/* up Facebook

Feb 22, 2013

நேர்காணல் - கல் மனிதர்கள் ஆவணப்படத்தை முன்வைத்து குட்டி ரேவதியுடன் ஒரு நேர்காணல்

 குட்டி ரேவதி
நேர்கண்டவர் - ஜெயச்சந்திர ஹஸ்மி

‘உலகத்தில் கல் இல்லாத இடத்தை நம்மால் பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன், ஒருவர் மிகவும் கடினமான மனம் படைத்தவராக இருந்தால், ‘அவனுக்கு கல் நெஞ்சம்பா’ என்று சொல்வதுதான் வழக்கம். ஆனால் கல் உடைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை அதை விட கடினமாக இருக்கிறது என்று இங்கு நம் எத்தனை பேருக்கும் தெரியும்? கல்லுடைக்கும் தொழிலாளர்களின் வாழ்வை, அவர்கள் சந்திக்கும் அத்தனை சவால்களையும் அவலங்களையும் தோலுரித்துக் காட்டுகிறது, குட்டி ரேவதி இயக்கத்தில் வந்திருக்கும் ‘கல் மனிதர்கள்’ ஆவணப்படம்’. பேசாமொழியின் முதல் இதழில் இந்த ஆவணப்பட விமர்சனத்திற்காக நான் எழுதிய முதல் வரிகள் இவை. கல் மனிதர்கள் வாழ்வின் கடினத்தை சித்தரிக்கும் இந்த படத்தின் இயக்குனருடன் கண்ட ஒரு நீண்ட நேர்காணலையும் இதே வரிகளோடு துவக்குகிறேன். வரிகளைப் போலல்லாமல் அவர்கள் வாழ்வு மாறிவிடும் என்ற நம்பிக்கையில்...

கல் மனிதர்களைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்க உங்களை எது தூண்டியது?

தமிழ்நாடு கல்லுடைப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஞானமணியும், கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தானமும் இதை நான் செய்து தர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். அப்போது நான் வேறு சில வேலைகளில் ஈடுபட்டு இருந்தேன். ஆனாலும் அவர்கள், நாங்கள் காத்திருக்கிறோம். இந்த பிரச்சினை வெளியில் வர வேண்டும். அதுவும் சரியான அரசியல் தெளிவுடன் வெளியே வர வேண்டும் என்றனர். பொதுவாக நிறைய பேர் இதுபோன்று கேட்டுவிட்டு பிறகு விட்டுவிடுவர். ஏனெனில் ஆவணப்படம் எடுப்பதற்கு நிறைய மெனக்கிடல்கள் வேண்டும். ஆனால் இவர்கள் விடாப்பிடியாக காத்திருந்து மீண்டும் கேட்டனர். பிறகு நாங்கள் சந்தித்து பேசினோம். நான் ஒரு சிறிய கள ஆய்வு செய்ய வேண்டுமென அவர்களிடம் கூறினேன். ஒரு வாரம் அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து தந்தனர். அந்த உலகம் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. நிலப்பரப்பு சார்ந்து நகரம், சேரி இதுபோன்று தான் நாம் கற்பனை செய்கிறோம். ஆனால் அங்கே நாடோடிகளாகவும் ஒடுக்குமுறையின் உச்சத்தை அனுபவிக்கும் மனிதர்கள் நாம் இதுவரை கண்டிராத நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தனர். வாழ்க்கையும் மரணமும் மிகவும் இணைந்திருந்தது. மரணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதையும் மீறி ஒரு வேளை சோற்றிற்காக அந்த மக்கள் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அதை நான் புனைவாக சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆவணப்படங்கள் தங்கள் சட்டையை கழற்றி வைத்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். எனவே இந்த களத்திற்கு புனைவு பொறுத்தமாக இருக்கும் என்று விரும்பு, இதை புனைவாக கூறினேன்.

இந்த ஆவணப்படத்திற்கான தேடல்கள் குறித்து...

கடந்த பத்து வருடங்களாக ஆர்.ஆர். சீனிவாசனோடு இணைந்து நிறைய ஆவணப்படங்கள் செய்திருக்கிறோம். ஆவணப்படங்களுக்கு கள ஆய்வு மிக முக்கியம். ஒரு ஆழமான கள ஆய்வு செய்தால் மிக துல்லியமான புள்ளிகளைக் கொண்டு நம் ஆவணப்படத்தை உருவாக்க முடியும். நமக்கு பொதுவாக கருத்தியல் முன்முடிவுகள் இருக்கும். ஆனால் கள ஆய்வுகளில் இவையெல்லாம் தகர்ந்து போகும். நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள உதவும். கள ஆய்வு செய்தபின்தான் பிரச்சினை குறித்த ஒரு அறிமுகம், அதை எப்படி அணுகுவது போன்றவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடியும். பொதுவாக கேமிரா எப்போதும் அதிகாரம் சார்ந்த தொணியில் இருக்கும். ஒரு இடத்தில் கேமிரா இருந்தால் அதை சுற்றித்தான் கவனம் அத்தனையும் இருக்கும். ஆதிக்கம் செலுத்தும். அதற்கு முன்பாக மக்களை வெற்றுக்கண்களாக பார்ப்பது எனக்குத் தேவைப்பட்டது. நாட்டை கட்டியமைக்கும் உழைப்பாளிகளாக அவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் மீது செயல்படும் இந்த அடிமை முறை, நாம் கதைகளில் மட்டுமே கேட்டதுதான். பல நேரங்களில் கல் குவாரிகளுக்குள் போவதும் அச்சம் நிறைந்த செயல் தான். பல சமயங்களில் நாங்கள் பொய் சொல்லித்தான் உள்ளே சென்றோம். கதை எழுத, சீரியல் எடுக்க வருகிறோம் என்று சொல்லித்தான் நாங்கள் உள்ளேயே சென்றோம். மக்கள் பேசும்போது மிகவும் தவிப்பார்கள். அதையும் பார்க்க முடிந்தது.

பொதுவாக இதுபோன்ற கல் குவாரிகள் closed circuit ஆக இருக்கும். அங்கே நடக்கும் அக்கிரமங்களை தோலுரித்துக்காட்டும் ஒரு ஆவணப்படத்தை எடுக்கையில், என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் இருந்தது?

மக்கள் மனதில் நிறைய அச்சம் இருந்தது. பேசவே மாட்டார்கள். அவர்கள் நம்மிடம் ஏதேனும் சொல்லிவிட்டால் அவர்களுக்கு பலவிதங்களில் அச்சுறுத்தல்கள் இருக்கும். அவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற எந்தவொரு அடையாளமும் அங்கீகாரமும் இல்லை. இப்படிப்பட்ட மனிதர் இங்கே இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே அவர்கள் உண்மையின் சாயலை சொல்லக்கூட அச்சப்படுவார்கள். அவர்களிடமிருந்து அந்த தகவல்களை வாங்குவது மிகக் கடினமாக இருந்தது. அதற்கு நான் அவர்களிடம் ஒரு நல்ல நட்புறவை பேண வேண்டியிருந்தது. முக்கியமாக தோழர் ஞானமணியும் தோழர் சந்தானமும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் நோக்கம் இந்த மக்களின் குரல் இந்த உலகத்திற்கு கேட்க வேண்டும் என்பதுதான். வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை அவர்களிடம். இந்த படத்தைப் பார்த்த பல பத்திரிக்கை நண்பர்களும் வேறு சிலரும் கண்ணீருடன் என்னிடம் பேசியுள்ளனர். இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்று. ஆனால் உண்மையில் எங்கள் கள ஆய்வில் நாங்கள் கண்டறிந்த விஷயங்களில் மிகச்சிலவற்றைத் தான் படத்தில் எங்களால் கொண்டு வர முடிந்தது. ஏனெனில் ஆவணப்படம் என்பதைத் தாண்டி இது அம்மக்களின் வாழ்க்கை.

