/* up Facebook

Nov 30, 2013

ஆண்களின் தீவு- அ.கேதீஸ்வரன்


சுல்பிகா ஈழத்து எழுத்துலகில் மிக வேகமாக அறியப்பட்டு வரும் இளம் படைப்பாளியாவார். இவருடைய எழுத்துலகம் புதிய கற்பனை வடிவத்தையும் அனுபவத்தையும் ஒருங்கிணைத்து வாசகரை வேறு ஓர் வாசகத்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவருடைய விரைவான வளர்ச்சிக்கு எது காரணம் எனக் கேட்டபோது தன்னுடைய படைப்புகள் பலமும் பலவீனமும் கொண்டிருப்பதே அதன் பலமெனக் கூறும் சுலபிகா வாசகரைச் சோம்பேறிகளாக்காது அவர்களை இயங்க வைக்கவேண்டும். அப்படியானால் நாம் எம்மைப் புதிப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். சாத்தியம் சாத்தியமற்றது என்பதற்கு இடமில்லாமல் எல்லாவற்றையும் எழுதுகிறேன். எழுதிய எல்லாவற்றிற்கும் அப்பால் சென்றுகொண்டேயிருக்கிறேன். முக்கியமாக என்னுடைய எந்தப்படைப்பு பாராட்டுப்பெறுகிறதோ உடனடியாக நான் அந்தப் படைப்புப் பற்றிய மனநிலையிலிருந்து விடுபட்டுவிடுவேன். இது கூட என்னுடைய பலமாகவும் பலவீனமாகவும் வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருக்கலாம் என உணர்கிறேன் எனக் குறிப்பிடுகிறார்.

 சுல்பிகா இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அதிகமும் கவனத்தைக் கோருகிறார். இதுவரையில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் ஒரு கவிதைத்தொகுப்பையும் கொணர்ந்துள்ளார். இவற்றில் எலிச்சாபம் எனும் நாவல் அவருக்கு இலக்கியப் பரப்பில் தனித்த அடையாளத்தை வழங்கியிருக்கிறது. இந் நாவலில் சிறுவனான சந்தானமும் அவனது நாய்க்குட்டியும் தோட்ட வெளிகளில் எலிகளை வேட்டையாடுதலை மிகச் சுவாரசியமாக எழுதியிருப்பார் சுல்பிகா. எலிப்பொந்துகளை சிறு மண்வெட்டியால் சந்தானம் வெட்டிக்கொண்டுபோக பொந்து நீண்டுகொண்டே போகும். சில இடங்களில் எலியின் படுக்கையறையும் அதில் எலிக்குஞ்சுகளும் காணப்படும். தொடர்ந்து பொந்தை வெட்டும் போது பெரிய எலிகள் மேற்பொந்து வழியாக வெளியில் ஓட அவற்றைச் சந்தானத்தினுடைய நாய்க்குட்டி விரட்டிப் பிடித்து வந்து அவனிடம் கொடுத்துவிடும். தோட்டத்தில் பிடித்த எலிகள்தான் சந்தானம் வீட்டில் அன்றையதினம் கறிசமைக்கப்படும். எலிகள் இல்லாமல் சந்தானம் வீட்டிற்குப் போனால் சந்தானத்தின் தாய் அடி பின்னியெடுத்து விடுகிறார். அதனால் என்ன பாடுபட்டாவது சந்தானம் எலிகளைப் பிடித்து விடுவான். இப்படித்தான் ஒரு நாள் மேலோட்டையால் ஓடிய எலியை சந்தானம் தனது கைகளால் பொத்தியபோது எலி அவன் கையில் கடித்து விடுகிறது. அதை அவன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தனக்கு எலி கடித்தது பற்றி பலபேரிடம் கூறுகிறான். எலி கடித்தால் மனிதர்கள் வெள்ளைத்தோலர்கள் ஆகிவிடுவர். என்றும் பின்னாட்களில் பெரிய துன்பங்களைச் சந்திப்பார்கள் என்றும் அது போல எலிகள் சாபம் போட்டால் சாகும் வரையும் சாபம் போகாது என்றெல்லாம் அவர்கள் சந்தானத்திற்குக் கூறிவைக்கிறார்கள்.

 சந்தானம் வளர்ந்து பெரியவனான பின்பு அவன் உண்மையாகவே வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை எதிர் கொள்கிறான். ஒவ்வொரு தடவையும் தனக்கு எலிகளின் சாபத்தால்தான் இந்த நிலையென்று நினைத்து வருந்துகிறான். அளவுக்கு அதிகமான போதையில் ஒரு நாள் நடுறோட்டில் வாகனத்தில் அடிபட்டுச் செத்துப் போகிறான் சந்தானம். சாகும் போது சந்தானத்திற்கு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எல்லோரும் இருந்தார்கள். ஆனால் சந்தானம் சாவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்கூட தன்னை எலிகளின் சாபம் தான் இப்படியாட்டுகிறது. தான் செய்த பாவத்திற்கு என்ன விமோட்சம் இருக்கப்போகிறது என்று உளறிக்கொண்டு இருந்ததாக அவனைக் கடைசியாகக் கண்டவர்கள் கூறியுள்ளார்கள். சந்தானத்திற்கு எவ்வித  நோயும் கிடையாது எல்லாம் ஒரு வித மனப்பிறழ்வுதான் காரணம் என்பதை சுல்பிகா மிக அழகாக நாவலில் வெளிப்படுத்தியிருப்பார்.

சுல்பிகாவின் கற்பனை, மொழியாற்றல், சொல்முறை, பாத்திரங்களைக் கட்டமைக்கும் நேர்த்தி, சமூக அசைவுகளை சரியாக உள்வாங்கி அதைப் படைப்பில் இயங்கவைத்தல் இப்படி அனைத்தும் சேர்ந்து இவருடைய படைப்பாற்றலை வியக்கவைக்கிறது. இப்படியான ஒரு கூட்டுழைப்பின் வடிவம்தான் எலிச்சாபம் நாவலாகும். எலிச்சாபம் நாவல் பற்றிய சிறந்த மதிப்பிடலை இலக்கியச் சுயாதீனஆய்வாளர் ராகவன் பேரிதல் சஞ்சிகையில் எழுதியிருந்தார். ராகவன் எலிச்சாபம் நாவல் மிக முக்கியமானதோர் படைப்பாக இனம்காண்கிறார்.

 சுல்பிகா புனைவெழுத்தின் மிகவோங்கி. இதனைத் தன் எழுத்துகளினு+டாகவே இயம்பி வருகிறார். அவர் எழுதிய ஆண்களின் தீவு சிறுகதையும் வழமையான போக்கிலிருந்து மாறுபட்டு வெளிப்படுகிறது. “ஆண்களின் தீவு சிறுகதையும் அதைப்பற்றிய பதிவுகளும் இணையத்திலிருந்து தரையிரக்கம் செய்யப்பட்டவை மேற்படி கணைப்பு இணையத்திற்கு நன்றி.

வெள்ளப் படுக்கை. பெரும் வெள்ளப் படுக்கை. பரந்தவெளியில் வெயில் பட்டு மினுக்கத்துடன் தெரியும் மணல் அலைபோல இது வெள்ளை நீர். சிறு சிறு அசைவு. ஆனால் கண்ணெட்டும் து+ரம் வரைக்கும் அதே அசைவு, அதே வெள்ளை. மேலே பரந்தவெளியும் கீழே நீரும் தொடும் ஓர் இடத்தில் உதவியின் பார்வை நிலைத்திருந்தது. உதவி மேலே பார்த்தது எங்கும் வெளி….. கீழே நீர். தன்னுடைய முதுகைக் கூசிக்கொண்டு காற்றுக் கடந்த அந்தக்கணத்தில் உதவி தன் களைப்பை முற்றிலும் மறந்தது. கையில் வைத்திருந்த நீர் வழிப்பை ஓங்கி நீரில் அடித்து தன் அதீத மகிழ்ச்சியைத் தனக்குள் பகிர்ந்து கொண்டது. உதவிக்கு மகிழ்ச்சி தாழவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்பதுபோல் அவ்விடம் இருந்தது. உதவி படகின் நுனியில் ஏறி இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு  மிருகங்கள் போலவும் பறவைகள் போலவும்  பல்வேறு ஓசைகளில் கத்தியது….பட்சம் அடங்கவில்லை. ஏதேதோ வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் இன்னும் பலமடங்கு சத்தமாகப் பேசியது. எல்லாம் நல்ல வார்த்தைகளல்ல சில அவற்றில் கெட்ட வார்த்தைகளும் இருந்தன. தன்னுடன் இன்னுமொருவர் பயணம் செய்வதையே உதவி மறந்து பேசிக்கொண்டிருந்தது. ஆனால்  சொற்களல்ல மனநிலைதான் உதவிக்குச் சந்தோசத்தைக் கொடுத்தது. படகு வேகம் குறைந்து நின்றுவிடும் நிலைக்கே சென்றுவிட்டது. படகு ஓடாமல் நின்றால் மீண்டும் அதை இயங்கவைப்பது எவ்வளவு கடினம் என்பது உதவிக்குத் தெரியும். படகின் வேகத்தை விரைவாக்க உதவி நீர் வழிப்பை அசைக்கத் தொடங்கியது. படகு கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்தது.

 சில துளிகள்…. துளிகள்…..துளிகள்…..பல துளிகள் எனப் பெருகிப் புகையாய்க் கொட்டியது மேலிருந்து மழை நீர். படகின் நடுவே மல்லாந்து படுத்திருந்த கமுகக்கனி நீர்த்திவலைகளை ரசித்தபடி ஈரலிப்பில் ஆனந்தமயமாகக் கிடந்தார். மேலிருந்து கொட்டும் நீர் காற்றோடு சேர்ந்து மூர்க்கம் கொள்ளத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் நிலமை மோசமடையலாம் என்பதை உணர்ந்த உதவி கமுகக்கனியை அருகில் அழைத்து நாங்கள் போகவேண்டிய இடத்தை அடைவதற்கு இன்னும் சில மணிநேரங்கள் ஆகும். நிலமை மோசமானால் அதை உறுதியாகச் சொல்ல முடியாது. நீங்கள் எதற்கும் தயாராக இருக்கின்றீர்களா? எனக்கேட்டது. கமுகக்கனி முகத்தில் ஒரு அலட்சியத்தோடு நிமிர்ந்து உதவியைப் பார்த்தார். சாதாரண விடயத்தை ஏன் பெரிதாக்குகிறாய் உதவி…? நீ உன் வேலைகளைப் பார். மனதில் பயம் எழுந்தால் ஏதாவது பாட்டைப் பாடு. எனக்கு ஒன்றும் சொல்லாதே. நான் நினைக்கிறேன் உனக்கு உன் தொழிலில் முழுக்கவனம் இல்லை. சிந்தனைகளுக்கு அடிமையாகிறாய். தளர்வுதான் நம்பிக்கையின் எதிரி. நாம் தளர்வடையும் போது அருகில் எந்தப் பொருள் இருந்தாலும் அதை எமது உதவியாளராக்க வேண்டும். உனக்கு உதவியாக இங்கு ஏராளமான பொருட்களோடு ஒரு மனிதனும் இருக்கிறேன். ஆகவே நீ உறுதியாக இரு என்றார் கமுகக்கனி.

 உதவி பலத்த சத்தத்தோடு மூன்று நான்கு தடவைகள் சிரித்தது. அப்படிச் சிரித்துவிட்டு கமுகக்கனியைப் பார்த்தது. உங்களை நினைத்தால் எனக்கு இப்படிச் சிரிக்கத்தான் முடிகிறது. ஆனால் சந்தோசத்தில் அல்ல கோவத்தில். ஏனென்றால் உங்களுடன் நான் இரண்டு நாட்கள் இந்தப் படகில் பயணம் செய்கிறேன். நீங்களோ இந்த நீர்ப்படகில் பயணியாகத்தான் என்னுடன் வருகிறீர்கள். நான் இந்த நீரையும் காற்றையும் கருமுகிலையும் கொட்டும் மழைநீரையும் இறங்கும் நெருப்பையும் பல ஆண்டுகளாக அநுபவித்து இங்கேயே வாழ்கிறேன். அப்படியிருக்கும்போது நான் கூறும் எதையும் நீங்கள் அக்கறைகொள்வதில்லை. எங்கள் நல்லநேரம் எந்தத் தீங்கும் ஏற்படாமல் தப்பிப் போய்க்கொண்டிருக்கிறோம். இந்த நிலமை தொடரும் என்று நீங்கள் நினைப்பது தவறு. அது மட்டுமல்ல நாங்கள் போகவிருக்கும் இடம் மிகப் பயங்கரமானது. அங்கே நீங்கள் தான் செல்ல வேண்டும். என்னையும் உங்களுடன் வரும்படி நிர்ப்பந்திப்பது தவறு. எனக்கு இதில் எந்த உடன்பாடுமில்லை. உதவி பேசிக்கொண்டிருக்கும்போதே படகு மேலும் கீழும் மோசமாக ஆடி படார் என்று எங்கோ ஓர் மூலையில் முறிந்த சத்தம் கேட்டது. கமுகக்கனி எழுந்து சென்று சத்தம் வந்த இடத்தைப் பார்த்தார். பின்பு உதவியை அழைத்து என்ன நடந்தது என்று பார்க்கச் சொன்னார். உதவி வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே வந்தது. முறிந்த மரத்துண்டொன்றை எடுத்து கமுகக்கனியின் கையில் கொடுத்துவிட்டு இதை நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சிரித்தது. உதவியின் சிரிப்பிலிருந்து அங்கு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்பதை கமுகக்கனி புரிந்துகொண்டார்.

 நீண்ட நேரமாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த இடைவெளியில் அதிக து+ரத்தைக் கடந்திருந்தார்கள். படிப்படியாக நீர் கொந்தளிப்பையிழந்திருந்தது. கொட்டும் மழைநீரும் குறைந்திருந்தது. நீங்கள் செல்ல வேண்டிய தீவு அதோ தெரிகிறது பாருங்கள் என்று உதவி ஒரு இருளைக் காட்டியது. கமுகக்கனி படகின் முன் பகுதிக்குச் சென்று நெற்றிமீது கையை வைத்துப் பார்த்தார் அது ஒரு இருளாகவே தென்பட்டது. அவருக்கு மனதில் ஒரு விதக் கிளர்ச்சி எழத்தொடங்கிவிட்டது. திரும்பி உதவியைப்பார்த்து எப்போதாவது தீவின் உள்ளே சென்று வந்திருக்கிறாயா? உண்மையைச் சொல் என்று கேட்டார். அதற்கு உதவி நான் எத்தனை முறை உங்களிடம் கூறிவிட்டேன் தீவின் கரையைத் தாண்டி உள்ளே சென்றதில்லையென்று ஆனால் நீங்கள் நம்புகிறீர்கள் இல்லை என வேறு எங்கோ பார்த்துக்கொண்டு கூறியது. நீ கோவிப்பதில் அர்த்தமில்லை உதவி. அங்கு வசிப்பவர்களைப் பற்றி நான் ஓரளவிற்கு அறிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று எல்லோரும் நம்புகிறார்கள் ஆனால் எவருமே அவர்களைச் சென்று பார்த்ததும் இல்லை. தீவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதுமில்லை. யாரோ கூறியதை வைத்துக்கொண்டு  தாங்களாகவே தீவர்களைப் பற்றிய ஒரு விம்பத்தை மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் ஆனால் நான் சொல்கிறேன் இந்தத் தீவர்கள் வேறு மாதிரியானவர்களாகத் தான் கட்டாயம் இருப்பார்கள். ஒரு வேளை எல்லோரும் நினைப்பது போல் தீவர்கள் ஆபத்தானவர்களாக வாழ்ந்து வந்தாலும் அவர்களை எம்மைப் போன்ற சாதாரணமானவர்களாக என்னால் மாற்றமுடியும். ஓரளவிற்கு நீ இவர்களின் தீவிற்கு அருகில் சென்று வந்திருக்கிறாய் அப்படியிருக்கும் போது தீவர்கள் உன் கண்ணில் படாமலா இருந்திருப்பார்கள்? அல்லது உன்னை அவர்கள் பார்க்காமல் இருந்திருப்பார்களா? நீயும் மற்றவர்களைப் போன்று முட்டாள்தனமாகப் பேசக்கூடாது. தீவர்கள் பொல்லாதவர்கள் என்றால் உன்னைக் கொன்றிருப்பார்களே? இதிலிருந்து நீ ஒரு முடிவுக்கு வரமுடியாதா? கமுகக்கனி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். ஏதோ பேச வாயெடுத்த உதவி பிறகு மௌனமானதை கமுகக்கனி அவதானித்து விட்டு தயவு செய்து எதையும் மறைக்காதே என்னைப் பொறுத்தவரையில் தீவர்களைப்பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாதென்பதை நீ சொல்லும் பொய் என்றுதான் நான் நினைக்கிறேன் எனக் கூறினார். உதவி சினத்துடன் காணப்பட்டது. என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம். நீங்கள் ஆசைப்படுவது போல நானும் தீவிற்குள் வருகிறேன் எனக்கும் உங்களுடன் சேர்ந்துதான் மரணம் என்றால் விதியை யாரால் மாற்றமுடியும்? உதவியின் பேச்சு அதன் மனநிலையைத் தெளிவாக கமுகக்கனிக்கு உணர்த்தியது. மீண்டும் இரண்டுபேருக்குமிடையில் நீண்ட மௌனம் ஏற்பட்டுவிட்டது.

