/* up Facebook

Mar 14, 2012

மாசெஸ் அமைப்பின் தொடக்கநிகழ்வு மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்சாரம் - கொற்றவை


10.3.2012 – மாசெஸ் அமைப்பின் தொடக்க நிகழ்வு மற்றும் இமாமி விளம்பரத்திற்கு எதிரான பிரச்ச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண் விடுதலை, பெண்ணியம் தொடர்பான பேச்சு, 20 நிமிட காட்சிப்படம், ஓவிய பட்டறை ஆகியவை இடம்பெற்றன. வெவ்வேறு அரசியல் நிலைப்பாடு, தத்துவார்த்த நிலைப்பாடு கொண்டவர்கள் கலந்து கொண்டு ஒரே மேடையில் பேசினார்கள். கருத்தியல் தளம், மனித உரிமை செயல்பாடு, அரசியல் களம், கல்வியியல் தளம் ஆகியவற்றில் இயங்குபவர்கள் கருத்துரையாற்றினர், இதன் மூலம் பெண் விடுதலை சிந்தனையின் பல்வகை பரிமாணங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சியில் உரையாற்றியவர்கள்:

தோழர். ப. சிவகாமி (நிறுவனர், சமூக சமத்துவப் படை கட்சி),

பேரா.அ. மார்க்ஸ்,

பேரா. பத்மினி,

பேரா. மோனிகா,

கோ. சுகுமாரன் (மக்கள் உரிமை கூட்டமைப்பு, புதுச்சேரி)

நிகழ்ச்சியில் ஓவியம் வரைந்தவர்கள்:

தோழர்கள் விஸ்வம், ராஜன், வசந்த், ஏழுமலை, ஆனந்த், கிரிஸ்டி, ரோஹினி மணி, விதார்த்தி, மோனிகா, திலிப், சூரஜ், யுகன். கிரன் துளசி என்பவரின் ’பாலுறுப்பு அடையாளம் அழித்த’ புகைப்படம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

மாலை 3 மணி அளவில் ஓவியர்கள் இக்சா மையத்திற்கு வந்து ஓவியங்களை வரையத் தொடங்கினர். ஆணாதிக்க கருத்தூன்றிய பார்வையிலிருந்து  (male gaze) பெண் உடலை மீட்டு ஒரு புதிய பொருள் கொடுக்க கூடிய வகையில் ஓவியங்கள் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வகையில் ஒவ்வொரு ஓவியமும் பெண்ணின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. 5.45 மணி அளவில் தொடக்க நிகழ்வு ஆரம்பமாகியது. கொற்றவை வரவேற்புரையாற்றினார். மாசெஸ் அமைப்பின் செயல் திட்ட முன் வரைவை வெளிட்டு அமைப்பு துவக்கம் பற்றி அதிகார பூர்வ அறிவிப்பை வைக்குமாறு தோழர் ப. சிவகாமி அவர்களை கேட்டுக்கொண்டார் கொற்றவை. சிவகாமி அவர்கள் வெளியிட, பேரா. அ. மார்க்ஸ் அவர்கள் அதை பெற்றுக் கொண்டார். பின்பு பேரா. பத்மினி, பேரா. மோனிகா, கோ. சுகுமாரன் ஆகியோரிடம் செயல் திட்ட பிரதி கொடுக்கப்பட்டது.

கருத்துரை நிகழ்த்துவதற்கு முன் கொற்றவை தயார் செய்திருந்த 20 நிமிட காட்சிப்படம் ஒன்று திரையிடப்பட்டது.  இலக்கியம் தொடங்கி, இன்றைய விளம்பரங்கள், திரைப்பட பாடல்கள் ஆகியவற்றில் நிகழும் பெண் கதாபாத்திர சித்திரங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டிருந்தன. பெண் விடுதலை, மானுட விடுதலை குறித்து முன்னோடிகள் சொல்லியிருப்பது எனும் பகுதியில் பெரியார், அம்பேதகர் ஆகியோரின் பேச்சுக்கள், இவற்றோடு பெண் எழுத்தாளர்கள், உளவியலாளர்கள், புரட்சியாளர்கள் சிலரது குறிப்புகளும் இணைக்கப்பட்டிருந்தன. இந்த காட்சிப்படத்தின் ஊடாக ஒரு பெண்ணியவாதியாக எனக்குள் (கொற்றவை) நெடுநாள் நெருடிக்கொண்டிருந்த ஒரு கேள்வியும், அதன் இறுதில் கோரிக்கைகள் சிலவும் வைக்கப்பட்டன. உழைக்கும் உடல்களை போற்றும் வகையில் மெரினா கடற்கரையில் வைக்கபட்டிருக்கும் உழைப்பாளர் சிலையில் ஏன் ஒரு பெண் உழைப்பாளி கூட இடம்பெறவில்லை என்பதே அக்கேள்வி. பெண் உழைப்பாளர்களுக்கான சிலை வைக்கப்பட வேண்டும், அது பெண் மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் இனைந்து இருக்கும் சிலையாக இருக்க வேண்டும், மூன்றாம் பாலினத்தவருக்கு வேலை வாய்ப்பில்லை என்பதை வலியுறுத்தும் சிலையும் வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பேசப்படும் அளவுக்கு லுக்சம்பர்கிசம் ஏன் பேசப்படுவதில்லை – மார்ச் 5, 2012 சே குவேரா அளவுக்கு கொண்டாடப்படவேண்டிய ஒரு பெண் ஆளுமை பிறந்து 141 வருடங்கள் முடிவடைகிறது… அவர்தான் ரோசா லுக்சம்பர்க்.

ஆணாதிக்கம் இயற்கை மீது போர் தொடுப்பது போல் இயற்கையின் பிரதியான பெண்ணிடமும் போர் புரிந்தவாரிருக்கிறது, ஆங்காங்கே சில பெண்கள் சீறிக்கொண்டிருப்பது போய், ஒட்டுமொத்த பெண்ணினமும் பொங்கி எழும் காலம் வெகுதொலைவில் இல்லை எனும் முழக்கத்தோடு அந்த காட்சிப் படம் முடிந்தது.

அதைத் தொடர்ந்து:

முதலில் பேசிய பேரா. அ. மார்க்ஸ் அவர்கள் 90களில் நிறப்பிரிகை வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் பெண்ணியம், மாற்றுச் சிந்தனைகள், அரசியல் குறித்தெல்லாம் நிறைய விவாதங்கள் நடைபெற்றன. வெவ்வேறு அரசியல், கருத்து நிலைப்பாடு கொண்டிருந்தவர்களும் ஒரே மேடையில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து நிறைய உரையாடல்கள் நிகழும். புதிய சிந்தனைகளை அறிவதற்கான வாய்ப்பாக அது அமைந்தது. ஆனால் தற்போது அச்சூழல் குறைந்து வருகிறது என்று சொன்னார். மேலும் பெண் உடல், காமம் குறித்து  பெண்கள் எழுதும் போது எத்தகைய எதிர்ப்புகளைப் பெண்கள் சந்திக்க நேர்கிறது என்று சொல்லி, முத்துப்பழனி அவர்களின் நூல் மீது கொண்டுவரப்பட்ட தடை குறித்தும் பேசினார்.

