/* up Facebook

Jan 31, 2013

‘காதல்’ - தந்தை பெரியார்


பெண் ஏன் அடிமையானாள்? தொகுப்பிலிருந்து,
பெரியார்
‘இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,  ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.’


அன்பு, ஆசை,  நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர, வேறு  பொருளை கொண்டதென்று சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் – பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி ,அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் -பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல்,  திருப்தி இல்லாமல்,  தொல்லைபடுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.

ஆனால், காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்ததெ ந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைகின்றது ? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்,   உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும்,(காதலை) அதைப் பிரமாதப் படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால் , அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படி பயன் படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள். “காதலென்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல  என்றும் அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு,  காதல் வேறு என்றும், “அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்”  என்றும், அதுவும்  “இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்” என்றும்  “அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமேயில்லை” என்றும்,“அதுவும்  ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் , ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்”  என்றும், அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக- இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது” என்றும், பிறகு வேறொருவரிடமும் காதல் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது; அதை விபச்சாரமென்று தான் சொல்ல வேண்டுமே ஒழிய அது ஒருக்காலும் காதலாகாது” என்றும், மற்றும் “ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு யாரிடமும் காமமோ, மோகமோ, விரகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன.

மேலும் ,இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,  ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப் படுத்தியும் வரப்படு கின்றது.

இதன் பலாபலன் எப்படியிருந்தாலும்  இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவஞானமும் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கை த் தன்மையையும்  உண்மையையும் அறியாதவர்கள் என்றோ ,அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றோ மறைக்கின்றவர்கள் என்றே தான் கருதவேண்டி இருக்கின்றது.

அன்றியும், இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால், இன்று பெரும்பான்மை மக்கள் ‘காதலன்-காதலியாக’ வாழ்வதன் தன்மையெல்லாம் வேறு ஒருவர் ஜோடி பார்த்துச் சேர்த்ததும், பிள்ளைகளைப் பெறுவதற்கென்றும் , வீட்டு வாழ்க்கையின் உதவிக்கென்றும் , இயற்கை உணர்ச்சிக்கும்,  பரிகாரத்திற்கென்றும் சேர்க்கப் படுகின்ற ஜோடிகளாகத் தான் இருந்து வருகிறதே தவிர,  தாங்களாகத் தங்கள் காதல் மிகுதியால் காதல் தெய்வத்தால் கூட்டுவித்ததைக் காணுவது அருமையாக இருக்கிறது.இது எப்படி இருந்தாலும் எந்தக் காரணத்திற்கு ஆனாலும் , ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை,  காதல்,  காமம்,  நட்பு,  நேசம், மோகம்,  விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கையையும்,  சுதந்திரத்தையும்,   சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால்,  இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் , தனக்குப்பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும், சாமான் கடைகளில் சாமான் வாங்குவது போலவும் அவனவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லப்படுவது கூட இவ்வளவு பெருமையையும், அணி யையும், அலங்காரத்தையும் கொடுத்து பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி, அது என்ன? அது எப்படி உண்டாகின்றது? என்பதை யோசித்துப்பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா என்பது ஒரு புறமிருந்தாலும், தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண், பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறுபொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை.

அன்றியும், அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத்தவிர வடமொழி மூலத்தை அனுசரித்தால்  காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள்தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றபடி, தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண் -பெண்  சேர்க்கை, கூட்டு முதலாகியவை சம்மந்தமான விஷயங்களுக்கும், அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகின்றதே தவிர காதலுக்கென்று வேறு பொருள் காணப்படவில்லை.

ஆதலால், இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டுபிடித்தார்கள் என்பது  நமக்கு விளங்கவில்லை.

நிற்க ,இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? இது தானாகவே உண்டாகின்றதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத்தின்மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்த்தாலும், அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும்,  உருவத்தையோ,  நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்கக் கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

இந்தப் படியும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு, அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண் ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் – வேண்டுமென்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கி றானோ அதுபோல்தான் இந்த காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர, வேறு எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது  நமக்குப் புலப் படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தை , திருப்தியைக் கோரத்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும் காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தை கவனித்தால் விளங்காமல் போகாது.

அதாவது, அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்கு பயன்படுவதைக்கொண்டோ,  அல்லது மற்ற ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவை யான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டே தான் யாரும் எந்தப் பெண் ணிடமும்,ஆணிடமும் காதல் கொள்ளமுடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் -அல்லது வேஷ­மாத்திரத்தில் காட்டப் பட்டதாக  இருந்தாலும் இருக்கலாம்.

உதாரணமாக, ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு நீ யார் என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமார்த்தி என்று சொல்லுகிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு, வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?

நிற்க, அவன் தன்னை சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்து தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லி விட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறு ஜென்மத்திலும்” இவனை விட்டுப் பிரியக் கூடாது என்று கருதிவிடுகிறாள். 4-நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும், சேவகன் மகன் என்று அறிந்தாள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாகவேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும், மறுக்கும் தன்மையும் விளங்கும். இந்தப் படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இதுபோலவே இன்னமும் தான் முதலில் நினைத்த தற்கு அல்லது தனது நன்மைக்கும்இ திருப்திக்கும்இ இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்டகாரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன் படுமா? அதை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் ‘உண்மைக் காதலின்’ நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.

நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளை கவனிக்கும்போது சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாறமுடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் அது பொய்யா கவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப் படும்படி விட்டால் அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக்காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகரமுடியும்.

காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப் பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு, கொஞ்சகாலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம் நிலைமை லட்சியம் மாறலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியது தானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.

ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் ,இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும், வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோத மில்லையானால் ஒருவர் ஞானியாகி துறவியாகி விட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோத மாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்கா மல்   போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும் ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.

அதுபோலவே ,மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக்கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பெலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும் உறுதி ஏற்பட்டபின்பு தவறுதலைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டுவிடுவதும் அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையே யல்லவா?.

உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களை யெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்த தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனி டமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே, இந்த தாசி கொண்டது காதலா அல்லது வாழ்க்கைக்கு ஒரு சௌகரியமான வழியாய் இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக்கொண்டே வந்தால் இது ஒத்த காதலாகி விடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிட சிறிதுகூட சிறந்தது அல்லவென்பது விளங்கி விடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து ஆண்- பெண்களுக்குள் புகுத்தி விட்டதால் ஆண், பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டு மென்று கருதி- எப்படி பக்திமான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால், அனேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும்  பட்டை நாமம் போடுவதும் , சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும் வாயில் சிவசிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்தி மான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அது போலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வேஷம் போட்டு கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக “தூங்கினால் கால் ஆடுமே” என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்கவேண்டுமென்று கருதி காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும்,  எப்படி பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் கற்பு என்றால், பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அது போலும், உண்மையான காதல்களானால் இப்படி இருப்பார்களே என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்.

ஆகவே , ஆசையை விட,  அன்பை விட,  நட்பை விட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும்;  அவ்வன்பு, ஆசை,  நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள்  இடத் திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக் கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து,  நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து,  மனப்பான்மையில் இருந்து,  தேவை யில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும்; அவ்வறிவும் நடவடிக்கை யும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும்; அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும்,  மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலிருந்து நாம் யாரிடமும் அன்பும் ஆசையும்  நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.

ஆனால், அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய, மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டு வதற்காகவே இதை எழுதுகின்றோம்.

இதுவும் ஏன் எழுதவேண்டி யதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’  ‘அது காதலுக்கு விரோதம்’ ‘அது காம இச்சை’  ‘ இது மிருக இச்சை’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு வித பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்று பார்த்துவிடலாம் என்றே இதைப்பற்றி எழுதலானோம்.
...மேலும்

Jan 30, 2013

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் - தீட்டும் - வி.அப்பையா-இனஅழிப்பு போருக்கு பிந்தைய காலங்களில் சமூக வாழ்க்கை இயல்பாகி விட்டதற்கான தோற்றப்பாட்டை அரசும், அதன் சிவில் சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களினூடாகவும், பல்வேறு நிகழ்ச்சி நிரல் செயல்பாடுகள் மூலம் நிறுவ முயலுகிறார்கள்.

ஆனால், உண்மையில் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக இராணுவ நிர்வாகத்திற்கு எதிராகவும், அதிகார வர்க்கத்தின் ஆதிக்க திமிருக்கு எதிராகவும் போராடுவது என்பது தொடர் போக்காகவே இருந்து வருகிறது.

சமீபத்தில் இணையங்களில் பெரிதாக அடிபடாத அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்தி உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு தகுதியான அதிபரை நியமிக்கக்கோரி பாடசாலை முன்பு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது. ஒரு தகுதியான அதிபர் நியமனத்திற்கு கூட மக்கள் போராட வேண்டியுள்ளதையும், நிர்வாக சீர்கேடு, தலையீடு எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே இந்த செய்தி உணர்த்துகிறது.

மக்களின் போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன? 04.10.2012இல் வடமராட்சி வலயத்தில், தரம் 1 ஏபி கொண்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் புதிதாக நியமனம் பெற்ற 15 பேரில், தரம் 2-2 நிலையில் உள்ள ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டதை கண்டித்தே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகுதியான கல்வி தகுதி கொண்ட அதிபர் இருந்தும் ஏன் இந்த உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு அவர்கள் நியமிக்கப்படவில்லை என்பது நியாமான கேள்வியாகவே உள்ளது.

மேலும், முன்னைய காலங்களிலும் இதே போன்ற நிலமைதான் இக்கல்லூரிக்கு ஏற்பட்டுள்ளது. 12.11.2012ல் ஓய்வுபெற்ற இக்கல்லூரியின் அதிபரின் தேர்வும் கூட விதிமுறைகளை மீறி அதிகாரம் படைத்தோரால் நியமிக்கப்பட்டது. இவரும் கூட அதிபர் தரம் அற்ற, ஆசிரியர் தரத்தை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தற்போதைய அதிபர் நியமனத்தையும் கருத்தில் கொண்டால் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் நிர்வாக செல்வாக்கை புரிந்து கொள்ள இயலும்.
இக்கல்லூரிக்கான முதல் நிலை தகுதியுடைய அதிபர்கள் உடுப்பிட்டியில் இல்லையா? என்றால், உண்மை செய்தி அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது. 

உடுப்பிட்டியை சேர்ந்தவரும் இதே கல்லூரியின் பழைய மாணவியும், தற்போதைய இமையாணன் அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றும் திருமதி நவமணி சந்திரசேகரம் 2004ஆம் ஆண்டில் இருந்தே தரம் 1 உடையவராக இருந்து வந்துள்ளார். இவரின் கல்வி தகுதிக்கு (கல்வியல் பட்டதாரி 01.03.2010) தரம் 1ஏபி உள்ள கல்லூரிக்கு நியமிக்க வேண்டியது அரசின் கடமை கூட. இருந்தும் அவ்வாறு நியமிக்கப்படாதது அவரின் பின்புலம் தான்.

திருமதி நவமணி சந்திரசேகரம் அவர்கள் 23.03.2010இல் வலயக் கல்வி பணிப்பாளர் மூலமாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் நிரப்பப்படாமல் இருக்கும் அதிபர் இடத்திற்கு முழுதகுதியுடைய தன்னை நியமிக்கும்படி விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், இவரின் விருப்ப இடமாற்றத்திற்கு மாறாக 22.04.2010 திகதியிட்ட மாகாண கல்வி செயலாளர் அதிபர் ஓய்வுபெற்றுள்ள அடிப்படையில் இடமாற்றம் என்ற தலைப்பில் வல்வை மகளிர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்து கடிதம் வந்துள்ளது.
தனது விருப்பமாற்றத்திற்கு எதிராக வந்த இடமாற்றத்தை ரத்து செய்யும்படியும், உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அதிபர் நியமனத்திற்கு நேர்முக தேர்வு நடைபெறாத நிலையில், எனது விருப்பமாற்றத்திற்கு எதிரான இடமாற்றம் (வல்வை மகளிர் கல்லூரி) நியாயமற்றது எனவும் விளக்கி மேல்முறையீடு செய்திருந்தார்.

இவரது எதிர்ப்பின் நியாயத்தின் அடிப்படையில் மாகாண கல்வி செயலாளரால் வழங்கப்பட்ட வல்வை மகளிர் கல்லூரி இடமாற்றம் இரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் தனது விருப்ப அதிபர் இடமாற்றமான உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபருக்கான நேர்முக தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த திருமதி நவமணி சந்திரசேகரத்திற்கு அதிர்ச்சி செய்தி தான் வந்தது. காரணம் இரண்டரை ஆண்டுகளில் பணி ஓய்வுபெற இருந்த ஆசிரியர் தரம் 2-2ஐ சேர்ந்த ஒருவர் (அதிபர் தரமற்ற) அக்கல்லூரியின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். இதற்கு புலம்பெயர் பழைய மாணவர்கள் சங்கங்களின் முன்முயற்சி மிகமுக்கிய காரணமாக இருந்தது. 
தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகாவது இக்கல்லூரிக்கு நியமிக்கப்படுவேன் என காத்திருந்த (அனைத்து கல்வித்தகுதியும் இருந்தும்) திருமதி நவமணி சந்திரசேகரத்திற்கு மீண்டும் அதிர்ச்சி செய்திதான் வந்துள்ளது. இம்முறையும் அதேகல்லூரிக்கு திருமதி நவமணி சந்திரசேகரத்தைவிட கல்வி தரம் குறைந்த அதிபர், அதிபராக நியமிக்கப்பட்டுள்ளது தான்.

இந்நியமனத்தை பொறுத்துக்கொள்ள இயலாத பெற்றோர்களும், பொதுமக்களும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஓய்வுபெற 20 மாதங்கள் இருக்கும் திருமதி நவமணி சந்திரசேகரம் 1989களில் இருந்து இமையாணன் அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயத்தில் கணிதபாட ஆசிரியராகவும். பிரதி அதிபராக தொடர்ச்சியாக இருபத்திமூன்றரை ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். இச்சேவை காலத்தில் 17 வருடங்கள் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றி வந்துள்ளார்.

இக்கல்வி பணிக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டவர் திருமதி நவமணி சந்திரசேகரம் என்பதை, அவ்வூர் மக்கள் நன்கு அறிவர். ஓய்வுபெற 20 மாதங்கள் உள்ள நிலையில் அவருக்கான உரிய மரியாதையை தர தவறும் கேடுகெட்ட சமூகநிலையைக்கண்டு காறி உமிழத்தோன்றுகிறது.

கல்விக்கூடங்களை நடத்த வக்கற்ற இலங்கை அரசும், இதன் வெற்றிடத்தை நிரப்ப புலம்பெயர் பழைய மாணவர் சங்கங்களும், ஊர் சங்கங்களும், தற்போதைய சூழலில் பாடசாலைகளுக்கு பின்புலமான நிதி உதவிகளை செய்து வருகிறது. ஆனால் நிதியுதவியூடாக தனது அதிகார அரசியல் மனநிலையையும் உட்புகுத்துவதன் மூலம் தமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றன.

