/* up Facebook

Oct 24, 2013

யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போராட்டம்


யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி பெண்கள் அமைப்புகள் போராட்டம் (Photos)

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கடந்தவாரம் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வேண்டியும் பெண்கள் அமைப்புகள் போராட்டமொன்றை மேற்கொண்டனர். ஏ9 வீதியின் நெடுஞ்சாலையில் அரியாலைக்கும், செம்மணிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

யாழில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. இதன் தொடராகவே கடந்த வாரம் கே.கே.எஸ் வீதியின் நாச்சிமார் கோவிலடியில் பெண்ணொருவர் சடலமாக மீட்டப்பட்டார்.

இதனைக் கண்டித்தும், இந்தப் பெண்னுக்கு நீதி வேண்டியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை நடத்துவதாக பென்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்தப் போராட்டத்திற்கு மதத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்த கொண்டு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இதன்போது இந்த வீதியால் வந்தவர்களும் சிறுது நேரம் போராட்டத்தில் பங்கு கொண்டிருந்தனர். இதற்கமைய தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஐலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன்(எழிழன்) அகியோரும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
...மேலும்

Oct 23, 2013

அம்பேத்கரின் நூலான " இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்" - மீனா சோமு


அம்பேத்கரின் நூலான " இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்" என்ற நூலை படித்த போது, இந்தியாவில் பெண்களின் நிலைக்கான.... ஒரு வரலாற்று ரீதியான பார்வை கிடைத்தது. சாதிக்கான சனதான தர்மத்தை புகுத்தியதற்கும், பெண்களை ஒடுக்கிய நிலைக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. அதனால் தான் என் பதிவுகளில் இந்த இரு சமூக சீர்கேட்டையும் எழுதி வருகிறேன். இந்த பதிவு நீண்ட பதிவாக எழுதியதன் அவசியம்.... இந்து தர்மம் என்று தூக்கி நிறுத்தும் இந்திய பெண்களுக்கு புரிய வேண்டும், "மதங்கள்" பெண்களை மனிதர்களாக மதிப்பதில்லை; மனுவின் சூழ்ச்சியும் பிராமணிய சட்டதிட்டங்களில் சிக்கி தான், நம் நிலை தாழ்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல, மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் இன்ன பிறகட்டுக்கதைகளையும் கொண்டு மூளை சலவை செய்யப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். இன்னமும் ஊடகங்கள் அவற்றை நம்மிடையே.... உலவவிட்டு , மூளை சலவையை தொடர்ந்து செய்து வருகின்றன. அது புரியாமல்.... அடுத்த அடுத்த சந்ததிகளுக்கும் கொண்டு சேர்க்கிறோம்....

இனி..." இந்துப் பெண்ணின் எழுச்சியும் வீழ்ச்சியும்" நூலில் இருந்து... சில பகுதிகள்:  

ஒரு காலத்தில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டு வந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. பண்டைக் கால இந்தியாவில் மன்னரின் முடிசூட்டு விழாவில் முக்கிய பங்காற்றிய ராணிகளில் ஒருவர் அரசியாவார் .....................................................................................................

............................முடிசூட்டுவிழா முடிந்த பின்னர், மன்னர், கில்டுகளின் (பொது அமைப்புகளின் ) பெண் தலைவிகளுக்கும் வணக்கம் தெரிவிக்கிறார் .
  
இது உலகின் எந்தப் பகுதியிலும் பெண்களுக்கான ஒரு மிகவும் உயர்வான நிலையாகும். இவ்வாறு மதிப்புடன் விளங்கிய பெண்களின் வீழ்ச்சிக்கு யார் காரணம் ?  இந்துக்களுக்கு சட்டம் வழங்கிய மனுதான் இதற்குக் காரணம்..............................................

பெண்கள் சம்பந்தமாக மனு இயற்றிய ,மற்றும் மனுஸ்மிரிதியில் ....
நான் மேற்கோள் காடுகிறேன் 

I. 213 இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்தக் காரணத்த்திற்காகவே, விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்பொது உஷாராகயில்லாமல் ஒரு போதும் இருக்கமாட்டார்கள்.
  
II. 214  ஏனெனில், இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி , ஒரு கல்விமானையும் பாதை தவறிசெல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உள்ளவர்கள்.
-------------------------------------------------------------------------------------------------

IX. 2. பகலிலும், இரவிலும், பெண்கள், ஆண்களையும், அவர்களின் குடும்பங்களையும் சார்ந்திருப்பவர்களாகவே வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவர்கள் உணர்வுரீதியான களியாட்டங்களில் ஈடுபடும்போதும் ,அவர்கள் ஒருவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------

 V. 147. ஒரு சிறு பெண்ணோ , ஓர் இளம்பெண்ணோ , அல்லது வயதான பெண்ணும்கூட-தனது சொந்த வீட்டில் கூட -எதையும் சுதந்திரமாகச் செய்யக் கூடாது.
  
IX. 46.விற்பனையோ அல்லது நிராகரிக்கப்படுவதன் மூலமாகவோ ஒரு மனைவி தனது கணவனிடமிருந்து விடுதலையாவதில்லை.

..........................ஆனால் தனது சட்டங்களை உருவாக்குகையில், நீதி அல்லது அநீதி என்ற கருத்தோட்டங்களைப் பற்றி மனு கவலைப் படவில்லை. பௌத்த சமயஆட்சியின் கீழ் பெண்களுக்கு இருந்தசுதந்திரத்தை பறிப்பதற்கு அவர் விரும்பினார்.
  
பெண்களைப் பற்றிய மனுவின் சட்டங்களில் புதியவையோ அதிர்சியளிக்கத்தக்கவையோ ஒன்றுமில்லை. இந்தியாவில் பிராமணியம் தோன்றியது முதல்பிராமணர்களின் கருத்துக்கள் இவையேயாகும். மனுவுக்கு முன்னாள்  அவை சமூகத்துவம் என்ற ரீதியில் மட்டுமே இருந்தன. ஒரு சமூகத்தத்துவமாக இருந்ததை அரசின் சட்டமாக மாறியது தான் மனு செய்த வேலையாகும்.................................................... 

..... புத்தசமயத்தின் திசையில்பெரும்எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்த பெண்களின் பிரவாகத்தைத் தடுத்துநிறுத்துவதற்கு மனு விரும்பினார். மனு தான் புத்த சமயத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பாளர். பெண்களுக்கு  எதிராகப் பல அநீதிகளை அவர் சுமத்தியத்தின் ரகசியம் இதுவேயாகும். ஏனெனில் , புத்த சமயத்தின் படைஎடுப்பிலிருந்து குடும்பம் பாதுகாக்கப்படவேண்டுமெனில், பெண்ணைத்தான்கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைக்கவேண்டும் என்பதை அவர் அறிந்தார். அதை அவர் செய்தார்.

எனவே, இந்தியாவில் பெண்ணின் வீழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்குமான எல்லாப் பொறுப்பும் மனு மீதுதான் சுமத்தப்பட வேண்டும்.

...மேலும்

இராணுவத்தினர் என்னை அடைத்து வைத்து 300 முறை வன்புணர்வு செய்தனர் - முன்னாள் பெண்போராளி


என்னை 3 வருடங்களாக வெளித்தொடர்புகள் இன்றி சிறிலங்கா இராணுவத்தினர் அடைத்து வைத்தனர். இந்தக்காலப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தரம் என்னை அவர்கள் பாலியல் வன்புணர்வுக்கும் உட்படுத்தினார்கள்' இவ்வாறு அதிர்ச்சியூட்டும் தகவலை லண்டன் ஐ.ரி.வி க்கு வெளியிட்டுள்ளார் முன்னாள் பெண் போராளி ஒருவர். சனல் - 4 வெளியிட்டதைப் போன்று இறுதிக்கட்டப்போரில் இலங்கை இராணுவத்தினர் புரிந்த அட்டூழியங்களை தொகுக்கும் முயற்சியில் ஐ.ரி.வி இறங்கியுள்ளது. இதன்போதே குறித்த முன்னாள் பெண்போராளியின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் கிடைத்துள்ளது. அந்தப் பெண்போராளி மேலும் தெரிவிக்கையில்,

'நான் முள்ளிவாய்க்காலில் காயங்களுடன் இருந்த போது இராணுவத்தால் பிடிக்கப்பட்டு முகாமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டேன் எனது காயங்களுக்கு மருந்து கட்டிவிட்டு தொடர்ந்து விசாரணை செய்வார்கள்,. அநேக சமயங்களில் விசாரிக்க வரும் சிப்பாய்களாலும், படையதிகாரிகளாலும் நான் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டேன். கிட்டத்தட்ட 300 தரத்துக்கு மேல் இவ்வாறு அவர்கள் என்னை வன்புணர்வு மூலம் சித்திரவதை செய்தார்கள்.அவர்களுக்கு விசாரிக்க எதுவுமில்லாவிட்டாலும் கூட , என்னை பாலியல் வன்புணர்வு செய்வதற்காகவே அவர்கள் வேண்டுமென்றே விசாரிப்பது போலவும் வருவார்கள்.

3 வருடங்களாக வெளித்தொடர்புகள் எதுவுமற்ற முகாமில் அடைத்து வைத்திருந்து விட்டு, அங்கு நடைபெற்ற கொடுமைகளை யாருக்கும் சொல்லக்கூடாது என்று எச்சரித்து தடுப்பு முகாமுக்கு புனர்வாழ்வு பெற அனுப்பினர். ' என்று அந்தப்போராளி கண்ணீர் மல்க வாக்குமூலம் கொடுத்துள்ளார். அநேகமாக இந்த போர்க்குற்ற ஆதாரம் பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி - ijaffna
...மேலும்

Oct 22, 2013

பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சி தொடர்பான கருத்துரை - நிர்மலா கொற்றவை


ஊடறு.காம் பகிர்ந்திருந்த “பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. ’இன்றைய’ தலைமுறைப் பெண்களின் (மேட்டுக்குடி பெண்கள்) சமூகப் புரிதலை, பாலினப் புரிதலை அவர்கள் வாயாலேயே எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக அது இருந்தது. அப்பெண்களின் புரிதலின்மை நமக்கு சற்று வருத்தத்தையும், எரிச்சலையும், அயர்ச்சியையும் கொடுத்தாலும், உண்மையில் புறச் சூழலின் தாக்கம் அல்லது ஆளும் வர்க்க கருத்தியல் எவ்வாறு மனங்களை ஊடுறுவி, ‘அடிமை’ கருத்தியலை எவ்வாறு நிலைத்திருக்கச் செய்கிறது என்பதை கருத்தில் கொண்டு, குட்டி ரேவதி சொன்னதுபோல் நாம் அவர்களுக்காகப் ‘பரிதாபப்ப்ட’ வேண்டியுள்ளது.

பெண்ணியவாதிகள் என்றாலே அவர்கள் இருக்கும் ஒரு ‘அமைப்பை’ குலைப்பதற்காகப் பேசுபவர்கள், ஆண் வெறுப்பாளர்கள் (ஓரினச் சேர்க்கையாளர்கள்), பெண் ஆதிக்கம் என்ற ஒரு பொதுப் புரிதலில் இருந்து அப்பெண்கள் பேசினார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நமக்கு பரிச்சயமான தோழர்கள் அனைவரும் சரியாக, பொறுமையாக பதில் அளித்திருந்தார்கள். பல இடங்களில் அவர்களின் பதில்கள் கூர்மையாகவே இருந்தது. அவ்விவாதம் தொடர்பான எனது கருத்துரை பின்வருமாறு:

பெண்ணியம் வேண்டாம் எனும் பக்கம், வைக்கப்பட்ட பதில்கள், கேள்விகள்:

1. சமரசம் இன்பமளிப்பது, ஆகவே எங்கள் வீடுகளில் ஒருவருக்கொருவர் நாங்கள் விருப்பு வெறுப்புகளைப் பேசி சமரசம் செய்து கொள்வோம். வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுப்போம். அது எங்களக்கு போதுமானது.

2. எங்கள் வீட்டில் என் அம்மாவின் ‘கை ஓங்கியிருக்கும்’, சித்தியின் ‘கை ஓங்கியிருக்கும்’… சம்பளத்தை அப்படியே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார்கள்….

3. பெண்களை ஏன் ஏதோ பலவீனமானவர்களாக சித்தரிக்கிறீர்கள்? அவர்களை ஏன் எப்போதும் பாதிக்கப்பட்டவர்போல் சித்தரிக்கிறீர்கள்?

4. நான் இராணுவத்தில் சேர்ந்துள்ளேன். அங்கு ஆண்களுக்கு நிகராக எனக்கும் இடம் கிடைத்திருக்கிறதே.

5. போஸ்ட் ஃபெமினிசம் – வேண்டிய உரிமைகளை பெற்ற பின்னர் – போதும் என்ற மனதோடு ‘ஒதுங்கிக் கொள்ள வேண்டும்’

6. என் கணவருக்காக நான் முழித்திருப்பது, காத்திருப்பது, சோறு ஊட்டுவது, சேவை செய்வது இவையெல்லாம் எனக்கு மகிழ்வைத் தருகிறது. அவரும் எனக்கு முடியாதபோது காலையில் எழுந்து பாத்திரம் துலக்குவார்….

7. சொடக்கு போட்டு கூப்பிட்டால் எனக்கு கோபம் வரும்…

8. எனக்கு டென்ஷ்ன் வேண்டாம், இருக்கும் இந்த நிலைமையே நிறைவாக இருக்கிறது. ரெவெல்யூஷனெல்லாம் வேனாம்…பெண்ணியம் பேசி அதை என் சந்தோஷத்தை குலைக்க விரும்பவில்லை.

9. கல்வி, மாப்பிள்ளை தேர்ந்தெடுக்கும் உரிமை எங்களுக்கிருக்கிறது.

10. குழந்தைப் பெற்றுக்கொள்ளும் முடிவை / மறுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்று இவர்கள் பேசுகிறார்கள்….