அவரைத் தொடர்ந்து தோழர் ப. சிவகாமி அவர்கள் பேசினார். மூத்த அரசியல் செயல்பாட்டாளராக அரசியல் களத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து அவர் பேசினார். கடந்த பத்தாண்டுகளில் பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதும், அவர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபறுவதும் அதிகரித்திருக்கிறது என்றார்.  சுமார் ஒன்றரை லட்சம் பெண்களைத் திரட்டி மாநாடு நடத்தியதை குறிப்பிட்டார். படித்த மேல்தட்டுப் பெண்கள் பெண்ணியம், பெண் விடுதலை சிந்தனை என்பதை ‘பாலியல்’ என்ற வட்டத்திற்குள் மட்டும் சுருக்கி விடாமல், பெண்களை அரசியல் படுத்துவும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் போராட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கவும், அவர்களின் விடுதலைக்காக போராடவும் தயாராக இருக்க வேண்டும் என்றார். பெண் உடல் மீதான கருத்தாக்கங்களை மாற்றியமைப்பது என்பது அவசியம், அதற்கு ஆண்களிடத்தில் மாற்றம் கொண்டுவருவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பெண்களின் மன நிலையைலும் மாற்றம் வரவேண்டும். பாலியல் சுரண்டல் குறித்து அதிக கோஷங்கள் எழுப்ப்பப்பட்டு வருகிறது. அதுவும் தேவைதான், அதற்கப்பால் பெண்களின் தேவை, உரிமைகளை சட்டபூர்வமாக பெறுவதற்கு பெண்கள், பெண்ணியவாதிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். உதாரணமாக பொது இடங்களில் ஆண்கள் தனியாக உலவுகின்றனர், ஆனால் ஒரு பெண் அப்படி தனியாக நிற்பதோ, சாலையை, சுற்ற வட்டாரத்தை வெறுமனே ரசிப்பதற்கோ சாத்தியமில்லை. அதேபோல் பெண்களின் பெயரில் பாட்டா கோருதல், நிலம் கோருதல், பெண்களுக்கென்று விளையாட்டுத் திடல் வேண்டும் என்று சட்ட ரீதியான கோரிக்கைகளை வைக்கலாம். உடல் ரீதியாக பெண்களைப் பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றால். பெண்கள் இன்று அரசியல் வந்துவிட்டல் 33% என்ன 50% சதவிகிதம் கூட அவர்களால் கைப்பற்ற முடியும் என்றார்.

அதைத் தொடர்ந்து கொற்றவை பெண்கள் அரசியல் பங்கு பெருவதில் குடும்பம் எனும் அமைப்பு ஒத்துழைப்பதில்லை, குறிப்பாக உயிர் குறித்த அச்சம் ஆண்களையே அரசியல்களத்தில் தயக்கம் கொள்ளச் செய்கிறது, பெண்களுக்கு அதைவிட மிகுந்த அச்சறுத்தல்கள் இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டிப் பெண்கள் செயல்படவேண்டியது அவசியமாகிறது என்றதோடு, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் பிரச்சனைகளை எடுத்துப் போராடும் அமைப்புகளோடு மாசெஸ் அமைப்பு சேர்ந்து பணியாற்றும் என்பதையும் தெரிவித்துக்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக முனைவர் பத்மினி பேசினார். பெண்ணியக் கல்வியின் அவசியம் குறித்தும், அது பள்ளி பாடதிட்டத்திலேயே சேர்க்கப்படவேண்டும் என்பது குறித்தும் பேசுமாறு அவரைக் கேட்டிருந்தேன்.  இலக்கியம் தொடங்கி பெண் உடல் மீது என்ன வகையான பிம்பங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது, பெண் ஒடுக்குமுறையில் உற்பத்தி முறை, பொருளாதார முறை ஆகியவற்றின் தொடர்பு ஆகியவற்றை பேசியவர், அதிகார வர்க்கத்திற்கு எதிராக இருக்கக்கூடிய பெண்ணியக் கல்வியை அரசாங்கம் பாடதிட்டத்தில் சேர்க்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது, இருந்தாலும் முயல்வோம். அதைத் தாண்டி இதுபோன்ற முயற்சிகள் மூலம் பெண் உடல் மீதான பிம்பங்களை கலைக்கும் உரையாடல்களை நிகழ்த்தி பெண் எழுத்துக்கான புதிய மொழியை உருவாக்க வேண்டும் என்றார்.

அடுத்ததாக பேரா. மோனிகா பேசினார்.  பாலினம், பாலியல் ஆகியவற்றின் வேறுபாடுகளை சுட்டிக்காட்டியவர், பிம்பம் என்பது எவர் அதை உருவாக்குகிறாரோ அவரின் மனம்படியே இருக்கும் என்றார். அந்தவகையில் ஆணாதிக்கமானது ஒவ்வொருவரின் மனதில் பெண் என்பவள் பாலியல் பண்டம் எனும் பிம்பத்தையும், அவளுக்கான தன்மைகள், கடமைகள் யாவை என்றும் ஏற்றிவைத்திருக்கிறது. அதிகார வர்க்கத்தின் படைப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து அதை சுற்றி ஒரு உடையால் நிகழும் போது அந்த பிம்பங்கள் எப்படி தோற்றுவிக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைப்பது எளிதாகிறது என்றார். மேலும் அவர் மாசெஸ் அமைப்பு மூன்று மாதிதிற்கு ஒருமுறை வெளிவரக்கூடிய ஒரு சஞ்சிகையைக் கொண்டுவர முயலவேண்டும் என்று கூறினார்.

அடுத்ததாக தோழர். கோ. சுகுமாரன் அவர்கள் பேசினார். மனித உரிமைச் செயல்பாட்டாளரான இவர் காவல் நிலையத்தின் வன்புணர்வு கொடுமைக்கு உள்ளான பத்மினி மற்றும் இதர பெண்கள் வழக்கு விசாரணைகளின் போது எப்படி வேசி என்று முத்திரை குத்தப்படுகின்றனர் என்று சொன்னதோடு, அவ்வழக்குகள் எப்படி எதிர்கொள்ளப்பட்டன என்றும் பேசினார். அத்தோடு அ. மார்க்ஸ் சுட்டிக்காட்டிய இப்போதை உரையாடலுக்கு சாத்தியமற்ற சூழல் குறித்தும், அதனால் கருத்தியல் தளத்தின் பின்னடைவுகள் குறித்தும் பேசினார்.

கொற்றவை நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை முடித்தார்.

...மேலும்

Mar 8, 2012

இன்னும் கதவுகள் அடைக்கப்பட்டே உள்ளன. உமா - ஜேர்மனி

நூற்றாண்டுகளைக் கடந்து சர்வதேசப் பெண்கள் தினம்
முதலாவது பெண்கள் தினத்தின் போது

சர்வதேச ரீதியாக பெண்கள் தினத்தை நூற்றாண்டுகளாக கொண்டாடுவதென்பது பெண்ணொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை நூற்றாண்டுகளாக நாடாத்திச் செல்வதென்பதே.

1908ம் ஆண்டு நியுயோர்க் நகரில் 15 000 ஆடைத்தொழிலாளப் பெண்கள் சம்பள உயர்விற்காகவும், வேலைநேரத்தை குறைக்கக் கோரியும், தொழிற்கூடத்தில் மேலதிகவசதிகளைக் கோரியும் ஊர்வலமொன்றை ஒழுங்குசெய்தார்கள். 1857ம் ஆண்டு தமது முன்னோடிகள் நிகழ்த்திய போராட்டங்களைக் கௌரவிக்கும் முகமாகவுமே அப்பெண்தொழிலாளர்கள் இந்த ஊர்வலத்தை ஒழுங்குசெய்திருந்தார்கள். இந்த ஊர்வலம் தந்த உத்வேகத்தால் , 1909 ம் ஆண்டு நியுயோர்கில் அமைந்திருந்த Triangle Shirt Waist பெண்தொழிலாளர்கள் வேலைநிறுத்தமொன்றை ஆரம்பித்தனர்.Local 25> International Ladies Garment Workers Union என்பவை Triangle Shirt Waist தொழிசாலையிலுள்ள பெண்தொழிலாளர்களிற்காகவும், அது போன்ற sweat shops (வியர்வைக்கடைகள்) வேலைசெய்யும் பெண்களின் உரிமைகளிற்காகவும், அவர்கள் மீதான மோசமானச் சுரண்டலை எதிர்த்தும் இவ்வேலை நிறுத்தத்தை மூன்று மாதக் காலமாக நடாத்தினார்கள். இத்தொழிற்சாலைகளில் 15, 16 வயதான ஆமெரிக்க மற்றும் யூதத் தொழிலாளப் பெண்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 8 மணிவரை வேலை செய்ய வேண்டியிருந்தது. மலசலகூடத்திற்குச் செல்வதானால் அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே செல்ல வேண்டியிருந்ததால் , முதலாளிகள் கதவைத் தாளிட்டு மூடியிருந்தார்கள். Local25 இற்கு Clara Lemlich தலைமை தாங்கினார். இப்பெண்தொழிலார்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக. 500 தொழிற்சாலைகளைச் சேர்ந்த 20 000 தொழிலாளரகள் வேலைறிறுத்தப் போராட்டத்தில் இறங்கினார்கள். 1910ம் ஆண்டு எந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத நிலையிலும், தொடர்ந்தும் கதவு அடைக்கப்பட்ட நிலையில் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. ஒருவருடத்திற்குப் பின் இத்தொழிற்சாலை தீவிபத்திற்க்குள்ளானது. கதவுகள் மூடப்பட்டிருந்தமையாலும் , தீயணைக்குதம் படையினரின் ஏணிகள் 10ம் மாடியை எட்டமுடியாமல் போனாமையாலும் 146 தொழிலாளப் பெண்கள் இறக்க நேரிட்டது.

