/* up Facebook

Aug 9, 2013

சுவடுகள் பதியுமொரு பாதை... - பூங்குழலி வீரன் -


ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை - தேவதேவன்சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது. 

- பிரமிள் - 

பிச்சுமணி கைவல்யம் என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் தேவதேவன் 1948-ஆம் ஆண்டு பிறந்தவர். எழுபதுகளின் துவக்கத்தில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976), மின்னற்பொழுதே தூரம் (1981), மாற்றப்படாத வீடு (1984), நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991), புல்வெளியில் ஒரு கல் (1998), விடிந்தும் விடியாப் பொழுது (2003) போன்றவை அவற்றுள் சில தொகுப்புகளாகும். 2012- ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

வண்ணத்துப்பூச்சிகள் கவிஞர்களுக்குப் மிக பிடித்த நண்பர்கள் எனலாம். அவர்களின் துயர் பகிரும் உயிராகவும் கூட இந்த வண்ணத்துப்பூச்சிகள் உலவித் திரிந்திருக்கின்றன. குழந்தைகளுக்கும் உற்ற தோழனாகவும் உறக்கத்தில் அலறி எழுவதற்கான காரணமுமாகவும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் இருக்கின்றன. சிறியதும் பெரியதுமான ஆங்காங்கே மொய்த்துக் கிடந்து எப்போதும் படபடத்த சிறகோடு பறந்தபடியேயிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் மிக அழகாக எதையோ நமக்கு உணர்த்தியபடியே இருக்கின்றன. ஒரு வண்ணத்துப்பூச்சி எப்போதுமே ஒரு வண்ணத்துப்பூச்சியாக பிறப்பதில்லை. அதன் பிறப்பும் அதை தொடர்ந்த அதன் வளர்ச்சி நிலையும் அலாதியானது.

எப்போதுமே நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும் கம்பளிப்புழுக்கள் அதைவிட மேம்பட்ட வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்கு தனது பிறப்பின் உருவத்தைத் துறக்கிறது. பொதுவாக, வண்ணத்துப்பூச்சிகள் இடும் முட்டைகள், தட்ப வெட்ப நிலையைப் பொறுத்து 3 முதல் 12 நாட்களில் பொரிந்து புழுக்களாகிவிடும். தாவர இலைகளை மிக அதிகமாகவே உண்டு இரு வாரங்களில் நன்கு பருத்த கம்பளிப் புழுக்கள் உருவாகிவிடும். முதலில் இலைகளுக்குப் பின் தொங்கிக் கொண்டிருக்கும் கம்பளிப்புழுக்கள் தன் உருமாற்றத்தின் முதல் கட்டமாக தனது தோலை சிறிதுசிறிதாக இழந்து கூட்டுப்புழுவாக மாறும். இந்த சில மணி நேரங்களில் நடந்துவிடும் உரு��ாற்றம், இரு வாரங்களில் அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறிவிடும்.

அது தன் நாட்களை
ஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை.
ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற
புலன் துய்த்தலில் செலவிட்டதில்லை.
பொருள், புகழ், அதிகாரங்கள் நோக்கிய
வேட்கை உந்தல்களை அது அறியாதது.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடையதைத் தவிர வேறொருவனது அல்லது மற்ற உயிரினது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியாது. எப்போதும் மனிதன் தனது வாழ்க்கையை மற்றதன் மீது பொருத்தி பார்த்தே வாழ்கிறான். சோம்பித் திரிவதிலும், புலன்களை அடக்குவதிலும், பொருள், புகழ், அதிகாரங்களுக்காகவும் அடகு வைக்கப்படும் வாழ்வினை வாழும் அவன் எல்லாம் உதறி வெளிவர முயன்று தோற்றபடியே இருக்கிறான். 
ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்
உதிர்ந்த மலர்போல அது கிடந்தது.
நல்லடக்கம் செய்யும் சுற்றமோ, 
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ, 
சமூகமோ, தேசமோ இன்றி
அது அனாதையாய் மரித்திருந்தது.

யதார்தத்தை ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமானதாகத் தோன்றலாம். எப்போதும் யதார்த்தம் என்பது உடனே நிகழ்ந்துவிடக் கூடியதாகவும் சட்டென முடிந்துவிடக் கூடியதாகவும் நம்மை கடந்து போய்விடக் கூடியதாகவும் இருக்கும். யதார்தத்தை மறுப்பதென்பதோ அதற்காக நமது வாழ்வியலையும் வார்த்தைகளையும் தள்ளி வைத்தலென்பதோ நம்மைக் கலங்கடிக்கலாம்; கரையேற்றாது என்பது மட்டும் உண்மை. “அது அனாதையாய் மரித்திருந்தது” என்பதில் வாழ்வின் பயணத்தினூடாக நிகழும் மரணத்தை எந்த ஒரு புனைவுமின்றி பதிவு செய்கிறார். மரணம் யாருக்கென்றாலும் எதற்கென்றாலும் அது மரணம் தான். 

நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை
இவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம்?

மிக நுட்பமானதொரு அனுபவத்தைப் பதிவு செய்கிற பொழுது ஒரு கவிதை தன்னைக் காலூன்றிக் கொள்கிறது. ஒரு கவிஞன் எப்போது தன்னை பிற உயிர்கள் போலவே உணர்கிறானோ அப்போதே அவன் தன் சுயம் துறந்தவனாகிறான். நமது மொத்த வாழ்க்கையின் மர்மமான இலட்சியம்தான் என்ன என்பது மட்டுமே ஒரு ஒற்றை கேள்வியாக நம்முன் நிழலாடியபடியே வருகிறது. இப்போது அங்கே வண்ணத்துப்பூச்சிகள் இல்லை. நாம்தான் எல்லாமுமாக நிறைந்திருக்கின்றோம். 

எதைப்பற்றியும் கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
செத்துக்கிடந்தது அது.

நாம் வாழ்ந்து முடிப்பதாக நினைக்கின்ற வாழ்விற்கும் அழகியலுக்கும் இடையிலான ஒரு முரண் இதுதான். அழகோடு மட்டுமே கவர்ந்து அனிச்சையாய் திரியும் வண்ணத்துப்பூச்சிகள் செத்துக் கிடப்பது நமக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தலாம். அனுபவத்திற்கும் அழகியலுக்கும் இடையிலான எதிர்நிலை மிக அழகாக இக்கவிதையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அந்த முழுக்கவிதை இதுதான்.
அது தன் நாட்களை
ஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை.
ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற
புலன் துய்த்தலில் செலவிட்டதில்லை.
பொருள், புகழ், அதிகாரங்கள் நோக்கிய
வேட்கை உந்தல்களை அது அறியாதது.

எப்போதாவது தன் துணையுடன்
அன்றி எப்போதும் தன் தம்மையையே
அது பாதுகாத்தபடி அலைந்தது.

அதன் உயிர்ப்பும் சிறகடிப்பும்
இயற்கையின் மர்மங்களனைத்தையும் உணர்ந்த வியப்பும்
அதை விளக்கவியலாத படபடப்புமேயாம்.

ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்
உதிர்ந்த மலர்போல அது கிடந்தது.

நல்லடக்கம் செய்யும் சுற்றமோ, 
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ, 
சமூகமோ, தேசமோ இன்றி
அது அனாதையாய் மா¢த்திருந்தது.

நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை
இவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம் ?

இன்று அது நிறைவேறியதையோ
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ
ஒரு பெருக்குமாறு அதைக் குப்பபைகளோடு குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவதையோ
எதைப்பற்றியும் கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
செத்துக்கிடந்தது அது.

நன்றி - வல்லினம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்