/* up Facebook

Jul 22, 2013

திரைக்கதைகளில் பெண்கள் - கேஷாயினி எட்மண்ட்


பொதுவாக அன்றைய சினிமா முதல் இன்றைய சினிமா வரை நோக்கினால் அவற்றில் “பெண்கள்” கையாளப்படுகின்றமை தொடர்பிலான ஒரு கண்ணோட்டமே இக்கட்டுரையின் நோக்கம். அன்று தொட்டே சினிமா தயாரிப்பில் பெண்களின் பங்கு ஒப்பிட்டளவில் ஆண்களை விட குறைவாகவிருந்தாலும் சினிமா நடிப்புத்துறையிலும் திரைக்கதைகளில் பெண்கள் பற்றிய கதைக்கருக்களும் தாராளமாகவே காணப்பட்டன. அதிலும் தமிழ் இலக்கியங்களைப் போன்றே தமிழ் சினிமாவில் “பெண்கள்” என்பதன் போக்கு விசித்திரமானதாகவே இருக்கின்றது. வேற்றுமொழி திரைப்படங்களில் பெண்கள் நிலை பற்றியும் தமிழ் சினிமாவில் பெண்களின் நிலை பற்றியும் ஒப்பிட்டு நோக்கும் போது பெண்கள் பற்றிய தமிழ் சினிமாவின் போக்கு இன்றும் மாறாமல் இருப்பதும் உலகின் தரம்வாய்ந்த படைப்புக்களில் தமிழ் சினிமா ஏனையவற்றுடன் ஒப்பிட்டளவில் பின்தங்கியிருப்பதற்கு ஒரு காரணமாக இருப்பதாக தோன்றுகின்றது.

ஒன்றில் தமிழ் சினிமாவில் பெண்கள் மட்டந்தட்டப்படுகின்றனர். முன்னர் திரைப்படங்கள் “கற்பு பெண்களுக்கு மட்டுந்தான்” என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தன. பின்னரான திரைக்கதைகளில் சமூகத்தில் இழிசெயல் செய்வது பெண்கள் தான் பிரதானம் என்பது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இன்றைய சினிமாக்களில் பெண்களது உடைகள் பற்றியும் அல்லது அவர்களது கவர்ச்சியில் மட்டுமே தங்கியிருக்கக் கூடியதான சினிமாக்கள் மலிந்து விட்டன. ஆக மொத்தத்தில் “பெண்கள்” என்பதற்கான நாகரீக மாற்றங்கள் தமிழ் சினிமாக்களில் காலாகாலத்திற்கு மாற்றமடைகின்ற போதும் கரு என்பது மட்டும் மாறுபடாமலேயே தொடர்கின்றதாகவே தோன்றுகின்றது.

ஆண்களை பெண்கள் ஏமாற்றிவிட்டால் அவ் ஆண் வாழ்வில் முன்னேறி வாழ்ந்து காட்டுவதாகவும் ஏமாற்றிய பெண் மீண்டும் மனந்திருந்தி அல்லது வேறொருவரால் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவும் கதையமைக்கின்றவர்கள் அதுவே பெண் ஏமாந்துவிட்டாள் தற்கொலை செய்து கொள்வதாக காட்டுகின்றார்கள்….? அதற்கு பரிகாரமாக அவளுடன் தொடர்புடைய ஒருவர் பழிவாங்குவதாகவோ அல்லது அவள் ஆவியாகித்தான் பழிவாங்குவதாகவும் காட்டுவது ஏன்? அதே போன்றே ஆண்கள் கட்டிய மனைவி இருக்கும் போதே சின்ன வீடு வைத்தால் அல்லது இன்னொருத்தியுடன் தகாத உறவு கொண்டால் மனைவி மன்னித்து ஏற்றுக்கொள்வதாகவும் (இதில் சின்னவீடு இறந்துவிடும் அல்லது ஓடிவிடும் அல்லது வில்லன் கொன்று விடுவான்) குழந்தையை முதல் மனைவியே தத்தெடுத்து வளர்ப்பதாகவும் பெரும்பாலான படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஏன் ஒரு பெண் இன்னொரு சின்னவீடு வைத்தால் கணவன் ஏற்றுக்கொள்வானா? அல்லது அவளின் சின்னவீட்டினால் பிறந்த குழந்தைக்கு முதலெழுத்தாக தன் பெயரை இடுவாரா?

