/* up Facebook

Feb 28, 2013

சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமா? - எஸ். கோபாலகிருஷ்ணன்டிசம்பர் 16, 2012 அன்று டெல்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தையடுத்து  பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் சில பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடந்தன. அவற்றுள் ஒன்றை ஒருங்கிணைத்தவரான சவ்யா, “இந்தியாவின் மற்ற மெட்ரோ நகரங்களைவிடச் சென்னைதான் பெண்களுக்குப் பாதுகாப்பானது. காவல் துறையினர் எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள். உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் மற்ற நகரங்களும் சென்னையைப் பின்பற்ற வேண்டும்” என்றார். சவ்யாவின் கருத்தை வேறு சிலரும் ஆமோதித்தார்கள். சென்னை, உண்மையிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம்தானா, பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகின்றன? 

இந்தக் கேள்விக்கான பதில்கள் பல விதங்களிலும் வேறுபடுகின்றன. “இப்போது சென்னையில் பெண்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.  தெருவில் சாதாரணமாக ஒரு பெண் நடந்து போனாலே கிண்டல் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். தனியாக இரவு நேரங்களில் சற்றுத் தாமதமாக ஒரு பெண் சாலையில் நடந்து போகும்போது இது அதிகமாக இருக்கிறது” என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியச் செயல்பாட்டாளருமான நிர்மலா கொற்றவை. என்றாலும் ஒப்பீட்டளவில் சென்னை  பாதுகாப்பானதுதான் என்றும் இவர் கருதுகிறார். இங்கே  கட்டுப்பாடுகளும் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிறது என்று சொல்லும் அவர், “கலாச்சார மாற்றங்கள் பெரிய அளவில் இங்கே உருவாகிவிடவில்லை. பாரம்பரிய கலா சாரம் இன்னமும்  இருக்கிறது.   அதனாலேயே பெண்கள் மிக அதிகமாக வெளி இடங்களில் நடமாடுவது இங்கு இல்லை. அங்கெல்லாம் ஆண்களுக்கு நிகரான பழக்க வழக்கங்கள் பெண்களிடமும் காணப்படுகிறது. இதனால் தவறான புரிதலுக்கும் தவறுகள் நேர்வதற்கும் நிறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அங்கே லேட் நைட் லைஃப் மிக இயல்பாகிக் கொண்டுவருகிறது” என்கிறார் அவர்.

அப்படியானால் பழமைவாதச் சிந்தனைகள்தான் பெண்களுக்குப் பாதுகாப்பானவை என்று எடுத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது. “இல்லை. அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. எங்கே பணம் அதிகமாகப் புழங்குகிறதோ, அங்கு வாழ்க்கை முறையில் மாற்றங்கள் உண்டாகின்றன, அந்த மாற்றங்கள் தவறுகளுக்கு நிறைய வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. மற்ற மெட்ரோ நகரங்களைப் போல் சென்னையும் மாறிய பிறகுதான் அவற்றோடு சென்னையை ஒப்பிட முடியும். இங்கு பணப் புழக்கமும் பெண்கள் ஆண்களுக்குச் சமமாகப் பொது இடங்களில் புழங்க நேர்வதும் மற்ற மெட்ரோ நகரங்களுக்குச் சமமாக உயர்ந்த பின்  எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்துதான் சென்னை உணமையிலேயே பாதுகாப்பானது தானா என்பதை அலச முடியும்” என்கிறார் நிர்ம்லா.

நிகழும் சம்பவங்களின் எண்ணிக்கையை வைத்துப் பாதுகாப்பை வரையறுக்க முடியாது என்பதைப் பெண்ணியவாதியும் கவிஞரும் பத்திரிகையாளருமான கவிதா முரளீதரன் வலியுறுத்துகிறார். “டெல்லி, மும்பை அளவுக்குக் கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடப்பதில்லை என்று வைத்துக் கொண்டாலும் பாலியல வன்முறைகள் சென்னையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன” என்கிறார். “அவற்றில் பெரும்பாலான நிகழ்வுகள் எங்கும் பதிவாவதில்லை. பாதிக்கப்படும் பெண்கள் பலர் நடவடிக்கை எடுக்கத் துணிவதில்லை. சில துணிச்சலான பெண்கள் காவல்துறையை அணுகினாலும் நிவாரணம் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. எஃப்.ஐ.ஆர். போட்டால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் மிகக் கொடுமையான நிகழ்வுகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தச் சூழல் நீடிக்கும்வரை சென்னை, பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம்தானா என்ற கேள்விக்குச் சரியான விடையளிக்க முடியாது” என்கிறார் கவிதா.

பாதுகாப்பு பற்றிப் பெரிய புகார்களோ குலை நடுங்கவைக்கும் அச்சமோ சென்னையில் உள்ள பெண்களிடத்தில் இல்லை (பார்க்க: அனுபவங்கள், பார்வைகள்). ஆனால் சென்னை பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று சொல்பவர்கள் குரல்களில் எச்சரிக்கை உணர்வு தொனிக்கிறது.   சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துவதில் தெரியும் அழுத்தம் கவனிக்கத்தக்கது. அது சென்னையின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கையை அசைக்கக்கூடியது.

தில்லி, மும்பை போன்ற நகரங்களில் நடக்கும் சம்பவங்கள் இங்கே நடக்காமல் இருக்கலாம். அல்லது அவை எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். இங்குள்ள பொதுவான சூழலும் போக்கும்  ஆண்களின் வக்கிரங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் இசைவாக இல்லாதது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

பல்வேறு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கையில் ஒப்பீட்டளவில் சென்னை பாதுகாப்பானதுதான் என்று சொல்ல லாம். ஆனால் ‘ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது’ என்பது பாதுகாப்புக்குப் பெரிய உத்தரவாதம் எதையும் அளித்து விடவில்லை. “பெண்களில் 60 % பேர் சென்னை பாதுகாப்பானது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மீதி 40 % பேரைப் பற்றிய பெரிய கேள்வி  எழுகிறது. அந்த 40 %இல் நீங்களும் நானும் இருக்கலாமல்லவா?”” என்று பணிக்குச் செல்லும் சென்னைப் பெண் ஸ்ரீ கேட்பதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது.

“பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை அடிப்படை மாற்றங்களால்தான் கட்டமைக்க முடியும். ஆண்கள் பெண்களைப் பார்க்கும் விதத்தில் மாற்றம் வேண்டும். தந்தைவழிச் சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்த பெண்கள் இப்போதுதான் வெளியே வரத் தொடங்கியிருக்கி றார்கள். இதைச் சரியான முறையில் எதிர்கொள்ள வும் கையாளவும் வேண்டும். பொது இடங்களில் பெண்களுக்கான வெளியை வழங்க ஆண்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதைக் கல்வி முறையிலிருந்து தொடங்க வேண்டும்” என்று கவிதா சொல்வதில்தான் தீர்வு அடங்கியிருக்கிறது. பெண்கள் பற்றிய ஆண்களின் பார்வைகளைச் சிறு வயதிலிருந்தே  வீட்டிலும் பள்ளியிலும் சீரமைக்கும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும்.
...மேலும்

Feb 27, 2013

மனித உரிமை கண்காணிப்பகத்தின் அதிர்ச்சிகர அறிக்கை

இலங்கை: தமிழ் கைதிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாதல்
சிறையில், அரசியல் நோக்குடனான பாலியல் துன்புறுத்தல்கள் போர்க் காலம் முதல் தொடர்கின்றன.
SJ (a pseudonym) is a survivor of sexual abuse by Sri Lankan security forces while in detention.

“இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இவை சாதாரண யுத்தகால அட்டூழியங்கள் அல்ல, தற்பொழுதும் அந்த அட்டூழியச் செயல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருவதோடு, எல்ரீரீஈ தரப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒவ்வொரு தமிழ் ஆணையும் பெண்ணையும் இது கடும் ஆபத்தில் தள்ளிவிடுவதாக அமைகின்றது”.
Brad Adams, Asia director

[இலண்டன் (London)] – தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) என சந்தேகிக்கப்பட்ட உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கு இலங்கையின் ஆயுதப் படைகள் பாலியல் வல்லுறவையும் ஏனைய பாலியல் வன்முறைகளையும் பிரயோகித்து வந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch)இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த ஆயுதப் போராட்டத்தின் போது சிறையில் பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள்  நிகழ்ந்து வந்தன எனவும், அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இராணுவத்தினாலும் போலீஸ் படையினாலும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கண்டறிந்தது.
YS (a pseudonym) is a survivor of sexual abuse by Sri Lankan security forces while in detention.
“‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்’: இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியியல் வன்முறை’” என்ற 144 பக்க அறிக்கையானது இலங்கை முழுவதிலுமுள்ள உத்தியோகபூர்வமான மற்றும் இரகசியமான தடுப்பு முகாம்களில் 2006-2012 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிரான 75 பேர்களின் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விரிவான விபரங்களை தருகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஆவணப்படுத்திய விடயங்களில், பல நாட்களாக அடிக்கடி பல நபர்களினாலும், இராணுவத்தினாலும், போலீஸ் படையினாலும், மற்றும் அடிக்கடி பங்குகொள்ளுகின்ற அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களினாலும் தமிழ் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டிருப்பதாகப் பதிவாகியிருக்கின்றது.

“இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்” என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ப்ராட் அடம்ஸ் (Brad Adams) கூறினார். “இவை சாதாரண யுத்தகால அட்டூழியங்கள் அல்ல, தற்பொழுதும் அந்த அட்டூழியச் செயல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருவதோடு, எல்ரீரீஈ தரப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒவ்வொரு தமிழ் ஆணையும் பெண்ணையும் இது கடும் ஆபத்தில் தள்ளிவிடுவதாக அமைகின்றது”.பாலியல் வல்லுறவுக்கு ஆளான அனேகமானோர் இலங்கைக்கு வெளியால் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் தொடர்புகொண்டு, தமக்குச் செய்யப்பட்ட அட்டூழியங்களை மருத்துவ மற்றும் சட்டமுறை அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தினார்கள். இவர்கள் அனைவரும் பாலியியல் வன்முறைக்கு அப்பால் துன்புறுத்தப்பட்டும்  கொடுமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுக்கு இலங்கையில் வெளிப்படையான ஒரு ஆய்வை நடாத்தவோ அல்லது இன்னும் சிறையிலிருக்கின்ற மக்களை நேர்காணவோ முடியாமல் போனதால், இத்தகைய சம்பவங்கள் அநேகமாக அரசியல் நிகழ்வுகளாக, சிறை நிகழும் பாலியல் வல்லுறவுகளின்  மிகச்சிறிய ஒரு பகுதியை மாத்திரமே பிரதிபலிப்பதாக அமைகின்றன.

ஒரு தனியாள்  இனம் தெரியாத நபர்களினால் வீட்டிலிருந்து  கடத்தப்பட்டு, ஒரு தடுப்பு முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, எல்ரீரீஈ செயற்பாடுகள் பற்றி தகாத முறையில் விசாரிக்கப்படுதல் என்கின்ற விதத்திலேயே அதிகமான சம்பவங்கள் தொடர்ந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. வெளிநாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த 23 வயதுடைய ஒரு நபர், தான் எந்த விதமான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாத நிலையில் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தில் தான் கையொப்பமிடும் வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். 32 வயதுடைய ஒரு பெண், சிவில் உடையில் வந்த இரண்டு ஆண்களினால் தான் கைதுசெய்யப்பட்டு, தனது ஆடைகள் களையப்பட்ட நிலையில் நிர்வானமாக தன்னை புகைப்படம் எடுத்ததாகக் கூறினார். “அனைத்தையும் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு அந்த நபர்கள் என்னிடம் கூறினார்கள்” என அந்தப் பெண் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் முறையிட்டார். “அவர்கள் என்னைக் கொலைசெய்து விடுவார்கள் என்று நினைத்ததால் நான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க மறுத்தேன். நான் தொடர்ச்சியாக அடிக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டேன். இரண்டாவது நாள் ஒரு நபர் எனது அறைக்கு வந்து என்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். ஆகக்குறைந்தது மூன்று நாட்களாக நான் பலராலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். எத்தனை தடவைகள் என்பது எனக்கு நினைவில்லை”.
JS (a pseudonym) was a victim of torture and sexual abuse by Sri Lankan security forces after being deported
பாலியியல் துஷ்பிரயோகமானது, சந்தேகிக்கப்பட்ட எல்ரீரீஈ உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கும் கொடுமைப்படுத்துவதற்கும் பரந்தளவில் பயன்படும் முக்கிய ஒரு அங்கமாக விளங்கியுள்ளது என்பது எதைச் சுட்டிக்காட்டுகின்றது எனில், ஆயுதப் போராட்டத்தின் போதும் அதே நேரம் எப்பொழுதும் ஆயுதப் படைகளினால் கைதுசெய்யப்படும் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கும்  ஏனைய பாலியியல் வன்முறைக்கும் பலியாகுகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. எல்ரீரீஈ செயற்பாடுகளில் ஈடுபாடு,மற்றும்  துணைவர்களும் உறவினர்களும் அடங்கலாக ஏனையவர்கள் தொடர்பான தகவல்கள் பற்றியும்  ‘ஒப்புதல் வாக்குமூலங்களை’ பெறுவதற்கும் அதே நேரம் எல்ரீரீஈ தரப்புடன் தொடர்புவைப்பதை அதைரியப்படுத்தும் வகையில் பரந்தளவில் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தைத் திணிப்பதற்கும் என்றே இந்தச் சித்திரவதைகள்  நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகின்றது.

தாம் அடிக்கப்பட்டதாகவும்,தனது கைகளைக் கட்டித் தொங்கவிடப்பட்டதாகவும், பகுதியளவில் மூச்சுத்திணற வைக்கப்பட்டதாகவும், எரியும் சிகரெட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் விவரித்தனர். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் கதைத்தவர்களில் எவருமே தடுத்துவைக்கப்பட்ட நேரத்தில் சட்ட ஆலோசனையையோ, குடும்ப அங்கத்தவர்களையோ அல்லது மருத்துவர்களையோ நாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. துஷ்பிரயோகம் முற்றுப்பெறும் என எண்ணி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட்டாலும் பாலியல் வல்லுறவு அடங்கலாக சித்திரவதைகள் அடிக்கடி தொடர்ந்ததாகவே அநேகமானோர் கூறினர். நேர்காணப்பட்ட தனி நபர்கள் எவரும் முறையாக விடுவிக்கப்படவில்லை, ஆனால் மாறாக உறவினர் ஒருவர் உயர் அதிகாரிகளுக்கு இலஞ்சத்தை வழங்கிய பின்னர் ‘தப்பியோடுவதற்கு’ அனுமதிக்கப்பட்டனர்.

“இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்னால் மடக்கிப்பிடித்து [அதே வேளையில்] ஒரு மூன்றாவது அதிகாரி எனது ஆண்குறியைப் பிடித்து அதனுள் ஒரு உலோகக் கம்பியைத் திணித்தார்” என 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்கப் படைகளிடம் சரணடைந்த ஒருவர் கூறினார். “அவர்கள் எனது ஆண்குறியினுள் சிறிய உலோகக் குண்டுமணிகளைத் திணித்தனர். நாட்டை விட்டுத் தப்பி வந்த பின்னர் இந்தக் குண்டுமணிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருந்தது”. ஒரு மருத்துவ அறிக்கை இவரின் வாக்குமூலத்தை உறுதிசெய்கின்றது. 
JS (a pseudonym) was a victim of torture and sexual abuse by Sri Lankan security forces after being deported
அவர்கள் செய்த குற்றத்தை தாம் வெளிப்படுத்தினால் பொதுவாக குற்றம் புரிந்தவர்களிடமிருந்து பதிலடி கிடைக்கும் என்றும் சமூகத்தில் இகழப்படுவோம் என்னும் பய உணர்வுமே தம்மீது  நிகழ்த்தப்பட்ட துஷ்பிரயோகம் பற்றி தங்களை அமைதியாகவிருக்கச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கதைத்த பலவந்த பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஆண்களும் பெண்களும் கூறினார்கள். பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றி பயனுள்ள விதத்தில் அறிக்கையிடுவதையும் விசாரணை செய்வதையும் தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட நிறுவனசார் தடைகளும் பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றி அறிக்கையிடும் தயக்கத்திற்கு மூலகாரணமாக அமைந்தன.

“பாலியல் வல்லுறவு பலியானவர்களுக்கான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகளையும் அரசாங்கம் முடக்கியது” என அடம்ஸ் கூறினார். “வடக்கில் அதிகளவில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளாகித் தப்பிப்பிழைத்தவர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வழங்குகின்ற சேவைகளையும் இராணுவம் சூட்சுமமான முறையில் தடைசெய்துள்ளது”.

போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் அல்லது போர் முடிவுக்குப் பின்னர் சிறையில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள்  தொடர்பில் ஆயுதப் படைகளில் எவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படவில்லை என்பதுடன் குற்றம் செய்தவர்கள் குற்றத்திற்கு தண்டனையின்றி சுதந்திரமாகவிருக்கின்றனர் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.

தாங்கள் அரச பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் என்பதை மறைப்பதற்கு இராணுவமும் போலீஸும் மிகக் குறைந்தளவு முயற்சியையே மேற்கொண்டனர் என நேர்காணப்பட்டவர்கள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்கள். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (C.I.D.)பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (T.I.D.) போன்ற விசேட பிரிவுகள் உள்ளிட்ட இராணுவத்தினர், இராணுவத் துப்பறியும் பிரிவினர் மற்றும் போலீஸ் முதலிய தரப்புகள் இவர்களில் அடங்குகின்றனர். இந்த அரச திணைக்களங்களின் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்தும் தகாத முறையில் விசாரணைகளை நடாத்தினர் என பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அறிக்கையிட்டனர். இவர்கள் துஷ்பிரயோகம் நிகழ்ந்த குறித்த முகாம்களையும் தடுப்பு ஸ்தலங்களையும் அடையாளம் காட்டினார்கள்.

