/* up Facebook

Nov 26, 2013

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பணிப்பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள். - பிருந்தா தாஸ்

இலங்கைப் பெண்களையும் அவர்களின் வளர்ச்சியையும் எடுத்து நோக்கும் போது அவை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன என்று கருதவேண்டும். இருப்பினும் தனது குடும்ப வளர்ச்சியின் நிமித்தம் பெண்கள் கட்டாய தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இன்னும் கல்வியில் பின்தங்கிய நிலையில் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. பெருந்தோட்டங்களிலும் பலர் சொந்தக் கைத்தொழில்களிலும் ஈடுபட்டு வருவதை நாம் அன்றாடம் காணக்கூடியதாகவேயுள்ளது. இருப்பினும் அவர்களின் வருமான பற்றாக்குறையினால் தமது குடும்பம், பிள்ளைகள், அனைத்து ஆசாபாசங்களையும் விட்டு பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்கின்றனர். நான் இங்கு குறிப்பிடுவது சிறுபான்மை இன பெண்களை மட்டுமே.

அவ்வாறு செல்லும் பணிப்பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஆனால், அதற்கான முடிவுகள் தான் என்ன என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் அநீதிகள் எல்லாமே தெரிந்தும் தமது இலாபங்களைக் கருத்திற் கொண்டு மௌனம் சாதிக்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.

இலங்கையைப் பொறுத்தவரையில், பணிப்பெண்கள் ஒரு ஏற்றுமதிப் பண்டமாகவே கருதப்படுகின்றனர். அதாவது, பெருமளவில் அந்நிய செலாவணியை பெற்றுத் தருகின்றனர். இந்த வருமானத்தின் படி இலங்கை அரசாங்கம் ஒரு வருடத்திற்கு 425 மில்லியன் ரூபாய்களை (3.8 மில்லியன் டொலர்கள்) அந்நியச் செலாவணியாக பெறுகின்றனர். எமது நாட்டில்  இன்னும் பெண்களுக்கான சிறப்புரிமை வழங்கப்படவில்லை. பிறப்பிலேயே அடிமையாகிய பெண்மை எப்படி பெண்ணியத்தை பேசுவாள். இதனாலேயோ என்னவோ பெண்மைக்கு இன்னும் தைரியம் பிறக்கவில்லை போலும்!
இதனடிப்படையில் அண்மையில் எமது நாட்டின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை பட்டியலிடுமளவிற்கு கொடுமைகள் நடந்திருக்கின்றன.

  1.  சவூதியைச் சேர்ந்த ஒரு அராபியர். 13 ஆண்டுகளாக இலங்கைப் பெண்ணை அடைத்து வைத்து ஊதியமும் வழங்காது கொடுமை செய்திருக்கிறார்.
  2.  நம் நாட்டு பெண்ணை உடல் முழுதும் 24 ஆணிகளை அடித்து சித்திரவதை செய்திருக்கின்றனர் சவூதியைச் சேர்ந்த கணவனும், மனைவியும் இந்த குற்றச் செயலைச் செய்துள்ளனர். 
  3. இன்னொரு சவூதி தம்பதியினர். பணிப் பெண்ணின் முகமெல்லாம் கத்தரிக்கோலால் அங்காங்கே வெட்டி உடலெங்கும் சூடு போட்டிருக்கின்றனர்.  
  4. பணிப்பெண்ணை துன்புறுத்தி கொலை செய்ததுடன், உடலை வீதியில் வீசி எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறார். இதுவும் சவூதி அரேபியாவில் தான் நடந்துள்ளது.
  5. குழந்தையைக் கொன்று விட்டதாக பணிப்பெண் மீது குற்றம் சுமத்தி பொலிஸாருக்கு தகவல் கொடுத்த எஜமானி, இறுதியில் பணிப்பெண்ணுக்கு மரணத்தண்டனை வழங்கிய சம்பவம் ஒன்று இலங்கை நாட்டையே அழ வைத்தது.
  6. சவூதி அரேபியாவில் இலங்கை பெண்ணின் உடல் முழுவதும் ஆணிகளை ஏற்றி இரத்தம் எடுக்கப்பட்டு மிகுந்த கொடுமைகளுக்குப் பின் அவர் நாடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு வீட்டுப் பணிப்பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகள் மனிதத் தன்மையற்ற கொடூரமான செயலாகும். இது ஊடகங்களுக்கு கிடைத்துள்ள செய்திகளேயாகும். இது போன்ற பல வன்கொடுமைகள் நடக்கின்றன என்பதும் தெரியவருகிறது. குறிப்பாக, சவூதி, குவைத், கட்டார், ஓமான் போன்ற நாடுகளில் வேலைக்குச் செல்லும் பணிப்பெண்களில் கிட்டத்தட்ட 80 சதவீத பெண்கள் இவ்வாறான கொடுமைகளை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் தினமும் குறைந்தது 18 மணி நேர வேலை மற்றும் கருணை காட்டாத எஜமானிகள்.

இதில் சில பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வளவு கொடுமைகளையும் சுமந்து தாங்கி தமது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் அங்கு வேலை செய்து வருகின்றார்கள்.
பணிப்பெண்கள் தமது உரிமைகளைப் பற்றிப் பேசினால்; பெண்களின் கடவுச் சீட்டு, அடையாள அட்டைகள் எல்லாம் எஜமானிகள் பறித்து வைத்துக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இது குறித்து பொலிஸாருக்கு தெரிவித்தால் அவர்களின் மேல் வீண்பழி சுமத்தி தண்டனை வழங்குவார்கள்.
தைரியமாய் ஒரு பணிப்பெண் பொலிஸ_க்குச் சென்று தன்னை பாலியலுக்குட்படுத்தியதாக புகார் கொடுக்குமிடத்து குறித்த பணிப் பெண்ணை ஒரு விபசாரியைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு வந்து விடுவார்கள் இந்த எஜமானிகள்.