11. பெண்கள் உடலியல் / உயிரியல் பூர்வமாக பலவீனமானவர்கள்…..சிலவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…இரவில் வெளியே போகக்கூடாது

உண்மையில், ஒரு மூன்று வருடத்திற்கும் முன்னர் நானும் அப்பெண்களில் ஒருவளாகவே இருந்தேன் எனும் குறிப்போடு எனது கருத்துரையை நான் முன்வைக்கிறேன்.அன்புத் தோழிகளே,

உங்களது பேச்சுக்களில் பெண் விடுதலை என்பதை முழுக்க முழுக்க ஒரு குடும்பம் எனும் அமைப்பிற்குள் சுருக்கி, அதனோடு தொடர்புடைய சில உறவு பரிமாற்றங்கள் சார்ந்த பிரச்சினைகளையும், அதில் கிடைக்கும் அல்லது மறுக்கப்படும் உரிமைகளை மட்டுமே கணக்கில் கொண்டு பேசியது வருத்தம் தரக்கூடிய விசயமாக இருக்கிறது. ஒருவேளை நிகழ்ச்சி தயாரிப்பாளர் ‘கருவை’ அங்கணம் வடிவமைத்தாரா என்பது தெரியவில்லை.

பெண்களுக்கான பிரச்சினை என்பதில் வெறும் குடும்பப் பிரச்சினை மட்டுமே விவாதிக்கப்படுவதிலிருந்தே உங்களுக்கு விளங்கவில்லையா இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்னவென்று? 

மேலும் பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்திப் போராடுவதற்கு ஒரு இயக்கம் (பெண்ணியம் என்பது ஒரு சமூக ஒருங்கிணைப்புக்கான இயக்கச் செயல்பாடு) தேவையா இல்லையா என்பது ஒரு விவாதப் பொருளாக இருப்பதிலும், ஆண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி போராடுவது தேவையா இல்லையா என்று விவாதிக்கும் ஒரு நிலைமை இல்லாதிருப்பதிலிருந்தும் உங்களுக்கு ஏதும் கேள்விகள் எழவில்லையா? – மனித உரிமை என்ற ஒரு பொதுச் சொல் நிலவுகிறது அதில் – ஆண், பெண், குழந்தை, மாற்று பாலினம் ஆகிய அனைவருக்கும் போராடுதல் என்று பொருள்படுகிறது. ஆண்கள் சமூக வன்முறைக்குள்ளானாலோ அல்லது குடும்ப வன்முறைக்கு உள்ளானாலோ அது மனித உரிமையின் கீழ் வர, பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கு ஏன் பாலின அடையாளம் கொடுக்கப்படுகிறது? பெண்கள் மனிதர்கள் இல்லையா? அல்லது பெண் என்பதினாலேயே (பாலின அடிப்படையில்) அவள் ’கூடுதலான’ ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறாளா எனும் கேள்வியே உங்களுக்கு எழாதிருப்பதேன்?

சொல்லப்போனால், பெண்ணியம் என்றால் பெண்களுக்கு மட்டுமான போராட்டம், பெண்கள் போராட்டமெல்லாம் பெண்ணியம் என்பதும் ஒரு தட்டையான பார்வை. பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி எத்தனையோ ஆண்களும் போராடியிருக்கிறார்கள். பெண்கள் ஆதிக்கம் செலுத்த விரும்பும், சொல்லப்போனால் ஆண்களுக்கு அனுகூலமாக இருக்கும் குடும்ப அமைப்பை குலைக்கும் எண்ணத்தோடு முன்னெடுக்கப்படும் ஒரு போராட்டத்தை ஆண்கள் ஏன் ஆதிக்கிறார்கள் என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா? 

குறிப்பிட்ட சாரார் எந்த அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்களோ, அந்த அடிப்படையை மறுத்தலித்து, அந்தக் குறிப்பிட்ட கூட்டத்தினரை ஒருங்கிணைக்க, இயக்கமாகச் செயல்பட அழைப்பு விடுப்பது, உரிமைகளை வலியுறுத்துவதும், ஒடுக்கப்பட்ட பிரிவின் கண்ணோட்டத்திலிருந்து சமூகத்தை (நிலைமைகளை) ஆய்வு செய்வது, மறுக்கப்படும் உரிமைகளை எடுத்துரைப்பது, அவ்வுரிமைகள் வேண்டி போராடுவது என்று வரும்பொழுது, அக்கூட்டத்தினர் ஒரு ’அடையாளத்தை’ முன்வைப்பதென்பது ஒரு தவிர்க்கவியலாத தேவை. தங்களுக்கான கோட்பாடுகளை வகுத்து - சமூகத்தோடு உரையாடுவதற்கு, ஒருங்கிணைப்பதற்கு, வழிகாட்டுவதற்கு, போராடுவதற்கு அப்படி ஒரு ’அடையாளம்’ அவசியமாகிறது. 

அப்படித்தான் பாலின அடிப்படையில் ஒடுக்கப்படுபவர்கள் ‘பெண்ணியம்’ எனும் ஒரு கோட்பாட்டு வடிவத்தை உருவாக்கினார்கள். பெண்கள் களத்தில் இறங்கி தமது உரிமைகளை வலியுறுத்தி போராடவும் தொடங்கினர். சாதிய ரீதியில் ஒடுக்கப்படும் மக்கள் ‘தலித்’ எனும் ஒரு அடையாளத்தின் கீழ் போராடுகின்றனர். இது போல் மாற்று பாலினத்தவர், குழந்தைகள், மதம் – அதன் உட்பிரிவு, இனம், மொழி, நிறம், நாடு, பிரதேசம், வட்டாரம், ஏழை, பணக்காரன் (தொழிலாளி, முதலாளி) இப்படியாக பல பிரிவுகள். ஒவ்வொரு பிரிவும் தமக்கென ஒரு அடையாளத்தை வகுத்துக்கொண்டு தம்மைப்போல் ஒடுக்கப்படும் மக்களை ஒருங்கிணைத்து (அல்லது ஒருங்கிணைக்க) போராட்டங்களை தொடுத்துக் கொண்டிருக்கிறது. சமூகத்தில் எத்தனை பிரிவுகள் நிலவினாலும், வர்க்க பார்வையோடு சமூகத்தை அனுகுபவர்கள், அடிப்படையில் தொழிலாளி, முதலாளி என்று இரண்டு வர்க்கமே நிலவுகிறது. சமூகத்தில் அடிக்கட்டுமானம், மேல்கட்டுமானம் என்று இரண்டு கட்டுமானங்கள் நிலவுகிறது. பொருளாதாரம் எனும் அடிக்கட்டுமானம் – அதன் செயல்பாடுகள், அதன் தாக்கங்கள் என்று அனுகுவர். அதை நாம் ஒரு தனிக்கட்டுரையாகப் பார்ப்போம். 

அடிப்படையில் அனைத்தும் வர்க்கப் பகைமைகளே (class conflicts) ஆயினும் நிலவும் பிரிவினைகள், ஒடுக்குமுறைகளுக்கேற்ப போராடும் பிரிவுகள், அமைப்புகள், கூட்டங்கள் தமக்கென ஒரு ’அடையாளத்தை’ முன்வைத்து தம்மைப் போன்றோரை ஒருங்கினைக்க முற்படுகிறது. இதன்படி, பாலின அடிப்படையில் ஒடுக்கப்படும் பிரிவினரை ஒருங்கினைக்க சமூக ஆய்வுமுறையோடு செயல்படுவோர், அழைப்புவிடுப்போர் பெண்ணியவாதிகள். இது ஒரு குற்றச் செயல்பாடா? 

நிதர்சனம் இதுவாக இருக்க, பெண்ணியம் என்ற சொல்லைக் கேட்டு ஏன் இத்தனை அச்சம்? (பெண்ணியவாதிகள் = வேசிகள் என்று ஆணாதிக்க சமூகத்தின் பெரும்பான்மை சொல்வதாலா?)

பெண்ணியம் பேசுபவர்கள் வெறும் குடும்ப உறவுகளை மட்டுமா மையப்படுத்தி போராடுகிறார்கள். பெண்களை ஒடுக்குவதில் குடும்பம் என்பதே பிரதான ஒடுக்குமுறை அமைப்பு என்பதில் மாற்று கருத்தில்லை, எனினும் பெண்ணியவாதிகளின் செயல்பாடு குடும்ப அமைப்பை சீராக்குவதில் (உங்கள் சொற்களில் குலைப்பதில்) மட்டுமே சுருங்கிவிடுகிறதா? சமூகத்தில் நிலவும் எத்தனை அநீதிகளுக்கெதிராக, ஏற்றத்தாழ்வுகளுக்கெதிராக, உரிமை மறுப்புக்கெதிராக பெண்கள் (பெண்ணியவாதிகள்) போராடிவருகிறார்கள். அதுபற்றி உங்களுக்கேதும் கருத்திருக்கிறதா? 

இரண்டு வயது சிறுமி வன்புணர்வு செய்யப்படும் சூழல், பொது வெளியில் ஒரு பெண் தனியாகவும் சரி, துணையோடும் சரி பாதிகாப்பாக சென்று வரவியலாத ஒரு சூழல், 33% இடஒதுக்கீடு அப்படியே கிடப்பில் கிடக்கிறது, குடித்துவிட்டு கணவன்மார்கள் பெண்டாட்டிகளை அடித்துப் போடுகிறார்கள், இன்னும் கூட பல வீடுகளில் அதிகாலை எழுந்து வாசல் கூட்டி, கோலம் போடும், ஃபில்டர் காபி போடும் வேலை பெண்களுக்கான துறையே, ஒருபக்கம் இப்படி இருக்க, பெண்களின் உடலை ஒரு நுகர்வுப் பண்டமாக்கும் வணிகம் – ஊடகம் (சினிமா உட்பட), பாலியல் தொழில் (பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுதல், காதலிக்க மறுத்தால் ஆசிட் வீச்சு, தலித் இளைஞரை காதலித்து மணந்தால் நேரும் விபரீதம் என்று எண்ணிலடங்கா பிரச்சினைகள் இருக்க - போஸ்ட் ஃபெமினிசம் பேசி, எல்லாம்தான் கிடைத்துவிட்டதே இனியும் எதற்கு போராட்டம் என்றொரு கேள்வி உங்களுக்கு எழுவது எனக்கு வியப்பாக இருக்கிறது தோழிகளே. 

எம் தோழியர் அங்கு சொன்னதுபோல் இன்று நீங்கள் இந்த நிலையில் இருந்து பேசுகிறீர்கள் என்றால் அதற்காக எண்ணற்ற பெண்கள் போராடியிருக்கிறார்கள், உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்… உங்கள் ஒரு சிலருக்கு கல்வி மற்றும் பொருளாதாரத்தின் விளைவாக ’சில உரிமைகள்’ கிடைத்துவிட்டது என்பதற்காக ஒட்டுமொத்த பெண் இனமும் விடுதலை பெற்றுவிட்டது என்று சொல்வது அறிவுடைமை ஆகுமா?

1. // சமரசம் இன்பமளிப்பது, ஆகவே எங்கள் வீடுகளில் ஒருவருக்கொருவர் நாங்கள் விருப்பு வெறுப்புகளைப் பேசி சமரசம் செய்து கொள்வோம். வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுப்போம். அது எங்களக்கு போதுமானது.// 

- தோழிகளே உங்களுக்கு சமரசம் இன்பமளிக்கிறது. எனக்கு இன்பமளிக்கவில்லை. இப்போது நான் போராடலாமா? கூடாதா? என்னைப்போல் சமரசம் செய்ய விரும்பாத பெண்களுக்காக நான் குரல் கொடுக்கலாமா கூடாதா? அடிமைக்குக் கூட எஜமானன் வேளா வேளைக்கு சோறு போடுகிறான், சம்பளம் கொடுக்கிறான் – மெடிக்கிளைம், பி.எஃப் எல்லாம் உண்டு….. (அதற்கும் எத்தனைப் போராட்டங்கள், உயிரழப்புகள்…தெரியுமா) கொடுக்கும் நிலையில் நீயும், பெறும் நிலையில் நானும் ஏன் இருக்கிறோம்? எனும் கேள்வி எழலாமா கூடாதா? முதலில் சமரசம் என்ற சொல்லே கொச்சையானதாகத் தோன்றவில்லையா? சுயத்தோடு வாழ எதற்காக நாம் ஒருவரோடு சமரசம் செய்ய வேண்டும்… அந்நிலையில் இருப்பதே அடிமைத்தனம் இல்லையா? நீங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறீர்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினால் எஜமானன் அச்சப்படுவதில் பொருள் இருக்கிறது, ஆனால் இங்கு அடிமைகள் அச்சம் கொள்கிறார்களே…. இதற்குப் பெயர்தான் மூளை சலவை.

//எங்கள் வீட்டில் என் அம்மாவின் ‘கை ஓங்கியிருக்கும்’, சித்தியின் ‘கை ஓங்கியிருக்கும்’… சம்பளத்தை அப்படியே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறார்கள்….//

இக்கேள்விக்கு நம் தோழர்கள் சரியான பதில் அளித்தார்கள். கூடுதலாக, அப்படி ஒருவர் கை ஓங்கி இருந்தால் அது ஆணாயினும், பெண்ணாயினும் – தவறே – பெண்ணியவாதிகள் (பொதுவுடைமைவாதிகள்) வேண்டுவது சமத்துவமே அன்றி ஆதிக்கமில்லை. பெண்களின் கை ஓங்கி இருந்தால், மீண்டும் ஆண்களுக்காகப் போராடுவதும் நமது கடமை என்று உணர்ந்தவர்களே பெண்ணியவாதிகள்.