பாலியல் வன்முறையைப் பிரயோகித்தல் என்பது ஒரு சாதாரண கீழ்மட்டத்து நிகழ்வாகவோ அல்லது அயோக்கியத்தனமான பாதுகாப்புப் படையினர் சிலரின் செயல்களாகவோ காணப்படவில்லை, ஆனால் மாறாக உயர் மட்ட அதிகாரிகளினால் அறிந்த அல்லது அறிந்துகொள்ளப்பட்டிருக்க வேண்டியதான  பரந்தளவில் நிகழ்ந்த வழக்கமான ஒரு செயலாக காணப்பட்டுள்ளதையே இந்தச் சம்பவங்கள் சுட்டிக்காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுக்கு அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள் இலங்கையின் வட பிராந்திய யுத்தகளப் பகுதிகளில் மாத்திரமன்றி தலைநகரமான கொழும்பிலுள்ள இராணுவ முகாம்களிலும், போலீஸ் நிலையங்களிலும் அதே நேரம் யுத்த பிரதேசங்களுக்கு தூரத்திலுள்ள தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் ஏனைய இடங்களிலும் நிகழ்ந்தன. கொழும்பிலுள்ள C.I.D  தலைமை அலுவலகத்தின் கெடுதிக்குப் பெயர்போன நான்காவது மாடியும் T.I.Dஆறாவது மாடியும் இவற்றில் அடங்கியிருந்தன.

ஆயுத மோதல்களின் ஒரு பாகமாகப் புரியப்பட்ட பாலியல் வல்லுறவு செயல்கள் மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகள் என்பன போர் குற்றங்களாகும். அத்தகைய வன்முறைகளைத் தடுப்பது மாத்திரமன்றி, துஷ்பிரயோகம் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்களை விசாரித்து அந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பதும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு கடப்பாடாகும். அத்தகைய துஷ்பிரயோகங்களை அறிந்திருந்த அல்லது அறிந்திருக்க வேண்டிய  அதிகாரிகள்கூட நடவடிக்கையை எடுக்கத் தவறியிருந்தனர். இதனால், கட்டளையிடும் பொறுப்பு விடயம் என்ற ரீதியில் அவர்களும் குற்றம் புரிந்தவர்கள் ஆகுகின்றார்கள்.

யுத்தகாலத் துஷ்பிரயோகங்களுக்கான நியாயத்தையும் பொறுப்புக்கூறும் தன்மையையும் முன்வைப்பதற்கான 2012 மார்ச் மாதத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட தனது பொறுப்புக்களை இலங்கை அரசாங்கம் போதியளவில் பின்பற்றி நிறைவேற்றியதா என்பது பற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை பெப்ரவரி மாதத்தில் விசாரணை செய்யும். ஒரு சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்துமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரை இந்த சபை பணிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.

“பாதுகாப்புப் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் ‘பொய்’ அல்லது ‘எல்ரீரீஈ சார்பான பிரச்சாரம்’ என எண்ணி அரசாங்கம் தனது படையினரை விடுவித்துள்ளமையே அரசாங்கத்தின் பதிலாகவிருக்கின்றது” என அடம்ஸ் கூறினார். “இந்தக் கொடூரமான குற்றங்களைப் பற்றி அரசாங்கத் தரப்பில் எவர்கள் அறிந்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்தத் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறியிருக்கின்றமையானது ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்பதற்கு மேலும் சான்றாக அமைகின்றது”.

“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்”: இல் இருந்து பெறப்பட்டவை

தலைப்பெழுத்துக்கள் அனைத்தும் புனைப்பெயர்களாகவும் நபரின் உண்மையான பெயருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லாததாகவும் இடப்பட்டுள்ளன.

ஜே எச் (JH) என்பவரின் சம்பவம்

ஜே எச் (JH) என்பவர் 23 வயதுடைய ஒரு தமிழர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நேரம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடும்பம் சார்ந்த காரணங்களுக்காக கொழும்புக்குத் திரும்பினார். ஒரு மாதம் கழிந்த பின்னர், வேலை விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு வெள்ளை வேனில் வந்த பலர் அதிலிருந்து குதித்தார்கள். ஒரு விசாரணைக்கு தான் தேவைப்படுவதாகக் கூறி, அவர்கள் தனது கண்களைக் கட்டி, ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் பயணித்து, தெரியாத ஒரு இடத்திற்கு தன்னை எடுத்துச்சென்றதாக அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட [போது] நான் அங்கு ஏனைய நான்கு நபர்கள் இருந்த ஒரு அறையைக் கண்டேன். நான் ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கும் தொடர்புகள் பற்றியும் அண்மையில் வெளிநாட்டிற்குசென்ற காரணம் பற்றியும் விசாரிக்கப்பட்டேன். அவர்கள் எனது ஆடைகளை உரிந்து என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் மின்சாரக் கம்பிகளினால் அடிக்கப்பட்டு, எரியும் சிகரட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டு, பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு பொலித்தின் உறையைக் கொண்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டேன். பின்னர் அந்த இரவு, நான் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டேன். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன். முதலாவது இரவு, ஒருவர் தனியாக வந்து என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்தினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் இரவுகளில், இரண்டு பேர் எனது அறைக்கு வந்தார்கள். அவர்கள் என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்திவிட்டு அவர்களுடன் வாய்வழிப் பாலியல் உறவுக்கும் என்னை வற்புறுத்தினார்கள். இந்தப் பாலியல் வல்லுறவுகளின் பின்னர் எல்ரீரீஈ தரப்புடன் எனக்கு தொடர்புகளிருப்பதாக ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலத்தில் நான் கையொப்பமிட்டேன்.

ரீ ஜே (TJ ) என்பவரின் சம்பவம்

ரீ ஜே (TJ ) என்பவர் 19 வயதுடைய ஒருவர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் தனது கற்கைகளைப் பூர்த்திசெய்து விட்டு இலங்கைக்குத் திரும்பியவர். 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மாலை நேரத்தில், ரீ ஜே (TJ ) வவுனியாவில் (Vavuniya) ஒரு நண்பரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிய நேரத்தில் அவருக்கு அருகில் ஒரு வெள்ளை வேனை நிறுத்தி சிவில் உடைகளை அணிந்திருந்த ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு நபர்கள் அதிலிருந்து குதித்தார்கள். அவர்கள் ரீ ஜே (TJ ) ஐ பலவந்தமாக இழுத்து வேனினுள் தள்ளி, அவரின் கண்களைக் கட்டி, தெரியாத ஒரு இடத்திற்கு அவரை கொண்டுசென்றார்கள் என அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட போது நான் ஒரு அறையில் இருப்பதைக் கண்டேன். அங்கு ஐந்து பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் இராணுவ சீருடையில் காணப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் எல்ரீரீஈ தரப்புடன் எனக்குள்ள அலுவல் பற்றி அவர்கள் என்னிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். வெளிநாட்டில் எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கின்ற தொடர்புகள் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். நான் பதிலளிக்கவில்லை. அவர்கள் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். முதலில் அறையப்பட்டும் குத்தப்பட்டும் நான் தாக்கப்பட்டேன். அப்போது அவர்கள் என்னைக் கடுமையாகத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். எனக்கு தடிகளால் அடிக்கப்பட்டு, எரியும் சிக்கரெட்டுக்களால் சூடுவைக்கப்பட்டதுடன் எனது தலை ஒரு நீர் பீப்பாயினுள் அமிழ்த்தப்பட்டது. கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்தில் உடைகள் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டேன். 

அடிகளும் துன்புறுத்தல்களும் அடுத்த நாளும் தொடர்ந்தன. காலையில் எனக்கு கொஞ்சம் தண்ணீர் மாத்திரம் கொடுக்கப்பட்டது. அடுத்த இரவு, எனக்கு உடைகள் கொடுக்கப்பட்டு ஒரு சிறிய இருள் நிறைந்த அறையில் அடைக்கப்பட்டேன். அந்த இரவில் எனது அறைக்குள் ஒரு நபர் நுழைந்தார். அறை இருளாகவிருந்ததால், அவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் எனது தலையைப் பிடித்து சுவரில் பலமாக அடித்து, எனது முகத்தை சுவருக்கு எதிரே தள்ளி என்னைப் பலவந்தமாகக் பாலியல்  வல்லுறவுக்கு உள்ளாக்கி  சித்திரவதைப்படுத்தினார்.

ஜீ டி (GD) என்பவரின் சம்பவம்

ஜீ டி (GD) என்பவர் 31 வயதுடைய ஒரு தமிழ் பெண். இவர் கொழும்பின் ஒரு சுற்றுப்புறத்திலுள்ள தனது வீட்டிலிருந்த போது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிவில் உடைகளில் நான்கு பேர் வந்திறங்கினார்கள். அவர்கள் C.I.D.அதிகாரிகள் என அவர்களை அறிமுகப்படுத்தி தனது வீட்டிலிருந்த குடும்ப அங்கத்தவர்கள் அனைவரினதும் அடையாள அட்டைகளை சோதனையிட வேண்டும் என எங்களிடம் கேட்டார்கள் என ஜீ டி (GD) என்பவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார். வெளிநாட்டிலிருந்த தனது கணவனின் அடையாள அட்டையைப் பறித்துவிட்டு அவர்கள் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாக அவர் கூறினார்:

கொழும்பிலுள்ள C.I.D. அலுவலகத்தின் நான்காவது மாடிக்கு நான் கொண்டுசெல்லப்பட்டு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். எந்தவிதமான உணவோ அல்லது தண்ணீரோ எனக்குக் கொடுக்கப்படவில்லை. அடுத்த நாள், சீருடை அணிந்து ஆயுதம் தாங்கிய ஒரு அதிகாரி அடங்கலாக அதிகாரிகள் என்னைப் புகைப்படம் எடுத்துவிட்டு, எனது விரல் அடையாளங்களையும் பெற்றுக்கொண்டு, ஒரு வெறும் தாளில் கையொப்பமிடுமாறு செய்தார்கள். எனது கணவரின் விபரங்கள் எல்லாம் அவர்களிடம் இருப்பதாகக் கூறி அவர் இருக்கின்ற இடத்தைச் சொல்லுமாறு என்னிடம் கேட்டவண்ணமிருந்தார்கள். எனது கணவன் வெளிநாட்டில் இருப்பதாக நான் அவர்களிடம் கூறிய போது, அவர் எல்ரீரீஈ தரப்பின் ஆதரவாளர் எனத் தொடர்ந்தும் அவரைக் குற்றஞ்சாட்டினார்கள். பல பொருள்களைக் கொண்டு நான் அடிக்கப்பட்டேன். விசாரிக்கப்பட்ட நேரத்தில் எனக்கு ஒரு எரியும் சிக்கரெட்டினால் சூடுவைக்கப்பட்டது. திரும்பத்திரும்ப நான் கன்னத்தில் அறையப்பட்டு, மணல் நிரப்பப்பட்ட ஒரு குழாயினால் அடிக்கப்பட்டேன். அடித்த போதெல்லாம் அவர்கள் எனது கணவரின் விபரங்களைக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார்கள். ஒரு இரவு நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். சிவில் உடைகளில் எனது அறைக்கு இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இருவரும் எனது உடைகளைக் கிழித்து என்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். அவர்கள் சிங்களத்தில் கதைத்தார்கள், அதனால் எனக்கு எதுவும் புரியவில்லை. இருளாக இருந்ததால் அவர்களின் முகங்களை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

டி எஸ் (DS) என்பவரின் சம்பவம்

டி எஸ் (DS) என்பவரின் தந்தைக்கு யாழ்ப்பாணத்தில் போட்டோ பிரதியெடுக்கும் (Photocopy) ஒரு கடை சொந்தமாகவிருந்தது. இவர் பிரச்சாரத் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு அவற்றை விநியோகிப்பதன் மூலம் எல்ரீரீஈ தரப்புக்கு உதவினார். 2005 ஆம் ஆண்டில், DS என்பவர் 13 வயதாகவிருந்த போது எல்ரீரீஈ தரப்பினால் பலவந்தமாகக் கொண்டுசெல்லப்பட்டு 10 நாட்களாக அவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. அவர் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய பின்னர், எல்ரீரீஈ தரப்பின் கலாச்சார விழாக்களில் பங்குபற்றியும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் எல்ரீரீஈ தரப்பினருக்காக உழைத்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இவர் 17 வயதாகவிருந்த போது, பாடசாலை விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸும் இராணுவ அதிகாரிகளும் இணைந்த ஒரு குழுவினர் இவரைக் கைதுசெய்தனர். இவரின் கண்கள் கட்டப்பட்டு தெரியாத ஒரு தடுப்பு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார் என DS என்பவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கின்ற செயற்பாடுகள் அனைத்தையும் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். அந்தத் தரப்புக்கான எனது உழைப்புப் பற்றி எல்லா விடயங்களையும் அவர்களிடம் கூறினால், தன்னை வெளியில்செல்ல அனுமதிப்பதாக அவர்கள் கூறினார்கள். நான் எதையும் ஏற்க மறுத்தேன். அப்போது அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் சப்பாத்துக்களினால் மிதிக்கப்பட்டுக் குத்தப்பட்டேன். அப்போது எனது உடைகளை முழுமையாகக் கழற்றுமாறு அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். என்னைத் தலைகீழாகத் தொங்கவிட்டு எரியும் சிக்கரெட்டுக்களினால் எனக்கு சூடுவைக்கப்பட்டது. நான் மணல் நிரப்பப்பட்ட குழாய்களையும் முள்ளுக்கம்பிகளைக் கொண்டு தாக்கப்பட்டேன். அதிகாரிகள் எனது பாதங்களை தனியாக வைத்து மிதித்தும் பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு ப்ளாஸ்டிக் பையை எனது தலையில் பலமாக இட்டு என்னை மூச்சுத்திணறச் செய்யவும் முனைந்தனர்.

ஒரு அதிகாரி எனது முன்னிலையில் பாலியல் செயல்களைச் செய்தார். அப்போது என்னை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். அங்கு எந்தவித மலசலகூடமும் இருக்கவில்லை. ஒரு ப்ளாஸ்டிக் பையை நான் பயன்படுத்த வேண்டியிருந்தது. என்னை விசாரித்த அதிகாரிகள் என்னை நித்திரைசெய்ய விடவில்லை. முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு அவர்கள் எனக்கு எந்தவிதமான உணவையும் தரவில்லை. அவர்கள் எனது கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு என்னைப் புகைப்படமெடுத்தார்கள். நான் இறுதியாக சிங்கள மொழியிலிருந்த ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமிட்டு அவர்கள் கூறிய எல்லவாற்றையும் ஒப்புக்கொண்டேன்.

மனித உரிமைகள் கண்காணிப்பக அறிக்கையிலிருந்து


முழு அறிக்கையை இந்த இணைப்பில் பார்வையிடுங்கள்
...மேலும்

Feb 26, 2013

ஒரு தலைக் காதலால் சாதியும் சேர்ந்த கொடுரம்,, வித்யாவின் கொலைநமது குச்சி கொளுத்தை வைத்தையர் தொடங்கி வைத்த நேரமோ என்னமோ தலித் பெண்களும், தலித் இளைஞர்கள் சிலரும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்க கூடிய செய்தி. அதுதன் வித்யாவின் கொலையிலும் நடந்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா பிளஸ் 2 படித்துவிட்டு ஒரு இணையத்தள மையத்தில் வேலை பார்த்துவந்தவர் என்பது அனைத்துச் செய்தித்தாள்களிலும் வந்துவிட்டது. அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள விடாமல் செய்து விடுவார்களோ என்ற ஆத்திரத்தில் ஆசிட் ஊற்றிவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை சொல்லி வந்தன. ஆனால் வித்யாவின் வீட்டிற்கு இன்று (24.02.2013) தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுடன் சென்றபோது பல அதிர்ச்சித் தரத்தக்க செய்திகள் தெரியவந்தன.

1. வித்யாவிற்கு 22 வயது. ஆசிட் ஊற்றிய விஜய பாஸ்கர் என்ற அந்த கொடுரனின் வயது 37. இதனால் வித்யா பாஸ்கரின் காதலை ஏற்கவில்லை. தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். ஆனால் அவன் அந்தப் பெண்ணை விட்டாபாடக இல்லை.

2. வித்யா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஸ்கர் வன்னியச் சாதியை சேர்ந்தவன்.

3. இதனால் ஒருதலைக் காதலாகவே அவன் அலைந்திருகிறான். வயதும் சாதியும் ஒத்துப்போகாத நிலையில் மிகுந்த ஏழ்மையில் வாடிய வித்யா என்ன செய்ய முடியும்.

4. வித்யாவின் அப்பா 2000ஆம் ஆண்டு இறந்தபோது வித்யாவிற்கு பத்து வயது மட்டுமே. பிறகு அவரது அம்மா வீட்டு வேலை செய்து தமது மூத்த மகனையும் இளைய பெண்ணான வித்யாவையையும் காப்பாற்றி வந்துள்ளார்.

5. குடும்பத்தில் கொஞசம் அதிகமாக சம்பாதிக்கும் பெண் வித்யா மட்டுமே. மாத சம்பளம் ரூ/4000.

6. இவ்வளவு வறுமையில் வாடும் குடுமபத்தை எளிதில் வளைத்துவிடலாம் என்று பாஸ்கர் செய்த சூழ்ச்சி அந்தப் பெண இணங்க விரும்பவில்லை.