 கமுகக்கனி ஒரு பையிலிருந்த உலர்ந்த உணவுருண்டைகளை எடுத்து சாப்பிடத்தொடங்கினார். உதவியையும் சைகையால் அழைத்தார். சற்று நேரம் கழித்துவந்து பையை எடுத்துக்கொண்டு போனது உதவி. அதற்குப் பிறகுதான் கமுகக்கனிக்கு ஓரளவு ஆறுதலானது மனம். கமுகக்கனி ஒரு குவளை நீரை எடுத்து அதில் அரைவாசியை அருந்திவிட்டு நீரின் சுவை மாறிவிட்டதாகச் சொல்லி மிகுதியைக் கொப்பளித்துத் துப்பினார். துப்பும்போது தற்செயலாக உதவியைப் பார்த்தார். உதவி உடைகள் அனைத்தையும் கழட்டிப் படகில் வைத்துவிட்டுப் படகின் வெளிப்புற ஓரமாக நீரை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தது. கமுகக்கனி ஒன்றும் புரியாதவராக ஏன் உதவி இப்படிச் செய்கிறாய் எனக்கேட்டார்? உதவி இவருடைய பேச்சை அலட்சியப் படுத்திக்கொண்டே நீரிற்குள் முங்கி முங்கி எழும்பியது. கமுகக்கனி இரண்டு கைகளையும் படகின் ஓரமாக ஊன்றியபடி உதவி செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கும் உதவியைப் போலச் செய்வதற்கு ஆர்வமாக இருந்தது. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

படகு தீவை நெருங்கியது. து+ரத்திலிருந்து பார்த்தபோது இருளாகத் தெரிந்ததெல்லாம் இப்போது மிகத் தெளிவாகத் தெரிந்தது.அடர்ந்து உயர்ந்த மரக்கூட்டங்கள் ஆங்காங்கே வெளிகள் மணற் குவியல்கள், இவைகளுக்கு அப்பால் முகிலைத்தொடும் மலைகள் எனத் தீவு பச்சைப் பசேல் என்றிருந்தது. படகு தீவின் ஓரமாகச் சென்றுகொண்டிருந்தது. படகை எங்கே நிறுத்தலாம் என்பதை ஆராய்ந்துகொண்டே உதவி படகை ஓட்டிக்கொண்டிருந்தது. யாராவது மனிதர்கள் கண்ணில் தென்படுகிறார்களா என்பதைத் தேடினார் கமுகக்கனி. யாரும் கண்ணில் தென்படவில்லை. உதவியைத் தொடர்ந்து கமுகக்கனியும் படகிலிருந்து இறங்கி முழங்கால் அளவு நீரில் நடந்தார். சற்று நேரத்தில் கரையை அடைந்து விட்டார்கள்.

 கமுகக்கனியும் உதவியும் தீவின் உள்ளே நடந்து கொண்டேயிருந்தார்கள். மனித நடமாட்டங்கள் எவற்றையும் அவர்களால் காணமுடியவில்லை. அன்றைய நாள் அலுப்பும் சோர்வும் நிறைந்ததாக முடிந்தது. கமுகக்கனி உதவியிடம் ஒரு ஆலோசனை கூறினார். உதவி நாங்கள் இருவரும் இப்படி அலைவதைவிட ஓரிடத்தில் அமைதியாக இருப்போம். வேண்டுமானால் இரண்டு மூன்று நாட்கள் அப்படியே செய்யலாம். நிச்சயமாக அதற்குப் பலன் கிடைக்கும். தீவர்கள் கண்ணில் படாமல் இந்தச் சின்னத் தீவில் நடமாடமுடியாது. இந்த யோசனையை உதவி ஏற்றுக்கொண்டது. ஆனால் கமுகக்கனியின் இயலாமைதான் இந்த முடிவுக்குக் காரணம் என்பதை உதவி தன் பார்வையால் கமுகக்கனிக்கு உணர்த்தியது. அவருக்கு அது புரிந்தாலும் வலுக்கட்டாயமாக முகத்தில் கம்பீரத்தை வைத்துக்கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் பட்ட மரத்தில் முளைத்த பாசிபோல இயல்பற்றிருந்தது கம்பீரம். அன்று இரவு ஒரு பாதுகாப்பிற்காகவும் குளிரிலிருந்து விடுபடுவதற்காகவும் உதவி தீயை மூட்டி அதனருகே படுத்திருந்தது. ஆனால் கமுகக்கனி தீயின் அருகே செல்லாமல் சற்றுத்தூரத்திலிருந்தார். யாராவது தீவர்கள் ஒளியை நோக்கி வரக்கூடும் என்னும் ஆர்வமும் மனப்பயத்தின் ஒரு காரணமாகவும் அவர் இதைச் செய்தார். உதவி எந்தப் பதற்றமும் இல்லாமல் இருப்பது வியப்பாகவும் ஆத்திரமாகவும் இருந்தபோதும் அவர் வெளிக்காட்டவில்லை.

  அடுத்து வந்த இரண்டு நாட்களும் மிக முக்கியமானவை.இரண்டு பேரும் சில உயர்ந்த மர உச்சியில் ஏறி அங்கிருந்து பார்வையெட்டிய தூரம் வரையும் தேடினார்கள். ஒரு மலையின் அடியைச் சுற்றியும் அதன் உச்சிவரை ஏறியும் தேடினார்கள். ஒரு அழகிய நீரோட்டத்தின் தொடக்கத்திலிருந்து அதன் முடிவுவரை சென்று மீண்டார்கள். வரும் வழியில் உதவியோடு நீரோட்டத்தின் அழகையும் அதில் வாழும் விசித்திரமான மீன்களையும் பற்றித் தன்னை மறந்து பேசிக்கொண்டே வந்தார். பரந்த புல்வெளியில் கூட்டம் கூட்டமாக ஓடிச் செல்லும் மிருகங்களைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். காற்றில் மிதக்கும் மணற்கூடு பெருகிப் பெருகி மேலெழுந்து சுழியாகிப் பின் அலையானதைக் கண்ட கமுகக்கனி அதை நோக்கிக் கையைக் காட்டிக்கொண்டே ஓடினார். பெயரறியாத ஒரு மிருகம் மிக அருகில் வந்து கமுகக்கனியை மணந்தது. கமுகக்கனி மெல்லப் பின் வாங்கினார். உதவி அதன் அருகில் சென்று முதுகைத் தடவியது. மிருகம் அந்த இடத்திலேயே படுத்து விட்டது. வேறு இடத்திற்குப் போவதற்கு உதவி கமுகக்கனியை அழைத்தபோது. கமுகக்கனி திட்டவட்டமாக மறுத்தார். தானும் அந்த மிருகத்தின் அருகில் அமர்ந்து ஏதோ பேசத்தொடங்கினார். உதவி சினந்தது. சில சுடு சொற்களையும் பேசியது. உதவியில் ஏற்பட்ட மாறுதலைக் கமுகக்கனி புரிந்து கொண்டார். இப்படியே இன்னும் ஓரிரு நாட்கள் எல்லா இடமும் அலைந்து திரிந்தார்கள். ஆனால் தீவில் மனிதர்களைத் தேடுவதற்கு அலைந்தார்களா? தீவின் அழகையும் அதன் உயிர்ப்பையும் ரசிப்பதற்கு நாட்களைக் கழித்தார்களா என்பது கமுகக்கனிக்கு மட்டுமே புரிந்த உண்மையாக இருந்தது.

இறுதிநாளன்று கமுகக்கனி உதவியைப் பார்த்து இன்றுடன் நான் புறப்படப்போகிறேன். இனியும் இங்கு மனிதர்கள் தென்படுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை எனக்கூறினார்.  இவர் கூறும்போது முகத்தில் ஏமாற்ற உணர்வு தென்படுகிறதா என்பதை உதவி உற்றுப்பார்த்தது. ஆனால் உதவிக்கு அது சரியாகத் தெரியவில்லை காரணம் கமுகக்கனிக்கு அந்தத் தீவில் மனிதர்கள் இருக்கக்கூடாது என்னும் விருப்பமே மேலோங்கியிருந்தது. இறுதிக் கணத்தில் அதற்காக அவர் மன்றாடவும் தெடங்கிவிட்டார். கமுகக்கனியின் மன்றாட்டத்திற்கு இனி எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து சிரித்தவாறே உதவி மீண்டும் கமுகக்கனியைப் படகில் ஏற்றிக்கொண்டு நீர்வழிப்பின் வேகத்தைக்கூட்டியது. படகு நீரிலும் உதவி காற்றிலும் கமுகக்கனி தீவின் நினைவிலும் மிதந்தார்கள்.


என்.கே.அருள்- ஆண்களின் தீவு தலையங்கத்திற்கும் சிறுகதைக்குமுள்ள தொடர்பு பொருத்தமுடையதாக இல்லை. எலிச்சாபம் நாவல் எங்கு கிடைக்கும்?

மனோகரி- நான் நினைத்தேன் தீவு முழுவதும் ஆண்கள் நிறைந்திருப்பார்கள் என்று ஆனால் சுல்பிகாவின் முடிவு வித்தியாசமாக இருந்தது. பரவாயில்லை கதையில் வரும் பாத்திரம் ஒன்றிற்கு உதவி என்னும் பெயர் எனக்குப் பிடித்திருந்தது.

வீணா-வெரிகுட்

மேரிஜஸ்மின்-சுல்பிகா அண்மைக்காலமாக உங்கள் கதைகளையும் ஏனைய படைப்புகளையும் வாசித்து வருகிறேன். வித்தியாசமான உங்கள் எழுத்தின் போக்கு எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் ஆண்களின் தீவு சிறுகதையை நான் வாசித்து முடித்தவுடன் சில கேள்விகள் மனதில் தோன்றின. அவற்றுக்கான பதில்களை உங்களிடமே கேட்டுத் தெளிவைப் பெற விரும்புகிறேன். இது உண்மைச் சம்பவமா? கற்பனையா? இந்தச் சிறுகதையில் ஒரு விதப் பாசாங்கு காணப்படுகிறதே அதற்கு என்ன காரணம்?

பாலமுருகன்- கற்பனை என்பது எல்லைகளுக்குள் அகப்படாதது அது காற்றைப் போல முகிலைப் போல சுதந்திரமானது. ஆகவே சுதந்திரமான மனநிலையில் சுல்பிகா ஆண்களின் தீவு சிறுகதையை எழுதியுள்ளார் என நினைக்கிறேன். கதையை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகள் மிகுந்த உற்சாகமுடையதாகின்றன. பேசப்பட்ட விடயத்திலிருந்து புது விடயத்திற்கான நுளைவுத்தியை சுல்பிகா பயன் படுத்தியுள்ளார். கதையில் சொல்லப்பட்ட விடயம் ஒரு முழுமையைப் பெறவில்லை என்பது ஒரு குறையாக எனக்குப் பட்டது. இது என் கருத்து மட்டும் தான் இப்படித்தான் இருக்க வேண்டும் என நான் வலியுறுத்தவில்லை. “சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொல்லாமல் பொய்யென்றாலும் புதிதாகச் சொல்” எனும் வாசகத்திற்கு அமைவாக ஆண்களின் தீவு சிறு கதை இருந்தது.

திராவிடன்-எனக்கு இந்தக் கதை விளங்கவில்லை அத்துடன் இதற்கு சிறுகதை எனும் அங்கீகாரம் கொடுக்கவேண்டுமா? இந்தக் கதையை வாசிக்கும் போது சிறுகதைக்குரிய வரைவிலக்கணங்களை ஆசிரியர் தெரிந்திருப்பாரா என்பது கேள்விக்கிடமாகிறது. இன்னும் பல குளறுபடிகள் உள்ளே இருப்பதனையும் காணமுடிகின்றன. ஏன் இப்படிப்பட்ட குப்பைகளுக்கு இணையத்தளங்களும் ஒரு சில சஞ்சிகைகளும் பிரசுரத் தகுதி கொடுத்து அவற்றை வெளியிடுகின்றன என்பது எனக்குப் புலப்படவில்லை.

மோனிகா ராகவன்- நான் அனலை தீவில் வசித்து வருகிறேன். சுல்பிகா ஒரு வேளை எங்களுடைய தீவைப்பற்றிச் சொல்லப்போகிறாறோ என்றுதான் நினைத்தேன். ஏனெனில் இங்கும் ஆண்கள்தான் அதிகம். அத்துடன் இஞ்ச ஆம்பிளையல் தானுங்கோ எல்லா அதிகாரமும் செய்யீனம் உங்களுக்கு வர முடிந்தால் எங்களுரிற்கு வந்து இங்குள்ள நிலமையை அறிந்து அதை ஒரு நாவலாகக் கட்டாயம் எழுதவும். எனக்கும் எழுதவேண்டும் என்னும் ஆர்வம் உள்ளது ஆண்களின் போலிமுகங்களை வெளிக்கொணர்வதே எனது நோக்கம்.-நன்றி.

சிவலோஜன்- சுல்பிகா உங்கள் ஆண்களின் தீவு சிறுகதை படித்தேன் நீங்கள் குறிப்பிட்டது போல பலமும் பலவீனமும் கொண்டதாகவே சிறுகதை எனக்கு இருந்தது. இந்தக் கதையின் வசீகரமே முடிவுதான்.உங்கள் சிறுகதையை வாசித்த பின்னர் நான் ஆண்களின் தீவு எனும் அதே பெயரில் ஒரு சிறு கதை எழுதியுள்ளேன்.அதன் பின்னர்தான் எனக்கு மனநிலை திருப்தியானது. மற்றும் இன்னொரு விடயம் எந்தப் படைப்பையும் குப்பை என்று நாம் ஒதுக்கிவிட முடியுமா? ரசணை என்பது வாசகருக்கு வாசகர் மாறுபடலாம் அல்லவா?

13-10-2011
கை.சுல்பிகா
 ஒரு படைப்பு அதிகமானோரால் வாசிக்கப்படவேண்டும் எனும் முன்னாயத்தங்களோடு எழுதுவது தவறு.ஏனெனில் அப்படி நிகழாதபோது மனம் சோர்ந்து போக வாய்ப்புள்ளது. இந்த நிலை தொடர்ந்து படைப்பில் ஈடுபடுவதற்கு சோர்வையும் ஏற்படுத்தும். தவிர வாசகர்கள் படைப்பின் உள்ளிருந்து மீளமுடியாத ரசணையோட்டத்தில் எழுதுவதும் நீரோட்டம் போல சொற்கோவைகளை அடுக்கி வைப்பதும் தொடக்கம்,ஓட்டம்,முடிவு என மாறா நிலையில் இருப்பதும் போன்ற நிலைப்படைப்புகளை நான் எழுதுவதில்லை. அவை நேர்மையற்றவையாகவும் சலிப்பை ஏற்படுத்துவையுமாகவே நான் உணர்கிறேன். நான் எழுதிய ஆண்களின் தீவு சிறு கதைக்கு நேரிலும் இணையம் வழியாகவும் பல்வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன.  கருத்தாக்கிகளுக்கு என் நன்றி. கதையை எழுதியவர் என்ற முறையில் அதைப்பற்றி உரையாட என்னால் முடியாது. தவிர்த்து உரையாடினால் சிறுகதை தோல்வியடையும் என்றே நான் சொல்வேன். கதைக்கு வெளியே கதைவிடயம் பற்றி என்னால் உரையாட முடியுமென்றால் அது கதையின் தோல்விதான். இருப்பினும் ஆண்களின் தீவு சிறுகதை வாசகியாகச் சிலவற்றைப் பேசமுடியும்.

 ஆண்களின் தீவு சிறுகதை இன்னும் எழுதப்படவில்லை. அல்லது எழுதிமுடிக்கப் படவில்லை. சுல்பிகா அதற்கான உரையாடலைத் தொடங்கியுள்ளார். எங்கோ ஓர் இடத்தில் ஆண்களின் தீவு சிறுகதை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும். ஆனால் அதற்கு முடிவு இருக்கமுடியாது. ஆகவே சுல்பிகா ஆண்களின் தீவு பற்றிய உரையாடலில் தோற்றுப்போயுள்ளார். இன்னொரு வகையில் சொன்னால்  அவரால் அதன் எல்லையையோ ஏன் ஆரம்பத்தைக்கூட நெருங்கமுடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொள்ளமுடியாத தருணத்தில் அவர் நின்று விடுகிறார். எப்படி கிணற்று நீரின் பயன்பாடு அதன் புறத்தே உள்ளதோ அது போன்றே ஆண்களின் தீவு உரையாடலும் சிறுகதைக்குப் புறத்தே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீருக்குக் கிணறு ஒரு அடையாளப்புள்ளியின் வடிவம் போல நாம் சுல்பிகாவைப் பார்க்கமுடியும்.

 ஆண்களின் தீவு உரையாடல் பல்வேறு உரையாடல்களை உராய்ந்து உராய்ந்து செல்கிறது. உராய்தல் நிமிர்த்தமாக இனி நிகழவிருக்கும் பெரும் எழுத்து சாம்ராச்சியங்களில் ஆண்களின் தீவு உரையாடல் தன் வடிவம் மாற்றி உரையாடப் பெறலாம். நிச்சயமாக என்னால் ஒன்றைச் சொல்லமுடியும் ஆண்களின் தீவு உரையாடல் அதன் எல்லைக்குவெளியே நிகழமுடியாது.

அன்புடன்
கை.சுல்பிகா.

நன்றி - ஆகாயம்
...மேலும்

Nov 29, 2013

பெண்மையின் அறிவியல் - அரவிந்தன் நீலகண்டன்

நடராஜரின் நடனத்தையும் அணுவுக்குள் இருக்கும் நுண் துகள்களின் இயக்கத்தையும் இணையாக அனுபவித்து எழுதிய நூலின் மூலம் (Tao of Physics) மிகவும் பிரபலமானவர் ஃப்ரிட்ஜாப் கேப்ரா. ஏறக்குறைய அதற்காக மட்டுமே அவர் மீண்டும் மீண்டும் இந்தியச் சூழலில் மேற்கோள் காட்டப்படுகிறார். ஆனால் அந்தப் பரபரப்பில் நாம் தவற விட்டது, அவர் அதற்கு மேலாக முன்னெடுத்த பார்வையை (பின்னர் வந்த Turning Point என்னும் நூலில்). அப்பார்வை நம் அறிவியல் உலகில் இருக்கும் பெண்மையின்மையை விமர்சித்தது. ஆண்-மையப் பார்வை இருப்பதாகக் கூறியது.