குவாரி முதலாளிகளுக்கு இறுதி வரை நீங்கள் இப்படி ஒரு ஆவணப்படம் எடுக்கிறீர்கள் என்று தெரியாதா?

ஞானமணியும் சந்தானமும் முதலாளிகளிடம் வேறு மாதிரி பேசிவிடுவார்கள். இவர்கள் சீரியல் ஷீட்டிங் செய்ய வந்திருக்கிறார்கள் என்பது போல. அந்த முதலாளிகளுக்கு நாங்கள் ஷீட் செய்ய வந்திருக்கிறோம் என்று தெரியும். ஆனால் மக்களின் பிரச்சினையை குறித்து ஷீட் செய்ய வந்திருக்கிறோம் என்பது தெரியாது. தொழிலாளர்களுக்கு என்று இந்த சங்கம் வந்தது அவர்களை ஒன்றிணைத்திருக்கிறது. முதலில் எல்லாவித அடக்குமுறைக்கும் ஆளான மக்களை, இப்போது அடிப்பது குறைந்திருக்கிறது. அடித்தால் கேட்க சங்கம் இருக்கிறது என்ற நிலைமை வந்திருக்கிறது. தங்கள் உரிமைகளை மக்கள் உணர இந்த சங்கம் உதவியிருக்கிறது. இந்த சங்கம் என்பது, வேலை முடிந்தவுடன் கூடிப்பேசுவது, ஏதேனும் பிரச்சினை என்றால் அதுகுறித்து விவாதிப்பது என்று இயங்கியபடியே இருக்கும். இந்த ஜனநாயக வடிவத்தை சந்தானமும் ஞானமணியும் கட்டமைத்திருந்தனர். மக்களை பேச வைத்ததில் சங்கத்தில் பங்கும் இவர்களின் பங்கும் அதிகம். இதைத் தவிர ஞானமணி தோழர் ஒரு பள்ளியை நடத்திக் கொண்டிருந்தார். அந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பள்ளி அது. பொதுவாக அந்த தொழிலாளர்கள் அடிக்கடி இடம்பெயரும் மக்கள். நிலையான ஒரு இடம் அவர்களுக்கு இருக்காது. அதனால் அவர்களின் பிள்ளைகளுக்கு படிப்பும் கிடைக்காது. அந்த பிள்ளைகளுக்காகவே உருவாக்கப்பட்ட பள்ளி அது. தனது சொந்த உழைப்பினால் நடத்தி வந்த இந்த பள்ளியை தொடர்ந்து ஞானமணியால் நடத்த முடியவில்லை. எனவே அந்த பள்ளி மூடப்பட்டது. அது மிகப்பெரிய வீழ்ச்சி என்று நினைக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு அரசின் கவனமோ அல்லது வேறு சில உதவிகளோ வரும் என்று நினைத்தோம். ஆனால் உதவி என்று வரும்போது அனைவரும் தூரமே நின்றனர்.

கள ஆய்வை முழுவதும் முடித்ததும் இந்த படத்தின் வடிவத்தை எப்படி நீங்கள் தீர்மானித்தீர்கள்?

இந்த படம் ஒரு நாடோடிக் கண்களில் தான் சொல்லப்படவேண்டும் என்று நான் தீர்மானித்தேன். பின் அங்கே ஒரு நிலப்பரப்பு இருக்கு. அதுவே பல கதைகளை சொல்லும். அதை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். பிறகு நல்ல ஒளிப்பதிவு அணி இருந்தது. மேலும் நிறைய பெண்களை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அடுத்தது படத்தில் நிறைய மௌனம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மேலும் குவாரிகளுக்கு உள்ளே உள்ளே செல்லும்போது நிலப்பரப்பில் ஒரு நிலையற்ற தன்மை இருக்கும். அதையும் பயன்படுத்துவது படத்தின் நாடோடித்தன்மைக்கு உதவும் என்று நினைத்தேன்.


படத்தின் நடுவில் சப் டைட்டில்ஸ் போடப்படுவது எதற்காக?

அது அந்தந்த அத்தியாயத்திற்காக செய்யப்பட்டது. வாய்ஸ் ஓவர் போன்ற க்ளிஷேக்களை பயன்படுத்தாமல் வேறு மாதிரி அந்த கதைக்கான முன்னோட்டத்தை கொடுப்பதற்காக. அந்த கதைக்கு போவதற்கு முன் ஒரு அமைதி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு அந்த கேப்ஷன்களை பயன்படுத்திக்கொண்டேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் எல்லா உண்மைகளையும் பேசுவதற்கு மக்கள் தயாராக இருந்தார்களா?

ஆமாம். தயாராக இருந்தார்கள். பேசியும் இருக்கிறார்கள். நான்தான் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் அதன் பின் நிறைய ஆபத்தும் இருந்தது. குறிப்பாக பாலியல் வன்முறை, சாதிய வன்முறை உச்சத்தில் இருக்கும். குழந்தைகள் மீதான வன்முறையும் அதிகமாக இருக்கும். நமது சமூகம் சாதியப் படிநிலைகளில் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு விளிம்புகளுக்கு தள்ளப்படுகிறவர்கள் யாராக இருக்கிறார்கள் என்று பார்த்தால் திரும்ப திரும்ப தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களாகவும் தான் இருக்கின்றனர். இவர்களுடைய வறுமை மிகவும் கொடியது. அந்த வறுமைக்காக எந்த ஒடுக்குமுறையையும் தாங்கிக்கொள்ள அந்த மனிதர்கள் தயாராக இருக்கின்றனர். 
ஒருவேளை உணவுக்காக அந்த வன்முறைகளை சகித்துக்கொள்கின்றனர். அந்த மக்களின் சாட்சியமாகவும் இந்த ஆவணப்படம் இருந்தது. அப்படி மனதில் இருந்தவற்றை பேசி அவர்கள் ஒரு தன்னிறைவு பெற்றனர். படமெடுக்கும்போதே அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் எதையும் நான் படத்தில் கொண்டு வர மாட்டேன் என்று வாக்களித்திருந்தேன். எனவே அவர்கள் எதையும் மறைக்காமல் முழுதாக வெளிப்படுத்தினர். சில முதலாளிகளின் குவாரிகளுக்கு சென்று நாங்கள் ஷீட் செய்திருக்கிறோம். அவர்களுக்கு ஆதரவான படம் என்று நினைத்துதான் அவர்கள் அதை அனுமதித்திருப்பர். ஆனால் இறுதியில் படத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன் இந்த மக்கள் குறித்து கொஞ்சம் எச்சரிக்கையானார்கள். ஆனால் மக்கள் இந்த படத்தை மேலும் மேலும் நிறைய குவாரி தொழிலாளர்களுக்கு போட்டுக் காண்பித்தனர். நிஜத்தில் இப்படத்தில் நான் சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க அம்மக்களின் கண்ணீர், வலி நிறைந்த படம். இது அவர்களின் படம். என் படம் அல்ல. யாரிடமாவது தங்கள் குறைகளை பேச மாட்டோமா என்று ஏங்கிய மக்களின் ஏக்கத்தை இப்படம் நிவர்த்தி செய்தது.

ஆவணப்படம் என்பது ஒரு கலை வடிவம். அதை ஒரு சங்கம் சார்ந்து, ஒரு அமைப்பிற்காக எடுப்பது சரியென்று நினைக்கிறீர்களா?