இருப்பினும், உங்களது கேள்வியில், குற்றச்சாட்டில் பொருளிருக்கிறது. ஏனென்றால் ஒரு பிரிவினர் அப்படி விரும்பிகிறார்கள், ஆனால் அவர்கள் பெண்ணியவாதிகள் அல்ல. மடை திறந்து விடப்படும் வெள்ளம் எத்திசையில் பாய்கிறது என்பது சொல்ல முடியாததுபோல், ஒடுக்கப்படும் ஒவ்வொரு பிரிவினரும், தமக்கான விடுதலையாக ஒவ்வொன்றை கண்டடைகின்றனர். அப்படி ஒரு பிரிவு ஆண் வெறுப்பு, ஆணை விட பெண் மேலானவள் எனும் ஒரு நிலைப்பாட்டை கையிலெடுக்கின்றனர். (இதுபோன்ற தவறுகள் அனைத்து போராட்டங்களிலும் காண முடியும்) அதைத் தீவிரவாதப் பெண்ணியம் என்று அழைக்கின்றனர். இதை நாம் ஆதரிக்க முடியாது எனினும், அவர்களை அந்த எல்லைக்குத் தள்ளிய சமூகக் காரணிகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அப்படிப்பட்ட வழிமுறைகளை நாம் விமர்சிக்கலாமே ஒழிய, பெண்ணியம் என்பதே அதுதான் என்று முத்திரை குத்துவது அறிவுடையச் செயலாகாது. அதுவும் ஒருவகையில் ஆணாதிக்க மனோபாவமே. 

// பெண்களை ஏன் ஏதோ பலவீனமானவர்களாக சித்தரிக்கிறீர்கள்? அவர்களை ஏன் எப்போதும் பாதிக்கப்பட்டவர்போல் சித்தரிக்கிறீர்கள்? //

சகோதரிகளே, நாங்கள் அப்படிச் சொல்லவில்லையம்மா. மத நூல்கள்தான் பெண்களை பலவீனமானவர்கள், பாவத்தின் மூட்டை, நரகத்திற்கு செல்லவேண்டியவர்கள், அழகைக் காட்டி மயக்குபவர்கள், சூனியக்காரிகள் என்று சொல்கிறது… சந்தேகம் இருந்தால் மத நூல்களை எடுத்துப் பார்க்கவும். அப்படி பிறப்பின் அடிப்படையில் பலவீனமானவர்கள் என்று சொன்னதை மறுப்பவர்களே நாங்கள். பலம், பலவீனம் என்பதெல்லாம் வெறும் கற்பிதமே. அது அது அதன் தன்மையில் இருக்கிறது, அதற்குப் பெயர் வைப்பது, அதற்கு குணாதிசயங்களை வடிவமைப்பது மனித குணம். அப்படிப்பட்ட குணமானது சமூகத்தின் ஆளும் வர்க்க கருத்தியலால் கட்டமைக்கப்படுகிறது (social construction by the ruling class) . அதை நாம் ஒவ்வொருவரும் அப்படியே உள்வாங்கிக் கொள்கிறோம். வெகு சிலர் அந்த உண்மையை புரிந்து கொண்டு கலகம் செய்கின்றனர். மற்றவர் அதைக் கண்டு அஞ்சுகின்றனர். உண்மையில் அந்த அச்சமும் கட்டமைக்கப்படும் ஒன்றே.

// நான் இராணுவத்தில் சேர்ந்துள்ளேன். அங்கு ஆண்களுக்கு நிகராக எனக்கும் இடம் கிடைத்திருக்கிறதே.//

வாழ்த்துக்கள் தோழி. இராணுவத்தில் பெண் அதிகாரிகள் எத்தகைய பாலியல் துன்புறுத்தலுக்காளாகிறார்கள்? இராணுவத்தினர் வன்புணர்வு செய்த பெண்களின் எண்ணிக்கை தெரியுமா உங்களுக்கு? இராணுவத்தில் இடம் கிடைக்கிறதா அல்லது அடுக்களையில் இடம் கிடைக்கிறதா என்பதல்ல இங்கு பிரச்சினை, எங்கு இடம் கிடைத்தாலும் ’பெண்’ எனும் அடிப்படையில் அவளின் இடம் என்ன? எல்லை என்ன? வரையறை என்ன என்பதே பிரச்சினை.

பெரும்பாலான தொழில்களில் ஆணுக்கு என்ன கூலி, பெண்ணுக்கு என்ன கூலி வழங்கப்படுகிறது என்று சற்று ஆய்ந்து பார்க்கலாமே?

// என் கணவருக்காக நான் முழித்திருப்பது, காத்திருப்பது, சோறு ஊட்டுவது, சேவை செய்வது இவையெல்லாம் எனக்கு மகிழ்வைத் தருகிறது. அவரும் எனக்கு முடியாதபோது காலையில் எழுந்து பாத்திரம் துலக்குவார்…. சொடக்கு போட்டு கூப்பிட்டால் எனக்கு கோபம் வரும்…//

தோழி, அன்பின் அடிப்படையில் நீங்கள் இதைச் செய்வதும் உங்கள் கணவர் ஒன்றைச் செய்வதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதே. ஆனால் மனைவியாக இருப்பவள் பின் தூங்கி முன் எழ வேண்டும் என்று ஒரு விதியை எழுதி வைத்திருக்கிறார்களே அதுதான் எங்களைப் போன்றோருக்கு பிரச்சினை. ஒவியா அழகாக பதில் சொன்னார் இரு தரப்பும் ஒரே மாதிரி அன்பைப் பரிமாரிக் கொண்டால் மகிழ்ச்சி. அதை வேண்டித்தான் நாங்கள் போராடுகிறோம் என்று… இப்போது சொல்லுங்கள் இதே மகிழ்ச்சி மற்ற பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று போராடும் பெண்ணியம் உங்களுக்கு தேவையற்றதா?

சமூகத்தில் ஆண் பெண் என்பதற்கு வகுக்கப்பட்டிருக்கும் குணாதிசயங்கள், கடைமைகள், பொறுப்புகள் இவற்றை பட்டியலிட்டு, அதில் ஏதும் பாகுபாடு நிலவுகிறதா இல்லையா என்று உங்களுக்கு நீங்களே கேள்வி எழுப்புங்கள்.

சொடக்கு போட்டு கூப்பிட்டால் உங்களுக்கு கோபம் வருகிறது, அதை நீங்கள் எதிர்க்கிறீர்கள்... உங்கள் வரையில் எதிர்க்கிறீர்கள்... மகிழ்ச்சி.... பெண்களை அப்படி சொடக்கு போட்டு அழைக்கும் பொது வெளியில் பெண்ணியவாதிகள் மற்றவர்களுக்காகவும் போராடுகிறார்கள்.... அவ்வளவுதான்...

//எனக்கு டென்ஷ்ன் வேண்டாம், இருக்கும் இந்த நிலைமையே நிறைவாக இருக்கிறது. ரெவெல்யூஷனெல்லாம் வேனாம்…பெண்ணியம் பேசி அதை என் சந்தோஷத்தை குலைக்க விரும்பவில்லை.//

இந்த சுயநலத்தைவிட பெண்ணியம் ஒன்றும் ஆபத்தானதில்லை தோழியே. அண்டை வீட்டில் ஒரு கணவன் தன் மனைவியை போட்டு அடித்துக் கொன்றாலும் எட்டிப்பார்க்காத ஒரு ‘அடக்கம்’ எங்களுக்கு வாய்க்காது. அதில் தலையிட்டால் போலீஸ் ஸ்டேஷன் போகணும்….இருந்தாலும் பரவாயில்லை என்று பெண்ணியவாதிகள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல் குடும்ப உறவில் நிலவும் ஏற்றத்தாழ்வு மட்டுமன்றி, பல்வேறு மட்டங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் பெண்ணியவாதிகள் குரல் கொடுக்கின்றனர் – வன்புணர்வு, குடும்ப வன்முறை, சம கூலி, சொத்துரிமை, (சவுதியில் கார் ஓட்டும் உரிமை வேண்டி), கருத்துச் சுதந்திரம் (தஸ்லிமா நஸ்ரின்), கூடங்குளம் அனு உலைக்கு எதிராக, தமிழ் தேசிய விடுதலை, திருமண உரிமை, அரசியல் உரிமை, வாழும் உரிமை (பெண் குழந்தை கருவிலேயே அழிப்பதற்கு எதிராக) இத்யாதி, இத்யாதிகளுக்கு எதிராகவெல்லாம் பெண்ணியவாதிகள் போராடுகின்றனர் - லத்தி சார்ஜ் வாங்கனும், சில வேளைகளில் ஜெயிலுக்குகூட போகனும் – இதுபோன்ற ‘ஆபத்துகள்’ தெரிந்தாலும் பெண்ணியவாதிகள் ஏன் தெருவில் இறங்கி போராடுகிறார்கள் – யோசித்திருக்கிறீர்களா? 

// குழந்தைப் பெற்றுக்கொள்ளும் முடிவை / மறுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்று இவர்கள் பேசுகிறார்கள்….//

ஆம் அந்த உரிமையை வலியுறுத்துகிறோம். அதன் பின்னணியை ஓவியா அவர்கள் அழகாக விளக்கினார். அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைப்பாக தற்போது நிலவும் குடும்ப அமைப்பு இருக்கிறது. குடும்பம், அரசு, தனிச்சொத்து ஆகியவற்றின் தோற்றத்தை ஒருவர் அறிந்து கொண்டால் மட்டுமே பெண்கள் ஏன் அந்த உரிமையை மனதில் கொள்ள வேண்டும் என்பது புரியும். வெறும் பிள்ளை பெரும் இயந்திரமாக பெண் கொடுமைப்படுத்தப்படுவதிலிருந்து அவளை விடுவிக்க இது அவசியமாகிறது. ‘பெண்மை’ எனும் கருத்தியலின் ஆளுகைக்கு உட்பட்டு பெண்கள் எத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் பெண்கள் விலக்கு செய்யப்பட்டு ஆண் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான் (பல வேளைகளில் பெண் குடும்பத்தாருக்கு தெரியாமல்)…. ஆண்மை குறைபாடு காரணமாகப் பெண்களும் இப்போது ஆண்களை விவாகரத்து செய்யும் சூழல் உருவாகி இருக்கிறது.. .. ஆண் பெண் உறவு எதற்கு வெறும் குழந்தை பெறுவதற்கு மட்டுமா? சிந்திக்க வேண்டாமா? அப்படியென்றால் ஓரினச் சேர்க்கையாளர்களின் காதலுக்கு எது அடிப்படையாக இருக்கும்? அவர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள். குடும்ப அமைப்பில் பங்கெடுக்கிறார்கள்…??

கால் பிடித்துவிடுவது, சோறு ஊட்டி விடுவது, நகை நட்டு வாங்கிக் கொடுப்பது, கணவனும் அவ்வப்போது பாத்திரம் துலக்குவது இவ்வளவுதானா பெண்ணின் தேவைகள்? தோழியே, உன் கணவன் வீட்டிற்கு வரும்போது, அவரைக் கண்டுகொள்ளாமல், விழுந்தடித்து சேவை செய்யாமல்… ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால் தெரியும் ‘அன்பு’ எப்படிச் செயல்படுகிறது என்று…. (குறிப்பாக பெரியாரின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால் தெரிந்துவிடும்)… ஆனால் ஆண் ஒருவன் அப்படி கண்டுகொள்ளாமல் போனால், அதை ஏற்றுக்கொள்ளும் சமாதானமே நிலவும், அதாவது பாவம் வெளில போய் வேலை செஞ்சிட்டு களைப்பா வராரு….ஆம்பிளைன்னா அப்படித்தான் இருப்பான்… பொம்மனாட்டின்னா அனுசரிச்சுன்னா போகனும்…..

// பெண்கள் உடலியல் / உயிரியல் பூர்வமாக பலவீனமானவர்கள்….. சிலவற்றை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்…இரவில் வெளியே போகக்கூடாது//

இப்படி ஒரு பெண்ணைச் சொல்ல வைத்ததுதான் ஆணாதிக்கத்தின் வெற்றி. பலம் என்றால் என்ன பலவீனம் என்றால் என்ன? ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. அது அதன் தன்மைக்கேற்ப செயல்படுகிறது. சில (பல) வேளைகளில் குணாதிசயங்களும் புறச்சூழலின் காரணமாக கட்டமைக்கப்படுகிறது. பலம் பலவீனம் என்பது எல்லாம் மனிதன் கண்டுபிடித்த ஒரு கற்பிதம். Its just a myth.

’பலமாக’ இருப்பதாலேயே ஒருவருக்கு ஒடுக்கும் அதிகாரம் வந்துவிடுமா? ’பலவீனமாக’ இருப்பதால் ஒடுக்குமுறையை விதி என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா?. ’பலவீனமாக இருந்தாலும்’ எவருக்கும் ஒடுக்கும் உரிமை கிடையாது, பலம் என்பதை முன்னிறுத்தி, அடுத்தவருக்காக தீர்மானிக்கும் உரிமையும் எவருக்கும் கிடையாது. 

”இருட்டில் வெளியே போகக்கூடாது என்று சொல்வார்கல் இல்லையா” – ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் அந்தச் சூழலுக்காக சொல்லப்பட்டிருக்கும். அது இயற்கையான ஆபத்துகளுக்கெதிரான பாதுகாப்பு நடவடிக்கை என்றால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இருக்கும். ஆனால் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆபத்து என்றால், அது ஒரு சிலருக்கு மட்டுமே கட்டுப்பாட்டை விதிக்கும். அப்படித்தான், ஆண்கள் தம் அதிகாரத்திற்காக ‘வெளியை’ ஆக்கிரமித்து, பெண்களை ஒடுக்குவதற்காக அவர்களுக்குப் பல்வேறு முத்திரைகளைக் குத்தி, அடக்கி வைத்தனர். பல்வேறு காரனங்களால் இப்போது அந்த வெளி சீர்கெட்டு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு சூழலை உருவாக்கி விட்டது… ஆனால் உற்று நோக்கினால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்குவது ஆண்களே…. ஆனால் ஒருபோதும் அறிவுள்ள, சமூக அக்கறை உள்ள பெண்ணியவாதிகள் அதற்கு ஆண்களைக் குற்றம் சாட்டுவதில்லை, ஆணாதிக்க சமூகத்தின் கருத்தியலைத்தான் அவர்கள் சாடுகிறார்கள்…. பெண்ணியவாதிகள் ஆண்களுக்காகவும், அந்த ஆண்களின் குழந்தைகளுக்காகவும் சேர்ந்துத்தான் போராடுகிறார்கள்.

 அப்படி அவர்கள் (பொதுவுடைமைவாதிகளோடு இணைந்து) போராடி பெறவிருக்கிற ஒரு புதிய ‘வெளி’ ஆணுக்கும் பாதிகாப்பானதாய், நிறைவானதாய் இருக்கும் தோழர்களே…..