இயற்கையைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்து அதன் ரகசியங்களைக் கறக்கும் தன்மையை இந்த ஆண்-மையப் பார்வை முன்வைப்பதாகவும் அதன் விளைவாகவே நம் அறிவியலும் தொழில்நுட்பமும் இயற்கையைக் கீழ்மைப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதனை நியூட்டோனிய அறிவியலின் பார்வை என அவர் சொல்கிறார். இயற்பியலில் 19 ஆம் நூற்றாண்டில் ஆதாரமாக இருந்த இப்பார்வை, நம் அனைத்துப் பார்வையிலும் இருப்பதாக அவர் கருதுகிறார். உளவியலில் Behaviourism மற்றும் ப்ராயிடிய உளவியலை, நியூட்டோனிய உளவியல் என்கிறார் கேப்ரா. உயிரியலில் போட்டியை, பரிணாம இயக்கத்தின் ஆதார சக்தியாக முன்வைப்பது அதனால்தான் என்கிறார். நம் உடலின் இயக்கத்தையே ஓர் இயந்திரத்தின் இயக்கமாகவே பார்க்கிறோம் என்கிறார். நம் விவசாயத் தொழில்நுட்பம், நம் மருத்துவத் தொழில்நுட்பம் இவை அனைத்துமே இந்த ஆண்-மைய, ஆதிக்கத்தன்மை கொண்ட, நியூட்டோனியப் பார்வைதான் என்கிறார் கேப்ரா.

அப்போது பெண்மையின் அறிவியல் இந்த அறிவியலிலிருந்து மாறுபட்டிருக்குமா?

கடந்த ஐம்பது ஆண்டுகளில் அறிவியலில் பார்வை மாற்றங்களைக் கொண்டுவந்த பெண் அறிவியலாளர்களைப் பார்க்கும்போது கேப்ரா சொல்வதில் பொருள் இருக்கும் என்றே தோன்றுகிறது. இன்று நாம் உலகைப் புரிந்துகொள்வதற்கு அத்தகைய மூன்று பெண் அறிவியலாளர்களின் பங்களிப்பை, பறவைப் பார்வையாகப் பார்க்கலாம்.
ஜேன் குடால்
1. ஜேன் குடால்:
நம்மையும் பிற விலங்கினங்களையும் பிரிக்கும் எல்லைக் கோடு தெள்ளத் தெளிவானது. பிற விலங்குகளால் கடக்க இயலாத ஓர் அதல பாதாளம் நம்மை அவற்றிடமிருந்து பிரிக்கிறது என்பது மேற்கத்திய உயிரியலிலும் மானுடவியலிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாக இருந்தது. 1960-களில் தான்ஸானியாவில் கோம்பே எனும் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்திலிருந்து குடால் செய்த ஆய்வுகள், மானுடத்தைச் சுற்றித் தனியாகப் போடப்பட்டிருந்த அந்த எல்லைக் கோட்டைப் பொருள் அற்றதாக்கியது. அன்றைய மானுடவியலின் அடிப்படையாக, கேள்வி கேட்கப்படாமல் ஏற்கப்பட்ட விஷயம்: “மனிதனைப் பிற விலங்குகளிலிருந்து தனிப்படுத்திக் காட்டும் விஷயம் அவன் கருவிகளைப் பயன்படுத்துபவன் என்பதே.”

சிம்பன்ஸிகள் குச்சிகளை எளிய கருவிகளாகப் பயன்படுத்துவது மட்டுமல்ல, கருவியாகப் பயன்படுத்தத்தக்க வகையில் அவற்றை மாற்றியும் அமைக்கின்றன. இந்த உண்மையைக் கண்டறிந்து உலகுக்குக் கூறியவர் ஜேன் குடால்தான். மானுடவியல் வட்டாரங்களில் இது அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது. குடாலை ஆய்வு மாணவியாக அனுப்பிய லூயிஸ் லீக்கே (Louis Leakey), ஒரு முக்கியமான மானுடவியலாளர். தொல்-மானுட மூதாதைகளின் எலும்புக்கூடுகள், வாழ்விடங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தவர். மானுடவியலின் ஆதாரக் கோட்பாடுகள் குடாலின் கண்டுபிடிப்புகளால் அசைக்கப்படுவதை அவர் உணர்ந்தார். சிம்பன்ஸிகள் கருவிகளைப் பயன்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடித்தது குறித்து குடாலுக்கு அவர் அனுப்பிய தந்தி இதைத் தெளிவாக விளக்குகிறது: “இனி நாம்  ‘கருவி’ என்பதற்கான வரையறையை மாற்றவேண்டும். இல்லையென்றால் ‘மனிதன்’ என்பதன் வரையறையை மாற்றவேண்டும். இரண்டும் முடியாதென்றால், சிம்பன்ஸிகளை மனிதர்கள் என ஏற்கவேண்டும்.’

குடாலுக்கு இதில் பிரச்னையே இல்லை. ஆனால் நிறுவன அறிவியலுக்குக் குடாலின் ஆராய்ச்சி முறையிலேயே பிரச்னை. சிம்பன்ஸிகளுக்குக் குடால் பெயர் சூட்டியிருந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை மூப்பர்களுக்கு இது ரசிக்கவில்லை:  “பெயர் வைப்பதெல்லாம் சிம்பன்ஸிகளுக்கு மனிதத்தன்மை அளித்துவிடும். எனவே அவற்றுக்கு எண்களைத்தான் நீ அளிக்கவேண்டும்” என்று அவர்கள் சொன்னார்கள். மேலும் குடாலுக்கு அடிப்படை பட்டப் படிப்பு கிடையாது என்பது வேறு அவரது ஆய்வுகளை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தடையாக இருந்தது. ஆனால் லீக்கே, குடாலின் ஆராய்ச்சிகள் தரமானவை என்பதுடன் அடிப்படைப் பார்வை மாற்றம் தரக்கூடியவை என்பதைப் புரிந்துகொண்டார். நேஷனல் ஜியாக்ரபிக் சொஸைட்டியும் குடாலுக்கு ஆதரவளித்தது. குடால் ஒவ்வொரு சிம்பன்ஸியையும் தனித்தனி ஆளுமையாகக் கண்டுகொண்டார். எனவே தனித்தனிப் பெயர் அளித்திருந்தார். குடால் சிம்பன்ஸிகளைக் கண்காணித்ததுபோலவே, சிம்பன்ஸிகளும் குடாலைக் கண்காணித்து வந்தன. டேவிட் கிரேபியர்ட் என குடால் பெயர் அளித்திருந்த சிம்பன்ஸி முதன்முறையாக குடாலின் கூடாரத்துக்கு வந்து தானே தொடர்பினை உருவாக்கிக்கொண்டான். தொடர்ந்து மெல்ல மெல்ல பரஸ்பர நம்பிக்கை வளர்ந்து வந்தது.

இன்றைக்கு சிம்பன்ஸிகள் குறித்த நமது அறிதல்கள் நம்முடைய இயற்கையை இன்னும் ஆழமாகவும் தெளிவாகவும் அறிந்துகொள்ள உதவியிருக்கிறது. சிம்பன்ஸிகளுக்குச் சைகை மொழி சொல்லிக்கொடுக்கும் முயற்சிகள் மனிதர்களுக்கு மொழி எப்படி ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்ள வழிவகுத்திருக்கிறது. நாம் விலங்கினங்களிலிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டவர்கள் அல்ல; யுகக்கணக்கில் நீளும் உயிரினங்களின் வரலாற்றில் மானுடம் ஓர் இழையே தவிர மையச் சித்திரம் அல்ல என்பதை ஜேன் குடால் நம் பொதுப்புத்திக்கும் நம் அறிவியலுக்கும் உணர்த்தியிருக்கிறார். இது பிற உயிரினங்கள்மேல் நமக்கு இருக்கும் அதிகாரம் என்கிற எண்ண ஓட்டத்திலிருந்து நம் பார்வையை மாற்றி, அதன் தார்மீகத்தை ஆழமும் விரிவும் கொண்டதாக மாற்றியிருக்கிறது.

2. பர்பாரா மெக்கிளிண்டாக்: இன்றைய அறிவியலின் வரலாற்றில் குறுக்கியல் பார்வையின் (reductionism)  வெற்றி என நிச்சயமாக நாம் சொல்ல முடிந்த துறை மரபணுவியல். குறிப்பாக, மூலக்கூறு அறிவியல். ஜீன்கள் க்ரோமோஸோமில் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன? எவ்வாறு இயங்குகின்றன?

பார்பரா மெக் கிளிண்டாக்
பொதுவான நம்முடைய மனச்சித்திரம், ஜீன்கள் என்பவை ஏதோ கோக்கப்பட்ட மணிகள்போல க்ரோமோஸோமில் இருக்கும் என்பதும், அவை ஒவ்வொன்றும், தான் ‘கோட்’ செய்யும் புரதத்தை ஆர்.என்.ஏக்கள் மூலம் அமினோ அமிலங்களைத் தருவித்து உருவாக்கிக்கொள்ளும் என்பதும்தான்.
பர்பாரா மெக்கிளிண்டாக் சில ஜீன்களாவது க்ரோமோசோமில் தாவும் தன்மையுடன் இயங்குகின்றன என்று கண்டுபிடித்தார். ஆனால் அப்போது அறிவியலில் நிறுவனப்படுத்தப்பட்டிருந்த கருத்து, ஜீன்கள் க்ரோமோஸோமில் நிலையாக ஓர் இடத்தில் இருந்தபடி இயங்குகின்றன என்பதுதான். நகரும் ஜீன்களையும் அவை ஜீன்களின் தன்மைகள் வெளிப்படும் விதத்தில் தாக்கம் செலுத்துவதையும் மெக்கிளிண்டாக் கண்டுபிடித்த ஆண்டு 1948. நிறுவன அறிவியலின் ஏற்கப்பட்ட கருத்தைக் கேள்வி செய்வதா? அதுவும் ஒரு பெண்? மெக்கிளிண்டாக்கின் ஆராய்ச்சி முடிவுகள் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டன. இப்புறக்கணிப்பு குறித்த மெக்கிளிண்டாக்கின் எதிர்வினை அபாரமானது:

“அவர்களுக்கு (எனது ஆய்வுத்தாள்)  புரியவில்லை, அதைத் தீவிரமாக அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை என்பது எனக்கு அதிசயமாகத்தான் இருந்தது.  ஆனால் அது எனக்குப் பெரிய பிரச்னையாகப் படவில்லை. நான் சரி என்பது எனக்குத் தெரியும். அகங்காரம் பலன்களை எதிர்பார்க்கும். அத்தகைய அகங்காரம் பல நேரங்களில் நம் வேலைகளுக்குக்  குறுக்கீடாகிவிடுகிறது. பணி செய்வதில் இருக்கும் ஆனந்தத்துக்காகக் கடமையாற்றவேண்டும். பலன்களை எதிர்பார்க்கக்கூடாது.”

பேச்சில் ஒரு கிழக்கத்திய வாடை அடிக்கிறதே என்று நினைத்தால் சரிதான். மெக்கிளிண்டாக் திபெத்திய பௌத்த தியான முறைகளைப் பயிற்சி செய்பவர். நல்லகாலம், உள்ளூர் எந்திரன்கள் யாரும்,  ‘கடமையைச் செய், பலனை எதிர்பார்’ என்று மெக்கிளிண்டாக்குக்கு அறிவுரை சொல்லவில்லை.

1970-களில் பாக்டீரியாக்களில், ட்ரான்ஸ்போஸான்ஸ் (transposons) எனும் இடம் மாறும் ஜீன் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1983-ல் மெக்கிளிண்டாக்குக்கு இந்தத் தாவும் ஜீன்களை (Jumping genes) கண்டுபிடித்ததற்காக (அதாவது 1948-ல் அவர் செய்த ஆராய்ச்சிக்காக) நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்றைக்கு நிறுவன அறிவியலாளர்கள் மெக்கிளிண்டாக் புறக்கணிக்கப்படவில்லை என்கிறார்கள். அவர் மதிக்கப்பட்டார் என்கிறார்கள். அவரது புறக்கணிப்பு அவரது அறிதல் முறையின் தனித்தன்மை எல்லாம் பெண்ணிய அதீதப் புனைவுகள் என்கிறார்கள். மற்றவர்கள் அதை மறுக்கிறார்கள். எப்படி நிறுவன அறிவியல் மெக்கிளிண்டாக்கின் ஆராய்ச்சி முடிவை ஏற்றுக்கொண்டது என்பதை மரபணு ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் ஷப்பாரியோ விளக்குகிறார்:
“முதலில் அவர் ஒரு பைத்தியம் (crazy) என்றார்கள்; பிறகு அவர் கண்டுபிடித்தது, அவர் ஆராய்ச்சி செய்த சோளத்தில் மட்டுமே காணப்படுவது என்றார்கள். பிறகு அது எல்லா உயிர்களிலும் காணப்படுவதுதான்; ஆனால் முக்கியமற்ற விஷயம் என்றார்கள். இறுதியாக அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். இறுதிவரை பற்றற்ற தன்மையுடன் முத்திரைகளின்றி இயற்கையுடன் ஒருமையை உணர்ந்த நிலையில் வாழ்ந்த மெக்கிளிண்டாக் தன்னை ஒரு ‘மிஸ்டிக்’ என்றோ அல்லது பெண்ணியச் சின்னம் என்றோ அடையாளப்படுத்துவதை விரும்பியதே இல்லை. ஆனால் அதுதான் நிகழ்ந்தது.”

ஆனால் மெக்கிளிண்டாக்கின் முக்கியத்துவம் குறுகியலுக்கும் முழுமைப் பார்வைக்கும் அப்பாலானது. பொதுவாக முழுமைத்துவம் (holism) பேசும் பலரும் அது அறிவு சாராத அறிதல் முறை என்றே கூறுவது வழக்கம். அது உள்ளுணர்வு மட்டுமே சார்ந்ததாகக் கூறி எல்லாவித நம்பிக்கைகளையும் இந்த முழுமைத்துவக் குப்பிக்குள் அடைத்து விற்கப் பார்ப்பார்கள். ஆனால் மெக்கிளிண்டாக் எப்படி முழுக்க முழுக்க அறிவு சார்ந்து ஒரு முழுமைப் பார்வையைப் பெற முடியும் என்பதைக் காட்டினார். மெக்கிளிண்டாக் 1992 இல் தனது 90-வது வயதில் காலமானார்

3. ரேச்சல் கார்ஸன்: இப்பெயர் உடனடியாக மனத்தில் கொண்டு வரும் இன்னொரு பெயர்  ‘மௌன வசந்தம்’ – Silent Spring. ஆனால் கார்ஸனின் முக்கியமான  நூல்கள் கடல் உயிர்களைக் குறித்தவை. அறிவியலை மக்களிடையே கொண்டுசென்றவை. அறிவியல் என்பது ஏதோ மூளை கொண்டு மட்டுமே சுவாசித்து வாழும் உணர்ச்சியே இல்லாத அமானுடர்கள் செய்யும் அழகுணர்ச்சி அற்ற துண்டு போடும் செயல் என்கிற எண்ணத்தை அறவே மாற்றியது. ஆழ்ந்த அழகுணர்ச்சியும் விரிந்து பரந்து அனைத்துயிர்களையும் அணைக்கும் இதயத்தையும் அறிவியல் அளிப்பதை ரேச்சல் கார்ஸன் தன் நூல்களில் வர்ணித்தார்.

ரேச்சல் கார்ஸன்
அவர் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிய விஷயம், மனிதன் பிற உயிர்களிலிருந்து உயர்ந்தவனோ பிரிந்திருப்பவனோ அல்ல. இவ்வாறு தன்னைத் தனிமைப்படுத்தி, பிரித்து, சர்வ சிருஷ்டிக்கும் அதிபனாக நியமிக்கப்பட்டதாகத் தன்னைத்தானே நினைக்கும் மானுட அகம்பாவமே அதன் சூழலியல் வீழ்ச்சிக்கான அடிப்படைக் காரணம்.
அவருடைய எழுத்துகள் மெல்ல ஊடகங்கள் மூலம் அமெரிக்கப் பொது மனத்தைச் சென்று சேர ஆரம்பித்தபோது அவை விவாதங்களை உருவாக்க ஆரம்பித்தன. அறிவியல் என்பது ஆராய்ச்சிசாலைகளின் கதவுகளுக்கும் கல்வியுலகச் சுவர்களுக்கும் உள்ளே மட்டுமே இருந்து, தொழில்நுட்பம் மூலம் வாழ்க்கைச் சுகத்தையும் வர்த்தக லாபத்தையும் அளித்துக் கொண்டிருக்கும்வரை சரி. ஆனால் அது வாழ்க்கைப் பார்வையையே மாற்ற முன்வந்தால் அதைப் பொறுத்துக்கொள்ள அதிகாரபீடங்களுக்கு ஆவதில்லை.
ரேச்சல் கார்ஸனின் “மௌன வசந்தம்”  வெளிவந்ததுமே கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கம் ஊடகத்துறையில் எந்த அளவு இருக்கிறதென்பது தெளிவாக ஆரம்பித்தது. அந்த நூலின் சுருங்கிய வடிவத்தை வெளியிட ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை  ரீடர்ஸ் டைஜஸ்ட் ரத்து செய்தது. டைம் பத்திரிகை அவரது எழுத்துகளை “ஹிஸ்டீரிக்கல்” என வர்ணித்தது. எக்கானமிஸ்ட் அதைப் ‘பிரசார நூல்’ என்றது. கெமிக்கல் அண்ட் எஞ்ஜினியரிங் நியூஸ், ரேச்சல் கார்ஸனுக்கு ஒரு டாக்டரேட்கூட இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, “எனவே அறிவியல் படிப்பில் தேர்ச்சி பெற்ற நம் அறிவியல் அறிஞர்கள் கூறுவதையே ஏற்றுக்கொண்டு இந்த நூலைப் புறக்கணிக்க வேண்டும்” என்று சொன்னது.