முதலாவது பெண்கள் தினம்
அதைத்தொடர்ந்து 1910ம் ஆண்டு நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் 60 000 பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் நடைபெற்ற இச் சோசலிச பெண்தொழிலாளர்களின் எழுச்சிகளை நன்கு கவனித்துக்கொண்டிருந்த ஐரோப்பிய சோசலிஸ்ட் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் உலகப் பெண்தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். 1910ம் ஆண்டு கோப்பன்காகனில் நடைபெற்ற சர்வதேவச சோசலிச காங்கிரசில் ஜேர்மனிய சோசலிஸவாதியான கிளாரா செர்க்கின் சர்வதே தொழிலாளப் பெண்கள் தினத்தைப் பிரகடனப்படுத்தினார். இந்த காங்கிரசில் கலந்து கொண்ட 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இத்தீர்மானத்திற்கு தமது பேராதரவை வழங்கினர்.

இத்தீர்மானத்தைத் தொடர்ந்து 1911ம் ஆண்டு முதன்முதலாக மார்ச் 19ம் திகதி ஜேர்மனி, சுவிட்சலாந்து , ஆஸ்திரியா ஆகிய நகரங்களில் சர்வதேச தொழிலாளப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. தொழிலாளப் பெண்களின் அடிப்படை உரிமைகளையும், பெண்களின் வாக்குரிமையையும் இவர்கள் கோரிக்கைகளாக வைத்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பெண்கள் தின ஊர்வலங்களில் Triangle Shirt Waist தொழிற்சாலையில் தீவிபத்திற்குள்ளான பெண்தொழிலாளர்கள் நினைவு கோரப்பட்டனர். 1912 ஆம் ஆண்டு லோரன்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள-; 'Bread and Roses' என்ற பெயரில் போராட்டங்களை நடத்தினர்.


"நாம் ஊர்வலமாகப் போகும் இந்த அழகானப் பொழுதில்
மில்லியன் கணக்கான இருண்ட சமையலறைகளும்,
ஆயிரம் சாம்பல் நிறமான ஆலை விறாந்தைகளும்
சூரியன் தீடிரெனப் பாய்ச்சும் வெளிச்சத்தை பரிகசிக்கின்றன.


பாணும் ரோசா மலர்களும்
பாணும் ரோசா மலர்களும்
என நாம் பாடுவதை மக்கள் கேட்கின்றனர்


நாம் ஊர்வலமாகப் போகையில்
ஆண்களிற்காகவும் போராடுகிறோம்.
அவர்கள் பெண்களின் குழந்தைகள், அவர்களிற்கு நாம் மீண்டும் தாயாகிறோம்
எமது வாழ்வு பிறப்பிலிருந்து இறப்புவரை வியர்வையாதல் ஆகாது
எமது உடல்கள் போலவே இதயமும் பட்டினியால் தவிக்கின்றன
எமக்கு பாணைப் போலவே ரோசா மலர்களையும் தாருங்கள்"

எனத் தொடரும் பாடலைப் பாடினார்கள். தொடர்ந்த பெண் தொழிலார்களின் போராட்டங்களின் போதும், சர்வதேச பெண்கள் தின ஊர்வலங்களிலும் பெண்கள் இப்பாடல்களைப் பாடினார்கள்.

1913-14களில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தினங்களில் முதலாம் உலக யுத்ததைக் கண்டித்து பெண்கள் கோசங்களை முன்வைத்தனர். 1917 ல் மார்ச் 8 ம் திகதி; ரஷ்யப் பெண்கள் பாணும் சமாதானமும் என்ற பெயரில் வேலைநிறுத்த எதிர்ப்பு போராட்டத்தையும், ஜார் மன்னனின் ஆட்சிக்கு எதிரான போரட்டத்தையும் நிகழ்த்தினர்.

* * * * *
உலகெங்கிலும் பெண்கள் சமூக, மத, கலாசார, மற்றும் பால் ரீதியான ஒடுக்கமுறைகளிற்கு ள்ளாக்கப்படுவதோடு, உழைப்புச் சுரண்டலிற்கும் உள்ளாக்கபபடுகிறார்கள். நூற்றாண்டுகளிற்கு முன், தொழிற்கூடங்களில் பால்ரீதியாக ஒடுக்கப்பட்டு, குறைந்த கூலி, சம்பள உயர்வின்மை, தொழிற்கூடற்களில் அடிப்படை வசதியின்மை, பாதுகாப்பின்மை என்பவற்றை எதிர்த்து, தமது உரிமைகளைக் கோரி பெண் தொழிலாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டது போலவே, இன்னும் இதே சுரண்டல்களிற்கெதிரான போராட்டங்கள் பெண்களால் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

உலகமயமாதலின் விளைவாக பொருளாதரத்தில் வளர்ச்சியடைந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியால் உலகெங்கும் குறைந்த கூலிக்காக அதிக இலாபத்தைக் தரக்கூடிய தளங்களைத் தேடிச்செல்கின்றனர்.

