/* up Facebook

Apr 9, 2013

மாற்று சினிமா எனும் ஒளியியல் மாயை - கொற்றவை


’மாற்று’ எனும் இந்தச் சொல் மிகவும் கவர்ச்சிகரமானது, போதையூட்டக் கூடியது. அது நேரடியாக எதிர்மறை எனும் பொருள் மட்டுமல்லாது, அறிவுஜீவித்தனம், மேதாவித்தனம், சமூக அக்கறை, பொறுப்புணர்வு ஆகிய குறியீடுகளை தன்னளவில் சுமந்து கொண்டிருக்கிறது. அல்லது அவ்வாறு நிலைபெற்றுவிட்டது எனலாம். மாற்று எனும் இந்தச் சொல் திரைப்படங்களில் எவ்வகையான பிரதிபலிப்புகளைக் கொண்டிருக்கிறது என்பதோடு அதன் சித்தரிப்பு மற்றும் புரிதல்களை உரையாடலுக்குட்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கம். அதேவேளை அடூர் கோபாலக்ருஷ்ணன், ஜான் ஆப்ரஹாம், பசி துரை, சத்யஜித் ரே போன்றோரின் படத்திற்கு பொருந்தகூடிய மாற்று எனும் பொருள் இல்லை இந்த ’மாற்று’. அது கலைப் படம் என்று சொல்லப்படுகிறது, இந்த ‘மாற்று’, பொதுபுத்தியில், சில அறிவுஜீவி வட்டத்தில், தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் சொல்லப்படும் ‘மாற்று’ என்ற புரிதலோடு இந்த கட்டுரையை வாசிக்கவும்.

நான் ஒரு தீவிர சினிமா இரசிகையோ அல்லது பின் தொடர்பாளரோ இல்லை. முற்போக்குச் சிந்தனைகள், பெண் விடுதலைச் சிந்தனைகள், சமத்துவக் கோட்பாடுகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் முன் பொது புத்தியை சுமந்து கொண்டு நான் பார்த்த படங்கள் நிறைய உணடு. ’தெளிவு’ பெற்ற பின்னர் அதற்கான ஆர்வம் குறைந்து போனது. ஆனால் மாற்று சிந்தனை ஆர்வலர்கள் வட்டத்தில் அதிகமாக பேசப்படும் படங்கள், ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் படங்கள் ஆகியவற்றையாவது பார்த்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்தவகையில் பார்த்த சில படங்களில் மாற்று சினிமா, மாற்று சிந்தனை என்று ஆராதிக்கப்பட்ட சில படங்களில் பெண்கள், பெண்மை, கதாநாயகத்தன்மை, மற்றும் சில சம்பவங்களின் கருத்தியல் இக்கட்டுரை பேசப்போகிறது.

பெண் உரிமைகான மாற்று திரைப்படம் என்றவுடனேயே எனக்கு நினைவுக்கு வருவது ‘அவள் அப்படித்தான்’. 1978 இல் ருத்ரையா இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் அக்காலகட்டம் தொடங்கி இன்று வரை பெண் உரிமையை பேசும் புரட்சிகரப் படமாக பலராலும் பேசப்படுகிறது. இந்திய சினிமாவை, குறிப்பாக தமிழ் சினிமாவை விமர்சிக்கும்போது ‘பாப்புலர் சினிமா, கம்ர்சியல் சினிமா’ எனும் வகைப்பாடு, அதன் எல்லைகள், மற்றும் ஒட்டுமொத்தமாக சமூக முதிர்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்ப்பதும் அவசியமாகிறது. (ஒட்டுமொத்தமாக பெண்ணியச் சிந்தனையோடு பார்த்தால் அரிதிலும் அரிதாகவே படங்கள் தேறும்). அந்தவகையில் மேலோட்டமாகப் பார்த்தால் ’அவள் அப்படித்தான்’ ஒரு மாற்று முயற்சி, நல்ல முயற்சி. பொதுவாக ’மாற்று சினிமா’ எனும் முயற்சிகளில் எவ்வாறு ’யதார்த்தம்’ என்கிற பெயரில் பெரும்பாலும் வன்முறை தூக்கிப் பிடிக்கப்படுகிறதோ, அதேபோல் ‘பாலியல் புரட்சி’, ‘பாலியல் சுதந்திரம்’, ‘நியாயப்படுத்தப்படும் விபச்சாரரி’, (ஆணைப் போலிச் செய்தலை புரட்சி என்று நம்பும் கருத்தியல்) என்பதை மையமாகக் கொண்டே பெண் கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்படுகிறது. அவள் அப்படித்தான் தொடங்கி.... வானம் வரை உதாரணமாகச் சொல்லலாம். (உதிரிப் பூக்கள், புதிய வார்ப்புகள், கருத்தம்மா, தென் மேற்கு பருவக் காற்று, கண்டேன் சீதையை இதிலிருந்து சற்று மாறுபட்டவை எனலாம்.)