ரேச்சல் கார்ஸன் அப்படி என்னதான் அந்த நூலில் சொல்லிவிட்டார்? பூச்சிக்கொல்லி மருந்தான DDT  நமது சுற்றுச்சூழல்களில் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே வருகிறது. நம் உணவு வலைகளில் அது ஏறுகிறது. ஒவ்வொரு உணவடுக்கிலும் அதன் அடர்த்தி கூடிக்கொண்டே போகிறது. பறவைகளின் முட்டைகளை ஆராயும்போது முட்டைத் தோடுகள் மெலிதாகப் போவதற்குக் காரணமாக DDT இருப்பதாக கார்ஸன் சொல்கிறார். குஞ்சுப் பறவைகள் இதனால் இறந்துவிடுவதைக் காண்கிறார். விரைவில் வசந்தங்கள் பறவைகளின் பாடல்கள் இல்லாமல், பூச்சிகளின் பறப்பொலிகள் இல்லாமல் மௌனமாகிவிடலாம். மற்றொரு விஷயத்தையும் அவர் சொன்னார். எந்தப் பூச்சிகளுக்கு எதிராக DDT அடிக்கப்படுகிறதோ அந்தப் பூச்சிகள் சிறிய வாழ்க்கை சுழற்சிகளே உடையவை. எனவே வெகுவிரைவில் பூச்சிகள் DDT க்கு எதிர்ப்புத்தன்மையைக் கொண்டவையாகிவிடுகின்றன. ஆனால் மனிதர்களுக்குத்தான் அது தீயவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

அறிவியல் வட்டாரங்களில் ஆய்வுத்தாள்களின் பரிபாஷைகளில் ஒளிந்துகிடந்த விஷயங்கள் மக்களின் பொதுப்புத்தியில் ஏறலாயிற்று. ரேச்சல் கார்ஸன் சொன்ன விஷயம் ஏற்கெனவே சியாட்டில் (செவ்விந்திய) மக்கள் குழு மூப்பன் அமெரிக்க அதிபருக்கு சொன்ன விஷயம்தான்: உயிர் எனும் பாவு தறியில் மனிதன் ஓர் இழைதான். எனவே அவன் பிற உயிர்களுக்கு என்ன செய்கிறானோ அதுவே அவனுக்கும் சம்பவிக்கும்.
இன்று பூச்சிக்கொல்லிகள் குறித்தும் சுற்றுச்சூழலில் அவற்றின் பாதிப்பு குறித்தும் நாம் விவாதிக்கிறோம். மாற்றுகளைத் தேடுகிறோம். பூச்சிகளை ஒழிக்கக் கூடாது; இயற்கையில் நன்மை செய்யும் பூச்சிகள் உண்டு. பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தவே முடியும், ஒழிக்கக்கூடாது, முடியாது என்றெல்லாம் விவசாயப் பல்கலைக்கழகங்களே சொல்லிக்கொடுக்கின்றன என்றால் அந்தப் பார்வை மாற்றத்துக்கு வித்திட்டவர் ரேச்சல் கார்ஸன்தான்.

ஜேன் குடால், பர்பாரா மெக்கிளிண்டாக், ரேச்சல் கார்ஸன் – மூவருமே அறிவியல் உலகிலும் சமுதாயத்திலும் பார்வை மாற்றங்களை அளித்திருக்கிறார்கள். அந்தப் பார்வை மாற்றம் முழுமை சார்ந்த பார்வை மாற்றம். நாம் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையுடனான உறவுகளை ஆழப்படுத்தவும் ஆரோக்கியமானதாக்கவுமான பார்வை மாற்றம். இத்தகைய மாற்றங்களில் ஒரு அடிப்படை மாற்றுத்தன்மை இருப்பதைக் காண்கிறோம். திட்டவட்டமாகச் சொல்லமுடியாவிட்டாலும்கூட பெண்களின் பங்களிப்பு அறிவியலில் அதிகரிக்க அதிகரிக்க, இத்தகைய மாற்றங்கள் மேலும் ஏற்படும் என ஊகிக்கலாம்.

குறிப்பாக, வளரும் நாடுகளில் பெண்களின் அறிவியல் பங்களிப்பு முக்கியமான விஷயமாகும். மேற்கத்திய நாடுகளைப் பிரதியெடுக்காத வளர்ச்சிக்கு அது வழி கோலக்கூடும். இப்படிப்பட்ட பெண்களின் பங்களிப்பு இந்தியாவில் எப்படி இருக்கிறது?

இந்தியாவும் சரி, இதர வளரும் நாடுகளும் சரி. பெண்களின் அறிவியல் பங்களிப்பில் ஒரு ஆரோக்கியமான சித்திரத்தை அளிப்பதாகவும் அந்தச் சித்திரம் வளர்ந்த நாட்டுச் சூழல்களில் பெண்களின் பங்களிப்பைக் காட்டிலும் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் ஒரு சமூக ஆராய்ச்சியாளர் கூறுகிறார். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அர்ப்பிதா சுபாஷ், பல நேரங்களில் இந்தியாவின் பாரம்பரிய குடும்ப முறை, பெண் அறிவியலாளர்களின் செயலாக்கத்துக்கு நேர்மறைப் பங்களிப்பை அளிப்பதாகவும், பெண் அறிவியலாளர்களின் பணிச்சூழலின் மன அழுத்தங்களைக் குறைப்பதாக அமைவதாகவும் கூறுகிறார். எதுவானாலும் நம் பண்பாட்டின் ஆக்கபூர்வச் சூழல்களைப் பயன்படுத்தி அதிகமான எண்ணிக்கையில் பெண் அறிவியலாளர்களை உருவாக்குவது நிச்சயம் மானுடத்துக்குப் பயனளிக்கும் விஷயமாகவே அமையும் என்பதே உண்மை. மேலும் பெண்மை அளிக்கும் பார்வை மாற்றத்தை அறிவியலில் முன்னெடுக்க ஒருவர் பெண்ணாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோன்நமஹ. 

மேலதிக விவரங்களுக்கு:
 • ஃப்ரிட்ஜாப் கேப்ரா, The Turning Point, Flamingo 1983
 • Dale Peterson , Jane Goodall: The Woman Who Redefined Man, Houghton Mifflin Harcourt, 2008
 • ஜேன்குடால், In the Shadow of Man, Houghton Mifflin Harcourt, 2000
 • Sharon Bertsch McGrayne , Nobel Prize women in science: their lives, struggles, and momentous discoveries,  Joseph Henry Press, 1998
 • Evelyn Fox Keller, A Feeling for the Organism: The Life and Work of Barbara McClintock, Henry Holt, 1984 இந்நூலில் காட்டப்படும் மெக்கிளீண்டாக் குறித்த சித்திரம் நிறுவன அறிவியலாளர்களால் கடுமையாக மறுக்கப்படுகிறது.
 • Arlene Rodda Quaratiello,  Rachel Carson: a biography, Greenwood Publishing Group, 2004
 • ரேச்சல் கார்ஸன், Silent spring, Houghton Mifflin Harcourt (HMH), 1994
 • Etzkowitz and Kemelgor, ‘Gender Inequality in Science: A Universal Condition?’ Minerva, Vol.39 No.2
நன்றி - தமிழ்பேப்பர்
...மேலும்

Nov 28, 2013

ஊடகத்தில் பெண் அடையாளம் – கட்டமைப்புகளும் மாற்றுச் சாத்தியங்களும் – ஆர். சூடாமணியின் கதைகள் ஒரு பார்வை - மோனிகா


This story of the truth-loving King, who abdicates his throne, forsaken his queen and heir, toils as a meanest of menials – in fact, even agrees to execute his own wife with his own hand rather than speak an untruthful word has thrilled millions of hearts for generations past.

Come and see yourself now!

1913ம் ஆண்டு வெளிவந்த ராஜா ஹரிசந்திரா படத்தின் விளம்பரம் இவ்வாறு கூறுகிறது. இந்தியாவில் காமிரா என்ற ஒரு சாதனம் தோன்றிய புதிதில் எந்தவித மத மாச்சரியமுமன்றி உண்மைகளைக் கூற வல்லது என்று நிரூபிக்க வேண்டி படைப்புகளையும் மத ரீதியான மக்களிடம் பிரசித்தி பெற்ற எதாவது ஒரு கதையின் வாயிலாக சொல்ல வேண்டியிருந்தது. காலனீயம் தளைத்திருந்த அக்காலகட்டத்தில் தேசிய அடையாளImageத்தை உருவாக்கும் முக்கிய பிரதிநிதிகளாக சினிமாவின் கதையாடல்களும், பாத்திர அமைப்புகளும் செயல்பட்டு வந்தன. இதனை பேராசிரியர் பிரிஜட்சூல்ட்ஸ், colonial subject as national public என்கிறார். எப்படி பொதுமக்களும் ஏன்?, நடுத்தர மக்களும் கூட தங்களுடைய சமூக கட்டமைப்பினையும், கற்பிதங்களையும் வரலாற்று அனுபவங்களையும், உணர்வு, அறிவு மற்றும் அற ரீதியிலான பார்வைகளையும் தேசியத்திற்கான ஒரு வடிவமைப்பைக் கட்டமைப்பதன் வாயிலாகப் சினிமா என்னும் ஊடகத்தில் புனைந்தார்கள் என்பது சூல்ட்ஸின் கருத்து[i].

சரித்திரப் படங்களையும், மத ரீதியிலான கதையாடல்களையும் சினிமா என்ற ஊடகத்தில் வழங்குவதன்மூலம் அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க முடியும் என்பதே அக்காலத்தின் மற்றுமொரு கருத்தாக இருந்தது. பெண்கள் அக்காலத்தைய சமூகக் கட்டமைப்புகளுக்கு உட்பட்டவர்களாகவும் தனக்கென ஒரு ஆளுமையை வெளிப்படுத்தாதவர்களாகவுமே புனைவுகளுக்குமே உட்படுத்தப்பட்டார்கள். ஹாலிவுட்டில் பரவலான கருத்தாக்கமாக கருதப்பட்ட fem fatale (பெண் மோசமானவள்) என்னும் கருத்து இந்திய படங்களிலும் அடங்கா மனைவி, தாசிகளின் மோசவலை போன்ற வடிவங்களில் வெளிபடுத்தப்பட்டு வந்தது.

இத்தேசியக் கட்டுமானத்திற்கான கருத்துருவாக்கம் அக்கால ஓவியங்களிலும் நிகழ்ந்து வந்ததற்கு மற்றுமொரு உதாரணம் ரவிவர்மாவின் ஓவியங்கள். பார்ஸி நாடகங்கப் பெண்கள் அவரது மாடல்களாக அமைந்ததுடன் அதனுள் அடங்கிய ராமாயண மகாபாரதப் புனைவாக்கங்களுமே காட்சிப்படுத்தப்பட்டன. தெய்வத் திருவுருவங்களுக்கு தத்ரூபமான மனித முகம் கொடுத்தவர் எனவும் ரவிவர்மாவைக் கூறலாம்.  

அதன் பின் வந்த மதர் இந்தியா மற்றும் திவார் படங்களில் பெண்களின் மேல்  அரசின் அதிகாரத்தை எடுத்துரைப்பதாக இருந்தன. திராவிட சினிமா என்று அருதியிட்டுக் கூறக்கூடிய பராசக்தி தமிழ் சினிமாவில் பெண்களை தன்னிச்சையானவர்களாகவும் பெண்களுக்கு சமூகத்தினால் ஏற்படும் இன்னல்களை சித்தரிப்பதாகவும் இருந்தது. காலனீயத்திற்குப் பிறகு வரும் அறுபதுகளின் தமிழ் சினிமாவில் பெண்கள் படிப்பறிவுள்ளவர்களாகவும் சுயமரியாதை உள்ளவர்களாகவும் நாயகனுக்கு நிகரானவர்களாகவும் கட்டமைக்கப்பட்டனர். அந்த நாள், மிஸ்ஸியம்மா, பச்சை விளக்கு போன்ற படங்களிலும் பெண்கள் மிகவும் உயர்ந்தவர்களாகவும் படிப்பறிவும் நாகரிகமும் தேசம்பற்றும் உடையவர்களாகவும் காட்டப்பட்டனர்.

ஆங்கிலேயர்களை விட்டு விலகாவிட்டாலும் ஆங்கில மொழியின் மோகம் இந்தியாவை அவ்வளவு எளிதில் விட்டு விடவில்லை. கே.பாலசந்தரின் படங்கள், ஜெயகாந்தனின் பாரிசுக்கு போ நாவல் போன்றவை இதற்கு உதாரணம். அறுபதுகளின் தொடக்கத்தில் நவினத்திற்கும்(modernity) நவீனத்துவத்திற்கும்(modernism) இடைப்பட்டதொரு ஊடாட்டமே உன்னதமான பல இலக்கியங்களை தமிழுக்கு கொண்டு சேர்த்தன எனலாம்.

ஜெயகாந்தனின் சினிமாவுக்கு போன சித்தாளு, இலக்கணம் மாறிய கவிதை போன்ற சிறுகதைகளும் கங்கா எங்கே போகிறாள், ரிஷி மூலம் போன்ற கதைகளும் பாலின சிக்கல்களை கட்டவிழ்க்க எத்தனித்தன என்றால் மிகையாகாது. ஆனால், கங்கா எங்கே போகிறாள் மட்டுமே “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற பெயரில்   சினிமாவாக்கப்பட்டது. அதிலும் முறைமகளுக்கு உட்பட்டதொரு பெண்ணாகவும் ஒரு முறை தனக்கு நேர்ந்துவிட்டதொரு விபத்தினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதன் மூலம் தனது முறைமை வயப்பட்ட வாழ்தலுக்கு ஒரு கற்பிதம் அளித்துக் கொள்பவளாகவே கதாநாயகி காட்டப்படுகிறாள். நாவிலின் பிற் பகுதியிலுள்ள பல அதிரடி மாற்றங்கள் சினிமாவில் இடம் பெறுவதில்லை.

தி.ஜானகிராமனின் செம்பருத்தி, மோகமுள், அம்மா வந்தாள் போன்ற நாவல்களும் பெண்களின் பாலியல் தன்னிலையை முன்வைத்து புனைவுகளை கட்டமைத்த போதும் பொது ஜன சினிமாவின் வெளியில் ஞான ராஜசேகரனின் பாரதி படம் பேசப்பட்ட அளவுக்கு மோகமுள்ளுக்கான விவாததளம் அமையப் பெறவில்லை .

எனில், பெண்களைப் பற்றி பெண்களே பேசக் கூடிய புதினங்களாக வெளிவந்தவற்றில் லஷ்மி, ராஜம் கிருட்டிணன் போன்றரது நாவல்கள் ஆணாதிக்க கட்டமைப்புகளுக்கு உட்பட்ட பெண்களை அவ்வாறான வரையரைகளுடனேயே முன் வைப்பதாக இருந்தன.

அம்பையின், “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை“ பெண்களின் அடுக்களைத் தளையை கூறுகின்ற அதே சமயம் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற இரட்டைக் கதாநாயகர்களின் படங்கள் தமிழகத்தில் ஓகோவென்று ஓடிக்கொண்டிருந்தன. சிவாஜி-எம்.ஜி.ஆர், ரஜினி –கமல், அஜித்-விஜய் போன்று தமிழ் சினிமாவின் என்றாவது இரு கதாநாயகி பிம்பங்களிடையே போட்டி வந்ததுண்டா? திராவிட சினிமாவில் பெண்களின் நிலை குறித்து தமிழ் சினிமா பற்றியதொரு கட்டுரையில் (ed. Selvaraj velayutham) தனது காரசாரமான விமர்சனத்தை முன் வைக்கிறார் அம்பை.

1950களில் எழுதத் தொடங்கிய ஆர். சூடாமணி தனது எழுத்துக்களின் மூலம் ஒரு சமூக மாற்றத்தையே ஏற்படவிழைந்தார். வரையறுக்கப்பட்ட சூழலையும் மீறி, மனிதருக்கிடையேயான உறவுகளின், புரிதல்களின் பல்வேறு நிலைகள் குறித்து தனது ஆழமான கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக அதே நேரம் உபதேசத்தொனியிலில்லாமலும் சொல்லிச் சென்றார். சூடாமணியின் கதைகள் ஜே. கிருட்டினமூர்த்தியின் தத்துவங்களைப் போன்றவை. கதைகளின் முடிவை வாசிப்பவரின் கையிலேயே விட்டுச் செல்வதன்மூலம் அவர்களின் சிந்தனையைத் தூண்டச் செய்பவை அவை. அவரது கதைகளில், குழந்தைகள், இளவயது, நடுவயது பெண்கள், மூதாட்டிகள் என்று எல்லாவித பெண்களைப் பற்றி பேசும்போதும் பெண்களைவிட அவர்களது உரிமைகளையும் சூழ்நிலைகளையும் புரிந்து கொள்பவர்களாக அவர்களைச் சுற்றியுள்ள ஆண் சமூகமே பொறுப்புகளை வகிப்பதாக இருக்கிறது.

சூடாமணியின் “சோபனாவின் வாழ்வு”[ii] என்றொரு கதை வேலைக்குச் செல்லும் ஒரு திருமணமாகாத நடு வயதுப்பெண் சோபனா மற்றும் அவளது தந்தையைச் சுற்றி அமைந்தது. தனியே வீட்டிலிருக்கும் தந்தையிடம் அவரது சமையல்காரர் சோபனாவை ஒரு விடுதியில் முகம் தெரியாத ஆணுடன் கண்டதாகச் சொல்கிறார். நாள் முழுவதும் அதனை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகும் அவளது தந்தை மாலையில் பெண்ணின் வருகைக்குப் பிறகு ஒரு பெரும் மனம் மாற்றத்திற்கு ஆளாகிறார். வீட்டினுள் நுழைந்தவுடனேயே தன்னைப் பார்த்து “சாப்பிட்டாச்சா அப்பா?” என்று பரிவுடன் கேட்கும் பெண்ணின் குரலைக் கேட்ட மாத்திரத்தில் அவளிடம் தனக்குள்ள அக்கறையைக் குறித்து நினைக்க ஆரம்பிக்கிறார். அவளுக்கு தலை நிரைத்திருக்கிறதா? அவளுக்கு பிடித்த நிறம் என்ன? அவள் விரும்பும் உடை யாது? இவற்றைப் பற்றியெல்லாம் தான் அறியவோ அறிய முயற்சித்தோ இல்லை என்பதை உணர்ந்து மன வருத்தம் கொள்கிறார். இதுவே தனது மகள் மகனாக இருந்திருந்தால் தான் இப்படி சந்தேகப்பட்டோ பதட்டமடைந்தோ இருப்போமா என்று நினைத்து மனக் குழப்பத்திலிருந்து விடுபடுகிறார். 1978ல் தீபம் இதழில் வெளியான இக் கதை அதிகம் பேசப்படவில்லை.

