/* up Facebook

May 31, 2013

மறைக்கப்படுகிறதா தலித் மாணவர்களுக்கான அரசாணை? - கவின்மலர்மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 2012 ஜனவரி 9 அன்று ஒர் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்படி தமிழகத்தில் அனைத்து விதமான படிப்புகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 100% கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. தமிழக அரசு இந்தச் செய்தியை சரியான முறையில் பிரசாரம் செய்யாத காரணத்தால், விஷயம் தெரியாத பல மாணவர்கள் சென்ற கல்வியாண்டில் பணத்தைக் கட்டினார்கள். பலர் பணம் கட்ட முடியாமல் உயர்கல்வியை கைவிட்டனர். தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை வெளியிட்ட அந்த அரசாணைப்படி சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அனைத்து படிப்புகளுக்கும், அரசு ஒதுக்கீடு செய்த இடங்களில் பயிலும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களிடம் பெறப்பட்ட தொகை முழுவதையும் 2011-~12 கல்வி ஆண்டில் இருந்து திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

அரசு இந்த அரசாணை குறித்து போதிய அளவில் விளம்பரம் செய்யவில்லை. கல்விக்கட்டணம், டியூஷன்கட்டணம், விளையாட்டு, மாணவர் சங்கம், நூலகம், பத்திரிகைகள், மருத்துவப் பரிசோதனை போன்ற கட்டணங்களும் இதில் அடங்கும். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் இவை பொருந்தும். இரண்டு லட்ச ரூபாய் வரை வருமான வரம்புள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டிய தலித் மாணவர்களில் பலருக்கு இந்த அரசாணை குறித்து தெரியவில்லை. ஏனெனில் செய்தித் தாள்கள் மூலமாகவோ, பிற ஊடகங்கள் மூலமாகவோ தமிழக உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என்று எந்தத் துறையுமே பொதுமக்களிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்கவில்லை.

2011-12 கல்வி ஆண்டில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆணையில் இருக்கிறது. அப்படியென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறியியல், மரு த்துவம், தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் துறையில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் இந்த ஆணை பொருந்துகிறது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அரசு ஆணை விஷயம் தெரியாததால், மாணவர்கள் கட்டணம் செலுத்த சென்ற ஆண்டு நிர்பந்திக்கப்பட்டார்கள். பொறி யியல் மற்றும் மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் கட்ட ணம் கட்ட இயலாத நிலையில், இடை நீக்கம் செய்யப்படும் சூழலும் உருவானது. 

“2012 ஜூலை மாதத்தில் நாங்கள் இது குறித்து   கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன்பிறகு ஊடகங்களில் ஓரளவுக்கு செய்தி வெளியானது. ஆனாலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. மதுரையைச் சுற்றியுள்ள 30 கல்லூரிகள் அரசாணை தங்களுக்கு வரவில்லை  என்கின்றன. அந்த கல்லூரிகளை அழைத்து மே 22 அன்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினோம்” என்கிறார் துடி இயக்கத்தைச் சேர்ந்த பாரதிபிரபு.

அரசாணை 6  மேம்படுத்தப்பட்டு  1.9. 2012 அன்று சில திருத்தங்களுடன் அரசாணை 92 வெளியிடப்பட்டது. இதன்படி  அரசாணை 92 நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று கண்காணிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நியமிக்கப்படவில்லை.  கல்வியாளர் பேராசியர் பிரபா கல்விமணி ’’மக்கள் கல்வி கூட்டமைப்பு சார்பாக மே 16 அன்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் இந்த அரசாணையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை எதிர்க்க ஊர் ஊராகச் சென்று கூட்டம் நடத்தவிருக்கிறோம். அப்போது இந்த அரசாணை குறித்தும் பேசி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் திட்டம் இருக்கிறது.கடந்த ஆண்டு போல் ஆகிவிடாமல், இந்த ஆண்டாவது முழுமையாக விஷயம் மாணவர்களையும் பெற்றோரையும் சென்றடைய வேண்டும்” என்கிறார். எது எதற்கோ அரசுப் பணத்தை செலவிடுகிறது அரசு. ஈராண்டு சாதனைகளைப் பட்டியல் இடும் விளம்பரச் செலவில் கொஞ்சம் இதற்கும் செலவிட்டு இந்த அரசாணை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

நன்றி - கவின்மலர்
...மேலும்

May 30, 2013

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! - பவள சங்கரி


உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூக சேவகி சுனிதா கிருஷ்ணன். யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ?

விஜயவாடா நகரம். வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தில் மாலினி என்ற 15 வயது பெண். வேலை பார்த்து குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் குடும்ப உறவினர் ஒருவர் அப் பெண் என்று சொல்வதை விட குழந்தை என்றே சொல்ல வேண்டும். அப்பெண் குழந்தையை கூட்டிச் சென்று, ரூ.1.5 லட்சத்திற்கு , ஒரு விபசார விடுதியில் விற்று விட்டார்கள். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல்! கேட்கவே மனம் பதறும் இந்த கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டு, சிறைக் கைதியைப் போன்று அடைத்து வைக்கப்பட்ட அந்த குழந்தை வெளியே தப்பித்து வர மூன்று முறை முயன்றும், தோற்றுப் போன மாலினி இறுதியாக சுனிதா கிருஷ்ணனின் திறமையான செயல்பாடுகளால் காப்பாற்றப்பட்டு, ஐதராபாத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாள். இது போன்று பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக கொண்டு தள்ளப்படும் பரிதாபமான சீவன்களை காப்பதே தன் தலையாக் கடமையாகக் கொண்டு செயல்படும் ஒரு நல்ல உள்ளம்தான் இந்த சுனிதா கிருஷ்ணன்.

பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே அறிவார்ந்த செயல் என்பார்கள். அதற்கொப்ப, பாலியல் தொழிலில் உழண்டு கிடந்த பெண்களை காப்பாற்றுவதோடு அவர்தம் குழந்தைகளையும் அதிலிருந்து மீட்டு, மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்களுக்கு 18 கல்விக் கூடங்களும், தங்கும் விடுதிகளும் பிரஜ்வாலா நடத்துகிறது. அது மட்டுமில்லாமல் ஹெச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்டோருக்கும் இவருடைய உதவிக்கரம் நீண்டுள்ளது. பெங்களூருவில் பிறந்து, சமூக சேவையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இவருடைய சமூக சேவையை தம்முடைய 8 வது வயதிலேயே, மன வளம் குன்றிய குழந்தைகளுக்கு நாட்டியம் கற்றுக் கொடுப்பதன் மூலம் தொடங்கியுள்ளார். தன் 12ம் வயதிலேயே சேரி வாழ் குழந்தைகளுக்கு பள்ளிக் கூடங்கள் அமைத்துள்ளார். மன வளம் குன்றிய ஒரு 13 வயதுப் பெண் குழந்தையை பாலின அடிமையாக்கி வைத்திருந்த ஒரு கூட்டத்திடமிருந்து, மற்ற மூன்று பாலின தொழிலாளிகள் உதவியுடன் மீட்டதுதான் இவருடைய முதல் சேவை. இந்த முயற்சியில் பல முறை, அடி, உதை என்று வாங்கி இருப்பதோடு ஒரு முறை செவிப்பறை கிழியும் அளவிற்கு வதை பட்டிருக்கிறார். அதற்குப் பிறகே தன்னால் தனித்து நின்று இப் பணியைச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, இன்று காவல் துறை, சட்ட வல்லுநர்கள் என்று ஆக்கப்பூரவமான அணுகு முறையுடன் இன்று சரியான திட்டம் தீட்டி, செயல்பட்டு வருகிறார். பல பரிசுகளும், பட்டங்களும் வென்றிருக்கும் சுனிதா, இந்திய அரசாங்கத்தால் ’ஸ்த்ரீ சக்தி புரஸ்கார்’ என்ற பெண்கள் தின சிறப்புப் பரிசும் வென்றுள்ளார்.

தன் 16 வது வயதில் ஒரு ரௌடிக் கும்பலால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, அதற்குப் பிறகு நான்கு சுவற்றின் மத்தியில் அடைப்பட்டு, சுய பச்சாதாபத்தால் ஒடுங்கிப் போகாமல், அதிலிருந்து மீண்டு வந்ததோடு, அதையே சவாலாக எடுத்துக் கொண்டு இன்று பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு உறு துணையாக நேரடியாக களத்தில் இறங்கி சேவைகள் பல புரிந்து கொண்டிருக்கிறார். இவருடைய சேவைத் திட்டங்கள் இந்தியாவுடன் நின்று போகாமல் இன்று கம்போடியா, அமெரிக்கா என்று பரவிக் கொண்டிருப்பதே இவரின் வெற்றியின் அடையாளம் எனலாம். “பாலியல் வன் முறை ” என்பதன் வலியை நேரடியாக உணர்ந்தவள் என்ற முறையில் என் நோக்கம் அது போன்று வேதனையில் துடிக்கும் பாலியல் அடிமைகளை மீட்டுக் கொண்டு வருவதிலேயே செயல்பட ஆரம்பித்து விட்டது” என்று கூறும் இவர் பெண்கள் தங்களுக்கு கொடுமை இழைக்கும் கயவர்களின் வன் முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ” தங்கள் மௌனக் கலாச்சாரத்தைப் பிளந்து கொண்டு வெளியே வர வேண்டும் என்றும், பெண்களை பாலியல் அடிமைகளாக்கும் போக்கு அறவே ஒழிக்கப்பட வேண்டும். அது போன்று முழுமையாக பெண்கள் மௌனச் சிறையிலிருந்து வெளியே வந்து, இது போன்ற அநீதிகளுக்கு முடிவு வரும் நாளே நம் சமூகத்தின் உண்மையான மாற்றங்களைக் காணப் போகும் நாள்” என்று முழங்குகிறார், 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பல்லோரை காப்பாற்றியிருக்கும் இந்த நாயகி!வாழ்க நவீன புரட்சி நாயகி, இன்னுமொரு அன்னை தெரெசா!

Stree Shakti Puraskar – Government of India Women’s Day awards announced – The Hindu

இன்னொரு மனிதரின் தகுதியை ஒரு போதும் குறைத்து மதிப்பிடாதே ! உனக்கும்  அதே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. – லே ஸ்டெயின்பெர்க்.

படத்திற்கு நன்றி.

தகவல் உதவி – இந்து நாளிதழ், நன்றி.
...மேலும்

May 29, 2013

மொழி மேலாதிக்க மனோநிலை சரியா? - அப்துல் ஹக் லாரீனா


நாம் நம்முடைய தாய் மொழியை மிகவும் நேசிக்கிறோம். அது மிகச் சிறந்தது என்ற பெருமிதம் கொள்கின்றோம். எல்லாம் சரிதான். ஆனால், மற்ற எந்த மொழியும் என்னுடைய மொழியை விட சிறப்பானது அல்ல என்றோ, அனைத்து மொழிகளும் என்னுடைய மொழியை விடக் கீழானவை/குறைவானவை என்றோ கருதுவோமானால், அது ஆரோக்கியமான பார்வை அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

எல்லா மொழியும் சிறந்ததுதான். அவரவர் பேசும் மொழி அவரவர்க்கு மிக உன்னதமானதுதான். என்றாலும், எல்லாவற்றையும் மறுதலித்துத்தான் நான் என்னை நிலைநிறுத்த வேண்டும் என்று நினைப்பது தவறு. மொழி விஷயத்திலும் அதுதான் யதார்த்தம். என்னுடைய மொழியை நான் சிறப்பிப்பது தவறு இல்லை. அதேநேரம், மற்ற மொழியில் இல்லாதது என் மொழியில் உள்ளது என்ற தர்க்கம், நியாயமானதல்ல. ஏன் என்றால், மறுதலையாக, நமது மொழியில் இல்லாத பல விஷயங்கள் அந்த மொழிகளில் இருக்கலாம்.

இன்னும் சற்றுத் தெளிவாகவே இதை நோக்குவோம். மொழி என்பது அது வாழும்/இயங்கும் சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டே வளர்கிறது. அது புழக்கத்தில் உள்ள பிரதேசம், காலநிலை, மக்கள் குழுமம், அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் முதலான இன்னோரன்ன அம்சங்களின் தாக்கம் அம்மொழியில் பிரதிபலிக்கும். அதற்கமைய அதன் சொற் களஞ்சியம் பெருகி வளரும். யானையுடனான தொடர்பு தமிழ்ச் சமூகத்துக்கு அதிகமாய் இருந்ததால் அதனைக் குறிக்க நிறையச் சொற்கள் இருப்பது போல, பனித்துருவப் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களின் மொழியில் பனியை அதன் இயல்பு, வடிவம், நிறம், செறிவு முதலான அடிப்படையில் குறிப்பதற்கு ஏராளமான சொற்கள் உள்ளன. அவ்வாறே, பாலைவனப் பிரதேசங்களில் வாழும் மக்களின் மொழியில் அது குறித்த மிக நுணுக்கமான வேறுபாடுகளுடன் கூடிய ஏராளமான சொற்கள் வழக்கில் இருக்கும். ஆனால், பனி குறித்தோ, பாலைவனம் குறித்தோ அவ்வந்த மொழிகளில் வழக்கில் உள்ள அத்தனைச் சொற்களும் தமிழில் இருக்காது. ஆங்கில மொழியில் அறிவியல் தொழினுட்பத் துறைகளில் உள்ள சகல கலைச் சொற்களுக்கும் ஈடான சொற்கள் தமிழில் இல்லாதது போல, தமிழ்ப் பேசும் சமூகங்களின் கலை, கலாசார அம்சங்கள் தொடர்பான கலைச் சொற்கள் ஆங்கிலத்தில் இருக்காது.