முதலிலேயே அவர்கள் என்னிடம் சொன்னது, படத்தின் வடிவத்தில் நாங்கள் எங்கும் தலையிட மாட்டோம் என்று. இரண்டாவது, பொதுவாக சில தொண்டு நிறுவனங்கள் தங்களை ப்ரொமோட் செய்ய இதுபோன்ற படமெடுப்பார்கள். எனக்கும் ஆரம்பத்தில் அந்த பயம் இருந்தது. ஒரு அமைப்புக்குள் போய் சிக்கிக்கொள்வோமோ என்று. ஆனால் அவர்கள் தூரத்தில் இருந்து என்னைக் கவனித்துக்கொண்டு வந்திருக்கின்றனர். எனக்கு அவர்களோடு முன்பழக்கம் எதுவும் கிடையாது. நீங்கள் மக்களைப் பாருங்கள். அவர்கள் குரல் வெளியில் கேட்க வேண்டும் என்று மட்டும்தான் சொன்னார்கள். நானும் படத்தின் வடிவம் குறித்தெல்லாம் ஒரு முன்முடிவு இல்லாமல்தான் சென்றேன். ஆனால் அந்த மக்களை சந்தித்தவுடன், இந்த படத்தின் வடிவம் எதுவும் முக்கியமில்லை. இந்த மக்களின் குரலை வெளியில் கொண்டுவர ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதுதான் முக்கியம் என்று எனக்குத் தோன்றியது.

இப்படத்தில் ஒரு சுவாரசியமான விஷயம், தொழிலாளியும் பேசுகிறார். முதலாளியும் பேசுகிறார். ஒரு விவாதம் போன்று செல்கிறது. முதலாளிக்கு தொழிலாளி பதிலும் அளிக்கிறார். இது எப்படி சாத்தியமானது? திட்டமிட்டு எடுத்ததா?

முதலாளிகளை கொஞ்சம் தூண்டிவிட்டால் போதும். நிறைய பேசுவார்கள். இரண்டாவது சில ஆபத்துகளை தவிர்ப்பதற்காகவும் அவர்கள் நாங்கள் பேச வைத்தோம். அவர்கள் இடத்தில் போய் அவர்களை நேர்காணல் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் அவர்களும் மகிழ்ச்சியாக சம்மதிப்பார்கள். முதலில் மக்களிடம் பேசி விட்டு வாருங்கள். பிறகு நான் பேசுகிறேன் என்பார்கள். மக்கள் இப்படி சொல்கிறார்களே என்று கொஞ்சம் கேட்டால் போதும், அவர்கள் நிறைய பேசிவிடுவார்கள். அந்த தொழிலாளிகளின் பிரச்சினைகளைக் குறித்து முதலாளிகள் தங்கள் பதில்களை வெளிப்படுத்துவார்கள். அது ஒரு சிறிய நகைச்சுவை காட்சி போலத்தான் இருக்கும். மக்களின் வலிகளை உணராமல், அறியாமையில் தங்கள் கருத்துகளை அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அது ஒரு கேலிக்குரிய விஷயமாகத் தெரியும்.

ஒரு ஆவணப்படத்தில் ஒலியின் பங்கு மிகவும் முக்கியமானது. இதில் ஒலிக்காக எந்த அளவிற்கு உழைத்தீர்கள்?

நிறைய கவனம் எடுத்துக்கொண்டோம். சில மலைகளும் குவாரிகளும் சத்தங்களால்தான் நிறைந்திருக்கும். அந்த சத்தங்களையும் மக்களின் குரலையும் ஒருசேர கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் படத்தில் நிறைய மௌனத்தையும் வைத்தோம். அந்த மக்களின் நினைவுகளில் அந்த சத்தங்கள்தான் நிறைந்திருக்கும். இயல்பான நகர் சார்ந்த சத்தங்கள் இல்லாததால அந்த மலைச்சத்தங்களை எளிதில் எடுக்க முடிந்தது. ஆனால் காற்று அங்கே அதிகமாக இருக்கும். அதனிடையே சத்தங்களை பதிவு செய்வது கடினம். அதற்கான எல்லா முயற்சிகளை ஆர்.ஆர் .சீனிவாசன் தெளிவாக எடுத்தார். படத்தின் கதைசொல்லலும் சரி, ஒளிப்பதிவும் சரி, ஒலிப்பதிவும் சரி, நிலப்பரப்பை மையமாக வைத்தே நகரும். நிலப்பரப்புதான் எல்லாவற்றையும் பேசுகின்றது என்பதை படம் பார்த்துமுடித்தவுடன் உங்களால் புரிந்துகொள்ள முடியும். நாங்கள் திட்டமிட்டு அப்படி எடுத்தோம்.

சில இடங்களில், பேசும் கருத்து வேறாகவும் காட்சிகள் வேறாகவும் இருப்பதாக தெரிந்ததே...

இல்லை. எங்களிடம் அபரிதமான காட்சிகள் இருந்தன. எந்த இடங்களுக்கெல்லாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோமோ அங்கெல்லாம் தான் அந்த காட்சிகளை பயன்படுத்தியிருந்தோம். குறிப்பாக குழந்தைகள் கல்லுடைப்பது போன்றவை....படத்தில் பெரியவர்கள் நிறைய பேர் பேசியிருப்பார்கள். ஆனால் அந்த சமூகத்தின் குழந்தைகள் எப்படியிருக்கிறார்கள், எத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதில்தான் படம் முடியும்.

ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினையை படமாக்கும்போது, படத்தொகுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இப்படத்தின் படத்தொகுப்பில் என்ன நோக்கத்துடன் அமர்ந்தீர்கள்?

நரேஷன்தான். உலகத்திற்கு புனைவு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். சமகாலத்தில், நமது மனம் துயரமானதாகவும், இருளடைந்ததாகவும் இருக்கு. குறிப்பாக அரசுக்கும் மக்களுக்கும் கடுமையான இடைவெளியும், அதிகார பின்புலத்தில் அழுத்தம் தரக்கூடிய நிறைய சம்பாஷனைகளும் தினமும் நடக்கிறது. மனிதனின் சகிப்புத்தன்மை மிகவும் வலுப்பெற்றுக்கொண்டே இருக்கிறது. அவனுக்கு புத்துயிர் கொடுக்கக் கூடியதும், நம்பிக்கை தரக்கூடியதுமான ஒரே விஷயம், புனைவு என்கிற படைப்பாக்க வடிவம்தான். அதை இந்தப் படத்தில் லேசாக செய்திருக்கிறேன். கள ஆய்வு சார்ந்து அதை மென்மையாக படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். பேச்சுகள், மௌனம் முதற்கொண்டு, சில இடங்களில் அவர்கள் அழுவார்கள். கண்ணில் தேங்கி நிற்கும் கண்ணீர் விழும் வரை காத்திருக்கவேண்டும். அதில்தான் நிறைய உரையாடல்கள் உள்ளன. அந்த வெளியை படத்தில் நாங்கள் ஏற்படுத்தினோம். மிக்கடினமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பில் வாழும் அந்த மக்களின் சூடு படத்திலும் வர வேண்டும் என்று மெனக்கிட்டோம். புனைவை வேறு வேறு வடிவங்களில் செயல்படுத்திப் பார்க்கும் காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

அந்த பகுதியின் ஊடகங்கள் இந்த பிரச்சினை குறித்து போதிய கவனம் எடுத்தனவா? அதைக் குறித்த பதிவும் படத்தில் வந்திருக்கலாமே?

