/* up Facebook

Feb 20, 2013

ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம் - நிர்மலா கொற்றவை


பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து நிர்மலா கொற்றவையுடன் ஓர் உரையாடல்


நிர்மலா கொற்றவை. பெண் விடுதலைக்காகவும் ஆண் - பெண் சமத்துவத்துக்காகவும் பேச்சு, எழுத்து மற்றும் களப்பணி மூலம் போராடுபவர். தன்னை ஒரு மார்க்ஸிய சோஷலிசப் பெண்ணியவாதி என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். பெண்ணியத்தை உள்ளடக்கியதுதான் மார்க்ஸியம் என்கிறார்.

மார்க்ஸியப் பெண் விடுதலை சிந்தனைகளை மையப்படுத்தும் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரது தாய்மொழி தமிழில்லை என்றாலும் தமிழ் மொழி மீதான ஈர்ப்பு இவரது எழுத்துத் திறமைக்கு வித்திட்டிருக்கிறது.

'பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல்வாதத்துக்கு எதிரான அமைப்பு' (Movement against  Sexual Exploitation and Sexism) என்ற இயக்கத்தை நடத்திவருகிறார் அதன் மூலம் பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களப்பணியாற்றி வருகிறார்.

டெல்லியில் நடந்த பாலியல் வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆண்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரெலெழுப்பி வருகையில், தமிழக அரசும் அந்தப் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான 13 அம்சத் திட்டத்தை செயல்படுத்தி, பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையையும் ஆண்மை நீக்கத்தையும் வழங்கும் சட்டத் திருத்தத்தைப் பரிந்துரைத்திருக்கிறது. தமிழக அரசின் நடவடிக்கை பற்றியும் தொடரும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் நிர்மலா கொற்றவையிடம் பேசலாம் என்று முடிவெடுத்தோம்.
ஒரு ஞாயிறு மாலையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்தபோது நடந்த உரையாடலின் தொகுப்பு:

***

உங்களுடைய பெண் விடுதலைச் சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்தது எது?

தொடக்கம் என்று சொன்னால், என் வாழ்க்கையில் ஒரு பெண்ணாக நான் எதிர்கொண்ட நிகழ்வுகளுக்குமான காரணம் என்ன, ஏன் தொடர்ந்து எதிரான நிலையே இருந்து வருகிறது என்ற என்னுடைய தேடலால், பெண்ணியம் என்று ஏதோ கேள்விப்படுகிறோமே என்று சிந்திக்கத் தொடங்கி, அதைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்த காலத்தில், பெண்ணியம் என்றாலே ஆணை எதிர்ப்பதும், ஆணை வெறுப்பதும்தான் என்று நினைத்தேன். ஆண்களை வசைபாடி கவிதை எழுதுவதுதான் சரியான அணுகுமுறை என்று நினைத்து எழுதிய பதிவுகளை வெளியிட்டு வந்தேன்.

