/* up Facebook

Jun 1, 2013

"எனவே உமது பாவங்கள் நிலைக்கின்றன" - பைபிள் - ஆமென் புத்தக மதிப்புரை – கவிதா முரளிதரன்மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஆமென் தன்வரலாறு நூலின் தமிழ் பதிப்பு வெளியீட்டையொட்டி கடந்த ஜனவரி சென்னை வந்திருந்தார் புத்தகத்தை எழுதிய சிஸ்டர் ஜெஸ்மி. ஆங்கிலத்தில் அந்த நூலை ஏற்கனவே படித்திருந்ததால் அவரைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. எளிமையான ஒரு சுடிதாரில், பார்த்தவுடன் பிடித்துப்போகும் இயல்புடையவராக இருந்தார். அவருடன் இருந்த பத்து நிமிடங்களும் பேச்சும், உற்சாகமும் சிரிப்புமாகவே கழிந்தது. “நேற்று ரயிலில் சில கன்னியாஸ்திரிகளைப் பார்த்தேன், என்னைப் பார்த்து முணுமுணுப்பாக பேசிக் கொண்டு வந்தார்கள். அனேகமாக எனது புகைப்படத்தை எதாவது ஊடகத்தில் பார்த்திருப்பார்கள்” என்று சிரித்தபடியே சொன்னார்.

பொறாமையாலும் சூழ்ச்சியாலும் அத்துமீறல்களாலும் வல்லுறவுக்கான பிரயத்தனங்களாலும் நெய்யப்பட்ட அவருடைய 33 வருட துறவு வாழ்க்கையில் இதுபோன்று ஒரு முறையாவது அவர் வாய்விட்டு சிரித்திருப்பாரா என்று கேட்கத்தோன்றியது.

17 வயதில் துறவு வாழ்கை மேற்கொள்வதற்கான ‘தேவ அழைப்பு’ வந்ததில் தொடங்கி 33 வருடங்கள் கழித்து ‘மனநிலை பிறழ்ந்தவள்’ என்கிற பட்டத்திலிருந்து நூலிழையில் தப்பித்து துறவு வாழ்விலிருந்து வெளியேறுவது வரையிலான சிஸ்டர் ஜெஸ்மியின் துறவு அனுபவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட தன்வரலாறு, ஆமென்.

உலகின் மிகப்பெரிய, சக்தி வாய்ந்த மத நிறுவனத்தின் இந்தியப் பதிப்பிற்குள் நடக்கும் ரகசிய அவலங்களை தனது எழுத்துக்களின் மூலம் எளிமையாக வடியவிடும் போது சிஸ்டர் ஜெஸ்மி ஏற்படுத்தும் தாக்கம் தீவிரமானது. மதம் சார்ந்த, துறவு சார்ந்த பல ஆழமான சமூக நம்பிக்கைகளை ஆமென் அடியோடு சிதைக்கிறது.

‘தேவனுக்கான அர்ப்பணிப்போடு தொண்டு செய்யும்’ உள்ளங்களிடையே நிலவும் கசப்பும் காழ்ப்புணர்ச்சியும் அதன் பொருட்டு அங்கு மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியும் சதியுமேகூட ஒரு சாதாரண வாசகருக்கு இருக்கக்கூடிய சர்ச் பற்றிய மதிப்பீடுகளை மறுபரிசீலனைக்குட்படுத்துகிறது.

இவைபோக, சர்ச்சில் மிகச் சாதாரணமாக நடக்கும் பாலியல் ஒழுக்க மீறல்களைப் பற்றி சிஸ்டர் ஜெஸ்மியின் விவரணைகள் வாசகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துபவை. ஆனால் புதியவை அல்ல. கத்தோலிக்க சர்ச் மிகத் தீவிரமாக இருக்கும் கேரளாவில் சர்ச்சுக்குள் நிகழும் பாலியல் ஒழுக்க மீறல்கள் (பாலியல் ஒழுக்கத்தை மிகத் தீவிரமாக கடைபிடிக்கும், வலியுறுத்தும் ஒரு நிறுவனம் சர்ச் என்பதால் இங்கு பாலியல் ஒழுக்க மீறல் என்கிற வார்த்தையை பயன்படுத்த வேண்டியிருக்கிறது) பற்றி நாம் ஏற்கனவே ஓரளவு அறிந்ததுதான். 1992ல் கோட்டயத்தில் 19 வயது கன்னியாஸ்திரி சிஸ்டர் அபயா கொல்லப்பட்டதற்கு காரணமே சர்ச்சுக்குள் நடக்கும் பாலியல் பிரச்னைதான் என்று ஊடகத்தில் செய்திகள் வெளியாகின. இரண்டு பாதிரியார்களோடு ஒரு மூத்த கன்னியாஸ்திரி உறவில் இருந்ததை சிஸ்டர் அபயா பார்த்துவிட்டதால் அவர் கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியானது. இது போல அரசல் புரசலாக, பெரிய அளவில் ஆதாரங்களின்றி வெளியாகும் சர்சுக்குள் நடக்கும் அத்துமீறல்கள் பற்றிய செய்திகளின் விரிவான தொடர்ச்சியாகவே சிஸ்டர் ஜெஸ்மியின் தன் வரலாறை வைத்துப் பார்க்கலாம்.

