/* up Facebook

Jan 27, 2013

மொழிபெயர்ப்புத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு: சில குறிப்புக்கள்“ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் அனுபவத்தினை சான்று பகரும் ஆய்வறிவாளரைப் போன்று எழுத்தாளருக்கும் ஒரு சிறப்பான, குறியீட்டுப்பாங்கான பாத்திரம் உண்டு. இவ்வாறு சாட்சி பகிர்வதன் மூலம் அந்த அனுபவத்திற்கு ஒரு பொது அடையாளம் இடப்படுவதுடன் பூகோள ரீதியாக மேற்கொள்ளப்படும் சொல்லாடலில் அது என்றென்றும் பொறிக்கப்படும்” என்கின்றார், எட்வர்ட் ஸயீட். அந்த வகையில், பன்மொழிச் சூழலில் ஒரு மொழி சார்ந்த மக்களின் வாழ்வியல் அனுபவங்களை, அம்மொழி சார்ந்த சமூகக் குழுமத்தின் கலாசாரக் கூறுகளை மற்றொரு மொழியில் தரும் மொழிபெயர்ப்பாளருக்கும் அத்தகைய சிறப்பான, குறியீட்டுப்பாங்கான பாத்திரம் உண்டு என்று நாம் துணிந்து கூறலாம்.

ஒருவர் தன்னுடைய சமூகத்துக்கோ நாட்டுக்கோ ஏன், உலகத்துக்கோ ஏதேனும் ஒரு வகையில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்யும்போது, அவர் வரலாற்றின் பங்குதாரர் ஆகின்றார். அந்த வகையில், ஒருவரின் மொழி சார்ந்த பங்களிப்புக்கள் தனித்துவமான சிறப்பைப் பெறுகின்றன. காரணம், மொழி என்பது வெறுமனே ஒரு தொடர்பாடல் கருவி என்பதற்கு அப்பால், தான் சார்ந்த சமூகத்தின் கலாசாரம், அதன் பண்புக்கூறுகள், அதன் வரலாறு முதலான அனைத்தையும் தன்னுள் பொதிந்துவைத்துள்ள ஒரு கருவூலமாகக் காணப்படுவதே! எனவேதான், ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ஒரு விடயத்தைக் கொண்டு செல்லும் ஒரு மொழிபெயர்ப்பாளர் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவர் ஆகின்றார். தன்னுடைய பணி மூலம் அவர் பின்வரும் அடைவுகளை எய்துகின்றார்:

• தன்னுடைய மொழியை வளப்படுத்துகின்றார்

• அறிவியல், தொழினுட்பம் முதலான பல்துறை வளர்ச்சிக்கு வித்திடப்படுகின்றது

• இரு சமூகங்களுக்கு இடையில் ஒரு பாலமாக இருந்து பரஸ்பரப் புரிதலுக்கு வழியமைக்கின்றார்

• தேசிய ஒருமைப்பாடும் இன ஐக்கியமும் வலுப்படுத்தப்படுகின்றது.இதனையே, த. கோவேந்தன் குறிப்பிடும்போது, “உண்மையில் மொழிபெயர்ப்பின் – மொழியாக்கத்தின் குறிக்கோள் என்ன? நாட்டு மக்களை மேம்படுத்தவும், ஒன்றுபடுத்தவும், ஒருமைப்பாட்டை, உலகின் உறவினை உருவாக்கவும் உதவும் ஓர் ஏதுவாகும். நாள்தோறும் வளர்ந்துவரும் எண்ணச் செழுமைகளைக் கொள்வதும் கொடுப்பதுமாகும். மூலமொழிக்கும் இலக்கு மொழிக்கும் பாலம் அமைப்பதற்கு ஒப்பாகும். மொழிக்கும் பிறமொழி(களு)க்கும் இருக்கும் தடைகளை நீக்கிச் சமூகத்தில் கருத்துறவு ஏற்படுத்துவதே தலையாய குறிக்கோளாகும்” என்று வலியுறுத்துகின்றார்.

இலங்கை போன்ற பல்லின, பல கலாசார, பன்மொழிச் சூழலில் மொழிபெயர்ப்பின் தேவை மிக இன்றியமையாததாகும். குறிப்பாக, மிக மோசமான இன முரண்பாட்டின் இரத்தக் கறை படிந்த ஒரு வரலாற்றை உடைய ஒரு நாட்டில், சமூகங்களுக்கு இடையே நல்லுறவையும், பரஸ்பரப் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுக் கடமை இளம் தலைமுறையினரான நம் கைவசம் தரப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்களாகிய நம்மிடம் உள்ள மிகப் பெரிய கொடை, நமது பன்மொழி அறிவு என்றால் அது மிகையல்ல. அந்தக் கொடை மூலம் அன்றும் இன்றும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம், நம் தாய்த்திரு நாட்டுக்கு அபரிமிதமான சேவைகளை ஆற்றி வந்துள்ளோம். அந்த வரலாற்றை அறிந்து பதிவுசெய்து ஆவணப்படுத்துவதும், அதன் ஒளியில் எதிர்காலத்திலும் சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வகையில் நம்முடைய பயணப் பாதையைக் கட்டமைப்பதுமே இந்த ஆய்வுக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

