/* up Facebook

Dec 30, 2013

மத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம் - ஸர்மிளா ஸெய்யித்


விஸ்வரூபம் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரும் இஸ்லாமியர்களின் கோரிக்கையின் காரணத்தை முழுமையாக விளங்காத சிங்கள நண்பர் ஒருவர் தற்செயலாக அதுபற்றிக் கேட்டார். 'இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால்' என்றேன். ‘சொல்றேன் என்று தப்பா நினைக்காதே.. இவர்கள் இப்போது நடந்து கொள்வது மட்டும் ஜனநாயகமா?' என்றார் நண்பர்.

இந்தக் கேள்வி யாரோ ஒரு சிங்களவரினுடையது மட்டுமல்ல; உலகம் முழுவதும் வாழுகின்ற இஸ்லாமியர் அல்லாத அனைவரினுடையதும்தான். சில இஸ்லாமியர்களினுடையதாயும் இருக்கலாம். விஸ்வரூபம் திரைப்படத்தின் உப்பு, காரம் தெரியாமலே இலங்கையில் தடை செய்தாயிற்று. தமிழகத்தில் அனைத்திந்திய ஜமாஅத் தடை செய்யக் கோரியதன் எதிரொலியாக இலங்கையிலும் அது செய்யப்பட்டது. தடையுத்தரவை நீக்குவதா வேண்டாமா என ஆலோசிப்பதற்காக உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களுக்கு அத்திரைப்படம் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் காண்பிக்கப்பட்டிருந்தது. உலமாக்கள் புத்திஜீவிகளால் அந்தத் திரைப்படம் பார்க்க முடியுமாக இருந்தால் சாதாரண மக்களுக்குத் தடை செய்வதிலுள்ள நியாயமென்பது பிரத்தியேகமானது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் மிக உறுதியாக இருக்கின்ற உலமாக்கள் திரைப்படம் பார்க்க முடியுமா என்பது மற்றொரு கேள்வி; விமர்சனத்திற்குரியது.

நாம் எத்தனையோ சினிமாக்களைப் பாத்திருக்கிறோம். மிகக் குரூரமானதும் நெஞ்சை நெருக்குவதுமான சமூகக் கொடுமைகளையும் பார்த்து ரசித்துவிட்டு எதுவுமே நடவாதது போல திரையரங்கிலிருந்து வெளியேறி விடுகின்றோம். ஏனைய சமயங்களைக் கேள்விக்குட்படுத்துகின்ற குறிப்பாக இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியக் கதைகளையும் பாத்திரங்களையும் விமர்சிக்கின்ற, பாரம்பரியங்களை உடைத்தெறிகின்ற சினிமாக்களும் வந்துதான் இருக்கின்றன. அப்போதெல்லாம் மிக ஆரோக்கியமான விமர்சனங்கள், கருத்தியல்களால் சமூகவியலாளர்களும் சமயத்தவர்களும் அவற்றை எதிர்கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆரோக்கியமான விவாதங்களுக்கும், கருத்தியல் வெளிக்கு முன்வரவும் தயாரில்லாதவர்கள். சினிமாவில் சித்தரிப்பதால் ஒன்றும் கிழிந்துவிடப் போவதில்லை என்று தம் வேலையைப் பார்க்கத் திராணியற்றவர்கள். ஒரு சினிமா வந்துதான் சமுதாய மாற்றம் வந்துவிடப் போகின்றது என்றால், சினிமா பார்த்துத்தான் சமூகம் சீரழிந்துவிடப் போகிறதென்றால் இதுவரை வெளிவந்த இலட்சக்கணக்கான சினிமாக்களால் உலகம் மகத்தான அளவில் சீரடைந்திருக்கவேண்டும். அல்லது சீரமைக்கவே ஒண்ணாதளவில் சின்னாபின்னமாகியிருக்க வேண்டும். பத்தில் ஒன்றாகச் சும்மா வரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிக‌ள் உலகத் தரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர். அர்த்தமற்ற எதிர்ப்பே, அப்படி என்னதான் அதில் இருக்கின்றதென்று பார்ப்பதற்கு தூண்டச் செய்துள்ளது. தடையிட்டால் என்ன எங்காவது இணையத்தில் டௌவ்ண்லோட் செய்யலாமா, எவ்வளவு கொடுத்தாவது பிளக்கில் வாங்கலாமா என்று எல்லாரையும் பைத்தியம் பிடிக்கச் செய்திருக்கின்றனர் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

மேலைத்தேய நாடுகள் தங்களைத் தீவிரவாதிகளாகக் காண்பிக்கச் சதிகள் செய்வதாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சுயப் பிரச்சாரம் செய்து வருகின்ற சூழலில் சமீபத்தில் ரிஸானா றபீக் என்ற சிறுமிக்கு சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை உலகத்தின் மனசாட்சிக்குப் பேரிடியாக அமைந்திருந்தது.

1999 ஆம் ஆண்டு துருக்கிய அரசு குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவரான அப்துல்லா ஒச்சலானுக்கு மரணதண்டனை விதித்தது. மரண தண்டனை, மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் நீண்ட காலமாக உலகெங்கிலும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலானுக்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னரே அது குறித்த விவாதங்கள் உலகெங்கிலும் முனைப்புப் பெற்றன. ஐரோப்பிய யூனியனின் நெருக்குதல் காரணமாக 2001ஆம் ஆண்டு துருக்கிய அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக மரண தண்டனையை முற்றிலும் கைவிட்டது. சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான், குவைத், பர்மா போன்ற இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை மாற்ற முடியாத சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிகப் பலமான மதஅடிப்படையே இச்சட்டங்கள் நடைமுறையில் இருப்பதற்கான காரணங்களாகின்றன.

மரண தண்டனைக்கு எதிரான இயக்கமும் மனித உரிமைகள் சார்ந்த அக்கறைகளும், குரல்களும் முக்கியத்துவம் பெற்றுள்ள சமகாலத்தில் ரிஸானா றபீக் சிறுமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பல தளங்களில் விவாதிக்கப்பட வேண்டியதும், மனித உரிமைகளுக்கான அறைகூவல்களுக்கு பலமான பின்னடைவு என்பதும் ஏற்க வேண்டியவையே.

ரிஸானா றபீக்கிற்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்த கவலைகளை, அந்தச் செய்தி அளித்த ஏமாற்றங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலை சமீப காலங்களில் காணக்கூடியதாக இருந்தது. இஸ்லாமிய ஷரீஆ சரியா என்ற விவாதங்கள் எழுந்தன. இது மிக இயல்பானது, ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்புக்கு விவாதங்கள் கருத்தியல்கள் மிக இன்றியமையாததாகின்றது. இதன்போதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பொங்கி எழுந்தனர். றிஸானா றபீக்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியோ, பிழையோ யாரும் அது பற்றி மூச்சுவிடக்கூடாது, அது இஸ்லாமிய ஷரீஆ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களது வாதமாக இருந்தது. மேனியில் வடுக்கள் தெரியக்கூடிய ஈச்சம் பாயில்தான் முஹம்மது படுத்துறங்கினார்; ஒட்டகத்தில் பயணித்தார். ஷரீஆவை அப்படியே பிசகாமல் பின்பற்றுவதாக கூப்பாடு போடுகின்றவர்கள் ஈச்சம் பாயில் படுத்து ஒட்டகத்தில் பயணிக்கலாமே!

இஸ்லாத்திற்கு எதிரான கருத்தொன்று எழும்போது அதனை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாக, எதிர்கொள்வதற்கான பக்குவமற்றவர்களாகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தங்களை நிரூபித்து வருகின்றனர். இலங்கையில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளில் வாழும் முஸ்லிம் இயக்கத்தவர்கள் எதிர்த்தலில் ஒரே பொதுக்குறியைக் கொண்டவர்கள்தான். தமிழகத்தில் நக்கீரன் இதழில் றிஸானாவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை மிகக் கொடுமையானது என்று எழுதியதற்காக மனுஷ்யபுத்திரனுக்கு மிருகபுத்திரன் பட்டமளித்து அங்குள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தமிழக அரசியலில் முன்னிலையில் இருக்கும் கருணாநிதி, றிஸானாவின் மரணதண்டனையைக் கண்டித்தார் என்பதற்காக அவருக்கும் ஏச்சுப்பேச்சு. எதிர்கருத்தாளரை எப்படி எதிர்கொள்வதென்பதும், தனிமனிதனுக்கு இருக்கத்தக்க கருத்துச் சுதந்திரத்தையும், சமூகத்தில் தனிமனிதர்களுடைய வகிபாகத்தையும் இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மறுக்கின்றதையுமே இவை காட்டுகின்றன. ஈழத்திலும் இது தொடர்பான பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றன.

மிகத்தொன்மையான வரலாற்றைக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏதோ நேற்றுத் தோன்றிய மதம் என்பது போலும், தப்பபிப்பிராயங்கள் ஏற்படுத்தச் சதிகள் நடக்கின்றன என்பதாகவும் வரிந்து கொண்டு செயற்படுவது கேலிக்கூத்தாகி ஏனைய சமூகத்தவர்கள் முகம்சுளிக்கின்ற குரோதத்தை ஏற்படுத்துகின்ற நிலைக்கு வந்துள்ளது.

முரண்பாடுகளை இல்லாதொழிப்பதே ஜனநாயகத்தின் இலட்சியம். இஸ்லாம் என்பதே சமாதான வழி மார்க்கம். இஸ்லாத்தின் முன்மாதிரி முஹம்மது மன்னிப்பை நல்லிணக்கத்திற்கான ஆயுதமாகப் பயன்படுத்தியவர். இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நல்லிணக்கம் என்றால் எப்படி இருக்கும் என்று கேட்கின்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். ஏனைய சமூகங்களைப் பற்றிய எந்த அக்கறையும் அவர்களுக்கிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு மூடிய சமூகமாக, தொட்டாற்சிணுங்கி சமூகமாக, தொட்டதெற்கெல்லாம் கண்டனம், ஆர்பாட்டம், போஸ்டர் என கிளர்ந்தெழுகின்ற சமூகமாக நலிந்த சமூகமாக இஸ்லாமிய சமூகத்தை அடிப்படைவாதிகள் மாற்றி வருகின்றனர்.

பலநூறு பேரை கொத்து, கொத்தாக் கொன்று, கிராமங்கள் பலவற்றை அழித்து அட்டூழியம் புரிந்த 'சுமாமா' என்ற அராஜகனை முஹம்மது மன்னித்ததாக இஸ்லாமிய வரலாறு சொல்கிறது. சுமாமாவைத் துன்புறுத்தவோ குறைந்தபட்சம் திட்டவோ செய்யவில்லை என ஸஹீஹ_ல் புகாரி என்ற ஹதீஸ் கிரந்தம் கூறுகிறது. தன் இளைய தந்தையின் ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவையே மக்கா வெற்றியின்போது முஹம்மது மன்னித்தார் என்று இன்னொரு ஹதீஸ் கூறுகிறது. அக்கிரமங்களில் ஈடுபட்டவர்களை முஹம்மது மன்னித்தாரென்றால் றிஸானா றபீக் போன்ற அறியாச் சிறுமிகளை மன்னிக்க முடியாதா என்ன?

ரிஸானா 2005ஆம் ஆண்டு சவூதி அரேயியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற சிறுமி. நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்தாள் என்று 2007ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரசாங்கம் தீர்ப்பு வழங்கியது. 2013 ஜனவரி 09ஆந் திகதி சிறுமி றிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவூதி அரேபியாவினுடையது மதஅடிப்படைச் சட்டம் எனில் முஹம்மதின் முன்மாதிரியை கைவிட்டதை யாரும் விமர்சிக்கக்கூடாது என்கிறார்களா அடிப்படைவாதிகள்?

மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் றிஸானா றபீக் 5 ஆண்டுகள் சிறையில் இருந்தாள். அவளை விடுவிப்பதற்கு இஸ்லாமிய சமூகம் முயற்சி எடுத்ததா? மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்றுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி இஸ்லாமிய சமூகம் ஆராய்ந்ததா? பொருளாதாரத்தை ஈட்ட பெண்கள் நாடு கடந்து செல்கின்றளவு இருக்கின்ற சமூகத்தேவை குறித்தும், அது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எப்போதாவது அக்கறைப்பட்டுள்ளார்களா? பணிப்பெண்கள் என்ற பெயரில் அரபு நாடுகளில் பாலியல் அடிமைகளாகச் சிக்கிக் கிடக்கும் இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களை மீட்கவும், மறுவாழ்வளிக்கவும் அடிப்படைவாதிகளிடமுள்ள தீர்வுதான் என்ன? இஸ்லாமிய சமூகத்துக்குள்ளே புரையோடிக் கிடக்கின்ற சமூகக் கொடுமைகளுக்காக அக்கறைப்படாத அடிப்படைவாதிகள் யாராவது கருத்துக் கூறும்போது, எழுதும்போது, சினிமாவில் சித்தரிக்கும்போது மட்டும் இது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கச்சைகட்டிக் கொண்டு வந்துவிடுவது ஏன்?

இத்தகைய முரண்பாடான சூழ்நிலையினிடையே முஸ்லிம்கள் தீவிரவாதிகளைப் போன்று செயற்படுகின்றார்கள் என்று மேலைத்தேய நாடுகள் என்ன உள்நாட்டுக்குள்ளேயே குரல்கள் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லையே.

பல்லின சமூகத்திற்குள் வாழுகிறோம் என்பதையே பல தருணங்களில் மறந்துவிடுவதும், இன்றைய செயற்பாடுகள் எதிர்கால சந்ததிகளை எவ்வளவு தூரம் பாதிக்கக்கூடும் என்பது குறித்ததுமான விரிவான நோக்குகளும் சிந்தனைகளும் இல்லாமலேயே இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாதிக‌ள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் மேலும், மேலும் பாதிக்கப்படுவது இஸ்லாமிய சமூகம் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

நன்றி - கீற்று
...மேலும்

Dec 29, 2013

பெண்ணியம் பேசுகிறர்கள் அடித்தட்டுப் பெண்களைப் பற்றி அறியாதவர்களா?


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பெண்ணியம் சார்ந்த எழுத்துகள்,வாசிப்புகள், சொல்லாடல்கள் நிகழ்ச்சியில் எழுத்தாளர் இமையம் தன்னுடைய கட்டுரை வாசிப்பில் கீழே உள்ள கருத்தை சொல்லியிருந்தார். இமையம் கட்டுரையை முழுமையாக படிக்க…

நான் எழுதிய பெண்கள் என்ற கட்டுரையை எழுதுவதற்காக நான் எழுதிய பெண்களை சென்று பார்த்தேன். அதாவது அந்த கதைகளை படித்தேன். கதை எழுதுவதற்காக அல்ல. கட்டுரை எழுதுவதற்காக. கதை எழுதுவது வேறு. கட்டுரை எழுதுவது வேறு. ஒரு கட்டுரையாளனாக எனது பெண்களை பார்த்தபோதுதான் பல உண்மைகள் எனக்கே தெரிந்தது. என்னுடைய பெண்கள் அதிகம் படித்தவர்கள் அல்ல. பெண் உடல், பெண் அரசியல், உடல் அரசியல், பெண் மொழி, பெண் முன்னேற்றம், பெண் இருப்பு, பாலியல் சுதந்திரம் பேசுபவர்கள் அல்ல. ஆங்கிலம் படித்தவர்களோ, தத்துவ விசாரங்களில் ஈடுபடுபவர்களோ அல்ல. பெரிய அழகிகளும் அல்ல. சமூகம் சார்ந்து பேசக்கூடிய சிந்தனாவாதிகளோ, புரட்சிப்பெண்களோ அல்ல. ‘ஆணாதிக்கம் ஒழிக, பெண்மை வாழ்க‘ என்றோ ‘தாய்மையைத் தவிர்ப்போம் பெண்மையைக் காப்போம்‘ என்றோ கோஷமிடாதவர்கள். என்னுடைய பெண்கள் வாயாலும் வயிற்றாலும் உருவானவர்கள், அதே மாதிரி வாயாலும் வயிற்றாலும் வாழ்பவர்கள். வாழ்நாளெல்லாம் வாயையும் வயிற்றையும் நிரப்புவதற்காக போராடுபவர்கள். போராட்டத்தில் ஓயாமல் தோற்றுக்கொண்டே இருப்பவர்கள். என்னுடைய பெண்களுக்கு கனவுகள்கூட வருவதில்லை. மீறிவந்தாலும் வயிறு நிறைய சாப்பிட்டதுபோலவே கனவு காண்பவர்கள். காரணம் வயிறுதான் அவர்களுக்கு வாழ்க்கை. நமக்கும் அதுதான் வாழ்க்கை.

என்னுடைய பெண்கள் லட்சியப் பெண்களோ, புதுமைப் பெண்களோ அல்ல. சராசரிக்கும் கீழே உள்ளவர்கள். உயர்ந்த சாதி இல்லை. உயர்ந்த பண்புகள் இல்லை. சொத்து இல்லை. நகைகள் இல்லை. சமூக அந்தஸ்து இல்லை. அழகாகவும் இல்லை. குடும்ப பாதுகாப்பு, கணவன், குழந்தைகள் என்ற பாதுகாப்புக்கூட அற்றவர்கள். பெரும்பாலானவர்கள் விதவைகள். கிழவிகள், நாகரீகமற்ற கிராமத்துப் பெண்கள். இவர்கள் எப்படி கதையானார்கள், தமிழ் சமூகத்தின் அடையாளமானார்கள்? அதுவும் பெண்கள்? தமிழ்ச்சமூகம், இந்திய சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்கப் பண்புகளோ, அறப்பண்புகளோ இல்லாதவர்கள். சமூகத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும், ஏளனத்திற்கும் ஆளான பெண்கள். சமுகத்தின் இழிவு சின்னங்களாக இருக்கக்கூடியவர்கள் எப்படி தமிழ்சமூகம் மதிக்கும் கதையானார்கள்? தமிழ் வாழ்வின் மாதிரியானார்கள்? 

என்னுடைய பெண்கள் குடும்பப் பெண்கள் அல்ல. சிலப்பதிகாரத்தில் “பத்தினி பெண்டீர் அல்லோம்“ என்று மாதவிக்கு அவளுடைய தாய் சித்திராபதி கூறுவாள். அத்தகைய பெண்கள்தான் நான் எழுதிய பெண்கள். சமூகத்திற்காக சமூகம் உருவாக்கிய பெண்கள். அதாவது பொது சொத்து. சமூகத்திற்காக – சமூகத்தால் பலிகொடுக்கப்பட்ட பெண்கள். சமூகத்தின் உழைப்பிற்காகவும், சமூகத்தின் உல்லாசத்திற்காகவும், சமூகத்தின் நம்பிக்கைகளுக்காகவும் பலியிடப்பட்ட பெண்கள். இப்பெண்கள்தான் இன்று தமிழ்ச் சமூக வாழ்க்கையாக, தமிழின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக இருக்கிறார்கள்.
தமிழ்ச்சமூகம் வாழ்ந்ததற்கான சாட்சிகளையே நான் உருவாக்கி இருக்கிறேன். எது இலக்கியம், யார் எழுத்தாளன் என்பதை இந்த சமூக அசைவியக்க சாட்சிகள்தான் நிர்ணயிக்கிறார்கள். என்னுடைய பெண்கள் கேட்பது பணமல்ல, நகை அல்ல, பங்களா, கார், அதிகாரம், காமம் அல்ல. சோறு. அதைத்தான் சமூகம் தர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் இப்பெண்கள் போராடுகிறார்கள். 
நான் ஒரு பெண்ணின் கதையை எழுதவில்லை. ஒரு குடும்பத்தின் கதையை எழுதவில்லை. ஒரு பெண்ணின் கதையை, ஒரு குடும்பத்தின் கதையை எதற்காக எழுத வேண்டும்? யாரும் வாழாத வாழ்க்கையையா அவர்கள் வாழ்ந்தார்கள்? ஒரு மனிதனின் கதைக்கும், ஒரு குடும்பத்தின் கதைக்கும் வரலாற்றில் எந்த முக்கியத்துவமும் இல்லை. மாறாக ஒரு சமூகத்தின் கதையை எழுதவேண்டும். அதுதான் ஒரு இடத்தின் வாழ்வு – ஒரு காலத்தின் வாழ்வு. ஒரு கதையை ஏன் எழுதுகிறேன் என்றால் – ஒரு நிலவியலை பதிவு செய்வதற்காக – ஒரு குறிப்பிட்ட காலத்தில் – சமூகம் எப்படியிருந்தது – என்பதை சொல்லவே கதை எழுதுகிறேன். பாத்திரங்களை உருவாக்குவது என் வேலை அல்ல.

