/* up Facebook

Jun 10, 2013

தமிழில் பெண்களுக்கான இலக்கியவரலாறு - ச விஜய லட்சுமி


இந்த நீர்நிலைகளின்

திட்டவட்டமான வழியை

ஒழுங்கமைத்து வைப்பதற்கான

வேளைவந்துவிட்டது

தனித்திருக்கும் காதலனுக்கு ஒருகவிதையும் கிடையாது

கனத்த மௌனம் காப்பவர்களுக்கு ஒரு சொல்லும் கிடையாது

–ஸொலெய்டா ரியாஸ்(ஸாண்டியாகோ)

 வரலாறு என்பது கடந்தகாலத்திற்குரிய அரசியல் சமூக செயல் பாடுகளை உள்ளடக்கியது.வரலாறு என்ற பதம் உணர்த்துகிற அத்தனை விதமான புரிதல்களையும் அதனுள் கட்டமைக்கப்பட்டுவருகிற விமர்சனங்களும் இலக்கியவரலாறு எனும் பதத்திற்கு பொருத்தமாக அமையும்.

வரலாறு என்பது காட்சிப்படுத்தும் பிம்பங்களில் ஆண்பாலினப் பதிவுகளோடு ஒப்பிடமுடியாத பின்னடைவு கொண்டதாக பெண் பாலினம் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒருசிலரைத்தவிர்த்து எங்கனுமில்லை.வரலாறு ஆண்களுக்கானதாக மட்டுமே ஒற்றைத்தன்மையுடன் பதிவிடப்பட்டுவருகிறது.இலக்கியவரலாறும் அவ்வாறே ஆண்பாலினப் பதிவுகளைக் கொண்டிருக்கிறது.இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் சென்று அச்சூழலினை விளங்கிக்கொள்ள முயல்வது பொருத்தமற்றது.ஏனெனில் இலக்கிய வரலாறு என்பது அச்சுத்துறை வளர்ச்சியின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வ்ருகிறது.எழுதப்பட்ட அத்துணை எழுத்துகளும் தொகுப்பு முயற்சிக்குள் வந்திருக்க வாய்ப்பில்லை விடுபடல்கள் இருப்பதற்கு சாத்தியங்கள் அதிகம் .தகவல் தொடர்பு அருகிய நிலையில் அவரவர் எழுதி விட்டுச்சென்றதை பிற்காலத்தில் தொகுத்திருக்கிறார்கள்.தொகுத்தவன் ,தொகுப்பித்தவன் எனும் குறிப்பு எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்களில் காண்பதை வைத்து இதனை அறிகிறோம்.

அவ்வாறு தொகுக்கப்பட்ட காலத்தில் அவர்களுக்கு கிடைத்த அல்லது அறிந்த பாடல்கள் மட்டுமே இடம் பெறுகிற நிலையில் ஆண்பாலினப்படைப்புகளும் விடுபட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.குறைந்த பங்களிப்பு தருகிறவர்களாயிருக்கிற பெண்பாலினப் படைப்புகள் எதிர்பாலின படைப்பின் பதிவுகளோடு ஒப்பீட்டளவில் பின் தங்கியிருக்கிறது.

சமூகத்தில் பெண் சரிபாதியாயிருக்கிறாள்.அவளது பங்களிப்பு சமூகத்தில் இல்லாமலில்லை.பெண்கள் இல்லாமல் சமூகம் இல்லை என்கிறபோது பெண்களில்லாமல் வரலாறு இருக்க வாய்ப்பில்லை. வரலாற்றுப் பதிவுகளில் நிலைத்திருக்கிற ஒருசார்புத்தன்மைதான் பெண்ணின் சுவடுகளை மறைத்திருக்கிறது.சமூகப்பங்களிப்பின் பதிவுகள் இல்லாமல் உற்பத்திக்கருவியாக மட்டுமே வாழ்ந்திருக்கிறாள்.

 உழுகருவி முதலான தொழில்நுட்ப விடயங்களில் ஆர்வம் கொண்டு பெண்களால் உருவாக்கப்பட்டிருக்கையில் இலக்கியம், இசை,நடனம் முதலான கலைத்துறையில் அவர்களது பங்களிப்புகளோ கண்டுபிடிப்புகளோ நிச்சயம் இருந்திருக்கும்.பொருளாதார கட்டுமானங்களிலும் பெண்களில்லாமல் இல்லை அவர்களுக்கு முறையான பதிவுகள் இல்லை என்பதொன்றே அவர்களின் விடுபடலுக்கு காரணம் .இந்த அடிப்படையில் பெண்பதிவுகள் தணிக்கைசெய்யப்(தவிர்க்க) பட்டிருக்குமாவென ஆராய வேண்டியிருக்கிறது.

 தமிழில் இலக்கியவரலாறுடன் தொடர்புடைய பிறபகுதிகளாக ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டமை,அச்சுத்துறையில் அச்சிடும் உரிமை தமிழருக்கு வழங்கப்பட்டமை என இவற்றையும் சீர்தூக்கி பார்க்கவேண்டியிருக்கிறது.

 ஊரூராக ஓலைச்சுவடிகள் அலைந்து தேடி கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

16 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தமிழில் அச்சுமுயற்சிகள் தோன்றியதெனினும் கி.பி1835 ஆம் ஆண்டுதான் உள்நாட்டுமக்களுக்கு அச்சிடும் உரிமை வழங்கப்பட்டது.இதற்குப்பின்தான் தேசிய உள்ளடக்கம் மற்றும் ப்ராந்தியதேவைகளைக்குறித்த நூல்கள் அச்சிட முனைந்துள்ளனர்.

