/* up Facebook

Jan 26, 2013

கலை இலக்கியங்களில் 'பெண்' பற்றிய புனைவு: சில குறிப்புகள் - லறீனா அப்துல் ஹக்மானிடப் பண்பாட்டு வரலாற்றில் மொழி, கலை, இலக்கியம் என்பவற்றுக்கு இருக்கும் வகிபாகம் மிக உன்னதமானது. எந்த ஓர் இனக்குழுமத்தினதும் தொன்மத்தை, வளத்தை, வனப்பை, உயிர்ப்பை  காலங்கடந்தும் வாழச்செய்யும் ஆற்றல் அவற்றுக்கு உண்டு. அதேவேளை, குறித்த ஒரு சமுதாயத்தின், இனக்குழுமத்தின் சிந்தனைப் போக்கையும் உள்ளார்ந்த பண்புக்கூறுகளையும் உணர்த்தும் பணியையும் அவை தம்மகத்தே கொண்டுள்ளன என்பதும் கவனத்துக்குரியது.

அண்மையில் சுவர்ணவாஹினியில் ஒரு சிங்கள நாடகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. நாடகத்தின் பெயர் 'பிய-செக்க-சங்க்கா' (அச்சம், ஐயம், கவலை). புத்தரின் முற்பிறவிகள் பற்றிக்கூறும் '550 ஜாத்தக்க கதா' கதைகளில் 'சம்புலா ஜாத்தக்கய'வை வைத்து அந்தத் தொலைக்காட்சி நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தது. குஷ்டரோகத்தினால் அரச மாளிகை வாசத்தைத் துறந்து காட்டுக்குப் போன சொத்திசேனன் எனும் அரசனின் பட்டத்தரசியுடைய கதை. குஷ்டரோகியான தன் கணவனோடு காடேகிய சம்புலாதேவி, அவனுக்குரிய பணிவிடைகளை மனநிறைவோடு செய்துவருகிறாள். கணவன் பசியாற காய்கனிகளும், அருந்த நீரும், குஷ்டரோகத்தால் புண்ணாகிச் சீழ்வடியும் உடலைப் பேண மருத்துவ குணமுள்ள பச்சிலைகளும் பெற்றுவருவதற்காகத் தினமும் காட்டில் அலைந்துதிரிகிறாள்.

ஒருநாள் நடுக்காட்டில் அவளின் பேரழகிலே மதிமயங்கிய ராட்சசன் ஒருவன், நோயாளிக் கணவனைக் கைவிட்டு அவளைத் தன்னுடன் வந்துவிடுமாறும், அவளை மணந்து அவளுக்கு சகலவிதமான போகங்களையும் அமைத்துத் தருவதாகவும் ஆசைகாட்டி அழைக்கின்றான். தன் கணவன் குஷ்டரோகியானாலும் அனைத்து போகங்களையும் துறந்து காட்டில் வாழ நேர்ந்தாலும் அந்த வாழ்வே தனக்கு மேலானது என்று சொல்லும் சம்புலாதேவி, ராட்சசனின் அழைப்பை ஏற்க மறுத்துவிடுகின்றாள். காமவேட்கையும் கோபவெறியும் கொண்ட ராட்சசன் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்ல முனைகையில், அவளின் அபயக்குரல் கேட்டு தேவேந்திரன் தோன்றி அவளைக் காக்கின்றான்.

இந்நிலையில், காலதாமதமாகிவரும் தன் துணைவிமீது சொத்திசேனன் மிகுந்த சந்தேகம் கொள்கிறான். தன்னைக் கொல்லும் நோக்குடன் மனைவி தன் ரகசியக் காதலனை உடனழைத்து வரக்கூடும் என அஞ்சி தன் இருப்பிடத்தில் இருந்து வெளியேறி ஒளிந்துகொள்கின்றான். அவளோ தன் காதலுக்குரிய கணவனைக் காணாது கதறி அழுது மயங்கி விழுகின்றாள். அவளை மயக்கம் தெளிவித்த சொத்திசேனன், அவளுடைய கற்புடைமையைச் சந்தேகித்து அவளைத் தூற்றுகின்றான். அவள் தனக்கு நேரவிருந்த அபாயத்தைப் பற்றிக்கூறி, தான் பரிசுத்தமானவள் என்று காலில் விழுந்து கதறி அழுகின்றாள். அந்த இடத்தில்,