இல்லை. ஊடகங்கள் அனைத்தும் முதலாளிகளின் கைகளில்தான் இருந்தன. அவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேச மாட்டார்கள். பணத்தின் வழியாகவும், அதிகாரத்தின் வழியாகவும், செல்வாக்கின் வழியாகவும் எல்லா முதலாளிகளும் ஊடகங்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொள்வர். மேலும் நிறைய முதலாளிகள் அரசியலிலும் தொடர்புடையவர்களாக இருப்பர். அவர்களுக்கு இந்த குவாரி வருமானம் உபரி வருமானம்தான். எனவே ஊடகங்கள் இந்த விஷயத்தை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த பிரச்சினையை நான் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். திரையிடல்களில் வந்த எதிர்வினைகள், நண்பர்களின் ஆலோசனைகள் இவற்றை முன்வைத்து. இப்படம் விரிந்துகொண்டே சென்றது. திருச்சி, புதுக்கோட்டை சார்ந்தும் இப்படத்தை செய்ய வேண்டும் என்று நிறைய மக்கள் சொன்னார்கள். இதை மேலும் விரிவுபடுத்தி மறுவடிவமைப்பு செய்ய விரும்புகிறோம். ஆனால் எந்தளவிற்கு அது சாத்தியம் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் போன்றோரையும் பேச வைக்க வேண்டும்.

ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதைதான் முழு வடிவம் தருகின்றது. அது போல் ஒரு ஆவணப்படத்திற்கு எது முக்கியமான அடித்தளம்?

கள ஆய்வுதான். ரொம்ப முக்கியம். கள ஆய்வு இல்லாம கேமிராவை அந்த இடத்தில் வைத்தால் எல்லாம் தவறாகத்தான் முடியும். ஒரு சமூகத்தின் பண்பாட்டு உள்ளீடுகளை கள ஆய்வின் மூலமாகத்தான் நாம் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மனிதனும் ஒரு பண்பாட்டுக் பொதிதான். எனவே ஒரு மனிதனின் கதையைத் தேடிப்போனால் நிறைய பண்பாட்டு இடைவெளிகள் இருக்கும். அந்த இடைவெளியை புரிந்துகொள்ள கள ஆய்வு மிக அவசியம். இன்றைய மனிதன் பண்பாட்டுத் தெளிவற்றவனாகத்தான் இருக்கிறான். அதுதான் நிறைய ஒடுக்குமுறைகளை உருவாக்குகின்றது. உங்கள் பண்பாடை நீங்கள் புரிந்துவைத்திருப்பது போல் சுற்றியுள்ளவர்கள் பண்பாட்டை பற்றிய புரிதலையும் மரியாதையையும் கொண்டிருக்கவேண்டியது மிகவும் அவசியம். இன்றைய மனிதன் எதிர்நோக்கி இருப்பது பண்பாட்டுப்போர். எனவே ஆவணப்படங்களக்கு மிகவும் அவசியம், கள ஆய்வு.

இப்படத்தின் ஒளிப்பதிவு மிகவும் அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் இருந்தது. அதற்கான திட்டமிடல்கள் பற்றி...

ஆர்.ஆர். சீனிவாசனும் அவரது குழுவினரும் தந்த உழைப்பு அது. முதலில் அழகு என்பது அந்த மக்களின் வெளி சார்ந்த அழகியல் தான். அது மிகவும் மிகையாகவும் இருக்கக் கூடாது என்று நினைத்தோம். அதே சமயம் அந்த மக்களின் மூர்க்கமான முடிவற்ற உழைப்பும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு ஒளிப்பதிவுக் குழு மிகவும் ஒத்துழைத்தார்கள். மாறன் என்ற நண்பரும் ஒளிப்பதிவுக் குழுவில் இருந்து நிறைய சிரமங்களைத் தாங்கிக்கொண்டு உழைத்தார். நிறைய சிரமம் ஒளிப்பதிவுக் குழுவிற்குத்தான் இருந்தது. கேமிராவைத் தூக்கிச் செல்வது, மலைகளில் ஏறிச்செல்வது உள்ளிட்ட நிறைய சிரமங்கள். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு உழைத்தனர். அவர்களின் உழைப்பு மிகவும் ஒத்துழைப்புமிக்கது.

படத்தில் ஒரு லாரி விபத்து வருகிறதே...

அது எதிர்பாராமல் நடந்தது. நாங்கள் அந்த இடத்தில் இருந்தோம். விபத்துகளைப் பற்றி மக்கள் எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். விபத்துகளைப் பற்றி முதலாளிகள் எதுவும் கண்டுகொள்ளவே மாட்டார்கள், பொருட்படுத்தவே மாட்டார்கள் என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். திடீரென சத்தம் வந்தது. ஓடிச்சென்று பார்த்தால், அங்கே விபத்து. அந்த லாரி சென்றதை நான் பார்த்தேன். சிறிது தூரத்தில் விபத்து. யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் நல்ல காயம்.

பொதுவாக ஒடுக்கப்படும் மக்களுக்கு தங்கள் யாரால், எப்படி, எவ்வளவு தந்திரமாக சுரண்டப்படுகிறோம் என்று தெரியாது. ஆனால் இந்த மக்கள் அத்தனையையும் தெளிவாகக் கூறுகின்றனர். அந்நிலையில், அந்த ஒடுக்குமுறைகளுக்கான அவர்களது எதிர்வினை என்ன?

அவர்கள் இப்போதுதான் சங்கமாக சேர்ந்திருக்கிறார்கள். அதன் மூலம் பலவற்றை சாதித்துள்ளனர். ஒரு தனி மனிதன் அதிகாரத்தினால் எதையும் சாதித்துவிட முடியாது. மக்கள் ஒருங்கிணைந்தே ஆகவேண்டும். தங்கள் கோரிக்கைகளையோ, பிரச்சினைகளையோ தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்தே ஆக வேண்டும். இதை நான் ஆதாரப்பூர்வமாகவும் நிதர்சனமாகவும் உணர்கிறேன். ஒருங்கிணையும் போது அவர்களின் அறியாமை அவர்களிடமிருந்து விடுபடுகிறது. இது மிகவும் முக்கியமான விஷயம்.

சில ஷாட்கள் மிகவும் நீளமாக இருந்ததே. என்ன காரணம்? குறிப்பாக பெண்கள் லாரியில் செல்லும் ஷாட்?

ஆமாம். பாலியல் வன்முறை பற்றி பேசியவுடன் வரும் அந்த ஷாட். அந்த இடத்தில் ஒரு அமைதியையும் பார்வையாளர்களுக்கு சிறிது நேரமும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த விஷயம் உங்கள் மனதில் பதிய வேண்டுமென்பதற்காக. ஒரு செய்தி முடிந்தது, அடுத்து என்ன என்று தாவிச் செல்லும் மனநிலையைத்தான் இன்றைய ஊடகங்கள் தயாரித்து வைத்திருக்கின்றன. எதனோடும் நாம் உரையாட விரும்புவதேயில்லை. அப்படியில்லாமல், அந்த பிரச்சினையுடன் நாமும் உரையாட வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான நேரம்தான் அந்த ஷாட்டின் நீளம்.

அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் இந்த பிரச்சினையில் எப்படியிருந்தது? அவர்களிடம் பேச முயற்சி எடுத்தீர்களா?

இல்லை. நான் சொன்னபடி மறுவடிவமைப்பில் இதையும் சேர்க்கவேண்டும் என்று நினைத்தேன். தமிழகத்தின் பொருளாதாரத்தை கட்டமைப்பதில் இம்மக்களின் பங்கு பெரிதளவு இருக்கின்றது. அதே சமயம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் ஆடும் கபடமும் அதிகமாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் நான் மக்கள் பக்கம் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அதுதான் நடுநிலை. இரண்டு பக்கமும் இருப்பதல்ல நடுநிலை. கள ஆய்வில் நமக்கு யார் பக்கம் நியாயம் இருக்கிறது, யார் ஒடுக்கப்படுகிறார்கள் என்று தெரியவருகிறது. அவர்கள் பக்கம் நிற்பதுதான் நடுநிலை என்று நான் நம்புகிறேன்.