1972ல் வெளியான ஆர். சூடாமணியின் “நான்காவது ஆசிரமம்” என்ற கதை ஒரு பெண்ணின் அறிவு ரீதியிலான பயணத்தை விளக்குவதாக இருக்கிறது. இக்கதையில் அப்பெண் தன்னைப் பற்றி பேசுவதற்கு பதிலாக அவளது மறைவுக்குப் பிறகு அவளது இரண்டாவது மற்றும் மூன்றாவது கணவர்கள் அவளைப் பற்றி பேசுவதாக அமைந்துள்ளது. கேட்பதற்கோ, படிப்பதற்கோ மிகவும் முரண்பாடாகத் தோன்றும் இக் கதையின் வடிவம். எனில் 70வதுகளிலேயே ஒரு பெண்ணின் வாழ்வை திருமணம், குடும்ப அமைப்பு போன்றவற்றால் மட்டுமே கட்டமைக்க மறுக்கிறது இக்கதை. தனது பதினெட்டாவது வயதில் காதல் வயப்பட்டு திருமணம் செய்யும் கணவனை இழக்கும் அப்பெண்ணுக்கு அந்நிலையில் காதலும் ஆண்பால் ஈர்ப்பும் மட்டுமே முதன்மை பெறுகிறது. அதன் பின் மறுமணம் புரியும் அப்பெண்ணுக்கு குழந்தைபேறும் குடும்ப வாழ்வில் ஈடுபாடும் ஏற்படுகிறது. குடும்ப வாழ்வில் ஈடுபட்டுவரும் ஒரு தருணத்தில் தனது அறிவுத் தேடலுக்கான ஒரு வழிகோலைத் தேட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதன் காரணமாக மூத்த அறிஞர் ஒருவரை மணக்கும் அவள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்நிலையிலிருந்தும் விடுபட எண்ணி தனித்திருக்க முயல்கிறாள். அது மறுக்கப்படவே மாடியிலிருந்து கீழே விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.

மாமியார் கொடுமையினால் பிரச்சினைக்கு உள்ளாகும் பெண்கள், கணவனது நடவடிக்கைகளை சந்தேகிக்கும் அவன்மீதுள்ள உரிமைக்காக சண்டையிட்டுக் கொள்ளும் பெண்களென ஆண்வழிச் சமூகத்தின் கருத்துருவாக்கங்களுக்குள் மட்டுமே இடம் பெறும் ஊடகக் காட்சிகள் சமுதாயத்தின் பிரபலிப்பாக பார்க்கப்படுகின்றன. பெண்கள் தங்களது பிரச்சினைகளைப் பேசுவது தடைகளிலிருந்து வெளிவருவது போன்றவை மேற்கத்திய தாக்கம், நவீனத்தின் ஊடாடல் என்றெல்லாம் கருதி புறம் தள்ளப்பட்டது. பெண்களின் மறுமணம், மாற்றுப் பாலியல் ஈர்ப்பு போன்றவை ஃபிரெஞ்சு நியோரியலிஸப் படங்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டு வருவது ஊடகத்தில் சகஜமக இருக்கும் நிலையில் ஜெயகாந்தன் (ரிஷிமூலம்), தி.ஜானகிராமன்(செம்பருத்தி) மற்றும் ஆர். சூடாமணியின் கதைகள் தமிழ் ஊடகங்களில் சிறிதும் முயற்சி செய்யபடவில்லை.

தமிழகத்தின் கலாச்சார வரலாறு என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு 90களிலிருந்தே தொடங்குகிறது. தற்கால திரைப்பட இயக்குனர்கள் பலரும் மணிரத்தினம் படங்களிலிருந்தே தமது வரலாற்றைத் தொடங்குகின்றனர். நிழல் நிஜமாகிறது, ருத்ரையாவின் அவள் அப்படித்தான், கன்னிப்பருவத்திலே, ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்களைத் தழுவிய படங்கள் திரும்பவும் சாத்தியமா என்பதே கேள்விகுரியதாக இருக்கிறது.

நான் அவனல்ல, திருட்டுப் பயலே போன்ற படங்களில் ஆண்களுடைய ஈகோ பெரிதுபட பெண்களின் இச்சைகள் கேவலப்படுத்தப்படுகின்றன. மறுபுறம் எம். ஜி. ஆர், சிவாஜி படத்தில் ஹீரோக்கள் பெண்களைக் காட்டி செய்த சைகைகள் இப்போது வில்லன்களுக்கு மட்டுமே சாத்தியம்.

கதாநாயக மையப் படங்களும், பெண்களை வெறும் போகப் பொருள்களாக சித்தரிக்கும் படங்களும் மட்டுமே தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மிடில் சினிமா என்று கூறப்படும் பருத்திவீரன், மைனா போன்ற படங்களிலும் கூட யதார்த்தம் என்ற பெயரில் பெண்கள் மீதான வன்முறை பூதாகரமாக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் மானபங்கப்பட்ட கதாநாயகி அந்த நிகழ்வின் அவளது உடைகள் கலைவதன்மூலமும் பொட்டு அழிந்திருப்பதன் மூலமும் புரிந்து கொள்ளலாம். பிறகு கற்பழிப்பை உணர்த்துவதற்கு சிங்கமோ புலியோ ஒரு மானின் மீது பாய்வதாகக் காட்டுவார்கள். ரஜினிகாந்த் படங்களுக்குப் பிறகு (உ.தா. நான் மகான் அல்ல) கதாநாயகனின் சகோதரி கற்பழிக்கப்படுவது காட்சிப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக இப்போது கதாநாயகியே அந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார். லாரா மல்வி தனது கட்டுரையில் கூறுவதுபோல், பெண்கள் அர்த்தத்தை உண்டு செய்பவர்களாக இல்லாமல் அர்த்தப்படுத்தப்படுபவர்களாக இருப்பது” மட்டுமே இருந்துவருவது வருந்தத்தக்கது.

பார்வையாளர்களை மூன்று வகைப்படுத்துகிறார் மல்வி[iii]. ஒன்று: சினிமாவிற்குள் கதாநாயகியைப் பார்க்கும் ஆண். இரண்டு: சினிமாவில் வெளியே நின்று கதாநாயகியைப் பார்க்கும் ஆண். மூன்று: இந்த இரண்டு ஆண்களும் சேர்ந்ததொரு தன்னிலை (suiture) யில் உள்ள ஒரு ஆண். தமிழ் சினிமா இந்த மூன்றாவது ஆணின் தன்னிலையிலிருந்தே தனது பிம்பங்களைக் கட்டமைக்கும் இந்நிலையில் பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களைக் கொண்டு படமாக்குவதென்பது மிகவும் முக்கியமாகிறது. பெண்களின் பாலியல் விடுதலையின் மீது வெளிச்சமடிக்கும் படமாக அது தொடங்காவிட்டாலும் பெண்களின் மொழியில் அவர்களது வாழ்வை கூறிவதாகத் தொடங்கினாலே போதுமானது.

பெண்களைப் பற்றிய புரிதல்களை வெளிக் கொணர சூடாமணியைப் போன்றவர்களின் கதைகள் உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

லயோலா கல்லூரியில் 10.01.2014 அன்று நடந்த கருத்தரங்கத்திற்காக எழுதியது.

[i] Brigitte Schultze, Humanists and Emotional Beginning of a Nationalist Indian Cinema in Bombay- With Kracauer in the Footsteps of Phalke, Avinus Verlag,2003, Berlin, page no.181.

[ii] நாகலிங்க மரம், ஆர்.சூடாமணியின் சிறுகதைத் தொகுப்பு, தொகுப்பாளர்: திலீப் குமார், அடையாளம் பதிப்பகம், 2011

[iii]  Swedberg, Deborah (1989). “What Do We See When We See Woman/Woman Sex in Pornographic Movies”.   NWSA Journal 1 (4): 602–16.

நன்றி - தூமை
...மேலும்

Nov 27, 2013

The female thing - யுவகிருஷ்ணா


சமீபத்தில் அடுத்தடுத்து காணக்கிடைத்த நான்கு திரைப்படங்களுக்கும் ஒரு யதேச்சையான ஒற்றுமை அமைந்திருந்தது. அவற்றில் ஒன்று தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் வெளியான திரைப்படம். ஒன்று மலையாளம். மற்ற இரண்டும் இந்தி. ஆக, ஒரே நேரத்தில் தேசம் முழுக்க பரவலான, உற்று நோக்கினால் மட்டுமே உணர்ந்துக்கொள்ளக் கூடிய ஒரு மாய அலை அடித்துக் கொண்டிருக்கிறது.

நான்கு படங்களுக்கான ஒற்றுமை என்னவென்றால், ஒவ்வொன்றுமே தனித்துவக் குணம் கொண்ட நான்கு பெண்களை பிரதான கதாபாத்திரமாக கொண்டவை. இப்பெண்கள் யாரும் ‘so called பெண்ணியம்’ பேசவில்லை. அதே நேரம் ஆண்களுக்கு சவால் கொடுக்கக்கூடிய செயல்வேகமும், மனவோட்டமும் கொண்டவர்கள். அவர்களது கதாபாத்திர அமைப்பு ‘ஆணுக்கு பெண் சமம்’ என்கிற பெண்ணிய அடிப்படை சிந்தனையை, பிரச்சாரப் பாணியாக இல்லாமல், கருத்தியல்ரீதியாக ஆண்களை வலுச்சண்டைக்கு இழுக்காமல் (ஒருவேளை நான்கு படங்களின் இயக்குனரும் ஆண் என்பதால் இருக்கலாம்) இயல்பான காட்சிகளால் வெளிப்படுத்துகிறது.

ஓம் சாந்தி ஓசண்ணா (மலையாளம்) நஸ்ரியா, ஆஹா கல்யாணம் (தமிழ் & தெலுங்கு) வாணிகபூர், ஹசீ தோ பாஸீ (இந்தி) பரினீத்தி சோப்ரா, ஹைவே (இந்தி) அலியாபாட் என்று நால்வருமே குறிப்பிட்டுப் பேசக்கூடிய - ஆண் மொக்கைகளின் - தேவதைகள். இப்படங்களில் இவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்கள், பொதுவான பார்வையில் ‘டிபிக்கல் ஃபார்வேர்ட் இண்டியன் விமன்’ என்கிற சமகால சமூக கருத்தாக்கத்தின் குறியீடுகள்.

நஸ்ரியாவின் பூஜா பாத்திரம் ஆறேழு ஆண்டுகால அவளது வாழ்க்கையை விவரிக்கிறது. ஓம் சாந்தி ஓசண்ணா திரைப்படமே நாயகியின் கதையாடலாக அவளது குரலில் பார்வையாளனுக்கு விவரிக்கப்படுகிறது. பள்ளி மாணவியான பூஜா, தங்கள் சமூக வழக்கம் ஒன்றை காண நேர்கிறது. அதிகளவில் வரதட்சணை கொடுத்து, கல்யாண மார்க்கெட்டில் கொழுத்த மாப்பிள்ளையை பிடிக்கும் அந்த வழக்கத்தில் அவளுக்கு உடன்பாடில்லை. சிறுவயதிலிருந்தே நன்கு படித்த பெற்றோரால் சுதந்திரம் கொடுத்து வளர்க்கப்படும் ஒரே பெண். ஆண் மாதிரி முரட்டுத்தனமாக உடையணிவதும், நடந்துக் கொள்வதும் அவளுக்கு பிடித்த விஷயங்கள். பள்ளிப் பருவத்திலேயே பைக் வாங்கி, பயங்கர ஸ்பீடாக ஓட்டுபவள். தன்னுடைய வாழ்க்கைத்துணையை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வருகிறாள். சா பூ த்ரீ போட்டு அவள் தேர்ந்தெடுப்பது ஒரு கம்யூனிஸ்ட்டை. துரத்தி, துரத்தி அவனை காதலித்தாலும் தன்னுடைய சுயமரியாதையை எங்கும் விட்டுக் கொடுக்காமல் எப்படி இறுதியில் வெற்றி காண்கிறாள் என்பதுதான் கதை. படம் முழுக்கவே ஆண்களை ஜாலியாக கலாய்க்கும் அவளுடைய கமெண்டுகளால் நிறைந்திருக்கிறது. ஆண்கள் எவ்வளவு அபத்தமானவர்கள் என்பதை அடிக்கடி அழுத்திச் சொல்கிறாள். படம் முடியும்போது அவள் சொல்வதுதான் ஹைலைட். “இந்த ஆம்பளைப் பசங்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம். தனக்கு பொண்ணு பொறந்தா, தன்னோட முதல் காதலியோட பேரைதான் வைப்பானுங்க”. அவள் இந்த வசனத்தை பார்வையாளர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய கணவன் தன் குழந்தையை பெயர் சொல்லி (முதல் காதலியின் பெயர்) தூக்கிக் கொஞ்சுகிறான். அவனை பூஜா கேவலமாகப் பார்ப்பதோடு படம் முடிகிறது.

வாணிகபூரின் ஸ்ருதி கேரக்டர் ஒரு லட்சியப்பெண்ணின் வாழ்க்கையை காமெடியாகவும், நெகிழ்ச்சியாகவும் சொல்ல முற்படுகிறது. கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே எதிர்காலம் என்னவென்பதை தீர்மானமாக திட்டம் தீட்டி வைத்திருக்கிறாள். அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்தையும் அவளே முன்பு திட்டமிட்ட ‘ப்ளூப்ரிண்ட்’ வடிவாகவே நடைபெறவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவள். படித்து முடித்ததுமே பிசினஸ். அந்த பிசினஸுக்கான பயிற்சியை படிக்கும் காலத்திலேயே எடுத்துக் கொண்டவள். ஐந்து ஆண்டுகள் தொழில் செய்துவிட்டு, வெற்றிகரமான தொழில்முனைவோராக ஆனபின்னர், அப்பா அம்மா சுட்டிக் காட்டும் ஆட்டுக்கு மாலையை போட்டு வெட்டுவது என்பதுதான் அவள் திட்டம். எதிர்பாராமல் இந்த திட்டத்துக்குள் குறுக்கீடாக ஒருவன் வருகிறான். அவனை காமெடியனாக பார்ப்பதா, காதலனாக பார்ப்பதா என்று அவளுக்கு குழப்பம். தன்னுடைய லட்சியத்துக்கு இவனால் பாதிப்பில்லை என்று அடையாளம் காணும்போது, அவனோடேயே வாழ்க்கையை தொடரலாம் என்கிற முடிவுக்கு வருகிறாள். இவளது ‘ஃபைனான்ஸோடு, ரொமான்ஸ் மிக்ஸ் ஆகக்கூடாது’ என்கிற தத்துவத்தால் குழம்பிப்போன அவனோ எதிர்மறையாக ரியாக்ட் செய்கிறான். இவளால் அவனை விலக்கவும் முடியவில்லை. சேர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. இறுதியில் தன்னுடைய மனதை அவனிடம் திறந்துக் காட்டி அவனை காமெடி காதலனாக ஏற்றுக் கொள்கிறாள். தன்னுடைய ஆரம்பகால எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக தொடரவும் செய்கிறாள்.

பரினீத்தி சோப்ராவின் மீட்டா ஒரு ரோலர் கோஸ்டர் கேரக்டர். அவள் ஒரு பார்ன் இண்டெலிஜெண்ட். ஐஐடி கெமிக்கல் என்ஜினியர். புதுத்தொழில் தொடங்க அப்பாவிடம் லம்பாக முதலீடு கேட்கிறாள். அவர் தயங்கவே, பெரும் பணத்தோடு வீட்டை விட்டு சீனாவுக்கு ஓடிவிடுகிறாள். இதன் காரணமாக அவளுடைய அப்பாவுக்கு மாரடைப்பு வருகிறது. ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் ஊருக்கு வருகிறாள். சீனாவில் சில முதலீட்டாளர்களிடம் இவளது அப்பாவை மாதிரி ‘போர்ஜரி’ கையெழுத்து இட்டு பல கோடிகளுக்கு கடனாளி ஆகியிருக்கிறாள். குறிப்பிட்ட தினங்களுக்குள் அந்த பணத்தை திரும்பத் தராவிட்டால் பெரும் பிரச்சினைக்கு இவளுடைய அப்பா ஆளாகுவார். இங்கே மீட்டாவின் அக்காவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. மீட்டாவின் மீள்வருகையால் தன்னுடைய திருமணம் பாதிக்கப்படலாம் என்று அவளுடைய அக்கா, தன்னை கட்டிக்கொள்ளப் போகும் மாப்பிள்ளையிடம் சொல்லி இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமல் பார்த்துக்கொள்ளச் சொல்கிறாள். மீட்டாவும், அவளுடைய வருங்கால அக்காள் கணவருக்குமான இந்த ஏழு நாட்கள்தான் கதை. சுட்டிப்பெண்ணாக, கிறுக்காக, போதைக்கு அடிமையானவளாக அவனுக்கு அறிமுகமாகும் மீட்டா, எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதை ஒரு தருணத்தில் அவன் உணர்கிறான். அவளுடைய பிரச்சினைகளை தீர்க்க சம்மதிக்கிறான். அவனும் மீட்டாவை ஒத்த மனோபாவம் கொண்டவன்தான் என்பதால், இந்த ஏழு நாட்களில் இருவருக்குள்ளும் அவர்கள் அறியாமலேயே ‘காதல்’ பற்றிக் கொள்கிறது. குடும்பத்தின் நன்மைக்காக காதலை துறக்க மீட்டா முடிவெடுக்கிறாள். மீட்டாவை இழக்க அவனுக்கு சம்மதமில்லை. இந்த முரணை பாசிட்டிவ்வான முறையில் களையும் உணர்ச்சிகரமான க்ளைமேக்ஸோடு படம் முடிகிறது.