'பெண் என்பவளுக்கும் உண்மைக்கும் இடையில் தூரம் மிக அதிகம். அது, வானுக்கும் மண்ணுக்கும் இடையிலுள்ள தூரத்துக்கும் கடலின் இரு கரைகளுக்கும் இடையிலான தூரத்துக்கும் ஒப்பானது. இந்தக் காட்டில் வேடர்கள், முனிவர்கள் என அந்நிய ஆடவர்கள் நிறையப் பேர் அலைந்து திரிகிறார்கள். எனவே, அவர்களில் யாரேனும் ஒருவரோடு உனக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என நான் ஐயுறுகின்றேன். ஏனென்றால், பெண்ணின் மனம் கணத்துக்குக் கணம் சலனமடையக் கூடியது.' என்று கணவன் சொல்லும் வார்த்தைகள் அவள் இதயத்தைக் கீறிப் பிளக்கின்றன. உடனே, அவள் தன்னுடைய கற்புடைமையை நிரூபிக்கும் வகையில், தன் கற்பு வலிமையால் அவனுடைய குஷ்டரோகத்தைக் குணமாக்குகின்றாள். இருவரும் மகிழ்வோடு நாடு திரும்புகின்றனர். அரசமாளிகை அமர்க்களப்படுகின்றது. அந்தோ! பரிதாபம்! இன்பத்திலும் துன்பத்திலும் தன்னோடு நிழலாய் நின்ற மனைவியை மறந்து அலட்சியப்படுத்திய மன்னன், அந்தப்புர அழகியரோடு உல்லாசமாய்ப் பொழுது போக்குகின்றான். பின்னர், தந்தையின் உபதேசம் கேட்டுத் திருந்தி, மனையாளோடு புதுவாழ்வைத் தொடங்குகின்றான்.

இந்த நாடகத்தைப் பார்த்து முடித்த என்னுள் எத்தனையோ எண்ண அலைகள். சட்டென்று கம்பராமாயண யுத்தகாண்டத்தில் ஒரு காட்சி என் மனத்திரையில் தோன்றியது. இராவணவதத்தின் பின் சீதை சிறைமீட்கப்பட்டாள். அவளைத் தன்னிடம் அழைத்துவருமாறு விபீடணனை அனுப்புகின்றான், இராமன். அவன் அவளிடம் சென்று, குளித்து சர்வ அலங்காரத்துடன் இராமன் அவளைப் பார்க்க விரும்புவதாக இராமனின் கட்டளையை எடுத்துக்கூறுகின்றான். அசோகவனத்தில் இருந்த அதே எளிய, நலிந்த தோற்றத்தோடே தன் கணவனைக் காண விழைகிறாள், சீதை. அதனை,

'யான் இவண் இருந்ததன்மை இமையவர் குழுவும் எங்கள்

கோனும் அம் முனிவர் தங்கள் கூட்டமும் குலத்துக் கேற்ற

வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி

மேல் நிலை கோலம் கோடல் விழுமியது என்று வீர'

பொருள்: 'வீரனே ! எந்தத் தன்மையுடன் நான் இங்கே இருந்தேன் என்பதை தேவர்களும் எங்கள் அரசன் இராமனும், முனிவரும், வானளவு கற்பிலுயர்ந்த பெண்களும் காண்பது எனக்குச் சிறப்பு. அலங்கரித்து வருவது முறையாகாது' என்ற வரிகள் மூலம் காணலாம்.

