/* up Facebook

Jun 30, 2013

பொடுபொடுத்த தூத்தலாகிப் புழுதியின் ஆதிமணங்கிளர்த்தும் பாமரப்பாடல்கள் - கிண்ணியா எஸ். பாயிஸா அலி


கவிதையெனும் செயற்பாட்டுக்கான எந்தக் கோட்பாடுகளும் இஸங்களும் தோன்றியிராத ஒரு காலகட்டத்தில் எழுத்தின் வாசனையைக்கூட நுகர்ந்திராத பண்டைய நாட்டுப்புறச் சூழலில் வாழ்ந்து மறைந்த அன்புள்ளங்களின் உணர்ச்சிப்புலப்பாடுகளே இம்மழைத்தூறல்கள்.

சாய்ந்தமருது என்ற ஊரைச் சேர்ந்த அனார், தொண்ணூறுகளில் எழுத ஆரம்பித்தவர். இந்நாட்டார்பாடல் தொகுப்போடு, “ஓவியம் வரையாத தூரிகை“, “எனக்குக் கவிதை முகம்“, “உடல் பச்சை வானம்” எனும் மூன்று கவிதைத் தொகுப்புகளுக்காகவும் அர்ப்பணிப்போடு உழைத்ததன்மூலம் ஏராளமான தேசிய, சர்வதேச விருதுகளையும் வென்றிருப்பவர்.

கவிதை தவிர சிறுகதை முயற்சிகளிலும் ஆர்வங்காட்டி வருகின்றமையை அவரது ஓரிரு சிறுகதைகளை வாசிக்கக் கிடைத்தன்மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும் சமூகம், இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதிவருகிறார். சர்வதேச அளவில் இவரது எழுத்தானது தனக்கென்றொரு வாசகவட்டத்தை தக்க வைத்திருப்பதோடு திறனாய்வாளர், கல்வியியலாளர் கவனத்தையும் கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்து இலக்கிய சஞ்சிகைகளிலும் இந்திய, புலம்பெயர் சிறுசஞ்சிகைகளிலும், இணையதளங்களிலும் இவரது ஆக்கங்கள் உலாவருகின்றன. தனக்கான வலைப்பூவிலும் (இதமி) இவரது ஆக்கங்கள் உலாவருகின்றன, மற்றும் முகநூலிலும் தனது கருத்துக்களை, கவிதைகளைத் தொடர்ச்சியாய் பதிவிட்டுவருகிறார்.

நவீன கவிதைகளுக்குள்ளேயே தொடர்ச்சியாய் செயற்படும் அனாரின் நாட்டார்பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கிறது எனுஞ் செய்தியறிந்தபோது கொஞ்சம் வியப்பாகவும் உடனடியாக வாசிக்கவேணுமெனும் ஆவலாகவும் இருந்தது. இந்தியப் பதிப்பக வெளியீடுகளை அவசரமாகவெல்லாம் படித்துவிடமுடியாதே. ஆனாலும் எமது மரியாதைக்குரிய எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா அவர்கள் மூலமாக உடனடியாகவே வாசிக்கக் கிடைத்ததை நன்றியோடு சொல்லிக்கொள்கிறேன். அழகிய வடிவமைப்பும் நுண்ணுணர்வோடு மிளிரும் புகைப்படங்களுமாய் நேர்த்தியாக வந்திருக்கிறது இத்தெகுப்பு. பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கும் துணைநூற்பட்டியல், கிராமியச் சொற்களுக்கான பொருள்விளக்கம் என்பன இன்னொரு தேடலுக்கான புதிய கிளைகளாக விரிகின்றன.

‘ஒவ்வொரு சொல்லிலும் உள்ளுறைந்திருக்கும் ஆன்மாவின் பச்சை, காதலின் அப்பளுக்கற்ற வாசனை ஆணினதும் பெண்ணினதும் கண்களில் இருந்து தெறிக்கின்றது. அந்தக் கணத்தின் குரலில் இருந்த இசையின் உயிர் ஒருபோதும்  அழிவற்றது’  என்கிறார் அனார் இத்தொகுப்பிற்கான தன்குறிப்பில்.

அனாரின் எல்லாக் கவிதைக்குள்ளும் வற்றாத நீர்ச்சுனையாய் ஊறிக்கொண்டேயிருக்கும் காதலையும் அழகியலையும் அவரின் கவிமனம் எங்கிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை என்னால் இப்போதுதான் உணரமுடிகிறது.

உண்மைதான் அனார் சொல்வதுபோல ‘இன்றைய உலகமயமாக்கல், அறிவுப்பெருக்கம், நாகரீகவளர்ச்சி, இலக்கிய மாற்றங்கள் அனைத்தையும் தாண்டி இன்றைக்கும் இக்கவிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கிறது. அதுதான் நாமின்னும் அடையமுடியாத ஒன்றாகவும் உள்ளது’. அதை அடைவதற்கான பெருமுயற்சிதான் அனாரின் கவிதைகளை எவரும் திரும்பிப்பார்க்க்க் கூடியளவுக்கு வசீகரப்படுத்தியிருக்கிறது போலும்.

“நாட்டுப்புற இயலானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சிபெற்றதோ அவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்“ என்கிறார் நாட்டாரியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர் எம்.எஸ். பினோஸா. இவரின் இக்கூற்றானது நாட்டாரியல் இயல்புகளை வெகு அழகாகச் சித்தரிக்கின்றது.

கிராமிய இலக்கியம். நாட்டாரிலக்கியம், பாமரப்பாடல்கள், எழுதாக்கவிதைகள், வாய்மொழி இலக்கியம், நாட்டுப்பாடல்கள், மக்கள் மரபியல், சிற்றூரியல், பாமரர் இலக்கியம், பொதுப் புராணவியம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்நாட்டாரியலை ஆய்வுக்குரிய இலக்கியமாக அனைத்துலகக் கல்விப் புலத்திற்குக் கொண்டுவந்த பெருமை “ஜேக்கப் கிரீம்“ என்ற மொழியியலாளரையே சாரும். ஐரோப்பியப் பாரம்பரியத்தில் ஜேர்மனியர்களே நாட்டாரிலக்கியத்துறையில் கூடுதலான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். முதன் முதலாகத் தமிழில் உள்ள நாட்டுப்புற வழக்காறுகளைச் சேகரித்தவர் “பார்த்தலோமியுஸ் சீகன்பால்கு“ எனும் ஜேர்மனியரே (நன்றி கூர்மதி) என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா.

தமிழ்ப் பாரம்பரியத்தில் வழக்கிலிருந்துவரும் நாட்டாரியல் பண்புகள் சிந்துவெளிக்காலத்துப் பண்பாட்டு விழுமியங்கள், கிராமிய சிறு தெய்வ வழிபாட்டுமுறைகள, சடங்குகள். நம்பிக்கைகள் என்பவற்றின் எச்சங்களாகவே  கொள்ளப்படுகிறது.

வாய்மொழியாகப், பாரம்பரியமாக வழங்கிவரும் நாட்டுப்புறப்பாடல்கள் அக்காலத்திலிருந்தே குடிமக்களால் பாடப்பட்டு வந்திருப்பதைக் காணலாம். இதுபோல் பிறப்புமுதல் இறப்புவரையிலான எல்லாப் பருவங்களுக்குமான பாடல்கள் நாட்டாரிலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. பயன்பாட்டின் அடிப்படையில் அவற்றை தாலாட்டுப்பாடல்கள், சிறுவர் பாடல்கள், தொழிற் பாடல்கள், காதற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், கதை கூத்துப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என வகைப்படுத்தலாம்.

இவ்வகையான நாட்டார் பாடல்களிலும் ஊடுபாவாய் உள்ளோடியிருப்பது அன்புணர்வொன்றேதான். அந்த அன்புணர்வுதான் காதலாகவும், கருணையாகவும், பாசமாகவும், பரிவாகவும் ஓர்மமாகவும் ஏன் கோபமாகவும்ங்கூட வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவற்றுள் காதல் வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தமது அன்புணர்ச்சியை சுய அனுபவங்கள் சார்ந்த கருத்துக்களோடு வெளிப்படுத்தப்படுவதைக் காதற்பாடல்களாகக் கொள்ளலாம்.  அத்தோடு தொழிற் களங்களிலோ வண்டிப் பயணங்களிலோ ஆண் பெண் இணைந்து பாடுவதுங்கூட காதற் பாடல்களே.

அனாரின் பொடுபொடுத்த மழைத்தூத்தலின் குவியப் புள்ளியுங்கூடக் காதல்தான். குறவஞ்சிப்பாடல்களை நினைவூட்டுகிறது கவிகள் தொகுக்கப்பட்ட வடிவமுறை. 160 காதல் பாடல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில் நாட்டார்பாடல் தொகுப்போர் கவிஞராக இருப்பதில் பெரும்பாலான ஆய்வாளருக்கு உடன்பாடிருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் ஓசைக்கேற்பவோ அல்லது எதுகை மோனை கருதியோ தமக்கிசைவான சொற்களை இணைத்து அதன் மூலவடிவத்தை மாற்றிவிடக் கூடுமென்பதால்தான். எனினும் “தான் இதைத் தொகுக்க முனைந்தவேளையில் வடிவத்தை சிதைக்காமல் எளிமையாக அதன் முழுமையோடு தொகுப்பதில் தான் கவனமெடுத்ததாக அனார் கூறுவது நம்பிக்கை தருகிறது.

நாட்டார் காதல் பாடல்கள் உண்மையாகவே காதலர்களால்தான் பாடப்பட்டதா இல்லை பாவனையடிப்படையில் ஏனையோரால் பாடப்பட்டதா எனும் ஐயம் எழாமலில்லை. பண்டைய கிராமிய வாழ்க்கைச் சூழலில் காதலர் சந்தித்து இணைந்து கவிபாடி மகிழ்ந்திருக்கக்கூடும். அவர்தம் வாழவில் இப்பாடல்கள் நேரடிப்பயனைத் தந்திருக்கக் கூடும். எனினும் காலச்சுழற்சி தந்த சமுதாய வளர்ச்சியும் சூழல் மாற்றமும் சமூகக்கட்டுப்பாடுகளும் அடுத்துவந்த காலங்களில் இவற்றைப் பாவனையடிப்படைக்கு உட்படுத்தயிருக்கலாம்.

அன்றைய வாழ்க்கைமுறை, சமுதாயமரபுகள், தொழில்முறைகளை எவ்வித மாற்றமுமின்றி உட்பொருளாகக் கொண்ட இப்பாடல்களில் இப்பிரதேசத்தின் அக்காலத்தைய மக்களால் பிரதான பரம்பரைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயம், விலங்குவேளாண்மை, கடற்றொழில், கடல்வாணிபம், வியாபாரம், நெசவு, சிறுகைத்தொழில்கள் போன்றவற்றில் புளங்கும் சொற்களோடு கூடிய மரபுரீதியான சொல்லாட்சிகளும் இயற்கையோடொன்றிய உவமைகளுமாய் எளிமையோடு மிளிர்கின்றன இப்பாடல்கள். மொழிச்சிக்கலில்லா எளிமையும் அழகுணர்வுந்தானே உலக மொழியனைத்திலுமுள்ள நாட்டாரியலின் சிறப்பியல்பு.

ஒரு நாட்டின் இசைக்களஞ்சியமாகவும் இசைச் செல்வமாகவும் நாட்டார்பாடல்கள் கணிக்கப்படுகின்றன. மேற்குலகைப் பொறுத்தவரையில் நவீன விஞ்ஞான, தொழிநுட்ப மருத்துவத் துறைகளில் மேம்பட்டிருப்பதுபோலவே இசைத்துறைக்காவும் அதிக அக்கறையோடு உழைத்துவருகின்றனர். தமது நாட்டார்பாடல்களைக்கூட ஒலிப்பதிவுசெய்து அவற்றிற்கு ஒலிக்குறிமானமிட்டுப் பேணிவருகின்றனர்.

எமது நாட்டார்பாடல்களும் அதற்குரிய இசையோடு பதிவுசெய்யப்படவேண்டும். நாட்டார் பாடல்களின் உயிர்ப்பே அதன் இசையமைதலில் தானே தங்கியுள்ளது.

இந்தவகையில் “வெள்ளை முக்காடிட்ட அந்த முதிய பெண்ணுருவம் புகைபோல நெளிந்து காற்றில் கரைந்து போனாலும் காற்றை நீவிப் படபடக்கின்ற அந்தக்குரலின் ஓசையைக் கூர்ந்து கேட்கிறேன்...“ என்கிற கவிஞர் அனார்...

மிகுந்த வனப்பான இந்த நிலப்பகுதியின் பாரம்பரிய வாழ்க்கை முறைமைகளில் சொற்பமானவற்றைக் கண்கூடாகக்கண்ட, பெரும்பாலானவற்றை முதியோர்களிடமிருந்து செவிவழியாகக் கேட்டறிந்த கடைசிப் பரம்பரையில் ஒருத்தி“ தானென நம்புகிற கவிஞர் அனார்... அவரின் சொந்த மண்ணின் முதுசொமொன்றினற்கு உயிர்ப்பூட்டுவதற்குப் பொருத்தமான ஒருவரே. அத்தோடு கிழக்கிலங்கைக்கும் இந்தியாவின் கேரளப் பிரதேசத்திற்குமிடையிலுள்ள பண்பாட்டு கலை கலாசார ரீதியான ஒற்றுமைகள் தொடர்பில் ஏற்கனவே பேசப்பட்டிருக்கின்றது. இவ்விரு பிரதேச நாட்டாரியல்கூட பல்வேறு சொற்கள் குறியீடுகள் வடிவங்களை பெருமளவில் ஒத்திருக்கின்றன. இதுதொடர்பான ஆய்வுகள் கிழக்கிலங்கை நாட்டாரியலுக்குள் புதிய பார்வையைப் படியவிடலாம். அத்தோடு ஏற்கனவே தொகுக்கபட்டிருக்கும் தாலாட்டு, ஒப்பாரி, கூத்து, தொழில்பாடல்களும் புதிதாய் மறு பதிப்பிற்குள்ளாக்கப்படுவதும் காலத்தின் தேவையாகும்.

இதயத்துணர்வுகளை ஈர்த்தெடுக்கும் இவ்வாறான அழகிய கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்களைத் தொகுப்பாக்கித் தந்திருக்கிறார் கவிஞர். அனார். மெல்ல மெல்ல மங்கி மறைந்து கொண்டிருக்கும் எமது மண்ணின் முதுசொம்களிலொன்றுக்கு மீளவும் புதுப்பொலிவூட்டியிருக்கும் கவிஞர் அனாருக்கும் இத்தொகுப்பை அழகுறப் பதிப்பித்த “க்ரியா“ வுக்கும் இம்மண் சார்பான என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

-------------------------------------------------------------------
நன்றி : காலம், இதழ் 42, July 2013

வெளியீடு         :

க்ரியா 
புதிய  எண் 2, பழைய  எண்  25
முதல் தளம், 17வது கிழக்குத் தெரு
காமராஜர் நகர், திருவான்மியூர் 
சென்னை - 600 041    
தொலைபேசி: 72999 05950
Email: creapublishers@gmail.com
Website: www.crea.in

நன்றி - இதமி
...மேலும்

Jun 29, 2013

உமாவரதராஜனின் கதைகளுக்குள்ளே நிகழும் உள்மன யாத்திரை - அனார்


‘புறப்படும் அவசரம் உனக்கு 
என்னையும் 
பறக்கச் சொல்கிறாயா பெண்ணே ?
ஒரு பாடல் முடிந்து
மறுபாடல் தொடங்கும்
ஒலி நாடாவின் இடைவெளியில்
என் குரல் உறைந்திருப்பது
உனக்குத் தெரியாதா ?
பின் ஏன் என்னைப் பாடச் சொல்கிறாய்?’

உமாவரதராஜன் அவர்களின் இந்தக் கவிதையை முதன் முதலில் மூன்றாவது மனிதன் இதழில் நான் படிக்க நேர்ந்ததில் இருந்து, காலப்போக்கில் அவரது சிறுகதைகளுக்கு வாசகியாகினேன். கதைகள் என்பவை என்ன ? அது நமக்குள் இருந்து உருவாகின்ற ஒன்றா ? அல்லது பிறரிடம் நாம் காண்கின்றவைகளா ? இல்லையென்றால், நம்மிடமும் இல்லாமல் பிறரிடமும் இல்லாமல் ஒரு அரூபப் பிசாசுபோல கதை ஊரெல்லாம் அலைகிறதா ? கதை என்பது ஒரு வகை திண்மமா ? திரவமா ? அதனால் தானா அவை நம்மை கரையச்செய்கின்றன ? அதனால் தானா ? நமக்குள் பாரமாய் கனக்கின்றன ? இந்த வகையான கேள்விகளுக்கெல்லாம் அப்பால் கதைகள் நம் எல்லோருக்குமான வாழ்க்கையாக இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைதான். வாழ்நாளில் நாமே பார்த்து படிப்பதற்குப் பயப்படுகின்ற கதைகள்தான் நம் உள்ளே இருக்கின்றன. இவைகள்தான் எழுத்தாளனிடம் கலைப்படைப்புகளாக, சிறுகதைகளாக மாறுகின்றன. அனேகமாக சமூகத்தை கேள்வி கேட்கின்ற, பிறர் இன்னல்களைப் படைப்புகளாக்கி, படிப்பவர் மனதை உலுக்குகின்ற அல்லாதுவிடின் கதை எழுதுகிறேன் என்று புறப்பட்டு மற்றவர்களின் உயிரை வாங்குகின்ற, இப்படி பல்வேறு வகைப்பட்ட சிறுகதைகளை எழுதுகின்றவர்கள் நம் மத்தியில் இருக்கின்றனர்.

