/* up Facebook

Apr 5, 2013

ஆண்கள் கைதுசெய்யப்பட்டால் குடும்ப சுமையை எப்படி தாங்குவது? - வ.ராஜ்குமார்


திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மிகவும் பின்தங்கிய வறிய கிராமமான ஆதியம்மன்கேணி கிராமம் ஒவ்வொரு முறையும் நாட்டில் ஏற்படும் யுத்தத்தின் போதும் வன்செயலுக்கும் பல உயிரிழப்புகளுக்கு உள்ளாகும் ஓர் கிராமம். பெரும்பாலும் சிங்கள மக்கள் வாழும் பகுதியின் நடுவே உள்ள பூர்விகமான தமிழ் கிராமம்.

இலங்கை வரலாற்றிலே மிகமுக்கியமான சிவாலயங்களில் ஒன்றான திருமங்கலாய் சிவன் கோயிலை அண்டிய கிராமம் இது. இதனாலேயே இக்கிராமம் ஆதியம்மன்கேணி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் சேனைப்பயிர்ச் செய்கையான மரவள்ளி,சோளம்,கச்சான் போன்ற பயிர்களை மழையை நம்பி மேற்கொண்டு வரும் வருமானத்தை வைத்து தமது ஜீவனோபாயத்தை நகர்த்திச் செல்லும் மக்கள் வாழும் கிராமம் இது.

இந்த நிலையில் தான் இங்குள்ள பல கிராமங்கள் உள்ளது இவ்வாறு அன்றாடம் தமது உணவுத் தேவைக்கே போராடும் இக்கிராம மக்களின் குடும்பங்களில் உழைக்கும் குடும்பத் தலைவர்கள் 10 பேருக்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 65வது சுதந்திரதினம் இந்த ஆண்டு திருகோணமலையில் நடாத்தப்பட்டது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஒன்று இந்த கைதுகள் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் காலி,பூசா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றார்கள்.. இந்த கைதுகளினால் ஏற்கனவே உணவுக்கே திண்டாடி வரும் இக் குடும்பங்களின் நிலையும் அன்றாடம் உணவுத் தேவை, சிறுவர்களின் கல்வி, பெண்களின் பாதுகாப்பு, முதியோரின் மனஉளைச்சல் என பல பிரச்சினையால் இக்குடும்பம் அதலபாதாளத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக ஆதியம்மன்கேணியில் கைதுசெய்யப்பட்ட ஒரு குடும்பத்தின் நிலையும் அவர்கள் முகங்கொடுத்துள்ள அவலத்தையும் நாம் பார்ப்போம்.

இங்கு வசித்து வந்த வைரமுத்து வயந்தன்(36) அவருடைய மனைவி வயந்தன் புண்ணியவதி 30 வயது அவர் இவ்வாறு தெரிவிக்கிறார். “எங்களது பூர்வீக கிராமம் ஆதியம்மன்கேணி 2006ம் ஆண்டளவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இக் கிராமத்தை விட்டு வெளியேறினோம் அப்போது எங்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாத சமயத்தில் என்னையும் மூன்று பிள்ளைகளையும் உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு எனது கணவர் சவூதிக்கு சென்று தொழில் செய்து இரண்டு வருடம் முடிந்தவுடன் 2009ம் ஆண்டளவில் வந்தார். அதன் மூலம் கிடைத்த பணத்தில் எமது கிராமத்திற்கு மீளக்குடியேறி சேனைப் பயிர்செய்கை செய்து வருகிறோம்.மீளக்குடியேறி எமது சொந்தக் காணியிலே தொழிலையும் செய்கின்றோம்.
வயந்தனின் கடவுச்சீட்டு பிரதி
எமது பிள்ளைகளான டிலுக்சன் (வயது 13) 8ம் ஆண்டும், வணிக்சன் 2ம்ஆண்டும், விதுக்சன் 1ம்ஆண்டும் கல்வி கற்கின்றனர். குழந்தைகளின் கல்வியை கருத்தில் கொண்டு அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று எண்ணி கடுமையாக உழைத்து எனது குடும்பத்தின் ஐந்து பேரும் நிம்மதிப் பெருமூச்சி விட்டு சந்தோசமாக சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தோம்.
திடீரென ஒருநாள் (05.02.2013 சுதந்திரதினத்துக்கு மறுநாள்) காலை பொலிஸ் நிலையத்திலிருந்து எனது கணவரைத் தேடி வந்தார்கள் அப்போது அவர்வீட்டில் இல்லை தோட்டத்திற்கு போய் விட்டார் என்று சொன்னவுடன் அவர் வந்தால் பொலிசுக்கு வருமாறு கூறிவிட்டு சென்றனர். நானும் சரியென்று மதியம் சாப்பாட்டுக்கு வந்தவரை பொலிசுக்கு போகுமாறு கூற அவரும் தோட்ட வேலைகள் உள்ளது என்று கூறினார். நான் தான் அவரிடம் சொல்லி பின்நேரம் போய் என்ன விடயம் என கேட்டு வாருங்கள் எனகட்டாயப்படுத்தி அனுப்பினேன். சுரியென சம்மதித்து அவர் பொலிசுக்கு சென்றார்.

