/* up Facebook

Apr 28, 2013

மணவாக்குமூலம் : மீனா கந்தசாமி


அன்பின் விடுமுறை தினங்கள்
நிதம் காலை மழை பெய்யும் அந்த விநோதமான கடலோர சிறுநக‌ரத்தில், வலியை ஒரு பிரார்த்தனை போல் ஏற்று அதில் பங்கு கொண்டேன். அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் தவிர வேறெதனைக் கொண்டும் என்னை நடத்தாத‌ ஒரு வன்முறையாளனுக்கு வாழ்க்கைப்பட்டு, தன் கதையைத் தானே சொல்வதற்கு போதுமான காயங்களைக் கண்டு விட்டது என் தேகம்.

ஆரம்ப நாட்களில், அவனது சொற்கள் என்னை ஆட்கொண்டிருந்தன: நீ இல்லையென்றால் எனக்கு எதுவுமே இல்லை. அந்த தேனிலவுக் காலத்தில் ஒவ்வொரு சண்டையும் யூகிக்கக்கூடிய ஒரு பாணியைப் பின்பற்றியிருந்தன: நாங்கள் சமாதானம் கொண்டோம், கலவி செய்தோம், மறந்து நகர்ந்தோம். அது ஒரு பேரமாக, பண்டமாற்றாக ஆனது. வாழ்வதற்காக நான் சரணடந்தேன்.

திருமணமான இரு மாதங்களில், மயக்கிப் பேசி என் கடவுச்சொற்களிடமிருந்து என்னைப் பிரித்திருந்தான். விரைவில் என் உடைகளைத் தேர்ந்தெடுக்கும் அதே சுதந்தரத்துடன் எனது மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்கத் தொடங்கியிருந்தான். என்னுடைய கடவுச்சொல் உனக்கு எதற்கு எனக் கேட்டேன். என்னுடையது உன்னிடம் இருக்கிறதே என்றான். நான் அதைக் கேட்கவே இல்லையே என்றேன். நீ என்னை உண்மையாக‌க் காதலிக்கவில்லை என்றான். என்னை வைத்துக் கொள், என்னை வைத்துக் கொண்டிருப்பதற்காக‌ நான் உன்னை வைத்துக் கொள்வேன்: உடைமையாக்குதல் என்ற ஒற்றைக் கருத்து வெறியேறிய,‌ தனக்கு மட்டும் உரியதென‌ எண்ணும்‌ பித்துநிலை மனிதனின் சிந்தனைகள்.

காதல் என்பது அடிமை சகாப்த அதிகாரமாகி விடும் போது எந்த ரகசியமும் சாத்தியமில்லை. ஒரு வாரம் பொது மின்னஞ்சல் முகவரி என்ற எண்ணத்தை முன்வைத்தான், அடுத்த வாரம் அது செயல்படுத்தப்பட்டது. அவன் அந்தரங்க எல்லைகளை மறையச் செய்தான். நான் என் நண்பர்களிடமிருந்தும் குடும்பத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டேன். சுத்திகரிக்கும் பணியில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் 25,000 மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டன. நான் வரலாறற்ற பெண்ணானேன்.

விரைவில் என் காதலற்ற கல்யாணத்தில் கலவியானது சந்தைப் பொருளாதார மாதிரியைப் படியெடுக்கத் தொடங்கியது: கேட்பு அவனது, அளிப்பு எனது. என் எதிர்வினை என்ன என்பது பற்றி நினைத்ததில்லை. ஒவ்வொரு முறையும் ரத்தப்போக்கு ஏற்பட்டது குறித்து யோசித்ததில்லை. என் வலியிலிருந்து தான் அவன் சந்தோஷத்தை எடுத்துக் கொள்கிறான் என்பது பற்றி எண்ணியதில்லை. சிதறிய இதயத்தோடும், இச்சையற்ற மனதோடும் எனக்குள்ளிருந்த பெண் மேற்கூரையோடு உரையாடிக் கொண்டிருந்தாள், திரைச்சீலைகளிடம் தன்னை ஒப்படைத்தாள். அத்தனை சேதாரங்களுடன் அவள் சந்தோஷத்தைத் தேடியது இயற்கையின் சுடர்மிகு சக்திகளில்: சுரீர் சூரியஒளி, திடீர் மழைத்துளி. ரகசியமாய், அவள் அடங்க மறுத்தாள்.

