/* up Facebook

Jun 18, 2013

சம உரிமை வேண்டாம் பெண்ணுரிமை போதும்!


தமிழ்ப்பத்திரிகையின் ஆசிரியர், மலாய் மொழியில் வெளிவரும் பத்திரிகையின் ஆசியராக இருந்த முதல் தமிழ்ப்பெண், ஆட்சிப்பணியாளர்களைத் தேர்வு செய்யும் பொதுச்சேவை துறை ஆணையர், ஐ.நா சபையில் பேசிய முதல் தமிழ்ப்பெண், தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த சமூக ஆர்வலர், எழுத்தாளர்... இந்தத் தகுதிகள்தான் நாம் `டத்தீன் படுக` ஜெயா பார்த்திபனைச் சந்திக்கக் காரணம். மலேசிய நாட்டில் ஆண்களைச் சிறப்பிக்க டத்தோ பட்டம் தரப்படும். அந்தப் பட்டத்தை ஜெயா பார்த்திபனுக்குக் கொடுக்க நினைத்தார்கள். அதனால் இவருக்காகவே `டத்தீன் படுக` என்ற புது பட்டப்பெயரை உருவாக்கி, சூட்டியும் விட்டார்கள். நிறைய சிறுகதைகள், ஆய்வு கட்டுரைகள், வானொலி நாடகங்கள் எழுதியிருக்கிறார். மலேசியாவில் இருந்து சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

"சிறப்பித்து சொல்லும்படி எதையும் நான் சாதிக்கவில்லை. உங்களில் ஒருத்திதான் நான்!" என்று தணிந்த குரலில் ஆரம்பித்தார் ஜெயா.

"வறுமையின் காரணமாக தஞ்சாவூரில் இருந்து மலேசியாவுக்கு தோட்டவேலை செய்ய வந்தவர்களின் மகள் நான். படிப்புகூட எங்களுக்குச் சிரமமான காரியமாக இருந்தது. எனக்கும் தமிழுக்கும் ரத்த சம்பந்தம் உண்டு. என் பெற்றோர் தமிழர்கள் என்பதற்காக மட்டும் இதை சொல்லவில்லை. பள்ளியில் மலேய மொழி படித்தாலும் மாலை வேளையில் ஒரு தமிழ் வாத்தியாரிடம் தமிழ் பயின்றேன். தரையில் மணல் பரப்பி, அதன் மீது உயிரெழுத்துக்களை எழுதக் கற்றுத் தருவார் அவர். நான் சரியாக எழுதவில்லை என்றாலும், அவருக்கு வீட்டில் பிரச்னை என்றாலும் அவர் அழுத்துவதில் என் விரல்களில் ரத்தம் கசியும்! இதைத்தான் சொன்னேன் நான்.எனக்கு மலாய், ஆங்கிலம், தமிழ் என மூன்று மொழிகள் தெரிந்திருந்ததால் படித்து முடித்ததுமே வேலை செய்யத் துவங்கிவிட்டேன். ஒன்பது வருடங்கள் மொழிபெயர்ப்பாளராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் இருந்திருக்கிறேன். என் தமிழ்ப்பேச்சும் எழுத்தும் தெளிவாக இருக்கும் என்பதால் அரசியல் கட்சிகளின் அறிக்கையை எழுதித்தரும் பணியை எனக்குக் கொடுத்தார்கள். இப்படித்தான் அரசியல் எனக்கு அறிமுகமானது. ஆனால் அப்போது அறிக்கை எழுதித்தருவது, அவற்றை மொழிபெயர்ப்பது இவற்றோடு நின்றுவிடுவேன்.

எனக்கு மணமாகி, மூன்று குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளுக்காக 14 வருடங்களாகப் பார்த்து வந்த அரசாங்க வேலையை விட்டு விலகினேன். பதவி உயர்வு நேரத்தில் வேலையை விடுகிறோமே என்று வருத்தமாக இருந்தாலும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காகத்தானே என்று என்னை சமாதானம் செய்துகொண்டேன். வீட்டில் இருக்கும் நேரத்தில் படிப்பைத் தொடரலாம் என்று ஆலோசனை சொன்னார் கணவர். என்ன செய்வது? மூன்று பிரசவங்களுக்குப் பிறகு முதுகலை பட்டம் வாங்க வேண்டும் என்று இருந்திருக்கிறது! இப்போது அறுபது வயதைக் கடந்த பிறகு பி.எச்டி செய்து கொண்டிருக்கிறேன்" என்றவர், தன் அரசியல் பணிகள் குறித்துச் சொன்னார்.