அப்போது வசுமித்ரவை ( நிர்மலா கொற்றவையின் கணவர்) சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அவர் என் கவிதைகளை எல்லாம் படித்துவிட்டு, 'இதெல்லாம் ஒரு கவிதையா' என்று கேட்டு அவற்றைத் தூக்கிப் போட்டார். அவர் மேல் கோபம் வந்தாலும், நேர்மையாக விமர்சனம் செய்தது எனக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு நிறைய பேசினோம். கேள்விகள் கேட்டேன். அப்போது புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. என்னை அங்கே அழைத்துபோய், நிறைய புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்தார். நிறைய புத்தகங்களைப் படித்தேன். ஒரு வருடம் முழுவதும் படிப்புதான். படிக்க படிக்க, நிறைய கேள்விகள் எழுந்தன. இருவரும் வீட்டில் கடுமையாக விவாதங்கள் செய்வோம். அதன் பிறகு பெண்ணியம் என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்கி, எனக்குப் பல விஷயங்களில் தெளிவு ஏற்பட்டது. இடதுசாரி சிந்தனைகளையும் வளர்த்துக் கொண்டேன். தெளிவான சிந்தனை அறிமுகம் ஏற்படாதவரை ஒரு பெண்ணின் சிந்தனை இப்படித்தான் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். இவற்றை கொஞ்சமாவது எழுதினால்தான், மற்ற பெண்களுக்கும் ஏதாவது பலன் கிடைக்கும் என்று நினைத்து, எழுத ஆரம்பித்தேன். எழுத்து மூலம் எனக்கு ஏற்பட தெளிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான மோசமான நிகழ்வுகள் நிறைய நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு இவற்றைத் தடுப்பதற்கான சில யோசனைகளை முன்வைத்துள்ளது. ஒன்று, குண்டர் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட வேண்டும், இரண்டாவது - மரண தண்டனை, மூன்றாவது - ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்.. அரசின் இப்படிப்பட்ட எதிர்வினையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நிர்மலா கொற்றவை
ஒரு அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து, பொதுமக்கள் மீது பொறுப்பைத் திணிக்கும் நடவடிக்கையாகத்தான் நாம் இதைப் பார்க்க வேண்டும். அரசு பெண்களைப் பற்றிய கருத்துகளை மாற்றவோ, அவர்களுடைய வளர்ச்சிக்கோ எதுவுமே செய்யாமல், குற்றவாளிகளை நோக்கிக் கையைக் காட்டிவிட்டு, தப்பித்துக்கொள்ளும் ஒரு வேலையாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். பொறுப்புள்ள ஒரு அரசு இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்காது. அதுவும் குறிப்பாக,முடிவுகளை எடுத்தவர் ஒரு பெண் என்றாலும் அவர் எல்லாருக்கும் பொதுவான ஒருவர். எனவே, பாரபட்சமாக, ’நான் பெண்களுக்காக செயல்படுபவள்’ என்று காட்டிக்கொள்வதற்காக போலித்தனமாக செயல்படுவதாகவே நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தை ஆழமான புரிதலோடு அணுகியிருக்கியிருப்பதாகத் தெரியவில்லை.

இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் 13 அம்சத் திட்டத்தில் எனக்கு சில கேள்விகளும் உள்ளன. அதில் ஹெல்ப் லைன் அளித்திருக்கிறார்கள். ஹெல்ப் லைன் எந்த வகையில் பயன்படும் என்பது எனக்குத் தெரியவில்லை. ரேப் செய்யும் கும்பல் முதலில் மொபைலைத்தான் பிடுங்கி எறிகிறது. மஃப்டியில் போலீஸ் ரோந்து வரும் என்று உள்ளது. எங்கே வருவார்கள்?

ஆனால், ஆட்சி அதிகாரங்களில், பொதுவாழ்க்கையில் இருக்கும் பெண்கள் யாருமே ஆண்களின் நலனையும் உள்ளடக்கி யோசிப்பதாகத் தெரிவதில்லை. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
  
இது ஆண்கள், பெண்கள் இருவரிடமுமே இருக்கிறது. பொதுவாக பரஸ்பரம் எதிரிகளாகப் பர்த்துக்கொள்வதுதான் ஆண்மை அல்லது பெண்ணியம் என்ற எண்ணம் இருவரிடமுமே உள்ளது. பெண்கள் பல சூழல்களை எதிர்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் அதிகாரத்துக்கு வரும்போது, அந்த நிலைக்கு வருவதற்காக ஒரு பெண்ணாக அவர்கள் எதிர்கொண்ட விஷயங்கள் எதிர்வினையாக எதிரொலிக்கின்றன. ஆட்சிக்கு வரும் பெண்களுக்கு பழிவாங்கும் அணுகுமுறைதான் வருகிறதே தவிர, அவற்றின் அடிப்படை ஆதாரங்களைப் புரிந்துகொண்டு, காரணங்களைக் கண்டறிந்து அவற்றை வேரோடு களையும் முனைப்பு இல்லை.

பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான நடவடிக்கை தேவை. நடுத்தெருவில் சுட்டுக்கொல்ல வேண்டும், ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும், நாலு பேருக்கு இப்படி செய்தால் இவை தானாக கட்டுக்குள் வந்துவிடும் என்ற கருத்து பொதுமக்களிடம் பரவலாக வலுத்து வருகிறது. இந்தப் பார்வையைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பொதுவாக நாம் அனைவருமே நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள, நல்லவர்கள் என்று நமக்கு நாமே நம்பிக்கொள்ளவே விரும்புகிறோம். எனவே, அடுத்தவர்களை நோக்கிக் கைகாட்டுகிறோம். அவன் கெட்டவன் என்று குற்றம் சாட்டும்போது, நாம் நல்லவர்களாகி விடுகிறோம். ஒழுக்கச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் நாம் எல்லாரும் இருக்கிறோம். இந்த மனநிலைதான் பல தீர்ப்புகளைக் கூறுகிறது.

'நாலு பேரை சுட்டால் சரியாகிவிடும், ரெண்டு பேரைத் தூக்கில் போடணும், ஆண்மை நீக்கம் செய்யணும்' இதுபோன்ற குரல்களின் பின்னணி இதுதான்.

ஆனால், எல்லாரும் சிந்திக்க மறந்துவிடும் ஒரு விஷயம், வன்கொடுமை என்பது,உடல் ரீதியாக மட்டும் செய்யப்படுவது அல்ல, மனரீதியிலும்தான் இதைப் பார்க்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்களை அவ்வாறு செய்யத் தூண்டிவிடுவது என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவற்றை சரி செய்யாமல், தண்டனைகளைப் பற்றி மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தால் எதுவும் சரியாகப் போவதில்லை.

ஆண்மை நீக்கம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன், அந்த உச்சக்கட்டம் என்பது மட்டும்தான் குற்றமா? அதற்கான திறனை நீக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அந்த உச்சக்கட்டத்தோடு மட்டும்தான் தொடர்புடையவையா?

பாலியல் கொடுமை என்றில்லை, எல்லாவிதமான குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகள் இருந்தால், அவைத் தடுக்கப்படும் என்ற கருத்து எப்போதும் இருந்து வருகிறது, இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கூட்டு சமூகப் பார்வை என்பதே நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. தனித்தனியாகத்தான் எல்லாரும் சிந்திக்கின்றனர். ஒவ்வொருவரும் நான் நல்லவன் என்ற மனநிலையுடன் உள்ளனர். அரசியல், சமூகம் இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் அது எனக்கான களம் இல்லை, வேலைக்குப் போக வேண்டும், சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காகவே பிறந்திருக்கிறோம் என்ற புரிதலுடன் பெரும்பாலோனோர் உள்ளனர். இன்றைய வாழ்க்கை சூழல்கள், தேவைகள் அவர்களை அப்படிச் சிந்திக்கத் தூண்டுகிறது. சமூகத்தில் நானும் ஒரு அங்கம், அதில் நடக்கும் நல்லது, கெட்டது என்னையும் பாதிக்கும் என்று அவர்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்த இங்கே எந்த அமைப்பும் இல்லை என்பதால், எல்லாருமே தங்களுடைய எதிர்பக்கத்தில் மட்டுமே பார்த்து, 'அங்கேதான் பிரச்சினை, இங்கே எல்லாம் நன்றாக உள்ளது என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே ஏதோ ஒரு வகையில் குற்றம் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

மேலைநாடுகள் பலவற்றில் கடுமையான தண்டனைகளில், தவறு செய்த ஒருவன் தண்டிக்கப்படுகிறான், ஆனால், அதே சட்டத்தின் கீழ் தவறு செய்யாத 100 பேரும் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்துதான் மரண தண்டனையை ஒழித்திருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான மனித உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். இதற்குப் பின்னால் வலுவான அனுபவங்கள் அவர்களுக்கு உள்ளன. ஆனால், இங்கே 'மனித உரிமை பேசறவங்களை முதலில் சுட்டுத் தள்ளணும்' என்கிறார்கள். அதைப் போன்ற அனுபவங்கள் இல்லை என்பதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லலாமா?

