/* up Facebook

Jan 25, 2013

இந்திய பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் பான் கீ மூன், ஈழப்பெண்கள் குறித்து அமைதி காப்பது ஏன்?இந்திய பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் பான் கீ மூன், ஈழப்பெண்கள் குறித்து அமைதி காப்பது ஏன்?

‘புதுடில்லியல் 23 வயதுப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என இந்தியாவை வலியுறுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஈழத்தமிழ் பெண்களின் வருந்தத்தக்க நிலை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏன் கேள்வி எழுப்பவில்லை?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட போதும், சிலர் சிறையில் இன்னும் இருக்கும் நிலையிலும் சர்வதேச கண்டனங்கள் பல எழுந்தும் ஐக்கிய நாடுகள் சபை ஏன் குரல் கொடுக்கவில்லை? பான் கீ மூன் தமிழீழத் தமிழர்களின் பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் செயலற்று இருப்பதற்கு பின்னணியில் வேறு சக்திகள் இருக்கலாம் என்றே சந்தேகப்படத் தோன்றுகிறது.’

இவ்வாறு இலங்கை விவகாரங்கள் தொடர்பில் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பட்டம் பெற்றவரும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்கும் நிரந்த மக்கள் தீர்ப்பாயத்தின் நான்கு பிரதிநிதிகளில் ஒருவருமான போல் நியூமன் கொழும்பு ஊடகம் ஒன்றில் எழுதிய கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் இக்கட்டுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

‘புதுடில்லியில் காட்டுமிராண்டித்தனமாக நடந்த 23 வயது பெண்ணின் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவத்தைக் கண்டித்து இடம்பெற்ற போராட்டங்களின் புழுதி சற்று அடங்கியுள்ளது. இச்சம்பவத்தை உலக மக்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். பெண்கள் பாதுகாப்புக்கான அவசியத்தை வலியுறுத்தி எண்ணற்ற உலகத் தலைவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

இதன் அடிப்படையில் வெளியான இரண்டு செய்திகளைப் பார்த்து எனக்கு வியப்பு ஏற்பட்டது. புதுடில்லியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக இலங்கையில் நடந்த போராட்டம் பற்றிய செய்தி ஒன்று. தங்கள் நாட்டில் வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்ப் பெண்கள் மீது அன்றாடம் நிகழும் பாலியல் வல்லுறவைக் கண்டுகொள்ளாத இவர்கள், இந்தியப் பெருங்கடலுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டில் இடம்பெற்ற குற்றச் செயலுக்கு எதிராகத் திரண்டு போராடுகிறார்களே என்ற வியப்புதான் அது.

அடுத்துப் பார்த்த செய்தி, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமான பான் கீ மூனுடைய அறிக்கை. பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் இந்தியாவை வலியுறுத்தியிருந்தார். ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் பெண்களின் வருந்தத்தக்க நிலையை பான் கீ மூன் வசதியாக மறந்துவிட்டார்.

இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் 1 இலட்சத்து 40 ஆயிரம் கணவன்மாரை இழந்த பெண்கள் இருக்கிறார்கள் என்று விவரங்கள் கூறுகின்றன. அவர்களில் 90 ஆயிரம் பேர் போரின் போது கணவனை இழந்த பெண்களாவர். அவர்களில் பாதிப்பேர் 40 வயதுக்கும் குறைவானர்கள் ஆவர்.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இன்னும் சிறிலங்கா படைத்தரப்பினரால் அப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும், கொடுமைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றனர். வல்லுறவுக் குற்றங்களைப் பொறுத்தவரை அதை நடத்தியவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவோ, சமூகத்தில் இருந்து விலககி வைக்கப்படுவோம் என்ற பயம் காரணமாகவும் பெரும்பாலும் முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை. இப்பெண்களுக்காக குரல் கொடுக்க யார் முன்வருகின்றார்கள்?

கிறீஸ் பூதம் என அடையாளமற்று வந்து தமிழ் பெண்கள் தாக்கப்பட்ட, வல்லுறவு செய்யப்பட்ட கொடுமைகளும் கடந்த ஆண்டில் சிறிலங்கா படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டன. முன்னாள் பெண் போராளிகள் மீது நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அதிகம் நடவடிக்கைகள் இல்லை. அந்தச் சம்பவங்கள் பற்றி செய்திகள் பரவலாக வெளிவந்தும் போராட்டங்களோ, அறிக்கைகளோ வெளிவரவேயில்லை.

போரின் போது இடம்பெயர்ந்த பெண்களுக்கும், மீண்டும் சொந்த ஊர் திரும்பியவர்களுக்கும் வீட்டுவசதி, மருத்துவ வசதிகள், குடிநீர், சுகாதாரம், வேலை வாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இலங்கையின் ஆளுங்கட்சிக்கு எதிராக இந்த பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை குறித்து பான் கீ மூன் ஏன் எந்தக் கேள்விகளும் எழுப்பவில்லை?