இவற்றிலிருந்தெல்லாம் உமாவரதராஜன் அவர்களின் சிறுகதை உலகம் தனித்துவமானது, வேறுபட்டிருப்பது. அவர் பின்பற்றுகின்ற கலைவடிவம், மொழி இயல்பு, காட்சிப்படுத்தல், சொல்முறை அனைத்தும் ஆன்மாவின் கண்ணாடி முன் நம்மைக் கொண்டு நிறுத்துபவை. அத்தனை அசாதாரணமான படைப்பு மனம், படைப்புவெளி அவருக்கு வாய்த்திருக்கிறது.

அவர் கேள்வி கேட்பதெல்லாம், அவரிடம் தான். அவருடைய உள்ளத்தின் உலுக்கலில் இருந்துதான் கதைகள் இரத்தமும் சதையுமாக வந்து விழுகின்றன. அவர் நிகழ்த்திக் கொண்டுவரும் உள்மன யாத்திரையில், அந்த நீண்ட தனித்த பயணத்தில் அவர், தன்னுள்ளே, தனக்காக அழுபவராகவும், தன்னை நோக்கியே சிரிப்பவராகவும், அவரது வாழ்க்கைப் போக்கில் பின் நகர்ந்து சென்று வேடிக்கை பார்ப்பவராகவும், கேலி செய்கின்றவராகவும் இருக்கிறார். இத்தகைய உணர்வு பூர்வமான மனம் கொண்டவர்கள்தான் சாதாரண கதையொன்றை உன்னதமிக்க கலைவெளிப்பாடாக ஆக்கத் தகுதி வாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

இவ்வாறான மனப்பதிவிலிருந்துதான் உமாவரதராஜன் அவர்களின் சிறுகதைகளை புரிந்து கொள்ளவும் தொடங்கினேன். என்னைப்பொறுத்தவரை, என்னை ஈர்க்கின்ற எந்தவொரு கலைபடைப்பும் கவிதை அனுபவத்தை எனக்குத் தருவதாகவே அமைந்துவிடுவதுண்டு. என்னுடைய ரசனையானது சுற்றிச் சுற்றி எங்கிருந்தும், கவிதையின் சாற்றினை உறுஞ்சும் தேன்பூச்சி போன்றதுதான். அனுபவமாகட்டும், சிறுகதைகளாகட்டும், இசையாகட்டும், ஓவியமாகட்டும் ஏன் ஒரு புகைப்படமோ, திரைப்படமோ அல்லது நடனமோ, நட்போ, கவிதைத் தன்மை கொண்டிராத, எவையும், எவரும், என் ஆன்மாவுடன் தொடர்ந்துவர முடிவதில்லை. தவிர, அத்தகையவைகள் எவையும் என்னுள்ளே படைப்பூக்கத்தையோ, மன அதிர்வுகளையோ ஏற்படுத்துவதுமில்லை.

உமாவரதராஜன் அவர்களது சிறுகதைத்தொகுப்பை... மீண்டும் படிக்கையில் அவருடைய பல கதைகள் அற்புதமான கவிதை அனுபவத்தை எனக்கு ஏற்படுத்தின. அதில் “கள்ளிச்சொட்டு“ என்னும் அவரது கதையிலிருந்து ஒரு சிறு பகுதி:

“ கோயிலின் பின்புறம் தீக்குழி. அடுக்கபட்ட விறகுகளை விழுங்கியபடி நெருப்பு மோகினி சுழன்று சுழன்று ஆட்டம் போடுகின்றது. அதன் தாபமும் தகிப்பும் எங்கும் பரவுகின்றது. தீக்குழியைச் சுற்றி சில மனிதர்கள் நிற்கின்றனர். நெருப்பில் உதித்தவர் போன்றும், நெருப்புடன் வாழ்பவராயும் அவர்கள் தோற்றம் காட்டினர். விறகுகளை விழுங்கிச் செந்தளலாகி ஒளிர்கிறது நெருப்பு. மட்டையினால் அடித்தடித்து எரி தளலின் உயரத்தை மண்ணோக்கிச் சரிப்பார்கள் அந்த மனிதர்கள். கால் நடைகளை விழுங்கி, அசைய இயலாமல் படுத்துக்கிடக்கும் மலைப்பாம்பை நினைவுபடுத்தும் அந்தியிலே இந்தத் தீக்குழி. அந்தியில் ஊர் எல்லைக் கடலில் நீராடி மஞ்சள் பூசி சங்கு, உடுக்கை, பறை மேளங்களுடன் வருவார்கள். தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலி கொலுவினர். அவர்கள் நெருப்பில் நடப்பார்கள். மறுகரை அடைவார்கள்.

ஜனநெருசலில் தள்ளுண்டு நான் நடந்தேன். மரங்களின் கண்ணீர்த் துளிகளெனச் சருகுகள் பரவிக்கிடக்கின்றன. சருகுகள் நொறுங்க நொறுங்க மென்மேலும் முன்னேறுகின்றன என் பாதங்கள். செக்குமாட்டுத் தனத்துடன் கோயிலைச் சுற்றிச் சுற்றி இலக்கற்ற ஒரு பயணம்.”

இந்த சிறுகதைத் தொகுப்பினுள்ளே மாய வசீகரமாக திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் கள்ளிச்சொட்டு கதையின் ஆரம்பப் பகுதி தான் மேலே குறிப்பிட்டது. கதையின் இறுதிப்பகுதியில் கனவுத் தன்மையான ஒரு காட்சி விபரிக்கப்படுகிறது,

“பலநூறு வருடங்களுக்கு முன்னால் சாத்தப்பட்ட ஜன்னலொன்று பெருமுயற்சியுடன் திறபடுவதைப்போன்ற சத்தம். நான் அண்ணார்ந்து பார்த்தேன். இருட்குகையில் ஒளிரும் மெழுகுவர்த்தி ஏந்தித் தோன்றுகிறாள் ஒருத்தி. முகலாயர் காலத்து மூடுபல்லக்கின் திரைவிலகித் தெரியும் ஒரு பெண்ணின் சோகம் கவிந்த முகம். முதுமையின் படிகளில் அவள் கால் வைத்திருந்தாள். வீட்டுப்படிகளில் அவள் ஏறத் தொடங்கினாள். மேகங்களை கையால் பிடிக்கப்போவதுபோல் அவள் போய்க் கொண்டே இருந்தாள். நான் பின்தொடர்ந்து கொண்டே இருந்தேன். முடிவிடம் தென்படாமல் படிகள், படிகள், படிகள்.”

இப்படித்தான் உமாவரதராஜன் அவர்கள் அவரைச் சுற்றுகின்ற கதைகளை நாம் சுற்றும்படி எழுதுகின்றார். ஆழ்ந்த அர்த்தச் செறிவிற்காவும், ஆர்ப்பாட்டமில்லாத, தலைமுடியை பியித்துக்கொள்ள வைக்காத அழகிய மொழி ஆற்றலுக்காகவும் என்னுள் பதிந்துபோன கதைகள் இவை. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் வெவ்வேறு மனநிலைகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் பயணிக்கின்றன. பயணம் என்பதே கதைக்குள் பயணிக்கின்ற ஒரு அழகிய படிமமாக தொடர்ந்து வருகிறது. அவருடைய சைக்கிள் பயணம் இடம்பெறுகின்ற கதைகளில் அந்த சைக்கிள் உணர்வும் உயிருமுள்ள அபூர்வமான தோழனாக மாறிவிடுகின்றது. அதேபோல மிகவும் கனவு பூர்வமான மழை கதைகளில் பெய்கிறன. ஒரு திரை வடிவத்தின் காட்சி மொழியாக பல தருணங்கள் கதைகளில் இடம்பெறுகின்றன. ஜெனி என்ற கதையில் இவ்விதமான காட்சிகள் நகர்வதை வாசிப்பனுபவத்தில் காணலாம்.

பள்ளமொன்றை நோக்கி நீளும் வீதியும், பசும் புல்வெளியும், மலைத்தொடரும், காலைப்பொழுதும், ஈரம் சொட்டி நிற்கும் கொய்யா மரமுமாக ஜெனி ஒரு மறக்க முடியாத கதையாக மாறிப்போகிறது எங்கள் மனதில். கைகளில் புகைந்தபடி இருக்கும் மந்திரக்கோல்போன்ற சிகரெட்டுடன் உரையாடுகின்ற ஜெனியின் அம்மா, அக்கதையில் வரும் ரயில் பற்றிய நினைவுகள், சூரியனின் தலை கடலினுள் இருந்து மெல்ல மெல்ல மேலெழுவதைத் தரிசிக்க கரையில் அதிகாலை வந்து குந்திவிட்ட பெண்போல தோற்றமளிக்கும் ஜெனி, அனைத்தும் கூடி, அக்கதையானது மெல்லிய துயர இசையாக ஒலிப்பதை உணரமுடிகின்றது.

அடுத்ததாக உமாவரதராஜன் அவர்களது கதைகளில் பல குணாதிசயங்கள் கொண்ட பெண்கள் வருகின்றனர். எனக்கு விருப்பமான பெண்பாத்திரமாய் அவருடைய அம்மா வருகின்ற இடங்கள் அல்லது அந்தப் பாத்திரங்களில் வருகின்ற அம்மாவைப் பற்றிய எண்ணங்கள், பாசாங்கற்ற தெளிவான குறிப்புகளாகும். அவை மகனின் பாசமாக மட்டும் இருப்பதில்லை.

தொகுப்பிலுள்ள பிற கதைகளை வெவ்வேறு பார்வைகளோடும் கருத்துக்களோடும் மற்றவர்கள் அணுகமுடியும். 1974இல் எழுதப்பட்ட முதல் கதையில் தொடங்கி முக்கியமான காலகட்டங்களான 80கள் மற்றும் 90களிலும் பல முக்கிய கதைகளை எமக்களித்திருக்கிறார். சவால்கள் மிகுந்த அக்கால கட்டங்களைத் தாண்டி இன்றைக்கும் இக்கதைகள் தன்நிகரற்ற தன்மைகளோடு ஒளிர்கின்றன.

இத்தொகுப்பில் காலத்தால் அழிக்கமுடியாத ஒரு கதையாக ‘அரசனின் வருகை’ சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. கணக்கற்ற துயரின் முகமாக, ஓலமாக, மனசாட்சியாக இருக்கும் அக்கதையில் இன்றும் பொருந்திப்போகும் ஒரு பகுதி

“பகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான். கண்கள் தோண்டப்பட்ட நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் ‘எங்களுக்கோர் நீதி சொல்’ என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனர். அரைகுறையாக எரிந்த தெருச்சடலங்கள் வளைந்தெழுந்து ‘நாங்கள் என்ன குற்றம் செய்தோம்’ என முனகின. நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியை கிணற்றுக்குள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக்கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும். குட்டித்தாச்சி ஆட்டின் வயிறுமீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச்செல்லும். மயிர்உதிர்த்த தெருநாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்”

முதிர்ச்சி மிகுந்த சிந்தனை வெளிப்பாடு அன்றே அவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது. இன்றைய புதியவர்களும் நாளைய பரம்பரையினரும் மதிக்கவும் ரசிக்கவும் தகுதிவாய்ந்த கலைவெளிப்பாடு என்றால் மிகையாகாது.

பல திசைகளில் பறக்கின்ற ஒரு ராட்சதப் பறவையாகவே உமாவரதராஜனின் படைப்புமனம் வாழ்வினது திசைகளை, இயற்கையின் வெளியை வியாபித்து சிறகு விரித்திருக்கிறது. இங்கு நான் குறிப்பிடுவது மிகச் சிலவற்றையே ஆகும். வாழ்க்கை மீதான நம்பிக்கை, மனிதர்கள் மீதான நம்பிக்கை, நம்பிக்கை மீதான தோல்விகள், இவற்றின் மீதான அளவுகோல்கள் என்பனவற்றில் கேள்விகளை எழுப்புகின்றன அவருடைய சிறுகதைகள்.

ஆனால் நாம் அனைவரும் மனிதன் மீதான நம்பிக்கை இன்மையை மறுபடி மறுபடி எழுதிக் கொண்டிருந்தாலும் அதே மனிதர்கள் மீதே நம்பிக்கை வைக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம் என்பதை வலியுறுத்தும் கதைகள் அவருடைய தொகுப்பில் இருக்கின்றன.

கதைகளின் உண்மையை, உண்மையின் கதைகளை அவருக்கான இன்றியமையாத அழகிய மொழியினூடாக எழுதியிருக்கின்றார். இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதைகளுமே ஒவ்வொரு ஜன்னல். ஜன்னலைத் திறந்து பார்த்தால் அங்கு நம் கண்களுக்கு பழைமையின் கறுப்பு வெள்ளை நிறமோ, கனவின் நிழல் குவியல்களோ, பருவத்தின் புன்சிரிப்போ, இமைக் கந்துகளில் விழக்காத்திருக்கும் கண்ணீரோ தெரியக்கூடும் அல்லது கீறலில் இருந்து பெருகும் குருதியோ இன்னும் வேறு ஏதேனும் ஒன்றோ....

நன்றி - இதமி
...மேலும்

Jun 28, 2013

"ஆறாவடு" - மயூ மனோ


"87 இல் தொடக்கி 2003 வரையான இந்த இரண்டு 'அமைதி"க் காலங்களுக்கு இடையே இந்த நாவலின் கதை நகர்கிறது." என்று தன்னுரையில் குறிப்பிடும் சயந்தனின் வரிகளுடன் நாவலுக்குள் நுழைகிறேன்.

"நீர்கொழும்புக்கு அருகேயான கடற்கரையில் குந்தியிருந்து இத்தாலிக்கு எந்த ரூட்டால் போவது என்று இவன் யோசித்துக் கொண்டிருந்தபோது இரவாகியிருந்தது."

இப்படித்தான் நாவல் தொடங்குகிறது. ஆரவாரங்கள், சொற்களால் கட்டப்படும் அலங்காரத் தோரணங்கள் இன்றி ஆரம்பிக்கும் நாவல் முழுவதும் எங்கும் மிகையான அலங்கார சொற்களின் தடங்கள் இல்லை.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்தகாலத்தில் விடுதலை இயக்கமொன்றில் உயிர்ப்பயம் காட்டப்பட்டுக் கட்டாயமாக இணைக்கப்பட்டு பின் விடுதலையாகி விடுதலைப்புலிகளுடன் இணையும் அமுதன் என்ற கதாபாத்திரத்தின் அனுபவங்களையும், அவன் சார்ந்த மக்களின், ஊரின் கதையையும் ஆறாவடு பேசுகிறது.

"யாழ்ப்பாணத்திற்குப் பாதை திறக்க என்று புறப்பட்ட ஆமி, கடைசியில் எந்த பஸ்ஸிற்கு டிக்கெட் கிடைக்கிறதோ அங்கேயே போகலாம் என்ற மாதிரியான நினைப்பில் நிலை கொண்டிருந்தான். இங்காலே சனங்கள் நிலைகொள்ளாமல் இருந்தார்கள்." பக்-74


"ஓர் இரவு நேரச் செய்தியைக் கோகுலன் வாசித்துக் கொண்டிருந்தபோது அருகில் குண்டுவிழும் சத்தங்கள் கேட்டன. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு கோகுலன் மீண்டும் செய்தியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்."  பக்-75

இப்படியாக நாவல் முழுவதும் ஒருவித எள்ளல் தொனியுடன் கதை சொல்லும் கதைசொல்லி சலிப்படையாது வாசிப்பவரை தன் கதையுடன் பயணிக்கவைக்கிறார். எள்ளல் சுவையுடன் படைப்புக்களை எழுதுவது ஆசிரியரின் தனித்தன்மையாக அறியப்பட்டிருப்பினும் இந்த நாவலில் எழுத்தாளரால் கையாளப்பட்ட மொழியானது நாவல் தொட்டு நகரும் அரசியல் நிகழ்வுகள், போராட்டாங்களுக்கிடையிலான மக்களதும், போராளிகளதும் வாழ்க்கை போன்ற கனதியான உணச்சிபூர்வமான தளங்களுக்கிடையில் மிகவும் நுணுக்கமாகவும், இலகுவாகவும் பயணிப்பது மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. நாவலின் ஏதோ ஒரு பகுதியிலாவது பாத்திரங்களின் வார்த்தைகளில், நினைவுகளில், அனுபவங்களில் ஈழத்துப் பிரதிநிதியாக வாசகரைப் பொருத்தக்கூடியதாக இருப்பதும் நாவலை பலப்படுத்துகிறது.

ஈழப் படைப்புலகில் வெளிவரும் படைப்புக்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கென்று அடையாளப்படுத்தப்பட்ட அரசியலூடாகவே அணுகப்படுவது கண்கூடு. படைப்புக்களை விடுதலைப்புலிகள் ஆதரவான படைப்புக்கள் அல்லது எதிரானவை என்ற இரண்டு வகைக்குள்ளாக அவை அடக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும் இலக்கிய உலகில் நடந்து கொண்டிருக்கும் தொடர் நிகழ்வுகள் என்றால் மறுப்பதற்கில்லை. இந்த சூழ்நிலையில் ஈழத்துப் படைப்புக்களாக வெளிவந்த ஷோபா சக்தியின் "கொரில்லா" மற்றும் விமல் குழந்தை வேல் அவர்களின் "கசகரணம்" ஆகிய நாவல்கள் அரசியல் சார்ந்த எழுத்துக்களாக மிகவும் கவனிக்கப்பட்டன.