ஆமாம் நம் கலாசாரம்தான் இதற்குக் காரணம் என்று கூறுவேன். நம் கடவுளர் கைகளில் பலவிதமான ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறோம், 'தப்பு செய்தால் வெட்டு' என்று போதிக்கிறோம். ஆனால் அந்தக் கதைகளுக்குப் பின்னால், மதவாதக் கோட்பாடுகளும் ஜாதீயம் பேசும் கதைகளும் இருப்பதை யாரும் கவனிப்பதில்லை. நம் புராணங்களிலும் ஒரு நல்லவர் கூட்டம், ஒரு கெட்டவர் கூட்டம். நம் திரைப்படங்களிலும் அப்படித்தான். நாம் வளர்க்கப்படும் சூழலே அதுதான், ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டும்போது, 'தப்பு செஞ்சா சாமி வந்து கண்ணக் குத்தும்' என்று கூறுகிறோம். எனவே, நாம் வளர்ந்து வருகிறபோதே, தப்பு செய்தால் தண்டனை, வெட்டு, குத்து என்றுதான் கேட்டு வளர்கிறோம். எனவேதான் தண்டனைதான் தப்பு நடக்காமல் இருப்பதற்கான ஒரே வழி என்ற நம்பிக்கை வேரூன்றி இருக்கிறது.

புராணக் கதைகளில், வெட்டு, குத்து என்று இருப்பதாக சொல்கிறீர்கள், அதே கதைகளில்தான் காக்கைக்கு உணவளிப்பது போன்ற பல நல்ல விஷயங்களும் உள்ளன. அமெரிக்கா போன்ற முன்னேறிவிட்ட நாடுகளிலும்கூட மரண தண்டனை, பழிவாங்குவது போன்றவற்றுக்கு ஆதரவான கருத்துகளும் உள்ளன. மதங்களை மட்டும் குற்றம் சொல்ல முடியுமா?

'நல்லவர்களாக இருப்பதற்கு இது, இது எல்லாம் அடையாளம். கெட்டவர்களாக இருந்தால், எல்லாரும் அழிக்கப்படுவீர்கள், கொல்லப்படுவீர்கள்'.. இது போன்ற கருத்துக்கள் எல்லா மதத்திலும் இருக்கும். வார்த்தைகள், விகிதங்கள்தான் மாறுபடும். 

மக்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள் என்று சொன்னீர்கள். பொதுவாக எல்லாருக்குமே இந்தக் குற்றத்தில் பங்குள்ளது என்றும் சொன்னீர்கள். இதை மேலும் விளக்க முடியுமா?

அமெரிக்க அரசு மற்ற நாடுகளில் குண்டு போடுகிறது. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்களும் அதைத் தவறு என்று எதிர்க்கவில்லையே? ஏதோ ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள். திரைப்படங்களில் எவ்வளவோ கேவலமான விஷயங்கள் காட்டப்படுகின்றன. ஆனால், அதைப் பார்க்கும் எத்தனை மக்கள், கோபப்படுகிறார்கள், கொதிப்படைகிறார்கள், தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள்? அடுத்தது, குப்பை போடும் விஷயம், இன்று நாம் அனைவருமே பசுமை, சுற்றுச்சூழல் என்று பேசி வருகிறோம். அங்கே குப்பை கொட்டி நாசம் செய்கிறார்கள், இங்கே கொட்டுகிறார்கள் என்று புலம்புபவர்கள் அதை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்?
ஒரு பெண் வன்புணர்ச்சி செய்யப்படுவதை எதிர்க்கும் ஆண்கள் தங்களுடைய வீடுகளில் தங்கள் மனைவிகளை அடிமைகளாகத்தான் நடத்துகிறார்கள். தேவைப்பட்டால், எதையும் செய்கிறார்கள். இவையெல்லாம் கூட குற்றங்கள்தானே?

ஆனால், நம் வீடுகளில் நாம் இந்த விஷயத்தில் எதையாவது மாற்றிக்கொண்டிருக்கிறோமா? மற்றவர்களைப் பற்றி மட்டுமே நாம் குறை கூறுகிறோம். இவர்களைப் பொறுத்தவரை, ஊடகங்களில் அல்லது பொதுவாக குற்றம் என்று சொல்லப்படுபவைதான் குற்றங்கள். தங்கள் வீடுகளில் நடந்தால் அது குற்றம் இல்லை.