...மேலும்

Oct 21, 2013

ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களது "ஊர் சுற்றிய பெண்கள்" - மீனா சோமு


ராகுல் சாங்கிருத்யாயன் அவர்களது "ஊர் சுற்றிய பெண்கள்" என்ற சிறுநூலில், ஆசிரியர் முன்னிறுத்தும் சிந்தனை பெண்ணின் சுயதிற்கான ஒரு வித்தியாசமான, ஆனால் அவசியமான ஒன்று. குடும்பம், மதம், வீடு என்ற நிருவனங்களுக்குள் ஒடுக்கப்பட்ட பெண்ணை ,மனுவின் தர்மத்திலிருந்து வெளியே இழுத்து ,பெண்ணை பரந்த  உலகவெளிக்கு இழுக்கும்  சிந்தனையாக தோன்றுகிறது. பெண்கள்  மீது  நாளும்  நடத்தப்படும்  வன்முறைகளுக்கான ஒரு தீர்வாகவும் , ஒரு நீண்ட போராட்டத்திற்கான வெளிச்சமாக படுகிறது.

 "ஊர் சுற்றிய பெண்கள்" என்ற நூலிலிருந்து சில துளிகள் ...

.....ஆண் , பெண்ணின் ஒவ்வொரு ரோமக்கண்ணிலும் ஆணி  வைத்து அடித்திருக்கிறான் .பெண்களின் அவல நிலையைப் பார்க்கும்போது ,சிறுவயதில் கேட்ட ஒருகதை நினைவுக்கு வருகிறது.

"மனித நடமாட்டமில்லாத மாளிகையோன்றில் ஒரு பிணம் அழுகாமல் நல்ல நிலைமையில் விழுந்து கிடந்தது. பிணத்தின் ஒவ்வொரு ரோமத்திலும் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன. அவ்வாணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கப் பிடுங்க , பிணைத்துள் கொஞ்சம் கொஞ்சம்மாக உயிர் வரத்தொடங்கியது. அதன் கண்களில் செலுத்தப்பட்டிருந்த ஆணிகளைப் பிடுங்கியதுமே பிணம் எழுந்து உட்கார்ந்து ரொம்பநேரம் தூங்கிவிட்டேன் என்று முணுமுணுத்துக் கொண்டதாம்."

இன்றைய சமுதாயத்தில் ஆண்கள், தம் கைகளால் பெண்ணின் ஒவ்வொரு ரோமத்திலும் அடிமைத்தனத்தின்  ஆணிகளை  அடித்திருக்கின்றனர்.ஆனால் ஆண்களே அந்த ஆணிகளை எடுத்துவிடுவார்களேன்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.

துணிவைப்பற்றியும் ,உற்சாகத்தைப்பற்றியும் எவ்வளவுதான் 
சொன்னாலும்,  வாலிபர்களைவிட யுவதிகளுக்குத் தம் பாதையில் பல தடைகள் இருக்கின்றன என்பதை மறக்க முடியாது. என்றாலும் துணிவுள்ளவர்கள் தடைகளை கண்டு அஞ்சி, தாம் செல்லும் பாதையை கைவிட்டு விட்டதாகச்  சரித்திரம் கிடையா. அயல்நாட்டு யுவதிகள் துணிவுடன் ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் போது ,இந்திய யுவதிகள் மட்டும் பிற்பட்டு நிற்கவேண்டுமா ?...... 

...மேலும்

Oct 20, 2013

30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை - உமா (ஜேர்மனி )-

30வது பெண்கள் சந்திப்பு
1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது.
viji 12.10
இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி,  1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது  சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது.  இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற்றியஅனைத்துப் பெண்களையும் மனந்திறந்து பேசவைத்தார் என்பதையும் பதிவுசெய்தார்.

 சந்திப்பின் முதல்நிகழ்வாக,

ஈழவிடுதலைப் போராளியான புஸ்பராணியின் ‘அகாலம்’ என்ற ஈழப்போராட்ட வாழ்க்கை அனுபவங்களையடக்கிய நூலை தர்மினி விமர்சனம் செய்து வைத்தார். இதுவரைகாலமும் தமிழ்விடுதலைபோராட்டத்தின் தமது அனுபவங்களை ஆண்களே பதிவு செய்திருக்கிறார்களென்றும் பெண்ணால் வெளியிடப்பட்ட முதற்பதிவு என்ற சிறப்பு இந்நூலிற்கு உள்ளதென்றும் ஒரு பெண்ணாகவும் தலித்தாகவும் தனது வாழ்க்கையனுபவங்களையும் சிறையில் தான் அனுபவித்த வேதனைகளையும் பதிவு செய்திருப்பதாகவும், தனது கதையைச் சொல்வதற்கு அவர் சுவாராஸியமான மொழியைக் கையாண்டுள்ளதாகவும் புத்தகத்தை வாசிக்கும் போது அருகிலிருந்து தனது கதையை ஒருவர் சொல்வது போன்ற உணர்வே ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

207 பக்கங்களுடைய இப்புத்தகத்தில் கருணாகரன் 17 பக்கங்களுக்குச் சிறந்ததொரு முன்னுரையை எழுதியிருக்கிறார். எல்லாப் பெண்களுக்கும் உள்ளதைப் போல வீட்டுச்சுமைகள் அன்றாடம் அழுத்தும் போது தமக்கெனச் சற்று நேரம் ஒதுக்குவது பெரும் கடினம். புஸ்பராணி அவர்கள் தனது குடும்பப் பொறுப்புகளுக்கிடையில் பழைய நினைவுகளை மீட்டுப்பார்த்து வரிசைப்படுத்தி , வகைப்படுத்தி எழுதி அதற்கான புகைப்படங்கள் பத்திரிகைச் செய்திகளைத் தேடியெடுத்து எவ்விதக் குறிப்புகளும் இல்லாமல் தன் ஞாபகத்திலிருந்து பல்வேறு சம்பவங்களையும் நபர்கள் பற்றியும் எவ்விதத் தடுமாற்றமும் இல்லாமல் எழுதியது பாராட்டுக்குரியது எனவும் இறுதியில் தாம் நம்பிய இலட்சியம் ஒன்றுமில்லாமல் போனபோது ஏற்பட்ட துயர் அதிலே தமது பங்கென்ன? சகோதரப்படுகொலைகள், தப்பித்தல்கள், சுயவிசாரணைகள் என்று அகாலம் பதிவுசெய்திருப்பதாகவும் தர்மினி குறிப்பிட்டார்.

போராட்டக்காலங்களில் தான் சார்ந்த இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தில் தம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்ட முறையை சுயவிமர்சனம் செய்யும்  அதே தருணம் அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள் மீதான தனது தார்மீக கோபத்தையும் வெளிப்படையாக முன்வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் கைதியான தனது சிறைவாழ்வின் துன்பங்களுக்கிடையில் தான் சந்தித்த இனிய தோழிகள் என ஏனைய குற்றங்களைப் புரிந்த பெண் கைதிகள், ஜே.வி.பி தோழிகளுடனான உரையாடல்கள் பற்றிய பல தகவல்களையும் இப்புத்தகத்தில் எழுதியிருப்பது இவர் மனிதாபிமான பெண்ணியநோக்கோடு சிறையிலும் வாழ்ந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும் அப்புத்தகத்தில் ‘தமிழ்ப்பிரதேசங்களில் ஓரளவு செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரிகளோ தமிழர்களுடைய தேசியஇனப்பிரச்சனை குறித்துப் பேசவே மறுத்தார்கள்’ என்ற புஸ்பராணியின் குற்றச்சாட்டுப் பற்றியும் தர்மினி மேலதிக விபரங்களைக் கூறமுடியுமா எனக்கேட்டார். இது அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தவர்கள்,

தமிழீழம் என்ற இலட்சியத்துடன் முனைப்பாகச் செயற்பட்டு, போராட்டம் தோல்வியுற்ற நிலையில் தனது போராட்டக்காலங்களில் ஒரு பெண்ணாக எதிர்கொண்ட துயரங்களின் சாட்சியங்களையும், தமிழ்த் தேசியவாதத்தை முன்னிறுத்தி நிகழ்த்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மறைந்திருந்த சாதியக் கூறுகளைச்  சம்பவங்களினுடாக வெளிப்படுத்தியிருப்பதாகவும், சிறையில் பெண்கள் அனுபவித்த சித்திரவதைகளையும் , தடுப்புக்காவலில் இருந்த ஆண் கைதிகள் பொலிஸ்காவலர்கள் போன்றோரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் சேட்டைகளையும் சைகைகளையும் எதிர்கொண்டது, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் தாம் பாவிப்பதற்கு துணியில்லாது தவித்த வேளையில் கிடைத்த அழுக்குத் துணியைப் பெண்கள் மாறி மாறி உபயோகித்தது போன்ற சம்பவங்கள் மூலம் சிறை வாழ்வின் கொடூரங்களை உணரக் கூடியதாகவிருந்ததாகவும் இந்நூல் மூலம் தாம் அறியாத பல விடயங்களை அறியக் கூடியதாகவிருந்ததாகவும், சரித்திர ஆவணமான இந்நூல் நிச்சயமாக ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் வெளியிடப்படவெண்டுமெனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படப்பட்டன.

அந்நிகழ்வின் இறுதியாக  உரையாற்றிய புஸ்பராணி, பல பெண்கள் தனது அனுபங்களை பகிர்ந்து கொள்வதும் மிகுந்த ஈடுபாட்டுடன் கருத்துக்களைத் தெரிவிப்பதும் தனக்கு சந்தோசத்தை அளிப்பதாகவும் இப்புத்தகத்தை எழுதிய போது தான், தனது வாழ்வில் மிகவும் மகத்தானவர்களுடன் பழகக் கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைத்ததையிட்டுத்  பெருமை கொண்டதாகவும் இன்னும் தனது அனுபவங்களையும் தான் வாழ்வில் சந்தித்த மனிதர்களையும் பதிவு செய்ய விரும்புவதாகவும் அதை ஒரு புத்தகமாக்க வேண்டுமென ஆர்வமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் தான் சிறையில் வாழ்ந்த காலங்களில்  பழகிய சிங்கள நண்பிகளை ஒரு நாளாவது தனது வாழ்நாளில் சந்திக்கவேண்டும் எனும் தனது பெரும் அவாவையும் தெரிவித்தார்.
நிர்மலா
அடுத்த நிகழ்ச்சியான ‘பாலியல், வன்முறை, தேசியவாதம், பெண்ணியம்’ என்ற தலைப்பில் பேசவிருந்த நிர்மலா தவிர்க்க முடியாத காரணங்களால் நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தொலைபேசி மூலம் தனதுரையை நீண்ட நேரம் வழங்கினார்.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் வெளியில் வராது தணிக்கை செய்யப்பட்டும் தகவல்கள் குறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டுமே வெளிவருவதாகவும், அண்மையில் நடைபெற்ற மாத்தளையைச் சேர்ந்த சிறுமி மீதான பாலியல் வன்முறைச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, நாடளவில் அண்மைக்காலமாக 3500 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த டிசம்பரில் டெல்லியில் நடைபெற்றமருத்துவமாணவியை வன்கொடுமை செய்த  சம்பவத்தைத் தொடர்ந்து தென்ஆசியாவெங்கும் Anti-Rape பாலியல் வன்கொடுமைக் கெதிரான எதிர்ப்பியக்கங்கள் எழுந்துள்ளதாகவும், இவ்வியக்கங்கள் மக்கள் மத்தியில் பெண்களிற்கெதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் பற்றிய அறிதலையும், எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பெண்கள் ஆடைகள் அணியும் முறையைக் கண்டித்து வலதுசாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களை மறுதலித்து ‘நாம் எவ்வாறு ஆடைகள் அணிய வேண்டுமென்பதை எமக்கு கற்பிக்காதே, உனது மகனிற்கு பாலியல் வன்கொடுமை(rape)யில் ஈடுபாடாமல் இருக்க கற்று கொடு’ , ’ அச்சமில்லாமல் நடமாடுவதற்கு சுதந்திரம் வேண்டும்’ என்னும் சுலோகங்களை முன்வைத்துச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இந்தியாவில் எழுந்த பெண்களின்   பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்ட எழுச்சியை தொடர்ந்தே இலண்டனை மையமாகக் கொண்டு Freedom Without Fear Plattform என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு ஆசிய, ஆபிரிக்க சிறுபான்மையினப் பெண்கள் சிறுமிகளுக்கெதிராக இழைக்கப்படும் ஒடுக்குமுறைக்கெதிராகக் குரல் கொடுப்பதாகத் குறிப்பிட்டதுடன், அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கினார்.

அவர் மேலும், தந்தைவழிச் சமுதாயத்தில் பெண்களின் பாலியல்சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆண்களின் அதிகாரக்கட்டமைப்பில் வேரூன்றியுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள். பெண்கள் மீது பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் வன்முறை வடிவங்கள், பண்டைக்காலந்தொட்டு பெண்கள் எவ்வாறு ஆண்களின் உடமைகளாக்கப்பட்டிருந்தார்கள், தற்போது நவதாராளவாத பொருளாதாரமுறைமையால் பெண் வெறும் பண்டமாகக் கணிக்கப்படுதல் என்பவற்றையும் குறிப்பிட்டார். யுத்த காலங்களிலும், இனப்பிரச்சினைகளின் போதும் இராணுவத்தினரால் பெண்கள் பாலியல் வதைக்கு இலக்காகிறார்கள். அதேசமயம் தேசியவாதமும் தமது பிரச்சாரங்களிற்கும் பெண்களின் உடலையே உபயோகிக்கிறார்கள். இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இடம் பெற்ற யுத்தங்களின் போது  நிகழ்ந்தவற்றை உதாரணம் காட்டியதுடன், தான் இலங்கையில் இருந்தபோது பாதிக்கப்பட்ட பல பெண்களைச் சந்தித்தது, அவர்கள் தமது வாழ்வை மீளமைத்துக் கொள்ளும் முகமான முயற்சிகளிற்காக இணைந்து செயற்படுவதாகவும்,அதன் அவசியத்தையும் எடுத்தரைத்தார்.

