/* up Facebook

Dec 31, 2014

கவிதை மொழியாக்கமும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப் பிரச்சினைகளும்: சில அனுபவக் குறிப்புகள் - லறீனா ஏ.ஹக்


“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் 
செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்றும்,

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் - தமிழ்மொழியில் 
பெயர்த்தல் வேண்டும்!”  என்றும்

கூறினான், பாரதி. பிற மொழிகளில் இருக்கும் கலைச் செல்வங்களைத் தமிழில் பெயர்த்து வழங்கி, நம் தாய்மொழியை வளம்பெறச் செய்ய வேண்டும் என்று பாரதி கண்ட கனவு தற்போது நனவாகிக் கொண்டிருக்கின்றது எனலாம்.
மொழிபெயர்ப்பு என்றால் என்ன என்ற கேள்விக்குப் பல்வேறு அறிஞர்கள் பலவிதமான வரைவிலக்கணங்களைக் கூறியுள்ளனர். சுருக்கமாக, “மூலமொழியில் உள்ள ஒருதகவலை அல்லது விடயத்தை இலக்குமொழிக்கு மாற்றுகின்ற ஒருமொழியியல் நடவடிக்கையே மொழிபெயர்ப்பு” எனப்படுகின்றது. இது, இலக்கியமொழிபெயர்ப்பு, சட்டமொழிபெயர்ப்பு, அறிவியல் மொழிபெயர்ப்பு என பலவகைப்படும். 

மொழிபெயர்ப்பின் மூலம் ஒருமொழி செழுமையடைகின்றது. புதியசொற்கள், புதியகருத்தியல்கள், புதியகலாசாரம், புதியஅனுபவங்கள் என்பன மொழிபெயர்ப்பின் மூலம் மற்றொரு மொழிக்குள் வந்து சேர்கின்றன. அம்மொழிக்கு வளம்சேர்க்கின்றன.

கலை இலக்கியங்கள் தம்மளவில் தனித்துவம் வாய்ந்தவை. கலையைக் கலை அல்லாதவற்றில் இருந்து அடிப்படையில் வேறுபடுத்திக்காட்டும் கலையம்சத்தைத் தம்வசம் கொண்டவை. எனவேதான், பொதுவாக இலக்கிய மொழிபெயர்ப்பு, அதிலும் குறிப்பாகக் கவிதை மொழிபெயர்ப்பு மிகவும் சிக்கலானது எனப்படுகின்றது. காலத்துக்குக் காலம் அறிஞர்களிடையே கவிதை மொழிபெயர்ப்பு சாத்தியமா இல்லையா என்ற நீண்டபல விவாதங்களும் மாறுபட்ட கருத்தாக்கங்களும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கவிதை மொழிபெயர்ப்பின்போது கவித்துவம் இழக்கப்படுவதாகச் சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர், கவிதையின் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்க முடிந்தபோதிலும், அதன் வடிவஅழகு இழக்கப்படும் என்கின்றனர். மூலமொழியின் உருவ, உள்ளடக்கத்தை அப்படியே பிரதியீடு செய்யத்தக்க சாத்தியப்பாடு இலக்குமொழியிலும் இருந்தால் மட்டுமே கவிதை மொழிபெயர்ப்பு சாத்தியம் என்று வேறொரு சாரார் கருதுகின்றனர்.

பீட்டர் நிவ்மார்க் (1988:5), “ஒருமொழியில் எழுதப்பட்ட பிரதியை மற்றொரு மொழியில் பிரதியீடு செய்யும் கலையே மொழிபெயர்ப்பாகும்" என்கின்றார். கலை எனும்போது, “எல்லாக் கலைவடிவங்களுக்குரிய பொதுப்பண்புகளும் தனித்தனிக் கலைவடிவத்துக்கு உரிய சிறப்புப்பண்புகளும் உள்ளன. உதாரணமாக, நாவலும் சிறுகதையும் இலக்கியம் என்றவகையில் அவற்றுக்கே உரிய சில சிறப்புப்பண்புகளையும் கொண்டுள்ளன. இப்பண்புகள் உருவம், உள்ளடக்கம் இரண்டும் சார்ந்தவை ஆகும்…… ஆகவே, கலையம்சம் என்பது உருவம் மட்டுமின்றி உருவம், உள்ளடக்கம் இரண்டையும் குறிக்கும் என்பது தெளிவு” என்கிறார், பேராசிரியர் எம். ஏ.நுஃமான் (1984: 74-76)

எனவே, இந்தப் பின்னணியில் நாம் கவிதை எடுத்துக்கொண்டால், அதன் வடிவமும் (form) பொருளும் (meaning) ஒன்றுடனொன்று மிக நெருக்கமான தொடர்புடையனவாக இருக்கின்றன. ஒரு கவிதையில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தப்பாடுகளையும் காணமுடியும். காளமேகப் புலவரின் சிலேடைப் பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம். அவ்வாறே, நவீன கவிதைகளிலும்கூட மேலோட்டமான நேர் சொற்பொருளுக்கு அப்பால், ஆழமான அரசியல் விமர்சனம் அல்லது சமூக விமர்சனம் பொதிந்திருக்கும் ஏராளமான கவிதைகளை நாம் வாசித்திருப்போம். வகைமாதிரிக்கு, பேராசிரியர் எம். ஏ. நுஃமானின் “புத்தரின் படுகொலை”, ஆளியாளின் “மன்னம்பேரிகள்”, முல்லை முஸ்ரிஃபாவின், “நீ வரும் காலைப்பொழுது” முதலான பல்வேறு கவிதைகளைக் குறிப்பிடலாம். இத்தகைய ஒரு பிரதியை நாம் மொழிபெயர்க்கும்போது, அதன் கவித்துவ வீச்சுடன் கூடிய உள்ளடக்கம், கலையம்சம் பொருந்திய உருவ அமைதி ஆகிய அவ்விரண்டையும் இலக்குமொழியில் ஒருமித்துக் கொண்டுவருவது மிகவும் சிரமமானதாகும். இதனாலேயே ரோமன் ஜெகொப்ஸன், “கவிதை மொழிபெயர்க்கப்பட முடியாதது”என்கிறார் (1987:434). அதாவது, ஒரு கவிதை அதன் மூலமொழியில் இருந்து இலக்குமொழிக்கு மாற்றப்படும் போது, அது ஒரு புத்தாக்கமாகவே பரிணமிக்கிறது என்பதே இதன் உள்ளர்த்தமாகின்றது எனலாம்.

கு.ப.ரா.  குறிப்பிடும் போது, “மொழிபெயர்ப்பே ஒரு முறையில் கடினமான இலக்கிய வேலை; அது முதல் நூல் எழுதுவதைக் காட்டிலும் அதிகமான தொல்லை கொடுப்பது. சீமை ஓட்டைப் பிரித்துவிட்டு, கீற்று வேயும் வேலை போன்றது. ஒரு கட்டுக்கோப்பை ஏற்றுவதில் எப்பொழுதுமே பூரண வெற்றிகொள்ள முடியாது. அடிக்கு அடி நிர்ப்பந்தம், எல்லைக்கோட்டைத் தாண்டினால் மொழிபெயர்ப்பில்லை, வியாக்கியானம்” என்கிறார் (மொழிபெயர்ப்புக் கலை, 2005:18).

இதேவேளை, ஜேம்ஸ் ஹோம்ஸ் இவ்வாறு கூறுகின்றார்: “ஒரு குறித்த கவிதை, வெவ்வேறு மொழிபெயர்ப்பாளர்களால், வெவ்வேறு விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவற்றுள் எந்த ஒரு கவிதை மொழிபெயர்ப்பும் மூலப்படைப்பை முற்றிலும் ஒத்ததாக ஒருபோதும் அமையமாட்டாது. கவிதை உட்பட, எந்த ஒரு பிரதியும் பலவிதமாய்ப் பொருள்கொள்ளப்படுதலால், சாத்தியமான மொழிபெயர்ப்புக்கள் பல எழலாம்” (James S Holmes, 1994:50-51). இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டாக, நம்நாட்டுக் கவிதை மொழிபெயர்ப்பாளர்கள் இருவரின் ஒரே கவிதைக்கான இரு மொழிபெயர்ப்புக்களின் சில அடிகளைப் பார்ப்போம்:

மஹ்மூத் தர்வீஷ் எனும் பலஸ்தீனக் கவிஞரின் “கைக்குட்டைகள்” எனும் கவிதையை பேராசிரியர் எம். ஏ. நுஃமான் இப்படி மொழிபெயர்க்கிறார்:
கைக்குட்டைகள்
உயிர்த்தியாகிகளின் கல்லறை போன்றது உன் மௌனம்
அது பெருகிச் செல்கிறது, 
பரவிச் செல்கிறது.
ஒரு பறவைபோல் உனது கைகள் என் மார்பின்மேல்
எவ்வாறு தங்கியிருந்தன என்பதை
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அன்பே,
மின்னலின் உழைப்புபற்றி வருந்தாதே
இருள் கவிந்த அடிவானங்களுக்கு அதை விட்டுவிடு
வேறு எண்ணங்களுக்கு உன்னைப் பயிற்று:
குருதி தோய்ந்த முத்தங்கள் பற்றிய எண்ணங்கள்,
வறட்சியான நாட்கள்,
மரணம், எனது மரணம், மற்றும்
எல்லா மரணத் துயரங்களுக்கும் உன்னைப் பயிற்று. (1966)

இனி நாம், பண்ணாமத்துக் கவிராயரின் மொழிபெயர்ப்பைப் பார்ப்போம்: 

கைக்குட்டைகள்

“தியாகிகளின்
கல்லறை போன்றது
உன்மௌனம்.

உன் கரங்கள்
என் மார்பில்
பறவையாய்ச்
சிறகடித்துக் கொண்டதை
இப்போது
நினைக்கின்றேன்.

காதலி,
மின்னலின் பிரசவம் பற்றிக்
கவலைப்படாதே.
மங்கலாய்த் தெரியும்
அடிவானத்திடம் 
அதனை விட்டு விடு

வேறு நினைவுகளுக்காய்,
இரத்தந் தோய்ந்த முத்தங்கள்…
வரண்ட நாட்கள்…
என் மரணம்…
சோகத்தால் உண்டாகும் வேதனை
போன்ற
வேறு நினைவுகளுக்காய்
உன்னைப்
பயிற்றிக்கொள். (1993)

உண்மையில், ஒரு குறிப்பிட்ட மொழிப் பிரதியில் உள்ளார்ந்து காணப்படும் உணர்வுநிலையை, அதன் கலாசாரப் பின்புலத்தை, அது உணர்த்தி நிற்கும் அரசியலை, அம்மொழி சார்ந்த குறியீட்டுப் படிமங்களை அல்லது உவம உருவகங்களை எல்லாம் கவிதைக்கே உரிய அழகியல் அம்சங்கள் கெடாத வகையில், மற்றொரு மொழிக்குக் கொண்டுவருதல் என்பது மிகப் பெரும் சவால்தான் என்பதில் ஐயமில்லை. எனவேதான், 'கவிதை மொழிபெயர்ப்பு' என்ற சொல்லாடலைவிட 'கவிதை மொழியாக்கம்' என்பது அதிகப் பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. 

ஒரு குறித்த மக்கள் குழுமத்தின் வாழ்வுமுறையை அடியொட்டி எழும் கலாசார வெளிப்பாடாகவே ஒரு படைப்பாக்கம் உருப்பெறுகின்றது. அவ்வாறு உருவாக்கம் பெறும் மூல மொழியின் தனிச்சிறப்பு வாய்ந்த கூறுகளே அவ் அந்த மொழிக்குச் சிறப்பும் தனித்தன்மையும் வழங்குவன. அம்மொழியில் வழங்கும் சொல், அதன் உச்சரிப்பு, தொனி, தொடர்புபடுத்தப்படும் விதம் என்பன அவ்வந்த மொழிக்கு வாலாயமானவையாகவே இருக்கும்.

ஒரு சிறு உதாரணம், ஷேக்ஸ்பியரின் மெக்பத் நாடகத்தில் இரண்டாம் காட்சியில் ஓரிடம். மன்னன் டங்கனின் (Duncan) பாசறை முன்னால் போர்வீரன் ஒருவன் உடம்பில் குருதிவழிய வந்து நிற்கிறான். இரத்தம் வழிய வந்து நிற்றல், என்ன கெட்ட செய்தியோ என்ற எரிச்சல் உணர்வின் வெளிப்பாடு என இருபொருள்படுமாறு ஷேக்ஸ்பியரின் வரி அமைகிறது. மன்னன் தன்னருகில் இருப்பவர்களிடம் கேட்கிறான், “What bloody man is that?”.  இதனை, இரத்தம் தோய வந்து நிற்கும் இவன் யார்?” என்றும், “யாவன் அந்தக் குருதியான்?” என்றும் சில மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கிலத்தைப் பொறுத்தவரையில், பிளடி ஃபூல், பிளடி ஃபெல்லோ முதலான சொற்களில் அமைந்துள்ள bloody என்ற சொல் நேரடியாக இங்கே இரத்தத்தைக் குறிப்பதாக அமைவதில்லை. அவ்வாறே, ஓ! ஹெவன்ஸ்! என்பதை “ஓ! வானங்களே!” என்றோ, “ஓ! சுவர்க்கங்களே!” என்றோ மொழிபெயர்ப்பது பொருத்தமாய் இராது.

மொழிபெயர்ப்பில் உள்ள அடிப்படையானதும் பிரதானமானதுமான சவால், இரண்டு மொழிகளும் சார்ந்துள்ள கலாசாரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதுதான். இந்தச் சவால் மொழியாக்க முயற்சிகளில் இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த இடைவெளியை இட்டு நிரப்புவதற்கான சவாலை எதிர்கொள்ளும் ஒரு மொழிபெயர்ப்பாளர் பொருத்தமான “சமனிகளைக்” கண்டறிதலின் மூலம் இப்பிரச்சினையை எதிர்கொள்கின்றார்.

மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுச் சர்ச்சைகளில் Faithfulness எனும் உண்மையாய்/விசுவாசமாய் இருத்தல் என்ற அம்சம் தொன்றுதொட்டுப் பேசப்பட்டு வருகின்றது. ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலநூல் பிரதிக்கும் அதன் மொழிநடைக்கும் விசுவாசத்தோடு இயங்கவேண்டுமா, இலக்குமொழியில் உருவாக்கப்படும் பிரதிக்கும் அதன் மொழிநடைக்கும் ஏற்ப இயங்கவேண்டுமா என்ற அடிப்படையில் இந்த சர்ச்சை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது எனலாம். இரண்டு விதமான கருத்துநிலைகளையும் ஆதரிக்கக்கூடிய மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கவே செய்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், வங்கம்-தமிழ் ஆகிய இருமொழிகளுக்கிடையிலான மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுவரும் திரு. சு. கிருஷ்ணமூர்த்தி, “மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே நூறுவிழுக்காட்டை எட்டமுடியாத ஒன்று. ஆனால், எந்த அளவுக்கு நூறுவிழுக்காட்டை நெருங்கியுள்ளோம் என்பதில்தான் வெற்றி. ஆகவே, ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலஆசிரியனுக்கு உண்மையானவராக இருக்கவேண்டும் என்பது என்கருத்தாகும்” (மொழிபெயர்ப்புக் கலை, 2005:153) என்கின்றார்.

அதேவேளை, மொழிபெயர்ப்புக்கான 2002 ஆம்ஆண்டு சாகித்திய அகாடெமி விருதுபெற்ற திரு. எச். பாலசுப்ரமணியன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “ஒரு மொழிபெயர்ப்பாளன் மூலநூல் ஆசிரியனுக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பதைவிட, வாசகனுக்குத்தான் உண்மையாக இருக்கவேண்டும். ஒருபடைப்பைப் படைத்து முடித்தபிறகு படைப்பாளியினுடைய வேலை முடிந்துவிடுகிறது. அதற்குப்பின் அதைப்பொருட்படுத்துவது வாசகன்தான். வாசிப்புச் செயற்பாங்கில்தான் அர்த்தம் உருவாகிறது. எனவே, மொழியாக்கம் செய்பவனின் கடமை என்பது, மூலஆசிரியனுக்கு விசுவாசமாய் இருப்பதைவிட, வாசகனின் புரிதலுக்குத் துணைசெய்யவேண்டும் என்பதில்தான் அதிகம் இருக்கிறது. அப்படிச் செயல்படும்போது அதில் சிலமாற்றங்களை – மொழிநடையில் அல்லது சொல்லாடல்களில் அல்லது வெளிப்படுத்துவதில்- இலக்குமொழிக்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்களைச் செய்யசுதந்திரம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன்.” (மொழிபெயர்ப்புக் கலை, 2005:153) என்கின்றார்.