7. எனவே சம்வத்தன்று விதயா வேலை செய்யும் இணைய மையத்திற்கு வந்த பாஸ்கர் திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்த அவர் மறுக்கிறார். உடனே கையில் மறைத்து வைத்த ஆஸிட்டை எடுத்து வித்யாவின் முகத்தை குறிவைத்து ஊற்ற வித்யா திரும்பிக் கொள்ள முதுகு முழுவதும் ஆசிட்டால் நனைந்து துணி கருகி கீழே விகுகிறது. பின் முன்பக்கம் ஊற்றுகிறான், அதற்குள் ஆசிட் தீர்ந்துவிட தலையை பிடித்து கீழே சிந்தியிருந்த ஆசிட்டில் வித்யாவின் முகத்தை அழுத்தி தரையில் தேய்க்க முகம் முழுதும் வெந்துக் கருகிப் போகிறது.

8. உடம்பு முழுதும் ஊற்றிய ஆசிட்டால் உடலின் மேலுள்ள சதைகள் உருகி கரைந்து உதிர்கின்றன, எலுப்புகள் வெளியேத் தெரிய நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன, காயங்கள் தீவிரமாகி இன்று காலை 4 மணிக்கு வித்யா மரணத்தைத் தழுவுகிறார்.

9. ஒரு தலைக் காதலில் வித்யாவைத் மிரட்டி திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்ற அவனின் நம்பிக்கை நடக்காததை தெரிந்துக் கொண்ட பாஸ்கர் முழு குடி போதையில் நடத்திய படுகொலை இது.

10. தலைவர் திருமா அவர்கள் மருத்துவ மனைக்கும் பின்பு வித்யாவின் வீட்டிற்கும் சென்று பார்க்கும்போது கிடைத்த உண்மைத் தகவல்கள் இவை, அது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியருடன் அவர் பேசியதும் அவர் உடமே கிளம்பி வந்து மலர் வளையம் வைத்தார். அப்போது வித்யாவின் உடலை வைத்துக் கொண்டே அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் முன்வைத்தக் கோரிக்கைகள். 

அ. வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும். குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

ஆ. வழக்கை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்து உரிய இழப்பீட்டினை உடனடியாகத் தரவேண்டும்.

இ. வித்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைத் தரவேண்டும்.

ஈ. ஈமச்சடங்கினைச் செய்வதற்கு உடனடி செலவை அரசு ஏற்க வேண்டும்.
உ. அதை சிறப்பு வழக்காக எடுத்து உரிய நிவாரணத்தை முதல்வர் வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன்வைத்தார். மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார். உடனடியாக ஈமச்சடங்கிற்கான தொகை வழங்கப்பட்டது. மற்றவை உடனே நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

பின்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றவுடன் மாவட்ட ஆட்சியர் கிளம்பிப் போனார். அதற்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர் பீம்ராவ் அவர்கள் மற்றும் கம்யூனிஸட் கட்சித் தோழர்கள். வித்யாவின் குடும்பத்தினர், உள்ளுர் தலைவர்கள் ஆகியோருடன் அமர்ந்த நடந்த ஏற்பாடுகளைக் குறித்து விளக்கினார். அடக்கம் முடிந்தது.

நமது கேள்விகள்..

  1. தில்லியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது மனசாட்சியோடு வந்து ‘வீதிக்கு வந்தவர்கள்..
  2. விநோதினி ஆசிட் வீச்சில் கொல்லப்பட்டபோது வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய தமிழ்நாட்டுப் போராளிகள்..
  3. வித்யா ஆசிட் வீச்சின் போதும்,, அவர் இறந்தபோதும் தமது மனசாட்சியை எங்கே கொண்டுபோய் அடகு வைத்தார்கள்.
  4. குச்சிக் கொளுத்தி வைத்தியர் ராமதாஸ் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். ஏனென்றால் வித்யாவை கொன்ற கொலைகாரன் வன்னியர் சமுகத்தைச் சேர்ந்தவன்.
  5. குச்சிக் கொளுத்தி வைத்தியரின் வார்த்தைகளை நம்பி கருத்துக்களை சொல்லிவரும் நியாயவான்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.
  6. தருமபுரிக்குப் பிறகு 15 பெண்களைக் கொலை செய்துள்ள வன்னியர்களுக்கு எதிராக அதாவது கொலை செய்த கொலைகார வன்னியர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை சமுக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நேர்மையாளர்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்.
  7. கொலைக்குத் தூண்டிவிட்ட ராமதாசுக்கு என்ன தண்டனையைப் பெற்றுத் தரப்போகிறீர்கள்.
  8. எத்தனை நாளுக்கு தலித் பெண்கள் கொலை செய்யப்படுவதையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை தமிழகம் வேடிக்கைப் பார்க்கப் போகிறது.
  9. தமிழகம் எங்கே போய் கொண்டிருகிறது..,.


முகநூல்வழியாக
/சன்னா/24.02.2013
...மேலும்

வித்யாவின் இறப்புஇரண்டாவது பெண் ஆசிட் தாக்குதலுக்கு உயிர் இழப்பு.இந்த பெண் அரசு மருத்துவ மனையில் உயிர் இறந்திருக்கிறாள்.உரிய சிகிச்சை சரியாக வழங்கப்பட்டதாக என்ற ஐயம் உள்ள நிலையில்,தமிழக அரசு இது வரை இந்த பெண்ணின் இறப்பு குறித்து எந்த அறிக்கையும் தந்ததாக தெரியவில்லை.சுகாதார துறை அமைச்சர் வந்து பேசினால்தான் பிணத்தை எடுப்போம் என்ற பெண்ணின் உறவினர்களின் கோரிக்கையை காது கொடுத்து கேட்க எந்த மக்கள் பிரதிநிதியும் வரவில்லை.முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்ப்பு. மக்களே போராட தயாராக இருந்த போது,அரசின் ஏஜென்டாக இருந்து,வாழ வேண்டிய ஒரு உயிர் இறந்து போனதற்கு,சில சலுகைகளை தூக்கி எரிந்து, நீதிக்கான போராட்டத்தை 'வெறும் பணத்துக்கான' போராட்டமாக மாற்ற,அவர்களின் போராட்ட குணத்தை நீர்த்து போக செய்ய முயற்சி செய்த 'ஜனநாயக மாதர் சங்கத்தை' சேர்ந்தவர்களின் போக்கு கடுமையாக கண்டிக்க வேண்டியதாக இருக்கிறது.சி.பி.எம் இன் பெண்கள் அமைப்பாக இருக்கும் இவர்களின் அரசியல் கேள்விக்குரியதாக இருக்கிறது.அவர்களின் நேற்றைய நடவடிக்கை,இவர்களின் அமைப்பு ஒரு பெண்களுக்கான அரசியல் இயக்கமாக தெரியவில்லை,அரசு எந்திரத்தின் ஒரு அங்கமாகவே தெரிந்தது.கடைசியில்,தமிழகத்தில் விநோதிநிக்கும், வித்யாவிற்கு ஆசிட் தாக்குதலுக்கு உரிய சரியான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்று அரசு விசாரணை செய்ய வேண்டும்,ஆசிட் விற்பனையை கட்டுபடுத்த வேண்டும்,இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது போன்ற கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு சென்றதாக தெரியவில்லை.'வித்யாவின் மரணத்திற்கு 5 லட்சம் பணமும்,அவருடைய அண்ணனுக்கு ஒரு அரசு வேலையும் என்ற வாக்குறுதியுடன் 'முடிந்திருக்கிறது.


சாதிய சமூக நிலை,பொருளாதாரம்,அரசு அதிகாரம் அற்ற நிலை,எல்லாவற்றிக்கும் மேலாக பெண்களுக்காக போராட சமூகத்தில் வலிமையான அமைப்பு ஏதும் இல்லாத நிலை இவை எல்லாமேதான் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர காரணமாக இருக்கிறது.இவற்றை எல்லாம் உணர்ந்து,பெண்களின் உரிமைகள்,மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகள் போன்றவற்றிற்கு போராட,போராட்ட குணத்தை மக்களிடம் வளர்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.நமக்கு வேண்டியது சலுகைகள் அல்ல,உரிமைகள்.உரிமைகள் போராட்டத்தின் மூலம் தான் பெற முடியும்,சமரசத்தின் மூலம் அல்ல.

முகநூல் வழியாக - பரிமளா பஞ்சு
...மேலும்

Feb 25, 2013

வித்யாவின் கொலையில் இருக்கும் நிஜ பின்னணி...!

வித்யா

ஒரு வழியாக ஆசிட் கலாச்சாரமும் நம் வாழ்வியல் சூழலோடு மிக ஆழமாக ஊடுருவ ஆரம்பித்திருக்கிறது. நேற்று வினோதினி..இன்று வித்யா...!

கடந்த சில நாட்களாக வித்யாவின் ஆசிட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெவ்வேறு தகவல்கள் வந்து கொண்டிருந்து.இருவரும் தீவிரமாக காதலித்ததாகவும், திருமணம் செய்ய வித்யாவின் தாய் மறுத்ததாகவும் அந்த ஆத்திரத்தில் ஆசிட் ஊற்றிவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால் வித்யாவின் வீட்டிற்கு இன்று (24.02.2013) தொல்.திருமாவளவன் அவர்கள் சென்றபோது பல அதிர்ச்சித் தரத்தக்க தகவல்கள் வித்யாவின் பெற்றோர்,உறவினர்களின் மூலம்  வெளிவந்திருக்கிறது.இதற்கு பின்புலமாக ஒரு தலித் பெண் மீது ஏவப்பட்ட வன்முறைத் தாக்குதல் என்றே தோன்றுகிது. 

முகநூளில் வெளிவந்த அந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.    

 வித்யாவிற்கு 22 வயது. ஆசிட் ஊற்றிய விஜய பாஸ்கர் என்ற அந்த கொடுரனின் வயது 37. இதனால் வித்யா பாஸ்கரின் காதலை ஏற்கவில்லை. தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். ஆனால் அவன் அந்தப் பெண்ணை விட்டபாடக இல்லை.

வித்யா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பாஸ்கர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவன்.

இதனால் ஒருதலைக் காதலாகவே அவன் அலைந்திருக்கிறான். வயதும் சாதியும் ஒத்துப்போகாத நிலையில் மிகுந்த ஏழ்மையில் வாடிய வித்யா என்ன செய்ய முடியும்...?

வித்யாவின் அப்பா 2000ஆம் ஆண்டு இறந்தபோது வித்யாவிற்கு பத்து வயது மட்டுமே. பிறகு அவரது அம்மா வீட்டு வேலை செய்து தமது மூத்த மகனையும், இளைய பெண்ணான வித்யாவையையும் காப்பாற்றி வந்துள்ளார்.

குடும்பத்தில் கொஞசம் அதிகமாக சம்பாதிக்கும் பெண் வித்யா மட்டுமே. மாத சம்பளம் ரூ-4000.

இவ்வளவு வறுமையில் வாடும் குடும்பத்தை எளிதில் வளைத்துவிடலாம் என்று பாஸ்கர் செய்த சூழ்ச்சி அந்தப் பெண் இணங்க விரும்பவில்லை.

எனவே சம்வத்தன்று வித்யா வேலை செய்யும் இணைய மையத்திற்கு வந்த பாஸ்கர் திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்த அவர் மறுக்கிறார். உடனே கையில் மறைத்து வைத்த ஆஸிட்டை எடுத்து வித்யாவின் முகத்தை குறிவைத்து ஊற்ற வித்யா திரும்பிக் கொள்ள முதுகு முழுவதும் ஆசிட்டால் நனைந்து துணி கருகி கீழே விழுகிறது. பின் முன்பக்கம் ஊற்றுகிறான், அதற்குள் ஆசிட் தீர்ந்துவிட தலையை பிடித்து கீழே சிந்தியிருந்த ஆசிட்டில் வித்யாவின் முகத்தை அழுத்தி தரையில் தேய்க்க முகம் முழுதும் வெந்துக் கருகிப் போகிறது.

அடுத்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை.உடம்பு முழுதும் ஊற்றிய ஆசிட்டால் உடலின் மேலுள்ள சதைகள் உருகி கரைந்து உதிர்கின்றன, எலுப்புகள் வெளியேத் தெரிய நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன, காயங்கள் தீவிரமாகி இன்று காலை 4 மணிக்கு வித்யா மரணத்தைத் தழுவுகிறார்.

ஒரு தலைக் காதலில் வித்யாவைத் மிரட்டி திருமணம் செய்துக் கொள்ள முடியும் என்ற அவனின் நம்பிக்கை பொய்த்துவிடுமோ என தெரிந்துக் கொண்ட பாஸ்கர் முழு குடி போதையில் நடத்திய கொடூரமான படுகொலை இது.

தொல்.திருமாவளவன் அவர்கள் மருத்துவமனைக்கும் பின்பு வித்யாவின் வீட்டிற்கும் சென்று பார்க்கும் போது கிடைத்த உண்மைத் தகவல்கள் இவை.

மேலும் மாவட்ட ஆட்சியருடன் அவர் பேசியதும் அவர் உடனே கிளம்பி வந்து மலர் வளையம் வைத்தார். அப்போது வித்யாவின் உடலை வைத்துக் கொண்டே அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் முன்வைத்தக் கோரிக்கைகள்.

1. வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும். குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

2. வழக்கை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்து உரிய இழப்பீட்டினை உடனடியாகத் தரவேண்டும்.

3. வித்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும்.

4. ஈமச்சடங்கினைச் செய்வதற்கு உடனடி செலவை அரசு ஏற்க வேண்டும்.

5. அதை சிறப்பு வழக்காக எடுத்து உரிய நிவாரணத்தை முதல்வர் வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன்வைத்தார். மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார். உடனடியாக ஈமச்சடங்கிற்கான தொகை வழங்கப்பட்டது. மற்றவை உடனே நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.

மனசாட்சியுடன் இங்கே எழுப்பப்படும் கேள்விகள்.....

1. டில்லியில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது மனசாட்சியோடு வந்து வீதிக்கு வந்து போராடிய இளைய சமுதாயம் ,விநோதினி ஆசிட் வீச்சில் கொல்லப்பட்டபோது வீதிக்கு வந்து போராட்டம் நடத்திய தமிழ்நாட்டுப் போராளிகள்,வித்யா ஆசிட் வீச்சின் போதும் அவர் இறந்தபோதும் தமது மனசாட்சியை எங்கே கொண்டுபோய் அடகு வைத்தார்கள்.

2.தலித் இளைஞர்கள்தான் ஜீன்ஸ் போட்டு எங்கள் இனப் பெண்களை மயக்குகிறார்கள் என அறிய கண்டுபிடிப்பை வெளியிட்ட ஜாதி சங்கத் தலைவர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்...? 

3.ஒரு காதல் பிரச்னையை சாதித்தீ மூட்டி,அதில் அரசியல் பொடிதூவி வடதமிழகத்தில் பதட்டமான சூழலை ஏற்படுத்திய பிற்போக்குவாதிகள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்.....? 

4. இதை எந்த ஊடகமும், சமூக ஆர்வலர்களும் பெரிதாக கண்டுகொள்ளவில்லையே....ஏன் தலித் என்பதற்காகவா..?

5.முகநூல் உள்ளிட்ட இணைய ஊடகங்களிலும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லையே..?

6.சரியான சிகிச்சையளித்திருந்தால் என் மகளைக் காப்பாற்றியிருக்கலாம் என அந்த அப்பாவிப் பெண்ணின் தாய் கதறி அழுதாரே...ஏன் அவர் சமூகத்திற்கு சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெருவதற்கெல்லாம் தகுதி இல்லையோ..?

இதில் இன்னொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.இந்த சம்பவத்தை அரசியலாக்காமல்,மூன்று ஊரைக் கொளுத்தாமல்,குடிசைகளை எரித்து சாம்பலாக்காமல், பொருட்களைக் கொள்ளையடிக்காமல், அப்பாவி பொதுஜனங்களின் மீது தாக்குதல் நடத்தாமல் மிக அமைதியாக தனக்கேயுரிய அரசியல் முதிர்ச்சியோடு செயற்பட்ட தொல்.திருமாவளவன் அவர்கள் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் ஜாதி சங்கத் தலைவர்களுக்கு நிச்சயமாக ஒரு முன்னுதாரணம்.

...மேலும்

மன்னிப்பு கோருகிறேன்...!மன்னிப்பு கோருகிறேன் 
மிகக் கடுமையான 
தண்டனைக்கு உள்ளாகவேண்டிய 
மாபெரும் குற்றம் ஒன்றை
இழைத்துவிட்டதற்காக !

தவறான குரோமோசோம்களோடு 
(பெண்ணாகப் ) பிறக்க நேர்ந்ததற்காக 
நான் வருந்துகிறேன் 
என் தரப்பு நியாயம் என்னவெனில் 
நீ XX விரும்புகிறாயா, XY வேண்டுமா 
என்று தேர்வு செய்யுமாறு
என்னிடம் கேட்கப்படவில்லை 
'எனது சொந்த விருப்பம் XY 
அதுதான் வீதிகளில் வெப்பமூட்டுகிறது' 
என்பது என் காதில் விழுகிறது 

எனது மார்பு தட்டையாக இல்லாது போனதற்காக 
நான் மன்னிப்பு கோருகிறேன் 
எனது இடுப்புகள் வளைந்திருப்பதற்காகவும் !
எனக்குப் புரியாதிருக்கிறது
எனது உடல் 
கவனத்தை ஈர்க்கிறது என்பது. 
சொல்லப் போனால் 
கவனத்தைக் கோருவதாகவும் இருக்கிறது.

மன்னிக்கவும் 
உங்களது முரட்டுத் தனமான 
கடந்து போதலை 
ஒரு பவ்வியமான புன்னகையோடு 
நான் எதிர்கொள்ளாது போய்விட்டேன்
ஆனால் 
இப்போது எனக்கு நன்றாகவே புரிகிறது 
பொதுவிடங்களில் 
நான் தோன்றுவதற்காக 
மன்னிப்பு கோருகிறேன் 

என் மீது ஒரு 
முரட்டு தாக்குதல் 
நிகழாதிருக்க வேண்டுமானால் 
நான் எவ்வளவு எச்சரிக்கையோடு 
நடந்து கொண்டிருக்க வேண்டும்...

