/* up Facebook

Feb 7, 2013

தி.பரமேசுவரியின் ஓசை புதையும் வெளியை முன் வைத்து பெண்ணெழுத்தின் ஓர்மையும் ஓசையும்

தி.பரமேசுவரி

எனக்கான வெளிச்சத்தைத்  தொடர்ந்து தி.பரமேசுவரியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாக வந்திருக்கிறது ஓசை புதையும் வெளி.வெளிவந்து ஓராண்டு ஆகிவிட்டது.இலக்கிய வெளியில்,ஆய்வு வெளியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற இவரின் இந்தத் தொகுப்பு இதுவரை கவனிக்கப் படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்று மட்டும் சொல்ல முடிகிறது.

ஓசை புதையும் வெளி என்கிற சொற்களின் கவித்துவமும் அது உணர்த்தி நிற்கும் வெளியும் ஆயிரமாயிரம் கேள்விகளையும்,பெண்வெளி குறித்த  புரிதல்களையும் கிளர்த்துகிறது.

மானுட சமூகத்தின் வரலாற்று ஓர்மை குறித்தப் பதிவு,பண்பாடு,அரசியல்,பொருளாதாரம் குறித்தப் பதிவுகள் ஈராயிரம் ஆண்டுகளாக புழங்கப்பட்டு வரும் மொழியின்  பெண்வெளியும் ,பெண்மொழியும் ஆண் மைய சட்டகத்தினூடாய் வனையப்படுவதும்,வனைதலின் நிர்ப்பந்தம் தொடர்ந்து நீடிப்பதும் தொழிற்நுட்ப ரீதியிலான வளர்ந்து வரும் ஓர் இனத்தின் மேம்படாத அகத்தின் மறுபக்கத்தை காட்டி நிற்கிறது.

தி.பரமேசுவரியின்  வெளியெங்கும் பெண் சுயம்,பெண் விருப்பு,பெண் தேடல் புதைக்கப்படுதலும் சுயத்தை மீட்டுக் கொள்வதற்கான ஓர்மையும் ஓசையும் கவிதைவெளி எங்கும் காணப்படுகின்றன.பெண் சுயமும்,பெண் விருப்பும் அது சார்ந்த கிளைத்தலும் எப்பொழுதும் வெளி சார்ந்தும்,வெளி தொடர்புடைய காலம் சார்ந்துமே காணப்படுகின்றன.

பெண் உணர்வுகளின் நுண்ணறைகளில் புதைந்து கிடப்பதை, அவர்களன்றி யாராலும் புரிந்து கொள்ள இயலாதவைகளை, தொடரும் ஆணுலக நெருக்கடிகளில் இருந்து தம்மை மீட்டெடுப்பதற்கான செயலாக, நவீனப்பாடினிகள் தான் அறிந்த மொழியில் தன்னுணர்வைப் பதிவு செய்து வருகின்றனர்.இங்கு பரமேசுவரி முத்தங்களால் ஆனது தன் உலகம் என்று தான் கட்டமைத்திருக்கும் பெண்ணின் அவசமான பரவசத்தை வெளிப்படுத்துகிறார்.

இந்தப் பெண்ணின் உணர்தலில் ”நிரம்ப நிரம்பத்  தளும்பாத ஆதிக்கிண்ணத்தில் சுழன்று கொண்டிருக்கும் உடல்கள் கனன்று கனன்று கறுத்த இரவுகளில் வெளிச்சத்தை படர்த்துகிறது” என்றும்,இரவை ஆடையாகப் போர்த்திக் கொண்ட தன்னை முத்த உமிழ்நீரில் எரியும் பனிக்காடாய் மாற்றியதன் வழி ஒவ்வோர் முறையும் தான் உயிர்ப்பதாகவும் சொல்லிப் போகும் கவிதையில் இரவு அன்பின் பற்றுக்கோடாய் படிமமாகிறது.நினைவெனும் கொடும்பறவை எனும் கவிதையில்  யாருமற்றப் பகல் பொழுதில் குற்றுயிராய் கிடக்கும் தன்னை  ராஜாளி போலுமான தனிமை உடல் பரத்திக் கொத்துகிறது என்று,பகல்பொழுது பதியப்படுவதன் நிமித்தம் பொழுதெல்லாம் காமமும் காதலும் உடனுறைய உருகுகிறது மொழி.

காதல் சார்ந்த அன்போ,நட்பு  சார்ந்த அன்போ வலியை வெளிப்படுத்தினாலும் அதனை விட்டு விலக இயலாத மென்மனம் கொண்டமை உதிர ஓவியம்,செம்மலர்,என்றும் பெயர் போன்ற கவிதைகளில் காட்சிப்படுத்தப்பட்டு,உருளும் கண்ணீர்த்துளிகளை உணவாக்கிக் கொண்ட மனங்கொத்திப்பறவையின் கூரிய வசைச்சொற்களை தாங்க இயலாததுடன்,ஏமாற்றி அணிவிக்கப்பட்ட சங்கிலியுடன் வறட்டு ஓலமிடும் நாயென அடையாளப்படுத்தப்படும் பொருந்தாத திருமண உறவு மனங்கொத்திப் பறவை,சங்கிலியில் திரியும் சுதந்திரம் கவிதைகளில் விரிகிறது.