அவள் அப்படித்தான் திரைப்படத்தின் கதாநாயகி ஸ்ரீபிரியா விளம்பர நிறுவனத்தில் பணிபுரியும் பெண். சிடுசிடுவென்று இருப்பவள், எல்லோரையும் எடுத்தெரிந்து பேசுபவள், யதார்த்த உணர்வுகள் இருந்தும் அதை தனக்குள் வைத்துக் கொண்டு தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ளும் ஒரு ‘அராஜகவாதி’. அவளுடைய அந்த குணத்திற்கு காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. இங்குதான் ஆணாதிக்கப் பூனை வெளிப்படுவதை ஒளியியல் மாயை மறைத்தும் விடுகிறது. கதாநாயகியின் தாய் – ’பணக்காரப் பெண்’ கணவனை மதியாது ’காதல் இன்பத்தில் திளைப்பவள்’, அதாவது பல ஆண்களோடு காதல் வயப்படுபவள். சில வேளைகளில் பெண்ணையும் தன்னுடன் அழைத்துச் செல்பவள். தாயின் ‘நடத்தையால்’ பாதிக்கப்படும் கதாநாயகி பின்னர் காதல் தோல்வி காரணமாக ஒரு முரண்பட்ட மனநிலைக்குள்ளாகிறாள். ஆனால் சிகப்பு ரோஜாக்கள் கமல் போல், ’இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான், கொல்லுங்க எஜமான், கொல்லுங்க’ அல்லது ‘மன்மதன்’ சிம்புவைப் போல் ‘தத்தை பாடல்கள்’ பாடாமல், ’கெட்ட ஆண்களை’ களை பிடுங்காமல் கதாநாயகி ‘ஆண்-வெறுப்பு’ மனோநிலைக்குள்ளாகிறாள்.

ஒழுக்கரீதியான பெரும் நியாயவாதங்களின்றி திரைக்கதை அமைந்ததை பாராட்டலாம். ஆனால் பெண் உரிமைக் குரலாக இந்தப் படத்தை எந்தளவுக்கு கணக்கில் கொள்வது என்பது விவாதத்திற்குரியது. கதாநாயகியை ஒரு ‘பெண் புரட்சியாளராக’ வலிந்து காட்டிக்கொள்வதில் இருக்கும் பிரயத்தனம் நையாண்டி வசனங்களில், காட்சிகளில் தன்னையறியாமல் ஆணாதிக்கக் குட்டிச் சுவற்றில் ஏறும் வேதாளமாகிப் போகிறது. உதாரணமாக ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு சோப்பு விளம்பரத்திற்கு போஸ் கொடுக்க வேண்டிய ஒரு காட்சியில் ஒரு பெண் அதை மறுக்க அதற்கு கதாநாயகி சொல்லும் பதில் ”நிறைய காசு தருவாங்கன்னு சொல்லு” அம்மாவுக்கு புரியும் எனும் ஒரு வசனம். அவள் தன்னளவில் மட்டுமே நடைமுறையில் ஆண்களை வெறுப்பவளாகவும் வேறொரு பெண்ணைக் கையாளும் இடத்தில் "அதை உன் அம்மா புரிந்து கொள்வாள்" என்ற எள்ளளில், ஆண் மையப் பார்வையே இருக்கிறது. மற்றொரு கோணத்தில் பார்த்தால், 'அராஜகவாதியாக' அல்லது 'முற்போக்காக' மாறும் பெண் பேசும் சுதந்திரம் அல்லது பொருட்படுத்தாத விசயமாக வைக்கப்படுவது பெண் உடல் மட்டுமே. ஒரு ஆணைப் பொறுத்தவரை பெண்ணுக்கான சுதந்திரம் மற்றும் முற்போக்கு என்பது மது அருந்துவது, குடிப்பது, கற்பை நிராகரித்து அனைவருக்கும் தன் உடலைக் கொடுப்பது. இதுவே புரட்சி... இத்தகைய சுதந்திரங்கள், மீண்டும் ஆணுக்கே மகிழ்ச்சியளிப்பவை, களியூட்டுபவை என்பதை இதில் பெண்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இவற்றை புரட்சி, பெண்ணுரிமை என்று நம்பி வியாதிகளை வாங்கிக்கொள்வதில் ஆண்களோடு போட்டிப் போடுகிறார்கள்.