மேலும் தேசியவாதிகள், வலதுசாரிகள், இடதுசாரிகள், ஆன்மீகவாதிகள், கலாசார காப்பாளர்கள் போன்ற எல்லோரும் இந்த பாலியல் பலாத்காரத்தை எதிர்க்கிறார்கள். ஆனால் இவர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கின்றது.  உதாரணமாக, தேசியவாதிகளை எடுத்துக் கொண்டால் தேசியம் என்பது தாய்க்கு ஒரு பெண்ணுக்கு சமமானதாக கட்டமைக்கப்படுவதும், அப்பெண் வன்முறைக்கு உட்படுத்தப்படும்போது தேசியம் மாசுபடுத்தப்படுவதாக உணரப்பட்டே இதற்கெதிராகக் குரல்கொடுப்பார்கள். மாறாக அதற்குள், அத்தேசியத்துக்குள் நடக்கின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் (சீதனம், குடும்ப பாலியல் வன்முறை…)குறித்து இத்தேசியவாதிகள் எந்த அக்கறையும் கொண்டவர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால் பெண்ணியவாதிகள் அவ்வாறில்லை. அவர்கள் இனம், பால்நிலை, வர்க்கம், சாதி கடந்த பெண்கள்மீதான வன்முறைகள் அனைத்துக்கும் எதிராக குரல்கொடுப்பவர்களாக இருப்பர். ஆகவே, நாம் தான் இப்போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் எனவும் கூறினார்.

நிர்மலா நேரில் கலந்து கொள்ளாத நிலையிலும் பலர்  ஆர்வமாகத் தமது கருத்துகளை பரிமாறியதுடன்  அக்கலந்துரையாடலை ஒரு காத்திரமான நிகழ்வாக்கினார்கள்.
நவாஜோதி
‘புகலிடத்தில் பெற்றோரும் குழந்தைகளும்’ என்ற தலைப்பில் உரையாற்றிய நவாஜோதி, தமிழ்மக்கள் ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த காலகட்டங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து , அக்காலகட்டங்களில் அவர்கள் வெவ்வேறுவிதமான சூழலில் வாழ நேர்ந்தமையால் பிள்ளைகளின் வாழ்வியலை அவர்களது  அக மற்றும் புறச்சூழலே தீர்மானித்தது, பெற்றோர் பிள்ளைகளின் கைகாட்டி மரம் போல அவர்களைச் சரியான பாதையில் நடத்திச் செல்லல் வேண்டும், புகலிடத்தில் வாழும் பிள்ளைகள் வீட்டிலும் பாடசாலையிலும் வெவ்வேறு விதமான சூழல்களிற்குள் வாழநேரிடுகிறது, குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்கு அவர்களின் உலகத்திற்குள் புகுந்து, அவர்காளகவே  மாறுதல் அவசியம், அதை நமது பெற்றொர் செய்யத் தவறுவதோடு, பிள்ளைகளின் தேடுதல்களைப் புறக்கணித்து அலட்சியம் செய்கிறார்கள், அவர்களுடன் குறைந்த நேரத்தை செலவளிப்பதுடன் அவர்களது கல்வி மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் போதியளவு கவனம் செலுத்தாதவர்களாகவே காணப்படுகிறார்கள், பெண் பிள்ளைகளின் அபிப்பிராயம் கேட்காது பாரிய செலவில் பூப்புனித நீராட்டுவிழாக்களை நடாத்தி, அப்பிள்ளைகளை அவமானப்படுத்தி துன்புறுத்துகிறார்கள்,  பெற்றோர்கள் பிள்ளைகளிற்கு சிறுவயது முதற் கொண்டு மற்றவர்களின் சாதிகளைச் சொல்லிக்கொடுத்து வேற்றுமையுணர்வோடு வாழப் பழக்குகிறார்கள், தாம் சார்ந்த மதத்தை குழந்தைகளின் புரிதலின்றி அவர்களிற்குள் புகுத்தி மூளைச்சலவை செய்து அவர்களின் சுயமான தெரிவுகளைக் கட்டுப்படுத்துகிறார்கள், முக்கியமாக  பெற்றோரின் விருப்பத்திற்கே  திருமணம் செய்துவைப்பதால் புரிதல் இன்றி குடும்ப வாழ்வில் பிரச்சனைகள், குழந்தைக்கு முன்னால் பெற்றோரின் நடைமுறை போன்றவையும் பிள்ளைகளை மிகவும் தாக்குகின்றன. மற்றும் பிள்ளைகள் தாய்மொழியை தெரிந்திருக்க வேண்டியதன் அவசியத்தினை  தனிப்பட்ட அனுபவங்களினுடாகவும், உதாரணங்களுடனும் விளக்கினார்.
ஜெயா பத்மநாதன்
‘பெண்ணியவாதிகளும் அவர்களது செயற்பாடுகளும்’ என்ற தலைப்பில் ஜெயா பத்மநாதன்  பெண்கள் வீட்டிலும், வெளியிலும் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள், சமூகவலைப்பின்னல்கள் மூலம் பெண்கள் மீது தொடரப்படும் அச்சுறுத்தல்கள், அவற்றிலிருந்து மீள்வதற்கு அவர்கள் மேற்கொள்ளக் கூடிய எதிர்நடவடிக்கைகள்  என்பவற்றைத் தெரிவித்ததுடன், எழுத்துலகில் முற்போக்கான கருத்துக்களை வெளியிடும் ஆண்கள் தமது சொந்த வாழ்வில் பெண்களைத் துன்புறுத்துபவர்களாகவே உள்ளனர் என்றும் இவர்களது நடவடிக்கைகளை புகலிடத்திலுள்ள பெண் எழுத்தாளர்களோ பெண்கள் சந்திப்போ கண்டனத்துக்குள்ளாக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார். இப்பெண்கள் வாழ்வில் விரக்தியடைந்து சோர்வுறாமல் தமக்கொரு வாழ்க்கைத் துணையைத் தேடி வாழ்ந்து காட்ட வேண்டுமென்றும் கருத்துத் தெரிவித்தார். மேலும் பெண்கள் சந்திப்பு தனித்து பெண்களிற்காக நடாத்தப்படாமல் ஆண்களையும் இணைத்து, பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளை அவர்களுடன் கலந்தரையாடுவதன் மூலம் தான் ஒரு தீர்வைக் காணலாமென்றும் தெவிவித்ததுடன், பெண்கள் சந்திப்பு இதுவரை சாதித்தது என்னவென்றும், பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள்  விலகியதன் காரணம் என்ன? போன்ற கேள்விகளையும் எழுப்பினார்.

அதைத்தெடர்ந்து நடைபெற்ற கலந்தரையாடலில், நீங்கள்  ஆரம்பத்திலிருந்த  கருத்தோட்டத்திற்கும், சந்திப்பில் கலந்து கொண்டதன் பிற்பாடும் மாற்றமேற்பட்டுள்ளதாவென்று  எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், ஆம் மாற்றம் இருக்கிறது என்று பதிலளித்தார். பெண்கள் அவர்கள் விரும்பும் பட்சத்தில் மாத்திரமே  ஒரு ஆணுடன்டன் சேர்ந்து வாழவேண்மென்றும், சமூகத்திறகாக  ஒரு உறவைத்தேடிக் கொள்ளத் தெவையில்லையென்றும்,  உடலுறவின் அவசியத்திற்கு திருமணம் செய்து கொள்ளவெண்டுமென்ற அவசியமில்லையென்றும், குடும்ப வாழ்வு பெண்களின் செயற்பாடுகளை முடக்கி அவர்களது முன்னேற்றத்திற்கு தடையாக  இருப்பதாகவும்  பெண்களிடமிருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

பெண்கள் சந்திப்பு பற்றி ஜெயாபத்மநாதனால் வைக்கப்பட்ட கருத்துகளிற்கு, பெண்கள் இதை ஆரம்பித்தன் நோக்கம், அதன் தனித்துவம், அதன் கடந்கால நடவடிக்கைகள் பற்றிக் கூறப்பட்டதுடன், பெண்கள் சந்திப்பானது ஒரு அமைப்பு வடிவத்திற்குள் நின்று இயங்காத பட்சத்தில்  அதற்குரிய கூறுகளை அது கொண்டிராது எனவும், அதில் கலந்து கொள்வதும், விலகுவதும் அவரவர் சுதந்திரத்திற்கு உட்பட்டதெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
தர்மினி
’சுனிலா அபயசேகர மானுடத்திற்கான ஒரு குரல்’ என்ற நிகழ்வினை ஜேர்மனியில் இருந்து கலந்துகொண்ட உமா அவர்கள் நிகழ்த்தினார்கள்.  சமீபத்தில் தனது 61 வயதில் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு மரணித்த மனிவுரிமைவாதியும் , பெண்ணியவாதியுமான சுனிலா அபயசேகரவினால் இலங்கையிலும், சர்வசேவ ரீதியாகவும்  மேற்கொள்ளப்பட்ட அரசியல் மற்றும் கலைச் செயற்பாடுகள் பற்றியும், குறிப்பாக Global campaign for human rights, Women and Media, INFORM,  Centre for Women Global Leadership ஆகிய அமைப்புகளுடன் இணைந்து அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பற்றியும், இனப்பிரச்சினைகளிற்கு தீர்வு காணும் முகமான சமாதான உடன்படிக்கைககளின்போது பெண்களின் சமபங்களிப்பு, யுத்தங்களின்போது பெண்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்துவதை வலியுறுத்தும் 13.25வது பிரேரணையை ஐ.நாவின் பாதுகாப்புச் சம்மேளனத்தில் அமுலாக்குவதில்  முன்னுழைத்தவர்களில் சுனிலாவின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிடப்பட்டது. இலங்கையில் கிராமிய மட்டங்களிலுள்ள பெண்களிடம் சென்று  அவர்களின் பிரச்சினைகளிற்கு செவிமடுத்து, அவர்களை அமைப்பாக்குவதிலும், அரசியல் மயப்படுத்துவதிலும் கூடிய அக்கறை செலுத்தியதோடு, 1980களின் இறுதிக்காலகட்டங்களில் இலங்கையில் அரசினாலும், ஜே.வி.பியினராலும் இழைக்கப்பட்ட மனிவுரிமை மீறல்களிற்கு எதிராகவும், அவற்றைச் சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்துவதற்கும் சுனிலா கொலை மிரட்டல்களையும் மீறி செயற்பட்டார் என்றும் குறிப்பிட்டார். மேலும்  அண்மைக் காலம் வரை தற்போதைய மகிந்த ராஜபக்சவின் ஜனநாயக விரோத அரசின் மனிவுரிமை மீறல்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், போர் குற்றங்கள், கொலை  என்பவற்றை கண்டித்து ஐ.நாவின் மனிதவுரிமை சம்மேளனத்திலும், சர்வதேச ரீதியாகவும் பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன், இலங்கையில் தொடர்ச்சியாக காணாமல் சென்றவர்களின் தகவல்களை  நாடெங்கும் சென்று திரட்டி அவற்றை ஆவணப்படுத்தியதோடு அவர்களிற்காகச் சர்வதேச ரீதியாக குரல் கொடுத்தாரெனவும், அதுமாத்திரமின்றி சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கக்கூடிய பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள், எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ஓரினச்சேர்கையாளர்கள் போன்றவர்களின் உரிமைகளிற்காகவும் குரல் கொடுத்தாரெனவும் பதிவுசெய்தார்.

பெண்ணியவாதியும் செயற்பாட்டாளருமான சுனிலா அபயசேகர அவர்கட்கு ஐ.நா. சபையின் மனிதவுரிமைவாதிகளுக்கான விருது 1998 இலும், 2007 இலும்  கிடைக்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.
மல்லிகா
அந்நிகழ்வின் நிறைவாக மல்லிகா, சுனிலா அபயசேகர  பற்றித் தான் எழுதிய ஆங்கில மொழிக் கவிதையை வாசித்தார்.

பெண்களின் இறுதிநிகழ்வாக நாம் எதிர்கொள்ளும் இரட்டைக் கலாச்சார சூழல் என்ற நிகழ்வில் புகலிடத்தில் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த அர்ச்சுனி, பிருந்தா, சிந்து, மது, வேர்ஜினி மற்றும் வேறு சிலரும் தமது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்தனர். முதலில் கருத்துத் தெரிவித்த அர்ச்சுனி பிரான்சில் வாழும் தமிழ்ப் பிள்ளைகள் இரட்டைக் கலாசாரங்களிற்கிடையில் சிக்கித் தவிர்க்க வேண்டியவர்களாகவே உள்ளனரென்றும், வீடுகளில் புறச்சூழலிருந்து அந்நியப்பட்டு தமிழ்ச் சூழலிற்குள் வாழ்வதால் பாடசாலையில் ‘பிரான்ஸ்’ சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்படும் போதோ அல்லது நண்பர்களுடன் கதைக்கும் போதோ தமிழ்ப் பிள்ளைகளால் அவர்களுடன் இணைந்து கலந்துரையாடுவதற்கான தகவல்கள் போதமையினால் அவர்களின் உரையாடல்களில் கலந்து கொள்ள முடிவதில்லை. பெண் பிள்ளைகளிற்குப் பெரியளவில் செலவளித்துப் பூப்புனித நீராட்டுவிழாக்களைக் கொண்டாடுவது, பிள்ளைகளை மன ரீதியாக பாதிக்கின்றது, அதன்பிறகு சிறுவயதில் அணிந்த மாதிரி ஆடைகளை அணியவிடாது கட்டுபடுத்தப்படுவதோடு, சமையலறையில் உதவிகள் செய்வதற்காக விட்டு விடுவார்களெனவும், வகுப்பில் ஒன்றாகப் படிக்கும் பிரெஞ்சுத் தோழிகளுடன் வெளியிடங்களிற்கு செல்லும் வேளைகளில் பெற்றோர்கள் தொடர்ச்சியாக தொலைபெசி மூலம் தொடர்பு கொள்வது  நண்பர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்துகிறது, காதலிக்கும் போது காதலர்களுடன் சுற்றுலா அல்லது விடுமுறையை கழிப்பதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை, தாலி கட்டித் திருமணம் செய்த பின்புதான்  அதற்கு அனுமதி வழங்கப்படுமெனவும், திருமணங்களின் போது சாதிவேறுபாடு பேணப்படுவதோடு மற்றும் சீதனம் போன்ற பிரச்சினைகளிற்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் எனவும், சில பெற்றோரே வலிந்து பணம், வீடு போன்றவற்றை தமது கௌரவத்தை பேணுவதற்காக வழங்கி, சீதனத்தைப் புலம்பெயர்ந்த சமூகங்களிலும் பேணுகிறார்களெனவும்  கருத்துகளைத் தெரிவித்தார்.

