/* up Facebook

Apr 21, 2013

நெருக்கடிகளிலிருந்து வெகு சீக்கிரத்தில் வெளியேறுவேன் - ஸர்மிளா ஸெய்யித் (நேர்காணல்)

சிந்திக்கத் தெரியாத மனிதர்கள் அல்லது அடிப்படை மதவாதக் கருத்துக்களில் மட்டும் மூழ்கி சமூக சவால்களை எதிர்கொள்ளத் தெரியாதவர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் பொருட்படுத்தவே இல்லை. சமாதானமும் மனித கௌரவமும், மதிப்பும் நிறைந்த மார்க்கத்தில் இருப்பதையிட்டு நான் கௌரவமாகக் கருதுகின்றேன். இஸ்லாத்திலிருந்து வலுவாத நிலையில் எனது சமூகப் பணிகளைத் தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம். எமது சமூகம் பெண்களின் கருத்துக்களையும், செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்வதற்கே தயங்குகிற நிலையில் ஒரு முஸ்லிம் பெண்ணாக என்னை ஏற்றுக்கொள்ள இடருவதில் எனக்கு எதுவித ஆச்சரியமும் இல்லை. 


ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா ஸெய்யித் பத்திரிகைத் துறையில் ஈடுபாடு கொண்டவர். அத்தோடு இவர் சமூக ரீதியிலும் செயலாற்றி வந்தார். முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டார். சிறுவர், பெண்களின் கல்வி, உளவியல் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடுடன் செயற்பட்ட ஸர்மிளா ஸெய்யித் தனது பிரதேசத்தில் சிறுவர் நலன்புரி அமைப்பை நிறுவி அந்நிறுவனத்தினூடாக சிறுவர்களின் கல்விக்கான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். அதே காலப்பகுதியில் “மீள்குடியேற்ற ஒன்றியம்”என்ற அமைப்பின் தலைவியாகச் செயற்பட்டு வந்ததோடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் கிராமங்களின் மீளமைப்பிற்கான பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். 
விசேட தேவையுள்ள பெண்களின் சமூக வாழ்வு குறித்த முன்னேற்றத்திற்காவும், போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் பொருளாதார சமூக அபிவிருத்திக்காகவும் இவர் பணியாற்றினார். அநுராதபுரத்தைத் தலைமையகமாகக் கொண்ட விசேட தேவையுள்ள பெண்களுக்கான அமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட “மக்கள் ஒருங்கிணைப்பாளர்”ஆக இணைந்து விசேட தேவையுள்ள  பெண்களின் சமூக அந்தஸ்த்துப் பற்றி ஆய்வினைச் செய்ததுடன், அவர்களின் சமூக வாழ்விற்கான பல்வேறு செயற்பாடுகளிலும் ஈடுபட்டார். “பெண்களுக்கு எதிரான அனைத்துப் பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான ஆசியக் கொமிட்டி” உடன் இணைந்து மனித உரிமைகள் பற்றிய பல்வேறு பயிற்சிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெற்று சிறுபான்மை மக்களின் உரிமைகள், பெண்கள், சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

தற்போது சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவியாக பெண்களின் தொழில் முயற்சிகளுக்கும், பெண்களின் உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை வசதிகளுக்குமான செயற்பாடுகள் ஊடாக பெண்களின் பொருளாதார ஸ்திரத் தன்மையை மேம்படுத்தும் செயற்பாட்டாளராக ஸர்மிளா  ஸெய்யித் செயற்படுகின்றார். 

சிறகு முளைத்த பெண் கவிதை நூலை வெளியிட்டீர்கள். அதனை வாசித்து முடிப்பதற்குள்ளாகவே சர்ச்சையில் சிக்கிக் கொண்டீர்களே?
சர்ச்சை என்பதை விட அது எனக்குக் கிடைத்த சமூக அநுபவம் எனலாம். எனது வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான அநுபவம். 

