/* up Facebook

Jul 31, 2013

ஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலுணர்வைத் தூண்டுகின்றனரா ?

Director Jennifer Siebel
இன்றைய உலகச் சந்தையில் விற்கப்படும் பல பொருட்களில் பெண்ணின் தேகங்களும் ஒன்றாகி விட்டது என்பதில் ஐயமே இல்லை. என்றும் இல்லாத அளவுக்கு உலகம் இன்று ஊடகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் செய்தி தாள்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், இணையத் தளங்கள், விளம்பர பதாகைகள் எனக் காட்சி ஊடகங்களே தினந்தோறும் நமது வாழ்வினை பெருமளவில் பாதிக்கின்றன. 

மனித இனத்தின் இருப்பை ஊடகங்கள் தரும் தகவல் பறிமாற்றங்கள் பெரும் தாக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால் நாம் இன்று பெறுகின்ற தகவல்கள் அனைத்தின் நன்மை, -தீமைகளை, உண்மை - பொய்களைத் தீர்மானிக்கும் மிகப் பெரும் பொறுப்பும் நம் கைகளிலேயே கொடுக்கப்பட்டுள்ளது என்பது தான். 

அவற்றிலும் பெண்கள் இந்த உலக மயமாதல், ஊடகங்களால் எத்தகைய நன்மை - தீமைகளைச் சந்திக்கின்றார்கள் என்பதை நாம் பல சமயங்களில் சிந்திப்பதே இல்லை. ஆணாதிக்கச் சமூகம் தோற்றுவிக்கப்பட்ட காலம் முதலே பெண்கள் பாலியல் அடையாளத்தோடு தான் நோக்கப்பட்டும் வந்துள்ளனர். இன்றைய ஊடகங்களின் சக்திகளை ஆணாதிக்கச் சமூகத்தின் கைகளில் கொடுப்பட்டுள்ள நிலையில் பெண்கள் மீதான ஊடக பூதக் கண்ணாடி அவர்களை ஒரு பாலியல் நுகர்வுப் பொருளாகவே காட்டி வருகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இதே நிலை தான் தொடர்கின்றன.

தினசரி நாம் வாசிக்கும் செய்திதாளாக இருக்கட்டும், பார்க்கும் தொலைக்காட்சியாக இருக்கட்டும், மேயும் இணையத் தளங்களாக இருக்கட்டும் பாலியல் அடையாளப் படுத்தப்பட்ட பெண்களை நம் கண் முன்னே நிறுத்தப்படுகின்றனர். பெண்களைப் பாலியல் சார்ந்த விடயமாகவும் இச்சைகள் தீர்க்கும், இனவிருத்தி செய்யப்படும் யந்திரமாகவும் நினைக்கும் பழம் சமூகத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியே இன்றைய ஊடகங்களின் இந்த நிலைப்பாடுகளுக்கு முக்கியக் காரணமாகும். ஊடகங்களை உருவாக்குவோரும், நுகர்வோரும் யாராக இருக்கின்றனர் ? ஊடகங்கள் சமூகத்தில் எந்தப் பிரிவினரை மகிழ்ச்சிப்படுத்திப் பணம் பண்ணப் பார்க்கின்றனர் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இது வருங்காலச் சமூகங்களில் எத்தகைய  மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் அல்லவா. 

பெரும் நிறுவனங்கள் கொள்ளை லாபங்களைப் பெற சமூகத்தின் சரி பாதிப் பெண்ணினத்தைக் கொச்சைப்படுத்தும் நிலைப்பாட்டைப் பற்றிச் சிந்திக்கவோ, மாற்றங்களைக் கொண்டு வரவோ பெரும்பாலான நமக்கு நேரமே இருப்பதில்லை. 

இவ்வாறன நிலையில் அமெரிக்காவின் MissRepresentation.org என்ற அமைப்பு ஊடகங்களில் பெண்களை இழிவாக்கும் போக்கினைக் கண்டித்துப் போராட்டங்களையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றது. அவர்கள் அண்மையில் ஒரு விவரணப் படத்தையும் வெளியிட்டு இருந்தனர். அதன் முன்னோட்டம் இதோ உங்களுக்காக ...இவ் அமைப்பு பெண்ணின் அழகியல், பாலியல், இளமை சார்ந்த விழுமியங்களை, இலக்கணங்களை ஊடகங்களே தீர்மானித்து, அவற்றை இளம் சமூகத்தின் மீது திணிக்கும் கோர வியாபார உத்திகளைத் தகர்த்தெறிந்து வருகின்றது. 

சினிமாவாக இருக்கட்டும், விளம்பரங்களாக இருக்கட்டும் அதன் முதன்மை கதாப்பாத்திரமாக இருப்பவன் ஆணாகவும், அவனது தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஒரு பாலியல் பொம்மையாகவுமே பெண் சித்தரிக்கப்படுக்கின்றாள். இன்று நேற்றல்ல, மனித நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டே இதே நிலைப்பாட்டைத் தான் உலகின் பல சமூகங்களும் பின்பற்றி வருகின்றன. 

அமெரிக்காவில் சராசரியாகப் பதின்ம வயதினர் நாள் தோறும் 10 மணி நேரம் 45 நிமிடங்கள் ஊடகத் தாக்கத்துக்கு உள்ளாகுகின்றனர். தொலைக்காட்சி, பாடல்கள், திரைப்படங்கள், சஞ்சிகைகள், இணையத் தளங்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய ஊடகங்களில் தோன்றும் பெண்கள் தலைமைத்துவக் குணம் படைத்த, பொறுப்பான, அறிவில் சிறந்த பெண்ணாகக் காட்டப்படுவதில்லை, மாறாகப் பாலியல் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் ஒரு பண்டமாகவே காட்டப்படுகின்றனர். இது பெண்கள் குறித்தான பார்வையை இளம் சமூகத்தில் தவறாக விதைத்து வருகின்றது. 

இந்தியாவில் கடந்த ஆண்டு நிகழ்ந்த நிர்பயா கூட்டு வன்புணர்வு கொலை சம்பவத்திற்குப் பின்னர்  தகவல் - ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஊடகங்களில் பெண்களை எதிர்மறையாக, பொதுப்புத்தியில், இழிவாகச் சித்தரிப்பதன் பின்விளைவுகள் குறித்துக் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. 
" இன்றைய ஊடகங்கள் கலாச்சாரம் சார்ந்த ஒரு துறையாகப் பரிணமித்துள்ளது, உண்மையில் அதுவே ஆண், பெண் தோற்றத்தை உருவாக்கி, விற்பனை செய்தும் வருகின்றது. ஆனால் பெண்களின் தோற்றத்தை தொலைக்காட்சித் தொடர்களும், இசை நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் வேறு விதமாகச் சித்தரிக்கின்றனர், அது யதார்த்தத்தைப் பிரதிபலிக்கவில்லை." எனப் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பெண்கள் கல்வி, மேம்பாட்டுத் துறையின் பேராசிரியர் ராஜேஸ் கில் கூறுகின்றார். 
இந்தியாவின் யதார்த்தமான பெண்களையும், குணங்களையும், அழகியலையும் இந்திய ஊடகங்கள் வெளிக்காட்டுவதில்லை. அது குறித்தான கவலையும் ஊடகப் படைப்பாளிகளிடம் இருப்பதில்லை. பெரும் சஞ்சிகைகள் கூட அட்டைப்படத்தில் பாலியல் மயமாக்கப்பட்ட பெண்ணின் படங்களைப் பிரசுரிக்கின்றனர். ஊடகங்களைப் படைப்பவர்கள் ஆண்கள். ஏனெனில் ஊடகங்களைக் கொள்முதல் செய்வோர் ஆண்கள். சமூகத்தில் சம்பாதிக்கும் நிலையில் இருப்போர் ஆண்கள்.

மேற்கு நாடுகளில் கடந்த பத்தாண்டுகளில் ஊடகத் துறைக்குள் பிரவேசிக்கும் பெண்களின் தொகை மூன்றில் ஒரு பங்கு உயர்வடைந்துள்ளது. இருந்த போதும் இது போதுமான அளவிற்கு இல்லையே எனலாம். ஊடகம், பாலினக் கண்காணிப்பகத்தின் தகவலின் படி, உலகம் முழுவதும் 24 % செய்திகள் மட்டுமே பெண்கள் குறித்தானவையா இருக்கின்றது. இவற்றில் எத்தனை சதவீதம் தலைமைத்துவம், சாதனைகள் போன்றவற்றைக் கூறுவார்கள் என்பதும், எத்தனை சதவீதம் சினிமா, இசை சார்ந்த பாலியல் மயமாக்கப்பட்ட பெண்களின் செய்திகள் என்பதையும் நாமே சிந்தித்துப் பார்க்கலாம்.

செய்திகளை உள்வாங்கி உருவாக்கும் பொறுப்புக்களில் பெண்களின் பங்கு குறைவாகவும், செய்திகளை நளினத்தோடு வாசிப்பவளாகப் பெண்கள் ஊடகங்களில் தென்படும் மோசமான நிலையும் இருக்கின்றது. 

இந்திய ஊடகங்களில் வருகின்ற பெண் குறித்தான செய்திகள் ஒன்று பாலியல் காட்சிப் பொருளாக வருவார், அல்லது பாலியல் விடயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு வலிமை இழந்த பெண்ணாகக் காண்பிக்கப்படுவார். இந்திய செய்தித் தாள்களில் 63 % செய்திகள் பெண்கள் பாதிக்கப்பட்ட குற்றச் செய்திகளாகவே இருக்கின்றது. இதனையே மக்கள் விரும்பிப் படிப்பதாகவும் கூறப்படுகின்றது. 

ஒரு சில செய்திகளில் பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடும் பெண்களின் வீரதீரங்களை வெளியிட்டு இருந்த போதும், அதனையும் பெண்கள் சட்டங்களைத் தவறாக வளைப்பதாக விமர்சனத் தொனியில் பலரும் எழுதி இருந்தமை மோசமான ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது. 

பல இந்திய ஊடகங்களில் காண்பிக்கப்படும் பெண்கள் குற்றம் செய்யும் கொடூரக் குணமுடையவளாகவும், சுயநலம் மிக்கவளாகவும், அரசியல் ஞானமற்றவளாகவும், சமூக - கலாச்சாரங்களில் அதி நவீனத்துவத்தைக் கேள்விகள் இன்றி ஏற்பவளாகவும் காட்டப்படுகின்றாள். அது மட்டுமில்லாமல் அடக்கம் ஒடுக்கமாக, ஆண்களின் பேச்சை மதித்து, அவர்களின் தேவையைப் பூர்த்திச் செய்து, தமக்கான கனவுகள், லட்சியங்களை இழந்து குடும்பம், உறவுகளுக்காக இருப்பவளே நல்லதொரு பெண்ணாகவும் அடையாளப்படுத்தப்படுவது பழமைவாத சிந்தனையின் பெரும் தாக்காக இருக்கின்றது. இரு நிலைப்பாடுகளும் பெண்கள் தம்மைத் தாம் எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும் என்பதில் தவறான ஒரு வழிக்காட்டலை சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ளது. 

தொலைக்காட்சி தொடர்களில் தென்படும் பெண் கதாப்பாத்திரங்கள் யாவும் மணம் மீறிய உறவு வைத்திருப்பவளாகவும், பகட்டான ஆடை, நகைகள் அணிந்து கொள்பவளாகவும், மதப் பழமைத்துவங்களை, மூட நம்பிக்கைகளைத் தாங்கிப் பிடிப்பவளாகவும், குடும்பச் சண்டைகளை மூட்டுபவளாகவும், காதல் தோல்வியுடையவளாகவும், பெரும் வீடு, வாகனம், செல்பேசிகள், ஒப்பனைகள் செய்பவளாகவும், பழி வாங்கும் குணமுடையவளாகவும் காட்டப்படுகின்றாள். யதார்த்தத்தில் நம் வீட்டுப் பெண்கள் அனைவரும் அவ்வாறாகவா இருக்கின்றனர் சொல்லுங்கள். 

ஊடகங்களில் வெற்றியாளராகவும், சாதனையாளராகவும், தலைமைத்துவம் சார்ந்த பெண்கள், தனித்துப் பயணிக்கக் கூடிய, பிரச்சனைகளை எதிர்கொள்ளக் கூடிய, பாலியல் பகுத்தறிவு மிக்கப் பெண்கள் பெரும்பாலும் காண்பிக்கப்படுவதே இல்லை. 

பெண்கள் சதா ஆண் துணையோடு தான் போக வேண்டும் எனவும், பாலியல் விடயங்களில் தம்மைத் தாமே காக்கும் அறிவற்றவளாகவும் காண்பிக்கப்படுகின்றாள். அத்தோடு விளம்பர மகளிராக வருவோர் வீட்டுப் பொருட்களை விற்கவும், அழகியல் சாதனங்கள், ஒப்பனைப் பொருட்கள், உடைகள் விற்பவராகவுமே இருக்கின்றாள். ஆண்களோ வாகனங்கள் செலுத்துபவனாகவும், பெரும் முதலாளியாகவும், பெரும் பொருட்களை விற்பவனாகவும் காண்பிக்கப்படுகின்றனர். இது ஏற்றத்தாழ்வான விடயமில்லையா ?! 

விளம்பரங்கள் உட்பட ஊடகங்களில் வரும் பெண்கள் மெல்லிடையும், வெளிர் நிறமும், பெருத்த அங்கங்களையும் கொண்டவளாக வருவதும். அவள் ஆண்களைப் பார்த்து நெளித்து, சிலிர்த்து மோகிக்கும் கதாப்பாத்திரங்களாகக் காட்டப்படுவதும் பெண்கள் குறித்தான தவறான எண்ணத்தை இளைய சமூகத்தில் விதைக்காதா ? ஒரு வேளை நாம் அவ்வாறு தான் இருக்க வேண்டுமோ எனப் பெண்களும், பெண் என்றாலே அவ்வாறானவர்கள் என ஆண்களும் நினைக்கச் செய்யாதா ? 

திரைப்படங்களைப் படைக்கும் பெண்களின் பங்கு என்பதும் சொல்லும்படியாக இல்லை. அமெரிக்காவில் வெளியாகும் திரைப்படங்களில் மூன்றில் ஒரு கதாப்பாத்திரங்களே பெண்களாக இருக்கின்றனர். அதிலும் கூட அவர்கள் பாலியல் ஆடைகளை அணிந்து கொண்டும், அரை நிர்வாணமாகவும், ஆண் கதாப்பாத்திரங்களைக் கவரும் கதாப்பாத்திரங்களாகவுமே காட்டப்படுகின்றனர். அவற்றில் கூட 13- 20 வயது பெண்களே பெரும்பாலான கவர்ச்சியுடையவர்களாகக் காட்டப்படுகின்றனர் என்பது மிகவும் மோசமான ஒரு நிலைப்பாடாகவே இருக்கின்றது. 

இந்திய சினிமாக்கள் ஒன்றும் சளைத்ததல்ல, இங்கும் கூட 60 வயது கதாநாயகனின் காமுகியாகத் தோன்றுபவர்கள் எல்லாம் இருபது வயதுக்கும் குறைந்த பெண்களாகவே இருக்கின்றனர். பெண்களை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் இந்தியாவில் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது, அதிலும் அவர்களை நல்ல ரீதியில் காட்டும் நிலை என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. மலையாளத்தின் சியாமா பிரசாத் போன்ற ஒரு சில இயக்குநர்களைத் தவிர்த்து ஏனைய இந்திய இயக்குநர்களின் திரைப்படக் கதாப்பாத்திரங்கள் ஆணைச் சுற்றியே எப்போதும் நிகழ்வதாக இருக்கின்றது. 

