/* up Facebook

Nov 4, 2013

நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்: கிளிநொச்சி இளம் தாய் கண்ணீர்


‘ஒரு மாலைப்பொழுதில் மருத்துவ மாது ஒருவர் எனது வீட்டுக்கு வந்து, எனது ஐந்து வயதுக்குட்பட்ட பெண்பிள்ளையின் நிறை பார்க்க வேண்டும் எனவே கிளினிக் கொப்பியுடன் நாளை ஆசுப்பத்திரிக்கு வருமாறு கூறினார். அப்போது நான் எனது மகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதால் நிறை பார்க்க வேண்டியதில்லை எனக் கூற அதற்கு அவர் இல்லை கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து பெரியாட்கள் வருகினம். அவைக்கு எல்லாம் தெரியும் நீர் வாரும் உங்களுக்குத் தான் நல்லது என்றார். நானும் இது நல்ல சந்தர்ப்பம் என்று நம்பிச் சென்றேன் இறுதியில் இப்படிச் செய்துவிட்டார்கள்’
இது கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட வேராவில் கிராமத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவரின் மனக்குமுறல்.

கடந்த ஆவணி மாதம் 31ம் திகதி கிளிநொச்சி வேராவில் அரசினர் வைத்தியசாலையில் 50 இளம் தமிழ்த்தாய்மாருக்கு கட்டாயத்தின் நிமிர்த்தம் கருத்தடைச் சிகிச்சை அளிக்கப்பட்டு இன்றுவரை அதிகம் கவனம் கொடுக்கப்படாத ஒரு சம்பவம் தொடர்பில் நமது முரசொலி தனக்குக் கிடைத்த தகவல்களை பதிய விழைகின்றது.

வேராவில்,கிராஞ்சி, வலைப்பாடு,உமையாள்புரம்,மலையாளபுரம் போன்ற கிளிநொச்சியின் பின்தங்கிய கிராமங்களில் பிள்ளைகளின் போசணைக்குறைபாடு தொடர்பிலான மருத்துவமுகாம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஐம்பது தாய்மாருக்கு அவர்களது சம்மதமின்றியும் கணவர்மாரின் அனுமதி இன்றியும் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட கருத்தடை ஊசி ஏற்றப்பட்டுள்ளது. இக் கருத்தடை ஊசியைப் பாவிப்பதற்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் பல கருதத்தக்க பக்கவிளைவுகள் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் இவ் கருத்தடைசிகிச்சை முகாமுடன் தொடர்புடைய மருத்துவர் ஒருவர் யாழ்.ஆயர் அவர்களைச் சந்தித்த வேளையில் குறித்த கருத்தடை ஊசி மலையகப்பகுதியில் முன்னர் பாவிக்கப்பட்ட போது ஒவ்வாமை காரணமாக ஒரு தாய் மரணமடைய நேர்ந்ததாகவும் அதனால் தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட இவ் ஊசியை பின்னர் பாவிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். உண்மைநிலை குறித்து அறிய நமது முரசொலி சம்பந்தப்பட்ட மருத்துவ வட்டாரங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.

எது எப்படியாயினும் போர் லட்சக்கணக்கான தமிழர்களின் உயிரைக் காவுகொண்ட நிலையில் கருவளம் மிக்க நமது தாய்மார்களை கட்டாய கருத்தடை சிகிச்சைக்கு அவர்களின் சுயவிருப்பின்றி நிர்ப்பந்திப்பது எந்த வகையில் நியாhயம் என்பதே இன்றைய முக்கிய கேள்வி. இதனைக் கண்டும் காணாததும் போலிருப்பது எமது இனவிகிதாரசாரத்தை எதிர்காலத்தில் மோசமாகப் பாதிக்கும் செயலாக அமையும்.