பணத்திற்காக உடலை விற்பது என்பது சரியா தவறா எனும் வாதத்திற்குள் நுழையாமல், பொதுப் புரிதலுக்குள் இருந்து பார்த்தாலும்கூட மேற்சொன்ன வசனம் ஆணாதிக்கத் தன்மையுடையதே. பெற்ற மகளை பொருள் ஈட்டும் கருவியாகப் பயன்படுத்தும் தாய், பெண்கள் பணப் பித்து பிடித்தவர்கள், பெண்ணை வேசியாக்கிப் பிழைக்கக் கூட அஞ்சுவதில்லை எனும் வழமையான முன்வைப்பு. ஆனால் இவர்களை இந்த சுரண்டலுக்குள் ஒரு பலிகடாவாக்கிப் பிழைக்கும் அந்த ஆண் முதலாளிகள் நம் கண்களுக்குத் தெரிவதே இல்லை. தெரிந்தாலும், பணம் போட்டவன் பணத்தை எடுக்க வேண்டாமா எனும் சமாதானங்கள்.

இவையெல்லாம் சமூகத்தில் நடப்பது தான் என்று வைத்துக் கொண்டாலும், ‘புரட்சிகர’ கதாநாயகி அதை தடுக்க வழிசெய்யாமல் ‘யதார்த்தம்’ என்று எடுத்துக் கொண்டு தன் தொழில் தர்மத்தைக் காப்பாற்றுகிறார். தாய்க்கு பதில் அங்கு ’தந்தை’ இடம் பெறாததன் பின்னணி என்னவோ? சினிமா என்றாலே சீரழிவு, அங்கு பெண்களின் பங்கே அதிகம் எனும் பொதுபுத்தியின் பிரதிபலிப்பன்றி வேறில்லை.

கதாநாயகியின் ஒரு காதலனான சிவச்சந்திரன் அவளோடு உறவு கொண்டு முடிந்த தருவாயில், வீட்டிற்கு வரும் தன் தந்தையிடமிருந்து தப்பிக்க கதாநாயகியை ‘தங்கை’ என்று சொல்லிவிடுவார். அந்த கதாநாயகன் மேல் இருக்கும் வெறுப்பை காட்ட கதாநாயகி ‘தேவடியா என்று சொல்லியிருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேன் என்பார். பெண்ணானவள் தன் வாயால் தேவடியாள் எனச் சொல்ல வைக்கும் ஆண் மனம் அதிலும் கூட ஒரு தூய நிலையையே எதிர் பார்க்கிறது. பெண்களில் 'வேசி', 'கற்புக்கரசி' என்று பிரித்தாண்டு, அதில் ஒருபுறம் வேசைத்தனத்தை மானம் கெட்ட பிழைப்பாகவும், மறுபுறத்தில், நியாயவாதமாகவும் வைத்துப் பிழைப்பது ஆணாதிக்க மனமே. பெண் விடுதலையில் அக்கறையுள்ள நபர் முதலில் கவனம் கொள்ள வேண்டியது இதுபோன்ற ‘வசைச் சொற்களில்’ தான், ஏனென்றால் பெரும்பாலும் வசைச் சொற்களனைத்தும் பெண்ணை அவளது ஒழுக்கம் சார்ந்து அவமதிக்கும் சொல்லாகவே இருக்கும். அந்தச் சொல்லை அவள் பயன்படுத்தியதன் மூலம், அவள் கதாநாயகனை வசைபாடவில்லை, மீண்டும் ஆணாதிக்க மதிப்பீட்டின்படி பெண்ணை, தாயை இழிவுபடுத்தியுள்ளாள். இதுவும் ஒரு ‘அரைவேக்காட்டுப் புரட்சி நோய்’. ஆண்கள் பயன்படுத்தும் வசைச் சொற்களை பயன்படுத்துவது, அவர்களைப் போல் உடல்மொழியை வெளிப்படுத்துவது இவைகளெல்லாம் இதுபோன்ற இயக்குனர்களுக்கு ‘புரட்சி’.