உமர்கையாமின்,

“A Book of Verse

A flask of Wine”என்ற ருபைய்யாத் அடிகளை,

“கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மது உண்டு” 


என்று தமிழாக்கம் செய்த கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் வழிமுறை, இலக்கு வாசகப்பிரதிக்கு அதிகவிசுவாசம் உடையதாய் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளமைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.  அவ்வாறே,


There was a young lady in Niger

Who smiled as she rode on a tiger

They returned from the ride

With lady inside

And the smile on the face of the tiger என்பதை,


புன்சிரிப்புப் பூத்தபடி வீரி

போகின்றாள் புலிமிசை சவாரி

பெண் அதனின் பேழ்வயிற்றுள்

புக்கிருந்தாள் மீள்கையில் அப்

புன்சிரிப்போ புலி முகத்தில் ஏறி


என்ற ஈழத்தின் மஹாகவி ருத்திரமூர்த்தியின் “லிமரிக்” எனப்படும் குறும்பா மொழியாக்கம் விதந்துரைக்கத்தக்கது. “மொழிபெயர்ப்பானது இலக்குமொழியில் சுயமாகப் படைக்கப்பட்டது போலத் தற்புதுமையுடன் தோற்றமளிக்க வேண்டும்” (நுஃமான்,எம்.ஏ., 1997:104) என்ற பேராசிரியர் எம். ஏ. நுஃமானின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கது.

இலங்கையைப் பொறுத்தவரையில், ஆங்கிலத்தில் இருந்தும் சிங்களத்தில் இருந்தும் மொழியாக்கக் கவிதைகள் தமிழுக்கு வந்தடைந்துள்ளன. நவாலியூர் நடராசன், பேராசிரியர் சி. சிவசேகரம், பேராசிரியர். எம்.ஏ. நுஃமான், க. யேசுராசா, பண்ணாமத்துக் கவிராயர், அல் அஸுமத், கவிஞர் ஏ. இக்பால், கெக்கிராவை ஸுலைஹா, எம்.கே.எம். ஷகீப், ரிஷான் ஷெரீஃப் முதலான பலர் கவிதை மொழியாக்கத்தில் பங்களிப்புச் செய்தவர்களாவர். அரபு மொழியில் இருந்து சில கவிதைகளை ஏ.சி.ஏ. மஸாஹிர் மொழிபெயர்த்துள்ளார். இவ்வாறு ஆங்கில – சிங்கள - அரபு மொழிகளில் இருந்து மொழியாக்கம் வழியே தமிழுக்குக் கவிதைகள் வந்துசேர்ந்து, நமது தாய்த் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. அவ்வாறே, சமூகங்களுக்கிடையில் கலாசாரப் பரிவர்த்தனைக்கான பாலமாகவும் அவை தொழிற்பட்டு வருகின்றன. பன்மொழிச் சூழலில் இடம்பெறும் இத்தகைய இலக்கியப் பரிவர்த்தனைகள், சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றுவதால், மொழியாக்கம் தொடர்பான சவால்களை வெற்றிகொண்டு அப்பணியில் அதிக முனைப்புக் காட்டுவது காலத்தின் தேவையாகும்.

இங்கு நாம் மற்றோர் அம்சம் குறித்தும் கவனம் செலுத்தவேண்டி இருக்கின்றது. அதாவது, இலக்கிய மொழியாக்கம் ஒன்றை மேற்கொள்ளும்போது, மூலமொழிக் கலாசாரத்தின் தனித்துவக் கூறுகளை இலக்குமொழி வாசகன் அறிந்து இன்புறும் வகையில், அது இன்ன கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் மொழிபெயர்ப்பே என்பதை உணர்த்தும் அந்நியத்தன்மை அதாவது, foreignness பேணப்பட வேண்டுமா, அல்லது, இலக்குமொழி வாசகன் அதனைத் தன் மொழியில் சுயமாய் எழுந்த படைப்புபோல் உணரச் செய்யும் வகையில் மொழியாக்கத்தின் இயல்புத்தன்மை அதாவது naturalness பாதுகாக்கப்பட வேண்டுமா என்ற இருமுனைப்பட்ட கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததே.

எடுத்துக்காட்டாக, ஆபிரிக்கப் பழங்குடி மக்கள் தமது விருந்தினரை வரவேற்குமுகமாக “கொக்கோ நட்” எனும் கொக்கோ விதையை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வை ஒரு சிங்கள மொழிபெயர்ப்பாளர் தமது வாசகருக்குப் புரியும் வகையில், “வெற்றிலை வழங்கி வணங்கி வரவேற்றனர்” என்றோ, ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளர், மஞ்சளும் குங்குமமும் வழங்கிப் பன்னீர் தெளித்து வரவேற்றனர்” என்றோ மொழிபெயர்ப்பதாய்க் கொள்வோம். இது, இலக்கு வாகசருக்குப் பிரதியை மிக நெருங்கவைக்கும் நோக்கில், இயல்புத்தன்மையோடு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாய் உணரப்படலாம். ஆனால், மொழிபெயர்ப்பு என்பது, ஒரு குறித்த கலாசாரத்தை மற்றொரு கலாசாரத்தைப் பின்புலமாய்க் கொண்டுள்ள மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் ஊடகம், ஒரு கலாசாரப் பாலம் என்ற கருத்தியல் இங்கு மீறப்பட்டுள்ளது. இது, இரண்டு வகையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

1. மூலமொழிக் கலாசாரக் கூறுகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இலக்கு மொழி வாசகர்கள் இழக்கின்றனர்.

2. தமது விருந்தினரை வரவேற்கும் அதேவகையான  சம்பிரதாயம் மாற்றமின்றி அப்படியே  ஆபிரிக்க ஆதிக்குடிகள் மத்தியிலும் வழங்கிவருகின்றது என்ற பிழையான முடிவுக்கு அவர்கள்  வரநேர்கின்றது.

இந்நிலையில், ஒரு மொழிபெயர்ப்பாளர் எந்தக் கோட்பாட்டைச் சார்ந்து நிற்க வேண்டும் என்ற முக்கியமான கேள்வி எழுகின்றது. மூலப் படைப்பின் உள்ளடக்கத்தைத் தருவதில் வழுக்களோ திரிபுகளோ நேர்ந்துவிடாமலும், மொழியமைப்பு சார்ந்த நடையியல் அம்சங்களில் இலக்கு வாசகனை நெருங்கி, மூலப் படைப்பின் கருத்தைத் துல்லியமாகத் தருவதாகவும், மிக நுணுக்கமான ஒரு சமநிலை பேணப்படுவதே இங்கு மிக இன்றியமையாததாகும் எனலாம்.

ஆண்ட்ரே லெஃபிவெரே சுட்டிக்காட்டுவது போல, ஒரு மூலப் படைப்பு என்பது வெற்றிடத்தில் இருந்து தோன்றுவதில்லை. மாறாக, தான் சார்ந்த சமூக கலாசாரப் பின்புலங்களின் செல்வாக்குக்கு உட்பட்டே பிறக்கின்றது. வித்தியாசமான கருத்தியல்களின் சங்கமத்தை நாம் அதில் காணலாம். எனவே, ஒரு மூலமொழிப் படைப்பை வாசிக்கும் மொழிபெயர்ப்பாளன், அதன் பின்னணியில் உள்ள கருத்தியலை, அரசியலைப் புரிந்துகொள்வது அவசியமாகின்றது.

இனி நாம் சில கவிதை மொழியாக்கங்கள் குறித்து நோக்குவோம்:

සිනාමලීගේ කතාව

කුරුඳු වත්තේ කොමසාරිස් බංගලාවේ

බේබි බලාගන්න වැඩට කොළඹ ගියා සිනාමලී

තොලේ සිනා කිරි විසිරි ඇස් සිරි සිරි නිල්ල වැදී

මූන පුරා මල් පිපිරී කොළඹ ගියා සිනාමලීஎன்ற கவிதையின் தமிழாக்கம் இப்படி அமைகிறது:


கறுவாக் காட்டிலுள்ள
‘பெரியவரின்’ பங்களாவில்
பிள்ளை பார்க்க ஆயாவாய்
கொழும்புக்குப் போனாய், நீ.

இதழினிலே புன்முறுவல்
இருவிழியில் பளபளப்பு
முகமலரில் விகசிப்பு
கொழும்புக்கு நீ போனாய்.

எனினும், மூலமொழியான சிங்களக் கவிதையில் குதியாட்டம் போடும் கவித்துவ உயிர்ப்பைத் தமிழில் முழுமையாய்க் கொண்டு வந்திருப்பதாய் உணர முடியவில்லை. இதனையே நாம் translation loss அதாவது, மொழிபெயர்ப்பில் இழப்பு என்கின்றோம். ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளரைப் பொறுத்தளவில், மொழிபெயர்ப்பின் போதான இழப்பினைக் குறைப்பதற்கான முன்னெடுப்புக்களில் உச்சபட்ச கரிசனை காட்டுவார். உண்மையில், மொழிபெயர்ப்பின் போதான இழப்பினைத் தவிர்ப்பதற்கு எந்த விதமான இயற்கை வழிமுறையும் இல்லை என்றே கூறவேண்டும். அத்தகைய இக்கட்டான நிலையைத் தவிர்த்தலோ, முற்றாகத் தீர்த்தலோ சாத்தியமில்லை. இதுபற்றி ஹேர்வேயும் ஹிக்கின்ஸும் குறிப்பிடுகையில்,

“மொழிபெயர்ப்பாளர் எதிர்கொள்ளும் மொழிபெயர்ப்பு இழப்பினை முற்றுமுழுதாக இல்லாமல் ஆக்குவதல்ல. மாறாக, மூல மொழியில் இருந்து இலக்குமொழிக்குப் பரிமாற்றத்தக்க மிக இன்றியமையாத கூறுகள் எவை, அவற்றைப் பரிமாற்றுகையில் எத்தகைய அம்சங்களை இழப்பது ஏற்புடையதாக அமையும் என்பதைத் துல்லியமாகத் தீர்மானிப்பதன் மூலம், மொழிபெயர்ப்பு இழப்பினை அதிகபட்சம் குறைப்பதே ஆகும்” (Hervey & Higgins 1992:24) என்று வலியுறுத்துவது இங்கு நோக்கத்தக்கது. 

තුන් අවුරුද්දකට පස්සේ ගෙදර ආවේ
කළු රෙද්දක් පොරවාගෙන අඬන ළමෙක් උස්සාගෙන
නංගියේ නුඹ ගමෙන් ගියේ
මල් බරවී මිණිමුතුවී පේරාදෙණිය වගේ
නංගියේ නුඹ ගමට ආවේ ජරාවාසවී ඇලවී
අනුරාධපුරේ වගේ
          ‹පරාක්‍රම කොඩිතුවක්කූ›
மூன்றாண்டு சென்றதன்பின்
கருஞ்சேலை ஒன்றணிந்து
வீட்டுக்கு நீ வந்தாய் – அழும்
சிசுவொன்றை உடன்சுமந்து

பெண்ணே நீ ஊரிருந்து
போகையிலே பூத்துக் குலுங்குகின்ற
பேராதனை போலிருந்தாய்!
ஊர்திரும்பி வருகையிலோ;
சிதைந்தழிந்து போயிருக்கும்
அனுர(ராத)புரம் போலுள்ளாய்! 


பராக்கிரம கொடிதுவக்கு
பராக்கிரம கொடிதுவக்கு இந்தக் கவிதையில், சினமன் கார்டன் என்ற கறுவாக்காடு, பேராதனை, அனுராதபுரம் முதலான இடப்பெயர்கள் தம்மளவில் வெறும் ஊர்களை மட்டுமே குறிக்காமல், முறையே, “மேல்தட்டு மக்கள் வசிக்குமிடம்”, இயற்கை வளம் கொஞ்சும் பிரதேசம், சிதைந்து அழிந்துபோய் புனருத்தாரனம் செய்ய முடியாத புராதனகால இடிபாடுகள் கொண்ட பிரதேசம் முதலான அர்த்தப்பாடுகளைக் கொண்டுள்ளன. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்மீதான பரிதாப உணர்வு வெளிப்பாடு கொண்ட இக்கவிதையில், இன்னொரு சுவாரசியமான விடயமும் உள்ளார்ந்து தொக்கி நிற்கின்றது. அதாவது, ஓர் அழகிய இளம் “பெண்” முதலில் வளம் கொழிக்கும் பூமிக்கும், பின் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு குழந்தை பெற்றதும், இனி ஒருபோதும் புனரமைக்கப்பட முடியாத இடிந்த புராதனக் கட்டிடங்கள் நிறைந்த நகரத்துக்கும் உவமிக்கப்படுகின்றாள். இங்கு, பெண் என்பவள் பெண்ணுடம்பாகப் பார்க்கப்பட்டும் படைக்கப்பட்டும் இருப்பதன் பின்னணியில் உள்ள கருத்தியல் சார்பு எத்தகையதாக இருக்க முடியும் என்பதற்கு பெரிய ஆராய்ச்சி எதுவும் அவசியமில்லை. பராக்கிரம கொடிதுவக்கு ஓர் ஆண் கவிஞர் என்பதைப் புரிந்துகொள்வதே போதுமானது. இங்கு, அய்யப்பப் பணிக்கரின் கேள்வி முக்கியமானது. ‘இலக்கியப் பிரதி தனது மேற்பிரதியுடன் உட்பிரதி ஒன்றையும் கொண்டிருக்கும். மொழிபெயர்க்கையில் இந்த உட்பிரதி தானாகக் கொண்டுவரப்பட்டு விடுமா?’ என்று கேட்கின்றார், அவர்.

இலக்கணம், வாக்கியக் கட்டமைப்பு முறை, மரபுத் தொடர் அல்லது மொழி மரபு எனும் அம்சங்களில் மொழிகளுக்கிடையில் வேறுபாடு இருக்கும். மொழிபெயர்ப்புச் செயற்பாட்டின்போது அவை பற்றிய புரிதல் மிக முக்கியமானது. இல்லாதபட்சத்தில், மொழிபெயர்ப்பு செம்மையானதாக அமையாது. மேற்படி கவிதையில், “நங்கி” என்ற சொல் நேரடியாக உணர்த்தி நிற்கும் பொருள் தங்கை, தங்கச்சி என்பதுதான். என்றாலும், பொதுவாக சிங்களச் சமூக வழக்கில், ஓர் ஆண் அறிமுகமான/அறிமுகமற்ற பெண்ணையோ, மைத்துனியையோ, காதலியையோகூட “நங்கி” என்று அழைக்கும் மரபு உண்டு. மறுதலையாக “அய்யா” என்பது நேர்ப்பொருளில் அண்ணனைக் குறித்தாலும், காதலனை, மச்சினனை, பிற ஆடவரை சிங்களப் பெண்கள் அய்யா என்றே அழைக்கின்றனர். இதுபற்றிய தெளிவு இல்லாது இருந்திருந்தால், “நங்கி” என்ற சொல்லுக்கு, “பெண்ணே!” என்ற சொல்லைச் சமனியாகப் பெற்றிருக்க முடியாமல் போய் இருக்கும்.

அவ்வாறே, ரஸிகா தேவிகா பெரேராவின் Heart Breaking Destiny என்ற இன்னோர் ஆங்கிலக் கவிதையில், தாயால் கைவிடப்பட்டபின், மறுமணம் செய்துகொண்ட தந்தையும் தம்மைவிட்டுத் தூரமாகிவிட்டதற்குக் காரணம் தேடும் சிறுபெண் கேட்கிறாள்:

“Is the step-mother the reason?