இவ்வாறு அவ்வந்த மக்கள் குழுமம் பயன்படுத்தும் மொழி, அதன் பயன்பாட்டுக் அமைவாகவே புதுச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறது; வளர்ச்சி அடைகின்றது; நின்று நிலைக்கிறது. 

எனவே, எல்லா மொழியும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமும் சிறப்பம்சங்களும் கொண்டது தான்.

நமது மொழியை நாம் நேசிப்போம்; மற்ற மொழியை மதிப்போம். மாறாக, "என் மொழியில் தான் எல்லாம் இருக்கிறது. எனவே, அதுதான் தலையாயது " என்ற மேலாதிக்க மனோபாவத்தை மறுதலிப்போம். உண்மையில் அது ஒரு மாயை. யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட வெறும் கற்பனை.

மொழி என்பது அற்புதமான ஓர் ஊடகம். ஓர் இணைப்புப் பாலம். அது மனிதர்களையும் சமூகங்களையும் ஒன்றுடன் ஒன்று இணைக்க உதவ வேண்டுமே தவிர, பிரிக்கவோ வேறுபாட்டை வளர்க்கவோ உதவக் கூடாது. இது என் தாழ்மையான கருத்து.

அப்துல் ஹக் லாரீனா - முகநூல்வழியாக
...மேலும்

May 28, 2013

எனது மகளுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது : ஜோர்தானில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தாயார்


ஜோர்தானில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமான தனது மகளை பார்த்த கடைசி நாள் செப்டம்பர் மாதம் 14ம் திகதி என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

ஜோர்தான் நாட்டில் மற்றமோர் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த நான் 4 வருட ஒப்பந்தம் முடிந்து சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி திரும்புவதற்கு முதல் நாள் தான் மகளை இறுதியாக பார்த்த நாள் ஆகும்.

அதாவது செப்டம்பர் மாதம் 14ம் திகதி வீட்டு எஜமானுடன் நான் தொழில் புரிந்த வீட்டிற்கு வந்து தனது மூன்று மாத சம்பளத்தையும் தந்து வழி அனுப்பி வைத்தார்.


அன்று உயிருடன் பார்த்த மகளை இன்று சடலமாக காண்கிறேன் என ஜோர்தான் நாட்டில் துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த வாழைச்சேனை கறுவாக்கேனியை சேர்ந்த பணிப் பெண் நாகேந்திரன் காந்திமதி (21வயது) என்பவரின் தாயார் நாகேந்திரன் மங்களேஸ்வரி (வயது 46) கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6ம் திகதி மரணமடைந்த இவரது மகளது சடலம் ஜோர்தான் நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்தினால் பொறுப்பேற்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தது.

விமான நிலையத்தில் உறவினர்களினால் பொறுப்பேற்கப்பட்டு தற்போது கறுவாக்கேனியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தனது மகளின் மரணத்தில் வீட்டு எஜமான் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தனது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாகேந்திரன் மங்களேஸ்வரி தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“எனது குடும்பத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பிள்ளைகள், கணவன் நாளாந்த கூலித் தொழில் செய்பவர். அவரது உழைப்பு போதாது. பிள்ளைகளுக்கு வீடு கட்ட வேண்டும் என குடும்பத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே 2008ம் ஆண்டு நான் அந்நாட்டிற்கு முதலில் பணிப்பெண்ணாக சென்றிருந்தேன். எனது வீட்டுகாரர் என்னை நன்றாக கவனித்தார்கள். எனக்கு எந்தப் பிரச்சினைகளும் இருக்கவில்லை.

நான் மட்டும் உழைப்பது போதாது அம்மாவுடன் சேர்ந்து தானும் அங்கு வந்து உழைக்க வேண்டும் என விரும்பி தனது 18வது வயதில் 2010ம் ஆண்டு ஜுலை 22ம் திகதி எனது மகள் மற்றுமொரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக தொழில் புரிய 2வது மகள் காந்திமதி அந்நாட்டிற்கு வந்திருந்தார்.

அவர் அமெரிக்க நாட்டவர் ஒருவரது வீட்டிலே தொழில் புரிந்தார். அந்த வீடு அமைந்துள்ள இடம் மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசம். வீட்டு எஜமானுக்கு இரண்டு ஆண்கள் உட்பட மூன்று பிள்ளைகள். வீட்டில் பிள்ளைகளோ, மனைவியோ நிரந்தரமாக தங்குவதில்லை. இடையிடையே வந்து போவார்கள். அநேகமாக வீட்டில் எஜமானுடன் அவரது 2வது மகன் தங்குவது வழக்கம். பெண்களே தங்குவது இல்லை.

அந்த வீட்டில் ஏராளமான நாய்களும், பூனைகளும் வளர்கப்படுவதால் மகள் தான் அவற்றை பராமரிக்கவும் வேண்டும். அந்நாட்டில் நான் தங்கியிருந்த நாட்களில வேலை மகளுடன் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு இருந்தது. மகள் தான் எஜமானாலும், அவரது மகனாலும் கொடுமைப்படுத்துவது பற்றி கூறி அழுவார்.

ஒரு தடவை முகத்தில் சுடு நீர் ஊற்றப்பட்டுள்ளது. கையில் பீளேட்டினால் கீறப்பட்டுள்ளது. பீங்கானால் தலையில் தாக்கப்பட்டுள்ளார் என தான் அனுபவித்த கொடுமைகளை சொல்லி அழுத மகள் எதிர்வரும் ஜுலை மாதம் 3 வருட ஒப்பந்தம் முடிந்தாலும் நாட்டிற்கு போக முடியாது என கூறி தன்னை மிரட்டுவதாகவும் என்னிடம் கூறுவார்.

நான்கு வருடங்களில் அந்நாட்டில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து நாடு திரும்புவதற்கு முன் மகளையும் அழைத்த போது தனது ஒப்பந்தம் எதிர்வரும் ஜுலையில் முடிவதால் அதன் பின்னர் வருவதாக கூறியிருந்தார். ஆனால் மகளது சடலம் தான் வந்துள்ளது.

கடந்த 19ம் திகதி அந்நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்திருந்து வந்த தொலைபேசி தகவலில் ஆரம்பத்தில் மகள் இறந்து சடலம் வைத்தியசாலையில் இருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நாம் அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு துருவி துருவி கேட்ட போது கடந்த 6ம் திகதி வீட்டில் சிறிய பிரச்சினையொன்றில் துவக்கு சூட்டில் இறந்து விட்டார். தன்னை தானே சுட்டதாக வீட்டுகாரர் கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்தனர்.

என்னை பொறுத்தவரை எனது மகள் தனக்கு தானே வெடி வைத்து மரணமடைந்தாக கூறப்படுவதை ஏற்க முடியாது. அவர் துப்பாக்கியால் சுடுவது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் அவரால் எப்படி தனக்கு தானே வெடி வைக்க முடியும்.

எனவே என்னை பொறுத்தவரை வீட்டு எஜமான் மீதும், அவரது மகன் மீதும் தானக்கு சந்தேகம் உள்ளது. ஏற்கனவே இருவரும் கொடுமைகாரர்கள். மகளை கொடுமைப்படுத்திய அடையாளங்கள் கூட அவரது முகத்திலும், தலையிலும் உள்ளது என்றும் மரணமடைந்தவரின் தாயார் மேலும் தெரிவித்தார்.
நன்றி - வீரகேசரி / பிபிசி / மீனகம் / கலாபம்
...மேலும்

May 27, 2013

சாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும் - கவிதா முரளிதரன்


ஜனவரி 3ந்தேதி உயிரெழுத்து பதிப்பகம் நடத்திய நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு நானும் முரளியும் சென்றிருந்தோம். நண்பர்களைப் பார்ப்பதற்காக நாங்கள் இந்த விழாக்களுக்கு போவதுண்டு. குறிப்பிட்ட அந்த விழாவில் பல ஹைலைட்டுகள்.

எனக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாகப் பட்டன. ஒன்று, விழாவுக்கு தலைமை தாங்கிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் அப்துல் ரகுமானைப் புகழ்ந்து சொன்ன சில வார்த்தைகள். பல வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு எழுத்தாளர் கோட்டாவில் எம்.பி.பிஎஸ் சீட் பெறுவதற்கு அப்துல் ரகுமான் காரணமாக இருந்தார் என்று குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். தனது மகள் 600க்கு 596 மார்க்குகள் எடுத்ததாக சொன்னார் அவர். “அதற்கு மேல் அவளால் எடுத்திருக்க முடியாது. ஆனால் நான் பிறந்து வளர்ந்த சாதியின் சுமை காரணமாக அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை” என்று சொன்னார். பிறகு பேசிய யாரோ ஒருவர் அவர் பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்.

2006ல் International Dalit Solidarity Network என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வகுப்பறைகளில் கடைசி பெஞ்சுகளில் உட்கார கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களுடன் சேர்ந்து மற்ற சாதியினர் உணவருந்துவதில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது. இந்திய அரசின் ஒரு அறிக்கைப்படி கிட்டத்தட்ட 73 சதவிகிதம் தலித் மாணவர்கள் பள்ளியிறுதி முடிவதற்குள் பள்ளியிலிருந்து விலகி படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். காரணம், பள்ளிக்கூடங்களில் அவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலேயே பல பள்ளிகளில் கழிவறைகளை கழுவவும் வகுப்பறைகளை கூட்டவும் தலித் குழந்தைகள்தான் பயன்படுத்தப்படுகிறார்கள்.

இதில் எதுவும் நாஞ்சில் நாடனின் மகளுக்கு நிகழ்ந்திருக்காது. அவருடைய பள்ளிக்கூட படிப்பு மிகவும் உயர்தரமான ஒன்றாக இருந்திருக்கும். தலித் மாணவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

நாஞ்சில் நாடன் சாதியின் சுமை என்று எதைச் சொல்கிறார்?

அப்துல் ரகுமானை பாராட்டும் அவசரத்தில் அவரை ‘ஆண்மையுள்ள கவிஞர்’ என்றும் குறிப்பிட்டார். ஆண்மை என்பதற்கு சமூகம் வைத்திருக்கும் போலியான வரைமுறைகளுக்கு நாஞ்சில் நாடன் என்னும் மகா எழுத்தாளனும் தப்பவில்லை.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது. பிறகு பேச வந்த அப்துல் ரகுமான் ‘ஆண்மையுள்ள’ ஒரு கவிஞராகவே நடந்துகொண்டார். அவரது பேச்சில் ஆணாதிக்கம் மிளிர்ந்தது. சக்தி ஜோதியின் கவிதை தொகுப்பை வெளியிட்டு பேசியவர், ‘செக்ஸ் கவிதைகள்’ எழுதுவதாக இன்றைய பெண் கவிஞர்களை கடுமையாக சாடினார். “நீங்களெல்லாம் ஏன் எழுதறீங்கனு இருக்கு. பின் பக்கம் எழுத போக வேண்டியதுதான். ஏன் இலக்கியம் பக்கம் வர்ற?” என்று மிகக் தரக்குறைவாக பேசினார். உச்சபட்சமாக, சக்தி ஜோதியின் கவிதை ஒன்றை வாசித்துக்காட்டி, ‘”இதுவும் செக்ஸ் கவிததான். ஆனா எப்படி இருக்கு பாரு. நாகரீகமா பண்பாடு மீறாம இருக்கு, நீயும் எழுதறியே?” என்று ஏக வசனம்.

பெண் கவிஞர்கள் எழுதும் கவிதைகள் பாலியலை அரசியலாக்குகிறது. பாலியல் அடிப்படையில் பெண்ணுடல் மீது ஆதிக்கம் செலுத்த விழையும் ஆணாதிக்கப்போக்கை கேள்விக்குட்படுத்துகிறது. இது எதையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க மனதின் வெளிப்பாடே அப்துல் ரகுமான் போன்றவர்களின் விமர்சனங்கள், ‘செக்ஸ் கவிதைகள்’ என்று கொச்சைப்படுத்துதல்கள்.

விழாவுக்குப் போகாமல் இருந்திருந்தால், நாஞ்சில் நாடன் மீதிருந்த மரியாதை எஞ்சியிருக்கும்.

நன்றி / நீரோட்டம்
...மேலும்

May 26, 2013

ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டாரா?


ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 6-ம் திகதி உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறுகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றுள்ளார்.

அவரது தாயாரும் அந்நாட்டில் வேறொரு வீட்டில் பணிப் பெண்ணாக தொழில் புரிந்துவிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி நாடு திரும்பியிருந்தார்.
நாகேந்திரன் காந்திமதி ஜோர்தானில் தொடர்ந்தும் பணிப்பெண்ணாக தொழில் புரிந்துவந்துள்ளார்.

'வீட்டு எஜமான் கொடுமை'
தனது மகளின் மரணம் தொடர்பாக ஜோர்தானிலுள்ள இலங்கை தூதுவராலயம் கடந்த 19-ம் திகதி அறிவித்திருந்த நிலையில், இன்று 25-ம் திகதி சடலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக அவரது தாயார் தமிழோசையிடம் கூறினார்.