பிரான்சில பிறந்து வளர்ந்தவர்களாக  இருந்தாலும் காதல் அல்லது திருமணம் என்று வரும் போது தமிழ் இளைஞர்களைத் தெரிவு செய்வதேன்? என்ற கேள்விக்குப் பதிலளித்த பிருந்தா, தாம் இரட்டை அடையாளங்களுடன் வாழ்வதாகவும் ,இங்கு வேலை செய்யும் இடங்களில் தம்மை இலங்கையராகவே பார்ப்பதாகவும், அதே வேளையில் இலங்கைக்குச் செல்லும் போது பிரான்ஸ் அடையாளத்தை தம்மேல் பொருத்திப் பார்க்கிறார்களென்றார். ஆனால் குடும்ப வளர்ப்புமுறை,தமிழர்கள் சுற்றியமைந்த சூழல், உணவுமுறை, இரசனைகள் தமிழ் இளைஞர்களுடன் ஒன்றிப்போகின்றன எனத் தெரிவித்தார்.

மது அவர்கள் தமது கருத்தைத் தெரிவிக்கையில், நாங்கள் பெரிய பெண்கள் ஆகியவுடன் நாங்கள் எங்கு போகின்றோம், யாருடன் கதைக்கின்றோம், என்ன செய்கின்றோம் என்பவற்றை எல்லாம் வேவுபார்க்கின்றார்கள், அதைவிட எல்லாவற்றையும் சந்தேகத்துடனேயே பார்க்கின்றார்கள். எங்களுடன் படிக்கின்ற ஏனையவர்கள் தங்கள் குடும்பத்துடன் எங்காவது சந்தோசமாக விடுமுறையை கழித்துக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் எமது பெற்றோர் அந்த விடுமுறைக்கால வேலையையும் சேர்த்து எடுத்து வேலை செய்துகொண்டிருப்பார்கள். அவ்விடுமுறைக் காலத்தை நாம் பூட்டிய வீடுகளினுள்ளே கழிக்கிறோம் எனக் கூறி, தமிழ்ப் பெற்றோரின் வேலை வேலை என்று அலையும் போக்கை மனவருத்தத்துடன் பதிவு செய்தார்.

வேர்ஜினி  அவர்கள் தமது கருத்தைக் கூறும்போது, நான் பூப்புனித நீராட்டு விழாவை மிகவும் விரும்பினேன், ஏனெனில் அப்போது தான் உறவினர்கள் எல்லோரும் வீட்டுக்கு வருவார்கள், அழகழகான உடைகள் அணிவதையும் நான் விரும்பினேன். ஆனால் போட்டோக்கள் விதம் விதமாய் செயற்கைத் தனத்துடன் எடுக்கும் போதுதான் கொஞ்சம் அவமானமாய் உணர்ந்தேன் என்று மிகவும் வெளிப்படையாகப் பேசிய அவர் சில விடயங்களைப் பெற்றோர் திணிப்பதில்லை, அதை நாங்களாகவே ஏற்றுக்கொள்கின்றோம். உதாரணத்துக்கு பொட்டுவைப்பது எனக்கு விருப்பமானது எனவும் கூறினார்.

மேலும் சிந்து அவர்கள் பேசும்போது, ஒவ்வொரு வீட்டுப்பின்னணிதான் இந்த ஒடுக்குமுறைக்கு காரணமாகிறது. உதாரணமாக எனக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளையும் எனது அம்மா விதித்ததில்லை. அது அவரது வாழ்க்கையில் இருந்து அவர் எடுத்த முடிவாக இருக்கலாம்.

கலந்து கொண்ட ஏனையோரும் தமது அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டனர்.  புகலிட வாழ்வின் இரண்டாந் தலைமுறைத் தமிழ்ப் பிள்ளைகள் பெண்கள் சந்திப்பில் இணைந்து கொண்டது  இச்சந்திப்பு தொடர்ந்து நிகழ்வதற்கு வலு சேர்க்கும் காரணியாகவே கொள்ளவேண்டும்.

அடுத்த பெண்கள் சந்திப்பு நிர்மலாவின் வேண்டுதலுக்கிணங்க லண்டனில்  நடைபெறுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

நன்றி - தூமை
...மேலும்

Oct 19, 2013

பாலியல் லஞ்சம் கோரும் இலங்கை அரச உத்தியோகத்தர்கள்


வேலையை துரித கதியில் முடித்து கொடுப்பதற்காக தம்மிடம் வரும் பெண்களிடம் பாலியலை லஞ்சமாக கோரும் அரச உத்தியோகத்தர்கள் பற்றி இலங்கை லஞ்ச ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் இதுவரை பதியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பாலியல் லஞ்சம் கோரும் அரச அதிகாரிகள் குறித்து தொடர்ச்சியாக வரும் முறைப்பாடுகள் குறித்து தாம் அதிகள் கவனம் செலுத்தி வருவதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் 18 ஒக்டோபர் அன்று சிங்கள பத்திரிகைகளுக்கு வழங்கிய தகவல்களில் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் இதுபோன்ற பாலியல் லஞ்சம் கோரும் நபர்கள் குறித்து எந்த தயக்கமும் இன்றி உடனடியாக 0112586841 என்கிற லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறையிடுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
...மேலும்

Oct 18, 2013

புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர்


மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து போயினர். கலப்பு மணம் புரிந்து கணவனைப் பிரிந்து வாழ்ந்த தாய்க்கு மகளாகப் பிறந்ததனால் இவருக்கும் ஊரின், உறவின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது.

அருந்ததி ராய்க்கு சமூகம் எதிர் உலகமாகத்தான் முதலில் அறிமுகமாகியது. பின்னர் எல்லாவற்றையும் மீறி நீலகிரியில் பள்ளிப்படிப்பை முடித்து தில்லி பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பில் சேர்ந்தார். உடன் படித்த ஒருவரைக் காதலித்து மணந்த தால் படிப்பு பாதியில் நின்றது. அந்த வாழ்க்கையும் நான்கு ஆண்டுகள்தான் நிலைத்தது. அவரிடமிருந்து பிரிந்த பின்னர் “பிரதீப் கிரிஷன்’ என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து திரைப் படம் எடுத்தனர். இவ்வாழ்க்கையும் இவருக்கு நிலைக்க வில்லை. இவரின் கட்டற்ற சிந்தனை அடக்குமுறைக்கு அடங்காதவராக இவரை வடிவமைத்திருந்தது.

மேலும் புரட்சிச் சிந்தனை மிக்கவராகவும் இவர் இருந்தார். இவரின் முதல் ஆசிரியரே இவரின் தாய்தான். “உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள். நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிற பாடம் அவருக்குச் சூழலே கற்றுக் கொடுத்தது. அதனால் எல்லாவற்றின்மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகள் என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி படைப்புகளின் மூலம் பலரின் கவனம் பெற ஆரம்பித்தார். இந்நிலையில் தான் 1997-ல் அவர் எழுதிய “த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’ (The God of Small things) என்னும் நாவல் புக்கர் பரிசினைப் பெற்றது. புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர்தான்.

...மேலும்

Oct 16, 2013

“UNCLE TOM”S CABIN” : கறுப்பு அடிமைகளின் கதை - கேஷாயினி


அமெரிக்காவின் அழியாத வடுவாக சுட்டப்படுவது ஒரு காலகட்டத்தில் அத்தேசத்தில் நிலவிய “அடிமை முறை”. அடிமைகளாக கறுப்பினத்தவர்களை விற்பதும் கசையடிகள் கொடுப்பதும், அடிமைகளிடம் அனுதாபங்காட்டுபவர்களுக்கு கடுந்தண்டனைகள் விதிப்பதும், ஏன் வெள்ளையர்களுக்கெதிரான கறுப்பினத்தவர்களின் சாட்சி கூட எடுபடாதவொரு நிலை ஒரு காலத்தில் காணப்பட்டது. தங்களுக்குள்ள உணர்ச்சிகள் கறுப்பினத்தவர்களுக்கு இருக்கக்கூடாதென்று கூட கருதினார்கள். அடிமைகளை தொடுவது கெடுதல் என்று நினைத்திருந்தார்கள். “சிலர் அதிகாரம் பண்ணவும் சிலர் சேவை செய்யவும் பிறந்தவர்கள்” என்ற எண்ணம் மேலோங்கி காணப்பட்டது.

அன்று இவ்வாறானதொரு நிற அடிமைத்தனம் இடம்பெற்ற காலப்பகுதியில் கறுப்பினத்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஒரு பெண் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தாள்.

மிருகங்களைப் போல கறுப்பினத்தவர்கள் கொட்டடிகளில் அடைக்கப்பட்டும், தரம் பிரித்து விற்கப்பட்டுக்கொண்டும் இருந்த காலமது. அன்று அமெரிக்க நாட்டில் இக்கொடுமையை நியாயப்படுத்தவும் ஒரு சட்டம் இருந்தது. இக்காலகட்டத்தில்  “UNCLE TOM”S CABIN” என்ற நாவலின் ஊடாக எல்லோருக்கும் இவ் அடிமைத்தனத்தை புடமிட்டுக்காட்டியவர்தான் இந்நூலின் நாவலாசிரியர் “ஹரியட் பீச்சர் ஸ்டவ்” என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்.

ஹரியட் பீச்சர் ஸ்டவ் 1811 இல் மிகவும் சமயப்பற்றுடைய குடும்பம் ஒன்றில் பிறந்தார். அக்காலப்பகுதியில் தான் அமெரிக்காவில் “தப்பிக்கும் அடிமைகளுக்கான சட்டம்” இயற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட தாக்கங்களினால் உந்தப்பட்டு இவர் எழுதிய நாவலே “ருNஊடுநு வுழுஆ”ளு ஊயுடீஐN” இந்நாவல் இதுவரை 40ற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கமே “கறுப்பு அடிமைகளின் கதை” எனும் நாவல்.

வெள்ளையர்களினால் குலைக்கப்பட்ட கறுப்பினத்தவர்களின் குடும்பங்கள், தமது குழந்தையை தாய்மார்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமை, பட்டினி போட்டு பச்சிளம் குழந்தைகளை கொன்ற கொடுமை, தமது குழந்தை படும் வேதனை பெறுக்காமல் தாமே தம் குழந்தைகளைக் கொன்ற கொடுமைகள் என்று பலவித கொடுமைகளை அனுபவிக்கும் வெவ்வேறு பாத்திரங்களால் பின்னப்பட்டதாக இந்நாவலின் கதை செல்கிறது. உடல் உழைப்பை கொடுப்பவன் தாழ்ந்தவன் என்கின்ற மேலைத்தேய மனப்பாங்கையும் இந்த அநீதியை இயல்பானது என்று நியாயப்படுத்தி பாதுகாப்பு கொடுத்த சட்டங்களையும் அதன் பரிமாணங்களையும், பரிணாமங்களையும் இந்த நாவல் அலசுகிறது. 

இதன் முக்கிய பாத்திரங்களாக டாம் என்ற கறுப்பின அடிமையும் ஏவா என்ற சுருக்கப் பெயர் கொண்ட ஏவாஞ்சலின் என்ற சிறுமியும் சித்தரிக்கப்படுகின்றார்கள். ஏவா பிரபுவின் ஒரே பெண்ணாக இருந்தாலும் சிறுவயதிலேயே அவள் இந்த கொடுமைகளை கண்டு வருந்துவதும் இறக்குந்தறுவாயிலும் கூட தன் சிறு கைகளில் தந்தையிடம் அடிமைகளுக்கு விடுதலை வழங்குவதாக சத்தியம் பண்ணச் சொல்வதும் அவளுடைய வயதுக்கு மீறிய வளர்ச்சியை காட்டுகின்ற போதும் வாசிப்பவர்களின் மனங்களில் தங்கிவிடுகின்றாள். நீலக் கண்கள், தங்கநிற சுருள் முடி, வட்டமுகம், அழகிய கண்ணங்கள் என நம் முன் உருக்கொண்டு விடுகின்றாள். 

இந்நாவலின் இன்னுமொரு சிறப்பு என்னவெனில் பிரச்சினைகளை அலசுவதோடு நின்று விடாது தீர்வுவுகளையும் முன்வைத்திருக்கிறது. வழமை போன்று அடிமைகளுக்கு சுதந்திரமளித்தல் என்ற யதார்த்த முடிவுடன் நின்றுவிடவில்லை இதனாசிரியர். ஒரு சமூகத்தின் பிரச்சினைக்கு தனி மனித முடிவு மட்டும் தீர்வாகிவிட முடியாது என எடுத்துரைக்கும் ஆசிரியர் அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்துகின்றார். 

இந்நாவலின் தனித்தன்மை அடிமைத்தனத்தினை ஆன்மீக ரீதியாக அனுகியிருப்பது. இதில் இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால் எந்தவிரு சமுதாயத்தின் முரண்பாடுகளை கருவாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டதோ அவ்விரு சமூகத்தின் இருபாத்திரங்களுமே கதாபாத்திரங்களாவதுதான். 

இந்நூலின் ஆசிரியரான ஹரியட் பீச்சர் ஸ்டவ் பற்றி ஆபிரகாம் லிங்கன் “இந்த உள்நாட்டு யுத்தத்தை உருவாக்கிய புத்தகத்தை எழுதிய சிறு பெண்” என்று குறிப்பிட்டார். அதேபோன்று ஜவர்கலால் நேரு தனது வாழ்க்கை வரலாற்றிலும் இந் நாவல் பற்றி சிறப்பாக சித்தரித்திருக்கின்றார்.