பாலியல் தொழில் சட்டமாக்கல் விவகாரத்தில் கேள்வி கேட்பதற்கு பிபிசி உங்களைத் தெரிவு செய்தது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
நான் முழுநேர ஊடகவியலாளராக பணியாற்றியபோது பிபிசி தமிழோசையுடன் தொடர்பிருந்தது. ஆகவே, பிபிசி தமிழோசையுடனான தொடர்பு என்பது எனக்குப் புதிய ஒரு விடயமல்ல. போருக்குப் பின்னர், “போரினால் பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களின் சமூக பொருளாதார நிலையும்” என்ற தலைப்பில் நான் மேற்கொண்ட ஆய்வு தொடர்பாகப் பல கட்டுரைகள் எழுதியிருந்தேன். பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குறித்தும் எனது சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். மேலும், இந்த ஆண்டில் நான் மேற்கொண்ட மிக முக்கியமான ஆய்வு, “வளைகுடா நாடும் பணிப்பெண்களும்” என்பது. பிபிசி பாலியல் தொழில் பற்றிக் கேட்டதுமே ஒரு சிறந்த கருத்து வெளிக்கான தளமாக அதனை நோக்கினேன்.  இதில் வற்புறுத்தலோ, நிர்ப்பந்தமோ, வழிநடத்தலோ எதுவுமில்லை. ஒரு செயற்பாட்டாளராகவும், எழுத்தாளராகவும் என்னை அறிந்திருந்தபோதும், இந்த தலைப்பில் பேசக்கூடிய பின்னணி உள்ளதா என்று எனது சம்மதத்தைக் கேட்ட பின்னர்தான் பிபிசி எனது கருத்தைப் பதிவு செய்தது. 

பாலியல் தொழிலை சட்டமாக்குவதற்கு ஆதரவளிப்பது இஸ்லாத்திற்கு முரணானது என்பது உங்களுக்குத் தெரியாதா?
பாலியல் தொழிலை சட்டமாக்குவதற்கு நான் ஆதரவளிக்கவில்லை. எனது பிபிசி செவ்வியில் எந்த இடத்திலும் நான்  அவ்வாறு குறிப்பிடவில்லை. சட்டமாக்கல் தொடர்பான ஆதரவு ஆதரவற்ற நிலைகளுக்கு அப்பால் நின்று எனது கண்ணோட்டத்தை முன்வைத்திருக்கிறேன். அது சமயக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. அதற்காக நான் சமயக் கோட்பாடுகளுக்கு அப்பாற் சென்றுவிட்டதாகக் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை என்னால் ஏற்கமுடியாது. இஸ்லாத்தில் விபச்சாரம் தடுக்கப்பட்டது - ஹராமானது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் கொள்கை அடிப்படையிலான ஹராம் ஹலால் என்பதைக் கூறுவது மட்டும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிட முடியாது. பாலியல் தொழில் இஸ்லாத்தில் ஹரமாக்கப்பட்டது என்ற நிலையையும் தாண்டி பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களை சந்தித்த ஒரு ஆய்வாளராகத்தான் நான் எனது கருத்தை முன்வைத்திருந்தேன். 

நீங்கள் இஸ்லாத்திற்கு எதிரான கருத்தைக் கூறிவிட்டதாக விமர்சிக்கப்பட்டபோது பெரும்பாலும் மௌனமாக இருந்தீர்களே, உங்களைத் தொடர்புகொள்ள முடியாதிருந்ததே…?
பிபிசியில் எனது கருத்தைத் தெரிவிக்கும்போதே விமர்சனம் பற்றிய எண்ணமும் எனக்குள் தவிர்க்க முடியாது எழுந்தது உண்மை. ஆனபோதும் நான் கூறுவது சரியோ, பிழையோ இது ஆரோக்கியமான விமர்சனத்திற்கும் சிறந்த கருத்துவெளிக்கும் இடம் அமைக்குமென முழுமையாக நம்பியிருந்தேன். ஏமாற்றம்@ எனது சமூகம் கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளத் திராணியற்றது என்ற கவலையும், ஏமாற்றமும் என்னை மௌனமடையச் செய்தது. ஒரு தனி மனுஷி எனது கருத்து ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட்டு முற்றிலும் பிழையாக விளங்கிக்கொள்ளப்பட்டு சில ஊடகங்களால் திரிவுபடுத்தி எழுதப்பட்டு, சில செய்தியாளர்களால் எண்ணெய் வார்க்கப்பட்டு இணையங்களில் பற்றி எரிந்தது. பல முஸ்லிம் சகோதரர்கள் (அவ்வாறு கூறிக்கொள்கிறார்கள்) முண்டியடித்துக்கொண்டு தாங்கள்தான் சமூகத்தின் காவலர்கள், ஈமானிய வாசல்களின் சொந்தக்காரர்கள் என்ற தோரணையில் படு கேவலமாகவும், இஸ்லாமிய வரம்புகளை முற்றிலும் மீறிய முறையிலும் என்னை விமர்சித்தனர். எனது நிலைப்பாட்டை தெளிவாக பிபிசியில் மீண்டும் நான் வலியுறுத்திய பின்னரும் அதே நிலைதான் தொடர்ந்தது. ஏறாவூரில் இயங்கும் எனது சகோதரியின் நிர்வாகத்திற்குட்பட்ட ஆங்கிலப் பாலர் பாடசாலைக்கு தீ வைப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட்டது. தொலைபேசியிலும், ஈமெயில் மற்றும் இணையங்களிலும் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இந்த முட்டாள்தனங்களைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பதைத் தவிர வேறென்ன செய்யமுடியும்?