தனது மகள் தன்னைத் தானே துப்பாக்கியால் சூட்டு தற்கொலை செய்வதற்கு காரணம் எதுவும் இருக்கவில்லை என்றும் அவருக்கு துப்பாக்கியை இயக்க தெரியாது என்றும் வீட்டுக்காரர்கள் மீதே சந்தேகம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வீட்டு எஜமானும் அவரது மகனும் தன்னைக் கொடுமைப்படுத்துவது பற்றி தனது மகள் ஏற்கனவே தன்னிடம் கூறியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
தான் நாடு திரும்புவதற்கு முந்தைய நாள் வீட்டு எஜமானுடன் தன்னைச் சந்தித்த மகள், இந்த ஆண்டு ஜூலை மாதம் மூன்றாண்டு ஒப்பந்தம் முடிவடைகின்றபோது நாடு திரும்பவுள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாய் தெரிவித்தார்.

தனது மகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடமும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயான 45 வயதான நாகேந்திரன் மங்களேஸ்வரி மேலும் தெரிவித்தார்.

நன்றி / பிபிசி
...மேலும்

May 25, 2013

சுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்


சில நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் KRP Senthil பகிர்ந்த அந்த விடியோவை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தொண்டை கிழியக் கத்திச் செத்துவிட மாட்டோமா என்றிருந்த‌து.

ஆனால் பின்னால் ஒலித்த உறுதியான குரல் காதுகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
"பல்லாயிரக்கணக்கானப் பெண் குழந்தைகளும் சிறுமிகளும் நாள் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதும், சிறு சலனம் கூட இல்லாமல் இது குறித்து நிலவும் பெருத்த மௌனமுமே என்னைப் பெருஞ்சினம் கொள்ள வைக்கின்றன" 

அந்தக் குரலுக்குச் சொந்தமானவர்:

சுனிதா கிருஷ்ணன்
இவர் மனிதப் பிறவி தானா? பெண் தானா?
நாலாயிர‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பாலிய‌ல் தொழில், ம‌ற்றும் க‌ட‌த்த‌லிலிருந்து காப்பாற்றியிருக்கும் இவ‌ரை என்ன‌வென்று சொல்வ‌து?

பதின்ம‌பருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான இவர் அதனால் துவண்டு விடாமல் பழகிய ரௌத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்திருக்கிறது!

ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? வணங்குகிறேன் சுனிதா உங்களை.

ஐந்து வயது கூட நிரம்பாத பிஞ்சுகளுக்குக் கூட நேரும் கொடுமைகளை இவர் விவரிப்பதைக் கேட்கக் கூட நம்மால் முடியவில்லை. அடி உதை, சித்ரவதை எல்லாம் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி இவர் மீட்ட குழந்தைகள் ஆயிரமாயிரம்.

1996 ல் இவர் தொடங்கிய‌ ப்ர‌ஜ்வாலா அமைப்பு ஐந்து முக்கிய‌ பணிக‌ளில் க‌வ‌ன‌ம் செலுத்துகிற‌து: த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கை, காப்பாற்றுத‌ல், ம‌றுவாழ்வு, ஒருங்கிணைப்பு, பிர‌சார‌ம்.

த‌டுப்பு ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் முக்கிய‌மான‌து பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ளுக்குக் க‌ல்வி கொடுப்ப‌து. அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ளும் அதே பாதையில் சென்றுவிடாம‌ல் த‌டுப்ப‌து. ஐந்து குழ‌ந்தைக‌ளுட‌ன் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இவ்வ‌மைப்பு இப்போது ஐயாயிர‌ம் சிறுமிகளுக்கு ம‌றுவாழ்வு அளித்துள்ள‌து.

பேருந்து மற்றும் நிலைய‌ங்க‌ளில் சோதனை நடத்தி குழ‌ந்தைக‌ள் க‌ட‌த்த‌ப் ப‌டுவதையும் பாலிய‌ல் தொழிலாளிக‌ளின் குழ‌ந்தைக‌ள் அதே சுழ‌ற்சில் சிக்குவதையும் த‌டுப்பது. இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முல‌ம் ம‌ட்டும் 1700 சிறுமிகளும் மொத்த‌மாக‌ 3200 சிறுமிகளும் ப்ர‌ஜ்வாலா மூல‌ம் காப்பாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

அத்தொழிலிலேயே சிறுவ‌ய‌து முத‌ல் ஈடுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ சிறுமிக‌ளைக் காப்பாற்றுவ‌தும் ம‌றுவாழ்வு அளிப்ப‌தும் சவாலான‌ செய‌ல் தான் என்றும் கூறுகிறார் சுனிதா. அவ‌ர்க‌ள் உண்மையில் ம‌றும‌ல‌ர்ச்சி அடைய‌ வெகுகால‌ம் ஆகிற‌தாம்.

த‌ன‌து புனித‌ப் போரில் சுனிதா ச‌ந்தித்த‌ கொடுமைக‌ளும் கொஞ்ச‌ந‌ஞ்ச‌ம‌ல்ல‌. க‌ட‌த்த‌ல் ர‌வுடிக‌ளிட‌மிருந்து சிறுமிக‌ளைக் காப்பாற்றப் போன‌ இட‌த்தில் வாங்கிய் ஆடி உதையால் இவ‌ர‌து வலது காது கேட்கும் திற‌னை இழ‌ந்திருக்கிற‌து. ஆனால் த‌ன‌து இழ‌ப்பு தான் காப்பாற்ற‌த் த‌வ‌றிய‌, அல்ல‌து காப்பாற்றியும் உயிர‌ழ‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் இழ‌ப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று நெஞ்ச‌ம் உருகுகிறார் சுனிதா. (அதை என்னால் மொழிபெய‌ர்த்து எழுத‌ முடியாது. ம‌ன்னியுங்க‌ள்.)

தன் போராட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இவர் சொல்வது, ரவுடிகளிடம் அடிவாங்குவதோ, மிரட்டல்களோ இல்லை; பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கும் மனப்பான்மை சமூகத்தில் இல்லாதது தான், என்கிறார்.

அவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் கூட, பண உதவி செய்பவர்கள்கூட தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பயப்படும் அறிவீனத்தை எண்ணி மனம் வெதும்புகிறார்.

சமூகத்தில் இந்த மனப்பான்மை இருக்கும் வரை இவர்களுக்கு மறுவாழ்வு என்பது மிகக்கடினமான ஒன்று தான் என்பது தான் இவரது ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்.

இறுதியாக‌, சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது, "சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது." 

ஏதாவ‌து செய்ய‌வேண்டும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர‌து போராட்ட‌த்துக்கு இய‌ன்ற‌வ‌ரை உத‌வுவோம். நாம் செய்ய‌க் கூடிய‌ மிக‌ச்சிறிய‌ செய‌ல் அது ம‌ட்டும் தான்.

Must Read:ம‌ன‌ம் இள‌கிய‌வ‌ர்க‌ள் இந்த விடியோவைப் பார்க்க‌வேண்டாம் என்று இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி - சிதறல்கள்
...மேலும்

May 24, 2013

வவுனியாவில் 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்'வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஸ்கரித்துள்ளனர்.

ஊர் மக்களும் கூடி, பாடசாலையைத் திறக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குற்றச்சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, கூடியிருந்த பொதுமக்களைக் கலைந்து போகச் செய்துள்ளனர். இந்தப் போராட்டம் காலை 3 மணித்தியாலங்கள் நீடித்ததாகவும், போராட்டம் காரணமாகவும், மாணவர்களின் பகிஸ்கரிப்பு காரணமாகவும் பாடசாலை வியாழனன்று செயற்படவில்லை என்றும் தெரியவருகிறது.

செவ்வாயன்று பாடசாலை முடிந்து வீடு சென்றவேளை, 7 வயது சிறுமியொருவரை அடையாளம் தெரியாதவர்கள் கடத்திச் சென்று காட்டுப்பாங்கான காணியொன்றில் பாழடைந்த கிணற்றருகில் அவர் மீது பாலியல் குற்றம் புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாழடைந்த கிணற்றைச் சுத்தம் செய்வதற்காகச் சென்றவர்கள் பற்றைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது, மாலை நாலரை மணியளவில் சிறுமியின் முனகல் சத்தம் கேட்டு, அவரைக் கண்டுபிடித்திருக்கின்றனர். சட்டையில் இரத்தம் தோய்ந்த நிலையிலும் வாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்த நிலையிலும், கீறல் காயங்களுடனும் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

'பொலிஸ்காரர் மீது சந்தேகம்'

இந்த விடயம் தொடர்பாக மாங்குளம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இது விடயத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதாகவும், இதனால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் எனவே, குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இதுதொடர்பில் விசேட குழு அமைத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தன்னிடம் மாங்குளம் எஸ்.எஸ்.பி சம்பிக்க சிறிவர்தன உறுதியளித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

நன்றி - பி.பி.சி
...மேலும்

May 23, 2013

அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி


வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது நெஞ்சுரம் மட்டும்தான்.

இலைதழை அடைத்த வாசல்சந்துகளின் வழி
அவள் கவைகூட்டித் தணல் தள்ள
புகைசூழ்ந்து வேகும் சுண்ணாம்புச் சூளையில்

குருவியும் பறக்க அஞ்சிக் கூடிருக்கும் வெயிலில்
அவள் மடிகூட்டிச் சேர்த்தெடுத்து
மலையென்று குவிந்திருக்கும் பருத்தியில்

இருபது நிமிடப் பேருந்துக் காத்திருப்பால்
களைத்த முகங்கள் இளநீரில் இளைப்பாறும் சாலையொன்றில்
தீமீது தவம்புரிந்து அவள் உருக்கி ஊற்றும் தாரில்

தலையெல்லாம் மயிரும் மயிரெல்லாம் நூலும் சுமந்திருக்க
அக்குள் ரவிக்கையின் வியர்த்த வெள்ளை வரிபடிய
அவள் சுற்றித் தேய்ந்திருக்கும் கதர்க்கடை ராட்டையில்

பேசாத சாமிக்கு ஆச்சாரம் துலங்கவந்து
யாரெல்லாமோ சாத்த
முக்குக்கடை வாசலில் பாலுரிஞ்சும் குழந்தையுடன்
பத்துவிரல் உழைத்து அவள் கட்டித் தந்திருக்கும் மாலையில்

குருடர்கள் உணராத நிறங்களென விரவி ஒளிர்கிறது

அவள் கருப்பை முட்டை வெடித்துச் சிதறும் உதிரம்

______________________________________________

சமூகத் தளங்களில் பங்கெடுக்க ஆரம்பித்திருந்த பதின்மக் காலகட்டங்களில் இந்த மகளிர் தினம் சார்ந்த கொண்டாட்டங்களில் பெரிய ஈடுபாடு இருந்தது. காரணம்… இருந்த ஆர்வங்களுக்கேற்ற வாய்ப்புகளை அத்தகைய கொண்டாட்டங்களும் கொண்டுவந்து கைகளில் சேர்த்தன. அந்த அங்கீகார, புகழ்ப் போதைகளை விலக்கிய போதி மரங்களும் விரைவில் கிடைத்தன. சில வருடங்கள் இருக்கும். அப்போதுதான் அறிமுகமாகியிருந்த தமிழ்வலைப்பதிவுகளில் எண்ணிவிடக்கூடிய மிகச்சில பெண்பதிவர்களே இருந்தார்கள்.

அப்போதும் இப்படியொரு மகளிர் தினம் வந்தது. பெண்பதிவர்களில் சிலருக்கு அது அதீத ஆர்வம் தந்து கொண்டாட வைத்தது. பரபரவென்று பெண்பதிவர்களின் பட்டியலைத் தயாரிப்பதிலும், அந்த வெற்றிகளை அறிவித்துக்கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்கள். இது குளிரூட்டிய அறைக்குள் விரைத்துவிடாதிருக்கக் கணினி வெப்பம் தேடி வந்திருக்கும் வசதியான சிறுகூட்டம்தானே? இந்தக்கூட்டத்தின் வெற்றிக்கும் மகளிர் தினத்துக்கும் எப்படி முடிச்சிட முடியும்? என நினைத்துக்கொண்ட மனம் விலகியே இருந்தது.

இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கையில் அசுரன் தன் பதிவில் அடித்தட்டுப் பெண்களின் படம் ஒன்றைப் போட்டு “மகளிர் தினம் யாருக்கு?” என்று ஒற்றைவரியை மட்டும் பொட்டிலடித்தாற் போல் போட்டிருந்தார். அது பிடித்திருந்தது. எனவே நன்றி சொல்லிப் பின்னூட்டம் இட்டேன். அவரின் அமைப்போ அரசியலோ அல்லது வேறு எதுவுமோ தெரியாது. ஆனால் அந்தக் கேள்வியின் நியாயம் அங்கே பிடித்து வைத்தது.

இப்போது தங்கள் அமைப்பை, அரசியலை முன்வைத்து இந்தத் தளத்தை வினவு நண்பர்கள் நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து வாசித்தாலும் கருத்தெழுதுவது எப்போதாவதுதான். அப்படி எழுதுகிற சமயத்திலும், சில தனிமடல் உரையாடல்களிலும் அவர்களோடு நான் அதிகம் காட்டியது சண்டைக்கோழி பாவனைதான். வேறுமாதிரி சொன்னால் விமரிசனங்கள்.