ஒவ்வொரு முறை நான் 
வீட்டை விட்டு வெளியே 
காலடி எடுத்து வைக்கும் போதும் 
உங்களுக்குள் இருக்கும் 
குகை மனிதனை 
உசுப்பி விடுகிறேன் என்பதற்காக 
நான் மன்னிப்பு கோருகிறேன் 

எனது சகோதரி
தனக்கு உரிமைகள் வேண்டும் 
என்று கேட்டதால் 
அவற்றை அனுமதிக்க வேண்டும் 
என்று வலியுறுத்தியதற்காக 
நான் மன்னிப்பு கோருகிறேன் 

அது அவளது குற்றம் அல்லவா!

******************
மீடியா மற்றும் கம்யுனிகேஷன் ஸ்டடீஸ் இறுதியாண்டு மாணவியான நஜ்ரீன் ஃபஸல் புது தில்லி மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு அவளே பொறுப்பு என்று சிலர் (அதிலும் பெண்மணி ஒருவர்) சொன்னதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் எழுதிய இந்தக் கவிதை தி ஹிந்து நாளேட்டின் ஞாயிறு திறந்த பக்கத்தில் (03 02 2013) வெளியாகி உள்ளது 

தமிழில் எஸ் வி வேணுகோபாலன்
...மேலும்

Feb 24, 2013

பெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெஸ்

நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்களில் நடந்திருக்கும் ஆதிக்க வெறியாட்டத்தில் சாதிப் பிரச்சனை இருக்கிற்தா – இருக்கிறது; வர்க்கப் பிரச்சனை இருக்கிறதா – இருக்கிரது; இவைகளோடு மற்றுமொரு முக்கியப் பிரச்சனை ஒன்றிருக்கிறது – அதுதான் பெண் உரிமை பிரச்சனை. (The question of women’s rights). நிலப்பிரபுத்துவ அமைப்பானது உழைப்பைச் சுரண்ட அடிமைக் கட்டமைப்புகளை உருவாக்கியது, சத்ரிய பார்ப்பனியக் கூட்டு அதை மனுதர்மச் சட்டமாக்கியது. அந்த சட்டங்களைப் பெண்ணின் கருப்பையில் திணித்தது. சாதிய பற்றாளர்கள், சாதியக் கட்சிகள் இந்த ஆணாதிக்க பார்ப்பனிய இந்துத்துவ சாதியச் சட்டங்களை தங்கள் பொருளாதார, சமூக, அரசியல் அதிகார ஆதாயக் காரணிகளுக்காக அப்படியே பிடித்துக் கொள்கின்றனர். நடைமுறைப்படுத்துகின்றனர்.

பெரியார் இருந்திருந்தால் இந்த சாதிச் சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவ்வளவு தைரியமாக சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக பேசியிருக்க முடியுமா?

ஹிந்து கோட்பில் மூலம் அம்பேத்கர் முன் மொழிந்த உரிமைகளுல் ஓர் முக்கியமான உரிமை பெண்கள் தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுக்கலாம் என்பதுதான், அவ்வரைவுக்கு ஆதரவு கிடைக்காமல் பதவியையே துறந்தார் அம்பேத்கர். சாதி மறுப்பு திருமணத்தை எதிர்ப்பதென்பது அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமைக்கெதிராகப் பேசுவதென்பதாகும்.

பண்டைய தாய்வழிச் சமூகம் சிதைந்து தந்தைவழி ஆணாதிக்க சமூகம் மோலோங்கியபோது நிலப்பிரபுத்துவ அமைப்புக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட சட்டங்கள் பெரும்பாலும் பெண்ணை அடக்குவதன் மூலம் ஒரு சாதியை, சமூகத்தை, இனக்குழுவை, இனத்தை அடக்கி ஆள திட்டமிட்டது. தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக இன்றும் அது பல சாதிக் கட்சிகளால் பின்பற்றப்படுகிறது.

ஊழல் செய்வதில்கூட பல நவீனங்களை உள்வாங்கிக்கொண்ட ஆதிக்க சாதி அரசியல் கட்சிகள் சாதி விசயத்தில் மட்டும் இன்னும் ஆண்டானைப்போல நடந்து கொள்வது பிற்போக்குத்தனமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டிவிட்டர், முக நூல் போன்ற இணையதளங்களில் வைக்கபடும் கருத்திற்கு பாய்ந்து வந்து கைது செய்யும் வல்லமை படைத்த அரசுகள் வெளிப்படையாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யத்தக்க கருத்துக்களைப் பேசிவரும் காடு வெட்டி குரு, பா.ம.க நிறுவனர் இராமதாஸ், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பழ. கருப்பையா போன்ற சாதியக் கட்சிகள், சாதிய பற்றாளர்களை ஏன் இந்த அரசு இன்னும் கைது செய்யவில்லை.

சாதி வெறியில் வீடுகளை எரிப்பது, சூரையாடுவது போன்ற வன்கொடுமைகளை திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சமூக உணர்வு ஏற்பட்ட பின்னர் தான் இத்தகைய கொடூரங்களுக்குப் பின் இருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் விளங்கியது.

மீசையை முறுக்கி, தோளை விடைத்துக் கொண்டு சாதிக் கொடுமைக்கெதிராக பொங்கு எழுந்த அந்த ‘ஆண் கதாநாயக வீரர்கள்’ எவரேனும் இந்த ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கெஹ்டிராக ஒரு கண்டன அறிக்கையையாவது வெளியிட்டிருக்கிறார்களா? ‘தாய் குலம், தங்கைக் குலம்’ இப்படி ஒடுக்கப்படுவதை வேடிக்கப் பார்க்கும் இவர்களில் சிலர் தமிழ், தமிழ் தேசியம் என்றால் மட்டும் களத்தில் இறங்குகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழர்’ என்றால் வெறும் ஆண்கள் மட்டும்தான் போலும்.

சின்மயி விவகாரத்தில் ஒரு பேட்டியில், உரையாடலின் ஒரு தொடர்ச்சியாக அவரது தாயிடம் அப்படியே உங்கள் மகளைப் ஆபாசப் பாடல் பாடுவதையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்றேன். அதைப் பிடித்துக் கொண்டு குஷ்புவிடம் சின்மயி முறையிட, இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான பெண்களும் இந்த காலத்தில் இருக்கிறார்களா? அவருக்கு ஒரு கேக்கைப் பரிசளித்து தூக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வேண்டும் என்றார். இந்த பெண் உரிமை பாதுகாவலர்கள் சாதி மறுப்பு திருமண எதிர்ப்பு என்பதில் அடிப்படையில் ஒடுக்கப்படுவது பெண்ணின் உரிமை என்பதை அறியவில்லையா? கூடுதலாக அதைக் காரணமாக வைத்து சாதிய ஆதிக்கப் போக்கில் தலித் கிராமங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதி வெறியாட்டம் குறித்து இவர்கள் ஏதாவது கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்களா?

இந்த சினிமாக்காரர்கள் சிலரின் கபட நாடகங்களையும், ஆணாதிக்க மனப்பான்மையும் தெரியாமல் உழைக்கும் வர்க்கமானது மீண்டும் மீண்டும் இவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் பெண் விடுதலை பற்றியும் கவலைப்படுவதில்லை, சமூக விடுதலைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

ஆக தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் இந்த ஆதிக்க சாதி, இடைநிலை சாதிக் கட்சிகளில் பெண் உரிமை, பெண் விடுதலைச் சிந்தனை இவைகளைச் சரியாகப் புரிந்து கொண்ட தலைமைகள் இருக்கின்றனவா என்பதே இப்போது இந்த நிகழ்வு நம் முன் வைக்கும் மிகப் பெரிய கேள்வி.

பொதுவாக அரசியல், சாதி, இன உணர்வு, மொழி உணர்வு என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தம் நலன் ஆண் நலனே. இங்கு கூடியிருக்கும் தோழர்கள், தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள் இந்த ஆணாதிக்க அரசியலை விடுத்து பெண் உரிமையை நிலைநாட்டுவதின் மூலம் சாதி ஒழிப்பை மேற்கொள்வதின் அவசியத்தை உணர்ந்தவர்கள் என்று நம்புகிறேன்.

பெண் விடுதலையும், சாதி ஒழிப்பும் பின்னிப் பிணைந்தவை – உழைக்கும் மக்களை ஒன்றிணைப்போம், பெண் உரிமைகளைக் காக்கும் அறிவூட்டுவோம்..

சாதி-வர்க்க-பாலின வேறுபாடுகளைக் களைய ஒன்றுபட்டு போராடுவோம்.
30.11.2012 அன்று சென்னை மெரியல் ஹால் அருகில் தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆற்றிய உரை (சறிய திருத்தங்களுடன்).
http://saektamilnadu.wordpress.com/

...மேலும்

Feb 23, 2013

உலகின் எல்லாப் பருவங்களிலும் ஒலிக்கட்டும் எம் பெண்களின் இந்த ஒலிக்காத இளவேனில் - தமிழச்சி தங்கப்பாண்டியன்

ஒலிக்காத இளவேனில்

“கவிஞன் உணர்ச்சிகளின் நிபுணன், உணர்ச்சிகள் என அழைக்கப்படுபவற்றுக்கு குறைந்தபட்சம் இரு தளங்கள் உள்ளன. முதல் தளம் அறியப்பட்டதும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமானவற்றைத் தாங்கிச் செல்கிறது. இரண்டாவது தளம் பெயரிடப்படாத யாருக்கும் சொந்தமற்ற பிரதேசம். அளவில் அதிகரிக்கும் பெயரற்ற உணர்ச்சிகளின் தொகுதிகளுக்குக் கவிஞன் குடியுரிமை பெறும் கடமையிலிருக்கிறான்.
நமது வலிமிகுந்த இந்த சிக்கலுற்ற நூற்றாண்டு பிற விஷயங்கள் தவிர நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது மிகத் தலையாய விஷயங்கள் எல்லாம் நம் வாழ்வின் அறிவின் எல்லைக்கு அப்பால் உள்ள பிரதேசங்களில் நடக்கின்றன என” – ஆக்நெஸ் நெமிஸ் நேகி 

(சமகால உலகக் கவிதை, தொகுப்பு – பிரம்மராஜன்).

“இன்றைய நாளின் தன் வலியைப் பாடும் வெளித்தரியாத குரல்களைத்” தேடிச் சென்று பதிவு செய்திருக்கின்ற தொகுப்பாக ஒலிக்காத இளவேனில் (18 பெண் கவிஞர்களின் கவிதை நூல்) வடலி வெளியீடாக வந்துள்ளது. டிசம்பர் – 2009 இல் பதிப்பித்த இக்கவிதைத் தொகுதியை கனடாவில் வாழும் தான்யாவும், பிரதீபா கனகா தில்லைநாதனும் தொகுத்துள்ளார்கள். ஜூன் 16-2012 இல் டொரொண்டோ நகரில் இக்கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், தோழர் சாந்தாராம் வாயிலாக இந்நூல் என் கைக்குக் கிட்டியது.
“பெண்களின் மெளனம் யாரையையும் தொந்தரவு செய்ததில்லை – பெண்களையே கூட” எனும் ஆதங்கக் குரலுடன், அனைத்து வகையான வன்முறைகளுக்கும் ஒரே இலக்காகப் பெண்கள் இரையாகின்றபோதும், “தம் துயரை, எதிர்ப்பை, ஒரு அரசியலாய்க்” கொண்டு செல்ல வேண்டும் எனும் ஓர்மையுடன் தொகுப்பாளர்கள் இப் பணியை முன்னெடுத்திருக்கிறார்கள். இத் தொகுப்பின் மிக முக்கியமான கூறு என்னவென்றால் – “போராளிப் பெண் குரல்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தனவோ, அதுபோலவே, எமது அரசியல் காட்சிகளின் மாற்றங்களுக்கமைய ஒரு கணத்தில் போராளிகளாய் அற்றுப்போகும் பெணகளின் குரலும் முக்கியமானதே” எனும் தொகுப்பாளர்களின் தெளிவும், தெரிவும்.
“மாபெரும் கவிதைகளை அவர்கள் எழுதவேண்டியதில்லை, ‘ஈழப் பெண்குரல்’ என அவை மிகை படுத்தப்பட வேண்டிய அவசியமுமில்லை, ஆயின், உலகின் வெவ்வேறு நகரங்களில் உள்ள, இலங்கைத் தமிழ்ப் பெண்கள், எத்தகைய, ஆண் அரசியல், குடும்பக் கடப்பாடுகள், கட்டுப்பாடுகளூடாகத் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் – அவற்றின் அரசியல் என்ன” என்பதனைப் பகிர்ந்து கொள்ளச் செய்திருக்கின்ற முயற்சியே இது என்கிறார்கள் தொகுப்பாளர்கள்.
இத் தொகுப்பு ஈழத்தை மட்டுமே மையப்படுத்தவில்லை. ஒரு அந்நிய தேசத்தில் வாழ நேர்கின்ற, சமகால வாழ்வின் சிக்கல்களைத் தனது தாய்நாட்டின் வரலாற்றுக் கண்ணியுடன் இணைக்கின்ற, அதில் இதுவரை கேட்டிராத பெண் குரலெனப் பதியப்பட்டவைகள் குறித்துக் கவனப்படுத்துதலும், பேசுதலுமே இதன் மையப்புள்ளி . ஒர் புலம் பெயர்ந்த சமூகத்தின் தனிமை, வன்முறை, பண்பாட்டுச் சிக்கல்கள், அடையாள மறுப்பு, சுயமிழத்தல் – இவற்றையெல்லாம் ஒரு பெண்ணாக எதிர்கொள்ள நேர்கையில், தனது வலியின், எழுச்சியின் வலிமையான குரலாக அவள் கவிதையைத் தேர்வு செய்திருப்பதனை, தேசம் : யுத்தநிறுத்தம், பெண் : வாழ்வியல், புலம்பெயர்வு : குடும்பம்,  புலம்பெயர்வு : மாணவம், தேசம் : யுத்தகாலம் எனும் பிரிவுகளில் தொகுத்தளித்துள்ளார்கள். மெளனமாக்கப்பட்டவர்களுக்கான வெளியெனவும், அவர்தம் குற்றஉணர்ச்சிகளினின்றும் விடைபெறுகின்ற சுமைதாங்கிக் கல்லெனவும் இத்தொகுப்பு இருப்பின் அதுவே போதுமானது எனும் தான்யா, பிரதீபா தில்லைநாதனின் பெருமுயற்சி கவனிக்கப்படவேண்டியது, பரவலாகப்  பேசப்படவேண்டியது.
பெண்களின் உலகம் ஒரு மூடிய உலகமாகவே இன்றுவரை இருக்கிறது. தொடர்ந்த கண்காணிப்பினாலும், தடைகளினாலும் அவளது ஒவ்வொரு அடியும் முறைப்படுத்தப்படுகின்றது. பெரும்பாலான பெண்களின் உலகம் பதற்றம், மன உளைச்சல், பாதுகாப்பின்மை, பாலியல் அத்துமீறல், குடும்பச் சுமை, பொருளாதார நெருக்கடி இவற்றால் முழுதுமாய் மூச்சுத் திணறுகிறது எனில், புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்ப் பெண்களின் உலகோ தமது புகலிடச் சூழல், ஈழத்து அரசியல், யுத்தத்தின் நிகழ் மற்றும் நிழல் உணர்வுகள், தனிமை, பகிர்தலற்ற வெறுமை – இவற்றால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்தம் சொல்ல இயலாக் கனவு, காதல், காமம், துரோகம், நம்பிக்கை, பயம் – இவற்றின் ஒட்டுமொத்தத் தனித்த குரலே இந்த ஒலிக்காத இளவேனில். இதில் ஒலித்திருக்கின்ற ஒவ்வொரு பெண் குரலும் தன்னளவில் தனித்துவம் வாய்ந்ததே.
எனக்கு மிகவும் பிடித்த, நான் நேசிக்கின்ற அனாரின்

“மலர்களின் பார்வைகள்
அந்தியில் ஒடுங்கி விடுகின்றன.
அவைகளின் கனவுகள் மாத்திரம்
காற்றில் அலைகின்றன
என் கவிதைகளைப் போல”

எனும் காற்றில் அலையும் கனவுகள் பெரும்பாலும் வட அமெரிக்காவைக் களமாகக் கொண்டிருக்கின்ற ஈழத் தமிழ்ப் பெண்களின் எதிரொலியே.

“குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்
எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
அவை தமது நிமிடத்தினை
வாழ்ந்து விடவே விரும்புகின்றன”

எனும் நிவேதா ரேவதியின் குரல்,
“இந்தக் கணத்தை ஐம்பது வருடங்களுக்கு முந்தையதிலிருந்து
வேறுபடுத்தி அறியாத தளர் முதியோன் போல,”
எனும் ஹங்கேரியப் பெண் கவிஞர் ஆக்நெஸ் நெமிஸ் நேகியை நினைவு படுத்துகிறது.

“ஆண்களால் வெல்லப்பட்ட உடம்பு
பொய்களால் கொல்லப்பட்ட மனசு”

எனும் சரண்யா;

வசந்தி,

“எப்போதும் ஒரே வட்டத்துள்
நிர்ப்பந்த வெப்புசாரம்
மூச்சு முட்ட வைக்கும்
ஆசுவாசப் படுத்தல்கள்
அற்றதான தனிமை”யை வேண்டுகிறார்.

மிகச் சமீபத்திய செய்தியொன்றின் மூலமாக ஈழப் போரின் இறுதிக்கட்டத்தினை ஐ.நா உறுப்பினர்கள் சரிவரக் கையாளவில்லை என அறிந்து கொண்ட அந்தக் காலைவேளையில், யசோதராவின் புதைக்குழி கவிதையை மீண்டும் வாசித்தேன்.