அப்படியென்றால், உங்களது நிலைப்பாட்டில் மீண்டும் உறுதியாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?
பாலியல் தொழிலை இலங்கையில் சட்டமாக்கவேண்டும் என்பது எனது நிலைப்பாடு அல்ல. பாலியல் தொழில் சட்டமாக்கப்படுகிறதோ இல்லையோ, பாலியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது என்ற அடிப்படையில்தான் சிந்திக்கவேண்டியிருக்கிறது. இஸ்லாத்தில் ஹராமாக்கிய ஒரு விடயத்திற்கு சட்ட அந்தஸ்த்துப் பெற்றுக் கொடுப்பது நிச்சயமாக எனது நோக்கமல்ல. விரும்பியோ, விரும்பாமலோ பாலியல் தொழிலில் பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள். எனக்குக் கண்டனம்  தெரிவித்த சமூக காவலர்கள் என்று தங்களைக் காண்பித்துக் கொள்ள முற்பட்ட, முற்படுகின்றவர்களிடம் எனக்குச் சில கேள்விகள் உள்ளன. வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்ற முஸ்லிம் பெண்கள் அங்கு என்ன செய்கிறார்கள்?  அரைவாசிக்கும் அதிகமான பெண்கள் “பாலியல் அடிமைகள்” என்ற நிலையிலிருந்துதான் பணம் சம்பாதிக்கிறார்கள். இதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற பெண்களில் 40 வீதமான பெண்கள் முஸ்லிம் பெண்கள். இதனைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இஸ்லாத்தில் விபச்சாரம் மட்டுமா ஹராமாக்கப்பட்டுள்ளது? போதைப்பொருள் பாவிப்பதும்கூடத்தான் ஹராம். இலங்கையில் சட்டபூர்வமான மதுபானசாலைகளும், இரவு உல்லாச விடுதிகளும் இயங்குவதற்காக முஸ்லிம் இளைஞர்கள் எல்லாரும் கட்டாயம் செல்லவேண்டும் என்று அர்த்தம் கற்பிப்பதா? இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட மது விற்பனை நிலையங்கள் இலங்கையில் சட்டபூர்வமான முறையில் இயங்குவதைத் தடுக்க ஏன் யாரும் முற்படவில்லை? எனக்குத் தெரிந்து இஸ்லாம் மார்க்கம் அழகான கலாசாரத்தையும், கண்ணியமான வாழ்க்கை முறைகளையும் கொண்ட மார்க்கம். ஆனால், போலியான சமூக கௌரவத்துக்குள் சமூகத்தை மூடிவைத்துக் கொண்டு சமகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண முயற்சிக்காமல் சமூகப் பிரச்சினைகளை அணுக முற்படாமல் இருப்பதென்பது மிகப் பிற்போக்கானதும், சமூகப் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கின்றதுமான நடவடிக்கை. சாமியார் பெண்ணுடன் லீலை என்ற செய்தியைப் பார்க்கும்போதும், பௌத்த பிக்கு பெண்ணுடன் காதல் என்ற செய்தியைப் பார்க்கும்போது எமக்கு கொதிப்பும் கோபமும் வருவதில்லை. அதுவே மௌலவி பெண்ணுடன் லீலை, காதல் என்று ஒரு செய்தி வருமாக இருந்தால் நாம் அதனை விரும்புவதில்லை. ஏன்? அதனால் எமது சமூக கௌரவம் கெட்டுவிடும் என்று நாமே வரம்பிட்டுக் கொள்கிறோம். எமது சமூகப் பிரச்சினைகளில் அந்நிய சமூகம் மூக்கை நுழைக்க அனுமதிக்கக்கூடாதென்று கூப்பாடு இடுகிறோம். இதெல்லாம் நியாயமாகப் பார்க்கக்கூடியதுதானா? அந்நிய சமூகம் மூக்கை நுழைக்கமுன் நாம் சுவாசிப்பதற்கு மூக்கைத் திறந்து வைத்திருக்கவேண்டாமா? சமூக கௌரவம் என்ற போர்வைக்குள் எமது சமூகத்தின் துர்நாற்றங்களை எத்தனை நாளைக்குக் கொண்டலைவது? மூடிவைத்திருப்பது?