முதன்முறை அவன் என்னை அடித்த போது, நான் திருப்பி அடித்தது நினைவிருக்கிறது. பதிலடி என்பது சரிசமமான போட்டியாளர்களுக்குத்தான் பொருந்தும், ஆனால் நாற்பத்தைந்து கிலோ குறைந்த எடை கொண்ட பெண் வேறு மார்க்கங்கள் சிந்திக்க வேண்டும் என அனுபவம் கற்றுத் தந்தது. அது வேறு விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தது. எது வேண்டுமானாலும் தண்டனைக் கருவியாக மாறலாம் என்பதை உணர்ந்தேன்: கணிப்பொறியின் மின்கம்பிகள், தோலினாலான பெல்ட்டுகள், ஒருகாலத்தில் நான் உலகின் அத்தனை காதலுடனும் பற்றியிருந்த அவனது வெறும் கைகள். அவனது சொற்கள் அந்த‌ அடிகளை மேலும் கூர்மையாக்கின‌. நான் வேகமாக அடித்தால் உன் மூளை சிதறி விடும் என்பான். அவனது ஒவ்வோர் அடியும் என்னைத் தகர்த்தன‌. ஒருமுறை அவன் என் கழுத்தை நெரித்த போது அடைத்த தொண்டையின் மௌனத்தை உள்ளீர்த்துக் கொண்டேன்.

நான் திருமணத்திலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று அவனிடம் சொன்ன போது ஒரு வேசியாக நான் வாழ்க்கையில் வெற்றி பெறுவேன் என வாழ்த்தினான். வாய்ப்புணர்ச்சியில் விஷேசமடையவும் ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுரை கூறினான். நான் கூனிக்குறுகி, அவனைத் திட்டிக் கண்ணீர் உகுத்தேன். அவன் வெற்றிக்களிப்பில் புன்னகைத்தான். அவன் என்னை வீழ்ந்த பெண்ணாக உணரச் செய்ய விரும்பினான். அவன் எப்போதும் தன்னை ஒழுக்கத்தின் உயர்நிலையில் இருத்திக் கொண்டு அதீத பொதுமைப்படுத்தல்களை அடுக்குவான்: இலக்கிய விழாக்கள் விபச்சார விடுதிகள், பெண் எழுத்தாளர்கள் வேசிகள், என் கவிதைகள் பாலியலைத் தூண்டுபவை. அவனது கம்யூனிச அடையாளங்கள் கலைந்தன. நான் பெண்ணியவாதியாக இருப்பதைக் குற்றமென்றான். வர்க்க எதிரிகளுக்கென நிர்ணயிக்கப்படுகிற‌ வெறுப்போடு அவன் என்னை நடத்தினான்.

சலிப்படைந்த‌ இல்லாளாக, வீட்டு வன்முறைக்கு வண்ணக் குறியீடுகள் இட்டேன்: என் தேகத்தில் விழும் அடிகளின் புதுச்சிவப்பு, உறைந்த ரத்தத்தின் கறுப்பு நிறம், குணமான காயங்களின் மங்கிய ஊதா… வதை, வருத்தம் நிரம்பிய மன்னிப்பு, மேலும் நிறைய வதை என்ற இந்த‌ முடிவில்லா சுழற்சியிலிருந்து விடுதலையே கிடையாது என்று தோன்றியது. ஒரு நாள் நான் பெல்ட்டால் அடி வாங்கிய போது அதற்கு மேல் தாங்காது எனத் தோன்றியது. காவல்துறை நடவடிக்கையில் இறங்குவேன் என அவனை மிரட்டினேன். என் கவிதையிலிருந்து ஒரு வரியைப் படித்த பின் சீருடை அணிந்த எவனும் என்னை மதிக்க மாட்டான் என்று பதிலளித்தான். யாரிடமும் எங்கு வேண்டுமானாலும் போகச் சொல்லி சவால் விட்டான். அந்தச் சின்ன உலகத்தில் எனக்கு நண்பர்களே இல்லை – அவன் உலகத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த அவன் பணிச் சகாக்கள், அவன் நடந்த பூமியை வழிபடும் அவன் மாணவர்கள்… எனக்கு யாரை நம்புவது எனத் தெரியவில்லை. எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்னை அவனிடம் மறுபடி ஒப்படைக்கக் கூடியவர்கள் தாம். நடு இரவில் அருகிலிருந்த கன்னி மடத்துக்கு ஓடிப் போய் தங்கிக் கொள்ள விரும்பினேன். நான் புரிந்து கொள்ளப் படுவேனா? இது சரியாக வருமா? என் மொழி பேசாத ஒரு நகரத்தில், மதுக்கூடங்க‌ளில் இளம்பெண்கள் அடிக்கப்படும் ஒரு நகரத்தில் நான் எவ்வளவு தூரம் ஓடி விட முடியும்?