“யுத்தம் என்ன செய்தது
யுத்தம் என்ன தந்தது
“அந்த” இராணுவமென்னை வன்புணர்ந்தது
எனது இராணுவம் உனது தகப்பனை
கண்ணுக்கு முன்னால் கொன்றுபோட்டது.
…….
அவள் / நான் தலையிலடித்தபடி அழுகிறேன் / அழுகிறாள்
புதைகுழியை ஐ.நா. திறந்து திறந்து மூடுகிறது
விஜி! ஐ.நா. என்ன செய்கிறது
விஜி: திறந்து திறந்து மூடுகிறது!”

சமகாலத்தின் மிகப்பெரிய துயரம் நம்பிக்கையற்றுப் போதல். அதன் தொடர்பான கையறு நிலையின் மன உளைச்சளைத் தான் தொகுப்பின் அநேகக் கவிதைகள் முன் வைக்கின்றன. என்றாலும், அவை வெறும் புலம்பல்கள் அல்ல.
சமகால உலகில் பாசிசம் ‘சாதாரண உடுப்பில்’ தோன்ற முடிவது குறித்து உம்பர்தோ ஈக்கோ பின்வருமாறு குறிப்பிட்டார்:

“உர் – பாசிசம் (நித்திய பாசிசம்) நம்மைச் சுற்றிலும் இன்றும் இருக்கிறது. சில நேரங்களில் சாதாரண உடைகளில். எவராவது ‘ஆஷ்விட்ச்சை மீண்டும் திறக்க வேண்டும். இத்தாலிய சதுக்கங்களில் கருப்புச் சட்டைகளின் பேரணி நடத்த வேண்டும்’ என்று சொன்னால், நமது சிக்கல் எளிதாகிவிடும். வாழ்க்கை அத்தனை எளிதானதல்ல. உர் – பாசிசம் எந்த அப்பாவித்தனமான உருவிலும் மீண்டும் வரலாம். உலகின் எல்லா மூலைகளிலும் தினசரி அது எடுக்கும் புதுப்புது அவதாரங்களைச் சுட்டிக் காட்டுவது நம் கடமை.”

அது யுத்தமாகட்டும், இடப் பெயர்வாகட்டும், வன்முறைகளாகட்டும், ஊடகங்களாகட்டும், அன்றாட இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகட்டும் – பெண்னென்பவள் எதிர்கொள்வது இப் பாசிசத்தின் ஏதாவதொரு முகத்தைத்தான். சமூகம் கட்டமைத்துள்ள நிறுவனங்கள், ஆண், சக பெண்கள் – என அனைத்து வெளிகளிலும் பெண்ணானவள் ஒரு நுட்பமான பாசிச அரசியலைத் தான் ஒவ்வொரு கணமும் எதிர் கொள்கிறாள்.

“நகரம் இச்சையால் மூடியிருக்கிறது
ஒவ்வொரு மூலையிலும் வல்லவர்கள் ஆளுவார்கள்”

என Weapon of Mass Destruction இல் பாசிசத்தின் ஒரு முகத்தைச் சுட்டும் பிரதீபா, தனது ஆண் கவிதையில் தோலுரிப்பது அதன் மற்றொரு வடிவத்தையே.

“வீதிகளில்
தோழர்களுடன் செல்கையில்
உன் இனத்தவன் ஒருவன்
எங்களில் யாரேனும் ஒருத்தியை
உன் இனத்து மொழியிலேயே
வேசைகள் என்று
எம் பால் உறுப்புக்கள் சொல்லிக் கத்துவான்,
அவர்களை எவ்வின அடையாளமுமின்றி
ஆண்கள் எனவே அழைத்துப் பழகினோம்”.

விவரிப்பவரே, விவரிப்பின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்ற சர்ரியல் தன்மை கொண்ட பிரதீபாவின் “உனது இனம், அரசியல், ஆண், மொழி” தொகுப்பின் அதி முக்கியமான கவிதை. இன்றைய பெண்ணுக்கான தெளிவான அரசியலைப் பேசும் பின்வரும் இக்கவிதை -

“நீ பொறாமையுறும்
திடகாத்திரமான காப்பிலிகளுக்கோ
ஆண்மையற்ற நோஞ்சான்களாய்
இகழப்படும் சப்பட்டையருக்கோ
தாயாகுவதில்
எச்சொட்டு வருத்தமும்
நான் கொள்வதில்லை.
எண்ணி நாப்பது வருடங்களிலோ
இன்றையோ
அக்குழந்தைகள்
தாய்மொழியை இழப்பதில்
அப்படி ஒரு துக்கம்
எழுவதாயில்லை.
வஞ்சனையை, மனித விரோதத்தை, பகைமையை
கொண்டு ஆடுகிற மொழி
அழிந்தால் என்ன?
நியாயமற்று
வெறித்தனமாக
ஒரு மரணத்தை நியாயப்படுத்தவோ
மரணத்திற்கு பழகியோ போகாதவரை
அவர்களுடைய எந்த மொழியும்
எனது மொழியே.
அது உன்னுடையதாய் அல்லாதது குறித்து
என் கவலைகள் இல்லை”

என்று வாழ்வின் மிக உன்னதமானவையென விதந்தோதப்படுகின்ற, இன, மொழிப்பற்றை விவாதத்திற்குள்ளாக்கி, முடிவில் மிகத் தெளிவானதொரு அரசியலைத் தீர்ககமானதொரு பெண் குரலில் முன் வைக்கிறது.
இத்தொகுப்பின் மிகப்பெரிய பலம் – இக்கவிதைகள் எவையும் இரக்கத்தைக் கோராதவை என்பதுவே. இத்தாலியக் கலாச்சாரத்திற்குப் பெரும் சவாலாக விளங்கிய கவிஞர், நாவலாசிரியர், பன்முக ஆளுமை கொண்ட பியர் பாவ்லோ பாசோலினியின் பிரசித்தி பெற்ற வாக்கியம் – “எனக்கு இரக்கத்தின் மீது நம்பிக்கையில்லை”. அதனை அடியொற்றிப் பயணித்திருப்பவையே இந்தத் தொகுப்பின் கவிதைகள்.
தற்கொலை பற்றிய தான்யாவின்:

“அந்த இடம் -
ஒரு நிமிடம் சாவதற்கான முனை
மறு நிமிடம் இசைக்கான கருவி
பிறிதொரு பொழுதில் வாழ்வதற்கான வெளி
அத்துவான வெளியில்
வாழ்க்கையின் நம்பிக்கையைத் தொலைப்பது
இயலாமற் போகிறது
…………
வாழ்க்கை அவளை வசீகரிக்கிறது”

எனும் வரிகளும்

” ஓர் முத்தத்தின் பேரியக்கத்தில்
ஆயுதங்களின் விறைப்புக்களுக்கு அப்பாலாய்
நானும் வாழ வேண்டும்” (யசோதர)

எனும் வேட்கையும், இரக்கம் கோராத, தன்னளவில் திமிறி நிற்கும் திடமான பெண் குரல். இந்த தெளிவிருக்கும் எம் பெண்களுக்கு,

“புரிந்து கொள்ள வேண்டி
நிற்கும் அவலமோ
நேசத்தை உணராத
வலியோ அற்ற அமைதி” (தான்யா)

வாய்க்கப் பெறும் ! பெறின் – அதுவே இத்தொகுப்பின் வெற்றியாகும்!
தேசம் என்பதே ஒரு கற்பிக்கப்பட்ட உருவாக்கம் போன்ற கருத்தாக்கங்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்ற இப் பின் நவீனத்துவக் கால கட்டத்தில், தன் தேசத்தின் மீட்சிக்காகப் பாடும் ஒரு பெண்ணின் தேசம் எது? புலம் பெயர்ந்து வாழும் பிற நாடு நமதாகுமா? கனடா போன்ற நாட்டில் பூர்வீகர்களுடைய வரலாறு மறைக்கப் படுகையில், அவர்களை ஒடுக்கியவரிடத்தில், ‘எம்மை வாழவைத்த தேசம்’ எனும் நன்றியுணர்வு சரியானதா? தேசம், தேசீயம் – இவை கட்டமைக்கப்பட்டிருக்கிற ஆதிக்க – ஆண் மனத்திற்கு முரணாகத்தானே, தமது பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்களது மனநிலையும் இருக்க முடியும்? – போன்ற மிக முக்கியமான கேள்விகளைத் தொகுப்பாளர்கள் எழுப்பி இருக்கிறார்கள். உணர்வும், அறிவும் சரிசமமாக வெளிப்படும் கலவையான கவிதைகள் மூலமாகவும் அவர்கள் முன்வைப்பது இந்தக் கேள்விகளையே!
தம் எல்லாவிதமான வேறுபாடுகளோடும், ஒவ்வொரு குரலும், தத்தமது அனுபவங்களின் நேர்மையுடனும், மொழியின் சத்தியத்துடனும் ஒலிக்கப்பட வேண்டும் – அவை கேட்கப்படவும் வேண்டுமென்கின்றன இப் பெண்களது கவிதைகள். அவை உலகின் அனைத்துப் பெண்களின் கவிதைகள்தாம்!
தேடலுடன் உரத்து ஒலிக்கும் எக்குரலும் அங்கீகரிக்கப்பட்ட வேண்டியதே – குறிப்பாக அக்குரல் ஒரு பெண்ணினுடையதாய் இருக்கும் பட்சத்தில்!  இந்திராவின் பின்வரும் இக்குரலே பெண்ணினத்தின் ஒருமித்த குரல் -

“எனக்குள் ஒரு ஜிப்சி
எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறாள்.
அவள் -
வரம்புகளை உடைத்தெறிந்து
ஒரு புறாவைப் போலப் பறந்திட
ஏங்கிக் கொண்டிருக்கிறாள்”

மேலும், மேலும் மறைக்கப்பட்ட, அழுத்தப்பட்ட குரல்களைத் தேடிப் பயணியுங்கள் தோழிகளே! தான்யாவும், பிரதீபாவும் தொடங்கி வைத்த இப்பயணத்தில் ஒரு வாசகியாய்ப் பங்கு பெற்ற நான் இந்த தொகுப்பினை மூடி வைத்தவுடன், டெல் அவீவின் பெண் கவிஞர் தாஸ்லியா ராவிகோவிச்சின் வரிகளை நினைத்துக் கொண்டேன் -

“அவர்கள் அனைவரும் சென்றபிறகு
கவிதைகளுடன் நான் தனியே எஞ்சியிருக்கிறேன்”

* * * * *

நன்றி - பகிர்
...மேலும்

Feb 22, 2013

நேர்காணல் - கல் மனிதர்கள் ஆவணப்படத்தை முன்வைத்து குட்டி ரேவதியுடன் ஒரு நேர்காணல்

 குட்டி ரேவதி
நேர்கண்டவர் - ஜெயச்சந்திர ஹஸ்மி

‘உலகத்தில் கல் இல்லாத இடத்தை நம்மால் பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன், ஒருவர் மிகவும் கடினமான மனம் படைத்தவராக இருந்தால், ‘அவனுக்கு கல் நெஞ்சம்பா’ என்று சொல்வதுதான் வழக்கம். ஆனால் கல் உடைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை அதை விட கடினமாக இருக்கிறது என்று இங்கு நம் எத்தனை பேருக்கும் தெரியும்? கல்லுடைக்கும் தொழிலாளர்களின் வாழ்வை, அவர்கள் சந்திக்கும் அத்தனை சவால்களையும் அவலங்களையும் தோலுரித்துக் காட்டுகிறது, குட்டி ரேவதி இயக்கத்தில் வந்திருக்கும் ‘கல் மனிதர்கள்’ ஆவணப்படம்’. பேசாமொழியின் முதல் இதழில் இந்த ஆவணப்பட விமர்சனத்திற்காக நான் எழுதிய முதல் வரிகள் இவை. கல் மனிதர்கள் வாழ்வின் கடினத்தை சித்தரிக்கும் இந்த படத்தின் இயக்குனருடன் கண்ட ஒரு நீண்ட நேர்காணலையும் இதே வரிகளோடு துவக்குகிறேன். வரிகளைப் போலல்லாமல் அவர்கள் வாழ்வு மாறிவிடும் என்ற நம்பிக்கையில்...

கல் மனிதர்களைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்க உங்களை எது தூண்டியது?

தமிழ்நாடு கல்லுடைப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஞானமணியும், கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தானமும் இதை நான் செய்து தர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தனர். அப்போது நான் வேறு சில வேலைகளில் ஈடுபட்டு இருந்தேன். ஆனாலும் அவர்கள், நாங்கள் காத்திருக்கிறோம். இந்த பிரச்சினை வெளியில் வர வேண்டும். அதுவும் சரியான அரசியல் தெளிவுடன் வெளியே வர வேண்டும் என்றனர். பொதுவாக நிறைய பேர் இதுபோன்று கேட்டுவிட்டு பிறகு விட்டுவிடுவர். ஏனெனில் ஆவணப்படம் எடுப்பதற்கு நிறைய மெனக்கிடல்கள் வேண்டும். ஆனால் இவர்கள் விடாப்பிடியாக காத்திருந்து மீண்டும் கேட்டனர். பிறகு நாங்கள் சந்தித்து பேசினோம். நான் ஒரு சிறிய கள ஆய்வு செய்ய வேண்டுமென அவர்களிடம் கூறினேன். ஒரு வாரம் அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து தந்தனர். அந்த உலகம் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. நிலப்பரப்பு சார்ந்து நகரம், சேரி இதுபோன்று தான் நாம் கற்பனை செய்கிறோம். ஆனால் அங்கே நாடோடிகளாகவும் ஒடுக்குமுறையின் உச்சத்தை அனுபவிக்கும் மனிதர்கள் நாம் இதுவரை கண்டிராத நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தனர். வாழ்க்கையும் மரணமும் மிகவும் இணைந்திருந்தது. மரணம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதையும் மீறி ஒரு வேளை சோற்றிற்காக அந்த மக்கள் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அதை நான் புனைவாக சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆவணப்படங்கள் தங்கள் சட்டையை கழற்றி வைத்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். எனவே இந்த களத்திற்கு புனைவு பொறுத்தமாக இருக்கும் என்று விரும்பு, இதை புனைவாக கூறினேன்.

இந்த ஆவணப்படத்திற்கான தேடல்கள் குறித்து...

கடந்த பத்து வருடங்களாக ஆர்.ஆர். சீனிவாசனோடு இணைந்து நிறைய ஆவணப்படங்கள் செய்திருக்கிறோம். ஆவணப்படங்களுக்கு கள ஆய்வு மிக முக்கியம். ஒரு ஆழமான கள ஆய்வு செய்தால் மிக துல்லியமான புள்ளிகளைக் கொண்டு நம் ஆவணப்படத்தை உருவாக்க முடியும். நமக்கு பொதுவாக கருத்தியல் முன்முடிவுகள் இருக்கும். ஆனால் கள ஆய்வுகளில் இவையெல்லாம் தகர்ந்து போகும். நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள உதவும். கள ஆய்வு செய்தபின்தான் பிரச்சினை குறித்த ஒரு அறிமுகம், அதை எப்படி அணுகுவது போன்றவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடியும். பொதுவாக கேமிரா எப்போதும் அதிகாரம் சார்ந்த தொணியில் இருக்கும். ஒரு இடத்தில் கேமிரா இருந்தால் அதை சுற்றித்தான் கவனம் அத்தனையும் இருக்கும். ஆதிக்கம் செலுத்தும். அதற்கு முன்பாக மக்களை வெற்றுக்கண்களாக பார்ப்பது எனக்குத் தேவைப்பட்டது. நாட்டை கட்டியமைக்கும் உழைப்பாளிகளாக அவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் மீது செயல்படும் இந்த அடிமை முறை, நாம் கதைகளில் மட்டுமே கேட்டதுதான். பல நேரங்களில் கல் குவாரிகளுக்குள் போவதும் அச்சம் நிறைந்த செயல் தான். பல சமயங்களில் நாங்கள் பொய் சொல்லித்தான் உள்ளே சென்றோம். கதை எழுத, சீரியல் எடுக்க வருகிறோம் என்று சொல்லித்தான் நாங்கள் உள்ளேயே சென்றோம். மக்கள் பேசும்போது மிகவும் தவிப்பார்கள். அதையும் பார்க்க முடிந்தது.

பொதுவாக இதுபோன்ற கல் குவாரிகள் closed circuit ஆக இருக்கும். அங்கே நடக்கும் அக்கிரமங்களை தோலுரித்துக்காட்டும் ஒரு ஆவணப்படத்தை எடுக்கையில், என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் இருந்தது?

மக்கள் மனதில் நிறைய அச்சம் இருந்தது. பேசவே மாட்டார்கள். அவர்கள் நம்மிடம் ஏதேனும் சொல்லிவிட்டால் அவர்களுக்கு பலவிதங்களில் அச்சுறுத்தல்கள் இருக்கும். அவர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற எந்தவொரு அடையாளமும் அங்கீகாரமும் இல்லை. இப்படிப்பட்ட மனிதர் இங்கே இருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே அவர்கள் உண்மையின் சாயலை சொல்லக்கூட அச்சப்படுவார்கள். அவர்களிடமிருந்து அந்த தகவல்களை வாங்குவது மிகக் கடினமாக இருந்தது. அதற்கு நான் அவர்களிடம் ஒரு நல்ல நட்புறவை பேண வேண்டியிருந்தது. முக்கியமாக தோழர் ஞானமணியும் தோழர் சந்தானமும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் நோக்கம் இந்த மக்களின் குரல் இந்த உலகத்திற்கு கேட்க வேண்டும் என்பதுதான். வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை அவர்களிடம். இந்த படத்தைப் பார்த்த பல பத்திரிக்கை நண்பர்களும் வேறு சிலரும் கண்ணீருடன் என்னிடம் பேசியுள்ளனர். இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்று. ஆனால் உண்மையில் எங்கள் கள ஆய்வில் நாங்கள் கண்டறிந்த விஷயங்களில் மிகச்சிலவற்றைத் தான் படத்தில் எங்களால் கொண்டு வர முடிந்தது. ஏனெனில் ஆவணப்படம் என்பதைத் தாண்டி இது அம்மக்களின் வாழ்க்கை.