ஒரு ஆணுக்கு காம உணர்வு தூண்டப்படுகிறது என்றால், அதற்கான காரணங்கள் இதுவரை ஆய்வு செய்யப்படவே இல்லை. சிலர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் அளவுக்கு வன்முறையாளர்களாக மாறுகிறார்கள் என்றால் அதற்கு என்னதான் காரணமாக இருக்க முடியும்? அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுவது எது? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேட யாராவது முனைவதில்லை. இது பற்றிய ஆய்வுகள் நடந்ததில்லை. வெளிநாடுகளில்கூட, மோசமான விஷயங்கள்,குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அங்கே அதைப் பற்றி ஆய்வு செய்து, காரணங்களை அறிந்து, கட்டுரைகள், படங்களாக வெளியிடுகிறார்கள். இங்கே அதைப் போன்ற எதுவுமே நடைபெறுவதில்லை.

மனித உரிமைச் சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் மேலை நாடுகளில் பொதுவாக மக்கள் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வுடன் உள்ளனர். அங்குள்ள எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஊடகங்கள் எல்லாம்தான் அதற்குக் காரணம். இங்கு ஏன் அவ்வாறு நடக்கவில்லை?

சமமற்ற பொருளாதார நிலைதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். இங்கே இருக்கும் ஏழைகள், நல்ல வாழ்க்கையை வாழும் வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படுவதால், அவர்களுக்கு வாழ்க்கையின் மற்ற விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் போய்விடுகிறது. வாழ்க்கை அவர்களை ஓய்வில்லாமல் விரட்டிக்கொண்டே இருக்கிறது. வெளிநாடுகளில் ஒரு எழுத்தாளருக்கு, ஒரு குடிமகனாக அவருக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை சவுகரியங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டிருக்கும். எழுத்து மூலமே அவரால் நல்ல வாழ்க்கையை வாழ முடியும். இங்கே அதற்கான சூழல் இல்லை. எனவே, அவர்கள் சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டியதாகிவிடுகிறது. எனவே, ஒரு எல்லைவரைதான் இவர்களால் செயல்பட முடிகிறது. இதையெல்லாம் தாண்டி,சமூகத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுபவர்கள் எப்படிப்பட்ட இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.

சினிமா உலகில் பெண்கள் சுரண்டப்படுவதாகவும், பெண்ணுடல் பொருளாக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைய சினிமா உலகில் பெரும்பாலும் பெண்களின் சம்மதம் அல்லது அறிதல் இல்லாமல் இது நடைபெறுவதில்லை. இப்போது படித்த, வசதி படைத்த, நடுத்தர, மேல் மட்ட பிரிவு பெண்கள் வருகிறார்கள். அங்கு சந்திக்கக் கூடிய அனைத்தையும் மிக நன்றாகப் புரிந்துகொண்டுதான் வருகிறார்கள். அவர்கள் விருப்பத்தை மீறித் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூற முடியுமா?

சமூகத்தைப் பற்றிக் கூறிய அதே கருத்து இதற்கும் பொருந்தும். மக்கள் மூளைச்சலவைக்கு ஆளாகிறார்கள். ஒரு மனிதப் பிறவி என்றால், அதற்கு ஒரு அடையாளம் வேண்டும். ஒரு பெண் என்றால், நீ அழகானவள், இப்படி எல்லாம் உன்னால் பிழைக்க முடியும், இளமையிலேயே நீ விலைபோகவில்லை என்றால் அதன் பிறகு சம்பாதிக்க முடியாது என்றெல்லாம் தூண்டப்படுகிறார்கள். அடையாளம், புகழ், அதற்கும் மேல் பணம் இவையெல்லாம் தூண்டுகின்றன. சினிமாவை மிகச் சுலபமாகத் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடிய ஊடகமாகப் பெண்கள் நினைக்கிறார்கள்.
சினிமாவில் மட்டுமல்ல, கார்ப்பொரேட் அலுவலகங்களில்கூட, ஒரு ரிசப்ஷனிஸ்ட் அழகாக இளமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள். இவற்றின் மூலம் பெண் மூளைச் சுரண்டல், அறிவுச் சுரண்டல், கருத்தியல் சுரண்டல் செய்யப்படுகிறாள் என்பதைக் குறிக்கவே நான் சுரண்டல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஒரு ஆண் சுரண்டப்பட்டாலும்கூட அதிலிருந்து வெளியேற அவனுக்கு வேறு மாற்று வழிகள் உள்ளன.

