/* up Facebook

Oct 16, 2013

“UNCLE TOM”S CABIN” : கறுப்பு அடிமைகளின் கதை - கேஷாயினி


அமெரிக்காவின் அழியாத வடுவாக சுட்டப்படுவது ஒரு காலகட்டத்தில் அத்தேசத்தில் நிலவிய “அடிமை முறை”. அடிமைகளாக கறுப்பினத்தவர்களை விற்பதும் கசையடிகள் கொடுப்பதும், அடிமைகளிடம் அனுதாபங்காட்டுபவர்களுக்கு கடுந்தண்டனைகள் விதிப்பதும், ஏன் வெள்ளையர்களுக்கெதிரான கறுப்பினத்தவர்களின் சாட்சி கூட எடுபடாதவொரு நிலை ஒரு காலத்தில் காணப்பட்டது. தங்களுக்குள்ள உணர்ச்சிகள் கறுப்பினத்தவர்களுக்கு இருக்கக்கூடாதென்று கூட கருதினார்கள். அடிமைகளை தொடுவது கெடுதல் என்று நினைத்திருந்தார்கள். “சிலர் அதிகாரம் பண்ணவும் சிலர் சேவை செய்யவும் பிறந்தவர்கள்” என்ற எண்ணம் மேலோங்கி காணப்பட்டது.

அன்று இவ்வாறானதொரு நிற அடிமைத்தனம் இடம்பெற்ற காலப்பகுதியில் கறுப்பினத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒரு பெண் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாள்.

மிருகங்களைப் போல கறுப்பினத்தவர்கள் கொட்டடிகளில் அடைக்கப்பட்டும், தரம் பிரித்து விற்கப்பட்டுக்கொண்டும் இருந்த காலமது. அன்று அமெரிக்க நாட்டில் இக்கொடுமையை நியாயப்படுத்தவும் ஒரு சட்டம் இருந்தது. இக்காலகட்டத்தில்  “UNCLE TOM”S CABIN” என்ற நாவலின் ஊடாக எல்லோருக்கும் இவ் அடிமைத்தனத்தை புடமிட்டுக்காட்டியவர்தான் இந்நூலின் நாவலாசிரியர் “ஹரியட் பீச்சர் ஸ்டவ்” என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்.

ஹரியட் பீச்சர் ஸ்டவ் 1811 இல் மிகவும் சமயப்பற்றுடைய குடும்பம் ஒன்றில் பிறந்தார். அக்காலப்பகுதியில் தான் அமெரிக்காவில் “தப்பிக்கும் அடிமைகளுக்கான சட்டம்” இயற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட தாக்கங்களினால் உந்தப்பட்டு இவர் எழுதிய நாவலே “ருNஊடுநு வுழுஆ”ளு ஊயுடீஐN” இந்நாவல் இதுவரை 40ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கமே “கறுப்பு அடிமைகளின் கதை” எனும் நாவல்.

வெள்ளையர்களினால் குலைக்கப்பட்ட கறுப்பினத்தவர்களின் குடும்பங்கள், தமது குழந்தையை தாய்மார்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமை, பட்டினி போட்டு பச்சிளம் குழந்தைகளை கொன்ற கொடுமை, தமது குழந்தை படும் வேதனை பெறுக்காமல் தாமே தம் குழந்தைகளைக் கொன்ற கொடுமைகள் என்று பலவித கொடுமைகளை அனுபவிக்கும் வெவ்வேறு பாத்திரங்களால் பின்னப்பட்டதாக இந்நாவலின் கதை செல்கிறது. உடல் உழைப்பை கொடுப்பவன் தாழ்ந்தவன் என்கின்ற மேலைத்தேய மனப்பாங்கையும் இந்த அநீதியை இயல்பானது என்று நியாயப்படுத்தி பாதுகாப்பு கொடுத்த சட்டங்களையும் அதன் பரிமாணங்களையும், பரிணாமங்களையும் இந்த நாவல் அலசுகிறது. 

இதன் முக்கிய பாத்திரங்களாக டாம் என்ற கறுப்பின அடிமையும் ஏவா என்ற சுருக்கப் பெயர் கொண்ட ஏவாஞ்சலின் என்ற சிறுமியும் சித்தரிக்கப்படுகின்றார்கள். ஏவா பிரபுவின் ஒரே பெண்ணாக இருந்தாலும் சிறுவயதிலேயே அவள் இந்த கொடுமைகளை கண்டு வருந்துவதும் இறக்குந்தறுவாயிலும் கூட தன் சிறு கைகளில் தந்தையிடம் அடிமைகளுக்கு விடுதலை வழங்குவதாக சத்தியம் பண்ணச் சொல்வதும் அவளுடைய வயதுக்கு மீறிய வளர்ச்சியை காட்டுகின்ற போதும் வாசிப்பவர்களின் மனங்களில் தங்கிவிடுகின்றாள். நீலக் கண்கள், தங்கநிற சுருள் முடி, வட்டமுகம், அழகிய கண்ணங்கள் என நம் முன் உருக்கொண்டு விடுகின்றாள். 

இந்நாவலின் இன்னுமொரு சிறப்பு என்னவெனில் பிரச்சினைகளை அலசுவதோடு நின்று விடாது தீர்வுவுகளையும் முன்வைத்திருக்கிறது. வழமை போன்று அடிமைகளுக்கு சுதந்திரமளித்தல் என்ற யதார்த்த முடிவுடன் நின்றுவிடவில்லை இதனாசிரியர். ஒரு சமூகத்தின் பிரச்சினைக்கு தனி மனித முடிவு மட்டும் தீர்வாகிவிட முடியாது என எடுத்துரைக்கும் ஆசிரியர் அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்துகின்றார். 

இந்நாவலின் தனித்தன்மை அடிமைத்தனத்தினை ஆன்மீக ரீதியாக அனுகியிருப்பது. இதில் இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால் எந்தவிரு சமுதாயத்தின் முரண்பாடுகளை கருவாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டதோ அவ்விரு சமூகத்தின் இருபாத்திரங்களுமே கதாபாத்திரங்களாவதுதான். 

இந்நூலின் ஆசிரியரான ஹரியட் பீச்சர் ஸ்டவ் பற்றி ஆபிரகாம் லிங்கன் “இந்த உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கிய புத்தகத்தை எழுதிய சிறு பெண்” என்று குறிப்பிட்டார். அதேபோன்று ஜவர்கலால் நேரு தனது வாழ்க்கை வரலாற்றிலும் இந் நாவல் பற்றி சிறப்பாக சித்தரித்திருக்கின்றார்.

இப்புத்தகம் எழுதப்பட்டு பல தசாப்தங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் இன்று கூட அடிமைத்தனத்தின் படிமங்கள் நம்மிடையே நிலவிக்கொண்டுதானிருக்கின்றன. இதனை அகற்ற நாம் உழைப்பதே “அடிமைத்தனம் அனைத்து கொடுமைகளின் சாறு” என இடித்துரைத்த எழுச்சி மிகு இப்பெண் எழுத்தாளருக்கும் இவ் அற்புதமான நாவலிற்கும் அளிக்கும் அங்கீகாரமாயிருக்கும். 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்