If she is the reason, I do not hate her

……………………………………………………………………..

‘He is now not mine’, ‘she is not mine’

they gave birth to us according to an act

this is the truth, you have to believe that!”

இதனை மொழிபெயர்க்கும் போது,

“சிற்றன்னைதானோ இந்த

விரிசலின் வேர்க்கால்?

என்றாலும் அவரை வெறுத்திடல் அரிது”

………………………………………………………………….

எந்தையும் தாயும்

எனக்குரியர் அல்லர்

வெறுமனே ஓர்

உறவின் பிணைப்பே- எங்கள்

பிறப்புக்குப் புள்ளியிட்டது,

நிதர்சனம் இதுவே,

அமைதிகொள் மனமே!”

‘He is now not mine’, ‘she is not mine’ என்று மூலமொழியில் தனித்தனியே இடம்பெற்றாலும், தமிழில் அதனை நேர்பொருளாக, “அவர் எனக்குரியவர் அல்ல” என்று இருமுறை எழுதுவதால், தாய், தந்தை என்ற அர்த்தம் கிடைக்கப்பெறாது. எனவேதான், “எந்தையும் தாயும் எனக்குரியர் அல்லர்” என்று மொழியாக்கம் செய்ததன் மூலம், மூலத்தின் கருத்தைச் சிதைக்காமல் இலக்குமொழியில் கொண்டுவர முடிந்தது.

ළමාවිය என்ற சிங்களக் கவிதையில் ஓரிடம்,

වැලි වලින් බත් උයා
හැම දෙනට බෙදා දුන්
සමනලු හඹා ගිය
සොඳුරු සමනල් දිවිය

'අ'යනු 'ආ'යනු බැරිව
වේවැලෙන් බැට කෑව
හැංගිමුත්තන් ඔට්ටු
දඟකෙරූ ඒ යුගය  

என்ற வரிகளிடையே வரும், 'අ'යනු'ආ'යනු என்ற வரியை மொழிபெயர்க்கும்போது, மூலமொழியின் அரிச்சுவடி பற்றி இலக்குமொழி வாசகன் தெரிந்துகொள்ளும் வகையில், அயனு ஆயனு என்று மொழிபெயர்ப்பதா, அல்லது இலக்குமொழி வாசகனின் இலகுவான புரிதல் கருதி, இயல்புத்தன்மை கெடாத வகையில் ஆனா, ஆவன்னா என்று மொழிபெயர்ப்பதா என்ற சிக்கல் எழுவது தவிர்க்க முடியாததாகின்றது. இந்நிலையில், இலக்குமொழி சார்ந்த தெரிவுக்கே இடமளிக்க வேண்டியதாயிற்று.

மற்றொரு ஆங்கிலக் கவிதை மொழியாக்கத்தைப் பார்ப்போம்:

எனது சுயம்
நான்
என் பெயரை மாற்றிக்கொண்டு விட்டேன்
மற்றுமோர் “எண்பத்தி மூன்று”
பற்றியதான அச்சத்தில்
நான் இப்போது நானாக இல்லை.
என் பங்குக்குச் செயலாற்றிச்
சந்தடியின்றி இருக்கின்றேன்
எனையறிந்த ஒருவரை
சந்திக்க அஞ்சி வாழ்கிறேன், நான்.

எனது பொட்டை நானே அழித்தேன்;
தாலியைக்கூட கழற்றி வைத்தேன்.
சேலையணிந்திடும் பாணியை மாற்றினேன்
எனது பேச்சையும் கூட
மாற்றிக்கொண்டு விட்டேன்.

“பிறர்” பற்றி நான் பயப்படுகின்றேன்
ஓம், என் இனத்தவரைக்கூட
என்னால் நம்பமுடியவில்லை
நான்
கப்பம் கட்டுதல் வேண்டும்
அன்றேல் சுடப்படக்கூடும்
மதில் மேல் இருப்பது
சாத்தியமற்றுப்போய்...
ஒன்றில் ஆதரவாய்
அன்றேல் எதிர்ப்பாய்..
மட்டுமே இருத்தல் இயலும்
வாழ்க்கை பொருளற்று
வெறுமையான போதிலும்,
நான் பாசாங்கு செய்தாக வேண்டும்

நான் யாராக இருக்கக்கூடும் என்பதை
சிலவேளை மறந்துபோய் விடுகின்றேன்
ஆனால்,
எனது சுயம்
என்னையே அச்சுறுத்துகிறது.


ரோஸ் அசேரப்பா ஆங்கிலத்தில் எழுதிய இந்தக் கவிதை பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாய்க் கருதுகின்றேன்.

இக்கவிதையின் ஆரம்பத்தில் இடம்பெறும் “எண்பத்து மூன்று” என்பது, வெறுமனே ஓர் இலக்கம்தானா, அல்லது போகிற போக்கில் ஓர் ஆண்டை மட்டும் குறிப்பிட்டுச்செல்லும் வெற்றுச் சொல்லா என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. இலங்கையின் இனத்துவ அரசியல் வரலாற்றைப் பொறுத்த வரையில், “எண்பத்து மூன்று” என்ற சொல் அடையாளப்படுத்திநிற்கும் பயங்கரமான உணர்வுநிலை எத்தகையது என்பது இலங்கையரான இலக்குமொழி வாசகருக்கு மிக எளிதில் புரியும். அத்துடன், கவிதை தொடர்ந்து சொல்லப்போகும் செய்தி குறித்த கவனக்குவிப்பையும் விரைவில் ஈர்த்துவிடுவதாகவும் இச்சொல் அமைந்துவிடுகின்றது. எனவே, மொழிபெயர்ப்பின்போது, அடிக்குறிப்புக்கள் கொடுத்து அதையிட்டு சிரமப்படும் தேவை எதுவும்  ஏற்படவில்லை.

இக்கவிதையின் அடிநாதமாய் உள்ள அடையாள அரசியல், வெறுமனே சமூக, அரசியல் அடையாளத்தைப் பற்றி மட்டுமே பேசாமல், பெண்ணின் அடையாளம் பற்றியும் பேசுகின்றது. இலக்குமொழியான தமிழில், பொட்டு, தாலி என்பதையெல்லாம் எந்த அடிக்குறிப்பும் இல்லாமலேயே புரிந்துகொள்ள முடியும் என்றநிலையில், மூல மொழியான ஆங்கிலத்திலும் தாலி, பொட்டு முதலான கலாசார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் சொற்கள் அவ்வாறே பயன்படுத்தப்பட்டிருப்பது இக்கவிதையின் சிறப்பு. ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டுள்ள இந்தக் கவிதை, ஒரு சமூகத்தின் இருப்பையும் சிறப்பையும் நிர்ணயிப்பவள் பெண்தான் என்பதையும், ஒரு சமூகத்தின் மீதான போர் அல்லது அழிப்பு நடவடிக்கையின்போது, அதிகம் பாதிப்புக்கு உள்ளாகுபவளும் அதிகமதிகம் பழிவாங்கப்படுபவளும் பெண்தான் என்பதையும் உள்ளார்ந்து உணர்த்தமுனைகின்றது எனலாம். அதுமட்டுமல்ல, இங்கு பெண்ணின் இருப்பு சார்ந்த அச்சுறுத்தலின் ஊடே, அவள் சார்ந்த சமூகத்தின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதன் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளது.

இக்கவிதையின் ஓரிடத்தில்,

“I’m afraid of “others”

Yes, my own I trust not”

என்று இடம்பெறுகின்றது. அதனை,

““பிறர்” பற்றி நான் பயப்படுகின்றேன்
ஓம், என் இனத்தவரைக்கூட
என்னால் நம்பமுடியவில்லை” 


என்று தமிழாக்கம் செய்யும் போது “யெஸ்” என்பதற்குப் பதிலாக “ஓம்” என்ற பேச்சுவழக்குச் சொல்லைத் தெரிவு செய்ததன் மூலம், அதற்குப் பிரதேசரீதியான  அடையாள அழுத்தமொன்று கிடைப்பதாய் உணர்ந்தேன். மொழிபெயர்ப்பாளரின் தெரிவு பற்றிய புரிதல் இதனை எளிதாக்கியது எனலாம்.  

“ஒரு கவிதை உணர்த்தி நிற்கும் பல்வேறு அர்த்தப்பாடுகளில் ஏதேனும் ஒன்றை குவிமையப்படுத்தலாம். மூலக் கவிதையின் அடிகளின் அளவை அப்படியே இலக்கு மொழியிலும் கொண்டுவர வேண்டும் என்பதற்கப்பால், மூலக்கவிதையின் நேரடி மொழிபெயர்ப்பைவிட்டும் விலகி அக்கவிதையின் பின்னணி, ஓட்டம், உணர்வு, ரிதம் என்பவற்றைப் பிரதிபலிக்கும் விதத்தில் மொழிமாற்றம் செய்யலாம்.” என்ற Anne E. Rodda (1981:149) யின் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

இறுதியாக, மொனிக்கா ருவன் பத்திரன எழுதிய “லெச்சமீகெ சித்துவில்லக்” (லட்சுமியின் எண்ணம்) எனும் சிங்களக் கவிதை மொழியாக்கம் குறித்து நோக்குவோம்.

සීතල මීදුම අතරින් - පියවර මනිමින් එනවා
වතුයායී කඳුමුදුනේ - දළු නෙළමින් ඇවිදිනවා
කඳු රවුමේ යන ගමනේ - වතුමායිම හමුවෙනවා
මාය්ම ළඟ තේ පඳුරෙදි - දෑත දෙපය නවතිනවා
දළු සුළඟට සැලෙනාවිට - මහේ ඇසිපිය සෙලවෙනවා
පිණිබිඳු බිම වැටෙනාවිට - නෙත කඳුළෙලි වෙහිරෙනවා

என்று தொடரும் கவிதையின் மொழியாக்கம் இப்படி அமைகிறது:

பனிக்குளிரில் பல்லெல்லாம்
கிடுகிடுக்கும்; உடம்பெல்லாம்
வெடவெடக்கும்; படியேறி
நடப்பேன் நான் தோட்டத்திலே.
மலைமுகட்டில் கொழுந்தெடுக்க
சுத்துமலை சுத்தி வர
தோட்டக்காட்டு எல்லைவரும்;
எல்லையிலே நிற்குமந்த
தேயிலைப் பத்தை வரும்
பத்தையினைக் காண்கையிலே
கைகாலில் உதறல் வரும்
எளங்குருத்து அசைகையிலே
எமையிரண்டும் படபடக்கும்
பனித்துளிகள் கொட்டுகையில்
கணுக்குள்ள தண்ணிவரும்
சுத்தியுள்ள புல்வெளியே!
புல்மொளச்ச நல்மண்ணே!
அன்றொருநா ஒம்மடியில்
நானொளிச்ச புள்ளையெங்கே?
வருஷங்கள் பத்திரண்டு
ஆகிவிட்டதென் மகனே,
தலைதூக்கி இனி மெதுவா
எந்திரிச்சி வா ராசா 
ஒத்தையடிப் பாதையிலே
சுத்துவழி நீ நடந்து
உச்சிமலை போறதுக்கு
எம்பின்னே வா மவனே!

என்று நீள்கிறது கவிதை. இங்கு, மலையகத் தோட்டத் தொழிலாளிப் பெண்ணொருத்தியின் மனக்குமுறலைப் பேச்சுமொழியில் இலகுவாக மொழியாக்கம் செய்ய முடிந்திருப்பதன் காரணம் இலக்குமொழி சார்ந்த சமூகத் தளத்தினைப் பின்புலமாகக் கொண்டு மூலமொழிக் கவிதை அமைந்திருப்பதே ஆகும். இதே கவிதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுமாயின், இந்த இயல்பான பேச்சுவழக்கினைக் கையாள்வது மிகப்பெரும் சவாலாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

எனவே, இலக்கியம் அதிலும், கவிதை என்பது மொழியின் உன்னதம்; உணர்வு வெளிப்பட்டின் உச்சம். அதனை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்குக் கொண்டு செல்லும்போது, வடிவம், மொழிநடை என்பனவற்றுக்கெல்லாம் அப்பால், அதன் உயிர்நாடியான உணர்வுநிலை அல்லது அதன் உணர்ச்சி அனுபவம் மிக நுணுக்கமாக இலக்குமொழியில் வார்க்கப்படுகின்றதா என்பதே மிக முக்கியமானது. இதன்போது, மூலமொழிப் பிரதி திரிபடையாமலும் வாசகன் பிரதியில் இருந்து முழுமையானதோர் அந்நியத்தன்மையை உணராமலும் சமநிலை பேணுவது மொழிபெயர்ப்பாளரின் கடமை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா நிலையிலும் மொழிபெயர்ப்புச் சமனியைக் கண்டடையும் முழு முயற்சியில் வெற்றியடையும் பட்சத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளர் இக்கடமையைச் செவ்வனே செய்துமுடிப்பது சாத்தியமாகிறது எனலாம்.

குறிப்பு: இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள சினாமலீயின் கதை, மனம் சிதைத்த விதி, எனது சுயம், லட்சுமியின் எண்ணம் முதலான மொழியாக்கக் கவிதைகள் “மௌனத்தின் ஓசைகள் எனும் என்னுடைய மொழியாக்கக் கவிதைத் தொகுதியில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.
 ~ ஆக்கம்: லறீனா அப்துல் ஹக் ~ 
*கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச இலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

உசாத்துணைகள்:

சிவசண்முகம், சி., தயாளன், வே. (1989) மொழிபெயர்ப்பியல், சிவகங்கை: அகரம்

அரணமுறுவல், ந., அமரந்த்தா (தொகு) (2005) மொழிபெயர்ப்புக்கலை – இன்று, சென்னை: பாவைபப்ளிகேஷன்ஸ்.

சிவகாமி, ச., (2004), மொழிபெயர்ப்புத்தமிழ்,சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

கு.ப.ரா., (1947) இரட்டை மனிதன் (மொழிபெயர்ப்பு), காரைக்குடி: நவயுகம்.

நுஃமான், எம்.ஏ., (1997) “தமிழ் மொழிபெயர்ப்பில் சிங்கள இலக்கியம்”, பேராசிரியர் சி. தில்லைநாதன் மணிவிழா மலர், பேராதனை.

நுஃமான், எம்.ஏ., (1984), மார்க்ஸியமும்இலக்கியத்திறனாய்வும், சிவகங்கை: அகரம்.

நுஃமான், எம்.ஏ., (2008), மஹ்மூத்தர்வீஷ் கவிதைகள் (மொழியாக்கக் கவிதைகள்), சென்னை: அடையாளம்.

பண்ணாமத்துக்கவிராயர், (1996) காற்றின் மௌனம் (மொழியாக்கக் கவிதைகள்), கொழும்பு: மலையக வெளியீட்டகம்.

லறீனாஏ. ஹக், (2008), மௌனத்தின்ஓசைகள் (மொழியாக்கக்கவிதைகள்), கெலிஒயா: திளினஅச்சகம்.

Catford, J.C. (1965) A Linguistic Theory of Translation, London: Oxford University Press

Holmes, J. (ed.), (1970) The Nature of Translation: Essays on the Theories and Practice of Literary Translation, The Hague & Paris: Mouton.

Anne E. Rodda, (1981) “Translating for Music: The German Art Song” , Translation Spectrum: Essays in Theory and Practice, New York: State Univercity.

Lefevere, Andre, (2004), Translation, Rewriting and the Manupulation of Literature Fame, Shangai: Shanghai Foreign Language Education Press.

Lawrence Venuti (Ed), (2000), The Translation Studies Reader, London & New York: Rourtledge.

Mona Baker,(1992), In Other Words: A Course book on Translation, London & New York: Rourtledge. 

New Mark, Peter, (1988), A textbook of translation, London & New York: Prentice Hall.

Valarmathi, M., (Ed) (1999) On Translation, Chennai: International Institute of Tamil Studies.