பெண்ணியம் பேசுபவர்கள் விளிம்புநிலைப் பெண்களின் வாழ்வியலை அறியாமல் இருக்கிறார்கள் என்பதையே தன்னுடைய கருத்தில் சொல்ல வந்திருக்கிறார் இமையம். இதற்காக தன்னை ஆணாதிக்கவாதி என்று சொன்னதும் பெண்ணியம் பேசும் பெண்கள் மீதான விமர்சனமும் பெண்ணிய எழுத்தாளர்கள் மத்தியில் அனலை கிளப்பியிருக்கிறது.

”விளிம்புநிலை பெண்கள் தங்கள் உழைப்பின் மூலம் தங்களுடைய உணவை தாங்களே தேடிக்கொள்வார்கள்” என்றீர்கள்..அப்புறம் ஏன் கட்டுரையை முடிக்கும்போது ”அந்த பெண்களுக்கு தேவையான ஒரு சொல் சோறு” என்று முடித்தீர்கள். அவர்களுக்கு தேவை  அதிகாரம். விளிம்புநிலை வாழ்வில் ஆண்களிடம் அடிவாங்கி உதைபட்டு சமூகத்தால் சீரழிக்கப்படும் பெண்கள் அப்படியே இருக்கவேண்டுமா? அதிகாரத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய உரிமையை மீட்டெடுத்துக்கொள்ளக்கூடாதா? என்று அதே அரங்கத்தில் கட்டுரை வாசித்த எழுத்தாளர் சந்திரா தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.

இதற்கு “நான் வாழ்க்கை முழுதும் விளிம்புநிலை பெண்களைப்பற்றிதான் பேசியிருக்கிறேன். இந்தச் சமூகம் அவர்களை எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதுதான் என் படைப்புகள். அப்படிச் சீரழிக்கும் சமூகத்தின் ஒரு அங்கம்தான் நான். காலங்காலமாக ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறேன். அதை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை நான் ஒரு ஆணாதிக்கவாதிதான்’’ என்று பதிலளித்திருக்கிறார் எழுத்தாளர் இமையம்.

இந்த நிலையில் எழுத்தாளர் சந்திரா தன்னுடைய கோபத்தை தன் முகபுத்தகத்தில் பதிவு செய்தார். அதற்கு எழுத்தாளர் அம்பை, எழுத்தாளர் மாலன், எழுத்தாளர் ஜமாலன், உமா சக்தி, தமயந்தி உள்ளிட்ட பலர் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள்.

“தான் ஒரு ஆணாதிக்கவாதி என்பதை ஒரு குறைபாடு என்றெண்ணாமல் எந்த ஒரு குற்றவுணர்வுமின்றி மேடையில் கர்வமாக முழக்கமிடும் இவர் மிகவும் ஆபத்தானவர் .நான் பெண்களை சரிசமமாக பாவிக்கிறேன் எனக் கூறி அத்துமீற நினைக்கும் கூட்டத்திற்கு சற்றும் சளைத்தவர் இல்லை இவரும் .பெரியார் சொன்ன எல்லாவற்றையும் பின்தொடர வேண்டும் என்ற அவசியமில்லை.அவர் அவர் கூந்தல் அவர் அவரவருக்கு விருப்பமான அளவு.உளவியல் ரீதியாக இப்படியான மனநிலை இருக்கும் ஆண்கள் ஒருவிதமான insecurity உள்ளவர்கள்.தன்  மீது நம்பிக்கை இருக்கும் ஆண் ,பெண்ணை தனைப் போலவே இன்னொரு உயிராகத் தான் பாவிப்பான்.’’ என்கிறார் சவீதா.

’’ஆணாதிக்க பக்கங்களின் கடைசி அத்யாயம் நம் தலைமுறையில். எந்தப் படிப்பை, என்ன வேலையை, கணவனை என்று பெண் சுய விருப்பத்தின் அடிப்படையில் more an individuals  ஆகிக் கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. முந்தைய தலைமுறை ஆண்களுக்கு இது மிகப் பெரிய வலி. கடைசி ஆயுதம் வரை பயன்படுத்தி   கொண்டிருப்பார்கள். அன்பாலும், அறிவாலும் செயல்திறனாலும், ஆணாதிக்க சூழ்ச்சிகளை வென்றெடுத்து பெண்மை போற்றுவோம்’’ என்கிறார் உமாசக்தி.

’’இமையத்தின் பேச்சை சில வருடங்களுக்கு முன் விருத்தாச்சலத்தில் ஒரு கூட்டத்தில் கேட்டிருக்கிறேன். “இவர்  தேவதையைப் போல் எழுதி விட்டு கிளியைப் போல் பேசுகிறார்” என ரேமண்ட் கார்வர் ஒருவரைக் குறிப்பிட்டதுதான் நினைவுக்கு வந்தது.. சில எழுத்தாளார்கள் படைப்புக்கு வெளியே தங்கள் சிந்தனைகளை தர்க்கமாக முன்வைக்கும் திறனை வளர்த்துக் கொள்ளாதவர்களாக இருப்பார்கள். இமையம் அப்படிப்பட்டவர் என நினைத்துக் கொண்டேன்’’ இளங்கோ கிருஷ்ணனின் கருத்து இது.

’’இமயத்தின் கட்டுரையில் ஆணாதிக்கமாவோ, பெண்ணியத்திற்கு எதிராகவோ ஏதுமில்லை. ஒரு படைப்பாளியின் சரியான சமூகப்பொறுப்பை, உணர்வை வெளிப்படுத்தி உள்ளார். உழைக்கும் பெண்கள் குறித்து இத்தகைய பதிவுகள் மிகவும் அவசியமானவை. பெண்களின் குறிப்பாக உழைக்கும் வர்க்க பெண்களின் பரிமாணத்தை மிகச்சரியாக இதில் எடுத்து வைத்து உள்ளார். புராணம், இதிகாசம் , இலக்கியம் என எல்லாம் பெண்குறித்து சித்தரிப்பதையும் அதிலிருந்து இப்பபெண்கள் எப்படி உருவமைக்கப்படுகிறார்கள் என்பதையும் விவரித்து உள்ளார். அருமையான கட்டுரை’’ என்கிறார் ஜமாலன்.

இந்த அனல் தெறிக்கும் கருத்துகளுக்கு நடுவே இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பேரராசிரியர் அ. ராமசாமி

“தன்னால் எழுதப் பெற்ற பெண்கள், தமிழ்ச் சமூகத்தின் எந்த அடுக்கிலிருந்து வந்தவர்கள்” என்பதைச் சொல்லும் கட்டுரையை மட்டும் வாசித்தால் போதாது என்பதை வலியுறுத்தியதோடு, தன்னுடைய ஒவ்வொரு புத்தகத்திலிருந்து ஆறு பிரதிகளையும், பாடத்திட்டத்திலிருக்கும் செடல் நாவலின் 33 பிரதிகளையும் தனது சொந்தச் செலவில் தனது பதிப்பாளரிடமிருந்து வாங்கி, இரண்டு நாட்களுக்கு முன்பே தபாலில் அனுப்பித் தந்து வாசிக்கக் கொடுத்துவிட்டு, ”என்னையும் எனது படைப்புகளையும் என்னைப் போன்ற ஆண்களையும் புரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்ன இமையத்தை ஆணாதிக்க எழுத்தாளர் என விமரிசிக்க உரிமையுள்ளவர்கள் அதனைச் செய்யலாம். அதைக் குறை சொல்லப் போவதில்லை. ”அப்படியொரு விமரிசனக் கட்டுரையை எழுதவே மாணாக்கர்களுக்காகக் கொண்டு வந்த பிரதிகளிலிருந்து ஆறு புத்தகங்களையும் எடுத்துப் போகிறார் சந்திரா “ என நினைத்து நானும் தடுக்கவில்லை. ’அதற்கெல்லாம் எனக்குப் பொறுமை கிடையாது’உடனடியாக எனக் காட்டியிருக்கிறார் அவர். ’ஆணாதிக்கத்தின் சாரமாகவே நான் இருக்கிறேன்; ஆனால் என்னால் எழுதப் பெற்ற கதைக்குள் இருக்கும் பெண்கள் என்னை விலக்கிவிட்டு அவர்கள் வாழ்க்கையை எழுதும் எழுத்தாளனாக ஆக்கி விடுகிறார்கள்’ எனச் சொன்ன அவரது பேச்சும் கட்டுரையும் மட்டுமே போதும் ’ என்று அவசரம் காட்டியிருக்கிறார். என்று தன் கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

’’இமயம் சொல்லிவிட்டார். பல ஆண்கள் (குறிப்பாக படைப்பாளிகளும் போராளிகளும்) சொல்ல முடியாமல் காலம் முழுக்க சுமக்க நேர்ந்த முகமூடியின் கனம் அழுத்த, மன உளைச்சலில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த கருத்தரங்கில் தன் மன பாரத்தை இறக்கி வைத்த இமையம் அவர்களுக்கு வாழ்த்துகள். இனி அவரது எழுத்தின் போக்கும் மாறுபடலாம். இமையத்தின் பேச்சில் எனக்கு ஆறுதல் அளிப்பது அவர் பெண்களுக்கு தேவை சோறு என்றார். கற்பு என்று சொல்லிவிடவில்லை. அதனால் ஏதோவொரு எதார்த்தத்தில் அவர் வாழ்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்புறம்…இதற்கெல்லாம் கோபப்படவோ சலிப்படையவோ கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் இமையம் ஓர் இந்திய ஆண்.  எதை ஊட்டி வளர்க்கப்பட்டாரோ அதுவாகவே அவர் இருக்கிறார். நாம் நம் நம்பிக்கைகளைத்தான் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டுமே தவிர அவர்களை நம்பவோ திட்டவோ கூடாது.  பாரு…இனிமேல் நானும் அப்படித்தான் என பலரும் மனம் திறந்த பேட்டித் தருவார்கள், வருத்தம் தோய்ந்த குரலோடு. எல்லா ஆண்களின் மூளைக்குள்ளும் ஆதிக்கப் பூனை மறைந்திருப்பது தெரிகிறது…அது வெளியே வரும் போது ஆத்திரமோ அதிர்ச்சியோ அடைவதில் அர்த்தமில்லை. அதற்கு பதில் சத்தமாக சிரித்துவிடலாம்.’’ என்கிறார் ஜெயராணி.

’’இமையத்தின் பேச்சு இதுதானென்றால், அது அதிர்ச்சியளிக்கிறது. அவரது பதிலை எதிர்பார்க்கிறேன். ஆனால் அவர் மேல் வைத்திருந்த நம்பிக்கைகள் இந்த நொடியில் தகர்ந்துவிட்டன. நாம் எல்லோரும் ஆணாதிக்க சமூகத்தில் பிறந்தவர்கள்தான். அது நம் கையில் இல்லை. ஆனால் அந்த சமூகத்தை அப்படியே ந்றுக் கொள்கிறோமா, அல்லது அதன் குறைபாடுகளை செயல்கள் மூலம், விமர்சனங்கள் மூலம் மாற்ற முயற்சிக்கிறோமா என்பதுதான் விஷ்யம். மாறாக அதன் பிரதிநிதி என்று பெருமை கொள்வது முதிர்ச்சியற்ற மனநிலை. நம் எழுத்தாளர்களுக்கு அத்தகைய மனநிலை ஏற்பட பிரார்த்திப்போம். அதுவரை அவர்களைப் புறக்கணிப்போம்’’ என்று காட்டம் காட்டியிருக்கிறார் மாலன்.
” இதிலுள்ள சோகம் சந்திராவைத் தவிர வேறு யாருக்குமே கோபம் வரவில்லை என்பதுதான். மற்ற ஆண்கள் மனத்திலிருப்பதையும் அவர் கூறிவிட்டார் போலும்! விளிம்பு நிலை பெண்களைக் குறித்து எழுதுவது ஒரு விஷயம். பெண்-வெறுப்பு வேறு விஷயம். 16 வயதுப் பெண் பிள்ளை பெற்றுக்கொண்டு சோறுக்காக உழைத்துக்கொண்டே இருந்தால்தானே இவர் கதை எழுத முடியும்?  இமயம் பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் வைத்திருந்தேன். ஏமாற்றமாக இருக்கிறது. பெண்களிடமே அடக்குமுறை இருக்கிறது, பெண்களே பெண்களை அடக்குகிறார்கள், இது பெண்ணியவாதிகளுக்குத் தெரியவில்லை என்று புலம்புபவர்களுக்கு இதெல்லாம் புரியாது. ஆண் வழி சமூகத்தின் மதிப்பீடுகள் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அந்த மதிப்பீடுகள் பெண்கள் ஆண்கள் இருவரையும் உருவாக்குகின்றன. அந்த மதிப்பீடுகளில் உள்ள லாபங்கள் இருவரையும் இயக்குகின்றன. பெண் தன்மை, ஆண் தன்மை என்று இருப்பதாக நம்ப வைக்கின்றன. இந்த சமூகம் இப்படி இருப்பதால் நான் ஆணாதிக்கவாதி; இதில் எனக்கு எந்த வித கூச்சமுமில்லை; பெண்ணியம் பேசுகிறர்கள் அடித்தட்டுப் பெண்களைப் பற்றி அறியாதவர்கள் என்று ஓர் எழுத்தாளர் கூறுவதை நேர்மையான confession என்று கூறுபவர்களை என்ன செய்ய முடியும்?” என்கிறார் எழுத்தாளர் அம்பை.

‘’லட்சக்கணக்கான தமிழகப் பெண்களை நுகர்வோராக கொண்ட சினிமாக்கள், மாதநாவல்கள், மெகாசீரியல்கள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அவை பெண்கள் குறித்து உருவாக்கும் பிம்பத்தை அறிந்திருக்கிறீர்களா? அவை வெகுஜன தளத்தில் இயங்குகின்ற விஷயங்கள். எங்களுக்கு தொடர்பில்லை. நாங்கள் இலக்கியத்திலும், அறிவுஜீவித்தளத்திலும் தேவையான வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் சொன்னீர்களேயானால், நிச்சயமாக இது விழலுக்கு இறைத்த நீர். இரண்டு கோடி பெண்களுக்கான களத்தை நீங்கள் இழந்திருக்கிறீர்கள் என்று பொருள்.

பெண்களுக்காக உருவாக்கப்படும் கலைவடிவங்களில் கூட ‘ஆணடிமைத்தனம்’ வெளிப்படுகிறது எனும்போது, அவற்றை கோடிக்கணக்கான பெண்கள் எவ்வித கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள் எனும்போது, ஆண்கள் ’அறியாமையால்’  (அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டதை அப்படியே பிராக்டிஸ் செய்வதால் – i am damn sure about this) ஏதாவது பிதற்றுவதற்கு போர்க்கோலம் பூணுவது வீண்தான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து! புலிகளை அடியுங்கள். எலிகளை விட்டுவிடுங்கள்.’’ என்கிறார் பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா.

விவாதம் வெவ்வேறு திசைகளில் திரும்பிக் கொண்டிருக்க இந்த விவாதங்கள் குறித்து தற்போது எந்த கருத்தையும் எழுத்தாளர் இமையம் பதிவு செய்யவில்லை.

எழுத்தாளர் இமையம் கோவேறு கழுதைகள், செடல், ஆறுமுகம்  போன்ற நாவல்களையும் பெத்தவன் என்ற குறுநாவலையும் மண்பாரம் , வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல் என்னும் மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார்.

நன்றி - http://fourladiesforum.com/
...மேலும்

Dec 28, 2013

கடற்காவல் தெய்வம் மணிமேகலை! நூல் ஓர் அறிமுகம் - அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி


சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்னும் வணிகன் மகளுக்கு மணிமேகலை என்பது பெயர். இந்த மணிமேகலையைப் பற்றித் ‘தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்’ என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம்.

இந்த மணிமேகலையைக் கதைத்தலைவியாகக் கொண்டு, அவளது வரலாற்றினைக் கூறும் சீத்தலைச்சாத்தனாரியற்றிய காப்பியத்துக்கும் ‘மணிமேகலை’ என்பது பெயர். இந்த நூலினைப்பற்றித் ‘தமிழ்ப்பௌத்த நூல்கள்’ என்னும் அதிகாரத்தில் கூறியிருக்கின்றோம். *

இங்கு ‘மணிமேகலை’ என்னும் கடல் தெய்வத்தைப் பற்றி ஆராய்வோம். இந்தத் தெய்வம் ‘சமுத்திர மணிமேகலை’ என்றும் கூறப்படும். ‘முது மணிமேகலை’ என்றும் கூறுவர். இது பௌத்தர்களுக்குரிய சிறு தெய்வங்களில் ஒன்று. இதன் வரலாறு வருமாறு :

பௌத்தர்களுக்குரிய ஆறு தெய்வலோகங்களுள் ‘மகாராஜிக லோகம்’ என்பது ஒன்று. இந்த உலகத்தின் குணதிசையைத் ‘திருதராட்டிரர்’ என்பவரும், குடதிசையை ‘விரூபாக்ஷர்’ என்பவரும், தென்றிசையை ‘விரூளாக்ஷர்’ என்பவரும், வடதிசையை ‘வைசிரணர்’ என்பவரும் ஆட்சி செய்துவருகின்றார்கள். இவர்களுக்குச் ‘சாதுர்மகாராஜிகர்’ என்பது பெயர். துடிதலோகத்தில் வீற்றிருக்கும் போதிசத்வர் மாயாதேவியின் திருவயிற்றில் கருத்தரித்து மண்ணுலகிற் பிறந்து வாழ்ந்து இறுதியில் நிர்வாணம் அடைகின்ற வரையில், அவருக்கு யாதொரு இடையூறும் நேரிடாவண்ணம் காப்பதாக மேற்சொன்ன நான்கு தெய்வ அரசர்களும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அன்றியும், பௌத்த தர்மத்தைப் பின்பற்றியொழுகும் நல்லோர்க்கும், பெற்றோர், ஆசிரியர் முதலியவரை வழிபட்டொழுகும் சீரியோர்க்கும் யாதேனும் இடையூறு நேரிடுமாயின், அவற்றினின்று அன்னவரைக் காப்பாற்றவும் இவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். இவ்வாறு கடமை ஏற்றுக்கொண்ட இவர்கள் மண்ணுலகில் ஆங்காங்கே சிறுதெய்வங்களை இருக்கச்செய்து, நல்லோருக்கு நேரிடும் துன்பத்தைத் தீர்க்கும்படி அச்சிறு தெய்வங்களுக்குக் கட்டளையிட்டார்கள். இவ்வாறு இருத்தப்பட்ட தெய்வங்களில் மணிமேகலையும் ஒன்று. கடலில் கப்பல் யாத்திரை செய்யும் நல்லோருக்கு இடுக்கண் நேரிடுமாயின், அன்னவரின் துயர்தீர்த்து உதவி செய்வது மணிமேகலைத் தெய்வத்தின் பொறுப்பு வாய்ந்த கடமையாகும்.