நாவற்குழியில் குடியேறும் சிங்களவர்கள் குறித்தும் தமிழ்ப்பெண்களை இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பது குறித்தும் அதிக கவனம் கொடுக்கும் அரசியல் தலமைகளும் இது விடயத்தில் அக்கறையற்று இருப்பது வேதனைக்குரியது. ஏட்டிக்குப் போட்டியாக ஊடக அறிக்கைகளை விடும் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் காதுகளுக்கு இதுவரை இவ்விடயம் எட்டவில்லையா என்பது ஆச்சரியத்துக்குரியது. விவேகமற்ற தீர்மானங்களை நிறைவேற்றும் பிரதேச சபைகளுக்கு மிகத் தேவையான இவ்விடயம் குறித்து ஏன் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

கடந்த வாரம் யாழ்ப்பாண ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுகாதார அமைச்சைச் சேர்ந்த வைத்திய அதிகாரி முரளி வல்லிபுரநாதன் ‘வடக்கில் குறிப்பிட்ட இனம் ஒன்றை மையப்படுத்தி இவ் சட்டவிரோத கருத்தடை சிகிச்சை முகாம்கள் மேற்கொள்ளப்படுவதுடன் தெற்கில் பொதுபலசேனாவின் வேண்டுகோளை அடுத்து ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய எந்தவிதமான கருத்தடை சிகிச்சை முகாம்களும் தற்போது நடாத்தப்படுவதில்லை’ எனவும் சுட்டிக்காட்டினார். அதுமட்டுமன்றி தகுதியானவர்களை பொருத்தமான பதவிகளில் நியமிக்காத காரணத்தினாலேய அவர்கள் அரசுக்கு சாமரம் வீசுவதற்காக அரசின் மறைமுக வேலைத்திட்டங்களுக்கு உடந்தையாகவிருப்பதாகவும் விசனம் தெரிவித்திருந்ததுடன் இவ்வாறான சுயவிருப்பற்ற சிகிச்சை முகாம்கள் அடிப்படை உரிமைகளையும் மனிதஉரிமைகளையும் மீறும் செயல் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த மருத்துவ முகாம் தொடர்பில் பிரதேச மக்களுக்கு ஆவணி 30ம் திகதி சமூகமட்டப் பிரதிநிதிகள் மூலமாக தெரிவிக்கப்பட்டதுடன் சம்பவம் நடைபெற்ற 31ம் திகதி 20க்கும் மேற்பட்ட மருத்துவ மாதுக்களும் குடும்பநல மாதுக்களும் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வற்புறுத்தி குறித்த தாய்மாரை அழைத்து வந்ததுடன் வலைப்பாட்டுக் கிராமத்திலிருந்து மக்களை அழைத்து வர இரண்டு அம்புலன்ஸ் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன.

ஆரம்பத்தில் தாய்மார்கள் அனைவரும் இவ் கருத்தடை சிகிச்சைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த போது, இதற்கு மறுப்புத் தெரிவித்தால் எதிர்காலத்தில் குறித்த வைத்தியசாலை மூலம் எந்தவிதமான மருத்துவச் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன் அவர்களது கிளினிக் கொப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் ‘அன்றைய தினம் வேராவில் வைத்தியசாலையில் அளவுக்கு அதிகமாக சனக்கூட்டமிருந்தது. 17 கட்டில்களையும் 50 பேரை மட்டும் கொள்ளக்கூடிய வெளிநோயாளர் பிரிவையும் கொண்ட இவ் வைத்தியசாலையில் அதிக கூட்டமிருந்தது என்னை ஆச்சரியப்படவைத்தது. எனது பெண்பிள்ளையின் நிறையினைக் குறித்த மருத்துவமாது சிகிச்சை அட்டையை திரும்பத் தர மறுத்ததுடன் நான் பாவிக்கும் கர்ப்பத் தடை முறைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். நான் இயற்கையான முறைகளையே உபயோகிப்பதாக தெரிவித்ததும் உரத்துச் சிரித்த அவர்கள் வைத்தியரைச் சந்திக்கும் படி கூறியதுடன் அதன் பின்னர் என்னை தங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கர்ப்பத்தடை ஊசியை ஏற்றிக்கொள்ளும் படியும் நிர்ப்பந்தித்ததுடன் ஏற்கனவே மூன்று பிள்ளைகளைப் பெற்ற எனக்கு எதிர்காலத்தில் இனிக் குழந்தைகள் பிறந்தால் குறைபாடு உடையதாகவே இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இருந்தும் எனது கணவரின் அனுமதியின்றி என்னால் எதுவும் செய்ய முடியாது எனக் கூறியபோது எனது சிகிச்சை அட்டையை மீளத்தராததுடன் கணவரின் அனுமதியைப் பெற்றுவருமாறும் வற்புறுத்தினர். இருந்தும், நான்; எந்த கர்ப்பத்தடை முறைகளையும் பெறவிரும்பவில்லை எனவும் எனது மணவாழ்க்கையில் இதுவரை நான் கடைப்பிடிக்கும் முறைகளையே தொடர்ந்து கடைப்பிடிக்கவுள்ளதாக தெரிவித்து ஒரு கடிதத்தை கையளித்து வெளியேறினேன்’ எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘அன்று கடமையிலிருந்த வைத்தியரை வழமையாக வைத்தியசாலையில் ஒருபோதும் கண்டதில்லை என்பதுடன் முதல் நாள் எமது பாடசாலைக்கு வந்த அவர் எம்மிடம் சில உதவிகளையும் கேட்டிருந்தார். அதிலிருந்து அவருக்கு அங்கு நடைபெற்ற விடயம் குறித்து முற்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது’ எனவும் தெரிவித்தார். இதிலிருந்து வைத்தியர்கள் மக்களுக்கு பொய்கூறி அவர்களின் சம்மதமின்றி இத் திருக்கூத்தை நிறைவேற்றியுள்ளமையை அறியமுடிகின்றது.