விமர்சனங்களை முன்வைப்பவர்களில் பலவகை இருக்கலாம். விரும்புபவர்கள்  சறுக்கல்களைச் சுட்டிக்காட்டவும் விமர்சிக்கலாம், அதையே எதிர்மறையாக, ஒழிக்க விரும்புவர்கள் சறுக்கல்களையே கொண்டாட்டமாகவும் விமர்சிக்கலாம். இதில் வினவுக்கு நான் விமரிசனங்களாக வைப்பவை எந்த வகையைச் சேரும் என வாசிப்பவர்களோ, வினவு நண்பர்களோ அறிந்துகொள்ள முடியும் என்றுதான் கருதுகிறேன். அப்படிப் புரிந்துகொண்டவர்கள் அதை எனக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் புரிதலின் புள்ளியில்தான் இப்போது வினவுக்காக இந்த இடுகையை எழுத ஆரம்பித்தேன். ஏற்கனவே வேறு ஒரு தொடர் எழுத மடல்வழி உடன்பாடு நிகழ்ந்து பிறகு அதற்கான தயாரிப்புகளும், வாசிப்பும் தடைபட்டதால் எழுத இயலவில்லை. அந்தச் சோம்பேறியிடம்தான் இப்போது மகளிர் தினம் சார்ந்து கட்டுரை கேட்டார்கள். இதையும் தாமதமாகவே இப்போதுதான் தர முடிந்தது. அதற்காக மன்னிக்கவும்.

சனநாயகமும், விடுதலையும் சட்டப்படி வந்து அறுபத்திச் சொச்சம் ஆண்டுகள் கழித்து மகளிர் மசோதா ஒரு அவையில் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடும், அதை இன்னொரு சபையில் என் பிணத்து மீதுதான் நிறைவேற்ற முடியும் என சவாலிட்டு நிற்கும், உள் ஒதுக்கீடு ஏன் தேவை, ஏன் தேவையில்லை என விவாதித்து நிற்கும் நம் அரசியலை எழுதலாம். நாளொன்று பெண் ஒருத்தியின் மீதான பாலியல் வன்முறையின்றிக் கழிகிறதா என ஐ.நா வின் புள்ளி விவரம் வரை குறிப்பிட்டு எழுதலாம். அவளின் மீது ஏற்றிவைக்கப்பட்ட கற்பு இறக்க முடியாத சுமையாக  பேரழிவு புரிவதையும், எங்கே இறங்கிவிடுமோ எனப்பதறிப் பண்பாட்டுத் தட்டிகளோடு அலையும் பெண் கற்பின் காவலர்களையும் எழுதலாம்.

பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே  மேலே வந்தவர்கள் சந்திரிகாக்களாய், செயலலிதாக்களாய், சோனியாக்களாய் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று எழுதலாம்.  போகிற போக்கில் “பெண் உடல் நுகர்வுப் பொருள் அல்ல” என்பதும் விளம்பரமாகி அதைப் பொதுசனத்திற்குச் சொல்வதற்காய் ஒரு முக்கால் நிர்வாணப்பெண் தன் உடல்மொழி கொண்டு நிற்பாளோ  என்றும் தோன்ற ஆரம்பித்திருக்கும் கணினி யுக அழகிப் போட்டிகளை எழுதலாம். கொஞ்சம் எழுத்தும், வாசிப்பும் இருந்துவிட்டால் “மகளிர் தின” த்துக்கு எழுத விடயங்கள் அதிகம்தான்.

எனக்கு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது வேறுவிதமானது. அவை சில பெண்களைப் பற்றியது. அவர்கள் மகளிர் தினத்துக்கு எந்த மேடையிலும் வராதவர்கள், எந்த ஊடகத்திலும் எழுதாதவர்கள், புரட்சியை அறியாதவர்கள்; ஆனால் தன்னளவில் வாழ்வை வைராக்கியத்தோடு ஒரு போராட்டமாக நடத்தியவர்கள். வறட்டுக்கரை மணலில் நான் ஆடோட்டித் திரிந்த காலத்திலிருந்து என்னால்  கவனிக்கப்பட்டவர்கள்; என் தோல்விகளின் விரக்தியில், கனவுகளில் வந்து கைபிடித்துத் தூக்கிவிட்டவர்கள்; வாழ்வு என்பது துணிச்சலிலும், நேர்மையிலும் உள்ளதென்று உணரவைத்தவர்கள் அந்தப் பெண்கள்.
_____________________________________________________

தாயா…. தாயா பண்ணைகளின் ஏவலில் கூலி வேலைக்காரி. கணவன் இறக்க ஒரே மகன். மழையோ, வெயிலோ கூலிக்குப் போனால் சோறு அல்லாவிட்டால் பட்டினி.  குடிசைக்குக் கூரையும், கட்டிக்கொள்ளத் துணியும், கால்வயிற்றுக் கஞ்சியும் போதுமென்ற நிறைவை நெஞ்சில் நிறுத்தியிருந்தால் தாயாவின் பின் அவர் மகனும் அதே பண்ணைகளுக்கு ஒரு அடிமையாய் வந்திருப்பார். எதோ ஒரு தீயும்,  சமூகம் தந்த ஆறாத காயங்களும்  கனன்று கனன்று கனவை விதைத்திருந்தது. எப்பாடு பட்டேனும் மகனைப் படிக்க வைத்துப் பட்டணம் அனுப்பி விடுவது. கிராமங்கள் தேசத்தின் முதுகெலும்போ, கலாச்சாரத்தின் தொல்லியல்போ மட்டுமல்ல. கிராமங்களின் வேர்கள் சாதிப் புற்றுநோய்க் கிருமிகளின் வெகுநல்ல தங்குமிடங்களும் கூட. தயா இதை அறிந்திருந்ததே கூடத் தன் மகனை அதன் முடிச்சுகளிலிருந்து விடுவித்து அனுப்பிவிடும் கனவினை விதைத்திருக்கலாம். எத்தனையோ போராட்டங்களைத் தாண்டி ஒற்றை மனுசியாய் அந்த நினைப்பை நிறைவேற்றினார்.

மலையேறி விறகு வெட்டிப் பொழுது விடியச் சந்தையில் விற்று வீடு திரும்பும் வாழ்க்கை பழனிக்கு. நெடுநெடுவென்ற உயரமும் கன்னத்தில் சிறுபந்தாய் அடக்கிய வெற்றிலைக் குதப்பலும் வாயில் சீலையும் வேத்து வரி விழுந்த ரவிக்கையும் அவர் உருவம். கூடவே கையில் வெட்டிக் கொண்டு போய் விற்ற கட்டிலிருந்து உருவிய ஒரு நீள விறகுக் கட்டையும். பொழுது விடியும் முன்பு பொம்பளை ஒருத்திதானே தனியாகப் போகிறாள் என்று காதுத் தோட்டுக்கோ, வேறெந்தக் கருமத்துக்கோ பின்னால் வந்த ஆம்பளை ஒருவனைக் கையிலிருந்த விறகுக்கட்டையாலேயே ரத்தம் வர மொத்தி அனுப்பியபின் வீரப் பழனியாக வெளித்தெரிந்தவர். அதற்குப் பிறகு ஊரில் ஆம்பிளைகள் சிலர் பழனி எதிர்க்க வந்தால் வெளிக்குப் போவது போல் வேலியோரமாய் உட்கார்ந்து கொண்டது பெண்களுக்கு நகைச்சுவைக் கதைகளாயின.  பானை உடைந்ததுக்கும் பதறி அழுத பெண்களுக்குப் பழனி முன்னுதாரணமும் ஆனார்.

ஒரு சிறுநகரத்தின் கல்யாண மண்டபம். வந்த சனம் தின்றது செரிக்க வழி தேடிக்கொண்டிருக்கையில்தான் அங்கே மாப்பிள்ளையைத் தேடும்படி ஆனது. பொண்ணு பார்க்க வந்தபோது நல்லாப் பார்க்கவில்லையென்றும், இன்றுதான் பெண்ணுக்கு ஒருகண் மட்டுமே உண்டென்றென்று தெரிந்ததென்றும் சொல்லி தாலிகட்ட முடியாதென்று ஓடிப்போனார் மாப்பிள்ளை.  ஊரும், உறவுகளும் ஏளனப்படுத்தி நிற்க அதே மண்டபத்தின் ஒரு மூலையிலிருந்த தன் கணவனை அழைத்து வந்து “என் தங்கைக்கு நீயே தாலிகட்டு எவன் என்ன சொல்வான்னு பாக்கறேன்” என நடத்தித் தன் நான்கு குழந்தைகளோடு தங்கைக்குப் பிறந்த ஒரு குழந்தையையும் வளர்த்தெடுத்து அத்தனை பேரையும் நல்ல வேலைகளுக்கனுப்பிய லட்சுமி டீச்சர், வாழ்வின் அத்தியாயங்களில் இன்னொரு பெண்.

மூன்று குழந்தைகளும், பால் வியாபாரமும் விக்கித்து நிற்க விபத்தொன்றில் இறந்துபோன பால்காரரின் மனைவி மாரம்மாள். பொட்டையும், பூவையும் அழித்துத் தாலி பிடுங்க வந்த உறவுகளிடம் முடியாதெனத் திருப்பியனுப்பி மூன்றுமாதம் கழித்துத் திருமணமாகாதிருந்த உறவினர் ஒருவரிடம் தானே சென்று “என் வாழ்வுக்கு ஒரு ஆண் தேவை, நீ என்னைக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பமா?” எனக் கேட்டு மணமும் முடித்து, இருந்த குழந்தைகளோடு தலைநிமிர்ந்த வாழ்வும் சூடி வாழ்ந்தது அவர் கதை.

தாயாவும், பழனியும், லட்சுமியும், மாரம்மாளும் நம்மோடுதான் பயணிக்கிறார்கள் ஆனால் வேறு வேறு பெண்களாக. அவர்கள் சீதையும், கண்ணகியும், ஐஸ்வர்யாராயும், ரஞ்சிதாவும் அல்ல, அவர்கள் வேறு பெண்கள்.

______________________________________

இந்தப் பெண்களின் பிரச்சினைகள் பற்றிய அக்கறை பெண்ணியம் போற்றும் பெரும்பாலான அமைப்புகளுக்கும் கூட இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் நமது சமூகங்களில் கடந்த காலங்களில் பங்குபெற்ற, கவனித்து வந்த மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பலவற்றிலும் இவர்களுக்கான குரல்களும், இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேவையான முகங்களும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்றே உணர்கின்றேன். வெள்ளைக்காலர் வேலைகளை எட்டிப்பிடித்திருக்கிற பெண்களுக்கு அவரவர் பணிபுரிகின்ற வேலைசார்ந்த சங்கங்களேனும் அவர்கள் பணியிடங்களில் பெண் என்ற ரீதியில்  பாதிக்கப்படுகிறபோது கொஞ்சமேனும் குரல்கொடுக்க முன்வருகின்றன. இயன்றால் நீதிமன்றங்களுக்கும், ஊடகங்களுக்கும் கூட எடுத்துச்செல்ல முடிகின்றன.

ஆனால் உடல் உழைப்பை மட்டுமே நம்பி, பொருளாதாரத்தின் ஆகக் குறைந்த அடுக்குகளில் வாழும் பெண்களுக்கு அவர்களின் பணி சார்ந்து நடக்கிற எத்தகைய வன்முறைகளாயினும் அவை வெளியுலகுக்குத் தெரியவராமலே முடிந்து விடுகின்றன. புகார் கொடுக்கக் காவல் நிலையம் போனால் அங்கே இன்னொரு முறை அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், சட்டப்படி மரணதண்டனை வரை பெற வேண்டிய குற்றவாளிகள் என்றாலும் கூட ஒரு வட்டச் செயலாளர் பெயரையோ, எம். எல். ஏவின், எம். பி யின், மந்திரியின் பெயரைச் சொல்லி சமூகத்தில் சகல செல்வாக்கோடும் உலவ முடிகிற கொடுமை நமக்கே உரித்தான “சட்டத்தின் ஆட்சியின்” லட்சணம்.

இத்தனை கண்ணிகளும் தங்களைச் சுற்றி வேடன் விரித்திருக்கும் வலைகளாகப் பரவிக்கிடக்கிற ஒரு சூழலில்தான் தாயாவும், பழனியும், மாரம்மாக்களும் வாழ்ந்து வருகிறார்கள். வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது அவர்களிடம் இருக்கும் நெஞ்சுரம் மட்டும்தான். வாழ்வு தொண்டை வரளும் அவர்களின் தாகத்துக்கான நீரை ஒரு உச்சி மலையில் வைத்திருக்கிறது. ஒரு நைந்துபோன தொங்கும் கயிறு கொண்டே அவர்கள் மலையேற வேண்டும், அதுவும் எந்த நேரத்திலும் அறுந்து சாகடிக்கலாம்.

அப்படியொரு நிலையிலும் தளராது சுமந்திருக்கும் அவர்களின் உறுதி எனக்கு நிறையக் கற்றுத் தந்திருக்கிறது. அந்த அவர்களின் வலிகளையோ வாழ்வையோ நாம் இலக்கியத்தில் எழுத வேண்டும். கலைகளில் காட்சிப்படுத்த வேண்டும், ஆவணங்களாகப் பதிவு செய்யவேண்டும். அது நமது வாழ்வின் சாட்சியாய், வரலாற்றின் படித் தடங்களாய் தலைமுறை தாண்டியும் சிந்திக்க வைக்க வேண்டும். எழுதவும், பேசவும் வாய்ப்புக் கிடைத்திருக்கிற பெண்களுக்கு இந்தக் கடமை நிச்சயம் இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

அரை நூற்றாண்டுக்கும் மேலான பெண்ணுரிமைப் போராட்டங்களின் பயன் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. பெண்கள் தங்களின் உரிமைகளை உணர்ந்திருக்கிறார்கள். அரசாங்கங்கள் பெண் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையான சட்டங்கள் கொண்டு ஒடுக்கி வருகின்றன. ஆனால் நமக்கு இன்னும் அவை சாத்தியமாகவில்லை. இங்கே தன்னந்தனியாக ஒரு பெண்ணாகச் செய்ய முடிகிற பயணங்களை, வேலைகளை நாம் நம் அமைப்பில் ஒரு ஆண் துணையில்லாமல் செய்வது பகீரதப் பிரயத்தனமாக இருக்கிறது.