பாலியல் தொழிலுக்குச் சட்ட அந்தஸ்த்து என்பது ஹராமாக்கப்பட்ட ஒரு செயற்பாட்டை சுதந்திரமாகச் செய்வதற்கான அனுமதியாகிவிடும் என்ற சமூகத்தின் பார்வை நியாயமானதுதானே…?
நிச்சயமாக நியாயமானதுதான். இன்று இலங்கையில் பாலியல் தொழில் சட்ட அந்தஸ்த்துப் பெறாதிருக்கின்ற காரணத்தினால்தான், பாலியல் தொழில் மறைவாகவும், பெண்களை பலவந்தமாக ஈடுபடுத்தியும் செய்யப்படுகின்றது. சட்ட அந்தஸ்த்தானது கட்டமாயமாக பெண்கள் ஈடுபடுத்தப்படுவதிலிருந்து பெண்களையும், சிறுமிகளையும் காப்பாற்றக்கூடும் என்பது எனது கருத்து. அது முற்றிலும் சரியாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. அது முற்றிலும் சரி என்றோ, நியாயம் என்றோ நான் வாதிடவுமில்லை. எனது இந்தக் கருத்திலிருந்து நான் மாற்றுக் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நான் ஜனநாயகத்தை விரும்புகின்ற பெண் என்ற அடிப்படையில் மாற்றுக் கருத்துக்களை வரவேற்கிறேன். ஆனால், அந்தக் கருத்தைக் கூறியதற்காக என்னை அவதூறு கூறுவதும், அடிப்படையே இல்லாமலும், தொடர்பற்ற முறையிலும் என்னை – கருத்தின் உரிமையாளி என்ற அடிப்படையில் எனது குடும்பத்தை விமர்சிப்பதை, அச்சுறுத்துவதை எந்த வகையில் ஏற்பது? இன்று என்னை விபச்சாரியாகவும், எனது குடும்பத்தை விபச்சாரக் குடும்பம் என்ற அளவிலும் இணையங்களில் விளம்பரம் செய்யப்பட்டு, எழுதப்பட்டுள்ளதைப் படிக்கின்றபோது நான் சொல்லொண்ணாத மனத்துயர் அடைகின்றேன். ஒரு முஸ்லிம் பெண்ணாக கருத்துச் சொன்னேன் என்பதற்காக எனக்களிக்கப்பட்ட தண்டனையல்லாத தண்டனைகளும் எதிர்வினைகளும் ஜனநாயக வரம்புகளையும், ஏன் இஸ்லாத்தின் வரம்புகளையும் மீறியதாகவே பார்க்கிறேன்.

இன்னொரு புறத்தில் பாலியல் தொழிலுக்குச் சட்ட அந்தஸ்த்து என்பது பலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிற செய்தி. ஏன்? மறைமுகமாக விபச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் மாட்டிக்கொள்ள நேருமோ என்ற அச்சமும், வாகனத்திற்கு அனுமதிபோல விபச்சாரத்தை செய்வதற்கும் அனுமதி எடுக்கப் பகிரங்கமாக வரிசையில் நிற்பதா என்ற குழப்பகரமான எண்ணமும்தான் பலரைக் கொதிக்க வைக்கிறதோ, என்னமோ? 