The Concept of Faithfulness in Poetic Translation [Online]. Available from:

http://www.ouargla-univ.dz/pagesweb/PressUniversitaire/doc/06%20El%20Athar/T05/T0524.pdf

Canadian Center of Science and Education (2012) Manipulation in Poetry Translation  [Online]. Available from:

http://ccsenet.org/journal/index.php/ass/article/view/15990  

Hossein Vahid Dastjerdi, Haadi Hakimshafaaii, Zahra Jannesaari, Translation of Poetry: Towards a Practical Model for Translation Analysis and Assessment of Poetic Discourse, Journal of Language & Translation 9-1, March 2008, [Online]. Available from:

...மேலும்

Dec 30, 2014

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! - நா.முத்துநிலவன் கட்டுரை


என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு  நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அலைபேசியில் பேசுவது போதாதென்று இது என்ன திடீரென்று கடிதம்? என்று உனக்கு வியப்பாக இருக்கலாம். பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கும் நீ முன்பை விடவும் –அதாவது நீ பள்ளியில் படித்த காலத்தைவிடவும்- தற்போதுதான் நம் உலகத்தைப் படித்துக்கொள்வதில் கொஞ்சம் முன்னேறியிருப்பாய் என்று நினைக்கிறேன்.

கல்லூரிப் படிப்பு என்பது வேலைக்குப் போவதற்கான நேர்வழி என்பது ஒரு பகுதிதான். அதைவிட, வகுப்பிலும், விடுதியிலும் இருக்கும்போது, மற்றவர்களோடு எப்படிப் பழகுவது, நல்லது கெட்டது எது? என்று தெரிந்து கொள்வதுதான் உண்மையான பயன்தரும் கல்வி. சொந்த அனுபவம் மற்றும் நண்பர்கள் ஆசிரியர்கள் வழியாகப் பாதியும், ஊடகம் மற்றும் செய்தித்தாள்களின் வழியாகவே மீதியும், கற்றுக்கொள்வதுதான் உண்மையான கல்விஅறிவு! அப்பாவும் அம்மாவும் கற்றுத்தர முடியாத பலப்பல விஷயங்களைப் பள்ளிக்கூடமும், கல்லூரியும் கற்றுத்தரும் என்பதற்காகத்தான் பிள்ளைகளைப் பெற்றோர் பள்ளி, கல்லூரிகளுக்குப் படிக்க அனுப்புகிறார்கள்.

ஆனால் உன்போலும் பதின்பருவ (teen-age) பிள்ளைகள் பெரும்பாலான நேரத்தை செல்பேசி, கணினி, தொலைக்காட்சியுடனே செலவிடுகிறீர்கள். ஒருவகையில் அதுவும் படிப்புத்தான் என்றாலும், என்ன கற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். நீ எனது செல்பேசியில் திருக்குறளையும் பாரதியார் கவிதைகளையும் பதிவிறக்கம் செய்து விரும்பிய போதெல்லாம் விரும்பிய பக்கத்தை எப்படிப் படிக்கலாம் என்றும் சொல்லித்தந்ததை நான்என் நண்பர்களிடமெல்லாம் காட்டிக்காட்டி மகிழ்கிறேன். அவர்கள் வியப்புடன் “இது எப்படிங்க? என்செல்பேசியிலும் வச்சுத்தாங்களேன்?“ என்று சொல்லும் போது “இது என்மகள் வச்சுத் தந்தது, எனக்குத் தெரியலையே! அடுத்த முறை விடுமுறைக்கு வரும்போது என்மக கிட்ட கத்துக்கிட்டு உங்களுக்கும் சொல்லித் தர்ரேன்”என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்படி மின்-நூல்களைப் படிப்பது, மின்-இதழ்களைப் படிப்பது என்பன போலும் பயன்பாடுகள்  ஒருபக்கமிருக்க, வேறுபல திசைகளில் நேரவிரயத்துடன், நம்மைப் புரட்டிப் போட்டுவிடும் ஆபத்தும் அவற்றில் அதிகம் எனும் எச்சரிக்கை மிகவும் தேவை. அதுவும் முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட, முகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக்கொண்ட யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும்உள்ளது என்பதை எந்தநேரத்திலும் மறந்துவிடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான் இருப்பாய்! இருக்க வேண்டும்.

இன்றைய பதின்பருவப் பிள்ளைகள் பலர், மிகுந்த –பன்முக- திறமைசாலிகளாக இருப்பதை, சில செய்தி-தொலைக்காட்சி-களில் பார்த்து வியந்து மகிழ்ந்துமிருக்கிறேன்.புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வரும் ஆயுதம் செய்வோம், நேர்படப்பேசு முதலான பல நிகழ்ச்சிகள், விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயா-நானா விவாதங்கள், சூப்பர்-சிங்கர், கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் வரும் சில பேச்சு மற்றும நேரலையாகக் கருத்துக்கூறும் நிகழ்ச்சிகளில் நான் பார்த்து மகிழ்ந்த இந்தத் தலைமுறைப பிள்ளைகள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அப்போதெல்லாம், இவர்கள், நமது சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், கம்பர், பாரதி, பட்டுக்கோட்டை முதலான நம் முன்னோரிடமிருந்து மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர், நியுட்டன், கலிலியோ, ஷேக்ஸ்பியர், கியூரி முதலான பெரும் மேதைகளிடமிருந்தும் பெற வேண்டிய சாரங்களை எமது தலைமுறையைக் காட்டிலும் இவர்கள் சரியாகவே உள்வாங்கியிருக்கிறார்கள் என்றும் நினைந்து  மகிழந்து பெருமைப்பட்டுக்கொள்வேன் போ!

இதுபோல் நல்லநிகழ்ச்சிகளை பார்த்துரசிக்காமல், குறும்புசெய்து திட்டும்குட்டும் வாங்காமல், நல்ல விஷயங்களை எல்லாருமாய்ப் பேசி சிரித்து மகிழாமல், வெளியில் போய் விளையாடி மகிழாமல், வீட்டுக்குள் உட்கார்ந்து “ஓடிவிளையாடு பாப்பா” என்று மனப்பாடம் செய்து, மதிப்பெண் வாங்குதை எப்படிச் சாதனைஎன்று சொல்லமுடியும்? அவர்கள் குழந்தைப் பருவத்தையே படிப்புக்காகத் தியாகம் செய்து என்ன ஆகப்போகிறது? என்று கேட்க விரும்புகிறேன்.
முதல் மதிப்பெண் வாங்கும் எந்த மாணவரும் விளையாட்டு, ஓவிய, இசை முதலான பலப்பல வகுப்புகளையே அறிந்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மைதானே? பல பள்ளிகளில் முக்கியமாக “மாநில முதலிடம், இரண்டாமிடம், மற்றும் 450க்கு மேல் 800பேர்” என்று விளம்பரம் செய்து கல்லாக்கட்டும் தனியார்பள்ளிகளில் 10ஆம் வகுப்புக்கு அரசாங்கப் பாடத்திட்டத்தில் இருக்கும் ஓவியம்,விளையாட்டு,சுற்றுச்சூழல் கல்வி வகுப்புகளே நடத்தப்படுவதில்லை! ஒரே புத்தகத்தை இரண்டுவருடம் உருப்போடுவதும், அதைப் புள்ளிபிசகாமல் “வாந்திஎடுத்து” எழுதிக்காட்டுவதுமாய்க் கிறுக்குப் பிடிக்காமல் பார்த்துக்கொள்வது வேண்டுமானால் சாதனதான். பன்முகத் திறமையை வளர்த்துக்கொண்டு, எந்தத்திறமை ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் பருவம்தான் பள்ளிப்பருவம், முடியாவிடில் கல்லூரிப் பருவத்திலாவது முடியவேண்டும். அவ்வளவுதான். பிடித்த துறையில் தேர்ச்சி பெற்றபின் அதை வாழ்க்கையில் தொடர்வது முக்கியமா? முதல்மதிப்பெண்ணோடு மறந்துவிடுவது முக்கியமா யோசித்துப் பார்!

இதனால்தான் மகளே, எனது உரைவீச்சு மற்றும் பட்டிமன்றப் பேச்சுகளின ஆரம்பத்தில் எந்த இடத்திலும் நான், “என் எதிரே மலர்ந்த முகங்களோடு அமர்ந்திருக்கும், இன்றைய மாணவர்களான- எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான, எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! மத்திய-மாநில அமைச்சர் பெருமக்களே! பாரத நாட்டின் பிரதமர்களே! குடியரசுத்தலைவர்களே! கவி பாரதிகளே! காரல்மார்க்ஸ்களே! அண்ணல் அம்பேத்கார்களே! தந்தை பெரியார்களே! கல்பனா சாவ்லாக்களே, அன்னை தெரஸாக்களே!” என்று சொல்லும்போது கூட்டமே ஆரவாரித்து கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்து போகும்.  இது பேச ஆரம்பிக்கும்போதே, பார்வையாளர்களைக் கவர நான் செய்யும் உத்திதான் எனினும், அதில் இருக்கும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பும் பொய்யல்லவே?

ஆனால், எனதுநண்பர் ஒருவர் -மத்திய அரசின் விருதுபெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர்- சொன்ன ஒரு கருத்தும், மற்றொரு பக்கம் உறுத்தத்தான் செய்கிறது. அவர் சொன்னார் – “சார், நாங்கள்ளாம் 1985மற்றும் 89ஆம் ஆண்டுகளில் நடத்திய பெரும்பெரும் போராட்டங்களால், இப்போது எங்கள் சம்பளமும் சரி பென்ஷனும் சரி உயர்ந்து நிற்கிறது. நான் 37ஆண்டு சர்வீசில் கடைசியாக வாங்கிய ரூ.60,000 சம்பளத்தை, என்மகன் தனது முதல்மாதச் சம்பளமாக வாங்குகிறான்” “ஆகா, இதுவல்லவா மகிழ்ச்சி” என்று நான்சொல்ல, அவர் சற்றும் மகிழ்ச்சியில்லாமல், உச்சுக்கொட்டிக்கொண்டு, “அட போங்க சார், வாழ்க்கைன்னா என்னன்னு தெரிஞ்சிக்கறதுக்கு முந்தியே வாழ்ந்துமுடிச்சிடுறாங்கெ சார்! பெரியபடிப்பு, கைநெறய சம்பளம், ஆனா வாழ்க்கைன்னா என்னன்னே தெரியலசார்! அல்பவிஷயத்த பூதாகரமாக்கி அடிச்சிக்கிறது, பெரிய விஷயங்கள புரிஞ்சிக்காமயே லூஸ்ல விட்டுர்ரதுன்னு இருந்தா என்ன சார் அர்த்தம்? சும்மா டென்ஷன் டென்ஷன்னு... 27வயசுக்காரன் சொன்னா, 60வயசுல நா என்ன சொல்றது?” என்று அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

யோசித்துப் பார்த்தால், வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இன்றைய இளைஞர்களுக்குக் கிடைக்காமலே போனதற்குக் காரணம் என்ன? அந்தப் பாவத்தை நமது பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அல்லவா செய்துவிட்டன என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது! குதிரைக்குக் கண்படாம் போட்டது போல, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் பார்க்காமல் “நேராக“பார்! மதிப்பெண் மட்டும் தெரிகிறதா? சரி என, பயிற்சிபெறும் யாரும் யதார்த்த உலகத்தை விட்டு அந்நியப் படுவதன் காரணமும் பள்ளியில் –புரியாமலே- மனப்பாடம் செய்வதில் தொடங்கிவிடுகிறது அல்லவா?
இன்றைய இளைய சமுதாயம் நன்றாகப் படிக்கிறது ஆனால், படிப்பை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறது?  எதை, எதற்காகப் படிக்கிறார்கள் என்று தெரிந்துதான் படிக்கிறார்களா? 

எம்.பி.பி.எஸ்.படித்தால்,மருத்துவர்ஆகலாம், 
பி.ஈ.படித்தால்பொறியாளர்ஆகலாம். 
பி.எல்.படித்தால்வழக்குரைஞர்ஆகலாம், 
ஐ.ஏ.எஸ்.படித்தால்மாவட்டஆட்சியர்ஆகலாம், 
எதுவுமேபடிக்காமல்மந்திரியும்ஆகலாம். 
ஆனால்,என்னபடித்தால்மனிதர்ஆகலாம்? 

மனிதரைப் படித்தால்தான் நாமும் மனிதராகலாம். என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை.

அதனால், நீ என்ன வேண்டுமானாலும் படி, எல்லாவற்றுக்குள்ளும் மனிதரை மட்டும் மறக்காமல் படி, அல்லது மனிதருக்காக எதுவேண்டுமானாலும் படி. ஆனால், நேர் எதிராகச் சிலர், படிப்பு ஏற ஏற மனிதரை மறந்துவிடுகிறார்கள் அல்லது மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மறந்து போகிறார்கள்!
கலைஇலக்கிய வாதிகள் பலர் பள்ளி கல்லூரிப்படிப்பே இல்லாதவர்கள். ஆனால், அந்தப் “படிக்காதவர்கள்“தான் பல நூறு பேர்களுக்குப் பட்டங்களையே தருகிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா? நான் சொல்வது படிக்காமலே பல கல்லூரிகளை நடத்திப் பட்டம் வழங்கும் –கல்வி வள்ளல்கள் எனும் பெயரோடு உலவிவரும் “கல்வி முதலாளி”களை அல்ல! அது இன்றைய நம் சமூகத்தின் முரண்பாடு! அவர்களிலும் நல்லவர் சிலர் –விதிவிலக்குகளாக- இருக்கிறார்கள் என்றாலும் நான்சொல்லவந்தது அவர்களையும் அல்ல. கல்லூரிப்படிப்புப் படிக்காத –ஆனால் சமகால மனிதர்களைப் படித்த- மேதைகளான எழுத்தாளர்களைச் சொல்கிறேன். ஜெயகாந்தன் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறார். கண்ணதாசனும் அவ்வளவுதான், கந்தர்வன் பள்ளிப்படிப்பு மட்டும்தான்! சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி 3ஆம் வகுப்புத் தானாம்! ஆனால் இவர்கள் எழுத்துகளை ஆய்வு செய்த படிப்பாளிகள் பலநூறுபேர் “முனைவர்” (டாக்டர்) பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றால் முனைவர் படிப்பைவிட இந்தச் சிந்தனையாளர் தம் அறிவு மனிதர்களைப் பற்றியதாக இருக்கிறது என்பதல்லவா பொருள்?

பட்டம் பெற்ற மனிதர்களுக்கான பணிகளும் பதவிகளும் மாறிமாறி வரும், போகும், பதவிகளில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், ஆனால், பதவிகளை வகிக்கும் மனிர்களில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்”-குறள் இதைத்தானே சொல்கிறது? பதவிகளுக்காகவே வாழும் மனிதர்களைப் பற்றி ஒரு சொலவடை இருக்கிறது-

”தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனால் ஊரே திரண்டு வருமாம். தாசில்தாரே செத்துப் போனால் ஒரு நாய்கூட வராதாம்!” இது எப்படி இருக்கு? ரொம்ப எதார்த்தமா இருக்குல்ல?

ஆமாம் அவ்வளவுதான், பதவிக்காலத்தில் ஆடுகிறவர்கள் அதை இழந்ததும், மனத்தளவில் செத்துப் போவது அதனால்தான்! பதவிகளை மக்களுக்குச் சேவை செய்யக் கிடைத்தவாய்ப்பு என்றுநினைக்கும் இடதுசாரி அரசியல்வாதிகள் மட்டும்தான் முதலமைச்சராக இருந்தால் கூட “தோழர்” எனும் ஒரு சொல்லுக்குள் அடங்கி நிற்பார்கள். இடதுசாரித் தலைவர்களை மட்டும்தான் இன்னமும் ”தா.பா.வர்ராராமில்ல?””ஜி.ஆர்.பேசுறாராமில்ல?” என்று பெயர்ச்சுருக்கத்தைச் சொல்லிச் சாதாரணத் தொண்டர் அழைப்பதைப் பார்க்கலாம். மற்ற கட்சிகளில் வட்டம், மாவட்டங்களையே பெயர் சொல்லி அழைக்க முடியாது! அவர்கள் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட பெரியவர்களாகி விட்டார்கள் என்று அர்த்தம். அதாவது அவர்கள் மனிதர்களாகவே இல்லை என்பது பொருள்!