ஒரு வெளியூருக்குப் போய் விட்டுத் தனியாக ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்குவதற்கான சுதந்திரத்தையோ, பாதுகாப்பையோ கூட நாம் இன்னும் எட்டிப் பிடிக்காமல் இருக்கிறோம் என்பதையெல்லாம்தான் மகளிர் தினத்தில் நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் செய்தித் தாள்களில் பார்த்த மகளிர் தினக் கொண்டாட்டப் புகைப்படங்களில் கனிமொழியும், சுதா ரகுநாதனும் சிரிப்பதைத் தாண்டி நமது நிதர்சனங்கள் குறித்த கவலைகள் பேசப்படுவதில்லை. பல பத்திரிக்கைகள் செய்யாத, கவனிக்காத பக்கத்தைக் கையிலெடுத்து வித்தியாசமான மகளிர் தினத்தைத் தன் வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக “வினவு” க்கு நன்றி.

நமது பெண் விடுதலையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது சமூக அமைப்பை உள்வாங்கவேண்டும். பெண்களே என்றாலும் எல்லோரின் பிரச்சினைகளும் ஒன்றல்ல. அது பொருளாதாரம் சார்ந்த மேல்தட்டு, நடுத்தரவர்க்கம், கீழ்த்தட்டு என்றுகூடப் பிரித்துவிட எளிதானது அல்ல. படித்த, படிக்காத பெண்கள் என்று வகைப்படுத்திவிட முடியக்கூடியதும் அல்ல.

சாதி………ஆமாம், சாதி சார்ந்தும் பெண்களின் பிரச்சினைகள் வேறுபட்டுக் கிடக்கின்றன நம் சமூகத்தில். உயர்சாதிப் பெண்களின் விடுதலை ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவதாக இருக்கிறது. ஒரு தலித் பெண்ணின் விடுதலை என்பது ஆணாதிக்கத்தின் பிடிகளில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல, இன்னொரு பெண்ணிடமிருந்தே சாதி அடக்குமுறைக்கெதிராக விடுதலை அடைவதாகவும் அது இருக்கிறது. தலைநோவு, கைகால் குடைச்சல் வியாதியும், மூச்சுவிடவே ஆக்சிஜன் வேண்டியிருப்பதும் ஒரே பிரச்சினை அல்ல. எனவே பெண்கள் சமத்துவம் பற்றிப் பேசினால் அதில் தாயாவும், பழனியும், மாரம்மாளும் கூடப் பேசப்படவேண்டும். ஏனென்றால் அவர்கள் வேறு பெண்கள்.

அவரது வலைப்பூ முகவரி: http://selvanayaki.blogspot.com/

நன்றி - வினவு
...மேலும்

May 22, 2013

பெண் மீதான பாலியல் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல் : ஒரு காட்சி - கொற்றவைதுர்வாசருக்கு 1 வருடம் சேவை செய்ய வேண்டும் என்ற ஆணையின் படி க்ருதை (குந்தி) அவரது ‘மனம் கோணாமல்’ சேவை செய்ய வேண்டும். அது ஏன் பூப்பெய்திய பின் அவர் அதற்கு தேர்வு செய்யப்படுகிறார். ஒரு வருடம் தன்னோடு குந்தியை அனுப்பிவைக்கவில்லை என்றால் கடும் சாபத்திற்கு உள்ளாகும் அந்தக் குலம். இதை இருவகையில் புரிந்து கொள்ளலாம், ஒன்று குழந்தை ஊழியம், பெற்றோர் ஏதோ கடன் பட்டதற்காக உனது குழந்தையை எனக்கு சேவகம் (அடிமையாக) செய்ய அனுப்பு என்று சொல்லும் ஜமீந்தாருக்கும் இவருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மற்றொரு கோணத்தில் பூப்படைந்து திருமணத்திற்குத் தயாராகும் ஒரு பெண்ணை, திருமணத்திற்கு முன் ஒரு வருடம் தன்னோடு அனுப்பி வைக்கச் சொல்லும் அந்தச் செயல், ’ரிஷி மகான்கள்’ அரசர்களின் மீது எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தினார்கள், அவர்களை எப்படி மிரட்டினார்கள், அவர்களது பெண் குழந்தைகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை விளக்குகிறது. 

‘மனம் கோணாமல்’ சேவை செய்ததற்கு துர்வாசர் ஒரு வரம் தருகிறார், ஒரு மந்திரம் கற்றுக் கொடுக்கிறார். அதாவது, குந்தி எந்தக் கடவுளை நினைத்து அம்மந்திரம் சொல்கிறாரோ, அக்கடவுள் நேரிலேயே வந்து விடுவார். வந்ததற்கு கூலியாக தன் அம்சத்தில் ஒரு குழந்தையையும் கொடுத்துச் செல்வார். என்னவகையான கதை இது. நமக்கு ஒருவரைப் பிடித்துப் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அவர் வருவதும், வராமல் போவதும் அவரது விருப்பம், வந்ததற்கு கூலியாக நான் ‘ஏதாவது செய்து விட்டுத்தான் போவேன்’என்பது வல்லுறவாகாதா. 

குந்தி அந்த மந்திரத்தைச் சொல்லி சூரிய ‘பகவான்’ இறங்கி வருகிறார். ’நீ அழைத்ததன் பெயரில் வந்துவிட்டேன், இப்போது என் அம்சத்தில் உனக்கொரு குழந்தை பிறக்கப் போகிறது என்கிறார். அச்சிறுமி, ஐயோ நான் விளையாட்டாக அம்மந்திரத்தைச் சொன்னேன், நீங்கள் வந்ததற்கு நன்றி, எனக்கு குழந்தையெல்லாம் வேண்டாம் சென்று விடுங்கள் என்று கெஞ்சுகிறாள். அதெல்லாம் முடியாது, நான் நிறைய பணம் செலவழித்து ஃபிளைட்டெல்லாம் பிடித்து வந்திருக்கிறேன், சும்மா செல்ல முடியாது, உனக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டுத்தான் செல்வேன் என்கிறார். குழந்தை எப்படி பிறக்கும் என்ற உயிரியல் உண்மை அறிந்த அனைவருக்கும் இதன் பொருள் என்னவென்று நிச்சயமாகப் புரியும். குந்தி அதை விரும்பாத போது, அங்கு நடந்தது ஒரு பாலியல் அத்துமீறல் அதாவது சிறுமியிடம் வல்லுறவு. 

கொடுப்பதற்கு எத்தனையோ வரங்கள் இருக்க, உனக்கு குழந்தையைக் கொடுத்தே தீர்வேன் என்று சொல்வதன் அவசியம் என்ன? என்னைப் போல், என் அம்சத்தில் உனக்கொரு கணவன் கிடைப்பான் என்று சொன்னாலோ, அல்லது என்னிடம் உள்ள செல்வம் போல் உனக்கும் செல்வங்கள் அனைத்தும் கிடைக்க வாழ்த்துகிறேன், அல்லது நீயும், உன் பெற்றோரும் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று வாழ வாழ்த்துகிறேன், அல்லது - வந்தவர் சூரியன் தானே - இந்த நிலம் செழித்து பயிரெல்லாம் நன்கு செழித்து வளர வரம் தருகிறேன் என்று ஏதாவது சொல்லியிருந்தால் பரவாயில்லை எனலாம். குழந்தையை மட்டுமே கொடுப்பேன் என்று ஒரு ‘ஆண் கடவுள் சொல்வதன் பொருள், நான் வந்துவிட்டேன் உன்னை ‘சும்மா விட்டுச் செல்ல மாட்டேன்’, புணர்ந்தே தீருவேன் என்பதேப் பொருள்...சிறுமி வல்லுறவுக்கு ஒரு சப்பைக் கட்டு.....

நிர்மலா கொற்றவை / முகநூல் வழியாக
...மேலும்

May 21, 2013

சிவரமணி 22 ஆண்டு நினைவு - கவின்மலர்

சிவரமணி
நேற்றுடன் ஈழத்துக் கவிஞர் சிவரமணி இறந்து 22 ஆண்டுகளாகிவிட்டன. 2011 மேமாதம் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை இது..சிவரமணியின் நினைவாக...

'யுத்த கால இரவொன்றில்...'
--------------------------------

'உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள்கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப்போன்று,
நான் என்னைக் கண்டெடுத்துள்ளேன்!’

இந்தப் பளீர் கவிதை வரிகள் ஈழத்துப் பெண் கவிஞர் சிவரமணிக்குச் சொந்தம்! 20 வயதுக்குள்ளாகவே ஈழத் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்த தீர்க்கமான கவிஞர்.

இலங்கையில் இருந்த பெண்ணிய இயக்கங்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த சிவரமணியின் எழுத்துகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குழந்தைகளின் மனதில் போர் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அவரது அக்கறை 'யுத்த கால இரவொன்றில் நெருக்குதல்’ கவிதையில் வெளிப்படுகிறது.

'ஒரு சிறிய குருவியினுடையதைப்போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதி தோய்ந்த
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற்சுவர்களும் காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்!’

1983-ம் ஆண்டே சிவரமணி எழுதிய இந்தக் கவிதை, இன்றைக்கு குழந்தைமையைப் பறிகொடுத்து, முள் வேலி முகாம்களுக்குள் சிறைபட்டுக்கிடக்கும் குழந்தைகள் இழந்த சிரிப்பையும் விளையாட்டுத்தனத்தையும் எத்தனை எளிய வார்த்தைகளில் உரைக்கிறது!

வாழ்வின் நிதர்சனத்தையும் போரின் விளைவுகளையும் அற்புதமாகப் பிரதிபலித்தன சிவரமணியின் கவிதைகள்.

'நேற்றுபோல் மீண்டும் ஒரு நண்பன்
தொலைந்து போகக்கூடிய இந்த இருட்டு
எனக்கு மிகவும் பெறுமதியானது’

என சிவரமணி அன்றே எழுதிவைத்தது, இன்றைய வெள்ளை வேன் கடத்தல்களைப் பிரதிபலிப்பது!

போராட்டத்தோடு தன்னை உணர்வு பூர்வமாக இணைத்துக்கொண்ட அவருக்கு நீண்ட நெடிய போரும், தனிப்பட்ட வாழ்வின் நெருக்குதல்களும் சோர்வடையச் செய்திருக்கக்கூடும்.

சட்டென்று, ''எல்லாவற்றையும் சகஜமாக்கிக்கொள்ளும் அசாதாரண முயற்சியில் தூங்கிக்கொண்டும், இறந்து கொண்டும் இருப்பவர்களிடையே,நான் எனது நம்பிக்கைகளில் தோற்றுக் கொண்டு இருக்கிறேன்!'' என்றார். கவித் திறனாலும், அன்பாலும் அனைவரையும் கட்டிப்போட்ட சிவரமணி குறித்தான பதிவுகள் மிகவும் குறைவு. மே மாதம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் மறக்கவியலாத கொடும் நினைவு களைத் தந்த மாதம். அதே போன்றதொரு 1991-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதியன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் 23 வயது மட்டுமே நிரம்பிய சிவரமணி தற்கொலை செய்துகொண்டார்.மரணிப் பதற்கு முன், தான் எழுதிய அத்தனை கவிதைகளையும் தீயின் நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்து சாம்பலாக்கிவிட்டு, 'எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்!’ என்று ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். தன் கவிதைகள் சில வற்றை வைத்திருக்கும் நண்பர்களையும் அவற்றை யாரும் பார்க்க முடியாத படிக்குத் தீயில் இட்டு அழிக்கும்படியும் அதுவே தனக்குச் செய்யும் பேருதவியாய் இருக்கும் என்று கோரிக்கையும் வைத்துஇருந்தார்.

ஆனால், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு, எஞ்சிய 22 கவிதைகளையும் பதிப்பித்து 'சிவரமணி கவிதைகள்’ என்ற தலைப்பில் நூலாக்கினார். அதன் முன்னுரையில், 'ஆண்கள் தங்கள் கவிதைகளைத் தங்களின் வெற்றியாகப் பார்க்கிறார்கள். பெண்களோ, தங்களின் வடிகாலாகப் பார்க்கிறார்கள்!’ என்கிறார் சித்ரலேகா. எரிந்த கற்றைக் கற்றையான காகிதங்களில் இருந்த கவிதைகள் அனைத் தும், ரத்தமும் சதையுமாக, உணர்வும் உயிருமாக சிவரமணி படைத்த அக்னிப் பிழம்புகள். நெருப்பே நெருப்பைத் தின்ற விநோதம் அது!