ஒரு நாட்டின் ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தி, அந்நாட்டின் அபிவிருத்தியைப் பெருக்கச் செய்யும் மூலோபாயமாக , உலக வங்கியாலும், சர்வதேச நாணய நிதியத்தாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சுதந்திரவர்த்தக வலயங்களும், Export processing Zones ம்(ஏற்றுமதிக்காக தயார்படுத்தும் வலயங்கள்) அறிமுகப்படுத்தப்பட்டன. 1977 க்கு பின் இலங்கையில் திறந்த பொருளாதாரத்தின் நுழைவோடு சுதந்திர வர்த்தகவலையங்கள் கட்டுநாயக்கவிலும், பின்பு பியகமவிலும் கொக்கலவிலும் திறக்கப்பட்டன. ; வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை மையப்படுத்தியமைக்கப்பட்ட இத்தொழிற்சாலைகளில் அடிப்படைத் தொழிற்சட்டங்களிற்கு மதிப்பளிக்கப்படவில்லை. பிறைவட் செக்கடருக்குள் அடங்கக்கூடிய ஆடை, நெசவு ,பின்னல் மற்றும் உணவுபதப்படுத்தல் என்பவற்றை உற்பத்திசெய்யும் தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன. நாட்டின் 30 வீதமான ஏற்றுமதி இத்துறைகளிலிருந்தே பெறப்படுகின்றது. இத்தொழிற்சாலைகளில் கடமையாற்றுபவர்களில் 85 வீதமானவர்கள் பெண்கள். கட்டுநாயக்காவில் மாத்திரம் 60 000 பேர் வேலை செய்கிறார்கள். இதில் 52 000 பேர் பெண்கள். அவர்கள் அதிகமாக 18 க்கும் 25 வயதிற்கும் உட்பட்டவர்கள். இவர்கள் கூடிய வேலைநேரம், ஓய்வின்மை, அதிகநேரவேலை. குறைந்த ஊதியம், அடிப்படைச் சுகாதார வசதியின்மை போன்ற பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கிறார்கள். இவர்கள் 6 மணிக்கு வேலையை ஆரம்பிக்வேண்டியுள்ளது. ஆனால் 7 மணிக்குத் தான் பன்ச் கார்ட் பதிவுசெய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களது வேலை நேரம் 8 லிருந்து 10 மணித்தியாலங்களாகவுள்ளது.
வேலை நேரங்களில் இவர்களிற்கு ஓய்வு கிடைப்பதில்லை. மலசலகூடத்திற்குச் செல்வதானாலும் சுப்பவைசரிடம் சூ கார்ட்; எனப்படும (சிங்கள மொழியில் சிறுநீரை பேச்சு வழக்கில் choo என அழைப்பதுண்டு.) சிறுநீர் கழிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெறவேண்டும். அதில் இப்பெண் எத்தனைமுறை நாளிற்கு சிறுநீர் கழித்துள்ளார் என பதிவு செய்யப்படும். சில தொழிற்சாலைகளில் மலசலகூடத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் பதிவுசெய்யவேண்டும். புதிதாக வேலைக்கு வந்தவர்கள் மலசலக்கூடங்களை பாவிப்பதற்கு அனுமதியில்லை. மூன்று மாதங்களாக வேலை செய்யும் பெண்ணொருவர் மலசலம் போவதிற்காக .சூ கார்டைக் கேட்ட போது, அவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து கேட்ட காரணத்தினால் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். ஒரு நாளிற்கு ஒருமுறை மட்டுமே அதிகமான தொழிற்சாலைகளில் அனுமதி வழங்கப்படுகின்றது. அதன் காரணமாக இப்பெண்கள் வேலை செய்யும் நேரங்களில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து வருகிறார்கள். இதனால் அவர்களிற்கு சிறுநீரக வியாதிகள் வருகின்றன . இங்கு வேலைசெய்யும் அதிகமான பெண்கள் போசாக்கின்மை உணவுப் பற்றாக்குறையென்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு கடமையாற்றுபவர்களில் அதிகமானவர்கள் தூரக் கிராமங்களிலிருந்து தமது வறுமையின் காரணமாக வேலைவாய்ப்புத் தேடி இப்பிரதேசங்களிற்கு வந்தவர்கள். இதன் காரணமாக இவர்கள் வேறு வீடுகளில் தங்கியிருக்கவேண்டியுள்ளது.பெருந்தொகையாகப் பெண்கள் இப்பிரதேசங்களிற்கு வரத் தொடங்கியவுடன் இவர்களிற்கு வாடகைக்குக் கொடுப்பதற்கெனச் சிறு அறைகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த 10x8 அல்லது 10x9 அடி நீள அறைகளிற்குள் பல பெண்கள் அடைபட்டு வாழவேண்டியுள்ளது. 30 லிருந்து 40 பேர் ஒரு குசினியையும் மலசலகூடத்தையும் பயன்படுத்துகிறார்கள்.

அவர்களின் அடிப்படைச்சம்பளம் 6700 ரூபாய்களாக உள்ளன. நீண்ட நாட்கள் வேலை செய்பவர்களில் சிலர் மேலதிக நேரம் வேலை செய்வதால் 12 000 ரூபாய்க்களைப் பெறக்கூடியவர்களாகவிருக்கின்றனர். விலைவாசியின் அதிகரிப்பால் தமது அடிப்படைச் சம்பளத்திலிருந்து 2 500 ருபாய்க்களை அதிகரிக்கக் கோரி அதிகமான தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடாத்தி வருகின்றனர். இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைமையில் பொலிடெக்ஸ் கார்மென்டில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. 2010 நவம்பர் மாதத்திலிருந்து சம்பள உயர்வைக் கோரி FTZ-GUSEU, Progressive Union of FTZ ஆகியோரின் தலைமையில் , தொழிலாளர்கள் „அதிக சம்பளம் BOI அதிக இலாபம் „ எனும் வாக்கியங்கள் ;எழுதப்பட்ட மஞ்சள்பட்டிகளை அணிந்த வண்ணம் வேலையில் ஈடுபடுகிறார்கள். BOI என்பது Board of Invesment ( முதலீட்டார்களின் சபை) ஆகும். சுதந்திர வர்த்தக வலையத்தில் முதலீடுகளை ஒழுங்கமைக்க ஆரசாங்கத்தால் நடாத்தப்படும் ஏஜென்சி. BOI க்கு அதிக இலாபத்தை ஈட்டித்தருவதால் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள். 2010 தேர்தலின் போது 2500 ரூபாய்கள் அதிகரிப்பதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வாக்குறுதியளிக்கப்பட்டாலும் அது நிறைவேற்றப்படவில்லை. 500 ரூபாய்கள் மாத்திரமே சலுகைப்பணமாக வழங்கப்பட்டது. பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தொழிலாளர் சங்கங்களுடன் பேசுவதாக உறுதியளித்திருந்தாலும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கையிழந்த நிலையிலேயேயுள்ளனர்.

இத்தொழிலாளர்களின் வருமானத்தின் பெரும்பகுதி வாடகைக்கும், வீட்டுச்; செலவிற்கும் போக தமது உறவினர்களிற்கு அனுப்புவதற்காக சிறிய தொகையே கையில் மிஞ்சுகிறது. வேலைவாய்ப்பிற்காக தமது குழந்தைகளை ஊரில் தமது உறவினர்களுடன் விட்டு வந்தவர்களும் உள்ளனர். இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை தான் தமது குழந்தைகளைப் பார்க்கச் செல்கிறார்கள்.

சுதந்திரவர்த்தக வலையத்தில் பணிபுரியும் பெண்களின் துயரையும் , பிரச்சினைகளையும் வெளியுலகிற்கு கொண்டு வருவதிலும் அவர்களிற்கான ஆலோசனைகளையும் வழங்குவதிலும்; கட்டுநாயக்கவில்அமைந்திருந்த பெண்கள் நிலையமும், ஏகலவில் இருந்து இயங்கும் டாபிந்து(வியர்வைத்துளி) கௌக்டிவ்வும் பெரும் பங்காற்றின. 90 களில் மனிக்N;க என்ற ஸ்டார் காமென்ட்டில் வேலை செய்த பெண் தொழிலாளியின் கவிதை டாபிந்து பத்திரிகையில்; வெளிவந்தமைக்காக அவள் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அந்தக்கவிதையில் அவள் தான் காலையில் 4.30 மணிக்கு எழுவதிலிருநது வேலை முடியும் வரையிலானத் தனது செயற்பாடுகளை வர்ணித்திருந்தாள். தான் சுகயீனமுற்ற வேளையில் வெளியில் செல்ல அனுமதி கேட்ட போது அதில் அக்கறை காட்டாத சுப்பவைசர், அவள் அன்றைய உற்பத்தியில் அடையவேண்டிய இலக்கை அடைந்துள்ளாரா என்பதில் குறியாகவிருந்ததாகவும், தான் பலமுறை கேட்டபின்பு, சிறிது நேரம் ஓய்வறைக்கு அனுப்பப்பட்டதாகவும், தனது இறப்பு ஸ்டார்காமென்டில் தான் ஒருநாள் நிகழுமெனவும் தெரிவித்திருந்தாள். பல தேசிய சர்வதேச அமைப்புகளின் பிரச்சார நடவடிக்கைகளின் விளைவாக, அவர் வேலையில்லாமல் இருந்த நாட்களிற்கான சம்பளத்துடன் மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்டார். வேலை செய்யும் போது நிகழும் விபத்துகளிற்கான நஸ்டஈடு முழுமையாக வழங்கப்படுவதில்லை. இத்தகைய விபத்துகளால் மரணித்தப் பெண்களும் இருக்கின்றார்கள்.

