/* up Facebook

Jul 11, 2013

செருப்பால் அடிப்பேன்… - சவுக்குஇப்படி சொன்னவர் ஒரு காவல்துறை மூத்த அதிகாரி.  உயர்பொறுப்பில் இருப்பவர்.  நேர்மையான அதிகாரி என்று காவல்துறைக்குள் இவரைப் பற்றிப் பெயர்.  யார் இவர்… எந்தச் சூழலில் இவர் இப்படிச் சொன்னார் என்பதை பின்னால் பார்ப்போம்.

கல்கி..  16 வயது.  எல்லா இளம்பெண்களையும் போல கனவுகளோடு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.    விழுப்புரம் மாவட்டம் வானூர்தான் அவள் சொந்த ஊர். சராசரியாகப் படிக்கும் மாணவி.

புத்தாண்டு பிறந்து இரண்டு நாட்கள்தான் ஆகியிருந்தது.  ஜனவரி 3.   வீட்டில் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மறுநாள் காலையில் செய்ய வேண்டிய சிற்றுண்டிக்கு அரிசியை ஊறவைத்துவிட்டு, சற்று நேரத்தில்  வந்து விடுகிறேன் என்று தம்பியிடம் சொல்லி விட்டு, இயற்கை உபாதைக்காக  வீட்டின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்புக்கு செல்கிறாள்.  மணி பிற்பகல் 3.10

மாலை நான்கு மணிக்கு, கல்கியின் தாய் தேன்மொழி, இயல்பாக எங்கடா அக்கா என்று கல்கியின் தம்பியிடம் கேட்கிறார்.   இதோ வந்துடுறேன் என்று சொல்லிட்டுப் போயிருக்கு என்று கூறுகிறான். மேலும் சிறிது நேரம் காத்திருந்து விட்டு, காணவில்லையே என்று பதற்றமடைந்து தேடத் தொடங்குகின்றனர்.   கல்கி… கல்கி என்று குரல் கொடுத்துக் கொண்டே, வீட்டின் பின்னே இருந்த சவுக்குத் தோப்பில் தேடுகின்றனர்.   இதற்குள் மற்ற உறவினர்களும் சேர்ந்து தேடுகின்றனர்.

சற்று நேரத்தில் பின்னால் உள்ள சவுக்குத் தோப்பில் உள்ள ஒரு சவுக்கு மரத்தில் கல்கி தன் துப்பட்டாவில் பிணமாகத் தொங்குவதைப் பார்க்கிறார்கள்.  உடனே அவசர அவசரமாக மரத்திலிருந்து கல்கியை இறக்கி அவசர அவசரமாக அருகில் உள்ள  ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். கல்கி இறந்து விட்டாள் என்பது அறிவிக்கப்படுகிறது.   உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டதும் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கின்றனர்.  காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி  போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்புகின்றனர்.

இரண்டு நாட்கள் கழித்து  05.01.2013 அன்று  கல்கியின் உடலை அவரின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.

இறந்தவர் பாலியல் வன்முறை காரணமாக இறந்துள்ளார் என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே வெகுவாகப் பரவியிருந்தது.  இதனால் அப்பகுதியில் ஒரு பதற்றமான சூழல் உருவாகியிருந்தது.   சந்தேகத்திற்குரிய மரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்த காவல்துறையினர், இவ்வழக்கில் வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் அனுப்பி கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.  ஆனால் அவ்வாறு கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெறவில்லை.

இயல்பாகவே இளம்பெண்ணின் மர்ம மரணம் உருவாக்கும் பதற்றம் அந்தப் பகுதியிலும் தொற்றிக் கொண்டது.   இறந்த கல்கியின் தந்தை சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பில் உள்ளார்.

மாணவி கல்கி படித்த பள்ளி மாணவ மாணவிகளும் போராட்டத்தில் குதித்தனர்.  பொதுமக்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், மாணவ மாணவிகளும் பாண்டிச்சேரி வானூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகளும் அந்த இடத்திற்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  சம்பவ இடத்துக்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், கோட்டாட்சியரும் குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்ததை அடுத்து போராடிய மக்கள் கலைந்து சென்றனர்.