தற்கொலை செய்துகொள்ளாமல் இருந்துஇருந்தால் சிவரமணி இந்நேரம் தமிழ்க்கவிதை களில் மிகப் பெரிய ஆளுமையாகவிசுவரூபம் எடுத்து நின்றிருப்பாள். அவளுடைய பெரும்பாலான கவிதைகள் நம்மிடம் இல்லை. ஆனாலும், எஞ்சிய 22 கவிதைகளின் வழியே சிவரமணி நம்முடன் வாழ்ந்துகொண்டு இருக் கிறாள், அவளே சொன்னதுபோல...

'பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என் தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர்.
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன்!’


...மேலும்

May 20, 2013

மனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...


சேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம்.

நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 07 வயது பாடசாலை மாணவி மனித மிருகம் ஒன்றினால் பாலியல் உயிருக்காகப் போராட்டிக் கொண்டிருக்கிறாள்.

சம்வம் நடந்து இதுவரை காலமும் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கயவன் கைது செய்யப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் வேதனையையும் விரக்தியையும் தருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும்.

அதிகாரிகளின் மெத்தனப்போக்கும், அசண்டையீனமான பேச்சுக்களும், அதிகாரத் தோரணையான எச்சரிக்கைகளும் இந்த மாணவிக்கு நடந்த அநீதியை மூடி மறைப்பதற்கான செயலாகவே காணப்படுகிறது. தடையங்களை அழித்தல், மிரட்டல்கள் மூலம் நீதி கேட்பவர்களை பயமுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் மோசமான ஜனநாய மறுப்புக்கள் நடந்தேறி வருகின்றது.  
நாடாளவிய ரீதியில் தொடர்ச்சியாக இவ்வகையான சம்பவங்கள் அதிகரித்த வண்ணமுள்ள நிலையில் இப்படியான கோர நிகழ்வுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. எனவே குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளப்படுத்துகின்ற விடயத்தில் துரிதமான செயற்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் செய்யாதவிடத்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறையையும் துஷ்பிரயோகத்தையும் தடுக்க முடியாது என்பதை அனைவரும் உணருதல் வேண்டும்.

எனவே இம் மாணவியை வன்புணர்வு செய்து சிதைத்த கயவனை கண்டறிவதில் ஏற்படும் காலதாமதத்தைக் கண்டித்தும் அந்த பாடசாலை மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்பதை வற்புறுத்தியும் நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (20.05.2013) காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்து மக்களையும் அணித்திரளுமாறும், கட்சி பேதமின்றி அரசியல் கட்சிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், சமுக ஆர்வலர்கள் என அனைவரையும் அணிதிரண்டு இந்த மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டுமாறு வேண்டுகிறோம்.

பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு நீதி வழங்கு!

குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து!

உண்மையை மூடி மறைக்காதே!

காவல்துறையே குற்றங்களுக்கு துணை போகாதே!

மாணவியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கு!

நேற்று நெடுங்கேணி சேனைப்புலவு! நாளை உங்கள் விட்டு வாசலில் கூட நடக்கலாம்....

வாருங்கள், ஒன்று சேருங்கள்! குரல் கொடுப்போம் நீதிக்காக...

சேனைப்புலவு மக்களும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

ந.தேவகிருஸ்ணனால் இந்துயா வெளியீட்டகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
...மேலும்

May 19, 2013

செங்கடல் - கவின்மலர்மீளாத்துயர்க்கடலில்
திக்கறியாமல் தத்தளிக்கிறேன்
துயரத்தின் நீலம் சுற்றிச்சூழ
கரங்களை துயர்நீரில் தடைபடாமல்
காற்றின் குறுக்கே வீச முயன்று தோற்கிறேன்.
கரை தென்படாமல்
தொடுவானம் வரை
துயரத்தின் உவர்ப்பு நீலநிறத்தில்
பேரலையாய் நினைவுகள் எழும்பி மோத
நினைவிழக்கிறேன்.

கண்விழிக்கையில்
சமதளத்தில் என் உடல்
கரங்களை வீசுகிறேன்.
துயர்நீர் தட்டுப்படவில்லை.
காற்றில் அலைகின்றன கரங்கள்
கோப்பையில்
துயரக்கலப்படமில்லா
நீலநிறமற்ற நீர்
பாய்ந்து பருகுகிறேன்.
அடைத்த செவிகளில்
இதுவரை ஒலித்த ரீங்காரம்
காணாமல் போன நொடியில்
பேரிரைச்சலொன்று செவிப்பறையைத் தாக்க
சுற்றிலும் துயரத்தின் பேரலைகள்
நினைவுகளாய் மோதும் பெருஞ்சத்தம்
நீலநிற கண்ணீரின் ஆழத்தில்
கண்ணாடி அறையில் நான்
சுவர்களை துளைத்து துயரைக் கடந்து ஊடுருவும்
என் விழிகளுக்கு
கரை தென்படவில்லை
இம்முறை தொடுவானமும்கூட.
பேரலை பொங்கி மோத
மீண்டும் நினைவிழக்கிறேன்.

இப்போது கண்விழிக்கையில்
மண் தரையில் என் உடல்
துயரத்தின் உவர்ப்பில்லை
நினைவுகளாய் பேரலைகள் இல்லை
கரங்களை அசைக்கிறேன்
காற்றில் சப்தமெழுப்பி அலைகின்றன அவை
மகிழ்ச்சி பொங்க
எழுந்து கால்களை ஊன்ற எத்தனிக்கிறேன்
நிலைதடுமாறி வீழ்கிறேன்
ஒரு உயிரற்ற உடல்மீது

நாசிக்குள் மயிர் கருகிய மணம்
குருதியின் வாடை
தொடுவானம் வரை மனிதஉடல்க்ளும் சதைக்கூழமும்
தொலைவிலே துப்பாக்கிகளின் ஓசை
மனிதர்களின் பேரவலக் குரல்கள்
காலடியில் குண்டுகளின் அதிர்வு
துப்பாக்கிகள் மௌனிக்கும் ஓசையும்
துல்லியமாய் கேட்கிறது
கூடுகளிலிருந்து உயிர்பறவை சிறகடிக்கும் சப்தமும்
செவிவழி பாய்ந்து இதயத்தை தைக்கிறது
கண்ணெதிரே துயர்நீரின் கடல்
இப்போது செந்நிறத்தில்
நீலநிறத்தினதைவிடப் பெரியதாய்

கண்ணீர் நதியாயய் பெருக்கெடுத்து
நிறபேதமின்றி செங்கடலோடு கலக்கிறது.
உள்ளிருந்தும் புறத்தேயிருந்தும்
துரோகத்தின் நாற்றம்
காற்றில் பரவி மூச்சையடைக்க
இம்முறையும் நினைவிழக்கிறேன்

மீண்டும் கண்விழிக்கையில்
அதே பழைய நீலநிற துயர்நீர்
இப்போதும் பேரலையாய் துன்ப நினைவுகள்
இம்முறையும் திக்கறியாமலிருக்கிறேன்.
இனி
விழிகளால் ஊடுருவி
தேடப்போவதில்லை
தொடுவானத்தையோ கரையையோ.

செங்கடலைப் போலல்ல
நீலக்கடலில் ஒரு துரும்பாயினும்
கிட்டிவிடும் தப்பிக்க!

(மே மாதம், 2010 ’தலித் முரசு’ இதழில் வெளியாகிய கவிதை)
...மேலும்

May 18, 2013

இயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா


தமிழ்ச் சூழலில் பெண், ஆண் உடல்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துருவாக்க வரலாற்றை வெளிப்படுத்தி விளக்குவதாக அமைகிறது இந்தக் கட்டுரைத் தொடர். பெண், ஆண் உடல்கள் தொடர்பான நாட்டுப்புற வழக்காறுகள் நிறையவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. உடலின் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையிலான உறுப்புகளைப்பற்றி பல்வேறு நம்பிக்கைகளும் அவை பற்றிய கதையாடல்களும் சடங்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

உடலை மாதிரி வடிவமாகக் கொண்டு மொழி அமைப்பு (உயிர், மெய்), சமூக அமைப்பு (முகத்தில், மார்பில், தொடையில், கணுக்காலில், உள்ளங்காலில் பிறந்த மக்கள் பிரிவினர்), அரசியல் வகைப்பாடு (வலங்கை-இடங்கை, வலதுசாரி-இடதுசாரி) போன்றவையும் உருவாக்கப்பட்டுள்ளன. ஓர் உடலுக்கும் இன்னொரு உடலுக்கும் இடையில் அதிகார உறவுகள் கட்டமைக்கப்பட்டு பெண், ஆண் உடல்கள் மேல்-கீழாக அமைக்கப்பட்டுள்ளன. இதைப்போன்று பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலில் ஏராளமான சிந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்வைதம், துவைதம், சைவ சித்தாந்தம், சாங்கியம், தாந்திரிகம் போன்ற சிந்தனை வடிவங்களும் மருத்துவம் தொடர்பான அறிவாக்கமும் பெண், ஆண் உடல்களைப் பற்றிய புரிதலிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாமல் ஆதிமனிதர்களிலிருந்து இன்றைய சிந்தனையாளர்கள் வரை இயற்கையைப் பற்றிய புரிதலை பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலுக்கு அடிப்படை ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அல்லது பெண்-ஆண் உடல்களைப் பற்றிய புரிதலை இயற்கையைப் புரிந்து கொள்வதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இயற்கைக்கு எதிர்வான செயற்கையைப் புரிந்து கொள்வதற்கும் பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலே பயன்பட்டிருக்கின்றன. (தொல்காப்பியம் பண்பாட்டைக் குறிப்பதற்குச் செயற்கை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது: ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல், செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்’) இயற்கை-பண்பாடு, அகம்-புறம், நிலம்-திணை, காடு-நாடு, காதல்-வீரம் ஆகிய கருத்துருவ எதிh;வுகள் பெண், ஆண் உடல்கள் பற்றிய புரிதலின் அடிப்படையிலேயே தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ளன.

அரசு என்ற அமைப்பும் (முடியாட்சி, மக்களாட்சி இரண்டும்) அதன் வரலாறும் பெண்மையை விளிம்புநிலைப்படுத்தி ஆண்மைப் பண்புகளை அடித்தளமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. குடும்பம், சாதி, கிளை (கூட்டம், வகையறா, கரை போன்றவையும்) சமயம், நாடு (கள்ளர் நாடு, நாட்டார் நாடு, கவுண்டர் நாடு, வேளாளர் நாடு போன்றவை) ஆகியவை ஆண்களின் அதிகார உடல்களாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. வர்க்க முரண்பாடுகளும் போராட்டங்களும் ஆண் சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளாகவும் போராட்டங்களாகவுமே பார்க்கப்பட்டுள்ளன. சமூகம், பண்பாடு பற்றிய சிந்தனைகளும், ஆய்வுகளும் ஆணின் அனுபவம், உணர்வு சார்ந்தே கட்டமைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட புரிதலில் 19,20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன.  குறிப்பாக ஆறுமுக நாவலர், அயோத்திதாசர், சிங்காரவேலர், எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை, மறைமலை அடிகள், ஈ.வெ.ரா.பெரியார், வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தேவநேயப் பாவாணர், மு.அருணாச்சலம், நா.வானமாமலை, கோ.கேசவன் ஆகியோருடைய ஆய்வுகள் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.  இந்தக் காலகட்டத்துப் பெண் ஆய்வாளர்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்படாமையும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட ஆண் ஆய்வாளர்களின் ஆய்வுகள் பற்றிய திறனாய்வுகள் நிறைய வெளிவந்துள்ளன. ஆனால் இந்தக் கட்டுரைத் தொடரில் தமிழ்ச் சூழலில் பெண், ஆண் உடல்கள் பற்றிய கருத்துருவாக்க வரலாற்றின் பின்புலத்தில் (நாட்டுப்புற வழக்காறுகளிலிருந்து தொடங்கி) இவர்களுடைய ஆய்வுகளில் பெண்ணைப் பற்றியும், ஆணைப் பற்றியுமான புரிதல்கள் வெளிப்பட்டுள்ள முறை சுட்டிக்காட்டப்பட்டு விளக்கப்படுகின்றது. மக்கள், சமூகம், சமயம், தத்துவம், சமூக மாற்றம், வளர்ச்சி போன்ற பொதுவான சொற்களிலும் அவை தொடர்பான விளக்கங்களிலும் பெண், ஆண் பற்றிய மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்களின் புரிதல்களும் கருத்துருவங்களும் பதிவாகியுள்ளதையும் வெளிப்படுவதையும் விளக்குவனவாக அமைகின்றன இக்கட்டுரைகள்.

நன்றி - பன்மெய்
...மேலும்

May 17, 2013

பெண் விடுதலை கானல் நீரல்ல !


நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் – எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.
பிரெஞ்சு புரட்சியில் பெண்கள்
தலைநகர் டெல்லியில் துணை மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தற்போதைக்கு ஓய்ந்துவிட்டன. ஆனால் பெண்கள் மீதான பாலியல் வன்முறைத் தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன. தூக்கில் போடுவது, ஆணுறுப்பை வெட்டுவது – எனத் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியபோதிலும், இத்தகைய கொடூரங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் எவரும் அதற்காக அச்சப்படுவதாகத் தெரியவில்லை.