இப்புத்தகம் எழுதப்பட்டு பல தசாப்தங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் இன்று கூட அடிமைத்தனத்தின் படிமங்கள் நம்மிடையே நிலவிக்கொண்டுதானிருக்கின்றன. இதனை அகற்ற நாம் உழைப்பதே “அடிமைத்தனம் அனைத்து கொடுமைகளின் சாறு” என இடித்துரைத்த எழுச்சி மிகு இப்பெண் எழுத்தாளருக்கும் இவ் அற்புதமான நாவலிற்கும் அளிக்கும் அங்கீகாரமாயிருக்கும். 

...மேலும்

Oct 13, 2013

மலையக தமிழர்கள் மீதும் திணிக்கப்படும் கட்டாய கருக்கலைப்பு


இலங்கையின் வட கிழக்கு பகுதியில் இடம்பெற்ற நேரடி தமிழ் இன அழிப்பு சம்பவங்கள்இன்று சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறி சர்வதேச அரசியல் , மற்றும் மனித உரிமை அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .
இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் மத்திய மலைநாட்டின் மலையகப் பகுதிகளிலும் தமிழ் இன அழிப்புக்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன .

ஆனால் இவை மறைமுகமாக இடம்பெற்று வருகின்றன . மத்திய அரசாங்கத்தின் உதவி ஒத்துழைப்புடன் இந்த இன அழிப்பு இடம்பெற்று வருகின்றமை அதிர்ச்சிக்குரியதாகும் .

மலையகத்தில் கட்டாய கருத்தடை மூலம் இந்த இன அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது . இந்தக் கட்டாய கருக்கலைப்பு குறித்து மலைய சிவில் அமைப்புக்கள் பல தடவைகள் வலியுறுத்தி வருகின்ற போதும் அதனை அரசியல் தலைவர்கள் கண்டுகொள்வதாக இல்லை .

குறிப்பாக கல்வி அறிவு அற்ற தோட்டப் புறங்களில் இந்த கட்டாய கருத்தடை அதி வேகமாக இடம்பெற்று வருகிறது . இரண்டு பிள்ளைகள் பெற்ற பெண் ஏதோ ஒரு காரணத்தை காட்டி கருத்தடைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார் .

இந்த கட்டாய கருக்கலைப்பை உறுதி செய்யும் வகையிலான சம்பவமொன்று அண்மையில் நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை - கோட்லொட்ஜ் தோட்டத்தில் பதிவாகியுள்ளது .

கந்தப்பளை கோட்லோட்ஜ் தோட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 30 ம் திகதி தோட்ட நலன்புரி உத்தியோகத்தரால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது .

அதாவது ஒக்டோபர் 1 ம் திகதி நுவரெலியாவில் இருந்து டெங்கு பரிசோதனைக்கு உடல் நல வைத்திய அதிகாரி வருகிறார் . அதனால் அனைவரும் தவறாது சமுகமளிக்க வேண்டும் . குறிப்பாக 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் கட்டாயம் சமுகமளிக்க வேண்டும் என்பதே அந்த அறிவிப்பாகும் .

அதன்படி . ஒக்டோபர் முதலாம் திகதி கோட்லொட்ஜ் தோட்ட சுகாதார நிலையத்திற்கு நுவரெலியாவில் இருந்து உடல் நல வைத்திய அதிகாரி , தோட்ட நலன்புரி உத்தியோகத்தர் , குடும்ப நல மருத்துவ மாது ஆகியோர் சென்றுள்ளனர் .

காலையில் இருந்து நடைபெற்ற இந்த மருத்துவ சிகிச்சையில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தைச் சேர்ந்த கோட்டை புஸ்பராணி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயும் சிகிச்சைக்கு சென்றிருந்தார் .

அங்கு குறித்த பெண்ணுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது . குறித்த பெண் மாதவிடாய் காலத்தில் இருந்துள்ள போதும் அதனையும் கருத்திற் கொள்ளாது கருத்தடை செய்யப்பட்டுள்ளது .

மாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . அதன் பின் வீடு திரும்பிய புஸ்பராணிக்கு விடாது இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது . வந்த அனைவருக்கும் சிறுநீர் பரிசோதனையின் பின் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . ஆனால் புஸ்பராணிக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்படவில்லை .

அதிக இரத்த ஓட்டம் காரணமாக புஸ்பராணி தனது கணவர் மற்றும் உறவினர்களால் அன்றைய தினம் மாலை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் .

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் நினைவிழந்து மயக்கமடைந்துள்ளார் .

நுவரெலியா வைத்தியசாலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இரவே அவர் கண் விழித்துள்ளார் . கடந்த 5 ம் திகதியே குறித்த பெண் வீடு திரும்பியுள்ளார் .

இந்த சம்பவத்தை அடுத்து கொதிப்படைந்த குறித்த பெண்ணின் கணவர் முதலில் அஞ்சிய போதும் பின்னர் கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார் . அந்த முறைப்பாட்டின் பொலிஸ் பிரதி இணைக்கப்பட்டுள்ளது .

தனது மனைவிக்கு நேர்ந்த அசாதாரண நிலைக்கு நியாயம் வேண்டி கணவர் நீதிமன்றம் செல்ல முயற்சித்தார் .

எனினும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றைய தினம் புஸ்பராணி மற்றும் அவரது கணவரை அழைத்து பலவாறு மிரட்டல் விடுத்து நீதிமன்றம் செல்லாது சமரசமாக செல்லுமாறு கோரியுள்ளனர் . மேலும் தோட்டத் தலைவர்கள் மூலமும் இவ்விருவரும் அச்சுறுத்தப்பட்டு உள்ளனர் .

எனவே இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மலையக அரசியல்வாதிகள் எவரும் இதுவரை முன்வரவில்லை . இது குறித்து பல அரசியல் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் , பாராளுமன்ற உறுப்பினருமான வி இராதாகிருஸ்ணனின் பிறந்த ஊர் கந்தப்பளை - . கோட்லோட்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது .

இவ்வாறு மலையகத்தில் வெளிச்சத்திற்கு வராமல் பல கருத்தடைச் சம்பவவங்கள் இடம்பெற்று வருகின்றன . கடந்த முறை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் மலையக மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு இந்த கட்டாயத் கருத் தடையும் ஒரு மறைமுக காரணம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்த வண்ணமுள்ளது . இது தொடர்ந்தால் வட கிழக்கிற்கு ஏற்பட்ட நிலை மலையகத்திலும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்ற அபாய செய்தி காத்திருக்கிறது .

நன்றி - ttnnews
...மேலும்

Oct 11, 2013

பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறி வரும் வட மாகாணம்


வட மாகாணத்தில் பாலியல் தொழில் மிகுந்த முனைப்புடன் வளர்ச்சியடைந்துள்ளதாக ஐ.ஆர்.ஐ.என். தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னைய யுத்த வலயத்தின் பெரும்பான்மையான பெண்கள் குடும்பத் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர்.

யுத்ததினால் கணவனை இழந்த, காணாமல் போன அல்லது கைது செய்யப்பட்ட பல பெண்கள் குடும்பச் சுமையை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

போதியளவு வாழ்வாதார வழிகள் இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் சுமார் 7000 பெண்கள் இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

யுத்தத்தில் கணவனை இழந்த அல்லது காணாமல் போன பல குடும்பத் தலைவிகள் விருப்பிமின்றியேனும் பாலியல் தொழிலை தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

2012ம் ஆண்டு அரசாங்க மதிப்பீடுகளின் அடிப்படையில் வடக்கில் 59000 குடும்பங்களுக்கு பெண்கள் தலைமை தாங்குகின்றனர்.

தங்களது கணவர், சகோதரர், தந்தைமார் சுமந்த பொருளாதாரச் சுமையையே இவர்கள் இவ்வாறு சுமக்கின்றனர்.

வறுமை மற்றும் வாழ்வாதார வழிகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட தன்மை பெண்களை வர்த்தக ரீதியான பாலியல் தொழில் நோக்கி உந்துகின்றது.

வடக்கில் அதிகளவில் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருப்பதும், அபிவிருத்திப் பணிகளுக்காக அதிகளவான தெற்கைச் சேர்ந்த ஆண்கள் வடக்கை நோக்கி நகர்ந்துள்ளதும் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட களம் அமைத்துக் கொடுள்ளது என பாலியல் தொழிலாளர் குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் தலைவி விசாக தர்மதாச தெரிவித்துள்ளார்.

யுத்த நிறைவைத் தொடர்ந்து அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் வடக்கை நோக்கிச் சென்று தங்களது சொந்தங்களை பார்வையிட்டு வருவதாகவும் இதுவும் வர்த்தக ரீதியான பாலியல் தொழில் சூடுபிடிக்க மற்றுமொரு ஏதுவாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான ஜாதி மற்றும் வகுப்புக் கலாச்சாரத்தை கொண்டமைந்த வடக்கில் பாலியல் தொழில் தீண்டத் தகாத விடயமாக காணப்பட்டு வந்தது.

எனினும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அதிகளவான ஆண்களை குடும்பங்கள் இழக்க நேரிட்டதனால் சமூக கலாச்சார கட்டுப்பாடுகள் களையப்பட்டு, பாலியல் தொழிலை அங்கீகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

கல்வி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை மாறி இன்று பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் இன்னமும் பாலியல் தொழில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை.

பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் விவகாரத்தை சமூக் காரணிகளுக்காக தொடர்ந்தும் மூடி மறைப்பது பொருத்தமாகாது என மன்னார் மகளிர் அபிவிருத்தி மையத்தின் ஸ்தாபகர் செரீன் தாருர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான வருமான வழிகளை அமைத்துக்கொடுப்பதன் மூலம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதனை தடுக்க முடியும் என யாழ்ப்பாண மகளிர் அபிவிருத்தி மையத்தின் தலைவி சரோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வேறும் தொழிலில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு வேறு வழிகிடையாது என தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பாதுகாப்பான பாலுறவு தொடர்பில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என சமூக சேவைகள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

GTN
...மேலும்

Oct 10, 2013

பணிப்பெண்களாக சென்றவர்களில் 463 பேர் சடலங்களாகத் திரும்பினர்!

பணிப்­பெண்­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்­ற­வர்­களில் 463 பேர் கடந்த வரு­டத்தில் சட­லங்­க­ளாக அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 300க்கும் அதி­க­மானோர் 30 வய­துக்கும் குறை­வா­ன­வர்கள் என ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரஞ்சன் ராம­நா­யக்க நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் கேள்­வி­யொன்றைத் தொடுத்து விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்ட தக­வலை வெளி­யிட்டார்.
 
அவர் மேலும் கூறு­கையில்,சட்­டங்­களும் கட்­டுப்­பா­டு­களும் மீறப்­பட்ட நிலையில் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக செல்வோர் அங்கு பல்­வேறு கொடு­மை­க­ளையும் சித்­தி­ர­வ­தை­க­ளையும் அனு­ப­விக்­கின்­றனர்.
 
இதே­வேளை, 2012ஆம் ஆண்டில் மாத்­திரம் மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து 463 பணிப்­பெண்­களின் சட­லங்கள் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றில் 300க்கும் அதி­க­மா­னவை 30 வய­துக்கும் குறை­வான பெண்­க­ளு­டை­ய­தாகும். இவர்கள் மார­டைப்பின் கார­ணத்­தி­னா­லேயே மர­ணித்­தி­ருப்­ப­தா­கவும் கூறப்­பட்­டி­ருக்­கின்­றது

இவ்­வாறு பணிப்­பெண்­க­ளாக செல்வோர் உட­ல­ளவில் ஆரோக்­கி­ய­மா­ன­வர்கள் என்ற மருத்­துவ சான்­றிதழும் வழங்கப்படு­கின்­றது. நிலைமை இவ்­வா­றி­ருக்கும் போது எப்­படி இவ்­வ­ளவு பெரும் தொகை­யினர் மார­டைப்பால் மர­ணிக்க முடியும்?

இலங்­கைக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கின்ற உடல்­களில் காயங்கள் காணப்­ப­டு­கின்ற அதே­வேளை உடலின் சில உறுப்­பு­களும் இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, இது குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன், பணிப்பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

 நன்றி - தமிழ்லீடர்
...மேலும்

Oct 8, 2013

சவூதியில் ஆணி அடித்து ரத்தம் எடுத்த காட்டுமிராண்டி எஜமானர்கள் - வெரோனிகா


சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற மலையகப் பெண்ணின் உடலில் ஆணிகள் ஏற்றி இரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த கொடுமைகளுக்குப் பின் 4ஆம் திகதி நாடு திரும்பிய அந்த தமிழ் பெண் விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் ஒக்டோபர் 8ஆம் திகதி பலாங்கொட பெரிய ஆஸ்பத்திரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

அழகுமலை பாப்பாத்தி எனும் இந்த 37 வயது பெண், 4 பிள்ளைகளின் தாயாவார். பலங்கொடையில் உள்ள தேயிலை தோட்டமான எக்ஸ் தோட்டத்தை சேர்ந்த இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுதிக்கு பணிபெண்ணாக சென்றிருக்கிறார். இது வரை எந்த சம்பளமும் அவருக்கு வழங்கப்படாத நிலையில் அது குறித்து கேட்கப்பட்டபோதெல்லாம் கொடூர சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

கொதிக்க வைத்த எண்ணையை உடலில் ஊற்றியிருக்கிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் ஆணிகளை அடித்து இரத்தத்தை சிந்தைவைத்து அதனை போத்தலில் சேகரித்திருக்கிறார்கள். பிறப்புறுப்பில் போத்தலை திணித்து காயப்படுத்தியும் இரத்தம் சிந்த வைத்திருக்கிறார்கள். காலையில் எடுக்கப்படும் இந்த இரத்தத்தை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று தனக்கு தெரியாதென்றும் கூறி கதறுகிறார் பாப்பாத்தி. பல நாட்கள் பட்டினியால் அவதிப்பட்டிருக்கிறார். 

உடலில் பல தீக்காயங்களும், ஆணியேற்றப்பட்ட காய அடையாளங்களுக்கு வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இடது கையின் தோல்பட்டையும் உடைந்திருப்பதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இன்று பல சிங்கள நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டிருந்த போதும் எந்தவொரு இலங்கை தமிழ் ஊடகமும் இது குறித்து எதுவும் வெளியிடவில்லை. மலையக தோட்டப் பெண்ணாக இருந்தது தான் ஒரே காரணமோ தெரியவில்லை.

