/* up Facebook

Nov 20, 2013

மெல்ல விலகும் பனித்திரை – சிறுகதை தொகுப்பு! - ஆர்.செம்மலர்

மெல்ல விலகும் பனித்திரை
‘மெல்ல விலகும் பனித்திரை’ லிவிங் ஸ்மைல் வித்யா தொகுத்து அளித்துள்ள சிறுகதைப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் தலைப்புக்கு ஏற்ப இதனைப் படிக்க படிக்க, திருநங்கைகள் அல்லது அரவாணிகள் குறித்த நமது புரிதலின் மேல் படர்ந்திருக்கும் பனித்திரை விலகி, அவர்களின் உள்ளத்தை நெருங்க முடிகிறது.

இதில் உள்ள சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர்கள் (ம்… ஹூம்) உயிர் கொடுத்துள்ள படைப்பாளர்கள், மனித நேயத்தை மேம்ப டுத்தும் வகையில் ஏற்கனவே பல படைப்புகளை நமக்குக் கொடுத்தவர்கள்தான்.

ஒன்பது, அலி, அரவாணி போன்ற முன்னொட்டுக்கள் மறைந்து திருநங்கை, திருநம்பி என மரியாதைக்குறிய அடையாளங்கள் உருவாக்கப்படுவது முன்னேற்றமே. ஆனாலும் நாம் போகவேண்டிய தூரம் அதிகமுள்ளது. ஒதுக்கிவைக்கும் குடும்பங்களுக்கும், வக்கிரமாகப் பார்க்கும் சமூகத்திற்கும் இடையில், என்ன விலை கொடுத்தும் வாழத் துடிக்கும் இயற்கையின் படைப்பாக வேட்கை கொண்டு ‘கண்ணீரோடு காத்தோம்… கருகத் திருவுளமோ” என்று இந்தச் சிறுகதைகள் நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றன.

கிராமியக் கதைகளைச் சொல்வதில் வல்லவரான கி.ரா (கி.ராஜநாராயணன்) படைத்த இந்த கிராமிய மணம் கொண்ட கோமதிச் செட்டியாரின் மனம் கலங்கும்போது. நாமும் சேர்ந்து கலங்குகிறோம்.

சந்தைத் தோப்பில் ஆடிப் பிழைக்கும் திருநங்கைகளின் மீதான வக்கிரத்தை மோர் விற்கும் கிழவியின் மூலம் பாவண்ணன் சாடும்போது, நாமும் சேர்ந்து ரெளத்திரம் கொள்கிறோம்.

முத்தாய்ப்பான மூன்று கதைகள் …

அறிவியல் ஆய்வுக்கு தன்னை பலிகொடுத்த ஆயிஷாவைப் படைத்த இரா.நடராசன் மதியைப் படைத்துள்ளார். போஸ்ட் மார்ட்டத்தின் இறுதிப் பதிலான ‘தற்கொலை’ வரை மதியோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். நாம் அதோடு சேர்ந்து மறுபிறவி எடுக்கிறோம். இந்தக் கதை சொல்லியிருக்கும் விதம் புதுமையானது.

மணவாழ்க்கை வாழ முடியாத தங்கக் கிளிக்கு திருமணம் நடக்கிறது. நட்போடு வாழும் தங்கக் கிளியை, பஞ்சாயத்துக் கூட்டி பிரித்துவிடுகிறார்கள். தன் மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கும் ஆதரவுக் கரம் நீட்டுகிறாள் தங்கக் கிளி. லட்சுமணப் பெருமாளின் ஊமாங்காடை, தங்கக் கிளி குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத ஏக்கத்தில் மார் பிசையும்போது, நம் கண்களில் இருந்து கண்ணீர் கசிகிறது.

ஆச்சி முத்து – கூடப்பிறந்த அண்ணான் முதல், சேரியில் உள்ள ஆண்கள் அனைவரும் அடித்து கொலை செய்ய தேடுகிறார்கள். ஆனால், சேரிப் பெண்கள் அவனுக்கு துணையாய் இருக்கிறார்கள். ஏன்?, எப்படி? … ஆச்சிமுத்து, பெண்களுக்கு எதிரான வக்கிரக் கும்பலுக்கும், அவர்களின் மேல் சாதி திமிருக்கும் சேர்த்து பாடம் புகட்டுகிறான். சந்தியா என்ற திரு நங்கையின் மூலம், இவர்களின் விடுதலையும், சமூக விடுதலையில்தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது கதை.

என்னுரை என்பதில் வித்யா குறிப்பிட்டிருப்பது போல, திரு நங்கைகள்/திருநம்பிகளின் நுண் உணர்வுகளை இந்தக் கதைகள் பேசுகின்றன. அவர்கள் குறித்த புரிதலை உருவாக்குகின்றன. சமூக மாற்றத்திற்கு இந்தக் கதைகள் வித்திடுகின்றன.

மெல்ல விலகும் பனித்திரை
தொகுப்பு: லிவிங் ஸ்மைல் வித்யா
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.50

நன்றி - மாற்று

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்