பெண் இவற்றையெல்லாம் தெரிந்தே வருகிறாள் என்ற விஷயத்தைப் பொறுத்தவரை,  பெரும்பாலும் இதற்கு அவளுடைய பெற்றோரின் பேராசைதான் காரணமாக இருக்கிறது. டி.வி.யில் தங்கள் குழந்தைகள் வருவதை ஒரு பெரும் பேறாக இவர்கள் நினைக்கிறார்கள். புகழ் போதை அவர்களை வழிநடத்துகிறது. இன்று ஒரு ஆர்.ஜே. விடம் பேசுவதே ஒரு சாதனையாக கருதப்படுகிறது. குறிப்பாக, தற்போது தனியார் தொலைக்காட்சிகளின் பெருக்கம் இப்படிப்பட்ட சுரண்டல்கள் சர்வ சாதாரணமாகிவிட்டதற்கு மிகப்பெரிய காரணம் என்று நான் கூறுவேன்.

இதே நிலைதான் மேலை நாடுகளிலும் உள்ளன. ஆனால், அங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான இவ்வளவு அதிகமான வன்முறையான சூழல் நிலவுவதில்லையே?

அங்கே ஒரு பதினைந்து வயது சிறுவனுக்கு செக்ஸ் என்றால் என்ன என்று தெரியும்.  அதற்கான வாய்ப்புகளையும் அவன் பெறுகிறான். ஆனால், இங்கே முப்பது வயதானாலும் ஆண்களுக்குத் திருமணம் நடப்பதில்லை, அவனுடைய உடல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு எந்த வாய்ப்பும் இருப்பதில்லை. பெண்களுக்கு உடல் தேவை இல்லையா என்று கேட்கலாம். ஆனால், அப்படிப்பட்ட சிந்தனையே தவறு, அப்படி நினைத்தால் நீ ஒரு மோசமான பெண் என்ற எண்ணம் பெண்களுக்கு சிறுவயதிலிருந்தே புகட்டிவிடப்படுகிறது.

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் சுரண்டலுக்கான தீர்வில் ஆண்களை எதிர் நிலையில் வைத்துத்தான் பார்க்க வேண்டுமா? அல்லது அவர்களையும் உள்ளடக்கிய ஒரு தீர்வு சாத்தியமா?

நிச்சயமாக. இன்று பெண் விடுதலைக்கு, பெண்ணியத்துக்கு அதிகம் பங்களித்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் ஆண்கள்தான் அதிகம் இருப்பார்கள். ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம். அவர்களை உள்ளடக்காத எந்தத் தீர்வையும் நாம் கொண்டுவரவே முடியாது. இன்றுள்ள பெண் போலீஸாரின் மனோபாவம் எப்படி இருக்கிறது? இவர்கள் பெண்களுக்கு எந்தளவு உதவுவார்கள்? ஒரு பெண் ஒரு மகளிர் காவல் நிலையத்திற்குப் போய்விட்டால், அவர்கள் கேட்கும் கேவலமான கேள்விகளை ஆண்கள்கூட கேட்பதில்லை. முதலில் அவர்களை சரிசெய்ய வேண்டும். பெண்களுக்கு உதவக்கூடிய அதிகாரத்தில் உள்ள பெண்களை,ஆசிரியர்களை முதலில் சென்சிடைஸ் செய்ய வேண்டும். இதற்கு அரசு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