அண்மையில் “உன்னாலே உன்னாலே” படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் கதாநாயகி கதாநாயகனையும் அவனது பெண் நட்புக்களையும் சந்தேகித்து புரிந்துகொள்ள முடியாமல் பிரிந்து செல்வதாக எடுக்கப்பட்டிருந்தது. ஏன் ஆண்கள் தன் காதலியினுடைய ஆண் நட்புகளை சந்தேகிப்பதே இல்லையா? அல்லது ஆண்கள் எல்லோரும் பெண்களை நன்றாக புரிந்து கொண்டவர்களாக மட்டுந்தான் இருக்கிறார்களா?

ஒரு பெண் ஆணினை ஏமாற்றினால் அவளை போன்ற பலரை “மன்மதன்” படத்தில் காட்டப்பட்டதினைப் போல் பழிவாங்கி நீதி வழங்குகின்ற கதாநாயகன் அதேபோல் “திருவிளையாடல்” படத்தில் அல்லது “நான் அவனில்லை” போன்ற படங்களில் பல பெண்களின் வாழ்க்கையை ஒருவன் சிதைத்தாலும் அவனை நியாயப்படுத்த முயல்வதேன்? “பெண் ஏமாற்றினால் பிழை அதே பால் மாறி ஆண் ஏமாற்றினால் சரியா?

உண்மையில் சினிமா என்பது ஒரு சமூகத்தின் கண்ணாடி என்பார்கள். அப்படியாயின் இச்சினிமாக்கள் சமூகத்தினை பிரதிபலிக்கின்றனவா? ஆண்கள் சண்டையிடுவதன் மூலமும் பெண்ணின் தமையனைää தந்தையை அல்லது வில்லனை தாக்குவதன் மூலம் அவர்களை வலிமை உள்ளவர்களாக சித்தபுருஷர்களாக சித்தரிக்க முயல்கின்றனவே தவிர இன்று உண்மை நிலையை தொடுகின்றனவா?

ஒரு யதார்த்தத்திற்காக கேட்கின்றேன் தன் குடும்பத்தினை தன் வருங்கால காதல் கணவனே (ஹீரோ) தாக்குவதை எந்த சராசரி பெண்ணாவது பொறுத்துக்கொள்வாளா? ஓரிரண்டு இருந்திருக்கலாம் ஆனால் பெரும்பான்மையானவர்கள் குடும்பத்தினை எதிர்க்கமுடியாமல் தற்கொலை செய்பவர்களாகவும் அல்லது கட்டாய திருமணம் செய்து பின்னர் அவரையே கண்கண்ட தெய்வமாக கல்லானாலும் கணவன் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்பவர்களே இன்று அதிகம்.

பெரும்பாலும் காதல் அதற்கான போராட்டம் என்று மட்டுமே மூன்று மணி நேரம் கூறுகின்ற சினிமா பெரும்பாலும் திருமணத்திற்கு பின்னரான “குடும்ப வாழ்வை” காட்ட மறுப்பதேன்? காதலியை தாங்குவதாக சித்தரிக்கப்படுபவர்கள் நிஜ வாழ்வில் எவ்வாறிருக்கின்றார்கள்? தான் காதலிப்பவள் கிடைக்காவிட்டால் அமிலம் வீசுபவர்களாக அல்லது வன்புணர்ச்சிக்கு உட்படுத்துபவர்களாக கட்டிய மனைவியை நடுவில் விட்டுவிட்டு ஓடிவிடுபவர்களாகவும் தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஏன் உண்மை முகங்கள் மறைக்கப்பட்டு சினிமாக்கள் முகமூடி தாங்கிவருவதேன்?