இதுபோல் பல காட்சிகளை நாம் கட்டுடைக்கலாம். சுருக்கம் வேண்டி, படத்தின் இறுதிக் காட்சிக்குச் செல்வோம். ‘குடும்பப் பெண்’ சரிதாவைப் பார்த்து ஸ்ரீபிரியா கேட்பார் ”உனக்குப் பெண் விடுதலை என்றால் என்னவென்று தெரியுமா”? “இல்லை’ என்று பதில் வர அதற்கு ஸ்ரீபிரியாவின் பதில் “அதனால் தான் நீ சந்தோஷமாக இருக்கிறாய்” என்பது.

இதைவிட ஒரு அபத்தம் இருக்க முடியுமா? பெண் உரிமை பேசும் வேடம் இந்த ஒற்றை முடிவில் கலைந்துவிடவில்லையா? ’பெண் விடுதலை’ என்பது அத்தனை கொடியதா? அனந்து-பாலசந்தர் பள்ளிகூடத்திலிருந்து வெளிவந்த ‘முற்போக்குப் பெண்கள்’ பட்டியலை எடுத்துப் பார்த்தால் எல்லாம் இதேபோல் ஆணின் விருப்பத்திற்குட்பட்டு ஆணை எதிர்க்கும் கதாநாயகிகளாகவும், ஆணை வெறுக்கும் ஆனால் ஆணின்றி வாழமுடியாத பரிதாபத்திற்குறிய ஜீவன்களாகவும், பல காதல்கள் கொள்பவராகவும், இறுதியில் ஆணிடம் சரணடைபவராகவும், முட்டாள் தனமான தியாகங்கள் செய்பவராகவுமே இருப்பதைக் காணலாம். (உ.ம் நிழல் நிஜமாகிறது, அவள் ஒரு தொடர்கதை, கல்கி).

பெற்ற மகள் முன் ‘காதல் கொள்ளும்’ தாய் கதாப்பாத்திரம், பெற்ற மகளை வைத்துப் பிழைக்கும் கதாப்பாத்திரம், காதல் தோல்வி என்று ஆணாதிக்கச் சுரண்டலைத் தொடர்ந்து காணும் பெண், அராஜகவாதியாக மாறும் புரட்சிகர கதாநாயகி தன்னைப் போன்ற பெண்களை விடுவிக்க முற்படாது அராஜகவாதத்தின் பெயரால் மீண்டும் ஆணாதிக்க அகராதி வகுத்துள்ள ‘பெண்மை மீறலுக்குள்ளேயே’ சிக்குண்டு கிடக்கிறது.

அடுத்த உதாரணமாக கற்றது தமிழ் திரைப்படம் – தமிழ் கற்றவரின் வாழ்நிலைத் துயரத்தைக் கண்ணீர் மல்கப் பேசும் படம். பெண்களை ஒரு சில அடையாளவாதத்தோடு துண்டாடுகிறது. ‘தமிழ் பெண்’, ‘வட நாட்டுப் பெண்’. ‘ஏழைப் பெண்’, ‘பணக்காரப் பெண்’, ‘மெத்தப் படித்தப் பெண்’, ‘குறைவாகப் படித்தப் பெண்’, ‘கணினி துறை பெண்’, ‘மற்ற துறை பெண்’. இப்படி ஒரு பகுப்பின் மூலம், ‘அந்த மாதிரி’ பெண்களிலிருந்து கதாநாயகி ’மாறுபட்டவள்’ எனும் தப்பித்தல்வாதம். ‘மாறுபட்டவள்’ என்பதில் இருக்கும் ஒரே பொருள் ‘ஒழுக்கமானவள்’ எனும் ஒரு ‘பில்டப்’. இப்படி ஏற்றிவைத்துவிட்டு, கதாநாயகி ஒரு விபச்சாரி விடுதியில் சிக்கிக் கொண்டாள் எனும்போது பார்வையாளரின் மனம் எந்தளவு பதறும். ஆணாதிக்க சிந்தனையால் கட்டுண்டு கிடக்கும் மனங்களை வெல்லும் ஒரு சிறந்த உத்தி. இது ஒருபுறமிருக்க, ‘பி.பி.ஓவில்’ கதாநாயகன் தன் நண்பனோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண் தன் உடலை இருகப் பற்றியிருக்கும் ஒரு மேலாடை அணிந்து வருவாள். அதில் ‘தைரியமிருந்தால் இங்கு தொட்டுப் பார்’ என்று எழுதியிருக்கும். உடனே , வீரம் மிகுந்த ’தமிழ் கதாநாயகன்’ அவளது முலைகளை அழுத்தி அவளுக்கு பாடம் புகட்டுவான்.