எல்லா போராட்டங்களுக்கும் கூட்டமைப்பு மிக முக்கியம். இவர்கள் போராட்டத்தில் இந்த கூட்டாக சேர்வது எந்தளவிற்கு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது?

ரொம்ப. சென்னையில் பேரணி எல்லாம் நடத்தியிருக்கிறார்கள். நிறைய விஷயங்களை அரசுக்கு தெரிவித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் அரசு வாக்குகளை மட்டும் தான் தந்துகொண்டிருக்கிறது. செயல்படவில்லை. என்னைப் பொறுத்தவரை, இந்த மக்கள் கூட்டமைப்பு, முதலாளிகள் மத்தியில் ஒரு சிறிய அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. அது மிகப்பெரிய விஷயம். முதலாளிகளுக்கும் இருக்கும் அரசியல், பண, அதிகார பலத்திற்கு முன், இத்தனை மக்கள் ஒன்றாக நின்று போராடுவதே பெரிய விஷயம்தான். ஒரு சிறிய அச்சம். ஒருத்தராக இருக்கும்போது என்ன வன்முறை வேண்டுமானாலும் அவன் மீது செலுத்தலாம். ஆனால் கூட்டமாக நிற்கும்போது அவர்மேல் கை வைக்க ஒரு சிறிய அச்சம் நிச்சயம் வரும். ஒரு உளவியல் மாற்றத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது. சங்கம் கேட்பது எதுவும் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் அதை தொடர்ந்த போராட்டங்கள் மூலம் வாங்கிவிடலாம் என்று அவர்கள் மிகவும் நம்பிக்கையோடும் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் இருக்கின்றனர்.

ஆவணப்படங்களில் இசை பயன்படுத்தப்படுகிறது. இந்த படத்தில் எல்லாம் இயல்பான சத்தங்களாகவே இருந்தன. அதைப்பற்றி...

எல்லாவற்றையும் நான் ஒலியாகத்தான் பார்த்தேன். எனக்கு இதுபோல் இசையை சேர்ப்பதில் ஈடுபாடு இல்லை. அது தமிழ் சினிமாவின் பாதிப்பு. இசையை எங்கு சேர்ப்பது, எங்கு எடுப்பது என்பதில் நமக்கு நிறைய குழப்பம் இருக்கிறது. சத்தமாகவே எல்லாவற்றையும் கேட்டு பழகிவிட்டோம். அதிலிருந்து விலகிப்போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன் இந்த மக்களுக்கு காதில் ஒரு சத்தம்தான் கேட்கும். கல் உடைக்கும் சத்தம் மட்டும்தான் பார்க்கும். அதுதான் அவர்களின் இசை.

இந்த படத்தை இந்த மக்கள் பார்த்தார்களா? அவர்களின் எதிர்வினை எப்படி இருந்தது?

நிறைய பேசினார்கள் செல்பேசியில். அவர்கள் தனியாக ஒரு டிவிடி வைத்திருப்பார்கள். அவர்கள் போட்டுப் பார்க்க, அவர்கள் சார்ந்த மக்கள் கூட்டங்களில் போட்டுக்காட்ட என்று படத்தை விஸ்தாரமாக்கிக் கொண்டே இருக்கின்றனர்.

எப்படி இதை செய்கின்றனர்? மின்சாரம் இல்லாத இடங்கள் என்று படத்தில் வருகிறதே...?

அதற்கெல்லாம் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு ப்ரொஜக்டர் உள்ளிட்ட எல்லாம் இது ஒரு பயணிக்கும் படமாகவே இருக்கிறது. அந்த மக்களின் விழிப்புணர்வுக்கான படமாக இதை அவர்களே மாற்றிவிட்டனர். அவர்களே அதைப்பார்த்து அழுது, என்னை அழைத்து பேசுவர். வேறு ஏதோ குவாரியில் இருப்பவர் அதை பார்த்து விட்டு, அடுத்த கிராமத்துககு நடந்து வந்து, என் எண்ணுக்கு அழைத்து பேசி அழுதிருக்கின்றனர். வடமாவட்டங்களில் படத்தை திரையிடப்பட்டபோது, எழுச்சியுடன் நிறைய பேர் பேசினர். இன்னும் நிறைய விஷயங்களை சேர்த்திருக்க வேண்டும் என்று நிறைய ஆலோசனை சொல்வர். இந்த படம் அவர்களை தூண்டிவிட்டிருக்கிறது.

முதலாளிகள் இப்படத்தை பார்த்தார்களா? குறிப்பாக படத்தில் பேசியிருக்கும் முதலாளி?

இல்லை. அதற்கான வாய்ப்பு இருந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். முதலாளிகளிடம் இந்த படத்தை எடுத்துப்போனார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் பக்கமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

சில இடங்களில் ஒரே காட்சிகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே...

ஆம். அதை நான் தெளிவாகத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த எதிரொலிக்காக. கடைசிக் காட்சியில் கூட ஒருவர் கல்லை எடுத்துப் போட்டு மேலே வந்துகொண்டிருப்பார். என்னுடைய நோக்கம் வெறும் அழகான காட்சிகளைக் காட்டுவதோ, ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்வதோ அல்ல. உங்களுக்கு அலுப்பூட்டுகிறது என்பதற்காக அந்த காட்சிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் நான் நினைக்கவில்லை. உங்கள் மனதில் ஒரு அழுத்தமான விஷயத்தை ஏற்ற வேண்டும் என்று நினைத்தேன். இப்படியொரு சமூகம் இருக்கின்றது. அதற்கொரு குரல் இருக்கின்றது. அதில் வலி இருக்கின்றது. அதற்கு நாம், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்பதுதான் எனது நோக்கம்.

யாருக்காக இந்த படம் எடுக்கப்பட்டதோ, அவர்களுக்கு இந்த படம் போய் சேர்ந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?

நான் இதில் எதிர்பார்த்தது வேறு. நடந்தது வேறு. ஊடகங்கள் இதை பெரிதும் கவனத்தில் கொள்ளும் என்று நினைத்தோம். அதற்கான எல்லா வேலைகளையும் செய்தோம். ஆனால் அவர்கள் இதில் மிகவும் உணர்வற்று இருந்தது. அதற்கு மிகவும் கவர்ச்சியான விஷயங்கள் தான் தேவைப்படுகின்றது. இதுபோன்ற விஷயங்களை அவர்கள் சமூகத்தின் மாற்று வடிவங்களாக பார்க்கின்றனர். ஆனால், அந்த மக்களுக்கான விழிப்புணர்வுக்கான ஒரு ஆயுதமாக இந்த படம் மாறியது. அந்த பிரச்சினைகளுக்கான எந்த ஆதாரத்தையும் நீங்கள் அழிக்க முடியாது. ஒரு படம் இருக்கின்றது. இதற்குப் பிறகு நிறைய தொண்டுநிறுவனங்கள் அவர்களைப் பற்றி படமெடுக்க அழைத்தனர். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. இந்த படத்தில் எனக்கிருந்த ஈடுபாடும் சுதந்திரமும் வேறெதிலும் எனக்குக் கிடைக்குமென்று நான் நம்பவில்லை.

இந்த கல் மனிதர்களின் பிரச்சினைகளில் சாதி எந்தளவிற்கு புகுந்துள்ளது?