இது போன்ற சம்பவங்களினால் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்;பெண்கள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகவேயுள்ளன. 
இவ்வாறு இலங்கைப் பணிப்பெண்களை எஜமானிகள் திட்டமிட்டு, மாட்டிக் கொடுத்து வஞ்சிக்கின்றனர.; மற்றும் பணிப்பெண்களைச் சிறை வைக்கின்றனர், நியாயமற்ற தண்டனைக்கு உள்ளாக்குகின்றனர் என்றே கூறவேண்டும். இதனால் முறையற்ற கர்ப்பம், உடல், உள ரீதியான துன்பங்களை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கி கொடுமையை அனுபவிப்போருக்கு சவ+தி, டுபாய் போன்ற நாடுகளிலுள்ள பொலிஸார் முறையான உதவிகளை செய்வதில்லை. அப்படிச் செய்த துன்புறுத்தல்களுக்கு முறையான தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான செயல்களைக் குறைக்கலாம் என்பது எனது கருத்து.
மத்திய கிழக்கு நாடுகளில் பிழைக்க செல்லும் ஆசிய மக்களை அடிமைகளைப் போல நடத்தி தங்களது மேன்மைத் தனத்தை காட்டிக்கொண்டுள்ளார்கள் இவர்கள். மனித உணர்வுகளையும் அவர்களின் கஷ்ட நிலைகளையும் புரிந்து கொள்ளாது அப்பாவி பணிப்பெண்களை துன்புறுத்தி அவர்களின் உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு அநியாயங்களையும் செய்து விட்டு நல்லதையும் செய்கிறார்கள். அதற்கு பரிகாரம் தேடுவதற்காகவா? அல்லது இன்னும் கொடுமைகளை செய்யவா என்று தெரியவில்லை. இவ்வாறான குற்றச் செயல்களை நபிகள் ஆதரிக்கவில்லை. இஸ்லாமிய மதத்தின் தலைமைப் பீடத்தில் இருக்கும் நாட்டிலும் மற்றும் இஸ்லாமிய நாடுகள் என தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் நாடுகளும் தான் முக்குற்றங்களை செய்து கொண்டிருக்கின்றன.

பணிப்பெண் மீதான வன்முறைகள் அதிகரிக்கும் போது அதன் கொடுமைகள் தாங்க முடியாமல் போகும்போதும் தான் வேலை செய்யும் பெண்ணே எஜமானிகளை கொலை செய்வதும் அவர்களை பழிவாங்குவதும் இப்போது கணிசமாக நடந்து வருகிறது. அரபு நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்கப் போன ஒரு பெண் ஒரு அரபியை கொலை செய்கிறாள் என்றால் அவளுக்கு எவ்வளவு கொடுமை இழைக்கப்பட்டிருக்கும் என கருத்திற்கொள்ள வேண்டும்.
இவர்களுக்காக எம் அரசாங்கம் என்ன செய்தது. அவர்களை பற்றி கண்டு கொள்வதுமில்லை. அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு அரசாங்கம் பணவுதவி வழங்கியுள்ளது. அவர்களின் தொடர் போராட்டத்தால் அது வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் பெண்களுக்கான சங்கங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களோ வெளிநாடுகளில் இருந்து பணவுதவிகளைப் பெற்று குறித்த பெண்கள் மட்டும் சொகுசாக வாழ்க்கை நடத்துகின்றனர். இது போன்ற குற்ற செயல்களை பெண் சங்கத்தினர்கள் தட்டி கேட்கும் அதிகாரத்தினைப் பெற வேண்டும். பெண் சங்கங்கள் ஒன்றும் பெண்ணடிமைக்கு வழிவகுக்க கூடாது. உங்கள் சங்கத்தில் சிறுபான்மைப் பெண்களையும் சேர்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கும் உணர்வுகள் உள்ளன என்பதை உணர்ந்து செயற்படுங்கள். பல கைகள் தட்டினால் தான் சத்தம் வரும் என்ற வாக்குக்கு இணங்க, பெண்கள் ஒன்று கூடி இவ்வாறான செயல் குறித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது எமது நாட்டுப் பெண்களை காத்துக் கொள்ளலாம்.
இன்று இலங்கையில் மட்டும் அல்ல, உலகளாவிய ரீதியிலும் பெண்கள் பல்வேறு வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிவுலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் என்பன முன்வைக்கப்படுகின்றன.
எனவே நவம்பர் 25 ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாகும். இது ஐக்கிய நாடுகள் அவையில் 54 ஃ 134, இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பிரேரணையில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளையும் அவை தடுக்கப்பட வேண்டிய முறைகளையும் பற்றிய அறிவுறுத்தப்படுகிறது.

எனவே எமது நாட்டுப் பெண்கள் அன்பில் முதன்மையானவர்கள். அவர்களை காக்கும் கடமை பெண்கள் சங்கத்துக்கு மட்டும் இல்லை. எமது அரசாங்கத்துக்கும் உள்ளது என்பதை புரிந்து கொள்வோம். பெண்களை பற்றி பேசும் பெண்ணியவாதிகளுக்கும் இது ஒரு சவாலாக இருக்கட்டும்.

(பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகிய நவம்பர் 25 ற்காக இந்த தகவலுடன், கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.)


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்