சிறந்த சிந்தனையாளரும் நல்ல தமிழறிஞருமான சாலய்.இளந்திரையன் அவர்கள் எழுதிய கவிதை ஒன்றை இந்த இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இதோ அந்தக்கவிதை -
“எழுதிவைத்த புத்தகத்தில் முழுகிப் போவாய்,
எதிரிருக்கும்மானுடரைபபடிக்கமாட்டாய்,
கழுதைகளும் புத்தகத்தை மேயும், பின்னர

கால்முட்டி இடித்திடவே நடக்கும் தோழா” – என்பது,. புத்தகங்களைப் படிக்கத்தான் வேண்டும். அதற்காகப் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருப்பதல்ல வாழ்க்கை அதை நடைமுறைப்படுத்த, மனிதர்களுக்காக அந்தச் சிந்தனைகளைப் பயன்படுத்த வேண்டும்.
முதல்வகுப்பில் சேர்ந்தது முதல், “முதல்மதிப்பெண்“ மயக்கத்தை மண்டையில் ஏற்றி, மதிப்பெண் வாங்குவதையே லட்சியமாக நினைக்கவைத்த பாவம் நமது கல்விமுறை தந்த சாபமன்றி வேறென்ன? எழுத்துகளை மேய்ந்த அஜீரணத்திற்கு மருந்து தேடி, இவர்கள் தொலைத்தது கருத்துகளை என்பது புரிவதற்குள் படிப்பே முடிந்து விடுகிறதே! நல்ல கவிதை தேமா, புளிமா, பண்புத்தொகை, வினைத்தொகைகளுடன் இருக்கலாம். ஆனால், இந்த இலக்கணக் குறிப்புகளை அறிந்து மதிப்பெண் பெறும் பதட்டத்தில், அனுபவிக்க மறந்தது உயிர்க் கவிதைகளின் அழகை, ஆழமான அர்த்த்த்தை என்பதை அறிந்துகொள்வதற்குள் படிப்பே முடிந்துவிட்டதே!

இதைத்தான் நமது மகாகவி பாரதி –
“அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்” என்று சொன்னான். இதுவும் புரியவில்லை என்றால், குளத்துக்குள் எத்தனை நாள் கிடந்தாலும் தவளை அறிவதில்லை தாமரையின் அழகையும், பயனையும் என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த பருவத்தேர்வுகளில் நீ நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், ஒருபாடத்தில் மட்டும்தான் முதல்மதிப்பெண் எடுக்கமுடிந்தது என்று வருத்தப்பட்டதாக உன்அம்மா கூறினார். அது போதும் மகளே! முதல்மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பதற்காக உனது நேரத்தை யெல்லாம் வீணாக்காதே! உனக்கு மட்டுமல்ல, வழக்குரைஞராக இருக்கும் உன் அக்காவுக்கும், கணினிப் பணியிலிருக்கும் உன் அண்ணனுக்கும் -அவர்கள் படித்தபோது- இதையே சொல்லியிருக்கிறேன்.

பாடப் புத்தகங்களைப் படித்துப்படித்து “உருப்போட்டு“, முதல் மதிப்பெண் எடுப்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாகத் தோன்றும். ஆனால், அப்படி முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் பின்னால் என்ன சாதித்தார்கள் என்று யோசித்துப் பார்த்துத்தான் இதைச் சொல்கிறேன். கடந்த பல பத்தாண்டுகளாக “மாநில அளவில் முதல்மதிப்பெண்“ பெற்ற மாணவர்களுக்கு –அவர்களின் முதல்மதிப்பெண் சாதனைக்காக- பலப்பலப் பரிசுகள் தரப்படுகின்றன. அன்று அவர்கள்தாம் தொலைக்காட்சிகளின் கதாநாயக/நாயகியர்! இனிப்பு ஊட்டுவதென்ன? தோழர்-தோழியர் தூக்கிவைத்துக் கொண்டாட புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து, தொலைக்காட்சிகளுக்கு பேட்டியும் கொடுப்பதென்ன?!!! எல்லாம் அந்த ஒரு நாளோடு சரி. அதன் பின் ஏற்றிவைத்த கிரீடத்தை இறக்கி வைக்கவே சிரமப்பட்டு, அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தச்சாதனைகள் அவர்களுக்கே மறந்துபோய் விடுவதுதானே ஆண்டுதோறும் நடந்துவருகிறது அல்லவா?

நன்றாக யோசித்துப் பார்த்தால், பத்தாம் வகுப்புச் சாதனையின் போது, “பன்னிரண்டாம் வகுப்பிலும் நான் மாநிலமுதன்மை எடுப்பேன்“ என்று வாரிவழங்கும் உறுதிமொழியைப் பெரும்பாலும் –அனேகமாக யாருமே- நிறைவேற்றியதாக எனக்கு நினைவில்லை.

இப்போது ஏன் இதைப்பற்றிச் சொல்கிறேனென்றால், கடந்த சிலபல நாள்களாக, பள்ளியிறுதி(SSLC),, மற்றும் மேல்நிலை(+2) வகுப்புத் தேர்வுமுடிவுகள் வந்து, செய்தித்தாள்களின் பக்கங்களையெல்லாம் தனியார்பள்ளி கல்லூரிக் “கல்விவள்ளல்”களின் விளம்பரங்களே ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை நீயும் பார்த்திருப்பாய்! மாநில முதன்மை பெற்ற மாணவர்களின் பேட்டிகளால் செய்தித்தாள்கள் நிரம்பி வழிகின்றன. அதுவும் இந்த ஆண்டு பத்தாம்வகுப்புத் தேர்வில் மதிப்பெண்களை வாரிக் குவித்து விட்டார்கள் போ! மாநிலஅளவில் முதல்மதிப்பெண்ணே ஒன்பது பேர்! இரண்டாமிடத்தில் 32பேர் மூன்றாமிடத்திலோ 148பேர்!

இந்த மாணவர்கள் மீண்டும் இதே அளவுக்குச் சாதிக்கா விட்டாலும், நன்றாகவெ படித்து, விரும்பும் உயர்கல்வியை விரும்பும் கல்விநிறுவனத்தில் முடித்து, நல்ல தேர்ச்சிகாட்டி, மருத்துவராகவோ, பொறியாளராகவோ, மாவட்டஆட்சியராகவோகூட வந்துவிடலாம் ஆனால், அந்த மதிப்பெண் சாதனையாளர்கள் வாழ்க்கையில் என்ன சாதித்தார்கள் என்றால்... பெரும்பாலும் ஏமாற்றம்தான்... ஏனெனில், வாழ்க்கையில் வெற்றி என்பது கைநிறையச் சம்பளம் தரும் நல்ல வேலைக்குப் போவது, நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொள்வது, குழந்தை குட்டிகளைப் பெற்றுக்கொள்வது, கார்வாங்குவது, பங்களா கட்டுவது என்று “செட்டில்” ஆவதில் இல்லை! அது சுயநலமிக்க வாழ்க்கை. அது நமக்குத் தேவையுமில்லை மகளே! இதைத்தானே பாரதிதாசன் மண்டையிலடித்தாற்பேலச் சொன்னார்?
தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன் 

தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்“ நாட்டின் நல்லகுடிமகனாக, சிறந்தமனிதராக, புகழ் பெறாவிட்டாலும் சாதாரணமாக அடுத்தவர் நினைவில் தோன்றும்போது (IMAGE) நல்ல மனிதராக வாழ்ந்து காட்டுவதுதான் வாழ்க்கையின் அடையாளம். இதைத்தான் வள்ளுவப் பெரியாரும், “தோன்றின் புகழோடு தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்று சொல்லியிருக்க வேண்டும்.
மதிப்பெண் என்பது அறிவின் அளவீடல்ல, நமது கல்விமுறையில் எந்த அறிவும் சரியாக அளக்கப்படுவதுமில்லை. அதனால்தான் இன்றைய நம் கல்வித்துறை வெறும் புத்தக மனப்பாட அறிவுக்கு 60மதிப்பெண்ணும், ஓவியம், விளையாட்டு, பாட்டு, பேச்சு எனும் இதர பிறவகைத் திறன்களுக்கு 40மதிப்பெண்ணுமாகப் புதிய முப்பருவக்கல்விமுறையை அறிமுகம் செய்திருக்கிறது. அது இன்னும் மாறி 100மதிப்பெண்ணும் பல்திறனறிவைச் சோதிக்கவே என்றாகும் காலம் விரைவில் வரும். மாணவர்களின் பன்முக ஆற்றல் வெளிப்பட வேண்டும். அதில் தன் தனித்திறமையைக் கண்டறிந்த மாணவர் அதில் கூர்மையேற்றவும் பயிற்சி பெறவேண்டும்.

தேர்வில் தோல்வியடைந்தாலும் போராடி வென்று இந்தச் சமுதாய முரண்பாடுகளைப் புரிந்து கொண்டு “சமூக மனிதனாக” நாலுபேருக்கு நன்மை செய்து,சாதாரணமாகவே வாழ்பவன்தான் உண்மையில் வெற்றி பெறுகிறான். தேர்வில் வெற்றிபெறுவது முக்கியமா? வாழ்க்கையில் வெற்றி பெறுவது முக்கியமா என்று கேட்டால் கிடைக்கும்  விடை இதை உனக்கு இன்னும் விளக்கிவிடும். ஆனால், முதல் மதிப்பெண் வெற்றி தானே வாழ்க்கை வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று கேட்டால் பெருவெற்றி பெற்ற பலரின் வாழ்க்கையை மதிப்பெண் தீர்மானிக்கவில்லை என்னும் வரலாற்று உண்மையை நீ புரிந்துகொள்ள வேண்டும். தனது பள்ளிப்படிப்பில் –மற்ற பாடங்களை விடவும் குறைவாகவே வரலாற்றுப்பாடத்தில் மதிப்பெண் எடுத்த காந்திதான் இந்திய வரலாற்றையே தன் வாழ்க்கையால் மாற்றி எழுதினார். இன்னொரு பக்கம் தனது கல்லூரிப் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கிய லெனின் அந்தப் படிப்புக்குத் தொடர்பில்லாத அரசியலில்தான் சோவியத்து நாட்டு வரலாற்றை மட்டுமல்ல, உலக வரலாற்றையே புதிதாக எழுதிவிட்டார்!

படிப்புக்குப் பிறகு வேலைக்குப் போனாலும் சரி நீயே உன் திறனுக்கேற்ப உன் வாழ்க்கையைத் திட்டமிட்டுக்கொண்டாலும் சரி. எப்படி ஆயினும், கல்லூரிப் படிப்பு முடிந்தபின் இந்த உலகத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு சிலர்பலரின் சுயநலம், மூடநம்பிக்கை, பொறாமை சூழ்ச்சிகளிடையிலும் நமது தனித்தன்மையை விட்டுவிடாமல் வாழ்வதற்கான கல்வியை முடிந்தவரை கற்றுக்கொண்டு வா. சாதாரணமான மதிப்பெண்களோடும், அசாதாரணமான புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு வா மகளே! அப்புறம் –பாடப்புத்தகம் தவிரவும்- என்ன புத்தகம் புதிதாகப் படித்தாய் என்றும் மின் உலகில் புதிதாக எனக்கென்ன கற்றுக்கொடுக்கப் போகிறாய் என்றும் எனக்குச் சொல்லு. 
சொல்லுறத சொல்லிப்புட்டேன் செய்யுறத செஞ்சிடுங்க...
நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க...
சித்தர்களும் யோகியரும் சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க...
எல்லாம்தான் படிச்சீங்க... என்ன பண்ணிக் கிழிச்சீங்க...
– பட்டுக்கோட்டையார்  பாடல்

அவ்வளவுதான் மகளே!
அன்புடன்
உன் அப்பா.

நன்றி - வாசிப்பு
...மேலும்

Dec 29, 2014

சமுதாய அமைப்பில் நீதியின் கண்முன் பெண்களின் நிலை : ஒரு கண்ணோட்டம் - - ஷர்மிலா ஜெயினுலாப்டீன்


சமுதாய அமைப்பிலே பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என்ற சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. சமூகத்தில் பெண்கள் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். பெண்களுக்கான நீதி இன்றைய சமுதாயத்தில் அமையப் பெற்றுள்ளதா? இன்றைய நோக்கில் பெண்ணுக்குரிய உரிமைகள் அளிக்கப்பட்டனவா? என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய விடயமாகும்.
சீறிவந்த புலியையும் முறத்தினால் அடித்து விரட்டிய இனம் பெண்ணினம். வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்ஸிராணி வழிவந்த பெண்ணினம் என வீர முழக்கமிடும் சமுதாய கோஷத்தில் நீதியின் கண்முன் பெண்களுக்குச் சமுதாய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா? என்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.

காவிய நாயகியான கண்ணகி தனக்குத் துரோகமிழைத்து, தன்னை விட்டுப் பிரிந்து ஆடல் மாதுவிடம் சரச சல்லாபம் புரியச் சென்ற தன் கணவன் உயிரிழக்கக் காரணமானவன் பாண்டிய மன்னன் என அறிந்து, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கிறாள்.
'தேரா மன்னா செப்புவதுடையேன்' என வீர முழக்கமிட்ட கண்ணகியின் கோபாக்கினி மதுரையை எரித்தும் அடங்கவில்லை. நீதிமுழக்கமிடும் பெண்ணவளைக் காவியச் சிலம்பில் இவ்வாறு காண்கிறோம்:

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாதலும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதலும்'
என்று நீதியின் தீர்ப்பில் ஆத்ம திருப்தியைக் காணச் செய்கிறார், காவிய ஆசிரியர் இளங்கோ.
சமுதாய அமைப்பில் பெண்ணின் பங்கு எனும் நோக்கில் ஆதிகாலத்தில் ஆண்-பெண் இருபாலாரும் சம அந்தஸ்துடையோராகக் காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

நிலப்பிரபுத்துவத் தொடக்க காலத்தில், பெண்கள் ஆண்களின் உடைமைப் பொருளாகக் கொள்ளப்பட்டனர். சமுதாயம் வளர வளர பெண் வீட்டுக்கே உரியவளானாள். சமுதாய அமைப்பில் சமயத் தாக்கமே பெண்களுக்கு இடப்பட்ட முதல் தளை. சமத்துவத்தில் சமயமானது பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தியது. மதக் கோட்பாடுகள் பெண் பின்தள்ளப்பட வழிகோலாய் அமைந்தன. மதங்களில் பெண்களின் கடமை தர்மமாக்கப்பட்டது. அடுத்து வந்த காலங்களில் முக்கியமாக வேதகாலத்தில் பெண்கள் கல்வி கற்றனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பின்னர் புராண இதிகாச காலத்தில் பெண் தன் சகல உரிமைகளையும் இழந்த நிலையில் 'கணவனே கண்கண்ட தெய்வம்' என வாழவேண்டிய நிலையும், தர்மபத்தினியாக விளங்க வேண்டுமெனவும் கற்பொழுக்கம் பேணி நடக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

20 ஆம் நூற்றாண்டுச் சமுதாய அமைப்பில் பெண்விடுதலைக்காகக் குரலெழுப்பியவன் பாரதியாவான்.
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' எனமுழக்கமிட்டான்.

'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். 
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் 
இளைப்பில்லை காண்'
என்று சமத்துவக் குரல் எழுப்பி,

'நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம். ஞான நல்லறம், வீரசுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்.' என அறைகூவி, உயர்குடிப் பெண்ணின் பண்பினை உலகறியச் செய்தான். கற்பொழுக்கம் பெண்ணுக்கு மட்டுமே என்று பெண்களை அடக்கி ஒடுக்கிய பாரத சமுதாயத்தை நோக்கி,
'ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால், அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ? நாணமற்ற வார்த்தையன்றோ?' என முழங்கியதுடன்,

'கற்பு நிலையென்று சொல்லவந்தார் -இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்' எனவும் அடித்துக் கூறினான்.
'குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்கிறது வள்ளுவம்.