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அவர்கள் தெரிவிக்கையில் வடமாகாணத்தில் சிலபாடசாலைகளில் அதிபர் நியமனம் வழங்கப்படுவது, பொருமத்தமற்ற மோசமான நிலையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு (தரம் 1 ஏபி) தகுதியாக அதிபரே நியமனம் செய்யப்படல் வேண்டும் எனவும் ஆனால் தரம்குறைந்த அதிபர் (தரம் 2-2) ஒருவரை நியமிக்க உள்ளதாக தாம் அறிவதாக அவர் தெரிவித்துள்ளார் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் பாகுபாடுகள் பொதுநியமனங்களில் இருத்தலாகாது. நியமனங்கள் தகுதி அடிப்படையில் ஒழுங்கு முறைப்படி செய்யப்படல் வேண்டும். கல்வி அதிகாரிகள் பக்கச்சார்பற்ற முறையில் பணியாற்ற வேண்டும். இது தொடர்பில் வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடவுள்ளோம் எனவும் தேவையேற்படின் நீதிமன்றம் நாடுவது என்றும் ஆசிரியர் சங்க கூட்டமைப்பு இவருக்காக தொடர்ந்து போராடும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமதி நவமணி சந்திரசேகரம் முழுக்கல்வி தகுதியுடையவராக இருந்தும் நியமிக்கப்படாதது உடுப்பிட்டி மகளிர் கல்லூரிக்கு பின் இயங்கும் அரசியல் சக்தி படைத்த ஆதிக்க சாதிகளே.

நுண் அரசியல் தளங்களில் இருந்து விளிம்பு நிலை மக்களின் கருசனையாளர்கள் வரை இச்செய்தி கண்ணில்படாமலேயே இருந்து விட்டதுதான் ஆச்சரியம்!

அரசாங்கத்தின் மீது களங்கம் சுமத்தாமல் இச்செய்தியை கடந்து செல்லும் கூட்டங்களும், கண்துடைப்பு உத்தரவு என அறிந்தும் ஆளுநர் உத்தரவை, அரசு சார்பானதாக்க முயலும் சாதி மகான்களின் தேசபக்தி கபட நாடகத்திற்கு இடையில் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் சுயமரியாதைக்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதும், சுரண்டப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.

அவர்களின் நியாமான செய்திகளை கூட இருட்டடிப்பு செய்வதுமான நிலைதான் இன்று வரை தொடர்கிறது. இந்த அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும், ஒடுக்கப்படுபவர்களுடன் ஒன்றிணைந்து போராடுவதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

...மேலும்

Jan 29, 2013

பாலியல் வன்முறை – ஓர் அறிவியல் பூர்வ தீர்வு


-மருத்துவர் ஜானகிராமன் – மருத்துவர் கபிலன்

பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை (Social stigma) காரணமாக தண்டனை பெற்றுத்தரும் அளவிற்கு சாட்சி கூற இயலாத சூழல் உருவாகின்றது.

1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன?
தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக இருக்கக்கூடும். மேலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வின் படி 9% பாலியல் குற்றங்கள் மட்டுமே நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநில‌த்தில் 2011ல் பதிவான 636 பாலியல் வன்முறைகளில் வெறும் 4 வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ள‌து. மீதம் 632 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2. ஏன் இவ்வளவு குற்றங்கள்?
தனிமனித ஒழுக்கம், சமூக சூழல் ஆகியவற்றைத் தவிர்த்து பார்க்கும்பொழுது அதிகரிக்கும் குற்ற நிகழ்வுகளுக்குக் காரணம், பெரும்பான்மையான பாலியல் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் போய்விடுவதேயாகும். எடுத்துக்கட்டாக 20% பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதாக கருதுவோமாயின், நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படாததானால் 80% குற்றவாளிகள் விடுதலை செயயப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் அடுத்த குற்றங்களை செய்யும் தொடர் குற்றவாளியாக(Habitual offender) மாறிவிடுகின்றனர்.
3. தொடர் குற்றவாளிகள் என்றல் என்ன?

மேற்கண்ட சுழற்சி ஒரு மோசமான சுழற்சியாகும் (vicious cycle). இந்த மோசமான சுழற்சியினால் தொடர் குற்றவாளிகள் (Habitual offender) உருவாகின்றனர்.

4. ஏன் குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை?
ஏனெனில் பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை (Social stigma) காரணமாக தண்டனை பெற்றுத்தரும் அளவிற்கு சாட்சி கூற இயலாத சூழல் உருவாகின்றது.

Students hold candles as they pray during a candlelight vigil for a gang rape victim, who was assaulted in New Delhi, in Ahmedabad December 31, 2012. The number “12″ painted on the face of the girl on left refers to the year 2012. REUTERS/Amit Dave

5. பாலியல் வன்முறை குறித்த சட்டப் பிரிவுகளை (375,376) மரண தண்டனை வழங்குமாறு திருத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க இயலுமா?
முடியாது. ஏன் எனில் சட்டங்களை எவ்வளவு கடுமையாக்கினாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகும்பொழுது ஒரு தண்டனையும் கிடைக்காது. எனவே பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதற்கான அறிவியல் பூர்வ வழிமுறைகளை உருவாக்குவதே சரியான தீர்வாக இருக்கும்.

6. பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதில் என்ன சிக்கல்?
பாலியல் குற்றங்கள் CrPC 53இன் கீழ் உதவி ஆய்வாளர் (Sub Inspector) அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுகின்றன. இவ்வாறு காவல் துறையால் செய்யப்படும் விசாரணை அறிவியல் பூர்வமானதல்ல. காவல் துறையின் விசாரணை அதிகாரிகள், சட்ட மருத்துவம் (Forensic Medicine) குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாக உள்ளனர். காவல் துறை, அரசின் மற்றும் ஒரு படை பிரிவே(Force) அன்றி அறிவியல் சார்ந்த துறை(Scientific Investigators) அல்ல.

பாலியல் குற்றங்களை விசாரிக்கும் முழு பொறுப்பை காவல் துறையிடம் ஒப்படைப்பது சரியான வழி முறை அல்ல. பெரும்பாலும் காவல் துறையின் விசாரணை நேரில் கண்ட சாட்சியங்களைத் திரட்டுவது அல்லது சூழ்நிலை சாட்சியங்களைத் திரட்டுவதாகவே இருக்கும். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிடுவதாலும் குழந்தையாக இருப்பதாலும் யாருமல்லாத இடங்களில் குற்றம் பெரும்பாலும் நிகழ்த்தப்படுவதாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகின்றது.

மேலும் அறிவியல் பூர்வமான சோதனைகளான பெண்ணுறுப்பின் எபிதிலியல் செல்களை ஆணுறுப்பில் கண்டுபிடிப்பது, நகங்களில் சிக்கிய தசைத் துணுக்குகளை ஆராய்வது, ஆடைகளில் உள்ள இரத்தம் மற்றும் விந்து மாதிரிகளைத் திரட்டுவது மற்றும் லோகர்ட் பரிமாற்ற விதியின்படி முடி மற்றும் மற்ற பொருட்களைத் திரட்டுவது போன்ற பல அறிவியல் பூர்வமான வழிமுறைகள் பெரும்பாலான வழக்குகளில் செய்யப்படுவதில்லை.

மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முறையான வழிகாட்டுதல்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு இருப்பதில்லை. எனவே இவ்வகையான அறிவியல் பூர்வ ஆய்வுகள் (Forensic Investigations) உடனடியாக செய்யப்படாததினால் சாட்சியங்கள் திரட்ட இயலாமல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடுகிறது.

7. மருத்துவக் கல்லுரி / அரசு மருத்துவமனைகளில் சட்ட மருத்துவத் துறையின் பங்கு என்ன?
நீதிமன்ற ஆணையின் கீழ் குற்றவாளி அல்லது பாதிக்கப்பட்ட பெண் சட்ட மருத்துவக்குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார். மேற்ககூறிய பல அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டும் வேலையை இத்துறை செய்கிறது. ஆனால் குறைபாடு என்னவெனில் சட்ட மருத்துவத் துறையால் விசாரணையை தன்னிச்சையாக துவங்கவோ, நீதிமன்றங்களினால் ஆணையிடப்படும் பரிசோதனைகளைத் தவிர வேறு வகையான குற்ற விசாரணைகளில் (Forensic investigation) ஈடுபடவோ முடியாது.

எடுத்துக்காட்டாக பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தால் சட்ட மருத்துவத் துறைக்கு அனுப்பப்படும் சூழலில், சட்ட மருத்துவர் குற்றவாளியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கருதினால் அதற்கான ஆணையை அவரால் பிறப்பிக்க இயலாது. இதனால் சட்ட மருத்துவத் துறை அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலையை மட்டும் செய்து மேற்கொண்டு தொடர இயலாமல் நின்று போகும் சூழல் உள்ளது.

8. தற்போதைய தேவை என்ன?
நீதிமன்றங்களில் பாலியல் குற்றங்களை நிரூபிக்கும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வழிமுறைகளை வகுக்காமல் குற்றங்களை குறைக்க இயலாது. எனவே பாலியல் குற்றங்களை தன்னிச்சையாக விசாரிக்கும் அதிகாரமுடைய, அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஓர் இடை நிலை அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.

 இக்குழுவில் இடம் பெறுவதற்கான இடைநிலை அதிகாரிகளாக‌ அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான புதிய முதுநிலை படிப்பினை உருவாக்கி பயிற்சி அளிப்பதன் மூலமும், மேலும் வளர்ந்த நாடுகளின் குற்ற விசாரணை முறைகளை அவர்களை அறிந்து வரச் செய்வதன் மூலமும் இக்குழுவை சிறப்பான விசாரணை குழுவாக மாற்ற இயலும். மேலும் இக்குழுவினை சட்ட மருத்துவர், சட்ட வல்லுநர் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட விசாரணை அதிகாரி கொண்ட குழுவாக அமைக்க வேண்டும்.

இக்குழு ஏதேனும் ஒரு பாலியல் குற்றம் நடைபெறுமாயின் தன்னிச்சையாக விசாரணையைத் தொடங்கி, அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படும் எண்ணிக்கையை கூட்டலாம்.

- மருத்துவர் ஜானகிராமன்
(கைப்பேசி: 9600296098; மின்னஞ்சல்: medico.raman@gmail.com)

- மருத்துவர் கபிலன்
(கைப்பேசி: 9843508772; மின்னஞ்சல்: kabspaceway@yahoo.co.in)

...மேலும்

Jan 28, 2013

தொழில் செய்யும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும்: ஆசிரியத் தொழிலை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு(சுமார் 100 முஸ்லிம் திருமணமான, திருமணமாகாத ஆசிரியைகள் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆசிரியைகளில் சிலர் முஸ்லிம் பாடசாலைகளிலும் மற்றும் சிலர் ஏனைய சகோதர மொழிப் பாடசாலைகளிலும் சேவை புரிகின்றனர்.)

இன்றைய சமூகத்தில் பெண் என்பவள் பிரதான இரண்டு பாத்திரங்களை ஏற்று இயங்குகிறாள். ஒன்று மனைவி, தாய் என்ற பாத்திரங்கள். இரண்டாவது, வீட்டைப் பராமரிப்பவள் (Home Maker) என்ற பாத்திரம். ஆனால், கடந்த கால்நூற்றாண்டு காலமாக அவள் மேற்குறிப்பிட்ட இரு பாத்திரங்களிலிருந்தும் வெளியே வந்து, அதாவது வீட்டுக்கு வெளியே தொழிலுக்காகச் செல்கிறாள். இது பெண்கள் மத்தியில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியின் விளைவாகும். அத்துடன், மேலைத்தேய பெண்ணிலைவாத இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி என்பனவும் பெண்களின் சமூகப் பாத்திரத்தை (Social role) மாற்றியமைக்கத் துணைபுரிந்துள்ளன.

சமூகத்தில் இருவேறுபட்ட பாத்திரங்களை ஏற்றிருக்க வேண்டிய நிலை தொழில் புரியும் பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகும். அதாவது உற்பத்தியில் தொழிலாளி(Productive worker), வீட்டைப் பராமரிக்கும் தாய் (Home maker), என்ற இவ்விரு பாத்திரங்களை ஏற்று இருசாராரையும் அவள் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. தொழிற் துறையைப் பொறுத்தவரையில் பொதுவாக முறைசார், முறைசாரா தொழில்கள் என்ற இருதுறைகள் காணப்படுகின்றன. முறைசார் துறை என்பது முறையான, பொருத்தமான கல்வித்தகைமையுடைய நிரந்தரமான தொழில்களைக் குறிக்கும்.

பொதுவாக அபிவிருத்தியடைந்த நாடுகளில் முறைசாராத துறைகளில் குறைந்த கல்விமட்டத்தை உடைய ஏழைப் பெண்களே தொழில் புரிகின்றனர். அவர்கள் பெரும்பாலும் உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களாகவும், வீட்டுப் பணியாளர்களாகவும் உள்ளனர்.

அதிகமான பெண்கள் முறைசார் தொழில் துறைகளில் (Formal Sector) தொழில் செய்கின்றனர். அவர்கள் பலவகையிலும் கல்வியறிவைப் பெற்றுள்ளனர். பொதுவாக இவர்கள் காரியாலயங்களில் அல்லது நிறுவனங்களில் தொழில் புரிகின்றனர். இவர்களது வேலைத்தளமும் வீடும் முற்றாகவே வேறுபட்ட இடங்களாகும். இலங்கையிலும்  அதிகமான பெண்கள் கட்டுப்பாடான துறைகளில் தொழில் புரிகின்றனர். என்றாலும் அவர்களில் அதிகமானோர் போக்குவரத்துக்காக அதிகமான நேரத்தைச் செலவிடுவதைக் காணமுடிகிறது. இலங்கையில் அதிகமான பெண்கள் தாதிகளாகவோ ஆசிரியைகளாகவோ தொழில் புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் 5617 பேர் ஆசிரியைகளாக நாடளாவிய ரீதியில் சேவை செய்கின்றனர்.

குடும்ப அமைப்பில் பெண்ணுடைய பாத்திரம்

இன்றைய காலகட்டத்தில் கருக்குடும்பங்களின் (Nuclear family) எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக, கல்வி கற்ற பெண்களின் குடும்பங்களே இவ்வாறு தனிக் குடும்பங்களாக வாழ விரும்புகின்றன. கருக் குடும்பத்தில் தொழில் செய்யும் பெண்களின் பிரதான பொறுப்பு வீட்டு வேலைகளைக் கவனிப்பதும் பிள்ளைகளைப் பராமரிப்பதுமாகும் (domestic activities and child care). இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, தொழில் செய்யும் பெண்கள் தமது பிள்ளைகளுக்கு சுகவீனம் ஏற்படும் போது, அவள் கடமைக்குச் செல்லா முடியாதவளாய் விடுமுறை எடுக்கின்றாள். அவ்வாறின்றி, கட்டாயமாகத் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் வேலைத்தளத்திற்குச் சென்றாலும் அங்கு தன் பிள்ளையின் நினைவாகவே இருப்பாள். இந்நிலையில், அவளால் இரு வேலைகளையும் சரியான முறையில் நிறைவேற்ற முடியாமல் போகின்றது.

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பெண்கள் தமது திருமணத்துக்கு முன் பெற்றோரினதும் திருமணத்திற்குப் பின் கணவனினதும் பாதுகாப்பிலும் கட்டுப்பாட்டிலும் (dependent) இருக்கின்றனர். இப்படியான சமூக அமைப்பில் இருந்துகொண்டுதான் பெண்கள் தாம் ஏற்றுள்ள இரு பாத்திரங்களையும் செயற்படுத்த வேண்டியுள்ளது.