அபிவிருத்தியடைந்து வரும் எல்லா நாடுகளிலும் திறந்த பொருளாதாரச் சந்தையால் பெண்கள் குறைந்த கூலிக்காக எந்தவித அடிப்படை பாதுகாப்பு வசதிகளும் அற்ற நிலையில் வேலைக்கமர்த்தப்படுகிறார்கள். உலகின் அதிகூடிய கைத் தொலைபேசிகளை உற்பத்திச் செய்யும் நொக்கியா நிறுவனத்தினர் தென்னிந்தியாவில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் அசெமப்லியில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது கொன்வே பெல்ட்டில் கழுத்து அகப்பட்டு 22 வயதான அம்பிகா என்ற பெண்; மரணமடைந்தது அறிந்திருப்பீர்கள். இரவு வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது இயந்திரக் கோளாறால் அவர்களது convey belt ஸ்தம்பிதமடைந்து நின்ற நிலையில் அவள் தலையைவிட்டு திருத்தமுயற்சித்திருக்கிறார். தொழிநுட்பவியலாளார்கள் வந்து திருத்துவதானால் 10- 15 நிமிடங்கள் உற்பத்தி ஸ்தம்பிதம் அடைவதால், இத்தகைய கோளாறுகளை இவர்களாலேயே சரிபார்க்கும்படி பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.; இவர் கழுத்தை உள்விட்ட வேளையில் மீண்டும் convey belt வேலை செய்ய ஆரம்பித்ததில் இவரது கழுத்து அகப்பட்டுக் கொண்டது. சகதொழிலாளர்கள் எவ்வளவு கேட்டும், உயர்அதிகாரிகள் பிரதான அபாயப் பட்டனை அமர்த்தி உற்பத்தியை நிறுத்த விரும்பாததால் அந்த அப்பாவிப் பெண் மரணிக்க வேண்டியிருந்தது. சிறிபெரம்பத்தூரில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் 7000 தொழிலாளர்களில் 70 வீதமானவர்கள் பெண்கள். இவர்களின் மாதச் சம்பளம் 8 500 இந்திய ரூபாய்கள் ஆகும்.

இலங்கை, இந்தியா நாடுகளிலும் பார்க்க இன்னும் குறைந்த வரிச்சலுகைகளைச் செலுத்தி குறைகூலிக்காகப் பெண்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக பல கம்பனிகளின் இலங்கையிலுள்ள தொழிற்சாலைகளை மூடிவிட்டு ஆபிரிக்காவிற்குப் படையெடுத்தனர். இவ்வாறு 40க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 50 000 பெண்கள் எந்தச் சலுகைகளும் வழங்கப்படாது, வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

மிகவும் பிரசித்தி பெற்ற வெளிநாட்டு விற்பனை நிறுவனங்களான Marx and Spencer, GERRGE, WAL-Markt, United colors of Beneton, GAP போன்ற இன்னும் பலவற்றிக்கு ஆடைகளைத் தயாரிக்கும் Tristar நிறுவனம்; தனது தொழிற்சாலைகளை ஆபிரிக்காவிற்குக் கொண்டுசென்றது. 2009 இலங்கையில் யுத்தம் நிறைவிற்கு வந்தபின்பு மீன்டும் இலங்கையில் தனது கிளைகளை விஸ்தரிக்கத் தொடங்கியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்பலகவவில் பெரியளவில் ஆடைத் தொழிற்சாலையொன்றைத் திறந்துள்ளது. இதில் 10 000 பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு, அமெரிக்க இங்கிலாந்து நாடுகளிலுள்ள கம்பனிகளிற்காக குழந்தைகளிற்கான ஆடைகளை உற்பத்திசெய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் புதிய தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளன. புனருத்தாரண முகாம்களிலிருந்து 400 முன்னாள் போராளிப் பெண்கள் சப்பிரகமுவவிலுள்ள த்ரிஸ்டாரின் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இன்னும் முன்னாள் பெண்போராளிகளை வேலைக்கு அமர்த்தத் தயார் என ட்ரிஸ்டார் நிறுவனம் தெரிவித்திருந்தது.
வவுனியாவிலிருந்தும் , மலையகத்திலிருந்தும் தமிழ்ப்பெண்களும் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்த சிறுமிகளும் (இதில் 13 வயதுச்சிறுமிகளும் அடங்குவர்), பெண்களும் கடத்தப்பட்டு கட்டுநாயக்கா நிட்டம்புவவிலுள்ள கிறிஸ்டல் மார்டின்பிறைவட் லிமிடட்டிலும், வத்தலவிலுள்ள டைமெக்சிலும் கட்டாய வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும், இவர்கள் கூடிய நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதோடு, குறைந்த சம்பளத்தையும் பெறுகின்றார்கள் என்றும் இவர்களிற்கு சிங்களத் தொழிலாளர்களிலிருந்து மாறுபட்ட யுனிபோர்ம்கள் கொடுக்கப்பட்டு அவர்கள் தனியாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் விடுதிகளிலிருந்து வாகனங்களில் வேலை தொடங்கும் நேரத்திற்குக் கொண்டுவரப்பட்டு, வேலை முடிந்தபின்பு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும், சிங்களச் சக தொழிலாளர்கள் இவர்களுடன் தொடர்பு கொள்வது ஒழுங்குவிதிமுறையாகக் கருதப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளதெனவும், இந்நடவடிக்கை தொழிற்சங்க ரீதியான வேலைகளிற்கு தடையாக உள்ளதெனவும் ரோகினி கென்ஸமன் Dissenting dialogues ல் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே யுத்ததால் பாதிப்புக்குள்ளான இப்பெண்கள் இனரீதியானதும் , பால் ரீதியானதுமான ஒடுக்குமுறைகளைச் சந்திக்கும் அதேவேளை, இலங்கை அரசு இவர்களது உழைப்புச்சக்தியையும் சுரண்டலிற்கு உட்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். மகிந்த அரசு தனது இனவாதக் கொள்கையுடன் திறந்த பொருளாதாரக் கொள்கையையும் இணைத்து செயல்படுத்துகின்றது.

மலையகப் பெண்களைப் பொறுத்தவரையில் இவர்கள் வறுமைக் கோட்டிற்குள் கீழ் எந்தவித அடிப்படை உரிமைகளுமின்றி வாழ்கிறார்கள். ஒரு மலையகப் பெண்; காலையில் துயிலெழுவதிலிருந்து இரவு துயில் கொள்ளும்வரை இரட்டிப்பான சுமையை சுமக்க வேண்டியுள்ளது. வேலைக்குப் போகமுன் வீட்டில் கணவன் குழந்தைகளின் வேலைகளைப் பார்த்துவிட்டு வேலைக்குச் செல்லவேண்டியுள்ளது;. இவர்கள் அதிக தூரம் நடந்து மலையேற வேண்டியிருப்பதால் இவர்கள் முன்கூட்டியே தமது பயணத்தைத் தொடரவேண்டியவர்களாகவுள்ளனர். அங்கும் அவர்களுக்குரிய ஓய்வு, சுகாதாரம், போன்ற அடிப்படை உரிமைகள் கூட கிடைப்பதில்லை. இவர்கள் கொய்யும் கொழுந்துகளின் அடிப்படையில் தான் இவர்களிற்கு ஆண்களை விட குறைந்த ஊதியம் கிடைக்கின்றது.

ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் வேலையில் ஈடுபடுத்தப்படும் போது , அவர்களது சுகாதாரம் கருத்தில் எடுக்கப்படுவதில்லை. சுகாதார ரீதியாக ஆபத்தான தொழில்களை விளிம்புநிலையில் உள்ள மக்களே பெரும்பாலும் செய்வதால் இதைப்பற்றி ஆதிக்கச்சக்திகள் அக்கறைபடுவதில்லை. தெருக்களையும் , மலசலக்கூடங்களையும் கையுறைகளோ, உபகரணங்களோ இன்றியே அவர்கள் துப்பரவு செய்யவேண்டியுள்ளது. இந்தியாவில் தமது கைகளால் மலம் அள்ள மாட்டோமெனத் தலித் பெண்கள் போராட்டங்களை நடாத்திவருகிறார்கள்.

இச்சமூகக் கட்டமைப்பால் விளிம்புநிலையில் இருக்கும் பெண்கள் மத, கலாசா, சம்பிரதய விழுமியங்களால் ஒடுக்கப்படுவதோடு, அவர்களின் பொருளாதார நிலைமைகளினால் ஏற்படக்கூடிய வறுமையால் பலமடங்கான சுரண்டலிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் வறுமையிலிருந்து விடுபட்டு வாழ்வாதாரங்களைச் சீர் செய்து கொள்ளும் முனைப்பில் அவர்கள் மீண்டும் மீண்டும் முதலாளித்துவர்க்கத்தின் பொறியில் சிக்குண்டுத் தவிக்கின்றார்கள். வறுமையின் நிமித்தம் மத்திய கிழக்குநாடுகளிற்குச் செல்லும் பெண்களினதும், மலையகத்திலிருந்து உள்நாட்டிலேயே தனவந்தர்களின் வீடுகளில் பணிப்பெண்களும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவ்வர்க்கரீதியான ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் பெண்களின் போராட்டங்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் நடாத்தபடவேண்டியிருக்கும். இவர்களின் கைகளில் தான் ஆதிக்கக் கதவுகளைத் திறக்கும் திறப்பு உள்ளதென்பதே உண்மை.
...மேலும்

இலங்கையின் பெண்கள் பொருளாதாரத்தின் தூண்கள் - கலையரசன்

2012 சர்வதேச பெண்கள் தின நினைவாக 


நெதர்லாந்தில், புதிதாக வதிவிட அனுமதி பெற்றவர்கள், அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கென குடியுரிமைப் பாடங்களை கற்பிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. உள்நாட்டு வேலையற்ற பட்டதாரிகளை தொண்டர் ஆசிரியர்களாக நியமித்து அரசு நடத்தும் பள்ளி அது. பன்னாட்டு குடியேறிகளுடன் நானும் ஒருவனாக அந்த வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். கூடப் படித்த மாணவர்களில் சில ஈழத் தமிழ்ப் பெண்களும் இருந்தனர். ஒரு நாள், எம்முடைய ஆசிரியை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பினார். வகுப்பில் இருந்த பல தேசங்களை பிரதிநித்துவப் படுத்தியவர்கள் தத்தமது நாடுகளில் பெண்களின் நிலை பற்றி எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர்.

இலங்கையின் முறை வந்தது. அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் பேசவாரம்பித்தனர். "எமது நாட்டில் வழக்கமாக பெண்கள் வெளியே வேலைக்குப் போவதில்லை. வீட்டு வேலைகள் மட்டுமே செய்வார்கள். அது எமது கலாச்சாரம்." என்றனர். அதனை மறுதலித்த நான், "படித்த பெண்கள் வேலைக்குப் போவதும், ஏழைக் குடும்பப் பெண்கள் கூலி வேலைக்குப் போவதும், எமது நாடுகளில் வழக்கம்." என்றேன். வகுப்பில் இருந்த தமிழ் பெண்கள், இதனை ஏற்க மறுத்து வாதிட்டனர். யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பம், வகுப்பில் இருந்தவர்கள் முகங்களில் காணப்பட்டது. "தமிழ்க் கலாச்சாரத்தின் சிறப்பை" அன்னியருக்கு பறைசாற்ற விடாமல் குறுக்கீடு செய்த கோபம், தமிழ்ப் பெண்களின் குரலில் தெரித்தது. அன்று என்னோடு வாதம் செய்த அதே பெண்கள், பின்னர் வேலைக்கு சென்று வந்ததையும் கண்டேன். கணவனுடன் சேர்ந்து மேலதிகமாக சில நூறு யூரோக்களை சேகரிக்கும் கடமையுணர்வு, கலாச்சாரத்திற்கு களங்கமாக அவர்களுக்கு தெரியவில்லை.

கனடாவுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களில் யாழ்-வேளாள மேட்டுக்குடி சிந்தனை கொண்டவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஊரில் பேணிய பழமைவாத கலாச்சாரத்தை உலகம் முழுக்க காவித் திரிந்தவர்கள். அதனால் தான் ஆண்டாண்டு காலம் உழைக்கும் வர்க்கப் பெண்களைக் கொண்ட தமிழ் சமூகம் அவர்கள் கண்களுக்கு அகப்படவில்லை. தமதூர் வயல்களில் கூலியாட்களாக ஆண்களை விட குறைவான சம்பளம் பெறும் பெண்களைப் பற்றியும் அறிந்திருக்கவில்லை. அவர்களது நடுத்தர வர்க்கப் பின்னணி, உழைக்கும் வர்க்க பெண்களை உதாசீனம் செய்ய வைக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரம் பெண்களின் உழைப்பை ஆதாரமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தெற்காசியாவிலேயே இது தனித்துவமானது. "ஆசியாக் கண்டத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த முதலாவது நாடு." "உலகிலேயே முதலாவது பெண் பிரதமரை தெரிவு செய்த நாடு." இலங்கைக்கு கிடைத்த இது போன்ற பெருமைகளால் கூட, பெண்களின் நிலை அரசியல் அரங்கில் மாறி விடவில்லை. தங்கள் சக்தி என்னவென்று அறியாத சாதாரண உழைக்கும் வர்க்க பெண்கள். தேசத்தின் பொருளாதாரத்தில் தமது பங்கு என்னவென புரிந்து கொள்ளுமளவு படித்தவர்களுமல்ல. இருப்பினும் இலவச கல்வியினால் நன்மையடைந்த பெண் பிரஜைகளை அந்நிய நிறுவனங்கள் கண்டு கொண்டன. 1978 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, "கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையம்" இலங்கைப் பெண்களின் உழைப்பை, மலிவு விலை ஆடைகளாக ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.

கிராமப்புறங்களில் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த பெண்கள், பழமைவாத கட்டுக்களை உடைப்பதற்கு சுதந்திர வர்த்தக வலையம் உதவியது. விவசாயத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாகவே கிடைத்ததால், பலர் நகரத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். கொழும்பு மாநகரத்திற்கு அருகில், விமான நிலைய ஓரமாக கட்டப்பட்ட தொழிற்சாலைகள், பெண்களை மட்டும் வேலைக்கு அமர்த்தின. ஏன் பெண் தொழிலாளிகளை மட்டும் வேலைக்கு சேர்க்கிறார்கள்? "பெண்கள் மிக நேர்த்தியாக வேலை செய்வார்கள்." என்கின்றனர் முதலாளிகள். ஆனால் குறைந்த கூலி வழங்குவதற்காகவும், மிரட்டி வேலை வாங்குவதற்கும் பெண் தொழிலாளிகளே வசதியானவர்கள். மேலதிக நேரம் வேலை செய்ய மாட்டார்கள் என்பதால், திருமணமான பெண்களை பணிக்கு அமர்த்துவதில்லை.