இங்கு உலகமயமாதலையும், ஊடகங்களின் நிலைப்பாட்டையும் எதிர்க்க வருவோரின் உள்ளக் கிடைக்கை பெண்கள் மீது கரிசனம் கொண்டுள்ளதா எனப் பார்த்தால் அதுவுமில்லை. அவர்களது நிலைப்பாடு சமூகக் குற்றங்கள், சமூகத் தோல்விகளுக்குக் காரணம் மேற்கத்திய சிந்தனைகள், வாழ்க்கை முறை எனப் பழிப் போட்டுவிட்டு, பெண்களை மீண்டும் வீடுகளுக்குள் முடக்கும் ஆணாதிக்கத்தின் மற்றுமொரு தொலைவெளியே ஆகும்.

பெண்களைக் கேவலமாகப் பொதுவில் வியாபாரம் செய்வோருக்கும், பெண்களை முடக்கி அவர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களது வாழ்வை முற்றும் முழுதாகத் தீர்மானிக்க நினைக்கும் பழமைவாதிகளின் நிலைப்பாட்டுக்கும் பெரும் வேறுபாடுகள் இல்லை. ஊடக வியாபாரிகள் பெண்களை வைத்துப் பணம் செய்ய யத்தனித்தால், இவர்கள் பெண்களைத் தாமே சுகிக்கவும், தமக்குக் கீழ் கொண்டு வரவும் பார்க்கின்றனர்.  இது பாலியல் சமத்துவமின்மையை பெருக்கிக் கொண்டே இருக்கின்றது. ஒன்று பெண்கள் முற்றும் முழுவதுமாக வீடுகளுக்குள் முடக்கப்படுகின்றனர், அல்லது அவளை ஒரு பாலியல் பண்டமாக்கப்பட்டு வீதிகளில் உலாவ விடுகின்றனர். இரு நிலைப்பாடுகளால் தமது வாழ்வை, உரிமையை, உணர்வை இழக்கும் அபாயமான சூழலிலேயே பெண்கள் இருக்கின்றனர்.

உண்மையில் புதிய பொருளாதாரக் கொள்கையும், உலக மயமாக்கலும், புதிய வாழ்க்கை முறையும் பெண்களின் கல்வி, வேலை வாய்ப்புக்களைப் பெருக்கியுள்ளது. விளிம்பு நிலை சமூகப் பெண்களுக்குக் கூட வாழ்வின் நற்கனிகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை தந்துள்ளது. பொருளாதாரச் சுதந்திரம் என்பது பெண்ணை மட்டுமின்றி அக் குடும்பத்தின் முன்னேற்றத்தையும் உறுதி செய்துள்ளது. வீடுகளுக்கு முடங்கும் நிலை களையப்பட்டு, தொழில்துறைகள், கல்வித் துறைகள் என அனைத்துத் துறைகளில் தலைமைத்துவத்தை அடையும் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளது. நடுத்தரக் குடும்பத்து பெண்களின் சுதந்திரமும், சமத்துவ உரிமைகளையும் இது நிச்சயம் உறுதி செய்து கொடுத்துள்ளது. சுயமான முடிவுகளை எடுக்கவும், குடும்பத்திலும், சமூகத்தில் சரி நிகரான பங்களிப்பு செய்யும் சூழலும் கிடைத்துள்ளது. 

பழமைவாதங்கள், அடக்குமுறைகள், குடும்ப வன்முறைகள், பாலியல் கொடுமைகள், உளவியல், உடலியல் துன்புறுத்தல்கள் என அனைத்தையும் ஏறி மிதித்துக் கொண்டு போகும் அற்புதமான சூழலாக இன்றுள்ளது. அதே சமயம் இத்தகைய நடுத்தர, கல்விக் கற்ற, பணிகளில், தொழில்களில் முன்னேற்றம் கண்டு, தலைமைத்துவத்தை அடைந்துள்ள பெண்களை ஊடகங்கள் நிகராக, நேராக, முறையாக, நல்ல முறையில் சித்தரிக்காமல் போனது நிச்சயம் முறையற்ற ஒன்றே ஆகும். ஊடகத் துறையில் பெண்கள் அதிகளவு பிரவேசிக்க வேண்டும், ஊடகங்களில் படைப்பாளிகளாகவும், பங்குதாரர்களாகவும் முன்னேற்றம் காண வேண்டும். பெண்கள் குறித்தான நல்ல முறையிலான சித்தரிப்புக்களை இச் சமூகங்களில் ஏற்படுத்த வேண்டிய ஒரு மாபெரும் பணி பெண்களிடம் மட்டுமில்லை, பெண்ணிய உரிமைகளை விரும்பும் அனைத்து ஆண்களிடமும் கூட இருக்கின்றது.

-இக்பால் செல்வன் 

நன்றி - கோடங்கி
...மேலும்

Jul 30, 2013

யுத்தத்தின் பின் அதிகரித்துள்ள பாலியல் வல்லுறவு சம்பவங்கள்

யுத்தத்தின் பின் அதிகரித்துள்ள சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றி வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் நாகரஞ்சினி விபரிக்கிறார்நன்றி - விமர்சனம்
...மேலும்

Jul 29, 2013

தமிழ் பெண்களின் அடையாள பிரச்சினை - முன்னாள் பெண் போராளிகள் சாட்சியம் - வீடியோ


பெண்கள் தமது "பெண்" என்கின்ற அடையாளம் மற்றும் "தமிழ்" என்கிற அடையாளம், "முன்னாள் போராளி" என்கிற அடையாளம் மற்றும் தமது வறுமை நிலையை உணர்த்தும் "வர்க்க அடையாளம்" என அனைத்தாலும் சமீப காலமாக முகம்கொடுத்து வரும் கொடுமையை அவர்களே இங்கே வெளிப்படுத்துகிறார்கள்... வீடியோ பதிவைப் பாருங்கள் கேளுங்கள்.


...மேலும்

Jul 28, 2013

ரொறொன்ரோப் பெண் - அ.முத்துலிங்கம்முதலில் ஒரு கடிதத்துடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். 50 வருடத்திற்கு முந்திய கடிதம். ஒரு கனடிய இளம் பெண் எழுதியது. மானுடவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிக்காக அவர் தெரிவு செய்த இடம் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பிற்பட்ட கிராமம். கோவை, காங்கேயம் அருகில் உள்ள ஓலைப்பாளையம்.  கனடாவில் உள்ள அவருடைய தாயாருக்கு எழுதிய முதல் கடிதம். (சில இடங்களில் சுருக்கப்பட்டுள்ளது.)

 ‘நான் வசிக்கும் சிறிய வீடு. ஒரு முற்றமும், பூட்டக்கூடிய சாமான் அறையும், வெளியே சமைக்கவும் குளிக்கவும் வசதிகள் கொண்டது. வெள்ளையடித்த உள் சுவருக்கு மேல் சாய்ந்து கிடக்கும் கூரை மழைத் தண்ணீரை முற்றத்தில் கொட்டும். வீட்டின் முழுப்பரப்பும் 18 X 30 அடி இருக்கலாம். தெற்குப் பக்கத்தில் பழுதுபடாத கழிவறை ஒன்றும் உள்ளது. வீட்டு மண் தரை மாட்டுச் சாணியால் கிரமமாக மெழுகப்படுவதால் கிருமிகள் தொல்லை இராது என சொன்னார்கள். மின்சாரம் கிடையாது. ஆகையினால் ஓர் அருமையான சின்ன மண்ணெண்ணெய் விளக்கு எனக்கு வெளிச்சம் தருகிறது. சகாய விலையில் கிடைத்த  மேசையையும் நாற்காலியையும் மாட்டு வண்டியில் கொண்டுவந்து இறக்கியிருக்கிறேன். சுகமான கயிற்றுக் கட்டில் என் படுக்கை. நான் ஒரு மலிவான மண்ணெண்ணெய் அடுப்பு வாங்கியிருக்கிறேன். என் சமையல் தோழி பாப்பம்மா வாங்கிய மண் அடுப்பு ஒன்றுக்கு ஏழு சதம் பிடித்தது. அதற்கு விறகு தேவை. 2.20 டொலர் பெறுமதியான காசு கொடுத்து இரண்டு மாதத்துக்கான விறகு வாங்கியிருக்கிறோம்.

வீட்டு வாடகை மாதத்துக்கு 1.20 டொலர். சலவைக்காரருக்கு ஒரு மாத சலவைக்கு கூலி 50 சதம். இந்தக் கிராமத்தின் பொருளாதாரம் உங்களுக்கு இப்பொழுது ஓரளவுக்கு புரிந்திருக்கும். கிராம மக்கள் மிகவும் சிநேகமாக இருக்கிறார்கள். தோழி பாப்பம்மா பரம்பரை சமையல்காரி. அவருக்கு 45 வயதிருக்கும். நான் போகும் இடமெல்லாம் என் பின்னால் நிழல்போல வந்து என் கீர்த்தியை பரப்புவார். அவருடைய மாதச் சம்பளம் 5.50 டொலர். அவருக்கு ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாது. எனக்கு தமிழ் தெரியாது. தமிழ் வார்த்தைகள், உச்சரிப்பு, இலக்கணம் எல்லாம் என் மூளைக்கு எட்டாத தூரத்தில் இருக்கின்றன.

நான் எட்டு யார் சேலையை கிரமத்து மக்களைப்போலவே உடுக்கிறேன். அதைப் பார்த்து மக்கள் பெருமிதமும் உற்சாகமும் அடைகிறார்கள். என்னுடைய தலைமுடியை சீவி நீளமாகப் பின்னி தொங்கவிட்டிருக்கிறேன். என்னுடைய பிறந்த நாள் அன்று மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்தது. நடுச்சாமம் பாப்பம்மாவின் மேல் ஆவி ஏறிவிட்டது. அது சட்டென்று அவரை தள்ளிவிட்டதால் அவர் சட்டி பானை மேலே உருண்டு விழுந்து பிரளயம்போல பெரும் சத்தம் உண்டாக்கினார். துடைப்பத்தை எடுத்து தலைமாட்டில் வைத்து படுத்தபோது ஆவி ஓடிவிட்டது. பழைய செருப்புகளும் அதே வேலையை செய்யும். துப்பலை விரலில் எடுத்து மூன்று தரம் நெற்றியில் பூசினாலும் பலன் அளிக்கும். ஆனால் ஆகச் சிறந்தது கோயில் திருநீறை வாசல் சட்டத்தில் பூசிவிடுவதுதான். இப்படியாக ஓலைப்பாளையம் அபூர்வ சம்பவங்களாலும் சடங்குகளாலும் நிரம்பி வழிகிறது. நான் இந்தக் கடிதத்தை எழுதும்போது என்னைச் சுற்றி பத்துப் பேர் நின்று எட்டி எட்டிப் பார்த்தபடியே இருக்கிறார்கள். ஒருவர் பேப்பரில் பேனாவால் எழுதுவதை அவர்கள் பார்த்ததில்லை. அதுவும் ஓர் அந்நியமொழியில். எனக்கு இது கொஞ்சம் கூச்சத்தை தருகிறது. இந்த வீட்டில் தொங்கும் உங்கள் படத்துக்கு பூமாலை சூட்டி மரியாதை செய்திருக்கிறார்கள்.

என்னுடைய முதல் சந்திப்புக்காக நான் ஒரு தீண்டத்தகாத மனிதரை ஏற்பாடு பண்ணினேன். அது ஏற்படுத்தக்கூடிய பரபரப்பையோ குழப்பத்தை பற்றியோ நான் யோசிக்கவில்லை. முறைப்பாடு கொண்டு வந்தவர் பக்கத்து வீட்டுக்காரர்தான். நான் இந்த மனிதரை வீட்டுக்கு அழைக்கும் எண்ணத்தில் இருக்கவில்லை. பாப்பம்மா தன் வீட்டு முற்றத்தை எனக்கு ஒதுக்கி தந்தார். இவர் அருமையான தகவல்களையும் சம்பிரதாயங்களையும் எனக்கு சொன்னார். ஒரு பழைய சாக்குமேல் அவர் உட்காரவைக்கப்பட்டார். நான் திண்ணையில் ஒரு பாயில் அமர்ந்திருந்தேன். ஒரு சிரட்டையில் அவருக்கு தண்ணீர் கொடுத்தார்கள். காய்ந்துபோன பழைய இலையில் உணவும் தரப்பட்டது. இப்படி அவரை அவமதித்தது என் அமைதியை குலைத்தது.’

இதை எழுதிய இளம் பெண்ணின் பெயர் பிரெண்டா பெக். பல வாசல்கள் கொண்ட ஒரு மாளிகைக்குள் தற்செயலாக நுழைந்தவர்போல பிரெண்டா எந்த வாசலால் வெளியே வருவது எனத் தெரியாமல் அந்தக் கிராமத்தில் தடுமாறிக் கொண்டிருந்தார். கிராம மக்கள் நல்லவர்கள். எல்லாம் அமைதியாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் பிரெண்டா சுற்றுலாவுக்கு இந்தக் கிராமத்துக்கு வரவில்லை. மானுடவியல் ஆராய்ச்சிக்காக வந்திருந்தார். நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் ஆராய்ச்சிக்கான ஒரு நுனிகூட அவருக்கு கிடைக்கவில்லை.

ஒருநாள் அவருக்கு அதிசயமான பரிசு கிடைத்தது. பாப்பம்மாவின் உதவியாளன் சுந்தரம்தான்  அதைக் கொடுத்தான். ஒரு துண்டு செப்புக்கம்பி, சின்ன பற்றறி, குட்டி பல்ப் ஆகியவற்றை வைத்து ஒருவிளக்கு தயாரித்திருந்தான். மின்சார விளக்கு. வெல்வெட் பெட்டியில் பாதுகாத்த மாணிக்கக் கல்லை கொடுப்பதுபோல வளைந்து அந்தப் பரிசை நீட்டினான். அதிலிருந்து வெளிப்பட்ட மின்சார வெளிச்சம் மின்மினிப் பூச்சியோடு போட்டிபோடும். அந்த மின்விளக்கை தினமும் அம்மாவின் படத்துக்கு முன் ஒரு மணிநேரம் பிரெண்டா எரியவிடுவார்.

அன்றைக்கும் அப்படி எரிந்த மின்விளக்கை அணைத்துவிட்டு படுத்தபோது இரவு அமைதியாய் இருந்தது. எலிகளாலும் வௌவால்களாலும் தொந்தரவு பெரிசாக இல்லையென்றாலும் பாப்பாத்தியின் ஆவி சிலசமையும் துடைப்பத்தை மீறி வெளியே வந்து சத்தம் போட்டு இரவை பரபரப்பாகிவிடும். அந்த நேரங்களில் அவர் ஏன் அங்கு வந்து குடியிருக்கிறார் என்ற கேள்வி பிரெண்டாவின் மனதினுள் எழும். அவருடைய ஆராய்ச்சியை எங்கே தொடங்குவது. எதை ஆராய்வது போன்ற கேள்விகள் மனதை அரிக்கும்போது தூக்கம் கலைந்துவிடும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவரை ஆழமாக சூழ்ந்துகொள்ளும்.

