/* up Facebook

Mar 28, 2013

பாலியல் தாக்குதல்கள் ; ஒரு நகரமும் ஒரு தீவும் - -சிவலிங்கம் சிவகுமாரன்’உன் மகளிடம் வெளியே போகாதே என்று கூறாதே; முதலில் வெளியே ஒழுக்கமாக நடந்து கொள்ளும்படி உன் மகனிடம் கூறு’ 

டெல்லி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி ஒன்றின் மாணவிகள் இவ்வாறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். 

இந்திய தலைநகர் புதுடெல்லியில் இடம்பெற்ற மருத்துவ கல்லூரி மாணவியான தாமினிக்கு எதிரான பாலியல் தாக்குதல் சம்பவமும் அதற்குப்பிறகு இடம்பெற்ற அம்மாணவியில் மரணமும் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னமும் முடியவில்லை. இந்த சம்பவத்தை தமது அரசியல் இயந்திரத்தை வேகப்படுத்தும் சுப்பர் பெற்றோலாக பயன்படுத்திக்கொண்டவர்கள் தான் அதிகம் எனும் கூறுமளவிற்கும் இதற்கு முன்னர் டில்லியிலோ அல்லது இந்தியாவின் வேறந்த மாநிலங்களிலோ இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை என நினைக்குமளவிற்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பாலியல் வல்லுறவுகளுக்கு காரணமான ஆண்களை அவர்களின் ஆண் தன்மையை இழக்கச்செய்யும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெண்ணியவாதிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புக்கள் வலுப்பெற்றன. மேலும் ஒரு நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் எங்கேயோ ஒரு கிராமத்தின் மூலையில் பெண்களுக்கு எதிராக என்னென்ன சம்பவங்கள் இடம்பெறுமோ என்ற விடயமும் முன்னிலைப்படுத்தப்பட்டது. இறுதியில் மத்திய அரசாங்கம் இந்த சம்பவங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என ஆராயும் பொருட்டு நீதியரசர் ஜே.எஸ். வர்மா தலைமையில் குழுவொன்றை அமைத்து பரிந்துரைகளை முன் வைக்கச்சொன்னது.

அதன்படி முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் கட்டளைச்சட்டமாக்கப்பட்டு இந்திய அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு இவ்விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்த கட்டளைச்சட்டத்தின் முக்கிய பிரிவு கூறுவதென்னவென்றால் பாலியல் வல்லுறவுக்கும் பெண் ஒருவர் மரணத்தை தழுவினால் அதற்கு காரணமானவருக்கு (குற்றமிழைத்தவர்) மரண தண்டனை வழங்கலாம் என்பதாகும். மேலும் இந்த புதிய கட்டளைச்சட்டம் “பாலியல் வல்லுறவு“ என்ற வார்த்தைக்குப்பதிலாக “பாலியல் தாக்குதல்“ என்ற சொற்பதத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஒன்றின் தலைநகரத்தில் ஏற்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பிரதிபலிப்புகள். இனி இந்த நாட்டிற்கு அருகாமையில் இருக்கும் தீவான இலங்கையில் ஏற்பட்டுள்ள ஏற்படப்போகும் சம்பவங்கள் எப்படியாக இருக்கும் என நாம் பார்த்தல் அவசியம். 

நாளொன்றுக்கு ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள்
இலங்கையைப்பொறுத்தவரை நாளொன்றுக்கு சராசரியாக ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எமக்கு அதிர்ச்சியூட்டும் விடயமல்ல. காரணம் பல சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜேராம பகுதியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 47 வயது பெண், மற்றும் சிலாபம் பகுதியில் உல்லாசப்பயணியாக வருகை தந்திருந்த 25 வயது ஜேர்மனிய பெண் மீதான வல்லுறவு சம்பவங்களைப்பார்க்கும் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய கட்டளைச்சட்டத்தின் தேவை இலங்கைக்கும் உள்ளது என துணிந்து கூறலாம். இது குறித்து கடந்த வாரம் தமிழ் நாளிதழ் ஒன்று இலங்கைக்குப்பொறுத்தப்பாடானதாக இருக்கும் வர்மா குழுவின் பரிந்துரைகள் என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

பொலிஸாருக்கு கிடைக்கும் முறைப்பாட்டுக்கு அமைவாகவே நாளொன்று சராசரியாக எமது நாட்டில் ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த தொகைக்கு அதிகமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பதே யாதார்த்த உண்மை.

அதிகரித்துச்செல்லும் சம்பவங்கள்
இலங்கையைப்பொறுத்தவரை வருடந்தோறும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்தே செல்கின்றன.பொலிஸ் தரப்பு தகவல்களின் படி 2008 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பதிவான பாலியல் வல்லுறவு சம்பவங்களைப்பார்ப்போம்.