குவாரி முதலாளிகளுக்கு இறுதி வரை நீங்கள் இப்படி ஒரு ஆவணப்படம் எடுக்கிறீர்கள் என்று தெரியாதா?

ஞானமணியும் சந்தானமும் முதலாளிகளிடம் வேறு மாதிரி பேசிவிடுவார்கள். இவர்கள் சீரியல் ஷீட்டிங் செய்ய வந்திருக்கிறார்கள் என்பது போல. அந்த முதலாளிகளுக்கு நாங்கள் ஷீட் செய்ய வந்திருக்கிறோம் என்று தெரியும். ஆனால் மக்களின் பிரச்சினையை குறித்து ஷீட் செய்ய வந்திருக்கிறோம் என்பது தெரியாது. தொழிலாளர்களுக்கு என்று இந்த சங்கம் வந்தது அவர்களை ஒன்றிணைத்திருக்கிறது. முதலில் எல்லாவித அடக்குமுறைக்கும் ஆளான மக்களை, இப்போது அடிப்பது குறைந்திருக்கிறது. அடித்தால் கேட்க சங்கம் இருக்கிறது என்ற நிலைமை வந்திருக்கிறது. தங்கள் உரிமைகளை மக்கள் உணர இந்த சங்கம் உதவியிருக்கிறது. இந்த சங்கம் என்பது, வேலை முடிந்தவுடன் கூடிப்பேசுவது, ஏதேனும் பிரச்சினை என்றால் அதுகுறித்து விவாதிப்பது என்று இயங்கியபடியே இருக்கும். இந்த ஜனநாயக வடிவத்தை சந்தானமும் ஞானமணியும் கட்டமைத்திருந்தனர். மக்களை பேச வைத்ததில் சங்கத்தில் பங்கும் இவர்களின் பங்கும் அதிகம். இதைத் தவிர ஞானமணி தோழர் ஒரு பள்ளியை நடத்திக் கொண்டிருந்தார். அந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான பள்ளி அது. பொதுவாக அந்த தொழிலாளர்கள் அடிக்கடி இடம்பெயரும் மக்கள். நிலையான ஒரு இடம் அவர்களுக்கு இருக்காது. அதனால் அவர்களின் பிள்ளைகளுக்கு படிப்பும் கிடைக்காது. அந்த பிள்ளைகளுக்காகவே உருவாக்கப்பட்ட பள்ளி அது. தனது சொந்த உழைப்பினால் நடத்தி வந்த இந்த பள்ளியை தொடர்ந்து ஞானமணியால் நடத்த முடியவில்லை. எனவே அந்த பள்ளி மூடப்பட்டது. அது மிகப்பெரிய வீழ்ச்சி என்று நினைக்கிறேன். இந்த படத்திற்கு பிறகு அரசின் கவனமோ அல்லது வேறு சில உதவிகளோ வரும் என்று நினைத்தோம். ஆனால் உதவி என்று வரும்போது அனைவரும் தூரமே நின்றனர்.

கள ஆய்வை முழுவதும் முடித்ததும் இந்த படத்தின் வடிவத்தை எப்படி நீங்கள் தீர்மானித்தீர்கள்?

இந்த படம் ஒரு நாடோடிக் கண்களில் தான் சொல்லப்படவேண்டும் என்று நான் தீர்மானித்தேன். பின் அங்கே ஒரு நிலப்பரப்பு இருக்கு. அதுவே பல கதைகளை சொல்லும். அதை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். பிறகு நல்ல ஒளிப்பதிவு அணி இருந்தது. மேலும் நிறைய பெண்களை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அடுத்தது படத்தில் நிறைய மௌனம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மேலும் குவாரிகளுக்கு உள்ளே உள்ளே செல்லும்போது நிலப்பரப்பில் ஒரு நிலையற்ற தன்மை இருக்கும். அதையும் பயன்படுத்துவது படத்தின் நாடோடித்தன்மைக்கு உதவும் என்று நினைத்தேன்.


படத்தின் நடுவில் சப் டைட்டில்ஸ் போடப்படுவது எதற்காக?

அது அந்தந்த அத்தியாயத்திற்காக செய்யப்பட்டது. வாய்ஸ் ஓவர் போன்ற க்ளிஷேக்களை பயன்படுத்தாமல் வேறு மாதிரி அந்த கதைக்கான முன்னோட்டத்தை கொடுப்பதற்காக. அந்த கதைக்கு போவதற்கு முன் ஒரு அமைதி இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு அந்த கேப்ஷன்களை பயன்படுத்திக்கொண்டேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் எல்லா உண்மைகளையும் பேசுவதற்கு மக்கள் தயாராக இருந்தார்களா?

ஆமாம். தயாராக இருந்தார்கள். பேசியும் இருக்கிறார்கள். நான்தான் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் அதன் பின் நிறைய ஆபத்தும் இருந்தது. குறிப்பாக பாலியல் வன்முறை, சாதிய வன்முறை உச்சத்தில் இருக்கும். குழந்தைகள் மீதான வன்முறையும் அதிகமாக இருக்கும். நமது சமூகம் சாதியப் படிநிலைகளில் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு விளிம்புகளுக்கு தள்ளப்படுகிறவர்கள் யாராக இருக்கிறார்கள் என்று பார்த்தால் திரும்ப திரும்ப தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களாகவும் தான் இருக்கின்றனர். இவர்களுடைய வறுமை மிகவும் கொடியது. அந்த வறுமைக்காக எந்த ஒடுக்குமுறையையும் தாங்கிக்கொள்ள அந்த மனிதர்கள் தயாராக இருக்கின்றனர். 
ஒருவேளை உணவுக்காக அந்த வன்முறைகளை சகித்துக்கொள்கின்றனர். அந்த மக்களின் சாட்சியமாகவும் இந்த ஆவணப்படம் இருந்தது. அப்படி மனதில் இருந்தவற்றை பேசி அவர்கள் ஒரு தன்னிறைவு பெற்றனர். படமெடுக்கும்போதே அவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் எதையும் நான் படத்தில் கொண்டு வர மாட்டேன் என்று வாக்களித்திருந்தேன். எனவே அவர்கள் எதையும் மறைக்காமல் முழுதாக வெளிப்படுத்தினர். சில முதலாளிகளின் குவாரிகளுக்கு சென்று நாங்கள் ஷீட் செய்திருக்கிறோம். அவர்களுக்கு ஆதரவான படம் என்று நினைத்துதான் அவர்கள் அதை அனுமதித்திருப்பர். ஆனால் இறுதியில் படத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன் இந்த மக்கள் குறித்து கொஞ்சம் எச்சரிக்கையானார்கள். ஆனால் மக்கள் இந்த படத்தை மேலும் மேலும் நிறைய குவாரி தொழிலாளர்களுக்கு போட்டுக் காண்பித்தனர். நிஜத்தில் இப்படத்தில் நான் சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை. இது முழுக்க முழுக்க அம்மக்களின் கண்ணீர், வலி நிறைந்த படம். இது அவர்களின் படம். என் படம் அல்ல. யாரிடமாவது தங்கள் குறைகளை பேச மாட்டோமா என்று ஏங்கிய மக்களின் ஏக்கத்தை இப்படம் நிவர்த்தி செய்தது.

ஆவணப்படம் என்பது ஒரு கலை வடிவம். அதை ஒரு சங்கம் சார்ந்து, ஒரு அமைப்பிற்காக எடுப்பது சரியென்று நினைக்கிறீர்களா?

முதலிலேயே அவர்கள் என்னிடம் சொன்னது, படத்தின் வடிவத்தில் நாங்கள் எங்கும் தலையிட மாட்டோம் என்று. இரண்டாவது, பொதுவாக சில தொண்டு நிறுவனங்கள் தங்களை ப்ரொமோட் செய்ய இதுபோன்ற படமெடுப்பார்கள். எனக்கும் ஆரம்பத்தில் அந்த பயம் இருந்தது. ஒரு அமைப்புக்குள் போய் சிக்கிக்கொள்வோமோ என்று. ஆனால் அவர்கள் தூரத்தில் இருந்து என்னைக் கவனித்துக்கொண்டு வந்திருக்கின்றனர். எனக்கு அவர்களோடு முன்பழக்கம் எதுவும் கிடையாது. நீங்கள் மக்களைப் பாருங்கள். அவர்கள் குரல் வெளியில் கேட்க வேண்டும் என்று மட்டும்தான் சொன்னார்கள். நானும் படத்தின் வடிவம் குறித்தெல்லாம் ஒரு முன்முடிவு இல்லாமல்தான் சென்றேன். ஆனால் அந்த மக்களை சந்தித்தவுடன், இந்த படத்தின் வடிவம் எதுவும் முக்கியமில்லை. இந்த மக்களின் குரலை வெளியில் கொண்டுவர ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதுதான் முக்கியம் என்று எனக்குத் தோன்றியது.

இப்படத்தில் ஒரு சுவாரசியமான விஷயம், தொழிலாளியும் பேசுகிறார். முதலாளியும் பேசுகிறார். ஒரு விவாதம் போன்று செல்கிறது. முதலாளிக்கு தொழிலாளி பதிலும் அளிக்கிறார். இது எப்படி சாத்தியமானது? திட்டமிட்டு எடுத்ததா?

முதலாளிகளை கொஞ்சம் தூண்டிவிட்டால் போதும். நிறைய பேசுவார்கள். இரண்டாவது சில ஆபத்துகளை தவிர்ப்பதற்காகவும் அவர்கள் நாங்கள் பேச வைத்தோம். அவர்கள் இடத்தில் போய் அவர்களை நேர்காணல் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் அவர்களும் மகிழ்ச்சியாக சம்மதிப்பார்கள். முதலில் மக்களிடம் பேசி விட்டு வாருங்கள். பிறகு நான் பேசுகிறேன் என்பார்கள். மக்கள் இப்படி சொல்கிறார்களே என்று கொஞ்சம் கேட்டால் போதும், அவர்கள் நிறைய பேசிவிடுவார்கள். அந்த தொழிலாளிகளின் பிரச்சினைகளைக் குறித்து முதலாளிகள் தங்கள் பதில்களை வெளிப்படுத்துவார்கள். அது ஒரு சிறிய நகைச்சுவை காட்சி போலத்தான் இருக்கும். மக்களின் வலிகளை உணராமல், அறியாமையில் தங்கள் கருத்துகளை அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அது ஒரு கேலிக்குரிய விஷயமாகத் தெரியும்.

ஒரு ஆவணப்படத்தில் ஒலியின் பங்கு மிகவும் முக்கியமானது. இதில் ஒலிக்காக எந்த அளவிற்கு உழைத்தீர்கள்?

நிறைய கவனம் எடுத்துக்கொண்டோம். சில மலைகளும் குவாரிகளும் சத்தங்களால்தான் நிறைந்திருக்கும். அந்த சத்தங்களையும் மக்களின் குரலையும் ஒருசேர கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் படத்தில் நிறைய மௌனத்தையும் வைத்தோம். அந்த மக்களின் நினைவுகளில் அந்த சத்தங்கள்தான் நிறைந்திருக்கும். இயல்பான நகர் சார்ந்த சத்தங்கள் இல்லாததால அந்த மலைச்சத்தங்களை எளிதில் எடுக்க முடிந்தது. ஆனால் காற்று அங்கே அதிகமாக இருக்கும். அதனிடையே சத்தங்களை பதிவு செய்வது கடினம். அதற்கான எல்லா முயற்சிகளை ஆர்.ஆர் .சீனிவாசன் தெளிவாக எடுத்தார். படத்தின் கதைசொல்லலும் சரி, ஒளிப்பதிவும் சரி, ஒலிப்பதிவும் சரி, நிலப்பரப்பை மையமாக வைத்தே நகரும். நிலப்பரப்புதான் எல்லாவற்றையும் பேசுகின்றது என்பதை படம் பார்த்துமுடித்தவுடன் உங்களால் புரிந்துகொள்ள முடியும். நாங்கள் திட்டமிட்டு அப்படி எடுத்தோம்.

சில இடங்களில், பேசும் கருத்து வேறாகவும் காட்சிகள் வேறாகவும் இருப்பதாக தெரிந்ததே...

இல்லை. எங்களிடம் அபரிதமான காட்சிகள் இருந்தன. எந்த இடங்களுக்கெல்லாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோமோ அங்கெல்லாம் தான் அந்த காட்சிகளை பயன்படுத்தியிருந்தோம். குறிப்பாக குழந்தைகள் கல்லுடைப்பது போன்றவை....படத்தில் பெரியவர்கள் நிறைய பேர் பேசியிருப்பார்கள். ஆனால் அந்த சமூகத்தின் குழந்தைகள் எப்படியிருக்கிறார்கள், எத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதில்தான் படம் முடியும்.

ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினையை படமாக்கும்போது, படத்தொகுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இப்படத்தின் படத்தொகுப்பில் என்ன நோக்கத்துடன் அமர்ந்தீர்கள்?

நரேஷன்தான். உலகத்திற்கு புனைவு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். சமகாலத்தில், நமது மனம் துயரமானதாகவும், இருளடைந்ததாகவும் இருக்கு. குறிப்பாக அரசுக்கும் மக்களுக்கும் கடுமையான இடைவெளியும், அதிகார பின்புலத்தில் அழுத்தம் தரக்கூடிய நிறைய சம்பாஷனைகளும் தினமும் நடக்கிறது. மனிதனின் சகிப்புத்தன்மை மிகவும் வலுப்பெற்றுக்கொண்டே இருக்கிறது. அவனுக்கு புத்துயிர் கொடுக்கக் கூடியதும், நம்பிக்கை தரக்கூடியதுமான ஒரே விஷயம், புனைவு என்கிற படைப்பாக்க வடிவம்தான். அதை இந்தப் படத்தில் லேசாக செய்திருக்கிறேன். கள ஆய்வு சார்ந்து அதை மென்மையாக படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன். பேச்சுகள், மௌனம் முதற்கொண்டு, சில இடங்களில் அவர்கள் அழுவார்கள். கண்ணில் தேங்கி நிற்கும் கண்ணீர் விழும் வரை காத்திருக்கவேண்டும். அதில்தான் நிறைய உரையாடல்கள் உள்ளன. அந்த வெளியை படத்தில் நாங்கள் ஏற்படுத்தினோம். மிக்கடினமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பில் வாழும் அந்த மக்களின் சூடு படத்திலும் வர வேண்டும் என்று மெனக்கிட்டோம். புனைவை வேறு வேறு வடிவங்களில் செயல்படுத்திப் பார்க்கும் காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

அந்த பகுதியின் ஊடகங்கள் இந்த பிரச்சினை குறித்து போதிய கவனம் எடுத்தனவா? அதைக் குறித்த பதிவும் படத்தில் வந்திருக்கலாமே?

இல்லை. ஊடகங்கள் அனைத்தும் முதலாளிகளின் கைகளில்தான் இருந்தன. அவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேச மாட்டார்கள். பணத்தின் வழியாகவும், அதிகாரத்தின் வழியாகவும், செல்வாக்கின் வழியாகவும் எல்லா முதலாளிகளும் ஊடகங்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொள்வர். மேலும் நிறைய முதலாளிகள் அரசியலிலும் தொடர்புடையவர்களாக இருப்பர். அவர்களுக்கு இந்த குவாரி வருமானம் உபரி வருமானம்தான். எனவே ஊடகங்கள் இந்த விஷயத்தை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த பிரச்சினையை நான் மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். திரையிடல்களில் வந்த எதிர்வினைகள், நண்பர்களின் ஆலோசனைகள் இவற்றை முன்வைத்து. இப்படம் விரிந்துகொண்டே சென்றது. திருச்சி, புதுக்கோட்டை சார்ந்தும் இப்படத்தை செய்ய வேண்டும் என்று நிறைய மக்கள் சொன்னார்கள். இதை மேலும் விரிவுபடுத்தி மறுவடிவமைப்பு செய்ய விரும்புகிறோம். ஆனால் எந்தளவிற்கு அது சாத்தியம் என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் போன்றோரையும் பேச வைக்க வேண்டும்.

ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதைதான் முழு வடிவம் தருகின்றது. அது போல் ஒரு ஆவணப்படத்திற்கு எது முக்கியமான அடித்தளம்?

கள ஆய்வுதான். ரொம்ப முக்கியம். கள ஆய்வு இல்லாம கேமிராவை அந்த இடத்தில் வைத்தால் எல்லாம் தவறாகத்தான் முடியும். ஒரு சமூகத்தின் பண்பாட்டு உள்ளீடுகளை கள ஆய்வின் மூலமாகத்தான் நாம் புரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு மனிதனும் ஒரு பண்பாட்டுக் பொதிதான். எனவே ஒரு மனிதனின் கதையைத் தேடிப்போனால் நிறைய பண்பாட்டு இடைவெளிகள் இருக்கும். அந்த இடைவெளியை புரிந்துகொள்ள கள ஆய்வு மிக அவசியம். இன்றைய மனிதன் பண்பாட்டுத் தெளிவற்றவனாகத்தான் இருக்கிறான். அதுதான் நிறைய ஒடுக்குமுறைகளை உருவாக்குகின்றது. உங்கள் பண்பாடை நீங்கள் புரிந்துவைத்திருப்பது போல் சுற்றியுள்ளவர்கள் பண்பாட்டை பற்றிய புரிதலையும் மரியாதையையும் கொண்டிருக்கவேண்டியது மிகவும் அவசியம். இன்றைய மனிதன் எதிர்நோக்கி இருப்பது பண்பாட்டுப்போர். எனவே ஆவணப்படங்களக்கு மிகவும் அவசியம், கள ஆய்வு.