“பரிசுத்த முத்தங்களால் எல்லா சகோதரர்களையும் வாழ்த்துவீராக” என்கிற பைபிளின் வாசகத்தின் அடிப்படையில் கன்னியாஸ்திரிகளிடம் முத்தம் கேட்கும், கொடுக்கும் பாதிரியார், சுயபாலின மோகம் கொண்ட சக கன்னியாஸ்திரி, ஒரு கன்னியாஸ்திரியின் கர்ப்பப்பையை நீக்கியபிறகு ஆறுதலடையும் சுப்பீரியர், உடல்ரீதியான தேவைகள் பற்றி போதனை செய்து உடைகள் களையும் பாதிரியார் என்று சிஸ்டர் ஜெஸ்மியின் தன்வரலாறு நெடிகிலும் பயணிப்பவர்கள் ‘சர்ச்சுக்கேயுரிய பாலியல் அறங்களை’ தொடர்ந்து மீறுபவர்களாகவே இருந்து வருகிறார்கள். காலம் காலமாக சர்ச் விதித்து வரும் கடுமையான பாலியல் கட்டுப்பாடுகளை எளிமையாக, குற்றவுணர்வுகளின்றி, தமக்குரிய நியாயங்களோடு மீறுகிறார்கள் சிஸ்டர் ஜெஸ்மியின் தன்வரலாறில் பயணிக்கும் கன்னியாஸ்திரிகளும் பாதிரியார்களும்.

தீவிர பாலியல் கட்டுப்பாட்டை (sexual repression) மேற்குலகத்தின் பல அடிப்படை பிரச்னைகளுக்கு காரணமாகச் சொல்கிறார்கள் சிக்மண்ட் பிராய்ட் போன்ற தத்துவவியலாளர்கள். “நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை?” என்ற புகழ்பெற்ற ஒரு கட்டுரையில் பாலியல் குறித்த சர்ச்சின் அணுகுமுறைகள் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார் அறிஞர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல். “ஒழுக்கத்தை போதிப்பதன், வலியுறுத்துவதன் மூலம் எல்லாவிதமான மக்களின் மீதும் தேவையற்ற ஒரு துயரத்தை சுமத்துகிறது சர்ச்” என்கிறார் அவர். பாலியல் குறித்த ஆரோகியமற்ற, இயற்கைக்கு விரோதமான அணுகுமுறைதான் கிறிஸ்துவ மதத்தின் மிக மோசமான அம்சம் என்கிறார் ரஸ்ஸல். பாலியல் குறித்த சர்ச்சின் வெறுப்பு தேவையற்றது மட்டுமல்ல, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் கூட என்பது ரஸ்ஸலின் வாதம்.

அந்த வாதத்தில் உண்மை இருப்பதை சிஸ்டர் ஜெஸ்மியின் தன்வரலாறு மிகத் தெளிவாக வாசகர்களுக்கு விளக்குகிறது.

சிஸ்டர் ஜெஸ்மியின் நூலில் வெளிப்படும் இன்னொரு விஷயம், சர்ச்சில் நிலவும் பாலின பாகுபாடுகள். கன்னியாஸ்திரிகளுக்கு விதிக்கப்படும் பல விதிகள் பாதிரியார்களுக்கு தளர்த்தப்படுகிறது. கன்னியாஸ்திரிகளுக்கென சீருடை இருக்கிறது. பாதிரியார்களுக்கு இல்லை. பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாம். கன்னியாஸ்திரிகளுக்கு யேசுவே கணவர்.  சர்ச்சில் எடுபிடி வேலைகளை கன்னியாஸ்திரிகள்தான் செய்ய வேண்டும்.

பெண்களை ஒடுக்க மதம் ஒரு ஆயுதமாக காலம்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு கிறிஸ்துவமும் விதிவிலக்கல்ல. சூனியக்காரிகள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பெண்கள் எரித்துக் கொல்லப்படுவதை பார்த்த, அனுமதித்த பாதிரியார்களின் செய்கைகளின் தொடர்ச்சியாகவே இன்று அவர்கள் கன்னியாஸ்திரிகளை பல்வேறு முறைகளில் நிர்பந்தப்படுத்துவதை பார்க்க வேண்டியிருக்கிறது. பாலியல் ஒழுக்க மீறல் என்பது உள்பட பல்வேறு குற்றசாட்டுகளை வைத்து சிஸ்டர் ஜெஸ்மி துறவறத்திலிருந்து விலகும் போது அவருக்கு மனநோயாளி என்கிற பட்டத்தை கட்டி தனது பெயரை காப்பாற்றிக் கொள்ள எல்லா பிரயத்தனங்களையும் செய்கிறது சர்ச்.

ரேமண்ட் லாரன்ஸ் என்கிற பாதிரியார் 1985ல் எழுதிய ஒரு கட்டுரையில் “சர்ச்சுகள் கூடிய சீக்கிரமாகவே பாலியல் ரீதியாக கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கான இடமாக மாறிவிடும், அதைவிட ஆபத்தான விஷயம், அது ஆழமான போலித்தனங்களுக்கான சமூக வெளியாக மாறிவிடும்” என்கிறார்.

இன்று இந்தியாவில் அது நிதர்சனமாகி வருகிறது என்பதற்கு சிஸ்டர் ஜெஸ்மியின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர வேறு என்ன சான்று இருக்க முடியும்?

(நன்றி: புத்தகம் பேசுது, மார்ச் இதழ்)

1 comments:

Anonymous said...

பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும், சராசரி மனிதர்களை விடவும் கேவலமாக நடந்து கொள்வது கனண்கூடாக தெரிகிறது. எனக்கு தெரிந்த ஒரு பாதிரியார் (ஜெகதீஷ் - தூத்துக்குடி சூசையப்பர் கோயில் முன்னாள் பங்கு தந்தை) அடைக்கலாபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவன தந்தையாக இருந்த போது அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகளுடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. அதாவது அவருடன் தொடர்பில் இருந்த ஒரு மாணவி அவருக்கு எழுதிய காதல் கடிதம் எங்களது கைக்கு கிடைத்தது. மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானோம். அன்றிலிருந்து ஆசீர்வாதம் கேட்டு ஒரு பயலிடமும் முட்டிபோட்டதிலை.

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்