பொதுவாக இந்த வேலைக்கு தள்ளப்படுகிற மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாகத்தான் இருக்கின்றனர். கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த வேலையைத்தான் அவர்கள் செய்கின்றனர். இதிலிருந்து விடுபட்டு சமூகத்தின் மையத்திற்கு அவர்களால் வர முடியவில்லை. சமூகத்தின் விளிம்பிற்கும் அப்பாற்பட்டுதான் அவர்கள் இருக்கின்றனர். ஒரு அந்நியர்களைப் போலத்தான் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு சாதி படிநிலைகளில் இருப்பவர்கள், தங்கள் சாதிய அதிகாரத்தை பயன்படுத்தி, சமூகத்தின் அடுத்தடுத்த நிலைகளுக்குப் போய்விட முடியும். ஆனால் இவர்களுக்கு அந்த வாய்ப்பே இருக்காது. இந்த சாதியில் பிறந்துவிட்டு சமூகத்தின் மேல்தளத்திற்கு வர வேண்டிய அவசியம் உனக்கென்ன இருக்கிறது என்று விதிக்கிற மனோபாவம்தான் எல்லா மனிதர்களிடமும் இருக்கின்றது.

தங்கள் இருப்பிற்கான எந்த அடையாளமும் இல்லாத மக்கள் அவர்கள் என்றீர்கள். தங்கள் உரிமையையாவது அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?

ஆமாம். சங்கம் அவர்களின் உரிமைகளை உணர்த்தியிருக்கின்றது. அதற்கான அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்று அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கான ஆணையம் கேட்டிருக்கின்றனர். ரேஷன் கார்டு கேட்கிறார்கள். இந்த நாட்டின் குடிமக்களாக ஆவதற்கு சில விஷயங்கள் தேவை. அதை போராடியாவது வெல்ல வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர்.

இந்த படம் எடுக்க எத்தனை நாளாகியது?

படப்பிடிப்பிற்கு மட்டும் ஒரு மாதமாகியது. ஆனால் படத்தொகுப்பிற்கு நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டேன். தங்கராஜ் என்று ஒரு படத்தொகுப்பாளர் வேலை செய்தார். மிக நுட்பமாக, பல வடிவங்களில் வேலை செய்தோம். மூன்று வடிவங்களில் படத்தை தொகுத்தோம்.

ஊடகங்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகள், தொழிலாளர்கள் மேல் கொண்டிருக்கும் எண்ணத்தை இந்த படம் மாற்றியிருக்கின்றதா?

ஒரு சிறிய அச்சம் கொடுத்ததாக நான் உணர்கிறேன். இந்த தொழிலாளர்கள் வேறு கட்டத்திற்கு சென்று விட்டார்கள். விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அடுத்து ஊடகத்தை சென்றடைகிறார்கள். ஆவணப்படம் என்பது நமது ஆழ்உணர்வுகளில் வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அதை இந்த படம் செய்துகொண்டே தான் இருக்கிறது. காலம் மாற மாற இப்படத்தின் வீரியம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். தொழிலாளர்களின் நம்பிக்கையினால், முதலாளிகள் அவர்களைக் குறித்து சிறிய அச்சமும் எச்சரிக்கையும் கொண்டுள்ளனர். சில முதலாளிகள் தொழிலாளர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிற நிலைக்குக் கூட வந்திருக்கின்றனர். வெகு சிலர்.

தமிழ்நாட்டைப் போன்ற ஒரு சமூகத்தில் ஆவணப்படத்தின் முக்கியத்துவம் என்ன?

நாம் இன்னும் ஆவணப்படத்தை சரியாக பயன்படுத்தவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. நிறுவனங்கள் சார்ந்து ஆவணப்படங்கள் செய்யும் மனநிலையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். ஆவணப்படங்கள் செய்ய ஏன் அதிக பொருட்செலவு என்று பலர் கேட்கின்றனர். ஆனால் ஆவணப்படங்கள் நிறைய பொருட்செலவையையும் கோருவதுதான். அப்போதுதான் அதன் முழு பரிமாணமும் வெளிப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு வேண்டும். சமூக, அரசியல், பண்பாட்டு மாற்றத்திற்கு ஆவணப்படங்களை விட்டால் வேறு கருவியே கிடையாது. அதை நாம் இன்னும் செய்யவேயில்லை என்று நினைக்கிறேன். நிறைய இளைஞர்கள் குறும்படங்கள் பக்கம் திரும்பிவிட்டனர். ஆனால் சோமீதரன், அரவிந்தன், முருகன் போன்ற நிறைய இளைஞர்கள் மரண தண்டனை சார்ந்து, செங்கொடி பிரச்சினை குறித்து ஆவணப்படங்கள் செய்கின்றனர். ஆவணப்படங்கள்தான் தமிழகத்தில் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கிறேன். அது குறித்த ஒரு சிறிய பயிற்சி எடுத்துவிட்டு, அந்த வடிவப் புரிதல்களோடு படமெடுத்தால் அதன் முழு வீச்சை வெளிக்கொண்டுவர முடியும்.

நம் சமூகத்தில் ஆவணப்படங்களுக்கான வெளி இருக்கின்றதா? அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததற்கு என்ன காரணம்?

வணிக சினிமா நம் மனநிலையை ஆதிக்கம் செய்கிறது. அதன் பிம்பங்கள் நம் உளவியலை பாதிக்கின்றது. நீங்கள் இப்போது கேட்கும் கேள்விகளும், என் பதில்களும் கூட வணிக சினிமாவின் பாதிப்பில்தான் நாம் உரையாடிக்கொள்வோம். இந்த ஆவணப்படங்கள் வணிக சினிமாவை நோக்கி நம்மைக் கூட்டிப்போகும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் ஆவணப்படங்கள் அதற்கு எதிர்த்திசையில் செல்வது. அதனால்தான் நிறைய பேர் அதை உணர்ந்து அந்த திசையில் வருவதில்லை. வணிக சினிமா பக்கம் செல்கின்றனர். அதை உருவாக்கும் ஆளுமை, அரசியல் புரிதல் நிறைய வேண்டும். சமீபத்தில் நிறைய ஆவணப்படங்கள் மாற்றங்கள் செய்கின்றன. அமுதன், ஆர்.ஆர்.சீனிவாசன் போன்றோர் நிறைய படங்கள் செய்கின்றனர். ஆவணப்படங்கள் நம் சமூகத்திற்கு செய்ததை, தமிழ் சினிமா கூட செய்தது கிடையாது. ஏனென்றால் கருத்தியல் தெளிவு, அரசியல் தெளிவு அற்றவர்களிடம்தான் தமிழ் சினிமா இருக்கின்றது. அரைகுறையான கருத்தியல் உள்ளவர்களிடம் தான் தமிழ் சினிமா உள்ளது. இந்த பிரச்சினைகளை கையாளக்கூடிய களமும் தமிழ் சினிமாவில் இல்லை.

புனைவு இப்போது ஆவணப்படங்களிலும் வேண்டும் என்று சொன்னீர்கள். அதுபோன்ற புனைவுகள் இல்லாமல் இருப்பதுதான் ஆவணப்படங்களுக்கான குறைந்த வரவேற்பிற்குக் காரணமா?