இவ் ஆய்வுக்கு மாதிரிகளாக (Samples) எடுத்துக்கொள்ளப்பட்ட அட்டவணை கீழே காட்டப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆசிரியைகள் 40 வீதமானவர்களும் திருமணமான ஆசிரியைகள் 60 வீதமானவர்களும் இவ் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மாதிரிகள்- வயது அடிப்படையில்

வயது சதவீதம்
திருமணமாகாத ஆசிரியைகள் 25-29
30-34

35க்கு மேல்

18%
17%

05%

திருமணமான ஆசிரியைகள் 25-29
30-34

35க்கு மேல்

20%
28%

12%

அட்டவணை 1.1
இவ் ஆசிரியைகள் ஆசிரியத் தொழிலுக்கு முன் பெற்றுக்கொண்ட கல்வித் தகைமைகள் தொடர்பாகப் பெறப்பட்ட தகவல்களின்படி, சாதாரண தரம் வரை மட்டும் கற்றவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையினராவர். அதேபோல் உயர் கல்வித் தகைமையுடைய அதாவது, மேல்நிலைக் கல்வியைப் பூர்த்தி செய்தவர்களும் மிகக் குறைவான எண்ணிக்கையினராவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சாதாரண தரம் வரை கற்று ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடல் செய்தபோது அவர்களில் அதிகமானோர் இளவயதிலேயே திருமணம் செய்துகொண்டதால் மேற்படிப்பைத் தொடரமுடியாமற் போனதாகவும், 1970களில் சாதாரண தரம் வரை கற்றிருந்தால் போதுமான கல்வித் தகைமையாகக் கருதப்பட்டு ஆசிரியத் தொழிலில் புகுவதற்குப் போதுமானதாக இருந்ததாகவும் கூறினர்.


கல்வித்தகைமை

கல்வித்தகைமை திருமணமானவர்கள் திருமணமாகாதவர்கள்
க.பொ.த. (சாதாரண தரம்) 10 -
க. பொ. த (உயர் தரம்) 27 15
பட்டதாரி 20 20
முதுநிலைப் பட்டதாரி 02 05
அட்டவணை 1.2

அட்டவணை 1.2 படி 42 ஆசிரியைகள் க.பொ. த. (உயர் தரம்) சித்தியடைந்தவர்களாவர். இவர்களில் 27 பேர் திருமணம் செய்தவர்கள். 40 பட்டதாரி ஆசிரியைகளும் 07 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியைகளும் இவ் ஆய்வுக்கு உட்பட்டனர். திருமணமாகாத ஆசிரியைகளே அதிகமாக உயர்கல்வியைப் பூர்த்தி செய்துள்ளனர் என்பது இவ் ஆய்வின்போது தெரிய வந்த விடயமாகும். ஏனையோர் ஆசிரியத் தொழில் செய்வதற்கு உயர்கல்வி அவசியமில்லை என்றும், பெற்றுள்ள கல்வியும் தொழிற் தகைமையும் போதுமானது எனத் தெரிவித்தனர்.

தொழில் தெரிவுக்கான காரணங்கள்

ஆசிரியத் தொழில் எப்போதும் கௌரவமான தொழில்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. எனவேதான் இன்று பெரும்பாலான பெண்களின் தொழில் தெரிவில் ஆசிரியத் தொழில் முதலிடம் பெறுகின்றது. அதிலும் திருமணம் செய்த பெண்கள் ஏனைய தொழிலை விட ஆசிரியத் தொழிலையே விரும்புகின்றனர். அவர்கள் வீட்டைப் பராமரிப்பவர்களாகவும் தாயாகவும் கடமை புரிய ஆசிரியத் தொழிலே அதிகமான நேரத்தை வழங்குகிறது என்பதானாலாகும். அத்துடன் இலங்கைப் பாடசாலைகளில் வருடத்தில் மூன்று மாதங்கள் விடுமுறை வழங்கப்படுவதுடன் அரசாங்க விடுமுறையும் அனுமதிக்கப்படுகிறது. சொந்தத் தேவைகளுக்காக 42 நாட்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றார்கள். அத்துடன், பிள்ளைப் பேற்றுக்காக 84 வேலை நாட்கள் வழங்கப்படுகிறது. விரும்பினால் மேலும் 84 நாட்கள் (on half pay) விடுமுறை பெறுவதற்கு கடந்த ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (Circular No 4/2005, 3rd February 2005). அத்துடன், வார இறுதி நாட்கள் அரச தனியார் விடுமுறை நாட்களும் விடுமுறையாகக் கிடைக்கின்றன.

முஸ்லிம்  சமூகத்தைப் பொறுத்தவரை ஏனைய சமூகங்களைப் போன்றே திருமணமும் குடும்ப வாழ்வும் சமூக அமைப்பில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. பெரும்பாலான திருமணமான பெண்கள் ஆசிரியத் தொழிலைத் தெரிவு செய்வது குடும்ப வாழ்க்கையைக் கொண்டுநடத்த இலகுவாக இருக்குமே என்பதனாலாகும். குறிப்பாக,  முஸ்லிம் பெண்கள் ஆசிரியத் தொழிலை விரும்பிச் செய்வதுடன், சமூகமும் பெண்கள் ஆசிரியைகளாகத் தொழில் புரிவதையே வரவேற்கின்றது. பெண்களுக்கு இத்தொழில் பூரண பாதுகாப்பை வழங்குவதாகக் கருதப்படுகின்றது. ஒவ்வொரு பெற்றோரும் தமது மகள் ஒரு ஆசிரியையானால் போதும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆண்களும் தமது மனைவி அல்லது தான் திருமணம் செய்யும் பெண் ஒரு ஆசிரியையாக இருப்பதை வரவேற்கின்றனர். ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது அதிக நேரம் வீட்டைப் பராமரிக்கும் வாய்ப்பு ஆசிரியத் தொழிலினூடாகவே கிடைக்கிறது என்பதனால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும் என சமூகம் எதிர்பார்க்கிறது. திருமணமாகாத பெண்களும் ஏனைய தொழிலைவிட ஆசிரியத் தொழிலையே விரும்புகின்றனர் என்பது இவ் ஆய்வின்போது தெரிய வந்த விடயமாகும். இதற்கு சிறந்த உதாரணமாக சென்ற வருடம் பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கியபோது, அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்கள், அமைச்சுக்கள் என்பவற்றில் நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் பட்டதாரிகள் பலர் தமது நியமனங்களைப் பொறுப்பேற்காது, ஆசிரியத் தொழிலுக்குத் தமது நியமனங்களை மாற்றிக் கொள்வதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதையும் பின் ஆசிரியத் தொழிலுக்குச் சென்றதையும் காணமுடிந்தது.

தொழிலும் குடும்பப் பொறுப்புகளும்

இன்றைய கருக்குடும்பங்களில் பெற்றோர் தமது பிள்ளைகளைப் பராமரிக்க மற்றவர்களின் உதவியையே நாடுகின்றனர். திருமணமான ஆசிரியைகளில் 25 வீதமானவர்கள் கூறியதாவது, தாம் தொழிலுக்கு வந்த பின்னர் தமது பிள்ளைகளைப் பராமரிக்க யாருமில்லை என்பதாகும். ஏனையோர் தமது தாய், சகோதரி அல்லது கணவனின் தாய், சகோதரி போன்றவர்களின் பராமரிப்பில் விட்டு வருகின்றனர்.

பெரும்பாலான முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் வெளிநாட்டில் தொழில் புரிபவர்களாகவும், வர்த்தகர்களாகவும் இருக்கின்றனர். மிகக் குறைந்த தொகையினரே அரச, தனியார் துறைகளில் தொழில் புரிகின்றனர். உயர்தொழில் செய்வோர் (high positions) மிக அரிது. சிலர் தொழில் இன்றி வீட்டிலிருப்பவர்களாகவும் இருக்கின்றனர். சில ஆசிரியைகள் கணவன்மார் வெளிநாடுகளில் தொழில் புரிவதால் கணவன் செய்யவேண்டிய கடமைகள், பொறுப்புக்கள் என்பவற்றையும் தாமே செய்ய வேண்டியவ்களாகவும் இருக்கின்றனர். கடைத்தெருவுக்குச் செல்லல், நீர், மின், காப்புறுதி, நகரசபை அலுவலகங்களுக்குச் செல்லல், பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்தல் என அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்படுகின்றனர். சில ஆசிரியைகளின் கணவன்மார் வெளிநாடு சென்று வந்து இவர்களைத் திருமணம் செய்துள்ளனர். திருமணத்தின்பின் ஒருமுறை வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மீண்டும் செல்லாது அல்லது நாட்டில் வேறு தொழில் செய்யாது மனைவியின் வருமானத்தில் தங்கி வாழ்கின்றனர். இவ்வாறான கணவன்மாரினால் ஆசிரியைகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான கணவன்மார் தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்டு மனைவியின் செயற்பாடுகளில் குறைகாண்பது, சந்தேகம் கொள்வது போன்ற பல கஷ்டங்களை மனைவிக்குக் கொடுக்கின்றனர். சிலவேளை கணவனின் அதிருப்திக்கும் துன்புறுத்தல்களுக்கும் இவர்கள் ஆளாக வேண்டியுள்ளது.

ஆசிரியத் தொழில் பாடசாலையுடன் மட்டும் நிறைவு பெறுவதில்லை. வீட்டுக்கு வந்த பின்பும் அடுத்தநாள் கற்பித்தல் செயற்பாட்டுக்கு ஆயத்தமாக வேண்டியுள்ளது. ஆனால், கணவனின் ஒத்துழைப்புக்குப் பதிலாகத் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது இவ் ஆசிரியைகள் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. வீட்டில் சுமுகமான சூழல் இல்லாதபோது தொழிலில் முழுமையான ஈடுபாடு காட்ட முடியாமல் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். பெண்கள் தமது தொழில் காரணமாக குடும்பத் திட்டமிடலை விரும்புகின்றனர். இவ்வாறான நிலையில் கணவன்- மனைவிக்கிடையில் முரண்பாடுகள் தோன்றி சில ஆசிரியைகள் விவாகரத்து வரை சென்றுள்ளனர்.

இவை தவிர பெண்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போதும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் தம்முடன் தொழில்புரியும் சக ஆசிரியர்களுடன் சுமுகமான உறவுகளை வளர்த்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதை சில ஆசிரியைகளின் கணவன்மார் புரிந்துகொள்ளாமை குடும்பத்தில் பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது. எனவே, இவ்வவாறான கணவன்மாருடன் வாழும் பெண்கள், 'நாம் கடமைக்காகவே வாழ்கிறோம்' என்று குறிப்பிடுகின்றனர்.

திருமணமாகாத ஆசிரியைகளில் பெரும்பான்மையானோர் உயர்கல்வி கற்ற அதாவது பட்டதாரி ஆசிரியைகளே. இவர்கள் மத்திய வகுப்பைச் (Middle Class) சேர்ந்தவர்கள். இவர்களது வயதெல்லை முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கும் வயதைத் தாண்டியதாகவே உள்ளது. "எதிர்காலக் கணவன் எப்படியானவராக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?" என இவர்களில் சிலரிடம் கேட்டபோது, "இனி எப்படியானவராக இருந்தாலும் பரவாயில்லை. சமூகத்தின் அனுதாபப் பார்வையிலிருந்து தப்பித்தால் போதும்" என்றனர்.

திருமணமான, திருமணமாகாத என்ற இருசாராரும் வீட்டு வேலைகளை விரும்பிச் செய்கின்றனர். இவர்கள் தொழில், வீட்டு வேலைகள் என்ற இரண்டையும் சமாளிப்பதில் தம்மை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் தமது வீட்டு வேலைகளைத் தாமே செய்கின்றனர். 98 வீதமானவர்களுக்கு வீட்டுப் பணியாளர்கள் (Servant) இல்லை.

திருமணமானவர்களில் 50 வீதமானவர்கள் வீட்டுச் செலவுக்காக ஒரு தொகைப் பணத்தைப் பெற்றோருக்குக் கொடுக்கின்றனர். சிலர் தமது இளைய சகோதர, சகோதரிகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுகின்றனர். 30 வீதமானவர்கள் திருமணமான பின்பும் தமது பெற்றோரைக் கவனிப்பதாகக் கூறினர்.

திருமணமான, திருமணமாகாத ஆசிரியைகளில் இரு சாராருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று போக்குவரத்துப் பிரச்சினை. சௌகரியமற்ற போக்குவரத்து முறைகளால் (uncomforterble) அவதிப்படுகின்றனர். 98 வீதமான திருமணமான ஆசிரியைகள் தமது வீடுகளிலிருந்தே தொழிலுக்குச் செல்கின்றனர். அவர்களில் 40 வீதமானவர்களும் திருமணமாகாதவர்களில் 45 வீதமானவர்களும் வாகனங்களில் பயணஞ் செய்கின்றனர். இதனால் இவர்களுக்குப் பயணச் செலவு ஏற்படுவதுடன் நேரமும் வீணாகக் கழிகிறது. தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்கு அவகாசம் கிடைப்பதில்லை. மற்றும் உடல், உள உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.
ஆசிரியைகளும் உயர் கல்வியும்

பெரும்பாலான ஆசிரியைகளின் குடும்பத்தினர் அவர்கள் ஆசிரியத் தொழிலைத் தெரிவு செய்வதை ஆதரித்துள்ளனர். ஆசிரியத் தொழிலில் இருந்துகொண்டு உயர்கல்வியைத் தொடர்வதன் மூலம் கல்வித் துறையில் உயர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாகக் கல்வி அதிகாரி, கல்விப் பணிப்பாளர், விரிவுரையாளர்கள் (ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி, கல்விக் கல்லூரி). ஆனால், மிகக் குறைந்த எண்ணிக்கையான கணவன்மாரே ஆசிரியையான தனது மனைவி உயர்கல்வியைத் தொடர்வதை விரும்புகின்றனர். அதிகமான கணவன்மார் தமது மனைவி அளவான, போதுமான கல்வியைப் பெற்றிருப்பதையே விரும்புகின்றனர். அவ்வாறு இருக்குமிடத்து வீட்டுப் பராமரிப்பு நடவடிக்கைகள் முறையாக, எவ்விதத் தடங்கலுமின்றி நடைபெறுமென அக்கணவன்மார் நம்புகின்றனர். சில ஆசிரியைகள் தமது திருமணத்தின் பின் தொழில் செய்வது கேள்விக்குறியாக உள்ளதாகத் தெரிவித்தனர்.

வெளி நடவடிக்கைகளில் ஈடுபாடு (Interest in outside affairs)

ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு முன்மாதிரியாக ஒரு தலைவரைப் போல செயற்பட வேண்டியவர். எனவே, அவர் வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டியவராவார். சுமார் 70 வீதமான முஸ்லிம் ஆசிரியைகள் வெளி நடவடிக்கைகளில் ஆர்வமின்றிக் காணப்படுகின்றனர். மிக் சிறிய தொகையினரே ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். அதுவும் ஞாயிற்றுக்கிழமை அஹதியா பாடசாலை (Sunday School) தொடர்பான செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபடுவதை அறிய முடிகிறது. நலன்புரி சங்கங்கள், பெண்கள் சார்ந்த அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள் போன்றவற்றில் ஈடுபாடு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

திருமணமாகாத ஆசிரியைகள் வெளிவேலைகளில் ஈடுபடுவதை அவர்களின் பெற்றோர் விரும்புவதில்லை. திருமணமானவர்கள் வெளிச் செயற்பாடுகளில் ஈடுபட அவர்களுக்கு நேர அவகாசம் கிடைப்பதில்லை. வீட்டுப் பொறுப்புக்கள் அவர்களின் மேலதிகத் திறமைகளை, புதிய கருத்துக்களை, சிந்தனைகளை எல்லைப்படுத்தியுள்ளன.

முடிவுரை

அதிகமான முஸ்லிம் பெண்கள் கல்வி கற்கும்போதே ஆசிரியத் தொழிலை இலக்காகக் கொண்டுள்ளனர். சுமார் 10 வீதமானவர்கள் தமது தொழிற் தெரிவின்போது ஆசிரியத் தொழிலையே தமது முதற்தெரிவாகக் கொள்ளவில்லை. அவர்கள், வேறு தொழில் கிடைப்பது கடினம் என்பதாலும், குடும்பத்தினர் வேறு தொழில் செய்வதற்கு அனுமதிக்காத காரணத்தாலும் ஆசிரியத் தொழிலைத் தெரிவுசெய்துள்ளனர். 90 வீதமானவர்கள் தமது ஏனைய பொறுப்புக்களை (தாயாக வீட்டைப் பராமரிப்பவளாக) நிறைவேற்றுவதற்கு இத்தொழில் வசதியாக இருப்பதனால் இதனைத் தெரிவு செய்ததாகக் கூறினர்.