இனிமேல் அவனுடன் வாழ முடியாது என்பதை அவனிடம் சொன்னேன். நான் அவனுக்குக் கொடுத்த கடைசி வாய்ப்புகளின் எண்ணிக்கையே மறந்து போயிற்று என்பதை அவனிடம் சொன்னேன்.

அடுத்த நாள் காலையில் நான் எழுந்த போது அவன் பழுக்கக் காய்ச்சிய கரண்டியால் தன் தசையைத் தீய்த்துக் கருக்கிக் கொண்டதைக் கண்டேன். திருகலான மூளை மற்றும் அதன் திருகலான காதல். அவன் தன் தரப்பை விளக்க விரும்பினான்: நான் என் தவறை உணர்ந்ததால் என் மீதே இந்த தண்டனையை சுமத்திக் கொள்கிறேன். அதன் உள்ளர்த்தம்: தயை கூர்ந்து பழியை நீ ஏற்றுக் கொள், தயவு செய்து அடிகளையும் நீயே பெற்றுக் கொள். நான் உணர்ச்சி வயத்தின் பணையக்கைதியாக ஆக்கப்பட்டேன். என்னை நானாகவே இருக்க அனுமதிக்கும் ஒரு சுதந்தரத்தை நான் யாசித்தேன். என் கதையை நானே பேச உதவும் சொற்களைத் தேடித் தடுமாறினேன். அடைக்கப்ப‌ட்ட கதவுகளும் உடைக்கப்பட்ட கனவுகளும் கொண்ட ஒரு வீட்டில் நான் வாழ்ந்தேன். நான் நானாக இல்லை. வேறொருவரின் துன்பியல் திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருப்பதாக‌ என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். நான் மரணத்தை எதிர்நோக்கி இருந்தேன். மரணம் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் என நினைத்தேன்.

அச்சம் கசிந்தொழுகும் என் உடலில் கலவி என்பது சமர்ப்பிக்கும் செயலானது. நான் மனைவியாக நடித்த இந்த நாடகத்தில் விட்டுச்செல்வதன் ஆறுதலும், உபயோகித்தபின் விலகுதலும் தவிர வேறெதுவும் நினவில் இல்லை. வதையினாலான திருமணத்தில் முத்தங்கள் மறைந்து போகிறது.

நாங்கள் தனித்தனி அறைகளில் உறங்கினோம். ஒவ்வோர் இரவும் என் மனம் ஒரு சோககீதம் இசைத்தது. நான் மிருதுத்தன்மைக்கு ஏங்கினேன். துக்கமானது ஒரு கிராமத்துப் பெண் தெய்வம் போலவும், நான் என் காயமுற்ற தசையை அதற்கு உணவாக அளிப்பது போலவும் அதைச் சுற்றி உழன்றேன். வந்து என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கதறினேன். யாரும் அதைக் கேட்கவில்லை, நானே என் தலைக்குள் அலறிக் கொண்டிருந்தேன். என்னை நானே சேர்த்து இழுத்துக் கட்டி வைக்க‌ முடிந்தது. நான் ஒருபோதும் உடைந்துவிடலாகாது என சபதமிட்டிருந்தேன்.

நான் தூரப் போனேன். நாங்கள் விலகிப் போனோம்.
பிற்பாடு அவனது இரட்டை வாழ்க்கை வெளிப்பட்டது: அவன் ஏற்கனவே திருமணமானவன், அவனது குடும்பத்தினரே மறைத்த ஓர் உண்மை அது. அவன் தன் முதல் மனைவியிடமிருந்து இதுவரை விவாகரத்துப் பெறவில்லை. நான் அவனை எதிர்கொண்ட போது, எல்லாவற்றையும் தர்க்கப்பூர்வமாக விளக்க முயற்சித்தான், அது கடைசியில் என்னிடமே திரும்பி வந்து நின்றது. இன்னும் நிறைய பெயரிடுதல்கள், சிகையிழுத்தல்கள், கெட்டவார்த்தைகள், மிரட்டல்கள். அவன் என்னை அடிக்கத் தொடங்கினான். என்னை சிறுக்கி என்று முத்திரை குத்தினான். உயிருடன் என் தோலை உரித்து விடுவேன் என்றான். உன் தந்தையைக் கூப்பிட்டு வந்து உன்னை அழைத்துப் போகுமாறு சொல்லுவேன் என்றான். நான் உணர்வற்றுப் போயிருந்தேன், எதிர்வினை புரிய முடியாத அளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அந்த இரவில் நான் ஒரு குப்பை போல் வெளியே எறியப்பட்டேன்.

