஷ்டமும் என்னை ஒன்றும் செய்துவிடாது…’

‘நீ என்ன சொன்னாலும் நம் வாழ்க்கை மிகவும் கடினமானது ஜென்னி.’

‘என்னுடைய கவலை எல்லாம் இதுபோன்ற பிரச்னைகளில் நீ கவலை அடைய வேண்டியிருக்கிறதே என்பதுதான். உன்னுடைய சிந்தனைக்கும் செயலுக்கும் இன்னும் நல்லவிதமான சூழல் அமைந்திருக்கலாம் கார்ல்.’

’நீயும் குழந்தைகளும்தான் என்னுடைய சந்தோஷங்கள் ஜென்னி. உங்களைப் பார்க்கும்போது எந்தக் கவலையும் என்னை அண்டுவதில்லை.’

வாடகை கொடுக்க முடியாததால் பல வீடுகளுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரஷ்ய அரசாங்கம் மார்க்ஸ் மீதும் அவருடைய தோழர்கள் மீதும் பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தியது. ஜென்னிக்கு நரம்புத்தளர்ச்சி நோய் வந்தது. சிகிச்சைப் பெற வழியில்லை. சில காலங்களில் எட்வர்டுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. பரிதாபமாகக் குழந்தை இறந்துபோனது. ஜென்னியையும் மார்க்ஸையும் மகனின் இறப்பு மிகவும் பாதித்தது.

ஏங்கெல்ஸ் மற்றும் சில நண்பர்கள் அளித்த உதவியில் குடும்பம் பிழைத்தது. மார்க்ஸ் மீது கொலோன் கம்யூனிஸ்ட் சதி வழக்கு போட்டது பிரஷ்ய அரசாங்கம். அதிலிருந்து மீண்டு வருவதற்காக மார்க்ஸ் நிறைய உழைத்தார்.

சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த மகள் பிரான்சிஸ்கா, இறந்து போனாள்.

‘என் அருமை மகள் இறந்த துக்கம் ஒருபுறம். அவளை அடக்கம் செய்வதற்குப் பணமில்லாதது இன்னொருபுறம். ஐயோ… எந்த அம்மாவுக்கும் இந்தக் கொடுமை வாய்க்கக்கூடாது. அன்பு பிரான்சிஸ்கா, நீ பிறந்தபோது தொட்டில் வாங்க பணமில்லை… நீ இறந்தபோது சவப்பெட்டி வாங்க பணமில்லை… எப்படிப்பட்ட பெற்றோர் நாங்கள்!’ ஜென்னி கதறினார்.

வேறுவழியில்லை. பக்கத்து அறையில் இறந்த மகளை வைத்துவிட்டு, மீதிக் குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இரவு முழுவதும் ஜென்னியும் மார்க்ஸும் அழுதனர். நண்பர் ஒருவர் இரண்டு பவுண்ட் கொடுத்து, சவப்பெட்டி வாங்க உதவினார்.

அடுத்த சில ஆண்டுகளில் எட்கர் என்ற 8 வயது மகனும் இறந்துபோனான்.

‘நம் அன்பு குழந்தைகள் நான்கு பேரை இழந்த துயரம் என்னால் எப்போதும் தாங்கமுடியாத வலியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது கார்ல். அவர்களை நினைக்கும்போது என் ஆயுள் நீடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை…’

ஏழில் மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஏங்கெல்ஸ் அழைப்பின் பேரில் மார்க்ஸும் ஜென்னியும் சில காலம் அவர் வீட்டில் தங்கியிருந்தனர். மார்க்ஸ் ‘மூலதனம்’ எழுத ஆரம்பித்தார். ஒவ்வொன்றையும் சளைக்காமல் பல முறை பிரதி எடுத்துக் கொடுத்தார் ஜென்னி.

ஜென்னியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தவுடன் ஜென்னியும் குழந்தைகளும் அங்கு சென்றனர். பேத்திகளைக் கண்ட ஜென்னியின் அம்மா மகிழ்ந்து போனார். அங்கு சில காலம் தங்கியிருந்தார் ஜென்னி.