இவ்வாறு பொறுப்பேற்றுக்கொண்ட மணிமேகலை, தனது கடமையைச் செய்துவருவதாகப் பௌத்தர்கள் கருதுகின்றார்கள். நடுக்கடலில் கப்பல் உடைந்து நீரில் மூழ்கி இறக்குந் தருவாயிலிருந்த நல்லோரை இந்தத் தெய்வம் காப்பாற்றிய செய்திகள் பௌத்த நூல்களில் கூறப்பட்டுள்ளன. மிகப் பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகளில் இரண்டு இடங்களில் இத்தெய்வத்தைப்பற்றிய வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அவற்றின் சுருக்கமான வரலாற்றினைக் கீழே தருகின்றோம் :

சங்கஜாதகம் : ‘மோலினி’ என்னும் பெயருடைய காசிமாநகரத்தில், சங்கன் என்னும் அந்தணன் செல்வத்திற் சிறந்தவன். இவன் காசி நகரத்தின் நான்கு கோட்டை வாயிலிலும், நகரத்தின் நடுவிலும், தனது இல்லத்திலும் ஆக ஆறு அறச்சாலைகள் அமைத்து, நாள்தோறும் அறவினையை முட்டின்றிச் செய்துவந்தான். ஒருநாள், இவன், ‘குன்றத்தனை செல்வமும் ஒரு காலத்தில் குன்றும். அக்காலத்து அறம் செய்யப் பொருள் முட்டுப்படுவதற்கு முன்னரே யான் மேன்மேலும் பொருள் ஈட்டுவேன்’ என்று சிந்தித்துத் தேர்ந்து, மனைவியை அழைத்து அவளுக்குத் தன் கருத்தைத் தெரிவித்து, ‘யான் திரும்பிவருமளவும் நான் செய்துவரும் இவ்வறச்சாலைகளைச் செவ்வனே நடத்திக் கொண்டிரு’ என்று கட்டளையிட்டு, ‘சொர்ணபூமி’ என்னும் பர்மா தேசத்திற்குச் செல்லப் புறப்பட்டான். ஏவலாளர் தன் பின்னர் வர, இவன் காலில் செருப்பணிந்து, குடைப்பிடித்துச் செல்லும்போது, நண்பகல் ஆயிற்று. அப்போது கந்தமானத மலையில் வீற்றிருந்த பாச்சகபுத்தர் என்னும் போதிசத்வர் இந்தச் சங்கன் என்னும் அந்தணன் போவதையறிந்து, ஒரு மனிதனாக உருக்கொண்டு, அனல் வீசும் மணல்வழியே செருப்பும் குடையுமின்றி இவன் எதிரில் தோன்றினார். ஓர் ஆள் வெயிலில் வாட்டமுற்று வருந்திவருவதைக் கண்ட சங்கன், அந்த வழிப்போக்கனை அருகில் அழைத்து, ஒருமரநிழலில் அமரச்செய்து, காலை நீர்கொண்டு கழுவி, தான் அணிந்திருந்த செருப்பைத் துடைத்து எண்ணெயிட்டு அவருக்குக் கொடுத்ததுமன்றி, தன் குடையினையும் கொடுத்துதவினான். இவற்றைப் பெற்றுக்கொண்ட அந்த ஆள் தமது உண்மை உருவத்தோடு வானத்தில் பறந்து தம் இருப்பிடம் சேர்ந்தார்.

பிறகு சங்கன் துறைமுகம் அடைந்து, கப்பலேறிக் கடல் யாத்திரை புறப்பட்டான். கப்பல் கடலில் ஏழு நாட்கள் சென்றன. ஏழு நாட்களுக்குப் பின்னர், புயலடித்துக் கப்பல் பாறைமேல் மோதி உடைந்துவிட, பிரயாணிகள் மூழ்கி இறந்தனர். சங்கனும் அவனது வேலையாள் ஒருவனும் உயிருடன் கடலைக் கையினால் நீந்திக்கொண்டிருந்தனர். ஏழுநாள் வரையில் இவர்கள் நீந்திக்கொண்டிருந்தனர். அப்போது கடற்றெய்வமாகிய மணிமேகலை அங்கு வந்து சங்கன் கண்களுக்குமட்டும் தோன்றி, தங்கத்தட்டில் அமிர்தம் போன்ற அறுசுவை உணவை அவனுக்குக் கொடுத்தது. அதனைச் சங்கன் மறுத்து, ‘இன்று உபவாச நாள், ஆகையால் இன்று நான் உணவு உட்கொள்ளேன்’ என்றான். சங்கன் தனக்குள் ஏதோ உளறுகிறான் என்று அவனுடன் நீந்திக்கொண்டிருந்த வேலையாள் கருதி, ‘ஐயா, என்ன பிதற்றுகின்றீர்?’ என்றான். சங்கன், ‘நான் பிதற்றவில்லை; என் கண்முன் நிற்கும் பெண்முன் பேசுகிறேன்’ என்றான். ஏவலாளன், ‘அங்ஙனமாயின், அவள் மண்ணுலக மங்கையா, தெய்வலோக தெய்வமா என்பதைக் கேளும். அன்றியும், இப்போது இந்தத் துன்பத்தினின்றும் காப்பாற்ற உதவி செய்யமுடியுமா என்றும் கேளும்’ என்றான். சங்கன் மணிமேகலையை இக்கேள்விகளைக் கேட்க, அவள், ‘நான் இக்கடலில் வாழ்கின்ற தெய்வம். நீ செய்த நற்செயலுக்காக உன்னைக் காப்பாற்றவேண்டுவது எனது கடமையாதலால், நான் இவ்விடம் வந்தேன். நீ இப்போது எங்குச் செல்ல விரும்புகின்றாய்?’ என்று கேட்க, அவன், ‘எனது காசிமாநகரம் செல்லவேண்டும்’ என்று சொன்னான். உடனே மணிமேகலை தனது தெய்வ ஆற்றலினால் பெரிய கப்பல் ஒன்றனைச் செய்தது. அது நிறைய விலையுயர்ந்த பண்டங்களை அமைத்துச் சங்கனையும் அவனது ஏவலாளையும் அதில் ஏற்றி, தானே கப்பலைச் செலுத்திக் காசிமாநகரம் கொண்டுபோய்விட்டது.

‘மகாஜனக ஜாதகம்’ என்னும் கதையிலும் இந்தத் தெய்வம் உதவி செய்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் பின் வருவது :

மிதிலை தேசத்து அரசன் ஜனகன் என்பவனுக்கு அரிட்டஜனகன், பொலஜனகன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பன் இறந்த பின்னர், மூத்தவனான அரிட்டஜனகன் அரசனானான். இப்போது இளையவனான பொலஜனகன் தமையன்மேல் பகைகொண்டு, படைதிரட்டிவந்து சண்டைசெய்தான். சண்டையில் அரிட்டஜனகன் இறக்க, அவன் தம்பி அரசனானான். இறந்த அரிட்டஜனகனின் மனைவி, அப்போது வயிறு வாய்த்திருந்தவள், பெருஞ் செல்வத்தை எடுத்துக்கொண்டு, ஒருவருமறியாமல் சண்பை நகரம் சென்று, அங்கு ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அக்குழந்தைக்கு மகாஜனகன் என்று பெயர் இடப்பட்டது. குழந்தையாகிய மகாஜனகன் பெரியவனாக வளர்ந்த பிறகு, தனது சிற்றப்பன் தனது நாட்டைக் கவர்ந்து ஆள்கிறான் என்பதறிந்து, தன் நாட்டை மீட்கக் கருதி, அதன்பொருட்டுச் செல்வம் தேட உறுதி கொண்டான். இக்கருத்தைத் தன் தாய்க்குத் தெரிவித்து, அவள் உத்தரவு பெற்றுக் கப்பல் ஏறிச் சுவர்ணபூமிக்குப் புறப்பட்டான். இடைவழியில் நடுக்கடலில் புயலடித்துக் கப்பல் உடைந்துவிட, மற்றவர் மூழ்கி இறந்தனர். மகாஜனகன் முயற்சியை விடாமல் கையினால் கடலை நீந்திக் கொண்டிருந்தான். ஏழாம் நாள், மணிமேகலை அவன் முன் தோன்றி, ‘இப்பெரிய கடலைக் கையினால் நீந்திக் கடக்க முடியுமா?’ என்று கேட்க, ‘கரை சேர்வது கூடுமா கூடாதா என்பதைப்பற்றிக் கவலையில்லை; ஆனால், முயற்சி செய்யவேண்டுவது என் கடமையல்லவா’ என்று விடையிறுத்தான். இவனது ஊக்கத்தை மெச்சிய மணிமேகலை, இவன் செய்துள்ள நற்கருமங்களுக்காக இவனது இடுக்கண்ணைத் தீர்க்கக் கருதி, தான் யார் என்பதை அவனுக்குத் தெரிவித்து, அவன் போக நினைத்த இடம் யாது எனக் கேட்டது. மகாஜனகன் தான் மிதிலை நகரஞ்செல்ல விரும்புவதாகச் சொல்ல, மணிமேகலை, தாய் குழந்தையைத் தூக்குவது போல, அவனை இருகைகளாலும் தூக்கிக் கொண்டு வானத்தில் எழுந்து பறந்து சென்று, மிதிலை நகரத்து மாஞ்சோலையில் விட்டுவிட்டுச் சென்றது.

இதற்குள் மிதிலை நகரத்தை ஆண்ட பொலஜனகன் இறந்துவிட, அவனது ஒரே மகளாகிய ‘சீவாலீதேவி’ என்பவளை மகாஜனகன் மணந்துகொண்டு அரசனானான். அவளை மணப்பதற்குமுன், ஆயிரம் வீரராலும் வளைக்க முடியாத வில்லை வளைத்தல் முதலியவற்றைச் செய்தான். பிறகு இவன் தன் பிள்ளைக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்றான்.

பௌத்தக் கதைகள் அடங்கிய இரசவாகினி என்னும் நூலிலும், பலக கண்ட தின்னஸ்ஸ வத்து என்னும் தூண்டுப்பலகை கொடுத்தவன் கதையில், மணிமேகலை கடலில் ஒருவனைக் காப்பாற்றிய செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் சுருக்கம் இது :

வரட்சி மிக்க வேனிற் காலத்தில், தென்னாட்டினின்றும் வட நாட்டிற்கு யாத்திரை சென்ற ஒருவன், நீர் வேட்கைகொண்டு, எங்கும் நீர் கிடையாமல் வருந்தி, ஒரு மரநிழலில் அமர்ந்து, தன்னிடமிருந்த இரண்டு வெற்றிலைகளையாவது மென்று சாற்றினை விழுங்கி, வேட்கை தீர்க்கலாம் என்று எண்ணினான். அவ்வமயம், அவனைப் போலவே வட நாட்டினின்று தென்னாட்டிற்கு யாத்திரைவரும் ஒருவன், நீர் வேட்கை மிக்கவனாய், பருக நீர் கிடையாமல் வருந்தி, அதே மரத்தடியில் வந்து அமர்ந்தான். வந்தவன் முன்னவனைப் பார்த்து, ‘ஐயா, எனது நீர் வேட்கை தீர ஒரு வெற்றிலையையாவது கொடும்’ என்று இரந்து வேண்டினான். அதற்கு அவன், ‘எனக்கும் நீர் வேட்கை மிகுதியாயிருக்கின்றது. என்னிடமுள்ளது இந்த இரண்டு வெற்றிலைகளே ; ஒன்றை உமக்குக் கொடுத்துவிட்டு யான் என் செய்வது?’ என்று சொல்லி மறுத்தான். பின்னவன், ‘என்னிடம் காசு இருக்கிறது, தருகிறேன், ஒரு வெற்றிலை தாரும்’ என்று கேட்க, அதற்கும் அவன் மறுத்தான். பின்னர், பெருந்தொகை கொடுப்பதாகச் சொன்னபோது, அவன் அப்பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு வெற்றிலையைக் கொடுத்தான். இருவரும் ஒவ்வொரு வெற்றிலையை மென்று ஒருவாறு நீர்வேட்கையைத் தீர்த்துக்கொண்டனர்.

பின்னர், இருவரும் புறப்பட்டு வெவ்வேறு வழியே சென்று, கடைசியாக ஒரு துறைமுகத்தை அடைந்து, மரக்கலம் ஏறிக் கப்பல் யாத்திரை புறப்பட்டனர். ஆனால் அக்கப்பலில் இருவரும் ஒருங்கே யாத்திரை செய்வது அவர்களுக்குத் தெரியாது. சிலநாள் சென்றபின், நடுக்கடலில் புயல் அடிக்க, மரக்கலம் உடைந்துவிட்டது. கப்பல் யாத்திரிகரில் சிலர் மூழ்கி இறந்தனர்; சிலர் தம் உயிரைக் காக்கக் கடலில் நீந்திக்கொண்டிருந்தனர். அவ்வாறு நீந்தியவர்களில் வெற்றிலையைப் பெரும்பொருள் கொடுத்து வாங்கியவன் ஒரு மரப்பலகையைப் பற்றிக்கொண்டு அதன் உதவியினால் நீந்திக்கொண்டிருந்தான். வெற்றிலையை விற்றவனோ யாதொரு பற்றுக்கோடுமின்றி அப்பெருங் கடலினைத் தன் வெறுங்கைகளால் நீந்தித் தவித்துக்கொண்டிருந்தான். அப்போது பலகையுள்ளவன் அவனைக்கண்டு, பெருந்தொகை பெற்றுக்கொண்ட போதிலும், தக்க நேரத்தில் ஒரு வெற்றிலையையாவது கொடுத்து உதவி செய்த அவனது நன்றியை நினைவு கூர்ந்து, தன்னிடமிருந்த ஒரே மரப்பலகையை அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வெறுங்கைகளால் நீந்தத் தொடங்கினான்.

அப்போது மணிமேகலை இவனது இரக்கமுள்ள மனப்பான்மையினையும், தன்னல மற்ற உதவியையுங் கண்டு மெச்சி, இத்தகைய நன்மகனைக் காப்பாற்றவேண்டுவது தனது நீங்காக் கடமை எனக் கண்டு, அவன்மீது அருள் கூர்ந்து, அவன் கண்களுக்குத் தோன்றாமலே அவனை ஒரு கரையிற் கொண்டுபோய் விட்டது. பின்னர், நெடு நேரஞ் சென்று, தனக்குக் கிடைத்த மரப்பலகையின் உதவியினால் மற்றவன் கடலை நீந்நி அதே கரையையடைந்தான். அடைந்தவன், தனக்கு முன்னே தனது நண்பன் வந்திருப்பதைக் கண்டு வியப்புற்று, ‘ஐயா, வெறுங்கையினால் இப்பெரும் கடலை நீந்தி எனக்கு முன்னரே எவ்வாறு வந்தீர்? பலகையுள்ள எனக்குக் கரைசேர இவ்வளவு நேரம் சென்றதே! கையினால் கடலை நீந்தியதோடு, களைப்பின்றியும் காணப்படுகின்றீரே!’ என்று வினாவினான். அதற்கு மற்றவன், ‘நான் இங்கு வந்த விதம் எனக்குத் தெரியாது’ என்று சொன்னான். அப்போது, அதுவரையில் அவர் கண்களுக்குப் புலப்படாதிருந்த மணிமேகலா தெய்வம் அவர் கண் முன்னர் தோன்றி, ‘நானே உன்னை இங்குக் கொண்டு வந்தேன். பெற்றோரைப் பேணி ஒழுகுகின்றவர்களையும், புத்த தர்ம சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணடைந்து ஒழுகுகின்றவர்களையும், பஞ்சசீலம், அஷ்டாங்க சீலம், பிரதிமோக்ஷ சம்வரசீலம் என்னும் சீலங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களையும், மெய் மொழி மனங்களால் பிறருக்கு நன்மை செய்கின்றவர்களையும், செய்ந்நன்றி அறிந்து உதவி செய்கின்றவர்களையும் துன்பத்திலிருந்து தேவர்கள் காப்பாற்றுவார்கள்’ என்று சொல்லிற்று.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்களில் பலகை கொடுத்துதவியவன், ‘தாங்கள் சொல்லிய தர்மங்களில் ஒன்றையேனும் நான் செய்தவனல்லவே. அப்படியிருக்க, என்னைக் கடலினின்றுங் காப்பாற்றிய வகை என்ன?’ என்று வியப்புடன் வினாவினான். அதற்கு அத்தெய்வம், ‘உனக்கு ஒரு வெற்றிலை கொடுத்து உதவிய நன்றியை நினைத்து, நடுக்கடலில் உன் உயிரையும் பாராமல் மற்றவனுக்கு உன் பலகையைக் கொடுத்து உதவினாய். இந்த நன்றியறிதல் என்னும் உனது நற்குணத்துக்காக உன்னை நான் காப்பாற்றினேன்’ என்று சொல்லி, அக்கடற்றெய்வம் மறைந்துவிட்டது.

கம்போடியா தேசத்திலும், சீயாம் தேசத்திலும் மணிமேகலையைப்பற்றிய கதைகள் வழங்குகின்றனவென்று திரு. சில்வன் லீவி என்னும் ஆசிரியர் (The Indian Historical Quarterly, Vol. VII, Page 371.) எழுதியிருக்கின்றார். அதன் சுருக்கம் இதுவாகும் :-

கம்போடியா தேசத்து இராமாயணத்தில் கீழ்க்கண்ட பகுதி காணப்படுகின்றது : தேவர்களும் தெய்வமகளிரும் ஒரு அரங்கத்தில் கூடி நடனம் செய்கிற வழக்கப்படி, மேற்படி அரங்கத்தில் ஒரு நாள் தேவர்கள் கூடியிருந்தார்கள். அக்கூட்டத்தில் கலந்துகொள்ள மணிமேகலா தெய்வம் தனது ஒளிவீசும் அணிகளை அணிந்து, கையில் மாணிக்கக் கல் ஒன்றனை எடுத்துக்கொண்டு சென்றது. செல்லும் வழியில் ‘ராமசூரன்’, அல்லது ‘ராம பரசு’ என்னும் பெயருள்ள அசுரன் அவள் கையில் உள்ள ஒளிவீசும் மாணிக்கக் கல்லைப் பிடுங்கிக்கொள்ள விரும்பி அவளைத் தொடர்ந்தான். அதனை அறிந்த மணிமேகலை மேகத்தில் மறைந்தொளிந்தாள். அசுரன் அங்கும் அவளைத் தொடர, அவள் தன் கையிலிருந்த மாணிக்க நகையை அவன் கண்முன் காட்ட, அதன் ஒளியினால் கண் கூசி, அவ்வரக்கன் திகைத்து நின்றான். அப்போது மணிமேகலை அவனிடமிருந்து தப்பி ஓடினாள். அவ்வமயம் தெய்வங்களின் அரங்கத்திற்குச் செல்லுவதற்காகப் போய்க்கொண்டிருந்த வீர மிக்க ‘வர்ஜூன்’ என்னும் தேவன், ராமபரசு என்னும் அசுரன் மணிமேகலையைத் துரத்துவது கண்டு, அவ்விடம் வர, அவனுக்கும் ராமசூரனுக்கும் பெரும் போர் நடந்தது. கடைசியில், வர்ஜூன் என்பவனை ராமசூரன் தன் பரசு என்னும் ஆயுதத்தினால் கொன்று வென்றான். இந்தக் கதை கம்போடியா தேசத்து அரண்மனையில் நாடகமாக நடிக்கப்பட்டுவருகின்றது.

சீயாம் தேசத்து இராமாயணத்திலும் இதே கதை கூறப்பட்டிருக்கின்றது. கி. பி. 1783 முதல் 1806 வரையில் அரசாண்ட சீயாம் தேசத்து அரசன், ‘முதலாவது ராமன்’ என்பவன் காலத்தில், இந்த இராமாயணம் எழுதப்பட்டது. இதுவும் கம்போடியா தேசத்து இராமாயணம் போன்றதே. இதில் காணப்படும் சிறு மாறுபாடு என்னவென்றால், ‘வர்ஜூன்’ என்னும் தேவன் பெயர் ‘அர்ஜூனன்’ என்று காணப்படுவதுதான். மேற்படி கம்போடியா, சீயாம் தேசத்துக் கதைகளும் மணிமேகலை சமுத்திரத்தில் வாழ்வதாகவும், அது கடற்றெய்வம் என்பதாகவும் கூறுகின்றன.

‘ச-கேச-தாது வம்சம்’ என்னும் (Cha-Kesa-Dhatuvamsa) பிற்காலத்துப் பாளிமொழிப் பௌத்த நூலில், புத்தர் தமது ஆறு சீடர்களுக்கு ஆறு உரோம தாது கொடுத்ததாகவும், அவர்கள் அவற்றைக் கொண்டு தென்னாட்டிற்கு வந்தபோது, கடலால் சூழப்பட்ட ஒரு அசோக வனத்துக்கு வந்ததாகவும், அப்போது அந்தத் தாதுவை வைக்கத் தூபி கட்டுவோரைக் காணாமல் அச்சீடர்கள் வருந்த புத்தர் கட்டளையினால் மணிமேகலா தெய்வம் அவர்களுக்குத் தோன்றி, ஒரு தூபியைக் கட்டியதாகவும் காணலாம். (‘மணிமேகலைப்பாசாத’ என்னும் பெயருள்ள பௌத்தப்பள்ளி ஒன்று இலங்கையில் இருந்ததென்பதும், அதனை ‘இரண்டாவது சேனன்’ என்னும் அரசன் பிற்காலத்தில் பழுது பார்த்துப் புதுப்பித்தான் என்பதும் தெரிகின்றன. இந்தப் பள்ளி மணிமேகலை கட்டியதாகக் கூறப்படும் தூபி அன்றென்பது உறுதி.)

