/* up Facebook

Aug 26, 2013

“மலையகப் பெண்கள்” ஒரு நோக்கு - பிருந்தா தாஸ்


இலங்கைப் பெண்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மலையகப் பெருந்தோட்ட பெண்களின் பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதற்காக அவர்களது சமூக, அரசியல, பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கை முறையினை நாம் சற்று  ஆராய்ந்து நோக்குவது அவசியமானதாகும்.
இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் பெருந்தோட்டத் துறை உற்பத்தியான தேயிலையினை பெற்றுத் தரும் தொழிலாளர்களுள் 65 சதவீதமானவர்கள் மலையகப் பெண்களே. 1960 முதல் 1990 வரை இலங்கையின் வருமானத்தில் 63 சதவீதமான வருமானத்தை ஈட்டித் தந்தவர்கள் இந்தப் மலையகப் பெண்கள என்று கூறலாம். அந்த வகையில் எந்தவொரு வருமானத்துறை வீழ்ச்சியடைந்தாலும் பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம் இன்று வரை நிலைத்திருப்பதன் காரண கர்த்தாக்களாக மலையகப் பெண்கள் உள்ளனர் என்றால் அது மிகையில்லை. ஆனால் இவர்களது வாழ்க்கையோ முட்கள் நிறைந்த காடுகளாய் காணப்படுகின்றது நாம் அறிவோம்.
அதற்குக் காரணம் சர்வதேச ரீதியில் பெண்களின் கல்வி, சமூக, அரசியல் சமய நிலையுடன் ஒப்பிடும் போது, சகல துறையிலும் பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் எமது மலையகப் பெண்கள் என்று அடித்துக் கூறலாம். ஆரம்ப காலங்களை விட சமகால சு+ழ்நிலை ஓரளவு மாற்றமடைந்து இவர்களது வாழ்க்கையில் முன்னேற்றமான ஒரு போக்குக் காணப்பட்டாலும், ஏனைய சமூகப் பெண்களின் அடிப்படையான வளர்ச்சி வேகத்துடன் ஒப்பிடும் போது, இவர்களது இந்த முன்னேற்றப் பாதை திருப்திகரமானதாக இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.
போதியளவு கல்வியறிவு இல்லாத இப்பெண்கள் தமக்கான சுதந்திரம் உரிமைகளைக் கூட தெரியாமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். சிலர் தமது வருங்கால சந்ததியினரின் அதாவது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கூட எடுப்பதற்கு தவறி விடுகின்றனர். அது பொய் அல்ல என்பதற்கு சான்றாக அண்மையில் மலையகத்தில் பிறப்பு, இறப்பு, தேசிய அடையாள அடடை வழங்கும் நடமாடும் சேவையின்போது பிறப்புச்சான்றிதழ், தேசிய அடையாள அட்டை இல்லாதோரை அதிக அளவில் காணக்கூடியதாக இருந்தது. அதனால் சிலர் தமது ஓய்வு+தியத்தைக்கூடப் பெறமுடியாமல் தவிக்கின்றார்கள் அல்லது பெற்றுக் கொள்ளாமலேயே மரணித்தும் போகின்றார்கள் என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். இது இருபாலாரையும் சார்ந்த ஒரு விடயமும் கூட.
தமக்கென மரபு ரீதியான மூட நம்பிக்கையுடான ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டினை கொண்டு வாழ்கின்ற இப்பெண்களில், நூற்றுக்கு 20 சத வீதமானவர்களே தமது உரிமை தொடர்பான அக்கறை கொள்பவர்களாக இருக்கின்றனர். இதற்கான காரணம் வறுமை. அத்துடன் விழிப்புணர்வான கல்வி, அறிவு, வலிமை என்பவற்றைத் தகுந்த நேரத்தில் பெற்றிருக்காதமையாகும். அதற்கான களத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதற்காக பல மகளீர் அமைப்புக்களை உருவாக்க வேண்டும். அவர்கள் மூலம் பெண் ஆளுமையை விருத்தி செய்து, மலையகப் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கி அவர்களுக்கு மன ரீதியான தைரியத்தைக் கொடுக்க வேண்டும். அத்துடன் முதலாளித்துவத்தை ஒழிக்க வேண்டும்.
அண்மைக்காலமாக சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து காணப்படும் மலைகயத்தில், ஏன் இவ்வாறு நடைபெறுகிறது என்ற கேள்விக்கு இன்னும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை? அல்லது தெரிந்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை! என்றே நான் கூறுவேன். பெரியோர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள் இதில் எந்த வகையான சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று. வறுமையின் காரணமாக அதற்கு நிவாரணம் தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் பெற்றோர்களின் பிள்ளைகளே அவ்வாறான நிரக்கதிக்கு ஆளாகி வருகின்றனர் என்றால் அது யாராலும் மறுக்க இயலாது. அண்மைக் காலங்களில் ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையின் படி இது உறுதிபடுத்தப்படுகிறது.