இப்படத்தின் ஒளிப்பதிவு மிகவும் அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் இருந்தது. அதற்கான திட்டமிடல்கள் பற்றி...

ஆர்.ஆர். சீனிவாசனும் அவரது குழுவினரும் தந்த உழைப்பு அது. முதலில் அழகு என்பது அந்த மக்களின் வெளி சார்ந்த அழகியல் தான். அது மிகவும் மிகையாகவும் இருக்கக் கூடாது என்று நினைத்தோம். அதே சமயம் அந்த மக்களின் மூர்க்கமான முடிவற்ற உழைப்பும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு ஒளிப்பதிவுக் குழு மிகவும் ஒத்துழைத்தார்கள். மாறன் என்ற நண்பரும் ஒளிப்பதிவுக் குழுவில் இருந்து நிறைய சிரமங்களைத் தாங்கிக்கொண்டு உழைத்தார். நிறைய சிரமம் ஒளிப்பதிவுக் குழுவிற்குத்தான் இருந்தது. கேமிராவைத் தூக்கிச் செல்வது, மலைகளில் ஏறிச்செல்வது உள்ளிட்ட நிறைய சிரமங்கள். அதையெல்லாம் தாங்கிக் கொண்டு உழைத்தனர். அவர்களின் உழைப்பு மிகவும் ஒத்துழைப்புமிக்கது.

படத்தில் ஒரு லாரி விபத்து வருகிறதே...

அது எதிர்பாராமல் நடந்தது. நாங்கள் அந்த இடத்தில் இருந்தோம். விபத்துகளைப் பற்றி மக்கள் எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். விபத்துகளைப் பற்றி முதலாளிகள் எதுவும் கண்டுகொள்ளவே மாட்டார்கள், பொருட்படுத்தவே மாட்டார்கள் என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். திடீரென சத்தம் வந்தது. ஓடிச்சென்று பார்த்தால், அங்கே விபத்து. அந்த லாரி சென்றதை நான் பார்த்தேன். சிறிது தூரத்தில் விபத்து. யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் நல்ல காயம்.

பொதுவாக ஒடுக்கப்படும் மக்களுக்கு தங்கள் யாரால், எப்படி, எவ்வளவு தந்திரமாக சுரண்டப்படுகிறோம் என்று தெரியாது. ஆனால் இந்த மக்கள் அத்தனையையும் தெளிவாகக் கூறுகின்றனர். அந்நிலையில், அந்த ஒடுக்குமுறைகளுக்கான அவர்களது எதிர்வினை என்ன?

அவர்கள் இப்போதுதான் சங்கமாக சேர்ந்திருக்கிறார்கள். அதன் மூலம் பலவற்றை சாதித்துள்ளனர். ஒரு தனி மனிதன் அதிகாரத்தினால் எதையும் சாதித்துவிட முடியாது. மக்கள் ஒருங்கிணைந்தே ஆகவேண்டும். தங்கள் கோரிக்கைகளையோ, பிரச்சினைகளையோ தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்தே ஆக வேண்டும். இதை நான் ஆதாரப்பூர்வமாகவும் நிதர்சனமாகவும் உணர்கிறேன். ஒருங்கிணையும் போது அவர்களின் அறியாமை அவர்களிடமிருந்து விடுபடுகிறது. இது மிகவும் முக்கியமான விஷயம்.

சில ஷாட்கள் மிகவும் நீளமாக இருந்ததே. என்ன காரணம்? குறிப்பாக பெண்கள் லாரியில் செல்லும் ஷாட்?

ஆமாம். பாலியல் வன்முறை பற்றி பேசியவுடன் வரும் அந்த ஷாட். அந்த இடத்தில் ஒரு அமைதியையும் பார்வையாளர்களுக்கு சிறிது நேரமும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த விஷயம் உங்கள் மனதில் பதிய வேண்டுமென்பதற்காக. ஒரு செய்தி முடிந்தது, அடுத்து என்ன என்று தாவிச் செல்லும் மனநிலையைத்தான் இன்றைய ஊடகங்கள் தயாரித்து வைத்திருக்கின்றன. எதனோடும் நாம் உரையாட விரும்புவதேயில்லை. அப்படியில்லாமல், அந்த பிரச்சினையுடன் நாமும் உரையாட வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான நேரம்தான் அந்த ஷாட்டின் நீளம்.

அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் இந்த பிரச்சினையில் எப்படியிருந்தது? அவர்களிடம் பேச முயற்சி எடுத்தீர்களா?

இல்லை. நான் சொன்னபடி மறுவடிவமைப்பில் இதையும் சேர்க்கவேண்டும் என்று நினைத்தேன். தமிழகத்தின் பொருளாதாரத்தை கட்டமைப்பதில் இம்மக்களின் பங்கு பெரிதளவு இருக்கின்றது. அதே சமயம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் ஆடும் கபடமும் அதிகமாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் நான் மக்கள் பக்கம் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். அதுதான் நடுநிலை. இரண்டு பக்கமும் இருப்பதல்ல நடுநிலை. கள ஆய்வில் நமக்கு யார் பக்கம் நியாயம் இருக்கிறது, யார் ஒடுக்கப்படுகிறார்கள் என்று தெரியவருகிறது. அவர்கள் பக்கம் நிற்பதுதான் நடுநிலை என்று நான் நம்புகிறேன்.

எல்லா போராட்டங்களுக்கும் கூட்டமைப்பு மிக முக்கியம். இவர்கள் போராட்டத்தில் இந்த கூட்டாக சேர்வது எந்தளவிற்கு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது?

ரொம்ப. சென்னையில் பேரணி எல்லாம் நடத்தியிருக்கிறார்கள். நிறைய விஷயங்களை அரசுக்கு தெரிவித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் அரசு வாக்குகளை மட்டும் தான் தந்துகொண்டிருக்கிறது. செயல்படவில்லை. என்னைப் பொறுத்தவரை, இந்த மக்கள் கூட்டமைப்பு, முதலாளிகள் மத்தியில் ஒரு சிறிய அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. அது மிகப்பெரிய விஷயம். முதலாளிகளுக்கும் இருக்கும் அரசியல், பண, அதிகார பலத்திற்கு முன், இத்தனை மக்கள் ஒன்றாக நின்று போராடுவதே பெரிய விஷயம்தான். ஒரு சிறிய அச்சம். ஒருத்தராக இருக்கும்போது என்ன வன்முறை வேண்டுமானாலும் அவன் மீது செலுத்தலாம். ஆனால் கூட்டமாக நிற்கும்போது அவர்மேல் கை வைக்க ஒரு சிறிய அச்சம் நிச்சயம் வரும். ஒரு உளவியல் மாற்றத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது. சங்கம் கேட்பது எதுவும் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் அதை தொடர்ந்த போராட்டங்கள் மூலம் வாங்கிவிடலாம் என்று அவர்கள் மிகவும் நம்பிக்கையோடும் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் இருக்கின்றனர்.

ஆவணப்படங்களில் இசை பயன்படுத்தப்படுகிறது. இந்த படத்தில் எல்லாம் இயல்பான சத்தங்களாகவே இருந்தன. அதைப்பற்றி...

எல்லாவற்றையும் நான் ஒலியாகத்தான் பார்த்தேன். எனக்கு இதுபோல் இசையை சேர்ப்பதில் ஈடுபாடு இல்லை. அது தமிழ் சினிமாவின் பாதிப்பு. இசையை எங்கு சேர்ப்பது, எங்கு எடுப்பது என்பதில் நமக்கு நிறைய குழப்பம் இருக்கிறது. சத்தமாகவே எல்லாவற்றையும் கேட்டு பழகிவிட்டோம். அதிலிருந்து விலகிப்போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன் இந்த மக்களுக்கு காதில் ஒரு சத்தம்தான் கேட்கும். கல் உடைக்கும் சத்தம் மட்டும்தான் பார்க்கும். அதுதான் அவர்களின் இசை.

இந்த படத்தை இந்த மக்கள் பார்த்தார்களா? அவர்களின் எதிர்வினை எப்படி இருந்தது?

நிறைய பேசினார்கள் செல்பேசியில். அவர்கள் தனியாக ஒரு டிவிடி வைத்திருப்பார்கள். அவர்கள் போட்டுப் பார்க்க, அவர்கள் சார்ந்த மக்கள் கூட்டங்களில் போட்டுக்காட்ட என்று படத்தை விஸ்தாரமாக்கிக் கொண்டே இருக்கின்றனர்.

எப்படி இதை செய்கின்றனர்? மின்சாரம் இல்லாத இடங்கள் என்று படத்தில் வருகிறதே...?

அதற்கெல்லாம் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு ப்ரொஜக்டர் உள்ளிட்ட எல்லாம் இது ஒரு பயணிக்கும் படமாகவே இருக்கிறது. அந்த மக்களின் விழிப்புணர்வுக்கான படமாக இதை அவர்களே மாற்றிவிட்டனர். அவர்களே அதைப்பார்த்து அழுது, என்னை அழைத்து பேசுவர். வேறு ஏதோ குவாரியில் இருப்பவர் அதை பார்த்து விட்டு, அடுத்த கிராமத்துககு நடந்து வந்து, என் எண்ணுக்கு அழைத்து பேசி அழுதிருக்கின்றனர். வடமாவட்டங்களில் படத்தை திரையிடப்பட்டபோது, எழுச்சியுடன் நிறைய பேர் பேசினர். இன்னும் நிறைய விஷயங்களை சேர்த்திருக்க வேண்டும் என்று நிறைய ஆலோசனை சொல்வர். இந்த படம் அவர்களை தூண்டிவிட்டிருக்கிறது.

முதலாளிகள் இப்படத்தை பார்த்தார்களா? குறிப்பாக படத்தில் பேசியிருக்கும் முதலாளி?

இல்லை. அதற்கான வாய்ப்பு இருந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். முதலாளிகளிடம் இந்த படத்தை எடுத்துப்போனார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் பக்கமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

சில இடங்களில் ஒரே காட்சிகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே...

ஆம். அதை நான் தெளிவாகத்தான் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த எதிரொலிக்காக. கடைசிக் காட்சியில் கூட ஒருவர் கல்லை எடுத்துப் போட்டு மேலே வந்துகொண்டிருப்பார். என்னுடைய நோக்கம் வெறும் அழகான காட்சிகளைக் காட்டுவதோ, ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்வதோ அல்ல. உங்களுக்கு அலுப்பூட்டுகிறது என்பதற்காக அந்த காட்சிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் நான் நினைக்கவில்லை. உங்கள் மனதில் ஒரு அழுத்தமான விஷயத்தை ஏற்ற வேண்டும் என்று நினைத்தேன். இப்படியொரு சமூகம் இருக்கின்றது. அதற்கொரு குரல் இருக்கின்றது. அதில் வலி இருக்கின்றது. அதற்கு நாம், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்பதுதான் எனது நோக்கம்.

யாருக்காக இந்த படம் எடுக்கப்பட்டதோ, அவர்களுக்கு இந்த படம் போய் சேர்ந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?

நான் இதில் எதிர்பார்த்தது வேறு. நடந்தது வேறு. ஊடகங்கள் இதை பெரிதும் கவனத்தில் கொள்ளும் என்று நினைத்தோம். அதற்கான எல்லா வேலைகளையும் செய்தோம். ஆனால் அவர்கள் இதில் மிகவும் உணர்வற்று இருந்தது. அதற்கு மிகவும் கவர்ச்சியான விஷயங்கள் தான் தேவைப்படுகின்றது. இதுபோன்ற விஷயங்களை அவர்கள் சமூகத்தின் மாற்று வடிவங்களாக பார்க்கின்றனர். ஆனால், அந்த மக்களுக்கான விழிப்புணர்வுக்கான ஒரு ஆயுதமாக இந்த படம் மாறியது. அந்த பிரச்சினைகளுக்கான எந்த ஆதாரத்தையும் நீங்கள் அழிக்க முடியாது. ஒரு படம் இருக்கின்றது. இதற்குப் பிறகு நிறைய தொண்டுநிறுவனங்கள் அவர்களைப் பற்றி படமெடுக்க அழைத்தனர். எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. இந்த படத்தில் எனக்கிருந்த ஈடுபாடும் சுதந்திரமும் வேறெதிலும் எனக்குக் கிடைக்குமென்று நான் நம்பவில்லை.

இந்த கல் மனிதர்களின் பிரச்சினைகளில் சாதி எந்தளவிற்கு புகுந்துள்ளது?

பொதுவாக இந்த வேலைக்கு தள்ளப்படுகிற மக்கள் தாழ்த்தப்பட்டவர்களாகத்தான் இருக்கின்றனர். கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த வேலையைத்தான் அவர்கள் செய்கின்றனர். இதிலிருந்து விடுபட்டு சமூகத்தின் மையத்திற்கு அவர்களால் வர முடியவில்லை. சமூகத்தின் விளிம்பிற்கும் அப்பாற்பட்டுதான் அவர்கள் இருக்கின்றனர். ஒரு அந்நியர்களைப் போலத்தான் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். வேறு சாதி படிநிலைகளில் இருப்பவர்கள், தங்கள் சாதிய அதிகாரத்தை பயன்படுத்தி, சமூகத்தின் அடுத்தடுத்த நிலைகளுக்குப் போய்விட முடியும். ஆனால் இவர்களுக்கு அந்த வாய்ப்பே இருக்காது. இந்த சாதியில் பிறந்துவிட்டு சமூகத்தின் மேல்தளத்திற்கு வர வேண்டிய அவசியம் உனக்கென்ன இருக்கிறது என்று விதிக்கிற மனோபாவம்தான் எல்லா மனிதர்களிடமும் இருக்கின்றது.

தங்கள் இருப்பிற்கான எந்த அடையாளமும் இல்லாத மக்கள் அவர்கள் என்றீர்கள். தங்கள் உரிமையையாவது அவர்கள் உணர்ந்திருக்கிறார்களா?

ஆமாம். சங்கம் அவர்களின் உரிமைகளை உணர்த்தியிருக்கின்றது. அதற்கான அடிப்படைத் தேவைகள் என்னென்ன என்று அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கான ஆணையம் கேட்டிருக்கின்றனர். ரேஷன் கார்டு கேட்கிறார்கள். இந்த நாட்டின் குடிமக்களாக ஆவதற்கு சில விஷயங்கள் தேவை. அதை போராடியாவது வெல்ல வேண்டும் என்பதில் அவர்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர்.

இந்த படம் எடுக்க எத்தனை நாளாகியது?

படப்பிடிப்பிற்கு மட்டும் ஒரு மாதமாகியது. ஆனால் படத்தொகுப்பிற்கு நிறைய நாட்கள் எடுத்துக்கொண்டேன். தங்கராஜ் என்று ஒரு படத்தொகுப்பாளர் வேலை செய்தார். மிக நுட்பமாக, பல வடிவங்களில் வேலை செய்தோம். மூன்று வடிவங்களில் படத்தை தொகுத்தோம்.

ஊடகங்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகள், தொழிலாளர்கள் மேல் கொண்டிருக்கும் எண்ணத்தை இந்த படம் மாற்றியிருக்கின்றதா?

ஒரு சிறிய அச்சம் கொடுத்ததாக நான் உணர்கிறேன். இந்த தொழிலாளர்கள் வேறு கட்டத்திற்கு சென்று விட்டார்கள். விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அடுத்து ஊடகத்தை சென்றடைகிறார்கள். ஆவணப்படம் என்பது நமது ஆழ்உணர்வுகளில் வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். அதை இந்த படம் செய்துகொண்டே தான் இருக்கிறது. காலம் மாற மாற இப்படத்தின் வீரியம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். தொழிலாளர்களின் நம்பிக்கையினால், முதலாளிகள் அவர்களைக் குறித்து சிறிய அச்சமும் எச்சரிக்கையும் கொண்டுள்ளனர். சில முதலாளிகள் தொழிலாளர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிற நிலைக்குக் கூட வந்திருக்கின்றனர். வெகு சிலர்.

தமிழ்நாட்டைப் போன்ற ஒரு சமூகத்தில் ஆவணப்படத்தின் முக்கியத்துவம் என்ன?

நாம் இன்னும் ஆவணப்படத்தை சரியாக பயன்படுத்தவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. நிறுவனங்கள் சார்ந்து ஆவணப்படங்கள் செய்யும் மனநிலையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். ஆவணப்படங்கள் செய்ய ஏன் அதிக பொருட்செலவு என்று பலர் கேட்கின்றனர். ஆனால் ஆவணப்படங்கள் நிறைய பொருட்செலவையையும் கோருவதுதான். அப்போதுதான் அதன் முழு பரிமாணமும் வெளிப்படும். அதைப்பற்றிய விழிப்புணர்வு வேண்டும். சமூக, அரசியல், பண்பாட்டு மாற்றத்திற்கு ஆவணப்படங்களை விட்டால் வேறு கருவியே கிடையாது. அதை நாம் இன்னும் செய்யவேயில்லை என்று நினைக்கிறேன். நிறைய இளைஞர்கள் குறும்படங்கள் பக்கம் திரும்பிவிட்டனர். ஆனால் சோமீதரன், அரவிந்தன், முருகன் போன்ற நிறைய இளைஞர்கள் மரண தண்டனை சார்ந்து, செங்கொடி பிரச்சினை குறித்து ஆவணப்படங்கள் செய்கின்றனர். ஆவணப்படங்கள்தான் தமிழகத்தில் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கிறேன். அது குறித்த ஒரு சிறிய பயிற்சி எடுத்துவிட்டு, அந்த வடிவப் புரிதல்களோடு படமெடுத்தால் அதன் முழு வீச்சை வெளிக்கொண்டுவர முடியும்.

நம் சமூகத்தில் ஆவணப்படங்களுக்கான வெளி இருக்கின்றதா? அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததற்கு என்ன காரணம்?