அலியாபட்டின் வீராத்ரிபாதி கொஞ்சம் டார்க்கான லைஃப் பேக்கிரவுண்ட் கொண்ட பெண் பாத்திரம். பெரும் செல்வந்தரின் மகளான இவர், மறுநாள் திருமணம் எனும் நிலையில் தன்னுடைய வருங்கால கணவனோடு ஜாலி ரைட் போகும்போது யதேச்சையாக ஒரு கும்பலால் தேவையே இல்லாமல் கடத்தப்படுகிறாள். இவளது செல்வாக்கான குடும்பப் பின்னணியை பிற்பாடு உணர்ந்த கும்பல் அச்சப்படுகிறது. காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க இவளது கடத்தலுக்கு காரணமானவன் வேறு வேறு இடங்களுக்கு இவளை அழைத்துச் செல்கிறான். சில நாட்களிலேயே கடத்தப்பட்டவளுக்கும், கடத்தியவனுக்கும் பரஸ்பர உள்ளப் பரிமாற்றம் நடக்கிறது. அவளுடைய சிறுவயது அனுபவங்கள், ஒரு குழந்தைக்குரிய அடிப்படை சுதந்திரத்தை அளிக்கவில்லை என்பதை அவன் உணர்கிறான். சொந்தக்காரராலேயே பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டவள் அவள். அதைகூட வெளியே சொல்லமுடியாத கட்டாயம் அவளது குடும்ப கவுரவத்துக்கு இருக்கிறது. பெரும் பணக்காரக் குடும்பத்தில் கூண்டுக்கிளியாக அடைந்துக் கிடந்தவள், இந்த கடத்தல்காரனுடனான இலக்கற்ற பயணத்தில் தன்னுடைய சுதந்திர உணர்வை உணர்கிறாள். ஒரு கட்டத்தில் இவளை திரும்பிப் போகச் சொல்கிறான் கடத்தல்காரன். வீட்டுக்கு திரும்பிச் செல்வது தன்னுடைய சுதந்திரத்தை பறிக்குமென்று இவள் மறுக்கிறாள். ‘ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்’ எழவுதான். ஒரு மலை வாசஸ்தலத்தில் இவர்கள் தங்கியிருக்கும்போது, பின்தொடர்ந்து வரும் போலிஸாரால் அவன் என்கவுண்டர் செய்யப்படுகிறான். பழைய வாழ்க்கையை தொடர விருப்பமில்லை என்று குடும்பத்தாரிடம் மறுத்துவிட்டு, அதே மலைவாசஸ்தலத்தில் அவனுடைய நினைவுகளோடு வாழ்க்கையை தொடங்குகிறாள் வீரா.

நான்கு படங்களுமே இந்திய மேல்தட்டு வர்க்கத்துப் பெண்களின் பிரச்சினைகளை, எதிர்கொள்ளும் நெருக்கடிகளை பேசுபவை. இவை வர்க்கத்தைவிட அவர்களது பாலினத்தை முதன்மைப்படுத்தியிருக்கின்றன என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுக்க பரவலாக ஒரே மாதிரியாக, ஒரே காலக்கட்டத்தில் வெவ்வேறு இயக்குனர்கள் சிந்தித்திருப்பது யதேச்சையான ஒற்றுமையாகதான் இருக்கக்கூடும். அல்லது மல்ட்டிப்ளக்ஸ் வசூல் (வாங்கும் சக்தி பெண்களுக்கு அதிகரித்திருக்கும் நிலையின் பொருட்டு) அவர்களை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறதா என்றும் நாம் ஆராய வேண்டும்.

தமிழில் இம்மாதிரி பெண்களின் உணர்வுகளை பேசும் படங்களுக்கு பெரிய பாரம்பரியம் உண்டு. ஸ்ரீதரில் தொடங்கி பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் என்று ஏராளமான இயக்குனர்கள் ஏற்கனவே இங்கு வலுவாக பேசியிருக்கிறார்கள். அந்த கண்ணி எங்கே அறுந்தது என்று நாம் தேடவேண்டும். கதாநாயகி என்பவர் வெறுமனே கதாநாயகனால் காதலிக்கப்படவும், ஃபாரின் லொக்கேஷனில் குத்தாட்டம் போடவும், மேக்கப் பூசிக்கொண்ட பார்பி பொம்மையாகவும் மட்டுமே பெரும்பாலான திரைப்படங்களில் சித்தரிக்கப்படும் போக்கினை இளைய தலைமுறை இயக்குனர்கள் மாற்றுகின்ற போக்கு உருவாக வேண்டும். இந்நான்கு படங்களுமே வணிகரீதியாக வெற்றி கண்டவைதான். குறைந்தபட்சம் வணிகத்தேவைக்காவது நாம் இந்த மாற்றத்தை உருவாக்கியாக வேண்டும்.

...மேலும்

Nov 26, 2013

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கை பணிப்பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள். - பிருந்தா தாஸ்

இலங்கைப் பெண்களையும் அவர்களின் வளர்ச்சியையும் எடுத்து நோக்கும் போது அவை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன என்று கருதவேண்டும். இருப்பினும் தனது குடும்ப வளர்ச்சியின் நிமித்தம் பெண்கள் கட்டாய தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இன்னும் கல்வியில் பின்தங்கிய நிலையில் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. பெருந்தோட்டங்களிலும் பலர் சொந்தக் கைத்தொழில்களிலும் ஈடுபட்டு வருவதை நாம் அன்றாடம் காணக்கூடியதாகவேயுள்ளது. இருப்பினும் அவர்களின் வருமான பற்றாக்குறையினால் தமது குடும்பம், பிள்ளைகள், அனைத்து ஆசாபாசங்களையும் விட்டு பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்கின்றனர். நான் இங்கு குறிப்பிடுவது சிறுபான்மை இன பெண்களை மட்டுமே.

அவ்வாறு செல்லும் பணிப்பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. ஆனால், அதற்கான முடிவுகள் தான் என்ன என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் அநீதிகள் எல்லாமே தெரிந்தும் தமது இலாபங்களைக் கருத்திற் கொண்டு மௌனம் சாதிக்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.

இலங்கையைப் பொறுத்தவரையில், பணிப்பெண்கள் ஒரு ஏற்றுமதிப் பண்டமாகவே கருதப்படுகின்றனர். அதாவது, பெருமளவில் அந்நிய செலாவணியை பெற்றுத் தருகின்றனர். இந்த வருமானத்தின் படி இலங்கை அரசாங்கம் ஒரு வருடத்திற்கு 425 மில்லியன் ரூபாய்களை (3.8 மில்லியன் டொலர்கள்) அந்நியச் செலாவணியாக பெறுகின்றனர். எமது நாட்டில்  இன்னும் பெண்களுக்கான சிறப்புரிமை வழங்கப்படவில்லை. பிறப்பிலேயே அடிமையாகிய பெண்மை எப்படி பெண்ணியத்தை பேசுவாள். இதனாலேயோ என்னவோ பெண்மைக்கு இன்னும் தைரியம் பிறக்கவில்லை போலும்!
இதனடிப்படையில் அண்மையில் எமது நாட்டின் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை பட்டியலிடுமளவிற்கு கொடுமைகள் நடந்திருக்கின்றன.

 1.  சவூதியைச் சேர்ந்த ஒரு அராபியர். 13 ஆண்டுகளாக இலங்கைப் பெண்ணை அடைத்து வைத்து ஊதியமும் வழங்காது கொடுமை செய்திருக்கிறார்.
 2.  நம் நாட்டு பெண்ணை உடல் முழுதும் 24 ஆணிகளை அடித்து சித்திரவதை செய்திருக்கின்றனர் சவூதியைச் சேர்ந்த கணவனும், மனைவியும் இந்த குற்றச் செயலைச் செய்துள்ளனர். 
 3. இன்னொரு சவூதி தம்பதியினர். பணிப் பெண்ணின் முகமெல்லாம் கத்தரிக்கோலால் அங்காங்கே வெட்டி உடலெங்கும் சூடு போட்டிருக்கின்றனர்.  
 4. பணிப்பெண்ணை துன்புறுத்தி கொலை செய்ததுடன், உடலை வீதியில் வீசி எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறார். இதுவும் சவூதி அரேபியாவில் தான் நடந்துள்ளது.
 5. குழந்தையைக் கொன்று விட்டதாக பணிப்பெண் மீது குற்றம் சுமத்தி பொலிஸாருக்கு தகவல் கொடுத்த எஜமானி, இறுதியில் பணிப்பெண்ணுக்கு மரணத்தண்டனை வழங்கிய சம்பவம் ஒன்று இலங்கை நாட்டையே அழ வைத்தது.
 6. சவூதி அரேபியாவில் இலங்கை பெண்ணின் உடல் முழுவதும் ஆணிகளை ஏற்றி இரத்தம் எடுக்கப்பட்டு மிகுந்த கொடுமைகளுக்குப் பின் அவர் நாடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு வீட்டுப் பணிப்பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகள் மனிதத் தன்மையற்ற கொடூரமான செயலாகும். இது ஊடகங்களுக்கு கிடைத்துள்ள செய்திகளேயாகும். இது போன்ற பல வன்கொடுமைகள் நடக்கின்றன என்பதும் தெரியவருகிறது. குறிப்பாக, சவூதி, குவைத், கட்டார், ஓமான் போன்ற நாடுகளில் வேலைக்குச் செல்லும் பணிப்பெண்களில் கிட்டத்தட்ட 80 சதவீத பெண்கள் இவ்வாறான கொடுமைகளை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் தினமும் குறைந்தது 18 மணி நேர வேலை மற்றும் கருணை காட்டாத எஜமானிகள்.

இதில் சில பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்வளவு கொடுமைகளையும் சுமந்து தாங்கி தமது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் அங்கு வேலை செய்து வருகின்றார்கள்.
பணிப்பெண்கள் தமது உரிமைகளைப் பற்றிப் பேசினால்; பெண்களின் கடவுச் சீட்டு, அடையாள அட்டைகள் எல்லாம் எஜமானிகள் பறித்து வைத்துக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இது குறித்து பொலிஸாருக்கு தெரிவித்தால் அவர்களின் மேல் வீண்பழி சுமத்தி தண்டனை வழங்குவார்கள்.
தைரியமாய் ஒரு பணிப்பெண் பொலிஸ_க்குச் சென்று தன்னை பாலியலுக்குட்படுத்தியதாக புகார் கொடுக்குமிடத்து குறித்த பணிப் பெண்ணை ஒரு விபசாரியைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு வந்து விடுவார்கள் இந்த எஜமானிகள்.

இது போன்ற சம்பவங்களினால் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்;பெண்கள் மாடியிலிருந்து குதித்து தற்கொலை, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகவேயுள்ளன. 
இவ்வாறு இலங்கைப் பணிப்பெண்களை எஜமானிகள் திட்டமிட்டு, மாட்டிக் கொடுத்து வஞ்சிக்கின்றனர.; மற்றும் பணிப்பெண்களைச் சிறை வைக்கின்றனர், நியாயமற்ற தண்டனைக்கு உள்ளாக்குகின்றனர் என்றே கூறவேண்டும். இதனால் முறையற்ற கர்ப்பம், உடல், உள ரீதியான துன்பங்களை அனுபவிக்கின்றனர். இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கி கொடுமையை அனுபவிப்போருக்கு சவ+தி, டுபாய் போன்ற நாடுகளிலுள்ள பொலிஸார் முறையான உதவிகளை செய்வதில்லை. அப்படிச் செய்த துன்புறுத்தல்களுக்கு முறையான தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறான செயல்களைக் குறைக்கலாம் என்பது எனது கருத்து.
மத்திய கிழக்கு நாடுகளில் பிழைக்க செல்லும் ஆசிய மக்களை அடிமைகளைப் போல நடத்தி தங்களது மேன்மைத் தனத்தை காட்டிக்கொண்டுள்ளார்கள் இவர்கள். மனித உணர்வுகளையும் அவர்களின் கஷ்ட நிலைகளையும் புரிந்து கொள்ளாது அப்பாவி பணிப்பெண்களை துன்புறுத்தி அவர்களின் உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு அநியாயங்களையும் செய்து விட்டு நல்லதையும் செய்கிறார்கள். அதற்கு பரிகாரம் தேடுவதற்காகவா? அல்லது இன்னும் கொடுமைகளை செய்யவா என்று தெரியவில்லை. இவ்வாறான குற்றச் செயல்களை நபிகள் ஆதரிக்கவில்லை. இஸ்லாமிய மதத்தின் தலைமைப் பீடத்தில் இருக்கும் நாட்டிலும் மற்றும் இஸ்லாமிய நாடுகள் என தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் நாடுகளும் தான் முக்குற்றங்களை செய்து கொண்டிருக்கின்றன.

பணிப்பெண் மீதான வன்முறைகள் அதிகரிக்கும் போது அதன் கொடுமைகள் தாங்க முடியாமல் போகும்போதும் தான் வேலை செய்யும் பெண்ணே எஜமானிகளை கொலை செய்வதும் அவர்களை பழிவாங்குவதும் இப்போது கணிசமாக நடந்து வருகிறது. அரபு நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்கப் போன ஒரு பெண் ஒரு அரபியை கொலை செய்கிறாள் என்றால் அவளுக்கு எவ்வளவு கொடுமை இழைக்கப்பட்டிருக்கும் என கருத்திற்கொள்ள வேண்டும்.
இவர்களுக்காக எம் அரசாங்கம் என்ன செய்தது. அவர்களை பற்றி கண்டு கொள்வதுமில்லை. அண்மையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு அரசாங்கம் பணவுதவி வழங்கியுள்ளது. அவர்களின் தொடர் போராட்டத்தால் அது வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் பெண்களுக்கான சங்கங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களோ வெளிநாடுகளில் இருந்து பணவுதவிகளைப் பெற்று குறித்த பெண்கள் மட்டும் சொகுசாக வாழ்க்கை நடத்துகின்றனர். இது போன்ற குற்ற செயல்களை பெண் சங்கத்தினர்கள் தட்டி கேட்கும் அதிகாரத்தினைப் பெற வேண்டும். பெண் சங்கங்கள் ஒன்றும் பெண்ணடிமைக்கு வழிவகுக்க கூடாது. உங்கள் சங்கத்தில் சிறுபான்மைப் பெண்களையும் சேர்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கும் உணர்வுகள் உள்ளன என்பதை உணர்ந்து செயற்படுங்கள். பல கைகள் தட்டினால் தான் சத்தம் வரும் என்ற வாக்குக்கு இணங்க, பெண்கள் ஒன்று கூடி இவ்வாறான செயல் குறித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போது எமது நாட்டுப் பெண்களை காத்துக் கொள்ளலாம்.
இன்று இலங்கையில் மட்டும் அல்ல, உலகளாவிய ரீதியிலும் பெண்கள் பல்வேறு வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளிவுலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் என்பன முன்வைக்கப்படுகின்றன.
எனவே நவம்பர் 25 ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாகும். இது ஐக்கிய நாடுகள் அவையில் 54 ஃ 134, இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்பிரேரணையில் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வுகளையும் அவை தடுக்கப்பட வேண்டிய முறைகளையும் பற்றிய அறிவுறுத்தப்படுகிறது.

எனவே எமது நாட்டுப் பெண்கள் அன்பில் முதன்மையானவர்கள். அவர்களை காக்கும் கடமை பெண்கள் சங்கத்துக்கு மட்டும் இல்லை. எமது அரசாங்கத்துக்கும் உள்ளது என்பதை புரிந்து கொள்வோம். பெண்களை பற்றி பேசும் பெண்ணியவாதிகளுக்கும் இது ஒரு சவாலாக இருக்கட்டும்.

(பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகிய நவம்பர் 25 ற்காக இந்த தகவலுடன், கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.)


...மேலும்

Nov 25, 2013

ஜெயபாலன் கைது அனைவருக்குமான செய்தி... - என்.சரவணன்


வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞரும் நண்பருமான ஜெயபாலனின் கைது பற்றி இந்த மூன்று நாட்களாக பல செய்திகளும், கருத்துக்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. தமிழ், ஆங்கில, சிங்கள, மற்றும் நோர்வேஜிய மொழிகளிலும் செய்திகளும், ஏனைய சமூக வலைத்தளங்களிலும் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.ஆனால் இதன் மூலம் சகலருக்குமான செய்தி என்ன என்பது குறித்து அதே அளவு முக்கியத்துவத்துடன் உரையாடப்படவில்லை என்பதே நாம் அனைவரும் கரிசனை கொள்ளவேண்டிய விடயம். நோர்வேஜிய நாளிதழான VG பத்திரிகைக்கு 23 இரவு முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சுல்ஹைம் அளித்த பேட்டியில்.

“...15 வருடங்களாக ஜெயபாலனை நான் அறிவேன். சமரசம், சம உரிமை குறித்தே அக்கறைப்படுபவர். சிக்கலுக்குரிய கருத்துக்களை கூறியிருக்க வாய்ப்பில்லை... செய்தியை அறிந்தவுடன் நேரடியாக இலங்கைக்கான நோர்வேஜிய தூதரகத்தை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களை அறிந்தேன்.... ...ஆனால் அரசோடு முரண்பட்டுக்கொள்பவர்களுக்கான ஒரு குறியீட்டு செய்தியே இது...”

எரிக் சுல்ஹைம் வெளியிட்ட இந்த கருத்து கவனிக்கப்படவேண்டியது மட்டுமல்ல நம் எல்லோருமே கரிசனையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டியதும் கூட.

ஜெயபாலன் கவிஞர் மட்டுமல்ல. தனது இளமைக்காலங்களில் சமூகப்போரட்டங்களில் பங்கெடுத்துக்கொண்டவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர். ஒரு ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் இராணுவ புவியியல் (military geography) குறித்த பிரக்ஞையை போராட்ட இயக்கங்களுக்கு முதன்முதலாக வகுப்பு நடத்தியவரும் கூட.

முஸ்லிம் மற்றும் மலையக பிரச்சினைகள்பற்றி கூட பிரக்ஞையுடன் பணியாற்றியவர். முஸ்லிம்கள் குறித்த அவரது ஆய்வு அப்போதைய கால கட்டத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முஸ்லிம் அரசியல் சக்திகள் மத்தியில் மதிப்பு பெற்றவர்.

அதுபோல தென்னிலங்கை இடதுசாரி சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றவர். தென்னிலங்கை இடதுசாரி எழுச்சி குறித்தும் இளைஞர்கள் மீதான படுகொலை பற்றியும் அவர் புனைந்த கவிதைகளை இன்றும் பலர் கொண்டாடுகிறார்கள்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி புலிகளை துணிச்சலாக கண்டித்து வந்த வெகுசிலரில் ஜெயபாலனும் ஒருவர்.