மொழிபெயர்ப்பும் இலங்கை முஸ்லிம்களும்

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் சமூகக் குழுமங்கள் தத்தமது மொழியை மையமாக வைத்து தமிழர், சிங்களவர், கன்னடர், தெலுங்கர், மலையாளி என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். எனின், இலங்கை முஸ்லிம்களின் நிலைமை சற்று வித்தியாசமானது. இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமது தாய்மொழியாகத் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளைப் பெரும்பான்மையாகவும், ஜாவா மொழியைச் சிறுபான்மையாகவும் கொண்டுள்ளனர். அத்தோடு, ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் மொழி ரீதியாக சிங்களவர் என்றோ, தமிழர் என்றோ பொதுமையாக அடையாளப்படுத்தப்படாமல், இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முஸ்லிம்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். இந்நிலைமையின் எதிர்மறைச் சிக்கல்களுக்கு அப்பால், இலங்கை மண்ணைப் பொறுத்தளவில் சமூகங்களுக்கு இடையிலான இடைத்தொடர்புகளைக் கூர்மைப்படுத்தி, பரஸ்பர நல்லிணக்கத்தை இறுக்கமாக்குவதில் முஸ்லிம்கள் மிகப் பிரதானமான பங்காளர்களாய்த் தொழிற்பட முடியும்; இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் முஸ்லிம்கள் மீது சாட்டப்பட்டுள்ள சமூகக் கடமை/தேசியக் கடமையை நிறைவேற்றத்தக்க அந்த வரலாற்றுப் பணியைச் செய்துமுடிக்க முடியும் என்ற உண்மையையே மொழிசார்ந்த இப் பன்முக ஆளுமை நமக்கு உணர்த்துகின்றது எனக் கொள்வது பயனுடைத்து. இந்த இலக்கை அடைவதில் மொழிபெயர்ப்புப் பணிகள் பெரும் பங்காற்ற முடியும்.

புராதன இலங்கையில் சிங்கள – தமிழ் மொழிகளுக்கு இடையிலான பரஸ்பரத் தொடர்புகள் விதந்துரைக்கத்தக்க நிலையில் இருந்தாலும் காலப்போக்கில், குறிப்பாக இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் படிப்படியாகக் குறைந்துசெல்லத் தொடங்கின. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட “சிங்களம் மட்டும்” சட்ட அமுலாக்கம் இந்நிலையை மேலும் தீவிரப்படுத்தியது. தமிழ்பேசும் மக்கள் சிங்கள மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகினர். இந்தப் பின்னணியில், சிங்கள – தமிழ் சமூகங்களுக்கு இடையே பரஸ்பரக் கலந்துரையாடலை ஏற்படுத்துதல், கலை இலக்கியச் செல்வங்களைப் பரிமாற்றம் செய்தல், தமது சமயம் பற்றிய புரிதலை ஏற்படுத்த முனைதல் முதலான பல்வேறு நோக்கங்களுடன் இலங்கை முஸ்லிம்கள் அதிகளவான மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்ற இலங்கை முஸ்லிம்களின் மொழிபெயர்ப்புக்களை நாம் பின்வரும் பிரதான வகைப்பாட்டுக்குள் அடக்கலாம். அவையாவன:

• அரச நிர்வாகத்துறை, கல்வித் துறை சார்ந்த ஆவணங்கள் மற்றும் நூல்களின் மொழிபெயர்ப்பு

• சமய நூல் மொழிபெயர்ப்பு

• ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பு

• சமூகவியல் ஆய்வு, வரலாறு மற்றும் கலைத்துறை சார்ந்த மொழிபெயர்ப்புக்கள்முதல் வகைமையைப் பொறுத்தவரையில், அரசாங்க ஊழியர்களாய்ப் பணிபுரிந்த முஸ்லிம்களில் பலர் சிங்களம்-தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தாம் பெற்றிருந்த தேர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு மொழிபெயர்ப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய மொழிபெயர்ப்புக்களில், பேராசிரியர் அல்லாமா உவைஸின் மொழிபெயர்ப்பு நூல்கள் முக்கியமானவை. அவர், டி. என். தேவராஜனின் “வர்த்தக எண் கணிதம்” எனும் நூலை “வாணிஜ அங்க கணிதய” எனும் பெயரில் தமிழில் இருந்து சிங்களத்துக்கும், ஐ. டி. எஸ். வீரவர்தனவின்  “இலங்கைப் பொருளாதார முறை”, ஐ. டி. எஸ் வீரவர்தனவின் “பிரித்தானிய யாப்புமுறைமை”, எஃப். ஆர். ஜயசூரியவின் “பொருளியல் பாகுபாடு” ஆகிய நூல்களைச் சிங்களத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்துள்ளார். அவ்வாறே, பிரபல இடதுசாரி எழுத்தாளரான எச். என்.பி. முகையித்தீன் “கிமில்சன்” தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இடதுசாரிக் கொள்கை சார்ந்த ஆக்கங்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்.

மேலும், இலங்கையின் தலை சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவரான பண்ணாமத்துக் கவிராயர், “சோவியத் நாடு” தமிழ்ச் சஞ்சிகைக்காக ஏராளமான மொழிபெயர்ப்புக்களைச் செய்துள்ளார்.  அபூதாலிப் அப்துல் லதீஃபும் பல்வேறு இடதுசாரிக் கொள்கை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளதாய் அறியக்கிடைக்கின்றது. சிங்கள-தமிழ் அகராதி முயற்சிகளின் மூலம் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள எம். எச். எம். யாகூத், பௌதீகவியல், இரசாயனவியல் சார்ந்த நூல்களை சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

இத்துறை சார்ந்து குறிப்பிடத்தக்க மற்றொருவர், இலங்கை மக்கள் வங்கி தமிழில் வெளியிட்ட “பொருளியல் நோக்கு” சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய எம். எல். எம். மன்சூர். அவர், அச்சஞ்சிகையில் வெளியான பொருளியல்/வர்த்தகம் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார். அத்துடன், “கூட்டங்களை முகாமைப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைகள்” எனும் நூலை லறீனா அப்துல் ஹக், எம்.எச். எம். ஃபிர்தவ்ஸ் ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குத் தந்துள்ளனர்.

