/* up Facebook

Jun 19, 2013

பெண்களுக்கு ஆபத்தான தேசம்!


`வளர்ச்சிப் பாதையில் போகிறது... விரைவில் வல்லரசு ஆகிறது...` என்றெல்லாம் இந்தியா குறித்து உணர்ச்சி கோஷங்கள் வேகமாக எழும்போதெல்லாம் ஏதாவது ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகி, யதார்த்தம் என்ன என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும்! கடந்த ஆண்டில் `டிரான்ஸ்வேர்ல்டு இன்டர்நேஷனல்` என்ற அமைப்பு, அதிர்ச்சி தரும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. `ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற உள்நாட்டுப் போர் நிகழும் நாடுகளில் இருப்பதைப் போன்ற ஆபத்தான சூழ்நிலையில்தான் இந்தியப் பெண்கள் வாழ்கிறார்கள்` என்று சொன்னது அந்த அறிக்கை. உலகில் பெண்கள் வாழத் தகுதியற்ற மோசமான ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியாவைக் குறிப்பிட்டது அந்த ஆய்வு. இப்போது அடுத்த அறிக்கை ரெடி!
  
`ஜி20` எனப்படும் வளர்ச்சியடைந்த, வளரும் நாடுகளின் கூட்டமைப்பில் 20 நாடுகள் இருக்கின்றன. இவற்றில் ஐரோப்பிய யூனியன் தவிர்த்த இதர 19 நாடுகளில் பெண்களின் நிலை பற்றி `தாம்ஸன் ராய்ட்டர் அறக்கட்டளை` ஒரு சர்வே எடுத்தது. இந்த 19 நாடுகளில் பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக முதலிடத்தில் இருக்கிறது இந்தியா.

சர்வதேச அளவில் துல்லியமான கருத்துக்கணிப்புகளை எடுப்பதில் புகழ்பெற்றது இந்த அறக்கட்டளை. இந்த சர்வேயும் ஏதோ ரோட்டில் போகிறவர்களை வழிமறித்து எடுக்கப்பட்டதல்ல! புகழ்பெற்ற பெண்கள் நல மருத்துவர்கள், பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், பெண்களுக்கான சட்ட உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞர்கள் என 370 பேரிடம் கருத்து கேட்டு அதைத் தொகுத்தார்கள். அதோடு அரசு நிறுவனங்கள், ஐ.நா. அமைப்புகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களையும் சேர்த்தார்கள். இப்படி பல மாத உழைப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை இது. இதன்படி பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக முதலிடத்தில் இருக்கிறது கனடா. தரவரிசையில் கடைசியாக & அதாவது பெண்களின் வாழ்க்கை மிக ஆபத்தில் இருக்கும் தேசமாக & இருக்கிறது இந்தியா. பெண்களுக்கு கார் ஓட்டுவதற்குக் கூட அனுமதி தராத சவூதி அரேபியாகூட இந்தியாவைவிட மேலேதான் இருக்கிறது.

பெண்களின் வாழ்க்கைத் தரத்தை இவர்கள் நான்கு விஷயங்களை வைத்து மதிப்பிட்டார்கள்...

நகரம், கிராமம் என்ற வித்தியாசங்களைத் தாண்டி கிடைக்கும் மருத்துவ சேவை; அது பெண்களுக்கு எந்த அளவுக்கு கிடைக்கக் கூடியதாக இருக்கிறது?
 உடல்ரீதியாகவும், பாலியல்ரீதியாகவும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள்.
 தங்கள் உரிமைக்காகக் குரல் எழுப்பும் அரசியல் அதிகாரம் பெண்களுக்கு எந்த அளவில் கிடைத்திருக்கிறது?
 குடும்ப சொத்து மற்றும் விவசாய நிலங்களில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பங்கும் உரிமையும் தரப்படுகிறது?