ஜென்னியின் பிரிவைத் தாங்க முடியாத மார்க்ஸ் கடிதம் எழுதினார். ‘அன்பு நிறைந்த ஒரு பெண்ணிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது!’

தாய் இறந்த பிறகு அவருக்குக் கிடைத்த சொத்துடன் வந்து சேர்ந்தார் ஜென்னி. ஓராண்டு பொருளாதாரப் பிரச்னையின்றி வாழ்ந்தனர். நண்பர்கள், அகதிகள் போன்றவர்களுக்குத் தேடிப் போய்ப் பண உதவி செய்தார் ஜென்னி…

***
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மார்க்ஸ் எழுதி வந்த கட்டுரைகள் குறைந்து போயின. அழையா விருந்தாளியாக வறுமை வந்து உட்கார்ந்துகொண்டது. வளர்ந்த குழந்தைகள் வீட்டில் இருந்தே படித்தனர். நாள்கள் செல்லச் செல்ல நிலைமை மோசமானது. மார்க்ஸ் வேலை தேடினார். கையெழுத்து மோசமாக இருந்ததால் வேலை கிடைக்கவில்லை. குழந்தைகளைத் தத்து கொடுத்துவிட்டு, ஏழைகள் வசிக்கும் இல்லத்தில் தானும் ஜென்னியும் சேர்ந்துவிடலாம் என்று கூட நினைத்தார் மார்க்ஸ்.

மீண்டும் உதவிக்கு வந்தார் ஏங்கெல்ஸ். நண்பர் ஒருவர் மார்க்ஸுக்கு சொத்து எழுதி வைத்து, இறந்து போனார். அதன் மூலம் மூலதனம் நூல் வெளியிடப்பட்டது.

‘இன்று மகத்தான நாள் கார்ல். நம் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.’

***
மார்க்ஸின் இரண்டு பெண்களும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். சில ஆண்டுகளில் பேரன், பேத்திகள் என்று மார்க்ஸின் குடும்பம் விரிவடைந்தது. மார்க்ஸ் வீட்டுக்கு அருகிலேயே ஏங்கெல்ஸும் குடிவந்தார். ஒருவழியாக வறுமை விலகியிருந்தது. வாழ்க்கையில் இனிமை வந்து சேர்ந்தது.

1880-ல் ஜென்னி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அது குணமளிக்க முடியாத நோய் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். மார்க்ஸ் இடிந்துபோனார். ஜென்னியின் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். தன் பொருட்டு தன் கணவரோ, குழந்தைகளோ வருத்தப்படக்கூடாது என்று நினைத்த ஜென்னி, தன் நோயின் வலியை மறைத்துக்கொண்டு, நகைச்சுவையாகப் பேசினார்.

விரைவிலேயே மார்க்ஸும் நுரையீரல் நோயால் தாக்கப்பட்டார். தனியறையில் வைக்கப்பட்டார். பல வாரங்கள் ஜென்னியும் மார்க்ஸும் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. ஓரளவு நோய் குணமானதும் மார்க்ஸ் ஜென்னியிடம் வந்தார்.

‘பக்கத்து பக்கத்து அறைகளில் இருந்தும் நம்மால் பார்க்க முடியாதது கொடுமையான விஷயம் ஜென்னி.’

‘ஆமாம் கார்ல். எவ்வளவோ காலம் நாம் பிரிந்து வசித்திருக்கிறோம். அப்போதெல்லாம் இந்தப் பிரிவு இவ்வளவு வலியைத் தந்தது இல்லை. உன் ஒரு கடிதம் அத்தனை துன்பத்தையும் மாயமாக்கிவிடும்.’