ஒருநாள் இரவு அதையே சிந்தித்தபடி பிரெண்டா படுத்திருந்தார். ஆனால் தூக்கம் வரவில்லை. பாப்பாத்திக்கும் ஆவி வரவில்லை. அப்பொழுது மனதிலே தீர்மானித்தார். நாளை இந்த ஊரைவிட்டு போய்விடவேண்டும். மனிதர்கள் நல்லவர்கள். ஆனால் அவருடைய  ஆராய்ச்சிக்கு என்ன நடக்கிறது. இத்தனை பணம் செலவான பின்னர் அம்மாவுக்கு என்ன  பதில் சொல்வது. அவருடைய ஒக்ஸ்போர்ட் பேராசிரியர் பெருமைப்படும் விதமாக காட்டுவதற்கு ஒன்றுமே இல்லை. அன்று இரவு முடிவதற்கிடையில் அவர் வாழ்வில் பெரிய மாற்றம் வரப்போகிறது என்பது பிரெண்டாவுக்கு தெரியாது. அடுத்தநாள் காலை தன்னுடைய பொருள்களை சேகரித்துக்கொண்டு அந்த ஊரைவிட்டு புறப்படுவது என்று தீர்மானித்தார்.

அப்பொழுதுதான் அது நடந்தது. தூரத்தில் மேளச் சத்தம் கேட்டது. பாப்பம்மாவை எழுப்பி அது என்னவென்று விசாரித்தார். அவர் ’கதை சொல்கிறார்கள்’ என்று கூறிவிட்டு மறுபக்கம் திரும்பி படுத்தார்.  உடனேயே அங்கே போகவேண்டும் என்று கூறி பாப்பம்மாவுடன் அந்த இடத்துக்கு புறப்பட்டார். இரண்டு கதை சொல்லிகள் விளக்கு வெளிச்சத்தில் கதை சொல்ல ஆயத்தம் செய்தார்கள். கிராமத்தவர்கள் ஆர்வமாக முன்னே கூடியிருந்தார்கள். கதை சொல்லி என்ன கதை என்று கேட்க கிராம மக்கள் ’அண்ணன்மார் கதை’ என்று கத்தினார்கள். அப்பொழுது அந்த கதை சொல்லிகள் அந்தக் கதையை சொல்லத் தொடங்கினார்கள். நல்ல காலமாக பிரெண்டா தன்னுடைய டேப் ரிக்கார்டரையும் கையோடு எடுத்துப் போயிருந்தார். இந்த கதையை பதிவு செய்தால் ஏதாவது விசயம் கிடைக்கும் என அவருக்குத் தோன்றவே பதிவு செய்ய ஆரம்பித்தார். பார்த்தால் அன்றிரவு கதை முடியவில்லை அவருக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. தொடர்ந்து 19 நாட்கள் அந்தக் கதை ஓடியது. அதனை முற்றிலும் ஒரு வரிவிடாமல் பதிவு செய்தார் பிரெண்டா.  

பேப்பர் பேனைகூட புழங்காத ஊர் அது. அந்த மக்கள் டேப் ரிக்கார்டரை கண்டது கிடையாது. அதை பிரெண்டா ஓடவிட்டு கதைசொல்லிகளின் குரல் மீண்டும் கதையை சொன்னபோது அப்பாவி கிராம மக்கள் நம்பமுடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். இந்த நிலையில் பாதி கதையிலேயே பிரெண்டாவுடைய பற்றறிகளின் ஆயுள் முடிந்துவிட்டது. எப்படி மீதியை பதிவு செய்வது என பிரெண்டா தத்தளித்தார். ஆனால் ஒரு மின்சார வேலைக்காரர் பக்கத்து கிராமத்தில் இருந்து மின்சாரம் திருடி இவருடைய மெசினை ஓட வைத்துவிட்டதால் பதிவை முடிக்கக் கூடியதாகவிருந்தது.

கதைசொல்லிகளின் பெயர்கள் ராமசாமி, பழனிச்சாமி. நாலாபுறமும் நட்டுவைத்த தீப்பந்தங்களின் வெளிச்சம் அசைய உற்சாகமாக அவர்கள் கதையை சொன்னார்கள். மக்கள் ஒன்றிப்போய் கேட்டார்கள். பாட்டு வரும்போது அவர்களும் பாடினார்கள். கதைசொல்லிகள் சில இடத்தில் அபிநயம் பிடித்தனர். சில இடத்தில் பாடினர். சிலநேரம் குரல் தழுதழுத்து அழுதனர். சில நேரம் சிரிப்பாக சிரித்தனர். சண்டைக்காட்சிகளை விவரிக்கும்போது நெருப்புச் சுவாலைகள் பறந்தன. குதிரைகள் ஓடின. வாள்கள் உராய்ந்தன. பெண்கள் தலைவிரித்து பிணங்களை தேடினார். பிரெண்டாவுக்கு தமிழ் ஒரு சொல்லும் புரியவில்லை. இவை எல்லாவற்றையும் கற்பனையில் அவரால் உணர முடிந்தது. அப்பொழுது தீர்மானம் செய்தார். ஒரு கரும்பை கடித்து உண்பதுபோல, தோடம்பழத்தை உறிஞ்சி சாப்பிடுவதுபோல, பாக்கை மெல்லுவதுபோல, தேனை நக்குவதுபோல எல்லா விதத்திலும் கதையை உள்வாங்கி அனுபவித்து 500 வருட புராணத்துடன் ஐக்கியமாகிவிடவேண்டும் என முடிவெடுத்தார்.

பிரெண்டாவை திடுக்கிட வைத்த விடயம் கதை சொல்லிகள் இருவருக்கும் எழுதவோ படிக்கவோ தெரியாது. தலைமுறை தலைமுறையாக மனனம் செய்த கதை. வாய்மொழிக் கதை அழிந்தால் பின்னர் அதை உண்டாக்கவே முடியாது. ஆகவே பிரெண்டா நாடாக்களை தகுந்தவகையில் பாதுகாத்தார். ஆனால் கதைசொல்லிகளும் கிராமத்தவர்களும் டேப் ரிக்கார்டருக்கு ஒரு பூசை செய்யவேண்டும் என முடிவுசெய்தார்கள். கற்பூரம் காட்டி, விபூதியை பூசி அதற்குமேல் சந்தனப் பொட்டு இட்டு மகிழ்ந்தனர். டேப் ரிக்கார்டருக்கு மாலை போட்டு அலங்கரித்தனர். இறுதியாக தேங்காய் உடைத்து இளநீரை அதன்மேல் தெளித்தபோது பிரெண்டா பாய்ந்துவந்து தடுத்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவரை ஒருவருமே சட்டைசெய்யவில்லை. தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு தொடர்ந்தார்கள். ’கடவுளின் தீர்த்தம் என்பது அவருக்கு தெரியாதா? அத்தனை மூடப்பெண்ணா?’

அவர் வந்த காரியம் இப்படி எதிர்பாராத திசையில் திரும்பியது. 500 வருட காலமாக வாய்மொழியாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட அற்புதமான கதை முதல் முறையாக ஒலிநாடாவில் என்றென்றைக்கும் வாழும் விதமாக பதிவு செய்யப்பட்டது. அதை ஒலிப்பதிவு செய்த முதல் ஆள் இவர். கடைசி ஆளும் இவராகத்தான் இருப்பார். சில வருடங்களில் மின்சாரம் அந்தக் கிராமத்துக்கு வந்து சினிமாவும் நுழைந்தது. கதைசொல்லிக் கேட்கும் வழக்கம் ஒழிந்தது. அவர் கண் முன்னாலேயே 500 வருடத்து வாய்மொழிக் காவியம் அழிவதைக் கண்டார்.

குன்னுடையான் கதை அல்லது அண்ணன்மார் கதை என்று சொல்லப்படும் இந்தப் புராணம் 19 நாட்களுக்கு தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டது என்றால் அதன் நீளத்தை ஓரளவுக்கு ஊகிக்க முடியும். செவிவழியாக 500 வருடங்கள் வாழ்த கதையானதால் ஒவ்வொரு கதைசொல்லியும் அங்கங்கே தங்கள் சரக்கையும் சேர்த்து இருப்பார்கள். ஆகவே பல்வேறு வகைப்பட்ட கதைகள் இன்று உலவுகின்றன. இலங்கையில் பதுளையில் இந்தக் கதை அறுபது வருடங்களாக சொல்லப்படுகிறது என்ற தகவலும் ஆச்சரியமானது. இந்த நீண்ட கதையை சுருக்கி சொல்வது இமயமலையை தபால்தலையில் வரைவதுபோல.

கோலாத்தனுக்கு சோழமன்னன் பொன்னிவள நாட்டைக் கொடுக்கிறான். அவனின் நாடு செழித்து வளர்கிறது. அவன் அரியநாச்சியை மணமுடித்தாலும் குலம் தழைக்க அவர்களுக்கு பிள்ளை இல்லை. ஒரு நாள் கற்களுக்கு கிழே கண்டெடுத்த பிள்ளையை குன்னுடையான் என்று பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். ஆனால் ஐந்து வயதிலேயே பெற்றோரை பறிகொடுத்த அவன் அனாதையாகிறான். கோலாத்தனின் சகோதர்கள் பாலகனை இம்சைப் படுத்துகிறார்கள். குன்னுடையான் தப்பியோடி வேறு நாட்டில் ஆடு மேய்ப்பவனாக வாழ்கிறான். இளைஞன் ஆனதும் ஆட்டு மந்தையின் தலைவன் தங்கை தாமரையை மணந்துகொண்டு தன் சொந்த நாட்டுக்கு திரும்புகிறான். அங்கே அவனுடைய நிலத்தை  மாமன்மார் அபகரித்துவிடுகிறார்கள். குன்னுடையான் ஒரு சிறு குடிசை கட்டி கற்கள் நிறைந்த நிலத்தை  பாடுபட்டு விவசாய நிலமாக்கி நல்ல விளைச்சல் கண்டு, பறிபோன நிலங்களை மீட்டு அரசனாகிறான். தாமரைக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. பொன்னர், சங்கர் என்ற இரண்டு ஆண்பிள்ளைகளும், தங்காள் என்ற பெண்பிள்ளையும்.

காட்டை ஆள்பவர்கள் வேடுவர்கள். அவர்களுக்கு காடு தேவை. நாட்டை ஆளும் பொன்னர் சங்கருக்கு காட்டை அழித்த நிலம் தேவை இதனால் பகை உண்டாகிறது. வேடுவருக்கு சொந்தமான கிளியை பிடித்ததால் மிகக் கடுமையான போர் மூள்கிறது. வேடுவரின் தலைவன் காளியுடன் பொன்னரும் சங்கரும் வீரமாகப் போர் புரிந்து இறக்கிறார்கள். அவர்கள் தங்கை தங்காளும் அவர்களைத் தொடர்வதோடு கதை சோகமாக முடிகிறது.

பிரெண்டா 22 மாதங்கள் தொடர்ந்து கிராமத்தில் ஆராய்ச்சி செய்தார். பலரை சந்தித்து அருமையான தகவல்களும் குறிப்புகளும் சேகரித்துக் கொண்டு ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் திரும்பிய அவர் 1968 ல் தன் ஆராய்ச்சியை முடித்தார். நீண்டகால இடைவெளிக்கு பின்னர் கனடாவுக்கு திரும்பிய பிரெண்டா  கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மானுடவியல் பேராசிரியர் பதவியை ஏற்று பல வருடங்கள் கடமையாற்றினார். ஆனால் அவருக்கு நிம்மதி இல்லை. ஏதோ ஒன்று அவர் வாழ்க்கையில் இல்லாமல் போன உணர்வு துரத்தியது.

கிராமங்களில் வாய்மொழியாக தொடர்ந்த நாட்டார் கதைப் பாடல்களை பாடுவது அருகி வருவது அவருக்கு தெரிந்தது. சினிமாவும் புதிய தொழில் நுட்பமும் எல்லாவற்றையும் அழித்தன. அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அந்த கலையை ஏன் காப்பாற்றமுடியாது என அவர் சிந்தித்தார். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்னர் நாடாவில் பதிவு செய்த உடுக்கையடிப் பாடல்கள் அவரிடம் இருந்தன. தற்செயலாகத்தான் அப்போது அது நடந்தது. இப்பொழுது அது பெரும் கலைப்பொக்கிஷம். தோற்றவர்கள் வரலாறு எழுதப்படுவதில்லை. இது தோற்றவர்களின் காவியம். இதை அழியவிட்டால் ஒரு மக்களின் கலையும், பண்பாடும், வரலாறும் பூமியிலிருந்து மறைந்துபோகும். பிரெண்டா ஒரு முடிவு எடுக்கவேண்டிய தருணம் நெருங்கியது அப்படித்தான்.

                      *                                *
நான் தரையில் இருந்தேன். எனக்கு முன் பிரெண்டா அமர்ந்திருந்தார். எங்கள் இருவருக்கும் இடையில் 50 வருடத்துக்கு முன்னர் டேப்பில் பதிவுசெய்யப்பட்டிருந்த கதைசொல்லியின் குரல் கதையை சொன்னது. அவர் சொன்னதை அப்படியே கையெழுத்தில் எழுதிய தாள்கள் பழுப்பாக எழுத்து அழியாமல் எனக்கு முன் ஒன்றரை அடி உயரத்தில் அடுக்கப்பட்டு இருந்தன. பிரெண்டா அண்ணன்மார் கதையை ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டு பாகங்களாக எழுதிய நூல்கள், இதே கதையை படக் கதையாக மாற்றி எழுதிய 16 புத்தகங்கள் ஆகியனவும் என் முன்னே அடுக்கப்பட்டிருந்தன. ஒளிப்படங்களாக மாற்றப்பட்ட 16 படக் கதைகள் ஐபாட்டில் ஓடின. இடது பக்கம் திருப்பினால் சுடுநீரும், வலது பக்கம் திருப்பினால் தண்ணீரும் குழாயில் வருவதுபோல ஐபாட்டில் ஓடும் ஒளிப்படத்தின் கதைமாந்தர்கள் தமிழிலும், வேண்டும்போது ஆங்கிலத்திலும் பேசினர்.

நான் 50 வருடத்திற்கு முந்திய தாள்களையும் எழுத்தையும் தொட்டுப் பார்த்து ‘இவை வரவேண்டிய இடத்துக்கு வந்திருக்கின்றன. இவற்றை எப்படியும் பாதுகாத்தாக வேண்டும்’ என்றேன். பிரெண்டா ’இந்த தாள்களை தொட்டவர்கள் மூன்றுபேர். இதை எழுதியவர். நான். என் கணவர். இப்போது நீங்கள், நாலாவது ஆள்’ என்றார். ’இதையெல்லாம் செய்து முடிப்பதற்கு எத்தனை பணம் செலவழித்தீர்கள்?’ அவர் சொன்னார் ’ஒரு மில்லியன் டொலர்.’ என்னால் நம்பமுடியவில்லை. பேச்சு நின்றுவிட்டது. எனக்கு முன்னுக்கு உட்கார்ந்திருக்கும் பெண்  மானுடவியல் பேராசிரியர் பதவியை 1983ம் ஆண்டு உதறிவிட்டு கடந்த 30 ஆண்டுகளாக எழுத்திலும், ஒலியிலும், ஓவியத்திலும், ஒளியிலும் இந்தக் கதையை நிரந்தரமாக நிறுவியிருக்கிறார். ’எதற்காக வேலையை விட்டீர்கள்?’  என்று கேட்டேன்.