வணிக சினிமா நம் மனநிலையை ஆதிக்கம் செய்கிறது. அதன் பிம்பங்கள் நம் உளவியலை பாதிக்கின்றது. நீங்கள் இப்போது கேட்கும் கேள்விகளும், என் பதில்களும் கூட வணிக சினிமாவின் பாதிப்பில்தான் நாம் உரையாடிக்கொள்வோம். இந்த ஆவணப்படங்கள் வணிக சினிமாவை நோக்கி நம்மைக் கூட்டிப்போகும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் ஆவணப்படங்கள் அதற்கு எதிர்த்திசையில் செல்வது. அதனால்தான் நிறைய பேர் அதை உணர்ந்து அந்த திசையில் வருவதில்லை. வணிக சினிமா பக்கம் செல்கின்றனர். அதை உருவாக்கும் ஆளுமை, அரசியல் புரிதல் நிறைய வேண்டும். சமீபத்தில் நிறைய ஆவணப்படங்கள் மாற்றங்கள் செய்கின்றன. அமுதன், ஆர்.ஆர்.சீனிவாசன் போன்றோர் நிறைய படங்கள் செய்கின்றனர். ஆவணப்படங்கள் நம் சமூகத்திற்கு செய்ததை, தமிழ் சினிமா கூட செய்தது கிடையாது. ஏனென்றால் கருத்தியல் தெளிவு, அரசியல் தெளிவு அற்றவர்களிடம்தான் தமிழ் சினிமா இருக்கின்றது. அரைகுறையான கருத்தியல் உள்ளவர்களிடம் தான் தமிழ் சினிமா உள்ளது. இந்த பிரச்சினைகளை கையாளக்கூடிய களமும் தமிழ் சினிமாவில் இல்லை.

புனைவு இப்போது ஆவணப்படங்களிலும் வேண்டும் என்று சொன்னீர்கள். அதுபோன்ற புனைவுகள் இல்லாமல் இருப்பதுதான் ஆவணப்படங்களுக்கான குறைந்த வரவேற்பிற்குக் காரணமா?

புனைவுக்கு சில தன்மைகள் இருக்கு. உங்கள் ஆழ்மனதை அந்த விஷயத்தை நோக்கி இழுத்துப்போகும் தன்மை. அதுதான் அந்த படைப்பாக்க வடிவத்தில் செயல்பாடு. எல்லார்க்குள்ளும் கதை சொல்லும், கதை கேட்கும் ஆர்வம் இருந்துகொண்டே இருக்கு. உங்கள் ஆழ்மனது விரும்பும் அந்த வடிவில் நான் ஆவணப்படத்தைத் தரும்போது உங்கள் மனம் உங்களுக்கு முன் அதில் ஒன்றிவிடுகிறது. தமிழ்ச்சூழல் சார்ந்த புனைவை நோக்கி நாம் இன்னும் செல்லவே இல்லை. நிறைய குழப்பம் இருக்கிறது நமக்கு. இலக்கியத்தையும் சினிமாவையும் நாம் குழப்பிக்கொள்கிறோம். இரண்டும் வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இலக்கியத்தில் சாதித்ததை எல்லாம் சினிமாவிலும் சாதிக்க முடியும் என்பது ஒரு குருட்டுத்தனமான மூடநம்பிக்கை. இலக்கியத்தில் சொல்லப்படும் புனைவு வேறு. சினிமாவில் சொல்லப்படும் புனைவுக்கான மூலக்கூறுகள் வேறு. இந்த விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆவணப்படங்களை பெருவாரியான மக்களிடம் கொண்டுசெல்வது எப்படி?

இந்த நேர்காணல். இது கூட ஒரு முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். ஒரு சிறிய செய்தி உள்ளிட்டவை கூட மக்களிடம் ஆவணப்படங்களை எடுத்துச் செல்லும். தமிழ் ஸ்டூடியோவிலும் இப்படத்தை பதிவேற்றம் செய்தனர். அதில் படத்தை பார்த்துவிட்டு நிறைய பேர் பேசினர். எனக்குத் தெரிந்து என் வாழ்வின் ஒரு முக்கியமான படமாக இதை நான் பார்க்கிறேன். வணிக ரீதியான எந்த எதிர்பார்ப்பும் இந்த படத்தின் மூலம் எனக்கில்லை. ஆனால் ஒரு பெரும் தன்னிறைவை கொடுத்த படம் இது.

ஆவணப்படங்களுக்கான தயாரிப்பாளர்கள் கிடைப்பார்களா? இந்த படத்தில் அந்த சிரமங்கள் எப்படியிருந்தன?

இதிலும் சங்கம் சார்ந்து பணம் கொடுப்பதில் மிகவும் சிரமப்பட்டனர். சிறிய தொகைக்குள்தான் இந்த படத்தை நாங்கள் முடித்தோம். என்னுடையது உட்பட நிறைய நண்பர்களின் உழைப்பு பண எதிர்பார்ப்பு இல்லாதது. தோழர் ஞானமணி எங்கள் மீது கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கை, இந்த மக்கள் அந்த பிரச்சினைகளின் தாக்கத்தில் மிகவும் வெளிப்படையாக இருந்தது, இவை இரண்டும் பணம் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களைத் தாண்டி எதையும் செய்து, அவர்களை நோக்கி செல்லக்கூடிய துணிவை எனக்குக் கொடுத்தது என்று நம்புகிறேன்.

ஆவணப்படங்களை சந்தைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றதா?

நிறைய இருக்கின்றது. நாம் அதை செய்வதில்லை. நிறைய நெட்வொர்க் இருக்கின்றது. உலகம் முழுக்க தமிழர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுக்க ஆவணப்படங்களுக்கான தேவைகள் இருக்கின்றது. ஆனால் நாம் அதை தொடர்ந்து செய்வதில்லை. அதற்கான நிதி இல்லை என்பது ஒரு காரணம். அடுத்து ஆவணப்படங்களுக்கான நெட்வொர்க்கை உருவாக்குவதற்குள் வேறு விஷயத்திற்கு தாவிவிடுகிறோம். வணிக சினிமாவோ, அது சார்ந்த விருதுகள் போன்ற எதிர்பார்ப்புகளுக்கு தாவி விடுகின்றனர். சரியான நெட்வொர்க்கை அமைத்தால் நாம் நினைப்பதை விட அதிகமாகவே ஆவணப்படங்கள் செய்யும்.

பொதுவாக ஆவணப்படங்களில் அலுவலகத்திலேயோ, வேறு சில உட்புறங்களிலேயோ அமர்ந்து பேசுவார்கள். ஆனால் இதில் படம் நிகழும் களத்திலேயே அனைவரையும் பேசவைத்திருப்பது திட்டமிட்டு செய்ததா?

நிலவெளிதான் யதார்த்தத்தையும் உண்மையையும் உளவியலையும் சொல்ல முடியும். அவர்களை கூட்டி வந்து ஒரு அறையில் அமர்த்தி பேச வைத்தால் ஒரு வார்த்தை கூட வராது. தமிழ் இலக்கியம் என்பது திணை சார்ந்தது. நிலவெளி சார்ந்தது. அவர்கள் ஒட்டுமொத்த சிந்தனை, கதை சொல்லும் முறை எல்லாமும் நிலவெளி சார்ந்ததுதான். இதில் இருந்து நீங்கள் வெளியே போனாலே, மன ஓட்டங்கள் மாறிவிடும். சொல்லப்போனால் நின்றே போய்விடும். அந்தளவிற்கு நாம் நிலவெளியோடு பிணைக்கப்பட்டவர்கள். நாம் பிறந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு வந்தாலும் நம் கனவுகள், கற்பனைகள், அந்த நிலவெளியைச் சார்ந்தே இருக்கும். அது மிகவும் முக்கியம்.

ஒரு படைப்பாளியாகவும் தனிமனிதராகவும், படமெடுக்கும் முன்பும் பின்பும் உங்கள் மனநிலை எப்படியிருந்தது?

மிகவும் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தன் எடுக்கும்போது. அவர்கள் கூறும் பிரச்சினையைக் கேட்க வேண்டும், அதை தொழில் நுட்பத்தோடு இணைத்து பதிவு செய்ய வேண்டும் என ஒரு வகையான பேலன்ஸ் தேவைப்பட்டது. ஆனால் கள ஆய்வு இதற்கான தயாரிப்பு நிலையை எனக்குக் கொடுத்திருந்தது. உணர்ச்சிவசப்படாமல் பக்குவமாக அவர்களுடன் பேசும் மனநிலையை கொடுத்திருந்தது. இப்போதைய மனநிலை கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. சமூகம் உணர்ச்சியற்றுத்தான் இருக்கிறது. அதற்கு கவர்ச்சிகரமான விஷயங்கள்தான் தேவைப்படுகிறது. அதற்கு நம் மனம் பழகிவிட்டது. இதுவே மிகப்பெரிய வன்முறைதான். அதிலிருந்து நம் மனத்தை வெளியே கூட்டிப்போக வேண்டும். அதற்கே இன்னொரு படைப்பாக்க வடிவம் தேவைப்படுகிறது.

அந்த பிரச்சினை குறித்த உங்கள் கண்ணோட்டம் படத்திற்கு பின் மாறுபட்டதா?

இல்லை இல்லை. கூர்மைப்பட்டது. மக்கள் அவர்கள் போராட்டங்களில் அடுத்த கட்டங்கள் செல்வார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அவர்களின் திசை நோக்கிய ஒரு தெளிவும் புரிதலும் அவர்களிடம் இருக்கிறது. அதை நோக்கி அவர்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இந்த படம் எந்தவகையிலாவது உதவியிருந்தால் அதுவே படத்தின் வெற்றி எனக்கொள்வேன்.

இதுபோன்ற சமூக பிரச்சினைகள் சார்ந்தும், பொதுவிலும் உங்கள் அடுத்த திரை முயற்சிகள் என்ன?

நான் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறேன். வாய்ப்பைத் தேடி கதவை தட்டுங்கள் என மற்றவர்கள் கூறுவது போல் ஒன்றும் செய்வதில்லை. நான் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தில் மிகவும் கூர்ந்து, ஈடுபட்டு வேலை செய்துகொண்டு வந்தால் நிச்சயம் ஏதேனும் ஒன்று நடக்கும். திரைமுயற்சி என்றாலே, தயாரிப்பாளரிடம் சென்று கதை சொல்வது போன்ற முயற்சிகள் ரீதியா பார்க்கிறார்கள். ஆனால் செயல்பாடுதான் மிகவும் முக்கியம். செயல்பட்டுக்கொண்டே இருந்தால் அதன் அடுத்த கட்டத்தற்கு நீங்களே சென்று சேர்வீர்கள். திரைப்படம் என்பது அப்படிப்பட்ட முயற்சிதான். ஆனால் வாய்ப்பைத் தேடிப்போவது, கதவைத் தட்டுவது இவைதான் திரைமுயற்சி என்பது இளைஞர்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அதற்கான அடிப்படையான செயல்பாடுகளை யாரும் பார்ப்பதில்லை. நான் செயல்படுவதில்தான் கவனம் செலுத்துகிறேன். சமூகம் சார்ந்து நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதை மட்டும்தான் நான் செய்யப்போகிறேன். வணிகம், வெற்றி போன்ற இலக்குகளெல்லாம் கிடையாது. சமூகத்தோடு நான் தொடர் உறவு வைத்துக்கொள்கிறேன். தினமும் புதுப்பித்துக்கொள்கிறேன். பண்பாட்டு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மக்களைப் பற்றி நான் படித்துக்கொண்டே இருக்கிறேன். இது நாளை என்னை ஏதாவது செய்வதற்கு உந்தினால் அதை செய்வேன் என நம்புகிறேன்.

கல் மனிதர்கள் ஏதேனும் ஒரு இடத்தில் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறார்களா?

இல்லவே இல்லை. தைரியமாக, உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தாங்கள் தாழ்த்தி வைக்கப்பட்டுள்ளோம் என்பது தெரிகிறது. ஆனால் இதிலிருந்து மீண்டு விட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதற்கான பாதையும் திசையும் அவர்களுக்குத் தெரிகிறது. அதை நோக்கி பயணப்பட்டாக வேண்டிய கணம் வந்துவிட்டது என்று அவர்களுக்கு தெரிந்துவிட்டது. பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக கவிதைகள் உள்ளிட்ட இலக்கியத்தில் தீவிரமாக இருப்பவர்கள் திரைத்துறைக்கு வரும்போது, வடிவச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருக்கிறதே. அது குறித்து...

நான் 15 வருடங்களாக திரை சார்ந்தே இயங்கி வந்துள்ளேன். திரையிடல்கள், விவாதங்கள், உரையாடல்கள், திரைப்பட விழாக்கள், திரைக்கழகங்கள் உள்ளிட்டவைகளோடு பதினைந்து வருடங்களாக நான் ஈடுபட்டு வந்துள்ளேன். கவிதை என்பது இடையில் வந்ததுதான். திரை சார்ந்த ஊடக செயல்பாட்டாளராகத்தான் என்னை நான் நினைத்திருக்கிறேன் எப்போதும். கவிதை நடுவே எழுத ஆரம்பித்தேன். ஆனால் இனி திரை ஊடகம் சார்ந்துதான் இயங்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். அதே சமயம் நீங்கள் சொல்லும் விஷயத்தை நான் புரிந்துகொள்கிறேன். இலக்கியத்திற்கும் சினிமாவிற்குமான குழப்பத்தை நான் புரிந்துகொள்கிறேன். சினிமாவை நோக்கி சென்ற இலக்கியவாதிகள் தோல்வியடைந்திருக்கிறார்கள். அதை சமீப காலத்தில் யதார்த்தமாக நாம் பார்க்கிறோம். சினிமா என்பது தொழில் நுட்பமும் கலையும் சேர்ந்த ஒரு விஞ்ஞானம். அதற்கு இலக்கிய ஆளுமை மட்டும் போதாது. அது பெரிய பற்றாக்குறை. அது ஒரு முட்டுச்சந்தில்தான் போய் நம்மை நிறுத்தும். ஒட்டுமொத்த மானுடத்திற்கான ஆழ்மன வெளிப்பாட்டிற்கான ஒரே ஊடகம் திரை ஊடகம்தான். அந்த பிரம்மாண்டத்தையும் உணர்ந்து, அது நம்மிடம் கேட்பதை தரும் வல்லமையும் தெளிவும் நம்மிடம் வேண்டும். அதற்கு தமிழ்ச் சூழலில் இருக்கும் இலக்கிய படைப்பாளுமை போதவே போதாது. அதிலிருந்து நாம் வெளியே வர வேண்டும்.

ஒரு படைப்பாளியாக திரை ஊடகத்தில் எப்படிப்பட்ட படைப்பைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

வணிகம் சார்ந்த சினிமா உருவாகிக்கொண்டு இருக்கிறது. மிடில் சினிமா என்றவொன்றும் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு முக்கியமான விஷயம், கருத்தியல் தெளிவு. இன்றைய இயக்குனர்கள் சிலர் கருத்தியல் ஆழமிக்கவர்களாகவும், மக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்பவர்களாகவும், அரசியல் தெளிவுடனும் இருக்கின்றனர். ஆனால் நிறைய பேர் அரைகுறை புரிதல்களோடு இருக்கின்றனர். மக்கள் பிரச்சினைகளை பேசுகின்றனர். ஆனால் அது மக்களுக்கே எதிரானதாக இருக்கின்றது. இன்னும் கருத்தியல் தெளிவுடன் அவர்கள் இருத்தல் வேண்டும். ஒன்று அது போன்ற விஷயங்களைத் தொடாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் முழு கருத்தியல் தெளிவோடு இருக்க வேண்டும். கடந்த மூன்று வருடங்களில் அரசோடு மல்லுக்கு நிற்பவர்களாக, நிறைய விஷயங்களில் தமிழக மக்கள் ஒரு ஒருங்கிணைப்புக்கு வந்துவிட்டார்கள். குறிப்பாக மரண தண்டனைக்கு எதிராக, ஈழப் போராட்டங்களில், கூடங்குளம் போன்ற பிரச்சினைகளில் மக்கள் கூட்டம் அரசோடு மல்லுக்கட்டுகிறது. இந்நிலையில் கருத்தியல் தெளிவில்லாமல் பிரச்சினைகளை நீங்கள் கையாண்டால் அது உங்களை சறுக்கி விட்டுவிடும். வணிக சினிமா, பெரும் முதலீடு என்பதையெல்லாம் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதில் கருத்தியல் தெளிவில்லாமல் இருந்தால் அது உங்களை கைவிடுவதோடு மட்டுமல்லாமல் அதை நம்பி பின்னால் காத்திருப்பவர்களையும் பாதிக்கும். கருத்தியல் தெளிவும் அரசியல் புரிதலும் துணிவும் இருந்தால் மட்டுமே ஒரு பிரச்சினையைத் தொட வேண்டும். இல்லையென்றால் அதைத் தொடாமல் வெறும் புனைவைத் தொட்டு விட்டுப் போவதே மேல். இதுதான் அனைத்து திரைப் படைப்பாளிகளுக்கும் எனது வேண்டுகோள். நானும் அப்படிப்பட்ட ஒரு படைப்பாளியாகத்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இருப்பேன்.

கல் மனிதர்களின் வாழ்வை அந்த சூட்டோடே சித்தரிக்கும் படம் கல் மனிதர்கள். கூர்ந்து பார்த்தால் இந்த நேர்காணலில் இந்த படத்தைப் பற்றி, அதன் உள்சொல்லல்கள் பற்றி, போக்கு பற்றி, காட்சிகள் பற்றி அதிகம் கேள்விகள் எதுவும் இருக்காது. ஆம். கல் மனிதர்கள் படிக்கப்பட வேண்டிய படம் மட்டுமல்ல. பார்க்கப்படவேண்டிய படம். நிச்சயம் தவறாமல் பாருங்கள்.

நன்றி - பெசாமொழி
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்