‘அன்பு ஜென்னி, நம் வாழ்க்கையில் நீ இன்பத்தை விட துன்பத்தையே அதிகம் பெற்றிருக்கிறாய். மிகவும் வருத்தமாக இருக்கிறது…’

‘இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் நிறைவைத் தந்திருக்கிறது கார்ல். சக மனிதனின் உயர்வுக்குப் பாடுபடுபவனே சிறந்த மனிதன். அதுபோன்ற வேலையில் கிடைக்கும் சந்தோஷமும் நிம்மதியும் வேறு எதிலும் கிடைக்காது என்று நீதானே சொல்லியிருக்கிறாய். நாம் இருவரும் அந்த வாழ்க்கையைத்தானே விரும்பி வாழ்ந்திருக்கிறோம்.’

பதில் சொல்லாமல் மார்க்ஸ் ஜென்னியின் கைகளைப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.

‘நம் கஷ்டங்களை மறந்துவிட்டேன் கார்ல். மீண்டும் ஒருமுறை வாழும் வாய்ப்புக் கிடைத்தால், நீயே கணவனாகவும், இதே கஷ்டங்களுடனும்தான் வாழ விரும்புகிறேன், கார்ல்.

மூலதனம் நூல் ஜெர்மனியில் மூன்றாம் பதிப்பு வர இருப்பதாகக் கேள்விப்பட்டேன். லண்டன் பத்திரிகை உன்னை சோசலிச சிந்தனையாளர் என்று கூறியிருக்கிறது. ஜெர்மன் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இவை எல்லாவாற்றையும் விட சந்தோஷம் வேறு உண்டா கார்ல்? நம் உழைப்பு வீணாகிவிடவில்லை. உலகம் முழுவதும் உன் சிந்தனை பரவும், பாட்டாளி வர்க்கம் பயன்பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’

1881. டிசம்பர் 2. ஜென்னி இறந்து போனார். மார்க்ஸ் சுயநினைவிழந்தார். ஜென்னியின் இறுதிச் சடங்குகளை ஏங்கெல்ஸ்தான் செய்தார். ஜென்னியின் மறைவுக்குப் பிறகு மார்க்ஸ் தன்னை இழந்துவிட்டார். 15 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் ஜென்னியின் புகைப்படத்தை கையில் வைத்து, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அவர் உயிர் பிரிந்தது.

***
ஜென்னி நினைத்தது போலவே மார்க்ஸ் உலகம் முழுவதும் அறியப்பட்டார். மார்க்ஸின் சிந்தனையால் உலகம் பல மாற்றங்களைக் கண்டது. பிபிசி நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், கடந்த ஆயிரம் ஆண்டில் தலைசிறந்த சிந்தனையாளர் யார் என்ற கேள்விக்கு, கார்ல் மார்க்ஸை உலக மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

- தமிழ் சுஜாதா

...மேலும்

Jan 23, 2014

தருண் தேஜ்பால் : ‘இது இரண்டாவது ரேப்’ – அருந்ததி ராய்

அருந்ததி ராய்
பெரும் பெருச்சாளிகளான வக்கீல்களின் ஆலோசனைப் படி, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பல ஆண்கள் வழக்கமாக செய்வதையே தருண் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

தருண் தேஜ்பால், என்னுடைய முதல் நாவலான “தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்” நூலைவெளியிட்ட “இந்தியா இங்க்” நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். அவர் தொடர்பான சமீப நிகழ்வுகளைக் குறித்த என் எதிர்வினையை பல பத்திரிகையாளர்கள் கேட்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்த ஆரவாரமான ஊடக கும்மியடிப்புகளுக்கு நடுவே என் கருத்து எதையும் வெளியிட நான் தயங்கினேன். கீழே விழுந்து விட்ட ஒரு மனிதனை மிதிப்பது அற்பமானதாக தோன்றியது. குறிப்பாக, தான் செய்த செயலின் விளைவுகளிலிருந்து அவர் எளிதில் தப்பி விட முடியாது என்றும் அவரது தவறுக்கான தண்டனை வந்து கொண்டிருக்கிறது என்றும் தோன்றிய போது அவரை மேலும் தாக்குவதை தவிர்க்க நினைத்தேன். ஆனால், இப்போது அது அவ்வளவு நிச்சயமின்றி போயிருக்கிறது. வக்கீல்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள், பெரிய அரசியல் சக்கரங்கள் சுழல ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு மேலும் நான் மௌனமாக இருந்தால் அதற்கு பல விதமான அர்த்தங்கள் கற்பிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