’50 வருடத்துக்கு முன்னர் அந்தச் சிறிய கிராமத்தில் வாழ்ந்ததை நான் யோசித்துப் பார்த்தேன். அந்த எளிய மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னால் என்றென்றைக்கும் மறக்கமுடியாதவை. அவர்களுடைய கலை 500 வருட பாரம்பரியம் கொண்டது. நான் அவர்களுக்கு திருப்பி என்ன செய்தேன்? என் குற்ற உணர்வு என்னை வதைத்தது. அண்ணன்மார் கதையை எப்படியும் அழியாமல் எதிர்காலச் சந்ததியினருக்கும் கடத்தவேண்டும் என்று தோன்றியது.’ ’எப்படி முடிவெடுத்தீர்கள்? திடீரென்றா?’

‘திடீரென்றுதான். அந்தக் கிராமத்தில் ஒரு கதை சொல்வார்கள். ஒரு கிழவன் சாக்குப் பையை சுமந்துகொண்டு நடந்தான். கனமாக இருந்தது. திறந்து பார்த்தால் ஒரு கல் இருந்தது. அதை எறிந்துவிட்டு தொடர்ந்தான். மேலும் சிறிது தூரத்தில் மறுபடியும் பாரம் அழுத்தியது. மீண்டும் சாக்கை திறந்து பார்த்தான். இன்னொரு கல். அதையும் எடுத்து வீசிவிட்டு மறுபடியும் நடந்தான். இன்னொரு கல். இன்னொரு கல். இப்படி எறிய எறிய கல் முடியவே இல்லை. கடைசிக் கல்லை எடுத்து வீசிவிட்டு ஒரு மரத்தடியில் ஆறினான். புறப்படும்போது தற்செயலாக சாக்கை திறந்து பார்த்தவன் திடுக்கிட்டான். இன்னொரு கல். அப்பொழுதுதான் அவனுக்குப் புரிந்தது. எத்தனை கல்லை அவன் வீசினாலும் கல் அவனை விடுவதாயில்லை. நான் அண்ணன்மார் கதையை என் மனத்திலிருந்து எவ்வளவுதான் விரட்டினாலும் அது என்னை விடுவதாக இல்லை. அப்பொழுதுதான் முடிவெடுத்தேன் அன்றே பணி விலகும் கடிதத்தை கொடுத்தேன்.’

’இனி என்ன செய்வதாகத் தீர்மானம்?’ ’500 வருடங்கள் வாய்மொழி மூலம் பரம்பரை பரம்பரையாக ஒரு கிராமத்தில் தொடர்ந்த கதை சினிமா மற்றும் புதுத் தொழில் நுட்பம் வந்ததும் நின்றுவிட்டது. அந்த இரண்டு கதை சொல்லிகளுக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. இன்று அவர்கள் இல்லை; அவர்களுடைய குரல் என்னிடம் இருக்கிறது. கதையும் இருக்கிறது. இதை உலகம் முழுக்க பரப்பவேண்டும். எண்மிய தொழில் நுட்பத்தால் இன்று இதுவெல்லாம் சாத்தியமாகிவிட்டது. மக்கள் மனதில் இந்த அற்புதமான கதை என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும்.’ 8400 மைல்களுக்கப்பால் உள்ள ஒரு சின்னக் கிராமத்தின் வாய்மொழிக் கலைச் செல்வத்தை உலகமுள்ளவரை பாதுகாக்கவேண்டும் என்பதில் அசைக்கமுடியாத உறுதியுடன் இருந்தார் இந்த ரொறொன்ரோப் பெண்.

20 வயது இளம் பெண்ணாக இவர்  மண்குதிரையை பிடித்துக்கொண்டு நின்ற கறுப்பு வெள்ளைப் படத்தை பார்த்தேன். கறுப்பு தலைமுடி. வெள்ளைச் சேலை. பழுப்பு நிற பிளவுஸ். தலைமுடி  வாரி இழுத்துப் பின்னி, பொட்டு வைத்துக்கொண்டு சற்றே கீழே பார்த்த கண்களுடன் நிற்கும் பெண். அந்தக் கண்களில் அளவில்லாத ஆர்வமும், துடிப்பும், நம்பிக்கையின் ஒளியும் இருந்தன.
எனக்கு முன்னால் இருந்தவரைப் பார்த்தேன். முன்பு சிரிப்பு காணப்பட்ட இடத்திலெல்லாம் இப்போது சுருக்கம் இருந்தது. அங்கங்கே நரைத்துவிட்ட தலைமுடி மேலே இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. கறுப்பு கால்சட்டை, பழுப்பு மேலங்கி, சாம்பல் நிற கழுத்துச் சால்வை. ஆனால் அந்தக் கண்கள். கண்கள். அவற்றிலிருந்து வெளிப்பட்ட ஒளி மாறவே இல்லை.

...மேலும்

Jul 27, 2013

உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தும் மதங்கள்பழைய பொதுவுடைமைச் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் என்பது இல்லவே இல்லை, மாறாக. அங்கே தாய்வழிச்சமூக அமைப்பே இருந்தது, அச்சமூகத்தில் பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாக இருந்தனர், உணவு உற்பத்தி. கைத்தொழில் இவைகளில் ஈடுபடத்தொடங்கிய சமூகத்தில் தான் பெண் - ஆண் வேலைப்பிரிவினையின் காரணமாக பெண்ணடிமைத்தனம் தொடங்கியது, பின்னர் தனிச்சொத்துடைமையும். குடும்ப அமைப்பும் கெட்டிப்பட்டச் சூழலில். தாங்கள் பெற்றெடுக்கும் வாரிசுகளை தாங்கள் மட்டுமே பேணிக்காப்பாற்ற வேண்டிய கட்டாயம் பெண்கள் மேல் திணிக்கப்பட்டது, இதன் காரணமாக தாய்வழிச் சமூகம் தகர்க்கப்பட்டு. தந்தை வழிச்சமூகமாக நிலை நிறுத்தப்பட்டது.

பெண்களின் உழைப்பை மிகவும் மலிவாக அபகரிக்கும் பொருட்டு தினமும் 11 முதல் 14 மணிநேர வேலை என்ற பெரும் சுமையை பெண்களின் மீது சுமத்தியது முதலாளித்துவச் சமூகம், இதன் மூலம் உழைப்புச் சுரண்டலை மிகவும் விரிவுபடுத்தியது முதலாளித்துவம், மிக நீண்ட காலமான இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எட்டுமணி நேரவேலை, வாக்குரிமை, கூலி உயர்வு, நிரந்தர வேலை போன்றவைகளை மய்யப்படுத்தி உழைக்கும் பெண்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் உயிரை இழந்து மிகப்பெரிய ரத்தம் தோய்ந்த வரலாற்றை உலகில் உருவாக்கினர்,  இவ்வாறு வெடித் தெழுந்த உழைக்கும் பெண்களின் இயக்கத்தின் மகத்தான தலைவர் தான் தோழர் கிளாரா ஜெட்கின் அவர்கள் இவரே உழைக்கும் மகளிர் தினம் உலகில் பிரகடனப்படுத்த காரணமாக இருந்தவர்.

ஆனால். இந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டு. சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் என்பது சுருங்கிப்போய் வெறுமனே சர்வதேச பெண்கள் தினம் என்று மட்டுமே தற்போதைய நிலை உள்ளது, இந்திய. தமிழகச்சூழலில் அது மேலும் மோசமடைந்து கோலப்போட்டி. சமையல் போட்டி. அழகிப்போட்டி என்பதாக திட்டமிட்டு திசை திருப்பப்பட்டு. பெண்களின் போராட்ட குணம் மழுங்கடிக் கப்பட்டு. பெண்ணடிமைச் சிந்தனையை உறுதிப்படுத்தும் ஒரு நாளாகவே இது சித்தரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணுரிமையை மீண்டும் பெற தற்போது நம்மிடையே நிலவும் பெண்ணடிமைத்தனத்தைக் களைவது எப்படி என்பதை, அதுவும் மத, ஜாதி காரணிகளின் அடிப்படையில் பெண்கள் பாகுபாடு படுத்தப்படுவதை ஆய்வு நோக்கில் பார்க்க வேண்டும்,

கிறிஸ்துவ மதத்தில் பெண்களுக்கு தேவாலயங்களில் பூஜை செய்யும் மதகுருமார்கள் என்ற தகுதி கூடத்தரப்படுவதில்லை, மதகுருமார்கள் ஆகும் வாய்ப்பு கூட மறுக்கப்படும் அவர்களுக்கு அந்த மதத்தின் தலைமைப் பொறுப்பான போப் ஆகும், வாய்ப்பு முற்றிலும் தகர்த்தெறியப் படுகிறது, ஆனால், தொழுநோயாளிகளுக்கு அதிகபட்ச சகிப்புத் தன்மையுடனும், நன்றியை எதிர்பார்க்காமலும் செய்த தொண்டின் காரணமாக கிறிஸ்துவ மதத்தில் உள்ள எந்த ஒரு ஆணையும்விட, மதர் தெரசா என்ற பெண்ணின் பெயர்தான் மதங்களைக் கடந்து உலகம் முழுக்க அனைவர் நினைவிலும் இருக்கிறது என்பதை நாம் நினைவு கூறவேண்டும்.

இஸ்லாம் மதத்தில், ஆண்கள் தொழுகை நடத்தும் எந்தப் பள்ளிவாசலிலும் பெண்களை தொழுகை நடத்த அனுமதிப்பதில்லை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி கிணறு. தனி சுடுகாடு என்று அமைக்கப்பட்டிருக்கும் மிக மோசமான பாகுபாடுகளைப் போன்றுதான், இஸ்லாமியப் பெண்களின் தொழுகைக்கு மட்டும் என்று சில இடங்களில் பள்ளிவாசல்கள் பெருந்தன்மையுடன் (?) ஒதுக்கப் பட்டுள்ளன, மற்றபடி. 99 விழுக்காடு இஸ்லாமியப் பெண்கள் தங்கள் வீடுகளில் மட்டுமே தொழுகை நடத்தும் தகுதி பெற்றவர்கள் தொழுகையில்  கூட ஆண்களுக்கு நிகராக பெண்கள் வைக்கப்படாத நிலையில். அவர்கள் மவுல்வி (மதகுரு)யாக ஆவது என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் தான், வெளிநாட்டு மதங்களால் பெண்கள் சிறுமைப்படுத்தப் படுகிறார்கள் என்றால். இந்தியாவில் தோன்றிய பவுத்த. சமண மதங்களிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு என்பதே இல்லை, பெண்களின் சமஉரிமைக்கு இங்கேயும் சமாதி எழுப்பப்பட்டு விட்டது.

இந்தியாவில் உள்ள கிறிஸ்துவ. இஸ்லாமிய. பார்சி மதக்காரர்களை தவிர மீதி அனைவரும் (மதம் அற்றவர்களையும் சேர்த்து) எங்கள் மதக்காரர்கள் தான் என கும்மியடிக்கும் இந்து மதமோ. பெண்களை இழிவு படுத்துவதை ஆயுள் முழுக்கச் சொன்னாலும் மாளாது, முருகக்கடவுளை அறிமுகப்படுத்தும் போது கூட முருகனின் தாயின் பெயரை முன்னிலைப் படுத்தி கொற்றவைச் சிறுவன் என்றே சொல்கிறது இந்துமதம்  பெண் தெய்வமான அம்மன்வழிபாட்டை சிற்றூர், பேரு்ர், நகரம், மாநகரம், கடலூர், மலையனூர், மேட்டூர், பள்ளத்தூர், சமயபுரம் (சமவெளிபுரம்) என புவியியலின் அனைத்து தளங்களிலும் நீக்கமற கொண்டு செல்கிறது இந்துமதம்.

மழைபொழிய வேண்டுமா? மாரியம்மன் இருக்கிறார், நோய் தீர்க்க வேண்டுமா? மகமாயி மகராசியாக துணை நிற்கிறார், இவ்வாறு கின்னஸ் சாதனையே தன்னைக் கிள்ளிப்பார்க்கும் அளவுக்கு பெண் கடவுள்களின் பட்டியலை அள்ளிக்குவிக்கிறது இந்துமதம்.

பெண் தெய்வங்களை இவ்வளவு முன்னிலைப்படுத்திய இந்து மதத்தில். சூத்திரப் பெண்களை விட்டுவிடுங்கள். ஸ்மார்த்த பிரிவைச் சேர்ந்த ஒரே ஒரு பார்ப்பனப் பெண்ணாவது இதுவரை சங்கராச்சாரி ஆக முடிந்ததா? இனியாவது ஆக முடியுமா? பெண்களை சங்கராச்சாரிகளாக் கூட ஆக்க வேண்டாம், சங்கராச்சாரிகள் பெண்களை இழவு படுத்தாமலாவது இருந்திருக்கிறார்களா?

அரசியல் துறையில் ஆண்களைவிட ஆளுமைத்தன்மை அதிகம் பெற்றவராக விளங்கியவர் இந்திராகாந்தி அவர்கள், ஜாதி அடுக்கைப் பொறுத்தவரையில். காஷ்மீரத்துப் பண்டிட் என்னும் உயர் வகுப்புப் பார்ப்பனர் அவர். காஞ்சி சங்கராச்சாரியை சந்திக்க சென்றார். கணவரை இழந்த பெண்ணை சந்தித்தால் தோஷம்; நீர்நிலைக்குப் பக்கத்தில் சந்தித்தால் தோஷம் நீங்கும் என்று மனுசாஸ்திரத்தை புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்ட சங்கராச்சாரி, இந்திரா காந்தியை. சங்கரமடத்திற்குள் சந்திக்காமல் கிணற்றடியில் சந்தித்தார். உயர்ஜாதியில் பிறந்த பிரதமராக இருந்த இந்திராகாந்திக்கே இதுதான் நிலை இந்துமத்தில், (இவர் கையாள நினைத்த பல பார்ப்பனப் பெண்களை சங்கரமடத்திற்குள் வைத்துதான் இவர் தன் விருப்பத்தைத் தீர்த்துக் கொண்டார் என்று பல பத்திரிகை செய்திகள் கூறின என்பது அனைவரும் அறிந்ததே)  இப்போது இயல்பாக நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது,  மனைவியை இழந்த எந்த ஆணையும் சங்கராச்சாரி சங்கரமடத்திற்குள் சந்தித்ததே இல்லையா  என்பதே அந்தக் கேள்வி. 