தமிழ் உணர்வு, தமிழ் தேசியம், தமிழ் வாழ்வு இவைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் ஆணை மட்டுமே முன்னிறுத்துகிறது.
ஆணாதிக்க அகராதியின்படி தமிழ் என்பது வீரம் சார்ந்ததாயும், வன்முறையை ஆதரிப்பதுமாய் இருக்கிறது. மாறாய் தமிழ் பெண்ணுக்கு அது வகுக்கும் அறம் – கற்பு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. கற்றது தமிழ் என்ற அந்த திரைப்படத்தில் கதாயாயகன் பேசுவது தமிழ். தமிழ் படித்ததால் வேலை கிடைக்காமல் அல்லல் படுபவன், அதனால் பித்து பிடித்து கொலைகள் செய்பவன்.

பெண்ணின் முலையை பிடித்து அழுத்துவதை நியாயப்படுத்திய அந்த காட்சிக்கோ, சம்பந்தப்பட்ட அந்த இயக்குனருக்கோ இதுவரை கண்டனங்கள் பதிவு செய்யபட்டதில்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது ‘தமிழ் உணர்வு’ எத்தனை பெரிய சலுகைகளை அளிக்கிறது என்பது விளங்குகிறது. உண்மையில் ஒரு 'தமிழ் ஆண்' தம்மை இப்படி ஆணாதிக்கம் மிகுந்தவராக, பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ளும் ஒரு அற்பனாகக் காட்டியது கண்டு கோபம் கொண்டிருக்க வேண்டும், ஆனால் அச்செயல் சரியானதே என்று 'ஆண் மனம்' மகிழும் அளவுக்கு இங்கு ஆணாதிக்கம் வேறூன்றி இருக்கிறது, அதற்கு நீரூற்றி வளர்ப்பவர்கள் இத்தகைய இயக்குனர்கள்.


சமீபத்தில் ‘குறும்பட வட்டம்’ எனும் பெயரில் ஒரு அமைப்பின் துவக்கத்திற்கு 3 இயக்குனர்கள் பெயர் போடப்பட்டிருந்தது, ஒருவர் மேற்சொன்ன திரைப்படத்தின் இயக்குனர் ராம், மற்றொருவர் பாலுமகேந்திரா. இந்த வட்டத்தை நடத்தும் நபர் மாற்று சிந்தனை ஆர்வலராக அறியப்படுப்வர். அவ்விரண்டு இயக்குனர்களின் கதாநாயகிகளை கண் முன் நிறுத்திப் பார்த்தால் எவ்வகையிலும் பொதுபுத்தியின் தாக்கத்திலிருந்து மாறுபட்டவையல்ல பாலுமகேந்திராவின் கதாநாயகிகள். அது குறித்து ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம்.