தருண் எனது நீண்ட கால நண்பர்களில் ஒருவர். என்னைப் பொறுத்த வரையில் அவர் எப்போதுமே தாராளமாகவும், புரிதலுடனும் நடந்து கொண்டார். குறிப்பிட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் என்றாலும் நான் தெகல்காவை பெரிதும் மதித்தேன். 2002 குஜராத் படுகொலைகளை நடத்தியவர்கள் சிலரை சிக்க வைத்த ஆஷிஷ் கேத்தானின் பொறி வைத்தல் நடவடிக்கை, சிமி விசாரணை குறித்து அஜித் சாஹி செய்த வேலைகள் ஆகியவை என்னைப் பொறுத்த வரை தெகல்காவின் மிகச் சிறந்த சாதனைகள். இருப்பினும், நானும் தருணும் அரசியல் ரீதியாகவும் சரி, இலக்கிய ரீதியாகவும் சரி வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்து வந்தோம். எங்கள் கருத்துக்கள் எங்களை இணைப்பதற்கு பதிலாக விலகிச் செல்ல வைத்தன. இப்போது நடந்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை, ஆனால் மனது உடையச் செய்திருக்கிறது.

கோவாவில் தருண் நடத்தும் “திங்க்ஃபெஸ்ட்” ‘அறிவுஜீவி’ திருவிழாவில் அவர் தனது சக ஊழியரான இளம் பெண் மீது அச்சுற்றுத்தும் பாலியல் தாக்குதல் நடத்தியிருப்பதை அவருக்கு எதிரான சாட்சியங்கள் உணர்த்துகின்றன. மலையளவு முறைகேடுகள் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சுரங்கத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட கூட்டமைப்பு இந்த திங்க்ஃபெஸ்டுக்கு நிதி அளித்து ஆதரித்திருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் பெருமளவிலான பழங்குடி பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொலை செய்த, ஆயிரக் கணக்கான மக்களை சிறைக்கு அனுப்பி, கொலை செய்த பெருமைக்குரியவை இந்த நிறுவனங்கள். தருணின் பாலியல் தாக்குதல், புதிய சட்டத்தின்படி பாலியல் வன்முறைக்கு நிகரானது என்று பல வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கின்றனர். தாக்கிய பெண்ணுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சல்களிலும், குறுஞ்செய்திகளிலும் தருணே தன்னுடைய குற்றத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

முதலாளி என்ற கேள்விக்குட்படுத்த முடியாத அதிகார நிலையிலிருந்து அவர் பெரிய மனிதத் தனத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். மோசடி என்று சொல்லும்படியாக, தனக்குத் தானே தண்டனை விதித்துக் கொண்டு “துன்புறுத்திக்” கொள்வதற்காக 6 மாதம் விலகி இருக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். இது போலீஸ் விவகாரமாக ஆன பிறகு பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய பெரும் பெருச்சாளிகளான வக்கீல்களின் ஆலோசனைப் படி, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பல ஆண்கள் வழக்கமாக செய்வதையே தருண் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதாவது, தான் வேட்டையாடிய பெண்ணை குற்றவாளி கூண்டில் நிறுத்தி, அவரை பொய்யர் என்று முத்திரை குத்த முயல்கிறார்.