சினிமாவில் “உடை” விடயத்தினையே எடுத்துக்கொள்வோம். தன் காதலி (வருங்கால மனைவி) எந்த காதலனாலாவது சகிர்த்துக்கொள்ள முடியுமா? உண்மையில் தான் காதலிக்கும் பெண் சேலை கட்டும் போது சற்று இடுப்பு தெரிந்தாலும் அதை மூட சொல்வதும் உள்ளாடையின் பட்டை தெரிந்தால் கூட அதை சரி செய்பவர்கள் தான் இருப்பார்கள். ஏன் இவையெல்லாம் சினிமாக்களில் வருவதில்லை. வெறும் உடைகளையும் சண்டைக்காட்சிகளையும் குத்துப்பாட்டுக்களையும் நம்பித்தான் இன்றைய தயாரிப்புக்கள் வெளிவருகின்றனவா? அல்லது சினிமா தயாரிப்புகளின் பெண்களின் பங்கு குறைவாக இருப்பது தான் இதற்கு காரணமா?

பெண்ணியத்தினை சொல்லாத நிஜ வாழ்வை பிரதிபலிக்காத சினிமாக்கள் இல்லை என்று கூறவில்லை. அவை மிககுறைவாகவே உள்ளன. தரம் வாய்ந்த படைப்புக்கள் சொற்பளவே வெளிவருகின்றன. இங்கு படைப்பாளிகளின் பார்வையினை மட்டுமல்ல பார்வையாளனின் பார்வையும் மாற வேண்டும். படத்தில் நடிகையின் சிகையலங்காரங்களையும் நவநாகரீக உடைகளையும் பார்க்கும் பெண்கள் எத்தனை பேர்? நடிகையின் வளைவுகளையும் இரு அர்த்தப் பாட்டுக்களையும் பார்க்கும் ஆண்கள் எத்தனை பேர்? இன்று ஏதேனும் படங்களை குடும்பமாக அமர்ந்து பார்க்க முடிகிறதா?

ஆகவே பல்துறைகளிலும் சாதித்துக்கொண்டிருக்கும் பெண்கள் சினிமாதுறையில் மேலும் பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பதற்கு முன்வர வேண்டும். பெண்;கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூகத்தில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிக்கொணர வேண்டும். ஓர் ஆண் பெண்ணுடைய பிரச்சினையை கற்பனை கலந்து சொல்வதிலும் பார்க்க ஒரு பெண் தன்னுடைய பக்க நியாயங்களை முன்வைக்கும் போது அது பெறுமதி வாய்ந்ததொன்றாகின்றது. வெறும் ஒரு பக்க நியாயங்களை மட்டும் முன்வைப்பதனையோ அல்லது யதார்த்தத்திற்கு பொருந்தாதவற்றினை படைப்பதையோ நிறுத்தி விட்டு உண்மைப் பக்கங்கள் அவற்றின் நிஜமான நிறங்களுடன் வெளிவர வேண்டும்.

அதேவேளை கலைஞனின் படைப்பென்பது ஒரு செய்தியை சமூகத்திற்கு சொல்ல வேண்டும் என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும். அச்செய்தி ஒருவரது வாழ்வையாவது மாற்றுமாயின் அல்லது வலியை மாற்றி அவனை செதுக்குமாயின் அது தான் சமூகத்தின் கண்ணாடி எனும் உண்மைப் படைப்பு. அதே போன்று ஒரு படைப்பானது அதை சுவைக்கும் ஒருவனது மனதில் தாக்கத்தினை ஏற்படுத்த வேண்டும். அத்தாக்கம் அவனது ஓரிரு அன்றாட செயல்களிலாவது பிரதிபலிக்குமாயின் அது தான் அப்படைப்பிற்கான விருது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்