ஆசிரியர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் சமூக வாழ்வில் முக்கிய பாத்திரமேற்று செயற்பட விரும்புகின்றனர் (Impotant role of community cultural life). ஆரம்பம் முதலே அவர்கள் வீட்டுப் பெண்களாக (House wives) சமூகத்துடன் இணைந்துள்ளனர். அவர்கள் சமூகத்துக்காக நிறைய சேவை செய்ய ஆவலாக உள்ளனர். ஆனால், அவர்களது வாழ்க்கைமுறை மிகவும் இயந்திரமயப்பட்டதாக (Busy) உள்ளது. எனவே, இவர்கள் பாம்பரிய கலாசார நடைமுறைகளைப் பேணுவதுடன் நவீன தொழில் தேவைகளையும் நிறைவுசெய்ய வேண்டியுள்ளது.

பொதுவாகக் காணக்கூடிய பிரச்சினை என்னவெனில், பெற்றோரை, பிள்ளைகளை,கணவனை அவள் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. அவள் கணவனின் அதிருப்திக்குள்ளாகும் போது பல்வேறுபட்ட துன்புறுத்தல்களுக்குட்பட்டு மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறாள். அவள் சுமைகளைத் தாங்கவேண்டி உள்ளதுடன், பாரம்பரியப் பாத்திரங்களான (traditional role) தாயாக, வீட்டைப் பராமரிப்பவளாக (Home maker), ஆசிரியையாக (teacher) என்று பாரமான இரட்டைச் சுமைகளை (Dual burden) ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

பெண்களின் இந்த சுமைகளை இலகுவாக்குவதற்கு பெற்றோரின், கணவனின் உதவி, ஆதரவு மிகவும் அவசியமாகும். பெண்கள் குறிப்பாக, தொழில் பார்க்கும் பெண்கள் அதை எதிர்பார்க்கின்றனர். பிள்ளை பராமரிப்பில் கணவனின் உதவி, ஒத்துழைப்பு என்பன அவசியமாக உள்ளது என்பதை சமூகம் புரிந்துகொள்வது காலத்தின் தேவையாகும்.

அடிக்குறிப்புகள்:

1. Marjorie Peries (1990) "Women Perceptions of their Dual roles", Women at the Crossroads, Sirima Kiribamunu and Vidyamali Samarasinghe (Ed.) New Delhi. p.203.

2. இஸ்ஸதுன் நிஸா, எம்.எஸ்., ஹஸ்புல்லாஹ், எஸ், எச்., (2000) "முஸ்லிம் பெண் கல்வி: ஒரு பின்னணி அறிக்கை", இலங்கையில் முஸ்லிம் கல்வி: பெண் கல்வியும் உயர் கல்வியும், எஸ்.எச். ஹஸ்புல்லாஹ், என். பி. எம். சைபுதீன் (பதிப்.), கொழும்பு: இலங்கை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி. ப. 22.

- எல்.ஏ. சீ. ஃபெறோசியா, பேராதனைப் பல்கலைக்கழகம்

(நன்றி: அல் இன்ஷிராஹ், 2006- பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஆண்டுமலர்)

...மேலும்

Jan 27, 2013

மொழிபெயர்ப்புத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு: சில குறிப்புக்கள்“ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் அனுபவத்தினை சான்று பகரும் ஆய்வறிவாளரைப் போன்று எழுத்தாளருக்கும் ஒரு சிறப்பான, குறியீட்டுப்பாங்கான பாத்திரம் உண்டு. இவ்வாறு சாட்சி பகிர்வதன் மூலம் அந்த அனுபவத்திற்கு ஒரு பொது அடையாளம் இடப்படுவதுடன் பூகோள ரீதியாக மேற்கொள்ளப்படும் சொல்லாடலில் அது என்றென்றும் பொறிக்கப்படும்” என்கின்றார், எட்வர்ட் ஸயீட். அந்த வகையில், பன்மொழிச் சூழலில் ஒரு மொழி சார்ந்த மக்களின் வாழ்வியல் அனுபவங்களை, அம்மொழி சார்ந்த சமூகக் குழுமத்தின் கலாசாரக் கூறுகளை மற்றொரு மொழியில் தரும் மொழிபெயர்ப்பாளருக்கும் அத்தகைய சிறப்பான, குறியீட்டுப்பாங்கான பாத்திரம் உண்டு என்று நாம் துணிந்து கூறலாம்.

ஒருவர் தன்னுடைய சமூகத்துக்கோ நாட்டுக்கோ ஏன், உலகத்துக்கோ ஏதேனும் ஒரு வகையில் சிறப்பாகப் பங்களிப்புச் செய்யும்போது, அவர் வரலாற்றின் பங்குதாரர் ஆகின்றார். அந்த வகையில், ஒருவரின் மொழி சார்ந்த பங்களிப்புக்கள் தனித்துவமான சிறப்பைப் பெறுகின்றன. காரணம், மொழி என்பது வெறுமனே ஒரு தொடர்பாடல் கருவி என்பதற்கு அப்பால், தான் சார்ந்த சமூகத்தின் கலாசாரம், அதன் பண்புக்கூறுகள், அதன் வரலாறு முதலான அனைத்தையும் தன்னுள் பொதிந்துவைத்துள்ள ஒரு கருவூலமாகக் காணப்படுவதே! எனவேதான், ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ஒரு விடயத்தைக் கொண்டு செல்லும் ஒரு மொழிபெயர்ப்பாளர் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவர் ஆகின்றார். தன்னுடைய பணி மூலம் அவர் பின்வரும் அடைவுகளை எய்துகின்றார்:

• தன்னுடைய மொழியை வளப்படுத்துகின்றார்

• அறிவியல், தொழினுட்பம் முதலான பல்துறை வளர்ச்சிக்கு வித்திடப்படுகின்றது

• இரு சமூகங்களுக்கு இடையில் ஒரு பாலமாக இருந்து பரஸ்பரப் புரிதலுக்கு வழியமைக்கின்றார்

• தேசிய ஒருமைப்பாடும் இன ஐக்கியமும் வலுப்படுத்தப்படுகின்றது.இதனையே, த. கோவேந்தன் குறிப்பிடும்போது, “உண்மையில் மொழிபெயர்ப்பின் – மொழியாக்கத்தின் குறிக்கோள் என்ன? நாட்டு மக்களை மேம்படுத்தவும், ஒன்றுபடுத்தவும், ஒருமைப்பாட்டை, உலகின் உறவினை உருவாக்கவும் உதவும் ஓர் ஏதுவாகும். நாள்தோறும் வளர்ந்துவரும் எண்ணச் செழுமைகளைக் கொள்வதும் கொடுப்பதுமாகும். மூலமொழிக்கும் இலக்கு மொழிக்கும் பாலம் அமைப்பதற்கு ஒப்பாகும். மொழிக்கும் பிறமொழி(களு)க்கும் இருக்கும் தடைகளை நீக்கிச் சமூகத்தில் கருத்துறவு ஏற்படுத்துவதே தலையாய குறிக்கோளாகும்” என்று வலியுறுத்துகின்றார்.

இலங்கை போன்ற பல்லின, பல கலாசார, பன்மொழிச் சூழலில் மொழிபெயர்ப்பின் தேவை மிக இன்றியமையாததாகும். குறிப்பாக, மிக மோசமான இன முரண்பாட்டின் இரத்தக் கறை படிந்த ஒரு வரலாற்றை உடைய ஒரு நாட்டில், சமூகங்களுக்கு இடையே நல்லுறவையும், பரஸ்பரப் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுக் கடமை இளம் தலைமுறையினரான நம் கைவசம் தரப்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்களாகிய நம்மிடம் உள்ள மிகப் பெரிய கொடை, நமது பன்மொழி அறிவு என்றால் அது மிகையல்ல. அந்தக் கொடை மூலம் அன்றும் இன்றும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம், நம் தாய்த்திரு நாட்டுக்கு அபரிமிதமான சேவைகளை ஆற்றி வந்துள்ளோம். அந்த வரலாற்றை அறிந்து பதிவுசெய்து ஆவணப்படுத்துவதும், அதன் ஒளியில் எதிர்காலத்திலும் சமூக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வகையில் நம்முடைய பயணப் பாதையைக் கட்டமைப்பதுமே இந்த ஆய்வுக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

மொழிபெயர்ப்பும் இலங்கை முஸ்லிம்களும்

இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் சமூகக் குழுமங்கள் தத்தமது மொழியை மையமாக வைத்து தமிழர், சிங்களவர், கன்னடர், தெலுங்கர், மலையாளி என்று அழைக்கப்பட்டு வருகின்றனர். எனின், இலங்கை முஸ்லிம்களின் நிலைமை சற்று வித்தியாசமானது. இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தமது தாய்மொழியாகத் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளைப் பெரும்பான்மையாகவும், ஜாவா மொழியைச் சிறுபான்மையாகவும் கொண்டுள்ளனர். அத்தோடு, ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் மொழி ரீதியாக சிங்களவர் என்றோ, தமிழர் என்றோ பொதுமையாக அடையாளப்படுத்தப்படாமல், இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முஸ்லிம்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். இந்நிலைமையின் எதிர்மறைச் சிக்கல்களுக்கு அப்பால், இலங்கை மண்ணைப் பொறுத்தளவில் சமூகங்களுக்கு இடையிலான இடைத்தொடர்புகளைக் கூர்மைப்படுத்தி, பரஸ்பர நல்லிணக்கத்தை இறுக்கமாக்குவதில் முஸ்லிம்கள் மிகப் பிரதானமான பங்காளர்களாய்த் தொழிற்பட முடியும்; இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் முஸ்லிம்கள் மீது சாட்டப்பட்டுள்ள சமூகக் கடமை/தேசியக் கடமையை நிறைவேற்றத்தக்க அந்த வரலாற்றுப் பணியைச் செய்துமுடிக்க முடியும் என்ற உண்மையையே மொழிசார்ந்த இப் பன்முக ஆளுமை நமக்கு உணர்த்துகின்றது எனக் கொள்வது பயனுடைத்து. இந்த இலக்கை அடைவதில் மொழிபெயர்ப்புப் பணிகள் பெரும் பங்காற்ற முடியும்.

புராதன இலங்கையில் சிங்கள – தமிழ் மொழிகளுக்கு இடையிலான பரஸ்பரத் தொடர்புகள் விதந்துரைக்கத்தக்க நிலையில் இருந்தாலும் காலப்போக்கில், குறிப்பாக இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் படிப்படியாகக் குறைந்துசெல்லத் தொடங்கின. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட “சிங்களம் மட்டும்” சட்ட அமுலாக்கம் இந்நிலையை மேலும் தீவிரப்படுத்தியது. தமிழ்பேசும் மக்கள் சிங்கள மொழியைக் கட்டாயமாகக் கற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகினர். இந்தப் பின்னணியில், சிங்கள – தமிழ் சமூகங்களுக்கு இடையே பரஸ்பரக் கலந்துரையாடலை ஏற்படுத்துதல், கலை இலக்கியச் செல்வங்களைப் பரிமாற்றம் செய்தல், தமது சமயம் பற்றிய புரிதலை ஏற்படுத்த முனைதல் முதலான பல்வேறு நோக்கங்களுடன் இலங்கை முஸ்லிம்கள் அதிகளவான மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்ற இலங்கை முஸ்லிம்களின் மொழிபெயர்ப்புக்களை நாம் பின்வரும் பிரதான வகைப்பாட்டுக்குள் அடக்கலாம். அவையாவன:

• அரச நிர்வாகத்துறை, கல்வித் துறை சார்ந்த ஆவணங்கள் மற்றும் நூல்களின் மொழிபெயர்ப்பு

• சமய நூல் மொழிபெயர்ப்பு

• ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பு

• சமூகவியல் ஆய்வு, வரலாறு மற்றும் கலைத்துறை சார்ந்த மொழிபெயர்ப்புக்கள்முதல் வகைமையைப் பொறுத்தவரையில், அரசாங்க ஊழியர்களாய்ப் பணிபுரிந்த முஸ்லிம்களில் பலர் சிங்களம்-தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தாம் பெற்றிருந்த தேர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு மொழிபெயர்ப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய மொழிபெயர்ப்புக்களில், பேராசிரியர் அல்லாமா உவைஸின் மொழிபெயர்ப்பு நூல்கள் முக்கியமானவை. அவர், டி. என். தேவராஜனின் “வர்த்தக எண் கணிதம்” எனும் நூலை “வாணிஜ அங்க கணிதய” எனும் பெயரில் தமிழில் இருந்து சிங்களத்துக்கும், ஐ. டி. எஸ். வீரவர்தனவின்  “இலங்கைப் பொருளாதார முறை”, ஐ. டி. எஸ் வீரவர்தனவின் “பிரித்தானிய யாப்புமுறைமை”, எஃப். ஆர். ஜயசூரியவின் “பொருளியல் பாகுபாடு” ஆகிய நூல்களைச் சிங்களத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்துள்ளார். அவ்வாறே, பிரபல இடதுசாரி எழுத்தாளரான எச். என்.பி. முகையித்தீன் “கிமில்சன்” தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இடதுசாரிக் கொள்கை சார்ந்த ஆக்கங்கள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்.

மேலும், இலங்கையின் தலை சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவரான பண்ணாமத்துக் கவிராயர், “சோவியத் நாடு” தமிழ்ச் சஞ்சிகைக்காக ஏராளமான மொழிபெயர்ப்புக்களைச் செய்துள்ளார்.  அபூதாலிப் அப்துல் லதீஃபும் பல்வேறு இடதுசாரிக் கொள்கை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளதாய் அறியக்கிடைக்கின்றது. சிங்கள-தமிழ் அகராதி முயற்சிகளின் மூலம் தனியானதோர் இடத்தைப் பெற்றுள்ள எம். எச். எம். யாகூத், பௌதீகவியல், இரசாயனவியல் சார்ந்த நூல்களை சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

இத்துறை சார்ந்து குறிப்பிடத்தக்க மற்றொருவர், இலங்கை மக்கள் வங்கி தமிழில் வெளியிட்ட “பொருளியல் நோக்கு” சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய எம். எல். எம். மன்சூர். அவர், அச்சஞ்சிகையில் வெளியான பொருளியல்/வர்த்தகம் தொடர்பான ஏராளமான கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளார். அத்துடன், “கூட்டங்களை முகாமைப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைகள்” எனும் நூலை லறீனா அப்துல் ஹக், எம்.எச். எம். ஃபிர்தவ்ஸ் ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குத் தந்துள்ளனர்.

சமயநூல் மொழிபெயர்ப்பு

இஸ்லாமிய சமயக் கோட்பாடுகளைத் தெளிவுறுத்தும் வகையில் அரபு, ஆங்கிலம் முதலான மொழிகளில் இருந்து தமிழ், சிங்கள மொழிகளுக்குப் பலநூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அனேகமான சந்தர்ப்பங்களில் அரபு மொழியில் அமைந்துள்ள மூலநூல்கள் ஆங்கிலம் வழி தமிழுக்கும் அதன்பின் தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும் மொழிபெயர்க்கப்படுவதுண்டு. அந்த வகையில், அரபு மூலநூலில் இருந்து நேரடியாகவே பல நூல்களை மொழிபெயர்த்தவர்களில் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் அவர்கள் மிக முக்கியமான ஒருவராவார். அவர், கலாநிதி ஸலாஹ் ஸாலிஹ் ராஷிதின் “ஆண் பெண் வேறுபாடு”,  யூஸுஃப் அல் கர்ளாவியின் “ஸகாத்: பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதன் பங்களிப்பும், அதன் வெற்றிக்கான நிபந்தனையும்”, “தௌஹீதின் யதார்த்தங்கள்”, “இறைவன் இருக்கிறான்”, “இறைதூதரும் கல்வியும்”, “பெண்களுக்கான ஃபத்வாக்கள்”, கலாநிதி நாதிர் நூரியின் “இஸ்லாமிய வரலாற்று அனுபவங்களின் அடிப்படையிலான சிந்தனைகள்” உள்ளிட்ட பல்வேறு நூல்களைத் தமிழில் தந்துள்ளார்.