`இந்தியாவில்  குறிப்பாக வட மாநிலங்களில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அளவே இல்லை` என்கிறது இந்த அறிக்கை. இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு பிறப்பதற்கு முன்பாகவே & அதாவது கருவிலிருந்தே & ஆபத்து ஆரம்பித்து விடுகிறது. பெண் குழந்தை வேண்டாம் என்று கருவிலேயே கொல்லப் பார்க்கிறார்கள். அதை மீறிப் பிறந்தால், பிறந்த பின்னும் தொடர்கிறது சிசுக் கொலை! கொஞ்சம் வளர்ந்ததும் உறவினர்களாலும் குடும்ப நண்பர்களாலும் சிறு வயதிலேயே நிகழ்த்தப்படும் உடல்ரீதியான அத்துமீறல்களைத் தாண்டி வர வேண்டி இருக்கிறது. திருமணத்துக்கு பக்குவப்படும் வயது வரும் முன்பாகவே இளம் வயதில் திருமணம் நடக்கிறது. அதன்பின் புகுந்த வீட்டில் வரதட்சணைக் கொடுமையை சகித்துக் கொள்ள நேர்கிறது. சட்டங்கள் என்ன சொன்னாலும், புகுந்த வீட்டிலோ, பிறந்த வீட்டிலோ சொத்துரிமை ஒரு பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. வாழ்நாள் முழுக்க அவள் யாரையாவது சார்ந்து வாழ வேண்டிய நிலை!

 இளம் வயதிலேயே கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படும் இந்தியப் பெண்களில் ஐந்தில் ஒருவர், கருவுற்று இருக்கும்போதோ, அல்லது பிரசவ நேரத்திலோ மரணத்தைச் சந்திப்பதாக ஐ.நா. புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.
 இப்போதும் 45 சதவீத இந்தியப் பெண்கள், 18 வயதை அடைவதற்கு முன்பே திருமண பந்தத்தில் தள்ளப்படுவதை மத்திய அரசிடம் இருக்கும் புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. இது சட்டவிரோதம் என்றாலும், தண்டிக்கப்படுகிறவர்கள் மிகக் குறைவு. ஏதோ ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது போன்ற சிறிய குற்றமாகவே இது போலீசாரால் பார்க்கப்படுகிறது.
வரதட்சணை கேட்டு நடக்கும் சித்திரவதையால், இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறாள் என தேசிய குற்றப்பதிவு ஆணையம் தரும் புள்ளிவிவரம் சொல்கிறது. போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்கு பதிவான விவரங்களை மட்டுமே இது குறிப்பிடுகிறது. போலீசின் கவனத்துக்கு வராமல் நடக்கும் குற்றங்கள் எத்தனை என்ற புள்ளிவிவரம் யாரிடமும் இல்லை.
 `மனைவியை கணவன் அடிப்பதில் தப்பில்லை` என இந்தியாவில் 51 சதவீத ஆண்களும், 54 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். இது அரசு எடுத்த கருத்துக்கணிப்புதான்!
 `குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு` என இந்து வாரிசுரிமைச் சட்டம் திருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்றாலும், தந்தையின் பரம்பரைச் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு கிடைக்க வகை செய்யும் சட்டத் திருத்தங்களும் வந்தாயிற்று. ஆனாலும் வெறும் பத்து சதவீதப் பெண்களுக்கே ஏதோ கொஞ்சமாவது சொல்லிக்கொள்ளும்படியாக நிலங்கள் மற்றும் சொத்துக்களில் உரிமை இருக்கிறது. இத்தனைக்கும் கிராமப்புறங்களில் 84 சதவீதம் பெண்கள் தங்கள் வாழ்நாள் உழைப்பை விவசாய நிலங்களில்தான் கொட்டுகிறார்கள்.
இப்படி அத்தனை தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் குறிப்பிட்டே, `இந்தியா பெண்களுக்கு ஆபத்தான தேசம்` என்கிறது இந்த அறிக்கை. போர்ச்சூழலில் குண்டுகளுக்கும் துப்பாக்கிமுனைகளுக்கும் பயந்து பதுங்கிக் கிடப்பது மட்டுமே ஆபத்தான வாழ்க்கை இல்லை. உரிமைகளைத் தொலைத்துவிட்டு, வீட்டுக்குள் உறவுகளிடம் தினம் தினம் சித்திரவதைகளை அனுபவித்து ஜடமாக நாட்களை நகர்த்துவதும் ஆபத்தான வாழ்க்கைதான். இதையெல்லாம் புரட்டிப் போடும் சமூக மாற்றங்களை நிகழ்த்திவிட்டு, அப்புறமாக இந்தியா வல்லரசு கனவு காணட்டும்!    

- ஐஸ்வர்யா

நன்றி - நம்தொழி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்