நாவல்கள் பேசும் வரலாற்று, அரசியல் நிகழ்வுகள் தவிர்ந்து அந்த சூழலுக்குள் வாழும் சாதாரண பொது மக்களது கதை எந்தளவுக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற கேள்வி இருந்து கொண்டேயிருக்கும் நிலையில் சயந்தனின் "ஆறாவடு" அதனை தன் பங்கிற்கு செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக விடுதலைப்புலிகளுக்கு மறைமுகமாக உதவிகள் செய்தும், அவர்களைக் காப்பாற்றியும் வரும் மக்கள் இடம் பெயரவேண்டுமென்று வெளிக்கிடும்போது தங்களிடையே பயணிக்க நேரிடும் காயப்பட்ட போராளிகளின் வாகனத்திற்கு "நீங்களும் எங்களோடைதான் வரோணுமே.. மேலாலை அவன் கண்டானென்றால் நாங்களும் சிதறித்தான் சாக வேணும்" என்று ஒரு உரையாடலாக நாவலாசிரியர் அதை பதிவு செய்கிறார். மக்களது மனநிலை மாற்றங்களையும் அவர்களது உடனடித்தேவைகளின் நிமித்தம் தங்கள் முடிவுகளை எடுத்துக் கொள்ளும் தன்மையும் நாவலின் பல பகுதிகளில் உரையாடல்கள், சம்பவங்களூடு பதியப்பட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுக்கும் மக்களுக்கும் இருந்த உறவின் தன்மைகளை வேறு வேறு இடங்களில் சொல்லிப்போகும் ஆசிரியரின் இன்னொரு உருவந்தான் நேரு ஐயரோ என்ற எண்ணமும் தோன்றி மறைகிறது.

"பள்ளிப்பிள்ளைகளை ஏன் இணைக்கிறீர்கள்?  "நீயே சொல்லு.. நீங்கள் செய்றதெல்லாம் சரியெண்டு நினைக்கிறியோ? போன்ற கேள்விகளோடும் "குடை கொடி ஆலவட்டம் செங்கோல் என்று சனங்களிட்டை இருந்து நீங்கள் தூரப் போய்க் கொண்டிருக்கிறியள்" என்று மக்களின் பிரதிநிதியாய் கருத்துக்களோடும் விடுதலைப்புலிகளை நெருங்கும் நேரு ஐயாவிற்கு போராளியாக இருக்கும் அமுதனின் பதில் பெரும்பாலும் "ஐயா, இது நெருக்கடிக் காலம், அண்ணைக்கு எல்லாம் தெரியும், மேலிடத்தில் இதைப்பற்றிக் கதைக்கிறோம்" என்றவாறாக இருக்கிறது.
"ஆறாவடு" நாவல் பேசும் அரசியல் பல தளங்களில் நிகழ்கிறது. மக்களுக்காக என்று உருவாக்கப்பட்ட இயக்கங்களும், அரசியல் அமைப்புக்களும் மக்களிடமிருந்து விலகிப்போன தருணங்களை இந்தவகையில் நேரு ஐயாவின் பாத்திரப்படைப்பில் படைப்பாளி சரியாகவே கணித்திருக்கிறார். சகோதரப்படுகொலைகளை அமுதனின் அனுபவங்கள் மூலம் காட்சிப்படுத்தும் படைப்பாளி இன்னொரு பத்திரமான பெரியையா மூலம் இப்படி சொல்கிறார். "அவனுக்கு நினைவு தெரிஞ்சு இது தான் ஆமி, இதுதான் இயக்கம், இதுதான் துவக்கு என்று அறிய முதலே நீங்கள் மற்ற இயக்கங்களை முடிச்சுப் புதைச்சிட்டீங்க." போர் நிறுத்தக் காலப்பகுதியில் நேரு ஐயாவின் நடவடிக்கைகளை விபரிக்கும் போதும் மக்களின் மனநிலையே காணக் கிடைக்கிறது. இவ்வாறாக புலி எதிர்ப்பு, புலி சார்பு என்று வகைப்படும் இலக்கியங்களுக்குள் அடங்கிவிடாமல் மக்கள் பார்வையிலிருந்தும் அரசியலைப் பதிந்திருப்பது நாவலின் சிறப்புக்களில் ஒன்றெனலாம்.

தொடர்ந்து, நாவலின் பாத்திரப் படைப்புக்களிலும், சம்பவங்களின் பதிவுகளிலும் பல நேரங்களில் தொடர்பிலாமலே இருக்கின்றன. அதாவது நாவல் ஒன்றிற்கு அடிப்படையாக இருக்கும் பாத்திரங்களை உருவாக்குதல், அவற்றை அவர் சார்ந்த உறவு, மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் கட்டியெழுப்புதல், கதை நிகழுமிடம் பற்றிய வர்ணனைகள் போன்றவற்றை "ஆறாவடு" தளர்த்தியிருக்கிறது. நாவலில் இந்திய இராணுவத்தால் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தேவி, போராளிகளுக்கு உதவி செய்து எதிர்பாராமல் குண்டொன்றை வெடிக்க வைத்து இறக்க நேரிடும் நிலாமதி, தாயை வீட்டில் விட்டு இடம்பெயர்ந்து மீண்டும் தாயைத் தேடி வரும் போது ஊனம் வடியும் எலும்புக்கூடை கண்டடையும் சிவராசன், சாதி பற்றிப் பேசும் கோயில் சொந்தக்காரரை போராளிகளினூடு தண்டிக்கும் இளைஞன் என்று பாத்திரங்கள் தன்னியல்பாக நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் இணைந்து அந்தப் பகுதியிலேயே விடைபெற்றுப் போகிறார்கள். சிறுகதை ஒன்றுக்கு இருக்கக்கூடிய கட்டமைப்பு இயல்புகளுடன் அமைந்திருக்கும் இந்தப் பகுதிகளை தனித்தனி சிறுகதைகளாகக்கூட அணுக முடிகிறது. நாவலின் இந்தப் பகுதிகளை மக்களின் வாழ்க்கையாகப் பார்க்க முடியும் அதே நேரத்தில் ஒட்டு மொத்த நாவலையும் நுண்ணிய அரசியல் இணைத்து நிற்கிறது.

நாவலின் முழுதும் பல வரலாற்று சம்பவங்கள் விரவிக் கிடக்கின்றன.அவற்றைத் தரவுகளாகத் தராமல் சம்பவங்களுடன் பாத்திரங்களுடன் பொருத்திப் புனைவினூடு எழுதியிருக்கக் காணலாம். உதாரணமாக "நல்லவேளையாக அதற்கு ஐந்து நாட்கள் பிந்தி சிங்கக்கோடியை ரத்வத்தை ஏற்றினார். சிங்கக்கொடிக்குப் பக்கத்தில் நந்திக்கொடியொன்றை தம்பு இராமலிங்கம் ஏற்றினார். நான்கு மாதம் பிந்தி தென்மராட்சியிருந்தும் வடமராட்சியிளிர்ந்தும் இயக்கம் வெளியேறியது. சனங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் போனார்கள். அதற்கு மூன்று மாதம் பிந்தி தம்பு இராமலிங்கத்தை வீட்டில் வைத்து இயக்கம் சுட்டது. அதற்கு ஒரு மாதம் பிந்தி செம்மணி செக்பொயிண்டில் கிருசாந்தியின் சைக்கிளை இராணுவம் மறித்தது."  தொடர்ந்து நடந்த சம்பவங்களின் தரவுகள். ஆனால் நாவலின் ஒரு பகுதியின் தொடர்ச்சியாக இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனினும் இத்தனை விபரங்களும் முக்கியமானவை, அவற்றைக் குறிப்பிடவேண்டுமென்ற பதற்றத்தைக் காணக்கூடியதாகவும் இருக்கிறது.

மேலும், இறுதியாக வரும் பகுதிகளில் கடலில் தங்களுடன் பயணிக்கும் சிங்களப் போராளிகளின் உணர்வுகளையும் உரையாடல்களூடு பதிந்திருக்கிறார் படைப்பாளி. வறுமையின் நிமித்தம் இராணுவத்தில் இணையும் இளைஞர்களின் எண்ணமெல்லாம் தங்கள் தங்கள் குடும்பத்துக்குத் தங்களால் கிடைக்கப்போகும் சம்பளத்தைப் பற்றியதாக இருக்கிறது. அமுதன் போரில் பங்கேற்றபோது கைப்பற்றப்பட்ட இராணுவ முகாமில் கிடக்கும் இராணுவத்தினரின் உடைமைகளுக்குள் பொதித்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தையின் படத்தையும், துணைகளின் படங்களையும் சாட்சிகளாக சொல்லிப் போகும் நாவலாசிரியர் உயிருக்குப் பயந்து கடைசி முயற்சியை செய்து நகரும் இராணுவ வீரன் ஒருவனைத் தப்ப விட்டுத் தனது பாவக் கணக்கைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறார். தொடர்ந்து பண்டாரா என்ற சக பயணி மற்றும் முன்னாள் இராணுவம் என்ற பாத்திரத்தினூடாக "பண்டாராவுக்கு புலிகளின் பெரிய தலைவர்களின் நினவு நாட்கள் ஓரளவுக்கு மனப்பாடமாயிருந்தன. அன்றைய நாட்களின் விடியற்காலையில் புலிகள் புகுந்து தாக்க நேரலாம் என்பதால் தப்பிவிடுவதட்கு தயாராய் இருக்க வேண்டுமென்று அவன் பிரார்த்தித்துக் கொண்டான்" என்று நாவலாசிரியர் எழுதிச் செல்கிறார். முன்போருக்கால் அமுதனின் வார்த்தைகளாக "சண்டையில் நிற்கின்ற நேரங்களில் காயம் படலாம் என்றோ செத்துப் போவேன் என்றோ நினைப்பெதுவும் எனக்கு வருவதில்லை. சண்டைகளுக்குப் பிறகு யோசிப்பதுண்டு. வீரச்சாவடைந்த போராளிகளின் இறுதி ஊர்வலங்களில் அந்தச் சவப்பெட்டிகளில் நானே படுத்திருப்பது போன்ற நினைவு ஓடும். அப்பொழுது கண்களில் நீர் முட்டிக்கொண்டு வரும். நான் சாவினை விரும்பவில்லை என்று நினைத்துக் கொள்வேன்" என்று எழுதப்பட்டிருக்கிறது. போர்க்களத்தில் எதிர் எதிர் காலங்களில் நிற்கும் இரு வேறு தரப்பட்ட மனிதர்களின் உணர்வுகளைப் பதிந்த விதத்தில் நாவலாசிரியர் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

புலிகள் இயக்கத்தில் களப் போராளியாய் இணைந்து கால் ஊனமுற்று அரசியல் பகுதியில் இருக்கும் அமுதன் தனது காதலின் நிமித்தம் இயக்கத்திலிருந்து விடுபட முயற்சிக்கும்போது நேரு ஐயா முன்வைத்த சில கேள்விகள் அவனுக்கு சரியெனப்படுகிறது. "காதல் ஒரு தனிமனிதனின் சுதந்திரமில்லையா என்ற யோசனை அன்றைக்குத்தான் முதலில் தோன்றியிருக்கவேண்டும், முன்பொரு நாள் நேரு ஐயா சொல்லியிருந்தார். நீங்கள் இனத்தின்ரை சுதந்திரத்திற்காக என்று சொல்லிக்கொண்டு தனி மனிதரின்ரை சுதந்திரங்களிலை தலையிட்டுத் தடுக்கிறீங்கள். அது சரியில்லை."

"அண்ணைக்கு எல்லாம் தெரியும்" என்று பல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அமுதன் இந்தப் பொழுதில் "அண்ணைக்கு எல்லாம் தெரியுமா என்ற கேள்வி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றுவது ஆச்சரியமாயிருந்தது." என்று சொல்கிறார். எனக்குத் தோன்றும் கேள்வியெல்லாம் போராளிகள் புலிகளை விமர்சிக்க அல்லது அவர்களை/கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வெளிக்கிடும் சந்தர்ப்பங்கள் எப்போது நேர்கின்றன. இயக்கத்திலிருந்துகொண்டே இதனை செய்து கொள்ள குறைந்தளவு சாத்தியப்பாடுகள் இருந்தபோதும் காதல், குடும்பம் போன்ற தனிப்பட்ட சுதந்திரத்துக்குள் இயக்கம் நுழையும்போது தீவிரமாக விமர்சிக்க நேரிடுவதாக முன்வைக்கப்படும் பார்வைக்கு அமுதன் பாத்திரம் வலுச் சேர்க்கிறதா? தான் இயக்கத்திலிருந்த காலத்தில் இயக்கத்தை நோக்கி வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒரே பதிலில் கடக்கும் அமுதன் தன்னை நோக்கி இயக்கத்தின் முடிவு எறியப்பட்டபோது, கேள்வி கேட்கும் சுதந்திரத்தை வழங்க வேண்டுமென்றும், மக்களின் விருப்பத்தையும் அவர்களின் முடிவையும் கேட்டபிறகே இயக்கம் தங்கள் முடிவுகளை முன்வைக்க வேண்டுமென்றெல்லாம் நேரு ஐயா சொன்னவற்றை நினைவுகூருகிறான்.

"இந்த உலகத்தில், இயக்கம் இல்லையென்று ஒருதடவை கண்ணை மூடி யோசித்துப் பார்த்தேன். நீயும் அகிலாவும் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறீர்கள்" என்று நேரு ஐயாவால் சொல்லப்படுவதாக கற்பனை செய்யும் அமுதன் என்ன சொல்ல முற்படுகிறான்?

இந்த நாவலின் போதாமையாக சில பகுதிகள் விரிவாக இல்லாதிருப்பதை சொல்லலாம். அமுதனின் தாயாரையும், தங்கையையும் அறிமுகப்படுத்தும் கதாசிரியர் அவர்களை இடப்பெயர்வில் கைவிட்டு நகர்கிறார். போராளி தன் குடும்பம் பற்றிக் கவலைப்படக்கூடாது என்பது போல நினைக்கும் அமுதனின் மனப்பான்மைக்காக அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்றாலுங்கூட இன்னும் இடம்பெயர்ந்த மக்களின் அவதிகள், வலிகள், விடுபட்ட உறவினர்கள், புலம்பெயர்ந்த உறவுகளுக்காக வருடக்கணக்காகக் காத்திருந்த/காத்திருக்கின்ற மக்கள், புலிகளால் இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம் மக்கள் போன்ற மக்களின் இன்னொரு வாழ்க்கைக் குறிப்புக்கள் பற்றிப் பதிந்திருக்கவில்லை. இருப்பினும் நாவலில் எத்தனைப் பதிவது, எதனைத் தவிர்ப்பது என்பது நாவலாசிரியனின் தெரிவு என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உயிருக்கு அஞ்சி ஆபத்தான வழியில் நாட்டை விட்டுத் தப்பும் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள், தமிழ் இளைஞர்கள் பயணிக்கும் அதே வள்ளத்தில் அவர்களுடன் களத்தில் எதிரியாகப் போராடிய, வாழ்க்கையில் பெரும்தாக்கங்களை ஏற்படுத்திய இராணுவத்தின் பிரதிநிதிகளும் பயணிக்க நேரிடுவதை அவர்களுடன் சில உரையாடல்களையே நாவலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இந்திய ராணுவத்தின் வன்முறைகள், தமிழ் விடுதலைக் குழுக்கள், அவர்களின் அரசியல், விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என்று எல்லாத்தளங்களையும் தொட்டுவிடும் படைப்பாளி நாவலை இன்னும் மெருகேற்றியிருக்கலாமோ என்ற அவாவும் தோன்றுகிறது. கடலில் வள்ளங் கவிழ்ந்து அமுதன் அணிந்திருந்த செயற்கைக்கால் எரித்திரிய முன்னாள் போராளிக் கிழவனுக்கு கிடைப்பதாக நாவல் முடிவடையும்போது, முடிவில் படைப்பை முடித்துவிடும் அவசரத்தன்மையையும் காணமுடிகிறது.

"ஆறாவடு" என்னும் சொல்லின் அர்த்தத்தைப் பார்த்தால், வடு எனப்படுவது காயம் ஆறியபிறகு ஏற்படும் தழும்பை சொல்வது. இதைத் தெரிந்து கொண்டு எழுத்தாளர் மற்றும் தலைப்பை முன்மொழிந்தவர்கள் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தார்களா, இல்லை அவர்கள் அறியாமல் இந்தப் பொருளுடன் தலைப்புத் தேர்ந்தெடுக்கப்பட்டதா? என்ற கேள்விக்குப் பதிலை எழுத்தாளரிடமே விட்டு விடுகிறேன்.

இருப்பினும் ஒரு சிறந்த படைப்பின் மூலம் எங்கள் கதையை தன் பங்கிற்கு சீரிய கதைசொல்லியின் ஆளுமையுடன் சொல்லியிருக்கும் சயந்தனிற்கு வாழ்த்துக்கள்.