மரபார்ந்த குடும்ப வெளி அல்லது  உறவு வெளி பெண் மனதை புறக்கணிப்பதையும்,பெண் மனதின் விடுதலை கிளைப்புகளை தாண்டிச் செல்வதுமான மனதைக் கொண்டிருக்கிறது.உதிரப் பெண் மனதும் கூட சக பெண் மனதின் அகச்சிக்கல்களையோ அல்லது மலர்ச்சிகளையோ ஏற்றுக் கொள்ளாமல் மரபார்ந்த குடும்ப வெளியில் வதைபட தருதலை தொகுப்பினூடாய் வாசிக்கிற பொழுது  அதிர்கிறது மனம்.

பெண் இருப்பின் பிரக்ஞை  உணராத ஆண் மனம் போகம்  பாவிக்கும் இடமென பெண்ணுடலின்  மீதான  ஊர்தலை உணர்வற்ற மரவிரல்களெனவும்,நனைவின் புதைமணற்வெளி எனவும் அவதானிக்கிற பெண் சுயம்,வீடு தாண்டிய வெளியின் புரிதலின் போதாமையினால்  குடும்பச் சட்டத்தினூடாய் பயணம்  செய்ய நினைக்கின்ற, தொடர்ந்து தொடுக்கப்படுகிற   கற்சலனத்தினால் ,வாசல் தொடுகிற மனதை மீட்டெடுத்துக் கொண்டு ,ஊர்கூடி இட்ட நுகத்தடியின் கயிறு அறுத்து தன் போக்கில் பயணித்து திரியும் பெண்வெளியிலான  சுயத்தை பரக்கப் பார்க்கலாம்.

சுதந்திரத்திற்கு பிறகான ஆண்டுகளில் பெண் கல்வி,பெண் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியான அவதானிப்புகள் மற்றும் இலக்கியப் பதிவுகளினூடாய்,ஏற்பட்ட வளர்ச்சிகள் அல்லாமல் தொண்ணூறுகளுக்குப் பிறகான பொருளாதார புதுப்பித்தல் வெளியின் தேவை சார்ந்து அரசு சாரா பணியிடங்கள் பெண்களுக்கு கிடைத்தப் பொழுதும்,பெண் குறித்தப் ஆணுலகப் பார்வையில் பாகுபாடு நீடிக்கின்றது.இந்தப் பாலினப் பாகுபாடு உலகமயச் சூழலில் சுழன்றடிக்கிறது.குடும்பங்களில் சமத்துவமற்ற வேலைப் பிரிவினைகளால் அதிகபட்ச சுமைகளைப் பெண்கள் சந்திக்கின்றனர்.

ஓரளவு பொருளாதார சுயச்சார்பு ,கல்வி காரணமாய் பெண் தன்  சுயம்,இருப்பு,சூழல் குறித்து கவனம் கொள்கிறாள்;கேள்விகளை  எழுப்புகிறாள்;சுயத்தின்  மீதான பாகுபாட்டை குலைத்துப் போட முயல்கிறாள்.வீடுகளில் அவள் மீதான எழும் கேள்விகள் முடிந்து போய்விடவில்லை.கணவராதிக்கக் குரல் சில இடங்களில் உயர்ந்தும் வேறு சில இடங்களில் தாழ்ந்தும் காணப்பட்டாலும்,அந்த ஆதிக்கக் குரல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன

இந்தச் சூழலில் தன்னுணர்வுக் கொண்ட பெண் மொழிகளில் தலைகீழ் மாற்றம் ஏற்படுகிறது..தன் இருப்பை புரிந்து கொள்ளும் மனங்களில் தன் விருப்பை ,அன்பை பதியனிடுகிறாள்.ஊர்பாட்டை பெரிதாய் செவி மடுப்பதில்லை.தன் பாட்டையை விரிவாக்குகிறாள்.சுயம் செல்லும் பாதையில் த்ன்னை விதைக்கிறாள் இப்படி:

கொதிக்கும் உலையை
உற்று நோக்கும் கண்கள்
உள்ளிருக்கும் ஈரம்
முழுவதையும் வெளியேற்றுகிறது
இறுகிப் பாறையாகிறேன்
மோதும் காற்றிலிருந்து எழுகிறது
பறையோசை
திசையெங்கும் அதிர்வுகளாய்
ஊழிக்காலம் தொடங்குகிறது ரெளத்ரமாய்(உள்ளிருக்கும்  ஈரம்)

ஓசை புதையும் வெளி
தி.பரமேசுவரி
வெளியீடு
வம்சி புக்ஸ்
திருவண்ணாமலை


நன்றி - திசைச்சொல்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்