/* up Facebook

Aug 11, 2013

பர்தாவை கொளுத்துவேன் - தஸ்ஸிமா நஸ்ரின்! - தமிழச்சி

தஸ்ஸிமா நஸ்ரின்
தஸ்ஸிமா நஸ்ரினை எளிதில் மறந்துவிட முடியாது. வங்காள தேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளரான இவர் லஜ்ஜா (வெட்கம்) என்ற புத்தகத்தை எழுதியதால் முஸ்லீம் அமைப்புகளின் கோபத்திற்கு ஆளாகி வங்காள நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்.

"இஸ்லாமிய பெண்களின் அடிமைச்சின்னமான பர்தாவைக் கொளுத்துவேன்" என்ற தஸ்ஸிமாநஸ்ரின் பெண்ணிய எழுச்சிக்கு இதைவிட சிறந்த உதாரணத்தை சொல்ல முடியாது.

இந்த வார்த்தைகளுக்காக தஸ்ஸிமா பட்ட அவமானங்கள் எத்தனையெத்தனை?

பெண்ணுடல் மீதான வன்முறைகள், ஆதிக்கம், அடக்குமுறைகள், திணிப்புகள் என விரிந்துக் கொண்டே செல்லும் இரண்டாம் பாலீனமாக நடத்தப்பட்ட பெண்களின் விடியலுக்காக போராடிய குரல் தஸ்ஸிமா.

டாக்டரான தஸ்ஸிமா பன்முகத் தன்மையுடையவர். கவிஞர், விமர்சகர் என்ற படைப்புத் தன்மைகள் உடைய தஸ்ஸிமாவின் எழுத்துக்கள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஒரே காரணம்...

"பெண் அடிமைத்தனம் உட்பட எல்லாவகையான அடிமைத்தனங்களுக்கும் மதமே காரணம்" என்று ஒரே போடாக போட்டதுதான் தஸ்ஸிமாவை இந்தப்பாடு படுத்துகிறது.

பெண்ணுடல் மீதான வன்முறைகள் கலாச்சாரத்தின் பெயராலும் சடங்குகளின் பெயராலும் புனிதப்படுத்தப்பட்டு எப்படியெல்லாம் ஆளுமைக்குள்ளாக்கப்படுகிறது என்பதற்கு தஸ்ஸிமாவின் இந்த கவிதையை பாருங்கள்:

"கைப்படாத கன்னித்தன்மையை
ஆண்கள் விரும்புவர்.
அப்போது தான்
அவர்களால் அதைக்
கிழிக்க முடியும்
சிலர் காதலின் பெயரில்
சிலர் கல்யாணத்தின் பெயரில்"

மதவாதிகளோ கடுமையாக சாடுகிறார்கள் தஸ்ஸிமாவை.

கல்யாணத்தையும், சடங்குகளையும் அசிங்கப்படுத்துகிறார் என்கிறார்கள். இத்தோடு மட்டுமா விட்டார்கள்?

தஸ்ஸிமாவை கேவலமாக விமர்சிக்கவும் செய்தார்கள். தஸ்ஸிமாவின் புத்தகத்தை யாரும் வாங்கக்கூடாது என்றார்கள். மதஆதிக்கம் அதிகமுள்ள நாடுகள் தஸ்ஸிமாவின் புத்தகத்தை தடை செய்தன.

இதற்காக தாய்நாட்டில் இருந்து விரட்டப்பட்டும், தஞ்சம் புகுந்த நாடுகளிலும் முஸ்ஸிம் அமைப்புகளால் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்த தஸ்ஸிமா மீது அடிதடி கூட நடத்தப்பட்டிருக்கிறது.

2007-இல் ஐதராபாத்தில் ஓர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது தஸ்ஸிமாவை மஜ்லிஸ் ஈ இத்தாஹதுல் முஸ்லிமீன் [எம்.ஐ.எம்] கட்சியைச் சேர்ந்த ஆந்திர மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் 3-பேர் தாக்கியது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த தஸ்ஸிமாவை இந்திய நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்புகளும் சும்மா விடவில்லை. இந்தியாவில் இருந்தும் வெளியேற்ற வேண்டி இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

அரசின் செயல்பாடுகள் மதவாதிகளின் ஆதிக்கத்திற்கு சார்ந்ததாக இருப்பதையும் தஸ்ஸிமா விட்டு வைக்கவில்லை.

"துப்பாக்கிகளும்
பீரங்கிகளும் கொண்டிருக்கிற
அரசுக்கு
கொசு போன்ற நான்
அச்சுறுத்தலாக இருக்கிறேன்"

என "பீரங்கித் தாக்குதல்" என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையில் அரசாங்கத்தை நக்கலடிக்கிறார்.

இவ்வளவு நெருக்கடிகளைச் சந்தித்த தஸ்ஸிமாவின் எழுத்துக்களை நீங்களும் வாசித்துப் பார்க்க வேண்டும்.

நான்கு கட்டுரை நூல்கள், ஏழு நாவல்கள், பதின்மூன்று கவிதைத் தொகுதிகள் இதுவரை எழுதியிருக்கும் தஸ்ஸிமா அதிகமான விருதுகளையும், அதைவிட அதிகமான விமர்சனங்களையும் பெற்றிருக்கிறார். தாய் நாட்டில் இருந்து விரட்டப்பட்டும், கொலை மிரட்டல்கள் இருந்தும் தொடர்ந்து தன் கலகக் குரலை நிறுத்தவில்லை தஸ்ஸிமா.

லஜ்ஜா (வெட்கம்) என்ற நாவல் மூலம் பரபரப்பாக உலகம் முழுவதும் பேச காரணமானதும் அதில் இருந்த கருத்துக்கள் முஸ்லீம் அமைப்புகளுக்கு கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தின.

தஸ்ஸிமாவை தாக்குவதற்கென்று உருவாக்கப்பட்ட அமைப்பு "Smash Taslima Committee" 

இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பெண் தன்னை அறிந்து கொள்ளுதலின் தொடக்கம் என்பது தன் சுயத்தை அறியும் முயற்சியாக இருக்க வேண்டும். தன்னை [பெண்] மீட்டெடுக்கும் முயற்சி என்பது சமூகத்தில் எங்கெங்கெல்லாம் தன்னை அடக்கி ஒடுக்க முற்படும் செயற்பாடாக இருக்கிறதோ அதிலிருந்தெல்லாம் போராட்டத்தை தொடங்க வேண்டும். அது மதமாக இருந்தாலும் கலாச்சாரமாக இருந்தாலும் சரி.

இதையே தஸ்ஸிமாவின் எழுத்துக்கள் விளாசி தள்ளுகின்றன.

இஸ்லாமிய மரபு வழி வந்த பெண்ணான தஸ்ஸிமா பெண்ணின் அடிமைச் சின்னமான பர்தாவை முதலில் கொளுத்த வேண்டும் என்கிறார்.

தஸ்ஸிமா சொல்வது சரிதானே?

17.02.2010

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்