இணையம் மூலம் நாவலை வாங்க : வடலி

சமீபத்தில் "தமிழினி" பதிப்பகத்தினூடு வெளியாகிய எழுத்தாளர் சயந்தனின் "ஆறாவடு" நாவல் வெளியீடு 04 - மார்ச் - 2012 அன்று கனடாவில் நடந்த போது வாசிக்கப்பட்ட பதிவு.
...மேலும்

Jun 27, 2013

மீண்டுமொரு பாலியல் வல்லுறவு; அர்த்தமற்ற உங்கள் பிரசங்கங்களை தொடங்குங்கள் ! - குணாமகிழ்


கலாச்சாரத்தை விழுந்து விழுந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் காவல் தெய்வங்களே!  நீங்களெல்லாம் அறிவுரை கூறவும், பிரசங்கத்தை பொழியவும் மீண்டும் மனிதத்திற்கு எதிரான குரூரங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன.”

மும்பையில் 23 மூன்று வயதான பெண் பத்திரிக்கையாளர், ஐந்து மனிதவடிவு மிருகங்களால் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த முறை பாதிக்கப்பட்ட பெண் எந்த ஆண் நண்பனுடனும் சினிமா பார்க்க செல்லவில்லை, 9 மணி இரவிற்கு மேல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கவில்லை, சமூகத்தின் பழிபோடும் கயமைத்தனத்துக்கு இரையிடும் வகையில் கவர்ந்திழுக்கும் உடையணியவும் இல்லை. தனது பணியை சிரத்தையுடன் செய்ய  சக பணியாளருடன்  சென்றவள்தான்.

இனி இந்த இழிசெயலில் ஈடுபட்ட மிருகங்களுக்கு பரிந்து  பேச  காரணங்களை கண்டுபிடியுங்கள். மேலும் அப்பெண்ணுக்காக  ப்ரார்த்தனையில் இறங்குங்கள், மெழுகுவர்த்தி ஏந்தி மெளனம் கடைப்பிடித்து உருப்படாத வேலையை செய்துகொண்டிருங்கள்.

ஏழு மாதங்களுக்கு முன்பு, தில்லியில்  நண்பகலில் கணவருடன்  உத்தர்காண்டை நோக்கி பயணம் செய்த ஒரு பெண்ணை, 20 வயதிற்கும் குறைந்த இரு காமம் தோய்ந்த மிருகங்கள் வல்லுறவுக்கு     உள்ளாக்கியிருக்கின்றன. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அப்பெண்ணை, மீண்டும் தேடிச் சென்று, கணவரில்லா வேளையில் வீட்டினுள் நுழைந்து மீண்டும் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த கேடு கெட்ட வெறியை விளக்க வார்த்தைகள் இல்லை.

இதிலிருந்தெல்லாம் மீண்டுவர, என்ன விதமான தற்காப்பு கலைகளை கற்றுத்தரப்போகிறது  இந்த  சமூகம்? பெண் இத்தகைய கொடுமைகளில் ஆட்படாமல் இருக்க, உடையில், நேரம் தவறாமையில், அடக்கத்தில் மற்றும்  ஒழுக்க நடத்தைகளில்  இன்னும் எத்தனை  ஆயிராம் அறிவுரை விளக்கங்களைக் கொடுக்கப் போகிறீர்கள்?

உண்மையில், அந்த அறிவுரை விளக்கங்கள் பெண்களை நோக்கி இருப்பதிலிருந்துதான் தொடங்குகின்றன, இந்தக் கொடுமைகளுக்கான நியாயங்கள்.

சாலையில் எதேச்சையாக பேசிக்கொண்டு கடந்து செல்லும் ஆணும் சரி, ஆன்மிகத்தை கூறுகள் போட்டு காம்போ பேக்கேஜ் ஆக விற்றுக்கொண்டிருக்கும் கார்ப்பரேட் சாமியார்களும் சரி, பெண்ணின் உடை, தற்காப்புக்கான துரித அறிவு, மந்திரங்கள் ஜெபித்தல், பின்தொடர்ந்து வரும் காமவெறி மிருகத்திடம், ’அண்ணா’ என்றழைத்து சகோதரத்துவம் கொண்டாடுதல்  என எந்தவித குற்றவுணர்வுமில்லாமல் மடத்தனமும்,குரூரமும் நிறைந்த கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருப்பார்கள்.

‘அண்ணா’ என்றழைக்கச் சொன்ன சாமியாரை, அப்பாவென்றழைத்த குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகி நிற்கிறது. எப்போதாவது நடந்தால்தான் செய்தி, அந்த வகையில் பாலியல் சீண்டல்களெல்லாம், இப்போது முதல் பக்கத்திலிருந்து, நடுப்பக்க செய்திகளாகி தன் முக்கியத்துவம் இழந்துவிட்டன.

maattru mumbai rape
கம்ப்யூட்டர் உதவியுடன் வெளியிடப்பட்ட புகைப்படங்கள்
இப்போது, ஒரு பத்திரிக்கையாளர் பாதிக்கப்பட்டதால், நாளை இந்தச் செய்திகள் தலைப்பாக இடம்பெறலாம். துரிதகதியில் செயல்பட்ட காவல்துறை, வல்லுறவுக் குற்றவாளிகளின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறது. ஒரே இரவுக்குள் எல்லோரையும் கைதுசெய்து சிறையில் அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

இப்பொழுதெல்லாம் காலம் மாறிப்போச்சு, யார் பிரிவினை பார்க்கிறார்கள்?பெண்கள் விண்வெளி வரை செல்கிறார்கள், பெண்கள் தனக்கு தரப்படும் சுதந்திரத்தை தவறாக உபயோகிக்கிறார்களென, பெண்ணிற்கான இயல்பான மதிப்பை, சுதந்திரத்தை பிச்சை போட்டுக்கொண்டிருக்கும் சமூகமிது.

தாம்ஸன் ராட்டர்ஸின் பெண்கள் உரிமைக்கான சட்டப்பூர்வத் தகவல் மற்றும் சட்ட ஆதரவு அமைப்பின்(Global hub for women’s rights) சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு இது.

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள்  விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள். இவர்களில் 40சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவானவர்கள்.20ம் நூற்றாண்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள்பெண் சிசுக்கொலை, கருச்சிதைவு  போன்ற காரணங்களால் இறந்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட இரண்டில் ஒருபெண்ணுக்கு 18 வயதுக்கு முன் திருமணம் நடக்கிறது.
2009ம் ஆண்டு உலகில் நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவங்களில் 90 சதவிகிதம் இந்தியாவிற்குள்நடந்தவையாகும். கட்டாயத் திருமணங்களும் பெண்களுக்கு எதிரான முக்கியக் கொடுமைகளில் ஒன்றாகக்கருதப்படுகிறது.
தேசியக் குற்றப்பதிவு மையம் (NCRB)  வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்தியாவிலிருக்கும்பெருநகரங்களில் டெல்லிதான் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத இடம். 2011ம் ஆண்டில் பெண்களுக்குஎதிரான  குற்றச் செயல்கள் அதிகம் பதிவாகியுள்ளதாக என்.சி.ஆர்.பி. கூறியுள்ளது.
கடத்தல்கள் 31.8 சதவிகிதமும் வரதட்சணை இறப்புகள் 14 சதவிகிதமும் நிகழ்ந்துள்ளன. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 53 நகரங்களில் பாலியல் வன்கொடுமை 17.6சதவிகிதமும் ,ஒட்டுமொத்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது பெண்கள் மீதான வன்முறை கடந்தஆண்டைவிட 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் தலைநகரில் காவல்துறைக்கு எதிராக 12,000வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது கூடுதல் தகவல். பாதுகாக்க வேண்டிய காவல்துறையாலேயே பெண்கள்வன்முறைக்கு உள்ளாக்கப்படும் நாட்டை, பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடு என அழைப்பதில்ஆச்சரியமில்லை.
இது ஒருபுறமிருக்க, இந்திய மாநிலங்கள் பலவும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு பெயர்போனவை. குழந்தைப்பேறுசமயத்தில் ரத்தசோகையால் இறக்க நேரிடும் பெண்களின் சதவிகிதம் மிக அதிகம். இன்னொருபுறம்  பெண்கள்பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள்.
பெண்களுக்கான வரதட்சணைக் கொடுமை இன்றும் இருந்துவருவதால் பெண்சிசுக் கொலை தொடர்ந்துநிகழ்ந்து வருகிறது. ஆண் குழந்தையின் மீதான ஆசையில் தந்தையின் கொடுமையால் பலியானபெங்களூருவைச் சேர்ந்த மூன்றுமாதக் குழந்தை நேஹா அஃப்ரீனை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்கமுடியாது.
ஆண்களைச் சார்ந்தே பெரும்பாலான பெண்கள் வாழ்கிற சூழ்நிலையில் ஆண்களுக்கு ஏற்படுகிற அனைத்துப்பிரச்சினைகளும், பெண்களையும் மனரீதியாகப் பாதிக்கின்றன. இந்தியாவில் தற்கொலைகள்அதிகரித்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் நிகழும்  தற்கொலைகளில் 30சதவிகிதம் பெண்கள் செய்து கொள்பவை. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் அழிக்கப்பட்ட பெண்சிசுக்களின்  எண்ணிக்கை ஒரு கோடியேஇருபது லட்சம்.
நமது நாட்டில் ஆண்டுதோறும் ஒரு கோடியே பத்து லட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. இதில் என்பது லட்சம் பெண்சிசுக்கள்.
பாலியல் ரீதியாக மட்டுமல்ல, வார்த்தைகளிலும் கூட வன்மம் தெறிக்காமல் தடுக்க வேண்டுமானால் – அதனை ஒரு பெண்ணிடமிருந்து தொடங்க முடியாது. பெண்ணை சக மனுசியாய்ப் பார்க்கும்  இயல்பை வார்த்தெடுக்காமல் மதமோ, ஆண்மைத்திமிரோ, பண்பாடோ கற்றுத்தந்த போதனைகளை பெண்கள் மீது ஏற்றி ஏற்றி தன் அசிங்கங்களை மறைத்துக் கொள்ள முடியாது.

ஒரு வழக்கில் உடனடியாக செயல்படுவதல்ல இப்போதைய தேவை. ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு மனிதனும் சமமாக வாழும் தேசத்தை உருவாக்குவதே இன்றைய தேவை.
நன்றி  - மாற்று
...மேலும்

Jun 26, 2013

ஆசிட்டுக்கு தடை! வன்கொடுமைக்கு அனுமதியா ? - குணாமகிழ்


‘வினோதினி’ என்ற பெயரை நாம் அத்தனை விரைவில் மறந்துவிட முடியாது. கோரமான ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி, மிகுந்த துடிதுடிப்புக்கு பிறகு அவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும்  பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களும், தனி மனிதர்களும் பெண்ணுக்கு உதவி செய்யபறந்தனர். வினோதினி மரணமடைந்துவிட்டார். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக தாக்கப்பட்டாரோ அந்தக் காரணங்கள் இந்த சமூகத்தில் இம்மிபிசகாமல் இருந்துகொண்டுள்ளன.

வினோதினி தாக்குதலை முன்னிட்டு நடந்த விவாதங்கள் ஆசிட் வீச்சை கட்டுப்படுத்துவது எப்படி? என்ற திசையில் சென்றன. நீதிமன்றங்களும்இதே திசையில் முழங்கின. ஆனால், இதுவரை இந்திய சமூகம் தம் இறுக்கங்களை களைந்து கற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு விஷயம் என்னவென்றால்,ஆசிட் விற்பனை பரவலாக இருந்ததால் அந்த பொறியாளர் தாக்கப்படவில்லை, மாறாக பெண் என்பதால்தான் அந்த பெண் தாக்கப்பட்டாள்.

இதே சம்பவத்தை ஒட்டி, கிசு, கிசு பாணியில் அந்த பெண் ஒரு ஆணை ஏமாற்றிவிட்டாள் அதனால்தான் ஆசிட் வீசப்பட்டது என்று அந்தகொடுஞ்செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தனர். ஒரு பெண்ணுக்கு காதலை ஏற்கவோ, மறுக்கவோ உரிமை இருக்கின்றது என்பதைஅங்கீகரிக்க மறுக்கும் சிந்தனைதான் இதன் வேராக இருக்க முடியும்.

ஆசிட் வீச்சு, வன்முறையின் ஒரு வடிவம் மட்டும்தான். நீண்ட கால வன்முறை வரலாற்றின் நவீன வடிவம் அது அவ்வளவே.

பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் மற்றும் ஆசீட் வீச்சு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட பெண்கள் மீதான வன்மங்கள்ஒவ்வொருமுறையும் அரங்கேறும் போது, சமூகத்தளத்திலும், ஊடகங்களிலும் அலசப்படும் கருத்துகள் பெரும்பாலும் இரண்டு வகைகளில் மட்டுமேஅடங்கிவிடுகின்றன, அவை…

1) பெண்களுக்கான பாதுகாப்பு அல்லது அவர்களது ஒழுக்க நடத்தை பற்றிய பிரசங்கமும், தெளிவுரையும்.

2)    குற்றவாளிகளுக்கு தரப்படவேண்டிய ‘உயர்ந்தபட்ச’ தண்டனை

மனம் பதறும் வன்மங்களை ஊடங்களின் வழி காணும்போதும் சரி, பக்கத்து வீட்டுப் பெண்ணின்மீது நிகழ்த்தப்பட்டு அறியவரும்போதும் சரி,ஆண்களுக்கோ-பெண்களுக்கோ எழும் மிகத்துரிதமான எண்ணம் அந்த பெண்ணின் ஒழுங்கு(?) பற்றியதாகவே இருக்கிறது. பெண் கவர்ந்திழுக்கும்உடையணியாமல் இருந்திருக்கலாம். நேரம் தவறி வெளியே வராமல் இருந்திருக்கலாம்  என்று நீளும் பட்டியல் ஒழுக்கம் குறித்து கண்டிப்பாக அலசிச்செல்லும். இப்படித்தான் சிந்திக்கவே முடிகிறது இந்த Hyptonised சமூகத்தால்.

வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட் பெண்ணின் நிலையைக் கண்டு, இங்கு முன்வைக்கப்படும் கருணைமிகு ஆலோசனைகள்தான் மிகவும்கொடூரமானது. தன்னை வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரை போன்று நினைத்துக் கொண்டு,

“‘செய்ததுதான் செய்துவிட்டார்கள், அதோடு கொன்றிருக்கலாம். இனி இருந்தென்ன, இறந்தாலென்ன?”

வெறி நாய் கடித்து விட்டதென்பதற்காக நாம் கடிப்பட்டவரை கொலை செய்ய நினைப்பதில்லை, விபத்தில் கால் உடைந்து விட்டதென்பதற்காகநாம் அடிப்பட்டவரை கொலை செய்ய நினைப்பதில்லை. ஆனால், காம வெறிகொண்ட ஆண் ஒரு பெண்ணை வன்புணர்ந்துவிட்டால், மானம்போய்விட்டதென்று அந்த பெண்ணை கொலை செய்திருக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு கற்பு உடலளவிலான அளவுகோல் மட்டும்தானா?

பெண்ணை கற்பு, குல(சாதி)ப்பெருமை போன்ற கற்பனை அளவுகோல்களை காக்கும் ஒரு உடலாக மட்டுமே இந்த பெரும்பான்மை சமூகம்பாவித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றில்லை. இத்தகைய வன்மங்களை சிறுதயக்கம் காட்டாமல் நிகழ்த்திவிடும் மிருகங்களைஇந்த அறிவீனச் சமூகம்தான் வார்த்தெடுக்கிறது.  இந்த சமூகத்தில் மாற்றத்தை கோராமல், அதற்கு போராடாமல், குற்றத்தை மூடி மறைக்கும் தீர்வுகளைவைத்து பெண்களை இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்ற நினைக்கிறது இந்த சமூகம்.

புனைவு, இலக்கிய, இதிகாசங்கள் தொடங்கி இன்றைய திரைப்படங்கள், விளம்பரங்கள் வரை வெற்று நுகர்வு பொருள்களாகவோ அல்லது‘கலாச்சாரம், புனிதம், கற்பு’ போன்றவற்றை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்து அதை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் கடத்திக் காத்துக்கொண்டிருக்கும் ‘Culturally Designed’ பெண்களை மட்டுமே சமூகம் போற்றிக் கொண்டிருக்கிறது.

            பெண் தன்னை தற்காத்துக் கொள்ளும் வலிமை பெற்றிருந்தால் இந்த பிரச்சினை இருக்காது என்று ஒருவாதம் வைக்கப்படுகிறது. ஆனால்,பெண் ஏன் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்? பெண் ஏன் தாக்கப்பட வேண்டும்? பெண்ணை தாக்காமல் இருக்க இந்தச் சமூகத்திற்கு தெரியாதா?

பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை பேசுவோரும், நடைமுறைப்படுத்த விழைவோரும் வலியுறுத்த வேண்டியது, கல்வியோ, தற்காப்பு பயிற்சிகளோ மட்டுமல்ல.

குற்றம் நடக்க எத்தனிக்கும் அல்லது நடந்துவிடும் சமயத்தில், தன் மீது வேண்டாத குற்றவுணர்வை ஏற்றிக் கொள்ளாமல், இந்த போலி கௌரவ,புனித கருத்துக்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் செவிட்டு சமூகத்திற்கு உரைக்கும்படியாய் ஓங்கி அரைந்து சொல்லும் துணிச்சலோடு பெண்கள் வார்க்கப்பட வேண்டும்  என்பதைத்தான் வலியுறுத்த வேண்டும். சமூக மாற்றத்தை முன்னின்று கோரும் தெளிவோடு பெண்கள் தம்மைவார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி - மாற்று
...மேலும்

Jun 25, 2013

ஆதலால் காதல் செய்வீர் – 106 நிமிட ஆணுறை விளம்பரம் ! - மகிழ்நன்


ஒரு படைப்பின் தேவை என்ன? என்ன மாதிரியான சமூகத்தில் அது எழுகிறது. அந்த படைப்பின்  நோக்கம் என்ன?  அதன் விளைவென்ன? என்பதை வைத்துதான் ஒரு திரைப்படத்தின் தரத்தை நாம் கணிக்க வேண்டும்.