இலங்கையில் சிங்களவர் வழங்கும் கதை சிலவற்றிலும் மணிமேகலையைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் இங்கு எழுதவேண்டுவதில்லை. ஆனால், அக்கதைகள் ஒன்றில் தமிழருக்கு வியப்பைத் தருவன எவையென்றால், ‘பாலங்கா’ என்பவன் தன் மனைவி ‘பத்தினி’ என்பவளுடன் மதுரைக்குச் செல்லும் வழியில், ‘வைத’ என்னும் ஆறு குறுக்கிட்டதால், பத்தினி தன் விரலில் அணிந்திருந்த ஆழியைக் கழற்றி ஆற்றில் எறிய, அந்த ஆற்றுநீர் விலகி இவர்களுக்கு வழிவிட்டது என்பதும், அக்கரையையடைந்த பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து ஆற்றில் எறியப்பட்ட மோதிரத்தை எடுத்துப் பத்தினியிடம் கொடுத்தது என்பதுவுமே. இங்கே பாலங்கா என்பவன் கோவலன், பத்தினி என்பவள் கண்ணகி, வைத, என்பது வைகை ஆறு.

மணிமேகலைத் தெய்வத்தின் உருவப்படம் சீயாம் (Siam) நாட்டில் இருக்கின்றது. _____________________________________________________________________

* இலங்கையில் உள்ள ‘மகாவலி கங்கை’ என்னும் ஆற்றில் ‘மணிமேகலை’ என்னும் பெயருடைய அணைக்கட்டு ஒன்று உண்டு. இந்த அணைக்கட்டினை இலங்கையை ஆண்ட முதலாவது ‘அக்கபோதி’ என்னும் அரசன் கட்டினான். பிற்காலத்தில் இந்த அணைக்கட்டினை ‘இரண்டாவது சேனன்’ என்னும் அரசன் பழுது தீர்த்துப் புதுப்பித்தான்.

இலங்கையில், ‘மணிமேகலை’ என்னும் பெயருடன் ஓர் ஊரை ‘மாகன்’ என்னும் அரசனுடைய சேனைத்தலைவன் உண்டாக்கினான் என்பதும் தெரிகின்றது.

அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய பெளத்தமும் தமிழும் நூலின் அத்தியாயங்கள் பகுதி கட்டுரைகளாக பிரசுரிக்கப்படுகின்றன.

நன்றி - http://fourladiesforum.com
...மேலும்

Dec 27, 2013

இறுதிப் போரும் மேரிகளின் கதையும் - ஷர்மிளா செய்யித்


மேரி 16 வயதுச் சிறுமி. மன்னார், விடத்தல்தீவில் அம்மாவுடன் வசிக்கிறாள். இளைஞர் அணி ஒன்றில் உறுப்பினராகவும் இயங்குகிறாள். இளைஞர் அணியில் இந்தச் சிறுமிக்கு என்ன வேலை என்று கேட்பதைத் தவிர்க்க முடியாதிருந்தது. 12 வயதுச் சிறுமிகள்கூட இளைஞர் அணியில் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறினாள் மேரி. அவளுக்கு ஊரைப் பற்றிய விபரங்கள் முழுதும் தெரிந்திருந்தன. தனது சிறுபிராயம் முதற்கொண்டு நினைவு அடுக்குகளை மிக அழகாகவும் எளிமையாகவும் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்தாள் மேரி. முன்னர் அவளது கிராமம் எப்படிச் செழிப்போடும் இயல்போடும் இருந்ததென்று அவள் விபரிப்பதை நான் முழுமையாகக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.

பெரிய வீட்டு எச்சங்கள்

தனது வீடு, நடுவில் நிலாமுற்றத்துடன் ஐந்து அறைகள் மண்டபம்போன்ற சமையல் அறையுடன் பெரிதாக இருந்ததையும் வீட்டு முற்றத்தில் செம்பருத்தி, மல்லிகைச் செடிகளும் பூமரங்களும் செழித்து நிரம்பி யிருந்ததையும் நினைவுகூர்ந்தாள். பூவரசு மரத்தின் இதய வடிவ இலைகளும் ஸ்பீக்கர் வடிவப் பூக்களும் அவளுக்குப் பிடிக்கும். இந்த மரங்களில் இருந்து மலர்கள் புரண்டு வாசனையை அள்ளிவருகின்ற இதமான காற்றை உலகத்தில் எங்குமே அனுபவிக்க முடியாதென்றாள்.

மேரி ஒரு காலத்தில் பெரிய வீட்டில் வசித்தாள் என்பதற்கான தடயங்கள் மட்டுமே இப்போது எஞ்சியிருந்தன. உடைந்து பெயர்ந்த சுவர்களில் மரக்கால்களை நட்டுத் தகரக் கூரை வேய்ந்திருந்தார்கள். அப்போது மழைக் காலமாக இருந்தபடியால் தகரக்கூரையின் கீழ் இருப்பதன் அவதியை உணர முடியாதிருந்தது. மேரியின் வீட்டைப் போன்றுதான் அங்கு எல்லா வீடுகளும் வெறும் தடயங்களாக மட்டும் காட்சிதந்தன. போரின் தாக்கத்திலிருந்து தப்பிய ஒரு வீட்டைத்தானும் அங்கு காண முடியாது.

வீட்டின் எதிர்முனை ராணுவ முகாம். அடிக்கடி கவனத்தில் தோன்றி இயல் பாக இருக்க விடாது அலைக்கழித்தது. ஏனைய கிராமங்களை விடவும் ராணுவ நடமாட்டம் இங்கு அதிகம் காணப் பட்டது. விடத்தல்தீவு முற்றிலும் புலிகள் வசமாகவும் புலிகளினு டையது என்றுமே அறியப்பட்டதென்பதால், இங்கிருக்கிறவர்களைப் புலிகளாகக் கருதியே ராணுவம் கண்காணிப்புச் செய்கிறது. மக்கள் ராணுவக் கட்டுப்பாட்டிலான வாழ்வுக்குப் பழகிவிட்டிருந்தார்கள்.

புலி வாழ்க்கை

மேரியின் வீட்டின் அரைச் சுவரில் இயேசு படம் மாட்டப்பட்டிருந்தது. உருகும் மெழுகுத் திரிக்கு இரு பக்கமாக இரு ஆண்களின் படங்கள். ஒன்று, கருப்பு வெள்ளைப் படம். மற்றையது, நீல நிறப் பின்னணியில் வெள்ளைச் சட்டை அணிந்த அரைப் படம். அவர்கள் மேரியின் அண்ணன்கள். இருவருமே புலிகள் அமைப்பில் போராடி மரித்தவர்கள்.

“இரண்டு ஆண் பிள்ளைகளைப் பெற்று, இரண்டையும் பலிகொடுத்திருக்கிறேன். மகளும் நானும் யார் உதவியும் இல்லாமல் நிற்கிறோம். புலிகள் மனது வைத்திருந்தால் எங்களுக்கு அப்போதே உதவிசெய்திருக்கலாம். இறுதிப் போருக்கு முன்பாகவே என் மக்கள் இறந்துபோனார்கள்’’ மேரியின் தாய் தனது கோபத்தையும் ஆற் றாமையையும் வெளிப்படுத்தத் துவங்கினார்.

மூத்த மகன் விருப்பத்துடனேயே புலிகளோடு இணைந்துவிட்டிருந்தான். அவன் வீரமரணமடைந்த பின்னர், இரண்டாமவனைப் புலிகள் பலவந்தமாகவே சேர்த்துக்கொண்டுள்ளனர். அப்படிச் சேர்த்துக்கொள்ளப்பட்டவன், சேர்ந்த ஒரு மாதத்துக்குள் இறந்துவிட்டதாகப் புலிகளிடமிருந்து அறிவித்தல் வரப் பெற்றதாக, சுவரில் மாட்டியிருக்கும் அவனது படத்தைப் பார்த்துக்கொண்டே கண்ணீர் வடிக்கிறார் மேரியின் தாய். அவன் இருந்திருந்தால், தனக்கும் மகளுக்கும் துணையாக இருந்திருப்பான் என்பதைத் திரும்பத் திரும்பக் கூறித் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார். மூத்தவன் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இருந்து நேரடி யாகச் சண்டைகளில் பங்கேற்றவன். பல முறை தாய் தங்கையைப் பார்ப்பதற்காக விடத்தல்தீவுக்கு வந்து சென்றிருக்கிறான். ஆனால், இரண்டாமவனுக்கு என்ன நடந்தது? எங்கு இருந்தான்? எப்படி இறந்தான் என்ற எந்த விபரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. இது தார்மீகக் கோபமாக அவர்களிடையே மாறியிருந்தது.

இடுப்பிலும் தலையிலுமாகத் தண்ணீர்க் குடங்களைத் தாங்கிக்கொண்டு புறப்பட்டார் மேரியின் அம்மா. கடலை அண்டிய பகுதி என்பதால், கிராமம் தோன்றிய காலம் முதல் குடிநீர் பிரச்சினை இருந்துவருவதாக விபரித்தார்கள். அங்குள்ள கிணற்று நீரில் உப்புச் சுவை மிகையாக இருப்பதால் அருந்த முடியவில்லை. போருக்கு முன்னர் குடிநீர் கிடைத்தது என்றார்கள். அரசுசார்பற்ற நிறுவனமொன்றின் அனுசரணையுடன் துவங்கப்பட்ட திட்டமொன்றின் உதவியில் குடிநீர் கிடைக்கப்பெற்றது நினைவுகளாக மாறியிருந்தன. விடத்தல்தீவு கிராமம் ராணுவ வசமாகும் நிலையை அடைந்ததும் தப்பியோடும்போது நீர்த்தாங்கியைப் புலிகள் குண்டுவைத்துத் தகர்த்துள்ளனர். உயரமான அந்தக் குடிநீர்த் தாங்கியில் ஏறிநின்று கவனித்தால், பல மைல்கள் வரைக்குமான நடமாட்டங்களைக் கண்காணிக்க முடியும் என்பதால், ராணுவ நடமாட்டத்தை வேவுபார்க்க அதன் மேலேயே புலிகளின் முகாமொன்றும் இருந்துள்ளது. பாரிய உருளைகளாகத் தகர்ந்து கிடக்கும் நீர்த் தாங்கியைச் சூழ புற்கள் அடர்ந்து காடு மண்டியிருக்கிறது.

சிதைவுகளின் உருவாக்கம்

வீடுகள் முழுவதும் போரினாலேயே சிதைந்தவை இல்லை, ராணுவத்தினால் சேதமாக்கப்பட்டவை என்கிறார் மேரியின் அம்மா. “மீளக்குடியேறியபோது வீடு கள் போரில் சேதமாக்கப்பட்டதாகத்தான் நாங்களும் நம்பினோம். கரையோரமாக நிலைகொண்டிருக்கும் ராணுவ முகாம்கள் இரண்டுக்கிடையிலான போக்குவரத்தை எளிதாக்கும் பொருட்டு, புதிய மரப்பாலமொன்றைக் கடலில் ராணுவம் நிறுவியுள்ளது. இரு முகாம்களுக்கிடையிலான தூரம் 12 கிலோமீற்றர்கள். இதற்காக எங்கள் தென்னை, பனை மரங்களை வெட்டி வீழ்த்தியும் வீட்டுக் கூரைகளைத் தகர்த்தும், கதவு ஜன்னல்களை உடைத்தும் முகாம் களையும் கடலில் மரப்பாலத்தையும் ராணுவம் நிர்மாணித்துக்கொண்டுள்ளது.”

“இன்னும் கொஞ்ச நாளில் அந்த மரப்பாலம் உப்புத் தண்ணீரில் உக்கி கடலில் விழுந்திடும் பாருங்கள்” எனப் பல பெண் குரல்கள் சபிக்கிற தொனியில் ஒலித்தன.

புலிகளின் நிர்வாகத்தில் வங்கிகளில் நகை அடகுக் கடன் நடைமுறை இருந்தபோது பல லட்சம் பெறுமதியான நகைகளை அடகுவைத்திருந்தவர்கள் இன்னமும் புலம்பித் திரிகிறார்கள். சகாயம், புலிகளின் வங்கியில், பத்து பவுன் தங்க ஆபரணங்களை வெவ்வேறு கட்டங்களில் அடகுவைத்திருந்திருக்கிறார். இறுதி முறை நான்கு பவுன் சங்கிலியைப் 10,000 ரூபாய்க்கு அடகுவைத்தாராம். குடும்ப நிலையால் அப்படிச் செய்தேன் என்றும், இப்போது 10,000 ரூபாய்க்கு நான்கு பவுனில் சங்கிலி வாங்க முடியுமா என்றும் அங்கலாய்க்கிறார். ராணுவம் முன்னேறி வரும்போது வங்கியிலிருந்த பணம், நகைகளைப் புலிகள் எடுத்துக்கொண்டுதான் சென்றார்கள். இறுதியில், அது எங்களுக்கும் இல்லாமல் அவர்களுக்கும் இல்லாமல் போனதென்கிறார்.

மின்சாரம் இல்லாத அந்தப் பகுதியில், இருட்டிய பின்னர் தீப்பந்தங்களுடன் நடமாடுகிறார்கள். அதுவும் மாலை ஏழு மணிவரைதான். மிகப் பக்கமாகக் கூப்பிட்டால் கேட்கிறளவு தொலைவுக்குச் செல்வதாக இருந்தால், அதுவும் தவிர்க்க முடியாதென்ற நிலையில் மட்டுமே ஏழு மணிவரை நடமாட்டத்தைக் காண முடிந்தது.

இறுதிப் போருக்குப் பின்

தீப்பந்தத்தை ஏந்திப் பிடித்தவாறு நானும் மேரியும் ஒரு வீட்டுக்குச் சென்றோம். இறுதிப் போரில் கணவனை இழந்த ஒரு பெண்ணின் வீடு அது. 10 அடிக்கும் குறைவான சதுர வடிவில் ஓலைகள் செருகிய, ஓலைகளில் கதவைக் கொண்டிருந்த, ஜன்னல்கள் இல்லாத அந்த வீட்டை அடைந்தோம். அவர்கள் இரவு உணவை உண்பதற்குத் தயாராக இருந்தார்கள். உப்புக் கருவாட்டை நெருப்பில் சுட்டுத் தேங்காய்த் துருவலுடன் பிள்ளைகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக மண்சட்டியில் சோறு பிசைந்துகொண்டிருந்தாள் அவள். பன்னிரண்டு, எட்டு வயதுகளில் அவளுக்கு இரு பிள்ளைகள். நண்டு உடைத்தல், வலை பிரித்தல், பின்னுதல் தொழில் செய்கிறாள். விடத்தல்தீவில் இவை பெண்களின் பிரதான தொழில்கள். இவற்றால் கிடைக்கிற நூறு, இருநூறு ரூபாய்ப் பணத்தில் முழுக் குடும்ப சீவியத்தை நடத்துகிற நூற்றுக்கும் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள். விவசாயியாக இருந்த அவளது கணவனுடன் போருக்கு முன்னர் சீமாட்டிபோல அவள் வாழ்ந்தாள் என்று மேரி கூறினாள்.

விளக்கின் தீபத்தை வெறித்தபடி அவள் திடீரென மௌனமானாள். பிள்ளைகள் அவளது தோளைத் தட்டி அசைத்தனர். ‘விட்டுட்டுப் போய்ட்டாரே அவர்’ என திரும்பத் திரும்பக் கூறினாள். அழுகையூடாக என்னை நேராக நோக்கிப் புன்னகைத்தாள். மீண்டும் அமைதியாக தீபத்தையே வெறித்தாள். அவளது கண்களிலிருந்து நீர் வடிந்தது. கணவனை இழந்ததிலிருந்து அவள் இப்படித்தான் இருக்கிறாளாம். இறுதிப் போர் குறித்தோ அதில் மாண்டவர்கள் குறித்தோ பேசுகிறபோதெல்லாம் அம்மா இப்படி ஆகிவிடுவதாகப் பிள்ளைகள் கூறினார்கள்.

- ஷர்மிளா செய்யித், எழுத்தாளர், தொடர்புக்கு: sharmilaseyyid@yahoo.com
...மேலும்

Dec 16, 2013

மொரட்டுவ மாணவியின் உரிமைப் போராட்டமும் நாமும்


மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் மாணவியின் நிகாப் தொடர்பான பிரச்சினை பல தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. சில சகோதர சகோதரிகள் அதுகுறித்து என்னுடைய கருத்தையும் கேட்டனர். நிகாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என்ற அளவில், தனிப்பட்ட முறையில் நான் நிகாபுக்கு ஆதரவாளர் அல்ல. ஆனால், அதை யாரேனும் தனிப்பட்ட முறையில் தமது தெரிவாக விரும்பி அணிவார்கள் எனில், அதில் அவர்களுக்கு இருக்கும் உரிமையை நான் மதிக்கின்றேன். 

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவிக்கு, அவர் இந்த நாட்டுப் பிரஜை என்ற வகையில், தான் விரும்பும் ஆடையை அணியும் சுதந்திரம் உண்டு. அது அவரது தனிப்பட்ட உரிமை.

இங்கு எழுந்துள்ள பிரச்சினையை வெறுமனே இஸ்லாம் மார்க்கம் சார்ந்த பிரச்சினை என்று காட்டி, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தைச் சீண்டி, அந்த நெருப்பில் குளிர்காய முனையும் சக்திகளின் பிடியில் நாம் சிக்கிவிடக்கூடாது. காரணம், குறித்த முஸ்லிம் மாணவியே சொல்வதுபோல், அது அவரது தனிப்பட்ட உரிமை தொடர்பான விவகாரமே. எனினும், இந்தப் பிரச்சினையில் நமது அணுகுமுறை எப்படி இருக்கலாம் என சிந்திப்பது பொருத்தமானதே. இதில், நாம் இரண்டு விதமாக நாம் செயல்பட முடியும் என நினைக்கிறேன். 

1) இப்பிரச்சினை தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க, "தாம் விரும்பியவாறு உடை அணிவதற்கு முஸ்லிம் மாணவிகளுக்கு எந்தத் தடையும் இல்லை; மொரட்டுவ பல்கலைக்கழக நிகாப் தடை குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது" என்று தெரிவித்துள்ளார் என அறிகிறோம், (பார்க்க: http://kalmunaibrilliantnews.blogspot.com/2013/12/blog-post_10.html) .

அப்படியெனில், இவரிடமும் இவர்போன்ற ஆளும்தரப்பு மற்றும் எதிர்தரப்பு அமைச்சர்களிடமும் இவ்விடயத்தைத் தெளிவுபடுத்தி, "இது தொடர்பில் உங்கள் உறுதியான நிலைப்பாடு என்ன?" என்று மிக நேரடியாக (Live TV programme எனில், மிகச் சிறப்பாக இருக்கும்; அல்லது யூ ட்யூபில் பதிவேற்றலாம்) கருத்தைப் பெற்று ஒலி/ஒளிபரப்பலாம். இதனை, மனித உரிமைக்காகக் குரல்கொடுக்கும் எந்தத் தனியார் வானொலி/தொலைக்காட்சி ஊடாகவோ, அனைத்துச் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிப்பட்ட ஆர்வலர் குழுவோ முன்னெடுக்க முடியும்.

2) மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (University students' union) ஊடாக, பல்கலைக்கழக சகமாணவியின் உரிமையை வலியுறுத்திப் போராடலாம். அப்போதுதான், இது தனித்து முஸ்லிம் மாணவியின் பிரச்சினை என்று ஓரங்கட்டப்படாமல், ஒரு பல்கலைக்கழக மாணவியின் உரிமைப்போராட்டம் என்ற நிலையை அடைய வாய்ப்பாகும். 