இதனை வெளிக்கொணர்ந்த லக்பிம சிங்கள பெண் பத்திரகையாளரான லாலனி ரத்நாயக பலங்கொட சமூக அபிவிருத்தி மன்ற தலைவரான விகாராதிபதி இம்புல்பே விஜிதவன்ச எனும் பிக்குவின் துணையுடன் ஆஸ்பத்திரி சென்று தகவல்கள் சேகரித்து வெளியிட்டுள்ளார்.

தூதுவராலயத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் தான் வெள்ளியன்று நாடு திரும்பினேன், விமானத்தில் வைத்து மயக்கமடைந்துவிட்டேன். கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து அதிகாரிகள் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இன்னுமொரு இலங்கை பணிப்பெண் ஒருவரை புதிதாக எடுத்திருக்கிறார்கள். ஏழ்மையை போக்க என நம்பிப் போகும் எங்களுக்கு இறுதியில் இவ்வளவு தான் மிச்சம்.

உடலில் ஆணிகள் எற்றப்பட்டும், கொல்லப்பட்டும், தற்கொலைக்கு உள்ளாக்கப்பட்டும், சித்திரவதை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், வருடக்கணக்கில் எந்த சம்பளமுமின்றி கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கை பணிப்பெண்களில் கதைகள் தொடர்கதையாக நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. வெட்கங்கெட்ட இந்த இலங்கை அரசோ தொடர்ந்தும் சொந்த நாட்டுப் பெண்களை அந்நிய வருமானத்துக்காக அனுப்பிக்கொண்டேயிருக்கிறது. இந்த பெண்களுக்கு நேரும் கதி பற்றி போதிய நடவடிக்கைகள் இன்று வரை எடுக்கப்படுவதில்லை. சவூதி அரசுக்கு நோகும் எதையும் இலங்கை அரசு செய்வதில்லை என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.

ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் இந்த கொடுமைகள் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். எமக்கு கிடைக்கும் தகவல்களின்படி மாதக்கணக்கில் அவர்கள் நாட்டுக்கு அனுப்பமுடியாத நிலையில் மோசமான பராமரிப்புடன் இப்பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டாருடன் தொடர்புகொள்ளகூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாலுறவை லஞ்சமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையில் உள்ள குடும்பத்தினர் தொடர்புகொண்டு அவர்களை மீள பெற முயற்சி எடுக்கின்றபோதும், தூதரகமோ, சவூதி எஜமானர்களின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறும் விடுதலை பத்திரம் எடுக்கமுடியாதிருப்பதாக தெரிவித்துகொண்டிருக்கிறது. இரக்கமற்ற அந்த சவூதி எஜமானர்களிடமிருந்து என்று இவர்களுக்கு சொந்த நாடு திரும்பும் உரிமை கிடைக்கும்.

பாப்பாத்தியின் கதை முடிவல்ல தொடர்கதைகளில் ஒன்றே ஒன்று.

...மேலும்

Oct 5, 2013

சதி - எஸ்.ராமகிருஷ்ணன்

சதி
அபர்ணா சென்னின் சதி  திரைப்படம், ஒரு ஊமைப்பெண்ணின் கதை, 1828 ம் ஆண்டு வங்காள கிராமம் ஒன்றில் கதை நடக்கிறது

படத்தின் துவக்கமே வயதான கணவன் இறந்து போனதற்காக ஒரு இளம்பெண்ணை உயிரோடு தீயில் வைத்து எரிக்கும் சதியில் துவங்குகிறது, வங்காளத்தில் சதிக்கொடுமை மிகவும் மோசமாக பரவியிருந்தது,

ராஜாராம் மோகன்ராயின் தொடர் போராட்டங்களே இதனை முடிவிற்குக் கொண்டுவந்தன, கதையின் மையம் கணவனுக்காக ஒரு பெண் தன் வாழ்வை அழித்துக் கொள்ள எப்படி நிர்பந்திக்கப்படுகிறாள் என்பதே.

உமா, கிராமத்து இளம் பெண், ஜாதகதோஷம் உள்ளவள், அவளை யாருக்குத் திருமணம் செய்து வைத்தாலும் கணவன் சில மாதங்களிலே இறந்து போய்விடுவான், விதவையாகவே அவள் வாழ நேரிடும் என்று ஜோசியர் சொல்கிறார்,

ஆச்சாரமான குடும்பம் ஒன்றில் வாழும் உமா, வீட்டுவேலைகள் செய்வது, மாடு மேய்ப்பது, அவளுக்கு விருப்பமான பெரிய மரம் ஒன்றில் ஏறி உட்கார்ந்து கொண்டு எதையாவது பற்றி கனவு கண்டு கொண்டிருப்பது என நாட்களை ஒட்டிக் கொண்டிருக்கிறாள்,

ஜாதகத்தில் உள்ள தோஷத்தைக் கழிக்க வேண்டும் என்றால் அவளை ஒரு மரத்திற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்கிறார் ஜோதிடர்,

இதனை அவளது மாமா ஏற்றுக் கொள்ள மறுக்கிறார், ஆனால் ஊர் கூடி இது காலம் காலமாக பின்பற்றப்படும் ஒரு மரபு, மரத்திற்கு இவளைத் திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என்று வற்புறத்துகிறார்கள்,

வேறுவழியில்லாமல் அவளை ஒரு மரத்திற்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள், மணமகன் போல மரம் அலங்கரிக்கபடுகிறது, மரத்திற்கு மணமாலை சூட்டுகிறாள், மரத்தைக் கட்டி அணைத்துக் கொண்டு உறங்குகிறாள், அவள் கணவனாக உருவாகிறது அம்மரம், காமமும் தாபமும் ஏக்கமுமாக அவள் மரத்தை கட்டிக் கொண்டு அழுகிறாள்,

ஒரு மழைநாளில் உள்ளுர் ஆசிரியர் நனைந்து விடக்கூடாதே என்று குடைபிடித்துக் கொண்டு அவருக்கு துணையாகப் போகிறாள் உமா, மழையில் நனைந்த அவளுக்கு மாற்று உடை தந்த ஆசிரியர், அவளது அழகில் மயங்கி அவளைப் பலவந்தமாக அடைந்து விடுகிறார், ஒருவகையில் அந்த உடலுறவு அவள் ஏங்கிகிடந்த ஒன்று, அவளும் சம்மதிக்கிறாள், ஆசிரியரின் மனைவி ஊருக்குத் திரும்பி வந்தபிறகு உமாவை காண்பது ஆசிரியருக்கு குற்றவுணர்ச்சியை அதிகரிக்கிறது,

உமா கர்ப்பம் அடைகிறாள், அவளது கர்ப்பத்திற்கு யார் காரணம் எனச் சொல்ல மறுக்கிறாள், குடும்பமே அவளைத் திட்டுகிறது, ஒதுக்கி வைக்கிறது. அவள் கர்ப்பத்தினைக் கலைப்பதற்காக மருத்துவச்சியை வரவழைக்கிறார்கள்,

படத்தின் அற்புதமான காட்சியது, அந்த மருத்துவச்சியின் உடல்மொழியும், அவள் சொல்லும் மருத்துவமுறையும், கர்ப்பத்தைக் கலைத்துவிட்டால் தனக்கு சன்மானம் தர வேண்டும் என சொல்லும் போது உதட்டில் துளிர்க்கும் புன்சிரிப்பும் அது இயல்பாக நடக்கும் ஒரு விஷயம் என்பதை அடையாளம் காட்டுகின்றன,

மாட்டுதொழுவத்தில் அடைக்கபட்ட உமாவிற்கு மருத்துவச்சி தந்த நாட்டுமருந்து தரப்படுகிறது, இதனால் உதிரப்போக்கு அடைந்து அவள் கர்ப்பம் கலைந்துவிடும் என வீட்டுப் பெண்கள் காத்திருக்கிறார்கள்,

அன்றிரவு இடி மின்னலுடன் பெருமழை பெய்கிறது, அதில் உமா தனக்கு இழைக்கபட்ட அநீதியைப் புரிந்து கொண்டவளைப் போல மரத்தைத் தேடி ஒடுகிறாள், மரத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாள், பெருமழையில் மரம் முறிந்துவிழுகிறது, ரத்தப்போக்குடன் மரத்தைக் கட்டிக் கொண்டு இறந்துகிடக்கிறாள் உமா,

மறுநாள் முறிந்த மரத்தையும் இறந்துகிடக்கும் உமாவையும் ஊர் மக்கள் வேடிக்கை பார்ப்பதுடன் படம் நிறைவுபெறுகிறது,

ஒரு நாட்டார்கதை போன்ற சாயலுடன் உள்ள இப்படம் அபர்ணா சென்னின் ஆரம்ப காலப்படங்களில் ஒன்று, அசோக் மேத்தாவின் தேர்ந்த ஒளிப்பதிவும், சித்தானந்த தாஸ் குப்தாவின் இசையும் ஷபனா ஆஸ்மியின் நடிப்பும் படத்திற்கு உறுதுணை செய்யும் பலம்,

ஊமைப்பெண்ணாக நடித்துள்ள ஷபனா ஆஸ்மி கண்களாலே பேசுகிறார், ஒரு சிறுமி போல அவள் மரமேறி விளையாடும் ஆரம்ப காட்சிக்கும், இடிமின்னலுடன்  மரத்தை கட்டிக் கொண்டு போராடும் கடைசி காட்சிக்கும் இடையில் ஷபனாவிடம் தான் எத்தனை அற்புதமான மாற்றங்கள், ஷபனாவின் தேர்ந்த நடிப்பிற்கு இது ஒரு உதாரணம்

சதியில் இறந்து போவது மகத்தான தியாகம் என்றே வங்காளப்பெண்கள் நம்பியிருக்கிறார்கள், உமாவின் அத்தை அதைப் படத்தில் பலமுறை சொல்லிக்காட்டுகிறாள், கிராமப்புற பெண்களின் உலகம் மிகவும் சிறியது, அவர்கள் கல்வி அறிவு இல்லாத காரணத்தால் பின்தங்கியிருக்கிறார்கள் என்று  படத்தில் வரும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்

விளையாட்டுதோழனாக நினைத்த மரம் தனது கணவன் என்று மாறியபிறகு அதனுடன் உள்ள உமாவின் உறவு மாறிப்போய்விடுகிறது, கேமிராக் கோணமே மாறுகிறது, இப்போது அந்த மரம் அச்சமூட்டுவது போலிருக்கிறது,

தனது தாயின் சேமிப்பாக பாதுகாத்து வைத்த நகையை மாமா அவளிடம் தரும் காட்சியில் அதை எடுத்துக் கொண்டு மரத்திடம் காட்டவே உமா ஒடுகிறாள், அவள் அந்த நகையை அணிந்து கொண்டு சந்தோஷம் அடையும் காட்சியில் மரமே சாட்சியாக இருக்கிறது

வங்காளத்தில் பெய்யும் மழை எதிர்பாராத விருந்தாளி போல, எப்போது துவங்கும் என்று தெரியாது, படத்தில் இடம்பெற்றுள்ள மழைக்காட்சி கவித்துவமாகப் படமாக்கபட்டுள்ளது, மழையோடு காற்றும் சேர்ந்து கொள்ள தனது வீட்டிற்கு வந்து சேரும் ஆசிரியர் தனது வீட்டுபூட்டினை திறப்பதற்கு தடுமாறுகிறார், அதுவே பின்பு நிகழப்போகும் சம்பவத்திற்கான குறியீடு போல இருக்கிறது, மழை அவளது ரகசியங்களின் சாட்சி போல இருக்கிறது,

இது என்றோ வங்காளத்தில் நடந்த சம்பவம் மட்டுமில்லை, இன்றும் தொடரும் கொடுமை, சமீபத்தில் கூட ஒரு பெண்ணை நாயிற்கு திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சியை புகைப்படத்தில் பார்த்தேன், இன்றும் கூட தோஷம் கழிக்க வேண்டும் என்று வாழை மரத்திற்குப் பெண்ணை திருமணம் செய்து தரும் பழக்கம் இருக்கவே செய்கிறது,

சத்யஜித்ரேயின் பாதிப்பு அபர்ணா சென்னிடம் மிக அதிகமாகக் காணப்படுகிறது, குறிப்பாக சிறுவர்களைக் காட்சிபடுத்தும் முறை, வீட்டு பெண்களின் உடல்மொழி, சீராக காட்சிகளை அடுக்கிச் செல்லும் முறை என ரேயின் இன்னொரு படம் போலவே சதி உருவாக்கபட்டிருக்கிறது,

என்எப்டிசி தயாரிப்பு என்பதால் படம் முழுவதும் ஒரு வீட்டிற்குள்ளும், அதனை ஒட்டிய மரம், வயல்வெளியிலும் படமாக்கபட்டிருக்கிறது,

வங்காளிகள் வாழ்வில் மீன் எவ்வளவு முக்கியமான உணவு என்பதை படம் பார்க்கும் போது நன்றாக உணரமுடிகிறது, வெளியே போய்விட்டு வீடு திரும்பும் ஆண்கள் கையில் எப்போதுமே ஒரு மீன் தொங்கிக் கொண்டிருக்கிறது,

நகரில் இருந்து கிராமத்திற்கு வரும் பெண் நகரத்து இனிப்புகளை அறிமுகம் செய்துவைக்கிறாள், அதை பெரிய விஷயமாக நினைத்து ருசித்து சாப்பிடுகிறார்கள், ராஜாராம் மோகன்ராயின் சதி எதிர்ப்பு குறித்த வாதப்பிரதிவாதங்கள் அன்றைய வங்காளத்தில் எப்படி நடைபெற்றன என்பது நன்றாகக் காட்சிபடுத்தபட்டிருக்கிறது,

இன்று அபர்ணா சென் இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர், அவரது ஆரம்ப காலப்படங்களில் அவருக்கான அழகியலை உருவாக்கிக் கொள்ள எவ்வளவு முனைந்திருக்கிறார் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

நன்றி - எஸ்.ராமகிருஷ்ணன்
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்