அவ்வாறே, ஏ. எம். எம். மன்ஸூர் (வெலம்பொட) அவர்கள் யூஸுஃப் இஸ்லாமின் நேர்காணலையும் இப்னு கல்தூனின் சமூகவியல் ஆய்வுக் கட்டுரையொன்றையும்  ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவ்வாறே,  எல். எம். மன்சூர் (பூவெலிகட) “இஸ்லாமும் மேலைய நாகரிகமும்” என்ற நூலை மொழிபெயர்த்துள்ளார். ஷஹீத் செய்யித் குதுப் அவர்களின் “எதிர்காலம் இஸ்லாத்திற்கே” என்ற நூலை ஏ. ஆர். எம். முபாரக் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பண்ணாமத்துக் கவிராயர் அவர்கள் அலி ஷரிஅத்தியின், “ஹஜ்: உலகளாவிய இயக்கத்தின் இதயம்” எனும் நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் அளித்துள்ளார்.

இலங்கையின் சிறந்த அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர் அல்லாமா உவைஸ் அவர்கள், இஸ்லாமிய சமயம் சார்ந்த பல்வேறு நூல்களையும் மொழிபெயர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அன்னார், மௌலானா மவ்தூதியின் ஆங்கில நூலையும் (“இஸ்லாம் யனு குமக்த?”), அப்துல் றஹீமின் “நபிகள் நாயகம்” (“நபி நாயக்க சரிதய”), அஷ்ஷெய்க் அப்துல் வஹாப் அவர்களின் “தித்திக்கும் திருமறை” (“அல்குர் ஆன் அமா பிந்து”) ஆகிய நூல்களைச்  சிங்களத்திலும், “முஹம்மது நபி (ஸல்) மனிதரில் தலை சிறந்தவர்கள்” எனும் நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்துள்ளார். மூன்று ஆங்கில மொழிச் சமய நூல்களை கதாமுது பாகம் 1,2,3 எனும் பெயரில் சிங்கள மொழியில் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களோடு, நிஃமத்துல்லாஹ் அவர்கள், டொக்டர் ஏ.எம் அபூபக்கரின் “பாலியலும் இஸ்லாமும்” எனும் நூலைச் சிங்களத்திலும், அல் அஸுமத் அவர்கள் பிலால் (றழி) அவர்களின் சுயசரிதையை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், ஏ.ஏ.எம். ஃபுவாஜி அவர்கள் “அய்மனின் தாய்” எனும் தமிழ் நூலை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்கள். அதுமட்டுமின்றி, றம்ஸியா பாரூக் டொக்டர் எம். எல் நஜிமுத்தீனின் “இஸ்லாத்தில் குடும்பத்திட்டம்” (“இஸ்லாம் தர்மய சக பவுல்செலசும”) நூலைத் தமிழில் இருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்துள்ளார். அவ்வாறே, அபூ உபைதா அவர்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் தந்த “ஐயமும் தெளிவும்”, ஐ.எல்.எம். ஷஹாப்தீன் தமிழில் இருந்து சிங்களத்தில் தந்த “மெல்கம் எக்ஸின் வாழ்க்கை வரலாறு”, முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறான “ரஹீக் அல் மக்தூம்” என்பன குறிப்பிடத்தக்க வேறு சில மொழிபெயர்ப்புக்களாகும். இவர்களைத்தவிர, ஏ. எல். எம். இப்றாஹீம், எஸ். எம். மன்ஸூர், முஹம்மது ஹுஸைன், மௌலவி தாஹிர், என். எம். அமீன், சீ. எம். ஏ. அமீன், எம். ஷஃபீக், இப்னு ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் முதலான பலரும் இஸ்லாமிய சமயம் சார்ந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளில் மிக முக்கியமானவர்கள் எனலாம்.

ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பு மிகக் கடினமான ஒன்றாகும். எனவேதான், “கவிதை மொழிபெயர்க்கப்பட முடியாதது”என்கிறார், ரோமன் ஜெகொப்ஸன் (1987:434). எனினும், மொழிபெயர்ப்பில் ஏற்படக்கூடிய “இழப்பினை” முடியுமானவரை குறைத்து, ஏராளமான மொழிபெயர்ப்புக்கள் எழுந்துள்ளன. ஒரு மொழியில் உள்ள கலைக் கருவூலங்களை, அறிவியல் செல்வங்களை மொழிபெயர்ப்பு வழியே பெறக்கூடிய பாக்கியத்தைப் பெற்றுள்ளோம். அந்த வகையில், கவிதை, புனைகதை, சிறுவர் இலக்கியம் முதலான ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பிலும் இலங்கை முஸ்லிகள் முத்திரை பதித்துள்ளனர். அவற்றைத் தனித்தனியே நோக்குவோம்.

கவிதை மொழிபெயர்ப்பு

இலங்கையில், கவிதை மொழியாக்கத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பங்காற்றியுள்ளனர். குறிப்பாக அல்லாமா இக்பாலின் கவிதைகளைப் பலர் மொழிபெயர்த்து அளித்துள்ளனர். அவ்வாறே பலஸ்தீன் கவிதைகளும் இலங்கையில் வெவ்வேறு மொழிபெயர்ப்புக்களைக் கண்டுள்ளன. அந்தவகையில், பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்களின் பலஸ்தீன் மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழ்பேசும் நல்லுலகில் மிகுந்த கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, மூன்றாவது மனிதன் வெளியீடாக வந்த “பலஸ்தீனக் கவிதைகள்” (1981) பின்னர் விரிவாக்கப்பட்டு மூன்று பதிப்புக்களைக் கண்டமை குறிப்பிடத்தக்கது. அடையாளம் பதிப்பக வெளியீடான “மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்” (2008) மற்றொரு முக்கிய நூலாகும். ஏ. இக்பால், ஜவாத் மரிக்கார் போன்றோரும் பலஸ்தீன் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளனர்.

அடுத்து, பண்ணாமத்துக் கவிராயர் (எஸ். எம். ஃபாருக்) ஒரு முன்னோடி மொழிபெயர்ப்பாளராய்த் திகழ்கின்றார். அவர், அல்லாமா இக்பால், நஸ்ருல் இஸ்லாம், ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ், தெலுங்கானாக் கவிஞர் மஹ்தூம் மொஹிதீன், பாகிஸ்தானியக் கவிஞர் இஃப்திகார் ஆரிஃப் ஆகிய கவிஞர்களின் கவிதைகளையும், மாயகோவ்ஸ்கியுடைய “லெனின்” என்ற நீள் கவிதையையும் (1967 இல் சோவியத் ரஷ்யாவில் வெளிவந்தது) தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். “காற்றின் மௌனம்” இவரது பிரபலமான மொழிபெயர்ப்புக் கவிதை நூலாகும். பண்ணாமத்தாரின் சமகாலத்தவரான அபூதாலிப் அப்துல் லதீஃபும் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் அவர்கள் மொழிபெயர்ப்புத் துறையிலும் தடம் பதித்துள்ளார். அவர், ஏ. ஸீ. எஸ் ஹமீத் எழுதிய “த ஸ்பிங் ஒஃப் லவ் அன்ட் மெர்ஸி” எனும் கவிதைத் தொகுதியையும் (“அன்பின் கருணையின் பேரூற்று”), அல்லாமா இக்பாலின் ஜவாபே ஷிக்வாவையும் (“அல்லாஹ்விடம் முறையீடும் பதிலும்”) ஆங்கிலம்வழி தமிழிலே,  முழுக்க மரபுக்கவிதை வடிவிலே தந்துள்ளார்.

அப்துல் காதிர் புலவர் இக்பாலின் ஜாவீது நாமா (1989), உமர் கைய்யாமின் ருபைய்யாத் என்பவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். எஸ். எம். ஏ. ஹஸன் (ஒராபி பாஷா) அவர்களும் “இக்பால் வாழ்க்கை வரலாறு” நூலின் 70 வீதமான கவிதைகளை மொழிபெயர்த்துள்ளதோடு, இக்பாலின் “ஹுத்யீ” எனும் புகழ்பெற்ற படைப்பை ஆங்கிலம் வழியே தமிழில் தந்துள்ளார். அவ்வாறே, கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள், ஜவாபே ஷிக்வாவின் முக்கிய கவிதைகள் உட்பட அல்லாமா இக்பாலின் பல கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

அஷ்ரஃப் ஷிஹாப்தீன் அவர்கள் ஈராக்கியக் கவிஞர் ஜமால் ஜூமாவின் 'உன்னை வாசிக்கும் எழுத்து' (2007) எனும் நெடுங்கவிதையை மொழிபெயர்த்து அளித்துள்ளார். இப்னு அஸுமத் அவர்கள் ஏராளமான சிங்களக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். அவ்வாறே ரிஷான் செரீஃப் சிங்களத்தில் இருந்து தமிழுக்குக் கவிதைகளைத் தரும் மிக முக்கியமான இளந்தலைமுறைப் படைப்பாளி ஆவார். இவர் ஃபஹீமா ஜஹானுடன் இணைந்து மொழியாக்கம் செய்துள்ள மஞ்சுள வெடிவர்தனவின் "மாத்ருகாவக் நெதி மாத்ரு பூமிய -தெமல கவி" எனும் நூல் ஃபிரான்ஸில் வெளிவரவுள்ளது. ஃபஹீமா ஜஹான் சிங்களக் கவிதைகள் பலவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ஹெம்மத்தகம நியாத் ஆங்கிலக் கவிதைகள் பலவற்றைத் தமிழில் வழங்கியுள்ளார்.

இலங்கையின் முஸ்லிம் பெண் மொழிபெயர்ப்பாளர்களில் கெக்கிராவை சுலைஹா முக்கியமானவர். அவர் ஆங்கிலக் கவிதைகள் பலவற்றைத் தமிழாக்கிப் படைத்த “பட்டுபூச்சியின் பின்னுகை போலும்” எனும் நூல், 2009 சாகித்திய மண்டலப் பரிசு, 2010 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருது ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர், 2011 ஆம் ஆண்டு “இந்த நிலம் எனது” பஞ்சாபி வழி ஆங்கிலக் கவிதைகளை ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவர் நலன்கருதித் தமிழாக்கியுள்ளார். இந்த வரிசையில், ஆங்கிலம்/சிங்களம் ஆகிய இருமொழிகளில் இருந்தும் கவிதைகளைத் தமிழாக்கியுள்ள லறீனா அப்துல் ஹக்கின் “மௌனத்தின் ஓசைகள்” (2008) தொகுதியும் ஒன்றிணைகின்றது.

இளம்தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களுள் நம்பிக்கை தரும் படைப்பாளியாகத் திகழும் மற்றொருவர் ஏ. ஸீ. எம். ரஸ்மின். இவர், 1983 க்கு பிறகு சிங்கள இசைப்பாடல்களில் இலங்கையின் இன முரண்பாடுகள் தொடர்பான பதிவுகளை ஆய்வுசெய்துள்ளதோடு, அதற்குத் தேவையான கவிதைகளை மொழியாக்கமும் செய்து “நாளையும் மற்றொருநாள்” (2008) எனும் தொகுதியை வெளியிட்டுள்ளார். இவர்களோடு, தர்காநகர் ஸஃபாவும் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புனைகதை மொழிபெயர்ப்பு

புனைகதை எனும்போது, நாவல், சிறுகதை ஆகிய இரண்டும் கவனத்திற் கொள்ளப்படுகின்றன. ஆங்கிலம், சிங்களம், தமிழ், அரபு ஆகிய மொழிகளுக்கிடையில் பல்வேறு மொழிபெயர்ப்புக்கள் இடம்பெற்றுள்ளன. ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புக்களில் புனைகதைகளே அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன எனலாம். இப்பணியில் ஈடுபட்ட முன்னோடிகளான அல்லாமா உவைஸ், மார்ட்டின் விக்ரமசிங்ஹவின் “கம்பெரலிய” (“கிராமப் பிறழ்வு”) நாவலையும், பண்ணாமத்துக் கவிராயர், ‘சோவியத் நாடு’ தமிழ் சஞ்சிகைக்கு, மாக்ஸிம் கோர்க்கியுடைய “டெங்கோவின் இதயம்” முதலான சிறுகதைகளையும் தமிழாக்கியுள்ளனர். தீவிர இடதுசாரி எழுத்தாளரான எச். என்.பி. முகையித்தீன் ஆங்கிலச் சிறுகதைகள் பலவற்றைத் தமிழுக்கு அளித்த மற்றொருவர் எனலாம். இவருடைய பணிகளில் “கெமில்ஸன்” தமிழாக்கம் முக்கியமானது.

இலங்கையில் அதிகளவான ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்புத் தொகுதிகளைத் தமிழில் தந்த பெருமைக்குரியவர் திக்வல்லை கமால் ஆவார். நாவல் மொழிபெயர்ப்புக்களில், தெனகம சிரிவர்தனவின், “குரு பண்டுரு” (“குருதட்சிணை”), விமலதாச முதாகேயின், “தயாசேனலாகே ஜயக்ஹிரஹனய”, (“வெற்றியின் பங்காளர்கள்”), டெனிஸன் பெரேராவின் “ஆகாசே மாளிகாவ” (“மலையுச்சி மாளிகை”), உபாலி லீலாரத்னவின் “பினிவந்தலாவ” (“விடைபெற்ற வசந்தம்”) (இந்நூல் தமிழ் ஊடாக மலையாளத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.), குணசேகர குணசோமவின் “காட்டுப்புற வீரர்கள்” என்பன முக்கியமானவை. அத்துடன், சிட்னி மார்கஸ் டயஸின் “பவசரண” (“தொடரும் உறவுகள்”), கமல் பெரேராவின் “திறந்த கதவு”, சுனில் சாந்தவின் “சுடுமணல்” என்பன இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதிகளாகும்,

காலஞ்சென்ற எம்.எச். எம்.ஷம்ஸ் அவர்கள், தெனகம சிரிவர்தனவின் “மித்ரயோ” (“நண்பர்கள்”) நாவலையும், சிங்களப் பாடல்கள் பலவற்றையும் தமிழாக்கியுள்ளார். அவ்வாறே, திக்வல்லை ஸஃப்வான் “ஒரே இரத்தம்” சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுதியொன்றையும், எம். எச். எம். யாகூத் ரஞ்சித் தர்மகீர்த்தியின். “அஹச பொலவ லங்வெலா” (“சங்கமம்”),  “சருங்கலய” (“பட்டம்”) ஆகிய நாவல்களையும், ஏ. ஏ. எம். ஃபுவாஜி  பியதாஸ வெலிகன்னகேயின் “வீரர்களும் தீரர்களும்” நாவலையும் தமிழில் வழங்கியுள்ளனர்.