இங்கு, ஏலவே இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் பொதுப் பிரச்சினைகளின்போது, முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் இணைந்து அப்போராட்டங்களில் பங்கு கொண்டிருக்கும் பட்சத்திலேயே, இதுபோன்ற ஒரு போராட்டத்தில் அவர்களின் -மாணவர் ஒன்றியத்தின்- ஒத்துழைப்பை நாம் பெறக்கூடியதாக இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக, பல்கலைக்கழக மாணவர்களின் பொதுப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களின்போது அவற்றில் பங்குபெறாமல், முஸ்லிம் பெண்களாகிய நாம், நமது ஹிஜாபை/நிகாபை காரணம் காட்டி ஒதுங்கிச் செல்லாமல் இருந்தால் மட்டுமே, இதுபோன்ற ஒரு தருணத்தில் நாம் மாணவர் ஒன்றியத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியும் என்பது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

மேற்கண்ட இரண்டு அணுகுமுறைகளின் மூலமும் இது தனிப்பட்ட ஒரு சமூகத்தின் பிரச்சினை என்ற நிலையில் இப்பிரச்சினை புறமொதுக்கப்படாமல், பொதுத் தளத்தில் தீர்வுகாண வழியமைக்கலாம் என்று நம்புகின்றேன். இவை என் சிற்றறிவுக்கு எட்டிய அணுகுமுறைகளே தவிர முடிந்த முடிபுகள் அல்ல என்பதையும் தயைகூர்ந்து கவனத்தில் கொள்க.

லறீனா அப்துல் ஹக் - முகநூல் வழியாக
...மேலும்

Dec 15, 2013

பெண்களுக்கு மன அழுத்தம்! - ஜோஸபின்


உலகில் மன அழுத்தத்தால்  அதிகம் துண்புறும் பெண்கள் கொண்ட நாடு இந்தியாவாம். 87. % பெண்கள் மன அழுத்த நோயால் துன்புறுகின்றார்களாம் . அதிகமாக  வேலைக்கு செல்லும் பெண்கள் கொண்ட அமெரிக்கா தேச  பெண்கள் கூட 53% பேர் தான் பாதிக்க படுகின்றார்களாம்.  பெண்ணை தேவி என்றும் மாதா என்றும் பூஜிக்கும் இந்திய நாட்டில் தான் இந்த கொடுமை. பெண் ஜனாதிபதியும் நான்கு மாநிலங்களில் முதல்வராகவும் ஆளுகையில் கொண்ட இந்திய ஆணாதிக்க சமூக சூழல், அரசியல், வீட்டு சூழல் என்று பல காரணங்கள் சொல்லப் பட்டாலும் பாதிக்கப் படும் பெண்களின் மனநிலையும்  இந்நிலைக்கு ஒரு காரணம் என்பதே மறுக்க இயலாத உண்மை.

 தங்கள் விருப்பங்களை பேணவும் பெண்கள் முன் வரவேண்டும்.  உலகத்திற்காக வாழும் பேர்வழி என்று தியாக பாத்திரமாக வெளிக்காட்டி கொண்டு மனதில் கலங்கி தவிக்கும் பெண்கள் பலர் உண்டு. ஒரு நபராக தன்னை உண்மையாக  வெளிப்படுத்தவும் முகமூடியற்ற வாழ்வின் வழியாக  தன்னை அடையாளப்படுத்தி கொள்ளவும் முன் வர வேண்டும்.

பல பொழுதும் ஒரு பெண்ணை இன்னொரு பெண் அடிமைப்படுத்துவதில் சுகம் காணும் சமூக சூழல் உண்டு என்பதையும் மறுக்கல் ஆகாது.   ஒரு தோழி என்னிடம் சொன்னார் அவர் சிரித்து அவர் கணவரிடம் பேசுவது கூட மகளுக்கு பிடிக்காதாம். இன்னும் சில வீட்டில் மகள்கள் அம்மா தன்னை போல் பொலிவாக உடை, நகை அணிவதை ஏற்று கொள்வது இல்லை.  அம்மாக்களும் பாசம் அன்பு என்ற பெயரில் மனதில் பாரத்தை சுமந்து இந்த சூழலுக்கு அடிமையாக வாழ்வே துணிவார்கள்!  தலைவலி போன்ற விட்டு மாறாத நோய் நிலையில் பெண்கள் உழலும் காரணவும் இது ஆகின்றது. படிக்காத பெண்களை விட படித்த பெண்களை இந்நிலைக்கு எளிதில் தள்ளப்படுகின்றனர்.

எந்த பெண்ணின் வாழ்விலும்  ஒரு வெற்றிடம் ஒரு காலையளவில் வர வாய்ப்புகள் உண்டு. வீட்டில் செல்ல மகளாக எல்லா கவனமும் கொண்டு வாங்கி வளர்க்கப் பட்ட பெண் திருமணம் முடிந்த பின்பு  வீடு, நிலம், வாகனம் போன்று  இன்னொரு பொருளாக கருதக் கூடும் வாய்ப்புகள் சில வீடுகளில் உண்டு தான்.   ஆசையாய் கொஞ்சி மகிழ்ந்த குழந்தை கூட  கண்டு கொள்ளாத நாட்கள் வரலாம்,  இவ்வேளைகளில் பெண்கள் சண்டையிட்டு மேலும் மனக் குழப்பத்திற்க்கு ஆளாகாது மனதிற்க்கு  பிடித்த ஆக்க பூர்வமான செயலில் மனதை செலுத்த வேண்டும் அது ஒரு வேளை  படிப்பாக இருக்கலால் அல்லது புத்தக வாசிப்பு  ஆக இருக்கலாம், கலை சார்ந்த  செயலாக இருக்கலாம், அல்லது பூந்தோட்டம் போன்றவை பராமரித்து அல்லது சமூக சேவையில் மனதை செலுத்தலாம்.  ஆனால் பலபோதும்   சோம்பலால் ஆக்கபூர்வமான செயலை விடுத்து சீரியல் கண்டு கற்பனையில் இருப்பதும் அதில் வரும் பெண்கள் கதா பாத்திரம் போல் கோபப்படுவது, அழுவது என தங்கள் சிந்தனை எண்ணங்களை கெடுத்து மேலும் மனச் சிதைவுக்கு ஆளாகி விடுகின்றனர்.  ஆண்கள் மூளையை விட பதின் மடங்கு சிந்தனை செயல் வளத்தில் பன்முகத்தன்மை கொண்டது பெண்களுடையது. ஒரு போதும் அதை ஒரு குட்டி சாத்தானின் பண்டக சாலையாக மாற்றி விடக்கூடாது!  

அடுத்தவர்களை ஒப்பிட்டு பார்த்து எப்போதும் கவலையாக இருக்கும் பெண்களின் எண்ணம் கூடி விட்டது.  தன் கணவர், தன் வீட்டார் தவிர்த்து மற்று எல்லோரும் நல்லவர்களாக தெரிவார்கள் சிலருக்கு!  அடுத்தவர்கள் உடுத்தும் நகை, உடை, ஆடம்பரம் கண்டு தனக்கு இல்லை என்று நிராசையில் தவிப்பது; நேற்றைய பொழிந்த நாட்களை நினைத்து இன்றைக்கு வாழாது நாளைய கனவுகளுடன் வாழ்வது வழியாக மனநோய்க்கு ஆளாகின்றனர் .  மன நிறைவு நாம் வெளியில் இருந்து பெறுவது என்பது உண்மையல்ல அதை  நம்முள்ளில் இருந்து வெளிக் கொண்டு வர வேண்டும்.  சிலர் அடுத்தவர்களை குறைக்கூறி கொண்டே தங்கள் நிலையை மறைந்து வாழும் சூழலுக்கு தள்ளப் படுகின்றனர்.

சிறப்பாக தமிழக பெண்களுக்கான பிரத்தியேக நோய் தன் பக்கத்தில் இருப்பவரை ஆள நினைப்பது . இதில்  பாதிக்கப்படுவது அவர்கள் சுற்றியுள்ளவர்களாக  இருந்தால் கூட இதனால் எழும் பிரச்சனையால் இப்பெண்களும் மனச் சோர்வுக்கு  ஆளாகின்றனர்.  நான் சமீப நாட்களில் பேருந்தில் பயணிக்கும் போது ஆசிரியைகளில் மனநிலையில் கண்டு கலங்கியுள்ளேன். அவர்களுடைய செயல் ஒருவித மனநோய் உள்ளது போல் தான் காட்டுகின்றது. அவர்கள் கண் அடுத்தவர்கள் நோக்கி கொண்டே தன் நிலையை மறந்து வாழ்கின்றனர். எப்போதும்  குறை கூறும் கண்ணுடன் நோக்குவது சிரிப்பது கூட நக்கல் எள்ளாடல் நிறந்ததாகவே கண்டுள்ளேன். பல பெண்களும் இப்படிதான் கணவர்களை கண்ணாலை மிரட்டி கட்டுப்படுத்தி தாங்களும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி கொண்டிருப்பார்கள்!  உலக சுவாரசியங்களை ரசிக்கவும் மற்றவர்கள் கண்டு ரசிப்பதை கண்டு ரசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.  கணவரை தோழராக பார்க்காது  கணவருக்கு போலிஸ் வேலை பார்த்தே ஓய்ந்து விடுகின்றனர். விரைவில் முதுமையின் நிழல்களை தன்னதாக்கி கொள்கின்றனர்.

பெண்மையின் இலக்கான மெல்லிய நுன்னுணர்வுகளை பேணாது இருப்பதும் மன உளச்சலையே கொடுக்கும்.   சிரிப்பது எளிமையாக பேசுவது தன்னையும் கடந்த ஒரு உலகத்தையும் உள் வாங்க தெரிந்திருப்பது அவசியமே.  சில  பெண்களை கதைப்பதை கேட்டு கொண்டிருந்தால் அவர்கள் காதில் மட்டுமல்ல நம் காதிலும் இரத்தம் வர வைத்து விடுவார்கள்.   சில பெண்களுக்கு புறம் கூறுவது என்பது திண்பண்டம் சாப்பிடுவது மாதிரி.  தன் பார்வையிலே அவர்கள் சுற்றியுள்ள உலகை அவதானித்து கொண்டிருப்பார்கள்.  இதில் பொறுபற்ற பெண்களை விட எல்லா விடயங்களிலும் தாங்கள் பொறுப்பானவர்கள் கன்னியமானவர்கள் என்று நம்பும் பெண்கள் மிகவும் சிக்கலான மனநோயில் வாழ்கின்றனர்.

தனக்குள்ள வேலைகளை நிதானமாக பகிர்ந்து செய்யவும் முன் வர வேண்டும்.  சில பெண்கள் காலை விடிந்ததில் இருந்து இரவு படுக்க போகும் மட்டும் வேலை செய்து கொண்டே இருப்பார்கள்.  சேர்ந்து க ணவருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் அர்ச்சனை விழுந்து கொண்டே இருக்கும். இந்த உலகமே இவர்கள் தலையில் தூக்கி சுமப்பது போல் ஒரு நினைப்பு.  மனதை சாதாரணமாக வைத்து கொண்டாலே பல பிரட்சனைகளையும் ஓய்த்து விடலாம். எளிமையாக வாழ்ந்து வேட்டையாடப்படாதும், வேட்டையாடாதும் நம் வாழ்வை மகிழ்ச்சியாக சுகமாக சோர்வற்று வாழ்ந்து தீர்ப்போம்!

நன்றி - ஜோசபின்
...மேலும்

Dec 14, 2013

நேர்மையான பெண்மொழி


“நாப்கின் வாங்கவும் பணம் இன்றி நாதியற்றுப் போன நாட்களில்... நானும் பேசாம ஆம்பளப் புள்ளையா பொறந்திருக்கலாம் என நினைத்து அழுதிருக்கிறேன்... என் உள்ளாடைக் கிழிசலைப் போலவே, என் அப்பாவைப் பற்றிய ரகசியமும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது”

இந்த வரிகளை வாசித்து கடக்க எனக்கு கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பிடித்தது. ஓரிரவு தூக்கம் சிந்தனையிலேயே சிதறியது. ‘ஒரு பொண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்குதான் தெரியும்’ என்பதெல்லாம் அலங்காரத்துக்கு சொன்னது அல்ல. அம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் என்று எந்தப் பெண்ணைப் பற்றியுமே எந்த ஆணுக்கும் எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. இத்தனைக்கும் நம் வாழ்க்கையில் கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித காலத்தை குடும்பம், பள்ளி, கல்லூரி, பணியிடம், வெளியிடம் என்று பெண்களோடுதான் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில் பெண்ணை பற்றி நமக்கு –அதாவது ஆண்களுக்கு- என்ன மாதிரியான புரிதல் இருக்கிறது?

தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமை ஆனாள்?’ ஓரளவுக்கு தெளிவு கொடுக்கிறது. மனரீதியாக தானே தன்னை பெண்ணாக உணர்ந்தால்தான் அப்படிப்பட்ட ஒரு அற்புத நூலை வரலாறு, உளவியல், சமூகம் என்று அத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கி எழுதியிருக்க முடியும்.

அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, சித்தி, அத்தை என்று பிறந்ததிலிருந்தே நிறைய பெண்களின் மத்தியில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போதும் என் வீட்டில் ஏழு பெண்கள், இரண்டே இரண்டு ஆண்கள்தான். பெட்டிகோட், நைட்டி, புடவை, பூ, குங்குமம், சாந்து, பொட்டு, சீப்பு, லிப்ஸ்டிக் முதலான மேக்கப் சாதனங்கள் என்று எப்போதும் என் வீட்டில் பெண்வாசனைதான் வீசிக்கொண்டிருக்கும். ஏராளமான அண்ணிகள் (சட்டென்று எண்ணிக்கையே சொல்லமுடியாத அளவுக்கு). கடந்த இருபத்தைந்து வருடங்களாக சீரான இடைவெளியில் அவ்வப்போது எங்கள் குடும்பத்துக்கு ஒரு வெளி பெண் வாழ வந்துக்கொண்டே இருக்கிறார். மொத்தமாக இவர்கள் அத்தனை பேரிடமும் சேர்த்து நான் இதுவரை நூறு வார்த்தைகள் பேசியிருந்தாலே அதிகம். வெளி பெண்களிடம், சக மாணவிகளிடமெல்லாம் எப்படி பழக வேண்டும், பேசவேண்டும் என்றெல்லாம் கண்டிப்பான கட்டுப்பெட்டித்தனமான அறிவுரைகளோடு வளர்ந்திருக்கிறேன். வயதில் சிறிய பெண்களாக இருந்தாலும் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. நேருக்கு நேராக கண்களை பார்த்து மட்டுமே பேசவேண்டும், தேவையற்ற அரட்டை கூடாது மாதிரி ஏகப்பட்ட நிபந்தனைகளும் விதிமுறைகளும். சிறுவயதில் கூட கல்லாங்கோலோ, தாயக்கட்டையோ அல்லது வேறு விளையாட்டோ விளையாடிக் கொண்டிருக்கும் அக்காக்களை குறிப்பிட்ட சில நாட்களில் தொட்டுப் பேசக்கூடாது என்பார்கள். அப்படி தெரியாமல் தொட்டுவிட்டால் உடனே போய் குளிக்க வேண்டும். ஏன் என்று கேட்டால் பல்லு மேலேயே நாலு போடுவார்கள். என்னை மாதிரிதான் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தில் பிறந்த ஆண்களும். நகரங்களில் மேல்தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பங்களில் வளர்ந்தவர்களின் பார்வை சற்று மாறுபட்டிருக்கலாம். இப்படியிருக்கையில் பெண்கள் குறித்து எங்களுக்கு என்ன exposure இருக்க முடியும்? மனைவியே கூட கணவனிடம் முழுமையாக தன்னுடைய பிரத்யேகப் பிரச்சினைகளை பேசுவது கிடையாது.

தங்கள் பிரச்சினைகளாக பெண்கள் இதுகாறும் எழுதியவை அவர்களது நிஜமான பிரச்சினைகளே அல்ல. அவர்களது உள்ளாடைக் கிழிசல் யாருக்கும் தெரியாததை போல, அவர்களும் அவர்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக ஆணோ அவன் அன்று உள்ளாடை அணிய மறந்ததை கூட பெருமையாக நாலு பேரிடம் சத்தம் போட்டு சிரித்துக்கொண்டே சொல்கிறான். ஓரளவுக்கு நேர்மையான பெண்மொழி கடந்த கால் நூற்றாண்டுகளாக புதிய தலைமுறை பெண் படைப்பாளிகளிடமிருந்து தீவிரமான வீச்சில் வெளிப்படுகிறது. அதற்கு முன்பெல்லாம் பலகீனமான குரலாக வெளிப்பட்டு, விரைவிலேயே அடக்கப்படும் நிலைதான் இருந்தது. அல்லது ஆணாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளும் பெண்ணியத்தை, ஆண்களும் சேர்ந்து ஆராதித்தார்கள். வழக்கமான முரணற்ற பாரதியார் பாட்டு வாதங்களும் பட்டிமன்றங்களும், கலகம் செய்ய வாய்ப்பில்லாத மேம்போக்கான எழுத்துகளும், பேச்சுகளுமாகதான் பெண்ணிய சடங்கு நம் மண்ணில் அரங்கேறியது. நம் பெண்கள் அவர்களுக்கு வசதியான மேக்ஸி, நைட்டி போன்ற ஆடைகளுக்கு மாறவே இருநூறு, முன்னூறு வருஷம் ஆகியிருக்கிறது. இன்றைய உடைப்பின் பெருமை தமிழக அளவில் திராவிட இயக்கங்களையும் (பெரியாரிய சிந்தனைகளின் நடைமுறையாக கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை அடிப்படையில்), தேசிய அளவில் பொதுவுடைமை இயக்கங்களையுமே (இண்டு இடுக்கு விடாத தீவிரப் பிரச்சாரம்) சாரும்.

இச்சூழலில்தான் சுமதிஸ்ரீ எழுதியிருக்கும் ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்’ முக்கியத்துவம் பெறுகிறது. முன்னாள் தமிழ்த்துறை விரிவுரையாளரான இவர் பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர் என்று பல களங்களில் செயல்படுகிறார். சினிமாவிலும் பாட்டு எழுதியிருக்கிறாராம். காந்திய மக்கள் இயக்கத்தில் மாநில அணி இலக்கியத்தலைவர்.

எங்கள் குடும்பத்தில் யாருக்காவது குழந்தை பிறக்கப் போகிறது என்றால் “மங்கம்மா (எங்கள் குலதெய்வத்தின் பெயர்) வந்து நல்லபடியா பொறக்கணுமுன்னு வேண்டிக்குங்கப்பா” என்றுதான் பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு ஏற்றாற்போல பெரும்பாலும் எங்கள் அண்ணன், தம்பிகளுக்கு பிறந்ததெல்லாம் மங்கம்மாக்கள்தான். எனக்கும் இரண்டு மங்கம்மா பிறந்திருக்கிறார்கள். இதற்காக யாரும் விசனம் கூட பட்டதில்லை. பெண் குழந்தை பிறந்தால் மகாலட்சுமி பிறந்ததாக மகிழும் ஒரு நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது. கள்ளிப்பால் எல்லாம் எங்கள் ஊரில் நூற்றாண்டுகளாக கேள்விப்படாத சமாச்சாரம். இதற்கு நேரெதிரானது சுமதிஸ்ரீயின் கதை.

ஆண்குழந்தை பிறக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பில் இருந்த சுமதிஸ்ரீயின் அப்பா, இவர் பிறந்ததால் ஒருமாதிரி விரக்திநிலையில் இவரை வெறுக்கத் தொடங்கியிருக்கிறார். துரதிருஷ்டமாக அடுத்து பிறந்ததும் மகள்தான். எதற்கெடுத்தாலும் அடி. முதல் ரேங்க் எடுக்காதற்காக. சோறு குழைந்ததற்காக. தோழியை வீட்டுக்கு அழைத்து வந்ததற்காக. கவிதை எழுதியதற்காக. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சுமதியை அடிக்க வேண்டும் அவ்வளவுதான். வயசுக்கு வந்தால் அடிக்க மாட்டார்கள் என்று ஏதோ சினிமாவில் டயலாக் கேட்டுவிட்டு, சீக்கிரமாக வரணும் என்று கடவுளை பிரார்த்திக்குமளவுக்கு கொடுமை.