சமயநூல் மொழிபெயர்ப்பு

இஸ்லாமிய சமயக் கோட்பாடுகளைத் தெளிவுறுத்தும் வகையில் அரபு, ஆங்கிலம் முதலான மொழிகளில் இருந்து தமிழ், சிங்கள மொழிகளுக்குப் பலநூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அனேகமான சந்தர்ப்பங்களில் அரபு மொழியில் அமைந்துள்ள மூலநூல்கள் ஆங்கிலம் வழி தமிழுக்கும் அதன்பின் தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும் மொழிபெயர்க்கப்படுவதுண்டு. அந்த வகையில், அரபு மூலநூலில் இருந்து நேரடியாகவே பல நூல்களை மொழிபெயர்த்தவர்களில் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் அவர்கள் மிக முக்கியமான ஒருவராவார். அவர், கலாநிதி ஸலாஹ் ஸாலிஹ் ராஷிதின் “ஆண் பெண் வேறுபாடு”,  யூஸுஃப் அல் கர்ளாவியின் “ஸகாத்: பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதன் பங்களிப்பும், அதன் வெற்றிக்கான நிபந்தனையும்”, “தௌஹீதின் யதார்த்தங்கள்”, “இறைவன் இருக்கிறான்”, “இறைதூதரும் கல்வியும்”, “பெண்களுக்கான ஃபத்வாக்கள்”, கலாநிதி நாதிர் நூரியின் “இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சிந்தனைகள்” உள்ளிட்ட பல்வேறு நூல்களைத் தமிழில் தந்துள்ளார்.

அவ்வாறே, ஏ. எம். எம். மன்ஸூர் (வெலம்பொட) அவர்கள் யூஸுஃப் இஸ்லாமின் நேர்காணலையும் இப்னு கல்தூனின் சமூகவியல் ஆய்வுக் கட்டுரையொன்றையும்  ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவ்வாறே,  எல். எம். மன்சூர் (பூவெலிகட) “இஸ்லாமும் மேலைய நாகரிகமும்” என்ற நூலை மொழிபெயர்த்துள்ளார். ஷஹீத் செய்யித் குதுப் அவர்களின் “எதிர்காலம் இஸ்லாத்திற்கே” என்ற நூலை ஏ. ஆர். எம். முபாரக் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பண்ணாமத்துக் கவிராயர் அவர்கள் அலி ஷரிஅத்தியின், “ஹஜ்: உலகளாவிய இயக்கத்தின் இதயம்” எனும் நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் அளித்துள்ளார்.

இலங்கையின் சிறந்த அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர் அல்லாமா உவைஸ் அவர்கள், இஸ்லாமிய சமயம் சார்ந்த பல்வேறு நூல்களையும் மொழிபெயர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அன்னார், மௌலானா மவ்தூதியின் ஆங்கில நூலையும் (“இஸ்லாம் யனு குமக்த?”), அப்துல் றஹீமின் “நபிகள் நாயகம்” (“நபி நாயக்க சரிதய”), அஷ்ஷெய்க் அப்துல் வஹாப் அவர்களின் “தித்திக்கும் திருமறை” (“அல்குர் ஆன் அமா பிந்து”) ஆகிய நூல்களைச்  சிங்களத்திலும், “முஹம்மது நபி (ஸல்) மனிதரில் தலை சிறந்தவர்கள்” எனும் நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்துள்ளார். மூன்று ஆங்கில மொழிச் சமய நூல்களை கதாமுது பாகம் 1,2,3 எனும் பெயரில் சிங்கள மொழியில் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களோடு, நிஃமத்துல்லாஹ் அவர்கள், டொக்டர் ஏ.எம் அபூபக்கரின் “பாலியலும் இஸ்லாமும்” எனும் நூலைச் சிங்களத்திலும், அல் அஸுமத் அவர்கள் பிலால் (றழி) அவர்களின் சுயசரிதையை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், ஏ.ஏ.எம். ஃபுவாஜி அவர்கள் “அய்மனின் தாய்” எனும் தமிழ் நூலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்கள். அதுமட்டுமின்றி, றம்ஸியா பாரூக் டொக்டர் எம். எல் நஜிமுத்தீனின் “இஸ்லாத்தில் குடும்பத்திட்டம்” (“இஸ்லாம் தர்மய சக பவுல்செலசும”) நூலைத் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்துள்ளார். அவ்வாறே, அபூ உபைதா அவர்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் தந்த “ஐயமும் தெளிவும்”, ஐ.எல்.எம். ஷஹாப்தீன் தமிழில் இருந்து சிங்களத்தில் தந்த “மெல்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு”, முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறான “ரஹீக் அல் மக்தூம்” என்பன குறிப்பிடத்தக்க வேறு சில மொழிபெயர்ப்புக்களாகும். இவர்களைத்தவிர, ஏ. எல். எம். இப்றாஹீம், எஸ். எம். மன்ஸூர், முஹம்மது ஹுஸைன், மௌலவி தாஹிர், என். எம். அமீன், சீ. எம். ஏ. அமீன், எம். ஷஃபீக், இப்னு ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் முதலான பலரும் இஸ்லாமிய சமயம் சார்ந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளில் மிக முக்கியமானவர்கள் எனலாம்.

ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பு மிகக் கடினமான ஒன்றாகும். எனவேதான், “கவிதை மொழிபெயர்க்கப்பட முடியாதது”என்கிறார், ரோமன் ஜெகொப்ஸன் (1987:434). எனினும், மொழிபெயர்ப்பில் ஏற்படக்கூடிய “இழப்பினை” முடியுமானவரை குறைத்து, ஏராளமான மொழிபெயர்ப்புக்கள் எழுந்துள்ளன. ஒரு மொழியில் உள்ள கலைக் கருவூலங்களை, அறிவியல் செல்வங்களை மொழிபெயர்ப்பு வழியே பெறக்கூடிய பாக்கியத்தைப் பெற்றுள்ளோம். அந்த வகையில், கவிதை, புனைகதை, சிறுவர் இலக்கியம் முதலான ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பிலும் இலங்கை முஸ்லிகள் முத்திரை பதித்துள்ளனர். அவற்றைத் தனித்தனியே நோக்குவோம்.

கவிதை மொழிபெயர்ப்பு

இலங்கையில், கவிதை மொழியாக்கத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பங்காற்றியுள்ளனர். குறிப்பாக அல்லாமா இக்பாலின் கவிதைகளைப் பலர் மொழிபெயர்த்து அளித்துள்ளனர். அவ்வாறே பலஸ்தீன் கவிதைகளும் இலங்கையில் வெவ்வேறு மொழிபெயர்ப்புக்களைக் கண்டுள்ளன. அந்தவகையில், பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களின் பலஸ்தீன் மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழ்பேசும் நல்லுலகில் மிகுந்த கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, மூன்றாவது மனிதன் வெளியீடாக வந்த “பலஸ்தீனக் கவிதைகள்” (1981) பின்னர் விரிவாக்கப்பட்டு மூன்று பதிப்புக்களைக் கண்டமை குறிப்பிடத்தக்கது. அடையாளம் பதிப்பக வெளியீடான “மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்” (2008) மற்றொரு முக்கிய நூலாகும். ஏ. இக்பால், ஜவாத் மரிக்கார் போன்றோரும் பலஸ்தீன் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளனர்.

அடுத்து, பண்ணாமத்துக் கவிராயர் (எஸ். எம். ஃபாருக்) ஒரு முன்னோடி மொழிபெயர்ப்பாளராய்த் திகழ்கின்றார். அவர், அல்லாமா இக்பால், நஸ்ருல் இஸ்லாம், ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ், தெலுங்கானாக் கவிஞர் மஹ்தூம் மொஹிதீன், பாகிஸ்தானியக் கவிஞர் இஃப்திகார் ஆரிஃப் ஆகிய கவிஞர்களின் கவிதைகளையும், மாயகோவ்ஸ்கியுடைய “லெனின்” என்ற நீள் கவிதையையும் (1967 இல் சோவியத் ரஷ்யாவில் வெளிவந்தது) தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். “காற்றின் மௌனம்” இவரது பிரபலமான மொழிபெயர்ப்புக் கவிதை நூலாகும். பண்ணாமத்தாரின் சமகாலத்தவரான அபூதாலிப் அப்துல் லதீஃபும் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் அவர்கள் மொழிபெயர்ப்புத் துறையிலும் தடம் பதித்துள்ளார். அவர், ஏ. ஸீ. எஸ் ஹமீத் எழுதிய “த ஸ்பிங் ஒஃப் லவ் அன்ட் மெர்ஸி” எனும் கவிதைத் தொகுதியையும் (“அன்பின் கருணையின் பேரூற்று”), அல்லாமா இக்பாலின் ஜவாபே ஷிக்வாவையும் (“அல்லாஹ்விடம் முறையீடும் பதிலும்”) ஆங்கிலம்வழி தமிழிலே,  முழுக்க மரபுக்கவிதை வடிவிலே தந்துள்ளார்.

அப்துல் காதிர் புலவர் இக்பாலின் ஜாவீது நாமா (1989), உமர் கைய்யாமின் ருபைய்யாத் என்பவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எஸ். எம். ஏ. ஹஸன் (ஒராபி பாஷா) அவர்களும் “இக்பால் வாழ்க்கை வரலாறு” நூலின் 70 வீதமான கவிதைகளை மொழிபெயர்த்துள்ளதோடு, இக்பாலின் “ஹுத்யீ” எனும் புகழ்பெற்ற படைப்பை ஆங்கிலம் வழியே தமிழில் தந்துள்ளார். அவ்வாறே, கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள், ஜவாபே ஷிக்வாவின் முக்கிய கவிதைகள் உட்பட அல்லாமா இக்பாலின் பல கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

அஷ்ரஃப் ஷிஹாப்தீன் அவர்கள் ஈராக்கியக் கவிஞர் ஜமால் ஜூமாவின் 'உன்னை வாசிக்கும் எழுத்து' (2007) எனும் நெடுங்கவிதையை மொழிபெயர்த்து அளித்துள்ளார். இப்னு அஸுமத் அவர்கள் ஏராளமான சிங்களக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். அவ்வாறே ரிஷான் செரீஃப் சிங்களத்தில் இருந்து தமிழுக்குக் கவிதைகளைத் தரும் மிக முக்கியமான இளந்தலைமுறைப் படைப்பாளி ஆவார். இவர் ஃபஹீமா ஜஹானுடன் இணைந்து மொழியாக்கம் செய்துள்ள மஞ்சுள வெடிவர்தனவின் "மாத்ருகாவக் நெதி மாத்ரு பூமிய -தெமல கவி" எனும் நூல் ஃபிரான்ஸில் வெளிவரவுள்ளது. ஃபஹீமா ஜஹான் சிங்களக் கவிதைகள் பலவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ஹெம்மத்தகம நியாத் ஆங்கிலக் கவிதைகள் பலவற்றைத் தமிழில் வழங்கியுள்ளார்.