இதேகாட்சி வால்மீகி இராமாயணத்தில் பின்வருமாறு விபரிக்கப்படுகின்றது:

ஏவ முக்தா து வைதேஹி ப்ரயுவாச விபீஷணம்

அஸ்த் ராத்வா த்ரஷ்டுமிச்சாமி பர்த்தாரம் ரக்ஷஸேஷ்வர

தஸ்யாகத் வசனம் ஷ்ருத்வா ப்ரத்யுவாச விபீஷணஹ

யதாஅ அஹ ராமே வர்த்தாதேதத் தத கர்த்துமர்ஹஸி

தஸ்ய தத் வசனம் ஷ்ருத்வா மைதிலி பதிதேவதா

பத்தூர்பக்யாவ்ருதா ஸாத்வி ததேதி ப்ரத்பாஷத

பொருள்: விபீடணன் கூறியதைக் கேட்டதும் வைதேஹி, 'நான் குளிக்காமலேயே உடனே இப்போதே எனது கண்கண்ட தெய்வமான கணவரைக் காண விரும்புகிறேன் என்றாள். இதற்கு விபீடணன் 'தேவி! நான் கூறியது தங்களது கணவர் ஸ்ரீராமரின் கட்டளை. தாங்கள் அவ்வாறே நடக்க வேண்டும்.' என்றான். இதைக் கேட்டதும் பதிபக்தியில் பாதுகாக்கப்படுபவளும் கணவனைக் கடவுளாய் வணங்குபவளும் கற்பிற் சிறந்தவளும் நன்னெறி கொண்டவளுமான சீதை அவ்வாறே ஆகட்டும் எனத் தன் கணவனின் கட்டளையைத் தன் சிரம் மேற் கொண்டாள். (பாடல்கள் 9,10,11,12,13 ஸர்க்கம் 114 வால்மீகி ராமாயணம்)

இவ்வாறு, தனது மனமொப்பா நிலையிலும் கணவனின் கட்டளையைச் சிரமேற்கொண்டு தன்னை முறைப்படி அலங்கரித்துக்கொண்டு இராமனைக் காண ஆவலோடு வந்துற்ற சீதையை இராமன் எப்படி வரவேற்றான்?

'வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை

பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா

ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட

மாண்டிலை முறை திரம்பரக்கன் மாநகர்

ஆண்டு உறைந்து அடங்கினை அக்சம் தீர்ந்து

மீண்டது என் நினைவு? எதை விரும்பும் என்பதோ

உன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்

மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற

பின்னை மீட்டு உறுபகை கடந்திலேன் பிழை

என்னை மீட்டான் பொருட்டு இலங்கை எய்தினேன்'

பொருள்: கற்பின் உறைவிடமானவளும் தன்னை வணங்கியவளுமான சீதையை கோபத்துடன் படமெடுத்தாடும் பாம்பைப் போல இராமன் நோக்கினான். 'ஒழுக்கம் பாழ்பட்டு பல அறுசுவை உணவுகளை உண்டு நீண்ட காலம் அரக்கனின் நகரத்தில் வாழ்ந்து விட்டு என் நினைவு எப்படி வந்தது? என்னை இவன் விரும்புவான் என எண்ணினாயோ? கடலைத் தூர்த்து பாலம் எழுப்பி, மின்னலையும் வெட்கி ஓடச் செய்யுமளவு ஒளி மிகுந்த அரக்கர் படையை வென்றது உன்னை மீட்பதற்கு என்றோ எண்ணினாய்? இல்லை. தனது மனைவியைக் கடத்திச் சென்றவனை இராமன் கொல்லாமல் விட்டுவிட்டான் என்னும் பழி வராதிருக்கவே போரிட்டேன்.' (பாடல் 3953,3954,3955 யுத்த காண்டம் கம்பராமாயணம்) என்று சுடுசொற்களை வாரி இறைக்கின்றான், தான் இருந்த அதே எளிய தோற்றத்துடன் வர விரும்பியவளை சர்வ அலங்காரங்களோடும் வருமாறு கட்டளையிட்டுவிட்டு, பின்னர் அவனே நிர்த்தாட்சண்ணியமாய்,