பெண்கள் என்றால் எந்த எல்லைக்கும் சென்று இழிவுபடுத்துவது தானே இந்து மதத்தின் வாடிக்கை. பூரி என்ற இடத்தில் இருக்கும் மற்றெhரு சங்கராச்சாரியை சந்திக்க நேரம் கேட்டார் இந்திராகாந்தி, ஆனால். இந்திராகாந்தியை பார்க்கவே அவர் மறுத்துவிட்டார், இந்திராகாந்தி பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும். திருமணம் செய்த வகையில் அவர் பார்சிக்காரர்,  எனவே சந்திக்கமுடியாது, எனக்காரணமும் கூறினார் பூரி புண்ணியவான் (?) கணவரை இழந்தவராக இருந்தாலும், வேறு மதத்தைச் சார்ந்தவரை திருமணம் செய்தாலும் பெண்கள் எப்போதும் இந்து மதத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் என்பதே உண்மை.                கற்பு பற்றி குஷ்பு சொன்னவுடன், கலாச்சாரக் காவலர்களாக தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட சிலர் முறையற்ற எதிர்ப்பைக் காட்டினார். ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சங்கராச்சாரி கூறியபோது இந்த கலாச்சாரக் காவலர்கள் அனைவரும் கண், காது அறுவைக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் போலும். ஆண் ஆதிக்கம் எங்கும் நிலைபெற்று இருப்பதே இதன் காரணம் ஆகும்.

சமஸ்கிருத மந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் திருமணங்களில் மணமகள் மிக மிக கேவலப்படுத்தப்படுகிறார். சோமன், கந்தர்வன், அக்னி ஆகிய மூவருக்கும் இந்த மணமகள் மனைவியாக இருந்தார். இப்போது மணம் செய்யப்போகும் மணமகனுக்கு நான்காவதாக மனைவி ஆகப்போகிறார் என்று பெண்களை இழிவுபடுத்துவது தானே இந்து மதம்? கருமாதி - திதி - திவசம் சிரார்த்தம் கொடுக்கும் ஒவ்வொரு ஆணும் தன்னுடைய தாயை இழிவு படுத்தக்கூடிய மந்திரங்களை தான்சொல்கிறார் என்பதை என்றைக்காவது இந்து மதம் உணர்த்தியிருக்கிறதா? பெண்களை ஜாதியைக் காப்பாற்றும் மிகப்பெரும் கருவியாக இந்துமதம் கருதுகிறது.

குழந்தை மண முறையை ஒரு காலத்தில் பேணிக்காத்தும் அந்தக் காரணத்திற்குத் தான், கணவனை இழந்தப்பெண்ணை, கணவணை எரித்தத்தீயிலேயே தள்ளி கொன்றதும் ஜாதி காப்பாற்றும் கடமை தான் (?) பெண்களில் ஒரு பிரிவினரை தேவதாசிகள் என்றும் அது அவர்கள் கடவுளுக்கு செய்யும் தொண்டு என்றும் கூறி அண்மைக்காலம் வரையில் ஜாதியை காப்பாற்ற முயற்சித்தும் இந்துமதம் தான். இவ்வளவு இழிவுகளையும் பெண்கள் மேல் சுமத்தப்படக்காரணம் என்ன தெரியுமா? பெண்ணடிமைத்தனத்தை சாஸ்திரப்படி. சம்பிரதாயப்படி சடங்குகளின் மூலம் சட்ட நிர்பந்தத்திற்கு உட்படுத்திய மனுசாஸ்திரம் என்ற நூல் தான், அந்த மனுசாஸ்திரத்தின் சட்டங்களே இந்து சட்டமாக இன்றும் இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

பெண்களை இந்து மதமும் அதன் மதபீடங்களும் கேவலப்படுத்திய போது பெரியார் பெண்களுக்காக பேசிய பேச்சுகள். எழுதிய எழுத்துக்கள். நடத்திய போராட்டங்கள் மிகப்பெரிய வீச்சாக மாறி பெண்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தின, 1929ல் மாநாட்டிலும். 1931 இல் விருதுநகரில் கூடிய சுயமரியாதை பெண்கள் மாநாட்டிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சிலவற்றை மட்டும் உங்களின் பரிசீலனைக்கு வைக்கின்றோம்.

  • மனைவி. கணவன் இருவரில் ஒருவருக்கொருவர் ஒத்துவராத. விருப்பமில்லாத போது அவர்களின் திருமண ஒப்பந்தத்தை ரத்துசெய்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கவேண்டும்.
  • கைம் பெண்கள் மறுமணம் புரிய உதவி செய்ய வேண்டும்.
  • பெண்ணும் ஆணும் ஜாதி மத பேதமின்றி தங்களின் கணவனையும் மனைவியையும் தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப் படவேண்டும்.
  • பெண்களுக்கு. ஆண்களைப் போலவே சமமான சொத்துரிமைகளும். வாரிசு உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும்.
  • பெண்களும் ஆண்களைப் போலேவே எந்தத் தொழிலையும் மேற்கொண்டு நடத்துவதற்கு சமஉரிமையும். அவகாசமும் கொடுக்கப்பட வேண்டும்.
  •  பள்ளிக்கூட ஆசிரியர்கள் வேலையில் பெண்களே அதகிமாக நியமிக்கப்பட வேண்டும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களாக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.
  • பெண்களை முப்பது வயதுவரை படிக்க வைக்க வேண்டும்.
  • பெண்களை காவல்துறையிலும். ராணுவத்திலும் சேர்க்க வேண்டும்.
  • கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே சம்மந்தப்பட்டது அல்ல

இதுபோன்ற பெண்களின் உரிமைகளைச் காக்கும். பெண்களுக்கு சமூகத்தில் சமஉரிமை கொடுக்கும் பல தீர்மானங்களை 80 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றினார்.

இன்றைய சூழலில் ஜாதி. மத அடிமைக்கருத்துயும். பெரியாரின் பெண்ணடிமை ஒழிப்புக் கருத்துக்களையும் அலசி ஆராய்ந்து எது சரி என்று படுகிறதோ அதை கைவிளக்காகப் பிடித்துக் கொண்டு பெண்கள் தங்கள் தனிவாழ்விலும் சமூக வாழ்விலும் அடிமைகளாக இல்லாத ஒருநிலைக்கு உயர வேண்டும்.

உடலின் ஒரு பாதி நன்றாக இருந்து. மறுபாதி இயங்காமல் இருந்தால் அதை பக்கவாதம் என்கிறோம், அதேபோல. சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களும் முன்னேற்றமடைந்த நிலை வந்தால் தான் அந்தச்சமூகம் ஆரோக்கியமான சமூகமாக கருதப்படும். மடியட்டும் ஜாதி. மத அடிமை கருத்துக்கள் !மலரட்டும் பெண் ஆண் சமத்துவக் சமுதாயம்!!

- மேட்டூர் ஜஸ்டின்ராஜ்

...மேலும்

Jul 26, 2013

ஜில்லெட்டின் படை வீரர்கள் -சமீபத்தில் ஜில்லட் நிறுவனத்தின் படைவீரர்கள் தேவை எனும் ஒரு விளம்பரத்தைக் காண நேர்ந்தது. பெண்கள் தினம் என்பது ஆண்களின் தினமாக, ஆணாதிக்க ’பெண்மை’ போற்றும் தினமாக, பெண்களுக்கு ‘லஞ்சம்’ கொடுக்கும் தினமாக மாறிவிட்ட சூழலில், இந்த விளம்பரம் என் கவனத்தை ஈர்த்தது.

அந்த விளம்பரம் என்ன சொல்கிறது:

ஆங்கிலத்தில்:

Soldiers Wanted not to guard the borders

Not to go to war

But to

Support the most important Battle of the Nation

To stand up for women

Because when you respect women

You respect your nation

Support the Movement

Gillette salutes the Soldier in You

தமிழில்:

// Because when you respect wome// – எனும் இந்த வரியை மொழிபெயர்த்தால், ஏனென்றால் நீங்கள் பெண்களுக்கு மதிப்பளித்தால் என்று வருகிறது ஆனால் நான் விளம்பரத்தைப் பார்க்கையில் என் காதில் பெண்களுக்கு வாய்ப்பளித்தால் என்று வந்ததாக நினைவு. (தவறாக இருப்பின் தெரிவிக்கவும்)

பெண்களுக்கு வாய்ப்பளித்தால் எனும் வார்த்தையில் உள்ள அரசியல் மிகவும் ஆபத்தானது ஏனென்றால் அது பெண்ணை ஆணிடம் இறைஞ்சிப் பெருபவளாக, ஆணே எல்லோருக்குமான ‘கடவுளாக’ சித்தரிக்கிறது. எதற்காக பெண்கள் ‘படைவீரர்களிடம்’ வாய்ப்பை எதிர்பார்த்து நிற்க வேண்டும். வாய்ப்பு கொடுக்கும் நிலையில் ஆண்களும், பெறும் நிலையில் பெண்களும் ஏன் இருக்கிறார்கள்?

அது அவ்வாறில்லை ‘பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர்கள் என்ன சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள் ‘பெண்களுக்கு மதிப்பளத்தல் என்பது தேசத்திற்கு மதிப்பளித்தல் என்பதாகும்’ என்று அறைகூவல். இதைவிட ஒரு நகைப்புக்குரிய ஒரு ‘முதலாளித்துவ கண்ணீரை’ நாம் பார்க்க முடியாது.

பெண்களுக்கு மதிப்பளிக்க இவர்கள் யாரை அழைக்கிறார்கள் தனி நபர் ஆண்களை. எவ்வகையான ஆண்களும், பெண்களும் இதில் இடம்பெறுகிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தாலே இது எந்த வர்க்கத்தைக் ’கவர’ எடுக்கப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். உண்மையில் ஒருவர் பெண்களுக்கு மதிப்பளிக்க விரும்பினால் முதலில் அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். ‘படைவீரர்’ என்பதே  ’ஆண்மை’ எனும் ஆணாதிக்க கருத்தியலை முன் வைக்கும் ஒரு சொல். வீரர் என்றாலே அது ஆண் என்பதுதான் பொதுப் புரிதல். வீரராய் இருப்பவர்தான் பெண்ணுக்கு பாதுகாவலராக முடியும், அல்லது பெண்ணுக்கு பாதுகாவல் / மதிப்பளிப்பதென்பது வீரமிக்க செயல் என்று சொல்வது அபாசமான ஒன்றில்லையா?

பெண்ணுக்கு மதிப்பளிப்பதென்றால் என்ன?  பெண் விடுதலை என்றால் என்ன? பெண்மை என்ற பெயரில் அவளை ஆணாதிக்க வரையறைக்குள் இருத்தி ‘நீ பெண், நீ பெண்’ பெண்ணாய் இருப்பதாலேயே உனக்கு எல்லா சலுகைகளும், அங்கீகாரங்களும் கிட்டும் என்று  மன்மார்ந்த அடிபணிதலை வலியுறுத்துவதா?

ஆங்கிலத்தில் ஸ்டாண்ட் அப் ஃபார் வுமன் அதாவது பெண்களுக்காக துணை நிற்போம் (குரல் கொடுப்போம்) என்று பொருள். எந்த வர்க்கத்துப் பெண்களுக்கு, எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்க விரும்புகிறார்கள் என்றொரு கேள்வி எழுகிறது. வர்க்க பேதத்தைக் கூட விட்டுவிடுவோம். எதை வலியுறுத்தி இவர்கள் துணை நிற்கப்போகிறார்கள். இந்த விளம்பர நிறுவனத்தின் ‘பண்டத்தையே’ எடுத்துக் கொள்வோம், இது மயிர் மழிக்கும் ஒரு கருவி, இதுவரை அவர்கள் மயிர் மழிப்பது என்பது ‘ஆண்மை’, ஆணின் அடையாளம், அழகு என்றுதானே சொல்லி வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கான மழிக்கும் கருவியையும் இதே நிறுவனம் தயாரிக்கிறது, அதுபற்றிய பேச்சு எங்குமே இல்லை. (அதைப் பேசினாலும், அழகு, ஆணைக் கவர்வதற்கான ஒரே உத்தி என்றுதான் இருக்கும்).

அடுத்து இவர்கள் முன் வைக்கும் ‘படை வீரர்’ அடையாளம் – இதுதான் உண்மையில் உச்சபட்ச நகைச்சுவை, உண்மையில் படை வீரர்கள் / அவர்கள் மேல் அதிகாரிகள் தங்களுடன் பணி புரியும் பெண்களுக்கு விழைத்த பாலியல் தொந்தரவுகள் எத்தகையது என்பது யாவரும் அறிந்ததே. அஞ்சலி குப்தாவை நாம் மறந்திருக்க மாட்டோம். பூனம் கவுர், டிம்பிள் சிங்காலா ஆகியோர் மேல் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்ததற்காக கோர்ட் மார்ஷியல் செய்யப்பட்டார்கள்.  சொல்லப்போனால், ஒரு சாதாரணக் குடிமகன் வன்புணர்வு, பாலியல் அத்துமீறல் செய்தால் ‘தூக்கிலிடு’ என்று கொந்தளிக்கும் ‘வர்க்கமானது’ இராணுவத்தினர் செய்யும் பாலியல் அத்துமீறலுக்கு (அது சக பணியாளரோ அல்லது பொதுமக்களிடத்தோ) மௌனம் காத்துவருவது வெளிப்படை.  இராணுவக் குற்றம் என்பது ஒரு அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுக்கென்று தனி விசாரணை முறை, தனி நீதிமன்றம். பாதிக்கப்பட்டவர் அக்குற்றங்களை வெளிக்கொண்டுவருவதில் தொடங்கி நீதிக்காக போராடுவது வரை அவர் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லில் அடங்காது. பல வேளைகளில் அது தற்கொலையிலேயே முடிகிறது. ’இப்படிப்பட்ட படைவீரர்கள் பெண்களுக்குத் துணை நிற்பதா’ அத்தனை பலவீனமானவர்களா, முட்டாள்களா பெண்கள்.

(பெண்கள் வில்லன்கள்)

தெரிந்தோ தெரியாமலோ இவ்வளிம்பரம் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கிறது. ஆம், படை வீரர்கள் தங்கள் வீரத்தை பொதுமக்களிடத்து மட்டுமே காட்டுவார்கள். அதேபோல் இவர்கள் பொதுமக்களில் இருக்கும் ‘ஆண்களை’ அழைக்கிறார்கள். அஸ்ஸாம், ஜார்கண்ட், தண்டகாரண்யம் போன்ற பகுதிகளில் முதலாளிகளுக்கு நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் மாபெரும் பணியில் ஈடுபடுபடுவதற்காக இராணுவ வீரகள் குவிக்கப்பட்டுவிட்டதால், பெண்களுக்கு பாதுகாப்பளிக்க, துணை நிற்க பொதுமக்களில் இருக்கும் ‘படை வீரர்களே’ எஞ்சியிருக்கிறார்கள் என்ன செய்வது.