இலங்கையின் முஸ்லிம் பெண் மொழிபெயர்ப்பாளர்களில் கெக்கிராவை சுலைஹா முக்கியமானவர். அவர் ஆங்கிலக் கவிதைகள் பலவற்றைத் தமிழாக்கிப் படைத்த “பட்டுபூச்சியின் பின்னுகை போலும்” எனும் நூல், 2009 சாகித்திய மண்டலப் பரிசு, 2010 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருது ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர், 2011 ஆம் ஆண்டு “இந்த நிலம் எனது” பஞ்சாபி வழி ஆங்கிலக் கவிதைகளை ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர் நலன்கருதித் தமிழாக்கியுள்ளார். இந்த வரிசையில், ஆங்கிலம்/சிங்களம் ஆகிய இருமொழிகளில் இருந்தும் கவிதைகளைத் தமிழாக்கியுள்ள லறீனா அப்துல் ஹக்கின் “மௌனத்தின் ஓசைகள்” (2008) தொகுதியும் ஒன்றிணைகின்றது.

இளம்தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களுள் நம்பிக்கை தரும் படைப்பாளியாகத் திகழும் மற்றொருவர் ஏ. ஸீ. எம். ரஸ்மின். இவர், 1983 க்கு பிறகு சிங்கள இசைப்பாடல்களில் இலங்கையின் இன முரண்பாடுகள் தொடர்பான பதிவுகளை ஆய்வுசெய்துள்ளதோடு, அதற்குத் தேவையான கவிதைகளை மொழியாக்கமும் செய்து “நாளையும் மற்றொருநாள்” (2008) எனும் தொகுதியை வெளியிட்டுள்ளார். இவர்களோடு, தர்காநகர் ஸஃபாவும் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புனைகதை மொழிபெயர்ப்பு

புனைகதை எனும்போது, நாவல், சிறுகதை ஆகிய இரண்டும் கவனத்திற் கொள்ளப்படுகின்றன. ஆங்கிலம், சிங்களம், தமிழ், அரபு ஆகிய மொழிகளுக்கிடையில் பல்வேறு மொழிபெயர்ப்புக்கள் இடம்பெற்றுள்ளன. ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புக்களில் புனைகதைகளே அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன எனலாம். இப்பணியில் ஈடுபட்ட முன்னோடிகளான அல்லாமா உவைஸ், மார்ட்டின் விக்ரமசிங்ஹவின் “கம்பெரலிய” (“கிராமப் பிறழ்வு”) நாவலையும், பண்ணாமத்துக் கவிராயர், ‘சோவியத் நாடு’ தமிழ் சஞ்சிகைக்கு, மாக்ஸிம் கோர்க்கியுடைய “டெங்கோவின் இதயம்” முதலான சிறுகதைகளையும் தமிழாக்கியுள்ளனர். தீவிர இடதுசாரி எழுத்தாளரான எச். என்.பி. முகையித்தீன் ஆங்கிலச் சிறுகதைகள் பலவற்றைத் தமிழுக்கு அளித்த மற்றொருவர் எனலாம். இவருடைய பணிகளில் “கெமில்ஸன்” தமிழாக்கம் முக்கியமானது.

இலங்கையில் அதிகளவான ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புத் தொகுதிகளைத் தமிழில் தந்த பெருமைக்குரியவர் திக்வல்லை கமால் ஆவார். நாவல் மொழிபெயர்ப்புக்களில், தெனகம சிரிவர்தனவின், “குரு பண்டுரு” (“குருதட்சிணை”), விமலதாச முதாகேயின், “தயாசேனலாகே ஜயக்ஹிரஹனய”, (“வெற்றியின் பங்காளர்கள்”), டெனிஸன் பெரேராவின் “ஆகாசே மாளிகாவ” (“மலையுச்சி மாளிகை”), உபாலி லீலாரத்னவின் “பினிவந்தலாவ” (“விடைபெற்ற வசந்தம்”) (இந்நூல் தமிழ் ஊடாக மலையாளத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.), குணசேகர குணசோமவின் “காட்டுப்புற வீரர்கள்” என்பன முக்கியமானவை. அத்துடன், சிட்னி மார்கஸ் டயஸின் “பவசரண” (“தொடரும் உறவுகள்”), கமல் பெரேராவின் “திறந்த கதவு”, சுனில் சாந்தவின் “சுடுமணல்” என்பன இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதிகளாகும்,

காலஞ்சென்ற எம்.எச். எம்.ஷம்ஸ் அவர்கள், தெனகம சிரிவர்தனவின் “மித்ரயோ” (“நண்பர்கள்”) நாவலையும், சிங்களப் பாடல்கள் பலவற்றையும் தமிழாக்கியுள்ளார். அவ்வாறே, திக்வல்லை ஸஃப்வான் “ஒரே இரத்தம்” சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதியொன்றையும், எம். எச். எம். யாகூத் ரஞ்சித் தர்மகீர்த்தியின். “அஹச பொலவ லங்வெலா” (“சங்கமம்”),  “சருங்கலய” (“பட்டம்”) ஆகிய நாவல்களையும், ஏ. ஏ. எம். ஃபுவாஜி  பியதாஸ வெலிகன்னகேயின் “வீரர்களும் தீரர்களும்” நாவலையும் தமிழில் வழங்கியுள்ளனர்.