புகழ்பூத்த எழுத்தாளரான அஷ்ரஃப் ஷிஹாப்தீன் 10 அரபுச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து “ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்”(2012) எனும் தொகுதியாக வெளியிட்டுள்ளார். மேலும், பல அரபுச் சிறுகதைகளைத் தமிழில் தந்தவர்கள் என்ற வகையில், உஸ்தாத் எம். ஏ.எம். மன்ஸூர், ஏ.பி.எம். இத்ரீஸ் போன்றோர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

“நம் அயலவர்கள்” எனும் தொகுப்பில் எம். எல். எம். மன்சூர் (பூவெலிகட)  அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 11 சமகாலச் சிங்களச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதே தொகுதியில், லறீனா அப்துல் ஹக் சிங்களத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த 5 சிறுகதைகள் அடங்கியுள்ளன. மேலும், பேராசிரியர் எம். ஏ. நுஃமான், மார்ட்டிங் விக்கிரமசின்ஹ, குணதாச அமரசேகர, கருணா பெரேரா முதலான சிங்கள எழுத்தாளர்களின் சிங்களச் சிறுகதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மேலும், ஃபைஸ்தீன், மார்ட்டின் விக்ரமசிங்ஹவின் சிறுகதைகள் உட்பட பல சிறுகதைகளைத் தமிழில் தந்துள்ளார். நீள்கரை நம்பி (ஏ. எச். எம். இமாம்தீன்), புத்தளம் நாஸிர், செந்தீரன் ஸத்தார் ஆகியோர் பல்வேறு சிங்கள், ஆங்கிலச் சிறுகதைகளைத் தமிழாக்கியுள்ளனர்.

தமிழில் இருந்து சிங்கள மொழியில் ஆக்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பதிலும் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு விதந்துரைக்கத்தக்கதாய் அமைந்துள்ளது. அந்த வகையில், மு. வரதராசனின் “கள்ளோ காவியமோ” நாவலை சிங்களத்தில் மொழிபெயர்த்து, சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற என். ஸீ. எம். சாயிக் முக்கியமான ஒருவர்.

எஸ். ஏ. சீ. எம்.கராமத், திக்வல்லைக் கமாலின் “நோன்புக் கஞ்சி” சிறுகதைத் தொகுதியையும், “உதயக் கதிர்கள்” (“ராலியா”) நாவலையும், முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பான “சுளிசுலங்க” மற்றும் ஜெயகாந்தனின் “தேவன் வருவாரா?” நாவலையும் சிங்களத்தில் தந்துள்ளார்.

அவ்வாறே, நிலார் என். காசீம் இத்துறையில் மிகவும் முக்கியமான மற்றொருவர். அவர் முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்து “அர்த்த தருவா” (பாதிக்குழந்தை) என்ற பெயரில் தொகுதியாக வெளியிட்டுள்ளார். அத்துடன், “அசல்வெசி அப்பி” என்ற சிறுகதைத் தொகுதியில் இவரின் 9 மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கியுள்ளன.

முகம்மத் ராசூக் சிங்களத்தில் மொழிபெயர்த்த சுதாராஜின் “தெரியாத பக்கங்கள்” (“நொபென்ன பெத்தி”) சிறுகதைத்தொகுதிக்கு அரச சாகித்திய விருது கிடைத்தது. அத்துடன், சுதாராஜின் “யாரொடு நோவொம்” (“காட்ட தொஸ் பவரமுத?”), “அழகிய வனம்” (“கெலேவ லஸ்ஸனய்”) ஆகிய தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகளைச் சிங்களத்தில் தந்துள்ளார். தமிழ் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்த செய்திகளைச் சிங்கள வாசகரிடையே அறிமுகம் செய்தவர்களுள் இவர் மிக முக்கியமானவர் எனலாம்.

இத்துறையில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய மற்றொருவர் எம்.வை. ஸஃபருல்லாஹ் எனும் இயற்பெயர் கொண்ட திக்வல்லை ஸஃபர். “எயாலட்ட வயச எவித்” (“அவர்களுக்கு வயது வந்துவிட்டது”) தமிழில் இருந்து சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது தமிழ் நாவல் எனக் கூறப்படுகின்றது. அத்துடன், “அசல்வெசி அபி” என்ற சிறுகதைத் தொகுதியில் இவரின் 7 மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதே தொகுதியில், ரஞ்சகுமாரின் “கோளறு பதிகம்” சிறுகதையை தம்மிக்க ஜசின்ஹவுடன் சேர்ந்து லறீனா அப்துல் ஹக் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இப்னு அஸுமத்/அழகியவடு இருவரும் சேர்ந்து டொமினிக் ஜீவாவின் கதைகளை சிங்களத்தில் “பத்திரப்பிரசூதிய” எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளனர். புதிய தலைமுறை மொழிபெயர்ப்பாளர்களான ரிஷான் ஷெரீஃப், சுனேத்ரா ராஜகருணா நாயக்காவின் “கெதர புதுன்கே ரகஸ” (“அம்மாவின் ரகசியம்”) நாவலையும், ஏ. ஸீ. எம். ரஸ்மின், “எந்திரி நீதிய” (“ஊரடங்குச் சட்டம்”), “மல்லிகா” ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், சிட்னி மார்கஸ் டயஸின் நாவல் ஒன்றையும் (“முன்மாதிரி”) தமிழில் தந்துள்ளனர்.

சிறுவர் இலக்கியம்

சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்பிலும் முஸ்லிம்களில் அனேகர் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்கள், எஸ். ஏ. சீ. எம்.கராமத், ஓ.கே. குணநாதனின் சிறுவர் இலக்கியங்களைச் சிங்களத்திலும், ஃபாஹிம் ஷம்ஸ் சிட்னி மார்கஸின் “தியுமாலியின் உலகம்”, “புள்ளி மாட்டின் நண்பர்கள்”, “ஆப்த நண்பர்கள்” ஆகியவற்றைத் தமிழிலும் வழங்கியுள்ளனர்.

மேலும், முகம்மத் ராசூக்  சுதாராஜின் சிறுவர் இலக்கியப் படைப்புக்கள் பலவற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.  அவற்றுள், “நும்பய் மகே புதா உத்தும்”, “கவிதாவின் பூந்தோட்டம்” (“கவிதாகே மல்வத்த”), “நகரத்துக்கு வந்த கரடி” (“நகரயட்ட ஆப்பு வலஸ்ஹாமி”) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ராசூக்கும் அட்டாலே பியதஸ்ஸி தேரரும் சேர்ந்து திக்வல்லை கமாலின் சிறுவர் “உதயபுரம்” நாவலை (“உதயபுரய”) சிங்களத்தில் தந்துள்ளனர்.

சிறுவர் இலக்கிய மொழிபெயர்ப்பிலும் தன் முத்திரையைப் பதித்துள்ள திக்வல்லை கமால், சிட்னி மாக்கஸ் டயஸின் “அம்மா எனதுரு” (“அம்மா வரும்வரை”), “முல்லைத்தீவு தாத்தா”, மெடில்டா அதிகாரம் எழுதிய “விஹிலுகார வந்துரு பெட்டியா” (“குறும்புக்காரக் குரங்குக் குட்டி”) ஆகிய படைப்புக்களைத் தமிழாக்கியுள்ளார். அவ்வாறே, ஏ. ஸீ. எம். ரஸ்மின் சிட்னி மார்கஸ் டயஸின் “பொடியா சக யாலுவோ” (“சின்னவனும் நண்பர்களும்”) நாவலையும், ஸகீலா அப்துல் கனி, “மீகத்துற” (எலிப்பொறி), ஸமீனா ஸஹீத் உம் ஏ ஸீ எம் ராஸிக் சேர்ந்து ஏ. வீ. சுரவீரவின் “மன்னனுள் ஒரு மனிதன்”, எம். எச். எம். யாகூத் “காசியப்பன்”, “கலாவெவ”, “படிப்பினை தரும் பாடசாலை” (ஜப்பானிய நாவல் – சிங்களம் வழியே தமிழுக்கு) ஆகிய சிறுவர் இலக்கியப் படைப்புக்களையும் தமிழுக்கு வழங்கியுள்ளனர்.

சமூகவியல் ஆய்வு, வரலாறு மற்றும் கலைத்துறை சார்ந்த மொழிபெயர்ப்புக்கள்

இத்துறையிலும் பல்வேறு மொழிபெயர்ப்புக்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக, ரெஜி சிரிவர்தன ஆங்கிலத்தில் எழுதிய “சோவியத் யூனியனின் உடைவு” எனும் நூலின் இணை மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பேராசிரியர் எம். ஏ. நுஃமான், ஆர். ஏ. எல். எச். குணவர்தனவின் “இன முரண்பாடும் வரலாற்றியலும்”, ஃபாத்திமா மெர்னிஸ்ஸியின் “முஸ்லிம் பெண் தலைமைத்துவம்”, ஃபரீதா ஷஹீதின் “கட்டுப்பாடு அல்லது சுயாதீனம்” ஆகிய நூல்களைத் தமிழாக்கியுள்ளார். அவ்வாறே, கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள், “காலனித்துவ நாடுகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம்” எனும் தியூடர் சில்வாவின் மிக முக்கியமான ஆங்கிலக் கட்டுரையைத் தமிழ்ப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் மொழிபெயர்ப்பு முன்னோடிகளுள் ஒருவரான பண்ணாமத்துக் கவிராயர் ஒஸ்கார் வைல்டின் ‘சலோமி’ நாடகம் “ஊழிப் புயல்” என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். அத்துடன், எம். எல். எம். மன்சூர் விமல் திசாநாயக்க, ஆஷ்லி ரத்ன விபூஷண ஆகிய இருவரும் இலங்கைத் திரைப்படம் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய நூலை “இலங்கை சினிமா: ஒரு கண்ணோட்டம்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். திக்வல்லை எம்.எச். எம்.ஷம்ஸ் அவர்கள் ஏராளமான சிங்களக் கலை இலக்கியக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பதும், தினகரனின் “சாளரம்” பகுதியில் அவை இடம்பெற்றன என்பதும் இங்கு நினைவுகூறத்தக்கதாகும்.

மேலும், திக்வல்லை கமால், “நல்வாழ்வுக்கான அறிவு”, “புதுவாழ்வுக்கான அறிவு”, “நல்லாட்சிக்கான அறிவு” எனும் தலைப்புக்களில் பாரம்பரிய/வாய்மொழி/சமயக் கதைகளின் தொகுப்புக்களைச் சிங்களத்தில் இருந்து தமிழில் வழங்கியுள்ளார். இந்த வரிசையில், எஸ். ஏ. சீ. எம்.கராமத்தின் “சகவாழ்வுக்கான அறிவு” எனும் தொகுப்பும் இணைகின்றது. அவ்வாறே, முகம்மத் ராசூக், தெனகம சிரிவர்தனயின் ஆசிரிய வாழ்க்கை அனுபவக் கதைகளை (“எல்லோரும் தலைவர்கள்”) சிங்களத்தில் இருந்து தமிழுக்குத் தந்துள்ளார்.

இத்துறையில், இலங்கை முஸ்லிம் பெண்களும் பங்களிப்புச் செய்துள்ளமை குறிப்பிட்த்தக்கது. அந்த வகையில், பெண் ஆளுமைகள் குறித்த தகவல்கள் உள்ளடங்கிய 15 இலக்கியக் கட்டுரைகள் கொண்ட கெக்கிராவை சுலைஹாவின்  மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தொகுதி (“அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு”) 2010 ஆம் ஆண்டில் இலக்கியப் பேரவையின் சான்றிதழைப் பெற்றுக்கொண்டமை நினைவுகூறத்தக்கது. அவ்வாறே, ரம்ஸியா ஃபாருக் தமிழாக்கம் செய்த லயனல் சரத்தின் “பெரணி லக்பிமே சிங்கள தெமல சம்பந்ததா” (“புராதன இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள்”) என்ற நூல் மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும். அத்துடன், ஹிஸ்ஸல்லே தம்மரத்தினத் தேரரின், “சிங்கள மொழியில் தமிழ் மொழியின் செல்வாக்கு” எனும் நூல், லறீனா அப்துல் ஹக்கினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவர்களோடு, சுஐப் காஸிம், மாவனல்லை அமீன், கல்ஹின்னை ஹலீம்தீன், என்.எம்.மஃரூஃப், கலாநிதி திருமலை அஷ்ரஃப், மாத்தளை பெறோஸியா, எம். டி. ஹபீபுல்லாஹ் ஆகியோரும் மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக, பொது நிர்வாக, கல்வித்துறை, சமயக் கோட்பாடுகள், ஆக்க இலக்கியங்கள், ஆய்வு மற்றும் கலை இலக்கியப் படைப்புக்களின் மொழிபெயர்ப்புக்களின் மூலம் தமது தாய்மொழியை வளப்படுத்துவதிலும், அறிவியல் முதலான துறைசார் அறிவை வளர்ப்பதிலும், இலங்கைவாழ் சமூகங்களுக்கு இடையில் பரஸ்பரப் புரிந்துணர்வையும் நல்லுறவையும் கட்டியெழுப்புவதிலும் காலங்காலமாக இலங்கை முஸ்லிம்கள் தமது பங்களிப்புக்களைத் தொடர்ந்து செய்துவருகின்றனர் என்பது கண்கூடு.

(குறிப்பு: குறுகிய காலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ஒரு முன்னோடி முயற்சி மட்டுமே. இதில் நேர்ந்திருக்கக் கூடிய விடுபடல்கள், இத்துறையின் ஒவ்வோர் அம்சம் சார்ந்தும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படத்தக்க ஆழமான ஆய்வுகளின் போது நிவர்த்திக்கப்படும் என்பது இக்கட்டுரையாளரின் எதிர்பார்ப்பாகும்.)

உசாத்துணைகள்:

சிவகாமி, ச., (2004), மொழிபெயர்ப்புத் தமிழ், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.

கோவேந்தன், த. (1984) மொழிபெயர்ப்பு- பண்பும் பயனும், சென்னை: வளர்மதி பதிப்பகம்.

நுஃமான், எம்.ஏ., (1997) “தமிழ் மொழிபெயர்ப்பில் சிங்கள இலக்கியம்”, பேராசிரியர் சி. தில்லைநாதன் மணிவிழா மலர், பேராதனை.

நுஃமான், எம்.ஏ., முருகையன், ஆர். (1981), பலஸ்தீனக் கவிதைகள், கொழும்பு: மூன்றாவது மனிதன்

நுஃமான், எம்.ஏ., (2008), மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்(மொழியாக்கக் கவிதைகள்), சென்னை: அடையாளம்.

பண்ணாமத்துக் கவிராயர், (1996) காற்றின் மௌனம் (மொழியாக்கக் கவிதைகள்), கொழும்பு: மலையக வெளியீட்டகம்.

புவாஜி, ஏ.ஏ.எம்., (1997) பேராசிரியர் அல்லாமா உவைஸ், மாத்தளை: ஸஹீமா பதிப்பகம்

திக்குவல்லைக் கமால் (2010) விடைபெற்ற வசந்தம் (மொழிபெயர்ப்பு நாவல்), கொழும்பு: கொடகே

நுஃமான், எம்.ஏ., காமன் விக்ரமகமகே (பதிப்பு) (2006), நம் அயலவர், கொழும்பு: முச்சக்கரவண்டி வெளியீட்டகம்.

லறீனா ஏ. ஹக், (2008), மௌனத்தின் ஓசைகள் (மொழியாக்கக் கவிதைகள்), கெலிஒயா: திளின அச்சகம்.

---------------------------- யாத்ரா கவிதைகளுக்கான இதழ்கள் (1-17), வாழைச்சேனை: நண்பர் இலக்கியக் குழு.

Catford, J.C. (1965) A Linguistic Theory of Translation, London: Oxford University Press

New Mark, Peter, (1988), A textbook of translation, London & New York: Prentice Hall.

Lawrence Venuti (Ed), (2000), The Translation Studies Reader, London & New York: Rourtledge.