'அடைப்பர் ஐம் புலங்களை ஒழுக்கம் ஆணியாச்

சடைப்பரம் தகைத்ததோர் தகையின் மா தவம்

படைப்பர் வந்து ஒரு பழி வந்தால் அது

துடைப்பர் உயிரொடும் குலத்தின் தோகைமார்

யாது யான் இயம்புவது உணர்வை ஈடுஅறச்

சேதியாநின்றது உன் ஒழுக்கச் செய்தியால்

சாதியால் அன்று எனின் தக்கது ஒர் நெறி

போதியால்' என்றனன் புலவர் புந்தியான்

பொருள்: கணவனைப் பிரிந்த காலத்தில் உயர் குலப் பெண்கள் கற்பே தவமாக இருந்து (தலைமுடியை சீவிப் பராமரிக்காது) சடையையும் தாங்கி ஐம்புலன்களையும் அடக்கி வைப்பார்கள். இதையும் மீறி ஒரு பழி ஏற்படுமாயின் தமது உயிரையே விட்டு விடுவார்கள். உனது தீயொழுக்கம் பற்றிய செய்தி  எனது உணர்வின் வலிமையை உடைக்கிறது. ஒன்று நீ உயிரை விடு. இல்லையேல் ஏற்ற இடத்திற்குப் போ' என்றான் புலவர்கள் மனதில் இருப்பவனான இராமன். (பாடல் 3959,3960 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்) என்று எரிந்தும் விழுகின்றான்.

வால்மீகி தன்னுடைய இராமாயணத்தில் இக்காட்சியை இப்படி விபரிக்கின்றார்:

கஹ புமாம்ஸ்து குலே ஜாதஹ ஸ்த்ரியம் பரக்டு ஹோபிதாம்

தேஜஸ்வி புனராதத்யாத் ஸ§ஹ§ல்லோபேன் சேதஸா

ராவணங்கப்பரிக்லிஷ்டாம் த்ருஷ்டாம் துஷ்டேன சக்ஷ§ஷாம்

கதம் த்வாம் புனராதத்யாம் குலம் வ்யபதிஷன் மஹம்

பொருள்: நல்ல குலத்தவனான எந்த ஆணும் தான் வல்லமையானவனாயிருப்பினும் வேறு வீட்டில் இருந்த ஒரு பெண்ணை தன்னுடன் முன்பு வாழ்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்வானா? மனதளவில் கூட அது சாத்தியமில்லை. இராவணன் உன்னைத் தன் மடியில் வைத்து எடுத்துக் கொண்டு போனான். அவனது கெட்ட பார்வை உன் மீது பட்டு விட்டது, எனது குலப் பெருமை பேசும் நான் உன்னை எவ்வாறு ஏற்க இயலும்? (பாடல் 20,21 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)

ந ஹி த்வாம் ராவணோ த்ருஷ்ட்வா திவ்யரூபாம் மனோரமாம்

மர்ஷயேத் சிரம் சிதே ஸ்வக்குஹே பர்யவஸ்திதாம்

பொருள்: சீதை! உன்னைப் போன்ற அழகிய அலங்கரிக்கப்பட்ட பெண்ணைத் தனது வீட்டிலேயே விட்டு விலகி இருக்கிற கஷ்டத்தை அதிக நாள் இராவணன் சகித்திருக்க இயலாது. (பாடல் 24 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)