வலது சாரி இந்துத்துவா கும்பலால் அரசியல் காரணங்களுக்காக தருண் பழி வாங்கப்படுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது, சமீப காலம் வரை தான் வேலைக்கு அமர்த்தியிருந்த ஊழியர் ஒழுக்கமற்ற பெண் மட்டுமில்லை, பாசிச சக்திகளின் ஆளும் கூட என்கிறார் தருண். இதுதான் இரண்டாவது ‘கற்பழிப்பு’ :

தெகல்கா பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் அரசியலையும், அறங்களையும் வல்லுறவு செய்வதுதான் இது. அங்கு பணி புரிபவர்களுக்கும், கடந்த காலத்தில் தெகல்காவை ஆதரித்தவர்களுக்கும் விழுந்த ஒரு இடி. கொஞ்ச நஞ்சம் மிஞ்சியிருக்கும் அரசியல் மற்றும் தனிப்பட்ட நேர்மையை வெற்றுக் கூடாக மாற்றுவது

சுதந்திரமான, நியாயமான, பயமற்ற என்று  தெகல்கா தன்னைத் தானே வரையறுத்துக் கொண்டது. இப்போது தைரியம் எங்கே போனது?

- அருந்ததி ராய்
தமிழாக்கம் : செழியன்
நன்றி : அவுட்லுக்
...மேலும்

Jan 22, 2014

6 கோடிப் பெண்கள்
 எங்கே போனார்கள்? - ஆர். ஜெய்குமார்

 India Dishonoured
உலகில் நடந்த மிகக் கொடூரமான இனப் படுகொலைகளைப் பற்றி நாம் வரலாற்றின் மூலம் அறிந்திருக்கிறோம். நம் கண் முன்னே ஒரு இனப் படுகொலையும் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் நம் நாட்டிலேயே காலங்காலமாக ஒரு இனப்படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சின்னச் சின்ன சம்பவங்களாகத்தான் இவை நமக்குத் தெரிந்தன. அவை ஒரு வரலாறாகப் பதிவுசெய்யப்படவில்லை. அது பெண்ணினப் படுகொலை. ஆனால் அந்த அஜாக்கிரதை இன்று ஒரு பேரிடரின் பாதிப்பைப் போல பல்லாயிரம் பெண்களைக் காணாமல் போகச் செய்துவிட்டது. கண்ணுக்குத் தெரியாமல் இந்தியாவில் காணாமல் போய்விட்ட பெண்களின் எண்ணிக்கை, 60 கோடியைத் தொட்டுவிட்டது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த கட்டுரையாளர் சன்னி ஹண்டல். சமீபத்தில் வெளியான India Dishonoured என்ற தனது புத்தகத்தில் இதை அம்பலப்படுத்தியுள்ளார். இது இங்கிலாந்து மொத்த மக்கள்தொகை அளவுக்கு நிகரானது. பெண்கள் இனம் அழிந்துகொண்டிருப்பதை முதலில் பதிவுசெய்தவர் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென். 1990ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 10 கோடிப் பெண்களுக்கு மேல் காணாமல் போய்விட்டதாக அவர் முதன்முதலில் குறிப்பிட்டார். இன்று 2014இல், அது இந்தியாவில் மட்டும் 6 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இந்த 6 கோடிப் பெண்கள் எங்கே போனார்கள்? நமது மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் புரட்டிப் பார்த்தால் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் பிறக்கும் 1.2 கோடிப் பெண் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் ஒரு வருடம்கூடத் தாக்குப் பிடிப்பதில்லை. மேலும் 30 லட்சம் குழந்தைகள் 15 வயதிற்குள் மரணமடைகின்றனர் என BETI என்னும் அரசுசாரா நிறுவனம் சொல்கிறது.

பெண் குழந்தைகள் இறப்புக்கு முக்கியமான காரணம் பாலினப் பாகுபாடு. இன்றைக்கும் பெண் குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும் ஆண் குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும் சலுகைகள் கொடுப்பது நமது வழக்கத்தில் இருக்கிறது. முந்தைய தலைமுறை வரை இந்தப் பாகுபாடு மிக வெளிப்படையாகவே இருந்துவந்தது. பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்றவற்றிலும் இந்தப் பாகுபாடு உள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியமைப்பு உலகிலேயே அதிக அளவிலான பாலினப் பாகுபாடு இந்தியாவில் இருப்பதாகச் சொல்கிறது.