பெண்களுக்கு துணை நிற்பது என்றால் என்ன? முதலில் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை அதிகாரப்பூர்வமாக, சட்டபூர்வமாக பெற்று தருவதற்கு உழைப்பது, பெண் எனும் கருத்தியலை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுப்பது, பெண்ணை மதியுங்கள் என்று முழக்கமிடுவதற்கு பதில் பெண்களுக்கான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று நீளும். முதல் சொன்ன அதிகாரப்பூர்வ மீட்பு என்பது ‘அரசிடம்’ இருந்து தொடங்க வேண்டும். முதலில் இவர்கள் 33% இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற சொல்லி பாராளுமன்றவாதிகளை நோக்கி குரல் எழுப்பலாம். AFSPA வுக்கெதிராக கடந்த 12 வருடங்களாக உண்னாவிரதம் இருக்கும் இரோம் சர்மிளா மீது தற்கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, கைது செய்து உளைச்சல் தரும் அரசுக்கெதிராக ஒன்று கூடுவோம் என்று குரல் எழுப்பலாம். சாதி வெறி பிடித்து கவுரவக் கொலை என்ற பெயரில் பெண்களை எரித்துக் கொல்லும், அடித்துக் கொல்லும் செயல்களுக்கெதிராக ஒன்று திரள்வது, கப் பஞ்சாயத்து, கௌரவக் கொலை, பெண் சிசுக் கொலை, பெண் இனப்படுகொலை, குழந்தைத் திருமணம் (ஷரியத் சட்டம் உட்பட) இவைகளுக்கெதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இவைகளை தடுக்க அரசிடம் செயல்திட்டத்தைக் கோருவது, உழைக்கும் மகளிர் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதை, பெண்களின் இரட்டை உழைப்பைக் களைதல் என்று பெண்களுக்காக துணை நிற்க எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இவையெல்லாம் அரசுக்கெதிராக களம் இறங்க வேண்டிய பிரச்சனை, ஜில்லெட்டும், அவர்கள் அழைக்கும் ‘படை வீரர்களும்’ இதற்கு தயாராக இருப்பார்களா?

பெண்களுக்கு துணை நிற்க ஆண்களை அழைப்பது சரி, பெண்களைக் கொடுமைபடுத்தும், வரதட்சனைக் கேட்டு கொலை செய்யும், பாலியல் தொழிலில் தள்ளிப் பிழைக்கும் தரகுப் பெண்கள், பெண்களுக்கெதிரான குற்றங்களைப் பதிவு செய்ய பெண்கள் காவல்துறையை அனுகினால் அங்கு ஆணாதிக்க கொச்சை சொற்களை உமிழ்ந்து அலைகழிக்கும் பெண்கள் இவர்களுக்கெதிராக, அல்லது இவர்களிடம் மாற்றத்தைக் கோர எவருக்கு அழைப்பு விடுப்பர்?
,
குறைந்தபட்சம் சித்திரகாடா சிங், மலாய்க்கா அரோரா ஆகிய ‘சதை விற்பனையாளர்களை’ முன் நிறுத்தி முதலாளிக் கண்ணீர் வடிப்பதையாவது நிறுத்திக்கொள்ள முடியுமா ஜில்லட் ’வீரர்களே’….

எங்களுக்கு பயில்வான்களோ, படைவீரர்களோ தேவையில்லை கனவான்களே, நண்பர்கள் போதும். உங்கள் ‘புஜ பலத்தைக் காட்ட’ எங்களை பலவீனப் பிராணிகள் ஆக்காதீர்…ஆண்களை அடியாட்களாக்காதீர் (gym boys!!)…

பெண்கள் ஆடுகளும் அல்லர், ஆண்கள் மேய்ப்பரும் அல்லர்….

Related Links:

நன்றி - masessaynotosexism
...மேலும்

Jul 25, 2013

பெண்கள் எதையும் சாதிக்கத் துணிந்தவர்கள் - பிருந்தா தாஸ்


பெண்களுக்கு எல்லாத் திறமைகளும் இருக்கின்றன. இதை நம் பண்பாடு, கலாசாரம் என்ற போர்வைக்குள் அடக்கி, தம்மை நாமே வளர்க்கத் தவறி விட்டாள் என்பதுதான் உண்மை. பெண்களுக்கான சுதந்திரம் எதிர்க்கப்பட்டதும் அதை மறுத்துப் போராட அன்றைய பெண்கள் முன்வரவில்லை. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி இன்று பெண் முன்னேறியிருக்கின்றாள் என்றால் அது மறுப்பதற்கில்லை. 

பெண்களைப் பற்றி ஆராய்ந்தவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள். ஆண்களை விட பெண்கள் நம்பிக்கைக்குரியவர்கள், கடின உழைப்பாளிகள் என்று.

எல்லா மனிதர்களும் தன் வாழ்வில் மகிழ்வுடன், மன நிறைவுடன் இருக்க விரும்புகிறான். அது தான் வாழ்வு என்று கருதுகிறான். முன்னைய காலத்தில் ஓர் ஆணைப் பார்த்து, “என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். மாறாக, ஒரு பெண்ணை யாரும் என்ன வேலை செய்கிறீர்கள்?” எனக் கேட்பதில்லை. காரணம் பெண்ணுக்குக் குடும்பம், குழந்தைகள், கணவன், வீடு என்று இருக்கின்றன. அவையே பெரிய வேலைகள்தான் என்று எண்ணினார்கள். அதுவே அவர்களுக்கு (பெண்களின்) நிறைவைத் தருகின்றன என்ற மனப்பான்மையாகவும் இருந்தது. ஆனால் இன்று அவ்வாறில்லை. பெண்ணையும் பார்த்து என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்கின்றனர். அந்தளவுக்கு இன்றைய பெண் சகல துறைகளிலும் ஈடுபடுகிறாள் உழைக்கின்றாள். சில பெண்கள், ஆண்களை விடக் கூடுதலாகவும் வருமானம் பெறுகின்றனா.

பெண் என்ற வகையில் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு இவைதான் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகின்றன. மேலும் சாதனை செய்யத் தூண்டுகின்றன. இப்படிப்பட்ட எண்ணங்கள் பெண்ணின் மனதில் அதிகம் எழுகின்றன என்றாலும், அந்த வாய்ப்பு, குறிப்பாக கிராமங்களில் வாழும் பெண்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை என்பது கவலைக்குரிய விடயம். அவர்களும் சாதிக்கின்றனர். நாளுக்கு நாள் ஏதோ ஒரு கூலித் தொழிலைத் தேடி, தன் குடும்பத்தைக் காக்கும் பெண்களும் உள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் அதுவும் ஒரு சாதனைதான். உதாரணத்துக்கு ஒரு பெண் கூலித் தொழிலாளியாக இருந்து தன் பிள்ளைகளைப் படிக்க வைத்து சமுதாயத்தில் ஒரு நல்ல பிரஜையாக்குகின்றாள். அவர்களுக்கு ஓர் அந்தஸ்தைக் கொடுக்கின்றாள. எனவே அவளும் சாதனைப் பெண்ணே! இருந்தாலும் கூட, h ஆணுக்குக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை ஏன் ஒரு பெண்ணுக்குக் கொடுப்பதில்லை?
ஒரு பெண் எதற்குப் படிக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டு கணவன் வீட்டுக்குப் போகிறவள் தானே என்று அவளைத் திருமணத்துக்காகவே வளர்க்கின்றனா. ஒரு பெண் கல்வி கற்றால் குடும்பமே கற்றதற்குச் சமம் என்ற சிந்தனையை மறந்து விடுகின்றனா.

பெண்களின் இன்றைய முன்னேற்றத்துக்கு அவள் பெற்ற கல்வியும் ஒரு காரணமாயிருக்கிறது. இன்று படிப்பிலும் சாதனை படைக்கின்றாள். படிக்காத பாமரர் கூட இன்று தன் பெண் பிள்ளைகளை பட்டணத்தில் படிக்க வைக்கின்றனா. காரணம் எல்லா முன்னேற்றங்களும் கற்றலில் தான் உள்ளன. படிப்பு இருந்தால்தான் ஊர் உலகம் தெரியும் படிப்பு இருந்தால்தான் நல்ல வேலைக்குப் போக முடியும் நல்ல வேலைக்குப் போனால்தான் நிறையச் சம்பாதித்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் கல்வியின் மூலம் தான் எம் வாழ்வை எவ்வாறாயினும் மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் பெண்ணுக்கு உருவாகி விட்டது.

பெண்களின் கல்வி என்பது பெண்கள் கல்வி பெறுவதற்கான உரிமை, அதன் நிலைமை, தடைகள், எதிர்காலம் போன்ற பல விடயங்களைக் குறிக்கும். வரலாற்றின் பெரும் பகுதியில், அநேக சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக கல்வி பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி பெற்ற பெண்ணிய இயக்கம், அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு போன்றவை பெண்களுக்கான சம கல்வி வாய்ப்புகளை ஓரளவு ஏற்படுத்தித் தந்தன. இன்று சில மேலை நாடுகளில் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி பெண்கள் ஆண்களை விட கூடுதலான அதி உயர் கல்வியைப் பெறுகிறார்கள். ஆனால் இன்னும் பல நாடுகளில் பெண்களின் கல்வி ஆண்களை விடப் பின்தங்கியதாகவே உள்ளது. இருந்தும் பாமரப் பெண்கள் தமது உழைப்பால் முக்கியத்துவம் பெறுகின்றார்கள் என்றால் அது மிகையில்லை. உதாரணமாக பெருந்தோட்டப் பெண்களைச் சொல்லலாம்.
இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் உயர் நிலையை அடைய வேண்டியிருக்கிறது. அது கல்வித் துறையில் மட்டுமன்றி, ஊடகம், மருத்துவம் மற்றும் சட்டத்துறைகளில் உயர் நிலையை அடைந்த பெண்களின்பால் எமது சமூகம் அதிக தேவையுடையதாக இருக்கின்றது.

ஒரு பெண் தன் காலில் நிற்கும்போது - தன்னால் சம்பாதித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வரும்போது தான் அவர்களுக்கு சுதந்திமும் சமூகத்தில் மதிப்பும் கௌரவமும் கிடைக்கின்றன.

சம்பாதிக்கிற மருமகளை அவளது மாமியாரால் அதிகம் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதிகாரம் செய்வதில்லை. மாறாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கின்றது. முன்னேற விரும்பும் பெண்கள் இந்தச் சமுதாயப் பழக்கவழக்கங்களைக் கிள்ளி எறிய வேண்டும். அதற்கு பெண்கள் முதலில் கற்க வேண்டும். இன்றைய பெண்கள் அதைச் சரிவர நிறைவேற்றி வருகின்றனா என்றால் அது மிகையில்லை. ஆனாலும் பின்தங்கிய பிரதேசப் பெண்களுக்கும் இந்தப் பழக்கத்தை வலியுறுத்தி அவர்களையும் எம் பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கென  பெண் விழிப்புணர்வு, செயலமர்வுகளை நடத்தி அவர்களுக்கு மேலும் ஊக்கம் கொடுக்க வேண்டும். அத்துடன் பெண் ஆளுமையை விருத்தி செய்ய வேண்டும். அதுவே பெண்ணின் வெற்றி என்பது எனது கருத்து. வெற்றிக்குத் தேவை பொருளாதாரச் சுதந்திரம். அதாவது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, வாழ்வதற்குத் தேவையான பொருளாதார நிலை தான் அவளுக்கு உறுதுணையாகும். அப்படியென்றால் பின்தள்ளப்பட்டிருக்கும் பெண்கள் சமுதாயம், குறிப்பாக நம்முடைய கிராமப்புறப் பெண்கள் - அடுத்த நூற்றாண்டில் வெற்றி சிகரங்களை எட்ட வேண்டுமானால், அவர்களுக்கு இன்று அவசியமானது கல்வி மட்டுமே. பின் இரண்டாவது மூன்றாவதுதாக, உலக ஞானம். தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை என்பனவாகும். 
...மேலும்

Jul 24, 2013

காதலின் அருமை தெரியாத காட்டுமிருகாண்டிகள் - ஜோதிர்லதா கிரிஜா‘காதல்’ என்பது இன்றைய இளைஞர்களிடம் – பெண்களும் அடக்கம் – மிகப் பரவலாய்த் தோன்றி வளர்வதற்கு அடிப்படை ஊடகங்களின் பங்களிப்பே என்று குற்றம் சாட்டப்படுகிறது.  இதில் உண்மை இருக்கவே செய்கிறது.  ஆனால் இதுவே முழு உண்மையன்று.  தொலைக்காட்சி, ஏடுகள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவை வருவதற்கும் முன்பிருந்தே காதல் இருந்துதானே வருகிறது! பட்டி, தொட்டிகளில் கூடக் காதால் இருந்திருக்கிறது.  கிராமத்துக் கோவில்கள், குளங்கள், ஆற்றங்கரைகள், தெருக்கள், கடைகள், சந்தைப்பேட்டைகள் இங்கேயெல்லாம் காதல் மலர்ந்துதான் வந்திருக்கிறது. எனினும், ஆண்-பெண்கள் மிக அதிக அளவில் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகரித்துவிட்ட இந்நாளில் அது மிகவும் பெருகிவிட்டது என்பதே உண்மை.

காதல் எவ்வாறு தோன்றுகிறது? ஒத்த மன அலைவுகள் உள்ள ஆண்-பெண்களிடையே தோன்றும் மனக்கவர்ச்சியே இதன் அடித்தளம் என்று கூறலாம். இது தவிர, புறத் தோற்றமும் சில காதல் உறவுகளில் பெரும் பங்கு வகிக்கவே செய்கிறது. வேறு சிலவற்றில் புறத் தோற்றம் மட்டுமே காதலின் அடிப்படையாகிறது.  ஆக, பொதுவாக எந்தக் காதலாக இருந்தாலும், உள்ளம் சார்ந்த ஈர்ப்பு, உடல்சார்ந்த ஈர்ப்பு ஆகிய இரண்டின் கலவையே காதலாய்க் கனிகிறது.  பின்னதன் பாதிப்பால் மட்டுமே – அதாவது புறத் தோற்றக் கவர்ச்சியின் விளைவாகவே – இளைஞர்கள் பெரும்பாலும் காதலில் விழுகிறார்கள்.  இத்துடன், மனம் சார்ந்த ஈர்ப்புகளும் இருக்குமாயின், அந்தக் காதல் உன்னதம் பெறுகிறது.

அதிலும், இப்போதெல்லாம், மிகப் பெரிய அளவில் வேற்று சாதியினரிடையே காதல் மலர்ந்து விடுகிறது.  ஒருவன் அல்லது ஒருத்தி இன்ன சாதி என்று கண்டுபிடித்த பிறகு நேசிக்கத் தீர்மானிப்பது இயல்பான காதல் ஆகாதுதானே! ஒருவர் பற்றி ஏதும் அறியாத நிலையிலும் சிலர் விஷயத்தில் ‘கண்டதும் காதல்’ ஏற்பட்டுவிடுகிறது. மனஅதிர்வுகளின் உடனடியான இந்த ஈர்ப்பை நாம் குறைத்து மதிப்பிடவோ கேலி செய்யவோ தேவையில்லை.

காதல் என்று சொல்லப்படும் உணர்வுதான் என்ன? ஒருவன் அல்லது ஒருத்தியைத் தவிர வேறு எவரையும் தொடுவதையோ அல்லது அந்த நபராலன்றி வேறு எவராலும் தொடப்படுவதையோ விரும்பாத மனநிலையே காதல் என்று எளிய விளக்கம் தரலாம். இந்த உணர்வைப் புரிந்துகொண்டு அதைக் கவுரவிப்பதற்குப் பதில் நம் நாட்டுப் பெரியவர்கள் என்ன செய்கிகிறார்கள்? அதைக் காலடியில் போட்டு மிதித்து, நசுக்கிக் காதலர்களின் உள்ளங்களை ரணகளப்படுத்தி விடுகிறார்கள்.   இப்படி இவர்கள் இதயமற்று நடந்து கொள்ளுவது சாதி வேறுபாடும் அந்தஸ்து வேறுபாடும் இருக்கும்போது மட்டும்தான். அல்லது இவற்றைப் பொருட்படுத்தாத பெற்றோர் கூட,  காதலிக்கப்படும் நபர் உதவாக்கரையாகவோ, கெட்ட நடத்தை உள்ளாராகவோ உறுதியாய்த் தெரிய வரும்போது தங்கள் மக்களின் வருங்கால நலன் கருதி எதிர்ப்பார்கள்தான்.  பின்னதில், பெரியவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை.