இவ்வாறு பள்ளி செல்லும் சிறுவர்களின் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்தால், எமது மலையகத்தில் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது என்ற கருத்தையும் நான் இங்கு முன் வைக்கின்றேன். சமுதாய வளர்ச்சியில் சிறார்கள் ஒரு முக்கிய பங்கை வகிப்பவர்கள் அல்லவா! இன்றைய சிறுவர்கள் நாட்டின் நாளைய தலைவர்கள்.ஆனால் பாதிக்கப்படும் சிறார்கள் அதிகம் என்றபடியால் எப்படி நல்லதோர் சமுதாயம் உருவாகும்? இப்படிப் போனால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.
அண்மையில் பத்திரிகையில் வெளியான செய்தி துஷ்பிரயோகத்துக்குட்பட்ட சிறுவர்களுக்கென வைத்தியசாலை ஒன்று நிறுவப்படுவதாகும். அப்படியென்றால் இவ்வாறான செயல்கள் நடக்கட்டும் நாம் சிகிச்சை தருகிறோம் என்பதற்காகவா? கேலித்தனமான தகவல்கள். இவ்வாறான செயல்களைப் புரிவோருக்கு தகுந்த தண்டனையாக குறைந்த பட்சம் மரண தண்டனையை அரசாங்கத்தினர் வழங்க வேண்டும். இல்லையென்றால் வருங்கால சந்திதியினர் எமது மலையகத்தில் மட்டும் இல்லை எந்தவொரு நாட்டிலும் உருவாக மாட்டார்கள். சிறந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் சிறார்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இக்கட்டுரையைப் படிக்கும் பெரியோர்கள், அரசியல் வாதிகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மலையக பெண்களின் அண்மைக்கால முன்னேற்றம்
ஆசிய நாடுகள் காலனித்துவப்படுத்தப்பட்ட பொழுது பெண்களின் நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உதாரணமாகக் காலனித்துவத்துக்கு முற்பட்ட சமுதாயத்தில் பெண்கள் விவசாய வேலைகளை மாத்திரமே செய்தனர். ஆனால், அந்தக் காலனித்துவத்துடன் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பெண்கள் கோப்பி, இறப்பர், தேயிலை மற்றும் ஏனைய தோட்டங்களில் வேலை செய்வதற்கு சேர்க்கப்பட்டனர். தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். விவசாய வேலைகளிலும் பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். இப்படி தொழிற்றுறையில் மாற்றம் பெற்ற பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் தமது பங்களிப்பை நல்கி வருகின்றனர்.
அண்மைக் காலமாக மலையகப் பெண்களின் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை சற்று மாற்றமடைந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பெருந்தோட்டத்துறை பெண்கள் தேயிலை பறிக்கும் வேலையை விட்டு, கல்வியில் ஆர்வம் காட்டுவதும் சுய தொழிலினை செய்வதற்கு வெளிப்பிரதேசங்களுக்கு செல்வதும் ஆகும். எனவே அரசின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டங்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
ஆண் சமுதாயம் பெண்ணை அடிமையாக வைத்திருந்த காலகட்டத்தில் கூட அப்பெண்கள் சோர்ந்து விடவில்லை. காரணம் அவர்களின் முயற்சி. அதாவது அந்தச் சமயத்தில் கூட விவசாயம், பண்ணைத் தொழில் போன்றவற்றைச் செய்து வந்துள்ளனர். கல்வி அறிவற்ற நிலையிலும் கூட பெண்ணியம் பேசப்பட்டது. பெண்ணினம் தமக்கென்று ஓர் உலகத்தை உருவாக்கி தமக்கென்று ஒரு வரலாற்றைப் பதிக்கும் அளவிற்கு அவர்களின் முயற்சி இருந்தது. இப்பொழுதும் முயற்சிக்கின்றனர். சாதித்தும் விட்டனர். இன்று பெண் சரித்திரத்தில் பேசுகின்ற அளவுக்கு முன்னேறியுள்ளாள். காரணம் அவளின் பெருமை. அத்தனை தடைகளுக்கும் மத்தியில் அவளின் ஆளுமை வெளிப் பட்டுள்ளது.
இருந்த போதும் இந்தப் பெண்களின் சமூகக் கட்டமைப்பு குறிப்பிட்டுக்கூறுமளவில் அவர்தம் குறிப்பிடுமளவில் முன்னேற்றமடைய செய்யவில்லை என்பதே தாழ்மையான கருத்து.

பெண்ணியம் பேசும் சர்வதேச அமைப்புக்கள் வழங்கிவரும் சேவைகள் பூரணமாக பெண்களுக்கு சேர்வதை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இல்லையேல் மாறி வரும் நவீன உலகில் ஓர் அடிமைப்பட்ட பெண் சமூகம் இருப்பதனை மாற்ற முடியாமல் போய் விடும். அத்துடன் பெண்களின் மகிமையை உழைப்பால் மட்டுமல்லாது பண்பாடுகல்விகலாசாரத்திலும் பேசப்பட வேண்டும் அதுவே வெற்றிக்கு வித்தாகும் எனலாம்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்