யுத்தம் துரத்திய இலக்கியவாதிகளில்/ போராளிகளில் ஜெயபாலனும் ஒருவர். நோர்வேயில் குடியேறினாலும் தனக்கான தளம் இது அல்ல என்கிற விரக்தியில் தமிழ் சூழலை தேடி தமிழகத்தில் குடியேறினார். அங்கு கவிதை இலக்கியத்தோடு மட்டுப்படுத்திக் கொல்லாமல், அரசியல் விமர்சனம், மற்றும் நடிப்புத்துறை வரைக்கும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.

ஆடுகளம் திரைப்படத்துக்காக அவருக்கு கிடைத்த தேசிய விருதை அடுத்து ஒஸ்லோவில் அவருக்கு ஒரு பாராட்டு விழா ஒன்றையும் இரு வருடங்களுக்கு முன்னர் நடத்தினோம்.

பேச்சுவார்த்தை முறிவுற்ற 2006 காலப்பகுதியில் தாயகத்துக்கு திருப்பிய ஜெயபாலன் மீண்டும் இந்த மாதம் தாயகம் செல்வதற்கு முன்னர் நண்பர்களின் கருத்தறிவதற்காக தனது முகநூலில் 8ஆம் திகதியன்று  “2006 பின்னர் முதல் தடவையாக என் மண்ணுக்கு செல்ல திடீரென முடிவு செய்திருக்கிறேன். பெரும்பாலும் நாளைக் காலை கொழும்பு செல்கிறேன். இப்போ நிலமை சுமூகமாக உள்ளதாக சொல்கிறார்கள்...” என்று நிரல்தகவலிட்டு நம்பிக்கையுடன் தாயகம் சென்றார்.

அதே நாள் தனது பயணத்தின் முக்கியத்துவத்தை இப்படி குறிப்பிடுகிறார். “...இன்று என் அம்மாவின் 7வது வருட நினைவுதினம். அம்மாவின் மரணத்துக்கு முதல்நாள் தொலைபேசியில் பேசியபோது எனக்கு என்ன நடந்தாலும் வந்துவிடாதே என கத்தி சத்தியம் வாங்கினார். இன்று அம்மாவின் நினைவுதினம். அம்மாவின் சமாதிக்கு வணக்கம் செலுத்தும் ஆசை மீண்டும் மூண்டெரிகிறது. இராணுவ முகாமாக இருக்கும் எங்கள் பண்ணைக்குள் அம்மாவின் சமாதி இருக்கு. இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.”

ஆம். அவர் தனது தாயின் சமாதிக்கு சென்று கண்ணீரால் கழுவிவிட்டு வர நினைத்திருந்தார்.

கூட்டங்களில் கலந்துகொண்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அவர் கூறிய விடயங்கள் இலங்கையின் அமைதிக்கு ஊறுவிளைவிப்பவை என்று போலிஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டதாக எங்கும் வெளியாகவில்லை.

அப்படி என்றால் ஏன் இந்த கைது. அவர் கூறியதாக கூறப்படும் கருத்துக்களுக்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறும் போலீசார் ஏன் அவ்வாறு உறுதி செய்யப்பட்டதும் கைது செய்யவில்லை. புலனாய்வுப்பிரிவினர் பின்தொடர்ந்துகொண்டே இருந்தது ஏன். தாயின் சமாதிக்கு போய் வணக்கத்தை செய்யவிடாத நிலையில் அங்கு வைத்து கைது செய்தது ஏன். இது குடிவரவு சட்ட மீறல் நடவடிக்கையாக இருந்தால் வெள்ளிக்கிழமை முடிக்க சந்தர்ப்பம் இருந்தும் அடுத்து வரும் இரண்டு நாட்களும் விடுமுறை தினங்கள் என தெரிந்தும் அந்த நாட்களை இந்த சர்ச்சைகளை நீடிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன.

இதற்குள் இருக்கும் அரசியல் உள்நோக்கமும், அரசியல் வழிகாட்டலும் இருந்திருக்கிறது என்று கருத முடிகிறது.

10 வருடங்களின் பின்னர் சென்ற வருடம் இலங்கை சென்றிருந்த போது நான் கலந்து கொண்ட சில கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி, புகைப்படங்களை கண்ட குடிவரவு திணைக்களத்தில் இப்போது பணியாற்றும் என் நண்பர் என்னை உரிமையுடன் கடிந்து கொண்டார். உனக்கு இங்கு திரும்பவும் வந்து போகும் உத்தேசமில்லை என்றால் இப்படி நீ செய்துகொள். இல்லயேல் நல்லபிள்ளையாக வந்த இடத்துக்கு திரும்பிவிடு என்றார். இன்னமும் எனக்கு தெரிந்த பல புகலிட அரசியல் செயற்பாட்டாளர்கள் நல்ல பிள்ளைகளாகவே நாடு சென்று திரும்புவதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது.

உல்லாசபயண விசாவில் வந்தவர் உல்லாச பிராணியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வேறு எதுவித அரசியல் கருத்தையும் வெளியிட உரிமையற்றவர் என்கிற இந்த விதிகள் இதற்கு முன்னர் இருக்கவில்லையா. இருக்கின்ற விதிகளை மேலும் இருக்குகின்ற நடவடிக்கை மகிந்த கொடுங்கோண்மை அரசில் தான் வரலாற்றில் கடுமையாக பின்பற்றத்தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான பரீட்சையை அவர்கள் சென்றவருடம் முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்திடமிருந்து தொடங்கினார்கள். கட்சியின் முதலாவது காங்கிரஸ் கூட்டம் முழு அளவில் ஏற்பாடாகி இருந்த நிலையில், கூடத்திற்கு முதல் நாள் அவரை அதில் கலந்துகொள்ள முடியாதபடி அவரைக் கடத்தியது அரசாங்கம். இறுதியில் பாதுகாப்பு செயலாளர் அவர் வீசா காலாவதியாகியும் இருந்தார் என்பதை சாட்டாக வைத்து நாட்டை வெளியேற்றும் நிலைக்கு தள்ளினர். அரசாங்கத்துக்கு எதிராக வேகமாக வளர்ந்து வந்த அந்த கட்சியை முலையிலேயே கிள்ளியெறிய முற்பட்டனர்.

அரசியல் பழிவாங்களையும் கடும் எச்சரிக்கைகளையும் இப்படியான நடவடிக்கைகளால், எதிர் கருத்துள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் செய்தார்கள்.

அடுத்ததாக தமிழ் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்படிருந்த தோழர் நா. சண்முகதாசனின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு தோழர் அ.மார்க்ஸ் உரையாற்ற அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு புகுந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை சேர்ந்தவர்கள், உல்லாச பிரயாண விசாவில் வந்த அவருக்கு அங்கு பேச்சாளராக கலந்துகொள்ள சட்டப்படி உரிமையில்லை என்று அவரை தடுத்துநிறுத்தி எச்சரித்து சென்றனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் சுதந்திர ஊடக இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்ட IFJ - International Federation of Journalists தலைவி ஜாக்குலின் பார்க் மற்றும் ஜென்னி வோர்திங்டன் ஆகியோர் அக்கூட்டத்தில் புகுந்த புலனாய்வுப்பிரிவினர் மற்றும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.

இந்த மாத முற்பகுதியில் நிகழ்ந்த பொதுநலவாய மாநாட்டின்போது அவுஸ்திரேலியாவிலிருந்து பசுமை கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜான் லொக்கி மற்றும் அக்கட்சியை சேர்ந்த ரியொன்னன் ஆகியோர் வந்திருந்தார்கள். வடக்கில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்கிற குற்றசாட்டின் பேரில் “விசா நிபந்தனை மீறல்” என்கிற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்கள்.

இலங்கைக்கு உல்லாச பிரயாண விசாவில் வருபவர்கள் அரசியல் கருத்துக்களை வெளியிடுவதும், நிகழ்வுகளில் பங்கேற்று வருவதும் புதிதாக நிகழ்ந்த ஒன்றல்ல. ஆனால் வரலாற்றிலேயே மிக மோசமான கருத்து சுதந்திர பறிப்பை சகல வழிகளிலும் துணிச்சலாக செய்துவரும் அரசாங்கம் இந்த வழியையும் விட்டுவைக்கவில்லை.

அதுவும் சமீபகாலமாக இந்த வடிவத்தினாலான வழிகளில் ருசி கண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

இதன் மூலம் அரசு அனைவருக்கும் குறியீடாக உணர்த்த முற்படும் செய்தி என்னவென்றால் உள்நாட்டு இலங்கையர் மட்டுமல்ல வெளிநாட்டவர்களும், இலங்கையில் பிறந்து வெளிநாட்டிலுள்ளவர்களாயினும் எங்களுக்கு எதிராக கருது சொல்லி தப்பிவிட முடியாது என்பதே.

அதைத்தான் எரிக் சுல்ஹைம்மும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டுமல்ல இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் மீளவும் வீசா விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது கிடைக்காமலும் போகலாம். அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது. பிறந்த மண்ணுக்கு மீள போக முடியாததை எவர் தான் ஜீரணிப்பார்.

இது போன்ற ஒரு உதாரணத்தை இந்திய விடயத்தில் அவதானித்திருபீர்கள். இந்த தூதுவராலயங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் குறித்த புலனாய்வு வேலைகளை இலங்கை அரசை விட செய்து வந்திருக்கிறது என்பதே உண்மை. அவர்களிடம் விசா விண்ணப்பிக்கும் பலரை அழைத்து அமர்த்தி தகவல்கள் புடுங்குகின்ற வேலைகளையும் அழகாக செய்துவந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பலருக்கு விசா இரத்தாகியும் இருக்கின்றன.

யுத்தத்தின் இறுதி மாதங்களில், ஏன் அதற்கு முன்னரும் வெளிநாடுகளில் நிகழ்ந்த பல ஆர்ப்பாட்டங்கள் பல தூதரங்களுக்கு முன்னால் நடத்தப்பட்டது. சீனா, ரஷ்யா, அமேரிக்கா, ஜப்பான், நோர்வே, இன்னும்... ஆனால் இந்திய தூதரங்களுக்கு முன்னால் எதுவுமே நிகழவில்லை. கடந்த காலங்களில் இலங்கைக்கு செல்லமுடியாத நிலையில் இருந்த பலருக்கும் இந்தியா ஒன்றே தமது உறவுகளை சந்திக்க இருந்த வாய்ப்பாக கருதி வந்தார்கள். அவர்களுக்கு எதிராக கருத்து கூறவோ, ஆர்ப்பாட்டம் செய்வதனூடாகவோ இந்திய விசாவை இழக்க எவரும் தயாராக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் முகம் என்ன என்பதும் இறுதி இந்தியாவில் தலையாய பணி என்ன என்பதும் எவருக்கும் தெரியாமலிருக்கவில்லை.

ஆக அப்படிப்பட்ட ஒரு தந்திரோபாயத்தைத்தான் இலங்கை இன்று உருவாக்கத் தொடங்கியுள்ளது.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த கடும் விதிகளை திணித்து வருபவர்களில் முக்கியமானவர்கள் மற்ற நாடு பிரஜைகள் என்பது தான். மகிந்தவின் தம்பிகளான கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை. அவரின் அடுத்த தம்பி பசில் ராஜபக்ஷ அமெரிக்க கிரீன் கார்ட் உள்ளவர். யுத்தத்தை நடத்தி முடித்த சரத் பொன்சேகாவும் அமெரிக்க கிரீன் கார்ட்டை கொண்டவர். நாட்டின் அமைதிக்கு மோசமான குந்தகம் விளைவித்த சர்வதேச குற்றசாட்டுக்குரியவர்கள் இவர்கள். இதை எல்லாவற்றையும் உலக அரங்கில் நியாயப்படுத்த நியமிக்கப்பட்ட பாலித கோஹன்ன ஒரு அவுஸ்திரேலிய பிரஜை.

இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து எந்தவொரு கருத்தையும் எவரும் எங்கும் வெளியிட முடியாத நிலையை ஏற்படுத்த சகல வழிகளிலும் அரண்களை ஏற்படுத்தி வருகிறது இலங்கை அரசு.

அரசியல் செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், கருத்து சுதந்திர போராளிகள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமான மிக மோசமான எச்சரிக்கை இது.

ஜெயபாலனின் இந்த கைதும், அதனை மேலும் சர்ச்சைக்குரிய செய்தியாக்கி தொடர வைப்பதிலும் அரசின் வெற்றி இந்த இடத்தில் தான் இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் ஜெயபாலன் ரூபத்தில் அவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

எனவே அனைவரும் முழு அளவில் இப் போக்குக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய முக்கிய தருணம் இது

நன்றி:
...மேலும்

பெண் நிழலில் வாழ்ந்து போ… (குமரி மாவட்ட பெண்ணுரிமை போராட்டம் சின்னக் குறிப்பு…..)


கடந்த மூன்று வருடங்களாக எழுத நினைத்த கட்டுரை இந்த நிமிடம் வரை கைகூடி வரவில்லை. இது தொடர்பான ஏராளமான ஆவணங்களும் நூல்களையும் தேடித் தேடி வாங்கியதோடு வாசித்து பிரமித்துப் போயிருந்தாலும் கூட அதை குறிப்பெடுத்து இந்த நூலில் இது உள்ளது என்று என்னால் எழுத முடியாமல் போன நிலையில் நினைவில் உள்ளதை வைத்து மட்டும் எழுதுகிறேன். அரிதினும் அரிதாகவே வாழ்த்துகிறவன் நான். பெண்கள் தினத்திற்கும் கூட, வெறும் சம்பிரதாயமாக வாழ்த்தும் நான் . ஒரு ஆணாதிக்கவாதியாகவே வாழ்கிறேன் என் மனைவி, மகளிடமும். பெண் நண்பர்களிடமும். இந்த குற்ற உணர்ச்சியோடு ஆணாதிக்கத்தை நடைமுறை வாழ்வில் பழக்கப்படுத்திக் கொண்ட ஒரு ஆணாகவே நான் வாழ்கிறேன் என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

வரலாற்றின் பக்கங்களில் வடிந்து கொண்டிருக்கும் ரத்தம். இன்றும் தொடரும் நிலையில் பெண்கள் எப்போது தங்களின் எதிர்ப்பைத் துவங்கியிருக்க வேண்டும். எல்லா பகுதிகளிலும் விசும்பலும், கேவலும், கண்ணீரும் பெண்ணுக்கே சொந்தமாகி அவள் தன்னை அழித்துக் கொள்ளவோ அல்லது எதிர்ப்பில் ஈடுபடவோ இயக்க நடவடிக்கையில் ஈடுபடவோ துவங்கியிருக்கலாம். ஆனால் தமிழகத்தால் கண்டு கொள்ளப்படாத ஒரு வரலாறு குமரி மாவட்ட பெண்களின் வரலாறு. அது அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானின் ஆளுகையில் இருந்தது. பரசுராமனால் நம்பூதிரிகளுக்கு நேரடியாக கையளிக்கப்பட்ட நிலம் (கடவுளின் தேசம்) என்று மிகச் சிறிய பிரிவினரால் நம்பிக்கையாக உருவாக்கப்பட்டு இன்று பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையாக மாறி விட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1150 அடிமைசாதிகள். இந்தியாவில் வேறு எந்த பகுதியிலும் இல்லாதவாறு. சாதியும் அதன் கொடூர தண்டனைகளையும் அனுபவித்தவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான மக்கள். பலரும் திருவிதாங்கூரில் ஏதோ நாடார் இனப் பெண்கள் மட்டுமே மேலாடை அணியும் உரிமை மறுக்கப்பட்டு வாழ்ந்தது போல எழுதுவார்கள் அது உண்மையல்ல அந்த உரிமை 1150 சாதிகளுக்கு மறுக்கப்பட்டிருந்தது. அடிமை வணிகத்தில் கொடிகட்டிப் பற்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சர்வாதிகாரம் ஒவ்வொரு சாதிக்கும் அதனதன் அந்தஸ்திற்கு ஏற்ற மாதிரி சட்டங்களை வகுத்தது.

சமஸ்தானத்தின் ஆட்சியின் கொடூரங்கள் உண்மையில் நாயர் இன பெண்கள் மீதுதான் முதன் முதலாக ஏவப்படுகிறது. நம்பூதியிரிகளின் பாலியல் தேவைகளுக்காக அவர்கள் நாயர் இனப்பெண்களை அடிமையாக்கியிருந்தார்கள். ஒரு நாயர் இனப்பெண்ணின் மீதான முதல் உரிமை நம்பூதிரிக்கே. இதனால் தாய் என்று தெரிந்த தகப்பன் யார் என்றே தெரியாத ஏராளமான குழந்தைகள் திருவிதாங்கூரில் இருந்தார்கள். ஒடுக்கப்பட்ட அந்த நாயர் இனப்பெண்கள் நம்பூதிரிகள் நடந்து வரும் போது திறந்த மார்போடு நிற்க வேண்டும். இதில் பல்வேறு வகைப்பட்ட மாதிரிகள் இருந்தன. இதெல்லாம் விரிவாக எழுத வேண்டும். ஆனால் இந்த இழி நிலை ‘‘மருமக்கள் தாயம்’ என்ற பெண் வழித் தலைமையேற்ற குடும்ப அமைப்பை நமக்கு வழங்கியது. பெரும்பாலும் இடதுசாரிகளும் பொன்னீலன் போன்ற நமது எழுத்தாளர்களும் கூட இதை முற்போக்கான அம்சம் என்று கருதினார்கள். இது பற்றி விரிவாக வாசித்த போது இந்த அமைப்பின் பண்பில் சில முற்போக்கான கூறுகள் இருக்கிறதே தவிற மருமக்கள் தாயம் உருவானது மிகக் கொடூரமான பாலியல் சித்திரவதையிலிருந்து துவங்கியதாகும்.