கிராமங்களில் விவசாயக் கூலியாக வேலை செய்வதை விட, சுதந்திர வர்த்தக வலையத்தில் வேலை செய்து பெறும் ஊதியம் அதிகம் தான். இருப்பினும் அது கொழும்பு மாநகரில் கொடுக்கப்படும் சராசரி சம்பளத்தை விடக் குறைவு. தினசரி 12 மணி நேரம் கடின வேலை செய்தாலும், மாதச் சம்பளம் நூறு டாலர்களும் இல்லை. வேலை நேரங்களில் சிறுநீர் கழிப்பதற்கு கூட இடைவேளை விடாமல் சுரண்டும் தொழிற்சாலை நிர்வாகம். தொழிற்சங்கம் வைத்துக் கொள்ளவோ, வேலை நிறுத்தம் செய்யவோ அனுமதிப்பதில்லை. இருப்பினும் கடுமையான அடக்குமுறை காரணமாக, வேலைநிறுத்தப் போராட்டங்கள் தானாகவே வெடிக்கின்றன.

எத்தனை கஷ்டம் இருந்தாலும், சுதந்திர வர்த்தக வலையப் பெண்கள் பல்லைக் கடித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகள் நின்று பிடிக்கின்றனர். ஒரே கம்பனியில் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் ஒருவருக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருப்பதே அதற்குக் காரணம். வாழ்க்கை நரகமாக மாறிவிட்டாலும், பலருக்கு ஊர் திரும்ப விருப்பமில்லை. சுதந்திர வர்த்தக வலயத்தில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை அவர்கள் தமது ஊரில் சொல்வதில். அப்படி சொன்னால், எந்தவொரு பெற்றோரும் தமது பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்ற அச்சம் காரணம். சமூகத்தில் நிலவும் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக, ஒரு பெண் ஆண் துணை இன்றி வெளியே செல்ல முடியாது. (சிங்கள சமூகம் கூட விதிவிலக்கல்ல) இதனால் கிராமங்களில் சமூகக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த பெண்களுக்கு, சுதந்திர வர்த்தக வலய வேலைவாய்ப்பு, வேண்டிய சுதந்திரம் வழங்குகின்றது. ஒரு தொகைப் பணத்தை வீட்டுக்கு அனுப்புவது போக, மிகுதியை உடைகளுக்கும், அலங்கார சாதனங்களுக்கும் செலவிட முடிகின்றது.

ஒரு காலத்தில், இலங்கைக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தந்த பெருந்தோட்டப் பயிர்செய்கை பிற்காலத்தில் நலிவடைந்தது. முதலில் ரப்பர், பின்னர் தேயிலை விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியுற்றது. இதற்கிடையே 1977 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த யு.ஏன்.பி. தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை மும்முரமாக அமுல்படுத்தியது. உலகவங்கி, ஐ.எம்.எப். என்பன அவர்களுக்கு பின்னால் நின்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தோன்றியவை தான் சுதந்திர வர்த்தக வலையங்கள். மத்திய கிழக்குக்கு பணிப்பெண் ஏற்றுமதியும், மேற்படி பொருளாதாரக் கொள்கையின் பெறுபேறு தான். இது பற்றி பின்னர் பார்ப்போம்.

இன்று ஆயத்த ஆடை ஏற்றுமதி இலங்கையின் முக்கிய வருமானங்களில் ஒன்று. பணக்கார நாடுகில் மலிவுவிலையில் விற்கப்படும் உடுப்புகள், சுதந்திர வர்த்தக வலைய பெண்களின் உழைப்பால் உருவானவை. பருத்தி போன்ற மூலப் பொருட்கள் பிற நாடுகளில் இருந்து தருவிக்கப் பட்டாலும், அவற்றை முழு ஆடைகளாக தைத்து அனுப்புவது இலங்கைப் பெண்கள் தான். இதற்குத் தான் ஐரோப்பிய நாடுகள் GPS Plus சலுகைத் திட்டத்தை கொண்டுவந்தன. 2005 ம் ஆண்டு, அறிமுகப்படுத்தப் பட்ட சலுகைத் திட்டம், ஆசியாவில் இலங்கைக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அனேகமாக சுனாமிக்கு பின்னரான ஐரோப்பிய உதவியின் ஓர் அங்கமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. தற்போது மனித உரிமைக் குற்றச்சாட்டில் GPS சலுகை மீளப் பெறப்படப் போவதாக கூறப்படுகின்றது. இதனால் லட்சக்கணக்கான பெண் தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

GPS சலுகையை நம்பி சுதந்திர வர்த்தக வலையங்கள் திறக்கப்படவில்லை. சலுகையினால் சேமிக்கப்படும் பணம், அபிவிருத்தியில் உள்ள சில தடைகளை அகற்றும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது. ஐரோப்பிய நாடுகளில் எதையாவது இறக்குமதி செய்ய விரும்புவோர் அதிக வரி செலுத்த வேண்டும். அத்தகைய வரியில் வழங்கப்பட்ட சலுகை சுதந்திர வர்த்தக வலைய முதலாளிகளுக்கு லாபமாகப் போய்ச் சேர்ந்தது. அல்லது ஐரோப்பிய சுப்பர் மார்க்கட்களில் மலிவு விலை உடைகளாக விற்கப்பட்டன. தற்போது வரிச் சலுகையை இரத்து செய்வதற்கு, பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதை பின்வரும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் GPS வரிச்சலுகையை இரத்து செய்யப் போவதாக தடாலடியாக அறிவித்த அதே கணம், கிழக்கிலங்கையில் ஒரு பாடசாலை திறந்து வைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றிய நிதியில் கட்டப்பட்ட அந்தப் பாடசாலையை, அவர்களின் பிரதிநிதி ஜனாதிபதி மகிந்தவுடன் சேர்ந்து திறந்து வைத்தார். அதைவிட வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்க உள்ளது.

சுதந்திர வர்த்தக வலைய வேலை பறி போனால், வெளிநாடு சென்று உழைப்பது பற்றி அந்தப் பெண்கள் சிந்திக்கிறார்கள். வளைகுடா நாடுகள், கிரீஸ் போன்ற நாடுகளில் பனிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் பலர் முன்னாள் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளிகள். உண்மையில், தேயிலை போன்ற பாரம்பரிய ஏற்றுமதி வருமானத்திற்கு சமமாக, சுதந்திர வர்த்தக வலயங்களிலும், வெளிநாடுகளிலும் பணி புரியும் பெண்கள் ஈட்டித் தருகின்றனர். பிலிப்பைன்சுடன் போட்டி போட்டுக் கொண்டு, இலங்கை வீட்டுப் பணிப் பெண்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றது. அவர்கள் மாதாமாதம் அனுப்பிவைக்கும் அந்நிய செலாவணி, இலங்கைப் பொருளாதாரத்தை வளர்க்கின்றது.

வெளிநாடுகளில் பணிப் பெண்களாக வேலை செய்யும் பெண்கள் எல்லோரும் வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஒரு பெண்ணின் சம்பாத்தியத்தில் வாழும் குடும்பங்கள் இலங்கையில் ஏராளம். தமது பிள்ளைகளை பராமரித்து, சிறந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர். குடும்பத்தின் செலவை பொறுப்பு எடுப்பதோடு மட்டும் நில்லாது, நிலம் வாங்கி, சொந்தமாக கல் வீடு கட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இலங்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பெண்களே அனேகமாக வெளிநாடு செல்கின்றனர். எனது சக்திக்குட்பட்ட ஆய்வின் படி, கொழும்பு போன்ற முன்னேறிய மாவட்டங்களில் இருந்து மிகக் குறைந்தளவு பணிப்பெண்களே செல்கின்றனர். அதற்கு மாறாக, குருநாகல், அம்பாந்தோட்டை போன்ற அபிவிருத்தி குறைந்த மாவட்ட மக்களே பெரும்பான்மையாக உள்ளனர்.

