/* up Facebook

Jul 25, 2013

பெண்கள் எதையும் சாதிக்கத் துணிந்தவர்கள் - பிருந்தா தாஸ்


பெண்களுக்கு எல்லாத் திறமைகளும் இருக்கின்றன. இதை நம் பண்பாடு, கலாசாரம் என்ற போர்வைக்குள் அடக்கி, தம்மை நாமே வளர்க்கத் தவறி விட்டாள் என்பதுதான் உண்மை. பெண்களுக்கான சுதந்திரம் எதிர்க்கப்பட்டதும் அதை மறுத்துப் போராட அன்றைய பெண்கள் முன்வரவில்லை. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி இன்று பெண் முன்னேறியிருக்கின்றாள் என்றால் அது மறுப்பதற்கில்லை. 

பெண்களைப் பற்றி ஆராய்ந்தவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள். ஆண்களை விட பெண்கள் நம்பிக்கைக்குரியவர்கள், கடின உழைப்பாளிகள் என்று.

எல்லா மனிதர்களும் தன் வாழ்வில் மகிழ்வுடன், மன நிறைவுடன் இருக்க விரும்புகிறான். அது தான் வாழ்வு என்று கருதுகிறான். முன்னைய காலத்தில் ஓர் ஆணைப் பார்த்து, “என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மாறாக, ஒரு பெண்ணை யாரும் என்ன வேலை செய்கிறீர்கள்?” எனக் கேட்பதில்லை. காரணம் பெண்ணுக்குக் குடும்பம், குழந்தைகள், கணவன், வீடு என்று இருக்கின்றன. அவையே பெரிய வேலைகள்தான் என்று எண்ணினார்கள். அதுவே அவர்களுக்கு (பெண்களின்) நிறைவைத் தருகின்றன என்ற மனப்பான்மையாகவும் இருந்தது. ஆனால் இன்று அவ்வாறில்லை. பெண்ணையும் பார்த்து என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்கின்றனர். அந்தளவுக்கு இன்றைய பெண் சகல துறைகளிலும் ஈடுபடுகிறாள் உழைக்கின்றாள். சில பெண்கள், ஆண்களை விடக் கூடுதலாகவும் வருமானம் பெறுகின்றனா.

பெண் என்ற வகையில் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு இவைதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன. மேலும் சாதனை செய்யத் தூண்டுகின்றன. இப்படிப்பட்ட எண்ணங்கள் பெண்ணின் மனதில் அதிகம் எழுகின்றன என்றாலும், அந்த வாய்ப்பு, குறிப்பாக கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை என்பது கவலைக்குரிய விடயம். அவர்களும் சாதிக்கின்றனர். நாளுக்கு நாள் ஏதோ ஒரு கூலித் தொழிலைத் தேடி, தன் குடும்பத்தைக் காக்கும் பெண்களும் உள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் அதுவும் ஒரு சாதனைதான். உதாரணத்துக்கு ஒரு பெண் கூலித் தொழிலாளியாக இருந்து தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து சமுதாயத்தில் ஒரு நல்ல பிரஜையாக்குகின்றாள். அவர்களுக்கு ஓர் அந்தஸ்தைக் கொடுக்கின்றாள. எனவே அவளும் சாதனைப் பெண்ணே! இருந்தாலும் கூட, h ஆணுக்குக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை ஏன் ஒரு பெண்ணுக்குக் கொடுப்பதில்லை?
ஒரு பெண் எதற்குப் படிக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போகிறவள் தானே என்று அவளைத் திருமணத்துக்காகவே வளர்க்கின்றனா. ஒரு பெண் கல்வி கற்றால் குடும்பமே கற்றதற்குச் சமம் என்ற சிந்தனையை மறந்து விடுகின்றனா.