சீதை என்ன தன்னை அலங்கரித்துக்கொண்ட நிலையிலா அசோகவனத்தில் இருந்தாள்? இல்லையே! அப்படி இருக்க, அவள் இராவணனின் சிறையில் இருந்து மீட்கப்பட்ட அதேநிலையில் மக்கள் முன்னிலையில் தோன்றாமல் தடுத்து, பூரண அலங்காரத்துடன் வருமாறு கட்டளையிட்டது யார்? பின்னர் அதையே அவளது ஒழுக்கத் தவறாகச் சித்திரிக்க முனைந்தது யார்? கணவனையே கதியென்று நம்பி, அவன் மீது கொண்ட அன்பினால்  எத்தனையோ இன்னல்களைப் பொறுத்துக்கொண்ட சீதை, ஈற்றில் தன்னுடைய கற்புடைமையை தீக்குளித்துத்தான் நிரூபிக்க வேண்டியிருந்தது| குணமாக்கவே முடியாது என எல்லா வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட கணவனின் குஷ்டரோகத்தைக் குணமாக்கி தன் கற்புடைமையை நிரூபித்த சம்புலாதேவியைப் போல.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்வோமே. அதில், ஆடலரசியான மாதவி கணிகையர் குலத் தோன்றலாய் இருந்தும் கோவலன் ஒருவனை மட்டுமே தன் காதலனாய் வரித்து அவனை அல்லும் பகலும் மகிழ்விப்பதிலேயே தன் வாழ்வைக் கழிக்கின்றாள். அவளோடு, 'அணைவுறு வைகலின் அயர்ந்து மயங்கி விடுதல் அறியா விருப்பின'னாகி (சிலப்பதிகாரம்: 3:172-174) தன் மனைவி கண்ணகியை முற்றாக மறந்து வாழ்கிறான், கோவலன். இந்நிலையில், புகார் நகரில் இந்திரவிழா களைகட்டுகிறது. அதில் மாதவி பதினொரு வகையான ஆடல்களை நிகழ்த்துகின்றாள். கோவலனால் அதனைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை| ஊடல்கொள்கின்றான். அந்த ஊடலைத் தீர்க்க அவனோடு கடலாடச் செல்கிறாள், மாதவி. அவள் நீட்டிய யாழை வாங்கி கோவலன் கானல்வரி இசைக்கிறான். அதையடுத்து மாதவியும் பாடுகின்றாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கோவலன் மனதில் சந்தேகம் துளிர்விடுகிறது.

"எனக்கேட்டு,

கானல்வரி யான்பாடத் தான் ஒன்றின்மேல் மனம்வைத்து

மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என

யாழ் இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்தது ஆகலின்

உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்

பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது

ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,

..................."

பொருள்: இவ்வாறு மாதவி பாடக் கோவலனும் கேட்டான். 'யான் கானல்வரி பாடினேன். வஞ்சனையுடன் கூடிய பொய்ம்மைகள் பலவற்றையும் கூட்டும் மாயத்திலே வல்லவளாகிய இவளோ, தான் வேறொன்றின்மேல் மனம் வைத்துப் பாடினாள்' என்று எண்ணினான். யாழிசையின் காரணமாக வைத்து, அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன்பாற் சேரத் தொடங்கியது. அதனால், உவா நாளில் விளங்கும் முழுநிலவு போன்ற தூய முகத்தினளாகிய மாதவியை, அவளோடு கைகோத்து வாழ்ந்திருந்த கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டான். 'பொழுது இங்கே மிகவும் கழிந்தது. நாம் எழுவோமா?' என மாதவி கேட்டதும், உடனே எழுந்து அவளுடன் கூடிச் செல்லாது தன் ஏவலர் தன்னைச் சூழ்ந்துவர, அவன் அவளைவிட்டுப் பிரிந்து தனியாகவே சென்றுவிட்டான். (சிலப்பதிகாரம்: 7: 52-1-7)