புனைவுக்கு சில தன்மைகள் இருக்கு. உங்கள் ஆழ்மனதை அந்த விஷயத்தை நோக்கி இழுத்துப்போகும் தன்மை. அதுதான் அந்த படைப்பாக்க வடிவத்தில் செயல்பாடு. எல்லார்க்குள்ளும் கதை சொல்லும், கதை கேட்கும் ஆர்வம் இருந்துகொண்டே இருக்கு. உங்கள் ஆழ்மனது விரும்பும் அந்த வடிவில் நான் ஆவணப்படத்தைத் தரும்போது உங்கள் மனம் உங்களுக்கு முன் அதில் ஒன்றிவிடுகிறது. தமிழ்ச்சூழல் சார்ந்த புனைவை நோக்கி நாம் இன்னும் செல்லவே இல்லை. நிறைய குழப்பம் இருக்கிறது நமக்கு. இலக்கியத்தையும் சினிமாவையும் நாம் குழப்பிக்கொள்கிறோம். இரண்டும் வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியத்தில் சாதித்ததை எல்லாம் சினிமாவிலும் சாதிக்க முடியும் என்பது ஒரு குருட்டுத்தனமான மூடநம்பிக்கை. இலக்கியத்தில் சொல்லப்படும் புனைவு வேறு. சினிமாவில் சொல்லப்படும் புனைவுக்கான மூலக்கூறுகள் வேறு. இந்த விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆவணப்படங்களை பெருவாரியான மக்களிடம் கொண்டுசெல்வது எப்படி?

இந்த நேர்காணல். இது கூட ஒரு முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஒரு சிறிய செய்தி உள்ளிட்டவை கூட மக்களிடம் ஆவணப்படங்களை எடுத்துச் செல்லும். தமிழ் ஸ்டூடியோவிலும் இப்படத்தை பதிவேற்றம் செய்தனர். அதில் படத்தை பார்த்துவிட்டு நிறைய பேர் பேசினர். எனக்குத் தெரிந்து என் வாழ்வின் ஒரு முக்கியமான படமாக இதை நான் பார்க்கிறேன். வணிக ரீதியான எந்த எதிர்பார்ப்பும் இந்த படத்தின் மூலம் எனக்கில்லை. ஆனால் ஒரு பெரும் தன்னிறைவை கொடுத்த படம் இது.

ஆவணப்படங்களுக்கான தயாரிப்பாளர்கள் கிடைப்பார்களா? இந்த படத்தில் அந்த சிரமங்கள் எப்படியிருந்தன?

இதிலும் சங்கம் சார்ந்து பணம் கொடுப்பதில் மிகவும் சிரமப்பட்டனர். சிறிய தொகைக்குள்தான் இந்த படத்தை நாங்கள் முடித்தோம். என்னுடையது உட்பட நிறைய நண்பர்களின் உழைப்பு பண எதிர்பார்ப்பு இல்லாதது. தோழர் ஞானமணி எங்கள் மீது கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கை, இந்த மக்கள் அந்த பிரச்சினைகளின் தாக்கத்தில் மிகவும் வெளிப்படையாக இருந்தது, இவை இரண்டும் பணம் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களைத் தாண்டி எதையும் செய்து, அவர்களை நோக்கி செல்லக்கூடிய துணிவை எனக்குக் கொடுத்தது என்று நம்புகிறேன்.

ஆவணப்படங்களை சந்தைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதா?

நிறைய இருக்கின்றது. நாம் அதை செய்வதில்லை. நிறைய நெட்வொர்க் இருக்கின்றது. உலகம் முழுக்க தமிழர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுக்க ஆவணப்படங்களுக்கான தேவைகள் இருக்கின்றது. ஆனால் நாம் அதை தொடர்ந்து செய்வதில்லை. அதற்கான நிதி இல்லை என்பது ஒரு காரணம். அடுத்து ஆவணப்படங்களுக்கான நெட்வொர்க்கை உருவாக்குவதற்குள் வேறு விஷயத்திற்கு தாவிவிடுகிறோம். வணிக சினிமாவோ, அது சார்ந்த விருதுகள் போன்ற எதிர்பார்ப்புகளுக்கு தாவி விடுகின்றனர். சரியான நெட்வொர்க்கை அமைத்தால் நாம் நினைப்பதை விட அதிகமாகவே ஆவணப்படங்கள் செய்யும்.

பொதுவாக ஆவணப்படங்களில் அலுவலகத்திலேயோ, வேறு சில உட்புறங்களிலேயோ அமர்ந்து பேசுவார்கள். ஆனால் இதில் படம் நிகழும் களத்திலேயே அனைவரையும் பேசவைத்திருப்பது திட்டமிட்டு செய்ததா?

நிலவெளிதான் யதார்த்தத்தையும் உண்மையையும் உளவியலையும் சொல்ல முடியும். அவர்களை கூட்டி வந்து ஒரு அறையில் அமர்த்தி பேச வைத்தால் ஒரு வார்த்தை கூட வராது. தமிழ் இலக்கியம் என்பது திணை சார்ந்தது. நிலவெளி சார்ந்தது. அவர்கள் ஒட்டுமொத்த சிந்தனை, கதை சொல்லும் முறை எல்லாமும் நிலவெளி சார்ந்ததுதான். இதில் இருந்து நீங்கள் வெளியே போனாலே, மன ஓட்டங்கள் மாறிவிடும். சொல்லப்போனால் நின்றே போய்விடும். அந்தளவிற்கு நாம் நிலவெளியோடு பிணைக்கப்பட்டவர்கள். நாம் பிறந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு வந்தாலும் நம் கனவுகள், கற்பனைகள், அந்த நிலவெளியைச் சார்ந்தே இருக்கும். அது மிகவும் முக்கியம்.

ஒரு படைப்பாளியாகவும் தனிமனிதராகவும், படமெடுக்கும் முன்பும் பின்பும் உங்கள் மனநிலை எப்படியிருந்தது?

மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தன் எடுக்கும்போது. அவர்கள் கூறும் பிரச்சினையைக் கேட்க வேண்டும், அதை தொழில் நுட்பத்தோடு இணைத்து பதிவு செய்ய வேண்டும் என ஒரு வகையான பேலன்ஸ் தேவைப்பட்டது. ஆனால் கள ஆய்வு இதற்கான தயாரிப்பு நிலையை எனக்குக் கொடுத்திருந்தது. உணர்ச்சிவசப்படாமல் பக்குவமாக அவர்களுடன் பேசும் மனநிலையை கொடுத்திருந்தது. இப்போதைய மனநிலை கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. சமூகம் உணர்ச்சியற்றுத்தான் இருக்கிறது. அதற்கு கவர்ச்சிகரமான விஷயங்கள்தான் தேவைப்படுகிறது. அதற்கு நம் மனம் பழகிவிட்டது. இதுவே மிகப்பெரிய வன்முறைதான். அதிலிருந்து நம் மனத்தை வெளியே கூட்டிப்போக வேண்டும். அதற்கே இன்னொரு படைப்பாக்க வடிவம் தேவைப்படுகிறது.

அந்த பிரச்சினை குறித்த உங்கள் கண்ணோட்டம் படத்திற்கு பின் மாறுபட்டதா?

இல்லை இல்லை. கூர்மைப்பட்டது. மக்கள் அவர்கள் போராட்டங்களில் அடுத்த கட்டங்கள் செல்வார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அவர்களின் திசை நோக்கிய ஒரு தெளிவும் புரிதலும் அவர்களிடம் இருக்கிறது. அதை நோக்கி அவர்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இந்த படம் எந்தவகையிலாவது உதவியிருந்தால் அதுவே படத்தின் வெற்றி எனக்கொள்வேன்.

இதுபோன்ற சமூக பிரச்சினைகள் சார்ந்தும், பொதுவிலும் உங்கள் அடுத்த திரை முயற்சிகள் என்ன?

