/* up Facebook

May 11, 2013

எவ்வாறு குழந்தைகள் தோற்கிறார்கள் ? - ஆர்த்தி வேந்தன்


நீண்ட நாட்கள் கழித்து எழுதுகிறேன். இடையில் எழுத முயற்சி செய்து தோற்றுப்போனதற்கான காரணங்களை தேடி கொண்டிருகிறேன். இப்போது இந்த பிரதியை எழுதுவதற்கான காரணம் வேடிக்கையாக இருக்கிறது. சில உறவுகளை பிடித்து கொள்ளவும் முடியாமல், கடந்து செல்லவும் முடியாமல்  தவித்து போவது உண்டு. பிரிவை பற்றிய நம் கற்பனையின் வலிகளை தாங்கி கொள்ள முடியாமல் எதாவது அர்த்தமற்ற செயல்களை செய்து  அந்த உறவுகளுக்கு  நம் இருப்பை உறுதி செய்து கொள்வோம். அது போல் தான் இதுவும் என் இருப்பை, எனக்கும் எழுத்துக்குமான உறவை தக்க வைத்து கொள்வதற்கே இதை எழுதுகிறேன்.

வெறுமையும் குழப்பங்களையும் எழுத்துக்குள் புகுத்த  முயற்சி செய்ததால் தான் நான் தோற்று போயிருக்க கூடும்.  இப்போதும் அதே வெறுமையும் குழப்பங்களும் தான் தேங்கி உள்ளது. பாறையின் நடுவே பூக்கள் பூத்தது போல வெறுமையின் நடுவில் சில நம்பிக்கைகள் மொட்டுவிட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும் என் நம்பிக்கையின் விதையாக இருப்பது என் நிலா.  என் சுயத்தை மறைத்து கொள்ளாமல். பொய்யான புன்னகைகள் மாட்டி கொள்ளாமல், எதிர்பார்புகளை திணிக்காமல் , நிராகரிப்பு பற்றிய பயங்கள் இல்லாமல், பிரிவை பற்றிய எண்ணங்கள் இல்லாமல், அன்பை மட்டும் முழுமையாக தரவும் பெற்று கொள்ளவும்  நிலா வருவாள்.

எல்லாமே அர்த்தமற்றதாக தெரியும் தருணங்களில் புத்தகம் கூட கை கொடுக்க மறுக்கிறது. ஆனால் அதுவே என் நிலாவிற்கான புத்தகம் என்றால் அது என் ஆன்மாவை மீட்டெடுக்கிறது. கல்வி என்னும் கட்டமைப்பின் மீது பெரிதும் வெறுப்பும் அவநம்பிக்கையும் கொண்டுள்ள எனக்கு என் நிலாவிற்கு நான் தரும் பரிசுகளில் மிக முக்கியமான ஒன்றாக ஜான் ஹோல்ட் யின் How Children Fail என்ற புத்தகம் இருக்கும். தலைமுறை தலைமுறையாக  கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் சந்தோஷத்தை பறித்து கொள்ளும் அபாயத்தில் இருந்து என் நிலாவை பாதுகாக்க என்னிடம் சில நியாங்களும் அனுபவங்களும் உண்டு. தன் அனுபவங்களை கொண்டு அவளே தெரிந்து கொள்ளட்டும் என்ற வறட்டுத்தனமான முற்போக்கு  சிந்தனைகளை கொண்டு எந்த பாவங்களையும் செய்ய மனது இடம் கொடுக்கவில்லை.. கல்வியின்  பெயரில் நிகழும் அபத்தங்களை இந்த புத்தகம் மிகவும் எதார்த்தமாக விவரிக்கிறது. 

கல்வி வியாபாரமாகி  போனதும் கல்வியின் நோக்கம் வழி மாறி போனதை பற்றி அதிகம் விவாதிக்க படுவது  போல கல்வி முறையால் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கபடுவதும் அதனின் பிரதிபலிப்பு வாழ்க்கை முழுவதும் தொடர்வதும் பற்றிய புரிதல் அல்லது அக்கறை நமக்கு இல்லை என்பது தான் உண்மை. 

தொடக்க காலத்தில் ஆசிரியராக பணி புரிந்த  ஜான் ஹோல்ட் பிற்காலத்தில் வீட்டு கல்வி இயக்கத்தின் (Home Schooling Movement ) முக்கிய ஆதரவாளராக மாறினார். தான் ஆசிரியராக இருக்கும் போது குழந்தைகளுடன் ஏற்பட்ட அனுபவங்களையும் கல்வி கட்டமைப்பின் சிக்கல்களையும் அதை உடைப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் இயலாமைகளையும் பதிவு செய்து உள்ளார்.

பொதுவாகவே கல்வி முறைக்கு எதிரான  புத்தகங்களை, பள்ளிகூடங்களில் அதிகம் நிராகரிக்கபட்ட அல்லது அதிக முறை தோல்வி அடைந்தவர்களால் மட்டுமே அதனின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியும். இந்த புத்தகம் அவர்களுக்கான குரல் மட்டும் அல்லாமல் எப்போதும் வெற்றியை தக்க வைத்து கொள்ள 'வெற்றி அடைந்த' (?) குழந்தைகளின் மன அழுத்தத்தையும் பதிவு செய்கிறது.