உடன் பணி புரியும் தோழர்  அழைத்தாரென்று “ஆதலினால் காதல் செய்வீர்” என்ற தலைப்பை நம்பி, மழையில் நனைந்து கொண்டே உதயம் தியேட்டருக்கு சென்றோம். பெரும்பாலும் ஆண்-இளைஞர் கூட்டமே மேலோங்கியிருந்தது. ஆங்காங்கே இணையர்களும் அமர்ந்திருந்தனர்.

கல்லூரியில் படிக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பதின் பருவத்திலிருக்கும் இளைஞர்கள் கூட்டத்தின் கல்லூரி வாழ்க்கையும், காதல் குறித்த கதையாடல்களோடு திரைப்படம் துவங்குகிறது. கல்லூரியில் இளைஞர்கள் யாருமே படிக்கவில்லை. நாயகனோட வீட்ல ட்யூசன் நடக்கிறதென அப்பப்ப காண்பிக்கிறாங்க. கல்லூரியில் பெண்களை கரெக்ட் செய்வதெப்படி என்றுதான் கல்லூரியில் காலம் கழிக்கிறார்கள் போலும், அந்த விவாதமே மேலோங்கியிருக்கிறது.

இந்த ஆழ்ந்த விவாதங்கள் மற்றும் தொடர் முயற்சியின் பலனாய் கதையின் நாயகனாக நாம் புரிந்து கொள்ள வேண்டிய அந்த ஆண் கதாப்பாத்திரத்திற்கும் காதல் வருகிறது. நடுத்தர வர்க்கத்து பெண் மேல் காதல் வருகிறது. [காதல் வர்க்கத்திற்குள்தானே வர வேண்டும், அதுதானே நியாயம் :) ]. வந்த காதலின் உள்ளடகத்தில் உள்ள காமத்தை தீர்த்துக் கொள்ள விளைகிறது. தனிமையில் வீட்டிலும், பின்னர் நண்பர்களோடு மகாபலிபுரத்திலும் தீர்த்துக் கொள்ள முனைகிறது.

பாதுகாப்பற்ற உடலுறவால் கரு உருவாகிறது. குழந்தை உருவாகுவது குறித்து தகவலேயறியாமல்தான் இன்றைய தலைமுறை வார்க்கப்படுகிறது. அப்படியான உடலுறவுகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆணுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.  அப்படி ஆணுறைகள் பயன்படுத்த வில்லையானால், கரு உண்டாகும், மாத விடாய் நிற்கும், வீட்டில் மாட்டிக் கொள்வீர்கள் என்று சில காட்சிகள் சொல்கின்றன. ( நாள் முழுக்க எத்தனை தடவை ஆணுறை விளம்பரத்தை போடுறானுக டிவில, ஆணுறை விளம்பரத்துக்கு ஒரு படமா?)

திருமணம் முடிக்காமல் கருவுற்றபின் அந்த பெண் படும் வேதனை, அந்த குழந்தையை பெற்றுக் கொண்டால் இந்த சமூகம் வீசப்போகும் வசவுக்கணைகள், அதன் பொருட்டு அந்த குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள், ஆணை பெற்றுவிட்டதாலேயே தங்களை மேலானவர்களாக கருதிக் கொள்ளும் ஆண் வீட்டார், என பல விசயங்கள் போகிற போக்கில் சொல்லிவிட்டு கடந்து செல்கிறது.

ஆனால், திரைப்படத்தின் நோக்கம் இதுவல்ல, திரைப்படம் இதைச் சொல்ல வரவில்லை என்பதை க்ளைமாக்ஸை நோக்கி நகர்த்தும் வேகத்தில் இயக்குனர் வெளிப்படுத்திவிடுகிறார். அவர் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் அல்லது சொல்ல விரும்பியது வேறாக இருந்தாலும், திரைப்படம் சொல்லி முடித்ததும், திரைப்படத்தை பார்த்த/பார்க்கப் போகும் பெரும்பாலான திரைப்பட ரசிகர்கள் புரிந்துக் கொள்ளப் போவதென்பதே கீழ்க்கண்டவைகள்தான்..

“மேட்டருக்காகத்தான் காதலிக்கிறாங்க”

“இந்த வயசுல என்ன காதல்”

“பெத்து வளக்குற அப்பனாத்தா பேச்சை கேக்காம போனா இப்படித்தான்”

“பைக் இருந்தா பொண்ணுங்க மடங்கிடுவாங்க” 

“பொண்ணை பெத்த அப்பனாத்தா படுற கஷடம் புரியுதா இதுகளுக்கு, படம் அதைத்தான் சொல்லியிருக்கு.”

என்ன இந்த வசனமெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா? கடந்த ஒராண்டாக ராமதாஸ் கும்பல் சமூகத்தில் பரப்பி வரும் நச்சுக் கருத்துகளின் இன்னொரு வடிவம்தான் அவை. இதைத்தான் திரையரங்குக்கு வெளியில் மக்கள் முனகிக் கொண்டே கடந்து போனார்கள். காசு கொடுத்து உள்ளே போகின்றவர்களும் அப்படியான போதனையை கேட்டுத்தான் வெளிவரப் போகிறார்கள்.

எல்லோரையும் சுட்டவில்லையே, எல்லோரையும் அப்படி சொல்லவில்லையே என்று கடந்து போகலாம். ஆனால், இவருடைய திரைப்படத்தை எல்லோரும் பார்க்கும்படித்தானே எடுத்திருக்கிறார்.

இதை வலியுறுத்திச் சொல்ல, இயக்குனர் சுசீந்திரன், பிற இயக்குனர்களை போலவே Sentiment + இறக்க உணர்வைத்தான் கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . இந்த Sentiment-உடன் பாண்டவர் பூமியில் தங்கையை கழுத்தறுத்த ரஞ்சித் மீது வரும் Sentiment+ இரக்க உணர்வோடு போட்டு குழப்பிக் கொண்டீர்களானால் சங்கம் பொறுப்பேற்காது.

சரி, அந்த சென்டிமெண்ட் என்ன?

இப்படியான முதிர்ச்சியற்ற போலி காதலால் ஆதரவற்ற குழந்தைகள்தான் உருவாகிறார்களே? இந்த காதல் தேவைதானா? என்பதுதான் அது. குழந்தைகள் ஆதரவற்று இருப்பதற்கு காரணமென்ன? இது முதிர்ச்சியற்ற காதலாகவே இருந்தாலும், பெற்ற குழந்தையின் மீதான் பொறுப்பை ஆண்-பெண் இருபாலரும் தவிர்க்க காரணமென்ன? என்பதை இந்த திரைப்படம் அலசவேயில்லை.

ஆதரவற்ற குழந்தைகள்

இப்படியான முதிர்ச்சியற்ற காதல் ஆதரவற்ற குழந்தைகளைத்தான் பிரசவிக்கும். அந்த குழந்தைகளை குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டும், அந்த ஜோடி தத்தமது வேலையை பார்க்கச் சென்றுவிடுவார்கள். இப்படியான காதலை செய்து அப்பனாத்தாவுக்கு மன உளைச்சல் கொடுப்பதற்கு பதிலாக….”(நாடக)காதலில் ஈடுபடாதீர்கள் என்று சொல்லி அழுத்தமாக குழந்தையின் அழுகையின் ஊடாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். தன் பெண்ணை ஒருவன் ஏமாற்றினான் என்பதற்காக ஒரு குடும்பம் குழந்தையை குப்பைதொட்டியில் வீசுதல் தவறு  என்று 100-ல் 10 ரசிகர்களுக்கு கூட தோன்றியிருக்காது. கோபமெல்லாம் காதலின் மீதும், காதலர்கள் மீதுமே வரும்.

இயக்குனரின் கண்ணோட்டம் எத்தனை மொன்னையானது என்பதை ஆதரவற்றோர் உருவாகுவதற்கான காரணிகளை இன்னும் கூடுதலான பொருளியல் காரணிகளுக்காக அலசினாலே தெரிய வந்துவிடும். நாம் வெகுதூரம் செல்ல வேண்டாம், இதை வாசிப்பவர்கள் இந்தியாவிற்கு விவசாயத்தில் ‘பசுமை புரட்சி’ என்னும் முதலாளிகள் செய்த மொன்னை புரட்சியின் விளைவாகவும், நீர் நிலைகளை தொழிற்சாலைகள் மாசுபடுத்தியதாலும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, எத்தனை கோடி விவசாயிகள் ஆதரவற்றோர்களாக, சொந்த நாட்டுக்குள் அகதிகளாக மாறியிருக்கிறார்கள் என்பது தெரியும்.

உண்மையாக, ஆதரவற்றோர்களை குறித்து படமெடுக்கும் ஆர்வமிருந்திருந்தால் இந்த விவசாயிகளை குறித்தோ, அல்லது சென்னை நகருக்கு வெளியே சமூக அனாதைகளாக புறக்கணிக்கப்பட்ட செம்மஞ்சேரியில் ‘தள்ளி’ வைக்கப்பட்டிருக்கும் மக்களை குறித்து படமெடுத்திருப்பார்.

ஆனால், அவரின் நோக்கமும், உள்ளூர இருக்கும் புரிதல் அதுவல்லவே..

( காதலை நேசிப்போர் – திருட்டி விசிடியில் கூட இந்த படத்தை பார்த்துவிடாதீர்கள்.)

நன்றி - மாற்று
...மேலும்

Jun 24, 2013

சமயலறையிலிருந்து விடுதலை … - சாரதா


இந்த தலைப்பில் எழுதுவது சற்று சலிப்பாக இருக்கலாம். நிலைமைகள் மாறிவிட்டனவே. பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று துச்சமாக நினைக்கலாம். ஆனால் இதை பேசுவதை நாமிருக்கும் சமூகச் சூழல் கட்டாயமாக்குகிறது.

அட! எத்தனை ஆண்கள் சமயலறையில் பெண்களுக்கு”உதவி” செய்கிறார்கள் தெரியுமா? என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த “நீயா நானா” நிகழ்ச்சியின் தலைப்பு: பெண்களுக்கு ஆண்கள் சமையலறையில் உதவலாமா? கூடாதா? ”நான் ஆண். என் அம்மாவிற்கு உடல் கோளாறு ஏற்பட்ட போது கூட நான் சமைக்கவில்லை” என்று வரட்டு ஆண் கௌரவம் கொண்டவர்கள் ஒரு பக்கம். “நாங்கள் பெண்களுக்கு உதவி செய்யும் பெருந்தன்மை கொண்ட நல்ல ஆண் மகன்கள்” என்று மார் தட்டிக் கொள்பவர்கள் இன்னொரு பக்கம்.

வாய்விட்டு கல கல வென சிரிக்க தான் தோன்றியது. நீங்கள் ‘உதவி என்று நினைக்கும்வரை இந்தக் கட்டுரைக்கு தேவை இருந்துகொண்டுதான் இருக்கும்.

வீட்டு வேலைகளுக்கு “உதவி” செய்யாமல் பகிர்ந்து கொள்ள பழகும் போது தான் அங்கே சமத்துவம் நிலவும். எழுத்தாளர் வாஸந்தி தனது ”யாதுமாகி” குறு நாவலில் கூறுவது போல வீட்டு வேலை செய்வதில் ”நாம்’ என்பது எப்போதும் பெண் என்றே அர்த்தம்.

பெண் வீட்டு வேலை செய்தால் கடமை. ஆண் செய்தால் அது அன்றைய முக்கியச் செய்தி. பெருந்தன்மையின் காரணமாகவோ அல்லது உண்மையான புரிதலினாலோ வீட்டு வேலை செய்யும் ஆண்களையும் சமூகம் சும்மா விடாது. ”பொம்பள மாதிரி வீட்டு வேலை செய்றான்”  என்று ஆணையும், “ஒரு ஆம்பளய எப்படி வேலை வாங்கிறாப் பார்”  என்று பெண்ணையும் ஏசும்.

”காலையில் காபி, கையில தினத்தந்தி ஒவ்வொரு நாளும் இப்படி தான் ஆரம்பம்” என்று பாடுகிறது ஒரு செய்தித் தாள் விளம்பரம். சுருக்கென்று உரைக்க வேண்டாமா அது?. எத்தனை பெண்களுக்கு இன்று நாள் செய்தித் தாளுடனும் காபியுடனும் ஆரம்பிக்கிறது?.

பெரும்பாலான பெண்களுக்கு பொழுது விடிவது சமையலைறையில், படுக்கையறையில் அல்ல. குற்றம் சொல்ல முடியாத குழந்தைகளையும் ஆண் கர்வம் கொண்ட கணவனையும் எப்படி மனசு கோணாமல் வேலைக்கும் பள்ளிக்கு அனுப்புவது என்பதே அவர்கள் முன் இருக்கும் மிக பெரிய சவால்.

இந்த விஷயத்தில் முற்போக்குவாதிகளுக்கு அதிக கடமை இருக்கிறது. பெண்ணுரிமை கருத்துக்களை பேசுவது மட்டுமே, விடுதலைக்கு உழைப்பதாக ஆகிவிடாது. ”சமையலறையுள் வந்தால் காலை உடைத்து விடுவேன்” என்று எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் தனது மனைவியிடம் கூறியுள்ளார் என்பது நல்ல உதாரணம். காலை உடைப்பேன் என்று சொல்லாவிட்டாலும் காலையில் வேலையை பகிர்ந்து கொள்வேன் என்று கூறுமளவிற்காவது மாற்றம் வேண்டும்.

”சமையல் என்ன பெரிய கம்ப சூத்திரமா? உணவகங்களில் ஒரே நேரத்தில் ஓராயிரம் பேருக்கு கூட சமைக்கும் ஆண்கள் இருக்கிறார்கள்.” இதில் ஒரு சின்ன, இல்லை இல்லை பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆண்கள் வீட்டிற்கு வெளியில் சமைப்பது வருமானத்தை ஈட்டுத் தரும். அது அவர்களுக்கான தொழில். அவர்களின் உழைப்பிற்கான சமூக அங்கீகாரம். ஆனால் பெண்கள் வீட்டில் செய்யும் வேலை எங்குமே உழைப்பாக அங்கீகரிக்கப் படுவதில்லை நாட்டின் பொருளாதார உற்பத்தியிலும் கூட.

பெண்கள் செலுத்தும் உழைப்பிற்கு பண மதிப்பு இல்லை. அதனால், தன் உழைப்பின் மதிப்பை அவளே உணர விடாமல் செய்திருக்கிறது இன்றைய சமூகம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், ‘குடும்பங்களின்’ பங்கு மிக முக்கியமானது. ஆனால், குடும்பம் என்ற அமைப்பே, பெண்ணின் தோளில்தான் சுமக்கப்படுவது, வசதியாக மறக்கப்படுகிறது.

”நான் வெளியில் வேலை பார்க்கிறேன். என் மனைவி வீட்டில் வேலை பார்க்கிறாள். இது வேலை பகிர்வினை.” என்று சாமார்த்தியமாக பேசுவதாக நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு: இது ஏற்றுக் கொள்ளப்பட்ட பகிர்வினையா? திணிக்கப்பட்ட பகிர்வினையா? சிந்தனை எழுவதில்லை.

மனைவி வேலைக்கு சென்றால் தான் சம்பாதிப்பதிப்பதை விட அதிகம் பெறலாம் என்ற நிலை இருந்தால், தான் வீட்டிலிருந்து மனைவியை வேலைக்குச் செல்ல அனுமதிப்பார்களா?

சென்ற மாதம் முடிதிருத்துபவர் கூறியது: ”அடுத்த மாசம் பொண்ணுக்கு கல்யாணம். நல்லா படிக்க வச்சுட்டேன். வேலைக்கு அனுப்பறதும் அனுப்பாத்தும் அவங்க விருப்பம்” நன்கு படித்து முடித்த பல இளம் பெண்களின் வாழ்க்கை இன்று வரதட்சணை வாங்கி வங்கி இருப்பை உயர்த்திக் கொள்ள சந்தர்ப்பம் தேடும் ஆண்களின் கையில் சிக்கி கொண்டுள்ளது.

இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தாகி விட்டது. இந்தியாவில் ஆள்வோருக்கு அது முழுமையாய் இருக்கிறது. ஆனால் பெண்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் இன்னும் முடியவில்லை. இப்போராட்டம் பல வெற்றிகளை கண்டுள்ளது. ஆனால் அதுவே போதுமென்று ஓய்வெடுக்கலாகாது. இந்தப் போராட்டத்தில் ஆண்களும் இணையும் போது தான் கிடைக்கும் சுதந்திரம் முழு சுதந்திரமாக இருக்கும்.

நன்றி - மாற்று
...மேலும்

Jun 23, 2013

நீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !

நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன்.