ஒன்பது வயதிலேயே ஒரு முறை வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். திரும்ப பிடித்துவந்து முன்பைவிட மோசமாக சித்திரவதை. ஓரளவுக்கு வளர்ந்தபிறகு ஒருமுறை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது “நான் இல்லன்னா, உன்னால இப்படி ஒருவேளை சோறு திங்கமுடியுமா?” என்று சொல்லில் நெருப்பை கொட்ட, முழுமையாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஸ்பான்ஸர் பிடித்து கல்லூரியில் சேர்ந்து, கட்டணம் கட்டாததால் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டு, சாப்பிட பணம் கட்டாதவர்கள் பட்டியல் என்று மெஸ் போர்டில் பெயர் எழுதி அவமானப்பட்டு, நல்ல சாப்பாடு சாப்பிட ஒரு விருந்துக்கு சென்று அங்கிருந்தவர்கள் கேலி கிண்டலால் அழுதுக்கொண்டே ஓடி, பிற்பாடு வேலைக்கு சேர்ந்த இடத்துக்கு எல்லாம் சொந்த அப்பாவால் தாறுமாறாக புகார் சொல்லப்பட்டு, காதலித்து மணந்த கணவனின் புகுந்த வீட்டிலும் அப்பாவே வந்து பிரச்சினையென்று பராசக்தி கல்யாணியைவிட வாழ்க்கையின் ஓரத்துக்கு அதிவேகத்தில் ஓடியிருக்கிறார் சுமதிஸ்ரீ. பிற்பாடு ஓர் ஐடியல் அப்பா எப்படியிருக்க வேண்டும் என்று சுமதிஸ்ரீ எழுதிய ‘தகப்பன்சாமி’ என்கிற கவிதை அவருக்கு பலரிடம் பாராட்டும், விருதுகளையும் பெற்றுத்தந்தது. ஆனால் அந்த கவிதையின் ஒரு சொல்லில்கூட அவரது சொந்த அப்பா இல்லை.

வாசிக்கும்போது நம்பமுடியாததாகவும், மிகையானதாகவும் தோன்றும். ஆனால் இதற்கெல்லாம் சாட்சியான மனிதர்கள் –குறிப்பாக சுமதியின் அப்பா- இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். நூலில் இடம்பெற்றிருக்கும் இந்த ‘என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்’ மிகவும் அழுத்தமான, ஆழமான கட்டுரை. கோடிக்கணக்கான தமிழ்ப் பெண்களின் பிரதிநிதியாக சுமதிஸ்ரீயின் வாழ்வியல் வாக்குமூலம். பச்சாதாபத்துக்காக சுயகழிவிரக்கம் தேடும் நோக்கிலான மிகைத்தன்மை இல்லாமல், இயல்பான பகிர்தலாக, நேருக்கு நேர் பேசும் நேரடி மொழியில் எழுதப்பட்டிருக்கும் பதிவு. சுமதிஸ்ரீ குறிப்பிடும் இச்சம்பவங்கள் கடந்த முப்பது வருடங்களுக்குள்ளாகதான் நடந்திருக்கிறது. ஏதோ குக்கிராமத்தில் பாமரக் குடும்பத்தில் நடந்த விஷயமுமில்லை. பட்டறிவும், பகுத்தறிவும் பெற்றவர்கள்கூட இப்படிதான் நடந்துக் கொள்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று நம்புபவர்களும் நம்மூரில்தான் இருக்கிறார்கள். குழந்தை பெண்ணாக பிறந்துவிட்டதாலேயே தன்னுடைய ரத்தம் என்றும் பாராமல் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.

நூலின் மற்ற கட்டுரைகள் எல்லாமே the girl thing தான். பட்டுப்புடவை மீது மோகம், முதல் விமானப் பயணம், பள்ளி கல்லூரி கலாச்சார விழாக்களில் நடனம், வளைகாப்பு, சினிமாவில் பாடல் எழுதிய அனுபவம், தன்னுடைய குழந்தைக்கு கடிதம் என்று தான் கடந்துவந்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

சுமதிஸ்ரீயின் எழுத்துகளில் வெளிப்படும் பெண்ணியம் முற்போக்கானது என்று சொல்ல மாட்டேன். நீயும் நானும் சமம்தானே, நீ தம் அடித்தால் நானும் அடிப்பேன், நீ தண்ணி அடித்தால் நானும் அடிப்பேன் என்கிற மாதிரி வகை அல்ல. பெண்ணடிமைத்தனத்தை ஒரு வடிவமாகவே அமைத்து வைத்திருக்கும் சமூக அமைப்பையே புரட்டி போடவேண்டும் என்கிற எண்ணங்கள் எதுவும் அவரது எழுத்தில் வெளிப்படுவதாகவும் தோன்றவில்லை. ஆனால் விதிக்கப்பட்ட சமூகத்தில் தன்னுடைய பங்கினை போராடி, சண்டை போட்டாவது வாங்கும் முனைப்பு அவரது எழுத்துகளில் வெளிப்படுகிறது.

இந்நூலை வாசிக்கும் ஆண், பெண் குறித்த தன்னுடைய புரிதலை கொஞ்சம் மீளாய்வு செய்து அப்டேட் செய்துக்கொள்வான். பெண்கள் தங்களுடைய சக பயணியின் அனுபவங்களை வாசித்து, தங்களையும் ஒப்பிட்டுக் கொள்ள முடியும். சிந்தனையை கிளறும் சுவாரஸ்யமான, நேர்மையான எழுத்து. வளமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள் சுமதிஸ்ரீ!

நூல் : என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்
எழுதியவர் : சுமதிஸ்ரீ
பக்கங்கள் : 96
விலை : ரூ.80
வெளியீடு : விகடன் பிரசுரம்
757, அண்ணா சாலை, சென்னை-600 002.
போன் : 044-42634283/84

...மேலும்

Dec 13, 2013

ஆதிகரித்து வரும் இளவயது திருமணங்களும் அதன் விளைவுகளும் - பிருந்தா தாஸ்


இலங்கையில் அண்மைக்காலமாக சிறுவர் துஷ்பிரயோகம் பற்றி பேசப்பட்டும், வழமையாக கண்டிக்கப்பட்டும் வருவது யாவரும் அறிந்ததே. இதே போல தற்பொழுது இளவயது திருமணம் என்னும் சாபக் கேட்டையும் இலங்கை ஏற்று நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 
வளங்களில் மனித வளம் ஏனைய வளங்களைப் போல பெறுமதி கூடிய ஒன்றாகும். மிக பழைமையான காலத்தில் கூட பால்யத் திருமணம் எனும் பெயரில் மிகச் சிறிய வயதில் மூத்த ஆண்களுக்கு அல்லது சிறிய வயது சிறுவனுக்கு பெண்ணை தாரம் செய்து கொடுத்துள்ளதை நாம் அறிந்திருக்கிறோம். இம்முறைகளில் பெரும்பாலும் பாதகமான விளைவுகளையே மனித சமூகம் எதிர்கொள்கிறது என்றால் அது மிகையில்லை. இவற்றையும் மீறி நவீன காலங்களில் இம்முறை அருகி வந்தபோதிலும், இலங்கையை எடுத்துக் கொண்டால் சிறு வயதில் ஏற்படும் காதல், அல்லது கட்டாய இளவயதுத் திருமணம் அதுவுமின்றி சம்பிரதாய அடிப்படையில் செய்யப்படும் திருமணங்கள் இம்முறைமையை பின்பற்றி வருகின்றன எனக் கூறலாம்.

குறிப்பாக இலங்கையைப் பொறுத்தவரை அபிவிருத்தி குன்றிய மாவட்டங்களில் தான் இள வயது திருமணங்களும் பாலியல்; துஷ்பிரயோக சம்பவங்களும் அதிகரித்துக் காணப்பட வாய்ப்புக்கள் உள்ளதென ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதிய (யுனிசெப்) நிபுணர் குழு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றதேயன்றி அது குறைவதில்லை. அறிவியல் வளர்ச்சிகள், சிந்தனை சார் வளர்ச்சிகள் போன்ற காரணிகளால் மனித சமூகம் பல்வேறு தேவைகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. இளம் சமூகத்தினர் பெற்றோர்களினால் முறையாக வழிநடத்தப்பட வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். ஏனெனின் நாகரிக மோகம், ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் மனோநிலை, யோசித்து தனது முடிவுகளை எடுக்காது எதற்கும் திடீர் முடிவுகளை எடுத்தல், கட்டிளமை பருவத்தில் ஏற்படும் ஆசாபாசங்கள் என்பன இவர்களை முற்றுமாக முடக்கி, இறுதியில் வாழ்க்கையையே முடக்கி விடும் அளவிற்கு சென்று விடுகின்றன. பெரும்பாலும் அன்பு, பாதுகாப்பு, கவனிப்பு என்னும் தேவைகளை நோக்கி காதல் என்ற பெயரில் தனது வாலிபப் காலங்களை கண்ணீரில் கழிக்கும் கன்னிகைகள் ஏராளம். பொதுவாக இளம் வயதில் திருமணம் செய்வோர் பல்வேறு சிக்கல்களையும் பிரச்சினைகளையுமே எதிர்நோக்க வேண்டியிருக்கும். பறந்து திரிந்து பருவத்தில் பெற்றோர்களின் பாதுகாப்பில் இருந்து விடுபட்டு குடும்பம் என்ற நிலைக்கு ஆளாகுகின்றார்கள். குடும்பத்தை பராமரிக்கும் அனுபவமும் அதற்கான பக்குவமும் அறியா வயதில் நடக்கும் திருமணத்தில் ஏற்படுகின்றது என்றால் அது மறுப்பதற்கில்லை. அத்துடன் புரிந்துணர்வு, தோல்வி, வெற்றி, சகித்தல், விட்டுக்கொடுப்பு, சிக்கனம் போன்ற உள சார்ந்த உயர்ந்த தன்மைகள் மிகக்குறைவாகவே இவர்களிடம் காணப்படுகின்றது. ஏனென்றால் அதற்கான வயதும் பக்குவமும் அடைய வில்லை என்று புரிந்துக் கொள்ள முடிகிறது. அத்துடன் வாழ்க்கை, குடும்பம் என்ற ஒரு தகுதியான நிலைக்கு ஒரு கால வரையரை உண்டு. அதுதான் எம் முன்னோர்கள் வாழ்வை எட்டெட்டாகப் பிரித்து வைத்திருக்கின்றனர். அதில் ஒன்றுதான் வாழ்க்கையை பற்றி உணர்ந்து வாழ்வதற்கான நிலையாகும். இவ்வாறு சிறு வயது திருமணத்தால் அவர்களின் வாழ்க்கை அரைவாசியிலேயே முடிவடைந்து விடுகிறது எனலாம். இவ்வாறான செயல்களினால் சிறு வயதிலேயே தற்கொலை, சிறு வயதிலேயே விவாகரத்து போன்றவற்றிற்கும் வழிகோலுகின்றன. அத்துடன் எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதில் சிரமம் ஏற்படுகின்றது. சமூகத்தில் பரம்பரையாக நடக்கின்ற செயல்களையே பின்வரும் சமுதாயமும் செய்யும் என்பது உண்மை. ஆதலால் கல்வி போன்ற வளர்ச்சி குன்றி விடும் என்பது உறுதி.

இலங்கையில் திருமணத்திற்கான வயதெல்லை 18 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். உடல், உள வளர்ச்சிகள் போதியளவு காணப்படாததையடுத்து கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்தும் சிசு மரண வீதம் அதிகரித்தும் செல்லும் அபாயம் காணப்படுகின்றது. இவற்றினால் ஆரோக்கியம் அற்ற குறைபாடுடைய சந்ததியினரையே காணக்கூடியதாக இருப்பதால், நாட்டின் அபிவிருத்திக்கும் இவை மாபெரும் தடைக்கல்லாக இருந்து வருகின்றது. தனிநபர் வருமானம், மொத்த தேசிய உற்பத்தி, சுகாதார வசதிகள், சிசு மரணவீதம் அதிகரித்தல், புத்திஜீவிகள் போன்றன அபிவிருத்தியாக குறிகாட்டிகளாகவே காணப்படுகின்றன.

இவ்வாறாக நாட்டின் அபிவிருத்தி தொடங்கி பல்வேறு துறைகள் சார்ந்த எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் இளம் சமூகத்தினரின் பங்களிப்புகள் இன்றியமையாதனவாகும். அதனாலேயே இலவசக் கட்டாயக் கல்வியை நமது நாடு வலிறுத்தி உள்ளது. அண்மைக்காலத்திலும் கூட பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோரை கண்டிக்க சட்டம் அமைக்க வேண்டும் என கல்வி செயற்பாடுகள் தொடர்பான விசேட நாடாளுமன்ற செயற்குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் பாடசாலை பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல இளம் வயதினர் இந்த கையடக்கத் தொலைபேசியின் மூலமே அழிந்து போகும் சம்பவங்கள் பல ஊடகங்களின் மூலமும் வாய் பேச்சின் மூலமும் அறிந்து வருகிறோம். இவற்றை ஒப்பிட்டு நோக்குமிடத்து இவையனைத்தும் இளம் சமூகத்தினரின் நலத்தைக் கருத்திற்கொண்டே நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பது புலனாகிறது. 
நாட்டின் அறிவு சார்ந்த நடத்தைகள் மேலோங்கும் பட்சத்தில் தரமான சமூக கட்டமைப்புக்கள் தோன்றும். இளம் பிராயத்தினர் கல்விக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். ஏனெனின் தமது நடத்தையிலும் பண்பிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது கல்வியேயாகும். இதனால் தான் நவீன கல்வியாளர்கள் கல்வியை வரைவிலக்கணப்படுத்துகையில் “நிலையான நடத்தைகள் சார்ந்த மாற்றங்களே கல்வி” என்பதற்கு முக்கயத்துவம் கொடுக்கின்றனர். எனவே கற்றலின் ஊடாக பல சமூக சீர்குலைவுகளில் இருந்து எமது வாழ்வைப் பாதுகாத்துக் கொள்ளலாம். 

எனவே ஒப்பிட்டு நோக்குமிடத்து இள வயது திருமணம் என்ற விடயம் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இது போன்ற செயல்களில் இளவயதினர் ஈடுபடுதலை பெற்றோர்கள் பெரும் கவனம் செலுத்தவேண்டும். அத்துடன் கல்வியினூடாக எமது  வாழ்வை மாற்றியமைக்கலாம் என்பதை எனது இளவயதினர் புரிந்து கொண்டு செயற்படவேண்டும். நாளைய நமது தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் பாரிய பொறுப்பு இள சமூதாயத்தினரையே சாரும் என்பதை உணர்ந்து செயற்பட முன்வரவேண்டும். நாளைய தலைவர்களே நீங்கள்! 
...மேலும்

Dec 12, 2013

இந்தியா ஒரு விசித்திரமான நாடு! - குட்டிரேவதிஎன்ன தான் பெண்களையும், மானுடரின் பாலியல் உறவையும் கொச்சைப்படுத்திய நாடுகள் உலகெங்கிலும் இருந்தாலும், இந்தியாவின் அளவிற்கு இழிவாக எந்த நாட்டிலும் பெண்ணின் பாலியல் உறவு கண்காணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.

தொடர்ந்து பல நூதனமான வடிவங்களில் பெண்களின் உடல், அரூபமான சங்கிலிகளால் பிணைத்துப்போடப்பட்டிருக்கின்றன.

ஆயிரம் ஆயிரம் வருட ஒடுக்குமுறையும் வன்முறையும் தாண்டியும், பெண் சமூகம் முழுதும் ஒரு மனப்பிறழ்வுச்சமூகமாக மாறாமல் இருப்பது ஆச்சரியம் தான்.

ஆண்கள், எப்படி பெண்களைக் கையாளவேண்டும், அவர்களின் யோனிக்குப் பூட்டாக எப்படி எப்பொழுதும் தொங்கிக் கொண்டிருக்கவேண்டும் என்ற அயராத பயிற்சியைச் "சாதி முறை" ஆண்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கிறது.

செக்‌ஷன் 377 - ஐ மாற்றுவது எல்லாம் ஒரு பெரிய விடயமே இல்லை. அதையும் விஞ்சின ஒடுக்குமுறைக்கட்டமைப்பு பெண்களின் வாழ்வும் மரணமுமாகி இருப்பதை அறியாதவருக்குத் தாம், '377' பெரிதாய்த் தோன்றும்.

பெண்ணுக்குப் பாலியல் ரீதியாக விடுதலை உணர்வைத் தரும் எந்த ஓர் உரிமையும் சலுகையும் வாய்ப்பும் சட்டமும் செக்‌ஷனும் கூட 'சாதி ஒழிந்த ஒன்றாகவே அடையாளம் பெறும்'. அந்த வாய்ப்பை இந்தியப்பெண்கள் எளிதாகப் பெறமுடியாத அளவிற்கான சாதிய இந்தியா இது.

இந்நிலையில், ஒருபாலுறவு, பல பாலுறவு, ஆதிக்கசாதி ஆணின் அதிகாரத்திற்குக் கட்டுப்படாத விடுதலையான எந்தப்பாலுறவாக இருந்தாலும் அது குற்றமாகவே கருதப்படும். ஆனால், இத்தகைய இழிவானதொரு சமூகத்தில், பெண்களுக்கான விடுதலையின் திறவுகோலாக மிஞ்சி இருப்பது 'ஒரு பாலுறவே'. பெண்களுக்கு மட்டுமன்று, ஆண்களுக்கும் தான்.

விடுதலையின் வடிவங்கள், குற்றங்களாகக் கருதப்படும் நாட்டில் குற்றம் என்பது அன்றாட வாழ்வியலாகவும், ரகசியமான ஒன்றாகவும் மாறுவதில் வியப்பென்ன இருக்கிறது. 

இதையெல்லாம் தாண்டி, ஒரு பாலுறவு என்பது நீக்கமற, எங்கும் எப்பொழுதும் நடைமுறையில் இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. எதைக்காரணம் காட்டி இதை ஒரு குற்றமுறை என்றாலும், அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

மானுட வாழ்வு, விடுதலை நோக்கியது!

புகைப்படம்: ழான் பால் பூர்தியூ Jean-Paul Bourdier

நன்றி - குட்டிரேவதியின் முகநூல் வழியாக
...மேலும்

Dec 11, 2013

“கற்பை” அழிப்போம் - சாரதா


சில மாதங்களுக்கு முன் நாடெங்கும் போராட்டங்களை கிளப்பிய “நிர்பயா” வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ள முதல் வழக்கு இது தான் (?).

தூக்கு தண்டனை சரியா தவறா என்ற விவாதங்கள் இரண்டு கேள்விகளுக்குள் அடங்கி விடுகின்றன. தூக்கு தண்டனை ஒரு மனிதஉரிமை மீறலா? உயிரை பறிக்கும் உரிமை அரசிற்கு உண்டா? இது முக்கியமான விவாதம் என்றாலும் இதை விட முக்கியமான ஒரு விஷயம் மிக எளிதாக மறக்கப்படுகிறது. பாலியல் வன்முறையின் மீதும் பாதிக்கப்பட்ட பெண்களின் மீதும் இந்த சமூகமும் ஆட்சியாளர்களும் கொண்டுள்ள பார்வை மிக பிற்போக்காக உள்ளது. இது ஆழமான விவாதத்திற்குரியது.

தூக்கு தண்டனை:

டெல்லி வழக்கில் தண்டனையை கேட்டு மகிழ்ந்தவர்கள் பலர் உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இருக்கும் ஆதங்கத்தை சக மனிதன் என்ற முறையில் எவராலும் நன்கு உணர முடியும். ஆனால் ஒரு சமூகமாக நாம் கேட்க மறக்கக் கூடாத பிரதான கேள்வி- இது தனி மனித குற்றமா? இந்த கேள்வியை குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்குடன் அல்ல, மாறாக விஷயத்தை பரந்த நோக்குடன் அணுகுவதற்காக கேட்க வேண்டியிருக்கிறது.

நான்கு பேருக்கு தூக்கு தண்டனை அளிப்பதன் மூலம் இது ஒரு சமூகப் பிரச்சனை என்ற உண்மை மறைக்கப்படுகிறது. மறுக்கப்படுகிறது. சமூகப் பிரச்சனைக்கு தனி மனிதர்களை கொல்வதன்/ தண்டிப்பதனால் முற்றுப்புள்ளி வைக்க முடியமா?