மூலப்பிரதிகளைத்தேடுவதும் பதிப்பிப்பதும் சிக்கலானதொரு நிலையில் சமூகவரலாற்றின் அங்கமாக கூறுவகிக்கும் இலக்கியங்களுள் பால்நிலை சார்ந்த பதிவுகளை உடனடியாக கவனித்தல் இயலாததாகும்.

 துவக்ககால பதிப்புப் பணிக்குப்பின்னாக தமிழ் இலக்கியங்கள் எல்லோருடைய கைகளுக்கும் சென்று சேர்ந்தது.அதனைப்பின்பற்றி காலவரிசை ஆய்வுகளும் படைப்பாளர்கள் குறித்தான சர்ச்சைகளும் விவாதங்களும் எழத்துவங்கின.மன்னர்களது ஆட்சிக்குட்பட்ட இலக்கியங்கள் எனும் வகையில் காலவரிசைப்படுத்தலும் நடைபெற்றது.

 இலக்கிய அச்சாக்கம் மற்றும் மூலபாடத்தை ஆய்வுசெய்திருந்த காலத்தில் சமூக,அரசியல் மற்றும் இலக்கியத்தளங்களில் சில எழுச்சிநிலைகள் தோன்றியதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

1835-1929 காலகட்டத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் எனும் முரண் அரசியலில் தாக்கம் செலுத்தியது.காங்கிரஸ் விரோதப்போக்கு வளர்ந்தது

தனித்தமிழ் இயக்கத்தினை மறைமலை அடிகளார் தீவிரப்படுத்தினார்.

திராவிடர் எனும் கருத்துநிலை ஊன்றப்பட்டு இன உணர்வின் ஓர்மை அரசியல் ,சமூகத்தளங்களில் வலுப்பட்டது.

ஈ.வே.ரா வின் சுயமரியாதை இயக்கத்தின் காரண்மாக தமிழர்களின் பண்பாட்டு தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்கும் அதன் பின்னாக தமிழர்களை தேசிய இனமாகக் கொள்ளவுமான கருத்தியல்களும் போராட்டங்களும் நடைபெற்றன.

 இலக்கியத்திலும் மறுமலர்ச்சி இலக்கிய போக்குகளைத்தொடர்ந்து நவீன இலக்கிய முயற்சிகளும் இஸங்கள் குறித்த விவாதங்களும் அதன் தாக்கங்களுக்கு உட்பட்ட வடிவ உள்ளடக்க மாதிரிகளும் பரிசோதனைக்கு ஆளாயின.பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வோடான குரல்கள் ஆண்படைப்பாளிகள் மத்தியில் உரக்க எழுந்தன.

 ஓரளவு பெண்கள் வீடுகளை விட்டு வெளிவந்து பெண்கள் இயக்கம் ,தீவிர முற்போக்கு சக்திகளோடு என இணைந்து பெண்வெளியை அமைத்து வந்தனர்.

பெண்மொழியின் தேவை குறித்த உரையாடல்கள் வெளிப்பட்டன.காத்திரமான படைப்புகளைப் பெண்கள் படைத்தனர்.

பெண்ணின் தொடர்ச்சி என்பது வரலாற்றிலும் இலக்கியத்திலும் பதியப்படவேண்டியது வெகுஅவசியமானதொன்றாகும்.

பெண்வரலாறு குறித்த பதிவாக இயக்கத்தில் ஈடுபட்டிருந்த பெண்டிரின் தகவல்கள் ஒருசில நூல்களில் வெளிவந்துள்ளன.

 தமிழர்கள் இந்தியாவில் மட்டுமில்லை அயலிலும் இருக்கிறார்கள். ஈழம்,மலேசியா,சிங்கபூர்,பிரான்ஸ்,கனடா முதலான பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மை உள்ளனர்.தமிழர்கள் இல்லாத பகுதியில்லை எனுமளவில் நார்வே சைப்ரஸ் என பரந்து விரிந்திருக்கின்றனர்.இவ்வாறு ஒரு இனம் எல்லைக்கோடுகள் எனும் வரையறையின்றி பரவியிருக்கும் நிலையில் தமிழிலக்கிய வரலாறு என்பது உலகலாவிய பார்வையோடு தொகுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக நம்முன் நிற்கிறது.

 தமிழிலக்கியவரலாறு எல்லைகள் கடந்ததான கூட்டுத்திறத்தோடு அமையவேண்டும்.குறிப்பாக பெண்கள் காத்திரமாக எழுதிவரும் சமகாலத்தில் மேற்கூறிய தன்மையுடன் தமிழில் பெண்களுக்கான இலக்கிய வரலாறு எழுதப்பட வேண்டும்.

படைப்புகள் உதிரிகளாய்ப் போகாமல் தமிழினத்திற்கான இலக்கிய வரலாறினை அதி முதன்மையாய் பெண்களுக்கான வரலாறினை உருவாக்குவோம்……..

 ஒரு நாட்டினுடைய மக்களின் அடிப்படைத் தன்மைகளும் உணர்வெழுச்சிகளும்,ஒருவகையான ஒருங்கிணைப்பை அணுகும்போது,அந்த நாட்டின் இலக்கியத்தினுடைய மூலக்கூறுகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிவந்து இரண்டறக்கலந்து ஒரு மகத்தான படைப்பாக வருங்காலமுணர்த்தி நிற்கும்—ஹொஸெ மார்த்தி

(பூவரசி அரையாண்டு இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்