கல்கி புதைக்கப்பட்ட பிறகு, அந்த குற்றத்தைக் கண்டுபிடிக்கும் காவல்துறையின் முயற்சிகளும் புதைக்கப்படுகின்றன.   இதையடுத்து, பெண்ணின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சிரைச் சந்தித்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

காவல்துறையினரை எப்போது சந்தித்துக் கேட்டாலும், கல்கியின் மரணம் தற்கொலைதான் என்று உறுதிபடக் கூறுகின்றனர்.  பெண்ணின் பெற்றோருக்கோ அதிர்ச்சி.. காவல்துறையினரின் இந்த பொறுப்பற்ற பதில் அவர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.  நெட்டுக்குத்தாக நிற்கும் சவுக்கு  மரத்தில், ஒரு இளம்பெண் எப்படி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்ய முடியும் என்ற கேள்விக்கு விடையே இல்லை.

தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகளை சந்தித்துக் கேட்டாலும் பொறுப்பற்ற பதில்கள் மட்டுமே வருகின்றன.  எப்படியாவது நம் மகளைக் கொன்ற நபர்களை தண்டிக்க முடியுமா என்று பெற்றோர்கள் அலைகிறார்கள்.

இந்த நிலையில் பிப்ரவரி 19 அன்று அந்த சவுக்குத் தோப்பின் உரிமையாளர் முருகன், சவுக்குத் தோப்பை வெட்டுவதற்கென்று ஆட்களோடு வருகிறார். பெண்ணின் பெற்றோர்களும், உறவினர்களும் தோப்பை வெட்டாதீர்கள், கொலை வழக்கு விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.   மரத்தை வெட்ட வந்தவர்களும் எதுவும் பேசாமல் சென்று விடுகிறார்கள்.

பிப்ரவரி 19 அன்று சென்றவர்கள் மீண்டும் பிப்ரவரி 22 அன்று வருகையில் 200 போலீசாரோடு வந்து மரத்தை வெட்டித்தான் தீருவோம் என்று கூறுகிறார்கள்.   கல்கியின் பெற்றோர் உறவினர் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் திரண்டு வந்து காவலர்களை கேட்கின்றனர். செவிசாய்க்காத காவல் அதிகாரிகள் அவர்களை மிரட்டி நீங்கள் கேள்வி கேட்டால் உங்கள் அனைவரையும் உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டி துரத்திவிடுகின்றனர்.

முற்றிலும் விளைந்து முடியாத இந்த சவுக்குத் தோப்பை திடீரென்று வெட்டுவதற்கான காரணம் என்னவென்று புரியாத கல்கியின் பெற்றோர், இன்று கல்கியின் தாய் தேன்மொழி, தாய் சேகர் மற்றும் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் நிர்வாகி அய்யாபாலு, மற்றும் கல்கியின் சித்தப்பா ஏழுமலை ஆகியோர் சென்று வடக்கு மண்டல ஐஜி கண்ணப்பனை இன்று மதியம் 3,30மணிக்கு சந்தித்து புகார் மனு ஒன்றை அளிக்கின்றனர்.

அந்தப் புகாரில் அந்தப் பகுதியில் குடியிருக்கும் ஜெயகோபால் என்பவர், கல்கி சவுக்குத் தோப்புக்குச் சென்றபோது அருகில் இருந்த வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.  கல்கி இறந்தவுடன், அவர் ஓடியதைப் பார்த்துள்ளதாக சிலர் கூறியதை அடுத்து அவர் மீது சந்தேகமாக இருக்கிறது என்றும், சம்பவ இடத்துக்கு மோப்ப நாயை வரவைத்து காவல்துறை துப்புத் துலக்கவில்லை என்பதை எழுதிக் கொடுத்துள்ளனர்.