பெண் செயற்பாட்டாளரான நீங்கள், அதுவும் ஒரு முஸ்லிம் பெண் பாலியல் தொழிலை சட்டமாக்குவது இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் என்று கருத்துக் கூறியிருப்பது சரியா?
அது தர்க்கரீதியானதும், விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியதுமான விடயமாகும். சுற்றுலாத்துறையை வளர்க்க பாலியல் தொழிலைத்தான் சட்டமாக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. எனது பிபிசி செவ்வியில் அதை “நல்ல விடயமாகப் பார்க்கிறேன்” என்று நான் குறிப்பிட்டிருந்தபோதும், பெண்களைப் போகப்பொருளாக பயன்படுத்துதை ஒரு பெண்ணாக என்னால் அங்கீகரிக்கமுடியாதென்றும், நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக செயற்படுகின்ற பெண்கள் போகப்பொருளாகவும் பங்களிப்புச் செய்யவேண்டுமா என்ற கேள்வியையும் முன்வைத்திருக்கிறேன். எனவே, சுற்றுலாத்துறைக்காக பாலியல் தொழிலை சட்டமாக்கலாம் என நான் முற்றிலும் ஏற்றுக்கொண்டதாக அதனைக் கொள்ளமுடியாது.

வளைகுடா நாடும் பணிப்பெண்களும் என்ற உங்களின் ஆய்வைப் பற்றிச் சொல்லுங்கள்? 
2012 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பிய 200 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்குள் புதைந்து கிடக்கின்ற துயரங்களும் பகிரப்படாமல் அவர்களுக்குள் இருக்கின்ற இருள் கவிந்த பக்கங்களும் பயங்கரமானது. ஆரம்பத்தில் பணிப்பெண்ணாக சென்றிருந்தபோதும், இப்போதும் அதே பெயரில் அனுப்பப்பட்டபோதும் பல பெண்கள் பாலியல் அடிமைகளாக இருப்பதையும், பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதையும் ஒத்துக் கொண்டுள்ளனர். 35 வீதமான பெண்கள் மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்களாக அனுப்பப்படுவதற்கு முன்னர் இங்குள்ள முகவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தரவு சேகரிப்புகளை முடித்துவிட்ட நிலையில், இதுபற்றிய எனது விரிவான முழுமையான ஆய்வினை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். மேலும், எனது இந்த ஆய்வினை ஆவணப்படமாக மாற்றும் எண்ணமும் எனக்குள்ளது.  