இதற்கான காரணம், இன்றைய சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியலமைப்பில் உள்ளது. இந்தியச் சமூகமானது ஜனநாயகத்துக்கான அரசியல் போராட்டங்களின் ஊடாக உருவாகி வளர்ந்த சமூகமல்ல. நீண்ட நெடுங்காலமாக நீடித்துவரும் சாதி, மத, ஆணாதிக்கம் நிறைந்த நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பும், அதற்கு அக்கம்பக்கமாக தரகு முதலாளித்துவ உற்பத்திமுறையும், அதற்கேற்ற அரசியல், பண்பாட்டு நிறுவனங்களும் காலனிய காலத்திலிருந்து திணிக்கப்பட்டு நிலைநாட்டப்பட்டன.

நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கப் பிற்போக்குத்தனம் பெண்களின் மீதான ஒடுக்குமுறைக்கு-பாலியல் தாக்குதலுக்கு ஆணிவேராக இருக்கும் அதேநேரத்தில், அதன் மீது திணிக்கப்பட்டுள்ள உலகமயமாக்கம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் கண்டிராத வகையில் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஒருபுறம், பெண்களை நுகர்வுப் பண்டமாக்கி எவ்வித விழுமியங்களுமின்றி பாலியல் வன்முறைகளைத் தீவிரமாக்கியிருக்கும் உலகமயமாக்கம்; மறுபுறம், ஆதிக்க சாதி மற்றும மத அமைப்புகள் பெண்கள் மீது கேள்விக்கிடமற்ற முறையில் தொடுக்கும் தாக்குதல்கள், கட்டுப்பாடுகள், கௌரவக் கொலைகள்- என இத்தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன.

சாதியானாலும், பாலியல் வன்கொடுமையானாலும் இரண்டுக்குமே அடிப்படையாக உள்ள அரசியல்- பொருளாதார கட்டமைவை இன்றைய அரசு பாதுகாக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராக உள்ளது. அதிகாரவர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை முதலான அரசின் உறுப்புகளே பெண்களுக்கு எதிரான முதன்மைக் குற்றவாளிகளாக உள்ளன. அதை யாரும் தட்டிக் கேட்கவோ, நீதியைப் பெறவோ முடியாதபடி சட்டத்துக்கு மேலானதாக, தனிவகைச் சாதியாக இருந்துகொண்டு சமூகத்தையே அச்சுறுகின்றன. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கொண்டு பெண்கள் மீது கேள்விமுறையற்ற வன்முறைகளில் ஈடுபடும்இராணுவத்தினரை சிவில் கோர்ட்டுகளில் கிரிமினல் சட்டங்களின்கீழ் தண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரைத்த முக்கியமான சில சீர்திருத்தங்களைக்கூட ஏற்க மறுக்கிறது அரசு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் குவிந்துள்ள போதிலும், மாநில போலீசு இயக்குனர் முதல் மகளிர் நல அமைச்சகம், வாரியங்கள் உள்ளிட்ட எந்த அரசாங்க உறுப்புகளும் தமது பரிந்துரைகளை வர்மா கமிஷனுக்குக் கொடுக்கவுமில்லை.

வரதட்சிணை தடுப்புச் சட்டமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறைத் தாக்குதல்களை தடுக்காத நிலையில், சட்டங்களை அமலாக்கும் இன்றைய அரசியலமைப்பு முறையே பெண்களுக்கு எதிராக உள்ள நிலையில், கடுமையான சட்டங்களாலும் தண்டனைகளாலும் பெண்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களுக்கு முடிவு கட்டிவிட முடியாது. நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் – எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.

இவ்விரு நுகத்தடிகளையும் கட்டிக்காத்து வருகின்ற இன்றைய சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார அமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் திசையில், குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்திவிட்டு புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதுமே ஒடுக்கப்பட்டுள்ள பெண்ணினத்துக்கு விடுதலையையும் உரிமைகளையும் பெற்றுத்தரும்.

________________________________________________________________________________
- புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
...மேலும்

May 16, 2013

சொல்வதெல்லாம் பொய் ! செய்வதெல்லாம் ஃபிராடு !!


லஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார்.

‘சொல்வதெல்லாம் உண்மை’ -  இந்த பெயரில் ஜீ (Zee) தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல வீடுகளில் இரவு நேரங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கும் இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கம் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கெனவே விஜய் டி.வி.யில் ‘கதையல்ல நிஜம்’ என்ற பெயரில் நடிகை லஷ்மி தொகுத்து வழங்கிய அதே அக்கப்போர்தான். அன்றாட குடும்பப் பிரச்சினைகளில், உறவுச் சிக்கல்களில் சிக்கி, மீள வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் மக்களை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்து ஒளி வெள்ளத்தில் கேமராவின் முன்பு நியாயம் கேட்டு குமுற வைக்கும் அதே பழைய மசாலா. கண்ணீர், கோபம், ஆவேசம், அடிதடி எல்லாம் இதிலும் உண்டு. விஜய் தொலைக்காட்சியில் லஷ்மி செய்த வேலையை ஜீ (Zee) தமிழில் இப்போது நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் செய்து வருகிறார். (முன்பு நிர்மலா பெரியசாமி செய்தார்). தாங்க முடியாத அருவருப்பும், ஏழை மக்களின் அந்தரங்க வாழ்கையை அம்பலமேற்றி காசு பண்ணும் வக்கிரமும் நிறைந்த இந்த நிகழ்ச்சி சமூக உளவியலில் பாரதூரமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது.

அடுத்தவர்களின் அந்தரங்கத்தை தெரிந்துகொள்ளத் துடிக்கும் மனித மனதின் வக்கிரத்தை வளர்த்தெடுப்பதுதான் இதன் முதல் அபாயம். அரசல் புரசலாகவும், தாங்கள் ஒரு தவறிழைக்கிறோம் என்ற குற்றவுணர்வுடனும் புரணி பேசும் மக்களை, அந்த மனத் தயக்கத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி விடுவிக்கிறது. கள்ள உறவுகள், விடலைகளின் காதல் பஞ்சாயத்துகள், குடும்ப சிக்கல்கள்… இவற்றை தொடர்ந்து பார்க்கும் மக்களின் மனம் ‘தான் மட்டும் தவறிழைக்கவில்லை; ஊரே இப்படித்தான் இருக்கிறது’ என எண்ணுகிறது.

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என இதை எடுத்துக்கொள்வது ஒரு வகை. மாறாக, தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களின் மனம் தன் கணவனை, தன் மனைவியை, உறவுகளை, சுற்றங்களை சந்தேகிக்கிறது. புதிய குடும்பச் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த இரண்டு வகைகளையும் தாண்டி, ‘எல்லாரும் செய்யுறான்.நாமளும் செய்வோம்’ என எண்ண வைத்து ஒழுக்கக்கேட்டுக்கு ஓபன் பாஸ் கொடுக்கிறது.

முதலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வரும் பங்கேற்பாளர்கள் யார்? பார்வையாளர்கள் யார்? தங்கள் சொந்தக் குடும்பப் பிரச்னையை பொதுவில் வைத்துப் பேசத் தயங்காத உழைக்கும் வர்க்கத்து ஆண்களும், பெண்களும்தான் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். போலி கவுரவத்தை காப்பாற்றுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இதன் பார்வையாளர்கள். தங்கள் வீட்டின் ரகசியங்கள் வாசல் வரையிலும் கூட சென்றுவிடக்கூடாது என அப்பார்ட்மென்டின் கதவுகளை இறுக மூடிக்கொண்டு முடைநாற்றத்தை அடைத்துக்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை இரவு நேர பொழுதுபோக்காக ரசித்துப் பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் தீர்ப்பு வழங்கிய; வழங்கும் லஷ்மி, நிர்மலா பெரியசாமி, லஷ்மி ராமகிருஷ்ணன் போன்றோர்… இந்த இரண்டு வர்க்கங்களை சேர்ந்தவர்களும் அல்ல. அவர்கள் அசல் மேட்டுக்குடிகள். ஏழைகளின் வாழ்க்கைச் சிக்கல்களை அனுபவத்தில் அல்ல… கேள்வி ஞானத்தில் கூட அறிந்துகொள்ள விரும்பாத இவர்கள்தான் ஏழைக் குடும்பங்களின் பிரச்னைகளுக்கு தீர்ப்பு எழுதுகிறார்கள். அதுவும் அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் அறிவார்ந்த தீர்ப்பு அல்ல. ஏற்கெனவே நிலவும் ஆணாதிக்க மதிப்பீடுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே பேசுகின்றனர். ஏழைகளின் பிரச்னைகளை நடுத்தர வர்க்கம் பார்த்து ரசிக்க, மேட்டுக்குடிகள் தொகுத்து வழங்க, முதலாளிகள் கல்லா கட்டும் இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஒரே ஒரு பணக்காரக் குடும்பம் கூட கலந்துகொண்டது இல்லை.

ஆனால் தங்கள் சொந்தப் பிரச்னைகளை கேமராவின் முன்பு மக்கள் எப்படி கூச்சமின்றிப் பேசுகின்றனர்? நீங்களும், நானும் பேசுவோமா?ஆனால் இவர்கள் பேசுகிறார்களே, எப்படி? “அவங்க காசு வாங்கியிருப்பாங்க”  என்றோ, “எல்லாம் செட்-அப்” என்றோ பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். இதற்கு விடை காண ’சொல்வதெல்லாம் உண்மை’ எப்படி உருவாகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சமாதானம், சண்டை, பேச்சுவார்த்தை, போலீஸ் புகார்… என பல வழிகளிலும் தங்கள் குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு தேடி முயற்சித்து, எதிலும் தீர்வு கிடைக்காமல் உச்சக்கட்ட வெறுப்பில் இருக்கும் மக்கள்தான் இவர்களின் இலக்கு. ‘ஏதேனும் ஒரு வழியில் பிரச்னை தீராதா?’ என ஏங்கிக் கிடப்பவர்களை அணுகி, ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்’ என ஆசைகாட்டி அழைத்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை திறந்து, தங்களுக்கு டி.ஆர்.பி. தரக்கூடிய செய்திகளை கண்டறிவதுதான் இவர்களின் அதிகப்பட்ச ஆய்வுப்பணி. அடுத்த கட்டமாக அந்தந்த ஊரில் இருக்கும் அவர்களின் நிருபர், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து தேன் ஒழுகப் பேசுவார். மனைவியை மடக்கிவிட்டால் போதும், கணவனை அழைத்து வருவது எளிது.

‘உங்க மனைவி எங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறார். அவர் உங்களை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார். நீங்கள் வந்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லவில்லை எனில் அவர் சொல்வது மட்டும்தான் வெளியே வரும். டி.வி. பார்ப்பவர்களுக்கு அதுதான் நியாயம் என்று தோன்றும்’ என்று தர்க்கப்பூர்வமாக மடக்குவார்கள். ‘எங்கள் நிகழ்ச்சியில் வந்து பேசிவிட்டால் உங்களுக்கு நீதி கிடைத்துவிடும். அதற்கு நாங்கள் உத்தரவாதம்’ என்று ஆசை காட்டுவார்கள். ‘படித்தவர்கள் ஏமாற்றமாட்டார்கள்’ என்று நம்பி வரும் ஏழைகளை திட்டமிட்டு உணர்ச்சிவசப்படச் செய்து, அறிவின் தந்திரத்தால் அழ வைத்து… அனைத்தையும் படம் பிடிப்பார்கள். நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இடைவேளையில், பங்கேற்பாளர்களின் நடவடிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டு, நிகழ்ச்சித் தயாரிப்புக் குழுவினரால் உளவியல் உத்திகள் வகுக்கப்படும். குறைந்த பட்சம் கண்ணீர், அதிக பட்சம் அடிதடி… எதுவும் சிக்கவில்லையா? ஒரு சென்டிமெண்ட் டிராமாவுக்கு உத்திரவாதம் கிடைத்துவிட்டால் தயாரிப்புக் குழுவுக்கு நிம்மதி. அதன்பிறகு அந்த குடும்பம் சேர்ந்ததா, பிரிந்ததா, நடுத்தெருவில் நிற்கிறதா என்பதை பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

பொதுவாக உங்கள் வீட்டில் யாராவது அடித்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்? உடனே ஓடிச்சென்று விலக்குவீர்கள். அதையும் மீறி சண்டை நடந்தாலும் ‘நாலு பேருக்குத் தெரிந்தால் அவமானம்’ என்று கண்டிப்பீர்கள். இது மனிதர்களின் பொதுப் பண்பு. ஆனால் இவர்களை பொருத்தவரை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அடித்துக்கொண்டால் உற்சாகம் அடைகிறார்கள். முடிந்தவரை அதை உசுப்பேற்றி அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளலாம் என நம்பி வருபவர்கள் நிகழ்ச்சி முடியும்போது பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு வருவதால் பிரச்னை தீர்வதில்லை; அதிகமாகிறது என்பதை அவர்கள் உணரும்போது நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. கொட்டிய வார்த்தைகளும், அழுத கண்ணீரும் நாளை தொலைகாட்சியில் வரப்போகிறது என்ற எண்ணமே அவர்களை அச்சுறுத்துகிறது. தாங்கள் ஒரு சூழ்ச்சி வலையில் சிக்கியதைப் போல உணர்கிறார்கள். “சார், டி.வி.ல போட்றாதீங்க சார். பேசுன வரைக்கும் பேசுனதா இருக்கட்டும். இப்படியே விட்ருங்க சார்” என்று கெஞ்சிக் கதறினால் அதையும் படம் பிடிப்பார்களேத் தவிர நீதி கிடைக்காது. மாறாக நிகழ்ச்சிக்கு அழைத்து வரும்வரை கருணை முகம் காட்டியவர்களின் உண்மை முகம் அப்போதுதான் வெளியே வரும். இதுதான் “தி மேக்கிங் ஆஃப் சொல்வதெல்லாம் உண்மை”.