அத்தனை நாளும் கட்டிய மனைவியையும் மறந்து இன்பம் துய்க்கும் வரையில் உயிருக்குயிராக இருந்தவள், ஒரு சில நொடிகளில் வஞ்சனையும் பொய்ம்மையும் நிறைந்த மாயக்காரியாகிவிட்டாள். கோவலன் பாடியது போலவே காதல்குறிப்புடன் மாதவி பாடியதும் அவள் அவனுடைய சந்தேகத்துக்கு உரியவளாகிவிட்டாள். சம்புலாதேவி இருட்டிய பின் வந்ததைக் கண்டு அழகியான அவளுக்கு வேறோர் ஆடவனோடு ரகசியத் தொடர்பு ஏற்பட்டிருக்கவேண்டும்| பெண்களின் மனம் கணந்தோறும் சலனமுறுவது| அதிலே உண்மைக்கு இடமில்லை என்று சொத்திசேனன் ஐயுற்றதற்கும் இங்கே கோவலன் ஐயுற்றதற்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை, தலைவனின் காமக்கிழத்தியான கணிகையர்குலப் பெண்- அரசகுலப் பெண்ணான மனைவி என்ற வேறுபாட்டைத் தவிர.

மறுதலையாக, மாதவியிடம் போய்விட்டு வந்தான் என்று தெரிந்த நிலையிலும் 'சிலம்புள கொண்ம்' என்று சொல்லத்தக்கவளாகக் கண்ணகியைப் படைக்கிறார், இளங்கோ. அந்தப்புர அழகியரோடு சல்லாபத்தில் ஆழ்ந்துவிட்டு தந்தையின் அறிவுரையால் திருந்திவந்த சொத்திசேனனை மன்னித்து ஏற்கும் மனைவியாய் சம்புலாதேவி படைக்கப்பட்டுள்ளாள். ஆனால், 'நல்ல குலத்தவனான எந்த ஆணும் தான் வல்லமையானவனாயிருப்பினும் வேறு வீட்டில் இருந்த ஒரு பெண்ணை தன்னுடன் முன்பு வாழ்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்வானா? மனதளவில் கூட அது சாத்தியமில்லை' என்று சொல்பவனாக இராமனின் பாத்திரப்படைப்பு இருக்கிறது. அதேவேளை, கற்பை நிரூபிக்க சீதையைத் தீக்குளிக்க வைக்கும் இராமனின் முன்னால், 'நீயும் காடுகரையெல்லாம் அலைந்து திரிந்தாய் அல்லவா, உன்னுடைய கற்பு மட்டும் தூய்மையாய் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? எனவே, வா! இருவருமே அக்னிப் பரீட்சையில் ஒருவரை ஒருவர் நிரூபித்துக் கொள்வோம்' என்று கோரும் தைரியமற்றவளாய் சீதை படைக்கப்பட்டிருக்கிறாள். எனவே, மிகத் தெளிவாகத் தவறுசெய்துவிட்டு வந்த நிலையிலும் ஆணின் தவறுகள் மன்னிப்புக்கு உட்பட்டவையாகவே காட்டப்படுகின்றன. ஆனால், தவறே செய்யாத நிலையிலும் வெறுமனே ஊகத்தின், சந்தேகத்தின் அடிப்படையில்கூட ஒழுக்கத்தவறு, கீழ்படியாமை முதலான காரணங்களைக்காட்டி ஓர் ஆண் ஒரு பெண்ணை வெகு இலகுவாகத் தூக்கியெறிந்துவிட முடியும் என்ற சமுதாயத்தின் பாரபட்சநிலை இங்கே பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு, பாளி, சமஸ்கிருதம், சிங்களம், தமிழ்  என மொழிகள் வேறுபட்டாலும் அவற்றில் தோன்றிய இதிகாசங்களிலாகட்டும் புராணங்களிலாகட்டும் பிற இலக்கியங்களிலாகட்டும். 'பெண்' பற்றிய புனைவு பல்வேறு பொதுமைப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன. அவளுக்கு எதிரான பாரபட்சமும் அநீதிகளும், பண்பாட்டின் பெயரால் அவள்மீது வலிந்து திணிக்கப்பட்ட நியாயமற்ற சட்டதிட்டங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது. ஒழுக்கமீறல் என்பது ஆண்-பெண் இருபாலாரும் சம்பந்தப்படும்போதுதான் நிகழ்கிறது என்ற யதார்த்தத்தை மறந்துவிட்டு பெண் மட்டுமே குற்றவாளியாய்ப் பார்க்கப்படுகின்றாள். பெண் என்பவள் மட்டும் கற்புக்கரசியாய் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறாள், அவளின் கற்பொழுக்கம் ஆணுடைய சந்தேகத்துக்கு இலக்காகும்பட்சத்தில் தன்னுடைய கற்பை அவள் அவனிடம், சமூகத்திடம்  நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்படுகின்றாள். ஆணின் ஒழுக்கத்தவறு அவனின் சாதாரண இயல்பு என்று சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆண்மகன் சேற்றைக்கண்டால் மிதிப்பான்- ஆற்றைக்கண்டால் கழுவுவான்;, ஆண் கெட்டால் சம்பவம்- பெண் கெட்டால் சரித்திரம், பெண் சிரிச்சால் போச்சு புகையிலை விரிச்சால் போச்சு முதலான எண்ணற்ற சொலவாடைகளும் வழக்குமொழிகளும் ஆணுடைய ஒழுக்கமீறலை நியாயப்படுத்தி காலங்காலமாக சப்பைக்கட்டு கட்டவே பயன்பட்டுவருகின்றன. புத்தரின் முற்பிறவிக் கதைகள் விகாரைகளில் பாராயணம் செய்யப்படுகின்றன. இராமாயணம் கோவில்களில் கதா காலேட்சபமாய் உரைக்கப்படுகின்றது. அவற்றுக்கென ஒரு புனிதத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. புதுப்புது இலக்கிய வடிவங்களில் அவற்றின் கதைகள் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. இவற்றில் சொல்லப்பட்டும் சித்திரிக்கப்பட்டும் வரும் அன்றைய பெண்ணின் விம்பமே சமுதாயத்தில் இன்று வாழும் பெண்ணின் விம்பமாகவும் மிக இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டு, காலங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