அத்துடன் தாய்மார் தங்கள் கணவன்மாரின் சம்மதம் தேவையெனத் தெரிவித்த போது நீங்கள் சம்மதிக்காவிட்டால் உங்கள் கணவன்மாருக்கு வலுக்கட்டாயமாக கர்ப்பத்தடை சிகிச்சை செய்ய வேண்டிவரும் என மிரட்டப்பட்டு வலுக்கட்டாயமாக சம்மதிக்க வைக்கப்பட்டனர். இவ்வாறு சிகிச்சை பெற்ற ஒரு பெண் தன் கணவனிடம் இது குறித்து கூறியபோது அவர் ‘நீ கள்ளத் தொடர்பு வைக்கும் நோக்கிலேயே இதற்கு சம்மதித்தாய்’ என தன்னை திட்டியதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.இது மக்கள் கூறும் நிலை.
வேராவில் வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்களின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கார்த்திகேயனிடமிருந்து தமக்கு சம்பவ முதல் நாள் இரவு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் ஆவணி 31ம் திகதி கொழும்பிலிருந்து ஆய்வு நடவடிக்கை ஒன்றுக்காக குழுவொன்று கொழும்பிலிருந்து வரவுள்ளதாகவும் அத் தொலைபேசி அழைப்பு மூலமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 80 பேருக்கு மதிய உணவு தயார்ப்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் பின்தங்கிய கிராமப்புறத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை நிர்வாகத்தால் உடனடியாக 80 பேருக்கு உணவு தயார்ப்படுத்துவது முடியாத காரியம் என்ற போதும் குறித்த வைத்தியசாலை ஊழியர்கள் உணவு தயார்ப்படுத்தலில் ஈடுபட்ட அதேவேளை குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் பிற்பகல் 2 மணியுடன் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுமிருந்தனர். கிளிநொச்சியிலிருந்து சென்றிருந்த வைத்தியஅதிகாரிகள் மற்றும் மருத்துவமாதுக்களே அன்றைய தினம் வைத்தியசாலையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சமையல் வேலை முடித்து வேராவில் வைத்தியசாலை ஊழியர்கள் திரும்பிய பொது குறித்த தாய்மார் மிகவும் குழப்பமான நிலையில் இருந்ததை அவதானித்ததுடன் அவர்களது கைகளில் ஏதோ ஊசி மருந்தும் ஏற்றப்பட்டுமிருந்ததையும் கண்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாயொருவர் கூறுகையில் ‘எனக்கு இரண்டு பிள்ளைகள் மூத்த பிள்ளைக்கு மூன்று வயது. கடைசிப்பிள்ளை எட்டு மாதக் கைக்குழந்தை. வைத்தியர் என்னிடம் இது பொதுவாகப் பயன்படுத்தப்படுவது எனவும் அமரிக்காவில் கூட இதனைத் தான் பயன்படுத்துவதாகவும் இரண்டு பிள்ளைகள் எனக்குப் போதுமெனவும் மிகவும் லாவகமாகப் கூறி குறித்த ஊசியை எனக்கு ஏற்றிவிட்டார். அந்தப் படித்த மனிதர்களுடன் என்னால் எதுவும் கதைக்க முடியவில்லை. ஊசி போட்டுக் கொண்ட சிலநாள்களில் எனக்கு தாங்கமுடியாத வலி ஏற்பட்டதுடன் சிகிச்சைக்காக குறித்த வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றபோது எனக்கு இவ் ஊசியைப் போட்டுவிட்ட வைத்தியரைப் பார்க்க முயற்சித்த போதும் அவர் அங்கு இருக்கவில்லை. கடமையில் இருந்த வைத்தியர் சில நாள்களில் குணமாகிவிடும் எனக் கூறியபோதும் இன்றுவரை எனக்கு குணமாகவில்லை. அந்த வைத்தியர்கள் என்னை ஏமாற்றிவிடடார்கள்’ என மனம் வெதும்புகின்றார்.
பாதிக்கப்பட்ட தாய்மார்களுள் அனேகமானோருக்கு மூன்று குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள நிலையிலும் விடுதலைப்புலிகளின் காலத்தில் மகப்பேற்றின் போதான கர்ப்பத்தடை சிகிச்சை கூட ஐந்தாவது பிள்ளைக்குப் பின்னர் தான் செய்யமுடியம் என வைத்தியர்கள் தெரிவித்த நிலையிலும் வேராவில் கிராம மருத்துவமுகாம் பல்வேறு ஐயங்களைத் தோற்றுவித்துள்ளது.

