/* up Facebook

Apr 5, 2013

பெண்களின் வாய்மூலக் கதையாடல்களைக் காட்சிப்படுத்தும் “அவளின் கதைகள்” -சாந்தி சச்சிதானந்தம்யுத்தம் முடிவுக்கு வந்த ஆண்டு 2009க்குப் பின்னரான காலகட்டத்தில் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இப்பணிகளுக்கு அடித்தளமாக விளங்குவது எமது சமீப கால வரலாற்றைப் பற்றிய புனைவாகும். ஆயினும், வரலாறானது வழமையாக ஒரு சமூகத்தில் ஆதிக்கஞ் செலுத்துபவர்களினாலேயே எழுதப்படுகின்றது. எனவே மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் போன்ற குழுக்களே வரலாறு எழுதும் திட்டங்களில் ஈடுபடுவதை நாம் காணலாம். இக்குழுக்களைப் பார்த்த மாத்திரத்தே இவை தனியே ஆண்கள் மட்டும் பங்கு பற்றுகின்ற குழுக்களாகத்தான் இருக்கும் என்பதனை நேரடியாகக் கூறிவிடலாம். ஆண்களினாலே எழுதப்படும் இந்த வரலாறுகள் பெரும்பாலும் ஆண்களின் நோக்கில் அவர்களது நலன் கருதி எழுதப்பட்ட வரலாறுகளாயின. பெண்களின் அனுபவங்கள், அவர்களது போராட்டங்கள், சமூக வளர்ச்சிக்கு அவர்களது பங்களிப்புக்கள் இவையெல்லாமே மறைக்கப்பட்ட வரலாறாகத்தான் இவை இருந்திருக்கின்றன. இதுவரைகாலமும் அத்தகைய வரலாற்றினையே நாம் மனித குலத்தின் வரலாறாகக் கருதி வந்திருக்கின்றோம். இதனால்தானோ என்னவோ ஆங்கில மொழியில் வரலாற்றுக்கு HISTORY அதாவது HIS+STORY என்று இது ஆணின் கதை எனப்பொருள்பட வழங்கப்படுகின்றது.

பெண்களின் உரிமைகளை நிலைநாட்டப் பாடுபடும் உலகப் பெண்ணிலைவாதிகள் பலர், பெண்களின் வரலாறுகள் மறைக்கப்பட்ட இத்தன்மையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு பெண்களின் வரலாறுகளையும் அவர்களது வாய்மூலக் கதையாடல்களையும் ஆவணப்படுத்தி வருகின்றனர். மானிடவியலினைக் கற்கும் ஆய்வாளர்களும் கூட ஆதிக் குடிகளினதும் மற்றும் சமூகங்களினதும் நடத்தைப் பண்புகளையும் வரலாறுகளையும் நோக்குமிடத்தில் குறிப்பாக பெண்களின் பார்வையிலும் அவற்றை எழுத முயற்சிக்கின்றனர். இதே நோக்கத்தைக் கொண்டுதான் “அவளின் கதைகள்” என்கின்ற பெண்களின் கதையாடல்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சியொன்று கொழும்பில் ஏப்ரல் மாதம் 6ம் 7ம் திகதிகளில் லயனல் வென்ட் மண்டபத்திலும், ஏப்ரல் 20ம் 21ந்திகதிகளில் கல்முனை கிறிஸ்தா இல்ல மண்டபத்திலும், ஏப்ரல் 27ம் 28ம் திகதிகளில் காலியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. தேசத்தைக் கட்டியெழுப்பும் முறைவழியில் பெண்களின் அனுபவங்களும் அவர்களின் கதையாடல்களும் இடம்பெற வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும். இதன்மூலம் எமது பழஞ்சுவடியகத்திலும் பெண்களின் கதையாடல்களைப் பாதுகாக்கும் ஓர் பிரிவினை முதன் முதலாக ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்யப்படுகின்றது. இக்கண்காட்சியினையும் அதன் பின்னரான விழுது என்கின்ற அரசு சாரா அமைப்பு மேற்கொண்டுள்ளது. 