කාමන් වික්‍රමගමගේ, නුහ්මාන්, එම්. ඒ.,(සංස්) (2006) "අසල්වැසි අපි", කොළඹ: ත්‍රී වීලර් ප්‍රකාශකයෝ

http://mrishanshareef.blogspot.com/2012_04_01_archive.html

http://faheemapoems.blogspot.com/

ஆக்கம்: லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு), எம்.ஃபில்.(ஆய்வு மாணவர்)

முன்னாள் விரிவுரையாளர், மொழிபெயர்ப்புக் கற்கைகள்,

பேராதனைப் பல்கலைக்கழகம்

நன்றி: "அல் ஃபிக்ர்" 2012
...மேலும்

Jan 26, 2013

கலை இலக்கியங்களில் 'பெண்' பற்றிய புனைவு: சில குறிப்புகள் - லறீனா அப்துல் ஹக்மானிடப் பண்பாட்டு வரலாற்றில் மொழி, கலை, இலக்கியம் என்பவற்றுக்கு இருக்கும் வகிபாகம் மிக உன்னதமானது. எந்த ஓர் இனக்குழுமத்தினதும் தொன்மத்தை, வளத்தை, வனப்பை, உயிர்ப்பை  காலங்கடந்தும் வாழச்செய்யும் ஆற்றல் அவற்றுக்கு உண்டு. அதேவேளை, குறித்த ஒரு சமுதாயத்தின், இனக்குழுமத்தின் சிந்தனைப் போக்கையும் உள்ளார்ந்த பண்புக்கூறுகளையும் உணர்த்தும் பணியையும் அவை தம்மகத்தே கொண்டுள்ளன என்பதும் கவனத்துக்குரியது.

அண்மையில் சுவர்ணவாஹினியில் ஒரு சிங்கள நாடகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. நாடகத்தின் பெயர் 'பிய-செக்க-சங்க்கா' (அச்சம், ஐயம், கவலை). புத்தரின் முற்பிறவிகள் பற்றிக்கூறும் '550 ஜாத்தக்க கதா' கதைகளில் 'சம்புலா ஜாத்தக்கய'வை வைத்து அந்தத் தொலைக்காட்சி நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தது. குஷ்டரோகத்தினால் அரச மாளிகை வாசத்தைத் துறந்து காட்டுக்குப் போன சொத்திசேனன் எனும் அரசனின் பட்டத்தரசியுடைய கதை. குஷ்டரோகியான தன் கணவனோடு காடேகிய சம்புலாதேவி, அவனுக்குரிய பணிவிடைகளை மனநிறைவோடு செய்துவருகிறாள். கணவன் பசியாற காய்கனிகளும், அருந்த நீரும், குஷ்டரோகத்தால் புண்ணாகிச் சீழ்வடியும் உடலைப் பேண மருத்துவ குணமுள்ள பச்சிலைகளும் பெற்றுவருவதற்காகத் தினமும் காட்டில் அலைந்துதிரிகிறாள்.

ஒருநாள் நடுக்காட்டில் அவளின் பேரழகிலே மதிமயங்கிய ராட்சசன் ஒருவன், நோயாளிக் கணவனைக் கைவிட்டு அவளைத் தன்னுடன் வந்துவிடுமாறும், அவளை மணந்து அவளுக்கு சகலவிதமான போகங்களையும் அமைத்துத் தருவதாகவும் ஆசைகாட்டி அழைக்கின்றான். தன் கணவன் குஷ்டரோகியானாலும் அனைத்து போகங்களையும் துறந்து காட்டில் வாழ நேர்ந்தாலும் அந்த வாழ்வே தனக்கு மேலானது என்று சொல்லும் சம்புலாதேவி, ராட்சசனின் அழைப்பை ஏற்க மறுத்துவிடுகின்றாள். காமவேட்கையும் கோபவெறியும் கொண்ட ராட்சசன் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்ல முனைகையில், அவளின் அபயக்குரல் கேட்டு தேவேந்திரன் தோன்றி அவளைக் காக்கின்றான்.

இந்நிலையில், காலதாமதமாகிவரும் தன் துணைவிமீது சொத்திசேனன் மிகுந்த சந்தேகம் கொள்கிறான். தன்னைக் கொல்லும் நோக்குடன் மனைவி தன் ரகசியக் காதலனை உடனழைத்து வரக்கூடும் என அஞ்சி தன் இருப்பிடத்தில் இருந்து வெளியேறி ஒளிந்துகொள்கின்றான். அவளோ தன் காதலுக்குரிய கணவனைக் காணாது கதறி அழுது மயங்கி விழுகின்றாள். அவளை மயக்கம் தெளிவித்த சொத்திசேனன், அவளுடைய கற்புடைமையைச் சந்தேகித்து அவளைத் தூற்றுகின்றான். அவள் தனக்கு நேரவிருந்த அபாயத்தைப் பற்றிக்கூறி, தான் பரிசுத்தமானவள் என்று காலில் விழுந்து கதறி அழுகின்றாள். அந்த இடத்தில்,

'பெண் என்பவளுக்கும் உண்மைக்கும் இடையில் தூரம் மிக அதிகம். அது, வானுக்கும் மண்ணுக்கும் இடையிலுள்ள தூரத்துக்கும் கடலின் இரு கரைகளுக்கும் இடையிலான தூரத்துக்கும் ஒப்பானது. இந்தக் காட்டில் வேடர்கள், முனிவர்கள் என அந்நிய ஆடவர்கள் நிறையப் பேர் அலைந்து திரிகிறார்கள். எனவே, அவர்களில் யாரேனும் ஒருவரோடு உனக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என நான் ஐயுறுகின்றேன். ஏனென்றால், பெண்ணின் மனம் கணத்துக்குக் கணம் சலனமடையக் கூடியது.' என்று கணவன் சொல்லும் வார்த்தைகள் அவள் இதயத்தைக் கீறிப் பிளக்கின்றன. உடனே, அவள் தன்னுடைய கற்புடைமையை நிரூபிக்கும் வகையில், தன் கற்பு வலிமையால் அவனுடைய குஷ்டரோகத்தைக் குணமாக்குகின்றாள். இருவரும் மகிழ்வோடு நாடு திரும்புகின்றனர். அரசமாளிகை அமர்க்களப்படுகின்றது. அந்தோ! பரிதாபம்! இன்பத்திலும் துன்பத்திலும் தன்னோடு நிழலாய் நின்ற மனைவியை மறந்து அலட்சியப்படுத்திய மன்னன், அந்தப்புர அழகியரோடு உல்லாசமாய்ப் பொழுது போக்குகின்றான். பின்னர், தந்தையின் உபதேசம் கேட்டுத் திருந்தி, மனையாளோடு புதுவாழ்வைத் தொடங்குகின்றான்.

இந்த நாடகத்தைப் பார்த்து முடித்த என்னுள் எத்தனையோ எண்ண அலைகள். சட்டென்று கம்பராமாயண யுத்தகாண்டத்தில் ஒரு காட்சி என் மனத்திரையில் தோன்றியது. இராவணவதத்தின் பின் சீதை சிறைமீட்கப்பட்டாள். அவளைத் தன்னிடம் அழைத்துவருமாறு விபீடணனை அனுப்புகின்றான், இராமன். அவன் அவளிடம் சென்று, குளித்து சர்வ அலங்காரத்துடன் இராமன் அவளைப் பார்க்க விரும்புவதாக இராமனின் கட்டளையை எடுத்துக்கூறுகின்றான். அசோகவனத்தில் இருந்த அதே எளிய, நலிந்த தோற்றத்தோடே தன் கணவனைக் காண விழைகிறாள், சீதை. அதனை,

'யான் இவண் இருந்ததன்மை இமையவர் குழுவும் எங்கள்

கோனும் அம் முனிவர் தங்கள் கூட்டமும் குலத்துக் கேற்ற

வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி

மேல் நிலை கோலம் கோடல் விழுமியது என்று வீர'

பொருள்: 'வீரனே ! எந்தத் தன்மையுடன் நான் இங்கே இருந்தேன் என்பதை தேவர்களும் எங்கள் அரசன் இராமனும், முனிவரும், வானளவு கற்பிலுயர்ந்த பெண்களும் காண்பது எனக்குச் சிறப்பு. அலங்கரித்து வருவது முறையாகாது' என்ற வரிகள் மூலம் காணலாம்.

இதேகாட்சி வால்மீகி இராமாயணத்தில் பின்வருமாறு விபரிக்கப்படுகின்றது:

ஏவ முக்தா து வைதேஹி ப்ரயுவாச விபீஷணம்

அஸ்த் ராத்வா த்ரஷ்டுமிச்சாமி பர்த்தாரம் ரக்ஷஸேஷ்வர

தஸ்யாகத் வசனம் ஷ்ருத்வா ப்ரத்யுவாச விபீஷணஹ

யதாஅ அஹ ராமே வர்த்தாதேதத் தத கர்த்துமர்ஹஸி

தஸ்ய தத் வசனம் ஷ்ருத்வா மைதிலி பதிதேவதா

பத்தூர்பக்யாவ்ருதா ஸாத்வி ததேதி ப்ரத்பாஷத

பொருள்: விபீடணன் கூறியதைக் கேட்டதும் வைதேஹி, 'நான் குளிக்காமலேயே உடனே இப்போதே எனது கண்கண்ட தெய்வமான கணவரைக் காண விரும்புகிறேன் என்றாள். இதற்கு விபீடணன் 'தேவி! நான் கூறியது தங்களது கணவர் ஸ்ரீராமரின் கட்டளை. தாங்கள் அவ்வாறே நடக்க வேண்டும்.' என்றான். இதைக் கேட்டதும் பதிபக்தியில் பாதுகாக்கப்படுபவளும் கணவனைக் கடவுளாய் வணங்குபவளும் கற்பிற் சிறந்தவளும் நன்னெறி கொண்டவளுமான சீதை அவ்வாறே ஆகட்டும் எனத் தன் கணவனின் கட்டளையைத் தன் சிரம் மேற் கொண்டாள். (பாடல்கள் 9,10,11,12,13 ஸர்க்கம் 114 வால்மீகி ராமாயணம்)

இவ்வாறு, தனது மனமொப்பா நிலையிலும் கணவனின் கட்டளையைச் சிரமேற்கொண்டு தன்னை முறைப்படி அலங்கரித்துக்கொண்டு இராமனைக் காண ஆவலோடு வந்துற்ற சீதையை இராமன் எப்படி வரவேற்றான்?

'வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை

பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா

ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட

மாண்டிலை முறை திரம்பரக்கன் மாநகர்

ஆண்டு உறைந்து அடங்கினை அக்சம் தீர்ந்து

மீண்டது என் நினைவு? எதை விரும்பும் என்பதோ

உன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்

மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற

பின்னை மீட்டு உறுபகை கடந்திலேன் பிழை

என்னை மீட்டான் பொருட்டு இலங்கை எய்தினேன்'

பொருள்: கற்பின் உறைவிடமானவளும் தன்னை வணங்கியவளுமான சீதையை கோபத்துடன் படமெடுத்தாடும் பாம்பைப் போல இராமன் நோக்கினான். 'ஒழுக்கம் பாழ்பட்டு பல அறுசுவை உணவுகளை உண்டு நீண்ட காலம் அரக்கனின் நகரத்தில் வாழ்ந்து விட்டு என் நினைவு எப்படி வந்தது? என்னை இவன் விரும்புவான் என எண்ணினாயோ? கடலைத் தூர்த்து பாலம் எழுப்பி, மின்னலையும் வெட்கி ஓடச் செய்யுமளவு ஒளி மிகுந்த அரக்கர் படையை வென்றது உன்னை மீட்பதற்கு என்றோ எண்ணினாய்? இல்லை. தனது மனைவியைக் கடத்திச் சென்றவனை இராமன் கொல்லாமல் விட்டுவிட்டான் என்னும் பழி வராதிருக்கவே போரிட்டேன்.' (பாடல் 3953,3954,3955 யுத்த காண்டம் கம்பராமாயணம்) என்று சுடுசொற்களை வாரி இறைக்கின்றான், தான் இருந்த அதே எளிய தோற்றத்துடன் வர விரும்பியவளை சர்வ அலங்காரங்களோடும் வருமாறு கட்டளையிட்டுவிட்டு, பின்னர் அவனே நிர்த்தாட்சண்ணியமாய்,

'அடைப்பர் ஐம் புலங்களை ஒழுக்கம் ஆணியாச்

சடைப்பரம் தகைத்ததோர் தகையின் மா தவம்

படைப்பர் வந்து ஒரு பழி வந்தால் அது

துடைப்பர் உயிரொடும் குலத்தின் தோகைமார்

யாது யான் இயம்புவது உணர்வை ஈடுஅறச்

சேதியாநின்றது உன் ஒழுக்கச் செய்தியால்

சாதியால் அன்று எனின் தக்கது ஒர் நெறி

போதியால்' என்றனன் புலவர் புந்தியான்

பொருள்: கணவனைப் பிரிந்த காலத்தில் உயர் குலப் பெண்கள் கற்பே தவமாக இருந்து (தலைமுடியை சீவிப் பராமரிக்காது) சடையையும் தாங்கி ஐம்புலன்களையும் அடக்கி வைப்பார்கள். இதையும் மீறி ஒரு பழி ஏற்படுமாயின் தமது உயிரையே விட்டு விடுவார்கள். உனது தீயொழுக்கம் பற்றிய செய்தி  எனது உணர்வின் வலிமையை உடைக்கிறது. ஒன்று நீ உயிரை விடு. இல்லையேல் ஏற்ற இடத்திற்குப் போ' என்றான் புலவர்கள் மனதில் இருப்பவனான இராமன். (பாடல் 3959,3960 யுத்த காண்டம் கம்ப ராமாயணம்) என்று எரிந்தும் விழுகின்றான்.

வால்மீகி தன்னுடைய இராமாயணத்தில் இக்காட்சியை இப்படி விபரிக்கின்றார்:

கஹ புமாம்ஸ்து குலே ஜாதஹ ஸ்த்ரியம் பரக்டு ஹோபிதாம்

தேஜஸ்வி புனராதத்யாத் ஸ§ஹ§ல்லோபேன் சேதஸா

ராவணங்கப்பரிக்லிஷ்டாம் த்ருஷ்டாம் துஷ்டேன சக்ஷ§ஷாம்

கதம் த்வாம் புனராதத்யாம் குலம் வ்யபதிஷன் மஹம்

பொருள்: நல்ல குலத்தவனான எந்த ஆணும் தான் வல்லமையானவனாயிருப்பினும் வேறு வீட்டில் இருந்த ஒரு பெண்ணை தன்னுடன் முன்பு வாழ்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்வானா? மனதளவில் கூட அது சாத்தியமில்லை. இராவணன் உன்னைத் தன் மடியில் வைத்து எடுத்துக் கொண்டு போனான். அவனது கெட்ட பார்வை உன் மீது பட்டு விட்டது, எனது குலப் பெருமை பேசும் நான் உன்னை எவ்வாறு ஏற்க இயலும்? (பாடல் 20,21 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)

ந ஹி த்வாம் ராவணோ த்ருஷ்ட்வா திவ்யரூபாம் மனோரமாம்

மர்ஷயேத் சிரம் சிதே ஸ்வக்குஹே பர்யவஸ்திதாம்

பொருள்: சீதை! உன்னைப் போன்ற அழகிய அலங்கரிக்கப்பட்ட பெண்ணைத் தனது வீட்டிலேயே விட்டு விலகி இருக்கிற கஷ்டத்தை அதிக நாள் இராவணன் சகித்திருக்க இயலாது. (பாடல் 24 ஸர்க்கம் 115 வால்மீகி ராமாயணம்)

சீதை என்ன தன்னை அலங்கரித்துக்கொண்ட நிலையிலா அசோகவனத்தில் இருந்தாள்? இல்லையே! அப்படி இருக்க, அவள் இராவணனின் சிறையில் இருந்து மீட்கப்பட்ட அதேநிலையில் மக்கள் முன்னிலையில் தோன்றாமல் தடுத்து, பூரண அலங்காரத்துடன் வருமாறு கட்டளையிட்டது யார்? பின்னர் அதையே அவளது ஒழுக்கத் தவறாகச் சித்திரிக்க முனைந்தது யார்? கணவனையே கதியென்று நம்பி, அவன் மீது கொண்ட அன்பினால்  எத்தனையோ இன்னல்களைப் பொறுத்துக்கொண்ட சீதை, ஈற்றில் தன்னுடைய கற்புடைமையை தீக்குளித்துத்தான் நிரூபிக்க வேண்டியிருந்தது| குணமாக்கவே முடியாது என எல்லா வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட கணவனின் குஷ்டரோகத்தைக் குணமாக்கி தன் கற்புடைமையை நிரூபித்த சம்புலாதேவியைப் போல.

இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்வோமே. அதில், ஆடலரசியான மாதவி கணிகையர் குலத் தோன்றலாய் இருந்தும் கோவலன் ஒருவனை மட்டுமே தன் காதலனாய் வரித்து அவனை அல்லும் பகலும் மகிழ்விப்பதிலேயே தன் வாழ்வைக் கழிக்கின்றாள். அவளோடு, 'அணைவுறு வைகலின் அயர்ந்து மயங்கி விடுதல் அறியா விருப்பின'னாகி (சிலப்பதிகாரம்: 3:172-174) தன் மனைவி கண்ணகியை முற்றாக மறந்து வாழ்கிறான், கோவலன். இந்நிலையில், புகார் நகரில் இந்திரவிழா களைகட்டுகிறது. அதில் மாதவி பதினொரு வகையான ஆடல்களை நிகழ்த்துகின்றாள். கோவலனால் அதனைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை| ஊடல்கொள்கின்றான். அந்த ஊடலைத் தீர்க்க அவனோடு கடலாடச் செல்கிறாள், மாதவி. அவள் நீட்டிய யாழை வாங்கி கோவலன் கானல்வரி இசைக்கிறான். அதையடுத்து மாதவியும் பாடுகின்றாள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த கோவலன் மனதில் சந்தேகம் துளிர்விடுகிறது.

"எனக்கேட்டு,

கானல்வரி யான்பாடத் தான் ஒன்றின்மேல் மனம்வைத்து

மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என

யாழ் இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்தது ஆகலின்

உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்

பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது

ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,

..................."

பொருள்: இவ்வாறு மாதவி பாடக் கோவலனும் கேட்டான். 'யான் கானல்வரி பாடினேன். வஞ்சனையுடன் கூடிய பொய்ம்மைகள் பலவற்றையும் கூட்டும் மாயத்திலே வல்லவளாகிய இவளோ, தான் வேறொன்றின்மேல் மனம் வைத்துப் பாடினாள்' என்று எண்ணினான். யாழிசையின் காரணமாக வைத்து, அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன்பாற் சேரத் தொடங்கியது. அதனால், உவா நாளில் விளங்கும் முழுநிலவு போன்ற தூய முகத்தினளாகிய மாதவியை, அவளோடு கைகோத்து வாழ்ந்திருந்த கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டான். 'பொழுது இங்கே மிகவும் கழிந்தது. நாம் எழுவோமா?' என மாதவி கேட்டதும், உடனே எழுந்து அவளுடன் கூடிச் செல்லாது தன் ஏவலர் தன்னைச் சூழ்ந்துவர, அவன் அவளைவிட்டுப் பிரிந்து தனியாகவே சென்றுவிட்டான். (சிலப்பதிகாரம்: 7: 52-1-7)

அத்தனை நாளும் கட்டிய மனைவியையும் மறந்து இன்பம் துய்க்கும் வரையில் உயிருக்குயிராக இருந்தவள், ஒரு சில நொடிகளில் வஞ்சனையும் பொய்ம்மையும் நிறைந்த மாயக்காரியாகிவிட்டாள். கோவலன் பாடியது போலவே காதல்குறிப்புடன் மாதவி பாடியதும் அவள் அவனுடைய சந்தேகத்துக்கு உரியவளாகிவிட்டாள். சம்புலாதேவி இருட்டிய பின் வந்ததைக் கண்டு அழகியான அவளுக்கு வேறோர் ஆடவனோடு ரகசியத் தொடர்பு ஏற்பட்டிருக்கவேண்டும்| பெண்களின் மனம் கணந்தோறும் சலனமுறுவது| அதிலே உண்மைக்கு இடமில்லை என்று சொத்திசேனன் ஐயுற்றதற்கும் இங்கே கோவலன் ஐயுற்றதற்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை, தலைவனின் காமக்கிழத்தியான கணிகையர்குலப் பெண்- அரசகுலப் பெண்ணான மனைவி என்ற வேறுபாட்டைத் தவிர.

மறுதலையாக, மாதவியிடம் போய்விட்டு வந்தான் என்று தெரிந்த நிலையிலும் 'சிலம்புள கொண்ம்' என்று சொல்லத்தக்கவளாகக் கண்ணகியைப் படைக்கிறார், இளங்கோ. அந்தப்புர அழகியரோடு சல்லாபத்தில் ஆழ்ந்துவிட்டு தந்தையின் அறிவுரையால் திருந்திவந்த சொத்திசேனனை மன்னித்து ஏற்கும் மனைவியாய் சம்புலாதேவி படைக்கப்பட்டுள்ளாள். ஆனால், 'நல்ல குலத்தவனான எந்த ஆணும் தான் வல்லமையானவனாயிருப்பினும் வேறு வீட்டில் இருந்த ஒரு பெண்ணை தன்னுடன் முன்பு வாழ்ந்தவள் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்றுக் கொள்வானா? மனதளவில் கூட அது சாத்தியமில்லை' என்று சொல்பவனாக இராமனின் பாத்திரப்படைப்பு இருக்கிறது. அதேவேளை, கற்பை நிரூபிக்க சீதையைத் தீக்குளிக்க வைக்கும் இராமனின் முன்னால், 'நீயும் காடுகரையெல்லாம் அலைந்து திரிந்தாய் அல்லவா, உன்னுடைய கற்பு மட்டும் தூய்மையாய் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? எனவே, வா! இருவருமே அக்னிப் பரீட்சையில் ஒருவரை ஒருவர் நிரூபித்துக் கொள்வோம்' என்று கோரும் தைரியமற்றவளாய் சீதை படைக்கப்பட்டிருக்கிறாள். எனவே, மிகத் தெளிவாகத் தவறுசெய்துவிட்டு வந்த நிலையிலும் ஆணின் தவறுகள் மன்னிப்புக்கு உட்பட்டவையாகவே காட்டப்படுகின்றன. ஆனால், தவறே செய்யாத நிலையிலும் வெறுமனே ஊகத்தின், சந்தேகத்தின் அடிப்படையில்கூட ஒழுக்கத்தவறு, கீழ்படியாமை முதலான காரணங்களைக்காட்டி ஓர் ஆண் ஒரு பெண்ணை வெகு இலகுவாகத் தூக்கியெறிந்துவிட முடியும் என்ற சமுதாயத்தின் பாரபட்சநிலை இங்கே பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்தப்படுகின்றது.

இவ்வாறு, பாளி, சமஸ்கிருதம், சிங்களம், தமிழ்  என மொழிகள் வேறுபட்டாலும் அவற்றில் தோன்றிய இதிகாசங்களிலாகட்டும் புராணங்களிலாகட்டும் பிற இலக்கியங்களிலாகட்டும். 'பெண்' பற்றிய புனைவு பல்வேறு பொதுமைப் பண்புகளைத் தம்மகத்தே கொண்டுள்ளன. அவளுக்கு எதிரான பாரபட்சமும் அநீதிகளும், பண்பாட்டின் பெயரால் அவள்மீது வலிந்து திணிக்கப்பட்ட நியாயமற்ற சட்டதிட்டங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது. ஒழுக்கமீறல் என்பது ஆண்-பெண் இருபாலாரும் சம்பந்தப்படும்போதுதான் நிகழ்கிறது என்ற யதார்த்தத்தை மறந்துவிட்டு பெண் மட்டுமே குற்றவாளியாய்ப் பார்க்கப்படுகின்றாள். பெண் என்பவள் மட்டும் கற்புக்கரசியாய் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறாள், அவளின் கற்பொழுக்கம் ஆணுடைய சந்தேகத்துக்கு இலக்காகும்பட்சத்தில் தன்னுடைய கற்பை அவள் அவனிடம், சமூகத்திடம்  நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்படுகின்றாள். ஆணின் ஒழுக்கத்தவறு அவனின் சாதாரண இயல்பு என்று சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. ஆண்மகன் சேற்றைக்கண்டால் மிதிப்பான்- ஆற்றைக்கண்டால் கழுவுவான்;, ஆண் கெட்டால் சம்பவம்- பெண் கெட்டால் சரித்திரம், பெண் சிரிச்சால் போச்சு புகையிலை விரிச்சால் போச்சு முதலான எண்ணற்ற சொலவாடைகளும் வழக்குமொழிகளும் ஆணுடைய ஒழுக்கமீறலை நியாயப்படுத்தி காலங்காலமாக சப்பைக்கட்டு கட்டவே பயன்பட்டுவருகின்றன. புத்தரின் முற்பிறவிக் கதைகள் விகாரைகளில் பாராயணம் செய்யப்படுகின்றன. இராமாயணம் கோவில்களில் கதா காலேட்சபமாய் உரைக்கப்படுகின்றது. அவற்றுக்கென ஒரு புனிதத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. புதுப்புது இலக்கிய வடிவங்களில் அவற்றின் கதைகள் மீட்டுருவாக்கம் செய்யப்படுகின்றன. இவற்றில் சொல்லப்பட்டும் சித்திரிக்கப்பட்டும் வரும் அன்றைய பெண்ணின் விம்பமே சமுதாயத்தில் இன்று வாழும் பெண்ணின் விம்பமாகவும் மிக இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டு, காலங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

பெண்ணை பாதாதிகேசமாகவும், கேசாதிபாதமாகவும் வர்ணித்த பண்டைய காவியங்களாகட்டும் சிற்றிலக்கியங்களாகட்டும், பிற்காலத்தில் பக்திநெறியைப் போற்றிப் பெண்வெறுப்பை வலியுறுத்தி பெண்ணை 'மாயப்பிசாசாகவும்', அவளது அவயவங்கள் அருவருப்பானவையாகவும் சித்திரிக்கப்படும் சித்தர்பாடல்களாகட்டும், அவற்றில் 'பெண்' என்பவள் வெறுமனே 'உடலாக, ஒருசில உடல் உறுப்புக்க'ளாகப் பார்க்கப்பட்டுள்ளாளே தவிர, ஆன்மாவும் உயிரும் உணர்வும் அறிவும் ஆற்றலும் உள்ள ஒரு 'மனித உயிரி' என்ற நிலையில்வைத்துப் பார்க்கப்படவில்லை என்பதே உண்மை. 'உடலை'க் கடந்து பெண்ணைப் பார்க்கும் பக்குவம் மிகப் பெரும்பாலான கலை இலக்கிய கர்த்தாக்களுக்கோ சமுதாயத்துக்கோ கைகூடவில்லை. (பாரதியை இங்கு ஒரு விதிவிலக்காகச் சொல்லலாம்.)

மன்னனோடு சரிசமமாக இருந்து கள்ளருந்தி, அரசியல் விவகாரங்களில் ஆலோசனைகள் சொன்ன ஒளவையார், 'ஒளவைப்பாட்டி'யாக நோக்கப்பட்டமையும், புனிதவதியார் 'காரைக்கால் அம்மையாரா'கி மனிதக் கண்களுக்கு வெறுப்பூட்டும் பேய்வடிவினராக மாறியதற்கும் பின்புலத்தில் பெண்ணை உடல்கடந்து நோக்காத சமுதாய மனநிலையே அடிநாதமாக அமைந்துள்ளது என்று கொள்வது தகும்.  ஜீவாத்மா- பரமாத்மாவில் ஐக்கியமாகும் பேரின்பத்தைப் பாடும் பக்திப் பரவசப்பாடல்களில், மாணிக்கவாசகருக்கோ பிற சைவ, வைணவ ஆண் அடியார்களுக்கோ கொடுக்கப்பட்ட அதேயளவு முக்கியத்துவம், பெண்ணான ஆண்டாளுக்குக் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் இங்கு முக்கியமானது. அவரது திருப்பாவைக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம், கிருஷ்ணன் மீதான விரகதாபத்தை மிகத் துல்லியமாய் வெளிப்படுத்தும் நாச்சியார் (கனவுப்பாடலைத் தவிர) திருமொழிக்கு வழங்கப்படவில்லை. இங்கும் அவர் ஒரு 'பெண்' என்ற பால்மையே அவரது இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படக்கூடிய அங்கீகாரத்தைத் தீர்மானிக்கும் அளவுகோலாகின்றது. இதற்கு, எந்த இடத்தில் மொழி சரளமாக அமையுமோ அந்த இடமான காதலில் பெண், மொழியாடக்கூடாது என்பதை விளக்கி,

"தன் நூறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்

எண்ணுங்காலைக் கிழத்திக்கு இல்லை" என்று, 'எதைப் பாடவேண்டும், எதைப்பாடக்கூடாது' என்று பெண்ணுடைய 'பொருள் வெளியை' வரையறுத்த தொல்காப்பியமும் அடிப்படையாகின்றது.

இந்நிலையில், 'பெண்' பற்றிய விம்பம் அதே பழைய – குரூர வடிவத்துடன் ஸ்திரப்படுத்தப்படுவது அறிவியல் யுகத்திலும் தொடரவே செய்கின்றது. சினிமா, சின்னத்திரை, இணையம் என எதை எடுத்தாலும், திரைப்படம், தொலைக்காட்சி நாடகம், விளம்பரம் என எந்தவொரு படைப்பாக்கத்திலும் 'பெண்' வெறுமனே  'உடல்' ஆகவே பார்க்கப்படுகின்றாள், சித்திரிக்கப்படுகிறாள் அல்லது, 'ஆவதும் பெண்ணாலே- அழிவதும் பெண்ணாலே' முதலான பண்டைய பழமொழிகளை வாழவைக்கும் வகையில் 'அவள்' சூழ்ச்சிசெய்பவளாக, ஏமாற்றுக்காரியாக, துன்பத்தின், பிரச்சினைகளின் அடிப்படையானவளாகவே பெரும்பாலும் வார்க்கப்படுகின்றாள். நூற்றாண்டு காலமாய்த் தொடரும் இந்தப் பிற்போக்குநிலை மாறி, அகன்றதும் பண்பட்டதுமான பார்வைகள் உருவாகவேண்டியது காலத்தின் தேவைதான். ஆனால், அது ஒரு நெடுந்தூரப் பயணம் என்பதே கசப்பான நிதர்சனம்.

துணைநின்றவை:

செல்வி திருச்சந்திரன் (1997) 'தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு', கொழும்பு - சென்னை : குமரன் பதிப்பகம்.

லறீனா ஏ. ஹக், (2005) 'செ. கணேசலிங்கின் நாவல்களில் பெண் பாத்திரங்கள் : ஒரு பெண்ணிலை நோக்கு', சென்னை : குமரன் புத்தக இல்லம்.

புலோலியூர்கேசிகன்(பதிப்பு) (1958) 'சிலப்பதிகாரம்', சென்னை: பாரி நிலையம்

http://www.jathakakatha.org/newhome/index.php?option=com_content&view=article&id=602:504---&catid=60:501-550-&Itemid=103

http://issues.lines-magazine.org/Art_Aug05/Bindunuwewa_II.htm

http://puthu.thinnai.com/?p=317

http://nilapenn.com/index.php/20101101213/essay

http://ta.wikisource.org/wiki/7.%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF

http://www.tamilvu.org/courses/degree/a011/a0111/html/a011122.htm

ஆக்கம்: லறீனா அப்துல் ஹக்

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்