இவ்வரிசையில் பாலுமகேந்திராவின் சீடர்களுக்கு ஒரு ’தனி மதிப்பு’, பாலா, ராம், வெற்றிமாறன் ஆகியோர். வெற்றிமாறனும் இதே ‘தமிழ்’ உணர்வு மற்றும் ‘சமூக அக்கறைக்காக’ விரும்பப்படுபவர். ஆடுகளம் பாராட்டப்பட வேண்டிய படம் என்று சொல்லலாம், ஆனால் அதில் கதாநாயகியின் பாத்திரம் என்ன? அவரது முந்தைய படமான பொல்லாதவனில் கதாநாயகியை கவர்ச்சியாக சித்தரித்து பாடல்கள் எடுக்கப்படவில்லையா? இரண்டு படத்திலும் ’ஆண்மை’ அடையாளங்கள்தானே தூக்கிப் பிடிக்கப்படுகிறது. எஸ்.பி. ஜனநாதன் ஈ., இயற்கை போன்ற நல்ல படங்களைக் கொடுத்திருந்தாலும், தலைப்பிலேயே ’பேராண்மையை’ வைத்துவிட்டு, பெண்களையும் சமமாகப் பயன்படுத்துவதுபோல் ஒரு பிம்பத்தையும் உருவாக்கி, இறுதியில் அவர்களை நீச்சல் உடை அணியவைத்து நடனமாட வைத்திருந்தார். கார்ல் மார்க்ஸைப் படிக்கும் கதாநாயகனைப் படைக்கத் தெரிந்த இயக்குனருக்கு, பெண் விடுதலை என்பது உடையிலும், ஆட்டம் பாட்டத்திலும் இல்லை என்று தெரியாமல் போனது வியப்பளிக்கிறது. என்ன காரணத்திற்காக மாற்று சிந்தனையாளர்கள் என்று தம்மை கருதிக்கொள்ளும் நபர்கள், குறிப்பாகப் பெண்கள் கூட இவர்களை ‘சமூக ஆர்வலர்களாகக்’ கருதுகிறார்கள். வெறும் ‘தமிழ்’ உணர்வு மற்றும் ஆதரவுக்காகவா? அப்படியென்றால், தமிழ் சமூகத்தில் பெண் விடுதலைச் சிந்தனைக்கு இடமில்லை என்று நாம் பொருள் கொள்ளலாமா? அல்லது தமிழர் அன்றால் அது வெறும் ஆண் இனம் மட்டும் தானா?

மற்றொரு ’புரட்சி இயக்குனர்’அமீரின் பருத்தி வீரன் கதாநாயகி – சிறு வயதில் தன் உயிரைக் காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக தன்னையே தியாகம் செய்பவள். ஒழுக்கவாதமுமின்றி, முற்போக்குச் சிந்தனையுமின்றி ஒரு கதாப்பாத்திரம். இறுதியில் பார்ப்பனிய-வேதாந்த நீதி – “நீ செஞ்ச பாவம் முழுக்க என் மேல இறங்கிடுச்சேடா” என்பதாக. அநீதியை தட்டிக் கேட்கும் கதாநாயகன் என்பது பாப்புலர் சினிமா ஃபார்முலாவாக இருக்க, பொதுவாக மாற்று சினிமா நாயகர்கள் – தறி கெட்டு திரிபவர்கள், ரௌடிகள், அடியாட்கள், நாலு பேருக்கு நல்லது செய்ய கடத்துபவர்கள் – இப்படி ’ஆண்மை’ நிறைந்தவர்கள். கதாநாயகிகளுக்கு ஒரே ஒரு வேலை மட்டுமே – கதாநாயகன் எத்தனை மோசமானவனாக இருந்தாலும், அவனை சகித்துக் கொள்வது அல்லது அவனது ‘மறு பக்கத்தை’ ஞானக் கண்ணால் உணர்ந்து அவனை பித்து பிடித்தது போல் காதல் செய்வது. ஆண் தவறு செய்தாலும் அதனால் பாதிக்கப்படுவது அவனது மனைவி, காதலி அல்லது சகோதரிகள். 'வில்லன்கள்' சூரையாடுவதற்காகவே உடலைச் சுமந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். பெண்கள் தவறு செய்தாலும் (இங்கு தவறு என்பது ஆணாதிக்க அகராதியின் படி உள்ள தவறு என்பதை கவனத்தில் கொள்க) சூரையாடப்படுவது அவளது உடலே. இதைப் பெண்கள் கூட பகுத்தாய்ந்து கேள்வி எழுப்பாத வண்ணம், அவர்களது மனம் 'ஆண் நீதிக்கு' கட்டுப்பட்டுள்ளது என்பதே துயரம்.

பாலாவின் கதாநாயகிகள் பற்றி கேட்கவே வேண்டாம், பிறக்கும் போதே தனது மூளையை அடகுவைத்துவிட்டு பிறப்பவர்கள். ஆனால் வெள்ளைத் தோல் அவசியம்.