சிகாகோ பல்கலைக் கழகத்தின் தெற்கு ஆசிய ஆய்வுத் துறையில் படிக்கும் மிகேலா கிராஸ் என்ற அமெரிக்க மாணவி சென்ற ஆண்டு தனது படிப்பின் ஒரு பகுதியாக இந்தியா வந்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறித்து எழுதியிருக்கிறார்.
மிகேலா கிராஸ்
பெண்கள் அனைவரையும் தாயாக, நதியாக, தாய் மண்ணாக பார்க்கும் பாரத கலாச்சாரத்திற்கு ஈடு இணையில்லைஎன்று சங்க பரிவாரங்களால் விதந்தோதப்படுகிறது. நீலி வழிபாட்டிற்கும் தேசபக்திக்கும் உள்ளொளி இணைப்புள்ளதாக இந்து ஞான மரபின் உபன்னியாசர்கள் கதை விடுகிறார்கள்.  பொய்யான இந்த போற்றுதல்கள் மற்றும் வருணணைகளின் பின்னே பெண்ணடிமைத்தனத்தின் ஆதாயம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை எவரும் சுலபமாக கண்டுபிடிக்க முடியும்.

இப்படி நம் நாட்டின் பார்ப்பனிய இந்து மதத்தின் பிற்போக்கு கலாச்சாரமும், பின்னர் வந்த மேற்கத்திய நுகர்வுக் கலாச்சாரம் வளர்த்து விட்டிருக்கும் பாலியல் வக்கிரங்களும் இந்தியச் சூழலை பெண்களுக்கு நரகமாக மாற்றியிருப்பதை மிகேலா கிராஸ் அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார். ஆரம்பத்தில் அவரும் கூட இந்தியாவை மாபெரும் ‘ஞானிகளின்’ நாடு என்று அசட்டுத்தனமாக நினைத்திருப்பாரோ தெரியவில்லை.

இந்திய பெண்கள் பிறந்ததிலிருந்தே இந்த சூழலில் வாழ்வதால் அதை சமாளித்து வாழப் பழகிக் கொள்வதோடு, மனதளவிலான பாலியல் துன்புறுத்தல்களை பெரும்பாலும் புறக்கணித்தும் போகிறார்கள். வெளியிலிருந்து வந்த மிகேலா கிராஸ் இந்த நச்சுச் சூழலால் பாதிக்கப்பட்டு மனவியல் சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அதே நேரம் பாரதமாதாவின் கருணையற்ற முகத்தை உலகு அறியவேண்டும் என்று அதை அனைவருக்கும் அறியத் தருகிறார். எனினும் இதை ஒரு காலனியாதிக்க அடிமைத்தனத்தின் சதி என்று சங்க பரிவார அம்பிகள் புறக்கணிக்கலாம். அதனால் உண்மை சுடாமல் போய்விடுமா என்ன? இதோ ‘பெருமை’ வாய்ந்த இந்து ஞான மரபின் இழை அறுபடாத பாரதத்தை தரிசியுங்கள் !

- வினவு

————–
இந்தியாவிற்குப் போன எனது அனுபவத்தைக் குறித்து யாராவது கேட்கும் போது எப்போதுமே குழப்பத்துக்குள் சிக்கிக் கொள்கிறேன். கடந்த சில மாதங்களாக என் வாழ்க்கையை குதறிக் கொண்டிருக்கும் ஒரு முரண்பாட்டை சுருக்கமாக ஒரு வரியில் எப்படி விளக்குவது?

“இந்தியா அற்புதமானது,” என்று ஆரம்பித்து, “ஆனால் பெண்களுக்கு மிகவும் அபாயகரமானது” என்று முடிக்கிறேன். இது குறித்து மேலும் கேள்விகள் வருமோ என்று என் மனதின் ஒரு பக்கம் நடுங்குகிறது, இன்னொரு பக்கம் மேலும் கேள்விகள் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. உண்மையின் சக்தியில் நம்பிக்கை வைத்து நான் சொல்ல விரும்புவற்றுக்கும், கேட்பவர்கள் எவ்வளவு தாங்குவார்கள் என்பதை முடிவு செய்வதற்கும் இடையே நான் திணறுகிறேன்.

ஒரு பாதி இனிய கனவாகவும், மறு பாதி கொடூர சொப்பனமாகவும் இருந்த எனது மூன்று மாத இந்திய பயணத்தை எப்படி விவரிப்பது. எந்தப் பாதியை நான் சொல்ல வேண்டும்?

மிகேலா கிராஸ்
பூனே கணேசா திருவிழாவிற்கு பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம்.
இந்தியாவிற்கு போய்ச் சேர்ந்த முதல் நாள் பூனேவின் விநாயகர் திருவிழாவில் நாங்கள் நடனம் ஆடியதை சொல்லி விட்டு அத்தோடு விட முடியுமா? அல்லது அமெரிக்க பெண்கள் ஆட ஆரம்பித்ததும் திருவிழாவே நின்று போய் விட, ஒரு பெரிய ஆண்கள் கூட்டமே எங்கள் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தோம் என்பதையும் சொல்ல வேண்டும் அல்லவா?

ஒரு சில டாலர்கள் விலையிலான அழகான புடவைகளை பேரம் பேசி வாங்குவதற்கான  கடைகளைப் பற்றி குறிப்பிடும் அதே நேரம், எங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஆண்கள், எங்களை இடித்துக் கொண்டு, மார்பையும் அடி வயிற்றையும் தொட்டும் தாக்கியும் சென்றதை சொல்லாமல் விட முடியுமா?

என்னுடைய அழகிய இந்திய செருப்புகளை புகழும் ஒருவரிடம், அவற்றை நான் வாங்கிய பிறகு 45 நிமிடங்களுக்கு என்னைப் பின் தொடர்ந்து வந்த மனிதனைப் பற்றிச் சொல்லி பெரும் கூட்டத்தின் மத்தியில் அவனை முகத்துக்கு நேராக திட்டி துரத்திய பிறகுதான் விலகினான் என்பதையும் பேச வேண்டும் அல்லவா?

கோவாவில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் குறித்த எனது ஆழமான நினைவு, என் அறை தோழியை பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்த ஹோட்டல் ஊழியர், அறை தொலைபேசியில் மீண்டும் மீண்டும் மூச்சிரைக்க அழைத்துக் கொண்டிருந்த போது அவன் கதவை உடைத்துக் கொண்டு அறைக்குள் வந்து விடக் கூடாது என்ற பயத்தில் கதவை தாழிட்டு விட்டு, கைகளில் ஒரு கத்தரிக்கோலை இறுகப் பற்றிக் கொண்டு, பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்ததாக இருக்கும் போது அந்த ஹோட்டலின் அழகைப் பற்றி நான் எப்படி விவரிக்க முடியும்?

இவற்றை எல்லாம் ஒரு கிறிஸ்துமஸ் விருந்தில் எப்படி பேச முடியும்? ஆனால், எனது நண்பர்கள், உறவினர்கள், கிறிஸ்துமஸ் மரம் இவை அனைத்தையும் விட பேருந்தில் என்னைப் பார்த்து சுய இன்பம் கண்ட ஒரு மனிதனின் பிம்பம் வலுவாக மனதை ஆக்கிரமித்திருக்கும் போது நான் வேறு எதைப் பற்றி பேச முடியும்? தங்கள் கேள்விகளுக்கான உண்மையான பதில்களை தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்று தெரியாமல் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள் அந்த நல்ல மனிதர்கள்.

ஒரு ஆண்டுக்கு முன்பு நான் இந்தியாவுக்கு போன போது அந்தச் சூழலில் வாழ நான் தயார் செய்து கொண்டதாகத்தான் நினைத்தேன். நான் இதற்கு முன்பே இந்தியாவுக்கு போயிருக்கிறேன்; தெற்கு ஆசிய துறையில் படிக்கிறேன்; ஓரளவு இந்தி பேசுவேன். ஒரு வெள்ளை இனப் பெண்ணான நான் பாலியல் வெறி பிடித்தவளாக பார்க்கப்படுவேன் என்றும், பாலியல் ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டிய பொருளாக கருதப்படுவேன் என்றும் நான் அறிந்திருந்தேன். சிகாகோ பல்கலைக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி, கவனத்தை ஈர்க்காத உடைகள் அணியவும், பொது இடங்களில் அன்னியர்களை பார்த்து புன்னகை செய்யாமலும் இருக்க மனதளவில் தயாராக இருந்தேன். என் செந்நிற கேசமும், வெண்ணிற சருமமும், நீல நிற கண்களும் தூண்டக் கூடிய குறுகுறுப்பை எதிர் கொள்ள என்னை தயாரித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், இவ்வளவுக்கும் பிறகும் அந்த சூழலுக்கு நான் தயாராகியிருக்கவில்லை.

அந்தக் கண்களை எதிர் கொள்வதற்கு யாராலும் தயார் படுத்திக் கொள்ள முடியாது. எனது உடலை தமக்கு சொந்தமாக பார்க்கும் கண்கள்; நான் அவர்களது பார்வையை சந்திக்கிறேனா இல்லையா என்பதை பற்றிக் கவலைப் படாமல் என் உடலை சொந்தம் கொண்டாடும் கண்களை எதிர் கொள்வதற்கு எப்படி தயாரித்துக் கொள்வது? பழக் கடைக்கோ, தையல் கடைக்கோ போகும் வழியில் குத்திக் கிழித்த பார்வைகள் என்னை செதில் செதிலாக செதுக்கி சிதைத்தன. என்னுடைய நடை, உடைகள் பாலியல் சைகைகளாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க தயாரித்திருந்தேன். ஆனால் அந்த நாட்டில் பாலியல் சைகைகள் என்ற விஷயமே இல்லை,  பெண்களின் உடல்கள் அனைத்துமே ஆண்களால் சொந்தமாக்கிக் கொள்ளப்பட வேண்டியவை அல்லது ஆண்களால் மறைத்து பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதை ஏற்றுக் கொள்ள நான் தயாராகியிருக்கவில்லை.

நான் என் உடலை போர்த்திக் கொண்டேன், ஆனால் மறைத்துக் கொள்ளவில்லை. எனவே, ஒவ்வொரு கண்ணாக, ஒவ்வொரு படமாக நான் சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டேன். நான் நடக்கும், திட்டும், துரத்தும் எத்தனை புகைப்படங்கள் இந்தியாவிலும் இணையத்திலும்  உலா வருகின்றன என்று யாருக்குத் தெரியும். என்னுடைய, என் தோழிகளுடைய உருவத்தை எத்தனை அன்னியர்கள் பாலியல் பிம்பங்களாக பயன்படுத்தினார்கள் என்று யாருக்குத் தெரியும்? என்னால் முடிந்த அளவுக்கு நான் பலவற்றை அழித்தேன், ஆனால் நான் அழித்தது அந்த பெருங்கடலில் ஒரு துளி மட்டும்தான். அவர்கள் எடுத்துக் கொண்ட ஒவ்வொன்றையும் திரும்பி பெறுவதற்கு  வாய்ப்பே இல்லை.

மிகேலா கிராஸ்மூன்று மாதங்களாக நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன். இருந்தும் நான் நினைத்துப் பார்த்திராத பல நல்ல அனுபவங்களை பெற்றேன். என்னுடைய அந்த கெட்ட கனவு வீடு திரும்பும் போது விமான நிலைய ஓடுகளத்தில் முடிவுக்கு வரும் என்று நம்பினேன். ஆனால் உண்மையில் அங்குதான் வதை ஆரம்பமானது.

ஊருக்குத் திரும்பிய பிறகு, குங்குமத்தின் ரத்தச் சிவப்புக்கு பழகிய கண்களுக்கு கிறிஸ்துமசின் சிவப்பு நிறம் வெளிறியிருந்தது. உணவு காரசாரமற்று சப் என்று இருந்தது. எனது வலியும், மற்ற அனைத்து சத்தங்களையும் மூழ்கடிக்கும்படி ஓலமிட்டுக் கொண்டு என் ரத்தத்தில் ஓடிக் கொண்டிருந்த கோபமும் நண்பர்கள், குடும்பத்தினர், கல்லூரி வகுப்புகள், மருத்துவர் ஆலோசனைகள் எதையும் விட நிஜமாக இருந்தன. சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பி விட்டது குறித்த உற்சாக உணர்வை தாண்டிய சில மாதங்களுக்குப் பிறகு, என்னைத் துரத்தும் நினைவுகளிலிருந்து நகர்ந்து விட்டதாக நினைத்த போது ஏப்ரல் முட்டாள்கள் தினத்தன்று காலையில் செத்து விடும் ஆசையோடு கண் விழித்தேன்.

கல்லூரியின் மனோதத்துவ ஆலோசகர்கள் எனக்கு “ஆளுமை முறைகேடு” ஏற்பட்டிருப்பதாக முடிவு செய்து பரிந்துரைத்த மாத்திரைகளை நான் சாப்பிட மறுத்தேன். பொது இடத்தில் நடந்த ஒரு கலாட்டாவுக்குப் பிறகு என் விருப்பத்துக்கு எதிராக ஒரு மனநோய் இல்லத்தில் பிடித்து அடைக்கப்பட்டேன். கல்லூரியிலிருந்து “மன நோய்க்கான விடுமுறை” எடுத்துக் கொண்டு போய் விட வேண்டும் என்ற நிபந்தனையோடு விடுவிக்கப்பட்டு சில நாட்கள் அம்மாவுடன் போய் வாழ்ந்தேன். என் சித்தம் கலங்கி விட்டது என்று நினைத்தேன்.

மிகேலா கிராஸ்இது எதையும் நான் இந்திய அனுபவங்களுடன் தொடர்புபடுத்தவில்லை – அந்த அனுபவங்களிலிருந்து நான் நகர்ந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் ஒரு மனவியல் நிபுணர் எனக்கு பிடிஎஸ்டி (கடும் பாதிப்புக்குப் பிறகான மன அழுத்த முறைகேடு) இருப்பதாக கண்டறிந்த போதுதான் நான் அந்த அனுபவங்களிலிருந்து சிறிதளவு கூட விடுபட்டிருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். நான் அந்த காலகட்டத்தில் உறைந்து போயிருக்கிறேன்; விழுந்து விட்டிருக்கிறேன்; சிதறி விட்டிருக்கிறேன்.

ஆனால், நான் மட்டும் தனி இல்லை. பிடிஎஸ்டி வந்து மனநோய் இல்லத்தில் அடைக்கப்பட்ட, செத்துப் போக நினைத்த நபர் நான் மட்டும் இல்லை. சிகாகோ பல்கலைக் கழகத்திலிருந்து என்னுடன் பயணம் செய்தவர்களில் மனநோய்க்கான விடுப்பு எடுத்துக் கொண்டு, வகுப்புகளை விட்டுச் சென்ற பெண் நான் மட்டும் இல்லை.

எனது வலியை புரிந்து கொண்டது, அதை போக்க உதவா விட்டாலும் ஏற்றுக் கொள்ள உதவியது. “மன அழுத்த முறைகேடு” என்பது பொருத்தமற்ற சொல்லாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு முறைகேடு என்றால் அதை சரி செய்ய முடிய வேண்டும். ஆனால், நிதர்சனத்தை நேருக்கு நேர் சந்தித்ததற்கான, ஒருவரது மனிதம் பறிக்கப்படுவதை மூன்று மாதங்களாக உணர்ந்ததற்கு என்ன தீர்வு? இந்தியாவில் நான் பெற்ற அனுபவங்களுக்கும் எனக்குக் கிடைத்த ஏமாற்றங்களுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உண்மை ஒரு பரிசு, ஒரு சுமை, ஒரு பொறுப்பு. அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவைப் பற்றி என்னிடம் கேட்ட நீங்கள் கேட்க விரும்பாத கதை இது. ஆனால், உங்களுக்குத் தேவையானது இந்தக் கதைதான்.

தமிழாக்கம் : அப்துல்

படங்கள், கட்டுரை – நன்றி:  சிஎன்என் CNN

நன்றி - வினவு
...மேலும்

Jun 22, 2013

'வெளி'யை மீறும் பெண்கள்... -Volver மற்றும் Aksharayaவை முன்வைத்து - டிசே தமிழன்


அகஞ்சார்ந்த பிரச்சினைகள் நம்மைத் தினமும் அல்லாட வைத்துக்கொண்டிருக்கின்றன. பொது விடயங்கள் குறித்து பிறரோடு வெளிப்படையாகப் பகிரவோ, விவாதிக்கவோ முடிகின்ற அளவுக்கு நம்மால் நம் அகமனதின் தத்தளிப்புக்களை அவ்வளவு எளிதாய்ப் பகிரமுடிவதில்லை. சிலவேளைகளில் பகிர்வதற்கான எமது அகமனத்தடைகளை உடைத்து வெளியே வந்தாலும் அதனை எப்படிப் பிறருக்குப் புரியவைப்பதென்ற நிறைந்த சிக்கல்களும் இருக்கின்றன. அதேபோன்று நமது அகமனதை முழுதாய்த் திறந்து வைக்கும்போது நம்மையறியாமலே நமது கள்ளங்களும் கபடங்களும் வெளியே வந்துவிடும் என்ற தயக்கங்களும் நம்மில் பலருக்கு உண்டு. பகிரவேண்டிய விடயங்கள் உரிய நேரத்தில் பகிரப்படாது போனதால் சிதைந்துபோன உறவுகள்..., வாழ்வைத் தொலைத்த மனிதர்கள்..., பால்யங்கள சிதைந்த சிறார்களென... பலரை வாழ்க்கையின் ஏதோவொரு புள்ளியில் நாம் சந்திக்கவும் செய்கின்றோம்.