புகழ்பூத்த எழுத்தாளரான அஷ்ரஃப் ஷிஹாப்தீன் 10 அரபுச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்”(2012) எனும் தொகுதியாக வெளியிட்டுள்ளார். மேலும், பல அரபுச் சிறுகதைகளைத் தமிழில் தந்தவர்கள் என்ற வகையில், உஸ்தாத் எம். ஏ.எம். மன்ஸூர், ஏ.பி.எம். இத்ரீஸ் போன்றோர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

“நம் அயலவர்கள்” எனும் தொகுப்பில் எம். எல். எம். மன்சூர் (பூவெலிகட)  அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 11 சமகாலச் சிங்களச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதே தொகுதியில், லறீனா அப்துல் ஹக் சிங்களத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த 5 சிறுகதைகள் அடங்கியுள்ளன. மேலும், பேராசிரியர் எம். ஏ. நுஃமான், மார்ட்டிங் விக்கிரமசின்ஹ, குணதாச அமரசேகர, கருணா பெரேரா முதலான சிங்கள எழுத்தாளர்களின் சிங்களச் சிறுகதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மேலும், ஃபைஸ்தீன், மார்ட்டின் விக்ரமசிங்ஹவின் சிறுகதைகள் உட்பட பல சிறுகதைகளைத் தமிழில் தந்துள்ளார். நீள்கரை நம்பி (ஏ. எச். எம். இமாம்தீன்), புத்தளம் நாஸிர், செந்தீரன் ஸத்தார் ஆகியோர் பல்வேறு சிங்கள், ஆங்கிலச் சிறுகதைகளைத் தமிழாக்கியுள்ளனர்.

தமிழில் இருந்து சிங்கள மொழியில் ஆக்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பதிலும் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு விதந்துரைக்கத்தக்கதாய் அமைந்துள்ளது. அந்த வகையில், மு. வரதராசனின் “கள்ளோ காவியமோ” நாவலை சிங்களத்தில் மொழிபெயர்த்து, சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற என். ஸீ. எம். சாயிக் முக்கியமான ஒருவர்.

எஸ். ஏ. சீ. எம்.கராமத், திக்வல்லைக் கமாலின் “நோன்புக் கஞ்சி” சிறுகதைத் தொகுதியையும், “உதயக் கதிர்கள்” (“ராலியா”) நாவலையும், முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பான “சுளிசுலங்க” மற்றும் ஜெயகாந்தனின் “தேவன் வருவாரா?” நாவலையும் சிங்களத்தில் தந்துள்ளார்.

அவ்வாறே, நிலார் என். காசீம் இத்துறையில் மிகவும் முக்கியமான மற்றொருவர். அவர் முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து “அர்த்த தருவா” (பாதிக்குழந்தை) என்ற பெயரில் தொகுதியாக வெளியிட்டுள்ளார். அத்துடன், “அசல்வெசி அப்பி” என்ற சிறுகதைத் தொகுதியில் இவரின் 9 மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கியுள்ளன.

முகம்மத் ராசூக் சிங்களத்தில் மொழிபெயர்த்த சுதாராஜின் “தெரியாத பக்கங்கள்” (“நொபென்ன பெத்தி”) சிறுகதைத்தொகுதிக்கு அரச சாகித்திய விருது கிடைத்தது. அத்துடன், சுதாராஜின் “யாரொடு நோவொம்” (“காட்ட தொஸ் பவரமுத?”), “அழகிய வனம்” (“கெலேவ லஸ்ஸனய்”) ஆகிய தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகளைச் சிங்களத்தில் தந்துள்ளார். தமிழ் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்த செய்திகளைச் சிங்கள வாசகரிடையே அறிமுகம் செய்தவர்களுள் இவர் மிக முக்கியமானவர் எனலாம்.

இத்துறையில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய மற்றொருவர் எம்.வை. ஸஃபருல்லாஹ் எனும் இயற்பெயர் கொண்ட திக்வல்லை ஸஃபர். “எயாலட்ட வயச எவித்” (“அவர்களுக்கு வயது வந்துவிட்டது”) தமிழில் இருந்து சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது தமிழ் நாவல் எனக் கூறப்படுகின்றது. அத்துடன், “அசல்வெசி அபி” என்ற சிறுகதைத் தொகுதியில் இவரின் 7 மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதே தொகுதியில், ரஞ்சகுமாரின் “கோளறு பதிகம்” சிறுகதையை தம்மிக்க ஜசின்ஹவுடன் சேர்ந்து லறீனா அப்துல் ஹக் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இப்னு அஸுமத்/அழகியவடு இருவரும் சேர்ந்து டொமினிக் ஜீவாவின் கதைகளை சிங்களத்தில் “பத்திரப்பிரசூதிய” எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளனர். புதிய தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களான ரிஷான் ஷெரீஃப், சுனேத்ரா ராஜகருணா நாயக்காவின் “கெதர புதுன்கே ரகஸ” (“அம்மாவின் ரகசியம்”) நாவலையும், ஏ. ஸீ. எம். ரஸ்மின், “எந்திரி நீதிய” (“ஊரடங்குச் சட்டம்”), “மல்லிகா” ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், சிட்னி மார்கஸ் டயஸின் நாவல் ஒன்றையும் (“முன்மாதிரி”) தமிழில் தந்துள்ளனர்.