பொய்யா மொழிப் புலவனின் இக்கூற்றே பெண்பிள்ளை பிறந்தால் பொய்த்துவிடுகிறது. ஆண்குழந்தை பிறந்தால் மாத்திரமே 'மழலை இன்பம்' என்கின்றனர். பிறக்கும் சிசு பெண்ணாக இருந்துவிட்டாலோ, 'ஐயோ பெண்ணா?' என்று இழப்பு இழையோடிய ஆதங்கம் ஒலிக்கிறது.
பெண் பருவமடைந்தால், வெளி உலகிற் சென்று புழங்கக் கூடாது. அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும். அன்னைக்கு அடுத்தபடி வீட்டிலிருந்து தந்தை, சகோதரர்களுக்குக் குற்றேவல் செய்யவேண்டும். இது சமுதாயம் பெண்ணுக்குப் போட்டுள்ள கால்கட்டு. 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்ற கல்விக் கட்டுப்பாடுகள் இன்றும் நிலவிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

சிலப்பதிகார நாயகி கண்ணகி, தனக்குத் துரோகமிழைத்த கணவனுக்கு அடங்கியொடுங்கிய மனைவியாகச் சித்திரிக்கப்படுகின்றாள். தேவ அடியாளாகிய மாதவி விலைமாதாக விமரிசிக்கப்படுகின்றாள். சீதா பிராட்டியின் கற்பொழுக்கம் தீக்குளித்து நிரூபிக்கப்படுகின்றது. கற்புக் கனல் தமயந்தி நடு இரவில் கானகத்தே தனித்து விடப்படுகின்றாள். கற்பின் நாயகி சந்திரமதியின் கற்பு சுடலையில் புடம்போடப்படுகிறது. கற்பின் செல்வி திரௌபதி அரசவையில் துகிலுரியப்பட்டு காட்சிப் பொருளாகின்றாள். இவ்வாறு காவியங்களில் பெண்ணுக்கு நடைபெற்ற சோதனைகளும் வேதனைகளும் எத்தனையெத்தனையோ!

பெண்ணடிமைவாதம் இவ்வாறு பல்வேறு பரிணாமங்களிலும் காணப்படுவதனை அவதானிக்கலாம். பெண் கற்பிழக்கக் காரணமாகும் ஆணுக்கு அளிக்கப்படும் தண்டனை என்ன? பெண் மாத்திரமே ஒழுக்கம் கெடுகிறாள், அவளே விபசாரி. இத்தகைய ஒருதலைப்பட்சமான சமுதாயக் கோட்பாடுகளால் பெண்களுக்காக நீதிக்குரல் எழுப்ப எத்தகைய சாத்திய நிலையும் இல்லை எனலாம்.

மேலும், குடும்பம் என்ற கோயிலில் திருமணம் என்ற பந்தத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தினை நோக்குவோம். மனைவியை இழந்த கணவன் தன் அந்தஸ்தினை இழப்பதில்லை. 'பெண்சாதி செத்தால் புதுமாப்பிள்ளை' என்பதற்கொப்ப விரைவிலேயே மறுமணம் புரிகின்றான். அவனுக்கு அவதூறு, இழுக்கு எதுவும் இல்லை. இதே சமுதாயம் கணவனை இழந்த மனைவிக்கு அமங்கலி, துக்கிரி, வாழாவெட்டி, பூ-பொட்டிழந்தவள் என்பன போன்ற இழிசொற்களுக்காளாக்கி, சமூகத்தில் நடைபெறும் எந்தவொரு சுபகாரியத்துக்கும் அப்பெண்ணை அழைக்காது ஒதுக்கிவைக்கிறது. கணவனை இழந்த பெண்ணை சமூகம் ஏன் இத்தகைய வக்கிரசிந்தனையுடன் நோக்குகிறது? உரிய காலத்தில் திருமணம் நடைபெறாவிட்டால் பழிச்சொல், கணவனால் கைவிடப்பட்டால் வாழாவெட்டி மணமுடித்துப் பிள்ளைப் பேறில்லாவிட்டால் மலடி, கணவனை இழந்தால் விதவை இப்படி எத்தனையெத்தனையோ. அத்துடன், பெண் தன் கணவனுடன் வாழ விரும்பாது விவாகரத்துக் கோரி நின்றால் அவள் சார்ந்துள்ளவர்களின் அனுமதியைப் பெற வேண்டிய நிர்ப்பந்தம். மொத்தத்தில் பெண்ணின் ஆசாபாசங்கள் அனைத்தும் கணவனையும் பிள்ளைகளையும் சார்ந்தே இருக்க வேண்டுமென சமுதாயம் கட்டுப்படுத்துகின்றது. இதனால், பெண்ணானவள் தன்னலம் மறந்து சுய உரிமையின்றி வாழவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

18ஆம் 19 ஆம் நூற்றாண்டளவில் இந்திய சமுதாயத்தில் மாமியார் கொடுமை, சீதனப் பிரச்சினை, உடன்கட்டையேறுதல் போன்ற அநீதிகள் பெண்ணின்மீது சுமத்தப்பட்டன. இவற்றில் சீதனப் பிரச்சினை இலங்கையிலும் வேரூன்றியது. சீதனக் கொடுமையினால் இடைநடுவில் முறிந்துவிடும் திருமண பந்தங்கள் ஏராளம் ஏராளம். அதனால், குடும்ப வாழ்வில் ஈடுபடச் சென்ற பல பெண்களுக்கு கணவன், மாமியார்களால் பல துன்பங்கள் இழைக்கப்பட்டன. மேலும் கணவன் இறந்துவிட்டால் அவனது சிதையிலேயே மனைவியையும் வைத்துத் தீமூட்டும் கொடூர செயலும் இந்தியாவில் இருந்துவந்தது. அடுத்தடுத்து வந்த சட்டங்கள் இதனை அழித்தொழிக்க ஏதுவாயின.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு முதலீடு செய்யப்படுவதில்லை. அடக்கியொடுக்கப்பட்ட இனமாகவே பெண்ணினம் கருதப்படுகின்றது. பிள்ளைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவே பெண் கணிக்கப்படுகின்றாள். கணவனைக் கவனித்தல், சமையல், பிள்ளை வளர்ப்பு என்ற சிறு வட்டத்திற்குள் ஒடுக்கப்படுகின்றாள். இந்தக் கட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து பெண்ணானவள் ஆத்மபூர்வமாக நாட்டின் முன்னேற்றத்தில் பங்குகொள்ள வேண்டும். இவ்வகையில், பெண்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும். சில மாற்றங்கள் சட்டபூர்வமாக ஏற்பட வேண்டும். இவை இன்றைய அறிவியலாளர் வாதமாகும்.

ஒரு நாட்டில் ஏற்படும் பல்வேறு அபிவிருத்திகளிலும் முயற்சிகளிலும் பெண்களின் பங்கு கணக்கிலெடுக்கப்படுவதில்லை. சமைத்தல், குடும்பத்தைப் பராமரித்தல் போன்ற பெரும் தொழில்கள், சேவைகள் என்றே கணக்கிடப்படுகின்றன. இந்த மனப்பான்மை நீங்கி பெண்ணின் பெரும் சக்திக்கு மதிப்புக்கொடுக்கப்பட வேண்டும். இவையே இன்றைய பெண்ணிலைவாதக் கருத்துக்களாகும்.

பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி பேரறிஞர் லெனினின் கூற்று இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது. 'வீட்டு வேலைகள் பெண்களுடைய ஆக்கத் திறமைகளையோ ஆளுமையையோ வளர்ப்பதில்லை. மாறாக, அவளை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வீடு எனும் குறுகிய எல்லைக்குள் அடக்கி வைக்கின்றன. அற்ப வீட்டு வேலை நசுக்குகின்றது. கழுத்தை நெரிக்கின்றது. சோர்வை ஏற்படுத்துகின்றது. சமையலறையுடனும் குழந்தை வளர்ப்புடனும் அவளைத் தளையிடுகின்றது. இந்த நச்சரிக்கும் வீட்டு வேலைகளுக்கெதிராக ஒரு முழு மூச்சான போராட்டம் எங்கு, எப்பொழுது தொடங்கப்படுகினறதோ அங்குதான், அப்பொழுதுதான் மாதர்களின் மெய்யான விடுதலை தொடங்கும்.' பேரறிஞர் லெனினின் பெண்ணுரிமைக்கான குரல் பெண்ணினத்தின்மீது சமுதாயம் விதித்திருக்கும் பாரம்.

பெண் தொழில் அசமத்துவ நிலை, வாழ்க்கைத் தரம் குறைப்பு, சமூக அடக்குமுறை, அடிப்படை உரிமை இழப்பு, உணவும்கூட பாலடிப்படையில் பகிரப்படல், கல்விச் சமமின்மை, இல்லமில்லாத இல்லக்கிழத்தியாகப் பெண்ணினம் வாழல், சுகாதார வசதிக்குறைவு, பெண்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள் குறைவு, பெண் தொழிலாளி நலவுரிமை காக்கப்படுவதிலுள்ள குறைபாடு, காப்பகங்களிலுள்ள சௌகரியக் குறைவு, சமூக அமைப்பின் இறுக்கம் என பெண்ணின் உரிமைகள் நசுக்கப்படும் வழிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

எமது நாட்டின் மலையகப் பகுதிகளில் இத்தகைய சீர்கேடுகள் பெண்களைப் பொறுத்தவரையில் பெருமளவினதாய்க் காணலாம். பெண் தொழிலாளிகளுக்குக் குறைந்த வேதனம், கல்வி வசதிக் குறைவு, சுகாதார சௌகரியக் குறைவு, பெண்களின் உடல்நலம் பேணப்படாமை போன்றன பற்றி ஆழமாகக் குறிப்பிடலாம்.

மேலும், இன்றைய நிலையில் இலங்கைப் பெண்களுக்கு அரசு இழைக்கும் அநீதிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக சுதந்திர வர்த்தக வலய வேலைத்திட்ட அமைப்பு முறைகளையும் ஆடைத் தொழிற்சாலைகளையும் காட்டலாம். அந்நியச் செலாவணியை அள்ளித்தரும் ஒன்றியமாக சுதந்திர வர்த்தக வலயம் அமைகின்றது. ஆயிரமாயிரம் பெண்கள் இங்கு தொழில் செய்கின்றனர். அளவுகடந்த தொழிற்பாட்டினால் வெகுவிரைவில் கண்பார்வை இழக்கின்றனர். உடலும் உள்ளமும் துவள்கின்றனர். வேலைத்தளத்தில் பெண்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகின்றது. அவளது சோர்ந்த உடலும் அபிலாஷைகள் நொறுங்கிய அவளது இதயமுமே அபிவிருத்தியின் பயன்பேறாக அவளுக்குக் கிடைக்க, அந்நியச் செலாவணி தொடர்ந்து அரசுக்குக் கிடைக்கின்றது. இது பெண் சமூகத்துக்கு அரசு இழைக்கும் தொழில் ரீதியான அநீதியாகும்.

நீதியின் கண்முன் பெண்களின் நிலையை ஆராயுமிடத்து, பெண்களின் தொழிற்சங்க ஈடுபாட்டுக்குத் தடையாக நிற்கும் கலாசாரப் பண்புகளை நோக்குவோம்.

1) தாய்மையின் பொறுப்புக்கள், வேலை நேரத்தின் பின்னரேயே கூட்டங்கள் நிகழுகின்றமை, நாள் முழுதும் வேலை செய்யும் அவள் குழந்தையிடம் இருந்து பிரிகிறாள். உணவு தயாரித்தல், வீட்டு வேலை செய்தல் போன்ற பளுக்களும் அவளைத் திக்குமுக்காடச் செய்கின்றன.
2.) குடும்பம் என்ற வட்டமும் அதற்குள் சென்ற கணவன், பிள்ளைகள், முதியோரைக் கவனிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அவளை ஆட்டிப் படைக்கின்றன.
3) வீட்டுக்குரியவள் வெளியே ஊதியத்திற்காக மாத்திரமே செல்லலாம். அதற்கு மிஞ்சி படி தாண்டக்கூடாது என்ற கருத்தியல் நிலவுகின்றமை.
இத்தகைய நிலைப்பாடுகளே பெண்களின் தொழிற்சங்க ஈடுபாடுகளுக்கு ஒருங்கிசைவு பெறுவதற்குத் தடைக்கல்லாக அமைகின்றன.

மேலும், இலங்கையைப் பொறுத்தவரை கல்வி முன்னேற்றத்தை ஏற்படுத்திய பேரறிஞர் சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் தான் நிறுவிய சேர். பொன். இராமநாதன் இந்துக் கல்லூரியிலே விதித்திருந்த சில கற்கை விதிமுறைகள் கூட குறுகிய வட்டத்திற்குட்பட்டதாயிருந்தது. உதாரணமாக, இக்கல்லூரியிற் கற்கும் பெண்கள் எல்லாவகையிலும் சிறந்த இந்துக்களாக வளர வேண்டுமென்ற நோக்கங்களையும் சமயக் கல்விக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டமையும் குறிப்பிடலாம். 1920 களில் அளிக்கப்பட்ட சர்வ சன வாக்குரிமையில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டமையினை சேர். பொன்னம்பலம் இராமநாதன் எதிர்த்தார். பெண்கள் வாக்குரிமை பெறுவதனால் குடும்ப அமைதி குறையும் என வாதிட்டமை, கல்விகற்ற அறிஞர்கள்கூட பெண்களின் உரிமைகளுக்குத் தடைக்கல்லாக இருந்தனர் என்பதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும்.

எனவே, இவற்றுக்கெல்லாம் தீர்வுகாண வேண்டுமெனில் பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பெண்கள் முன்வரவேண்டும். வீரப்பெண்ணும் தீரப்பெண்ணும் பாரதிகண்ட புதுமைப் பெண்ணும் தமிழ் இலக்கியத்துடன் நின்றுவிட்டனரா? யுத்தங்களுக்கு வீரஉணர்வுடன் மறப்பண்புடன் தன் ஒரே மகனை அனுப்பிவைத்த பெண்ணும், போர்க்களத்தில் மார்புக் காயம் கண்டு மகிழ்ந்த தமிழ்த்தாயும், வழக்குரைத்து தன் கணவன் குற்றவாளியல்ல என்று நிரூபித்த கண்ணகியும் ஏட்டை அலங்கரிக்கும் பெண்களாகவே உள்ளனர். சமுதாயப் பெண்கள் அச்சம் கொண்டவர்களாக, மடமை பொருந்தியவர்களாக, நாணமுடையவர்களாக, அநீதிகளைக் கண்டு வாய்மூடி மௌனிகளாகக் கண்ணீர் சிந்தும் பதுமைகளாகவே இருக்கின்றனர்.

பெண்ணுரிமை, பெண்ணுக்குச் சமசந்தர்ப்பம் என்பன போன்ற தத்துவங்களில் பல விடயங்கள் அடங்கியுள்ளன. சமுதாயத்தின் பல்வேறு அம்சங்கள் இதில் தொக்கியுள்ளன. பல பெண்களுக்கு எப்படித் தாம் அடிமைப்பட்டுவிட்டோம் என்பது தெரியவில்லையோ, அதேபோல பல ஆண்களுக்கும் தாம் அவர்களை அடிமைப்படுத்துகிறோம் என்பது தெரியவில்லை. பண்பாடு, வழிவழிவந்த பரம்பரைக் கோட்பாடு என்ற போர்வையில் இவ் ஆண்டான் - அடிமைநிலை தொடர்கிறது. இதனால் ஆண் வர்க்கத்திற்கு சலுகைகள் அதிகம். தட்டிக்கேட்க ஆளின்றி இச்சமுதாயப் போக்கு தொடர்கிறது. ஆகவே, பெண்ணினத்தைத் தட்டியெழுப்பி அவர்களின் துன்பகரமான வாழ்க்கை முறைகளை உணர்த்த வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும்.