பெண்ணை பாதாதிகேசமாகவும், கேசாதிபாதமாகவும் வர்ணித்த பண்டைய காவியங்களாகட்டும் சிற்றிலக்கியங்களாகட்டும், பிற்காலத்தில் பக்திநெறியைப் போற்றிப் பெண்வெறுப்பை வலியுறுத்தி பெண்ணை 'மாயப்பிசாசாகவும்', அவளது அவயவங்கள் அருவருப்பானவையாகவும் சித்திரிக்கப்படும் சித்தர்பாடல்களாகட்டும், அவற்றில் 'பெண்' என்பவள் வெறுமனே 'உடலாக, ஒருசில உடல் உறுப்புக்க'ளாகப் பார்க்கப்பட்டுள்ளாளே தவிர, ஆன்மாவும் உயிரும் உணர்வும் அறிவும் ஆற்றலும் உள்ள ஒரு 'மனித உயிரி' என்ற நிலையில்வைத்துப் பார்க்கப்படவில்லை என்பதே உண்மை. 'உடலை'க் கடந்து பெண்ணைப் பார்க்கும் பக்குவம் மிகப் பெரும்பாலான கலை இலக்கிய கர்த்தாக்களுக்கோ சமுதாயத்துக்கோ கைகூடவில்லை. (பாரதியை இங்கு ஒரு விதிவிலக்காகச் சொல்லலாம்.)