சிறுவர் இலக்கியம்

சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்பிலும் முஸ்லிம்களில் அனேகர் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்கள், எஸ். ஏ. சீ. எம்.கராமத், ஓ.கே. குணநாதனின் சிறுவர் இலக்கியங்களைச் சிங்களத்திலும், ஃபாஹிம் ஷம்ஸ் சிட்னி மார்கஸின் “தியுமாலியின் உலகம்”, “புள்ளி மாட்டின் நண்பர்கள்”, “ஆப்த நண்பர்கள்” ஆகியவற்றைத் தமிழிலும் வழங்கியுள்ளனர்.

மேலும், முகம்மத் ராசூக்  சுதாராஜின் சிறுவர் இலக்கியப் படைப்புக்கள் பலவற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.  அவற்றுள், “நும்பய் மகே புதா உத்தும்”, “கவிதாவின் பூந்தோட்டம்” (“கவிதாகே மல்வத்த”), “நகரத்துக்கு வந்த கரடி” (“நகரயட்ட ஆப்பு வலஸ்ஹாமி”) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ராசூக்கும் அட்டாலே பியதஸ்ஸி தேரரும் சேர்ந்து திக்வல்லை கமாலின் சிறுவர் “உதயபுரம்” நாவலை (“உதயபுரய”) சிங்களத்தில் தந்துள்ளனர்.

சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்பிலும் தன் முத்திரையைப் பதித்துள்ள திக்வல்லை கமால், சிட்னி மாக்கஸ் டயஸின் “அம்மா எனதுரு” (“அம்மா வரும்வரை”), “முல்லைத்தீவு தாத்தா”, மெடில்டா அதிகாரம் எழுதிய “விஹிலுகார வந்துரு பெட்டியா” (“குறும்புக்காரக் குரங்குக் குட்டி”) ஆகிய படைப்புக்களைத் தமிழாக்கியுள்ளார். அவ்வாறே, ஏ. ஸீ. எம். ரஸ்மின் சிட்னி மார்கஸ் டயஸின் “பொடியா சக யாலுவோ” (“சின்னவனும் நண்பர்களும்”) நாவலையும், ஸகீலா அப்துல் கனி, “மீகத்துற” (எலிப்பொறி), ஸமீனா ஸஹீத் உம் ஏ ஸீ எம் ராஸிக் சேர்ந்து ஏ. வீ. சுரவீரவின் “மன்னனுள் ஒரு மனிதன்”, எம். எச். எம். யாகூத் “காசியப்பன்”, “கலாவெவ”, “படிப்பினை தரும் பாடசாலை” (ஜப்பானிய நாவல் – சிங்களம் வழியே தமிழுக்கு) ஆகிய சிறுவர் இலக்கியப் படைப்புக்களையும் தமிழுக்கு வழங்கியுள்ளனர்.

சமூகவியல் ஆய்வு, வரலாறு மற்றும் கலைத்துறை சார்ந்த மொழிபெயர்ப்புக்கள்

இத்துறையிலும் பல்வேறு மொழிபெயர்ப்புக்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக, ரெஜி சிரிவர்தன ஆங்கிலத்தில் எழுதிய “சோவியத் யூனியனின் உடைவு” எனும் நூலின் இணை மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பேராசிரியர் எம். ஏ. நுஃமான், ஆர். ஏ. எல். எச். குணவர்தனவின் “இன முரண்பாடும் வரலாற்றியலும்”, ஃபாத்திமா மெர்னிஸ்ஸியின் “முஸ்லிம் பெண் தலைமைத்துவம்”, ஃபரீதா ஷஹீதின் “கட்டுப்பாடு அல்லது சுயாதீனம்” ஆகிய நூல்களைத் தமிழாக்கியுள்ளார். அவ்வாறே, கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள், “காலனித்துவ நாடுகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம்” எனும் தியூடர் சில்வாவின் மிக முக்கியமான ஆங்கிலக் கட்டுரையைத் தமிழ்ப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் மொழிபெயர்ப்பு முன்னோடிகளுள் ஒருவரான பண்ணாமத்துக் கவிராயர் ஒஸ்கார் வைல்டின் ‘சலோமி’ நாடகம் “ஊழிப் புயல்” என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். அத்துடன், எம். எல். எம். மன்சூர் விமல் திசாநாயக்க, ஆஷ்லி ரத்ன விபூஷண ஆகிய இருவரும் இலங்கைத் திரைப்படம் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய நூலை “இலங்கை சினிமா: ஒரு கண்ணோட்டம்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். திக்வல்லை எம்.எச். எம்.ஷம்ஸ் அவர்கள் ஏராளமான சிங்களக் கலை இலக்கியக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பதும், தினகரனின் “சாளரம்” பகுதியில் அவை இடம்பெற்றன என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கதாகும்.

மேலும், திக்வல்லை கமால், “நல்வாழ்வுக்கான அறிவு”, “புதுவாழ்வுக்கான அறிவு”, “நல்லாட்சிக்கான அறிவு” எனும் தலைப்புக்களில் பாரம்பரிய/வாய்மொழி/சமயக் கதைகளின் தொகுப்புக்களைச் சிங்களத்தில் இருந்து தமிழில் வழங்கியுள்ளார். இந்த வரிசையில், எஸ். ஏ. சீ. எம்.கராமத்தின் “சகவாழ்வுக்கான அறிவு” எனும் தொகுப்பும் இணைகின்றது. அவ்வாறே, முகம்மத் ராசூக், தெனகம சிரிவர்தனயின் ஆசிரிய வாழ்க்கை அனுபவக் கதைகளை (“எல்லோரும் தலைவர்கள்”) சிங்களத்தில் இருந்து தமிழுக்குத் தந்துள்ளார்.