இன்றைய நிலையில் சமுதாய அமைப்பிலே பெண்ணின் உரிமைக்காகக் குரல் எழுப்பும் பல இயக்கங்கள் உருவாகி வருகின்றன. இன்றைய பெண் சுதந்திர இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகளை வழிமைப்படுத்தினால் அவை சமசந்தர்ப்பம், அரசியல், பொருளாதார சமூகப் பிரச்சினைகளில் ஆணுக்குரிய பங்கு பெண்ணுக்கும் தரப்படவேண்டும் எனத் தொடருகின்றன. சமுதாயக் கோப்பு ஒன்று எப்படி பழம்பெரும் பண்பாடு என்ற அடிப்படையில் பெண்களின் நியாயமான கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் நிராகரித்து பெண்களைப் பின்நின்று இயங்கும் சக்தியாக வைத்திருப்பதைப் பெண்கள் அறிந்து, அதற்கு மாற்றங்காண விழைய வேண்டும். கதைகளும் கட்டுரைகளும் மாத இதழ்களும் பெண்களைக் கவர்ச்சிச் சின்னமாக உபயோகித்து ஒரு விற்பனைப் பண்டமாக வைத்து வியாபாரம் செய்வது நிறுத்தப்பட வேண்டும். குடும்பம் என்ற சமூக அமைப்பில் பெண்ணும் வேலைக்குப் போவதால் ஏற்படும் பிரச்சினைகளையும் ஒழுங்கீனங்களையும் பெண்ணொருத்தியே தாங்கவேண்டிய அநீதி அகற்றப்பட வேண்டும். ஆண்கள் கைகொடுத்துதவி வீட்டுவேலை, பிள்ளை வளர்ப்பு ஆகியவற்றில் தாமும் சமபங்கு ஏற்கவேண்டும் என்ற மனப்பான்மை அவர்களிடத்தில் தோன்ற வேண்டும்.

பெண்ணுரிமைப் போராட்டம் நடாத்தும் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எமது நாட்டைப் பொறுத்தமட்டில், பால் சமத்துவ நிலைக்கு சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தைக் கோடிட்டுக் காட்டலாம். இதில், மனித உரிமை பற்றிக் கூறும் ஒரு கூற்று சமுதாயத்தில் பெண்களுக்கான கல்வியின் முக்கியத்துவத்தையும் ஆணித்தரமாக வலியுறுத்தி நிற்கின்றது. அதாவது, மனித உரிமைப் பிரகடனத்தின் தலைப்பு வாசகம் உறுப்புரை இரண்டில், 'பின்வரும் மனித உரிமைப் பிரகடனத்தால் வழங்கப்படும் உரிமைகளும் சலுகைகளும் கடப்பாடுகளும் சகலருக்கும் பால், இனம், சமயம், பிராந்தியம் ஆகிய எல்லைகளுக்கப்பால் உரியதாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 20 ஆம் நூற்றாண்டளவில் இலத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பங்கு பற்றியும் இங்கு மேற்கோள் காட்டத்தக்கது. இவற்றுடன் இன்றைய நிலையில் இளைஞர் இயக்கத்தில் பெண்கள் பிரிவு தோன்றி, பெண்களின் சம அந்தஸ்து, கல்வியறிவு பற்றி அறைகூவல் விடுக்கிறது.

இலங்கைப் பெண்களின் தொழிற்சங்க ஈடுபாடுகள் பெண்களின் உரிமைக்காக நியாயப் போராட்டங்கள் நிகழ்த்துகின்றன. இன்றைய அறிவியல் உலகமானது பல்வேறு விதங்களில் பெண் நீதிக்காகக் கோஷம் இடுகின்றது. இன்றைய அறிவியல் உலகமானது 'உணர்ச்சிபூர்வமாகவோ, புத்திநிலையிலோ ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை. கருத்தரிப்பதும் பிரசவிப்பதும் சிசுவுக்கு அத்தியாவசியமாகிய முதன் முதல் உணவை- தன் முலைப்பாலை- ஊட்டுவதும் பெண்ணின் சிறப்புப் பணிகள். இதனை ஆண் சாதிக்க முடியாது. 'அந்த வேலையை நீ சிறப்புறச் செய்ய வேண்டும் என்று அவளை நிர்ப்பந்திக்க ஆண்மகன் தயங்கவில்லை' எனக் கூறுகிறது. பாலடிப்படையில் அமைந்த இந்த வேறுபாடே வேலைப்பாகுபாட்டுக்கு அனுகூலமாக வாய்த்தது. இதன் அடிப்படையில் ஒரு கருத்தியலே தோன்றியது. இதனடிப்படையிலேயே பெண்ணிலைவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இக்கருத்தியலைக் கருவாகக் கொண்டு தோற்றம் பெற்ற லிபரல் (விடுதலைப்) பெண்ணிலைவாதம் பெண்ணுக்கு அரசியல், பொருளாதாரத் துறைகளில் சம உரிமை அளிக்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறது.
தீவிரப் பெண்விடுதலைவாதம், ஆணின் உடற்பலம், ஆதிக்க வெறி, பலாத்காரம், வல்லுறவு ஆற்றல் போன்ற ஆண்வர்க்கப் பண்புகளால் பெண் அடிமையாக்கப்படுகின்றாள் என்று கூறுகின்றது.

சோஷலிசப் பெண்விடுதலைவாதம், மாக்ஸியவாதிகள் பெண்விடுதலையைத் தள்ளிப்போடுவது அவர்களது ஆண் ஆதிக்கத்தையே புலப்படுத்துகின்றது என்கிறது.

இன்றைய கலைவடிவங்களில்கூட பெண்ணடிமை பரவலாகக் காணப்படுகின்றது. சிறுகதை, நாவல், திரைப்படம், தொலைக்காட்சி போன்ற வெகுசன தொடர்புசாதனங்களில் பெண்ணடிமைத்தனத்தைக் கருப்பொருளாகக்கொண்ட கதையமைப்புகளை, காட்சிகளைத் தவிர்க்க வேண்டும். திரைப்படங்களை நோக்குமிடத்து தாலி பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம், மக்களைப் பெற்ற மகராசி, மாமியார் மெச்சிய மருமகள் போன்ற பெண்ணடிமை சாயல் கொண்ட படங்கள் தடுக்கப்படவேண்டும். பெண்ணுக்கு சகல துறைகளிலும் நீதியும் சமவாய்ப்பும் அளிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுப்பின், அது மேலைநாட்டு நாகரிகப் பண்பு என ஆப்பு வைக்கும் அக்கிரமக்காரர்களின் கோஷம் அடக்கப்பட வேண்டும்.

நடுநிலை நின்று பெண் நீதி உரிமை பற்றி இயம்புமிடத்து, பெண் உரிமையற்ற இரண்டாம்பட்ச புத்திஜீவி என்பன போன்ற கருத்தியல்கள் அகற்றப்பட வேண்டும். இவை தேசங்களையும் நாடுகளையும் மொழிகளையும் பண்பாடுகளையும் கடந்த ஒரு சர்வதேசக் கருத்தியலாக மாறவேண்டும் என்ற கருத்தைத் தெளியலாம்.

வாழ்க பெண்சமத்துவம்!
ஒழிக பெண்ணடிமை!

நன்றி: நீதிமுரசு 1995 (இலங்கை சட்டக் கல்லூரி ஆண்டுமலர்)
...மேலும்

Dec 28, 2014

பாலியல் வன்முறை உளவியல் காரணம்?நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற ஐயத்தை அவ்வப்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து நடந்துவரும் இத்தகைய வன்முறைகளின் மீது கவனம் கொள்ளாத ஊடகங்கள், தலைநகர் டெல்லியில் நடைபெறும்போது அச்செய்தியை நாடெங்கும் கொண்டுசென்றுவிடுகின்றன.

இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தேறும்போதெல்லாம் அரசியல் காரணங்களை மட்டுமே பேசிவிட்டு, தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும்; சுட்டுக் கொல்ல வேண்டும் என்றெல்லாம் கூறும் ஊடகங்கள், சமூகக் காரணங்களைப் பேசுவதில்லை. இன்னும் குறிப்பாக மனநல ரீதியிலோ உளவியல் பார்வையுடனோ சுத்தமாகப் பேசுவதில்லை.

சமூகத்தின் ஒழுங்கு குறித்து ஏற்படும் பிரச்சினைக்கு ஏதோவொரு உளவியல் காரணம் கட்டாயம் இருக்க வேண்டும். அதிலும் ஆண்-பெண் உடல் தொடர்புடைய சிக்கல் என்றால் அதில் முதல் காரணம் உளவியலாகத்தான் இருக்கும்.

தமிழக ஊடகங்களில் சமூகம் குறித்த விவாதங்களில் துணிச்சலாகக் கருத்துக் கூறி வருபவர் டாக்டர் ஷாலினி. அண்மையில் டெல்லியில் நடந்த இரண்டாவது பாலியல் வன்முறையைத் தொடர்ந்து அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

``இப்போ பொதுவா உலகத்துல பெண் பலகவீனமானவள், அவளை நல்லபடியாக கொண்டு வரணும்னு நிறைய முயற்சி பண்றோம். ஆண் அதைவிட பலவீனமானவன். இன்னும் நாம வழிக்குக் கொண்டு வரணும்ங்றதையும். நாம உணராம விட்டுட்டோம். இதுமாதிரி பிரச்சினை வரும்போதுதான் பேசுறோம் என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாகப் பேசினார். தொடர்ந்து நம் கேள்விகளுக்கு சரமாரியாக பதிலளித்தார்.

அதிகமாக பாலியல் வன்முறை ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன?

பொதுவாக ஓர் ஆணுக்குத் தன்மேல் நம்பிக்கை இருக்கும்போது, தன்னுடைய ஆளுமை மேல் Confidence இருக்கும்போது என்னுடைய தரம் மிகுதிதான் என்கிற தெளிவு இருக்கும். ஆணுக்கு தன்மீது நம்பிக்கையில்லாதபோதுதான் பிரச்சினை. ஆண், பெண் பாலியல் உறவுங்கிறது, ஒன்று அவருடைய உந்துதல் Instinct, இன்னொன்றைப் பார்த்துக் கற்றுக் கொள்வது Learning. மற்ற ஜீவ ராசிகளுக்கு, அது பாத்துக் கத்துக்கறதுக்கு ஒண்ணுமில்லே. பூச்சிப்புழுக்களுக்கெல்லாம் Brain ரொம்ப சின்னது. அது கத்துக்க முடியாது.
Instinct மூலமாக வாழ்ந்து முடிச்சுடும். அதுக்குப் புதுசா வித்தியாசமாக கத்துக்க வழியே இல்லை. ஆனால், மனிதர்கள் பிறக்கும்போது Instinct இருந்தாலும் எப்படி நிறைவேற்றனும்னு, பெரும்பாலும் பார்த்துத்தான் கத்துக்கிறோம்.

அப்போ, இந்தப் பையன் தவறான விசயத்தப் பாத்துட்டான்னு வச்சுக்குவோம். அவனுக்குக் கிடைக்குற மாதிரி, பெண்ணுன்னா இப்படி இருக்கணும், வளர்ந்த சம்மதிக்கிற பெண்ணோடதான் உடலுறவு கொள்ளணும்னு அவன் பார்த்திருந்தா அவன் கத்துக்குவான். அப்படிப் பார்க்காமல், விகாரமாகவே Sexual காட்சிகளையோ, Sexual வன்முறையையோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல அவன் பாத்துக் கத்துக்கிட்டான்னா, அவன் இப்படிக்கூட செய்யலாம் போலிருக்கே, அப்படிங்கிற விசயம் தெரிஞ்சு போச்சுன்னா, அவன் செய்ய முயற்சி பண்ணுவான். இது எப்படி இந்தப் பையனுக்கோ, பெண்ணுக்கோ தெரிய வருதுன்னு பார்த்தா, அவங்களுக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கலாம். அவுங்க சுற்று வட்டாரத்துல, இன்டர்நெட்டுல, Pornograph பார்த்திருக்கலாம்.

எதுவுமே இல்லைன்னா அவன் வெட்டியா இருக்கிறதுனால, விகாரக் கற்பனையோடு இருக்கலாம். இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் ஓர் ஆண் தன்னுடைய ஆண்மை மேல நம்பிக்கை இருக்கும்போது பெர்சனாலிட்டி மேல அவனுக்கு கான்பிடென்ட் இருக்கும்போது, ஒரு சுயமரியாதை இருக்கும்போது, என்னோட தரம் உயர்கிறது, என் தரத்திற்கு இதெல்லாம் செய்யக் கூடாது, அப்படின்னு அவன் மனதில் இருக்கும். தன்னைப்பற்றி ஒரு அபிப்ராயமே இல்லாதபோது, வெட்டியா இருக்குற பையனுக்கு, தான் அவமானப்படுறதா, தனக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிற மனிதனுக்கு இதுக்கு மேல எனக்கு என்ன இருக்குனு நினைக்கிற ஆண் இது மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சிடுவாங்க.

படித்தவர், படிக்காதவர் பெரிய அதிகாரத்தில் இருப்பவர் என்ற  வேறுபாடின்றி இந்தத் தவறு நடைபெறுகிறது. தன் சொந்த மகளிடமே தவறாக நடந்த பிரச்சினை என்னிடம் வந்துள்ளது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆண்களின் வக்கிர புத்தினு சொல்லலாமா-?

இல்லை. ஆணுக்கு இயல்பிலேயே பாலியல் இச்சை அதிகம். அவனைப்பற்றி அவனது மனதில் தெளிவான அபிப்ராயம் இல்லைன்னா அவுங்க எந்த லெவலுக்கும் போக வாய்ப்பிருக்கு. எனவே, யாராவது கடிவாளம் போட்டுக்கிட்டே இருக்கணும்.

கடிவாளம் என்றால்......?

கடிவாளம் என்பது வேறு வேறு விதத்தில் தேவைப்படுது. ஒரு பையனுக்கு விளையாட்டு, கல்வி என்று ஏதாவது ஒன்றில் ஈடுபாடு இருக்குமானால் பாலியலில் கவனம் செலுத்த மாட்டான். ஆணுக்கு இருக்கும் நேரத்தை -_ சக்தியை நல்ல முறையில் பயன்படுத்தினால் தனிமையில் ஈடுபடும் வாய்ப்புக் குறையுது. தேவையில்லாத சிந்தனைகள் வளர்வது தடுக்கப்படுகிறது. வீட்டில் இருப்பவர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியா இருக்கணும்.

இன்று இணையத்தில் நிறைய Pornograph படங்கள் இலவசமாகவே பார்க்கும் வசதி உள்ளது. எல்லா விதத்திலயும் பார்த்துக் கத்துக்கிறாங்க. பார்த்ததைச் செயல்படுத்தும் எண்ணம் உண்டாகிறது. இந்தப் பிரச்சினை உலகம் முழுவதும் பரவிக் கொண்டு உள்ளது. எல்லோரும் சேர்ந்துதான் இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரணும்.

தற்போது பெண்கள் அணியும் கவர்ச்சிகரமான உடைகள்தான் ஆண்களைத் தூண்டுவதாக உள்ளது என்னும் கருத்து பற்றி.....

ஒரு பெண் ஆபாசமா உடை அணிந்து செல்லும்போது, ஆண்கள் பின்தொடர்ந்து வருவார்களே தவிர, தொடுவதற்கு முயற்சி செய்ய மாட்டாங்க. ஏதாச்சும் நம்மளப் பண்ணிடுவாரோ என்ற பயம்தான் இருக்கும். அடக்க ஒடுக்கமா இருக்கிற பொண்ணுங்களைத்தான் Abuse பண்ணுவாங்க. ஆண்கள் பெண்கள் முகபாவனைக் குறிப்பைத்தான் பார்ப்பார்களே தவிர, உடைகளை அல்ல.

எனவே, பெண்கள் Body Language-_ல கவனமா இருந்தாலே போதும். பெண்கள் Body Language- கான்பிடென்டா, தைரியமா இருந்தா ஆபத்து வராது. உடை என்பது ஒரு பிரச்சினை அல்ல.

இன்றைய சமூகத்தின் கட்டமைப்பை மீறி தூண்டப்படக் காரணம்?