பெண்களின் கதையாடல்களைச் சேகரித்த முறைவழியும் சுவாரசியமானதாகும். தென்னிலங்கையில் போரினால் அதிகளவு பாதிக்கப்பட்ட இரு மாவட்டங்களான குருநாகலை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களிலும், வடக்கில் வன்னி மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் வாழும் சிங்கள முஸ்லிம் தமிழ் பெண்களை அணுகுமுகமாக அங்கு பணிசெய்யும் சமூக நிறுவனங்கள் அணுகப்பட்டன. அவற்றின் மூலமாக, பலவித அனுபவங்களினூடாகத் தமது வாழ்க்கையினை நிலைநாட்டியிருக்கும் பெண்கள் இனம் காணப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைக் கடிதங்களாக எழுதினார்கள். அவர்களின் வாழிடங்களும் குடும்பங்களும் படங்களாக ஆவணப்படுத்தப்பட்டன. அவர்களுடைய கதைகள் ஒரு கால நிரையில் தொடராக எழுதப்பட்டன. அவர்களுடன் நேர்காணலும் நடத்தப்பட்டு வீடியோவில் எடுக்கப்பட்டது. முக்கியமாக, யுத்தத்தின் பின்னர், எமது சமூகம் மீளத் தன்னைக் கட்டியெழுப்புதலில் பெண்கள் ஆற்றிய மிக முக்கிய பங்கும், அதனை அவர்கள் சாதிப்பதற்கு உறுதுணையாக இருந்த அவர்களது மனோவலிமையும் இக்கதைகளில் எடுத்துக் காட்டப்பட்டன.

தனது கணவனால் கைவிடப்பட்டு தட்டத்தனியே ஒன்பதும் பத்தும் வயதுமான தனது மகள்மாரை அணைத்துக் கொண்டு முள்ளிவாய்க்கால்வரை ஓடியும் அவர்களைக் காப்பாற்றித் திரும்பத் தனது ஊரான கிளிநொச்சிக்குக் கொண்டுவந்த தாய். இனித் தனது பிள்ளைகளைப் படித்து ஆளாக்குவதே தனது இலட்சியம் எனக் கூறிக்கொண்டு வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கின்றாள். 1987ல் வான் தாக்குதலினால் வல்வெட்டித்துறையில் தனது தகப்பனை இழந்தது தொடக்கம் வன்னி இறுதி யுத்தம் வரை தனது குடும்பத்தவர்களில் ஒவ்வொருவராக இழந்து இப்பொழுது தனிமரமாக நிற்கும் பெண். மணலாறு குடியேற்றங்களினால் 1984களிலிருந்தே தொடர்ந்து இடப்யெர்வுதான் வழமையான வாழ்வு என்றிருந்த முல்லைத்தீவு கொக்கிளாயைச் சேர்ந்த பெண். கையில் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டிருந்த பொழுதிலேயே அதனையும் தனது இளம் மகளையும் விடுதலைப் புலிகள் வெட்டிச் சாய்த்ததை கண்ணால் கண்டு துடித்த அனுபவம் கொண்ட மொனராகலையைச் சேர்ந்த பெண். வடக்கிலிருந்து 24 மணி நேரங்களுக்குள்ளேயே புலிகளினால் விரட்டப்பட்ட அனுபவம் கொண்ட முஸ்லிம் பெண். இப்படி 229 சிங்கள தமிழ் முஸ்லிம் பெண்களின் கதைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் மும்மொழிகளிலும் தரப்படுவதனால் யாவரும் படிக்கக்கூடியதாக இருக்கின்றன. 

இத்திட்டத்தினை விரிவுபடுத்துவதும் எதிர்கால நடவடிக்கைகளில் ஒன்றாகும். சிறுவர் பெரியோர் என்கின்ற வேறுபாடின்றி பொது மக்கள் யாவரும் பார்த்துப் படித்துப் பயனுறும் வகையில் இக்கண்காட்சி அமைகின்றது. 

இக்கண்காட்சியினை நாம் பிற நாடுகளுக்கும் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கின்றோம். இதற்கான செலவுகளுக்கான உதவிகளை அந்தந்த நாடுகளில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களேயானால் ஒரு முக்கிய நிகழ்வினை நாம் புலம் பெயர் தமிழர்களுக்கும் பயன்படத்தக்கவகையில் செயற்படுத்தலாம்.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்