ஆனால், காதலிக்கப்படும் ஆண் அல்லது பெண் வேறு சாதியாக இருந்தால் – பிற நற்தன்மைகளும் தகுதியும் இருந்தாலும் – அந்நபரைப் புறக்கணிக்கப் பெற்றோர் தம் மக்களைக் கட்டாயப்படுத்துவது சாதிவெறி அல்லது தேவையற்ற சாதிப்பற்றால் மட்டும்தானே? ‘மெத்தப்படித்த மூஞ்சூறு’களும் இந்தப் போக்குக்கு விதைவிலக்காக இருப்பதில்லை. கல்விக்கும் சாதி வெறியினின்று  விடுபடுவதற்கும் துளியும் தொடர்பே இல்லை என்பதே பெருமளவில் உண்மையாகும்.

கலப்புமணத்தைக் காதலரின் பெற்றோர் எதிர்ப்பதற்குக் காரணம்  சாதிவெறியாக மட்டுமே இருக்கும் நிலையிலும், ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்பதே தங்கள் கருத்து  என்பதாய் இவர்கள் (தற்காலச் சூழ்நிலை, நாகரிகம் கருதிப் பொய்யாக)  ஒப்புக்கொண்டாலும், வேற்று சாதியில் மணம் புரிவதால் மாறுபடும் பழக்க வழக்கங்களின் விளைவாகப் பின்னாளில் சிக்கல்கள் எழும் என்பதாலேயே அதை ஏற்க மறுப்பதாய்ச் சொல்லுவது பச்சைப் பொய்! இது ஒரு நொண்டிச்சாக்கே ஒழிய உண்மையன்று.

சாதி உணர்வை வெல்ல முடியாவிட்டாலும், சாதி  வெறியையேனும் மனிதர்கள் – படித்த மனிதர்களேனும் – வெல்ல வேண்டுமல்லவா! நம் நாட்டில் – அதன் அனைத்துப் பகுதிகளிலும் -  இரண்டுமே இல்லை என்பது வெட்கக்கேடான உண்மை. சாதிகளை முற்றாக ஒழிப்பது இயலாத ஒன்றுதான்.  இதற்குப் பல நூற்றாண்டுக் காலம் ஆகலாம்.  ஆனால், சாதிவெறியையும், ‘நான் இன்ன சாதியைச் சேர்ந்தவன்’ என்கிற உணர்வையயும், சாதிப்பற்றையும் வெல்லக்கூடிய அறிவேனும் நமக்கு இருக்க வேண்டாமா?

இதில் இன்னொரு வெட்கக்கேடு என்னவெனில், பெற்றோரை எதிர்த்து வேற்று சாதிப் பெண்ணை மணந்து வெளியேறும் இளைஞனின் தங்கைகளுக்குத் திருமணம் ஆவதில் அவ்வளவாய்ச் சிக்கல் இருப்பதில்லை.  ஆனால்,  பெற்றோரை எதிர்த்து இவ்வாறு செய்யும் ஒரு பெண்ணின் தங்கைகளுக்கு இலேசில் திருமணம் ஆவதில்லை. கலப்புமணம் புரிந்துகொள்ளும் பெண்களின் தங்கைகளுக்கென்று தனியாக ஒரு தராசு வைத்திருக்கிறார்கள்! இது என்ன இழவோ, புரியவில்லை!

வேறு சாதி என்பதால் தயக்கம் இருப்பின், அந்நபரைப்பற்றி அலசி, ஆராய்ந்து, தீர விசாரித்த பின் ஆட்சேபணைக்குரியவை  இல்லாதிருப்பின் பெற்றோர்கள் கலப்புமணத்துக்குச் சம்மதிக்கலாமே!  தாங்களாக ஏற்பாடு செய்கிற திருமணத்தில் விசாரிப்பது போல் இவர்கள் தங்களின் மக்கள் பாலுள்ள கவலையால் விசாரிப்பதை யார் வேண்டாம் என்கிறார்கள்?

தகுதியின்மை வெளிப்பட்டாலல்லாது, ‘காதல்’ என்று சொன்னாலே கையில் கட்டையை எடுத்துக் கொள்ளுவது என்ன நியாயம்?  அதிலும், பெண்ணின் பெற்றோர் எனில், அவர்கள் இந்தக் கேள்விக்குச் சொல்லும் பதில், பெரும்பாலும். ‘அவன் இவளோடு ஒழுங்காக வாழ்வான் / நன்றாக வைத்துக்கொள்ளுவான் என்பது என்ன நிச்சயம்?’ என்பதுதான்.

பெற்றோர்களே! நீங்கள் தேடிப் பார்த்துச் செய்து வைக்கிற திருமணம் மட்டும் என்ன வாழ்ந்தது ?

அண்மையில், ஒரு நாளிதழ் மணமுறிவுகள் பற்றிய விவரங்களை வெளியிட்டிருந்தது.  அதைச் சுட்டிக்காட்டிய ஒரு பெரியவர், ‘மொத்த மணவிலக்குகளில் 39% காதல் திருமணங்கள் தோற்றுப் போவதால் விளைவதாய்ப் போட்டிருக்கிறதே! காதலாவது, கத்திரிக்காயாஅது!’ என்று வாதிட்டார்.

‘சரி.  காதல் திருமணத்தோல்வியால் விளையும் மணமுறிவுகள் 39% தானே? மீதமுள்ள 61% பெற்றோர் பார்த்துச் செய்துவைக்கிற திருமணங்களின் தோல்வியல்லவா? அந்தக் கணக்கைப் பார்க்க எப்படித் தவறினீர்கள்?’ எனும் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

பெற்றோர் பார்த்துச் செய்துவைக்கிற திருமணமாயினும் சரி, காதல் திருமணமாயினும் சரி, திருமணம் என்பதே ஒரு சூதாட்டம்தான்! ஏனெனில், ஆணும் சரி, பெண்ணும் சரி, தொடக்கத்தில் தங்கள் உண்மையான தன்மைகளை மறைத்துப் பழகுகிறவர்களே. கொஞ்ச நாள் கழித்தே அவர்களது  உண்மையான உருவம் வெளிப்பட, அது காதல்மணமே யானாலும், தோற்றுப் போகிறது.  இது பெற்றோர் செய்துவைக்கிற திருமணத்துக்கும் பொருந்தும் தானே!

காதல் தோல்வியால், மனம் சிதைந்து, கட்டாயத் திருமணத்தை ஏற்க மனமின்றித் தங்கள் பொன்னான உயிரைச் சிலர் மாய்த்துக்கொண்டுவிடுகிறார்கள். இது முட்டாள்தனம்தான். ஆனால், பிடிக்காத நபருடன் மனம் ஒட்டாத நிலையில்  கடனுக்கு உயிர் வாழ்வதை விட, அந்த உயிரையே விட்டுவிட நினைக்கிற அளவுக்குச் சில காதலர்கள் மனமுடைந்து போகிறார்கள் என்றால், எத்தகைய ஆழமும் தீவிரமும் நிறைந்த உணர்வுகளுக்கு அவர்கள் ஆட்பட்டிருந்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கும் பெற்றோர்கள் என்ன பெற்றோர்கள்!  உண்மையில் இவர்கள் அன்பான பெற்றோர்கள்தானா?

இவர்கள் பார்த்துச் செய்துவைக்கிற திருமணங்கள் யாவும் வெற்றி யடைவதாகவும், பெற்றோரை எதிர்த்து மணம்புரிந்துகொள்ளும் காதலர்களின் திருமணங்கள் யாவும் தோல்வியடைவதாகவும் இருந்தால் மட்டுமன்றோ பெரியவர்கள் தங்கள் மக்களின் காதலை எதிர்க்க வேண்டும்? வேறு  நியாயமான காரணம் ஏதுமின்றி,    சாதி வேறுபாட்டின் அடிப்படையில் மட்டும், காதலை எதிர்த்தல் “காட்டுமிராண்டித்தனம்” அல்லாது வேறென்ன?

jothigirija@live.com

...மேலும்

Jul 23, 2013

வீட்டுவேலை தொழிலாளர்களுக்கான சங்கங்கள் - கவின்மலர்


சங்கம் அமைப்பது என்பது தொழிலாளர்களின் உரிமை. ஆனால் வீடுகளில் வேலை செய்பவர்களும் தொழிலாளர்களே என்று பலர் உணர்வதில்லை. ஆனால் சென்னையை அடிப்படையாகக் கொண்டு வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களைக் கொண்ட சங்கங்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றன. வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பிற தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போன்று அல்ல. பணியிடம் என்பது இவர்களுக்கு வீடுதான். வீட்டு எஜமானர்களே ஊதியம் அளிப்பவர்களாக உள்ளனர். தொழிற்சாலைகளிலோ நிறுவனங்களிலோ பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் உருவாகும் சிக்கல்களை கையாள சட்டங்களும் விதிமுறைகளும் உண்டு. ஆனால் இவர்களின் பணியிடம் இன்னொருவரின் வீடாக இருப்பதால் அங்கே ஒரு தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனை வெளியில் தெரியாது. எடுத்துக்காட்டாக ஒரு பெண் தொழிலாளி, அவர் வேலை செய்யும் வீட்டு எஜமானரால் பாலியல் வன்முறைக்கு ஆளானால் அது வெளியே தெரியாமல் போய்விட வாய்ப்புண்டு. ‘’நான் முன்பு வேலை செய்த வீட்டிலுள்ளவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதை அவருடைய மனைவியிடம் நான் புகார் சொன்னபோது அவர் அதை நம்பவே இலலை. நான் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். இப்படி பல இடங்களில் நடந்திருக்கிறது’’ என்கிறார் பெயர் கூற விரும்பாத ஒரு பெண் தொழிலாளி. 

உடல்நலம் சரியில்லை என்றாலோ, ஏதாவது அவசரம் என்றாலோகூட விடுப்பு எடுக்கமுடியாத சூழலில் இருக்கிறார்கள் வீட்டுவேலை செய்பவர்கள். ’’நாங்களும் மனிதர்கள்தானே? எங்களுக்கும் ஏதாவது அவசர வேலை இருக்காதா என்ன? விடுப்பு எடுத்தால் மறுநாள் கன்னாபின்னாவென்று திட்டு வாங்கவேண்டி வரும்’’ என்கிறார். 

வேலைக்குச் சேர்க்கும்போது ஒரு பேச்சு, சேர்ந்தபின்பு ஒரு பேச்சு என்றிருக்கும் எஜமானர்கள் அதிகம். அதாவது வேலைக்கு சேரும்போது, பாத்திரம் துலக்குவது, வீடுகூட்டுவது, துணி துவைப்பது ஆகிய வேலைகளை செய்தால் போதும் என்று கூறிவிட்டு, வேலைக்கு வரத் தொடங்கியதும் குளியறையை சுத்தம் செய்வது போன்ற கூடுதல் வேலைகளைக் கொடுப்பது போன்றவை நடக்கின்றன. வெறும் வாய்மொழி ஒப்பந்தத்தை மட்டும் செய்துகொண்டு வேலைக்கு ஒப்புக்கொண்டு வருபவர்களை கூடுமானவரை பிழிந்தெடுத்து அவர்கள் உழைப்பைச் சுரண்டும் வேலையை பலர் செய்துகொண்டிருக்கின்றனர். 

வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களை உள்ளடக்கிய அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் நிறுவனர் கீதாவிடம் இந்தியா டுடே தொடர்புகொண்டபோது ‘’வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான கையெழுத்து இயக்கம் ஒன்றை தமிழகத்தில் நடத்துகிறோம். தேசிய அளவில் ஜூலை 31 அன்று ஒரு பேரணி நடத்தவிருக்கிறோம். வீட்டு வேலை தொழிலாளர்கள் குறித்த கொள்கையை மத்திய அரசு சட்டமாக விரைவில் மாற்றவேண்டும் என்று கோருகிறோம். தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக  தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சட்டத்தின்கீழ் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களை 1999ல் கொண்டுவந்தது தமிழக அரசு. 2006ல் அவர்களுக்கென்று தனி நலவாரியமும் அமைக்கப்பட்டது’’ என்றார்.  

நலவாரியத்தின்மூலம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அதுகூட இன்னமும் செய்யப்படவில்லை என்கிறார் கீதா. மகப்பேறு காலத்தில் 6,000 ரூபாய் வழங்குவது, விபத்து நிவாரணம், இயற்கை மரண நிவாரணம் என்று ஒரு சில விஷயங்களுக்கு நலவாரியம் பயன்படுகிறது. விழுப்புரம் மாட்டத்தில் இந்த நலவாரியத்தில் பதிவு செய்யப் போனால் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் கீதா. மூன்று விதமான வீட்டுவேலை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பகுதிநேரமாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் செய்பவரக்ள். முழுநேரமாக 8 மணி நேரம் வரை வீட்டுவேலை செய்பவர்கள். லிவ் இன் என்று சொல்லக்கூடிய வகையில் வீடுகளில் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்பவர்கள் ஆகிய மூன்று பிரிவுகள் உண்டு. இதில் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்பவர்கள் அதிகமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். ‘’ஏஜென்சி மூலமாக வேலைக்குச் சென்றவர்களிடம் பொருளாதாரரீதியாக அந்த ஏஜென்சிக்கள் அவர்களின் சம்பளத்தில் செய்யும் சுரண்டல்கள் அதிகம். அப்படி சென்னை சைதாப்பேட்டையில் ரகுபதி என்பவர் நடத்திய ஏஜென்சியில் இப்படி முறைகேடுகள் நடந்து அதற்கெதிராக போராட்டங்கள் நடத்தினோம்’’ என்கிறார் கீதா. 

குழந்தைகளை வீட்டுகளுக்கு வைத்துக்கொள்ளும் கொடுமையும் நடக்கிறது. குழந்தைத்தனம் மாறாத முகத்துடன் எஜமானரின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு பாதுகாக்கும் அவர்களையும் காப்பாற்ற சரியான நடவடிக்கை இல்லை. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து வீடுகளில் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் பதிவு செய்யப்படுவதில்லை.வீடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவது, கொத்தடிமைகளாக நடத்தப்படுவது போன்ற மனித உரிமை மீறல்களும் நடைபெறுகின்றன. 

வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்தியிடம் பேசியபோது ‘’நான் சி.பி.எம். கட்சியின் தென் சென்னை மாவட்ட அலுவலகத்திலும் வேறு சில வீடுகளிலும் வேலை செய்கிறேன். சில வீடுகளில் அவ்வபோது சாப்பாடு, டீ போன்றவை கொடுப்பார்கள். பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த சாப்பாடு கொடுப்பார்கள். ஆனால் இவற்றையெல்லாம் சம்பளத்தில் கழித்துக்கொள்வார்கள்.  வீடுகூட்டும்போது அப்படியே ஒட்டடையும் அடிக்கக் கூடாதா என்று கேட்பார்கள். அதற்கு தனியாக கூலி தரவேண்டும் என்கிற உண்மை உறைக்கவே உறைக்காது. எங்கள் சங்கத்தின் உதவிகேட்டு ஒரு பெண் வந்தார். அவர் மீது திருட்டுப் பட்டம் கட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் அவர் வேலை செய்த வீட்டு உரிமையாளர். உண்மை என்னவெனில் அவருடைய பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்ததால் இப்படிச் செய்திருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்தது. இப்படி பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்கிறார்.