ஆனால் இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா?

பஞ்சாயத்துக்கு வருகின்ற பிரச்சினைகள் ஒரே விதமாக இருந்தபோதும், பார்வையாளர்களைப் பார்க்க வைப்பது எப்படி என்பதே இவர்களது பிரச்சினை. எனவே, தனியே அழைத்துப் போய் உசுப்பேற்றிவிடுவதும், மோதலை உருவாக்குவதும் இத்தகைய நிகழ்ச்சிகளில் சர்வ சாதாரணமானது. இதை கேமராவுக்குப் பின்னே சென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. நிகழ்ச்சியிலேயேப் பார்க்க முடியும். சமீபத்தில் ஒரு விடலைப் பையனும், பெண்ணும் காதல் பஞ்சாயத்துக்கு வந்திருந்தனர். பெண்ணின் அம்மா எதிரே அமர்ந்திருக்கிறார். தன் அம்மா ஒரு விபச்சாரி என்று பட்டவர்த்தனமாக அந்தப் பெண் குற்றம் சாட்டுகிறார். உடனே நிகழ்ச்சியை நடத்தும் லஷ்மி ராமகிருஷ்ணன், “இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார். அனைத்தும் ஒளிபரப்பப்படுகிறது. இனி சாகும் வரையிலும் அந்த அம்மாவும், மகளும் சேரப் போவது இல்லை.

இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், டி.வி-யில் ஒளிபரப்பான பிறகு என்னவாகிறது என்பதை யாரும் பேசுவதில்லை. என்.டி.டி.வி-யில். ’ராக்கி கா இன்சாப்’ என்ற பெயரில் இந்தி நடிகை ராக்கி சாவந்த் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு பெண், தன் கணவனை ஆண்மையற்றவன் என்று கூறியதால் பிறகு அவன் தற்கொலை செய்து கொண்டான். இதுபோன்ற உதாரணங்கள் ஏராளம்.

மேட்டுக்குடி நிர்மலா பெரியசாமி ஏழைகளின் கதைகளை விற்கிறார் !
இன்னொரு பக்கம் இந்த மேட்டுக்குடி பாப்பாத்திகள் நடத்தும் பஞ்சாயத்தின் மூலமாக, சாதாரண மக்கள் நெறிகெட்டவர்கள் போலவும், நாட்டாமை செய்யும் வர்க்கத்தினர் பெரிய ஒழுக்க சீலர்கள் போலவும் ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. இதில் பார்வையாளர்கள் நீதிபதிகளாக செயல்படுகின்றனர். அதனால்தான் பல வீடுகளில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது, அதில் கலந்துகொள்ளும் மனிதர்களுடன் மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்கின்றனர். ‘அவன் மேலதான் தப்பு’ என்றோ, ‘ஐயோ பாவம் இந்தப் பொண்ணு’ என்றோ திரையில் விரியும் காட்சிகளுக்காக உண்மையாகவே மனம் இறங்குகின்றனர்.  கற்பனைக் கதைகளே பார்வையாளர்களின் கருத்தையும், கண்ணோட்டத்தையும் பாதிக்கும் என்னும்போது ரியாலிட்டி ஷோக்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.

சித்தரிக்கப்பட்ட டி.வி. சீரியல் பாத்திரங்களுக்காக பாவப்படும் மக்களின் மனம், அதை விட கூடுதலாக இந்த நிகழ்ச்சிகளோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. காரணம், சீரியல்களில் குடும்பத்தில் சண்டை நடக்கும். இதில் குடும்பமே நேரடியாக வந்து சண்டை போடுகிறது. தன் கண்ணீரையும், இரக்கத்தையும், ரசனையையும் கோரும் ஒரு கதை, கற்பனையாய் இருப்பதை விட, உண்மையாய் இருப்பது பார்வையாளனின் ஈகோவை கூடுதலாக திருப்திப்படுத்துகிறது. சொல்வதெல்லாம் உண்மை மட்டுமல்ல, மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் வெற்றி பெறுவதற்கான அடிப்படை மக்களின் இந்த மனநிலைதான்.

ஆனால், உண்மையான மனிதர்கள், உண்மையான பிரச்னைகள் என்பது வரைதான் இது உண்மை. அந்த உணர்ச்சிகள் உண்மையானவை அல்ல. அது நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு தூண்டப்பட்டு மிகையாக சித்தரிக்கப்படுகிறது. அந்த வகையில் இது ஒரு போர்னோகிராபி. இதைப் பார்க்கும் ரசனையும் சாவித்துவாரம் வழியே பார்க்கும் அதே ரசனைதான்.

பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் அப்பாவி ஏழைகளின் அந்தரங்கம் மட்டுமே அலசப்படுவதாக தெரியலாம். ஆனால் ஊடக வியாபாரத்தில் பணக்காரர்களின் அந்தரங்கமும் தப்புவதில்லை. பத்திரிகைகளின் சினிமா கிசுகிசு, மேற்குலகின் டயானா விவகாரம் போன்றவை இத்தகையவைதான்.
விஜய் டி.வி. ஷோக்கள் !
’ராக்கியின் சுயம்வரம்’ போன்ற நிகழ்ச்சிகள் அப்பட்டமாக ஒத்திகை பார்க்கப்பட்டு, திரைக்கதை எழுதப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. பணத்துக்காக சினிமாவில் ஆடைகளை அவிழ்த்து ஆபாச நடனம் ஆடும் ராக்கி சாவந்த், தனது திருமணத் தெரிவையும் டி.வி.யில் லைவ் ஆக நடத்தினார். ‘யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்’ என்ற அறிவிப்பு பரபரப்பான செய்தியாக மாற்றப்பட்டதே தவிர அது ஒரு அப்பட்டமான விபச்சாரம் என்பதை யாரும் பேசவில்லை. சபலத்துடன் பலர் விண்ணப்பித்தார்கள். முடிவில் ராக்கி ஒரு கனடா தொழிலதிபரை தெரிவு செய்தார். திருமணம் தள்ளிப்போடப்பட்டு, கடைசியில் ‘நடிக்கக்கூடாது என்று சொன்னதால் திருமணம் ரத்து’ என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் இது நாடகம் என்றும், இதில் பணத்துக்காக தானும், பிரபலத்துக்காக தொழிலதிபரும் நடித்ததாகவும் ராக்கி கூறினார். கோடிக் கணக்கான ரசிகர்களை ஏமாற்றிய குற்றத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. இதை வைத்து இவர்கள் கொள்ளையடித்த பணத்துக்கும் கணக்கில்லை.

2009-ம் ஆண்டு இந்தியத் தொலைகாட்சிகளின் மொத்த வருமானம் சுமார் 5.5 பில்லியன் டாலர். இதில் ரியாலிட்டி ஷோக்களின் வருமானம் கணிசமானது. இவர்களுக்கு 70 கோடி இந்திய செல்போன் வாடிக்கையாளர்கள்தான் முக்கிய இலக்கு.  ‘உங்கள் மனம் விரும்பிய போட்டியாளர் இவர் என்றால் … என்று டைப் செய்து இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள்’ என்ற வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.ஸில் இருந்துதான் ரியாலிட்டி ஷோக்களின் 30 முதல் 40 சதவிகித வருமானம் வருகிறது. இந்த வருமானத்தின் அளவு குறைந்தால் ரியாலிட்டி ஷோக்களுக்காக இவர்கள் செய்யும் பித்தலாட்டங்களும் அதிகரிக்கும்.

மேற்கத்திய ரியாலிட்டி ஷோக்கள் ! உண்மையின் பெயரில் மலிவான ரசனை !!
இன்றைய நிலையில் தொழில்முறை ஆபாசப் படங்களைக் காட்டிலும் செல்போன்களில் எடுக்கப்பட்ட ‘கேண்டிட் வீடியோக்களுக்குதான்’ மவுசு அதிகம். யூ-டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் இத்தகைய ஒரிஜினல் 24 கேரட் வீடியோக்களுக்கான பார்வையாளர்கள் சர்வ சாதாரணமாக லட்சங்களைத் தொடுகிறார்கள். பள்ளி மாணவர்களின் செல்போன்களில் கூட இத்தகைய கேண்டிக் கேமரா காட்சிகள் இருக்கின்றன. இதற்கும் ’ரியாலிட்டி ஷோ’க்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது.

எப்போதுமே, நிலவும் டிரெண்டை பயன்படுத்தி கல்லா கட்டும் நிறுவனங்கள் ‘உண்மையை’ விரும்பும் மக்களின் மனநிலையை மட்டும் விட்டுவைக்குமா? பல தொலைக்காட்சி விளம்பரங்கள் கேண்டிட் கேமராவால் எடுக்கப்பட்டதைப் போல திட்டமிட்டு எடுக்கப்படுகின்றன. பஞ்சாராஸ் அழகு சாதனப் பொருள், இந்துலேகா எண்ணெய், ஆரோக்கியா பால் உள்பட பல விளம்பரங்கள் இப்படி ஒளிபரப்பாவதை காணலாம். இதை ‘ஒரு விளம்பர யுத்தி’ என்றோ, சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை ‘ஒரு கிரியேட்டிவ் கான்செப்ட்’ என்றோ சிலர் சொல்லக்கூடும். ஆனால் உண்மை வேறு. டி.வி.யை நிறுத்தியதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி தோற்றுவித்த உணர்வு மறைந்துவிடுவது இல்லை. மாறாக, அது உங்களை பயிற்றுவிக்கிறது. குரூரத்தை ரசிப்பதற்கு, வக்கிரத்தை விரும்புவதற்கு கற்றுத்தருகிறது. அது உருவாக்கும் உணர்வுதான் ஒரு போரை பொழுதுபோக்காக; போலீஸ் அராஜகத்தை ஹீரோயிசமாக புரிந்துகொள்ள இட்டுச் செல்கிறது.

இவர்கள் இத்தனை தூரம் மெனக்கெட்டு செட் போட்டு, கான்செப்ட் பிடித்து ரியாலிட்டி ஷோ நடத்தத் தேவையில்லாமல் சொல்ல வேண்டிய நடைமுறை உண்மைகள் ஏராளமாக நாட்டுக்குள் இருக்கின்றன. சாதித் தீண்டாமை முதல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரை ‘உண்மைகளுக்கா’ பஞ்சம்? இவற்றை சொல்வதற்கு எந்த ரியாலிட்டி ஷோவிலும் இடம் இல்லை. எனில் இவற்றை ‘ரியாலிட்டி ஷோ’ என்ற சொல்லால் அழைப்பதே தவறானது. உண்மையில் இவற்றின் ஒவ்வொரு நொடியும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு திரைக்கதை எழுதப்படுகின்றன. வட இந்திய சேனல்களில் இது இன்னும் பச்சையாக நடக்கிறது.

பொதுவாக இந்த ரியாலிட்டி ஷோக்களில் சுற்றி உட்கார்ந்து கைதட்டிக்கொண்டே இருக்கிறார்களே… அவர்களை ரசிகர்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. அவர்கள் தினக்கூலி அடிப்படையில் ரசிகர்களாக நடிக்கிறார்கள். வியப்பதும், சிரிப்பதும், கை தட்டுவதும், பயப்படுவதும்தான் அவர்களின் வேலை. தமிழ் சேனல்களை பொருத்தவரை இந்த ரசிகர்களை பிடித்து வருவது அந்தந்த ரியாலிட்டி ஷோவின் புரடியூசரின் வேலை. வட இந்தியச் சேனல்களில் இத்தகைய பணி அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது. அங்கு டி.வி. நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்களை சப்ளை செய்வதற்கு என்றே தனிப்பட்ட ஏஜென்ஸிகள் செயல்படுகின்றன.

இத்தகைய ஆடியன்ஸ் சப்ளை சர்வீஸில் ஆறு ஆண்டு கால அனுபவம் பெற்ற ராஜீ கபூர், “ரசிகர்களாக வருபவர்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்?” என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஓர் அறிவிப்பு வெளியிட்டால் கூட்டம் வரும்தான். ஆனால் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்பு நேரம் மிக, மிக அதிகம். சாதாரண பார்வையாளர்கள் அவ்வளவு நேரம் பொறுமையாக இருக்க மாட்டார்கள். எந்த நேரமும் எழுந்து சென்றுவிடுவார்கள். அதனால்தான் இப்படி பணம் கொடுத்து அழைத்து வருகிறோம். அது மிகக் குறைந்த தொகைதான் என்றபோதிலும், சிலிர்ப்புமிக்க ரசிகராக நடிப்பதற்கு அவர்களுக்கு அந்தத் பணம் கொடுக்கப்படுவதில் என்ன தவறு?” என்று கேட்கிறார்.

அதாவது நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் எந்த இடத்தில் அழ வேண்டும், எங்கு சிரிக்க வேண்டும், எப்போது கை தட்ட வேண்டும் என்ற அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. ஹிட்லர் காலத்தில் அவர் உரையாற்றும்போது, கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அவரது ஆட்கள் குறிப்பிட்ட இடத்தில் கை தட்டுவார்களாம். அதைப் பார்த்து மற்றவர்களும்  தட்டவேண்டும்; தட்டுவார்கள். அதற்குப் பெயர் பாசிசம். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரமாம்!

- வளவன்
_______________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்