ஆண்மை என்பது மிகப் பெரிய விஷயம் போலவும், அது இல்லாமல் போவது மிகவும் கேவலமான ஒரு விஷயம் போலவும் கருதப்படுகிறது. இயற்கையிலேயே ஆண்மை இல்லாத ஆண்களும், கருத்தரிக்க இயலாத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஒரு அறிவியல் சார்ந்த விஷயம் என்பதைத் தாண்டி, அதற்கு ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி, ஆண்மை, பெண்மை என்கிற கருத்தியலை ஏற்படுத்திவிட்டனர். இதுதான் இன்று சமூகத்தில் இவ்வளவு ஆபத்துகளையும் ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு இன்னமும் பொதுக்களங்களில் உரிமை மறுக்கப்பட்டுத்தான் வருகிறது. முதலில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை பெற்றுத்தர அரசு முயல வேண்டும். அவை என்னென்ன, அதற்கு ஆண்களின் பங்களிப்பு என்ன என்பனவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கல்வி மூலமாகவோ அல்லது தகவல் மையங்களை, சென்சிடைசிங் புரோகிராம்கள் ஏற்பாடு செய்வதன் மூலமும் இதைச் செய்யலாம். இதைத் தனியாகக்கூட செய்யலாம். ஆணையும் பெண்ணையும், குறிப்பாகப் பதின் பருவத்தில் இருப்பவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். இதை விடுத்து, தண்டிப்பதால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்றே எனக்குத் தோன்றுகிறது. இதனால், தண்டனையே வேண்டாம் என்று நான் கூறவில்லை. பாலியல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவன் வெளிவரும்போது திருந்திய நபராகவா வருகிறான்? போதை அடிமை போல, அவன் ஒரு செக்ஸ் அடிமை. இதுவும் மனநோய்தான். அதை அவன் மீண்டும் செய்யாமல் இருப்பதை எந்த தண்டனை உறுதி செய்யும்?

அவன் திரும்பிய இடமெல்லாம் அவனது செக்ஸ் அடிமைத்தனத்தைத் தூண்டும் விஷயங்களே காணப்படுகின்றன. ஊடகங்கள், இணையதளம், பத்திரிகைகள் இப்படி எல்லாமே. பெண்ணின் கவர்ச்சிப் படங்களால் ஆண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதா என்று நான் இவர்களிடம் கேட்கிறேன். ஆண்களைக் கவரவே இவற்றைப் பயன்படுத்துகின்றன. ஆண்கள் கவரப்படுவதுதான் அதற்கான பலன் என்று இருக்கும்போது, அதன் விளைவுகளும் இருக்கும்.

பெண்கள் ஆபாசமாக, உடலை மிகுதியாக வெளிக்காட்டிக்கொள்ளும் விதமாக உடை அணிவதுதான் மாடர்ன் என்ற கருத்தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும். மாடர்னாக இருப்பது என்றால் என்ன என்பதைக் குறித்து தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும். 'மாடர்ன் என்று நான் நினைப்பது உண்மையில் என் விருப்பம்தானா? அல்லது என் மேல் திணிக்கப்பட்டதா?' என்று கேள்வி எழுப்பிக்கொண்டு அதன் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதாவது ஒரு பெண் என்ன உடை அணிந்தாலும் அது அவளது தீர்மானமாக இருக்க வேண்டுமே தவிர, இதுதான் மாடர்ன் என்று கவர்ச்சியான உடைகளை அவள் மீது மற்றவர்கள் திணிப்பதை அவள் ஏற்கக் கூடாது.
ஆண், பெண் இருவருக்குமே பொறுப்புணர்வு வேண்டும். இந்தப் பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுத்துவிட்டாலே எல்லாம் சரியாகிவிடும் என்று நான் நினைக்கிறேன்.

நவீன உடை அணியும் பெண்கள் மட்டும்தான் இதில் பாதிக்கப்படுகிறார்களா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. சாதாரண உடை அணிந்த தலித் பெண், பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள், 'சாதாரண உடை' அணிந்த நடுத்தர வயதுப் பெண்கள் ஆகியோரும்தானே பாதிக்கப்படுகிறார்கள்? இதற்கும் நவீன உடை அணிவதற்கும் என்ன சம்பந்தம்?.