தன் ஆசைகளை உடனே நிறைவேற்றிக் கணும்ங்கிற நினைப்பு வந்துடுது. பொறுமையா இருக்கணும்ங்கற புரிதல் இல்லாமல் போகிறது. கேட்டதும் தேவைகள் எல்லாமே கிடைத்து விடுகிறது. கடைக்குச் சென்றால் எல்லாம் வாங்கிடலாம். இல்லைங்கிறதே இல்லைனு ஆகிவிட்டது. நினைத்ததும் எல்லாவற்றையும் சாதிக்க முடியுது. கஷ்டமே இல்லாமல் கிடைக்கிறது. எனவே சுயகட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது.

இதில் பெற்றோரின் பங்கு ஏதேனும் உள்ளதா? சரியாக வளர்க்கத் தவறியதுதான் காரணமா......?

பெற்றோர் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதே கிடையாது. பெண் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோர் ஆண் குழந்தைகளை அப்படி வளர்ப்பதில்லை. அவர்கள் மொழியிலேயே பிரச்சினைகளையும் _ எதிர்கொள்ளும் விதத்தையும் கற்றுக் கொடுக்கத் தவறுகிறார்கள். சில பெற்றோர் சொல்லி வளர்க்கின்றனர். ஆண் குழந்தைகளைக் குறிப்பிட்ட வயது வந்ததும் எதுவும் சொல்லி வளர்ப்பதில்லை. பெண் குழந்தைகளுக்காவது பருவ வயதை அடையும்போது சில விஷயங்களைக் கற்றுக் கொடுப்பர். ஆண் குழந்தைக்கு எதுவும் இல்லை. எப்ப, எப்படிச் செயல்படுத்தணும்னு சொல்லித் தரணும். சொல்லித் தர பெற்றோர் வெட்கப்படுகின்றனர். இதனால் ஆணின் மனதில் அறியாமை உள்ளது. மனநிலையில் தெளிவில்லாமல் போயிடுது. தவறுக்குக் காரணமாகி விடுகிறான். பெண் குழந்தையை அம்மா, பாட்டி train பண்ணிவிடுவது போல் ஆண் குழந்தை மீது கவனம் செலுத்துறதில்லை. எனவே, ஆண் குழந்தைகளும் கஷ்டப்படுறாங்க. மத்தவங்களையும் கஷ்டப்படுத்துறாங்க.

எந்த மாதிரி பயிற்சி கொடுக்க வேண்டும்?

உலகத்தை - குடும்பத்தைக் காப்பாத்த வேண்டியது ஆணின் கடமை. உன்னை நம்பி ஒரு பெண் வருவா அவளையும் நீ நல்லவிதமா காப்பாத்தணும்னு, உன் குழந்தைகளை சந்தோஷமா வச்சிக்கணும்னு சொல்றதில்ல, அப்பா அம்மாவ பார்த்துக்கணும்தான் சொல்வோம். பெண்களும் அப்பா அம்மாவைப் பார்த்துக்கலாமே. ஆண் மட்டும் வேலைக்குப் போகணும். சம்பாதிக்கணும். கார் வாங்கணும், அம்மா அப்பாவைப் பார்த்துக்கணுமா? மற்றொன்று அவனோட பிரக்ஞையே அவனுக்கு இல்ல. இரண்டாவது அவளோட Sexuality பத்தி அவனுக்கு எதுவுமே தெரியாது. அதனால அவன் நிறைய, ஏடாகூடமா போய் மாட்டிக்கிடுறாங்க. அதுக்கப்புறம் அவனைத் திட்டுறோம் இப்படி நடந்துக்கிட்டியே கரெக்டான்னு. இப்படி நடந்துக்கறதுக்கு அறியாமைதான் முக்கியமான காரணம். அதனை நாம் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.
திருமணத்திற்கும் பாலியல் வன்முறைக்கும் தொடர்பிருக்கிறதா?
அதுக்கும், இதுக்கும் சம்பந்தம் இல்லை.  பாலியல் குற்றத்துல மாட்டின அந்த 22 வயது பையன் திருமணமானவன்தான். அவனால சரியான முறையில உறவு கொள்ள முடியாததால், Candle Bottle உள்ளே சொருக வேண்டிய அவசியம் இல்லைல்ல. இயலாமைதான். இயலாமை இருக்கிறதாலதான் பரீட்சைப் பொருளா வைத்து ஏடாகூடம் பண்றாங்க.
இப்போ பொதுவா உலகத்துல பெண் பலகீனமானவள், அவளை நல்லபடியாக கொண்டு வரணும்னு நிறைய முயற்சி பன்றோம். ஆண் அதைவிட பலகீனமானவன். இன்னும் நாம வழிக்குக் கொண்டு வரணும்ங்றதையும். நாம உணராம விட்டுட்டோம். இதுமாதிரி பிரச்சினை வரும்போதுதான் பேசுறோம்.
திருமணமானவருக்கே அப்படி ஓர் எண்ணம் குழந்தைகள் மீது வருகிறதே?
பொதுவாகவே, ஆணின் மூளையானது வக்கிரங்களுக்குட்பட்டதுதான், Sexual drive அதிகம். ஏதேனும் ஒரு கட்டுப்பாடு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதான் கரெக்டா அவன் வருவான்.
வீட்டுக்கு அடங்காமல் போற பசங்களுக்குத் திருமணம் செய்து வைத்தால், சரியாகிவிடும் என்கிறார்களே? உண்மையா?
நம்ம ஊர்ல வந்து ஏதாவது பெண்ண பலி கொடுத்துவிட்டால் சரியா வந்திடும்னு நினைக்கிறாங்க. ஆனால், எந்தக் கடவுளுக்கும் பெண்ணைப் பலிகொடுக்கவே மாட்டாங்க. ஆடு, மாடுன்னு ஆணைத்தான் பலி கொடுப்பாங்க. ஒரு பெண்ணைப் பலிகொடுக்கிற சமுதாயம் உருப்படாது.
இருந்தாலும் ஆக்க சக்தியை எவனாவது அழிப்பானா? விதை நெல் இருக்கிற வரைக்கும்தானே அடுத்த தலைமுறை உருவாகும். விதை இருக்கிற நெல்லை எரிச்சுட்டா.. எவ்வளவு முட்டாள்தனம். உட்கார்ந்திருக்கிற கிளையை வெட்டுவது போல் ஆகும். பையன் சரியில்லைன்னா அதைச் சரிக்கட்டணும். அதை விட்டுட்டு யார் தலையிலும் கட்டிட்டு Responsibility கிடைக்கலன்னு சொல்றது  தவறானதுதான். எல்லோருக்கும் திருமணமானது, ஒரு பொண்ணு வந்தா அடங்கிடுவான். இல்லைன்னா, எனக்கப்புறம் யார் வந்து பார்ப்பார்கள்,
அந்தக் காலத்துல பெண்கள் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், ஏழேழு ஜென்மத்துக்கும் ஒரே புருஷன்தான். இந்தக் காலத்துப் பெண்கள் கணவன் சரியில்லை என்றால், சரிதான் போடா நீ கிளம்புன்னு சொல்லிவிடுகிறார்களே. பெண்கள் எல்லாம் Advance  ஆகிட்டார்கள். ஆண்களும் பெரியவர்களும்தான்  Advance ஆகல.

குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதை எப்படித் தவிர்ப்பது?

முதலில் அதை, குழந்தைக்கு உடலோட பாகங்களைப் பற்றி தெளிவா வெட்கப்படாமல், கூச்சப்படாமல் சொல்லணும். இது ஆண்குறி, இது பெண்குறின்னு, அவங்கவங்க வீட்டுல என்ன செல்லப் பெயரைச் சொல்றாங்களோ, அதை use பண்ணி சொல்லித்தரணும்.

அதுல வெட்கப்படுறதுக்கு ஒண்ணும் இல்லைங்கிறதைச் சொல்லணும். இந்தப் பாகத்தைச் சுத்தமா வச்சுக்கனும்னு சொல்லித்தரணும். அவுங்க என்ன Language பேசுறாங்களோ, அதற்கேற்ற மாதிரி வார்த்தைகளை நாம அந்தக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரணும். பெண் குழந்தைகளின் உறுப்பை யாரும் தொடக் கூடாது. அம்மா அல்லது பாட்டிதான் தொடணும். அப்பாகூட தொடக்கூடாது. வேறு யாரும் தொடக்கூடாது.

தொட்டால் என்னிடம் வந்து சொல்லணும்ங்கிறத ஒன்றரை வயதிலிருந்தே சொல்லித் தரணும். குழந்தைகளுக்கு நல்லாத் தெரியும். யாராவது தொட்டால் சொல்லிடுவாங்க. பெரும்பாலான பிரச்சினை, நமக்குத் தெரிஞ்சவங்கதான் செய்வாங்க. நமக்குத் தெரியாத யாரோ கிட்னாப் பண்ணிட்டுப் போயி, ரேப் பண்ண மாட்டாங்க. கூடவே இருக்குற யாராவது, செய்யறதுனால, கூட இருக்குற எந்த ஆணா இருந்தாலும், எச்சரிக்கையா இருக்கணும்.

கணவனாகவே இருந்தாலும் எச்சரிக்கையாகவே இருக்கணும். ஏன்னா, அப்பாவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளையும் நாம் பார்க்கிறோம். ஒட்டு மொத்தமா ஏரியாவிலே சின்ன பசங்க, பெரிய பசங்க, வயசானவங்கன்னு பாகுபாடே இல்லாமல் யார்கிட்டேயும் குழந்தையைத் தனியே விடாமல் யாரிடமும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

இது பெண்குழந்தையைப் பாதுகாக்க வேண்டியவங்க, பாதுகாக்க நாம்  செய்ய வேண்டிய வேலை. ஆண் குழந்தையை டிசைன் பண்ணும்போது, நீ கெட்டிக்காரன், புத்திசாலி என்று அவனது தன்னம்பிக்கை (Confident) யை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவன் தரம் அதிகமாகிவிடும். அதற்கு ஏற்றாற்போல் அவன் நடந்து கொள்வான். தன்னம்பிக்கை இல்லாதபோதுதான் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுகிறான்.

ஆண் பிள்ளைகளை இன்றைக்கு உள்ள பெற்றோர்கள் வளர்க்கும் முறைதான் பாலியல் வன்முறையைத் தூண்டுகிறது என்று சொல்லலாமா?

இப்போதெல்லாம் பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் பகிர்ந்து கொள்வதில்லை. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆளுக்கொரு I-pad அய் வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தை  I-pad அய் நோண்டிக் கொண்டிருக்கிறது. அப்போது பிராக்டிகலாகப் பார்க்க வாய்ப்புள்ளது. தனிமையும் புத்திசாலித்தனமும் வக்கிரமும் சேரும்போது அந்தக் காம்பினேஷன் ரொம்ப மோசமானது. எனவே, குழந்தைகளிடம் அதிக நேரம் செலவு செய்து நிறைய விஷயங்களைச் சொல்லித் தரவேண்டும். அவர்களது மனதைப் புரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். மனம் என்பது ஒரு குரங்கு. அதை நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் பயிற்சியை _ பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

பாலியல் கல்வி இன்றைய குழந்தைகளுக்கு அவசியமா?

ரொம்ப ரொம்ப அவசியம்.

இது உளவியல் ரீதியா குழந்தைகளை ஒரு நல்ல நிலைக்கு எடுத்துக்கொண்டு வருமா?

ஒரே நாளில் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுக்க முடியாது. ஒரு வயதில் இருக்கும்போதே நாம் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தரக்கூடிய விஷயம். அட்லீஸ்ட் பெற்றோர்கள் சொல்லித்தரவில்லை என்றால், கல்வித் திட்டத்திலாவது நாம் கொண்டு வரவேண்டும். அதுவும் இல்லையென்றால், நாம் ஊடகங்கள் வாயிலாகச் சொல்லித் தரவேண்டும். எதுவுமே, அப்பா, அம்மாவும் சொல்லித் தரமாட்டாங்க. பள்ளியிலும் சொல்லித் தரமாட்டங்கன்னா, ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி அந்தக் குழந்தைகள் அறியாமையால் தவறான கருத்துகள் வைத்திருக்கிறார்கள். அதனால்  நிறைய பிரச்சினைகள் வரும். ஓர் ஆணுக்கு வக்கிரம் இருந்தாலும் அது உலகத்தையே பாதிக்கும். அதனால் நாம் போர்க்கால அடிப்படையில் ஆண்களின் புத்தியைத் திருப்பித் தரணும் என்பது ரொம்ப அவசியமாக இருக்கிறது.

பாலியல் கல்வி முறை என்று நேரடியாக இல்லையென்றாலும் வேறு ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?

பாலியல் கல்வி என்று தனிப்பட்ட முறையில் சொல்வது தவறு. இது ஒரு வாழ்க்கைக் கல்வி. உடம்பு என்பது என்னவென்று நமக்குத் தெரிய வேண்டும். வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிய வேண்டும். கல்யாணம்னா, செக்ஸ்னா  என்னவென்று இயல்பாக எல்லாரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இப்போது வாக்கிங் என்பது ரொம்ப முக்கியம் என்று சொல்கிறார்கள். காட்டுவாசிக்கிட்டப் போயி வாக்கிங் ரொம்ப முக்கியம்பான்னு சொன்னா அவன் சிரிப்பான். அதெல்லாம் நான் செய்துக்கிட்டு இருக்கேன். இதப்பத்தி நீ பேசாதே என்று சொல்வான். இயல்பாக இருக்கிற விஷயத்தை நாம் தனிப்பட்ட முறையில் (ஸ்பெஷல்) செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கு. இப்பக் காட்டுவாசிங்க இயல்பாகவே பேசுவாங்க. இப்படிச் செய்தால் இப்படியாகும், குழந்தை இப்படிப் பிறக்கும், ஆணும் பெண்ணும் இப்படி இருப்பாங்க என்று இயல்பா பேசுற விஷயத்தை மறைத்து மறைத்தே நாம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கிவிட்டோம். இதுமாதிரி இல்லாமல் இயல்பாக இருந்தால் பிரச்சினைகள் சரியாகும்.

உளவியல்ரீதியான பயிற்சி ஏதாவது.....?


உளவியல்ரீதியான பயிற்சி என்பது இன்றைக்கு நிலைமையில் உளவியலுக்கான மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவுங்க சொல்லித் தரமாதிரி இருக்கு. ஆனால், காலம்காலமாக சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இந்த உளவியல் அடிப்படைகளைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருந்திருக்காங்க. திருக்குறள் என்பது உளவியல் ரீதியான பயற்சி மாதிரிதான். Personality development manual மாதிரி திருக்குறள் இருக்கிறது. நாலடியாரும் இருக்கிறது. இன்னும் எவ்வளவோ நூல்கள் நம்மிடம் இருந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்.

உளவியல் ரீதியாக மனசுதான் நமக்கு ரொம்ப  முக்கியம். இல்லை என்றால் நாம் மிருகம்தான். மனசு மட்டும்தான் நம்மை வித்தியாசப்படுத்துகிறது. ஆனால், அந்த மனதைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும். அப்படி இல்லையென்றால் மிருக லெவலுக்குப் போய்விடுவோம். அதைவிட மோசமானது, மிருகங்கள் இதுமாதிரி செய்யாது. ஆனால் நாம் செய்வோம். புத்தி சொன்னதைத் தப்பாகப் பயன்படுத்தும்போது ஆபத்தாக ஆகிவிடும். நமக்கு மனதை ஆக்கப்பூர்வமாக வைத்துக் கொண்டிருப்பதற்கான வழிகாட்டுதல் இருந்துக்கிட்டே இருக்க வேண்டும். அதில்தான் நாம் கோட்டை விட்டு விடுகிறோம். நம்ம பசங்களுக்கு எல்லாத்தையும் சொல்லித் தந்துவிட்டு Moral scienc அய்ச் சொல்லித் தரமாட்டோம். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவு செய்வது கிடையாது.  தெளிவு, அறிவு, ஞானம், சரியான Learning  இருந்தால் சரியாகிவிடும். தெளிவு கடையில் கிடைக்காது. நாம்தான் சொல்லித் தரணும்

- மனநல மருத்துவர் ஷாலினி  பேட்டி
- சந்திப்பு : செல்வா

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்