/* up Facebook

Apr 7, 2013

கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண் - ஜமாலன்”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்

கவிஞர் லீனா மணிமேகலையின் கவிதைத்தொகுப்பை, வலைத்தளத்தை தடைசெய்யக்கூறி இந்து மக்கள் கட்சியினர் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததற்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 15-ல் ஒரு கண்டனக்கூட்டம் நடக்க இருப்பதாக அறிகிறோம். தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களால் நடத்தப்பட இருக்கிறது இக்கூட்டம். இது சம்பந்தமாக எங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுகிறோம். 

லீனா மணிமேகலை இலக்கியம், கவிதை என்று ஒரு பிரதியை தமிழ் இலக்கியச்சூழலின் வாசிப்புக்கு முன்வைக்கும்போது, அப்பிரதியின் சொற்பிரயோகங்கள் பாடுபொருள்கள் ஆகியவற்றை இலக்கியம் என்கிற வகைமையில்தான் நாம் அணுகவேண்டும் என்று நம்புகிறோம். இதில் எழுத்தாளரின் நோக்கம் (அதிர்ச்சி மதிப்பீட்டை முன்வைத்து புகழ்பெற நினைப்பது என்று கருதப்படுபவை உட்பட) இலக்கியத்தைப் படைப்பதுதானா என்பதை மதிப்பிட  அளவுகோல் எதுவும் கிடையாது. ஒரு படைப்பாளி  எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும். தனது உள்நோக்கங்கள் வழி உருவாக்கப்படும் சில வலைப்பின்னல்கள் வழியாக ஒரு எழுத்தாளர்  ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூக அமைப்பு ஒரு எழுத்தாளாரை மேலாக வைத்து கொண்டாடுவதும், நிராகரிப்பதும் இந்த வலைப்பின்னல் விளையாட்டில் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், காலம் அந்த இடத்தை கேள்விக்கு உட்படுத்தும்போது, பின்னர் ஒரு நாள் வரலாறுகளின் ஆற்றங்கரையில் படைப்பின் ஆதார ”சுருதி” கண்டடையப்படும் என்று வேண்டுமானால்  நாம் ஆறுதல் அடையலாம். 

இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை  நிராகரிப்பது தவறு.   இதற்கு அர்த்தம், எழுத்தாளரின் வாழ்க்கையில் அவர் செய்ததாகக் கூறப்படும் அநீதிகள், ஏமாற்றல்கள் (அவை நடந்திருந்தால்) போன்றவை முக்கியமில்லை என்பதோ, அவரது பிரதியின் மேல்விழும் இலக்கிய முத்திரை இவற்றையெல்லாம் புனிதப்படுத்திவிடும் என்பதோ இல்லை.  அந்த சம்பவங்களை அதற்குத் தகுந்த நடைமுறைத் தீர்வு தருகிற தளங்களில், சம்பந்தப்பட்டவர்கள் அணுகித் தீர்வுகாணுதல் நன்மை பயக்கும் என்பது எங்கள் கருத்து.  

இதன்பொருள் இலக்கியமும், எழுத்தும் கண்டனத்துக்கு அப்பாற்பட்டவை என்பது அல்ல. கண்டிப்பதற்காக எழுத்தைக் குறிவைத்து காவல்துறையில் புகார் கொடுப்பது, எழுத்தாளரை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்றவை மோசமான முன்னுதாரணங்கள் ஆகிவிடும். மேலும் கண்டனத்தை எதிர்கொள்வதாக செய்யப்படும் செயல்களிலும் (இக்கூட்டம் உட்பட) வேறுபிரச்சனைகள் உள்ளன என்பதையும் நாம் மறுக்கவியலாது. இச்சூழலில், இலக்கியத்துக்கு வெளியே செயல்படும் அரசியல் மதக் கட்சிகளுக்கோ நிறுவனங்களுக்கோ, இலக்கியம் என்று எழுதப்பட்டிருக்கும் பிரதியைக் குறித்து புகார் கொடுக்க தார்மீக உரிமை இல்லை என்பதைமட்டும் இங்கே பதிவு செய்கிறோம். 

நிற்க. 

இந்த நேரத்தில், இணையத்தில் சர்ச்சைக்குள்ளான லீனா மணிமேகலையின் கவிதைகள் (பார்க்க, http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html)  பற்றி சிலவார்த்தைகள்: 