ஆடைக் கட்டுப்பாடு:

இந்த தீர்ப்பு வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் தமிழக அரசு கல்லூரிகளில் ஆடைக் கட்டுப்பாட்டை விதித்தது. நாட்டில் பெருகி வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் முயற்சியாம் இது. இதே போல் இந்தாண்டின் ஆரம்பத்தில் புதுவை அரசும் மாணவிகள் துப்பட்டா அணியாமல் கோட் அணிவதால் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும் என்று கூறியது. பாலியல் குற்றங்களுக்கு பெண்களின் ஆடை தான் காரணம் என்றப் பார்வைக் கொண்ட அரசு பாலியல் வன்முறைகளை தடுக்க எந்தவொரு உண்மையான முயற்சியையும் எப்படி எடுத்து விட முடியும்?

ஒரு லட்சத்து அறுபத்தி முப்பத்தி மூன்றாயிரத்து நானூற்று எழுபத்தி எட்டாவது முறையாக கூறுகிறார்கள் ”பாலியல் வன்முறைக்கு பெண் தான் காரணம்” என்று. ஆனால் எத்தனை கோடி முறை இதை கூறினாலும் இது உண்மையாகாது. இதை உணரும் வரை சமூக மாற்றமும் நிகழாது. முற்போக்கு பெண்கள் அமைப்புகள் சொல்லி சொல்லி அலுத்துப் போன விஷயமானாலும் திரும்பவும் இங்கு கூறுவது அவசியம். ஒன்றரை வயது குழந்தையும், எண்பது வயது மூதாட்டியும் எந்த “கவர்ச்சி”யான ஆடையை அணிந்தார்கள்? விளக்கமாற்றுக்குக் கூட புடவை கட்டினால் விட்டு வைக்காத வக்கிர ஆண்களை கொண்ட சமூகம் இது.

மும்பை பத்திரிகையாளர் பாலியல் வன்முறை:

இதற்கிடையில் நடந்த இன்னொரு சம்பவம் மும்பை பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது. பொதுவாக பெண்கள் இரவில் கூட பாதுகாப்பாக வெளியில் சென்று வருவது இயல்பாக இருந்த மும்பை நகரில் பாலியல் வல்லுறவு சம்பவம். எட்டு மாதங்களுக்கு முன் எழுச்சி பேரலைகள் பொங்கி தூக்கு தண்டனை கிடைக்குமளவிற்கு விளைவுகள் ஏற்படுத்தின. ஊடகமும் இதில் பெரும் பங்கு ஆற்றியது. எனினும் போராட்டங்கள், விவாதங்கள், இவற்றின் தாக்குதல் கொஞ்டம் கூட இல்லாதது போல் மீண்டும் இன்னொரு சம்பவம்.  இந்த சம்பவத்திலும் அந்தப் பெண் இரவில் கும்மிருட்டில் சென்றாரா, உச்சி வெயிலில் சென்றாரா, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஏன் சென்றார் போன்ற அபத்தமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவ்வாறு கும்மிருட்டில் இரவில் நடந்து தான் போகட்டுமே. ஆண்களுக்கு இரவிலும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலும் கண்ணியம் 7 சென்டிமீட்டர் குறைந்து விடுமோ?

இவை மூன்றும் நமக்கு உணர்த்துவது- பாலியல் வன்முறையை தனி மனித குற்றமாக்குவது பிரச்சனைக்கு தீர்வாகாது. பாலியல் வன்முறைப் பற்றி சமூகத்தின் பார்வை, நிர்வாகத்தின் பார்வை மாற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியாக்குவதோ அல்லது, “பாவம். அவளது மானமே போய்விட்டது, இனிமேல் யார் கல்யாணம் செய்துக் கொள்வார்” என்று கூறுவதோ பெண்ணை இழிவுபடுத்தும் செயலே. மேலும் ”பூவை கசக்கி விட்டான், களங்கப்பட்டு விட்டாள், நாசமானாள்” என்று வசனம் பேசி திரியும் அனைவரும் பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்த “கற்பு” என்ற ஒன்று அழிக்கப்பட்டு விட்டது என்ற பிற்போக்குத் தனமான ஆணாதிக்க சிந்தனையை வற்புறுத்தி திணிப்பவர்கள் தான். இன்னமும் சில ஊடகங்கள் “கற்பழிப்பு” என்ற வார்த்தையே பிடிவாதமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் எல்லோருக்கும் உரக்கச் சொல்ல விரும்புவது- இது பாலியல் வன்முறை. ஒரு பெண்ணின் உடல் மீது அவள் விருப்பமில்லாமல் ஏவப்படும் மனித நேயமற்ற செயல். இதில் வெட்கப்பட வேண்டியது அந்தப் பெண் அல்ல. அந்த ஆண் வெட்கப்பட வேண்டும். இப்படி கொடூர சம்பவங்களை நடக்க அனுமதிக்கும் இந்த சமூகம் வெட்கப்பட வேண்டும்.

இங்கு எழுத்தாளர் சொஹைலா அப்துல் அலி கூறுவதை நினைவு கூற விரும்புகிறேன். அவர் 1980களில் தனது 17வது வயதில் மும்பையில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். உடன் சென்ற அவரது நண்பரும் தாக்கப்பட்டார். “பாலியல் வன்புணர்வு கொடுமையானது தான். ஆனால் சமூகம் கூறும் அபத்தமான காரணங்களுக்காக அல்ல. நீங்கள் அத்துமீற படுகிறீர்கள் என்பதால், உங்கள் உடலை வேறொருவன் கைப்பற்றி விடுகிறான் என்பதால். உங்கள் தந்தையின், அண்ணனின் “மானம்” பறி போய் விட்டதால் அல்ல.

எனது நற்குணம் எனது பிறப்புறுப்பில் உள்ளது என்ற கருத்தாக்கத்தை நான் மறுக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேண்டியது ஆறுதல். மூட்டை மூட்டையாய் அறிவுரைகள் அல்ல. நான் தாக்கப்பட்ட அடுத்த வாரம் பக்கத்து ஊரில் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் வீட்டுக்கு ஒடி வந்து தீக்குளித்து இறந்து விட்டாராம். இந்த சம்பவத்தை என்னிடம் கூறியவர் அந்த பெண்ணின் செயலை மனம் நெகிழ்ந்து பாராட்டினார். நல்லவேளை எனது பெற்றோர்கள் எனக்கு இதை புரியவைக்கவே இல்லை” என்று நியூ யார்க் டைம்ஸில் சமீபத்தில் எழுதினார். போலீஸில் புகார் அளிக்க செல்லும் போது இவரை நடத்திய அநாகரிகமான விதத்தையும், கேட்ட அவமரியாதையான கேள்விகளையும் ’மனுஷி’ பத்திரிகையில் பதிவு செய்துள்ளார் தனது பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டே.

1980களில் சொஹைலா அப்துல் அலியை துரத்திய புறச்சூழல் தான் இன்றும் நிலவுகிறது. பெண்ணை குற்றம் சொல்லும் அக்கம் பக்கத்தினர், இரண்டாம் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் காவல் நிலையங்கள், இவை எதற்கும் அசையாத அரசு. 20ஆண்டுகளுக்கு மேலாக நம் சமூகம் முன்னோக்கி செல்லவே இல்லையா?

இந்தக் கட்டுரை கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. இங்கு எழுப்பிய கேள்விகளை படிக்கும் அனைவரும் உரத்த குரலில் ஒன்றாக எழுப்ப வேண்டும் என்பதற்காக எழுப்பப்பட்டது.

நன்றி- இளைஞர் முழக்கத்தில் வெளியான கட்டுரை
...மேலும்

Dec 10, 2013

இலங்கையில் ஒரு நாளில் 6 பெண்கள் மீது துஸ்பிரயோகம்! -ரோசிசேனநாயக்க

ஒருநாளில் 6 பெண்கள் இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவற்றில் 4 இல் 3 பேர் 13 வயதுக்கு குறைவான சிறுமிகள் என்று பாராளுமன்றத்தில் பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிராக 33000 குற்றங்களும் பிள்ளைகளுக்கு எதிராக 24000 குற்றங்களும் பதியப்பட்டுள்ளன. ஆனால் 617 பேர் தான் குற்றங்களை அனுபவிக்கின்றனர் என்று அவ்வமைப்பின் உறுப்பினர் ரோசிசேனநாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் 07.03.2014 நடைபெற்ற மகளிர்தின சிறப்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில் தெரிவித்ததாவது, கல்வி சுகாதாரம் என்ற ஏனைய துறைகளில் இலங்கை மத்திய கிழக்கு நாடுகளை விட முன்னிலை வகித்தாலும் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களிலும் முன்னிலை வகிப்பது வேதனையானது.உலகளவில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் முதன்மை வகிக்கும் நாடுகளில் இலங்கை 4 ஆவது இடத்தில் உள்ளது. உலகளவில் பெண்கள் அதிகமாக வன்முறைக்கு உள்ளாகின்ற நாடாக எமது நாடு உள்ளது. 

உண்மையில் பெண்கள் அரைகுறை ஆடைகளை அல்லது கால் தெரிவது போன்ற கவர்ச்சியான ஆடைகளை அணிவதே பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என்று சிலர் வாதிடுகின்றனர். உண்மையில் அது உண்மையெனில் இன்று நாம் பெண்கள் அணியும் உள்ளாடை போன்ற உடைகளை உடுத்திக் கொண்டு எம் தாய்மார்கள் வயல்களில் வேலை செய்துள்ளனர். அப்போது அவர்கள் இன்றைய காலத்தில் போல் வன்முறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்பட்டனரா? இல்லை.

இங்கு பாலியல் வன்முறைகள் செய்வதற்கு உடைகள் காரணம் அல்ல. மனிதனின் மனதே அவர்கள் மனதில் ஏற்பட்டுள்ள குடூரமான எண்ணங்களே அதற்கு காரணம் என்று தெளிவாக புரிகின்றது. அத்தோடு எம் நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே பாலியல் கல்வி அறிமுப்படுத்தப்பட்டால் இந்த துஷ்பிரயோகங்களில் இருந்து விடுதலை அடைய முடியும் என்ற ஒரு கருத்தும் உள்ளது. உண்மையில் இது வரவேற்கத்தக்க விடயமே ஆகும். 

ஏனெனில் தான் எவ்வாறு தாய்மை அடைகிறேன் எவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றேன் என்பதனை அறியாமலேயே சிறுமிகள் இன்று அம்மா ஸ்தானத்திற்கு தள்ளப்படுகின்றனர்.இதிலிருந்து சிறுவர்களுக்கு ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கு பாலியல் கல்வி அவசியமானதே. இது தொடர்பில் ஏற்கனவே சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இது தொடர்பிலான நூல்களை கூட இலவசமாக வழங்கின. ஆனால் அப்போது இது ஒரு தவறான விடயம் என்று பல பெற்றோர்கள் எதிர்ப்பு காட்டியதன் விளைவாய் அது நிறுத்தப்பட்டது. 

இதன் மூலம் சிறுவர்களுக்கு எதிராக செய்யப்படும் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்த கூடிய வழிவகைகள் அல்லது சிறுவர்கள் துஷ்பிரயோகங்களில் இருந்து விடுபட கூடிய ஒரு நிலை உருவாகும். இது சிறுவர் பாதுகாப்பிற்கு அவசியமானது. எனவே இது தொடர்பில் பாராளுமன்றில் கலந்துரையாடுவோம். 

மேலும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோக வன்முறைகளை விசாரிக்கும் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க கூடிய பொது மனு குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்கள் பெண்களுக்கான பாதுகாப்பினை அதிகரிக்க முடியும் என்றார்.

நன்றி - தமிழ்லீடர்
...மேலும்

Dec 9, 2013

புல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்.......!


ம்... ம்... இதோ இன்னொரு மார்ச் 8ம் திகதி வந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து மணி நேரமாவது ஊடகங்களிலும், ஆங்காங்கே சில மேடைகளிலும், , சில ஊர் தெருக்களில், நாலைந்து மாதர் சங்கங்களின் தூண்டுதலில் பத்துப் பதினைந்து பெண்கள் கொடி பிடித்துக் கொண்டு போகும் ஊர்வலத்திலும் இன்று பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றிய கதைகள் பேசப்படலாம், பெண்ணியம் பற்றி ஆவேசமான கருத்து தர்க்கம் நடை பெறலாம், பெண் அடிமைத் தனம், பெண் சுதந்திரம் என்று கூச்சல் போடலாம். எல்லாம் அடங்கிப் போய் இன்றைக்கான கண்துடைப்பின் சரியான நிறைவேறலின் மகிழ்வில் தூங்கப் போகலாம்; நாளை மறந்து போகப்படலாம். அது தான் இன்றைய மகளிர் தினம். வழமையாக ஒவ்வொரு வருடமும் இப்படித் தானே நடந்து கொண்டிருக்கிறது எந்த வித்தியாசமும் இல்லாமல்??

 ஆனால் சமூகத்தில் பெண்களின் நிலமையில் நாளுக்கு நாள் எத்தனை எத்தனை வித்தியாசமான ஏற்றத் தாழ்வுகள்??முரண்கள்? முடங்கல்கள்?முடக்கபடல்கள் என்று தெரிந்து கொள்கிறோமா?? அவற்றைப் பற்றி ஆர்வம் காட்டப் போகிறோமா என்றால் என்னுடைய பதில் இல்லை என்பது தான்.


பெண்ணியம் என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் அநேகமானோரின் முகச்சுளிப்புக்கு இடமளித்துள்ளதே தவிர அதனுடைய தேவையைப் பற்றி பெண் இனத்தின் பெரும்பகுதியினரே புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விசயம். ஆணாதிக்கம், அடிமைப்படுத்தல் என்று கூச்சல் போடும் பெண்ணினத்தின் பெரும் பகுதி வெறும் கூச்சலுடன் தான் இதுவரை நிற்கிறது. தனக்கான பாதிப்பை புலம்பலில் மட்டும் வெளிப்படுத்துவதோடு அநேகமானோர் ஒதுங்கி, ஒடுங்கி விடுகிறார்கள்.   சூழல், குடும்பம், குழந்தைகள்,கலாச்சாரம் என்று பல  காரணங்களால் முடக்கப்பட்டு யாரும் அந்த பாதிப்புகளிலிருந்து தம்மை விடுவிக்க முற்படுவதில்லை.

பெண் என்றால் பொறுமையின் சின்னம், தியாகத்தின் திருவுருவம் என்று சொல்லிச் சொல்லி மூளைச்சலவை செய்யப்பட்ட  ஒரு இயந்திர மனப்பான்மை பெரும்பாலான பெண்களிடம் ஆழமாக வேரூன்றி இருப்பதால் எந்த அடிமைத்தனத்தையும், அடக்குமுறையையும் தாங்குவதும், அதை சமூகத்திடமிருந்து மறைப்பதும் தனது சிறப்பியல்பாக இவர்கள் நினைக்கிறார்கள்.இப்படிப்பட்ட பெண்கள் தான் ஆண்களை விட பெண்ணியம் என்றால் என்னவென்று தெரியாத அறியாமையிலிருப்பவர்கள். பெண்ணியத்தின் தேவையை பரப்ப நினைக்கும் உண்மையான  பெண்ணியவாதிகள் இவர்களைப் போன்றவர்களுக்கு தான் முதலில் புரியவைக்க முயல வேண்டும்.

பெண்ணியம் என்பது மற்றவர்கள் நினைப்பது போல் கலாச்சாரத்தையோ, பண்பாட்டையோ மீறவைக்கும் வழிப்பாதையல்ல. சமுதாயத்தில் சரி சம உரிமை என்பது ஏதோ பாவப்பட்ட செயலாக கருதுமளவுக்கு பெண்னினம் எதிலும் தாழ்ந்து போனதல்ல என்பதை பெண்களுக்கும், சமூகத்துக்கும் புரியவைக்கும் ஒரு சமூக சீர்த்திருத்தத்தின் தத்துவம் அது!

பெண்ணியத்தின் முதல் புரட்சி முன்னெடுப்பு இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தான் நடந்தேறியது. முதலாவது பெண்ணியப் புரட்சி 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டங்களிலும் நடத்தப்பட்டதாகவும், இரண்டாவது புரட்சி 1960, 1970களிலும் பின்னாளில் 1990 இலிருந்து இன்று வரையும் நடந்து கொண்டிருப்பதும் வரலாற்றுச் சான்றுகள் என்றால் உலகத்தில் மானுடம் தோன்றிய காலந்தொட்டு இந்த  குறிப்பிட்ட காலகட்டம்  வரை பெண்களின் நிலமை எத்தகையதாயிருந்திருக்குமென்று உணர்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் பகுத்தறிவுள்ள எவருக்கும் தேவையில்லை. ஏன் இப்போது கூட பெண்ணியம் என்ற தத்துவம் சமூகத்தில் வரவேற்புக்குரியதாயிருக்கிறதா அல்லது வெற்றி பெற்றிருக்கிறதா என்றால்...ப்ச் என்று உதட்டைப் பிதுக்கிக் கொள்கிறார்கள் மனித உரிமை சங்கங்களைச் சார்ந்தவர்களும், பெண்ணிய ஆர்வலர்களும்.

பெண்ணியம் என்ற சொல் எந்தவொரு மொழி பேசுகின்ற, எந்தவொரு இனம் சார்ந்தது என்ற தளநிலைகளில் இல்லாமல்   பாலியல் வேறுபாட்டால் மட்டும் வித்தியாசப்படுத்தப்பட்டு,இது வரை காலமும் ஒடுக்கப்பட்டு  இருந்து வரும் மானுடத்தின் மறுபாதிக்கான போராட்டம் அல்லது தீர்வு எனக் கொள்ளலாமா?? என்ற
இந்தக் கேள்விக்குப் பதில் தெரிய வேண்டுமானால், முதலில் பெண்ணியம் என்றால் என்னவென்று சரியான புரிந்து கொள்ளல் நம்மிடம் இருக்க வேண்டும்.

 பெண்ணியம் என்பது  பல்வேறு தளத்தில் ஆராயப்பட்டு வரும் பாரிய சமூக தீர்வுக்கான ஒரு போராட்டம் தான். பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY), உயிரியல் (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL), வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION), சக்தி (FORCE), மானுடவியல் (ANTHOROPOLOGY), உளவியல் (PSYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ள ஒரு பாரிய விடயம்.

பாலியல் ரீதியாய் பல நிலைகளில் பலவீனப்படுத்தப்பட்டதாயும், ஒடுக்கப்பட்டதாயும் இருக்கும் ஒரு மானுடத்தின் ஒரு பகுதி தனக்குரிய  சமத்துவத்துக்காக அறிவித்துள்ள, அல்லது ஆராய்ந்து கொண்ட  ஒரு  போராட்டம் என்று அறிவுறுத்த முற்பட்ட போது ஓர் முனைவர் என் முன் வைத்தை கேள்விகள் பின்வருமாறு:

 • பெண்ணியம் என்ற சொல்லின் பொருள் எல்லா நாட்டிற்கும் எல்லா இனத்திற்கும் பொதுவானதா? 
 • ஈழத்துப் போர்க்களத்தில் நின்ற பெண் போராளியைக் குறிக்கும் போதில், போர் மறவர் என்றே குறிப்பிட வேண்டும். அங்கே போர்க்களத்தில் நிகழும் நிகழ்சியைப் பெண்ணியத்திற்கு எதிராக நிகழ்த்தப் படுவதாகக் கூறுதல் பொருந்தாது.
 • அதேபோல், அரபு நாடுகளில் பெண்ணியத்தை என்னவென்று கூறுவது?
 • அஸாமில் பெண்ணின் வாழ்க்கை அமைப்பை எவ்வாறு கூறுவது?
 • தமிழகத்து கிராமத்துப் பெண்ணுக்கும் சென்னை போன்ற நகரத்துப் பெண்ணுக்கும் ஒரே வகையான பெண்ணியக் கோட்பாடு கூற முடியுமா?
 • பெண்ணியம் பற்றிப் பேசுகின்றவர் பெண்ணியம் என்றால் என்ன என்பதை விளக்கி அதை அனைத்துப் பெண்களும் ஏற்கச் செய்ய இயலுமா?
 • ஒரே கூட்டில் வாழ்கின்ற இரண்டு பெண்களுக்கு ஒரே வகையான பெண்ணியக் கொள்கை இருந்திடுமா?