"அறிக்கைகளோடு மட்டும் நின்ற என் அரசியல் ஆர்வம், மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் வரை நீண்டது. பிறகு கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அந்த ஈடுபாடு என்னை கிளை, மகளிர் அணி என அடுத்தடுத்த நிலைகளுக்குக் கொண்டு சென்றது. கட்சியில் மாநில மற்றும் தேசிய அளவில் பொறுப்பு வகிக்கும் நிலைக்கு வந்தேன். தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மாநில மகளிர் அணி தலைவியாக இருந்திருக்கிறேன். மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான் ஐ.நா சபையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

ஆண்களுக்குப் பொருந்திப்போகிற அரசியல் பணிகள் பெண்களுக்கு பல சமயங்களில் சிரமமாகத்தான் இருக்கிறது. பொதுப்பணியில் இருந்தால், எந்த இடத்தில் பிரச்னை வந்தாலும் அடுத்த நிமிடம் நான் அங்கே இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பார்கள். அது அதிகாலை நான்கு மணியானாலும் சரி, நள்ளிரவு பன்னிரெண்டு மணியானாலும் சரி. அரசுப்பணியோ, குடும்ப விழாவோ எதுவாக இருந்தாலும் அந்த நேரத்தில் பிரச்னைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்றாலும் எனக்கென சில வரையறைகள் வகுத்துக் கொள்வேன். நள்ளிரவு தாண்டியும் நீளும் அரசு விழாக்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பேன். தலைவியாக இருந்தாலும் தனியாக செல்லக்கூடாது, இரவு பத்து மணிக்கு மேல் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என எனக்கு நானே சில வரையறைகளை வகுத்துக் கொண்டேன்" என்றவர், அந்த ஊ_ர் தேர்தல் பற்றிப் பேசினார்.

"தேர்தல் நேரத்து திருமங்கலம் ஃபார்முலா எல்லாம் இங்கே செல்லுபடியாகாது. காலையில் கண்விழித்ததுமே ஓட்டுச்சாவடிக்கு வருகிற அளவுக்கு மக்கள் மிகத்தெளிவானவர்கள் என்பதால் மலேசியாவில் தேர்தல்களம் அதிக சவால்கள் நிறைந்தது. நாடு முழுக்க பிரசாரம் செய்கிற பணி என்னிடம் கொடுக்கப்பட்டபோது எந்த மறுப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்டேன். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியில் 32 கட்சிப் பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்களைத் தேர்வு செய்த நிர்வாகத்திறனுக்குக் கிடைத்த பரிசாகவே அதை நினைத்தேன்.

அரசியலில் சமுதாய உணர்வு மிக முக்கியம். குடும்ப ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லையென்றால் பெண்களால் எந்த பணியிலும் உயரங்களைத் தொடமுடியாது. என் அரசியல் வாழ்வு சிறக்கக் காரணம் என் குடும்பம். போதுமான தூரம் ஓடியாகிவிட்டது என்ற உணர்ந்தபோது அரசியலை விட்டு விலகலாம் என தீர்மானித்தேன். யாரும் நம்மை வெளியேற்றுகிற வரை காத்திருக்கக்கூடாது" என்கிற ஜெயா பார்த்திபன், அரசியலுக்கு அப்பாற்பட்ட தன் வாழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

"முழுநேர அரசியலில் இருந்து விலகிய பிறகு அரசு சார்பற்ற நிறுவனத்தைத் துவங்கி, அதன் தலைவராகவும் இருக்கிறேன். முழுக்க முழுக்க பெண்களுக்காகச் செயல்படுவதுதான் இந்த அமைப்பின் நோக்கம். பசியால் வாடுகிற ஒருவனுக்கு மீன் பிடித்துத் தருவதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது நல்லது என நினைக்கிறவள் நான். அதனால் எங்கள் அமைப்பின் சார்பில் தனித்து வாழும் பெண்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்கிவருகிறோம். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டாலே போதும், அவர்கள் நிச்சயம் முன்னேறிவிடுவார்கள்!" என்றவர்,
முத்தாய்ப்பாக ஒரு கருத்தை முன் வைத்தார்.

"சம உரிமையில் எனக்கு ஈடுபாடு இல்லை. பெண்ணுரிமைதான் எனக்கு முக்கியம். சம உரிமை என்ற பெயரில் போட்டி போடுவதில் அர்த்தமில்லை. உனக்கு எது சரியாக இருக்கும்... எது உன்னுடைய உரிமை என்பதை உணர்ந்து அதற்காக போராட வேண்டும். எல்லா விஷயங்களிலும் ஆண்களைப் போல இருப்போம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. நான் என் மகனுக்கு அளிக்கிற சுதந்திரம் என்பது வேறு... மகளுக்குக் கொடுக்கும் சுதந்திரம் என்பது வேறு. அவளது நலனுக்கு தீங்கு ஏற்படாத அளவுக்கு அவளை செயல்பட அனுமதிப்பதுதான் பெண்ணுரிமையே தவிர, கட்டவிழ்த்து விட்டுவிடுவதல்ல. அந்தத் தெளிவு இருந்தாலே போதும், யாரும் சம உரிமை கேட்டு போராட மாட்டார்கள்பொறுப்புடன் முடிக்கிறார் ஜெயா பார்த்திபன்.

- பிருந்தா கோபாலன்,
படங்கள்: துரை. மாரியப்பன்

நன்றி - நம்தொழி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்