நான் லீனா என்று தொடங்குகிறது முதல் கவிதை, இலங்கையில், இந்தியாவில் ஆரம்பித்து துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் என்றெல்லாம் வன்கொடுமைப்படுத்தப்படுகிற பெண்கள் “நான் லீனா” என்கிற சுயம்-சுட்டும் (self-referential) பெயருக்கு கீழே கொண்டுவரப்படுகிறார்கள். இதன்மூலமாக இப்படி கொடுமைக்கு ஆளாகிற பெண்கள் எல்லாருக்குமான பிரதிநிதியாக லீனா என்கிற பெண் காட்டப்படுகிறார். முதல் கேள்வி, ஏன் லீனா என்கிற பெயர் மீனா என்றோ வேறொன்றாகவோ இருக்கக்கூடாது? எழுத்தாளர் தன் பெயரை கவிதைசொல்லியின் ’நானாக’ இப்படி கொண்டுவரும்போது, உலகத்தின் எல்லாக் கொடுமைப்படுத்தப்படும் பெண்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆசையை வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. கவிதைசொல்லியின் ‘நானுக்கும்’ எழுத்தாளரின் ‘நானுக்குமான’ வித்யாசத்தை கவிதை அழித்துவிட்டது.  இந்த இரு நான்கள் ஒன்றா இரண்டா என்று தெரியாத அளவுக்கு—--பின்னிப்பிணைந்து கிடக்கும் இரண்டு பாம்புகள் ஒன்றா இரண்டா என்பது போல--தோற்றம் தருகிறபோது, எந்தத் தளத்திலிருந்து  ‘எழுத்தைப் பாருங்கள், எழுத்தாளரைப் பார்க்காதீர்கள்’ என்று நாம் சொல்லமுடியும்? பிரதிநிதித்துவ அரசியலில் (representational politics),  “நான்“ என்கிற எழுத்தாளரின் சுயம் அப்படியே தன்னடையாளத்துடன் நிற்கிறது இக்கவிதையில். 

கவிதை வன்புணர்ச்சி விஷயத்தில் அறிவாளி ரோகியிலிருந்து தொடங்கி புரட்சிவேண்டுபவன் வணிகம் செய்பவன் மாலுமி விவசாயி ஈறாக இழுத்துப் பேசுகிறது.  எழுதப்பட்டிருக்கிற விதம் இவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்பதாக. “எவனா இருந்தா என்ன, ஆம்பிளை தானே” என்கிற தொனியே கவிதையின் தொனி. வன்புணர்ச்சி என்கிற அபாயத்தையும் நிகழ்வையும் தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், கட்டாயங்கள், உலகளாவிய முதலீட்டிய நுண் அதிகாரங்கள், அரசியல்கள் பற்றி எந்தப்புரிதலும் இல்லாமல், இவை அனைத்தையும் ’ஆம்பிளை’ என்கிற ஒரு பதத்துக்குள் இந்தத்தொனி இட்டுநிரப்புகிறது. வன்புணர்ச்சி என்பது ஆண்களின் விழைவால், விழைவு தருகிற குறிவிரைப்பால் மட்டுமே நடப்பதில்லை என்பதுதான் பாரிய உண்மை. எண்ணற்ற கொடுமைகளுக்கு பெண்களை ஆளாக்கின பல்வேறு அரசியல்களையும் போர்களையும் ஆணின் பாலியல்-விழைச்சில் அடக்கிவிட முடியுமா என்ன?

ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின்,  அரசின்,  இறையாண்மை அரசியல்களின்  அதிகார ஆயுதமாகவே உள்ளது. மேலும், போரில் ஆண்-பெண்  உடல்கள் இரண்டும் கருவிகளாக மாற்றப்படுகின்றன. அதை ஒரு பெண் ஒடுக்கு முறையாக மட்டுமே சுருக்கிப் பார்த்து விட முடியாது.  ஆண்-பெண் உடல்களை போர்-எந்திரத்தின் விழைச்சாக, அதிகார விறுப்புறுதிக்கான கருவிகளாக ஆக்கப்பட்ட உடல்களாகவே பார்க்க முடியும்.  இத்தகைய பல்வேறு சூழ்நிலைகளின் பாலியல் வன்முறைகளை குடும்ப பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு சமனாக அல்லது அவை போல ஒன்றாக பார்த்துவிடமுடியாது.  இக்கவிதையில் வன்புணர்ச்சி என்கிற புள்ளியில் இவ்வித்யாசங்கள் பிரித்தறியப்படவில்லை. 

மேலும் கவிதையில் பெண்கள் அனைவரும் தொடைகளின் இடைவழிக்காகவே, அதை ஆக்கிரமிப்பதன் மூலம் அச்சுறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசதிகாரம் பெண்ணுடலை கையாளும் அதே முறைகளைத்தான் புரட்சியாளர்களும், கலகக்காரர்களும் கையாளுகிறார்கள் என்பதும் பொதுபுத்தியின் “அறம்“ சார்ந்த பார்வைதான். அதாவது ஒரு உடலின் பாலியல் சார்ந்த இச்சை என்பது கீழானதாக, அதை செய்யும் உடல் புரட்சிபேசத் தகுதியற்றதாக சொல்லப்படுவதாகவும் இதை வாசிக்கலாம். தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன. 