புகாரை கையில் வாங்கிப் படித்துப் பார்த்த கண்ணப்பன் இதில் நீங்கள் எழுதியிருப்பது அத்தனையும் எனக்குத் தெரியும்.  முதலில் நீங்கள் யாரைக் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டீர்கள் என்பதைச் சொல்லுங்கள்… உங்கள் அப்பன் வீட்டு ரோடா என்று கேட்டுள்ளார். கட்சி பின்னால் சென்றீர்கள் என்றால் உங்களுக்கு யாரும் உதவமாட்டார்கள். அந்தக் கட்சியோடே இருக்க வேண்டியதுதான் என்றிருக்கிறார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி அய்யாபாலு, ‘சார் பள்ளி மாணவ மாணவியர்கள்தான் மறியலில் ஈடுபட்டனர்’ என்று கூறியிருக்கிறார்.  அதைக் கேட்டவுடனேயே கோபமடைந்த கண்ணப்பன்…  யார்றா நீ என்று கேட்டுள்ளார்.  ‘சார் நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி என்று கூறியதும், தெரியும்டா நீங்கள்லாம் யார்னு…  யாரைக்கேட்டுடா மறியல் பண்ண…  நீ உண்மையான ஆம்பளையா இருந்தா இப்பப் பண்ணுடா சாலை மறியல்… இதே இடத்துல உன்ன லாடம் கட்றேன் பாரு..  உங்க அப்பன் வீட்டு ரோடா டா…  செருப்பால அடிப்பேன்.. எந்திரிச்சு வெளில போடா நாயே… என்று காட்டுக் கத்தல் கத்தியிருக்கிறார்.  உடனே அய்யாபாலு எழுந்து வெளியேறியிருக்கிறார்.  அவர் சென்றதும், அவன் பின்னாடி போனீங்கள்ல… அவனே கண்டுபிடிப்பான் போங்க என்று கல்கியின் பெற்றோர்களிடமும் கூறியிருக்கிறார்.  கல்கியின் பெற்றோர்களும் எழுந்து வெளியே சென்றுள்ளனர்.

செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன அதிகாரி இந்த கண்ணப்பன்தான். பணியில் சேர்ந்த நாள் முதல் கண்ணப்பன் சற்றும் மாறவேயில்லை.  ஐஜியாக பணியாற்றும் கண்ணப்பன், இன்று ஒரு ஐபிஎஸ் அதிகாரி.  ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து கொண்டு, லாடம் கட்டுவேன், செருப்பால் அடிப்பேன் என்று பேசுவது, இவருக்கு ஒரு சாதாரண தலைமைக் காவலருக்கு இருக்கும் பண்பு கூட இல்லாததையே காட்டுகிறது.

கண்ணப்பன் க்ரூப் 1 தேர்வு மூலம் நேரடியாக டிஎஸ்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.   இவர் டிஎஸ்பியாக பணியாற்றியபோது ஒரு கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து, ஒரு வாரம் சட்டவிரோதக் காவலில் வைத்து, கண்ணப்பனே அடிக்கிறார்.  அந்த சித்திரவதையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக காயமடைகின்றனர்.

இதற்கிடையே கண்ணப்பன் எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்பட்டு, சிபிஐக்கு மாற்றப்படுகிறார். சிபிஐக்கு சென்ற பிறகும், கண்ணப்பனின் அணுகுமுறை மாறவேயில்லை.     அங்கே இவருக்கு கீழே பணியாற்றும் டிஎஸ்பி ஒருவரை, தாறுமாறாக ஒருமையில் தொடர்ந்து திட்டுகிறார்.  இப்படி கண்ணப்பன் திட்டுவது நாள்தோறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படி தனக்குக் கீழே பணியாற்றுபவர்களை திட்டியபடியே கண்ணப்பனின் சிபிஐ நாட்கள் முடிவடைகின்றன.  மீண்டும் மாநில அரசுப் பணிக்குத் திரும்புகிறார் கண்ணப்பன்.