கல்வி என்னும் கட்டமைப்பு தான் குழந்தைகளுக்கு பயத்தை அறிமுக படுத்துகிறது. நாம் அவர்கள் மீது செலுத்தும் எதிர்பார்ப்புகள் அவர்களின் மிக பெரிய சுமையாக மாறுகிறது. நாம் கொடுத்திருக்கும் வேலையை அவர்கள் 'ஒழுங்காக' (நாம் எதிர்பார்த்த படியே, அதே முறையில்) செய்கிறார்களா என்பதில் கவனம் செலுத்துகிறோமே தவிர அவர்கள் வேற என்ன செய விரும்புகிறார்கள் என்பதில் எந்த கவனமும் இல்லை. அவர்களின் எல்லா செயல்களையும் சரி தவறு என்ற வட்டத்துக்குள் அடைத்து விடுகிறோம். அவர்களின் செயலை தவறு என்று நாம் தீர்ப்பு வழங்குவதின் நோக்கம் அதை மீண்டும் செய்ய கூடாது என்பதற்கு மாறாக  அவர்களை குற்ற உணர்ச்சியில் தள்ளிவிடுவதிலே குறியாக இருக்கிறோம்.

வகுப்பில் கேள்விகள் கேட்டு தெரிந்தவர்கள் கையை தூக்கு என்று சொல்லும் போது அந்த நொடி குழந்தைகள் மனதில் ஓடும் அந்த நடுக்கமான எண்ணங்கள் தான் நம் கல்வியின் விளைவுகளை உண்மையாக பிரதிபலிக்கும்.  கேள்விக்கான  பதிலை பற்றி யோசிக்காமல் 'நமக்கு பதில் தெரியவில்லை என்றால்.. மறந்து விட்டால்.. கடினமான கேள்வி கேட்டுவிட்டால்..நிற்க வைப்பார்களா. .முட்டி போட  வைப்பார்களா..'' எத்தனை கேள்விகள், பதட்டங்கள் பிஞ்சு மனதில்!

எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று குழந்தை ஏன் நம்புகிறது? பதில் தெரியவில்லை என்றால் 'எனக்கு தெரியவில்லை' என்று சொல்வதற்கு ஏன் ஏதோ பாவ செயலை செய்ததை போல் பயப்படுகிறது?  விடை தெரியாத சில புத்திசாலி குழந்தைகள் ஆசிரியர்களை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள். எல்லாம் தெரிந்தது போல் உட்காந்து கையை  மேலே தூக்கினால் அவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறனர். இந்த 'escape strategy ' யை ஏன் குழந்தைகள் பின்பற்றுகின்றனர். அவர்களின் இயல்பை ஏற்று கொள்வதற்கான இடத்தை ஏன் நாம் தருவதில்லை?

குறிப்பிட்ட பாடத்தில் சிறந்து விளங்கும் குழந்தை வேறு பாடத்தில் குறைந்த மதிப்பை பெற்றால் , ஏதோ நம்பிக்கை துரோகம் புரிந்தது போல் அவர்களை குற்றவாளி கூண்டிற்குள் ஏன் நிற்பாட்டுகிறோம்?

இது வெறும் ஒரு சிறிய சம்பவமோ எடுத்துகாட்டாக மட்டும் பார்க்க இயலாது.  நம் இயல்பை ஏற்று கொள்ளாமல், நமக்கு என பிடிக்கும், எதில் ஆர்வம் உள்ளது என்று  தெரிந்து கொள்ளாமல் 'escape strategy ' யை வைத்து வாழ்க்கை  முழுவதும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளமுடியாமலே  கடந்து செல்வதற்கான அடித்தளம். 

மீண்டும் மீண்டும் இந்த புத்தகத்தில் அவர் சொல்வது ஒன்றே ஒன்று தான் 'குழந்தைகளை நம்புங்கள்'! குழந்தைகளை நம்புங்கள் அதைவிட மேலானது எதுவுமில்லை. அல்லது அதிக கடினம் எதுவும் இல்லை. ஏனெனில் குழந்தைகளை  நாம் நம்ப வேண்டுமானால் முதலில் நம்மை  நாமே நம்ப வேண்டும்.
 அச்சம், அவநம்பிக்கை என்று நீண்டகாலமாக நிலைத்து வரும்  சுழற்சியை உடைபதன் மூலமும் நம்மை நாமே நம்பவில்லை என்றாலும் குழந்தைகள் மீது நம்பிக்கை வைபதன் மூலம் சாதிக்க வேண்டும். இதை சாதிபதற்கு மிக பெரிய நம்பிக்கை வேண்டும் இதனை  நாம் சாதித்து விட்டால் அபூர்வமான புதையலே நமக்காக காத்திருகிறது.,

என் நிலாவிற்கு வீட்டு கல்வி முறையை தருவதிலே எனக்கு விருப்பம். இருநூறு ஆண்டு பழைய கல்வியை காட்டிலும்  மனிதர்களும் பயணங்களும், புத்தகங்களும், கலைகளும் என் நிலாவிற்கு இந்த உலகத்தை கற்று தரும். 

வீட்டு கல்வி முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு புத்தகங்களையும் நாளிதழ்களையும் புரட்டி கொண்டே இருக்கிறேன். கண்களுக்கு தெரிவது எல்லாம் குழந்தை பாலியல் வன்முறை செய்திகளே. என் நிலாவை கல்வி என்னும் சிறைசாலைக்கு அனுப்பாமல் இருப்பதை காட்டிலும் அவளை இந்த பூமிக்கு அறிமுக படுத்தாமல் எனக்குள் கனவாகவே வைத்திருப்பது பெரிய பரிசாக தோன்றுகிறது. நான், நிலா , என் கனவுகள்.....நம்பிக்கையின் விதைகள்..

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்