நாடார்கள், முக்குவர்கள், வேளாளர், ஈழவர் உள்ளிட்ட பல சமூகங்களில் மருமக்கள் தாயம் உள்ளது. ஆனால் இவர்கள் மிகச் சிறிய பிரிவினர். அதிசயிக்கதக்க வகையில் மீனவச் சமூகமான முக்குவர்கள் மருமக்கள் தாய முறையை பின்பற்றியவர்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் முக்குவர்களிடையே ‘‘ ஆண் நிழலில் நின்று போ, பெண் நிழலில் இருந்து போ’ என்ற சொலவடை உள்ளது. (இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.) . பிற சமூகங்களிலும் மருமக்கள் தாய முறை இருந்தாலும் மீனவச் சமூகங்களிடையே எஞ்சியிருப்பது போல வேறு எவரிடமும் இல்லை.

நிற்க,
குமரி மாவட்டத்தில் ஒரு பேச்சு மொழி உண்டு. ‘‘அவன ஒடப்புல போட்டு மூடுல’ என்று சாதாரணமாகச் சொல்வார்கள். அதாவது இந்த வழக்கு கொடூரமான திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியில் இருந்து உருவானதாக குமரி எழுத்தாளர் ஒருவர் எழுதி வாசித்தேன். அதாவது விதித்த வரியை கொடுக்க முடியாதவனை ஒடப்பில் போட்டு மூடுவார்கள். அது அப்போதைய தண்டனை முறை. ஒடப்பு என்பது சின்ன நீரோடை அதாவது. தோப்புக்கு தண்ணீர் பாய்ச்ச சின்ன கால்வாய் மாதிரி வெட்டுவார்கள். அதை ‘ஒடப்பு’ என்று வட்டார வழக்கில் சொல்வார்கள். முடிக்குவரி, சீலைக்கு வரி, என்றுதான் வாசித்திருக்கிறோம். அதன் தண்டனை முறைகளை வாசிக்கும் போது கொடூரமாக இருக்கிறது. வயலில் உழும் ஏர்கலப்பையில் பெண்ணின் தலைமுடியைக் கட்டி அப்படியே உழுது விடுவார்கள். அவள் சாகும் வரை நிலத்தில் உழுவார்கள். ஒரு கர்ப்பிணி பெண் இப்படி கலப்பையில் உழுது கொல்லப்பட்ட வரலாற்று நிகழ்வை ஜாய் ஞானதாசன் மிக அருமையாக சித்தரித்திருப்பார். இத்துதான் வாழ்வு, இதுதான் தலையெழுத்து என்று இருந்ததை மாற்றியவர்கள் நாடார் இனப் பெண்கள். தங்களிடம் வரிவாங்க வந்தவர்களுக்கு எதிராக அவர்கள் போராடினார்கள். திங்கள்சந்தை, பாறசாலை, போன்ற இடங்களில் சில இடங்களில் பெயரெ அதாவது நான் நினைக்கிறேன் முலையறுத்தான் சந்தை என்ற ஒன்று இந்தப் பகுதியில் உள்ளது. அது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு பெண் தன் முலையை அறுத்தெரிந்தாள் என்பதுதான் அந்த வரலாறு. எவ்வளவு பெரிய வீரஞ்செறிந்த போராட்டம். அவர்கள் தங்களின் ஆட்சி நீடித்திருக்க ஒரு பவுர்ணமி நாளில் நாடார், முக்குவர் குழந்தைகளை பிடித்துச் சென்று சமஸ்தானத்தின் நான்கு மூலைகளிலும் பிடித்து வரப்பட்ட குழந்தைகளின் உடலில் செம்புப் பட்டயத்தை பதிந்து புதைத்தார்கள். இதுதான் திருவிதாங்கூர் நம்பூதிரிகளின் ஆட்சி முறை. அதே சமஸ்தானத்தில் அரசரின் கணக்குப் பிள்ளைகளாக இருந்த பிள்ளைமாருக்கும் சமஸ்தானத்திற்கும் எழுந்த மோதலில் பலியிடப்பட்டவர்கள் வெள்ளாள இனத்து பெண்களே. அவர்கள் பிடித்துச் செல்லப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டு அடிமைகளாக்கப்பட்டார்கள்.

நீண்டகாலமாக எதிர்ப்புகள் இருந்தாலும், சீர்திருத்தக் கிரிஸ்தவத்தின் வரவு மிகப்பெரிய சமூக மாற்றத்தை குமரி மாவட்டத்தில் உருவாக்கியது. தமிழகத்திலிருந்து குமரி மாவட்டம் வேறு பட்ட காலாச்சாரத்தைக் கொண்டிருக்க இதுவே காரணம். 16 &ம் நூற்றாண்டிலேயே போர்ச்சுக்கீசியர்கள் கடலோரங்களில் கல்லூரி, மருத்துவமனைகளை நிறுவினாலும் கூட வடுகர் படைகள் அவைகளை விட்டு வைக்கவில்லை. ஆனால் 19 &ம் நூற்றாண்டில் தாமதமாக சீர்திருத்தக் கிறிஸ்தவம் நாடார்களிடையே வந்த போதிலும் அது கணிசமான அளவு பண்பாட்டு மாற்றத்தை பெண்களிடையே உருவாக்கியது. பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி. டதி மேல் நிலைப்பள்ளி போன்றவை எல்லாம் தமிழ் சமூகத்தின் பெண்கள் கண்ட முதல் கல்லூரிகள்.

விரிவாக எழுத முடியாமைக்கு வருந்துகிறேன். அன்றைக்கிருந்த முற்போக்கான அம்சங்கள் இன்று இல்லை. மிக இறுக்கமான சொத்துடமைச் சமூகமாக நாடார்கள் மாறிய பின்பு அதன் முற்போக்கு அம்சங்கள் அனைத்தையும் தொலைத்தார்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவம் சாதியை இறுக்கிச் சென்றதே தவிற அதை நெகிழ்வுக்குள்ளாக்க வில்லை. கத்தோலிக்கமும், சீர்திருத்தக் கிறிஸ்தவமும் அந்த வகையில் தோல்வியடைந்த சமூகங்களே. தங்களின் சுதந்திரத்திற்காக மதம் மாறிய நாடார்களிடம் இருந்து தலித்துக்கள் சுதந்திரம் கேட்டு துவங்கியதுதான் சல்வேஷன் ஆர்மி ‘‘இரட்சணிய சேனை’ என்ற தனி மதம். மத மாற்றத்தை தடுக்கும் நோக்கிலும், தங்கள் சமூகத்திற்கு விடிவு வேண்டும் என்றும் ஆன்மீக வழி போராடிய வைகுண்டசாமியின் போராட்டங்கள் தேக்க நிலையை இன்று அடைந்து விட்டன.

சரி இதில் இயல்பாகவே ஒரு கேள்வி வருகிறது இந்த சாதிக் கொடுமைகள் மீனவர்களுக்கு இல்லையா? என்பதுதான் கேள்வி. பேரா. சிவசு எழுதுவார். சாதி என்னும் பரப்பிற்கு அப்பால் நிறுத்தப்பட்டவர்கள் மீனவர்கள் என்பார். அதாவது சாதி என்னும் பரப்பினுள் இருக்கும் மீனவர்கள் புவியியல் ரீதியாக கரையோரங்களில் வாழ்ந்ததால் நேரடியான சாதிக் கொடுமைகளை அனுபவிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கும் இந்த சாதிகளைப் போல சாஸ்திரங்களை, ஓதும் உரிமை மறுக்கப்பட்டுத்தான் இருந்தது. முக்குவர்கள், பரதவர்கள் யாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மருமக்கள் தாயத்தின் மிச்சங்கள் மீனவ மக்களிடையே குறிப்பாக முக்குவர்களிடம் எஞ்சியிருப்பது அது ஒரு சொத்துடமை சமூகம் இல்லை என்பதால்தான். தவிறவும் கடலோரங்களில் இயல்பாகவே பெண் தலைமை ஏற்கும் மரபு மீனவக் குடும்பங்களிடையே உண்டு. கடற் தொழில் பண்பாட்டு மரபு அது. இன்றைக்கு கடல் தொழிலும் நசிந்து வரும் நிலையில் இந்த பண்பாடு வேகமாக மறைந்து வருவதை நீங்கள் காண முடியும்.

காலந்தோறும் பெண் சிந்திய ரத்தங்கள்தான் ஆண் சொத்துடமைச் சமூகமாக உருவாகியிருப்பதை நாம் காண முடியும். சமூகப் பொருளாதார நிலைகள் பெண்ணைக்கும் வெளியில் சென்று உழைக்கும் நிர்பந்தத்தை உருவாக்கி விட்ட போதிலும் குடும்பம் என்னும் ஜனநாயகமற்ற சொத்துடமை அமைப்பு. காலந்தோறும் அவளை சம்பள நாள் அல்வாவோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

( பெண்ணுரிமை விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள்.ஜாய் ஞானதாசனின் மறைக்கப்பட்ட வரலாறு என்னும் நூலை வாசிக்கவும், மேலும் திருவாங்கூர் மேனுவல், மற்றும் சீர்திருத்தக் கிறிஸ்தவ மையத்தில் நூல் நிலையல் ஒன்று கிறிஸ்தவ மகளிர் கல்லூரி செல்லும் சாலையில் உள்ளது அதற்கு சென்று தேடிப் பாருங்கள் பல அருமையான நூல்கள் உள்ளன.)

-அருள் எழிலன்


...மேலும்

Nov 21, 2013

கிளிநொச்சி கிராமங்களில் கருத்தடை மேற்கொண்டது உண்மையே: யூட்


கிளிநொச்சி கிராமங்களில் கருத்தடை மேற்கொண்டது உண்மையே ஆனால் கட்டாயகருத்தடை அல்ல என்கிறார் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட்

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களான வேரவில் கிராஞ்சி வலைப்பாடு கிராமங்களில் 52 பெணகளுக்கு கருத்தடை மெற்கொண்டது உண்மையே அனால் கட்டாயத்தின் பெயரில் மேற்கொள்ளப்படவில்லை.

அவர்களின் விருப்பத்தின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டது. அதுவும் தற்காலிக கருத்தடை சிகிசையே முறையே மேற்கொள்ளப்பட்டது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி எஸ் . ஆர் . யூட் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான வேரவில் வலைப்பாடு கிராஞ்சி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டதான கருத்தடை தொடர்பில் பிபிசி மற்றும் பல பத்திரிகைகளிலும் வெளியான செய்தி தொடர்பில் இன்று ( 20 ) கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் கமலேந்திரன் அவர்களால் எழுப்பட்ட கேள்விக்கு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் திருமதி எஸ் . ஆர் . யூட் அவர்கள் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் மாகாண மட்டத்தில் குழு ஒன்று அமைத்து விசாரணைகள் மேற்கொண்டோம் அந்த விசாரணை அறிக்கையில் இது ஒரு சாதாரண தேசிய மட்ட நிகழ்ச்சி கடந்த யூன் மாதம் போசாக்கு மாதமாக இலங்கை பூராகவும் அறிவிக்கப்பட்டது அந்த காலப்பகுதியில் ஜந்து வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு அவர்களின் நிறைகள் அளக்கப்பட்டு இதன் போது வேரவில் கிராஞசி வலைப்பாடு பகுதிகளில் பிள்ளைகளின் நிறைகள் குறைவாக காணப்பட்ட காரணத்தினால் இந்த பிரதேசங்களில் சுகாதார சம்மந்தமாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஆதாவது சுகாதார கல்வி மற்றும் சிறுவர்களின் போசாக்கு சம்மந்தமாக கிளிநொச்சி மாவட்ட தாய்சேய் நலனுக்கு பொறுப்பான வைத்திய அதிகாரிக்கு பணித்திருந்தார்கள்.

அதனடிப்படையில் அந்த வைத்திய அதிகாரி ஏனைய நான்கு அழா அதிகாரிகளுடன் இணைந்து போசாக்கு மற்றும் சுகாதார கல்வி தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தி அன்றையதினமே குடும்ப கட்டுப்பாடு தொடர்பாகவும் வருகைதந்திருந்த தாய்மார்களுக்கு விளக்கமளித்த அவர்களின் விருப்பத்தின் பெயரிலே கருத்தடை சிகிசை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கருத்தடை முறையானது முற்றுமுழுதாக தற்காலிகமானது எந்த தாயாவது தனக்கு வேண்டாம். என்று விரும்பினால் அந்த நிமிடமே அதனை எடுத்துவிடவும் முடியும் இதன் பின்னர் குறித்த தாய் கர்ப்பம் அடைய முடியும். எங்களுடைய விசாரணையில் அந்த பிரதேசங்களில் எந்த தாயும் வற்புறுத்தப்படவில்லை.

ஆனால் இதில் அங்கு சென்ற மருத்துவ குழுவினர் குடும்ப கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனை வழங்கிய பின்னர் தாய்மார்களுக்கு கால அவகாசம் வழங்கி அவர்களை தங்களுடைய கணவனுடனும் குடும்பத்துடனும் கலந்தாலோசித்து பின்ன்ர் இந்த கருத்தடை மேற்கொண்டிருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது அந்த தாய்மார்களின் உரிமை மதிக்கப்பட்டிருக்கும் இதனை விடுத்த சுகாதார கல்வி வழங்கப்பட்ட அன்றே மேற்கொள்ளப்பட்டதுதான் அனைவர் மத்தியிலும் சந்தேகத்தையும் தப்பபிராயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது எனத்தெரிவித்தார்.
நன்றி - tamilcnn
...மேலும்

Nov 20, 2013

மெல்ல விலகும் பனித்திரை – சிறுகதை தொகுப்பு! - ஆர்.செம்மலர்

மெல்ல விலகும் பனித்திரை
‘மெல்ல விலகும் பனித்திரை’ லிவிங் ஸ்மைல் வித்யா தொகுத்து அளித்துள்ள சிறுகதைப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் தலைப்புக்கு ஏற்ப இதனைப் படிக்க படிக்க, திருநங்கைகள் அல்லது அரவாணிகள் குறித்த நமது புரிதலின் மேல் படர்ந்திருக்கும் பனித்திரை விலகி, அவர்களின் உள்ளத்தை நெருங்க முடிகிறது.

இதில் உள்ள சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர்கள் (ம்… ஹூம்) உயிர் கொடுத்துள்ள படைப்பாளர்கள், மனித நேயத்தை மேம்ப டுத்தும் வகையில் ஏற்கனவே பல படைப்புகளை நமக்குக் கொடுத்தவர்கள்தான்.

ஒன்பது, அலி, அரவாணி போன்ற முன்னொட்டுக்கள் மறைந்து திருநங்கை, திருநம்பி என மரியாதைக்குறிய அடையாளங்கள் உருவாக்கப்படுவது முன்னேற்றமே. ஆனாலும் நாம் போகவேண்டிய தூரம் அதிகமுள்ளது. ஒதுக்கிவைக்கும் குடும்பங்களுக்கும், வக்கிரமாகப் பார்க்கும் சமூகத்திற்கும் இடையில், என்ன விலை கொடுத்தும் வாழத் துடிக்கும் இயற்கையின் படைப்பாக வேட்கை கொண்டு ‘கண்ணீரோடு காத்தோம்… கருகத் திருவுளமோ” என்று இந்தச் சிறுகதைகள் நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றன.

கிராமியக் கதைகளைச் சொல்வதில் வல்லவரான கி.ரா (கி.ராஜநாராயணன்) படைத்த இந்த கிராமிய மணம் கொண்ட கோமதிச் செட்டியாரின் மனம் கலங்கும்போது. நாமும் சேர்ந்து கலங்குகிறோம்.

சந்தைத் தோப்பில் ஆடிப் பிழைக்கும் திருநங்கைகளின் மீதான வக்கிரத்தை மோர் விற்கும் கிழவியின் மூலம் பாவண்ணன் சாடும்போது, நாமும் சேர்ந்து ரெளத்திரம் கொள்கிறோம்.

முத்தாய்ப்பான மூன்று கதைகள் …

அறிவியல் ஆய்வுக்கு தன்னை பலிகொடுத்த ஆயிஷாவைப் படைத்த இரா.நடராசன் மதியைப் படைத்துள்ளார். போஸ்ட் மார்ட்டத்தின் இறுதிப் பதிலான ‘தற்கொலை’ வரை மதியோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். நாம் அதோடு சேர்ந்து மறுபிறவி எடுக்கிறோம். இந்தக் கதை சொல்லியிருக்கும் விதம் புதுமையானது.

மணவாழ்க்கை வாழ முடியாத தங்கக் கிளிக்கு திருமணம் நடக்கிறது. நட்போடு வாழும் தங்கக் கிளியை, பஞ்சாயத்துக் கூட்டி பிரித்துவிடுகிறார்கள். தன் மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கும் ஆதரவுக் கரம் நீட்டுகிறாள் தங்கக் கிளி. லட்சுமணப் பெருமாளின் ஊமாங்காடை, தங்கக் கிளி குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத ஏக்கத்தில் மார் பிசையும்போது, நம் கண்களில் இருந்து கண்ணீர் கசிகிறது.

ஆச்சி முத்து – கூடப்பிறந்த அண்ணான் முதல், சேரியில் உள்ள ஆண்கள் அனைவரும் அடித்து கொலை செய்ய தேடுகிறார்கள். ஆனால், சேரிப் பெண்கள் அவனுக்கு துணையாய் இருக்கிறார்கள். ஏன்?, எப்படி? … ஆச்சிமுத்து, பெண்களுக்கு எதிரான வக்கிரக் கும்பலுக்கும், அவர்களின் மேல் சாதி திமிருக்கும் சேர்த்து பாடம் புகட்டுகிறான். சந்தியா என்ற திரு நங்கையின் மூலம், இவர்களின் விடுதலையும், சமூக விடுதலையில்தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது கதை.

என்னுரை என்பதில் வித்யா குறிப்பிட்டிருப்பது போல, திரு நங்கைகள்/திருநம்பிகளின் நுண் உணர்வுகளை இந்தக் கதைகள் பேசுகின்றன. அவர்கள் குறித்த புரிதலை உருவாக்குகின்றன. சமூக மாற்றத்திற்கு இந்தக் கதைகள் வித்திடுகின்றன.

மெல்ல விலகும் பனித்திரை
தொகுப்பு: லிவிங் ஸ்மைல் வித்யா
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.50

நன்றி - மாற்று
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்