தமிழீழ விடுதலை தொடர்பான பிரச்சனைகள் அல்லது ‘தமிழ் உணர்வு, தமிழ் தேசியம்’ ஆகியச் சொல்லாடல்களுக்கு அழுத்தம் கொடுத்து மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, போராடுவது தவிர்த்து பெண்கள் பிரச்சனைக்காக இவர்களைப் போன்ற இயக்குனர்கள் எழுப்பிய குரல் ஏதேனும் இருக்கிறதா. குறைந்தபட்சம் பெண் விடுதலை குறித்த சிந்தனைப் பகிர்வுகளாவது இருக்கிறதா? தெரியவில்லை. மாற்று சினிமா, யதார்த்த சினிமா படைப்பாளி எனும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் இயக்குனர்கள் (நடிகர்கள்) உருவாக்கும் பிம்பம் குலைக்க முடியாத அளவுக்கு அப்பாவி உள்ளங்களை ஆட்கொண்டு விடுகிறது. சமூக அக்கறை என்பது ‘தமிழ் உணர்வு, தமிழீழம்’ என்பதாக சுருங்கிவிட்டது, குறிப்பாக ஆண்களுக்கு. மேலும் அதன் மூலம் அவ்வியக்குனர்கள் பெரும் 'அறிவுஜீவி', 'கலகக்காரர்கள்' பட்டமானது அவர்களுக்கு பல 'அனுகூலங்களைப்' பெற்று தருகிறது என்றால் மிகையல்ல.


இந்த மாற்று பட்டியலில் தற்போது இடம் பெற்றிருக்கும் ஒரு படம் ஹரிதாஸ். ஹரிதாஸ், ஒரு சிறந்த முயற்சி, பாராட்டப்பட வேண்டிய படம் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இவரும் ஒரு இடத்தில் தன் ஆண் முகத்தை வெளிப்படுத்திவிடுகிறார். சிவதாசின் மகன் அவருடந் இணைந்தவுடன், காவல்துறை குடியிருப்பில் ஒரு கொண்டாட்ட நிகழ்வு காட்சியில் ஒரு பெண் முலைகளும், இடுப்பும் தெரிய நடமாடும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதே சூழலில் மகளிர் காவலர் கொண்டாட்டாங்களாய் இருந்தால் அவர் எப்படி கற்பனை செய்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது. ஒரு வேளை மகளிர் காவலருக்கு மனச்சோர்வோ மன அழுத்தங்களோ அவமதிப்புகளோ இருப்பதில்லையா. பெண்ணாக இருப்பதால் பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகள் வேறு இருக்கும். அந்த கோபத்தையும் சோர்வையும் மறக்க பெண் காவலர்கள் 'ஆண்களை' அரை நிர்வானமாக ஆடவைத்து மகிழ்வார்களா, இல்லை ஆண் வெறுப்புக்குள்ளாகி, பெண்களோடு 'குடியாட்டம்' போடுவார்களா? எத்தகைய அறிவுஜீவித்தனமான சிந்தனையை இந்தப் படம் தூண்டியிருக்கிறது பாருங்கள்.

காவல்துறையின் உண்மையான முகம், அதன் மனித உரிமை மீறல்கள் ஒருபுறம் இருந்தாலும், சமூக அறத்தைப் பொறுத்தவரை காவல்துறை என்பது ‘பொறுப்புள்ள’ பதவி. அதில் ஒன்று பெண்களை போகப் பொருளாக பயன்படுத்துவதை தடுக்கும் பொறுப்பு, ஆனால் அப்படிப்பட்ட காவல்துறையினர் கானா பாடல் எனும் பெயரில் ஒரு ‘கவர்ச்சி-குத்தாட்டம்’ போடுவது போன்ற ஒரு நிகழ்வு எந்தவகையில் யதார்த்தமானது? சரியானது? சொல்லப்போனால், அப்படிப்பட்ட கவர்ச்சி ஆட்டங்களை தடுப்பது, அனுமதி இன்றி நடந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்யும் பொறுப்பும் காவல்துறையினுடையது. பெண்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய ஒரு துறையினர், ஒரு பெண்ணோடு இப்படி கூத்தாடுவதுதான் ‘மாற்று’ சிந்தனையா? காவல்துறையின் இன்னல்கள், நெருக்கடிகளைப் பாடும் வரிகளுக்கு இப்படியா காட்சியமைப்பது? வேடிக்கை என்னவென்றால் இது குறித்து காவல்துறையே எந்த கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை என்பதுதான். அறிவுஜீவி வட்டமும், இந்த ‘வழக்கமான ஃபார்முலா’ குறித்து எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது.