நான் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறேன். வாய்ப்பைத் தேடி கதவை தட்டுங்கள் என மற்றவர்கள் கூறுவது போல் ஒன்றும் செய்வதில்லை. நான் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தில் மிகவும் கூர்ந்து, ஈடுபட்டு வேலை செய்துகொண்டு வந்தால் நிச்சயம் ஏதேனும் ஒன்று நடக்கும். திரைமுயற்சி என்றாலே, தயாரிப்பாளரிடம் சென்று கதை சொல்வது போன்ற முயற்சிகள் ரீதியா பார்க்கிறார்கள். ஆனால் செயல்பாடுதான் மிகவும் முக்கியம். செயல்பட்டுக்கொண்டே இருந்தால் அதன் அடுத்த கட்டத்தற்கு நீங்களே சென்று சேர்வீர்கள். திரைப்படம் என்பது அப்படிப்பட்ட முயற்சிதான். ஆனால் வாய்ப்பைத் தேடிப்போவது, கதவைத் தட்டுவது இவைதான் திரைமுயற்சி என்பது இளைஞர்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அதற்கான அடிப்படையான செயல்பாடுகளை யாரும் பார்ப்பதில்லை. நான் செயல்படுவதில்தான் கவனம் செலுத்துகிறேன். சமூகம் சார்ந்து நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதை மட்டும்தான் நான் செய்யப்போகிறேன். வணிகம், வெற்றி போன்ற இலக்குகளெல்லாம் கிடையாது. சமூகத்தோடு நான் தொடர் உறவு வைத்துக்கொள்கிறேன். தினமும் புதுப்பித்துக்கொள்கிறேன். பண்பாட்டு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மக்களைப் பற்றி நான் படித்துக்கொண்டே இருக்கிறேன். இது நாளை என்னை ஏதாவது செய்வதற்கு உந்தினால் அதை செய்வேன் என நம்புகிறேன்.

கல் மனிதர்கள் ஏதேனும் ஒரு இடத்தில் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறார்களா?

இல்லவே இல்லை. தைரியமாக, உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் தாழ்த்தி வைக்கப்பட்டுள்ளோம் என்பது தெரிகிறது. ஆனால் இதிலிருந்து மீண்டு விட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதற்கான பாதையும் திசையும் அவர்களுக்குத் தெரிகிறது. அதை நோக்கி பயணப்பட்டாக வேண்டிய கணம் வந்துவிட்டது என்று அவர்களுக்கு தெரிந்துவிட்டது. பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக கவிதைகள் உள்ளிட்ட இலக்கியத்தில் தீவிரமாக இருப்பவர்கள் திரைத்துறைக்கு வரும்போது, வடிவச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கிறதே. அது குறித்து...

நான் 15 வருடங்களாக திரை சார்ந்தே இயங்கி வந்துள்ளேன். திரையிடல்கள், விவாதங்கள், உரையாடல்கள், திரைப்பட விழாக்கள், திரைக்கழகங்கள் உள்ளிட்டவைகளோடு பதினைந்து வருடங்களாக நான் ஈடுபட்டு வந்துள்ளேன். கவிதை என்பது இடையில் வந்ததுதான். திரை சார்ந்த ஊடக செயல்பாட்டாளராகத்தான் என்னை நான் நினைத்திருக்கிறேன் எப்போதும். கவிதை நடுவே எழுத ஆரம்பித்தேன். ஆனால் இனி திரை ஊடகம் சார்ந்துதான் இயங்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். அதே சமயம் நீங்கள் சொல்லும் விஷயத்தை நான் புரிந்துகொள்கிறேன். இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான குழப்பத்தை நான் புரிந்துகொள்கிறேன். சினிமாவை நோக்கி சென்ற இலக்கியவாதிகள் தோல்வியடைந்திருக்கிறார்கள். அதை சமீப காலத்தில் யதார்த்தமாக நாம் பார்க்கிறோம். சினிமா என்பது தொழில் நுட்பமும் கலையும் சேர்ந்த ஒரு விஞ்ஞானம். அதற்கு இலக்கிய ஆளுமை மட்டும் போதாது. அது பெரிய பற்றாக்குறை. அது ஒரு முட்டுச்சந்தில்தான் போய் நம்மை நிறுத்தும். ஒட்டுமொத்த மானுடத்திற்கான ஆழ்மன வெளிப்பாட்டிற்கான ஒரே ஊடகம் திரை ஊடகம்தான். அந்த பிரம்மாண்டத்தையும் உணர்ந்து, அது நம்மிடம் கேட்பதை தரும் வல்லமையும் தெளிவும் நம்மிடம் வேண்டும். அதற்கு தமிழ்ச் சூழலில் இருக்கும் இலக்கிய படைப்பாளுமை போதவே போதாது. அதிலிருந்து நாம் வெளியே வர வேண்டும்.

ஒரு படைப்பாளியாக திரை ஊடகத்தில் எப்படிப்பட்ட படைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

வணிகம் சார்ந்த சினிமா உருவாகிக்கொண்டு இருக்கிறது. மிடில் சினிமா என்றவொன்றும் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு முக்கியமான விஷயம், கருத்தியல் தெளிவு. இன்றைய இயக்குனர்கள் சிலர் கருத்தியல் ஆழமிக்கவர்களாகவும், மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்பவர்களாகவும், அரசியல் தெளிவுடனும் இருக்கின்றனர். ஆனால் நிறைய பேர் அரைகுறை புரிதல்களோடு இருக்கின்றனர். மக்கள் பிரச்சினைகளை பேசுகின்றனர். ஆனால் அது மக்களுக்கே எதிரானதாக இருக்கின்றது. இன்னும் கருத்தியல் தெளிவுடன் அவர்கள் இருத்தல் வேண்டும். ஒன்று அது போன்ற விஷயங்களைத் தொடாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் முழு கருத்தியல் தெளிவோடு இருக்க வேண்டும். கடந்த மூன்று வருடங்களில் அரசோடு மல்லுக்கு நிற்பவர்களாக, நிறைய விஷயங்களில் தமிழக மக்கள் ஒரு ஒருங்கிணைப்புக்கு வந்துவிட்டார்கள். குறிப்பாக மரண தண்டனைக்கு எதிராக, ஈழப் போராட்டங்களில், கூடங்குளம் போன்ற பிரச்சினைகளில் மக்கள் கூட்டம் அரசோடு மல்லுக்கட்டுகிறது. இந்நிலையில் கருத்தியல் தெளிவில்லாமல் பிரச்சினைகளை நீங்கள் கையாண்டால் அது உங்களை சறுக்கி விட்டுவிடும். வணிக சினிமா, பெரும் முதலீடு என்பதையெல்லாம் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதில் கருத்தியல் தெளிவில்லாமல் இருந்தால் அது உங்களை கைவிடுவதோடு மட்டுமல்லாமல் அதை நம்பி பின்னால் காத்திருப்பவர்களையும் பாதிக்கும். கருத்தியல் தெளிவும் அரசியல் புரிதலும் துணிவும் இருந்தால் மட்டுமே ஒரு பிரச்சினையைத் தொட வேண்டும். இல்லையென்றால் அதைத் தொடாமல் வெறும் புனைவைத் தொட்டு விட்டுப் போவதே மேல். இதுதான் அனைத்து திரைப் படைப்பாளிகளுக்கும் எனது வேண்டுகோள். நானும் அப்படிப்பட்ட ஒரு படைப்பாளியாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இருப்பேன்.

கல் மனிதர்களின் வாழ்வை அந்த சூட்டோடே சித்தரிக்கும் படம் கல் மனிதர்கள். கூர்ந்து பார்த்தால் இந்த நேர்காணலில் இந்த படத்தைப் பற்றி, அதன் உள்சொல்லல்கள் பற்றி, போக்கு பற்றி, காட்சிகள் பற்றி அதிகம் கேள்விகள் எதுவும் இருக்காது. ஆம். கல் மனிதர்கள் படிக்கப்பட வேண்டிய படம் மட்டுமல்ல. பார்க்கப்படவேண்டிய படம். நிச்சயம் தவறாமல் பாருங்கள்.

நன்றி - பெசாமொழி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்