வீட்டுவேலை என்பது பல நாடுகளில் தொழிலாளர் நலத்துறையின் கீழ் வருகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு வீட்டுவேலையை ஒரு வேலையாக அங்கீகரித்திருக்கிறது. 2002ல் வீட்டுவேலை செய்பவர்கள் அருகில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று அரசு கூறியபோது ’நாங்கள் என்ன கிரிமினல்களா?’ என்று கேட்டு அதை கடுமையாக எதிர்த்தன் காரணமாக அந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படவில்லை என்கிறார்  தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கிளாரா. வீட்டு வேலை செய்பவர்களுக்கு தனித்தட்டு, டம்ளர், தண்ணீர் அதிகம் கலந்த பாலில் காபி கொடுப்பது என்று தீண்டத்தகாதவர்கள் போலவே முதலாளிகள் நடத்துவதுண்டு.கிராக் க்ரீமின் விளம்பரமொன்றில் ‘’முகத்தைப் பார்த்தா ராணி, காலைப் பார்த்தால் வேலைக்காரி’ என்று ஒரு விளமபரம் வந்தது. இந்த விளம்பரத்தை எதிர்த்து போராட்டங்கள் பல நடந்தன. பத்தாயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதை அந்த நிறுவனத்துக்கு அனுப்பியபின் அந்த விளம்பரம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது என்கிறார் கிளாரா. 

முதலில் சங்கம் வைக்கும் அனுமதியை அரசிடம் கோரியபோது ‘’நீங்கள் உற்பத்தி தொழிலாளர்கள் அல்ல;  தொழிற்சங்கம் வைக்க முடியாது’ என்றது அரசு. ஆனால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் ஏற்கனவே இருந்தது. அவர்களும் எதையும் உற்பத்தி செய்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு இருக்கிறதே என்று வாதாடியபின் சங்கம் வைக்கும் அனுமதி கிடைத்தது. ’’நாங்கள் உற்பத்தி தொழிலாளர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் வேலைகளைப் பார்க்க முதுகெலும்பாய் இருந்து உதவுவது நாங்கள்தான்’’ என்கிறார் கிளாரா. குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் தொடர்பாக பல போராட்டங்கள் இதுவரை நடந்துவிட்டன.  மாவட்டங்களில் ஒரு மணிநேரத்துக்கு 35 ரூபாயும் சென்னை நகரில் 50 ரூபாயும் நிர்ணயிக்கவேண்டும் என்று இந்த சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.  ’’இது குறித்துப் பேச அப்போதைய அமைச்சர் செல்லபாண்டியை சந்திக்கச் சென்ற எங்களிடம் ‘பழைய சோத்துக்கும், பழைய துணிக்கும் கூட, போராட்டமெல்லாம் பண்ணி வேட்டு வைக்கிறீங்க’ என்று அவர் சொன்னதை மறக்க முடியுமா? அமைச்சரே இப்படி பேசினால், சாமானிய மக்கள் எங்களை எப்படியெல்லாம் பேசுவார்கள்? இப்போது நிலைமை மாறி இருக்கிறது. வீட்டு வேலை செய்பவர்களும் தேவையில்லாமல் முதலாளிகளின் குடும்ப விஷயங்களில் தலையிடுவதில்லை. எங்கள் மூலம் செல்பவர்கள் முதலாளிகளிடம் ஒப்பந்தம் போட்டுத்தான் செல்கிறார்கள். ஒரு மாத தீபாவளி போனஸ், விடுப்பு எடுக்கும் உரிமை என்று மரியாதையாக நடத்தும் போக்கு அதிகரித்திருக்கிறது. சங்கம் வந்தபின்புதான் இந்த மாற்றங்கள் எலலாம்’’ என்கிறார் கிளாரா.

(இந்தியா டுடே இதழில் வெளிவந்தது)
...மேலும்

Jul 22, 2013

திரைக்கதைகளில் பெண்கள் - கேஷாயினி எட்மண்ட்


பொதுவாக அன்றைய சினிமா முதல் இன்றைய சினிமா வரை நோக்கினால் அவற்றில் “பெண்கள்” கையாளப்படுகின்றமை தொடர்பிலான ஒரு கண்ணோட்டமே இக்கட்டுரையின் நோக்கம். அன்று தொட்டே சினிமா தயாரிப்பில் பெண்களின் பங்கு ஒப்பிட்டளவில் ஆண்களை விட குறைவாகவிருந்தாலும் சினிமா நடிப்புத்துறையிலும் திரைக்கதைகளில் பெண்கள் பற்றிய கதைக்கருக்களும் தாராளமாகவே காணப்பட்டன. அதிலும் தமிழ் இலக்கியங்களைப் போன்றே தமிழ் சினிமாவில் “பெண்கள்” என்பதன் போக்கு விசித்திரமானதாகவே இருக்கின்றது. வேற்றுமொழி திரைப்படங்களில் பெண்கள் நிலை பற்றியும் தமிழ் சினிமாவில் பெண்களின் நிலை பற்றியும் ஒப்பிட்டு நோக்கும் போது பெண்கள் பற்றிய தமிழ் சினிமாவின் போக்கு இன்றும் மாறாமல் இருப்பதும் உலகின் தரம்வாய்ந்த படைப்புக்களில் தமிழ் சினிமா ஏனையவற்றுடன் ஒப்பிட்டளவில் பின்தங்கியிருப்பதற்கு ஒரு காரணமாக இருப்பதாக தோன்றுகின்றது.

ஒன்றில் தமிழ் சினிமாவில் பெண்கள் மட்டந்தட்டப்படுகின்றனர். முன்னர் திரைப்படங்கள் “கற்பு பெண்களுக்கு மட்டுந்தான்” என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தன. பின்னரான திரைக்கதைகளில் சமூகத்தில் இழிசெயல் செய்வது பெண்கள் தான் பிரதானம் என்பது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இன்றைய சினிமாக்களில் பெண்களது உடைகள் பற்றியும் அல்லது அவர்களது கவர்ச்சியில் மட்டுமே தங்கியிருக்கக் கூடியதான சினிமாக்கள் மலிந்து விட்டன. ஆக மொத்தத்தில் “பெண்கள்” என்பதற்கான நாகரீக மாற்றங்கள் தமிழ் சினிமாக்களில் காலாகாலத்திற்கு மாற்றமடைகின்ற போதும் கரு என்பது மட்டும் மாறுபடாமலேயே தொடர்கின்றதாகவே தோன்றுகின்றது.

ஆண்களை பெண்கள் ஏமாற்றிவிட்டால் அவ் ஆண் வாழ்வில் முன்னேறி வாழ்ந்து காட்டுவதாகவும் ஏமாற்றிய பெண் மீண்டும் மனந்திருந்தி அல்லது வேறொருவரால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் கதையமைக்கின்றவர்கள் அதுவே பெண் ஏமாந்துவிட்டாள் தற்கொலை செய்து கொள்வதாக காட்டுகின்றார்கள்….? அதற்கு பரிகாரமாக அவளுடன் தொடர்புடைய ஒருவர் பழிவாங்குவதாகவோ அல்லது அவள் ஆவியாகித்தான் பழிவாங்குவதாகவும் காட்டுவது ஏன்? அதே போன்றே ஆண்கள் கட்டிய மனைவி இருக்கும் போதே சின்ன வீடு வைத்தால் அல்லது இன்னொருத்தியுடன் தகாத உறவு கொண்டால் மனைவி மன்னித்து ஏற்றுக்கொள்வதாகவும் (இதில் சின்னவீடு இறந்துவிடும் அல்லது ஓடிவிடும் அல்லது வில்லன் கொன்று விடுவான்) குழந்தையை முதல் மனைவியே தத்தெடுத்து வளர்ப்பதாகவும் பெரும்பாலான படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஏன் ஒரு பெண் இன்னொரு சின்னவீடு வைத்தால் கணவன் ஏற்றுக்கொள்வானா? அல்லது அவளின் சின்னவீட்டினால் பிறந்த குழந்தைக்கு முதலெழுத்தாக தன் பெயரை இடுவாரா?

அண்மையில் “உன்னாலே உன்னாலே” படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் கதாநாயகி கதாநாயகனையும் அவனது பெண் நட்புக்களையும் சந்தேகித்து புரிந்துகொள்ள முடியாமல் பிரிந்து செல்வதாக எடுக்கப்பட்டிருந்தது. ஏன் ஆண்கள் தன் காதலியினுடைய ஆண் நட்புகளை சந்தேகிப்பதே இல்லையா? அல்லது ஆண்கள் எல்லோரும் பெண்களை நன்றாக புரிந்து கொண்டவர்களாக மட்டுந்தான் இருக்கிறார்களா?

ஒரு பெண் ஆணினை ஏமாற்றினால் அவளை போன்ற பலரை “மன்மதன்” படத்தில் காட்டப்பட்டதினைப் போல் பழிவாங்கி நீதி வழங்குகின்ற கதாநாயகன் அதேபோல் “திருவிளையாடல்” படத்தில் அல்லது “நான் அவனில்லை” போன்ற படங்களில் பல பெண்களின் வாழ்க்கையை ஒருவன் சிதைத்தாலும் அவனை நியாயப்படுத்த முயல்வதேன்? “பெண் ஏமாற்றினால் பிழை அதே பால் மாறி ஆண் ஏமாற்றினால் சரியா?

உண்மையில் சினிமா என்பது ஒரு சமூகத்தின் கண்ணாடி என்பார்கள். அப்படியாயின் இச்சினிமாக்கள் சமூகத்தினை பிரதிபலிக்கின்றனவா? ஆண்கள் சண்டையிடுவதன் மூலமும் பெண்ணின் தமையனைää தந்தையை அல்லது வில்லனை தாக்குவதன் மூலம் அவர்களை வலிமை உள்ளவர்களாக சித்தபுருஷர்களாக சித்தரிக்க முயல்கின்றனவே தவிர இன்று உண்மை நிலையை தொடுகின்றனவா?

ஒரு யதார்த்தத்திற்காக கேட்கின்றேன் தன் குடும்பத்தினை தன் வருங்கால காதல் கணவனே (ஹீரோ) தாக்குவதை எந்த சராசரி பெண்ணாவது பொறுத்துக்கொள்வாளா? ஓரிரண்டு இருந்திருக்கலாம் ஆனால் பெரும்பான்மையானவர்கள் குடும்பத்தினை எதிர்க்கமுடியாமல் தற்கொலை செய்பவர்களாகவும் அல்லது கட்டாய திருமணம் செய்து பின்னர் அவரையே கண்கண்ட தெய்வமாக கல்லானாலும் கணவன் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்பவர்களே இன்று அதிகம்.

பெரும்பாலும் காதல் அதற்கான போராட்டம் என்று மட்டுமே மூன்று மணி நேரம் கூறுகின்ற சினிமா பெரும்பாலும் திருமணத்திற்கு பின்னரான “குடும்ப வாழ்வை” காட்ட மறுப்பதேன்? காதலியை தாங்குவதாக சித்தரிக்கப்படுபவர்கள் நிஜ வாழ்வில் எவ்வாறிருக்கின்றார்கள்? தான் காதலிப்பவள் கிடைக்காவிட்டால் அமிலம் வீசுபவர்களாக அல்லது வன்புணர்ச்சிக்கு உட்படுத்துபவர்களாக கட்டிய மனைவியை நடுவில் விட்டுவிட்டு ஓடிவிடுபவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஏன் உண்மை முகங்கள் மறைக்கப்பட்டு சினிமாக்கள் முகமூடி தாங்கிவருவதேன்?

சினிமாவில் “உடை” விடயத்தினையே எடுத்துக்கொள்வோம். தன் காதலி (வருங்கால மனைவி) எந்த காதலனாலாவது சகிர்த்துக்கொள்ள முடியுமா? உண்மையில் தான் காதலிக்கும் பெண் சேலை கட்டும் போது சற்று இடுப்பு தெரிந்தாலும் அதை மூட சொல்வதும் உள்ளாடையின் பட்டை தெரிந்தால் கூட அதை சரி செய்பவர்கள் தான் இருப்பார்கள். ஏன் இவையெல்லாம் சினிமாக்களில் வருவதில்லை. வெறும் உடைகளையும் சண்டைக்காட்சிகளையும் குத்துப்பாட்டுக்களையும் நம்பித்தான் இன்றைய தயாரிப்புக்கள் வெளிவருகின்றனவா? அல்லது சினிமா தயாரிப்புகளின் பெண்களின் பங்கு குறைவாக இருப்பது தான் இதற்கு காரணமா?

பெண்ணியத்தினை சொல்லாத நிஜ வாழ்வை பிரதிபலிக்காத சினிமாக்கள் இல்லை என்று கூறவில்லை. அவை மிககுறைவாகவே உள்ளன. தரம் வாய்ந்த படைப்புக்கள் சொற்பளவே வெளிவருகின்றன. இங்கு படைப்பாளிகளின் பார்வையினை மட்டுமல்ல பார்வையாளனின் பார்வையும் மாற வேண்டும். படத்தில் நடிகையின் சிகையலங்காரங்களையும் நவநாகரீக உடைகளையும் பார்க்கும் பெண்கள் எத்தனை பேர்? நடிகையின் வளைவுகளையும் இரு அர்த்தப் பாட்டுக்களையும் பார்க்கும் ஆண்கள் எத்தனை பேர்? இன்று ஏதேனும் படங்களை குடும்பமாக அமர்ந்து பார்க்க முடிகிறதா?

ஆகவே பல்துறைகளிலும் சாதித்துக்கொண்டிருக்கும் பெண்கள் சினிமாதுறையில் மேலும் பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பதற்கு முன்வர வேண்டும். பெண்;கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டும். ஓர் ஆண் பெண்ணுடைய பிரச்சினையை கற்பனை கலந்து சொல்வதிலும் பார்க்க ஒரு பெண் தன்னுடைய பக்க நியாயங்களை முன்வைக்கும் போது அது பெறுமதி வாய்ந்ததொன்றாகின்றது. வெறும் ஒரு பக்க நியாயங்களை மட்டும் முன்வைப்பதனையோ அல்லது யதார்த்தத்திற்கு பொருந்தாதவற்றினை படைப்பதையோ நிறுத்தி விட்டு உண்மைப் பக்கங்கள் அவற்றின் நிஜமான நிறங்களுடன் வெளிவர வேண்டும்.

அதேவேளை கலைஞனின் படைப்பென்பது ஒரு செய்தியை சமூகத்திற்கு சொல்ல வேண்டும் என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும். அச்செய்தி ஒருவரது வாழ்வையாவது மாற்றுமாயின் அல்லது வலியை மாற்றி அவனை செதுக்குமாயின் அது தான் சமூகத்தின் கண்ணாடி எனும் உண்மைப் படைப்பு. அதே போன்று ஒரு படைப்பானது அதை சுவைக்கும் ஒருவனது மனதில் தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். அத்தாக்கம் அவனது ஓரிரு அன்றாட செயல்களிலாவது பிரதிபலிக்குமாயின் அது தான் அப்படைப்பிற்கான விருது.
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்