/* up Facebook

Mar 22, 2013

துப்பாக்கியேந்திய சிவப்பு ரோஜாக்கள் - கேஷாயினி எட்மண்ட்இலங்கையில் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பித்தலுக்கான முயற்சியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்பான அறிக்கைகள் எனக்குக் கிடைக்கப் பெற்றன. அறிக்கைகளுடன் மட்டுமாக நிறுத்திக்கொள்ள மனம் ஒப்பாமையால் இது தொடர்பில் சில தகவல்களை பெற்று குறும்படமொன்றை தயாரிப்பதற்காக குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றிருந்தேன். குறிப்பாக முன்னாள் பெண் போராளிகளுடன் உரையாடிய நிமிடங்களில் ஊடகவியலாளராக என் உதடுகள் உரையாடிக் கொண்டிருந்தாலும் ஒரு பெண்ணாக நான் என்னுள் இறந்து கொண்டிருந்த கணங்கள் அவை.

தமிழீழத்திற்கான போராட்டத்தில் இலங்கைப் பெண்கள் ஒவ்வொருவரும்; சம்பந்தப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். தமது குடும்ங்களில் ஒருவரை இழந்தவர்களாகவோ, பாலியல் ரீதியாக துன்பப்பட்டவர்களாகவோ, உடைமைகளை இழந்தவர்களாகவோ , அங்கங்களை இழந்தவர்களாகவோ , உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களாகவோ ஏதோவொரு வகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இவர்களது பங்கு இருக்கத்தான் செய்கிறது. இவர்களுள் இன்னொரு வகையினர் தான் முன்னாள் போராளிகளாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு இன்று சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளவர்கள்.

இலங்கை அரசாங்கம் இம்முன்னாள் போராளிகளை உள ஆற்றுகைக்கு உட்படுத்துகின்றோம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்து சமூகத்துடன் இணைத்து விட்டது. வடக்கு கிழக்கு பகுதிகளில் படித்து விட்டு இருந்த மாணவர்களை வேலை பெற்றுத்தருவதாக உள்வாங்கி முன்னாள் போராளிகளை புனரமைத்து இலங்கை இராணுவத்துள் இணைத்துள்ளோம் என்ற போர்வையில் நாடகமாடிக் கொண்டிருக்கின்றதமல்லாமல் உலக நாடுகளுக்கும் படங்காட்டிக் கொண்ருக்கின்றது. ஆனால் உண்மையான முன்னாள் போராளிகள் எங்கே? அவர்களின் இன்றைய நிலை என்ன?

நான் சந்தித்த கண்ணகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முன்னாள் போராளியின் கதை இது….

தமிழீழ போராட்டத்தில் போராளியான கணவனையும் தனது காலினையும் இழந்துள்ள கண்ணகி இன்று தனது 10 வயது மகளுடனும் தனது தாய் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தினால் புத்திசுவாதீனமுற்றிருக்கின்ற தன் இளைய சகோதரியுடனும் வாழ்ந்து வருகின்றாள். முன்னர் அகதிமுகாம்களில் கிடைத்த உதவிகள் ஓளரவு போதுமானதாயிருந்தாலும் தற்போது மீள்குடியேற்றப்பட்ட நிலையில் உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கண்ணகியினுடைய தாயினாலும் முதுமையின் காரணமாக வேலை செய்ய முடிவதில்லை. மேலும் புத்திசுவாதீனமுற்றுள்ள இளைய மகளை கவனிக்க வேண்டிய பொறுப்புமுள்ளது. காலிழந்த நிலையில் பல கடைகளிலும் வேலை கேட்டு அலைந்த போதும் “முன்னாள் போராளி” க்கு வேலை கொடுக்க மறுத்துள்ளார்கள் எம் தமிழ் கடை முதலாளிகள். இத்தகைய சூழலில் தன் உடலை மூலதனமாக கொண்ட வாழ்க்கை நடத்துகின்றாள் கண்ணகி. இனிய தமிழில் சொல்வதென்றால்; மண்ணுக்காக போராடியவள் மானத்தை விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றாள். தினம் தினம் தன்னுடல் விற்று மூன்று ஜீவன்களில் வயிற்றையும் தன் மகளின் கல்வி அறிவையும் வளர்த்துக் கொண்டிருக்கின்றாள்.