இந்த நேரத்தில் கண்ணப்பனிடம் அடி வாங்கிய ஆசிரியர்கள், கண்ணப்பன் அடித்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடுக்கிறார்கள்.  நீதிமன்றமும் அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட, சிபிஐ விசாரணையை மேற்கொள்கிறது.  அந்த வழக்கு சிபிஐயில் யாரிடம் விசாரணைக்குச் சென்றது தெரியுமா ?   கண்ணப்பனிடம் நாயே பேயே என்று திட்டு வாங்கினாரே ஒரு டிஎஸ்பி… அவரிடம் அந்த வழக்கு விசாரணைக்கு செல்கிறது.  வழக்கமாக காவல்துறை அதிகாரிகள் மீது சித்திரவதை குறித்த புகார்கள் விசாரிக்கப்பட்டால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்றுதான் அறிக்கை அளிப்பார்கள். அது போலீஸ் சாதிப் பாசம்.  ஆனால் கண்ணப்பனால் பாதிக்கப்பட்ட டிஎஸ்பியிடம் அந்த வழக்கு விசாரணை சென்றதால், நடந்த சம்பவங்களை விசாரித்து, கண்ணப்பன் சட்டவிரோதக் காவலில் வைத்து அவர்களைத் தாக்கியது உண்மை என்றும் கண்ணப்பன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தார்.

கண்ணப்பன் டிஐஜியாக சிபி.சிஐடியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.   அப்போது கண்ணப்பன் மீதான துறை நடவடிக்கை தொடங்குகிறது.

சிபி.சிஐடி அப்போது விசாரித்து வந்த வழக்கு, ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியது தொடர்பானது.  அந்த வழக்கை நேரடியாக மேற்பார்வை செய்து வந்தவர், கண்ணப்பன். அப்போது உளவுத்துறையில் பொறுப்பில் இருந்தவர் ஜாபர் சேட்.  ஜாபர் சேட்டை அணுகிய ப்ரமோத் குமார், தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும், ஜாபர் சேட், கண்ணப்பனிடம், ப்ரமோத் குமார் மீதான வழக்கை கண்டுகொள்ளாமல் விடும்படி கூறுகிறார்.   அப்படி கண்டுகொள்ளாமல் விட்டால், கண்ணப்பன் மீதான துறை நடவடிக்கையை அவருக்கு பாதிப்பு இல்லாமல் முடித்துத் தருவதாகவும் கூறுகிறார்.

கண்ணப்பனிடம் ப்ரமோத் குமார் மீதான வழக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் இருந்தும், எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.  நேர்மையான அதிகாரி என்று தன்னைக் கருதிக் கொள்ளும் கண்ணப்பனின் நேர்மையான புலனாய்வுதான் அந்த வழக்கை ஒன்றரை வருடமாக தூசு படிய வைத்தது.   இந்த கண்ணப்பனின் ‘நேர்மைக்கு’ கைமாறாக அவர் மீதான துறை நடவடிக்கையை முடித்துக் கொடுத்தார் ஜாபர் சேட்.  கண்ணப்பன் மீதான துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய விசாரணை அதிகாரி, கமிஷனர் கண்ணாயிரம் என்று வாசகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட, ட்டி.ராஜேந்திரன்.  ராஜேந்திரன், சாட்சி சொல்ல வந்த ஆசிரியர்களை அழைத்து, கண்ணப்பனுக்கு ஆதரவாக சாட்சி சொல்லும்படி கூறுகிறார்.  அவர்களோ, சார்… கண்ணப்பன் சாரே எங்களை ஒரு வாரம் அடிச்சார் சார்…. எப்படி சார் மாத்தி சொல்றது.. அதெல்லாம் முடியாது சார் என்று மறுக்கிறார்கள்.  அவர்களிடம் தொடர்ந்து பேசி, அவர்களுக்கு என்ன வேண்டும் என்று ராஜேந்திரன் வற்புறுத்தவே, அவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றும் எங்கள் உறவினர்களுக்கு மாறுதல் வேண்டும் என்று கேட்கிறார்கள்.  அட அடிமைகளா… என்று வியந்த ராஜேந்திரன், உடனடியாக அவர்கள் அனைவருக்கும் கேட்ட இடத்துக்கு மாறுதல் உத்தரவை பெற்றுத் தருகிறார்.  அகமகிழ்ந்த அந்த அடிமைகள், கண்ணப்பன் அய்யா எங்களை அடிக்கவேயில்லை என்று வாக்குமூலம் அளிக்கிறார்கள்.