கணிசமான தமிழ், முஸ்லிம் பெண்களும் பணிப்பெண்களாக செல்கின்றனர். இவர்களும் பெரும்பாலும் பின்தங்கிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். வெளிநாடுகளில் தொழில் புரியும் பணிப்பெண்களில், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களை காண்பதரிது. அதற்கு மாறாக, வவுனியா, மட்டக்களப்பில் இருந்து பெருந்தொகை தமிழ், முஸ்லிம் பெண்கள் வெளிநாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்கின்றனர். யாழ் குடாநாட்டோடு ஒப்பிடும் போது, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வறிய மக்கள் அதிகம். சுதந்திர வர்த்தக வலையத்திலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பெண்கள் பலர் வேலை செய்வது இங்கே குறிப்பிடத் தக்கது.

மலையகத்தை சேர்ந்த தமிழ் பெண்களும், வெளிநாடு சென்று பணிப் பெண்களாகவோ, அல்லது உள்நாட்டில் சுதந்திர வர்த்தக வலையத்திலோ வேலை செய்கின்றனர். ஆனால் அந்த துறைகளில் மலையகத் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இலங்கையில் மிகக் குறைந்த ஊதியம் பெரும் தொழிலாளர் வர்க்கம் மத்திய மலை நாட்டில் உள்ளது. முதன்மையான ஏற்றுமதியான தேயிலை, இன்றைக்கும் இலங்கைக்கு பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றது. "தேயிலைத் தமிழர்கள்" என்று அழைக்கப்படும், பெருந்தோட்டத் தமிழர்களின் வாழ்வு மலையகத்தின் உள்ளேயே முடங்கி விடுகின்றது. பிரிட்டிஷ் காலத்தில் கூலிகளாக அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்கள், இன்றைக்கும் தேயிலைக் கம்பனிகளின் தயவிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பெருந்தோட்ட தமிழர்களின் குழந்தைப் பராமரிப்பு, ஆரம்ப பாடசாலைகள் என்று எல்லாமே சம்பந்தப்பட்ட கம்பனியின் பொறுப்பில் உள்ளன.

தேயிலத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் எல்லோருமே பெண்கள் தான். ஆண்கள் தேயிலை பதனிடும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். பெண்கள் என்பதால் குறைந்த கூலி கொடுத்து, (ஒரு நாளைக்கு 5 டாலர்) சுரண்ட முடிகிறது. அனேகமாக ஒரு மலைநாட்டுத் தமிழ்ப் பெண், தனது 15 வது வயதிலேயே தேயிலைக் கொழுந்து பறிக்க கிளம்பி விடுவாள். பெருந்தோட்டத் தமிழர்கள் ஆரம்பப் பாடசாலைக் கல்விக்கு அப்பால் கல்வியைத் தொடருவதை, முதலாளிகளும் விரும்புவதில்லை. தொழிலாளரின் குடியிருப்புகள் "லயன்கள்" என அழைக்கப்படும் சங்கிலித் தொடர் வீடுகளாக உள்ளன. பிரிட்டிஷ் காலனிய சின்னங்களான லயன்கள் இன்றும் 19 ம் நூற்றாண்டிலேயே உள்ளன. நவீன அடிமைகளின் தடுப்பு முகாம்களான லயன்களில் இருந்து வெளியூர் செல்லுமளவிற்கு அவர்களிடம் வசதியும் இல்லை, தொடர்புகளும் கிடையாது. மலையகப் பெண்கள் தோட்டங்களை விட்டு வெளியேறினாலும், பெரு நகரங்களில் கூலி வேலை மட்டுமே செய்ய முடியும். கொழும்பு நகரில் பணக்கார வீடுகளில், வேலைக்காரிகளாக பல மலையகச் சிறுமிகள் சுரண்டப்படுகின்றனர்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உழைக்கும் வர்க்கப் பெண்கள் இருந்த போதிலும், அதைப் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. நிறுவனமயப் படுத்த முடியாத அளவுக்கு, அவர்களின் உள்மன அச்சமும், ஆதரவற்ற சூழ்நிலையும் தடுக்கின்றன. அடித்தட்டு மக்கள் திரளுக்குள், அவர்கள் பெண்கள் என மேலும் ஒடுக்கப்படுகின்றனர். சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழிற்சங்கம் அமைக்க அரசு ஆதரவளிப்பதில்லை. அந்நிய தேசத்தில், அடிமையாக வதை பட்டாலும், அதிக பட்சம் தூதுவராலயத்தில் அடைக்கலம் கோரத் தான் முடியும். இலங்கைப் பெண்கள் கடின உழைப்பாளிகள் என்ற நற்பெயரை விட பெரிதாக எந்த வெகுமதியும் கிடைப்பதில்லை.

ஒரு பணிப் பெண் தன்னை வருத்திக் கொண்டு அனுப்பும் பணம், அவரின் குடும்பத்தின் ஊதாரித்தனமான செலவால் கரைந்து போகின்றது. இதனால் ஊர் திரும்பும் பணிப் பெண், மீண்டும் விமானமேறி எங்கோ ஒரு நாட்டில் தனது வேலையை தொடர்கிறாள். மணமான பெண்களாயின், சில நேரம் பிள்ளைகளை தனியே வளர்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மனைவியின் பணத்தில் குடித்து, கும்மாளமடிக்கும் கணவன்மாரால் பல குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பொதுவாகவே உழைக்கும் வர்க்கப் பெண்கள் மத்தியில், பாலியல் சுதந்திரம் அதிகமாக காணப்படுகின்றது. ஊதாரியான கணவனை விவாகரத்து வாங்கி விட்டு, காதலனுடன் வாழும் பெண்கள் பலர் உண்டு. அதற்காக இந்தக் கலாச்சார மாற்றத்தை நமது சமூகம் ஏற்றுக் கொண்டு விட்டது என்று அர்த்தமில்லை. இலங்கையின் உழைக்கும் வர்க்கப் பெண்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் போராடுகின்றார்கள். உழைப்பு எனும் மெழுகுதிரியாக உருகி நாட்டின் பொருளாதாரத்தை ஒளிர வைக்கிறார்கள்.

நன்றி - கலையகம்
...மேலும்

Mar 7, 2012

ஊர்வலம் - சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம்


இம்முறை சர்வதேச பெண்கள் தினத்தை "நினைவு கூருவோமா? போரடுவோமா?"  என்கிற கோஷத்துடன் ஊர்வலமொன்றினை  சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருக்கிறது...
அவ்வமைப்பின் தலைவி திமுது ஆட்டிகல இது குறித்து சமீபத்தில் உத்தியோகபூர்வமான அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.

மார்ச் 08 அன்று பி.ப. 3 மணிக்கு கொழும்பு டெக்னிக்கல் கொலேஜில் இந்த ஊர்வலம் தொடங்கவிருக்கிறது. புதிய தாராளவாத பொருளாதார கொள்கையினால் வடக்கு மற்றும் தெற்கு பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்களை வெளிச்சத்திற்கு கொணர்வதே தமது தற்போதைய தொனிப்பொருள் என திமுது ஆட்டிகல கூறுகிறார்.

 சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கமானது மக்கள் விடுதலை முன்னணியின் மகளிர் பிரிவான சோஷலிச பெண்கள் இயக்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வெகுஜன இயக்கமாகும். பல பெண்கள் அமைப்புகளையும் ஜனநாயக அமைப்புகளையும் ஒன்றுசேர்த்து இந்த இயக்கம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைவி திமுது ஆட்டிகல சோஷலிச மகளிர் இயக்கத்தின் தலைவியாக நீண்ட காலம் தொழிற்பட்டுவருபவர். 1987 இல் ஜே.வி.பி இல இணைத்த அவர் பின்னர் கிருஷாந்தி எனும் பெயரில் தலைமறைவு வாழ்க்கைக்குள் இருந்து மீண்டும் ஜே.வி.பி பகிரங்க அரசியலுக்கு வந்தபோது மீண்டும் இயங்கத் தொடங்கினார்.


...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்