கைப்பையுடனும், மோசமானவள் என்ற பட்டையுடனும் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். விமான நினையத்திலிருந்த துணை ராணுவ அதிகாரிகளை அங்கே உறங்க‌ அனுமதிக்குமாறு கெஞ்சினேன். அவர்கள் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள், ஆனால் தங்க அனுமதித்தார்கள். அதில் ஒருவர் எனக்கு இரவு உணவு வாங்கித் தந்தார். அடுத்த நாள் காலையில் நான் சென்னைக்குத் திரும்பினேன். என் பெற்றோர்களுக்குச் சொல்ல எனக்கு யாதொரு வார்த்தையும் கைவசமிருக்கவில்லை. அவர்கள் என்னை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. என் அம்மா ஒரு பெண்ணின் சுகந்தத்துடன் என்னைக் கட்டிக் கொண்டார், இனிமேல் என்னைப் போக விடமாட்டேன் என்பது போல. என் சகோதரி ஏன் அவளை விட்டுப் போனேன் என்பதற்கே கோபித்துக் கொண்டாள்.

சில வாரங்கள் கழித்து நான் வக்கீல்களுடன் பேசினேன். என் திருமணமே செல்லுபடியாகாது, அதனால் விவாகரத்து என்பது அர்த்தமில்லாத முயற்சி என்று அவர்கள் சொன்னார்கள். கருணையின் செயலாக சட்டம் கூட என்னை விடுவித்து விட்டது. அவனது தண்டனைக்காக நான் அழுத்தம் தந்த போது காவல்துறையினர் நீதிமன்ற சிக்கல்களைப் பேசினர். நீங்கள் வேறெங்கோ வசிக்கிறீர்கள் என்று சொன்னார்கள். நீதி தேவதை இடம்பெயர்ந்த பெண்களுக்கு சேவை செய்வதில்லை.

என் பெற்றோரின் இடத்துக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. நான் என் நலம் விரும்பிகளுடன் பேசுகிறேன், என் சகோதரியின் ஆடைகளை உடுத்திக் கொள்கிறேன். இரவில் தனிமையில் அழுகிறேன். என் வாழ்க்கையின் அந்த நான்கு மாதங்களைத் திரும்பிப் பார்க்கிறேன், நான் வாழ்ந்தது “என் வாழ்க்கை”யே அல்ல, வேறொருவர் எனக்கு வரையறுத்து அளித்தது என்பது புரிகிறது. மனைவியை அடிக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, என் கதையைச் சொல்ல நான் உயிரோடிருப்பேன் என்றே நான் நம்பவில்லை. கொடூரத்தன்மையின் முதல் தர அனுபவம் எனக்குண்டு என்று என்னை நானே ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்: மோசமான நாட்களில் பகிர்ந்து கொள்ளவென்று இருக்கும் போராட்டம் மற்றும் ஜீவித்திருத்தலின் கதை. அந்த வெற்று ஆறுதல்கள் வன்முறைக்குள்ளான உடல்களை அமைதிப்படுத்தும். நான் குடும்பத்தின் அரவணைப்பில் சுகங்காணும், நண்பர்களின் கதகதப்பில் ஆறுதல் கொள்ளும், அறிமுகமற்ற அன்புள்ளங்களின் சொற்களால் காயங்கள் குணம் பெறும் வன்முறைக்குள்ளான பெண்களின் அதிர்ஷ்டக் கூட்டத்தில் சேர்ந்திருக்கிறேன்.

இந்தக் கல்யாணம் எனும் கொடுங்கனவை நான் வென்று வர முடியுமா? என்னிடம் நேரடியான பதில்கள் இல்லை. நான் எனக்கான பாடங்களைக் கற்றுக் கொண்டேன். நான் தனியாள் என்பதும் பாதுகாப்பானவள் என்பதும் எனக்குத் தெரியும். துயருற்ற பெண்ணின் கண்களுடனும் ஆத்மார்த்தமான புன்னகையுடனும் நான் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியம் பெற்று விட்டேன். என் வலிகளை மறந்து விடுவதற்கு போகும் வழியில் ஒருவேளை என் கவிதைகள் உதவக்கூடும்.
*
குறிப்பு: ‘அன்பின் விடுமுறை தினங்கள்’ என்னும் தலைப்பு மனுஷ்ய புத்திரனின் ‘ஆதீதத்தின் ருசி’ தொகுப்பிலிருக்கும் கவிதையின் தலைப்பிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

மார்ச் 19, 2012 தேதியிட்ட அவுட்லுக் இதழில் I Singe The Body Electric என்ற தலைப்பில் மீனா கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. முறைப்படி அனுமதி பெற்று மொழிபெயர்த்திருப்பவர், சி.சரவணகார்த்திகேயன்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்