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கண்ணப்பன் மீதான துறை நடவடிக்கை கைவிடப்பட்டு, அவருக்கு ஐஜி பதவி உயர்வு வழங்கப்படுகிறது.   இதே ப்ரமோத் குமார் மீதான வழக்கு, சிபிஐக்கு மாற்றப்பட்டவுடன், ப்ரமோத் குமார் கைது செய்யப்பட்டார். சிபிஐயால் கைது செய்யப்பட்ட ப்ரமோத் குமாரை, கண்ணப்பன் ஒன்றரை ஆண்டுகளாக விசாரிக்கக் கூட இல்லை.

ஐஜியாக பதவி உயர்வு பெற்ற பிறகும், வயது மற்றும் பதவிக்கேற்ற முதிர்ச்சி அடையாமல், இரண்டாம் நிலைக் காவலரைப் போல நடந்து கொள்ளும் கண்ணப்பனைப் பார்க்கையில் பரிதாபமே ஏற்படுகிறது.   மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பார்த்தால் கோபம் வருமா பரிதாபம் வருமா ?

கண்ணப்பன் அவர்களே…  நீங்கள் வாங்கும் ஊதியம் மக்களின் வரிப்பணத்தில் என்பதை மறந்து விடாதீர்கள்.    அந்த மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் உங்களுக்கு ஊதியம், வாகன வசதிகள், எல்லாமும்.   அந்த மக்களுக்கு போராட்டம் நடத்த எல்லா உரிமைகளும் உண்டு.  இது ஜனநாயக நாடு..  சாலைகள் எப்படி போராட்டம் நடத்திய அந்த மக்களின் பெற்றோர் சாலை இல்லையோ… அதே  போல அது உங்கள் அப்பாவின் சாலையும் அல்ல….  மறியல், ஆர்ப்பாட்டம், போன்ற போராட்டங்கள், ஒரு ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்பட்டவை…   நீங்கள் வடக்கு மண்டல ஐஜி என்பதால், வடக்கு மண்டலத்தின் சக்ரவர்த்தி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்..  உங்கள் கோபத்தையெல்லாம் நீங்கள் வழக்கின் புலனாய்வில் காட்ட வேண்டும். ஜனவரி 3ம் தேதி நடந்த ஒரு கொலை வழக்கில் எவ்விதமான முன்னேற்றமும் இதுவரை இல்லை என்பது உங்களுக்கும் தெரியும்.  ஒரு கொலை வழக்கை கண்டுபிடிக்க துப்பில்லாத நீங்கள், போராட்டம் நடத்துபவர்களை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லுவது உங்கள் பதவிக்கும் வயதுக்கும் அழகல்ல.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அரசியல் லாபத்துக்காகக் கூட, இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கலாம்.  யார்தான் லாபத்துக்காக செயலாற்றுவதில்லை…..  உங்களின் பதவி உயர்வுக்காக நீங்கள் ப்ரமோத் குமாரை காப்பாற்றவில்லையா… அதுபோலத்தானே விடுதலை சிறுத்தைகளின் போராட்டமும் அரசியல் லாபத்துக்காக இருந்திருக்கக் கூடும் ?   அப்படி போராட்டம் நடத்தும் ஒரு கட்சியின் பிரதிநிதியை செருப்பால் அடிப்பேன் என்று  மிரட்டுவீர்களா ?

டெல்லியில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகி இறந்ததால் நடந்த போராட்டம் எப்படிப்பட்ட வீச்சோடு நடந்தது என்பது உங்களுக்கு தெரியுமா கண்ணப்பன் அவர்களே… ?   அந்தப் போராட்டக்காரர்களோடு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.    டெல்லி முதல்வரை விட நீங்கள் உங்களை பெரிய ஆள் என்று நினைத்தீர்கள் என்றால், உங்களை விட பெரிய முட்டாள் யாரும் இருக்க முடியாது.

பாரதிதாசனின் பாடல் வரிகள் உங்களுக்காகவே எழுதப்பட்டது போல உள்ளது.

ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால்

ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆய்விடுவார் (கண்ணப்பா) உணரப்பா நீ

நன்றி - சவுக்கு

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்