நவீன உடை அணிவதுதான் பிரச்சினைக்குக் காரணம் என்று நான் சொல்லவில்லை. இந்தக் கோணத்திலும் சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஜீன்ஸ், டி.ஷர்ட் போன்ற உடைகளை அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உடலுறுப்புகளைக் காண்பிக்கும் ஆடைகள் நவீனம் என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்படுவதைப் பற்றி யோசிக்கச் சொல்கிறேன். கவர்ச்சி ஆடைகளை அணிந்துகொண்டு ஒரு பணக்காரப் பெண் காரில் பாதுகாப்பாகப் போய்விடுவாள். ஆனால், ஒரு பொது இடத்தில் அவர்களைப் பார்க்கும் ஆண், லோயர் மிடில் கிளாஸாகவோ அல்லது அதற்கும் கீழாகவோ இருக்கலாம். இவர்களை எட்ட முடியாத அவர்கள், தங்களுக்கு எளிதாகக் கிடைக்கும் யாரையாவது தன் வெறிக்கு ஆளாக்கிக்கொண்டு திருப்தி அடைகிறார்கள்.
கவர்ச்சியாக உடையணியும் பெண்களிடம் நான் கேட்பது இதைத்தான், இப்படி ஆடைகள் அணிவதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? இதனால் பிரச்சினைகளைத்தான் வரவேற்கிறீர்கள். இறுக்கமாக ஆடைகள் அணிவதன் மூலம்தான் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமா? பெண்களின் மார்பளவு, இடுப்பளவு, உடல் கட்டமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வேறு யாரோ தீர்மானித்து, அவற்றைதான் சந்தையில் விற்கிறார்கள். இந்த வலையில் விழும் டீன் ஏஜ் பெண்கள் இவற்றை அணிவதற்கேற்ப தன் உடலமைப்பை மாற்றிக்கொள்ள போராடி வருகிறார்கள்.

இப்போது திருமணமான இளம் பெண்களும்கூட இந்த வலையில் எளிதில் மாட்டிக்கொள்கிறார்கள். கர்ப்ப காலத்திலேயே நிறைய உடல் பயிற்சிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள். குழந்தை பிறந்த பின்பு இன்னும் அதிகமான உடற்பயிற்சிகள். காரணம் கேட்டால் குண்டாகிவிடக் கூடாதாம். இவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆடைகளை இவர்கள் பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற வியாபார நோக்குக்குப் பலியாகிறார்கள். இதன் மூலம் அவர்கள் மனதையும் உடலையும் யாரோ ஒருவர் கட்டுப்படுத்துகிறார். நானும் இத்தனை மனநிலைகளையும் கடந்து வந்திருக்கிறேன். என்னை நானே கேள்வி எழுப்பிக்கொண்டு, என் உண்மையான சொந்த விருப்பப்படி இப்போது நடந்துகொள்கிறேன். உண்மையில் பெரும் விடுதலை உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கிறது.  

பெண்கள் மீதான வன்முறை பெண் சிசுக் கொலைகளிலிருந்து தொடங்குகிறது. இதுவே இந்திய சமுதாயத்தில் பெண்களின் நிலைக்கான கண்கூடான சாட்சியாக விளங்குகிறது. இந்தியாவில் பெருகிவரும் பெண் சிசுக்கொலை விகிதம், ஆண்களுக்கு மட்டுமே பிறப்பதற்கான உரிமை இருக்கிறது, அவன் கடவுளுக்கு நிகரானவன், அவன் உலகத்தின் அனைத்து சவுகரியங்களுக்கும் உரிமையுள்ளவன் என்ற சிந்தனை வேரூன்றியிருப்பதைக் காண்பிக்கிறது. ஆண்-பெண் பாரபட்சம் இதிலிருந்து தொடங்குகிறது. இதுபோன்ற அடிப்படைக் பிரச்சினைகள் களைய்படவில்லையென்றால் பாலியல் வன்முறைகள் குறையப்போவதில்லை.ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம்

சந்திப்பு: அரவிந்தன், எஸ்.கோபாலகிருஷ்ணன்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்