பெண்களின் இன்றைய முன்னேற்றத்துக்கு அவள் பெற்ற கல்வியும் ஒரு காரணமாயிருக்கிறது. இன்று படிப்பிலும் சாதனை படைக்கின்றாள். படிக்காத பாமரர் கூட இன்று தன் பெண் பிள்ளைகளை பட்டணத்தில் படிக்க வைக்கின்றனா. காரணம் எல்லா முன்னேற்றங்களும் கற்றலில் தான் உள்ளன. படிப்பு இருந்தால்தான் ஊர் உலகம் தெரியும் படிப்பு இருந்தால்தான் நல்ல வேலைக்குப் போக முடியும் நல்ல வேலைக்குப் போனால்தான் நிறையச் சம்பாதித்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் கல்வியின் மூலம் தான் எம் வாழ்வை எவ்வாறாயினும் மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் பெண்ணுக்கு உருவாகி விட்டது.

பெண்களின் கல்வி என்பது பெண்கள் கல்வி பெறுவதற்கான உரிமை, அதன் நிலைமை, தடைகள், எதிர்காலம் போன்ற பல விடயங்களைக் குறிக்கும். வரலாற்றின் பெரும் பகுதியில், அநேக சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற பெண்ணிய இயக்கம், அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு போன்றவை பெண்களுக்கான சம கல்வி வாய்ப்புகளை ஓரளவு ஏற்படுத்தித் தந்தன. இன்று சில மேலை நாடுகளில் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி பெண்கள் ஆண்களை விட கூடுதலான அதி உயர் கல்வியைப் பெறுகிறார்கள். ஆனால் இன்னும் பல நாடுகளில் பெண்களின் கல்வி ஆண்களை விடப் பின்தங்கியதாகவே உள்ளது. இருந்தும் பாமரப் பெண்கள் தமது உழைப்பால் முக்கியத்துவம் பெறுகின்றார்கள் என்றால் அது மிகையில்லை. உதாரணமாக பெருந்தோட்டப் பெண்களைச் சொல்லலாம்.
இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் உயர் நிலையை அடைய வேண்டியிருக்கிறது. அது கல்வித் துறையில் மட்டுமன்றி, ஊடகம், மருத்துவம் மற்றும் சட்டத்துறைகளில் உயர் நிலையை அடைந்த பெண்களின்பால் எமது சமூகம் அதிக தேவையுடையதாக இருக்கின்றது.

ஒரு பெண் தன் காலில் நிற்கும்போது - தன்னால் சம்பாதித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரும்போது தான் அவர்களுக்கு சுதந்திமும் சமூகத்தில் மதிப்பும் கௌரவமும் கிடைக்கின்றன.

சம்பாதிக்கிற மருமகளை அவளது மாமியாரால் அதிகம் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதிகாரம் செய்வதில்லை. மாறாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றது. முன்னேற விரும்பும் பெண்கள் இந்தச் சமுதாயப் பழக்கவழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும். அதற்கு பெண்கள் முதலில் கற்க வேண்டும். இன்றைய பெண்கள் அதைச் சரிவர நிறைவேற்றி வருகின்றனா என்றால் அது மிகையில்லை. ஆனாலும் பின்தங்கிய பிரதேசப் பெண்களுக்கும் இந்தப் பழக்கத்தை வலியுறுத்தி அவர்களையும் எம் பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கென  பெண் விழிப்புணர்வு, செயலமர்வுகளை நடத்தி அவர்களுக்கு மேலும் ஊக்கம் கொடுக்க வேண்டும். அத்துடன் பெண் ஆளுமையை விருத்தி செய்ய வேண்டும். அதுவே பெண்ணின் வெற்றி என்பது எனது கருத்து. வெற்றிக்குத் தேவை பொருளாதாரச் சுதந்திரம். அதாவது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, வாழ்வதற்குத் தேவையான பொருளாதார நிலை தான் அவளுக்கு உறுதுணையாகும். அப்படியென்றால் பின்தள்ளப்பட்டிருக்கும் பெண்கள் சமுதாயம், குறிப்பாக நம்முடைய கிராமப்புறப் பெண்கள் - அடுத்த நூற்றாண்டில் வெற்றி சிகரங்களை எட்ட வேண்டுமானால், அவர்களுக்கு இன்று அவசியமானது கல்வி மட்டுமே. பின் இரண்டாவது மூன்றாவதுதாக, உலக ஞானம். தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை என்பனவாகும். 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்