இந்தக் கேள்விகள் எல்லாரிடமும் இருக்கும் . சிந்திக்க வேண்டியவை தான். ஆனால் உண்மையில் பெண்னியத்தின் முக்கியத்துவத்தையும், அதனுடைய உண்மையான அர்த்தத்தையும் சரியாகப் புரிந்து கொண்டால் முதல் கேள்விக்கான விளக்கமே மற்றைய கேள்விகளுக்குமான  பதில் என்பதை உணர முடியும்!

அதாவது  ஆண், பெண் என்ற பாலியல் வேறுபாட்டை வைத்தே சமூகத்தில் இரண்டு பிரிவுகளாக மானுடம் வித்தியாசப்பட்டிருக்கிறது. அதன் பின் பெண்ணினம் ஆணினத்தின் ஆளுமைக்குட்பட்டதாயும், இரண்டாம் பட்ச தர நிலைக்கு தள்ளப்பட்டதாயும், ஆண்வர்க்கத்தின் தேவைகளுக்கமையவே செயல்படும்  அடிமைக்குரிய  அந்தஸ்தில் தான் வர்க்கப்படுத்தப்பட்டுமிருக்கிறது. இந்த நிலைப்பாட்டின் வன்மையால் பெண்ணினம் பிற்படுத்தப்பட்ட ஒரு சூழலில் நின்றே எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது.  இவை எல்லா நாட்டிலும், எல்லா மதம் சார்ந்த பெண்ணுக்கும், எந்த மொழி பேசும் பெண்ணுக்கும் ஒரே வகையான பாதிப்பைத் தான் விளைவிக்கும். அப்படியிருக்க நாட்டுக்கு நாடு  எப்படி பெண்ணியம் வித்தியாசப்படும் ??

உதாரணத்திற்கு பெண்ணியத்துக்கு எதிரான 'ஹானர் கில்லிங்' என்ற கௌரவக் கொலைகளை எடுத்துக் கொள்வோம். இவை அதிக பட்சமாக இஸ்லாமிய நாடுகளில் நடக்கிறது என்று எடுத்துக் கொண்டாலும் இஸ்லாமியம் சாராத மற்ற நாடுகளிலும் இன்று வரை நடந்து கொண்டு தானிருக்கிறது. ஒரு மானுடம் தன்னுடைய உரிமைகள் மழுங்கடிக்கப்பட்ட நிலையில் , அதன் விருப்பத்துக்கு மாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள விருப்பமின்றி அவற்றை எதிர்த்தால் அதற்குரிய பலாபலன் அந்த மானுடத்தின் ஆண் உறவுகளாலேயே கொல்லப்படுதல் கௌரவக் கொலைகள் எனில் இத்தகைய செயலை ஒரு நாட்டில் சரியென்றும், இன்னொரு நாட்டில் தகாது என்றும் பெண்ணியக் கொள்கையால் ஏற்றுக் கொள்ள முடியாது.  எந்த ஒரு இனத்திலும், எந்தவொரு மதத்திலும், எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய  கொடுஞ்சயல்கள் பெண்களுக்கெதிராக இழைக்கப்படுவதை பெண்ணியம் அனுமதிக்காது.

ஆனால்  கீழ் வரும் நாடுகளின்   சட்டமுறைகள் கௌரவக்கொலைக்கு சாதகமாக உள்ளன. எப்படியெனில்...:

ஜார்டன்: தண்டனை ஒழுங்கின் 240ம் ஷரத்தின்படி "எந்த நயாராவது அவர் மனைவியோ, குடும்பப் பெண்ணோ மற்ற ஆண்களுடன் கள்ளக்காதல் கொள்வது தெரிந்து அவளை கொன்றால் அல்லது காயப் படுத்தினால், அவர் தண்டனையிலிருந்து நீக்கம் அடைவர்."

சிரியா: ஷரத்து 548 படி "ஒரு ஆண் தன் குடும்பத்தின் பெண்ணை கள்ள காதல் செய்கைகளில் பிடித்து, மரணமோ, கொலையோ ஏற்ப்பட்டல், அவர் தண்டனையிலிருந்து நீக்கம்"

மொராக்கோ: தண்டனை ஒழுங்கு ஷரத்து 548 "கொலை, அடித்தல், காயமேற்ப்படுத்தல் இவை ஒரு கணவனால் கள்ளக்காதலுடைய மனைவியின் மேலேயோ அவள் காதலன் மேலேயோ செய்தால், அச்செய்கைகள் மன்னிக்கப்படும்"

ஹைடி: தண்டனை ஒழுங்கு ஷரத்து 269 " ஒரு கணவன் தன் மனைவியையோ அல்லது (பெண்) சகவசிப்பவரையோ கள்ளப் காம செய்கைகளில் கண்டுபிடித்து கொலை செய்தால், அவருக்கு மன்னிப்பு"

துருக்கி: துருக்கியில் கௌரவக்கொலை செய்தால் ஆயுள் தண்டனை கிடைக்கும்

அதே நேரம் பின்வரும் நாடுகளில் கௌரவக்கொலை சட்டத்திற்க்கு புறம்பானது ஆனால் மிகப்பரவலான முறையில் கௌரவக் கொலைகள் இந்நாடுகளில் நடக்கின்றன.

பாகிஸ்தான்: கௌரவக்கொலை பாகிஸ்தானில் காரி-காரோ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்தக் குற்றம் சாதாரணமான கொலையாக கருதப்பட்டு வந்தது;வருகிறது. பெரும்பான்மையாக நடந்த இத்தகைய கொலைகளை காவல் துறையும், நீதித்துறையும் கண்டுகொள்ளாமலே இருந்திருக்கின்றன. ஆனால்  சர்வதேச அழுத்தங்கள் காரணமாக  பாகிஸ்தான் டிசம்பர் 2004ல், இக்கொலைகளை தடுக்கும்படி சட்டம் இயற்றியது; இச் சட்டம் கொலையுண்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு கொலைகாரனால்  'தண்டனைப் பணம்' கொடுப்பது போல் அமைக்கப் பட்டிருக்கிறது. பாகிஸ்தானிய மாதர் நலச்  சங்கங்களும், மனித உரிமைக் கமிஷனும் இந்த சட்டம் ஒரு கேலிக்கூத்தென்றும், சர்வதேசத்தின் முன் ஒரு கண் துடைப்பெனவும் குரல் கொடுக்கின்றனர். காரணம் கருணைக் கொலைகளை பெரும்பாலும் ஒரு பெண்ணின் தகப்பனாரோ அல்லது சகோதரர்களோ தான் செய்கின்றனர்.  பாகிஸ்தானிய மனித உரிமை கமிஷன் அறிக்கை அறிக்கையின் படி, 1998ல் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 286 கௌரவக்கொலைகள் செய்யப்பட்டன. உண்மையான, தகவலறியப்படாத குற்றங்கள் இதற்க்கு மேல் பல மடங்கு. 4 வருடங்களுக்கு முன் முக்தர் மாய் என்ற பெண் 'கௌரவ கற்ப்பழிப்பி'ற்க்கு ஆளானார்.

பாலஸ்தின்: பாலஸ்தின் பெண்ணுரிமை அறிக்கையின் படி காசா, மேற்க்கு கரைகளில் 1998 மட்டுமே 20 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் தகவல் இல்லாமல் மேலும் பல பெண்கள் 'கௌரவ' கொலைக்கு ஆளாவதாக நம்பப்படுகிறது. 

 இது இப்படியிருக்க பின்வரும் தரவுகள் உலகத்தில்  ஜனநாயகத்திற்கு பெயர் பெற்ற அமெரிக்காவில் பெண்களின் நிலையைக் காட்டுகிறது.: (Consider the following from the US Department of Justice, General Statistics:)

 • ஒவ்வொரு 9 வினாடிகளுக்கொருமுறை, ஒரு பெண் அடித்து துன்புறுத்தப்படுகிறாள்.
 •  1992ல், அமெரிக்காவின் மருத்துவத் துறையின் கணிப்புப்படி 15-44 வயதுக்குட்பட்ட பெண்கள் அவர்களது கணவர்களாலும், காதலர்களாலும், மூர்க்கமாகத் தாக்கப்பட்டு, வன் கொடுமை, வன்புணர்ச்சி போன்றவற்றால் சித்ரவதைப்படுகிறார்கள்.
 •  அமெரிக்காவில் ஹோம்லெஸ் எனப்படும் வீடிழந்து தெருவில் வசிக்கும் பெண்களிலும் , குழந்தைகளிலும் 50% சதவீதமானோர் குடும்பத்தினரின் வன்முறைக்கு பலியானவர்கள்.
 • அமெரிக்காவில் விலங்குகளுக்கான புகலிடங்களை விட மூன்று மடங்கு அதிகமாக பெண்களுக்கான புகலிடங்கள்  இருக்கின்றன. 


ஜனநாயகத்துக்கும், சமவுரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்காவிலேயே பெண்களின் நிலை இப்படியென்றால் மற்றைய நாடுகளில் எப்படியிருக்குமென்று சொல்ல வேண்டுமா??

பெண்களும் சிறுமிகளும் பெண் சிசுக்கள் உட்பட வருடத்திற்கு 5000 பேர் அவர்கள் குடும்பத்தினராலேயே கொல்லப்படுகின்றனர் என்பது சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு. இக் கொலைகளில் 99% சதமான கொலைகள் கற்பு, நடத்தை, வாழ்வியல் கோட்பாடு, மதக் கொள்கை என்ற போர்வையில் பெண்ணினத்தைக் கடுமையாக ஒடுக்கி வைத்திருக்கும் கலாச்சார பின்புலன்களில் ஊறியவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

கடுமையான கலாச்சாரக் கட்டுப்பாடுகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் இனங்களைச் சேர்ந்த குடும்பங்களில் இருக்கும் பெண்கள் தமது கலாச்சாரத்துக்கோ, இன, மதக் கொள்கை - கோட்பாடுகளுக்கோ புறம்பான உறவு, நடத்தை வழிகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில் அத்தகைய உறவு முறைகளை அல்லது நடத்தையைத் தமது குடும்பத்துக்கும் மதத்துக்கும் இனத்துக்கும் இழைக்கப்படும் பேரிழிவாகக் கருதி அந்தப் பெண்களின் குடும்பத்தினர் இத்தகைய படு பாதகமான, கொடூரமான மூர்க்கத்தனமான முறையில், தான் பெற்ற மகள் என்றோ, தன் சகோதரி என்றோ, தன் பேத்தியென்றோ, மனைவி என்றோ, தாயென்றோ உணர்வேதுமில்லாமல் அந்தப் பெண்களைக் கொலை செய்கின்றனர்.

இத்தகைய செயல்கள் எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இத்தகைய செயல்கள் நடக்காதபடி ஒழிக்கப்பட வேண்டும். அப்படியானல் பெண்ணியம் என்பது சகல சமூகத்துக்கும் பொதுவானதாயிருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.  இல்லை என்று எவரவது மறுதலித்தால் அவர்கள் கௌரவக் கொலைகள் போன்றவற்றை  பகிரங்கமாகவே ஆதரிக்கிறார் என்று தான் அர்த்தம்; அப்படிப்பட்டவர்களின் மனோநிலையை மாற்றியமைக்க வேண்டிய தார்மீகக் கடமை பெண்ணியவாதிகளிடமிருக்கிறது.

இன்றைக்கும் தமிழகத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் கணவனாலும், கணவன் வீட்டாராலும் மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதைக்குட்படுவதும், கொல்லப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது; இன்று வரை தலித் இன பெண்கள் மேல்தட்டு ஜாதி வர்க்கத்தினரால் வன்புணர்வுக்குட்படுவதும், பாலியல் வன்கொடுமைக்குட்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு தானிருக்கிறது என்றால் இதை ஒழிக்க தமிழ் சமுதாயம் இதுவரை என்ன செயற்பாட்டில் இறங்கியிருக்கிறது? காவல் துறை மற்றும் ம்னித உரிமை சம்மந்தப்பட்ட பாதுகாவலர்களும் என்ன சாதித்திருகின்றனர்??

வெறும் போலி சாமியார்களின் ஊழல்களையும் வேஷத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டக் கூட பெண்களின் அந்தரங்கங்க நடத்தைகள் தான் ஊடகங்களுக்கே தேவைப்படுகிறது என்றால் பெண்ணியத் தத்துவத்தை எப்படி ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் வித்தியாசப்பட வைக்க முடியும்??

பெண்களுக்கான பாதுகாப்பு சம்மந்தப்பட்ட சமூக சீர்த்திருத்தத்திற்கு முக்கிய தேவை பெண்ணியத்தின் அறிவு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்பது மட்டுமல்ல அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் தான். 

இத்தகைய கொடும் செயல்களை உலகில் உலவ விடுவது மனித சமுதாயத்துக்கே இழுக்கு. இவற்றைத் தட்டிக் கேட்கும் திராணியில்லாத எமக்குப் பெண்ணியம், பெண் விடுதலை, சமத்துவம் என்று சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது? தாய் நாடு என்கிறார்கள்; தாய் மொழி என்கிறார்கள்; இயற்கையையும் சக்தியையும் பெண்ணாகவே கருதுகிறார்களாம்... ஆனால் பிறப்பால் ஆண்களுடன் இருக்கும் எம்மைப் பெண்ணாக மனிதாபிமானத்துடன் மதிக்கிறார்களா? இல்லை...!!

நாங்கள் பங்கெடுத்தால் தான் குற்றவாளிகளா? இல்லை.. இன்னமும் இப்படிப்பட்ட கொடூரமான கொலைகளை மௌனமாக வேடிக்கை பார்ப்பதாலும் குற்றவாளிகள் ஆகின்றோம். சரி.. பெண்ணாகிய நாம் எங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறோம்??

குடும்பத்தினரால் கொல்லப்படும் இந்த ஹானர்ஸ் கில்லிங் கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது தான் ஐ.சி.ஏ.ஹெச்.கே (International Campaign Against Honour Killings) என்ற அமைப்பு. பெண்ணினத்தை ஒடுக்கும் தீய சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவதும், உதவுவதும் இவ்வமைப்பின் நோக்கம். மேலதிக விபரங்களுக்கு http://www.stophonourkillings.comஎன்ற இணையத்தை பார்வையிடவும். கௌரவக் கொலைக்கு உதாரணமாக இந்தக் காணொளியையும் பாருங்கள். கௌரவக் கொலைகள்!

பாதுகாப்பற்று, சாவின் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு பெண்ணுக்கும் தகுந்த ஆலோசனைகளை இந்த அமைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றது. மிகவும் அந்தரங்கமான, ரகசியமான ஆலோசனைகளுக்கு இந்த அமைப்பினரின் கீழ்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்: Nina:  ninasalih@googlemail.com.

மேலதிக விபரங்களுக்கு: ICAHK's founder Diana Nammi : diana.nammi@gmail.com

தொலைபேசி: l +447862733511

இந்த குறிப்பிட்ட தொலைபேசியுடன் எல்லோராலும் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். அப்படியான சூழ்நிலையிலிருக்கும் பெண்கள் தமது பாதுகாப்புக்காக வேறு ஏதாவது வழிகளில் முயற்சிக்க வேண்டும். அண்மையிலிருக்கும் மாதர் சங்கங்களையோ, மகளிர் காவல் நிலையங்களையோ தயங்காமல் நாட வேண்டும். ஆபத்து வரும் வரை காத்திராமல் முதலிலேயே வரும் முன் காப்பவளாயிருக்க வேண்டும். தனது அந்தரங்கங்களை  பகிர பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை..அதிலும் தனது கணவனோ அல்லது கணவர் வீட்டாரோ செய்யும் கொடுமைகளை பயம் காரணமாகவோ அல்லது அவமானம் கருதியோ வெளியிட மாட்டார்கள். ஆனால் அவளுடைய உயிருக்கே ஆபத்தான நிலையிலிருக்கும் போது இப்படி தனக்குள் எல்லாவற்றையும் அமுக்கி வைக்கப் பழகிக் கொள்வது மனோரீதியாகவும், உயிருக்கும் ஆபத்தானதே..! தன்னுடைய மனநிலையையும் சரி, சூழ்நிலையையும் சரி  நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


எமது கலாச்சாரக் கட்டமைப்பு ஒரு பெண்ணின் வாழ்கையை அவளை முதன்மையாக அடையாளப்படுத்துவதை தவிர்த்தே வந்திருக்கிறது. கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அவள் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டியவளாகவே இயக்கப்படுகிறாள். பிறந்த வீட்டிலிருப்பவர்கள்  ஒரு பெண்ணை  புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கும் போது "கணவன் வீட்டில் என்ன நடந்தாலும் அவள் அவற்றைத் தாங்கிக் கொண்டேயாக வேண்டுமென்ற கட்டாயத்தை போதனையாக உருப்போட பழக்கப்படுத்தப்பட்டவளாக  அனுப்பி வைக்கிறார்கள்.

இப்படியான சூழலில் வாழும் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் தம்மைத் தாமே தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் சுதந்திரமும் பாதுகாப்பும் எங்களுடைய கவனத்தில் மட்டுமே தங்கியிருக்கின்றது. வரதட்சணைக் கொடுமையோ, அல்லது கொடுமைப்படுத்தும் கணவனின் வன்முறையோ அல்லது வன்புணர்தலுக்கு முயல்பவர்கள் பற்றியோ உடனடியாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். வன்முறைகளைச் சகிக்கும் எந்தப் பெண்ணும்  முட்டாளே.

உங்கள் குடும்பத்தார் மூலம் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் உடனடியாக உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவருடன் அதைப் பற்றி சொல்லிவிடுங்கள்.

பெண் சமுதாயம் இற்றைத் திகதிகளில் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பது கேள்வி என்றால் சகல துறைகளிலும் பெண்ணின் பங்களிப்பு பரவியிருக்கின்றது என்பது மேம்போக்கான விடை மட்டுமே. சமூக ரீதியாக, சராசரியாக சொல்லப்படும் ஒரு நிகழ்தகவு தான் பெண்ணின் முன்னேற்றம் என்பது.

ஆனால் தனிப்பட்ட வாழ்கையில் ஒவ்வொரு பெண்ணிற்கும் உடலியல், உளவியல், கருத்தியல் ரீதியாக எந்தவொரு முன்னேற்றமும் இதுவரை இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றும் பெண் சிசுக் கொலை நடந்துகொண்டு தான் இருக்கிறது. போன வருடத்தை விட இவ்வருடம் கொஞ்சம் குறைந்துள்ளது என்ற ரீதியான தகவலே தவிர முற்றாக நிறுத்தப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயம். வரதட்சணை, பாலியல் வன்முறை, வன்புணர்தல், கொலை போன்றவை பெண்ணினத்துக்கு எதிராக இன்றும் நடைபெற்று வருபவையே..!

பெண் சமூக ரீதியாக ஒடுக்கப்படுவதற்கு முதல் காரணம் அவள் தான். தாரமாவதற்காகவும் தாயாவதற்காகவும் மட்டுமே பெண் என்பவள் படைக்கப்படுவதாய் நினைத்துவிடுகிறாள். அவள் குடும்பம், பாசம், அன்பு என்று முழு ஈடுபாட்டுடன் ஐக்கியமாகிவிடுவதால் தன் வாழ்கையில் முக்கியமான உறவுகளிடம் பலஹீனமாகிவிடுகிறாள். அவளுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையே பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மிகப் பரந்த இந்த உலகத்தில், வாழ்கை என்பது பலவித கோணங்களிலிருந்து ரசித்து, உணர்ந்து அனுபவிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பம். அதைப் பெண் என்பவள் மற்றவர்களால் விதிக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் முடங்கி மற்றவர்கள் எதிர்பார்ப்பிற்கமைய வாழ்வதை விதியாக ஏற்றுக்கொள்வாள் என்றால் அவளுக்கு வாழ்கை என்பதே அனாவசியம். அந்த வாழ்கையில் எந்தவொரு சுயமும் இல்லை.

எந்த ஒரு பெண் தன் கருத்துகளுக்கு அமைய, தன்னுடைய சொந்த உணர்வுகளால் மட்டுமே வாழ்கையை வாழத் தலைப்படுகிறாளோ அந்தப் பெண் சுதந்திரமானவளாகக் கருதப்படுவாள். அப்படி ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே அடையாளப்படுத்திய தனது வாழ்கையை வாழத் தலைப்படும் போது தான் பெண்ணியம் முதல்படியாக தனது வெற்றியை நோக்கி பயணிப்பதாக அமையும்.

நன்றி - பரிணாமம்
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்