அதேவேளை இவ் விடயத்தில் பல சமூகக் காரணிகள் தொடர்புபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதது. குறித்த பகுதி வாழ் மக்கள் அனைவரும் கத்தோலிக் மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவே இவ்விடயம் கத்தோலிக்கர்களுக்கு எதிரானதெனும் நிலைப்பாடு எழுந்த போது குறிப்பிட்ட சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் அடங்கிய குழு ஒன்று கடந்த சிலநாள்களுக்கு முன் யாழ்.ஆயரைச் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்கியுள்ளனர்.

அவர்களது கருத்துப்படி குறித்த கிராமங்களைச் சேர்ந்த சில தாய்மார் தங்களிடம் தாமாகவே கர்ப்பத்தடை சிகிச்சை முறை குறித்துக் கேட்டதாகவும் அதனடிப்படையிலேயே இவ் மருத்துவ முகாம் ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் மேலதிகமாக சில தாய்மாருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இவ் விடயத்தில் எந்தவிதமான அரசியல் பிண்ணணிகள் எதுவும் இல்லை எனவும் தாங்களும் தமிழர்கள் தானே எனவும் குறித்த குழுவினரின் கருத்துக்கள் அமைந்துள்ளன. இந் நிலையில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலர் இவ் விடயம் குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இக் குழுவின் சுயாதீனத் தன்மை கேள்விக்குரியது என வைத்தியர் முரளிவல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.

எது எப்படியாயினும் நொந்து போயுள்ள எமது இனத்தின் எதிர்காலம் குறித்து கிடைக்கத்தக்க அத்தனை வழிகளிலும் சாதகமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் புத்தகங்களில் படித்ததையும் தங்களுக்கு படிப்பிக்கப்பட்டவற்றையும் எதுவித சுயவிசாரணையும் இன்றி அமுல்படுத்தத் நினைக்கும் வைத்தியர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் போக்கு மாறவேண்டும். அப்பாவி மக்களின் அறியாமைத் தனத்தை தமது பதவி உயர்வுகளுக்காகவும் மேல்மட்டத்துக்கு தங்கள் விசுவாசத்தை காட்டுவதற்கும் பயன்படுத்தாது சமூகப்பொறுப்புணர்வுடன் செயற்பட அனைவரும் முன்வரவேண்டும் என்பதே இன்றைய காலத்தேவையாகும்.

பல்லவன் 
GTN

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்