இங்கு ஆண் மனதின் மற்றொரு செயல்பாட்டையும் சுட்டிக்காட்டலாம். வழக்கமாக தாய்மையை தூக்கிப் பிடிக்கும் இடத்தில் தந்தமை தூக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது, ஆனால் கதாநாயகனின் பின்னணி 'ஆண்மை' நிறைந்த காவலர், பாதிக்கப்பட்ட குழந்தைக்கான சாதனை களம் 'ஓட்டப் பந்தயம்' அதற்கு தூண்டுகோல் குதிரை....இவையெல்லாம் ஆண்மையின் குறியீடன்றி வேறில்லை நண்பர்களோ. (தடகள வீரர் - என்றால் ஆண் தானே). மேலும், யதார்த்தம் என்கிற பெயரில் கதாநாயகன் கொல்லப்படுவதும் ஒருவகையில் மனித உணர்ச்சிகளோடு விளையாடிப் பார்க்கும் ஒரு வக்கிர வெளிப்பாடே. இங்கு மாற்று என்றால் 'சோகம்', 'இழப்பு', 'தியாகம்' - கொலை.

மாற்று சினிமா, யதார்த்த சினிமா என்பதன் அடையாளங்கள் என்ன? பழைய ஆணாதிக்க மதுவை புதிய கோப்பையில் நிரப்பிக் கொடுப்பதா? மாற்று சினிமா என்பது யதார்த்தம் என்ற பெயரில் வண்ணச் சாயலை மாற்றி அமைப்பதிலோ, ஒளிப்பதிவு கோணங்களை மாற்றி அமைப்பதிலோ, வன்முறையை பெருக்கிக் காட்டுவதிலோ அல்லது கதாநாயக கதாப்பாத்திரத்தை மட்டும் மாற்றியோ, சூழலை வேறுபடுத்திக்காட்டியோ அமைப்பதில் அல்ல. மாற்று சினிமா என்பது பொதுபுத்தியில் ஊறிப்போகி இருக்கும் சிந்தனைப் போக்கை மாற்றி அமைக்க வேண்டும். அது தன்னளவில் ஒரு மாற்று அரசியல் தத்துவத்தை உள்வாங்கிய கதையம்சம் கொண்டதாக இருக்க வேண்டும். மக்களுக்கு எது பிடிக்கிறதோ அதைக் கொடுக்கிறோம் என்று சொல்பவர் கலைஞன் அல்ல, அவர் வியாபாரி. அதேபோல் இருப்பதைத் தானே காட்டுகிறோம் என்று சொல்பவர் ஒரு காட்சியை உள்ளதை உள்ளபடி பதிவு செய்யும் வெறும் பதிவாளர் மட்டுமே தவிர (அதற்கு ஒளிப்பதிவு கருவி போதும்) அவர் படைப்பாளி அல்ல. நிச்சயம் அவர் மாற்று சிந்தனையாளரோ, அறிவுஜீவி எனும் பட்டத்திற்கு உகந்தவர் அல்ல.

'வியாபாரம்'. 'இலாபம்' எனும் காரணத்தைச் சொல்லி இவர்கள் கட்டவிழ்த்துவிடும் சீரழிவு, எவ்வளவு விலை கொடுத்தாலும் சரி செய்ய முடியாத சிதைவுகளைச் சமூகத்தில் ஏற்படுத்திவிடுகிறது. மாற்று சினிமா எனும் முத்திரையை சுமந்துகொண்டு வரும் திரைப்படங்களும் ஆணின் வக்கிரங்கள், வன்முறைகள், கொலைகள், 'கெட்ட பெண்களின்' களை நீக்கங்களை நியாயப்படுத்துதல் என்று ஆணின் களத்தைத் தவிர எந்த வகையிலும் சமூக விடுதலை, பெண் விடுதலைச் சிந்தனைகளைக் கொண்டிருப்பத்தில்லை என்பதை கவனைப்போம்.

விவாதிப்போம் தோழர்களே.....

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்