மாலை 6.00 மணிக்கு தான் எங்கள் கிராமத்திற்கு ஒரு கடைசி பஸ் உள்ளது இந்த பஸ்சினை எதிர்பார்த்து காத்திருந்த நான் பஸ் வருவதைக் கண்டேன். அதில் எங்கள் கிராமத்தை சேர்ந்த பலர் வந்து இறங்குவதைக் கண்ட நான் எனது கணவர் இறங்காததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். அப்போதுஅதில் வந்தவர் ஒருவர் சொன்னார் பொலிசுக்கு விசாரணைக்கு போன சிலரை கைதுசெய்து பூசாவுக்கு அனுப்புகிறார்கள் என்றார். உடனே என்ன செய்வதென்று புரியாத நான் எங்கள் கிராமத்தில் உள்ள சிங்களம் தெரிந்த ஒரு அக்காவை (மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி) அழைத்துக் கொண்டு பொலிசுக்கு சென்றேன்.
கைதுசெய்ததற்கான பற்றுச்சீட்டு

அங்கு எனது கணவர் இல்லை அவரை கைதுசெய்து புனர்வாழ்வு முகாமிற்கு கொண்டு சென்று விட்டதாக சொல்லி கைதிச் சான்றிதழ் ஒன்று தந்தனர். நான் எதற்காக அவரை கைதுசெய்தீர்கள்? என்று கேட்டதற்கு உங்கள் கணவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு சிலகாலம் புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளது அதன் பின்னர் விடுதலை செய்யப்படுவார். நீங்கள் விரும்பினால் வாரத்தில் ஒருநாள் அவரை சென்று பார்க்கலாம் என்றனர். நானே கட்டாயப்படுத்தி பொலிசுக்கு அனுப்பி வைத்தேன் அவரைப் பார்க்கக் கூட முடியாமல் கைதுசெய்து எங்கேயோ அனுப்பிவிட்டார்கள்” என்று தெரிவித்து கவலையடைந்தார் புண்ணியவதி.
இளவயது பெண்ணான புண்ணியவதியின் வீடு கிராமத்தின் முடிவில் உள்ள சுற்றிலும் காடுகள் உள்ள சேனையிலேயே உள்ளது. அவருடைய பாதுகாப்பு மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பு, கல்வி என்பன தற்போது கேள்விக் குறியாகியுள்ளது.

எனது 3 பிள்ளைகளையும் எனது கணவர் இருக்கும் போது ஆட்டோவில் பள்ளிக்கூடம் அனுப்பினோம். பாடசாலை 4முஆ தூரத்தில் உள்ளது தற்போது நானும் எனது மூத்தமகனும் மற்றைய இரண்டு பேரையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டுபோய் விட்டு பாடசாலை முடிந்த பிறகு மீண்டும் ஏற்றிவருவோம். ஆட்டோவுக்கு கொடுக்க பணம் இல்லை,

தனது கணவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த சேனைப்பயிர்ச் செய்கையை தொடரமுடியாது அவற்றுக்கு போதிய பராமரிப்பு இன்றி அழிந்துவருகிறது. இதற்கு பின்னர் எமது வருமானத்திற்கு என்னசெய்வதென்று தெரியாமல்  உள்ளது என தெரிவிக்கிறார். தடுப்புமுகாமிற்கு சென்று அவரைப் பார்த்து வருவதற்கு போதிய வருமானமும் என்னிடம் இல்லை.

குழந்தைகளின் கல்வி அவர்களின் உணவு ,உடை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும் என்னசெய்வதென்று தெரியாமல் நான் உள்ளேன் என மனம் கலங்கி தெரிவிக்கின்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் தமது இருப்பிடம்களுக்கு திரும்பி தமது மறு வாழ்வை ஆரம்பிக்கும் பல குடும்பங்களுக்கு இவ்வாறான நிலை மீண்டும் ஒரு விரக்தி நிலைக்கும் குறை அபிவிருத்திக்கும் வழிவகுக்கும்.

ஆண்கள் கைதுசெய்யப்பட்டால் அக்குடும்பச் சுமை பெண்களையே சாருகிறது. இவர்களுடைய ஜீவனோபாயத்திற்கு எவ்வித நிவாரண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான சம்பவம் பெண்கள் மற்றும் சிறுவர்களின் நல்வாழ்விற்கு பேரிடியாக விளங்குகிறது.

நன்றி - விமர்சனம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்