இத்துறையில், இலங்கை முஸ்லிம் பெண்களும் பங்களிப்புச் செய்துள்ளமை குறிப்பிட்த்தக்கது. அந்த வகையில், பெண் ஆளுமைகள் குறித்த தகவல்கள் உள்ளடங்கிய 15 இலக்கியக் கட்டுரைகள் கொண்ட கெக்கிராவை சுலைஹாவின்  மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தொகுதி (“அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு”) 2010 ஆம் ஆண்டில் இலக்கியப் பேரவையின் சான்றிதழைப் பெற்றுக்கொண்டமை நினைவுகூறத்தக்கது. அவ்வாறே, ரம்ஸியா ஃபாருக் தமிழாக்கம் செய்த லயனல் சரத்தின் “பெரணி லக்பிமே சிங்கள தெமல சம்பந்ததா” (“புராதன இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள்”) என்ற நூல் மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும். அத்துடன், ஹிஸ்ஸல்லே தம்மரத்தினத் தேரரின், “சிங்கள மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு” எனும் நூல், லறீனா அப்துல் ஹக்கினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவர்களோடு, சுஐப் காஸிம், மாவனல்லை அமீன், கல்ஹின்னை ஹலீம்தீன், என்.எம்.மஃரூஃப், கலாநிதி திருமலை அஷ்ரஃப், மாத்தளை பெறோஸியா, எம். டி. ஹபீபுல்லாஹ் ஆகியோரும் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக, பொது நிர்வாக, கல்வித்துறை, சமயக் கோட்பாடுகள், ஆக்க இலக்கியங்கள், ஆய்வு மற்றும் கலை இலக்கியப் படைப்புக்களின் மொழிபெயர்ப்புக்களின் மூலம் தமது தாய்மொழியை வளப்படுத்துவதிலும், அறிவியல் முதலான துறைசார் அறிவை வளர்ப்பதிலும், இலங்கைவாழ் சமூகங்களுக்கு இடையில் பரஸ்பரப் புரிந்துணர்வையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவதிலும் காலங்காலமாக இலங்கை முஸ்லிம்கள் தமது பங்களிப்புக்களைத் தொடர்ந்து செய்துவருகின்றனர் என்பது கண்கூடு.

(குறிப்பு: குறுகிய காலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ஒரு முன்னோடி முயற்சி மட்டுமே. இதில் நேர்ந்திருக்கக் கூடிய விடுபடல்கள், இத்துறையின் ஒவ்வோர் அம்சம் சார்ந்தும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படத்தக்க ஆழமான ஆய்வுகளின் போது நிவர்த்திக்கப்படும் என்பது இக்கட்டுரையாளரின் எதிர்பார்ப்பாகும்.)

உசாத்துணைகள்:

சிவகாமி, ச., (2004), மொழிபெயர்ப்புத் தமிழ், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

கோவேந்தன், த. (1984) மொழிபெயர்ப்பு- பண்பும் பயனும், சென்னை: வளர்மதி பதிப்பகம்.

நுஃமான், எம்.ஏ., (1997) “தமிழ் மொழிபெயர்ப்பில் சிங்கள இலக்கியம்”, பேராசிரியர் சி. தில்லைநாதன் மணிவிழா மலர், பேராதனை.

நுஃமான், எம்.ஏ., முருகையன், ஆர். (1981), பலஸ்தீனக் கவிதைகள், கொழும்பு: மூன்றாவது மனிதன்

நுஃமான், எம்.ஏ., (2008), மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்(மொழியாக்கக் கவிதைகள்), சென்னை: அடையாளம்.

பண்ணாமத்துக் கவிராயர், (1996) காற்றின் மௌனம் (மொழியாக்கக் கவிதைகள்), கொழும்பு: மலையக வெளியீட்டகம்.

புவாஜி, ஏ.ஏ.எம்., (1997) பேராசிரியர் அல்லாமா உவைஸ், மாத்தளை: ஸஹீமா பதிப்பகம்

திக்குவல்லைக் கமால் (2010) விடைபெற்ற வசந்தம் (மொழிபெயர்ப்பு நாவல்), கொழும்பு: கொடகே

நுஃமான், எம்.ஏ., காமன் விக்ரமகமகே (பதிப்பு) (2006), நம் அயலவர், கொழும்பு: முச்சக்கரவண்டி வெளியீட்டகம்.

லறீனா ஏ. ஹக், (2008), மௌனத்தின் ஓசைகள் (மொழியாக்கக் கவிதைகள்), கெலிஒயா: திளின அச்சகம்.

---------------------------- யாத்ரா கவிதைகளுக்கான இதழ்கள் (1-17), வாழைச்சேனை: நண்பர் இலக்கியக் குழு.

Catford, J.C. (1965) A Linguistic Theory of Translation, London: Oxford University Press

New Mark, Peter, (1988), A textbook of translation, London & New York: Prentice Hall.

Lawrence Venuti (Ed), (2000), The Translation Studies Reader, London & New York: Rourtledge.

කාමන් වික්‍රමගමගේ, නුහ්මාන්, එම්. ඒ.,(සංස්) (2006) "අසල්වැසි අපි", කොළඹ: ත්‍රී වීලර් ප්‍රකාශකයෝ

http://mrishanshareef.blogspot.com/2012_04_01_archive.html

http://faheemapoems.blogspot.com/

ஆக்கம்: லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு), எம்.ஃபில்.(ஆய்வு மாணவர்)

முன்னாள் விரிவுரையாளர், மொழிபெயர்ப்புக் கற்கைகள்,

பேராதனைப் பல்கலைக்கழகம்

நன்றி: "அல் ஃபிக்ர்" 2012

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்