ஆண்டு பெண்கள்மீதான வல்லுறவு 16 வயதுக்குகீழ்ப்பட்ட 
சிறுமியர் மீதான வல்லுறவு மொத்தம் 

2008 1157 425 1582
2009 1228 396 1624
2010 1446 408 1854
2011 1464 408 1920

சட்டங்கள் அமுல்படுத்தப்படுமா? 
இந்தியாவின் டில்லி நகரில் இடம்பெற்ற வல்லுறவு சம்பவம் மற்றும் அதைத்தொடர்ந்து நாடெங்கினும் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாலியல் வல்லுறவு சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக புதிய கட்டளைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது போது இலங்கையிலும் அவ்வாறான கடுமையான சட்டவிதிகள் கொண்டு வரப்படுமா என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இலங்கையில் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக பல பெண்கள் அமைப்புகள் ,சிவில் சமூகங்கள் குரல் எழுப்பி வந்தாலும் அவற்றிற்கு அரசாங்கம் செவி சாய்க்கின்றதா என்பது முக்கிய விடயம் ஏன் ஊடகவியலாளர்களையும் இங்கு சற்று குறை கூற வேண்டியுள்ளது. விஸ்வரூபம் பட சர்ச்சைகள் தொடர்பில் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்புபவர்கள் நாட்டில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் இவ்வாறான பிரச்சினைகள் குறித்தோ அதற்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தோ கேள்விகள் எழுப்புவதில்லை. இதில் உள்ள மற்றுமொரு விடயம் பல பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு பின்னணியில் அல்லது அதோடு தொடர்பு பட்டவர்களாக அரசியல்வாதிகள் இருப்பதாகும்.
கடந்த வருடம் தங்காலைப்பகுதியில் பிரதேச சபை தலைவர் ஒருவர் இக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எவரும் கேள்வியெழுப்பவும் இல்லை அதை மறந்தும் விட்டார்கள். 

அக்கறையின்மை 
சமூகத்தையும் தனிமனிதர்களையும் பல்வேறு விதத்தில் பாதிக்கும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து எமது நாட்டு மக்களிடம் உணர்வுபூர்வமான எழுச்சிகள் இது வரை தோன்றாதது ஆச்சரியமே. மேலும் தாம் இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் வரை அடுத்தவருக்காக அனுதாபப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அக்கறையற்ற கலாசாரம் தான் இப்போது இவர்களிடம் உள்ளது. 1990 களில் காக்கை தீவில் இடம்பெற்ற ரீட்டா ஜோன் மீதான வல்லுறவு சம்பவம் அப்போதைய சூழலில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பின்னர் இதை ஒரு செய்தி வடிவமாக மட்டும் அனைவரும் பார்த்தனர். இப்போது அதை மறந்தும் விட்டனர். மேலும் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் எவராவது இவ்வாறான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என இது வரையில் குரல் கொடுத்திருப்பார்களா? எதற்கெல்லாமோ சட்டங்கள் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன ஆனால் எத்தனையோ சிறுவர்கள் அப்பாவி பெண்களின் வாழக்கையை பாழாக்கிய வல்லுறவு தொடர்பாக இது வரை எதாவது சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனவா? ஆக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் இவ்விடயத்தில் அக்கறையின்றி இருப்பது தெளிவாகின்றது.

உல்லாசப்பயணிகள் தொடர்பான சம்பவங்கள்
உல்லாசப்பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு வரவழைத்து அந்நிய செலாவணியை பெறுவதற்கான திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அதை சீர்குழைக்கும் வகையில் உல்லாசப்பயணிகளுக்கு எதிராக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களில் பல வெளிநாட்டு பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக கரையோரப்பிரதேசங்களில் தமது விடுமுறையை கழிக்க வருகை தந்த ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த பெண்கள் தனி நபர்களினாலோ அல்லது குழுக்களினாலோ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலைத்தேய நாடுகளின் பெண்கள் மீதுள்ள தப்பான அபிப்ராயமே ஒரு சிலரை இவ்வாறு செய்யத்தூண்டுகிறது என்கிறார் ஒரு சமூக செயற்பாட்டாளர். கடந்த வருடத்தில் கல்பிட்டிய பகுதியில் ஹோட்டல் ஊழியர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தென்னாபிரிக்க பெண், மாத்தறைப்பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட ஸ்பெயின் நாட்டுப்பெண், தங்காலையில் பிரித்தானிய ஜோடியை தாக்கி அதில் ஆணை கொலை செய்து விட்டு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குழுவினர் இப்படி உல்லாசப்பயணிகளுக்கு எதிரான சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.தமது விடுமுறை பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் பல சம்பங்கள் குறித்து பொலிஸாரிடம் இவர்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதில்லை என்பதே உண்மை. 

சமூக அக்கறை
ஐக்கிய நாடுகள் சபையின் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய தொடர்பாடல் தகவல்களின் படி இன்று உலகில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களில் 50 90 வீதமானவை முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை என்றும் இதோடு தொடர்பு பட்ட குற்றவாளிகளில் 6 வீதமானோர் தமது வாழ்நாளில் ஒரு நாளையேனும் சிறையில் கழிக்காதவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவும் இலங்கையில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்திடம் இது தொடர்பில் பொறுப்பு கூறும் தன்மை இல்லை என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் தமது எதிர்ப்பை உணர்வு பூர்வமாக வெளிக்காட்ட வேண்டும் என்பது முக்கிய விடயம். வருடந்தோறும் அதிகரித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்பாக மட்டும் பொலிஸ் தரப்பும் ஏனைய அமைப்புகளும் கவலை வெளியிடாது இதை கட்டுப்படுத்தி தடுக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்