வன்புணர்ச்சிக்கான ஒரு களமாக பெண்ணுடல் கட்டப்பட்டுள்ளது என்றால், களத்தில் ”விளையாடுவதற்கான” ஆணுடலும் தயாரிக்கப்பட வேண்டும் அல்லவா. அப்படி தயாரிக்கப்பட்ட ஆணுடல்கள் மட்டும் என்னவித நெகிழ்வை இச்சமூகத்தில் அனுபவித்துவிடப் போகிறது? ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த  விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது.  

வன்புணர்ந்து அதிகாரத்தைச் செலுத்தும் “ஆம்பிளை(களு)க்கு” எதிராக வன்புணர்த்தப் படுகிற எல்லாப் “பொம்பிளைகளின்” சார்பிலும் “நான் லீனா” நிற்கிறார் (கவிதையில், நிற்கிறது). ஆக, இந்தப் பெண்கள் எல்லாரும் அம்மா, அம்மம்மா, அத்தை சொல்லிக்கொடுத்தபடி யோனியை விரித்து வன்புணர்ச்சிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலைக் கவிதை தருகிறது. பாதிக்கப்பட்ட, படுகிற பெண்களின் எதிர்ப்புணர்வுக்கோ குறைந்தபட்சமாக அவர்களின் உடன்பாடின்மை என்பதற்கோ இடமே கவிதையில் இல்லை. உலகெங்கும் துயருறும் வன்புணரப்படுபவர்களின் பிரதிநிதியாக “நான் லீனா” Vs. உலகின் எல்லாவகை ஆண்களும் என்பதே கவிதையின் ஒன்லைனர். பல்வாசிப்புத் தளங்களைத் தராத, தக்கையான முரணை விதந்தோதுவதாலேயே இது கவிதையா என்று கேள்வி எழுகிறது. 

லீனாவின் இரண்டாவது கவிதை, சே, பிடல், பெர்லின் சுவர், சோவியத், அமெரிக்கா போன்றவை, புணருகிற ’நான்’ உடலின் மார்பகம், அல்குல் போன்ற அங்கங்களின் பெயர்கள் அல்லது உருவகங்களாகின்றன. பல இடங்களில் அங்கம், பெயர்-உருவகத்துக்கு தொடர்புறவு இல்லை அல்லது வெறும் மோனை வலிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது (உதாரணம், ”மனம்பிறழ்ந்த குழந்தைபோல மம்மு குடித்தாய்” )  கவிதையில் சொல்லப்படும் “நீ“ அல்லது  எதிர் உடல், வெறும் பாலியல் புணர்ச்சி எந்திரமே. குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது. 

எத்தகைய ஆண் புரட்சியாளன் அல்லது மார்க்சியவாதியாக இருந்தாலும்,  பாலியலில் அல்லது சக பெண்ணுடலை அணுகும்போது அவனும் சராசரி மனிதனாக மாறிவிடுகிறான் என்பதை இக்கவிதை வழக்கமான அறக்க்கண்ணோட்ட சட்டகத்துக்குள் வைக்கிறது.   கவிதைவரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சி பற்றிய “புனித கவிழ்ப்பு“ “அறக்கவிழ்ப்பு“ போன்ற கவிழ்ப்புச் சொல்லாடல்களால் ஆளப்பட்டிருப்பதைப்போல தோன்றும். உண்மையில், கவிதையின் உள்தர்க்கம் என்பது என்ன புரட்சி பேசுகிறாய், ஒரு அதி-யோனியின் புணர்ச்சிக்கு முன் இதெல்லாம் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான். இப்படிச் சொல்வதன் வழியாக, பாலியல் செயல்பாட்டைப் பற்றி பொதுவாக சமூகமனம் கொண்டுள்ள கீழ்மை மதீப்பீடே உள்ளுரையாக உள்ளது. பாலியல் அல்லது புணர்ச்சி குறித்த இந்தக் ”கீழ்மை” மதிப்பீடு கடவுள் துவங்கி இன்னபிற பிம்பங்களின் மீது சுமத்தப்படும்போது இவற்றைத் தாங்கிப்பிடிப்பவர்களின்  எரிச்சலுக்கும் காரணமாக அமைகிறது என்பதைச் சொல்ல அவசியமே இல்லை. 

சரி, இந்த பிரச்சினைகள் குறித்து பெரும் பத்திரிக்கைகள் துவங்கி பதிவுலகம் வரை பல மாதங்களாகப் பேசப்பட்டுவரும் நிலையில் இப்பொழுது இதனை முன்வைப்பதன் தேவை என்ன என்கிற கேள்வி உங்களைப்போலவே எங்களுக்கும் தோன்றியதுதான். நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம்  நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். அதேநேரத்தில் ஒரு கவிஞருக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக நமது குரலை பதியவைப்பதும் அவசியம் என்று கருதியே இதனை எழுதினோம். 

பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய? 

அன்புடன் 

பெருந்தேவி 
ஜமாலன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்