நான் நேர்காணலுக்காக நேரம் கேட்டிருந்த போது மகள் பாடசாலை போன பின் தன்னை சந்திக்கும் படி கேட்டிருந்தாள். வீடு தெரியாது தடுமாறி அயல் வீடுகளை விசாரித்த போது “அந்த வீட்டிற்கா?” என கேட்டதே என்னை ஓரளவு ஊகிக்க வைத்திருந்தாலும் அவருடன் உரையாடிய போது தான் மேற்கூறிய முழுவிடயங்களையும் அறிந்த கொண்டேன். இன்னொரு கொடுமை கண்ணகியின் வயிற்றில் தந்தை யாரென தெரியாமல் வளர்கின்ற கரு…

அயலவர்கள் சாடைமாடையாக பேசி தன்னை கேவலப்படுத்துவதாகவும் தன்னுடைய தற்போதைய கவலை தன் மகளினுடைய எதிர்காலம் தன் பிழைப்பினால் இருண்டு விட கூடாது என்பதும் பிறக்கப் போவது பெண்ணாக இருக்க கூடாது என்பதும் தான் என கூறிய போது அவளுடைய தாய்மையின் வலி புரிந்து என் பேனை கூட ஒரு நிமிடம் நின்று விட்டிருந்தது.

பாடசாலை முடியும் நேரம் என்பதாலும் நானும் இந்த இழிந்த வாய்ச் சொல்லில் வீரம் காட்டகின்ற சமூகத்தில் தான் வாழ வேண்டும் என்பதாலும் அதிக நேரத்தினை அங்கே செலவளிக்காமல் கதிரையை விட்டெழுந்த வேளை “ அக்காச்சி….” ஓடி வந்த கண்ணகியின் தங்கையின் குரலும் பின் தொடர்ந்த தாயின் முதுமையும் இந் நிமிடம் வரையும் என்னுள் பாரமாகவே தொடர்கின்றது…..

தமக்கென வடிவமைக்கப்பட்ட சீருடைகளுடன், ஆயுதங்களுடன் மிடுக்காக வலம் வந்த இப்பெண்கள் அன்று தமிழர்களுக்கான உரிமைகள் வேண்டும் என்ற நோக்கோடு தமது குடும்பங்களை விட்டு போராட்டத்தில் இணைந்தவர்கள்;: இன்று சமூகத்தில் தமக்கான உரிமைகள் வேண்டி அன்றாடம் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். முன்னர் இவர்களது ஆயுதங்களை கண்டு ஓடியவர்கள் இன்று தமது சொல்லாயுதங்களால் இவர்களை ஓட ஓட விரட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கான பாதை அமைக்க தான் எமக்கு முதுகெலும்பில்லை குறைந்தது நமக்காக போராடியவர்களை நமது சொற்கலாளாவது கொல்லாமல் இருக்கலாம்.

இங்கு நான் அப் பெண்ணிற்கு என்னளவில் எமது தமிழ் இலக்கியங்களின் கற்பிற்கரசி “கண்ணகி” பெயரை சூட்டியிருப்பது ஒருவேளை உங்களுக்கு முரணாக தோன்றலாம். அவள் ஒரு கற்பிழந்த கணவனுக்காக (இன்னொருத்தியிடம் போனவன்) தான் மதுரையை எரித்தாள். அவள் போராட்டம் எரிந்த மதுரையுடன் ஓய்ந்து விட்டது. ஆனால் என்னளவிலான இந்த கண்ணகியின் போராட்டம் அன்று ஆயுதங்களால் மண்ணுக்கு… இன்று…….??? தொடர்கிறது.  பொதுவாக ரோஜாவைப் பார்த்தவுடன் அதன் அழகும் , மென்மையும் கூடவே முட்களால் எம் சிறு விரல்களை தாக்குகின்ற கம்பீரமும் என் மனதில் தோன்றும். இக் கட்டுரைக்கு நான் “துப்பாக்கி ஏந்திய ரோஜா” என்று தலைப்பு சூடியிருப்பதும் அக் கம்பீரத்தினை குறிக்கத்தான். ஆனால் “சிவப்பு” என் சமூகத்தில் நிறம்மாறுகின்றவர்கள் விபச்சாரத்திற்கு கொடுத்திருக்கின்ற நிறம்…. விரைவில் என் “துப்பாக்கியேந்திய சிவப்பு ரோஜாக்கள்” ஆவணப்படமாக உங்கள் கண்களையும் நனைக்கும்….

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்