மன்னனோடு சரிசமமாக இருந்து கள்ளருந்தி, அரசியல் விவகாரங்களில் ஆலோசனைகள் சொன்ன ஒளவையார், 'ஒளவைப்பாட்டி'யாக நோக்கப்பட்டமையும், புனிதவதியார் 'காரைக்கால் அம்மையாரா'கி மனிதக் கண்களுக்கு வெறுப்பூட்டும் பேய்வடிவினராக மாறியதற்கும் பின்புலத்தில் பெண்ணை உடல்கடந்து நோக்காத சமுதாய மனநிலையே அடிநாதமாக அமைந்துள்ளது என்று கொள்வது தகும்.  ஜீவாத்மா- பரமாத்மாவில் ஐக்கியமாகும் பேரின்பத்தைப் பாடும் பக்திப் பரவசப்பாடல்களில், மாணிக்கவாசகருக்கோ பிற சைவ, வைணவ ஆண் அடியார்களுக்கோ கொடுக்கப்பட்ட அதேயளவு முக்கியத்துவம், பெண்ணான ஆண்டாளுக்குக் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. அவரது திருப்பாவைக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம், கிருஷ்ணன் மீதான விரகதாபத்தை மிகத் துல்லியமாய் வெளிப்படுத்தும் நாச்சியார் (கனவுப்பாடலைத் தவிர) திருமொழிக்கு வழங்கப்படவில்லை. இங்கும் அவர் ஒரு 'பெண்' என்ற பால்மையே அவரது இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படக்கூடிய அங்கீகாரத்தைத் தீர்மானிக்கும் அளவுகோலாகின்றது. இதற்கு, எந்த இடத்தில் மொழி சரளமாக அமையுமோ அந்த இடமான காதலில் பெண், மொழியாடக்கூடாது என்பதை விளக்கி,

"தன் நூறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்

எண்ணுங்காலைக் கிழத்திக்கு இல்லை" என்று, 'எதைப் பாடவேண்டும், எதைப்பாடக்கூடாது' என்று பெண்ணுடைய 'பொருள் வெளியை' வரையறுத்த தொல்காப்பியமும் அடிப்படையாகின்றது.

இந்நிலையில், 'பெண்' பற்றிய விம்பம் அதே பழைய – குரூர வடிவத்துடன் ஸ்திரப்படுத்தப்படுவது அறிவியல் யுகத்திலும் தொடரவே செய்கின்றது. சினிமா, சின்னத்திரை, இணையம் என எதை எடுத்தாலும், திரைப்படம், தொலைக்காட்சி நாடகம், விளம்பரம் என எந்தவொரு படைப்பாக்கத்திலும் 'பெண்' வெறுமனே  'உடல்' ஆகவே பார்க்கப்படுகின்றாள், சித்திரிக்கப்படுகிறாள் அல்லது, 'ஆவதும் பெண்ணாலே- அழிவதும் பெண்ணாலே' முதலான பண்டைய பழமொழிகளை வாழவைக்கும் வகையில் 'அவள்' சூழ்ச்சிசெய்பவளாக, ஏமாற்றுக்காரியாக, துன்பத்தின், பிரச்சினைகளின் அடிப்படையானவளாகவே பெரும்பாலும் வார்க்கப்படுகின்றாள். நூற்றாண்டு காலமாய்த் தொடரும் இந்தப் பிற்போக்குநிலை மாறி, அகன்றதும் பண்பட்டதுமான பார்வைகள் உருவாகவேண்டியது காலத்தின் தேவைதான். ஆனால், அது ஒரு நெடுந்தூரப் பயணம் என்பதே கசப்பான நிதர்சனம்.

துணைநின்றவை:

செல்வி திருச்சந்திரன் (1997) 'தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு', கொழும்பு - சென்னை : குமரன் பதிப்பகம்.

லறீனா ஏ. ஹக், (2005) 'செ. கணேசலிங்கின் நாவல்களில் பெண் பாத்திரங்கள் : ஒரு பெண்ணிலை நோக்கு', சென்னை : குமரன் புத்தக இல்லம்.

புலோலியூர்கேசிகன்(பதிப்பு) (1958) 'சிலப்பதிகாரம்', சென்னை: பாரி நிலையம்

http://www.jathakakatha.org/newhome/index.php?option=com_content&view=article&id=602:504---&catid=60:501-550-&Itemid=103

http://issues.lines-magazine.org/Art_Aug05/Bindunuwewa_II.htm

http://puthu.thinnai.com/?p=317

http://nilapenn.com/index.php/20101101213/essay

http://ta.wikisource.org/wiki/7.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF

http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011122.htm

ஆக்கம்: லறீனா அப்துல் ஹக்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்