Pedro Almodovarன், Volverம், அசோக ஹந்தகமவின் Aksharaya (A Letter of Fire)ம், சொல்லப்படவேண்டியவை சொல்லவேண்டிய காலத்தில் சொல்லப்படாமல் போனதால் ஏற்படும் பாதிப்புக்களை வாழ்க்கையின் போக்கில் நின்று பதிவுசெய்கின்றன. சொல்லப்படவேண்டியவற்றை சொல்லாமற்சென்றதால் சொல்லாமல்விடுபவரை மட்டும் அச்சம்பவங்கள் பாதிப்பதில்லை; தொடர்ந்து அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் பாதித்துக்கொண்டிருக்கின்றன என்பதைத்தான் இவ்விரு படங்களும் வெளிப்படுத்த அதிகம் முயற்சிக்கின்றன. நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் நமது கடந்தகாலம் நம்மைப் பின் தொடர்ந்து வந்து தன் கொடிய கரங்களுக்குள் இழுத்துக்கொளள முயற்சிப்பதுண்டல்லவா? அவ்வாறுதான் இக்கதை மாந்தர்கள் பலரின் வாழ்வு இருக்கின்றது. சிலர் கடந்தகாலத்தின் கசப்பைப் புரிந்துகொண்டு கடந்துசெல்கின்றார்கள்; வேறு சிலரோ கடந்தகாலத்தில் சிக்குப்பட்டு தமது நிகழ்கால வாழ்வையும் தொலைத்து நிர்க்கதியாக நிற்கின்றார்கள்.

பெட்ரோ அல்மொடோவரின் அநேக படங்களைப்போல இதுவும் பெண்களைச் சுற்றியே சுழல்கின்றது (All About My Motherன் சாயல் சற்று இப்படத்திலுண்டு). Raimunda மற்றும் Sole என்ற இரண்டு சகோதரிகள், தீ விபத்தில் கொல்லப்பட்ட தமது பெற்றோரின் கல்லறைகளைச் சுத்திகரித்து அவர்களின் இழப்பை நினைவுகொள்வதோடு படம் ஆரம்பிக்கின்றது. கிழக்குக் காற்று வேகமாய் வீசுகின்றது; இவ்வாறான ஒரு பருவத்திலேதான் இவர்கள் தமது பெற்றோரைத் தீவிபத்தில் பலிகொடுத்தவர்கள். அதேசமயம் இப்பெண்களின் பக்கத்துவீட்டுப் பெண்மணியும் (Agustina) கல்லறையிற்கு வருகின்றார். Agustinaவின் தாயார் ஹிப்பி வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்; அடிக்கடி வீட்டை விட்டும் ஓடிப்போகின்றவரும் கூட. இறுதியாக, பக்கத்து வீட்டில் நடந்த தீவிபத்தோடு ஓடிப்போனவர் இன்னும் வீடு திரும்பாமல் Agustinaவால் தேடப்பட்டுக்கொண்டிருப்பவர்.

Raimundaவும் Soleம் தமது கிராமத்திலிருக்கும் அன்ரியொருவரைச் சந்தித்துவிட்டு, அவர்கள் தற்சமயம் வாழ்ந்துகொண்டிருக்கும் மெட்ரிக் நகரிற்குத் திரும்புகின்றனர். இவ்விருவரில் Sole தனது துணையை விவாகரத்துச் செய்துவிட்டு வீட்டோடு சிகையலங்காரக் கடைவைத்து வாழ்வை நடத்திச் செல்பவர். மற்ற மகளான Raimundaக்கு துணைவரும், பதின்மத்தைத் தொட்ட ஒரு மகளுமுண்டு. பெற்றோரின் கல்லறையிலிருந்து வீடு போய்ச்சேருகின்ற Raimundaவிடம், தனக்கு வேலை போய்விட்டதென கணவர் கூற தனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து Raimunda கவலை கொள்கின்றார்.

ஒருநாள் வீட்டில் தனியேயிருக்கும் Raimundaவின் கணவன், அவரது மகளை பாலியல் வன்புணர்ச்சியிற்கு உட்படுத்த முயற்சிக்கின்றார். 'என்னைத் தொட்டால் கத்தியால் குத்திவிடுவேன்' என்று பயமுறுத்துகின்ற மகளிடம், 'நீ எனக்குப் பிறந்த மகளில்லை'யெனச் சொல்லி வன்புணர்ச்சியிற்குக் கட்டாயப்படுத்தும்போது, மகள் குசினியிலிருக்கும் கத்தியால் தகப்பனைக் குத்திக் கொன்றுவிடுகின்றார். வேலையால் வீட்டுக்கு வருகின்ற Raimundaவிடம் நடந்தததை மகள் விபரிக்கின்றார். என்ன செய்வதென்று முதலில் திகைக்கின்ற Raimunda கணவனின் உடலத்தை வீட்டினில் மறைத்துவைக்கின்றார். பிறகு நேரம் பார்த்து தொலைத்தூரத்திலிருக்கும் ஆற்றோரமாய் கணவனின் உடலை எவருக்குந் தெரியாமல் புதைத்தும்விடுகின்றார். உறவுகள், சுற்ற்த்திடம் தனது கணவன் தன்னைவிட்டு ஓடிப்போய்விட்டாரென Raimunda கூறுகின்றார். Raimundaவின் மகள், கொல்லப்பட்டவர் தனது வளர்ப்புத் தந்தையெனில், யார் தனது உண்மையான தகப்பன் எனக்கேட்கின்றபோது உனது தந்தையார் கிராமத்திலிருந்தார் என்று கூறி அவரது வாயை Raimunda அடைத்துவிடுகின்றார்.

இதேசமயத்தில் கிராமத்திலிருக்கும் Raimundaவின் பிரிய அன்ரி இறந்துபோகின்றார். கணவரின் உடலை மறைக்கிற சிக்கலில் இருக்கின்ற Raimundaவால் அன்ரியின் இறுதி நிகழ்வுக்குப் போகமுடியாது போகின்றது; அவரது சகோதரி Sole மட்டும் போகின்றார். அங்கிருந்து Sole திரும்பிவருகின்றபோது ஒரு அதிசயம் நிக்ழ்கின்றது. Sole இறந்துபோன தனது தாயை அவர்களின் அன்ரியின் வீட்டில் காண்கின்றார். கிராமத்தில் -இவர்களின் அன்ரியின் வீட்டில்- இவர்களது தாய் பேய் வடிவில் வந்து கதைப்பதைக் கேட்டதாய் அயலவர்கள் கூறியிருந்தால் -தனது ஆசைகள் வாழுங்காலத்தில் நிறைவேறாததால்தான் தனது தாய் பேய் வடிவில் உலாவுகின்றாகின்றாரோவென ஆரம்பத்தில் நினைக்கும் Sole, பின்னர் தனது தாய் அந்தத் தீவிபத்தில் இறக்கவில்லை என்ற உண்மையை உணர்கிறார்.

Sole தனது நகர வீட்டுக்குத் தாயை அழைத்துவந்து தலைக்கு வர்ணம்பூசி, ஸ்பானிய மொழிதெரியாத ஒரு இரஸ்யப்பெண்மணி போல பிறர் காணும்போது நடிக்கச் சொல்கின்றார். இதற்கிடையில் Raimunda ஒரு உணவுச்சாலையை வாடகைக்கு எடுத்து வெற்றிகரமாக நடத்தத்தொடங்குகின்றார். Raimundaவின் தாயிற்கு Raimundaவைப் பார்க்க விருப்பமிருப்பினும், Raimunda வளரத்தொடங்கிய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தாயை மிக வெறுத்து அவரைச் சந்திக்க விரும்பாதவராய் நகரத்தில் வாழத்தொடங்கியவர் என்ற கடந்தகாலம் தாயைப் பயமுறுத்துகின்றது; எனவே ஒவ்வொருமுறையும் Raimunda, Sole வீட்டிற்கு வரும்போது தாய் ஒளித்துக்கொள்கின்றார்.

இறுதியில் Raimundaவும் தாயும் சந்திக்கின்றனர். அவர்கள் இருவரும் மனந்திறந்து பேசத்தொடங்கும்போது கடந்தகால உண்மைகள் மிகுந்த வலியுடன் வெளிவருகின்றன். Raimundaவின் பிள்ளையினது உண்மையான தந்தை, Raimundaவின் தகப்பனே. இதனால் Raimunda ஒரே நேரத்தில் தனது மகளுக்கு தாயாகவும், இன்னொருவிதத்தில் சகோதரியாகவும் இருக்கின்றார். Raimundaவிற்குத் தனது தாய் மீதான கோபத்திற்குக் காரணம், இவ்வாறான சம்பவங்கள் நடந்திருக்கின்றது என்பதை அறியாது தாய் அசட்டை/கவனயீனத்தோடு இருந்திருக்கின்றார் என்பதேயாகும். ஆரம்பத்தில் இந்த உண்மை தெரியாதிருக்கும் தாய், உண்மையறிந்தவுடன் கோபத்துடன் தனது கணவனைப் பார்க்கப்போகின்றார். அச்சமயம் அவரின் கணவன் பக்கத்து வீட்டு பெண்மணியுடன் (Agustinaவின் தாய்) படுக்கையில் ஒன்றாயிருப்பதைக் கண்டு கோபத்துடன் வீட்டிற்குத் தீமூட்டிவிடுகின்றார். அதே சமயம் கிழக்குக் காற்று மூர்க்கமாய் வீசுகின்றது. தப்ப வழியின்றி எரிந்துபோகின்றவர்களை க்டுங்காற்று தீயையெழச்செய்து ஏப்பமிட்டுவிட்டதென உற்றாரும் அயலவரும் நம்புகின்றார்கள். இவ்வாறு தீயை மூட்டிய தாய் வேறொரு கிராமத்தில் சில வாரங்கள் பதுங்கியிருந்துவிட்டு இவர்களின் தனித்திருக்கும் அன்ரி வீட்டுக்கு வருகின்றார். அன்ரியும் காரணங்களையறிந்து தனது வீட்டில் தாயைச் சேர்த்துக்கொள்கின்றார். வெளியாட்களுக்குத் தெரியாமல் உள்ளேயே தாய் வாழத்தொடங்குகின்றார். அவ்வப்போது சில தடயங்கள கண்டுபிடிக்கப்பட்டாலும் பேய் போல அவர் உலாவுகின்றார் எனப் பல மிகை உண்மைகளை நம்புகின்ற கிராமத்தவர்கள் இதையும் நம்பிக்கொள்கின்றார்கள்.
இதேவேளை இவரின் கணவரோடு கொல்லப்பட்ட ஹிப்பி தாயாரின் மகள் -Agustina- புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார். இனி Agustinaவையும் சாகும்வரை -Raimundaவின் அன்ரியைப் பராமரித்ததுபோல- பராமரிக்கப்போகின்றென தாய் கிராமத்தில் தங்கிவிட அவரின் பிள்ளைகளும், பேரப்பிள்ளையும் அக்கிராமத்திற்கு வருவதோடு படம் முடிகின்றது. கை நழுவிப்போன சந்தோசமான நாட்கள் மீண்டும் வருகின்றதுமாதிரியும்... வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் பிறரால் பழிவாங்கப்பட்ட இப்பெண்கள் நிம்மதியாக வாழப்போகின்றதுமான எண்ணங்களைப் பார்ப்பவரிடையே இப்படம் விதைக்கின்றது.

இந்தப்படம் பாலியல் இன்னபிற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் 'வாழ்க்கையைத் தொலைத்துப் போகவேண்டும்' என்ற பொதுப் பார்வையை மறுக்குகின்றது. பெண்கள் அவர்கள் அறியாமலே, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறையைக் கடந்துசென்று தமக்குப் பிடித்தமான வாழ்வை வாழ்ந்துபார்க்கலாம் என்ற நம்பிக்கையின் கீற்றை வழங்குகின்றதென்றவகையில் இப்படம் முக்கியமான ஒரு படமே. அதேவேளை தான் தனது தகப்பனால் பாலியல் வன்முறைக்குட்டபட்ட மாதிரி, தனது மகளும் பாலியல் வன்முறைக்குத் தனது கணவனால் பலியாக்கப்படும்போது 'தனது பேசப்படாத மெளனம்' தன்னை மீண்டும் இன்னொருவகையில் வந்து பாதிப்பதை Raimunda பாத்திரத்தினுடாக நாம் அவதானிக்கின்றோம். மேலும் தனது கடந்தகாலத்தின் மூலம் பாடத்தைக் கற்றுக்கொண்ட Raimundaவால் ஒரு கொலை செய்யப்பட்டுவிட்டதே என்ற பதற்றமில்லாது தனது மகளையும் நுட்பமாகக் காப்பற்றமுடிகின்றது. அத்துடன் தனது தாய் தன்னை எதுவுமறியாது அல்லது எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளவேண்டும் என்று வளர்த்தது போலவன்றி, Raimunda தனது மகளை வன்முறைகளிலிருந்து தப்புவதற்கான விழிப்புணர்வுடன் வளர்த்திருக்கின்றார் எனபது பார்க்கும் நமக்கும் புரிகின்றது.

கொலைகளை எந்தப்பொழுதிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற நம்பிக்கையுடைய பலரையும் இப்படத்திற்குள் அமிழும்போது அந்த எண்ணத்தை எழச்செய்யாமல் கதையை நகர்த்திச் சென்றிருப்பதில்தான் நெறியாள்கையாளரின்/க்தாசிரியரின் ஆளுமை துலங்குகின்றது. சோகமான/மர்மமான இருண்ட கதை என்றாலும் படம் முழுக்க மகிழ்ச்சியிற்கான வர்ணங்களில் எடுக்கப்பட்டிருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கை எவ்வளவு அபத்தங்களாலும் அவலங்களாலும் நிரம்பியிருந்தாலும் கிடைக்கின்ற சொற்ப நிமிடங்களையும் வாழ்ந்து பார்க்கப் பிரியப்படுகின்ற மனிதர்களே இப்படத்தில் வருவதால் படம் முழுக்க வரும் வர்ணக்கலவைகள் கண்களுக்கு உறுத்துவதில்லை. Joint புகைக்கின்ற Agustina , பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் (இவர் தான் Raimunda குழிதோண்டி தனது கணவரின் சடலத்தை மறைக்கின்றபோது உதவுகின்றார்) என இப்படத்தில் வரும் அனைவரும் அவர்களின் இயல்பில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதோடு எல்லாப்பெண்களும் நேசிக்கப்படக்கூடியவர்களாய் இருக்கின்றார்கள்.

2.
அசோக ஹந்தகமவின் Aksharaya, இளம் வயதில் சீரழிந்துபோகும் குழந்தைகளையும் அதிகார வேட்கையையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. ஒரு நீதிமன்றத்தில் நீதிபதியாக (Magistrate) இருக்கும் தாய், தனது பிள்ளையை மிக அந்நியோன்னியமாக வளர்க்கின்றார். தனது பிள்ளை தனது உடலின் ஒரு பகுதியெனவும், தனது சுவாசத்தையே கருவிலிருக்கும்போது அவனும் சுவாசித்தவன் என்ற நினைப்பும் உடையவர் அத்தாய். அத்தோடு ஒவ்வொரு நாளும் சிறுவன் வளர்ந்துகொண்டிருப்பதை அளந்துகொண்டிருப்பவர். சிறுவன் வளர வளர அவன் தன்னை விட்டு விலகிப்போய்விடுவான் என்ற பயங்களும்/பதற்றங்களும் உடையவர். 

இத்தாயின் (Piyumi) நெருக்கம் எப்படிப்பட்டதெனில் அந்தச் சிறுவனோடு சேர்ந்து நிர்வாணமாய்க் குளிப்பதிலிருந்து, பன்னிரண்டு வயதிலிருக்கும் சிறுவனுக்கு முலைகளைச் சப்பக்கொடுப்பது வரையான நெருக்கமுடையது (இக்காட்சி மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது; அது குறித்த அரசியலைப் பிறகு பார்ப்போம்). இப்படி வளர்கின்ற சிறுவன் பாடசாலைக் கணணியில் இன்னொரு சிறுவனோடு இருந்து, பெண்கள் நிர்வாணமாயிருக்கும் படங்களைப் பார்க்கின்றான். இதெல்லாம் 'கெட்ட' படங்கள் என்கின்றான் மற்றச்சிறுவன். இவனோ இதிலென்ன கெட்ட விசயங்கள் இருக்கின்றது; தான் தனது தாயை இவ்வாறான நிர்வாணத்துடன் பார்த்தவன் என்கின்றான் (பார்க்கும் படங்களிலுள்ள பெண்களின் முலையைத் தனது தாயின் முலையுடன் ஒப்பிட்டுக் கதைக்கவும் செய்கின்றான்). இவ்வாறு இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பாடசாலை முன்றலில் இந்த இரு சிறுவர்களும் தண்டிக்கப்படுகின்றார்கள். அவ்வாறு நடுவெயிலில் தண்டனைக்காய் நிறுத்திவைக்கப்படுகையில் பாடசாலைக்கு வரும் பொலிஸ் தங்களைத்தான் தேடி வருகின்றதென நினைத்து இவ்விரு சிறுவர்களும் பாடசாலையை விட்டு ஓடி ஒரு பாழடைந்த கட்டடத்தில் பதுங்கிக்கொள்கின்றார்கள். அவ்வாறு பதுங்கியிருக்கையில் யாரோ நடந்து வரும் காலடிச்சத்தங்களை கேட்டு பொலிசென நினைத்து ஒரு பாலியல் தொழிலாளியைத் தற்செயலாய்க் கத்தியாற் குத்தி -நீதிபதியின் மகன்- கொன்றுவிடுகின்றான். மற்றச்சிறுவன் பொலிசிடம் சென்று நடந்ததைக் கூற, கொலைசெய்த நீதிபதியின் மகன் அலைந்து திரிந்து மியூசியமொன்றில் மீண்டும் பதுங்கிக்கொள்கின்றான்.