பெண் குழந்தைகள் இறப்புக்கான மற்றும் ஒரு காரணம் சிசுக் கொலை. ஸ்கேன் சோதனை செய்வது குற்றம் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் கருக்கலைப்பு செய்வது இப்போதும் நடந்துவருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பீட் மாவட்டத்தில் 2000 ரூபாய்க்கு ஒரு கிராமத்துப் பெண், கருவில் இருப்பது பெண் சிசு என்பதால் கருக்கலைப்பு செய்யத் துணிந்திருக்கிறார்.

ஆண் குழந்தை மோகத்தால், பிறந்த பிறகும் பெண் குழந்தைகளைக் கொல்வது நடக்கிறது. தேசத்தை, நதிகளை, மொழிகளையும் பெண் வடிவமாகப் பாவித்து வழிபட்டுவருவதும் இந்தியாவில்தான் இது நடக்கிறது என்பதும் மிகப் பெரிய முரண்.

இந்த விகிதச்சாரக் குறைபாடுகளை வெறும் எண்களாக நினைத்து நாம் கடந்துவிட முடியாது. இது நேரடியாகப் பல விதத்தில் பெண்களின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. கலாச்சாரம், பண்பாடு என்ற பெயர்களில் பெண்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகள் குறித்து ஜனநாயக அரசு ஆக்கபூர்வமான எந்தச் செயல்பாட்டையும் எடுக்கவில்லை. இந்த விகிதச்சாரக் குறைபாடுதான் இதற்குப் பின்னால் உள்ள காரணம். கலாச்சாரத்தை மீறும் பெண்களைத் தன்னிச்சையாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் அதிகாரம் கொண்ட கிராமப் பஞ்சாயத்துகள் வடமாநிலங்களில் மிகப் பரவலாக உள்ளன. இவற்றிற்கு ஆளும்வர்க்கத்தின் ஆதரவும் இருக்கிறது. இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தாலும் அது ஆதிக்கசக்திகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை அரசும் சமூகமும் எப்படிக் கையாண்டன என்பதையே இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பிரதமர் மன்மோகன் சிங், அது குறித்து ஒரு வாரம் கழித்தே பேசினார். சில மத அமைப்புகள் மேலை நாகரீகத்தைக் கடைபிடிப்பதால் வந்த விபரீதம் இது என்றன. மொத்த ஆதிக்க சமூகமும் இப்படி ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதற்குக் காரணமாக, இந்த பெண்கள் எண்ணிக்கை குறைவு இருப்பதாக சன்னி ஹண்டல் குறிப்பிடுகிறார்.

இந்தியா வெற்றிகரமாக 15 பொதுத் தேர்தல்களை நடத்தி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் தன்னைப் பறைசாற்றிக்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் பாலினப் பாகுபாடு இந்தியாவின் ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதாகவும் அவமானகரமானதாகவும் உள்ளது. உலக வங்கியின் பாலின ஒற்றுமை விகிதக் கணக்கீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பெண்கள் சிறுபான்மையினராக மாறும்போது நாட்டின் திட்டங்களிலும் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் 33% சதவிகித இடஒதுக்கீட்டு மசோதா இதற்குச் சிறந்த உதாரணம். இனி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும். அவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே இப்போது இருக்கும் பெண் வாக்காளர்கள் பலரும் தேர்தல்களில் சுய முடிவுடன் வாக்களிப்பதில்லை. தங்கள் வீட்டு ஆண்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே வாக்களிப்பதாகப் பல ஆய்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன. இது பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவது இந்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் ஆரோக்கியமானது அல்ல.

ஆதாரங்கள்:

 India's 60 million women that
never were, கார்டியன்


 India's Missing Women,
தி இந்து ஆங்கில நாளிதழ்


 உலக வங்கித் தகவல்

நன்றி - திஹிந்து
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்