நீங்கள் மேலைத்தேய கலாசார மோகத்திற்குள் வீழ்ந்து விட்டவரென்றும், அந்நிய சக்திகளால் வழிநடத்தப்படுகிறீர்கள் என்றும் சொல்லப்படுகிறதே?
சிந்திக்கத் தெரியாத மனிதர்கள் அல்லது அடிப்படை மதவாதக் கருத்துக்களில் மட்டும் மூழ்கி சமூக சவால்களை எதிர்கொள்ளத் தெரியாதவர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் பொருட்படுத்தவே இல்லை. சமாதானமும் மனித கௌரவமும், மதிப்பும் நிறைந்த மார்க்கத்தில் இருப்பதையிட்டு நான் கௌரவமாகக் கருதுகின்றேன். இஸ்லாத்திலிருந்து வலுவாத நிலையில் எனது சமூகப் பணிகளைத் தொடரவேண்டும் என்பதே எனது விருப்பம். எமது சமூகம் பெண்களின் கருத்துக்களையும், செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்வதற்கே தயங்குகிற நிலையில் ஒரு முஸ்லிம் பெண்ணாக என்னை ஏற்றுக்கொள்ள இடருவதில் எனக்கு எதுவித ஆச்சரியமும் இல்லை. பிபிசி செவ்விக்குப் பின்னர் நான் யார் என்பதையும், நான் எப்படி ஒரு ஆய்வாளர் ஆனேன் என்பதையும், அதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதையும் பல சகோதரர்கள் இரவிரவாக விழித்திருந்து பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி இணையங்களில் வெளியிட்டிருந்தார்கள்@ சிலர் எனக்கு திறந்த மடல்களை எழுதியிருந்தார்கள். இன்னும் சிலர் என்னைக் கொல்லவேண்டும்@ அதற்கு முன்னர் கற்பழிக்கவேண்டுமென முகநூலில் வக்கிரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். இந்த உளவியல் நோயாளிகள் இஸ்லாத்திற்கு எதிராக செயற்பட்டதாக என்னைக் காண்பித்துக் கொண்டு வெளியிட்ட கருத்துக்களைப் பார்க்கையில் குமட்டலும் வாந்தியும் வந்தது. மறுபக்கம் அவர்களுக்காக நான் பரிதாபப்பட்டேன்.  எமது சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பல கட்டங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். சமூகத்தின் பிரதிநிதிகளாக எம்மால் அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்களால் பல வரலாற்றுப் பிழைகள் இழைக்கப்பட்டதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறோம். அதன்போதெல்லாம் வாய் திறக்காத எம்மவர்கள், கண்டும் காணாததுபோல் நடந்துகொண்ட எம்மவர்கள் என்னை எதிர்ப்பதற்கு படை திரள்கிறார்கள். ஆழ்ந்த அனுதாபத்திற்குரிய அந்த சகோதரர்கள் குறுகிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, சமூகத்தைப் பற்றியும் இன்று சமூகத்தில் மலிந்து கிடக்கின்ற பிரச்சினைகள் பற்றியும் சிந்திக்கவும் பேசவும் வேண்டும். இன்று தொழில்நுட்பம் என்கின்ற மிகப்பெரிய வரம் எம் கைகளுக்குக் கிடைத்துள்ளது. அதனை மிக ஆரோக்கியமான பணிகளுக்காக எமது சமூகத்தின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தவேண்டும். 

கடுமையான விமர்சனத்திற்கும், எதிர்த்தலுக்கும் ஆளான பின்னர் பொதுவெளியில் பணியாற்றுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? 
மிகப்பெரிய சவாலை நான் எதிர்கொண்டிருக்கிறேன். ஏறாவூரில் இயங்குகின்ற ஆங்கிலக் கல்வி நிலையமானது எனது சகோதரியினால் நிர்வகிக்கப்பட்டபோதும் அது என்னால் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் அதே பிரதேசத்தில் பெண்களைச் சுயதொழிலில் ஈடுபடுத்தி, பெண்களின் உற்பத்திகள், தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்த எனது நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவும் தற்போது மூடப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய பெண்களும் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். சமூகத்திற்காக ஒரு செங்கல்லைத்தானும் நட்டு அறியாதவர்களின் விமர்சனங்களினாலும், அடாவடித்தனங்களினாலும் இவ்வாறான நிலை உருவாகியுள்ளது. இதனை சமூகத்தின் எதிர்த்தலாக நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். இது ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்ப்பல்ல. இந்த சந்தர்ப்பத்தை, என்னைத் தாக்குவதற்கான சந்தர்ப்பமாக சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் பயன்படுத்திக் கொண்டனர். இந்த சவாலை எதிர்கொள்வதற்கான சக்தியையும், ஆற்றலையும் பொறுமையையும் அல்லாஹ் எனக்கு அளித்திருப்பதாக நம்புகிறேன். இந்த நெருக்கடியான நிலையிலிருந்து வெகு சீக்கிரத்தில் நான் வெளியேறுவேன். இன்னுமொரு கோணத்தில் எதிர்த்தல் எனக்குப் புதிதன்று. இஸ்லாமியப் பெண்ணாக சமூகப் பணியிலும், எழுத்துப் பணியிலும் நான் பல சந்தர்ப்பங்களிலும் தனிநபர்களினாலும், குழுக்களினாலும் எதிர்த்தலுக்கு ஆளாகியிருக்கின்றேன். எதிர்க்கின்ற பத்துப் பேருக்குப் பயப்படுவதையும், அதற்காக வருந்துவதையும்விட என்னை புரிந்து கொள்கின்ற ஒரு நபரால் தரப்படுகின்ற தைரியம் மேலானது என்பதை இத்தகைய  சந்தர்ப்பத்தில் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.  

நேர்காணல் குகா
நன்றி : கோசம் (இலங்கை)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்