/* up Facebook

Jun 5, 2013

துயரம் ஒளிரும் கவிதைகள் / யுகங்கள் கடந்த கொல்லன் பாட்டு - கவிதா முரளிதரன்

உறைமெழுகின் மஞ்சாடிப் பொன் 

முதல் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் கவிதை விருது நிகழ்வில் (ஜனவரி 30 அன்று நாகர்கோவிலில் நடந்தது) நான் வாசித்த சிறுகுறிப்பு. தமிழின் முக்கிய கவிஞர்கள் சுகுமாரன், க.மோகனரங்கனுடன் நடுவர் குழுவில் நானும் இருந்தேன் (மன்னன் படத்தில் கவுண்டமணி சொல்லும் தொழிலதிபர்கள் டயலாகை நினைவுப்படுத்திக் கொள்ளாதீர்கள்). இந்த உரையில் இல்லாத, ஆனால் நிகழ்வில் நான் சொன்ன ஒரு விஷயம், நடுவர் குழுவில் இருப்பதற்கான எனது தகுதி நான் ஒரு நல்ல கவிதை வாசகி என்பதுதான்.  பேசி முடித்தவுடன், தாணு பிச்சையாவின் மனைவி வந்து எனது பேச்சு பிடித்திருந்தது என்று சொன்னது நெகிழ்வாக இருந்தது. 

ஆபரண அழகாக, கௌரவமாக, பகட்டாக, ஆடம்பரமாக, சொத்தாக பல சமயங்களில் ஒரு பெண்ணின் வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாக இதுவரை தமிழ்சூழலில் பிரதிநிதித்துவம் பெற்று வந்த தங்கத்தை கவிதைகளாக்கிக் காட்டியிருக்கும் ஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார் தாணு பிச்சையா. தங்கத்தின் மேற்பூச்சு மினுமினுப்பை மட்டும் பிரதிபலிக்கவில்லை, இவரது கவிதைகள். அந்த மினுமினுப்புக்கு பின்னாலிருக்கும் உழைப்பின் வலிகளை பதிவு செய்கிறது தாணு பிச்சையாவின் கவிமனம்.தாணு பிச்சையா காட்டும் கவியுலகம் தமிழ் படைப்புச் சூழலுக்கு மிக புதிது. அவரது கவிதைகளில் பொன் நம் எல்லோருக்கும் ஜொலிப்பது போல ஜொலிக்கவில்லை.மழைத்துளி போலுள்ள கல்வைத்த தொங்கட்டானை செய்ய மஞ்சாடி கூட தேறாத போது, பொன் வறுமையாக கசங்குகிறது.அக்காக்கள் அம்மாக்களானதும் வழமை போல காணாமல் போகும் போது, பொன் நகைகள் பெருங்கனவுகளாகின்றன

அவள் முகத்திற்கு பொருத்தமாயிருக்குமென அன்று தேர்வு செய்த நடுவில் நீலம் பதித்த மூன்று வரிசைக் கல்கம்மலை கேட்டு பிராயக்காரப் பெண் வரும் போது, பொன் கழிவிரக்கமாகிறது. மூக்குத்திகளுக்கு அழகு சேர்க்கும் மூக்குத்திக்காரிகள் பற்றி பேசும் போது, பொன் காதலாகிறது.சில பவுன்களுக்காய் நிராகரிக்கப்பட்ட பெண்ணை கணவனுடன் பார்க்கும் போது, பொன் பொறாமையாகிறது.தாணு பிச்சையாவின் கவிதையில் வேனற்பொழுதுகூட கங்கினுள் கழன்றுருகும் பொன்னாகவே மினுங்குகிறது. வெறும் நகைகளாக மட்டுமன்றி கஜலெக்ஷ்மி பதக்கத்துக்குள் ஆகாயமாகவும், புஷ்பராக கற்களின் அகவெளிக்குள் காலமாகவும் மாறும் வித்தைகளை நிகழ்த்துகிறது, தாணு பிச்சையா என்கிற கவிதைக் கொல்லன் வடிக்கும் பொன் கவிதைகள். துண்டுதுண்டாய் அறுபட்டு மீன்களோடு மிதந்த நீலம் பாரித்த தச்சனின் தசைககளையும், நள்ளிரவில் நடுங்கவைக்கும் ஆயிரம் பொற்கொல்லர் தலைகளின் பேரோலங்களையும் கவிதைகளுக்குள் கொண்டு வரும் போது தாணு பிச்சையா வாசகர்களுக்குள் கடத்தும் வலி இதுவரை அறியாதது.2006ல் வெளியான பிளட் டைமண்ட் என்கிற ஆங்கிலப் படத்தைப் பார்த்த போது ஒரு பெண் என்கிற முறையில் வைரம் எற்படுத்திய அசூயையும் குற்றவுணர்வையும் தாணு பிச்சையாவின் கவிதைகள் தங்கம் குறித்தும் எனக்குள் ஏற்படுத்துகின்றன.ஆனால் அந்த குற்றவுணர்விலிருந்து என்னை மீட்கும் சூட்சமத்தையும் தாணு பிச்சையாவின் கவிதைகளுள் சில கை கொண்டிருக்கின்றன. தேவதைகளின் அணிகலனாக சிமிக்கியை கொண்டாடும் போதும், பொற்பர வெளிக்கூண்டில் பறக்கும் கிளிகூண்டு சிமிக்கிகளை அணிந்தவளைப் பற்றி பாடும் போதும், முகமறியா பெண்ணின் சிமிக்கியில் நிழலாடும் அவளைப் பற்றி பேசும் போதும் கொல்லனுக்கேயுரிய அழகியலை வெளிப்படுத்துகிறது தாணு பிச்சையாவின் கவிதைகள். வரலாற்றில் எனக்குவாரி வழங்கியதன் மிச்சமென அரைஞாண்கயிறாய் இற்றுக்கிடக்குமிந்த முப்பிரி நூல் மட்டுமே என்று துயரம் தோய பாடினாலும், தாணு பிச்சையாவிற்கு தாத்தா பொன்னை பழக்கிய காலத்திலிருந்து ‘காணும் யாவினுக்குள்ளும் மினுக்கத்தை’ தேடும் மனம் வாய்க்கப்பட்டிருக்கிறது. வெம்மை தணிய பாடும் கொல்லன், யுகங்கள் கடந்த நூற்றாண்டுகளின் மௌனத்தையும் கலைத்துக் கொண்டிருக்கிறான். தமிழ் கவிதைக்கு புதிய திசைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறது,  இந்த கொல்லனின் பாடல்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்