மியூசியத்தில் அடைக்கலமாகின்ற சிறுவன் அங்கே வரும் ஒரு சிறுமியோடு நட்பாகின்றான். அந்த (தாயிழந்த) சிறுமியின் தந்தையார் மியூசியத்தில் காவலாளியாக வேலை செய்கின்றார். தனது வீட்டுக்குக் சிறுவனைக் கூட்டிச்செல்கின்ற காவலாளி, நீதிபதியிற்கு தொலைபேசுகின்றார். நீதிபதி, தனது மகன் கொலைக்குற்றத்திற்காய்த் தேடப்படுகின்றார் என்று கூறி அச்சிறுவனை காவலாளியின் வீட்டிலேயே ஒளித்து வைக்கும்படி இலஞ்சம் கொடுக்கின்றார். இதற்கிடையில் நீதிபதியின் மகனே குற்றவாளியாக இருப்பதால் பத்திரிகைகள்/பொலிஸ் நீதிபதியைத் தொடர்ந்து கேள்விகளால் தொந்தரவுபடுத்தியபடி இருக்கின்றார்கள். அதேவேளை காவலாளி வீட்டில் பதுங்கியிருக்கின்ற சிறுவன் தாய் -தனது பதவியின் பொருட்டு- மகனைப் பிடிக்க உத்தரவுகொடுப்பதை தொலைக்காட்சியில் பார்த்து- தன்னோடு மிக நேசமாய் முன்பு இருந்த தாய் இவரில்லையென கோபங்கொள்கின்றான்.

இவ்வாறு கதை ஒருபக்கமாய் நகர்ந்துகொண்டிருந்தாலும் சமாந்திரமாய் இன்னொருவிதமான கதையும் நகர்ந்துகொண்டிருக்கின்றது. இச்சிறுவனின் தந்தையாரும் ஒரு ஓய்வுபெற்ற உயர்நீதிமனற் நீதமானாவார் (Highcourt Judge). அவருக்கும், இச்சிறுவனின் தாயாருக்கும் உற்வு சுமுகமாய் இருப்பதில்லை. எப்போதும் சண்டையும் சச்சரவுமாய் இருக்கின்றார்கள். அச்சிறுவன் பிறந்தபின் 'தாம்பத்ய' உறவு இல்லாது இருவரும் வெவ்வேறு தனித்தனி அறைகளில் வசித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இரகசியங்களை அறிந்த, வீட்டுவேலை செய்து அங்கேயே தங்கியிருக்கும் பெண்ணோடு ஓய்வுபெற்ற நீதமானுக்கு உடல்சார்ந்த உறவு இருக்கின்றது.

இவ்வாறு காவலாளி நீதிபதியிடம் இலஞ்சம் வாங்கி சிறுவனை ஒளித்து வைத்திருந்தாலும் ஒருகட்டத்தில் பொலிஸ் தன்னை நெருங்கத்தொடங்கியதை அறிகின்ற காவலாளி அச்சிறுவனின் தாயிடம் சிறுவனைத் தனது வீட்டிலிருந்து கூட்டிச்செல்லக் கட்டளையிடுகின்றார். இதன் நிமித்தம் மியூசியத்திற்கு இரவில் வருகின்ற நீதிபதிப் பெண், தனது பயங்களை, சிறுவன் மீதிருக்கும் தனது அளவற்ற அன்பைச் சொல்லும்போது, இது சாதாரண தாய் - மகன் உறவைத் தாண்டிய ஒன்று எனக் காவலாளி பதட்டமடைகின்றார். ஒருகட்டத்தில் காவலாளி, 'இச்சிறுவனின் தந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு வாளாவிருந்தாரா? அவரெல்லாம் ஒரு தகப்பனா?' எனத் திட்டும்போது, அப்பெண் மூர்க்கமடைந்து மியூசியத்திலிருக்கும் விலைமதிப்பற்ற பொருட்களை உடைக்கத் தொடங்குகின்றார். காவலாளியும் பொருட்கள் உடைபடுகின்ற கோபத்தில் அப்பெண்ணை மூர்க்கமாய் அடித்து வன்புணரத்தொடங்குகின்றார். வன்புணர்விற்குப் பின், -பெண் பொருட்களை உடைத்ததால்- தனது வேலை போகப்போகின்றதெனக் கவலைப்படும் காவலாளியிடம், இதுவரை காலமும் சிறைபட்டிருந்த தனது உடலை சுதந்திரமாக்கி எனக்குரியதாக்கி மீளத் தந்துவிட்டாயென எக்காளமாய் அப்பெண் சிரிக்கின்றார். அதே கணத்தில் இதுவரை பனிப்பாளமாய் உருகிக்கிடந்த தனது கடந்த கால இரகசியங்களை அந்த மியூசியத்தில் அப்பெண் உடைக்கத் தொடங்குகின்றார்.

Piyumiயின் தாயார் சிறுவயதில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் வேலை செய்துவருகின்றார். அப்பணக்காரத் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தபோது அவரே செவிலித் தாயுமாகின்றார். வளர்கின்ற அந்தப் பணக்கார ஆண், செவிலித் தாயோடு உடலுறவு கொண்டதன் நிமித்தமே Piyumi பிறக்கின்றார். இந்த விசயம் கேள்விப்பட்ட அந்த பணக்காரப் பெற்றோர், இச்சிக்கலிலிருந்து தப்புவிப்பதற்காய் தமது மகனை கேம்பிறிஜுக்கு படிக்க அனுப்புகின்றார்கள். அதேவேளை பிறந்த குழந்தையிற்கும்( Piyumi) நல்ல கல்வி வசதியை ஒழுங்கு செய்துகொடுக்கின்றனர். இவ்வாறு வளர்ந்துவரும் சிறுமி பணக்காரக்குடும்பத்தில் தானுமொரு அதிகாரம் நிறைந்த இராணியாக பிற்காலத்தில் வரும் ஆசையை வளர்த்துக்கொண்டபடியிருக்கின்றார். அவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டுமெனில் அவ்வீட்டு 'இளவரசனை'த் தனது கைக்குள் கொண்டுவரவேண்டுமெனத் திட்டம்போட்டு உடலைச் சூதாட்டமாய்வைத்து அந்த ஆணோடு ஆட்டத்தைத் தொடங்குகின்றார். இந்த உறவை ஒருபொழுதில் கண்டுபிடிக்கின்ற Piyumiயின் தாயார் கடந்தகால உண்மையை உடைக்கின்றார். Piyumi உறவு வைத்திருக்கும் ஆணே Piyumiயின் தகப்பனாகவும் இருக்கின்றார் என்பதைக் கூறுகின்றார். கொஞ்ச நாட்களில் Piyumiயின் தாய் இறந்துபோனாலும், தனது அதிகாரப்போதையை கைவிட முடியாத Piyumi அந்த ஆணையே திருமணமுஞ் செய்து ஒரு குழந்தையையும் (கொலை செய்த சிறுவன்) பெறுகின்றார். சிறுவன் பிறந்தபின்னே Piyumi தனக்குத் தெரிந்த உண்மையை தனது கணவனிடம் (இன்னொருவிதத்தில் தகப்பனுமாய் இருக்கின்றவரிடம்) உடைக்கின்றார். அந்தவேளையில் தனது கணவனின் ஆண்குறி வலியில் விறைத்து ஒரு இரும்பாயிற்று என்று கூறி Piyumi நக்கலாய்ச் சிரிக்கின்றார். Piyumi தான் நினைத்தை நிறைவேற்றியதால் -அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டதோடு- தனது கணவன் + தகப்பனையும் பழிவாங்கிய திருப்பதியோடு தனது மகனோடு நெருக்கமாகின்றார். எல்லாமே பிறழ்வாய் போன அத்தாயிற்கு மகனோடான உறவும் ஒருவிதமான பிறழ்வாய்ப் போய்விடுகின்றது. தொடர்ந்து என்ன நடக்கின்றது என்பதைப் படத்தைப் பார்க்க விரும்புகின்றவர்களுக்காய் விட்டுவிடுவோம்.

சிறுவயது நினைவுகள் (childhood trauma) எப்படி ஒவ்வொருவரையும் பாதிக்கின்றதென ழாக் தெரிதா எழுதியவற்றை வாசித்ததே இக்கதையிற்கான பின்னணி என்று ஒரு நேர்காணலில் கூறுகின்ற அசோகம ஹந்தகம, அதன் நிமித்தமே தெரிதாவின் ஒரு நூலின் தலைப்பையே இப்படத்திற்கும் பெயராக வைத்ததாகக் கூறுகின்றார். எனினும் சிறுவயது பாலியல் துஷ்பிரயோகங்களைவிட இப்படம் பிராய்டிசத்தையே அதிகம் முன்வைக்கின்றது போலத் தோன்றுகின்றது (அல்லது அவ்வாறான காட்சிகளுக்குத்தான் படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது எனத்தான் சொல்லவேண்டியிருக்கிறது). தாயிடம் குழந்தை பால் குடிக்க தொடங்கும்போது குழந்தையிற்கான பாலியல் உணர்வு தொடங்கிவிட்டதென பிராய்ட் குறிப்பிடுவதை நினைவில் கொள்ளலாம் (அதன் மறுமுனையில் தாயிற்குள்ளும் பல விடயங்கள் நிகழும் சாத்தியமுண்டதென மறைபொருளாய்ப் பார்க்கலாம்). அத்தோடு நெறியாள்கையாளரும், தாயிற்கும் சிறுவனுக்குமான நெருக்கங்களைக் காட்டத்தான் அதிகம் மினக்கெடுக்கிறார் போலவும் இப்படத்தைப் பார்க்கும்போது தோன்றுகின்றது.

படத்தில் தாயும் மகனும் நிர்வாணமாய்க் குளிக்கும் காட்சி மிகுந்த சர்ச்சைகுள்ளாகியிருக்கின்றது. தாய்மையைக் கேலிசெய்கின்றதெனவும், வேறு சில காரணங்களுக்காகவும் இலங்கையில் இப்படம் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. அத்தோடு அந்தக்காட்சியிற்காய், படக்குழுவினர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்தின் பேரில் வழக்கும் தொடுக்கப்பட்டிருக்கின்றது. எனினும் அசோக ஹந்தகம அந்தக் காட்சி தனித்தனியே எடுக்கப்பட்டு பிறகு பொருத்தப்பட்டிருக்கின்றதென சாட்சியம் அளித்திருக்கின்றார். மேலும் அப்படத்தின் பெண் ஒளிப்பதிவாளரின் மகனே அச்சிறுவனாக நடித்ததாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு நெறியாள்கையாளரின் சுதந்திரவெளியில் நாமெவரும் தலையிடமுடியாது என்றாலும் நிர்வாணமாய் அப்பெண்ணை, சிறுவனின் முன் குளியலறையில் காட்டியிருக்கத்தேவையில்லை. இப்படத்தில் எத்தனையோ நுட்பமான காட்சிகளை வைக்கத் தெரிந்த நெறியாள்கையாளர் அந்த நிர்வாணக்காட்சியில்லாமலே பார்ப்பவருக்குத் தான் சொல்லவந்ததைத் தெளிவாய்ப் புரியவைத்திருக்கலாம் (Volverல் பாலியல் துஷ்பிரயோகங்கள் நேரடியாகக் காட்சிப்படுத்தப்படாமலே மிக தத்ரூபமாய் பார்ப்பவருக்குப் புரியவைக்கப்பட்டிருக்கும்). பிரான்சு அரசு இப்படத்திற்கு நிதி கொடுக்கின்றதென்பற்காய் பாலியல் குறித்த உரையாடல்கள் இன்னும் ஆரம்ப நிலையிலிருக்கும் இலங்கை போன்ற நாட்டிலிருந்தபடி அதிரடியாக் காட்டவேண்டுமென்பதற்காய் இவ்வாறான காட்சியை எடுக்கவேண்டுமென்ற அவசியமுமில்லை. இல்லாவிட்டால் மேலைத்தேயப் பார்வையாளர்களை நோக்காகக் கொண்டு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கின்றாரென்ற குற்றச்சாட்டை அசோக ஹ்ந்தகம ஏற்கவேண்டியிருக்கின்றது. எனினும் மியூசியத்தில் அப்பெண் வெறித்துப் பார்க்கும், முலைகளையுடைய (இந்து) பெண் தெய்வத்தின் காட்சியை எடுத்திருப்பதன் மூலம் கீழைத்தேயத்தில் கடந்தகாலத்தில் மிகவெளிப்படையாக பாலியல் பேசப்பட்டிருக்கின்றது கதையாடலையும் ஹ்ந்தகம வளர்க்க விரும்புகின்றாரெனவும் வாசிப்புச்செய்யும் சாத்தியமும் உண்டு. இங்கே படைப்பாளியின் வெளியில் குறுக்கிடுவதல்ல எனது நோக்கம். ஆனால் இவ்வாறான காட்சியை வைத்ததால், அதிக உரையாடலக்ளை வேண்டி நிற்கும் மற்ற விடயங்கள் கவனிக்காமற் போய்விடும் என்ற நோக்கிலே -குளியலறைக்காட்சியைத் தவிர்த்திருக்கலாம்- எனச் சொல்லவேண்டியிருக்கிறது. இப்படத்தில், சிறுவர்கள - ஏழை/பணக்காரர்கள்- என்ற வித்தியாசமில்லாது பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவதை நோக்கிக் கேள்வி எழுப்புவதுபோல, 'சுதந்திர இலங்கைக் குடியரசின்' அதிகார அமைப்புக்கள் குறித்தும் எழுப்பப்படும் முக்கியமான கேள்விகள் -தேவையில்லாத சர்ச்சையினால்- முனை மழுங்கிவிடும் ஆபத்துண்டு. முக்கியமாய் நீதிபதியே இலஞ்சம் கொடுத்து தனது பிள்ளையைக் காபாற்றுவதும், ஒரு நீதிபதியாக இருக்கும் பெண்ணையே ஒரு ஆண் சாதாரணமாய் வன்புணரச்செய்யும்போது இந்த நாட்டின் ச்ட்டங்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த நுட்பமான விமர்சனங்கள் இப்படத்தில் எழுப்பப்படுகின்றன என்பதைப் பார்ப்பவர் உணர்ந்துகொள்ள முடியும்.

3.
பெட்ரோ அல்மொடோவரின் Volverம், அசோக ஹந்தகமவின் A leffer of Fireம், அநேக திரைப்படங்களில் நம்மால் பார்க்கமுடியாத பெண்களின் பாத்திரங்களைச் சித்தரிக்கின்றன. தனது மகளைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய கணவனை எரிக்கும் மனைவியை, தனது மகள வன்புணர்விலிருந்து தப்புவதற்காய் கொலை செய்த கணவனின் உடலை சாட்சியங்கள் எதுவுமின்றி அழிக்கும் பெண்ணை, அதிகார வேட்கையுடைய, தனது குழந்தையை அதிகம் நெருங்குவன் மூலம் தனது கணவனை நுட்பமாய்ப் பழிவங்குகின்ற ஒரு மனைவியை/தாயை எனப் பலவேறுபட்ட பெண்களைப் பார்க்கின்றோம். இதுவரைக் காலமும் எழுதப்பட்ட/விவாதிக்கப்பட்ட பெண்/தாயின் பிரதிமைகள் தாய்மை X வேசி என்ற கறுப்பு வெள்ளைப் பார்வைக்குள் கட்டியமைக்கப்பட்டவை குறித்து இவ்விருபடங்களிலும் வரும் பெண்கள் கேள்விகளை எழுப்புகின்றனர். இவ்வாறான தெளிவான அடையாளங்களில் சிக்குபவர்களல்ல பெண்கள், அன்பும், தாபமும், பொறாமைகளும், சூழ்ச்சிகளும், அதிகார வேட்கையும் கொண்ட சாதாரண மனிதர்களே பெண்கள் என்ற புரிதல் இவ்வாறான படங்களைப் பார்க்கும்போது நமக்கு வருகின்றன. மேலும் இதுவே அதிகவேளைகளில் யதார்த்தமாயும் இருக்கின்றன. இவ்வாறான் புரிதல்கள் வருகின்றபோது தாய்மையென்று தலையில் வைத்துக் கொண்டாடுவதையோ... வேசி என்று காலால் உதைத்துப் புறக்கணிப்பதையோ விடுத்து, கலாசார காவலர்களெனும் முகமூடிகளையணியாமல் ஆண்கள, பெண்களைப் பெண்களாகவே விளங்கிக்கொள்ள முயலலாம். பெண்களை அவர்களின் இயல்பில் புரிந்துகொள்ளும்போது பெண்களும் தமக்கான கலாசார வேலிகளைத் தாண்டி (முக்கியமாய் திருமணம்/உறவு/'கற்பு'/கண்காணிப்பு) சுதந்திரமான காற்றை சுவாசிக்கத் தொடங்குவார்கள். அந்த விடுதலை -ஆண்கள்- நமக்கான விடுதலையையும் ஏதோ ஒருவகையில் உறுதி செய்வதாய் அமையவும் கூடும்.

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்