2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் சரணடைவதாக கூறியபோது தன்னிச்சையான முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள ஐக்கிய நாடுகள் சபையும், பான் கீ மூன்னும் ஏன் போரின் இறுதிக்கட்டத்தில் பேசாமடந்தையாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்க நேரிட்டது? விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் மட்டத் தலைவர்களின் சரணடைவு நடவடிக்கையைக் குறிப்பாக மேற்பார்வை செய்திருக்க வேண்டிய ஐ.நா செயலாளர் நாயகத்தில் தலைமை அதிகாரி விஜய் நம்பியாரின் கடமைமீறல் தொடர்பில் ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையிலும் சார்ல்ஸ் பெற்றியின் அறிக்கையிலும் ஏன் குறிப்பிடப்படவில்லை?  அவர் தான் பான் கீ மூனின் தூதராக, விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெள்ளைக் கொடியுடன் சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடையச் சொன்னார். ஆனால் அவர்கள் வெள்ளைக்கொடியுடன் கூடவே பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சரணடையச் சென்ற போது காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் முக்கிய ஊடகவியலாளர் மேரி கொல்வினால் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு தவறுகள் செய்தும் போர் முனைக்கே வராத தனது தலைமை அதிகாரியை பான் கீ மூன் காப்பாற்றுகிறார். இதற்கு அவர்களுடைய 40 ஆண்டு உறவே காரணம். விஜய் நம்பியாரின் மூத்த சகோதரர் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் சதீஸ் நம்பியார் சிறிலங்கா ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். அவர்தான் விஜய் நம்பியாரை இந்தியாவின் வலியுறுத்தலையும் கூறி போரின் கடைசிக்கட்டத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்லியிருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு தனது வேட்பாளரை வாபஸ் பெற்று சிறிலங்கா அரசாங்கம் பான் கீ மூனை ஏகபோகமாக ஆதரித்துள்ளது. பான் கீ மூனின் மருமகன் தமிழர் எதிர்ப்புக் கொள்கையை உடையவர். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினர்  பணிகளில் ஈடுபட்ட போது பான் கீ மூனின் மருமகன் பெற்றுக் கொண்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் இவரது கடந்த கால ஆக்கங்கள் போன்றவற்றின் மூலம் இவர் தமிழர் எதிர்ப்புக் கொள்கையை உடையவர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தவரை, தமிழீழப் பிரச்னையில் அது இரட்டை நிலைப்பாடை மேற்கொள்வதை உலக சமூகம் பார்க்க இயலும். லிபியா, எகிப்து அல்லது சிரியாவில் அது கடைபிடிக்கும் நடைமுறை வேறு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட போதும், சிலர் சிறையில் இன்னும் இருக்கும் நிலையிலும் சர்வதேச கண்டனங்கள் பல எழுந்தும் ஐக்கிய நாடுகள் சபை ஏன் குரல் கொடுக்கவில்லை. பான் கீ மூன் தமிழீழத் தமிழர்களின் பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் செயலற்று இருப்பதற்கு பின்னணியில் வேறு சக்திகள் இருக்கலாம் என்றே சந்தேகப்படத் தோன்றுகிறது.

ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழுவும், சர்வதேச சமூகத்தினரும், மனித உரிமைக் குழுக்களும் போர் குற்றங்கள் தொடர்பாகவும், இனப்படுகொலை தொடர்பாகவும் சுயாதீனமான  விசாரணையைக் கோரியுள்ளனர். ஆனால் ஒற்றைக் குடும்ப ஆட்சி அதிகாரத்தை செய்யும் சிறிலங்கா ஜனாதிபதி அதற்கு உடன்பட மறுத்துள்ளார்.

தமிழர்கள் மீதான இனப்படுகொலை என்பது சிங்களமயமாதல், இராணுவமயமாதல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுதல் என்று பல்வேறு வடிவங்களில் இன்னும் அங்கே தொடர்கிறது. சர்வதேச சமூகத்தினர் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தையை நடத்த முயற்சிக்கும் போதெல்லாம் அனைத்து வகையான சீர்குலைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டுள்ளனர். 
21ஆம் நூற்றாண்டில் 1 இலட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழ் குடிமக்களை கொன்று மிக மோசமான இனப்படுகொலையில் சிறிங்கா படைத்தரப்பு ஈடுபட்டது. அதன் முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக மனிதவுரிமை அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஐ.நாவின் 99வது சரத்தைப் பயன்படுத்தி பான் கீ மூன் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான கட்டளையை வழங்க முடியும். அத்துடன் இது தொடர்பிலான விசாரணை அறிக்கையை ஐ.நா பாதுகாப்பு சபை மற்றும் பொதுச் சபை ஆகியவற்றின் பார்வைக்காக வழங்க பான் கீ மூன் கட்டளையிட முடியும்.

இதனூடாக யார் குற்றவாளிகள் என்பதை இந்த உலகம் தீர்மானிக்க முடியும். இதன் மூலம் தான் விட்ட எல்லாத் தவறுகளுக்கும் ஐ.நா பிராயச்சித்தம் தேடமுடியும். ஐ.நா மற்றும் பான் கீ மூன் போன்றோர் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டியவர்களேயன்றி, இவர்கள் இரங்க வேண்டியவர்கள் அல்ல என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகின்றது’ என இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்